'சட்டத்துக்கு மன்னிக்கத் தெரியாது... ஆனா நம்ம மனுசங்க... நமக்கு மன்னிக்கத் தெரியும்தானே...'
அம்புட்டுத்தான் விகிர்தி சொல்லும் கதை.
இன்னைக்கு முகநூல் மோகம் விருப்பம், அன்பு, ஹா..ஹா..., ஆச்சர்யம், சோகம், கோபம்... இப்போ அக்கறை என்ற ஸ்மைலிகளுக்குள் பலரை இறுத்தி வைத்துள்ளது. ரோட்டில் விபத்து என்றாலும் வீட்டில் இறப்பு என்றாலும் முகநூலில் பதிய வேண்டுமே என வீடியோ அல்லது படமெடுத்துப் பகிர்ந்தால்தான் நிம்மதி என்பதாய் பலரின் மனநிலை மாறியிருக்கிறது.
என்ன நடந்தாலும் தங்களது செல்போனில் சேமித்து அதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தால்தான் இன்று பலருக்குத் தூக்கம் வருகிறது... இவர்கள் 'குட்மார்னிங்... பல் விளக்குகிறேன்...' எனச் சொல்லும் அதீத முகநூல் வாசிகளிடமிருந்து வேறுபட்டவர்கள்... அடிபட்டவனுக்கு முதலுதவி செய்யவோ, அங்கு நிகழ்ந்த நிகழ்வின் தீவிரம் என்ன என்பதை அறியவோ முற்படாத மனிதர்கள்.
சரி படம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்...
இரு வேறு மனிதர்கள்... ஒருவருக்கு குடும்பம் உலகம்... இன்னொருவருக்கு முகநூல் விருப்பங்களே உலகம்... ஒரு நிகழ்வு இருவரையும் ஒரு புள்ளியில் கொண்டு வந்து நிறுத்துகிறது. அதனால் முதலாமர் அடையும் பாதிப்புக்கள் சொல்லில் அடங்காதவை... தான் செய்த தவறுக்கு வருந்திப் பாரம் சுமக்கும் இரண்டாமவருக்கு மன உளைச்சல்... இதுதான் படத்தின் கதை... முடிவில் பாதிக்கப்பட்டவருக்கு அதற்கான நியாயம் கிடைத்ததா..? பாதிப்பிற்கு உள்ளாக்கியவர் அதற்கான தன்டனையை அடைந்தாரா என்பதை நம்மைக் கண் கலங்க வைத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
வாய் பேச இயலாத எல்டோ (சூரஜ் வெஞ்சரமூடு) ஒரு பள்ளியில் வேலை பார்க்கிறார். அவரின் மனைவி எல்சி(சுரபி லக்ஷ்மி)க்கும் வாய் பேச முடியாது. கால்பந்தில் சாதிக்க நினைக்கும் மகனுடனும் மகளுடனும் மகிழ்வாய் வாழ்ந்து வருபவர்.
மற்றொரு பக்கம் துபையில் இருந்து ஊருக்கு வரும் சமீர் (சௌபின் ஷாகிர்) முகநூல் விருப்பக் குறிக்காக செல்பி மோகத்தில் திரிபவன். ஆரம்பக் காட்சியிலேயே அவன் எந்த அளவுக்கு முகநூல் பைத்தியம் என்பதைக் காட்டிவிடுகிறார் இயக்குநர்.
மகளுக்கு உடல்நலமில்லாததால் மருத்துவமனையில் இருநாட்கள் தூங்காமல் விழித்திருந்து வேலைக்குச் சென்ற எல்டோ, மெட்ரோ இரயிலில் ஏறியதும் தூங்கிவிட, அவரின் ஆழ்ந்த நித்திரை சரக்கடிச்சிட்டு கிடக்கும் மனிதரைப் போல் தெரிய, எல்லாரும் அவரைக் கேலிப் பொருளாக்கிப் பார்க்க, அதில் பயணிக்கும் சமீர் அதை போட்டோ எடுத்து மெட்ரோவில் குடிபோதையில் கிடக்கும் மனிதனைப் பாருங்கள் என்பதாய் பதிவிட்டு விடுக்கிறான்... லைக் அள்ளி, அது பலரால் பகிரவும் படுகிறது.
அதன்பின் எல்டோவின் வாழ்க்கை சூறாவளியில் சிக்கிய குடிசை போல் சின்னாபின்னமாகிறது. பள்ளி நிர்வாகம் அவரை இடைநிறுத்தம் செய்து வைக்க, மனைவியிடம் சொல்லாமல் எப்பவும் போல் பள்ளிக்குக் கிளம்பி ரோட்டோர மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டு வருகிறார். அப்பா செய்த செயலாம் மகன் எல்டோவை வெறுக்க ஆரம்பிக்கிறான். அவனின் தில்லி செல்லும் கால்பந்தாட்டக் கனவும் கலைகிறது. எல்டோவை வைத்து சம்பாரிக்க நினைப்பவர்கள் ஒரு பக்கம்... எல்டோவின் உண்மை நிலையை சமூக வலைத்தளம் மூலம் விளக்க நினைக்கும் வீட்டு உரிமையாளரின் மகள் என பாதிக்கப்பட்டவனின் கதை சோகமாய் நகர்ந்து கொண்டிருக்கிறது.
