மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 9 ஏப்ரல், 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-12)

முந்தைய பகுதிகள்:
    பகுதி-1         பகுதி-2         பகுதி-3            பகுதி-4           
    பகுதி-5        பகுதி-6          பகுதி-7         பகுதி-8       

ண்பனின் தங்கை கல்யாணத்துக்குப் போன இடத்தில் சுபஸ்ரீயை பார்ப்போம் என்று கண்ணன் நினைக்கவில்லை. தோழிகளுடன் நின்ற அவளைப் பார்த்ததும் அம்பேத்காரிடம் “டேய் அது நம்ம சாரதியோட அத்தை பொண்ணு சுபஸ்ரீதானே...?” என்றதும்  அம்பேத்கார் அவனை முறைப்பது போல் பார்த்தான்.

“என்னடா முறைக்கிறே... ஆமான்னா ஆமான்னு சொல்லு இல்லேன்னா இல்லேன்னு சொல்லு...”

“பாவம் அவ சாரதி அத்தை பொண்ணுன்னு உனக்குத் தெரியாதுல்ல...” கடுப்பாகக் கேட்டான்.

“நாம எல்லாரும் அவங்களை ஒரு தடவைதானேடா பார்த்திருக்கிறோம்... அதான்...”

“அடேய்... அடேய் நிறுத்துடா... போதும்... அவளோட பேஸ்புக்ல அரட்டை அடிச்சிட்டு... தினமும் இன்னைக்கு இந்த டிரஸ் போட்டுப் போனேன் நல்லாயிருக்கான்னு அவ போட்டோ அனுப்ப... நீங்க அதுக்கு பதில் சொல்ல... எல்லாம் செய்வீங்க... ஆனா அவளை உங்களுக்குத் தெரியாது... நல்லாயிருக்குடா....”

“உனக்கிட்ட வந்து எல்லாம் சொன்னேன் பாரு... அவ எங்கிட்ட ரொம்ப நெருங்கிப் பேசுறான்னுதானேடா இப்பல்லாம் நான் சென்டர் பக்கமே போகலை...”

“இங்கரு அது எனக்கும் தெரியும்... ஆனாலும் சொல்றேன்... அதை நம்ம நண்பனுக்கு கட்டணுமின்னு சின்ன வயசுலயே முடிவு பண்ணி வச்சிருக்கானுங்க... இதுல நீ அவ மனசுல தேவையில்லாம எதையாவது விதைச்சி வைக்காதே... அவ்வளவுதான் சொல்லுவேன்...”

“நான் என்னடா பண்ணினேன்... பிரண்ட்லியா பேசுறா... நானும் அப்படித்தான் எடுத்துக்கிறேன்...”

“இன்னைக்கு இந்த டிரஸ் போட்டேன்... என்னோட பிரண்ட்ஸ் இதைச் சொன்னாங்கன்னு என்னைக்காச்சும் சாரதிக்கிட்ட சொல்லியிருப்பாங்கிறே... எனக்கென்னவோ தப்பாத் தெரியுது... அவ்வளவுதான்... பாத்துக்க... அவ நம்மளைப் பார்த்தா சாதாரணமா பேசிட்டு விலகிப் போய்க்கிட்டே இருக்கணும் சரியா...?”

“சரிடா... நீ வேற எங்கப்பா மாதிரி உயிரை எடுக்காம... அங்க நிக்கிறது அவளான்னுதானே கேட்டேன்... அதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய லெக்சர் அடிக்கிறே.... அவ எப்படி இங்க வந்திருக்கான்னு ஆச்சர்யத்துலதான் கேட்டேன்...”

“ஆச்சர்யமா... இல்லை அன்பா...?”

“டேய்...”

“சரி விடு...”

அவர்களைப் பார்த்ததும் ஓடிவந்த நண்பன் “வாடா... அம்மாவையாச்சும் கூட்டியாந்திருக்கலாம்ல்ல...”  என்றபடி எதிர்கொண்டான். அம்பேத்காரை கண்ணன் அறிமுகப்படுத்த “வாங்க” என்றபடி கைகொடுத்தான்.

“அம்மா எங்கடா வர்றேன்னு சொல்லுது... அதுக்கு அந்த வீடும்... வயலும்... ஆடு மாடுகளும்தான் உலகம்... அப்படித்தான் எங்கப்பா வச்சிருக்காருன்னு தெரியும்ல்ல...”

“ம்...”

“வாடா... தங்கச்சியைப் பார்த்திட்டு வரலாம்...”

“அவளை அப்புறம் பாத்துக்கலாம்... முதல்ல போய் சாப்பிட்டு வாங்க...” என்றான் அவன்.

“ம்... ஆமா அந்தப் பொண்ணுங்க...?”  மெல்ல இழுத்தான் கண்ணன்.

“யாரு.... தங்கச்சிக்கிட்ட நிக்கிதுகளே அதுகளா... அதெல்லாம் அதோட கிளாஸ் மெட்டுங்கடா...” என்றான்.

“கிளாஸ் மெட்டா...?”

“ஆமாடா... தங்கச்சியோட ஸ்கூல்ல ஒண்ணாப் படிச்ச பொண்ணுங்க...” என்று சொல்லிவிட்டு “போய் சாப்பிட்டு வாங்கடா... இந்தா வாறேன்...” என கண்ணனின் நண்பன் நகரவும், “இப்பத்தானே சொன்னேன்... அப்புறம் அவனுக்கிட்ட போயி கேட்டுக்கிட்டு இருக்கே...?” கடுப்படித்தான் அம்பேத்கார்.

“இப்ப என்ன... கேட்டாத் தப்பா... சும்மா நையி நையின்னு பேசிக்கிட்டு இருக்கே... தெரிஞ்சவங்க வந்தா பேசமாட்டியா என்ன.... என்னமோ நான் அவளைக் கூட்டிக்கிட்டு ஓடிட்ட மாதிரி பேசுறே... அவ பிரண்டுக்கு மனைவி ஆகப் போறவன்னு எனக்கும் தெரியும்... அதுக்காக இன்னைக்கு பார்த்துட்டு நாம பார்க்காத மாதிரி போனா அவ நம்ம சாரதிக்கிட்ட போயிச் சொல்லமாட்டாளா... அவன் வருத்தப்படமாட்டான்....” கோபமாய் பேசினான் கண்ணன்.

“எதுக்கு நான் அணில் வாலு மாதிரி பின்னால வந்தேனோ தெரியலை... திட்டு வாங்கத்தான் போல... இப்ப எதுக்கு கத்துறே... அவன் வருத்தப்படுவான்னு பேச நினைக்கிறியா... இல்லை அவ வருந்துவான்னு பேச நினைக்கிறான்னு அந்த சங்கரப்பதி முனியைய்யாவுக்குத்தான் தெரியும்... நான் இங்க உக்காந்திருக்கேன்... நீ போயி அவகிட்ட பேசிட்டு வா... போகும் போது வண்டியில பஸ் ஸ்டாண்டுக்கு அவளைக் கூட்டிக்கிட்டு போ... நான் எப்படியோ நடந்து வந்து சேர்றேன்... போ போயி பேசு...” கடுப்பாய்ச் சொன்னபடி அருகிலிருந்த சேரில் அமர்ந்தான் அம்பேத்கார்.

“டேய்... என்னடா நீயி... எதுக்கெடுத்தாலும் கோபப்படுறே...?” கேட்டவாறு அருகே அமர்ந்தான் கண்ணன்.

“நீ போ... போயி பேசிட்டு வா...  இனி நான் எதுவும் பேசுற மாதிரி இல்ல... உங்கூட வந்ததுக்கு லெட்சுமி தியேட்டர்ல படம் பாத்திருக்கலாம்... அப்பவே பிரவீண் கூப்பிட்டான்... வந்தேன் பாரு என்னையச் சொல்லணும்...” என்றபடி திரும்பி அமர்ந்து கொண்டான்.

கண்ணனுக்கு என்னவோ போலாகிவிட்டது. அம்பேத்கார் சொல்வதில் நியாயம் இருப்பதை அவன் அறியாமலில்லை... சுபஸ்ரீ நடந்து கொள்ளும் விதத்தை வைத்துப் பார்க்கும்போது கண்டதும் காதல் என்று இருக்கிறாளா... அல்லது நல்ல நட்பாக நினைக்கிறாளா என்பது அவனுக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. அவள் பேஸ்புக்கில் போட்டோ அனுப்பியதை வைத்துப் பார்க்கும் போது இதனால் பெரிய பிரச்சினையை எதிர்க்கொள்ள வேண்டி வரலாம் என அவன் மனசு சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது என்றாலும் ‘வந்த இடத்தில் பார்த்தும் பார்க்காமல் போவது அழகல்லவே... பேசினா இவன் கடுப்படிப்பான்...  பேசலைன்னா அவ தப்பா நினைப்பா என்ன செய்வது..?’ யோசனையோடு ஒன்றும் பேசாமல் இருந்தவன்,  அம்பேத்காரிடம் “வாடா சாப்பிட போகலாம்...” என்றபடி எழுந்தான். அப்போது சுபஸ்ரீ அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.


வேலாயுதமும் பஞ்சநாதனும் திண்ணையில் அமர்ந்து இன்றைய அரசியலை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

“சந்திரகுமார் யாருய்யா... இவனை வாங்கிட்டா விஜயகாந்த் கட்சி ஒண்ணுமில்லாமப் போயிரும்ன்னு அரசியல்ல பழம் தின்னு கொட்டை போட்ட கலைஞர் நினைக்கிறாரு பாரு... அதுதான் காலக் கொடுமை... இன்னைக்கு தேதியில... அம்மா வரக்கூடாதுன்னு எல்லாரும் நினைச்சாலும் அவனவன் முதல்வர் ஆசையில தனித்தனியா கொடி பிடிக்க, அந்தம்மா மறுபடியும் கோட்டையில கொடி ஏத்தப்போகுது  நீ வேணா பாரேன்...” என்றார் பஞ்சநாதன்.

“நீங்கல்லாம் அம்மா வந்திரும்ன்னு மனப்பால் குடிக்கிறீங்க... அதெல்லாம் நடக்காதுலே... இந்தத் தடவை மாற்று அரசுதான்... அதுல மாற்றமில்லை...”

“பார்க்கலாம்... செரி அதை விடு... ஆமா சின்னவன் வீட்டுக்குப் பொயிட்டு வந்தேயில்ல.... எப்படியிருக்கான்... பேத்தியா என்ன பண்ணுறா..?”

