அமீரகம் வந்து ஒரு நாலைந்து படம்தான் தியேட்டரில் பார்த்திருப்பேன். லியோவுக்கு வரலைன்னு சொன்னவனை ஒரு வாரத்துக்கு முன்னாடியே டிக்கெட் புக் பண்ணி, படம் வெளியான அன்று இரவுக்காட்சிக்கு கூட்டிச் சென்றார்கள் தம்பிகள்.
மறுநாள் வேலை என்ற போதிலும் அரங்கு நிறைந்திருந்தது. எனக்கருகில் வயதான ஒருவர் மிகவும் மகிழ்வோடு படம் பார்த்தார். படம் முடிவதற்குள் ஒரு பெரிய பாப்கார்ன் டப்பாவைக் காலி செய்திருந்தார்.
அர்ஜூன் வந்த போதும் த்ரிஷா வந்த போதும் விஜய்க்கு எழுந்த சப்தத்தைவிட அதிகமான சப்தத்தையும் விசிலையும் கேட்க முடிந்தது.
நம்ம ஊர் பரவாயில்லைன்னு சொல்ற அளவுக்கு பாப்கார்ன், குளிர்பானங்களின் விலையை ஏற்றி வைத்திருந்தார்கள். அடுத்த தளத்தில் 'லுலு' இருந்தது என்றாலும் வெளியில் வாங்கி வரும் திண்பண்டங்கள் உள்ளே அனுமதி இல்லை என்பதில் கவனமாக இருந்தார்கள்.
வெளியில் வைக்கப்பட்டிருந்த விஜய்யின் சிறிய கட்டவுட் முன் நின்று போட்டோ எடுக்க மலையாளிகள் வரிசையில் நின்றார்கள். சின்னக் குழந்தைகள் விஜய்யுடன் போட்டோ எடுக்க ஆவலாய் இருப்பதையும் போட்டோ எடுக்கும் போது அவர்களின் மகிழ்ச்சியையும் பார்க்க முடிந்தது. இந்தக் குழந்தைகளுக்காகவாது இது போன்ற ஆயிரம் கோடி அபத்தப் படங்களை அவர் தவிர்க்கலாம்.
காரைக்குடியில் கொஞ்சக் காலம் கணிப்பொறி மையத்தில் படித்துக் கொண்டு, வேலையும் பார்த்தபோது சக வாத்தியார் 'பம்பாய்' படத்துல 'உயிரே... உயிரே...' பாட்டுக்கு மனிஷா ஓடி வர்றதைப் பார்த்து 'குடுத்த காசு முடிஞ்சி போச்சுடா வாங்க போகலாம்'ன்னு கத்தியதை நினைவில் கொண்டு வந்தது த்ரிஷா முத்தம் கொடுத்த போது 'கொடுத்த காசுக்கு இது மட்டும்தான் ஒர்த்' என முன் வரிசையில் இருந்த வந்த சப்தம்.
முதல் பத்து நிமிசம் பாக்கலைன்னா ஒண்ணுமே புரியாதுன்னு சொன்னாங்கன்னு அரை மணி நேரம் முன்னதாகவே தியேட்டருக்கு போய் விஜய் கட்டவுட்டுக்கு முன்னாடி நின்னு போட்டோவெல்லாம் எடுத்து காத்திருந்து உள்ளே போனா கழுதைப்புலியைப் பிடிக்கிறேன்னு என்னமோ பண்ணிக்கிட்டு இருந்தாங்க. இதுதான் படத்துல விஜய்யோட வாழ்க்கையை பிரதிபலிக்குதுன்னு சொல்றாங்க ஆனா இதைப் பார்க்காட்டியும் வில்லன்கள் கேக்குற மாதிரி 'நீதானே லியோ'ன்னு கேக்காம படம் பாக்க முடியும். ஏன்னா நமக்குத்தான் ஆரம்பத்துலயே தெரிஞ்சிருமே... லியோதான் பார்த்தீபன்னு.
மலையாளப் படம்ன்னு ஆரம்பிச்சா வேற வேலையில்லை எனத் தோன்றும் ஆனால் இன்றைய சூழலில், அதுவும் தற்போதைய தமிழ் சினிமாவின் போக்கைப் பற்றிப் பேசும் போது அவர்களின் படத்தைப் பற்றிப் பேசுவது தப்பில்லை. ஒரு காலத்துல அவனுக கேவலமாப் படமெடுத்தானுங்கதான் ஆனா இப்போ சின்னதாக ஒரு பிரச்சினையை எடுத்துக் கொண்டு அத்தனை அழகா படத்தை நகர்த்துறாங்க. சமீபத்தில் பார்த்த ஆர்டிஎக்ஸ்-ல கூட அடிதடின்னாலும் அதில் ஒரு நியாமும் குறிப்பாக நம்ம தியேட்டரில் ஒவ்வொரு காட்சிக்கும் பின்னும் கழுவி விடப்படும் அதீத ரத்தமும் இல்லாமல் இருந்தது.
