பிரதிலிபி மார்ச் மாத போட்டியான 'அன்பென்று கொட்டுமுரசே'யில் கலந்து கொண்ட கதை... சற்றே வித்தியாசமாய் முயற்சித்துப் பார்த்த கதை இது. இதில் வழக்கமான கிராமத்துப் பாணி இருக்காது. வாசித்து உங்க கருத்தைச் சொல்லுங்க.
அப்படியே நம்ம ஸ்ரீராம் அண்ணாவின் எங்கள் பிளாக்கில் நேற்றைய கேட்டு வாங்கிப் போடும் கதையில் எனது 'மஞ்சநெத்திப் பூ வாசம்' வந்திருக்கு. அங்கு கருத்துச் சொன்ன அனைவருக்கும் இங்கும் நன்றிகள். நீங்களும் வாசிங்க... எனக்கென்னவோ கதையை இன்னும் பட்டை தீட்டியிருக்கலாமோ எனத் தோன்றியது என்பதே உண்மை. அண்ணனிடம் சொன்னபோது எனக்குப் பிடித்திருக்கிறது என எடுத்துக் கொண்டார்கள். சிலருக்கு சுத்தமான கிராமத்து வாசனை பிடிக்க வாய்ப்பில்லை. எப்படியிருந்தாலும் நான் எழுதியதில் இதுவும் ஒரு சிறந்த கதையே.... நன்றி ஸ்ரீராம் அண்ணா.
******
இன்னார்க்கு இன்னாரென்று...
கனி...
என் வாழ்வில் மறக்க முடியாத
பெயர். ஏறத்தாழ இருபத்து மூன்று வருடங்களுக்கு முன் எனது மூன்றாண்டு கல்லூரிக்
காலத்தை அன்பால் நிறைத்தவள். வசந்தம் நிறைந்த வாழ்க்கையை அனுபவிக்க வைத்தவள்...
தினம் தினம் சந்தோஷம் பூக்க வைத்தவள்.
அவளைக் கடைசியாகப் பார்த்து
பதினெட்டு வருசமாச்சு... அதாவது ஒன்னறை மாமாங்கம்... இனி அவளை சந்திக்கவே
போவதில்லை என்று நினைத்தவன் அவளை மறக்காது மனசுக்குள் பூட்டி வைத்திருந்தேன். வேதனையான
தருணங்களில் அவளின் நினைவுகளை மெல்ல மீட்டெடுப்பேன்... என் வேதனைகள் கரைந்து
போகும்.
காரைக்குடி செல்ல மதுரை மாட்டுத்
தாவணி பேருந்து நிலையத்தில் நின்றவன்,
ஏதேச்சையாக திரும்பிப் பார்க்க எனக்குப் பின்னே சற்று தள்ளி அவள் நின்றாள்...
தனியாக அல்ல... இன்னும் இரண்டு பெண்களுடன் ஏதோ சுவராஸ்யமாய் பேசியபடி... என் கண்ணை
என்னாலேயே நம்ம முடியாமல் மீண்டும் அவளைப் பார்த்தேன் அவள்... அவளேதான்... அதே
வசீகரிக்கும் முகம்... அதே மின்னல் வெட்டும் கண்கள்... கொஞ்சம் குண்டாகத்
தெரிந்தாள்.
அவளிடம் பேசுவோமா வேண்டாமா என
யோசிக்க ஆரம்பித்தேன் நான்.
பாலா...
இந்தப் பெயரை என்னால் எப்படி
மறக்க முடியும்... என் கல்லூரி நாட்களை வசந்தமாக்கியவன்... இவன் எனக்கானவன் என்று
பெருமிதம் கொள்ள வைத்தவன். எந்தப் போட்டி என்றாலும் வகுப்பறைக்கு வரும் வெற்றி
பெற்றவர்கள் பெயரைத் தாங்கிய அறிவிப்பில் அவன் பெயரில்லாது வராது. ஒவ்வொரு முறை
அவன் பெயரை வகுப்பறையில் ஆசிரியர் உச்சரிக்கும் போது எனக்குள்ளே சந்தோஷம்
சதிராடும்...
