மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 4 ஜூலை, 2018

வாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை

லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவதற்கான மனநிலை இல்லை. இனி வலைப்பக்கம் தொடருமா... தொடராதா தெரியாது... ஆனாலும் இதுவரை எழுதியவற்றையாவது தொடர்ந்து வலையில் வைத்திருக்க வேண்டும் என்பதால் பிரதிலிபி போட்டிகளில் கலந்து கொண்ட கதைகள். அகல் மின்னிதழ் சிறுகதைப் போட்டியில் தேர்வான கதை, அகலுக்கு எழுதிய கட்டுரை என கைவசமிருப்பவற்றை அவ்வப்போது பதிந்து வைக்கலாம் என்ற எண்ணம்.

கருத்து இடுவதில்லை... மறுமொழி இல்லை என்றெல்லாம் நினைப்பீர்கள் என்றால் மீண்டு(ம்) வரும் வரை அப்படித்தான் நகரும். சிலரின் வலைப்பக்கத்தை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். தொடர்ந்து நட்பில் இருப்பேன்... நன்றி.

நட்புடன்
சே.குமார்.

மே மாத (வைகாசி மின்னிதழ்) அகலில் வெளியான கட்டுரை 'வேயன்னா' இங்கே...

குற்றப்பரம்பரை : வேயன்னா

ரு நாவலை வாசிக்கும் போது அதில் ஏதோ ஒரு கதாபாத்திரத்தின் பின்னே நாம் பயணிக்க ஆரம்பித்தால் அந்த நாவல் வாசிப்பு நிச்சயமாக நமக்கு ஒரு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். அந்தச் சுவையை பொன்னியின் செல்வன் வாசிக்கும் போது வந்தியத்தேவனுடனும்... உடையார் வாசிக்கும் போது இராஜராஜனுடனும்... கடல்புறா வாசிக்கும் போது கருணாகரப் பல்லவனுடனும்... ஜலதீபத்தில் இதயச் சந்திரனுடனும்... யவனராணியில் இளஞ்செழியனுடனும்... சிவகாமியின் சபதத்தில் நரசிம்மவர்மப் பல்லவனுடனும் பயணிக்கும் போது உணர்ந்தேன்... கதைகளைச் சுவைத்தேன். ஒரு சில நாவல்களில் எந்தக் கதாபாத்திரமும் நம்முடன் ஒட்டாது. அப்படியான நாவல்கள் வாசிப்புக்கு அயற்சியைக் கொடுக்கும். அப்படி ஒரு நாவலை சமீபத்தில் வாசித்தேன். அதன் பின் வாசிக்க ஆரம்பித்த குற்றப் பரம்பரையில் ஆரம்பம் முதலே ஒருவரின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தேன்.

அவர்தான் வேலுச்சாமி என்ற வீயன்னா என்ற வேயன்னா.

நண்பர்கள் எல்லாம் சிலாகித்துப் பாராட்டிப் பேசிய நாவல் குற்றப்பரம்பரை. ரொம்ப நாளாகவே வாசிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த நாவல். நண்பர்களால் சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது. வாசிக்க ஆரம்பித்து ஒரே நாளில் முடித்தேன்.

“பற்றிக் கொண்டால் பல உயிர்களைக் காவு கேட்கும் தென் மாவட்டத்து சாதிக் கலவரங்கள். தமிழ்நாட்டின் சரித்திரக் கேடு” என்ற வரிகளே நாவலாசிரியரின் முன்னுரையின் முதல் வரிகளாய்... அது முற்றிலும் உண்மை. அதேபோல் பேரன்பும் பெருங்கோபமும் கொண்டு எழுதத் துவங்கினேன் என்றும் சொல்லியிருக்கிறார். அந்த பேரன்பையும் பெருங்கோபத்தையும் வேயன்னாவின் பின்னால் பயணிக்கும் போது உணரலாம்.