“நல்லாயிருக்காக... பேத்திக்குட்டிதான் விடமாட்டேன்னு நின்னா... நமக்கு அங்க போயி தங்க செரியா வருமா என்ன... ஆடு, மாடுகன்னு இதுக கூட கிடந்துட்டு அங்க போயி அறைக்குள்ள கிடக்குறது எனக்கு சுத்தமாப் பிடிக்கலை... அதான் கருக்கல்ல எந்திரிச்சி ஓடியாந்துட்டேன்.... அப்புறம் எங்க வீட்டு ஓடுகாலி நாயை சின்னவன் பாத்திருக்கான்.”

“அட... எங்கயாம்...? பேசினானாமா...?” பஞ்சநாதன் சந்தோஷமாய்க் கேட்டார்.

“அவன் என்னோட ரத்தம்... அவனெப்படி பேசுவான்...” பெருமையாய் மீசையைத் தடவினார் வேலாயுதம்.

“அப்ப மூத்தவன் யாரு ரத்தம்?” படக்கென கேட்டார் பஞ்சநாதன்.

 (அடுத்த சனிக்கிழமை தொடரும்...)

-‘பரிவை’ சே..குமார்.

வெள்ளி, 8 ஏப்ரல், 2016

மனசின் பக்கம் : ஆன்மீகம் முதல் அஞ்சலி வரை

ண்பர் என்னிடம் ஆன்மீகக் கட்டுரை கேட்டபோது ரொம்ப யோசித்தேன்.... சாமி கும்பிடுவேன்... கோவில்களுக்கு நடைப்பயணம் எல்லாம் போயிருக்கிறேன்  கதை, கவிதையின்னு எல்லாம் என்னால கிறுக்க முடியும் ஆன்மீகம் குறித்தான பகிர்வு என்றால் அதற்கென தேடல் இருக்க வேண்டும். அதெல்லாம் நமக்கு சரிவருமா...எப்பவுமே எது குறித்தாவது எழுத வேண்டும் என்றால் எனக்கு சற்று பயம் இருக்கத்தான் செய்யும்... அதுவும் தேடல் நிறைந்த ஆன்மீகம் என்றால் ரொம்பத் தூரம்தான்.. எனவே யோசித்தேன்.

'நீங்கதான் ஆன்மீகம் எழுதுவீங்களே... அப்புறம் நான் எதுக்கு... வேற எதாச்சும்...?' மெல்லக் கேட்டேன். 'இல்லை நீங்கதான் இதை எழுதணும்... எனக்குத் தெரியும்... நீங்க எழுதுவீங்க... யோசிக்காதீங்க ஜி' என்றார். முயற்சிக்கிறேன் என்று மட்டும் சொன்னேன். 'சரி நாளை மாலைக்குள் நல்ல முடிவாச் சொல்லுங்க...' என்றதும் 'சரி' என்றேன். மறுநாள் குருட்டுத் தைரியத்தில் 'எழுதிடலாம்' என்று சொல்லிவிட்டேன். அதன்பின்னான தேடலில் ஐந்தாம் தேதி காலை வரை எனக்கு அது குறித்து எந்த ஒரு எண்ணமும் தோன்றலை.  அவரிடம் சொன்னபடி ஆறாம் தேதி இரவுக்குள் கொடுக்க முடியாது... தேவையில்லாமல் சரியின்னு சொல்லிட்டோமோ என்று நினைத்தேன்.


ஐந்தாம் தேதி காலை எழுந்து குளித்து சாமி கும்பிட்டு நாட்காட்டியை கிழித்தபோது பிரதோஷம் என்றிருந்தது. சென்னையில் இருக்கும் போது தொடர்ந்து பிடித்த விரதம் இங்கு வந்ததும் சில காரணங்களால் விட்டாச்சு. இன்னைக்கு விரதம் இருக்கலாமே என சின்ன நப்பாசை...உடனே விரதம் இருக்கலாமென காலை சாப்பாடு, மதியச் சாப்பாடு துறந்து அலுவலகம் சென்றேன்.

முதல் நாள் பாதியில் விட்டு வந்த வேலையை முடித்தேன். எனக்கு மேலிருக்கும் எகிப்துக்காரன் வேறு இடத்துக்குப் போயிருந்தான். வர எப்படியும் ஒரு மணிக்கு மேலாகும் என்பதால் கொஞ்சம் கொஞ்சம் எழுதலாம் என ஆரம்பித்தேன்... 12.30 மணிக்கு முடித்து எழுத்துப் பிழை (கிட்டத்தட்ட மூன்று முறை பார்த்தும் நண்பர் சில இடங்களில் பிழை இருப்பதைக் குறித்துக் கேட்டார்... நீங்களும் ஒரு முறை பார்த்துருங்க என்று சொன்னது தனிக்கதை) பார்த்து இன்னும் கொஞ்சம் பட்டி பார்க்க வேண்டும் வீட்டில் போய் பார்த்துக்கலாம் என்று நினைத்து தண்ணீர் குடித்துவிட்டு திரும்பியபோது 'ஹாய் குமார்' என எகிப்துக்காரன் உள்ளே வந்தான்.

எப்படியோ நண்பரின் விருப்பத்துக்கு முடியாது என்று சொல்லாமல் முதல் ஆன்மீகக் கட்டுரை... அதுவும் எங்கள் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கோவில் பற்றிய கட்டுரை எழுதியிருக்கிறேன். அதற்கான தேடலில் நிறைய விவரங்களை அறிய முடிந்தது.  இன்னும் இன்னும் பலவற்றை படிக்க வேண்டும். தமிழகத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற கோவில்களை எல்லாம் பற்றி படிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது.

என்னையும் நம்பிக்கையுடன் ஆன்மீகப் பதிவு எழுதச் சொன்ன நண்பர் சத்யாவுக்கு என் நன்றி.

எனது ஆன்மீகப் பகிர்வு "கொஞ்சம் ஆன்மீகம் கொஞ்சம் (வீரத்) தமிழர் வரலாறு" வரும் ஏப்ரல் 11ஆம் தேதி மலர இருக்கும் அகல் மின்னிதழ் தமிழ்ப் புத்தாண்டு மலரில் வெளிவருகிறது.

***

கில்லர்ஜி அண்ணா கொடுத்த முத்துநிலவன் ஐயாவின் புத்தகத்தை நீண்ட நாள் எடுத்து பொறுமையாய் வாசித்து முடித்தேன். நமக்கு புத்தகம் கொடுத்து வாசிக்க வைப்பது கில்லர்ஜி அண்ணாதான். 'கம்பன் தமிழும் கணினித் தமிழும்' மொத்தம் 16 கட்டுரைகள்... எவ்வளவு செய்திகள்... என்ன ஒரு தேடல்... பொறுமையாய் வாசித்தபோது எத்தனை அற்புதமான விஷயங்களை... கம்பன் தமிழை... வள்ளுவன் தமிழை...  காரல் மார்க்ஸை... இன்னும் இப்படியாய் எத்தனை எத்தனை தமிழை... ரசித்துப் பருக முடிந்தது தெரியுமா... 

சத்தியமாச் சொல்றேங்க... நானெல்லாம் அகநானூறு, புறநானூறு, சங்க இலக்கியங்கள், மேல் நாட்டு இலங்கியங்கள் என எதிலும் ஆழ்ந்த அறிவு உள்ளவன் அல்ல... கல்லூரிக் காலங்களில் க்ரைம் நாவலும் பாக்கெட் நாவலும் என்னைச் சூழ்ந்திருந்த வேளையில் ராணி, குமுதம், பாக்யா, உதயம் என மூழ்கிக் கிடந்தவன்தான். கதை எழுதுங்கன்னு என் பேராசான் தொடர்ந்து நச்சரித்ததால் எழுதி ஆரம்பித்தவன்... கவிதை என கிறுக்கி 'தாமரை'யில் வந்து பொன்னீலன் ஐயா தனிப்பட்ட முறையில் கடிதம் எழுத உனக்கு நல்லாத்தானே எழுத வருதுன்னு உரம் போட்டு வளர்த்தவரும் அவரே. அதான் இன்றும் கிறுக்கிக்கிட்டு இருக்கேன்... இன்னும் இலக்கிய இலக்கணமெல்லாமே எனக்குத் தூரம்தான். 

படித்தால் இது போன்ற புத்தகங்களை தொடர்ந்து படிக்கணும்... ஐயாவின் தேடல் என்னை ஆச்சர்யப்படுத்தியது. க.நா.சு, ஜெயகாந்தன், ஜெயபாஸ்கரன், மேலாண்மை பொன்னுச்சாமி பற்றி எல்லாம் கட்டுரைகள்... இது ஒரு அறிவுக் களஞ்சியம்... இலக்கண அறிவே இல்லாத நானெல்லாம் இது குறித்து பேச முடியாது. நூல் விமர்சனம் என்று எதாவது கிறுக்கவும் முடியாது... அந்தளவுக்கு ஆழ்ந்து படிக்க வேண்டிய புத்தகம்... ஐயாவின் தேடலில் விளைந்த பொக்கிஷம் இது.. அருமையான ஒரு புத்தகம் வாசிக்கக் கிடைத்ததில் ரொம்ப மகிழ்ச்சி.
***

யன்தாரா - மம்முட்டி நடித்த 'புதிய நியமம்' பார்த்தேன். என்ன இது மெகா ஸ்டார் மம்முட்டியை விட்டுட்டு  நயன்தாரான்னு ஆரம்பிச்சிருக்கேன்னு நீங்க நினைக்கலாம். இந்தப்படம் நாயகியை மையமாகக் கொண்ட படம்தான். ஒரு  பெண் தன்னை பாலியல் தொந்தரவு செய்யும் காமுகர்களை என்ன செய்யணுமின்னு நினைக்கிறாளோ அதை கதையின் நாயகி செய்வதுதான் கதை. ஒரு பெண் குழந்தையின் தாய்... வக்கீலை காதலித்து திருமணம் செய்தவள்... கதகளியில் இராவணன் வேடம் கட்டுபவள்... அவளின் சந்தோஷ வாழ்க்கையில் குறுக்கிடும் மூவர் அவளை மொட்டை மாடிக்கு துணி காயப் போடப் போகும் போது கற்பழித்து விடுகிறார்கள். அதன் பின்  அவளின் நடவடிக்கை மாறிப் போகிறது. எப்பவும் சோகம் கலந்த முகத்தோடு எதிலும் ஒட்டாமல்... கணவனுடன் சந்தோஷமில்லை... மகளிடம் கண்டிப்பு... மற்றவர்களுடன் எரிச்சல் என வாழும் நாயகி, நகரத்துக்கு புதிதாய் வரும் போலீஸ் டி.சி.பி.ஜீனா பாயுடன் தோழியாகி அவரின் உதவியுடன் தன்னைக் கெடுத்த மூவரையும் வித்தியாசமான முறையில் பழி வாங்குகிறாள்.  அது கொலை அல்ல என போலீஸ் கேசை முடிக்கிறது. த்ரிஷ்யம் போன்ற ஒரு படம்...  அதெல்லாம் சரி... இதுல மம்முட்டிக்கு என்ன வேலைன்னுதானே கேக்குறீங்க... நானும் ஆரம்பத்திலிருந்து கிளைமேக்ஸ் வரை அப்படித்தான் நினைத்தேன்... இறுக்காட்சியில் வச்சிருக்கானுங்க பாருங்க... டுவிஸ்ட்... அதுக்குத்தான் மெகா ஸ்டார்... மொத்தத்தில் ரொம்ப அருமையான படம். மிஸ் பண்ணிடாதீங்க.
***

அனைவருக்கும் இனிய தெலுங்கு வருடப் பிறப்பு வாழ்த்துக்கள்.


