மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 17 ஜனவரி, 2023

பிக்பாஸ் சீசன் - 6 பதிவு -1

வெளியில பொங்கலுக்குச் சல்லிக்கட்டு.. பிக்பாஸ் வீட்டுக்குள்ள முட்டைக்காக மல்லுக்கட்டு.

ஒரு பொம்மையில் மைனாவுக்கும் மகேஸ்வரிக்கும் பிடித்த சிறு நெருப்பை, பெரும் தீயாக்க காத்திருந்த மணி சமயம் கிடைத்த போது அதை முட்டையில் மூட்டினான்.
DD உள்ளே வந்து விக்ரமனைப் பிடிக்கும் என்றதுடன் கொஞ்சம் நெருக்கமாய் பேசியதும்..., என் மகள் விக்ரமனுக்கும் ஷிவினுக்கும் பெரிய ரசிகை... இருவருக்கும் வாழ்த்துச் சொல்லச் சொன்னாள் என மா.ப.கா சொன்னதும் அசீமுக்குள் கனன்று கொண்டிருந்த அக்னி, மணி மூட்டிய நெருப்பைப் பார்த்ததும் இன்னும் வீரியமாய் எரிய, கல்யாண வீடுன்னா நாந்தான் மாப்பிள்ளை... அதே எழவு வீடுன்னா நாந்தான் பிணம் என ஊரில் சொல்வதைப் போல எல்லாவற்றிலும் ஆஜராகும் குணம் இங்கேயும் நெருப்போடு குதிக்க வைத்தது. அந்தச் சுவாலை மகேஸ்வரியை விட்டுவிட்டு தன் ஆஸ்தான எதிராளி விக்ரமனைப் பொசுக்க நினைத்து வெந்து தணியாத காடாக எரிந்து தீர்த்தது.
இது பதினைந்தாவது வாரம்... எல்லாரும் மகிழ்வாய் சந்தோசமாய் இருக்க வேண்டிய நேரத்தில் பெரும் கலவர பூமியாய் பிக்பாஸ் வீடு மாறியதற்கு வெளியில் போய் வந்தவர்கள்தான் காரணம் என்பதே உண்மை. நாம் இந்த இடத்தில் இருக்கவில்லை. இவர்களெல்லாம் இருக்கிறார்களே என்ற பொறாமைத் தீ அவர்களுக்குள் அதிதீவிரமாய் எரிவதுதான் இந்தப் பற்ற வைத்தலுக்குக் காரணம்.
சாந்தி முதல் வெளியேற்றம்... அந்த இரு வாரத்தில் முன்பின் தெரியாத ஒருவரைப் பற்றி நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதே உண்மை என்றாலும் எனக்கு விக்ரமனைப் பற்றி அப்பவே தெரியும் எனச் சொன்னதெல்லாம் எந்த வகையில் சேர்த்தி என்பதே தெரியவில்லை. இதில் கொடுமை என்னவென்றால் சாந்தி அக்காவுக்கும் முட்டை கிடைக்கலை என அந்த மனிதன் இவருக்காகவும்தான் பேசினார்.
இதேதான் ஜி.பி.முத்து கதையும்... ஏதோ ஒரு பிரச்சினையில் அவர் பக்கம் பேசவில்லையாம்... நடிக்கிறாராம்... பெண்கள் இருக்கும் போது கேமரா முன்னால் கெட்டவார்த்தைகளைச் சரளமாகப் பேசும் இவர் ரொம்ப நல்லவர் போல. அதைவிட யார் பக்கம் தவறெனப் பார்த்துப் பேசுவதுதான் நல்ல மனிதருக்கு அடையாளம், அதை விடுத்து மணி, மைனா, அசீமை ஏற்றி விட்டுக் கொண்டிருக்கிறார். இதைப் பார்க்கும் போது இப்படியான மனிதர்களைத்தான் நாம் வெகுளி என மேலே உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறோம் எனத் தோன்றியது.
மைனாவுக்கு இந்தப் பிரச்சினையால் விக்ரமனைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்ற மனநிலை, இருதலைக் கொள்ளியாய் இவர்களின் பேச்சைக் கேட்டு மழுப்பலாய் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். மணி கூட அப்படித்தான் இருக்கிறார். அசீமோ விக்ரமனோ யார் செய்தது தவறு என்பதை உணர்ந்து அவர்களிடம் நேரடியாகப் பேச இந்த மனிதர்களில் ஒருவர் கூட இல்லை என்பதுதான் வேதனை. தென்னையில ஒரு குத்து பனையில ஒரு குத்துன்னு ஓட்டுப் போட்ட கணக்கா, இங்கிட்டு வந்தா அசீம் செய்தது சரி, அங்கிட்டுப் போனா விக்ரமன் செய்தது சரின்னு நல்லாவே வேலை செய்கிறார்கள்.
அமுதவாணனிடம் மாமு நீ வெளியில போயி இந்த நாப்பது நாள் எபிசோடெல்லாம் எடுத்துப் பார் நான் ஏன் விக்ரமன் கூட சண்டை போட்டேன் என்பது அப்ப உனக்குப் புரியும் என்றபோது அசீமுக்கு ஆதரவு மனநிலையில் பேசும் அமுதவாணன், விக்ரமன் அந்த நேரத்தில் தப்புப் பண்ணினார் எனத் தெரியும் பட்சத்தில் நல்ல நட்பு இருப்பதால் அதை விக்ரமனிடம் நேரடியாகப் பேசியிருக்கலாம் அல்லது அவர் இதில் தப்புப் பண்ணவில்லை என உறுதியான நம்பிக்கை இருந்தால் அசீம் சொல்வதை ஆதரிக்காமல் தன் கருத்தை வைத்திருக்கலாம். அதையெல்லாம் விடுத்து அசீமுக்கு ஜங்க்... ஜக் போட்டு விட்டு அடுத்த காட்சியில் விக்ரமனிடம் சிரித்துப் பேசி விளையாடுகிறார். இதே போல்தான் அசல், சாந்தியெல்லாம் இங்கிட்டும் அங்கிட்டுமாய்...
மகேஸ்வரிக்கு ஆறுதல் சொன்னது விக்ரமனும் ஷிவினும் ராமும்தான்... அவர் ஒன்றும் நல்லவரில்லை என்பதை அவரே சொன்னார், அது பிக்பாஸ் ஆரம்பத்திலிருந்து பார்த்தவர்களுக்குத் தெரியும்தான்... அதற்காக மகேஸ்வரி வெளியேறிப் போனதில் ஆரம்பித்து கேவலமாகப் பேசியதெல்லாம் தேவையில்லாததுதான்... வேண்டுமென்றேதான் சண்டையின் போது அப்படிப் பேசினார்கள். அந்த நேரத்தில் அவரின் அழுகையில் உண்மை இருந்தது.
அவருக்கு ஆறுதல் சொன்ன விக்ரமன், அரசியல், மனித மனநிலை என நிறைய விசயங்கள் பேசினார். இன்னும் ரெண்டு நாள்தான் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்றும் அவரின் மனநிலையை மாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தார்.
