மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 22 ஜனவரி, 2021

மனசின் பக்கம் : பிக்பாஸ் டூ பிரகாஷ்

மிழ்டாக்ஸ்.காம் இணையத் தளத்தில் பிக்பாஸ் பதிவுகள் எழுதும் வாய்ப்புக் கிடைத்த போது இப்போது இருக்கும் வேலை பளுவில், விடுமுறை தினத்தில் கூட வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது தொடர்ந்து எழுதும் வாய்ப்புக் கிடைக்குமா..? அதுபோக தினமும் இதற்கென ஒரு மணி நேரம் ஒதுக்கிப் பார்க்க முடியுமா என்ற யோசனையே முன் நின்றது.  

எழுதுவதென்பது பிடித்தமான ஒன்று... கதை எழுதும் மனநிலை ஏனோ சமீபமாக இல்லாத நிலையில் எழுத்தை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள இது உதவும் என்பதால் தினமும் ஒரு பதிவு என்ற எண்ணத்தில் இல்லாமல் இரண்டு நாட்களுக்கு, அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு பதிவு என முடிவு செய்து அதன்படி இதுதான் நடந்தது என்பதை மட்டுமே எழுதாமல் கொஞ்சம் இது ஏன் நடந்தது..? இதில் இருக்கும் கதை என்ன யோசித்து எழுத ஆரம்பித்தேன். இதே தான் சென்ற சீசன்களிலும் செய்தேன்... தனபாலன் அண்ணன் கூடப் பேசும்போது அவர் அதை வெகுவாகப் பாராட்டினார். அதைத்தான் இப்பவும் செய்தேன்... 

மொத்தம் 51 பதிவுகள்... கணக்கு அடிப்படையில் சென்ற சீசனைவிட பாதிக்குப் பாதி குறைவான பதிவுதான் என்றாலும் முடிந்தவரை விரிவாகவே எழுதினேன். ஒரு தளத்தில் தொடர்ந்து அதுவும் நமது பதிவுக்கெனத் தனித்திரி கொடுத்து எழுதச் சொல்வதெல்லாம் நான் நினைத்துப் பார்க்காதது. அதைச் செய்த தமிழ்டாக்ஸ் இணையத் தளத்தின் இணையாசிரியரும் கவிஞருமான சகோதரர் சிவமணிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என்றெல்லாம் நினைக்கவில்லை. அதன் மற்றொரு இணையாசிரியரான திரு. ராஜன் அவர்கள் நேற்று முகநூலில் இட்ட பின்னூட்டத்தில் இப்படிச் சொல்லியிருந்தது மிகவும் மகிழ்வாக இருந்தது.

தொடர்ந்து உங்கள் அனைத்து கட்டுரையும் வாசித்து விட்டேன்... மிக எதார்த்தமாக அருமையாக எழுதியுள்ளீர்கள்... பிக் பாஸ் பாக்காதவங்க உங்க கட்டுரை வாசித்தாலே போதும் காட்சிகள் கண் முன் வந்து தோன்றும்... சிறப்பான பதிவு.

துரை... ஏனோ நம்மை ஏதோ ஒரு விதத்தில் ஈர்த்துக் கொள்ளும் ஊர் என்பதை மறுக்க முடியாது. மதுரையுடனான எனது பந்தம் பிறந்ததும் முதல் மொட்டையில் ஆரம்பித்தது எனலாம்... அதற்கும் முன் அம்மா வயிற்றில் இருக்கும் போதே கூட மதுரைக்குப் பயணப்பட்டிருக்கலாம்... 