-'பரிவை' சே.குமார்.

வியாழன், 7 ஏப்ரல், 2016

வாக்காளர் அலப்பறை...6

றைக்குள் நுழையும் போதே அவர் மிகுந்த சந்தோஷத்தோடு வந்தார். அவரின் சந்தோஷத்திற்கான காரணம் என்ன என்பதை அவன் அறிந்து வைத்திருந்ததால் ஒன்றும் பேசாமல் படுத்திருந்தான்.

"இந்தாங்க ஸ்வீட் எடுங்க... கொண்டாடுங்க..." என அறையில் இருந்த எல்லாருக்கும் கொடுத்தார். அவனிடமும் நீட்ட, 'இல்லங்க அப்புறம் எடுத்துக்கிறேன்...' என்றபடி திரும்பிப் படுத்தான்.

"என்ன ஸ்வீட்டெல்லாம்...?" கையைத் துடைத்தபடி கேட்டார் அன்வர் பாய்.

"சந்திரகுமார் தந்திரகுமாரா மாறிட்டாருல்ல... அதான்  ரொம்ப சந்தோஷமா சுவிட் வாங்கிக்கிட்டு வந்திருக்கிறார்..." சொல்லிச் சிரித்தான் காரைக்குடி கணபதி.

(போன தேர்தல் வரை காந்தி நோட்டா வாங்கிட்டு இப்ப பேச்சைப் பாரு)

"ஏங்க அது நான் சொல்லிக்கிட்டு இருந்ததுதானேங்க... இன்னும் போகப் போக பாருங்க தேமுதிகவே இல்லாமப் போயிடும்... அதுக்காக சுவிட் இல்லைங்க... அவனுக கோடிகளை வாங்கிட்டு கேடிகளாகுறானுங்க... நாம ஸ்விட் எடு கொண்டாடுன்னு கொண்டாட என்ன இருக்கு... ஆபீஸ்ல போஸ்டிங் மாத்தியிருக்கானுங்க... ஒரு ஆயிரம் திர்ஹாம் கூடக் கிடைக்கும்... அதான்..."

"ஓ... சந்தோஷங்க.... " என்றார் அன்வர் பாய்.

"பாத்தியளா... கேப்டனாம்... கிங்காம்... கிங்மேக்கராம்... இந்த வைகோ வேற இந்தாளைப் பார்த்ததும் புதுசா கல்யாணமானவன் மாதிரி என்ன பண்றோம்ன்னு தெரியாம கத்திக்கிட்டு இருந்தாரு... இப்ப என்னாச்சு கட்டுமரம் களை எடுக்க ஆரம்பிச்சிருச்சு...."

"இதுல கொடுமை என்னன்னா கட்சித் தலைமையை இந்தக் கட்சியில சேரு... அதுதான் ஜெயிக்கும் அப்படின்னு சொல்லி 24 மணி நேர கெடு விதிச்சானுங்க பாருங்க அங்கதான் நிக்கிறாரு கலைஞரு... ஹா...ஹா.... காசு எப்படியெல்லாம் பேச வைக்குது பாத்தியளா?" என்றார் அறை நிர்வாகி.

"விஜயகாந்துக்கு இது தேவைதாங்க.... இப்ப கட்சி அவன் கையில இல்லை... பொண்டாட்டியும் மச்சினனும்தான் எல்லாமே... பணம் பாக்குறதுக்காக அவனை பயன்படுத்துறாங்கன்னு தங்கர்பச்சனே சொல்லலையா...?" என்றார் அவர்.

அவன் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு மறுபடியும் படுத்துக் கொண்டான். "என்ன கேப்டனுக்கு சப்போர்ட் பண்ணுறவரு கம்முனு கெடக்காரு... முரசு தெரிச்சிப் போச்சுன்னா..." என்று சிரித்தார்.

"அட ஏங்க அவரை இழுக்கிறீங்க... அப்புறம் அவரு எதாச்சும் பேசுவாரு... தேவையா... சந்தோஷமான செய்தியோட வந்திருக்கீங்க... ஊருக்கு போன் பண்ணுங்க... அதை விட்டுட்டு வீணாப்போன அரசியல் எதுக்குங்க?" என்றார் அன்வர் பாய்.

"பாருங்களேன் இந்த வைகோவை... என்ன பேசுறோம்ன்னு இல்லாம கலைஞரை சாதியை வைச்சிப் பேசி... திருமாவெல்லாம் எதிர்க்க ஆரம்பிச்சிட்டாப்ல... தீவிர அரசியல்வாதிக்கு நாவடக்கம் இருக்கணும்... என்ன பேசுறோம்ன்னு யோசிச்சிப் பேசணும்... எதை வேணுமின்னாலும் பேசலாமா..?" என்றபடி கைலிக்கு மாறினார் அவர்.

"அதான் ரொம்ப வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டுட்டாரே..." என்றான் கணபதி. இவன் மதிமுக விசுவாசி.

"மன்னிப்பு கேட்டா முடிஞ்சி போச்சா...? இப்படி பேசுறவனுக எல்லாம் சேர்ந்து ஆட்சி அமைச்சா தமிழ்நாடு விளங்குமா?"

"வேற என்னங்க பண்ணனுங்கிறீங்க... எவ்வளவு வருந்தி மன்னிப்புக் கேட்டிருக்கிறார்... இன்னைக்கு எவன் எவனைப் பேசலை சொல்லுங்க... ஏன் அதே கலைஞர் காமரைஜரை கருவாட்டிக்காரி பெத்தவர்ன்னு சொல்லி இன்னும் என்னென்னமோ பேசலையா?" என்றார் அன்வர் பாய்.

"அது ஏங்க நேத்து ஒரு வீடியோ பார்த்தேன்... அதிமுக பிரச்சார மேடையில் ஒரு பொம்பளை பேசுது... கருணாநிதையும் ஸ்டாலினையும் என்ன பேசுறதுன்னு இல்லை... அதை ரசிச்சிக்கிட்டு கழக கண்மணிகள் உக்காந்து இருக்காங்க... அழகிரிக்கும் ஸ்டாலிக்கும் எவன் குஷ்புவை வச்சிக்கிறதுன்னு சண்டையாம்... இதைவிட இன்னும் கேவலமா வளர்மதி பேசுது... அதெல்லாம் ஏன் உடன்பிறப்புக்கள் எதிர்க்கலை." சற்று காட்டமாகக் கேட்டான் கணபதி.

"அது அவங்களுக்குள்ள ஒத்துப் போயிருவாங்கங்க... அவங்க ரெண்டு பேரு டார்க்டெட்டுமே மாற்று அரசியல்ன்னு கிளம்பியிருக்கிற கட்சிகள்தான்..." என்றான் அவர்.

"அப்ப அவங்களுக்குள்ள அண்டர்ஸ்டாண்டிங் இருக்குன்னு ஒத்துக்கிறீங்கதானே... அவங்க டார்க்கெட் மற்ற கட்சிகள் இல்லைங்க... மக்கள் நலக்கூட்டணி... அவங்க பிரிக்கப் போற ஒவ்வொரு ஓட்டும் திமுகவுக்கானதுதான்... அதான் இப்படி ஒரு கேவலமான வேலையில இறங்கியிருக்காங்க.... எங்களை நீக்க உனக்கு அதிகாரம் இல்லைன்னு சொல்ல வச்சி... முரசை முடக்கணுமின்னு துடிக்கிறாங்க... இதுதான் உண்மை.... தைரியமிருந்தால் மோதிப் பாக்கணும்... அதைவிட்டுட்டு காசு கொடுத்து அடிமைகளை வாங்கி பேச வச்சி வேடிக்கை பார்க்கிறது ஒரு நல்ல அரசியல்வாதி செய்யிற வேலையா?" கணபதி கனன்றான்.

"ஆமாங்க அவனுங்க கேக்குறதுல ஞாயம் இருக்குல்ல... சொந்தக்காசைப் போட்டு கட்சி வளர்த்தோம்... திமுக பக்கம் போனா, ஒருவேளை அவங்க ஜெயிச்சா மந்திரி சபையில இடம் கொடுக்காட்டியும் காண்ட்ராக்ட் அது இதுன்னு கொடுப்பாங்கதானே.... மநகூவுல இருந்து என்னத்தை புடுங்க முடியும் சொல்லுங்க..."

"இவங்க யாருமே மக்கள் சேவைக்காக எல்லாம் அரசியல்ல இல்ல... கோடிகள் சம்பாதிக்கணும் அதுதான் குறிக்கோள்..." என்றார் அறை நிர்வாகி.

"ஏங்க இதே தேமுதிக எம்.எல்.ஏக்கள் மக்கள் பணி ஆற்றப் போறோமுன்னு நாலு வருசம் முன்னால காசு வாங்கிக்கிட்டு அம்மாக்கிட்ட போனானுங்களே... என்ன மக்கள் பணி பண்ணுனானுங்க... ஓட்டுப் போட்ட மக்களை முட்டாளாக்கலையா" என்றார் அவர்.

"அதனாலதானே அம்மா அவனுகளை அப்படியே கட்டம் கட்டி ஒதுக்கிருச்சு... முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்ன்னு வள்ளுவர் சும்மாவா சொன்னாரு..." என்றான் கணபதி.

"ஆமா வேட்பாளர் அறிவிச்சிட்டு தினம் நாலு பேரை தூக்கிட்டு பழைய ஆளுங்களையே போட்டுக்கிட்டு வருது பாருங்க... இந்தப் பொழப்புக்கு..." என்றார் அவர்.