ஊருக்கு ஒரு மரியாதைக்குரிய மனிதர் இருப்பார் இந்த வேயன்னாவைப் போல... ஊருக்கு ஒரு பிரச்சினைக்குரிய மனிதர் இருப்பார் பெருநாழி பச்சமுத்துவைப் போல...  இது எல்லாக் கிராமங்களிலும் இருக்கும். எங்கள் ஊரில் கூட இது போன்ற மனிதர்களை பார்த்து வளர்ந்திருக்கிறோம்... பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எல்லா ஊரிலும் நல்லது செய்ய ஒருவன் இருந்தால் கெடுதல் செய்வதற்கென ஒருவன் இருப்பான். அவனுக்குப் பத்துப் பேர் என்றால் இவனுக்குப் பத்துப் பேர் இருக்கத்தான் செய்வார்கள். இதனாலேயே ஊர் நல்லது கெட்டது எல்லாவற்றிலும் ரெண்டு பட்டுக்கிடக்கும். ஊரில் ஒரு பிரச்சினை என்றால் ஊர்ப்பெரியவர் தலைமையில் ஊர்க்கூட்டம் நடக்கும். ஊர்க்கூட்டத்தில் விதண்டாவாதம் செய்வதே பச்சமுத்து போன்றவர்களின் வேலை. இது குற்றப்பரம்பரையில் இல்லை என்றாலும் கிராமங்களில் வழிவழியாக வந்துகொண்டுதான் இருக்கிறது.

எந்த ஒரு பிரச்சினை என்றாலும் ஊர்த் தலைவர் தலைமையில் ஊர்க்கூட்டம் கூட்டப்பட்டு அந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு எடுக்கப்படும். ஊர்க்கூட்டத்தில் பெண்கள் கலந்து கொள்ளக்கூடாது என்பதுதான் விதி ஆனால் அந்த விதியும் சிலகாலமாக ஆம்பளை இல்லாத வீட்டில் பொம்பளை கலந்துக்கலாம் என மாற்றப்பட்டுவிட்டது. ஊர்க்கூட்டத்தில் முடிவு எடுக்க முடியாத பெரும் பிரச்சினைகள் நாட்டுக் கூட்டத்துக்குச் செல்லும். பல கிராமங்களை உள்ளடக்கியது ஒரு நாடு. கிராமத் தலைவர்கள் எல்லாம் நாட்டுத் தலைவருடன் அமர்ந்து பிரச்சினையை பற்றிப் பேசி, பெரும்பாலும் நல்லதொரு முடிவை எடுத்து விடுவார்கள். இங்கும் முடியாதபட்சத்தில் நீதிமன்றம் நோக்கிச் செல்வார்கள். இந்த நடைமுறை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. இப்ப சின்னப் பிரச்சினைகள் என்றாலும் காவல் நிலைத்திலும் நீதிமன்றத்திலும்தான் நிற்கிறார்கள். இந்த ஊர்க்கூட்டம், நாட்டுக்கூட்டம் எல்லாம் எங்க பக்கம் இன்னும் உயிர்ப்போடுதான் என்று சொல்லிக் கொள்ளலாம் ஆனால் காவல் நிலையங்களே இப்போது பிரதானமாகிவிட்டது.

சரி இனி வேயன்னாவோட பயணிக்கலாம்.

தங்கள் வாழ்க்கைக்காக... குறிப்பாக மூன்று வேளை சோற்றுக்காக திருடும் மக்கள் அவர்கள். தங்களை அழிக்கத் துடிக்கும் ஆங்கிலேயர்களிடமிருந்து தப்பித்து உயிர் பிழைக்க காட்டுக்குள் குழந்தை குட்டிகள், நாய்கள், மாடுகள் என எல்லாவற்றோடும்  ஓடும் மக்கள் பலரை இழந்து சம்பங்கி நதிக்குள் விழுந்து அதன் போக்கில் இழுத்துச் செல்லப்பட்டு கரையொதுங்கி கிடக்க, அந்தக் காட்டுக்குள் மாடு மேய்க்க வரும் பெரும்பச்சேரி வட்டத்துரை என்னும் அரிஜனச் சிறுவனால் தங்கள் ஊருக்கு அருகில் சுற்றிலும் வேலிக்கருவை சூழ்ந்த பகுதியில் தங்க வைக்கப்படுகிறார்கள்.

