என்னைப் பொறுத்தவரை வேலை நேரத்தில் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை பார்ப்பதே பிடிக்கும் என்பதை விட, சுற்றியிருப்பவர்கள் சத்தமும் தொந்தரவு கொடுக்காது என்று நினைப்பேன்... மேலும் பார்க்கும் வேலையிலிருந்து சிந்தனை வேறெங்கும் செல்லாது. சிறு வயது முதலே பாடல் கேட்டுக் கொண்டோ, டிவி பார்த்துக் கொண்டோ படிப்பது, எழுதுவது என்பது என்னோடு ஒட்டிக் கொண்ட பழக்கம். அது இப்பவும் தொடரத்தான் செய்கிறது. இதே பழக்கம் ஸ்ருதியிடம் அதிகம்... விஷாலிடம் இப்போது மெல்ல எட்டிப் பார்க்கிறது.
பெரும்பாலான காலை கந்தர் சஷ்டி கவசத்தில்தான் ஆரம்பிக்கும்... கந்தனின் வேலைப் பற்றி வேலையில்லாதவர்கள் பேசியதால் சஷ்டியைக் கையில் தூக்கவில்லை... கவசம் கேட்பது எப்போதும் தொடரும் பழக்கம்... சூலமங்களம் சகோதரிகள் முதல் மகாநதி ஷோபனா வரை பலர் பாடியதைக் கேட்பதுண்டு. சூர்யகாயத்ரி என்னும் சிறுமி பாடிய பல பாடல்களை எப்போதும் விரும்பிக் கேட்பேன். சமீபத்தில் அவர் பாடிய கந்தர் சஷ்டி கவசமே சில நாட்களாய் ஓடிக் கொண்டிருக்கிறது. அவ்வளவு அருமையாகப் பாடியிருக்கிறார். கேட்கும் போதே பழனி முருகன் முன்னே நிற்பது போல் மனசுக்குள் பாடலுடன் காட்சியும் விரிகிறது. சித்ரா பாடிய கவசத்தை மட்டும் அதிகம் கேட்பதில்லை... அவரின் உச்சரிப்பில் சில வார்த்தைகள் மாறியிருப்பதைப் போன்று தோன்றும்... ஏனோ கந்தர் சஷ்டி கேட்ட திருப்தியை அது கொடுப்பதில்லை.
கந்தர் சஷ்டி கவசத்துக்குப் பின் பெரும்பாலும் இளையராஜா, தேவா என பயணிக்கும் நாட்களே அதிகமென்றாலும் வேலையின் வேகம் கூட வேண்டும் என்றால் அதிரடிப் பாடல்களுக்குள், குறிப்பாக நாட்டுப்புறப் பாடல்களுக்குள் போய்விடுவேன். எப்பவுமே நாட்டுப்புறப் பாடல்கள் கேட்பதென்றால் பஞ்சாமிர்தத்தில் சக்கரை சேர்த்து சாப்பிடுவது போல்... நமக்குள் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும் பாடல்கள் அவை.
இன்று எத்தனையோ பேர் பாட வந்து விட்டார்கள்... நாட்டுப்புற மெட்டில் அவர்கள் பாடல் எழுதி ஆல்பமாக்கிப் வைத்திருக்கிறார்கள். சிறுவயது முதல் கேட்ட பலபாடல்கள் தொகுக்கப்படாமலேயே அழிந்து போய்விட்டன. இப்போதைய நாட்டுப்புறப் பாடல்கள் தனிப் பாதையில் நகர்ந்தாலும் கிராமிய இசையை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதில் மகிழ்வே.
மதுரை சந்திரனின் 'மங்கம்மா சால மல மேல' பாட்டு ரொம்பப் பிடிக்கும். அதே போல் ஆத்தங்குடி இளையராசாவின் 'அத்தமக உன்ன நினைச்சு' அடிக்கடி கேட்கும் பாடலாய்... சமீபத்தில் மதுரை சந்திரனின் பாடல்களைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் போது எதார்த்தமாய் 'நான் அழுத கண்ணீரும்' என்ற பாடலைக் கேட்க நேர்ந்தது. ஏனோ தெரியவில்லை அந்த வரிகளில் அழுத்தம் மொத்தமாய் எனக்குள் இறங்க, ஒரு நாளைக்குப் பலமுறை கேட்கும் பாடலாய் அது அமைந்து போனது.