"இது தெரிஞ்சதுதானே... இந்த அஞ்சு வருசத்துல எத்தனை முறை மந்திரிகளை மாத்தியிருக்கும்... அறிவிக்கப்பட்டவனெல்லாம் வேட்புமனு தாக்கல் பண்ணினாத்தான் வேட்பாளர்ன்னு முடிவாகும்... அதுவரைக்கும் இப்படித்தான்..." என்றார் அன்வர் பாய்.

"ஹா... ஹா... ஒருத்தன் நான் எம்.எல்.ஏ. வேட்பாளர்ன்னு அம்மாவே சொல்லிட்டாங்கன்னு கிடா வெட்டி விருந்து கொடுத்திருக்கான்... விருந்து முடியிறதுக்குள்ள ஆளை மாத்திருச்சாம்... இப்ப கையில வச்சிருந்த காசெல்லாம் செலவழிச்சிட்டு நிக்கிறானாம்..."

(சரியா கணிச்சி வச்சிருக்கீங்க... இந்தத் தடவை ஆப்படிப்பானுங்கன்னு நம்புறோம்...)
"எது எப்படியோங்க... இந்தக் கலவரத்துல தேமுதிக-மநகூ ஒண்ணுமில்லாமப் போகப்போகுது...சொல்ல முடியாது தேர்தலுக்குள்ள மநகூ இல்லாமலேயே போனாலும் போகும்... நாம் தமிழர்ன்னு ஒருத்தன் கத்தினான்.. கத்தினான்... கத்திக்கிட்டே இருக்கான்... அதுவும் புஸ்வானம்தான்... பாஜக சொல்லவே வேண்டாம்... ஒரு வீட்டுக்கு மருமகனாப் போனவளை தாலியை அத்தெறிஞ்சிட்டு வா... நாங்க கட்டிக்கிறோம்ன்னு இன்னும் தொங்கிக்கிட்டு நிக்கிது... இப்படி எல்லாம் ஆட்டம் கண்டதால தைரியமா முன்னுக்கு வரப்போறது பாமகதான்..." என்றார் அவர்.

"எங்கடா சொல்லலையேன்னு நினைச்சேன்.... பாமக தைரியமா தென் தமிழகம் பக்கம்... குறிப்பா மதுரை தாண்டி எங்க பக்கத்துல வேட்பாளரை நிறுத்துமா...? அப்படி நிறுத்தினால் டெபாஸிட் வாங்குமா...? அன்புமணியாகிய நான்ன்னு எங்க ஊர்ப்பக்கம் வந்து பேசுவாரா உங்க சின்னய்யா... சொல்லுங்க..." என்றான் கணபதி.

"ஏங்க... அங்க அங்க இருக்க பெரிய பெரிய சாதி அமைப்புகளோடு மறைமுகமா பேசி வச்சிருக்காங்க... பாருங்க... இந்த முறை மாற்றம் வருதா இல்லையான்னு... ஏங்க கருணாஸ் தேவரே இல்லைங்கிறானுங்க... முக்குலத்தோர் பேருல ஒரு கட்சி வச்சிருக்கான்... அவனை திருவாடனை தொகுதியில நிப்பாட்டலையா... அப்படிப் பாக்கும்போது பாமக ஒவ்வொரு ஏரியாவுலயும் எந்த சாதி முன்னணியின்னு பார்த்து ஆட்களை நிப்பாட்டும்..."

"எப்பவும் நீங்க பண்ற ஆர்க்யூமெண்ட்படி பார்த்தா பாமக சாதிக்கட்சி இல்லைதானே... ஆனா இப்ப சாதி பாத்து நிப்பாட்டும்ன்னு சொல்றீங்க... எங்க பக்கமெல்லாம் மாம்பழம் பழுக்காதுங்க... அழுகிப்போயிடும் தெரிஞ்சிக்கங்க..." என்றான் கணபதி.

"சும்மா ஏங்க நீங்க எப்ப பார்த்தாலும் சாதிக்கட்சியின்னு சொல்லிக்கிட்டு... இன்னைக்கு அதிமுக அறிவிச்சிருக்கிற லிஸ்ட்ல சாதி இல்லாம இருக்கா... எங்க பக்கமெல்லாம் பெரும்பாலும் நிறுத்தியிருக்கிறது பெரும்பான்மை சாதியில இருந்துதான் போதுமா...? எல்லாக் கட்சியும் சாதி பாக்கத்தான் செய்யுது... பாமக, விடுதலை சிறுத்தைகள்ன்னு சில கட்சிகள் வளர ஆரம்பிச்சதும் அதை சாதிக்குள்ள கொண்டு வந்திடுறாங்க..." என்றார் அவர்.

"நடந்துக்கிறது அப்படித்தானேங்க... பின்ன சாதிக்கட்சியின்னு சொல்லாம..." என்றார் அறை நிர்வாகி.

"எங்களுக்கு ஜெயலலிதா மட்டுமே போட்டி... வேறு கட்சிகளை கணக்கில் எடுக்கலைன்னு அன்புமணி பேசியிருக்காரு பாருங்க... அதுதான் இந்த வருசத்தோட மிகச் சிறந்த காமெடி... அந்தம்மா நீயெல்லாம் எம்..... அப்படின்னு இருக்கு.... தைரியம் அதுக்கு அதிகம்... இந்தாளு தேவையில்லாம அதை சீண்டுறாரு..." என்றான் கணபதி.

"ஹா... ஹா.... வடிவேலு இல்லாத குறையைப் போக்கணுமில்ல... என்னதான் இருந்தாலும் அம்மா மாதிரி தில்லு வேற யாருக்கும் இல்லை... அதான் அன்புமணி தைரியமான பொம்பளையோட மோதுவோம்ன்னு சொல்றாப்புல..." என்றார் அறை நிர்வாகி.

"அப்ப பிரேமலதா தைரியமான ஆளில்லையா...?" சிரிக்காமல் கேட்டார் அன்வர் பாய்.

"அதெல்லாம் குழாயடி சண்டைக்குத்தான் லாயக்கு... கூட்டத்துக்குள்ள மாடு புகுந்து மூணு நாலு பேரை குத்திப்புடிச்சி... அப்ப இந்தம்மா மாடு புகுந்தா நல்லதுதான்... அது இதுன்னு பேசிக்கிட்டு இருக்கு... இதெல்லாம் விஜயகாந்த் பேரைச் சொல்லி அரசியல் பண்ணி காசு பாக்கப் பாக்குதுங்க... புருசனால பேச முடியலை... இது என்ன பேசுறதுன்னு இல்லாம பேசுது... இன்னைக்கு நிலமையில தமிழக அரசியல் காமெடியில களைகட்டிக்கிட்டு இருக்கு... ரொம்ப பொறுமையா விளக்கமா பேசுறது அன்புமணி மட்டுந்தான்..." என்றார் அவர்.

"தயவு செய்து அன்புமணி பேச்சை நிப்பாட்டுங்க... அம்மா இன்னும் களத்துல இறங்கலை... இறங்கட்டும்... அப்புறம் பாருங்க... சந்திர குமாரை தந்திரமா பணம் கொடுத்து இழுத்து பேச வச்சி வேடிக்கை பாக்குறாங்க... ஆனா அதுதான் திமுகவுக்கு பெரிய ஆப்புன்னு தெரியாம இருக்காங்க...  சுருக்கமாச் சொல்லப்போன தந்திர... இல்ல சந்திர குமாருதான் திமுகவுக்கு தரித்திரகுமாரா இருக்கப் போறாரு... தேமுதிகவுக்கு இருக்க ஓட்டு வங்கி விஜயகாந்த் என்ற தனி மனிதனுக்கானதுதான் என்பதை எல்லாரும் அறிவோம்... சந்திரகுமாரையெல்லாம் எவனுக்கும் தெரியாது... மக்கள் மனசுல கதாநாயகன்னா அது விஜயகாந்த்தான்... வெற்றி தோல்வி எல்லாம் சகஜம்... கெடு வச்சவனுங்களை தூக்கி அடிச்சாரு பாருங்க... அங்க நின்னாரு கேப்டன்..." என்றான் கணபதி.

"எங்கயும் அவரால நிக்க முடியாது... விட்டா சாஞ்சிருவாரு... பிரேமலதாவும் சுதீஷூம் ஸ்குரு போட்டு நிப்பாட்டுறாங்க... தாங்கிக்கிட்டு திரிஞ்ச சந்திரகுமாரு... ஐயா வண்டி தள்ளப் பொயிட்டாரு..." எனச் சிரித்தார் அன்வர் பாய்.

"எது எப்படியோ இந்தத் தடவை மக்கள் மனசுல புதிய சிந்தனை வந்தாச்சு... ரெண்டு பெரிய கட்சியும் ஆட்டம் காணுதா இல்லையான்னு பாருங்க..." என்றார் அவர்.

"அதெல்லாம் இல்லைங்க... பணத்தைக் கொடுத்து நம்மளோட புதிய சிந்தனையை எல்லாம் மழுங்கடிச்சிருவானுங்க... இந்தா பாருங்க... சினிமா நடிகர் நடத்துற நட்சத்திர கிரிக்கெட்டுக்கு ஆதரவு கொடுக்காதீங்கன்னு எல்லாரும் கத்துறானுங்க... தண்ணிக்குள்ள கிடந்து சென்னை தத்தளிச்சப்போ ஒரு சிலர் தவிர எந்தத் தக்காளியும் வரலை... ஆனாலும் டிக்கட் விக்க ஆரம்பிச்சதும் சென்னையில டிக்கெட் கிடைக்கலை... ரசிகர்கள் அடிதடின்னு வருதா இல்லையா பாருங்க... அப்படித்தான் அடிச்ச கொள்ளையில சில கோடியை ஒதுக்கி ஓட்டுக்கு பணம் கொடுத்து அதே அம்மா ஜம்முனு வந்து உக்காரப் போகுது.... அப்புறம் குத்துதே குடையுதேன்னு நிக்கப் போறோம்... இதுதான் உண்மை..." என்றான் கணபதி.

"காசுக்கு ஓட்டுன்னு இந்தத் தடவையும் பண்ணினா... தமிழன் செத்தொழிய வேண்டியதுதான்.... அதுக்கப்புறம் பீகார் மாதிரித்தான் தமிழகமும் இருக்கும்..." என்றார் அறை நிர்வாகி.

(அது சந்திரகுமாரு தலைவரே...!)

"இப்பவே அப்படித்தானே இருக்கு... காசுக்கு ஓட்டுப் போடாம யோசிச்சி ஓட்டுப் போட்டா நல்லது என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..." என்றான் கணபதி.