அதையே கொம்பூதி என்ற பெயருடன் தங்கள் ஊராக மாற்றிக் கொள்ளும் அக்கள்ளர்கள். அங்கிருந்தபடியே தங்கள் திருட்டுத் தொழிலைச் செய்ய ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் தலைவன் தான் வேலுச்சாமி. உயிருக்குப் பயந்து வரும் போது மூத்தமகன் சேதுவைத் தொலைத்து விட்டவரின் இரண்டாவது மகன் வில்லாயுதம். அப்பனுக்குப் பின் அந்த இடத்தில் இவந்தான் தலைவன் என்பதை ஆரம்பம் முதலே அக்கூட்டம் சொல்லி வருகிறது. நாம் செயல் எப்படியும் தலைவராகிவிடுவார் என்றும் முதல்வர் ஆகிவிடுவார் என்றும் கனவு காண்பதைப் போல்தான்... வில்லாயுதமாச்சும் தலைமைப் பண்புக்கு சிறந்தவனாகிறானா என்பதை முடிவில் பார்க்கலாம். இப்ப நாம் பயணிக்க வேண்டியது வேலய்யாவோடுதானே...

தங்களைப் பார்த்ததும் தோளில் போட்டிருக்கும் துண்டை எடுத்து கக்கத்தில் வைத்துக் கொண்டு 'கும்புடுறேன் சாமி' என்று சொல்லிச் செல்ல வேண்டும் என்ற சட்டங்கள் இன்று பல கிராமங்களில் இருக்க, இக்கதையின் காலகட்டத்தில் நீயும் நானும் ஒண்ணுதாம்லே நம்ம அர்ணாக்கயிரை அவுத்துட்டா நமக்குள்ள என்னலே வித்தியாசமிருக்கு என வாழ்ந்திருக்கிறார் இந்த வேயன்னா. இன்று அரசியல் காரணிகளுக்காகவே இந்த இரு சாதிகளும் பிரித்து வைக்கப்பட்டிருக்கின்றன. எப்படிப் பிரித்தாள வெள்ளையரும் அவருடன் சேர்ந்த பெருநாழிக் கிராமத்தார்களும் முயற்சிக்கிறார்கள் என்பதை கதையை வாசிக்கும் போது அறியலாம்.

தங்களுக்கு வாழ்வளிக்க முக்கியக் காரணியாய் இருந்த பெரும்பச்சேரி வட்டத்துரையை தன் மகனாகத்தான் பார்க்கிறார். சாதி என்னும் சகதியை தன்னுள் அப்பிக் கொள்ளாத மனிதன் வேலய்யா... வட்டத்துரையுடன் சரிசமமாக வீட்டுக்குள் அமர்ந்து சாப்பிடுகிறார். தோளில் கை போட்டு நீயும் எம்புள்ளதாம்லே என அணைத்துக் கொள்கிறார். வட்டத்துரையைக் காணோமென்றால் தவிக்கிறார். தன் மகன் வில்லாயுதத்தைக் கூட அருகில் வைத்துக் கொள்ள விரும்பாத மனிதர், வட்டத்துரை இல்லாது எங்கும் செல்ல விரும்பாத மனிதராகவே வாழ்கிறார்.
கொம்பூதி கிராமம் மட்டுமல்ல, பெரும்பச்சேரி கிராமமும் இவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறது. அதற்காக நாட்டமை பாதம் பட்டால் என்றோ, எஜமான் காலடி மண்ணெடுத்து என்றோ பாடவில்லை. மரியாதையை மரியாதையாகவே செய்கிறார்கள். அவரும் அவர்களை மதிக்கிறார்... அவர்களுடன் பேசி மகிழ்கிறார். பெருநாழி உள்ளிட்ட மற்ற ஊர்களில் இவர் மீது பயம் கலந்த மரியாதையே இருக்கிறது... அதுவும் திருட்டுக் கூட்டத் தலைவன் என்ற பயம்.