தெலுங்குப் படம் கூட சில வருடங்களுக்கு முன்னாடி வரை ஒரு பாட்டு முடிஞ்சதும் சண்டைங்கிற பார்முலாவை தவறாமல் கடைபிடித்தது. இப்ப ரயிலை கையால் பின்னோக்கித் தள்ளிய கூட்டம் கூட கதைகளோடு பயணிக்க ஆரம்பித்து விட்டது. நல்ல கன்னடப் படங்களும் வர ஆரம்பித்து விட்டன. ஆனால்... நம்ம இளம் இயக்குநர்கள் சுத்தியலால் அடித்து திரையில் மட்டுமல்ல படம் பார்ப்பவர்களின் முகத்திலும் ரத்தம் தெறிக்க விட்டு, இது மாதிரியான படமே தெறி, கொலமாஸ் என நினைக்கிறார்கள். நம்ம சூப்பர் ஹூரோக்கள் கூட ரத்தம் பார்த்து மட்டுமே நடிக்க ஆரம்பித்திருக்கிறார்களே ஒழிய நல்ல கதைகளைப் பார்த்து அல்ல.
மாநகரம், கைதி கொடுத்த லோகேஷ் ரத்தம் மட்டுமே கதையாக இருந்தால் போதும் எனப் பயணிக்க ஆரம்பித்து கோடிகளை அள்ளி, பல கேடிகளை உருவாக்கும் முயற்சியில் ஜெயித்துக் கொண்டிருக்கிறார். கெட்டவார்த்தை பேசியது கதாபாத்திரம்தான் - இங்க அந்த வார்த்தை அப்படியேதான் வந்தது - என்றாலும் விஜய்யே பேசிட்டாருன்னு பயலுக அசால்டா வீட்டில் கூட பேச ஆரம்பித்து விடுவார்கள். இந்த இடத்தில் லோகேஷ் ஜெயித்திருக்கிறார்... சினிமா தோத்திருக்கிறது.
அர்ஜுன் மட்டுமல்ல பலர் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். நரபலி கொடுப்பதாய் எடுத்திருப்பது முதல் பாதி படத்தோடு ஒட்டாமல் இருக்க, நரபலி கொடுக்க ஆள் தேடுற பெரிய வில்லன் மூதேவி தன்னோட பிள்ளைகளின் ஜாதகத்தையும் கொடுத்து வச்சிருக்காம்... காதுல பூ. அதைவிட ஒரு போதை சிகரெட் கம்பெனிக்காக அம்புட்டு நாள் ஆசையா வளர்த்த பிள்ளைகளை... அதுவும் பெண் பிள்ளையை அப்பனே கொல்லப் போறாராம். முன்பாதி கொடுத்த மிகப்பெரிய ஆவலை இரண்டாம் பாதியில் நரபலி மேடையில் வைத்து வெட்டிட்டானுங்க.
விஜய் தன் பையனின் கையில் ஆயுதத்தை எடுத்துக் கொடுப்பது சரியா..? என்ற விவாதம் அறையில் நட்புக்களுக்கு இடையே எழுந்தது. அவரு பையனுக்கு மட்டும் கொடுக்கலை தன்னை ஆதர்ஷ நாயகனாக, ஆதிபராசக்தி போட்டோவில் இருக்கும் ஐயா மாதிரி சாமி அறையில் வைத்துப் பூஜிக்கும் இளைஞர்கள் கையில் கொடுத்திருக்கிறார் என ஒருவர் முடித்துக் கொண்டார். அதுவும் சரிதான்னு தோணுச்சு.
ஒத்தையாளா கரு... கரு... கருப்பாயி பாடலுக்கு ஒரு டான்ஸ் ஆடியிருப்பார் விஜய். அதைவிட ஆயிரம் பேர் கூட ஆடும் டான்ஸ் நல்லாயிருந்துச்சு. த்ரிஷா கூட ஒரு டான்ஸ் வச்சிருந்தா ரத்தக்களறிக்கு இடையே கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்திருக்கலாம்ன்னு தோணுச்சு என படம் முடிந்து போகும்போது ஒருவர் தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டு போனார். அந்த அம்மையார் முறைத்ததை நான் பாக்கலை.
அந்த காபிக் கடை சண்டை சூப்பர்... மார்க்கெட் சண்டையும் சிறப்பு. அம்புட்டுக் காரையும் சாய்த்து வில்லனை அடித்துக் கொல்லும் க்ராபிக்ஸ் சின்னப்புள்ளை சண்டை காட்சி காமெடி. இறுதிச் சண்டையும் அப்படித்தான். விஜயிடம் சண்டையிலும் நடனத்திலும் இருக்கும் வேகம் கவர்ந்தது. அவர் நல்ல படங்களில் நடித்து நம்மையும் கவர முயற்சிக்கலாம்.
மியூசிக்... அந்தாளு எப்பவுமே பாத்திரத்தைப் போட்டு உருட்டுவாரு... இதுல ஆங்கிலப் பாட்டெல்லாம் பாடி அசத்தியிருக்கார்ன்னு பாத்தா அங்க இருந்துதான் உருவியிருக்காராம். காபி ஷாப் கதைங்கிறதால காப்பி அடிச்சிட்டாரு போல. வேற என்ன செய்ய முடியும்..? பெரிய ஆளுங்க உறவை வச்சிக்கிட்டு புல்லாங்குழல் ஓட்டையை அடைக்கத் தெரியாம ஊதுனா வெறுங்காத்துத்தான் வரும். அப்புறம் அங்கிட்டு இங்கிட்டுத்தானே ஓட்டையை அடைக்க விரல்களைக் கடன் வாங்கணும்.
தமிழ்நாட்டுப் போலீஸ்தான் வேணுமின்னு சொன்னப்பவே லோகேஷ் கைதி போலீசைத்தான் கொண்டு வருவாருன்னு தோணுச்சு... ஏன்னா எப்பவும் தானே காமெடி பண்ணும் விஜய், முகத்தை இறுக்கிக்கிட்டுப் பேசும் போது இறுக்கத்தைப் போக்க ஜார்ஜ் மரியானைக் கொண்டு வரத்தானே வேணும். அதுதான் நடந்துச்சு... ஆனா அவர் கூட சிரிக்க வைக்கலைங்கிறதுதான் வேதனை.
என்ன இருந்தாலும் பெரிய வில்லன் சஞ்சய் தத் கேனத்தனமா நடந்துக்கிட்டது சிரிக்க வச்சிச்சு... அப்புறம் அர்ஜூனும் இறுதிக் காட்சியில் சிரிக்க வைத்தார். விஜய் சிரிக்கவே வைக்கலையேங்கிற கவலையையும் எல்லாரையும் கொன்னுட்டு லியோவப் பாக்கணும் லியோவை பாக்கணும்ன்னு கேட்டியே நாந்தன் லியோன்னு சொன்னப்போ தீர்த்து வச்சிட்டாரு... யாரு லியோவுல்ல... அதோட லியோவை இனிப் பாக்கணும்ன்னு நினைப்பான்னு வேற கேட்ட மாதிரி இருந்துச்சு.
முதல் பாதியின் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லைன்னாலும் பசங்க பார்ப்பாங்க. லோகேஷோட வெற்றி நம்பர்ல ஒண்ணு கூடும்ன்னாலும் அவரோட இதுவரையான வெற்றி வரிசையில் லியோ அடியிலதான் இருக்குமே ஒழிய முதல் இடத்தில் அல்ல. என்னளவில் விக்ரமுக்கு முன்னே கைதிதான் பெஸ்ட்.
இந்தப் படத்துல எனக்கு ரொம்பப் பிடிச்ச இடம் எதுன்னா... ஒருவித பயத்தோட உறக்கமில்லாம சன்னல் வழி வெளி உலகத்தை வெறுத்துப் பார்க்கும் விஜய்யை 'அப்பா தூங்கலையா' என அவரின் மகள் கேட்டதும், தொப்பென விழுந்து அதோட மடியில குப்புறப்படுத்து ஆதரவு தேடும் இடம்தான். அந்தக் குழந்தையும் அம்மாவையும் அப்பாவையும் பார்த்துட்டு ஒரு தாயாக அப்பனைத் தட்டிக் கொடுக்கும். மிகச் சிறப்பான இடம்.... ரத்தக் களறியான படத்தில் ஒரு நெகிழ்வான இடம் அது மட்டும்தான்.