சமீர் தான் விரும்பும், தன் தங்கையின் தோழியையே திருமணம் செய்து கொள்ள இரு வீட்டிலும் சம்மதம் பெற நிச்சயம் முடிந்து திருமணத் தேதியும் வைக்கப்படுகிறது . அப்போதுதான் விருப்பக் குறியை எதிர்பார்த்துத் தான் செய்த செயல் எல்டோவின் குடும்பத்தை சூறைக்காற்றாய் சுழற்றி அடித்திருப்பது தெரிய, வெம்மித் துடிக்கிறான். போலீஸ் கையில் சிக்கினால் என்னாகும் என்பதை அறிந்து பயந்து சாகிறான். திருமணத்தன்றும் அதன் பின்னான நாட்களிலும் மனைவியிடம் இருந்து ஒதுங்கியே இருக்கிறான். அவனுக்கு ஏதும் பிரச்சினையா என மாமியாரிடமே அவள் கேட்கும் அளவுக்குப் போகிறது.
அப்பா தவறு செய்யவில்லை என்பதை உணரும் எல்டோவின் மகன் அப்பாவுடன் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்கிறான். எங்கப்பாவை இப்படிப் பண்ணியவன் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறான். போலீஸ் ஒரு பக்கம் தேடுதல் வேட்டையில் இறங்குகிறது.
சமீரின் நிலை என்ன ஆனது..? எல்டோவின் மகன் சொன்னபடி சமீர் தண்டிக்கப்பட்டானா..? என்பதுதான் படத்தின் முடிவு.
சூரஜ் மற்றும் சௌபின் இருவருமே நகைச்சுவை நடிகர்கள் என்பதைத் தாண்டி எந்தக் கதாபாத்திரம் என்றாலும் வெளுத்து வாங்கக் கூடியவர்கள் என்பதால் அவரவர் கதாபாத்திரத்தை ஒரு இடத்தில் கூட தரமிழக்க விடாமல் படம் முழுவதும் பயணித்திருக்கிறார்கள். சூரஜ் வாய் பேச முடியாத நபராக, அரைகுறையாகப் பேசுவதும் புரியவில்லை என்றால் பேப்பரில் எழுதிக் காட்டுவதும், மகளுக்காக மகனுக்காக உருகும் மனிதராக அதகளம் பண்ணியிருக்கிறார் என்றால் அவரின் மனைவியாக வரும் சுரபி, கண்களாலேயே பேசி நம்மைக் கவர்கிறார். சௌபின்னும் தன்னுள்ளே ஒரு பதட்டத்தை எப்போதும் வைத்து, அதை முகத்தில் காட்டியபடியே வருதல் சிறப்பு.
இந்தப் படத்துக்கு ஒரு நண்பர் வீடியோ விமர்சனம் செய்திருந்தார்... அதில் சௌபின் கதாபாத்திரம் பற்றிச் சொல்லும் போது அவர் வெளிநாட்டிலிருந்து வந்திருப்பவர்... நமக்குத்தான் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் எப்படின்னு தெரியுமே... என எகத்தாளமாகப் பேசியிருந்தார். இன்னைக்கு செல்பி மோகம் எல்லாரிடமும்தான் இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து வருபவன் பட்ட கஷ்டத்தையெல்லாம் மறந்து, மறைத்து ஒரு மாதம் ஊரில் குடும்பத்துடன் மகிழ்வாக இருக்க நினைத்து வருவதால்... நான் நல்லாத்தான் இருக்கேன் எனக் காட்டிக் கொள்ள முயல்வதால் உங்களைப் போன்றோரின் மனசுக்குள் ஒரு இகழ்ச்சி... அதுவே இப்படியான பேச்சுக்குக் காரணம். விமர்சனம் படத்துக்குத்தானே ஒழிய வெளிநாட்டுக்காரனுக்கு இல்லை என்பதை உணர்ந்து விமர்சிக்கலாம்..
சின்னதொரு கரு... சிறப்பான கதை... தடங்களின்றி நகரும் திரைக்கதை என படம் சிறப்பாக வந்திருக்கிறது. படத்தின் கதையை அஜீஸ் பி. தாமஸ் எழுத, எம்சி ஜோசப் இயக்கியிருக்கிறார். அல்பியின் ஒளிப்பதிவு, அயூப்கானின் எடிட்டிங் மற்றும் பிஜூபால் இசை படத்துக்கு கூடுதல் பலம். ஏ.டி. ஸ்ரீகுமார், கணேஷ்மேனன், லஷ்மி வாரியர் ஆகியோரின் கட் டூ கிரியேட் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. 2019- அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகியிருக்கிறது.
நல்ல படத்தைப் பார்த்த திருப்தி கண்டிப்பாகக் கிடைக்கும்... நம்பிப் பார்க்கலாம்.
-'பரிவை' சே.குமார்.
4 எண்ணங்கள்:
நல்லதொரு அறிமுகம். இப்பொழுது தான் அந்தப் படத்தில் ஒரு Promo பார்த்தேன் - யூவில். முழு படம் இல்லை. கிடைத்தால் பார்க்கிறேன்.
செல்ஃபி மோகம் - எதையும் செய்தியாகப் பகிர்ந்து லைக் வாங்கும் மோகம் - சிலருக்கு ரொம்பவே அதிகம் தான்.
வித்தியாசமான கதையா இருக்கும் போல குமார்...
உங்கள் விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது.
பார்கிறேன். நன்றி.
இந்த படத்தையும் பார்க்கிறேன் விரைவில் .நீங்க சொன்ன trance 10 நாளுக்கு முன் குடும்பமாய் பார்த்தோம் .அதற்கு நீங்கள் விமர்சனம் எழுதவில்லையா ? சூப்பர் படம் .அப்பப்பா பகத் பாசில் ஒவ்வொரு காட்சியிலும் அதகளப்படுத்தறார் .இம்மாதிரி திரைப்படம்தமிழில் வர சான்ஸ் இல்லை .மிக்க நன்றி நல்லதொரு படத்தை பரிந்துரைத்ததற்கு .
கருத்துரையிடுக