"ஏம்ப்பா... எப்பப் பாத்தாலும் இந்த கேடுகெட்ட அரசியல்தானா...? என்னமோ நீங்கதான் நாட்டை திருத்தி முன்னுக்கு கொண்டு வரப்போறது மாதிரி பேசிக்கிட்டு... ஆண்டி கூடி மடங்கட்டுன கதைதான் உங்க கதை.... ஆளாளுக்கு பேசுவீங்க... காலையில அடிச்சிப்பிடிச்சி எந்திரிச்சி வேலைக்கு ஓடுவீங்க... அதுசரி இப்ப பேசின நாலு பேருல யாரு ஓட்டுப் போட ஊருக்குப் போறீங்க..." என்றபடி கட்டிலில் இருந்து எழுந்தான் அவன்.

'ஆஹா... எழுந்திருச்சிட்டான்... வாயைக் கொடுத்தோம்... அப்புறம் பின்னாடி புண்ணாகிடும்' என்று நினைத்தபடி பாத்ரூம் சாவியை எடுத்தார் அவர். 'டீப் போட்டுக்கிட்டு வாறேன்'னு கிளம்பினார் அறை நிர்வாகி. 'அலோ அம்மாவா... நம்ம தொகுதியில கற்பகம் நிக்குதாமே... ஓட்டு விழுகுமா?' என ஆரம்பித்தான் கணபதி. 'அட ஏங்க லீவு கேட்டா கடுப்படிக்கிறானுங்க... எங்கிட்டு ஊருக்குப் போறது...' என்றபடி பேண்டை மாட்டினார் அன்வர் பாய்.

"பாத்தீங்களா... இதுதான் நடப்பு.... நாட்டை திருத்துவோம்... மாற்றம் வரும்... மண்ணாங்கட்டி வரும்ன்னு பேசுறவனெல்லாம் வெளியில இருந்துக்கிட்டு ஓட்டுப் போடக்கூட போகமாட்டானுங்க... நான் இன்னைக்கு எதுவும் பேசக்கூடாதுன்னு பேசமா இருந்தேன்... இனிமே அறைக்குள்ள அரசியல் பேசக் கூடாதுன்னு சொல்லணும்... அந்தாளு பாட்டுக்கு சுவிட்டோடதானே வந்தாரு... அவரைக் கிளப்பி விட்டு மாம்பழம் அது இதுன்னு... ஏன்டா மாப்ள இந்த வேலை.... பாய் எப்பவும் பேச மாட்டாரு... அவரும் இன்னைக்கு இடையில சரடு விடுறாரு... பாய் நமக்கெல்லாம் இது எதுக்கு... நம்ம வாழ்க்கையை ஓட்டுறதே பெரிசா இருக்கு... போங்க போயி சமைக்கிறதுக்கு வாங்கிக்கிடு சீக்கிரம் வாங்க... வேலையை ஆரம்பிப்போம். எவன் வந்தாலும் நாம இப்படித்தான் புரியுதா...? சாப்பிட்டு சீக்கிரம் படுத்தாத்தான் நாளைக்கு காலையில எந்திரிச்சி வேலைக்கு ஓடமுடியும்..." என்றான் அவன்.

படங்களுக்கு நன்றி - இணையம்...
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 4 ஏப்ரல், 2016

பரவசப்படுத்தும் 'சார்லி'

பார்க்காமலே காதல்... சொல்லாமலே காதல்... இப்படி வித்தியாசமான கதைக்களங்களில் நாம் நிறையப் படங்களைப் பார்த்திருக்கிறோம். நாம் இப்பவும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் போது இந்த மலையாளிகள் மட்டும் எப்படி இப்படியான கதைகளை எடுக்கிறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது. நாம் மட்டுமா அவர்களும்தான் காதல் அது இதுன்னு படமெடுக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். அப்படியே இருந்தாலும் அதிலும் வித்தியாசமான கதைக்களம், வித்தியாசமான திரைக்கதை அமைப்பு என கலக்கி விடுகிறார்கள். அப்படியான வித்தியாசமான ஒரு கதைக்களத்தில் மிகவும் வித்தியாசனமான திரைக்கதையில் வந்திருக்கும் படம் தான் 'சார்லி'.


அண்ணனின் நிச்சயதார்த்தத்திற்கு பெங்களூரில் இருந்து வீட்டிற்கு வரும் டெசாவிடம்(பார்வதி) அம்மாவும் அண்ணனும் பெண் கொடுத்து பெண் எடுப்பது குறித்து முன்னமே பேசி வைத்தபடி திருமண ஏற்பாடு செய்ய வேண்டுமெனச் சொல்ல, தனக்கு அந்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று எதிர்க்கிறாள். இதனால் அவர்களுடன் மோதல் ஏற்படுகிறது... பாட்டியின் ஆதரவோடு வீட்டை விட்டு வெளியேறி தன் தோழியைத் தேடிச்சென்று அவளின் உதவியோடு ஒரு இடத்திற்குப் போய் வாடகைக்கு வீடெடுக்கிறாள்.

டெசா வாடகைக்கு பிடிக்கும் வீட்டில் ஏகப்பட்ட சாமான்கள் இருக்கின்றன... கேட்டால் முன்னர் குடியிருந்தவரின் பொருட்கள் அவை... மூப்பர் எப்ப வருவாருன்னு தெரியாது... வரும்போது எடுத்துப்பார்... அதுவரை நீ பயன்படுத்திக்கலாம் என்று பதில் கிடைக்கிறது. வீடெங்கும் இறைந்து கிடந்தாலும் அதில் ஒரு அழகியல் இருக்கிறது... அங்கு தங்கியிருந்தவரின் போட்டோ ஒன்றும் இருக்கிறது. அதை எடுத்து வைக்கிறாள். பின்னர் வீட்டின் உரிமையாளரிடம் சுத்தம் பண்ணித் தரச்சொல்லிக் கேட்க, அவர் செய்வதாகச் சொல்லி நாளை நகர்த்துகிறார். ஒரு கட்டத்தில் டெசா தானே சுத்தம் செய்ய ஆரம்பிக்கிறாள்.  அப்படி சுத்தம் பண்ணும் போது ஒரு நோட்டில் சித்திரமாக வரையப்பட்ட கதை ஒன்றினை படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதில் கொஞ்சம்தான் இருக்கு... ஆவலைத் தூண்டும் விதமாக அதன் பின்னான பக்கங்கள் வெள்ளைத் தாளாய் சிரிக்கின்றன. அந்த மனிதர் அவளுள் தாக்கத்தை ஏற்படுத்த அவரைப் பற்றி அறியும் ஆவலில் அங்கு தங்கி விசாரிக்க ஆரம்பிக்கிறாள்.

டெசா அந்தக் கதை நாயகனைக் குறித்து அறியும் விதமாக அதன் பின்னே பயணிக்க மெல்ல மெல்ல நம்மை சுவராஸ்யத்துக்குள் இழுத்துக் கொண்டு நகர ஆரம்பிக்கிறான் சார்லி. அவன் யார்...? எங்கிருக்கிறான்...? எப்படிப்பட்டவன்..? என்பதை எல்லாம் அறியாமல் கிடைக்கும் தகவல்களின் சுவராஸ்யத்தை வைத்து  அவன் சந்தித்த நபர்களை அவ்வப்போது சந்தித்து விசாரணையைத் தொடர்கிறாள். ஒவ்வொருவரும் அவனை ஒருமுறைதான் சந்தித்தோம் என்பதையும் அந்தச் சந்திப்பில் தங்களுக்கு அவன் சந்தோஷத்தை அள்ளிக் கொடுத்துச் சென்றான் என்பதையும் சொல்ல, அவனைத் தேடுவதைத் தீவிரமாக்குகிறாள்... மனசுக்குள் அவன் மீது காதல் மெல்ல மெல்ல இறங்க ஆரம்பிக்கிறது. அவளின் தேடலின் அவன் குறித்த செய்திகள் ஒவ்வொருவரிடம் இருந்தும் கிடைக்கும் போது அதில் ஒரு சுவராஸ்யமிருக்கிறது.  அந்த சுவராஸ்யம் அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. 

தன்னை ஒரு பெண் தீவிரமாகத் தேடுகிறாள் என்று அறியும் சார்லி (துல்கர்) அவள் முன் வர வாய்ப்பிருந்தும் அவளை அலைய விட்டு தண்ணி காட்டுகிறான். அவன் குறித்தான தேடலில் எயிட்ஸ் நோயாளி மரியம் (கல்பனா), தற்கொலை செய்து கொள்ளப் போகும் டாக்டர் கனி (அபர்ணா கோபிநாத்), ஹோட்டலில் இருந்து காப்பற்றபடும் தன்யா (மரியத்தின் மகள்), உடல் நலமில்லாத குழந்தை என ஒவ்வொரு கதைகளும் அவளுக்கு அவன் மீதான மதிப்பைக் கூட்டிக் கொண்டே செல்ல, அவர் காப்பாற்றிய டாக்டர் பெண்ணைத் தேடி வருவது போல் அவன் தமிழ்நாட்டில் நடத்தும் ஒரு இல்லத்துக்கு வருகிறாள்.


அங்கு அவன் நடத்தும் இல்லத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல தரப்பட்டவர்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பதைக் காண்கிறாள். அவர்களோடு தங்கியிருக்கும் வேளையில் தோழி மற்றும் பாட்டியின் மூலமாக அவள் இருக்கும் இடம் அறிந்து அம்மாவும் அண்ணனும் வந்து கூட்டிச் செல்கிறார்கள். அவள் சென்ற சில நாட்களில் அங்கு வரும் சார்லி, எப்பவும் போல் ஜாலியாக இருக்க, டாக்டர் பெண் அவனிடம் டெசா குறித்தும் அவளின் காதல் குறித்தும் பேசுகிறாள். முதலில் என்னோட வாழ்க்கையில் யாருக்கும் இடமில்லை என்று சொல்பவன், அவளை எதற்காக அலைய விடுகிறாய் என்று அவள் சற்று கோபமாகப் பேச ஆரம்பித்ததும் அவளை எனக்குத் தெரியும் என்பதோடு எனக்கு மற்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து அதன் மூலம் அவர்களை  சந்தோஷப்படுத்தி, அந்த நேரத்தில் அவர்களோட முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை ரசிப்பது ரொம்ப பிடிக்கிறது அதை நான் தொடர்ந்து செய்ய எனக்கு தடையாய் எதுவும் வரக்கூடாது என்று சொல்லி என்னோட வாழ்வில் அவள் தேவையில்லை என்று சொல்லி விடுகிறான். பின்னர் அங்கிருந்து கிளம்பும் போது தன்னை பேருந்து நிறுத்தத்தில் கொண்டு வந்து விடும் டாக்டர் கனியிடம் இனி அவளிடம் விளையாடவில்லை பூரம் திருவிழாவில் கூட்டத்தோடு கூட்டமாய் நானிருப்பேன்... அங்கு வந்து என்னை கண்டுபிடிக்க முடிந்தால் கண்டுபிடிக்கச் சொல்லு என்று சொல்லிச் செல்கிறான்.

