சென்னைப் புத்தகக் கண்காட்சியில் 'வேரும் விழுதுகளும்' நாவலும் இரண்டாம் பதிப்பாக 'எதிர்சேவை' சிறுகதைத் தொகுப்பும் விற்பனைக்கு இருக்கும் படங்களை சகோதரர் தசரதன் அனுப்பிக் கொடுத்த போது மிகவும் மகிழ்வாக இருந்தது. நம் புத்தகமெல்லாம் ஒரு பதிப்பகத்தின் வரிசையில் தனக்கென ஒரு இடம் பிடிக்கும் என்றெல்லாம் நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அதைச் சாதகமாக்கியது கலக்கல் ட்ரீம்ஸ்.
கல்லூரிக் காலம் முதல் எழுத ஆரம்பித்து பத்திரிக்கைகளில் அவ்வப்போது வந்தாலும், இங்கு வந்த பின் நிறைய சிறுகதைகள் எழுதினாலும் புத்தகமாக்கும் எண்ணம் எப்போதும் இருந்ததில்லை. நண்பர்களின் புத்தகங்கள் வரும்போது அவர்கள் அதற்காக செலவழித்த தொகை குறித்துச் சொல்லும் போது பணம் கொடுத்துப் புத்தகம் போட்டு என்னாகப் போகுது என்ற எண்ணமே எனக்குள் எழும். பணம் கொடுத்துப் புத்தகம் போடும் அளவுக்கு வாழ்வு இன்னும் வாய்க்கவில்லை என்பதால் அந்த யோசனையை என்னுள்ளே எப்போதும் வரவிடுவதே இல்லை.
சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வரவேண்டும் என வலுக்கட்டாயமாக கவிஞர் பிரபு கங்காதரனும் சகோதரர் நெருடாவும் முயன்று, அந்த முயற்சியின் இறுதியில் அவர்கள் கைகாட்டியவர்தான் கலக்கல் ட்ரீம்ஸ் தசரதன். ஐயா கதைகளைக் கொடுங்கள்... பார்த்து விட்டுச் சொல்கிறேன் என்ற குறுஞ்செய்தி வந்தபோது ஏதோ ஒரு பெரிய மனிதர் என்றுதான் நினைத்தேன். பின்னர் பேசி, நேரில் சந்திக்கும் போது தான் நம்மைவிடச் சிறியவர் என்பதை அறிந்தேன். இப்போது இருவரும் நெருக்கமான நட்புக்குள் வந்துவிட்டோம் என்பதைத்தான் வேரும் விழுதுகளும் நாவல் வெளியீட்டில் காட்டியிருக்கிறார்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எதிர்சேவையைக் கொண்டு வந்தவர் தசரதன்... சென்ற புத்தகக் கண்காட்சியிலும் அதற்குப் பின்னும் எதிர்சேவை கையிருப்பு இல்லாத அளவுக்கு விற்பனை ஆகிவிட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியைச் சொல்லி, நாம நாவல் போடுறோம் எனச் சொல்லி வேரும் விழுதுகளையும் வாங்கி வைத்துக் கொண்டவர் அவர்.
கொரோனாவின் காரணமாக அவருக்கே கஷ்டமான சூழல். குடும்பத்தைச் சென்னையில் வைத்துக் கொண்டு வருமானம் இல்லாமல் வாழ்வை நகர்த்துதல் என்பது சாதாரண விஷயம் இல்லை என்ற நிலையில் தனது சுயதொழில் பக்கம் பார்வையை நகர்த்திக் கொண்ட போதிலும் பதிப்பகத் துறையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தார்.
திடீரென ஒருநாள் நாம நாவலைக் கொண்டு வர்றோம்... உடனே ஐயாக்கிட்ட அணிந்துரை வாங்குங்க என்றார். இப்பவா என்று யோசித்தபோது எதுக்கு யோசிக்கிறீங்க... நீங்க வாங்கிக் கொடுங்க... புத்தகக் கண்காட்சிக்கு நாவல் தயாராகணும் என்றவர், பணத்தைப் பற்றி எல்லாம் எதுவும் யோசிக்காதீங்க... நான் அதைப்பற்றி உங்ககிட்ட கேட்கவேயில்லை என்றும் சொன்னார்.
அதன்பின் அது குறித்த எந்தப் பேச்சும் நாங்கள் பேசிக் கொள்ளவில்லை... ஐயாவிடம் மேகலா மூலமாக வாங்கிக் கொடுத்தேன். இரு வாரத்திற்கு முன்னர் என்னண்ணே நீங்க எதுவும் எழுதிக் கொடுக்கலை... உடனே அனுப்புங்க என்றார். அப்போதுதான் புத்தகத்தை இந்தப் புத்தகத் திருவிழாவுக்கு கொண்டு வருகிறார் என்பது எனக்குத் தெரிந்தது. நான் எழுதி அனுப்பி விட்டு அதன் பின் அது குறித்து எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
ஒரு வாரம் முன்பு திடீரென அட்டைப் படத்தை அனுப்பி எதிர்பாராத மகிழ்ச்சியைக் கொடுத்தார். கூடவே புத்தகம் தயாராகிக்கிட்டு இருக்கு என்ற செய்தியையும் அனுப்பினார். நேற்றுத்தான் அதன் பின்பு பேசினோம்... எப்பவும் போல் மகிழ்வாய் பேசினார். எத்தனை புத்தகம் அனுப்பனும்ன்னு சொல்லுங்க... பணம் கொடுக்கணும்ன்னு யோசிச்சிக்கிட்டு இருக்காதீங்க... உங்ககிட்ட இருக்கும் போது, அல்லது எனக்கு வேணும்ன்னா கேட்டு வாங்கிப்பேன்... இப்ப எனக்குத் தேவையில்லை என்றார்.
உண்மையிலேயே பணம் கொடுக்காமல் புத்தகம் போடுவேன் என்றெல்லாம் நினைக்கவேயில்லை. என் எழுத்து புத்தகமாய் ஆனதுக்கு தசரதனே காரணம்... மிகவும் அன்புடன் பேசுவது மட்டுமில்லாமல் என் நாவலைக் கொண்ட வந்ததுடன் அடுத்துத் தயாராகுங்க என்ற உந்துதலும் கொடுத்து வைத்திருக்கிறார். உண்மையில் இதற்கெல்லாம் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.
நண்பர்கள் மூலமே வேரும் விழுதுகளுடன் எதிர்சேவையும் இரண்டாம் பதிப்பாய் வந்திருக்கும் செய்தி எனக்குத் தெரிந்தது. கலக்கல் ட்ரீம்ஸ் அரங்கில் எனது புத்தகம் இரண்டும் இருப்பதைப் பார்க்கும் போது இப்படியான ஒருநாள் வருமென்று இதுவரை நினைத்ததேயில்லை என்பதால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மனம் மகிழ்கிறது.
இதேபோல் நண்பர்கள் எல்லாரும் வேரும் விழுதுகளுக்காக முகநூலில் பகிரும் பதிவுகளைப் பார்க்கும் போது நமக்கான நட்பு நம்மை இன்னும் இறுக்கமாய் அணைத்துக் கொள்வதைப் பார்க்க முடிகிறது. எழுத்தாளர் கரன் கார்க்கி பகிர்ந்திருந்ததைப் பார்க்கும் போது உண்மையிலேயே இந்த எழுத்து என்னை பலரின் உள்ளங்களுக்குள் கொண்டு சென்றிருப்பதை உணர முடிகிறது. கரன் கார்க்கியை சந்தித்தெல்லாம் இல்லை... என் எழுத்தின் மூலமே அவரும் நெருக்கமானார்... அந்த நெருக்கமே அவர் எழுதி அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நாவலை அனுப்பி வாசிக்க வைத்தது. அதைக் குறித்து உன் கருத்துக்களை எனக்கு எழுதித்தாவென உரிமையுடன் கேட்கவும் வைத்தது.