ரொம்ப ஜென்டிலானவன்... கல்லூரி
இறுதிநாளில் யாருமற்ற வேப்பமரத்தில் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம்... பிரிவுச்
சுமையை தூக்க முடியாமல் கண்ணீர் எட்டிப் பார்த்தது... ஆறுதலாய் கரம் பற்றி
அவசரமாய் நெற்றியில் ஒரு முத்தம் பதித்தான்... அதுவே காதலின் முதலும் கடைசியுமான
முத்தம்... இப்போது நினைத்தாலும் என் நெற்றி ஒரு முறை சிலிர்த்து அடங்கும்.
பதினெட்டு வருடங்களுக்கு முன்னர்
கையறு நிலையில் என்னிடம் விடைபெற்றவனை அதன் பிறகு பார்க்கவேயில்லை... இதோ என்
முன்னே நிற்கிறான்... என்னை அவன் பார்க்கிறான்... நானும் அவனைப்
பார்த்துவிட்டேன்... ஆனால் பார்க்காதது போல் நிற்கிறேன்.
அவன் அருகில் செல்வதா
வேண்டாமாவென யோசிக்கலானேன்.
சுபத்ரா...
கல்லூரி முடித்து எம்.ஏ
முடிக்கும் வரை கனியுடனான காதல் உயிர்ப்போடு இருந்தது. அதன் பின்னர் அவளுக்கு
மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். வேலையும் இல்லாமல்... குடும்பச் சூழலும்
சரியில்லாமல் அவளை கூட்டிக் கொண்டு போய் என்ன செய்வது என்ற கையறு நிலையில் அவளைப்
பிரிந்தவன், இந்த
பதினெட்டு வருடத்தில் ஓடி.. ஓடி... ஓரிடத்தில் செட்டிலாகிவிட்டேன்.
அம்மாவின் நச்சரிப்புக்காகவும்
வயது போய்க் கொண்டிருந்தாலும் தூரத்துச் சொந்தத்தில் நான் மணமுடித்தவள்தான்
சுபத்ரா... பள்ளி ஆசிரியை... பல நேரங்களில் வீட்டிலும் ஆசிரியை போல் கேள்வி மேல்
கேள்வி கேட்பாள்.
கனி குறித்து அவளுக்குத்
தெரியும்... பல நேரங்களில் என்ன அவளை மறக்க முடியலையோ என்று வேல் பாய்ச்சவும்
தவறமாட்டாள்... இருந்தாலும் என் மீது பாசம் கொண்டவள்.
மணிகண்டன்
எம்.எஸ்.ஸி முடித்தவுடன்
வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அப்போது பாலாவுக்கும் வேலை
இல்லை... கஷ்டப்படுற குடும்பம்... இரண்டு தங்கைகள்.. ஒரு தம்பி... விவசாயியான
அப்பாவைவிட படித்து முடித்த அண்ணனையே பெரிதும் நம்பிக் கொண்டிருந்தார்கள்.
என் நிலையை அழுகையோடு சொன்னபோது
அவன் சூழலைச் சொல்லி எப்படி முடியும் என எதிர்க் கேள்வி கேட்டான். அந்த நிலையில்
எத்தனை வருடமானாலும் காத்திருப்பேன் என்று என்னால் சொல்ல முடியாத நிலை. என் காதலைப்
புதைத்து அம்மாவின் அண்ணன் மகனான மணியின் மனைவியானேன்...
மணி பக்கா ஜென்டில்மேன்...
என்னைத் தாங்குதாங்கென்று தாங்குவார்... இன்று வரை அப்படித்தான்... அவரிடம் ஏனோ
என் காதலை இன்று வரை சொல்லவில்லை... சொல்லி என்னாகப் போகுதுன்னு விட்டுட்டேன்...