கனி போன் மூலம் டெசாவுக்குச் சொல்ல எப்படியும் அவனைக் கண்டுபிடிப்பேன் என பூரம் திருவிழாவிற்கு வருகிறாள். மக்கள் வெள்ளத்தில் பரபரப்பான இறுதிக்காட்சி, அலைமோதும் கூட்டம்...  அந்த மக்கள் வெள்ளத்தில் இருவரும் சந்தித்தார்களா... ஒன்று சேர்ந்தார்களா... என்பதே கதை... 

ஆரம்பம் முதல் அழகாய் நகரும் கதையில் பார்வதி தேடிச் செல்லும் நபர்கள் ஒவ்வொருவரும் துல்கர் குறித்து அவிழ்க்கும் முடிச்சு அனைத்தும் சுவராஸ்யமானவை. பிறருக்கு உதவி செய்யும் இளைஞன்... எப்பவும் ஜாலியாக சுற்றுபவன்... தன்னாலான நல்லதை செய்பவன்... அம்மா இல்லாமல் வளர்ந்தவன் என்றாலும் அப்பாவும் மகனும் தோழர்கள் போல் இருப்பவர்கள்... என வித்தியாசமான இளைஞனாக காட்டியிருக்கிறார்கள். இந்த வித்தியாசம்... நல்ல மனம் கொண்ட பிறருக்கு உதவும் கதாபாத்திரம் பார்த்து கேரளாவில் சில கல்லூரி இளைஞர்கள் சேவை மனப்பான்மையுடன் ஒரு சில நல்ல செயல்களில் இறங்கியிருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் செய்தியில் பார்த்தேன். ஒரு சினிமா நல்ல விஷயத்தை சொல்லிக் கொடுக்கும் போது பாராட்டலாம்தானே... நாங்க கட்டிடம் கட்ட நீங்க பணம் கொடுங்கன்னு மனசாட்சியே இல்லாமல் கேட்கும் நம்மவர்களை... விஜயகாந்த் பாணியில் ...த்தூ...ன்னுதான் சொல்லத் தோணுது.

நம்ம சினிமாவில் பெரும்பாலும் நாயகன் ஊர் சுற்றுவான்... காதலிப்பான்... டூயட் பாடுவான்... குடிப்பான்... குத்தாட்டம் போடுவான்... அப்பாவை வாடான்னு செல்லமாக அழைப்பான்... ஆனால் மலையாளத்தில் பெரும்பாலும் அப்பாவை.... பெரியவர்களை மரியாதை குறைவாக பேசும் காட்சிகள் இருப்பதில்லை... சார்லியில் கூட அடுத்தவரை சந்தோஷப்படுத்தி பார்க்கும் கதாபாத்திரம்தான்... ஆரம்பக் காட்சியில் தண்ணி அடிப்பது போல காட்டினாலும் ரொம்ப நல்லவனாக இருக்கிறான். காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரைதான் இருப்பேன் ஒரு நாளைக்கு ஒரு லட்சம்... அதன் பின்னான படங்களில் மணிக்கணக்கில் மீட்டர்... என்றெல்லாம் சொல்லி நடித்த வடிவேலு சன்டிவி சினிமா நிகழ்ச்சியில் 'உங்களை நம்பித்தான் நாங்க இருக்கோம்... நட்சத்திர கிரிக்கெட்டுக்கு முழு ஆதரவு கொடுங்கன்னு சொல்றார்... சம்பாதித்த கோடிகள் எல்லாம் சொத்தாகிப் போக, தெருக்கோடியில் இருப்பவனிடம் கெஞ்சுகிறார்கள்... வெட்கமாக இல்லை... இவர்கள் நாளைக்கே 'டேய் அப்பா... அட நாதாரி அப்பான்னு...' பேசி நடிப்பாங்க... நாம சிரிப்போம்... ஒன்றிரண்டு பேர் தவிர மற்றவர்கள் எல்லாமே தமிழனைக் கெடுக்கும் சினிமாதான் எடுக்கிறார்கள்.

சின்ன வயதில் தெரேசா என்னும் பெண்ணை மனசுக்குள் காதலித்து, காதலைச் சொல்லும் முன்னே அவளின் குடிசை மழையில் இழுத்துச் செல்லப்பட, அதன் பின்னான வாழ்வில் திருமணமே செய்யாமல் வாழும் அவரின் முன்னே சின்ன வயதில் காதலித்தவளை வயதான கன்னியாஸ்திரியாக சார்லி கொண்டு வந்து நிறுத்தும் போது அவர்கள் இருவரும் நடந்து கொள்ளும்  விதம், அதன் பின்னர் தனக்கு கொஞ்ச நேரம் தனிமை வேண்டுமெனச் சொல்லி அறைக்குள் அடைந்து கிடந்தவர் சந்தோஷமாய் வெளியில் வந்து 'அவருக்கு கொஞ்சம் காபி பொடியும் தேயிலையும் கொடுத்து விட்டிருக்கலாம்' என்று சொல்லும் போது அந்தக் காதல்... அந்தக் காத்திருப்பின் சுகம் எல்லாம் மிக அருமையாக காட்டப்படுகிறது... வயதான மனிதராக நெடுமுடி வேணு... மனிதர் கலக்கியிருக்கிறார்.


துல்கர்... துடிப்பான நடிப்பு... கலந்து கட்டி கலக்கும் பாத்திரம் என்பதால் ஆரம்பத்தில் பார்வதியிடம் போனில் பேசுவது முதல்... திருடனுடன் தண்ணி அடித்துவிட்டு திருடப் போவது... தற்கொலை பண்ணிக் கொள்ள இருக்கும் பெண்ணைக் காப்பாற்ற அவள் பின்னே பயணிப்பது... போலீஸில் காதலர்கள் என்று சொல்வது... கல்பனாவின் ஆசைப்படி கடலுக்குள் கூட்டிச் செல்வது... அவள் இறந்ததும் தவிப்பது... ஹோட்டலில் மனித மிருகத்திடமிருந்தும் பெற்ற தகப்பனிடம் இருந்தும் தன்யாவை காப்பாற்றி அழைத்துச் செல்வது... பார்வதி தன்னைத் தேடுகிறாள் என்று தெரிந்தும் அவளை அலைய விடுவது என ரொம்ப ஜாலியாகச் செய்திருக்கிறார். கலக்கலான சுந்தரிப் பெண்ணே பாடலை அருமையாகப் பாடியிருக்கிறார். குரலும் ரொம்ப நல்லாவே இருக்கு... அவரின் உடையும் மிக வித்தியாசமாய்.... துல்கர் ஜெயிக்க ஆரம்பிச்சிட்டார்.

பார்வதி... சொல்லவே வேண்டாம்... நடிப்பு ராட்சஸி... அவருக்கு தீனி போடும் கதை என்றால் இன்னும் தீனி கேட்கும் நடிகை... எப்படிப்பட்ட கதாபாத்திரம் என்றாலும் அதோடு ஒன்றிப் பயணிப்பதில் சில நடிகைகளை மட்டுமே அடையாளம் காண முடியும். அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருத்தி... மூக்கில் மாடர்னாக பெரிய மூக்குத்தி, சோடாப்புட்டி கண்ணாடி, வித்தியாசமான செருப்பு என தன்னை அழகியாகக் காட்டாமல்... ஆரம்பம் முதலே நடிப்பில் கவர்கிறார். சுவராஸ்யமான ஒருவனைத் தேடி... தேடல் காதலாகி... அவனைக் காண அலைவது கலக்கல்... இறுதிக் காட்சியில் 'நான் ஸ்ருதி... ஸ்ருதி ராம்... நீங்க வேற யாரையோ எதிர் பார்க்கிறீங்களா..?' என்று கேட்டு துல்கரை மட்டுமல்ல நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.

படத்தோட பிளஸ்ஸே சார்லிங்கிற பெயரை கடைசி வரை சொல்லாமல் 'மூப்பர்... மூப்பர்...' என்று சொல்லி இறுதிக் காட்சியில் சொல்லியிருப்பதுதான்...

படம் ஆரம்பித்து... பார்வதியின் தேடல் ஆரம்பிக்கும் போது... துல்கர் கண்ணாம்பூச்சி ஆட... நமக்குள் இருவரும் சேர வேண்டும் என்ற தவிப்பு மெல்ல மெல்ல மேலெழும்பி இறுதிக் காட்சியில் சேர்ந்துடணும் என்று ஏங்க வைக்கிறது... அதுதான் திரைக்கதையின் ஆளுமை.

படத்தின் பின்னணி இசை அருமை... இசை கோபி சுந்தர்.

பூரம் காட்சிகள்... துல்கர் நடத்தும் இல்லம் இருக்கும் அழகிய இடம்... வித்தியாசமாய் பயணிக்கும் திரைக்கதை... என படம் ரொம்ப அழகு... இயக்குநர் மார்ட்டின் பரக்கத் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். 

(சுந்தரிப் பெண்ணே...)

படத்தை எதிர்ப்பார்ப்போடு பார்க்க ஆரம்பிக்காமல் எப்பவும் போல் பார்த்தோமேயானால் சார்லி நம்மை கொள்ளை கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.
-'பரிவை' சே.குமார்.

சனி, 2 ஏப்ரல், 2016

தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-11)

முந்தைய பகுதிகளை வாசிக்காதவர்கள் வாசிக்க...


பகுதி-1             பகுதி-2            பகுதி-3            பகுதி-4           பகுதி-5       பகுதி-6          பகுதி-7         


‘நீ பேசினியா?’ என வேலாயுதம் கோபமாகக் கேட்கவும் “இ...இல்லப்பா... நா... எப்படி அவங்கிட்ட பேசுவேன்...” என வேகமாகச் சொன்னான் சரவணன்.

“ம்... அந்த சனியனுக்கிட்ட யாரும் ஒட்டும் வச்சிக்கக் கூடாது... உறவும் வச்சிக்கக் கூடாது. ஆமா சொல்லிப்புட்டேன்... இப்ப உங்கக்காவுக்குத்தான் அந்த நாயி மேல பாசம் பொத்துக்கிட்டு வருது... மாப்ள கூட அப்படித்தான் இருக்காரு...  நீயாவது நம்ம சாதி சனத்துமேல இருக்க நம்பிக்கை குறையாம வச்சிக்க...”