விஜயலெட்சுமி நவநீத கிருஷ்ணன், புஷ்பவனம் குப்புச்சாமி, தேக்கம்பட்டி சுந்தர்ராஜன், ஆக்காட்டி ஆறுமுகம், கோட்டைச்சாமி, மாரியம்மாள், பரவை முனியம்மா, கொல்லங்குடி கருப்பாயி, தஞ்சை சின்னப்பொண்ணு இப்படி நிறையப் பேர் பாடிய பாடல்களைக் கேட்டாலும் மதுரை சந்திரன் பாடல்களை அதிகமாய் கேட்டதில்லை... சமீபமாய்த்தான் அவரின் பாடல்களை அதிகம் கேட்கிறேன்... பல வருடமாகப் பாடிக் கொண்டிருப்பவர்தான் அவர்... நல்ல குரல் வளம்... அவர் பாடியிருக்கும் பாடல்கள் எல்லாம் மிக அருமையாய் இருக்கின்றன. அப்படித்தான் இளையராசாவின் பாடல்களும்... எழுதிக் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் இவர்களின் குரல் அந்தப் பாடல்களுக்கு தனிச் சிறப்புத்தான்... அதுவும் அத்தமக உன்ன நெனச்சு பாடலை இளையராசாவுடன் யார் சேர்ந்து பாடினாலும் ஆல்பத்தில் அவருடன் பாடி, மேடைகளிலும் அதிகம் பாடும் லஷ்மி சந்துரு (மாரியம்மாள் மகள்) பாடும் போது நம்மை வெகுவாக ரசிக்க வைக்கும்.
கிராமியப் பாடலகள் மீது எப்போதும் அதீத பற்று உண்டு. சமீபமாய் வீட்டில் இருந்து வேலை என்றானபின் இளையராஜாவும் தேவாவும் விடுத்து பெரும்பாலும் கிராமிய இசைக்குள்தான் நாட்கள் பயணிக்கிறது.
'நானழுத கண்ணீரும் வானழுக வில்லையடி...' என்று ஆரம்பிக்கும் மதுரை சந்திரனின் பாடல் கொடுக்கும் வலியை என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை. 'கானல் நதி வாழ்க்கைதனை கண்டு மனம் ஓடுதடி..', 'யாரழுத கண்ணீரும் நீராகவில்லையடி... நானழுத கண்ணீரோ ஆறாக ஓடுதடி...', 'மீனழுத கண்ணீரும் நீரோடு கலந்தடி... நானழுத கண்ணீரோ வற்றாத ஜீவநதி' இப்படி பல வரிகள் நம் நிலையை நினைத்துப் பார்க்க வைத்தன... நம் வாழ்க்கையும்தான் கானல் நதியாய் போய்க்கொண்டிருக்கிறது. உண்மையிலேயே என்னை மிகவும் பாதித்த பாடல் இது.
இதேபோல் அவர் பாடிய 'சித்திரமே ரத்தினமே எனச் செல்லமாக் கொஞ்சிய அப்பனுமே....' என்று ஆரம்பிக்கும் தண்டச்சோறு தடிமாடு என்னும் பாடலும் நம்மை ரொம்பவே ஈர்க்கும்.
மதுரை சந்திரனின் 'நானழுத கண்ணீரு...', 'தண்டச்சோறு தடிமாடு...' பாடலுடன் எங்க சிவகங்கை மாவட்டத்தின் மாரியம்மாள் பாடிய 'அப்படா என் மகனே...' பாடலையும் நீங்களும் அடிக்கடி கேட்கும் பாடலாக மாறலாம்.
(நானழுத கண்ணீரும்...)
(தண்டச்சோறு தடிமாடு...)
(அப்படா என் மகனே...)