இறுதியில் நம்ம தலைவர் போதையை ஒழிப்போம் வான்னு லியோவைக் கூப்பிட்டாரு. நல்ல விஷயந்தானே. தமிழகப் பள்ளிக்கூடங்களில் எல்லாம் கஞ்சா நிரம்பி வழியிது, சேர்ந்து போயி அதெல்லாம் ஒழிக்கட்டுமே. ஆனா அவர் கூப்பிட்டதும் கதக்குன்னு இருந்துச்சு, ஏன்னா அடுத்த படத்துல விக்ரம், லியோ, ரோலக்ஸ்ன்னு எல்லாப் பயலையும் இறக்கி, இதுவரை ரத்த வெள்ளம் ஓட விட்டவரு ரத்த ஆற்றையில்ல ஓடவிடுவாரு. அங்க சுத்தியலுக்குப் பதிலா வேற ஆயுதம் எடுத்துட்டாருன்னா...
இறுகப்பற்றுன்னு ஒரு படம்... இந்த ரத்தக்களறி குப்பைகளுக்கு இடையே மூன்று கணவன் - மனைவிகளின் மனநிலையை மையமாக வைத்து வந்துச்சு... அருமையான படம் ஆனா வந்ததும் தெரியல... போனதும் தெரியல. இப்பல்லாம் அடிச்சிக் கொல்றது... அதுவும் சுத்தியலால அடிச்சிக் கொல்ற படங்களுக்குத்தான் மவுசு அதிகமா இருக்கு... இன்னும் எத்தனை சுத்தியல் வரப்போகுதே தெரியலை.
இளம் இயக்குநர்கள் அழகான கதைகளைப் படமாக்கலாம்... ஆனா மாட்டாங்க. ஏன்னா படம் பார்க்கும் நாம் ரத்தமும் சத்தமும் நிறைந்த படங்களைத்தானே கொண்டாடுகிறோம். நாம மாறுனாத்தான் அவங்க மாறுவாங்க... அது நடக்கும்ங்கிறீங்க.
என்னமோ போங்க.... லியோவோட முதல் பாதியை மறுக்கா மறுக்கா பாக்கலாம்... ஆனா அதிலும் ரத்தம் தெறிக்கத்தான் செய்யுது. அப்ப இரண்டாம் பாதி...? பாக்காம இருக்கதே சிறப்பு. பார்த்தீபன் என்ன பண்ணுவான்னு யோசிச்சிக்கிட்டாவது இருக்கலாம்.
பவாவுக்கு பக்கம் பக்கமா ரைட்டப் எழுதுனவங்கள்லாம் நீங்க அங்க போயிருக்கக் கூடாதுங்கிறதைத் தவறாமச் சொன்னாங்க. அவரை என்ன கட்டியா இழுத்துக்கிட்டுப் போனானுங்க. விரும்பி, பணம் கிடைக்கும்ன்னுதான் போனாரு. அப்படித்தான் விஜய்யும் விரும்பி, பணத்துக்காகவே இது மாதிரியான ரத்தக் கதைகளில் நடிக்கிறார். படத்தை தியேட்டரோடு விட்டுவிட்டு வருதல் நலம். தூக்கிச் சுமந்தால் நாமும் சுத்தியலை எடுக்கும் காலம் தூரத்தில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.
-பரிவை சே.குமார்.
3 எண்ணங்கள்:
அருமையான விமர்சனம் தம்பி...
காமெடி இல்லாத குறையை சண்டைக் காட்சிகள் தீர்த்து வைக்கின்றன. குறிப்பாக அந்த பள்ளியிலிருந்து எஸ்கேப் ஆகும் காட்சி. வன்முறையை எப்போது கைவிடுமோ திரையுலகம்...
குமார், உங்க விமர்சனம் நல்லாருக்கு. இது ரத்தம் கொட்டற சீஸன் போல? வேற யாராவது குடும்பக் கதை, கிராமத்துக் கதைய எடுத்து அது வெற்றி பெற்றது என்றால் உடனே மீண்டும் அந்த சீஸன் போகும்.
விக்ரம் அளவுக்கு இதுல கத்தல்கள் இல்லைன்னும் அதைவிட பெட்டர்னும் கேள்விப்பட்டேன். ஆனால் எனக்கு ஏனோ இந்தப் படம் பார்க்க வேண்டும் என்ற லிஸ்டில் இல்லை.
கண்ணூர் ஸ்க்வாட் பாத்தீங்களா குமார்? பலரும் அது ரொம்ப நல்லாருக்குன்னு சொன்னாங்க எனக்கு அதைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது ஆனால் போகும் சூழல் அமையவில்லை.
கீதா
கருத்துரையிடுக