மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 16 ஜனவரி, 2024

மனசின் பக்கம் : பொங்கலும் விஷாலும் பிக்பாஸும்

நேற்றைய பொங்கல் நாளில் காலையில் தங்கை கொண்டு வந்து கொடுத்த பொங்கலும் பருப்பும் சாப்பிட்டவனை, இரவு சாமி கும்பிடவும் விருந்துக்கும் தம்பி ஒருவர் அழைத்திருந்தார். ஊருக்குச் செல்லும் பாலாவை நானும் இராஜாராமும் துபையில் கொண்டு போய் விட்டுவிட்டு வர வேண்டியிருந்ததால் வீட்டுக்கு வருகிறேன்... சாப்பாடெல்லாம் வேண்டாம் எனச் சொல்லியிருந்தேன். 

மாலை அலுவலகம் முடிந்து அவர் வீட்டுக்குப் போனபோது நல்ல வரவேற்புடன் அந்த நேரத்தில் அருமையான விருந்து. ஊரில் சாப்பிடுவது போல் இருந்தது. இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சமென வயிறை முழுவதுமாக நிரப்பித்தான் அனுப்பினார்கள். அதன்பின் அறைக்கு வந்து சின்னதாய் ஒரு தூக்கம். அப்புறம் துபை பயணம். அறைக்குத் திரும்பி வந்து படுக்கும் போது 1.30 மணி ஆகியிருந்தது.

பொங்கல் மகிழ்வாய் கழிந்தது.

****

மாட்டுப் பொங்கல் எப்போதும் எங்கள் ஊரில் சிறப்புத்தான்... ஊர் கூடி கருப்பர் கோவில் பொட்டலில் பொங்கல் வைத்து, பொங்கலோ பொங்கலெனத் திட்டிக்குழி சுற்றி, கேலிக்காரர்களுக்கு சோறு தீட்டி மகிழ்வாய் கொண்டாடி, கருப்பரைக் கும்பிட்டு வீடு வந்து சேர்ந்து விருந்தை ஒரு கை பார்த்து, அதன்பின் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு மகிழ்ந்து... சந்தோசமான நாள்.

வெளிநாட்டு வாழ்க்கையில் கோவில் திருவிழாவைவிட மிகச் சிறப்பாக, மகிழ்வாகக் கொண்டாடும் பொங்கலுக்குச் செல்ல வெளிநாட்டு வாழ்க்கையில் வாய்ப்பு வந்து பல வருடம் ஆகிவிட்டது. அடுத்த வருடமாவது பொங்கலுக்கு ஊரில் இருக்க வேண்டும்.

****

விஷால் - 15

மகனுக்கு நாளை பிறந்த தினம்.

பொங்கல் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து நாளை மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.

பதினைந்தாவது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

பொறுப்பான பிள்ளையாய் இருப்பது மகிழ்வு.

கோழி, நாய், லவ் பேர்ட்ஸ், மீன் வளர்ப்பதில் விருப்பம் என்பதால் வீட்டில் இவை எல்லாம் உண்டு.

விவசாயத்தில் மிகுந்த ஆர்வம்... அந்த ஆர்வத்தின் காரணமாக இந்த ஆண்டு வரை விவசாயம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

குடும்பத்தில் நிலவும் தற்போதைய முக்கியப் பிரச்சினையை வைத்துச் சென்ற வாரத்தில் பந்தய மாடுகளை வைத்து ஒரு கதை சொன்னான். மொத்தக் குடும்பத்தையும் அதில் அடக்கிவிட்டான். இந்தப் பக்கம் நானும் அந்தப் பக்கம் அவனின் அம்மாவும் அக்காவும் சிரித்துக் கொண்டே இருந்தோம். சிரிக்காமல் பேசி எல்லோரையும் சிரிக்க வைத்துவிடுவான்,

வாழ்க்கை வளமானதாகவும் நலமானதாகவும் அமையட்டும்.

உங்களின் ஆசிர்வாதமும் பிராத்தனைகளும் அவனுக்குக் கிடைக்கட்டும்.

நன்றி.

****

பிக்பாஸ் - கருத்துப் பரிமாற்றுக் களம்

பிக்பாஸ் கடந்த ஆறு சீசனும் தொடர்ந்து பார்த்திருக்கிறேன். அதுவும் போன சீசனெல்லாம் முடிந்தளவுக்கு நேரலையிலும் பார்த்திருக்கிறேன். எனது வலைப்பூவில் சில இணையத் தளங்களில் எல்லாம் தொடர்ந்து எழுதியிருக்கிறேன். இந்தக் குழமத்தில் சென்ற சீசன்களில் எல்லாம் நிறைய எழுதியிருக்கிறேன். இந்த முறை அதிகம் எழுதவில்லை என்றாலும் அனைவருடைய எழுத்தையும் வாசித்தேன். அத்தனையும் சிறப்பு. அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட பதிவுகள், அந்தப் பதிவுகளுக்குக் கர்ம சிரத்தையாய் வரும் நீண்ட பதில்கள் என எல்லாவற்றையும் வாசித்தேன்.