அதுவும் நல்லதுக்குத்தான்... ஒருவேளை சொல்லியிருந்தா அவரு மனசுக்குள் சில
வன்மங்கள் தோன்றியிருக்கக்கூடும்.
1993...
செப்டெம்பர் 17
கல்லூரி முதல் வருடம்...
பள்ளிக்கும் கல்லூரிக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. ஒரு சில போட்டிகளுக்கு
வெளியூர்களுக்கு மாணவ மாணவிகள் இணைந்து செல்லும் போது என்னைக் கவர்ந்தவள் கனி...
ஆரம்பத்தில் சாதாரணமாக பேச ஆரம்பித்தவன்,
அவளை தினமும் பார்க்கணும் ஏதாவது பேசணுங்கிற நிலமைக்கு தள்ளப்பட்டேன்.
இதெல்லாம் வயசுக்கோளாறு... ஏதோ
அந்தப்புள்ள நல்லாப் பேசுது.. அதைக் கெடுத்துக்காதே என்று நண்பர்கள் சொன்னாலும்
அவள் மீதான காதல் மாறவில்லை... ஒருநாள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது என்
காதலைச் சொல்லிவிட்டேன்.
அந்த நாள்தான் செப்டெம்பர் 17.
1993
செப்டெம்பர் 25
எனக்கு நல்லா நினைவிருக்கு
செப்டெம்பர் 17, எப்பவும்
போல பாலா கூட பிரண்ட்லியா பேசிக்கிட்டு இருந்தேன். என்னைக்கும் இல்லாம அன்னைக்கு
அவன் ரொம்ப பதட்டமா இருந்தான்... என்னாச்சு... பதட்டமா இருக்கே என்று கேட்டதற்கு
அதெல்லாம் ஒண்ணுமில்லைன்னு மழுப்பினான். ஆனால் ஏதோ ஒண்ணு இருக்குன்னு தோண, நான்
சொன்னாத்தான் பேசுவேன்னு சொன்னேன். உடனே அவன் என்னை லவ் பண்றேன்னு சொல்லிட்டான்.
பிரண்ட்லியா பேசினதை காதல்ன்னு
சொல்லிட்டானேன்னு எனக்குக் கோபம்... என்னோட மனவலி கண்ணீரா மாறிடுச்சு... ச்சீ...
உங்கூட பழகுனேன் பாரு... இனி எங்கிட்ட பேசாதேன்னு சொல்லிட்டு கண்ணீரோட எழுந்து போயி
சைக்கிளை எடுத்துக்கிட்டு வேகமாப் பொயிட்டேன்.
அதுக்கு அப்புறம் ஒரு வாரமா
அவனைப் பார்க்கவும் இல்லை பேசவும் இல்லை...
அவனைப் பார்க்காமல் பேசாமல் நகர்ந்த அந்த ஏழுநாள் எனக்கு மிகுந்த
வேதனையையும் அவன் மீதான பெருங் காதலையும் கொடுத்துச்சு. அன்னைக்கு காலையில கல்லூரி
கிளம்பும் போது எனக்குள்ள அவன் நிறைந்திருந்தான்...
அவனைப் பார்த்து நான் காதலைச்
சொன்ன நாள் செப்டெம்பர் 25.
பிச்சைக்காரன்
என்னருகே வந்த பிச்சைக்காரன் ‘தர்மம்
பண்ணுங்க சாமி’ என்றான். நான் ஒன்றும் பேசாமல் நிற்கவும், ‘உங்க பிள்ளை
குட்டி நல்லாயிருக்கும் சாமி’ அப்படின்னு சொல்ல சிரித்தபடி ‘சில்லறை இல்லய்யா’
என்று விரட்டினேன்.
அவன் என்னை ஒரு மாதிரி
பார்த்தபடி ