எனக்கான ஏதோ ஒன்று ஏதோ ஒரு விதத்தில் நடந்து கொண்டேதான் இருக்கிறது, அதுவும் எழுத்து தொடர்பாக எனக்கு நான் எதிர்பார்க்காததெல்லாம் கடந்த மூன்றாண்டுகளில் நடந்து கொண்டிருப்பது மகிழ்வே. அப்படித்தான் இன்றைய நிகழ்வும்.
அதன் பின்னான நிகழ்வுகளைச் சொல்லும் முன் பாலாஜி அண்ணனைப் பற்றிச் சொல்லவேண்டும். எங்கள் குழுமத்தில் - அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமம் - எல்லா நிகழ்வுகளையும் இழுத்துப் போட்டுச் செய்வதுடன், எல்லாருடனும் நேசத்தோடு பழகுபவர். எங்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். எனது புத்தகங்கள் வருவதில் மகிழும் மனிதர்களில் அண்ணனும் ஒருவர். என்னைத் தொடர்ந்து எழுது எனச் சொல்லிக் கொண்டே இருப்பவர்.
பாலாஜி அண்ணன் கேட்ட நேரத்தில் எல்லாமே கூடி வந்தது என்றுதான் சொல்லவேண்டும். ஊரில் இருந்து புத்தகம் கொண்டு வந்த சிவமணி ஞாயிறன்று அமீரகம் வந்தார், அதுவும் ஷார்ஜா விமான நிலையத்துக்கே வந்தது பாலாஜி அண்ணன் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ள ஏதுவாகிப் போனது. புத்தகத்தைக் கொண்டு வந்ததுக்கு நன்றி சிவமணி.
இன்று காலை வரை என்ன செய்யப் போகிறார் என்பது தெரியாது. காலையில் போன் செய்து நீ இல்லாமலே உன்னோட புத்தக வெளியீடு வைக்கப் போறேன் முடிச்சிட்டு சொல்றேன் என்றார். அப்போது முதல் ஒரே படபடப்பு... யாரை வைத்து, எங்கே... எப்படி... வெளியீடு வைக்கப் போறார்ன்னு ஒரே யோசனை. வேலையும் ஓடலை.
கொஞ்ச நேரம் கழித்துப் போன் செய்து தம்பி நீயில்லாம உன்னோட 'திருவிழா' புத்தகத்தை மனோபாலா அண்ணனை வைத்து வெளியீடு செய்து விட்டேன் என்றதுடன் இந்தா அண்ணனுக்கிட்ட பேசு என்றார். சில நிமிடங்கள் பேசினோம். எனக்கு இப்படியான ஒரு வெளியீடு நடக்கும் என்பது தெரியாது. ஏதோ செய்யப் போகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தால் எதிர்பார்க்காததை நிகழ்த்திவிட்டார் பாலாஜி அண்ணன். ரொம்ப நன்றிண்ணே.
திரு.மனோபாலா அவர்கள் ஆரம்ப கட்ட கொரோனோவின் போது எங்கள் குழுமத்தில் ஜூம் கலந்துரையாடலில் கலந்து கொண்டு நீண்ட நேரம் பேசியிருக்கிறார். சினிமாத்துறையில் எனக்குப் பிடித்தவர்களில் அவரும் ஒருவர். அப்படியானவர் கைகளில் திருவிழா என்பது மறக்க முடியாத ஒன்று. நன்றி மனோபாலா சார்.
எனக்கு எட்டு ராசி... இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டது மொத்தம் எட்டுப் பேர் என்பது திருவிழாவுக்கு சிறப்பான இடம் அமையும் என்பதைக் காட்டியது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட குழும உறவுகளுக்கு நன்றி.
பாலாஜி அண்ணன் பேசியதற்குப் பின்னர் குழும நண்பர்கள் போட்டோக்களைப் பகிர, பார்த்துப் பார்த்து மகிழ்ந்தேன். இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கதவனுக்கு வேறென்ன தோன்றும், மீண்டும் மீண்டும் படங்களைப் பார்க்கத்தானே தோன்றும். அதைத்தான் நானும் செய்தேன். அதுவும் துபையில் இயக்குநர் மனோபாலா கைகளில் எனது 'திருவிழா' என்பது மகிழ்ச்சிதானே. எல்லாத்துக்கும் பாலாஜி அண்ணனே காரணகர்த்தா என்பதுதான் உண்மை. மேலும் எங்கள் குழும நண்பர்களின் அன்பும் எனக்கு எப்போதும் அதிகமாகவே கிடைப்பதும் உண்டு.
மாலை மீண்டும் கூப்பிட்ட பாலாஜி அண்ணன், 'எப்புடி... நடத்திட்டோம் பாத்தியா..?' எனக் குதூகலமாகச் சொன்னபோது அவரின் மகிழ்ச்சியில், அந்தக் குரலில் என் மீதான நேசம் எனக்குத் தெரிந்தது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்பவருக்கு என்ன கைமாறு செய்ய முடியும்... இறுதிவரை இப்படியே இருப்போம்ண்ணே.
காலையில் மனைவி அம்மா, அப்பாவைப் பார்க்கப் போனபோது, வாராவராம் எதாவது பரிசு வாங்கியிருக்கீங்கன்னு புத்தகமாக வருது ஆயாக்கிட்ட கொண்டு போயிக் கொடுத்தாலும் படிப்பாங்க என்று சொல்லி புத்தகங்களை எடுத்துப் போனார், அப்போது திருவிழாவையும் அவர்களிடம் காட்டி வருகிறேன் என்று சொன்னார். இந்தப் புத்தகம் வர்றது கூரியர் / தபால்காரர்கள்தான் என்ன உங்க வீட்டுக்கு புத்தகமாய் வருதுன்னு கேட்கிறார்களாம்.
அம்மாவிடம் காட்டிக் கொண்டிருந்தபோது நான் போனடித்துப் பேசிவிட்டு கையில கட்டைப் போட்டுக்கிட்டு இந்த புத்தகத்தை தூக்கிப் படிக்க முடியாதும்மா வேற புத்தகங்களைப் படி எனச் சிரித்தபடி சொல்லி விட்டு வைக்க, கொஞ்ச நேரத்தில் அப்பாவின் கைகளில் திருவிழா இருக்கும் படங்கள் வந்தது. அவரின் முகத்தில் கண்ட மகிழ்வு நானும் எழுத்தில் ஏதோ செய்திருக்கிறேன் போல என நினைக்க வைத்தது. இது எனக்கு அடுத்த மகிழ்வு ஏன்னா படிக்கும் போது எழுதினால் ஆமா எழுதிக் கிழிக்கப்போறாருன்னு திட்டியவர்தான் அப்பா.
மாலை அறைக்குத் திரும்பிய பின் வாட்ஸப் பார்த்தால் ராஜாராம் போட்டோ அனுப்பியிருந்தார். அதில் மகள்களின் கையில் 'திருவிழா'. என்ன சொல்ல இன்றைய நாள் எல்லோராலும் சிறப்பானது.
வேறென்ன சொல்ல... எனக்கு இன்றைய நாள் மிகவும் மகிழ்வான நாளாக அமைந்தது.
நன்றி.
-'பரிவை' சே.குமார்.
4 எண்ணங்கள்:
சிறப்பான தகவல். பாராட்டுகளும் வாழ்த்துகளும் குமார்.
வாழ்த்துகள் குமார்...
சூப்பர்! நல்ல நட்பு வட்டம் குமார். வாழ்த்துகள்! பாராட்டுகள்!
கீதா
வாழ்த்துகளும், பாராட்டுகளும் குமார்.
கருத்துரையிடுக