கமலை ரொம்பவே பிடிக்கும் என்பதால்தான் பிக்பாஸ் பார்க்க ஆரம்பித்தது. ஒவ்வொரு முறையும் நமக்கென ஒரு போட்டியாளர் இருப்பார். அவர் வெற்றி பெற வேண்டும் எனத் தோன்றும். கமலும் மிகச் சிறப்பாக நிகழ்வை நடத்துவார். அவருக்காகவே சனி, ஞாயிறுகளில் எத்தனை மணி ஆனாலும் பார்த்துவிட்டுத்தான் படுப்பேன்.

இந்த முறை அதிகம் எழுதாததற்குக் காரணமே சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் பார்க்காததே. இந்தச் சீசன் ஆரம்பத்திலேயே சறுக்கி விட்டது. பவா வெளியே சென்றதில் காப்பாற்றப்பட்ட மாயாவுக்காக பெரும்பாலான போட்டியாளர்கள், தொலைக்காட்சி நிர்வாகம், கமல் என எல்லாருமே ஆடியதைப் பார்த்த போது வெறுப்பே மிஞ்சியது. அத்துடன் தினமும் ஒளிபரப்பாகும் ஒரு மணி நேர தொகுப்பைக் கூட பார்க்கும் எண்ணம் வரவில்லை.

கமல் இப்படி இருப்பார் என்று எதிர் பார்க்கவே இல்லை. தொலைக்காட்சி நிர்வாகமே சொன்னாலும் இந்த மனிதர் என்னால் முடியாது எனச் சொல்லியிருக்கலாம். ஆனால் நிர்வாகம் சொல்லித்தான் இவர் மாயா ஸ்லோகம் வாசித்தார் என்பதை நம்ப முடியவில்லை. மாயா தவறு செய்திருந்தால், அவர் யாரைத் தாக்கினாரோ அவர் மாயாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வாராவாரம் சொன்னதெல்லாம்... நிர்வாகம் சொல்லியா செய்திருக்கப் போகிறார்...? மாயாவுடன் சேர்ந்தால் நமக்குத் திட்டுக் கிடைக்காது என்ற பிம்பத்தையும் அவர்தான் உருவாக்கினார்.

பிரதீப் பிரச்சினையை மாயா கையில் எடுத்ததாலேயே கமல் தீர விசாரிக்காமல் ஒரு கார்டை மட்டும் முன்னே வைத்து எடுங்கள் என கொஞ்சம் மிரட்டலாகவே சொன்னார். இப்படி கமல் சறுக்கியதில் இந்தச் சீசன் பார்க்கும் எண்ணம் வராமல் போனது. அப்படி இருந்தும் சனி, ஞாயிறு கமல் ஏதாவது பேசிட மாட்டாரா என்ற நப்பாசையில் பார்க்கத்தான் செய்தேன். கமல் அப்படி எதுவும் பேசவில்லை என்பதாலேயே சில சனி, ஞாயிறுகளையும் சாய்ஸில் விட்டேன்.

இந்த முகநூல் பக்கத்தில் பகிரப்படும் சின்னச் சின்ன வீடியோக்களைப் பார்த்து மகிழ்வதுண்டு. விஷ்ணுவோட வீடியோக்களை யார் பகிர்ந்து கொண்டாலும் பல முறை பார்ப்பதுண்டு. ஆரம்பத்தில் பார்த்த விஷ்ணுவுக்கும் கடைசி நாலைந்து வாரங்களில் பார்த்த விஷ்ணுவுக்கும் எவ்வளவு மாற்றம். தங்கை சொன்னதெல்லாம் காத்துல விடு... மாயாவே காவல் தெய்வம் என நின்ற விக்ரம் எங்கே... தங்கை சொன்ன பின்னர் தன் போக்கை மொத்தமாய் மாற்றிக் கொண்ட விஷ்ணு எங்கே... சிறப்பு.

இந்தக் குழு அத்தனை அழகு, அருமையான உறுப்பினர்கள், அழகான பகிர்வுகள்... மொத்தத்தில் உங்களது பகிர்வுகளை மகிழ்வாய் வாசித்து என்னால் முடிந்தால் கருத்தும் இட்டு நாட்கள் மகிழ்வாய் சென்றன.

மீண்டும் அடுத்த சீசனிலும் இந்தக் குழுவில் தொடர்வேன்.

நன்றி.

-பரிவை சே.குமார்.

2 எண்ணங்கள்:

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே

நலமா? எப்படி இருக்கிறீர்கள்? தங்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். தங்கள் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சீரும் சிறப்புமாக நீண்ட ஆயுள், ஆரோக்கியத்தோடு வாழ இறைவனைப் பிரார்த்திக்க கொள்கிறேன். தங்கள் மகன் நல்ல பிள்ளையாய் வளருவதில் மிக்க மகிழ்ச்சி. அதை விட சந்தோஷம் வேறு எதில் இருக்கப் போகிறது..! . வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

KILLERGEE Devakottai சொன்னது…

பொங்கல் சிறப்பிதழ் நன்று.

விஷாலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.