தங்கள் வீட்டைப் பெரிதாக கட்ட வேண்டும்... பெண்கள் எல்லாம் நகைகளைப் போட்டு அழகு பார்க்க வேண்டும் என்பதெல்லாம் அவர்களின் எண்ணமில்லை. மண் குடிசைதான் அவர்களின் வீடு... திருடும் பொருள்கள் எல்லாம் பெருநாழியைச் சேர்ந்த பச்சமுத்துவிடம் கொடுக்கிறார்கள். அவரும் இவர்களுக்கு தவசம் உள்ளிட்ட தானியங்களைக் கொடுக்கிறார். அதை வாங்கி தங்களுக்குள் பிரித்துக் கொண்டு சாப்பிடுகிறார்கள். அதுவே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. வேயன்னாவின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு என்பது அந்த ஊரில் இல்லவே இல்லை... அவர் சொல்வதே வேதவாக்கு.

திருடப் போகும் முன்னர் தனது சொந்தத் தங்கை உள்ளிட்ட பெண்களை ஆட்டுக்கறி கொண்டு செல்வது போல் போகவிட்டு யார் வீட்டில் கொள்ளை அடிக்க நினைக்கிறார்களோ அவர் வீட்டில் எந்த அறையில் நகைப்பெட்டி இருக்கிறது என்பதை அறிந்து வரச் செய்து அதன் பின் இரவில் ஊர்க் கோவிலின் முன் நின்று தனது தாய் கூழானிக்கிழவி... இந்தக் கிழவி செமக் கிழவி... கதையை வாசித்தால் இது பண்ணுற அட்டகாசத்தையும் இறுதியில் அது நம்மளை அழ வைப்பதையும் ஒரு சேரப் பருகலாம். இந்த மாதிரி ஆட்டம் போடுற அப்பத்தா ஊருக்கு ஒண்ணு இருக்கும். சுந்தர பாண்டியனில் வருகிற அப்பத்தாக்கள் மாதிரி ரகளையான கிழவி. அது சாமி கும்பிட்டு திருமண் எடுத்துப் பூசிவிட்ட பின்தான் திருடக் கிளம்புகிறார்கள். இரவில்தான் இவர்களின் வேட்டை. சரியான இடத்தில் ஓட்டையிட்டு ஆக்காட்டி குருவியை உள்ளே விட்டு வேவு பார்த்து அதன் பின்னே வேலையைக் கச்சிதமாக முடிக்கிறார்கள். எல்லாத்திலும் மூளை வேயன்னாதான்.

சுற்றுப்பட்டு எங்கிட்டும் உப்புத் தண்ணியாக இருக்க, பெருநாழியில் இருக்கும் கிணறு மட்டுமே நல்ல தண்ணீரைக் கொடுக்கிறது. பெருநாழிக் கிராமத்தில் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தும் பெரும்பச்சேரி மக்களுக்கும் அதுதான் தாகம் தீர்க்கும் சாமி... அவர்கள் தங்களது வயல்களில் உழைத்தாலும் கீழ்சாதிக்காரர்கள்தானே... தீண்டாமை என்னும் தீயை மிகத் தீவிரமாக வளர்க்கும் பெருநாழி ஆண்களும் பெண்களும் பெரும்பச்சேரி பெண்கள் தண்ணீர் எடுக்க வந்தால் குடத்தை தள்ளி வைத்து விட்டு எட்ட நிற்க வேண்டும்.  தண்ணீர் எடுக்க வரும் பெருநாழிப் பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு வாளிதான் ஊற்றுவார்கள். எப்போது குடம் நிறைகிறதோ அதுவரை காத்திருக்க வேண்டும் என சட்டமியற்றி வைத்திருக்கிறார்கள். காத்திருக்கும் குடங்கள் அரைமணியிலும் நிறையலாம்... அரை நாளிலும் நிறையலாம்... பாவம் வெயில்ல காத்துக்கிடக்காளே என யாரும் ஒரு வாளி சேர்த்து ஊத்துவதில்லை. இந்தக் கிணறுதான் மிகப்பெரிய பிரச்சினைக்கு விதையாகிறது.

