மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 20 டிசம்பர், 2021

பிக்பாஸ் : பாவனி Vs அமீர்

பிக்பாஸ் சீசன் - 5 எழுபத்தைந்து நாட்களைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. நேற்றைய அபிநய்யின் வெளியேற்றத்துக்குப் பின் இறுதிப் பத்துபேர் வீட்டுக்குள் இருக்கிறார்கள். இன்னும் நான்கு வாரங்களே இருக்கும் நிலையில் வரும் வாரங்களில் இரட்டை வெளியேற்றமோ அல்லது வார இடையில் வெளியேற்றமோ இருந்தால்தான் இறுதி மூன்று என்ற இடத்துக்கு வர முடியும். கூட்டம் அதிகம் என்பதால்தான் இந்த முறை இரகசிய அறைக்கு யாரும் அனுப்பப்படவில்லை.

அபிநய்யின் வெளியேற்றம் என்பது எப்போதோ நடந்திருக்க வேண்டியது, ஏதோ காரணங்களால் அவரைக் காப்பாற்றிக் கொண்டே வந்தார்கள், மக்கள்தான் காப்பாற்றினார்கள் என்ற பொய்யுரையுடன். இந்த வாரத்தில் குடும்பங்கள் உள்ளே வரலாம் என்ற நிலையில் அபிநய்யை வெளியேற்ற ஏதாவது காரணம் இருந்திருக்கலாம். ஒருவேளை குடும்பங்கள் வரும்போது அபிநய்யின் குடும்பம் வர விருப்பப்படாமலோ அல்லது வந்து பாவனியுடன் ஏதாவது பிரச்சினை செய்தாலோ நிகழ்ச்சிக்கு களங்கம் வரும் என்று கூட யோசித்திருக்கலாம். போன வாரத்தில் அண்ணாச்சியை பலி கொடுத்தவர்களால் இந்த வாரம் வருணைப் பலி கொடுத்திருக்க முடியும் என்ற நிலையும் அபிநய்யை வெளியேற்றியதில் காரணம் இல்லாமல் இருக்காது.

பாவனியைப் பொறுத்தவரை எதையும் ஆமோதிக்கவோ எதிர்க்கவோ செய்வதில் காட்டும் தயக்கமே அபிநய்யுடனான மிகப்பெரிய பிரச்சினைக்கு காரணமாக இருந்தது, அதேதான் அமீர் விஷயத்திலும் நடக்கிறது. வந்தது முதல் அவன் சுற்றி வருவது அவரைத்தான். அவன் போட்டிக்காக இப்படிச் செய்கிறானா அல்லது உண்மையிலேயே பாவனியை விரும்புகிறானா என்பது தெரியவில்லை. இதுவரை நடந்த நான்கு சீசன்களிலும் ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட காதல்கள் எதுவும் சேர்ந்ததாக எங்காவது கேள்விப்பட்டிருக்கிறோமா என்றால் இல்லைதானே..?


அமீர் வந்தபின் அபிநய்க்கு மிகவும் சோகமான காலமாக அமைந்து விட்டது. அதற்குக் காரணம் பாவனியிடத்தில் அவரின் வரம்பு மீறிய செயல்கள். நமக்குக் காட்டப்படும் ஒரு மணி நேரத்திலேயே அபிநய் அங்கும் இங்குமாய் அலைவது, முகத்தைச் சுளிப்பதெனத் திரியும் போது இருபத்தி நான்கு மணி நேரமும் வீட்டுக்குள் இன்னும் என்னவெல்லாம் பண்ணியிருப்பார். ப்ரியங்கா, அக்சராவெல்லாம் தங்கை என்னும் போது பாவனியை அந்த வட்டத்துக்குள் அவர் இறுதிவரை கொண்டு வரவில்லை. நேற்று கூட நமக்குள்ள தவறான புரிதல் வந்தாச்சு, அமீர் அவளை நல்லாப் பாத்துக்கோ என்று சொன்னதெல்லாம் தேவையில்லாத ஆணி. பாவனியிடமோ அல்லது பாவனி குறித்தோ பேசாமல் சென்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

அமீரின் செயல்கள் எரிச்சலையே உண்டாக்குகின்றன. பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததே பாவனிக்காகத்தான் என்று சொல்லும் இவரை ஏன் உள்ளே அனுப்பினார்கள். காதலிக்கிறேன் என்றதும் என் வயசென்ன உன் வயசென்ன எனக் கேட்கும் பாவனியிடம் எனக்கு இருபத்தஞ்சு வயசு, உனக்காகத்தான் வந்தேன் என்பதும், பாடல் பாடுவதும், பின்னாலயே திரிவதும் பல நேரங்களில் எரிச்சலையே உண்டு பண்ணுகிறது. உன்னை விரும்புறேன்னு சொன்னதும் முடியாது எனப் பாவனி தீர்க்கமாய் சொல்லாததும் சிரித்து மழுப்புவதுமே அமீருக்கு இன்னும் அதிக தைரியத்தைக் கொடுக்கிறது.