உங்கள் விருப்பத்தைப் பொறுத்து இன்னும் சில பாடல்களைப் பதியலாம்...
நன்றி.
-'பரிவை' சே.குமார்.
13 எண்ணங்கள்:
கந்தனின் திருவருளால் அமைந்த கவசம் தமிழகத்தின் மூலை முடுக்கு எல்லாம் பரவியது சூலமங்கலம் சகோதரிகளால் தான்...
அதே காலகட்டத்தில் T.M.S, பாடியது எடுபடவில்லை... மகாநதி ஷோபனா பாடியதிலும் கூட சில தடுமாற்றங்கள்..
சூலமங்கலம் சகோதரிகள் வழங்கியதை மட்டுமே முருகன் முன்னெடுத்து வைத்தான்...
இன்றைக்கு போலிக் கிறித்தவர்கள் சஷ்டிக் கவசத்தின் இசையை சுருதி பிசகாமல் எடுத்துக் கொண்டு இசை எல்லாருக்கும் பொதுவானது என்கிறார்கள் கொஞ்சமும் நாணமில்லாமல்... வேளாங்கண்ணி மாதா கவசம், சுப்ரபாதம், அஷ்டகம் இன்னும் பல இருக்கின்றன யூடியூப்பில்..
கிராமியப் பாடல்கள் என அளவுக்கு அதிகமான சோகத்தைக் கொட்டுவது எனக்கு சரியாகப்படுவதில்லை..
நீங்கள் சொன்ன்ச் பிறகு தான் அந்தப் பெண் சூரிய காயத்ரி பாடியிருக்கும் சஷ்டி கவசத்தி யூடியூப்பில் கேட்டேன்..
மெல்லிய சிலுசிலுப்புடன் வெள்ளியென மின்னலிட்டபடி காவிரி ஓடுவாளே.. அதைப் போல் இருந்தது... கேட்டதில் மனதுக்கு மகிழ்ச்சி...
பதிவில் அடையாளம் காட்டியதற்கு நன்றி...
குமார் நீங்கள் சொல்லியிருப்பது போல சூலமங்கலம் பாடியதுதான் ரொம்ப பிடிக்கும். சூர்யகாயத்ரி பாடிக் கேட்கவில்லை.
விஜயலக்ஷ்மி, கொல்லங்குடி கருப்பாயி, தஞ்சை சின்னக்கண்ணு, புஷ்பவனம் பாடிக் கேட்டிருக்கிறேன். சந்திரன் இப்போதுதான் கேட்டேன். குரல் நன்றாக இருக்கிறது. ஆனால் சோகமா இருக்கு..மாரியம்மாள் குரலும் நல்லாருக்கு கணீரென்று
கீதா
@ செல்வராஜ் ஐயா...
சூரியகாயத்ரி சின்ன குழந்தையாய் பாடும் பாடல்கள் முதல் கேட்டு வருகிறேன் ஐயா... வேலவா... வேலவா... வேல்முருகா வா...வாங்கிற பாட்டுல ஐந்து சிறுமிகளில் ஒருவராய் பாடி ஆடியிருப்பார்... அருமையான பாடல் அது... நல்ல குரல்வளம்... கந்தர் சஷ்டி கவசம் நம்மை ஈர்க்கும்... குரலும் மொழியும் அத்தனை அற்புதம்...
கிராமியப் பாடல்கள் துள்ளல் இசையைக் கொடுப்பவையே அதிகம்... சோகத்தைப் பிழிபவை அல்ல... ஒரு சில பாடல்கள் உண்டு... இவை பிடித்ததால் பகிர்ந்தேன்...
நன்றி ஐயா.
@ கீதாக்கா...
மாரியம்மாள் அவர்களின் குரல் ரொம்பச் சிறப்பா இருக்கும்... வாகான ஆலமரம் கேட்டுப் பாருங்க... நிறைய நல்ல பாடல்களைப் பாடியவர் அவர். இப்போதும் பாடிக் கொண்டிருக்கிறார்.
ரொம்ப நன்றி அக்கா..