“ம்... “

“இந்தாங்க மாமா காபி...” என அவருக்கும் சரவணனுக்கும் காபியை நீட்டினாள் சாரதா.

“இப்ப எதுக்குத்தா காபியெல்லாம்... சாப்புடப்போற நேரத்துல...” என்றபடி அவர் வாங்க, “சாப்பிட லேட் ஆகும் மாமா... உங்களுக்குத்தான் காபி எப்பக் கொடுத்தாலும் குடிப்பீங்களே அப்புறம் என்ன.... சுகர் போதுமான்னு பாத்துக்கங்க....” என்றாள்.

“ம்... எல்லாம் செரியா இருக்கு...” என்றபடி அவர் காபியை உறிஞ்ச, சரவணனைப் பார்த்து நக்கலாகச் சிரித்து ‘சொல்லவா?’ என்று கண் ஜாடை காட்டினாள்.

‘போடி... நீ வேற...” என கண்களாலேயே அவனும் சொல்ல சிரித்தபடி நகர்ந்தாள்.

“ஆமா... அந்த சாதி கெட்ட நாயி உங்கிட்ட பேச வந்துச்சா...?” எனக் கேட்டார் காபியை கையில் வைத்தபடி.

“இல்லப்பா.... எதித்தாப்ல வந்தான்.... நான் விலகிப் பொயிட்டேன்... பின்னாலயே அ... அவன் பொண்டாட்டி...  ரெண்டு பிள்ளைக... நல்ல செவப்பா இருக்குக.... பொண்ணு அப்படியே நம்ம அம்மா மாதிரி இருக்குப்பா...”

“இவ்வளவு நெருக்கமா பாத்திருக்கே.... ஆனா பேசலையா...?” சந்தேகத்தோடு கேட்டார்.

“அப்பா நான் உங்க பிள்ளை... ஒருத்தரை வேண்டான்னு ஒதுக்கிட்டா அவங்க பக்கமே திரும்பமாட்டேன். எதுத்தாப்ல வந்தாக... பாத்தேன்... அம்புட்டுத்தான்... பிள்ளைகளுக்கு நம்ம உறவே தெரியாது... அதுக பாட்டுக்க கடந்து போச்சுக...”

“ம்... அவதான் முக்கியம்ன்னு நம்மளை தூக்கி எறிஞ்சிட்டுப் போன நாயி அது... அதைப்பத்தி நமக்கெதுக்கு...” என்றபடி காபியை உறிஞ்சினார். சரவணனும் எதுவும் பேசாமல் காபியைக் குடித்துக் கொண்டிருந்தான்.

“ஏப்பா... புள்ளக நம்ம சாதி புள்ளைகளாட்டம் இருக்குகளா?” என்றார் தலையை நிமிர்த்தாமல்.

அவரா கேட்கிறார் என்ற சந்தேகத்தில் “அப்பா....” என்றான் சரவணன்.

“இல்லப்பா... புள்ளக நம்மாளுக மாதிரி இருக்குகளான்னு கேட்டேன்...”

“அதான் சொன்னேனே மூத்தது அப்படியே அம்மா மாதிரி இருக்கு.... பய நம்ம சாயல் இல்ல... ஆனா ரெண்டும் தொட்டா ஒட்டிக்கிற சிவப்பு.. கோவைப் பழமாட்டம்...”

“ம்... “ என்றவர் வேறு ஒன்றும் பேசவில்லை.

ரவு படுத்திருக்கும் போது “என்ன சார்... ரொம்ப நல்ல பிள்ளையாட்டம் பேசினீங்க...” என்றாள் சாரதா.

ஆமா உண்மையைத்தானே சொன்னேன்...” என்றான்.

“உங்கப்பா ஹால்ல படுத்திருக்கார்.... எதுவும் கேட்காது... உங்கண்ணனோட நீங்க பேசலை... பிள்ளைகளைத் தூக்கி கொஞ்சலை.... அதான் வந்த உடனே எங்கிட்ட சொல்லிச் சொல்லி கொன்னு எடுத்தீங்களே... இப்ப எதுக்கு மறைக்கிறீங்க...” சிரித்தாள்.

“நீ சும்மா இரு... அவருக்குக் கேட்டா அப்புறம் நம்மளையும் ஒதுக்கிருவாரு... பாரு அக்கா சப்போர்ட் பண்ணுதுன்னு அது மேல கோபத்துல இருக்கார்... நல்லவேளைக்கு அண்ணனுக்குப் பின்னாலயே அண்ணின்னு சொல்லப் பொயிட்டேன் டப்புன்னு அவன் பொண்டாட்டின்னு மாத்திட்டேன்... “

“ம்... ஏங்க அண்ணனைப் பார்த்தேன்... பேசினேன்னு சொன்னா என்ன கொல்லவா போறாரு... எம்புட்டு நாளைக்குத்தான் அவங்களை விரோதியாப் பாக்குறது...” என்றபடி அவன் போனை எடுத்து நோண்டி போட்டோக்களை எடுத்து அண்ணன் மகனை அவன் தூக்கி கொஞ்சியபடி நிற்கும் போட்டோவைக் காட்டி “மாமாக்கிட்ட உங்க பேரனைப் பாருங்கன்னு காட்டிட்டு வரவா?” என்று சிரித்தாள்.

“சும்மா இருடி வில்லங்கம் புடிச்சவளே... அண்ணனைப் பார்த்தப்போ எனக்கு பாசம்தான் கண்ணுல தெரிஞ்சது. அவன் மோசம் பண்ணிட்டான்னு எல்லாம் தோணலை... என்ன தப்புப் பண்ணினான்... அவனுக்குப் பிடிச்சது... வீட்ல கேட்டான்... இவரு சாதி, சமுதாயம்ன்னு பேசினாரு... அவன் நீங்க உங்க சாதியை பத்திரமாப் பாத்துக்கங்க... என்னை நினைக்கிறவளை சாதியைக் காட்டி விட்டுட்டு வர்ற அளவுக்கு நான் சாதியில ஊறலை... எனக்கு அந்த சாதியும் வேண்டான்னு சொல்லிட்டு பொயிட்டான்....”

“ம்...”

“பாவண்டி.... அவன் நினைப்பெல்லாம் எங்க மேலதான் இருக்கு... அப்ப எப்படி இருப்பான் தெரியுமா...? வயல் வேலை, வீட்டு வேலை எல்லாம் முக்காம முணங்காம செய்வான்... அவனை இவரு படுத்தாத பாடு இல்லை... எல்லாத்தையும் ஏத்துக்குவான்... யாரையும் எதித்துப் பேசமாட்டான்... அக்காவுக்கு எப்பவுமே என்னைவிட அவனைத்தான் பிடிக்கும்... அவனுக்கும் அக்கான்னா உயிரு... யாராச்சும் அக்காவை ஏதாச்சும் சொல்லிட்டா அம்புட்டுத்தான் அவங்க கூட கட்டி ஏறிடுவான்... இப்ப அவன் முகத்துல நினைச்ச வாழ்க்கை அமைந்த சந்தோஷம் இருந்தாலும் நாமெல்லாம் இல்லாத தனிமை தெரியுது... எப்படியாச்சும் அவனை சேத்து வைக்கணும்...”

“அவங்க வீட்ல சேத்துக்கிட்டதாச் சொன்னாங்கன்னு சொன்னீங்க...?”

“ம்... அவங்க சேத்துக்கிட்டாங்களாம்... அண்ணி, குழந்தைங்க போவாங்களாம்... இவன் இன்னும் போறதில்லையாம்... நம்மளை ஏமாத்திட்டானேன்னு அவங்க எவ்வளவு வருத்தப்பட்டிருப்பாங்க... ஏம்முகத்தைப் பார்த்தா இன்னும் வருத்தம் அதிகரிக்கும்ல்ல...  அப்படின்னு சொன்னான்.”

“அடேங்கப்பா... இவ்வளவு பேசியிருக்கீங்க... ஆனா அன்னைக்கு எங்கிட்டயும் இதெல்லாம் சொல்லாம மறச்சிட்டீங்க... இப்ப மாமாக்கிட்ட நான் உங்க வீட்டுப் பிள்ளைன்னு டயலாக்கெல்லாம் பேசிக்கிட்டு... ம்... நீங்க பெரிய நடிகனுங்க...” எனச் சிரித்தாள்.


ண்ணன் எப்போது இண்டர்நெட் மையம் போனாலும் முகநூலைத் திறந்ததும் ‘ஹாய்...’ என வர ஆரம்பித்தாள் சுபஸ்ரீ.  ஆரம்பத்தில் அவளுடன் கொஞ்ச நேரம் சாட் பண்ணினான். அதன் பின்னர் அவளுக்காகவே தினமும் இண்டர்நெட் மையம் போக வேண்டும் என்ற எண்ணம் எழ ஆரம்பிக்கவும், இதென்னடா வம்பாப் போச்சு... தேவையில்லாம நாம எதுக்கு இதுக்குள்ள போகணும் என் நினைத்து அங்கு செல்வதை நிறுத்தினான். 

ஒருமுறை அதன் ஓனர் கூட ‘என்ன கண்ணா... இப்பல்லாம் வர்றது இல்லை... நீ வந்த எனக்கு ஹெல்ப்பா இருக்கும்...’ என்றார். ‘இல்லண்ணே.... இப்ப ஒண்ணும் டவுன்லோட் பண்ண வேண்டிய வேலை இல்லை... அதான் வர்றதில்லை... எதாவது வேலை இருந்தா சொல்லுங்கண்ணா... வந்து செஞ்சு தாறேன்’ என்றான் சிரித்தபடி.

கல்லூரி, நண்பர்களுடன் அரட்டை என கலகலப்பாய் நாட்கள் மெல்ல நகர ஆரம்பித்தது. அந்த நாட்களில் சுபஸ்ரீ குறித்தான எந்தத் தகவலையும் தெரிந்து கொள்ள நினைக்கவும் இல்லை... விரும்பவும் இல்லை. 

சில மாத நகர்வுக்குப் பின்னே பள்ளிக்கால நண்பனின் தங்கை திருமணம்... கல்லூரி நண்பர்கள் யாருக்கும் தெரியாதவன் என்பதால் கண்ணனுக்கு மட்டுமே அழைப்பு... அப்படி இருந்தும் பைக்கில் சென்று வரலாம் என்பதால் அம்பேத்காரை கெஞ்சிக் கூத்தாடி அழைத்துச் சென்றான்.