குலதெய்வமான அழகர் கோவிலுக்குப் போகும்போது அப்படியே மீனாட்சியையும் கும்பிட்டு வரவேண்டும் என்ற எங்கள் குடும்ப வழக்கப்படி, மதுரைக்குள் செல்வது என்பது தொடரத்தான் செய்தது என்றாலும் மதுரையைத் திருமணம் வரை மொத்தமாய் உள்வாங்கியது கிடையாது. மீனாட்சியம்மன்  கோவில் கோபுர வாசல்களும், புதுமண்டபமும் மட்டுமே மனதுக்குள் இருக்கும். திருமணத்துக்குப் பின்னே மதுரையின் பெரும்பாலான இடங்கள் தெரிய ஆரம்பித்தது. எங்கு சுற்றினாலும் மனைவியின் பிறந்தகத்தை அடைந்து விடும் அளவுக்கு மதுரை பரிட்சயப்பட்டுப் போனது. 

மதுரை குறித்தான வியப்பான விஷயம் எப்பவும் அந்நகரம் சுறுசுறுப்புடன் இருப்பதுதான்... மதுரைக்கு இரவு பகல் எல்லாமே ஒன்றுதான்... இத்தனை வருடத்தில் நிச்சயமாக ஒருபோதும் சினிமாவில் காட்டும் மதுரையை நான் பார்த்ததில்லை... அப்படியும் அதன் மறு பக்கம் இருக்கலாம்... ஆனால் அதுவே அதன் முதன்மைப் பக்கம் இல்லை என்பது மட்டும் திண்ணம். 

வரலாறுகளைத் தன்னுள்ளே வைத்துக் கொண்டு வாஞ்சையுடன் நகரும் நகரம்தான் மதுரை... எதிர்சேவை புத்தகம் வந்தபோது, அதன் தலைப்பும் அட்டைப்படமும் எதார்த்தமாய் அமைந்தாலும் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது என்பதே உண்மை.  அந்தப் புத்தகம் குறித்து முதல் விமர்சனத்தை வைத்த டாக்டர். சில்வியா பிளாத் அவர்களுடனான சந்திப்பில் அவர்கள் சொன்னது, மதுரையைக் களமாக வைத்து எந்த ஒரு நாவலும் வரவில்லை என்று நினைக்கிறேன்... நம் ஊருக்கு இருக்கும் பெருமையை நம்மளே சொல்லலைன்னா எப்படி... உங்க அடுத்த நாவலில் மதுரை கதைக்களமாகட்டும் என்றார். 

மதுரை குறித்து விரிவான விபரங்கள் தெரியாவிட்டாலும், மதுரையில் நடக்கும் நிகழ்வை வைத்து ஒரு கதை எழுதலாமென எழுதிய ஒரு நாவலில் மதுரையில் இருக்கும் நாயகனின் குடும்பம் என்பதாய், கொஞ்சம் மதுரைக்குள் நடந்து எழுதியிருக்கிறேன் முடிந்தால் மதுரைக்குள் விரிவாகப் பயணிக்க எனக்கும் ஆசைதான். 

சரி எதுக்கு மதுரைப் புராணம் என நினைப்பீர்கள்... வேறொன்றும் இல்லை... சகோதரர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்கள் விகடன் தளத்தில் தூங்காநகர நினைவுகள் என்ற தலைப்பில் எழுதுகிறார். முதல் பகுதியிலேயே நம்மை ஈர்க்கும் சுவராஸ்யமான எழுத்து நடை, முடிந்தவர்கள் வாசியுங்கள்... பயணங்களின் காதலனான முத்துக்கிருஷ்ணன் அவர்கள் கண்டிப்பாக மதுரையின் வரலாறை நமக்கு மிக அழகாகக் கொடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தூங்காநகர நினைவுகள்

மேசானில் சில புத்தகங்கள் போடலாம் என்ற யோசனை சில நாட்களாய்... வருமானம் என்பது குறியல்ல... இங்கு பகிர்ந்தவைகளை அமேசான் புத்தகங்களாய் மாற்றி வைக்கலாமே என்ற எண்ணம்... அந்த வகையில் 'கிராமத்து நினைவுகள்', 'வெள்ளந்தி மனிதர்கள்', 'மலையாளச் சினிமா விமர்சனங்கள்', 'ஆன்மீகக் கட்டுரைகள்', 'சில சிறுகதைகள்' எனக் கொண்டு வர எண்ணம்... அதற்காக நிறைய உழைக்க வேண்டும் போல... 