தேனி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலையிலக்கிய மேடையில் தஞ்சை பிரகாஷ் வளரும் படைப்பாளர் விருதைப் பெற்ற எதிர்சேவை, என்னை ஒரு எழுத்தாளனாய் அறிமுகம் செய்த புத்தகம், அறைக்கு புதிதாய் ஒரு நண்பர் வந்திருக்கிறார். புத்தகம், எழுத்து எனப் பேசுவதை வைத்தும் நம்மைச் சுற்றி இருக்கும் புத்தகங்களைப் பார்த்தும் என்னிடம் நிறையப் படிப்பீங்களோ என்றவர் எழுதுவீங்க போல எனவும் கேட்டார். ஆம் என்றதும் எழுதியதைக் கொடுங்க வாசிப்போம் என்றார். அவரிடம் எதிர்சேவையைக் கொடுத்தேன். வாசிப்பேன் ஆனால் அதிகமாய் வாசிக்க மாட்டேன்... மெல்லப் படிக்கிறேன் என்றார். நேற்று வரை அவர் மூன்று கதைகளை வாசித்திருக்கிறார். மூன்றுமே நல்லா எழுதியிருக்கீங்க என்றவர் தீபாவளிக் கனவின் சிறுமி குறித்து ரொம்பப் பேசினார். எதிர்ப்பார்ப்பு கருகும் போது அந்தச் சிறுமியில் வேதனை எப்படியிக்கும் என்பதை என்னால் உணர முடிந்தது என்றார்.
மேலும் அவர் பெரும்பாலும் கதைகளில் கதாபாத்திர அறிமுகமென ஆரம்பித்து விரிவாய் சொல்வாங்க எனக்கு அதை வாசிக்கும் போது கதைக்குள் போகும் எண்ணம் வராது. உங்க கதைகளில் கதாபாத்திர அறிமுகம் இல்லை. போற போக்கில் அவர்கள் வருகிறார்கள்... இணைகிறார்கள்... கதையோட பயணிக்கிறார்கள். அதேபோல் படித்த மூன்று கதைகளிலும் முடிவு இதுதான் என பொத்தாம் பொதுவாய் இல்லாமல் என்ன நடந்திருக்கும் என யோசிக்க வைத்தது எனக்கு ரொம்பப் பிடித்தது என்றார். ரொம்ப வாசிக்க மாட்டேன் என்றவரின் விரிவான பார்வை வியப்பாய் இருந்தது... நம் கதைக்கான நேரடி விமர்சனம் மகிழ்வாகவும் இருந்தது.
மேற் சொன்ன, என் புத்தகத்தை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய சகோதரர் நந்தா உள்ளிட்ட எல்லாருக்கும் நன்றி என்று சொல்வதைவிட இந்த நட்புக்கள் என்னோடு இறுதிவரை பயணிக்கட்டும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
வேரும் விழுதுகளும் நான் எழுதியதில் ஒரு வாழ்கைக் கதையாய் என்னை மட்டுமல்ல வாசித்த என் நண்பர்களையும் கவர்ந்த கதை. எல்லாருக்கும் பிடித்த கதை.... கந்தசாமியின் குடும்பத்துடன் வாழ்ந்த அனுபவத்தைக் கொடுக்கும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம், அரங்கு எண் - 155-ல் இயங்குகிறது.
சென்னைப் புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு வேரும் விழுதுகளும் நாவல் (230 பக்கங்கள், ரூபாய். 250) 20% தள்ளுபடி விலையிலும் எதிர்சேவை (96 பக்கம், ரூ. 100) 10% தள்ளுபடி விலையிலும் கிடைக்கும்.
வாங்கி வாசித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
-'பரிவை' சே.குமார்.
1 எண்ணங்கள்:
மிகவும் மகிழ்ச்சி குமார்... வாழ்த்துகள்...
கருத்துரையிடுக