மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 4 நவம்பர், 2021

பிக்பாஸ் - 5 : 9. நமுத்துப்போன கமலின் வாரம்

 தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்


பிக்பாஸில் கடந்த வார இறுதியில் வந்த கமல் உலக கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பி, பலத்த அடி வாங்கிய இந்திய அணியைப் போலத்தான் செயல்பட்டார். பரபரப்பான பல விஷயங்களைப் பேசுவார் என எதிர்பார்த்து மழையில் நமுத்துப் போன புஸ்வானம் கதையாகத்தான் முடிந்தது.

ரஜினிக்கு விருது கிடைத்ததுக்கு மகிழ்வும் புனித் ராஜ்குமாரின் மரணத்துக்கு இரங்கலும் தெரிவித்தார். கண்ணதாசன் தொகுத்த ஆயிரம் மரப்புக் கவிதைகள் - ஈற்றடி கொடுக்கப்பட்டு எழுதச் சொன்னவை - புத்தகத்தை அறிமுகம் செய்தார்.

முதலிலேயே சொல்ல வேண்டியது முன்னோட்டம் பார்த்துவிட்டு எந்த முன் முடிவுக்கும் வரவேண்டாம் என்பதே. வாங்க வீட்டுக்குள்ள போயி அடிச்சித் துவைப்போம், நமக்கு எல்லாம் தெரியாதுன்னு நினைச்சிக்கிட்டாங்களான்னு பேசிட்டு  உள்ள போயி, அப்புடி இல்லங்கோ... இப்புடிங்கோன்னு  ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும்ன்னு சொல்லிட்டுப் போறதுக்குத்தான் ஒரு வார இறுதி, வேறொன்றும் இல்லை.

தாமரையின் காயினை எடுத்த பிரச்சினையில் பல யூடிப் சேனல்கள் குறும்படம் போட்டு கமல் நிகழ்ச்சியை நடத்துவது போலெல்லாம் வேற லெவல் செய்தார்கள் - அது அவர்களுக்குப் பொழப்பு - ஆனா இதெல்லாம் ரொம்ப ஓவருங்க. என்னமோ அருகில் இருந்து பார்த்த மாதிரி தட்ஸ் தமிழ்காரன் நியூஸ் போடுவானோ அப்புடி குறும்படம், குறும்புப்படம்ன்னு ஆளாளுக்கு அள்ளி விட்டாங்க. இதையெல்லாம் பாத்துட்டுத்தான் கமல் போடலை போல.

அந்தப் பிரச்சினையை விரிவாக பேசுவார் என்று நினைத்த போது செய்தது தவறு, திட்டம் போட்டதைப் பார்த்தோம் என்றெல்லாம் சொல்லி, ராஜூ, சிபியைப் பாராட்டி, அதே நேரம் இது விளையாட்டு மற்றவர்களுக்காக ஏன் விளையாடுறீங்க எனக் கொட்டி பாவ்னி-சுருதியை கொஞ்சம் மூச்சு விட வைத்தார். இதற்கு மேல் இன்னும் அழுத்தினால் பிக்பாஸ் படுத்துக்கும், பாவனியால்தான் சாகப்போற நேரத்துல கூட கொஞ்சமே கொஞ்சமாய் சங்கராபரணம் பாடுதுன்னு நினைச்சிக்கிட்டு விட்டுட்டார்.

மன்னிக்கத் தெரிஞ்சவன் மனுசன் என்ற வாசகப்படி தாமரையிடம் மன்னிப்புக் கேட்டம் சுருதியை மன்னிக்கச் சொன்னார், ஆனா தாமரை மனசு ஏற்கலை என்று சொன்னதும் பல கதைகள் பேசி, வேடிக்கை மனிதரைப் போல் வீழ்ந்து மீசையில் மண் ஒட்டாமல் மன்னிக்க வைத்தார். இது முடிஞ்சு கட் பண்ணினா அதெப்படி மன்னிப்புக் கேட்க முடியும். அவங்க பேசுனது மனசுக்குள்ள இருக்காதான்னு பாவ்னி அடிச்சி ஆடுச்சு. பின்னே கன்டெண்ட் கொடுக்கிற கனகாவே அதானே.

உடை விஷயம் குறித்த தாமரையின் பேச்சுக்கு நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க, உடைக்கான சுதந்திரமெல்லாம் கிடைச்சி வருசமாச்சு என அரசியல் பேசினார். கிராமத்துல கூட அரை டவுசர்ல திரிவதுதான் இப்ப இயல்புன்னு அடித்துப் பேசினார். இதனால் நயன்தாராக்களாக வலம் வரும் மது, சுருதி, ஐக்கி , பாவ்னி கோஷ்டிக்கு நையாண்டி மேளமில்லாமல் கரகாட்டம் ஆடிய மகிழ்ச்சி.