இன்று முழுவதும் முயற்சித்து 'கிராமத்து நினைவுகள்' அமேசானில் பதிவேற்றம் செய்து இருக்கிறேன். ஆரம்ப விலை ஒரு டாலரில் இருக்க வேண்டும் என்பதால் அதையே விலையாக வைத்திருக்கிறேன்... இலவசமாகச் சில நாட்கள் கொடுக்கலாம் என்பதால் விரைவில் இலவச நாட்களை அறிவிக்கிறேன். உங்கள் ஆதரவு எப்பவும் போல் அங்கும் வேண்டும் என்பதே என் ஆசை.

கிராமத்து நினைவுகள்

ரு இந்தியன் கிச்சன் என்னும் மலையாளப் படத்தை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம்... எனக்கென்னவோ படம் பேச வந்த விஷயத்தை விட்டுவிட்டு வேறு பாதை மாறியது போலவும், ஒரு சில இடங்களில் படத்தில் காட்டுவது போல் இருக்கலாம்... ஆனால் பல இடங்களில் இப்போதெல்லாம் அப்படி இல்லை என்பதோடு வீடு படம் பார்ப்பது போல்தான் இருந்தது... ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றும்போது ஏற்படும் அயற்சி... படம் குறித்து விரிவான பார்வை பார்க்கலாம் என்ற எண்ணம்... முடிந்தால் எழுதுகிறேன்.

மாஸ்டர் விமர்சனம் எழுதலாம்... ஆனா அதில் எழுத ஒன்றுமில்லை... சமீபத்திய சினிமாக்கள் குறிவைப்பது ஒன்றை மட்டுமே என்பது தமிழ், மலையாளம் என எல்லா இடத்திலுமே இப்போது ஒன்றாகத்தான் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்... நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும்... விஜய்யால் வசூல் கிடைத்திருக்கலாம்... அவர் மாணவர் சமூகத்திற்கு என்ன சொன்னார்... தண்ணி அடித்து விட்டு குப்புறக் கிடக்கும் வாத்தியாரைத் தூக்கிக் கொண்டாடுங்கள் என்றா...? இப்படியான போக்குகளை விட்டுவிட்டு கொஞ்சமாவது நஞ்சை விதைக்காத படங்களை எடுக்கலாம்... இயக்குநர்கள் கதைக்காக நாயகனைத் தேடுவதை விடுத்து நாயகனுக்காக கதையை மாற்றும் தமிழ்ச்சினிமாப் போக்கு மாறாத வரை இப்படியான படங்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.

தேனி தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் தஞ்சை பிரகாஷ் நினைவு வளரும் படைப்பாளர் விருது எதிர்சேவைக்கு கிடைத்திருப்பதை முன்பே பகிர்ந்திருந்தேன்... ஞாயிற்றுக்கிழமை விழா... ஊரில் அன்று ஒரு முக்கியமான திருமணம் என்பதால் மனைவி செல்ல முடியாத நிலையில் நண்பரிடம் சொல்லியிருக்கிறேன். அவர் மகளை அழைத்துச் செல்வதால் பெற்றுக் கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். அவர்கள் அதற்கெனத் தனியாக ஒரு அழகிய அட்டை தயாரித்து தங்கள் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்... உண்மையில் மகிழ்வான தருணம் அது.


நன்றி.

-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அனைத்து விஷயங்களும் நன்று.

புதிய மின்னூல் - பாராட்டுகளும் வாழ்த்துகளும் குமார்.

தொடரட்டும் தங்கள் ஆக்கங்கள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துகள்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துகள்