இவர்கள் ஒருவேளை காதலித்தாலோ அல்லது பாவனி சிரித்துக் கொண்டே சொல்லும் 'முடியாது' உண்மையாக இருந்தாலோ என்னவாகப் போகிறது. இருக்கும் வரை இவர்களின் இந்தக் காதலை அனுபவிப்போமென ப்ரியங்கா சிரித்து மகிழ்வதைப் போல்தான் பார்வையாளர்களின் மனநிலையும் இருக்கும். பாவனிக்கான நல்லதொரு வாழ்க்கையை அவர் தேர்ந்தெடுப்பதில் தவறில்லை, அவருடைய வயசுக்கு எதையும் யோசித்துச் செய்யும் முதிர்ச்சியைப் பெற்றிருப்பார் என்றே நம்புகிறேன். முதல் திருமணம், கணவனின் தற்கொலை என அவர் கடந்து வந்த பாதையை வைத்து இனி வரும் வாழ்க்கையை அவர் தீர்மானிக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு எதையும் முடிவு பண்ணக் கூடாது. 

முத்தம் இல்லாத பிக்பாஸா...? எழுபத்தைந்து நாளாச்சு இதுவரை எதுவுமே நடக்கலையே என யோசித்த வேளையில்தான் படுக்கை அறையில் வைத்து ரகசியம் பேசுவது போல் பாவனிக்கு முத்தம் கொடுக்கிறார் அமீர். இதற்குப் பாவனியிடம் இருந்து வந்த எதிர்ப்பு அப்படி ஒன்றும் அழுத்தமாக இல்லை என்னும் போதே அவர் மனதிலும் அமீர் இருக்கக் கூடுமோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அவரின் எதிர்ப்பு சும்மா ஒரு பேச்சுக்காக இருந்ததை உணர்ந்த அமீர் அதை வைத்தே மெல்லக் காய் நகற்ற ஆரம்பித்திருக்கிறார். இன்னும் நான்கு வாரங்களில் இன்னும் என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ தெரியலை.

இந்த வார இறுதியில் கமலின் பேச்சு அத்தனை சுவராஸ்யத்தைக் கொடுக்கவில்லை. ஏதோ நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பதாய்த்தான் இருந்தது. அவர் கேட்ட கேள்விகளுக்குப் போட்டியாளர்களின் பதில் கூட ஊரைச் சுற்றி, என்ன சொல்கிறார்கள் என்பது புரியாமல்தான் இருந்தது. பாவனிக்குக் பாயாசம் கொடுக்காத பிரச்சினையையும் அக்சரா - பிரியங்கா, அக்சரா - ராஜூ பிரச்சினைகளையும் விரிவாகப் பேசவில்லை. அமீரின் செயல்பாடுகள் குறித்து மறைமுகமாகக் கூட பேசாதது ஆச்சர்யமே.

சீரியல்களில் காதலையும் காமத்தையும் கட்டவிழ்த்து விட்டு வீட்டிலிருக்கும் குழந்தைகள் மனதில் நஞ்சை அவிழ்த்து விடும் போக்கைக் கடைபிடித்திருக்கும் தொலைக்காட்சிகள் இது போன்ற நிகழ்ச்சிகளில் இவையெல்லாம் இருப்பதை, அதை வெளிப்படையாக ஒளிபரப்புவது என்பது நிகழத்தான் செய்யும். நாம்தான் எது தேவை, எது தேவையற்றது என்பதை அன்னப்பட்சி போல பகுப்பாய்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளை எடுத்துக் கொள்ள வைக்க வேண்டும்.

பாவனி அமீரின் காதல் கதை வெற்றிக்கதையாகும் அல்லது வெற்றிக்கான கதையாகுமா என்பதை வரும் வாரங்கள் நிரூபிக்கும்.

தொடர்ந்து பேசுவோம்.

-'பரிவை' சே.குமார். 

1 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எதிர்ப் பார்க்காத அருவருப்பு...