ஆம்... கைக்குழந்தைக்காரியான ராக்கு தண்ணியெடுக்கப் போகும் போது இந்த நேரத்தில் யாருமிருக்க மாட்டார்கள் எனப் போய் தானே தண்ணியெடுக்க, அவள் கணவன் துருவனைப் பிடித்து கொதிக்கும் எண்ணெய்க்குள் கிடக்கும் காசை எடுக்கச் சொல்லி, கையை வேக வைத்து உடம்பெல்லாம் சர்க்கரைப் பாகை ஊற்றி எறும்புகள் நிறைந்த மரத்தடியில் கட்டி வைத்து விடுகிறார்கள், கணவனைக் காணவில்லை என வேயன்னாவிடம் முறையீடு செய்ய, வட்டத்துரை இன்னும் சிலர் சகிதம் பெருநாழி சென்று அவனை மீட்பவர் நாளை முதல் பெரும்பச்சேரி சனம் அந்தக் கிணற்றில் தாங்களே நீர் எடுத்துக் கொள்வார்கள் எனச் சொல்லிச் செல்லும் வேயன்னா, மறுநாள் பெரும்பச்சேரி ஊரையே கூட்டிக் கொண்டு கிணற்றுக்கு வர, நீரில் மலம் நிறைந்து மிதக்கிறது. அவமானத்தால் கோபத்தில் தகிக்கும் வேயன்னாவால் பெருநாழி சந்தையும் வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டு சந்தை தீக்கிரையாகிறது.

கள்ளர்களை ஒடுக்க பெருநாழியில் கச்சேரி (போலீஸ் நிலையம்) அமைக்கப்பட, முதலில் வரும் வெள்ளக்கார போலீசுக்கு வேயன்னா மீது மிகுந்த மரியாதை, வீயன்னா என அழைக்கும் அவர் கச்சேரிக்கு அழைத்துப் பேசுகிறார் ஆனால் மற்ற போலீசுக்கு வேயன்னாவை பிடித்து உள்ளே போட வேண்டும் என்பதுதான் ஆவா... நல்லவரான வெள்ளைக்கார அதிகாரியை தங்களுக்கு எதிரானவர் என வேயன்னாவின் ஆட்கள் விரட்டி விட, அடுத்து வருகிறவன் எப்படியும் வேயன்னாவை பிடிச்சி உள்ளே போடணும் என்ற எண்ணத்துடனேயே இருக்கிறான். அவனின் மேலதிகாரியும் வேயன்னாவை வீழ்த்த வேண்டும் என்பதில் குறியாய் இருக்கிறார்.அதற்குப் பெருநாழி ஆண்களும் துணை நிற்கிறார்கள்.

கிணற்றுப் பிரச்சினைக்குப் பின்னர் பெரும்பச்சேரி மக்களுக்கு பெருநாழியில் வேலை இல்லை என்றாகிப் போனதால் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட ஆரம்பிக்கிறார்கள். தங்களுக்கு வரும் தவசத்தை அவர்களுக்குக் கொடுக்கச் சொல்கிறார் வேயன்னா.

பெருநாழி ஆசாரியின் வீட்டில் தீப்பிடிக்க இது கொம்பூதி வேயன்னா வேலைதான் என்று ஊரே கூடிப் பேசிக் கொண்டிருக்க, வெள்ளைக்கார போலீசும் எரியும் தீயை வேடிக்கை பார்க்க, வயிற்றுப் பிள்ளைக்காரியான மனைவி தீக்குள் சிக்கியிருக்கும் நிலையில் ஆசாரி தவிச்சி நிற்க, புதிய வெள்ளை அதிகாரியின் அழைப்பை ஏற்று பெருநாழிக்கு கண்மாய் வழியாகச் செல்லும் வேயன்னாவும் வட்டத்துரையும் தீக்குள் புகுந்து ஆசாரி மனைவியைக் காப்பாற்றுகிறார்கள். அந்த வெள்ளை அதிகாரிக்கு வேயன்னா மீது மரியாதை ஏற்பட, அவர் கள்ளத் தொழிலை விட்டால் போதும் என்ற மனநிலைக்கு வருகிறார்.

தங்கள் தொழிலை விட்டுவிட்டு திருந்தி வாழ மாட்டோமென முடிவாய் இருப்பவர்களை எருது கட்டுக்கு மாடு பிடிக்க வரச்சொல்லி அழைத்துத் தந்திரமாக போலீஸ் வளைத்துப் பிடித்து அடிக்கிறது. கொம்பூதி ஆண்கள் எல்லாம் வேயன்னாவின் ஒற்றைப் பார்வைக்கு கட்டுப்பட்டு அத்தனை அடியையும் வாங்கிக் கொண்டிருக்க, அவர்களோடு நாமும் உக்கார்ந்திருக்கிறோம் போலீஸ் அடி வாங்கிக் கொண்டு.