மகேஸ்வரியுடனான அவரின் நட்புக்கூட சிலருக்கு எரிச்சலைத் தந்திருக்கலாம். அதன் வெளிப்பாடும் அங்கே தனா போன்றவர்களிடம் காணப்பட்டது. அசீம் பேசும் அரசியலை விட அவர் பேசுவது குறைவுதான்... அதுவும் பொதுவானதாகத்தான் இருக்கிறது. தனக்குள் இருக்கும் கோபம் வெளிப்படக்கூடாதென ரொம்பவே கட்டுப்பாடாய் இருக்க முயல்கிறார் என்பது அவரின் பேச்சின் மூலம் தெரிய வந்தது. இந்த இடத்தில்தான் அசீம் தவறு செய்கிறார்... கொஞ்சம் பொறுமை காத்தார் என்றால் விக்ரமனைவிட நல்ல மனிதராக அவரால் இருந்திருக்க முடியும்.. கட்டுப்பாடில்லாத மனநிலையே அசீமை ஒவ்வொரு நாளும் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இப்போது கடந்த சில நாட்களாக அசீம் ரொம்ப நல்லவர் என்று கட்டமைக்க தீவிரமான முயற்சி நடக்கிறது, அது உள்ளே வந்திருக்கும் போட்டியாளர்கள் எல்லாருக்குமான மனநிலையா அல்லது பிக்பாஸ் குழு சொல்லி விட்டதாலா என்பது புரியவில்லை. இப்படியானதொரு முயற்சி புரிந்திருந்தால் யாராயிருந்தாலும் தனது கோபத்தை அடக்கி நல்லவராகத் தன்னைக் காட்டிக் கொள்ளதான் முயற்சிப்பார்கள், இதிலும் அசீம் தானே தோல்வியை நோக்கிப் பயணித்துவிட்டார். அவரை ஏற்றி விட்டு 'இதற்குத்தானே ஆசைப்பட்டேன் அசீமா' எனப் பலர் வஞ்சமாகச் சிரிப்பது அவருக்குப் புரியவில்லை, காரணம் அவரின் முதுகுக்குப் பின்னே நிற்பவர்களைவிட முகத்துக்கு முன்னே நிற்கும் விக்ரமனே பெரிதாகத் தெரிவதுதான்.
அசீமுக்குள்ளும் சில நல்ல குணங்கள் இருக்கத்தான் செய்கிறது என்றாலும் கோபத்தின் பின்னே ஒருவன் தன் எதிராளி ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் இத்தனை கேவலமாக, வக்கிரமாக, மிகவும் மோசமாகப் பேசும்போது அவனுக்குள் இருக்கும் நல்ல குணம் அந்த இடத்திலேயே அடிபட்டுப் போய்விடாதா..? அதுகூட எல்லாம் தெரிந்த அசீமுக்குத் தெரியதா என்ன..? நான் இப்படித்தான் என நிறுவி, அதை அப்படியே எல்லார் மனதிலும் பதிய வைப்பதிலேயே குறியாக இருக்கிறார், இதை பிக்பாஸிடமும் கூட உன் பேச்சை எல்லாம் கேட்க முடியாதென பல சந்தர்ப்பங்களில் காட்டிவிட்டார். அப்படியிருக்க பிக்பாஸும், பிக்னிக் வந்தவர்களும் எந்த எண்ணத்தில் தன்னை மாற்றிக்காத அசீமுக்குச் சாமரம் வீசுகிறார்கள்..?
அதுவும் சேலை கட்டச் சொன்னதை அசீம் ஏற்க மறுத்து அதில் நிலையாக நின்றாராம் ஆனால் விக்ரமன் முதலில் கேள்விகள் கேட்டு அப்புறம் ஒரு பக்கம் மீசை, தாடி எடுக்கச் சம்மதித்தது முழுக்க முழுக்கச் சந்தர்ப்பவாதமாம்... அப்படியானால் ஆடாக மொட்டை, அமுதவாணன் பாதி மொட்டை, கதிரவன் பெண் உடுப்பு, ஷிவின் கறுப்பு மேக்கப் எனச் செய்ததெல்லாம்..?
விருந்துக்குப் போன இடத்தில் மகிழ்வை விதைத்துச் சென்றால் அவர்கள் மீண்டும் வருவார்களா என எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ஆனால் இவர்களோ விசத்தை அல்லவா விதைக்கிறார்கள். பின் எப்படி இவர்களுடனான நட்பு நீடிக்கும்..? இறுதி வாரத்தின் மகிழ்ச்சிகளைக் கொன்று விட்டு நல்லவர்கள் போல் நாடகமாடும் இவர்கள் எல்லாம் மனிதர்களா..?
