மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

மனசின் பக்கம் : எழுத்து கொடுத்த இடம்

தொடர்ந்து எழுதிக்கிட்டு இருப்பது கூட ஏதோ ஒரு வகையில் வரம்தான். இப்போது வரை ஏதாவதொன்றை கிறுக்கிக் கொண்டுதான் இருக்கிறேன். சில நாட்களுக்கு முன் ஒரு சகோதரர் 'உங்களுக்குப் பிரச்சினை இல்லைண்ணே... தசரதன் புத்தகம் கொண்டு வந்து அவரே எல்லாத்தையும் பார்த்துக்கிறார். நானெல்லாம் புத்தகம் போட்டு அதை எல்லார்க்கிட்டயும் கொண்டு போய் சேர்க்க ஓடிக்கிட்டே இருக்க வேண்டியிருக்கு. என்னமோ தெரியல இப்பல்லாம் ஓடவும் முடியல... அடுத்தடுத்து நகர்வதில் கூட ஒரு தயக்கம் வருது' என்று சொன்னார்.

உண்மைதான்... எனது எழுத்துக்களைப் புத்தகமாக்க கலக்கல் ட்ரீம்ஸ் தசரதன் இருக்கிறார், இப்போது பாலாஜி அண்ணனின் கேலக்ஸியும்... அணிந்துரை இல்லாமல்தான் எதிர்சேவையைக் கொண்டு வந்தோம், வேரும் விழுதுகளும் நாவலுக்கு ஐயாவோட அணிந்துரை வேண்டுமென வாங்கினோம். அதன்பின் திருவிழா, பரிவை படைப்புகளுக்கு அணிந்துரை இல்லை. எந்தப் புத்தகத்துக்கும் வெளியீட்டு விழா வைத்ததில்லை - வாத்தியாருக்கு கேலக்ஸி இங்கு வைத்தது - சென்னை புத்தகக் கண்காட்சிக்கு கொண்டு வந்து விற்பனைக்கு வைத்துவிடுவார். எனக்கு சில போட்டோக்கள் அனுப்புவார், அத்துடன் வேலை முடிந்தது. இதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்... தொடர்கிறோம்.

(சொல்வனம் கட்டுரை)

புத்தகமாகக் கொண்டு வந்து அதன் பின்னான எல்லாவற்றையும் தசரதன் பார்த்துக் கொள்வார். நான் அதைப் பற்றி எதுவும் கேட்பதுமில்லை, யோசிப்பதுமில்லை.
புத்தகம் தொடர்பான சில பதிவுகள், யாரேனும் புத்தகம் கேட்டால் தசரதனிடம் சொல்வது என்ற வட்டத்தோடு நிறுத்திக் கொள்வேன். அடுத்தடுத்து எழுத்தில் நகர்ந்து கொண்டே இருப்பேன்.
இங்கிருக்கும் சூழல், வேலை, ஊரில் குடும்பம், பிள்ளைகள் படிப்பு என நகர்ந்து செல்வதில் நாக்குத் தள்ளும் போதெல்லாம் எழுத்து ஒன்றே மருந்தாகிக் கொண்டிருக்கிறது. நாம எழுதுறதை வாசிக்கச் சிலர் இருக்கிறார்கள் என்பதுடன் பரிவை சே.குமார் என்ற பெயர் ஓரளவுக்கு வெளியில் தெரிந்த பெயராக இருக்கிறது என்பதுடன் சரி. எழுத்தாளன் என்றெல்லாம் என்னை நான் சொல்லிக் கொள்ள விரும்புவது கூட இல்லை. அண்ணே உன் எழுத்து உன்னை கொண்டு செல்ல வேண்டிய இடத்துக்குக் கொண்டு செல்லும் தொடர்ந்து எழுத மட்டும் செய். விட்டுறாதே எனத் தசரதன் எப்பவும் சொல்வார். இதையேதான் எங்க ஐயா மு.பழனி இராகுலதாசன் அவர்களும் சொல்வார்.
எதிர்பார்ப்பில்லாமல் தொடர்ந்து நான்கு புத்தகங்கள், அதுவும் திருவிழா நாவலை - 550 பக்கம் - எந்த நம்பிக்கையில் அவர் கொண்டு வந்தார் என்ற ஆச்சர்யம் எனக்கு இப்போதும் உண்டு. கேலக்ஸியில் வாத்தியார் கொண்டு வரும்போது அதில் தசரதனின் வாழ்த்துரை இருக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்து அவரிடம் வாங்கினோம். அதில் கூட மேலே சொன்னதைத்தான் சொல்லியிருப்பார். என் எழுத்தின் மீதான அவரின் நம்பிக்கைக்கு நான் எப்போதும் நம்பகமாய் இருப்பேன் என்பதை மட்டுமே என்னால் சொல்லிக் கொள்ள முடியும்.
நேற்றிரவு - இங்கு 11.30 மணி - சொல்வனத்தில் வெளியாகியிருக்கும் கட்டுரையில் தமிழ் எழுத்தாளர்கள் பட்டியலில் அதிகமாக கவனம் பெறாத எழுத்தாளர்களில் என்னையும் ஒருவனாய் சொல்லியிருப்பதை மகிழ்வுடன் தெரிவித்தார். அவர் அனுப்பிய படத்தில் முதல் பெயராய் என் பெயரைப் பார்ப்பது மகிழ்வாய் இருந்தது, என் எழுத்தால் முன்பின் அறிமுகமில்லாத பாஸ்டன் பாலா என்னும் நண்பர் வரை சென்றடைந்திருக்கிறேன் என்பதே போதுமானதாய். இந்த வரிசையில் சகோதரர் தெரிசை.சிவாவும் இருப்பதாய் தசரதன் சொன்னார், இரட்டிப்பு மகிழ்ச்சி.
வேறென்ன செய்யப் போறோம். முடிந்தவரை தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்போம், அவ்வளவுதான்.
நன்றி.
-பரிவை சே.குமார்.

3 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மேலும் மேலும் மகிழ்ச்சி பெருக வாழ்த்துகள் குமார்...

ஸ்ரீராம். சொன்னது…

மகிழ்வான வாழ்த்துகள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

உங்கள் எழுத்தைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். எழுதுங்கள், எழுதுங்கள்...வாசகர் கடிதமாக எழுதத்தூண்டிய எனக்கு நூல்கள் எழுதும் அளவிற்கு உயர்த்தியது தொடர் வாசிப்பும், எழுதுவதுமே. வாழ்த்துகள்.