கமல் எப்படி கலாச்சார உடை விஷயத்தைப் பேசுவார், உடை அணிவது அவரவர் சுதந்திரமே என்பதை நாம் அறிவோம். அது மற்றவரை முகம் சுழிக்க வைக்காமல் இருக்க வேண்டும் என்பதை கமல் ஏனோ சொல்லவில்லை என்பதை விட சொல்லமாட்டார் என்பதே உண்மை. அவரின் மகள்களுக்கு சுதந்திரத்திலும் சுதந்திரம் கொடுத்தல்லவா உடை அணிய வைத்து அழகு பார்க்கிறார். பின் எப்படி அது குறித்துப் பேசுவார்.

தலைவருக்கும் அந்த வாரத்தின் நெருப்புச் சக்திக்கும் நடந்த சண்டையைப் பற்றிப் பேசும்போது இரட்டைத் தலைமையில் இருக்கும் சிக்கலைச் சொன்னார், ஓபிஎஸ் - ஈபிஎஸின் சசிகலா நிலைப்பாடை வைத்துச் சொல்லியிருப்பாரோ என்று பலருக்குச் சந்தேகம், ஆமாங்க அவர் பேசுனது அரசியல்தான். மதுவுக்கான வருத்தம் சரியே என்றாலும் இசையை அதிகம் பேசக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாரோ எனத் தோன்றுகிறது. இசை செய்தது மகா முட்டாள்தனம். சமயலறையில் மட்டுமே ஆதிகம் என்ற நிலையில் வீடு முழுவதும் ஆதிக்கம் செய்தார், அது தவறெனச் சொல்லவேயில்லை. இசைகளின் மீது குற்றப் பத்திரிக்கை வாசித்தால் 'ஜெய் பீம்' எனப் பலர் எழுவார்கள் என்பதை உணர்ந்தே கமல் நகர்வதாய் தெரிகிறது.

இமான் அண்ணாச்சி நல்லவர் வேடமிட்டபடி பலரைக் காயப்படுத்துகிறார். அதன் பின் அவர்கள் வருத்தமாய் இருக்கும் போது நான் இப்படிச் சொன்னேன் அப்படிச் சொன்னேன் என மாற்றி வேணுமின்னா மன்னிப்புக் கேட்டுகிறேன்னு சொல்கிறார். இசையுடனான பிரச்சினை பற்றி கமல் கேட்டபோது அவர் மழுப்பிக் கொண்டே இருந்தார். அண்ணாச்சிக்கு இருக்கும் பெயரைத் தக்க வைத்துக் கொள்ளுதல் நல்லது.

'தமிழ்ல பேசு' என்ற வசனத்தை வைத்துவிட்டு ஆங்கிலத்தில் பெயரிடும் தமிழ் படங்களைப் போல, இது பிக்பாஸ் வீடு இங்கே ஆங்கிலத்தில் பேசினால் தண்டிக்கப்படுவீர்கள் எனச் சொல்லும் பிக்பாஸ், இங்க யார் யார் எப்படின்னு சொல்லச் சொன்ன போட்டிக்கு கொடுத்துவிட்ட சின்னச் சின்ன அட்டைகளில் ஆங்கிலத்தில்தான் எழுதி அனுப்பினார். தாமரை போன்றோருக்கு ராஜூக்கள் உதவினார்கள். என்ன சார் உங்க சட்டம்..? என்றால் ஊருக்குத்தான் உபதேசங்கள் எல்லாம் எனச் சொல்லிவிட்டு நடையைக் கட்டுவார்கள்.

இந்த வாரம் வெளியேற்றப்பட்டவர் சின்னப்பொண்ணு. இவர் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம் என்றே தோன்றியது.

சிலரைப் பற்றி விரிவாகப் பேசியவர் பலரைப் பற்றிப் பேசவில்லை என்பதற்கான காரணத்தைச் சொன்னார். முன்னுக்கு வாங்க என்றார். அபினய் எல்லாம் கலைக்குடும்பம் முன்னுக்கு வரவேண்டும் என்ற போது சிரிப்புத்தான் வந்தது. அவருக்கு பாவ்னி, சுருதி என பெண்களுடன் பேசுவதுதான் பிடித்திருக்கிறது என்னும் போது எப்படி முன்னுக்கு வருவது..?

வருணுடன் சுருதியும் பாவ்னியும் மோதினார்கள் தாமரை பிரச்சினையில், பின்னர் வருணைப் பற்றிப் பேசிய இடத்தில் அபினய் வருணை கேவலமாகப் பேசிக் கொண்டிருந்தார் என்னமோ இவர் இங்கே அடித்து விளையாடிக் கொண்டிருப்பதைப் போல.

கமல் 'உங்கள் நான்' என்று சொல்லிப் போனார். நமக்குத்தான் பாகிஸ்தான்கிட்ட ஒரு விக்கெட் கூட எடுக்காம தோற்றுப் போன - படு தோல்வி - போட்டியைப் பார்த்தது போலிருந்து.

மொத்தத்தில் கமலின் அந்த இரண்டு நாட்கள் சோர்வையே கொடுத்தன.

-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மை தான் குமார்...

மனோ சாமிநாதன் சொன்னது…

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

vic சொன்னது…

தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்