அந்த கருத்த உரமேறிய தேகம்... வேல் கம்பு பிடித்து சிங்கமென நடக்கும் மனிதன்... பார்த்தவர் எல்லாம் பயந்து ஒதுங்கிச் செல்லும் மனிதன்... சுற்றிலும் இறுக்கப்பட்ட கயிற்று வலைக்குள் நொறுங்கி அமர்ந்திருக்கும் போது நாமும் அவர் அருகே கண்ணீரோடு அமர்ந்திருக்கிறோம்.

சிங்கத்தை சீண்டிட்டேல்ல.... அது இனி என்ன பண்ணுதுன்னு பாரு அப்படின்னு ஊரில் சொல்லுவாங்க... அப்படி போலீஸ் தீண்ட, அவர்களுக்கு பாடம் கற்பிக்க தன் இளைஞர் கூட்டத்துக்கு கண்ணைக் காட்டுகிறார் வேயன்னா. பெருநாழி ஆசாரி, வேயன்னா மீது கொண்ட மரியாதையின் காரணமாக தன் குழந்தைக்கு வேலுச்சாமி என பெயர் வைத்திருக்கிறார். அதே ஆசாரி போலீசாரையும் பெருநாழி குள்ள நரிகளையும் பலி வாங்க தன் வீட்டில் சட்டி சட்டியாக எண்ணெய் காய வைக்க உதவுகிறார். வித்தியாசமான திட்டத்தால் போலீசாரெல்லாம் எண்ணெய்க்குப் பலியாக, வேயன்னாவைப் பிடிக்க வந்த உயர் அதிகாரி வில்லாயுதத்தால் கொல்லப்படுகிறார்.

மூன்றாவதாக வரும் போலீஸ் அதிகாரி சேது. ஆம் வேயன்னா தப்பி வரும் போது தொலைத்த மகன்தான் அவன். ஐயாவை (அப்பாவை ஐயா என்றழைப்பது பெரும்பாலான கள்ளர்களின் வழக்கம்) தன் பாசத்தால் இனித் திருட மாட்டோம் என சத்தியம் செய்ய வைக்கிறான். அதன் பின் வேயன்னாவின் கொம்பூதி கிராமம் திருடச் செல்லவில்லை. திருடிய மொத்தத்தையும் வாங்கிக் கொண்டு சாப்பாட்டுக்குப் பொருள் அனுப்பும் பச்சமுத்து சும்மா இருப்பாரா என்ன...? அவரின் சித்து வேலைகளால் திருட்டு நடக்கிறது... பழி வேயன்னா மீது விழுகிறது. மகன் எதிரியாகிறான்... தன் கையால் அவரை அடித்து நொறுக்குகிறான்.

வயிற்றுப்பசியால் வாடினாலும் செய்த சத்தியத்தை மீறாத வேயன்னாவும் அவரின் கூட்டமும் வேறு வேலை எதுவும் செய்யத் தெரியாது தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் பெருநாழி பச்சமுத்துவின் திட்டத்தால் செய்தாத திருட்டுப் பழியையும் சுமந்து வருந்தித் திரிகிறது. வேல் கம்புடன் வீறாப்பாய் திரிந்த மனிதன் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார் வேதனையுடன்.

இவர்களுக்கு எதிராக சிலர் கிளம்பினாலும் இவர்களோடு இருக்கும் பெரும்பச்சேரி மக்களைப் பிரித்தாலொழிய வேயன்னாவை வீழ்த்த முடியாது... அவர்களுக்குள் மூட்டி விட வேண்டும் என முடிவெடுத்து பெரும்பச்சேரி மக்களுக்கு பெருநாழியில் மீண்டும் வேலை அது இது என்ன இரு சாதிக்குள்ளும் சா'தீ'யை வளர்க்க ஆரம்பிக்கிறது கச்சேரியும் பெருநாழியும்.