@ கீதாக்கா...
சூரியகாயத்ரி கேளுங்கள்... இப்போதெல்லாம் நான் அந்த கந்தர் சஷ்டி கவசம்தான்... தரவிறக்கம் பண்ணி வச்சிட்டேன்... அவ்வளவு அழகு... அருமை... எந்தப் பிசிறும் இல்லாத குரல்... கிருஷ்ணன் பாடல்கள், முருகன் பாடல்கள் என அடித்தாடும் சின்னக்குயில்...
அன்பு குமார்,
நானும் உங்கள் வகைதான்.
பாட்டுகள் கேட்காமல் என்னால் இயங்க முடியாது. அதுவும் சூரிய காத்ரி சின்ன வயசு முதலே கேட்டு வருகிறேன்.
அப்படி ஒரு இனிமை.
கந்த சஷ்டி கவசத்தை சரியாக உச்சரிக்க வேண்டும்.
அர்த்தம் மாறாமல் இருக்கும். உண்மையான கவசம் அது.
மகளுக்கும் எனக்கும் சதா காலமும்
இதே ஸ்மரணைதான்.
ஆனந்த ஆரோக்கிய நல் வாழ்வுக்கு ஆசிகள்.
பல காரணங்களினால் படிப்பது குறைந்து விட்டது.
மன்னிக்கணும் ராஜா.
பாட்டு இல்லையென்றால் எந்நாளும் / என்னாலும் முடியாது...
பாடல்களே பலசமயம் மருந்து...
இந்த மூன்றில் "நானழுத கண்ணீரும்" ஏனோ மனதை பிடித்து இழுக்கிறது...
பாட்டு கேட்பது எனக்கும் பிடிக்கும். சூர்யகாயத்ரி கேட்டதில்லை. பாட்டு கேட்டுக்கொண்டே வேலை செய்வது ஒருவகை. வேலைகளை விட்டு விட்டு பிடித்த பாடல்களை மனதார கேட்பது இன்னொரு வகை. ஆயினும் இந்த மூன்று நான்கு மாதங்களில் நான் அதிகம் பாடல்கள் கேட்கவில்லை!
@வல்லிசிம்ஹன் அம்மா - கருத்துக்கு ரொம்ப நன்றி அம்மா... எனக்கும் சூர்யகாயத்ரி பாடும் எல்லாப் பாடல்களும் பிடிக்கும்... மன்னிக்க என்ன இருக்கு... சூழல் எல்லாருக்கும் எப்போதும் சரியாக இருப்பதில்லைதானே... நானும் வாசிக்கிறேன்... கருத்திட முடிவதில்லை... (இங்கு மட்டும் இப்போது கருத்திட முடிகிறது என்பதே சிறப்பாகத்தான் இருக்கிறது)
@தனபாலன் அண்ணா - கருத்துக்கு ரொம்ப நன்றி அண்ணா... ஆமாம் அந்தப் பாடல் ரொம்பவே கவர்ந்தது என்னை.
@ ஸ்ரீராம் அண்ணா - கருத்துக்கு ரொம்ப நன்றி அண்ணா.
பாட்டு கேட்டபடியே படிக்கும் பழக்கம் எனக்கும் உண்டு குமார்.
@வெங்கட் அண்ணா...
பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை பார்த்தல் ஒரு சுகம் அண்ணா.
கருத்துக்கு நன்றி.
பாட்டு கேட்பது மனதை இலேசாக்கும். ஆனால் நான் படிக்கும்போதோ மிக ஆழ்ந்து வேலை செய்யும்போதோ அமைதியாக இருப்பதையே விரும்புவேன். பாடல் கேட்கும் பொழுது எனக்குத் தொந்தரவு இருக்கக் கூடாது :)
நண்பர்கள் வீட்டில் அதிகமாகக் கந்த சஷ்டி கேட்டிருக்கிறேன். பகிர்ந்த பாடல்களும் இனிமை. மதுரை சரவணன், மாரியம்மாள் அறிமுகத்திற்கு நன்றி.
கருத்துரையிடுக