விஜய் டிவிகாரன் கப்புல 'என் தமிழ் என் மக்கள்'ன்னு எழுத முடிவு பண்ணிட்டான் போல... அதற்கான முன்னெடுப்புத்தான் இதெல்லாம் என்பதாய்த்தான் தோன்றுகிறது. அசீமோ விக்ரமோ கமலின் கை உயர்த்தலில் நிற்பதைவிட இத்தனை நாளில் நான் திருநங்கை என ஒருமுறை கூடச் சொல்லி, பரிதாபப் பார்வை பார்க்க வைக்காத, அவரைப் போன்றோரை இந்தச் சமூகம் பார்க்கும் பார்வையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த ஷிவின் நின்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
இந்த நாரதர்கள் உள்ளே வரவில்லை என்றால் அசீம் எல்லாருடனும் சிறு மோதல் இருந்தால் கூட அதை அப்போதே மறந்துவிட்டு மகிழ்வாய் இருந்திருப்பார். இப்பப் பாருங்க... எல்லாம் முடிந்து ராத்திரி மூணு மணிக்கி, வடிவேலுவின் 'என்ன செஞ்சியா' காமெடியில 'நான் சரியாத்தானே பேசுறேன்' என வரும் வசனம் போல 'நான் விக்ரமனை ரொம்ப மோசமாத் திட்டலயே' எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார். பாவம் கோபத்தில் எகிறி, அதன் பின்னே சிந்திக்கிறார்... சிந்தியதை அள்ள முடியாது... மாத்திக்கிறேன் அப்பா என நாடகம் ஆடும் வார இறுதியும் இனி இல்லை... என்ன செய்யப் போகிறாரோ பாவம் அப்பாவித் தமிழன்.
இத்தனை அடிதடி ஆர்ப்பாட்டங்களுக்குப் பின் வந்தவர்களால் சாவி கொடுக்கப்பட்ட குழு வெளியே உட்கார்ந்து இன்னும் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருக்க, வீட்டுக்கு உள்ளே அமுதவாணன், ஷிவின், விக்ரமன், மகேஸ்வரி ஆகியோர் முட்டையை வைத்து வாழப்பழக் காமெடி போல் அடித்த கூத்து இருக்கே... ரொம்ப நேரம் வாய்விட்டுச் சிரிக்க வச்சாங்க... ஒரு மணி நேரத்துக்கும் மேல ஓடிக்கிட்டே இருந்துச்சு... அப்பப்ப ராமும் சேர்ந்து கொண்டார். அந்த நேரத்துல முட்டையை எடு... பிரைடு ரைஸ் பண்ணுவோம்ன்னு இவர்கள் அடுப்பைப் பற்ற வைக்க, மாலை அலுவலகம் முடிந்து போனதும் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் வெளியே வந்து நீண்ட நேரம் பனியில் நின்று, காவல்துறை இனி நீங்கள் உள்ளே போகலாம் எனச் சொன்னபின் அறைக்குத் திரும்பியவனுக்கு, மனைவி தூங்காது என்னாச்சுங்க எனப் போனில் விசாரித்ததில் மன அழுத்தம் நீங்கினாலும் தூக்கம் வராமல் இதையெல்லாம் பார்த்து நேரம் கடத்த, இருந்த வலியெல்லாம் குறைய வாழைப்பழக் காமெடியை ரசித்துச் சிரித்து, ஒரு கட்டத்தில் தூக்கம் கண்ணைக் கட்ட, தூங்கிப்போனேன்.
நல்லா இருந்த குடும்பத்தைக் கெடுத்த நாரவாயர்கள் இன்னும் எத்தனை நாளைக்கு இருப்பாங்கன்னு தெரியல... ஆனா ஒண்ணு உள்ள இருக்க போட்டியாளர்கள் - அசிம், விக்ரமன், மைனா, கதிரவன், ஷிவின், அமுதவாணன் - அனைவரும் மகிழ்வாக மேடை ஏறக்கூடாதுங்கிறதுல இவனுக ரொம்பத் தெளிவா இருக்கானுங்க... இது தெரியாத இந்தத் தற்குறிகள் அடிச்சிக்கிட்டு நாறுதுக. எப்படியும் போறதுக்குள்ள இன்னும் பலமான ஒரு மோதலை ஏற்படுத்திவிட்டுத்தான் போவார்கள் இந்த நல்லவர்கள்.

-பரிவை சே.குமார்.

1 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விக்ரமன் & ஷிவின் நல்ல போட்டியாளர்...