இறுதியில் மிகப்பெரிய சண்டை... பெருநாழியில் பலர் கொல்லப்படுகிறார்கள். கொம்பூதிக்கு வரும் சேது தலைமையிலான போலீஸ் தண்ணீருக்குள் மூழ்கியிருந்து தாக்கும் ஆண்களை எல்லாம் சுட்டுத் தள்ள, மகன் சேதுவால் தண்ணீருக்குள் மறைந்திருக்கும் வேயன்னாவும் கொல்லப்படுகிறார்.

இப்படி மக்களுக்காக, மக்களோடு வாழுந்த மனிதரான வேயன்னாவுக்கு அங்கம்மா என்ற மனைவியும் அன்னமயிலு என்ற அழகிய மகளும் வில்லாயுதம், கூனிக்கிழவி, கணவனை இழந்த தங்கை, அவளின் மகன் ஊமைத்துரை, மகள் சிட்டு என ஏகப்பட்ட சொந்தங்கள் இருந்தாலும் இந்த மனிதர் திருடியது... வாழ்ந்தது... எல்லாமே தன்னை நம்பி வந்த மக்களுக்காகவும் தங்களைக் காப்பாற்றி இருக்க இடமளித்த பெரும்பச்சேரி மக்களுக்காகவும்தான். பெருநாழி பகைக்கிராமமாக இருந்தாலும் அங்கும் பலருக்கு உதவி செய்தவர்தான் இந்த வேயன்னா. மொத்தத்தில் ஊருக்காக வாழ்ந்த மனிதன் வேயன்னா... உறவுக்குக் கட்டுப்பட்டு உயிரை இழக்கிறார்.

கதையை முடித்து அதிலிருந்து வெளிவரும் போது வீரம் செறிந்த மனிதன்... தன்னை நம்பிய மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த மனிதன்... என்றோ காணாமல் போன மகன் போலீசாய் வந்து வாங்கிய சத்தியத்தால் வறுமையில் வாடிய மனிதன்... தண்ணீருக்குள் இறந்து கிடக்க, வேயன்னா பின்னால் வட்டத்துரை போல் நடந்தும் ஓடியும் அவரின் கைகாட்டலுக்கு அடித்தும் ஆர்ப்பரித்தும் பயணித்த நாமும் கூழானிக்கிழவி, அன்னமயிலு, அங்கம்மா, சிட்டு, வட்டத்துரை... இன்னும் இன்னுமாய்க் கூடிநிற்கும் கொம்பூதி, பெரும்பச்சேரி மக்களுடன் மக்களாய் நின்று கொண்டிப்போம் கண்ணீருடன்.

இதுவே இந்த நாவலின் மிகப்பெரிய வெற்றி. வட்டார எழுத்தும் ஒரு பரம்பரையின் வாழ்வும் நம்மை ஈர்த்துக் கொள்ளும்... அதிலிருந்து மீள்வது என்பது வேயன்னாவின் மரணத்தில் கண்ணீராய் நாம் வெளியாகும் போது மட்டுமே.

வில்லாயுதம் ஒரு களவைத் தலைமை தாங்கிச் செய்து வேயன்னாவுக்குப் பின் இவன்தான் என்று நிரூபித்தாலும் கதை முழுவதும் அவனின் களம் வஜ்ராயினி, வைரம், முனியின் குடில் என வேறு பாதையில்தான் பயணிக்கிறது. எனக்குச் சரிசமமாக வில்லாயுதம் கூட உட்கார முடியாது ஆனால் வட்டத்துரை உட்காருவான் என வேயன்னா சொல்வதன் உண்மையை கதையினை வாசிக்கும் போது அறியலாம். வில்லாயுதத்துக்கு அப்பாவுடன் அமரவோ பேசவோ நேரம் இருந்தால்தானே சமமாக உட்காரமுடியும். அவனின் போக்கு வேறு பாதையில்...

வட்டத்துரை பிறப்பு குறித்தான கன்னிமார்கள் கேட்கக்கூடாத காளத்தி கதையும் வஜ்ராயினி தொடர்பான வைரத்தேடல் கதையும் கிளைக்கதைகளாய்... அவலமாய் முடியும் கதைகள். இரண்டுமே சோகமயமானது என்றாலும் வஜ்ராயினி கதையின் கழுகு, மான், வைரம், ஆட்டுத் தோலில் வைரத்தை கழுகு எடுத்து வருதல் என ஆபுனைவாய் பயணிப்பது வேயன்னா பின்னால் வேல் கம்புடன் பயணிக்கும் போது நம்மோடு ஒட்டவில்லை.