அங்கு சுபஸ்ரீயைப் பார்ப்போம் என்று அவன் கனவில் கூட நினைக்கவிலை.

(அடுத்த சனிக்கிழமை தொடரும்...)

-‘பரிவை’ சே..குமார்.

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

மனசின் பக்கம் : மழையில் நனைத்த அன்பு

நேற்று நள்ளிரவில் ஆரம்பித்த மழை... தூறலாய் இன்னும் தொடர்கிறது. இன்று சுத்தமாக வெயில் இல்லை... மழை இல்லாமால் இருப்பதும் பின்னர் தூறுவதுமாக இருக்கிறது. பெரிய மழை என்றளவில் இல்லை... பெரும் தூறலாகவும் இல்லை... ஆனாலும் வெளியில் இறங்கி மழை நனைக்குமோ என்ற எண்ணத்திலேயே பார்க்க வேண்டிய வேலையை பார்க்காமல் இரண்டு முறை திரும்பிவிட்டேன். நாளையும் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏசி இல்லாமல் அறைக்குள் குளிர்கிறது. இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்தால்... இன்பமாய் தூங்கலாம். அப்படித்தான் என்றும் மதியம் தூங்காதவன் இன்று தூங்கினேன். தீபாவளிக்கு முந்தின இரவு ஆரம்பித்து அன்றெல்லாம் நசநசவெனப் பெய்யுமே அதுபோல் இருக்கிறது. வெளியில் நல்ல குளிர்... அறைக்குள் இருக்கும் போது மழைக்காலத்தில் ஓட்டு வீட்டில் இருப்பது போல் இருக்கிறது... ரொம்ப நல்லாயிருக்குய்யா... ஆனா இதுக்குப் பின்னே ஆரம்பிக்கும் பாருங்கள்... வெயில்.... இந்த முறை கொன்னு எடுத்துரும்ன்னு நினைக்கிறேன். எது எப்படியோ வார இறுதி அழகான மழைச்சாரலோடும் இளங்குளிரோடும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

தோழா படம் பார்த்தேன்... நாகார்ஜூனா கலக்கல்... கார்த்திக் எப்பவும் போல்... தமன்னா சொல்லிக் கொள்ளும்படி இல்லை... குறிப்பாக கார்த்திக் தமன்னா காதல் காட்சிகளில் பையா, சிறுத்தை அளவுக்கு ஒரு ஒட்டுதல் இல்லை... காரணம் அதுவாக இருக்கலாம்... ஏமாற்றம் என்பது இதயத்தின் ஓரத்தில் எப்பவும் இருக்கத்தானே செய்யும்... அதை விடுங்க... வில்லன் இல்லாத... வில்லன் பிரகாஷ்ராஜ் ரொம்ப நல்லவராய் நடித்த... கலகலப்பாக செல்லும் படம்... எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். எல்லாரும் ஆஹா... ஒஹோன்னு புகழ்றாங்க... எல்லாம் சரிதான்... சில தவறுகள் நமக்கு மட்டும்தான் தெரியுமோ... இல்லை இதெல்லாம் சகஜமென பிரபல விமர்சகர்கள் எல்லாம் விட்டுட்டாங்களா தெரியலை... அது என்னான்னா...


பாரீஸூக்கு போறாங்க... சரி போகட்டும்... திருடனாய் திரிந்தவன் பாஸ்போர்ட் எடுத்து வைத்திருந்தானா தெரியலை... சரி அதை விட்டுடுவோம் ஏன்னா நாகார்ஜூனாதான் பெரிய... பெரிய... மில்லினராச்சே... நம்ம மல்லையா மாதிரி... எந்த வேலையையும் இருந்த இடத்துல இருந்து முடிச்சிருவாருல்ல... உடனே பாஸ்போர்ட் வாங்கி கூட்டிக்கிட்டு பொயிட்டாருன்னு வச்சிப்போம்.... நம்ம ஊர்ல கார்த்திக் கார் ஓட்டுறார்... சரி லைசென்ஸ் வச்சிருந்திருப்பார்... ஆனா பாரிஸ்ல போயி கார் ஓட்டுறாரு... அதுவும் பத்து நிமிசத்துக்கு மேல கார் சேசிங் காட்சிகள்... இங்க எல்லாம் லைசென்ஸ் இல்லாதவன் டிரைவர் சீட்டில் அமர்ந்தாலே அபராதம் போடுறானுங்க... இண்டர்நேஷனல் லைசென்ஸ் வேணும்... அது இல்லாம கார் ஓட்டி சேசிங் வேற... அங்க போயி உடனே லைசென்ஸ் வாங்கியிருப்பாரோ...? அதே மாதிரி அனுஷ்காவுக்கு போன் போடுறது... சரி விடுங்க... இதைச் சொன்னா நீ படத்தை மட்டும் பாருய்யா... எதுக்கு டீப்பா நோக்குறேன்னு சொல்லுவாங்க.... ஆமாங்க தோழா வித்தியாசமான முயற்சிங்க... நாகார்ஜூனா இன்னும் காதல் ராசாதானுங்க... அதனாலதான் நம்ம கார்த்திக்கு வத்தக் காமாட்சிய விட்டுட்டு ஸ்ரேயா, அனுஷ்கா அப்புறம் இன்னொரு பொண்ணு இப்படி மூணு.... கார்த்திக் வரைந்த ஓவியத்தை ரெண்டு லட்சம் கொடுத்து வாங்கும் பிரகாஷ்ராஜ் அவர்தான் வரைந்தார் எனத் தெரிந்ததும் காட்டும் முகபாவனை... கலக்கல். பார்க்கலாங்க...

விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம்தான் என்பதை நாம் ஏன் புரிந்து கொள்வதில்லை. தோல்விக்குப் பின் வீரர்களைத் தூற்றுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறோம். எந்தத் துறையாக இருந்தாலும் ஏற்றம் இறக்கம் வரத்தான் செய்யும்... அதற்காக நீ ஏற்றத்தில் மட்டுமே இரு... இறக்கம் வரவே கூடாதுன்னு சொல்றது என்ன நியாயம்..? இது போகட்டும்... தற்கொலைகள் என்பது கேலிக்கூத்து அல்லவா? இந்த கேலிக்கூத்து இன்றும் தொடர்வதுதான் வேதனை. பி.டெக். படிக்கும் மாணவி இந்தியாவின் தோல்வியால் மனம் உடைந்து கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  இது என்ன கொடுமை பாருங்கள்... தன் படிப்பு, குடும்பம், உறவுகள், நட்புக்கள், நாளைய எதிர்காலம் எல்லாம் விடுத்து ஒரு விளையாட்டின் பொருட்டு வாழ்வை முடித்துக் கொள்ளுதல் என்பது எவ்வளவு அபத்தமானது. முதலில் விளையாட்டை விளையாட்டாக பார்க்க கத்துக் கொள்வோம்.


புகழ் படம் பார்த்தேன்... நறுக்குத் தெரித்தாற்போல் நச் வசனம்... அரசியல்வாதிகள் எப்படி எப்படியெல்லாம் ஆட்டையைப் போடப் பார்க்கிறார்கள் என்பதை மிகச் சிறப்பான வசனங்களுடன் சொல்லியிருக்கிறார்கள். கம்யூனிச கருத்துக்களும் இடைஇடையே... ஆஹா... ஓஹோ என்றெல்லாம் இல்லை என்றாலும் பார்க்கலாம்தான்.

லையாளத்தில் வந்த சார்லி பார்த்து ஓரு வாரம் ஆச்சு. அதன் பாதிப்பு இன்னும் இருக்கு. நல்ல படம்... இது குறித்து தனிப் பகிர்வில் பேசலாமே... கொஞ்சம் விரிவாக... எனக்கும் ஒரு பகிர்வு கிடைக்கும்ல்ல.

ப்புறம் தஞ்சையம்பதி துரை. செல்வராஜூ ஐயா அவர்கள் நேசம் சுமந்த வானம்பாடி கதையை மையமாகக் கொண்டு 'பாடும் வானம்பாடி' என்ற ஒரு அழகிய கதை மாதிரியான கலக்கலான ஒரு பகிர்வு போட்டிருக்கிறார். முடிந்தால் வாசியுங்கள்... அந்த கடிகாரத்தின் மீதான பற்றுதலை ரசிப்பீர்கள். நேசத்திற்காக ஐயா எழுதியிருக்கும் மூன்றாம் பகிர்வு... ஐயா போன்ற பல நல்ல மனம் கொண்ட பிரபலங்களின் மனசுக்குள் அமர்ந்தாச்சு... அப்புறம் என்னங்க... இன்னும் நூறு கதை படைக்கலாம். அய்யாவுக்கு நன்றின்னு சொல்லி எல்லாம் கடந்து போய்விட முடியாது... இது தந்தை மகனின் பாசம்... கடந்து செல்லாது... கட்டிக் கொண்டு நிற்கும்.

கே.எஸ்.ஆர். கலைக் கல்லூரி  மாணவி சகோதரி வைசாலி அவர்கள் 'யான் வாசித்து வரும் வலைப்பக்கங்கள்' என்று சொல்லியிருக்கும் பகிர்வில் அடியேனுக்கும் இடம் அளித்திருக்கிறார். அவர் ஒரு பதிவு எழுதச் சொல்லி அழைத்திருக்கிறார். கில்லர்ஜி அண்ணா உள்ளிட்ட பலர் எழுதிட்டாங்க... நான் இன்னும் எழுதலை... விரைவில் எழுதுகிறேன்... என்னை தொடர்பதிவு எழுத அழைத்தமைக்கும்... பிரபலங்களுடன் வாசிக்கும் பதிவராக என்னையும் சொன்னதற்கும் நன்றி.

பிரபலமான பதிவர் திரு. கோபி சரபோஜி அவர்கள் 'முகவரிகளின் முகவரிகள்-1' என்னும் பகிர்வில் இந்த முகவரியையும் சொல்லியிருக்கிறார். அவரை நான் அதிகம் வாசித்ததில்லை... அவர் பதிவுகளுக்கும் சென்றதில்லை... என்னையும் சொல்லியிருப்பதை அவர் சொல்லித்தான் அறிந்தேன்... என்னை தொடர்ந்து வாசிப்பதாகச் சொன்னார். நானும் இப்போது அவரை வாசிக்கிறேன்... நிறைய புத்தகங்கள் வெளியிட்டிருக்கும் பிரபலம் என் எழுத்தும் நல்லாயிருக்குன்னு சொல்லியிருக்கிறார்... அவருக்கும் நன்றி. 
-'பரிவை' சே.குமார்.