சேதுவின் வெள்ளைக்கார காதலி... அவர்களின் காதல் என மற்றொருமொரு களம்... இறுதியில் வெள்ளைக்காரக் காதலி எடுக்கும் முடிவால் மனசுக்குள் நிற்கிறாள்.

அன்னமயிலுக்கு வட்டத்துரை மீது சொல்லாத காதல். அதை சில இடங்களில் அவளின் செய்கையால் மட்டுமே ஆசிரியர் உணர்த்தியிருப்பார். சினிமாத்தனமாய் அவனிடம் உன்னைத்தான் கட்டிப்பேன்னு அவளை நிற்க வைக்கவில்லை.

சேது போலீஸ் பயிற்சிக்குச் செல்வதும், அவனுக்கு துப்பாக்கி சுடுவதில் இருக்கும் திறமை குறித்து காதலி வீட்டில் பெருமை பேசுவதும் கதையின் முடிவை நமக்குச் சொல்லிவிடுகின்றன ஆமா எத்தனை சினிமா பார்த்திருப்போம்.

சேதுவின் வருகைக்குப் பின்னர் கதையில் சினிமாத்தனம் குடி கொண்டு விடுகிறது. வேகமான வேயன்னா சத்தியத்தின் பின்னே சாந்த சொரூபியாய் மாறிவிட, கதை மெல்லத்தான் பயணிக்கிறது.

வேயன்னாவாய் அந்த கருத்த தேகமும் வேல் கம்பு தாங்கி கையும் வீரமான நடையும்... கிடாரி, மதயானைக் கூட்டம் படங்களில் நடித்த இந்த நாவலின் ஆசிரியர் வேல ராமமூர்த்தி அவர்கள்தான் இக்கதையை வாசிக்கும் போது எனக்கு முன்னே வேகவேகமாய் நடந்து கொண்டிருந்தார்.

கூட்டாஞ்சோறு என்ற தலைப்பில் ஜூனியர் விகடனில் தொடர்கதையாக வந்ததுதான் நாவலாகும் போது ஒரு பரம்பரையின் கதையாய்... சீறும் காளையாக பயணிக்க குற்றப்பரம்பரை ஆனது.

பாலா இந்தப் படத்தை எடுக்கும் போது நாயகனைச் சேது, வில்லாயுதம் என இரட்டை வேடத்தில் நடிக்க வைத்துவிட்டு வேல ராமமூர்த்தி அவர்களை 'வேயன்னா' ஆக்கினால் மிகச் சிறப்பாக இருக்கும்.

வேயன்னாவாக வாழ அந்தப் பரம்பரையில் வந்த வேல ராமமூர்த்தி அவர்களால் மட்டுமே முடியும்.

வேயன்னா இன்னும் எனக்குள் வேல் கம்போடுதான் வலம் வருகிறார். ஒருவேளை நீங்கள் வாசிக்கும் போது அவர் எனக்குள் இருந்து உங்களுக்குள் இடம் மாறலாம். 

-'பரிவை' சே.குமார்.

3 எண்ணங்கள்:

G.M Balasubramaniam சொன்னது…

வாசிக்கத் துவங்கும் போதே நீளம் பயமுறுத்துகிறது அனுபவித்து வாசிக்க உங்கள் மூலம் கதை அறிய வேண்டி உள்ளது ம்னம் ஒருங்கும் போது மீண்டும்வர வேண்டும்

ஸ்ரீராம். சொன்னது…

நீண்ட விமர்சனம். கதிரேசன் பக்கத்தில் இந்தப் புத்தகம் பற்றிய அறிமுகம் படிக்கும்போது படிக்க ஆவல் எனக்கும் வந்தது.

Yarlpavanan சொன்னது…

சிறந்த அறிமுக உரை
தங்கள் முதிர்ச்சி தெரிகிறது
வாசிக்கத் தூண்டுகிறது.
தொடருங்கள்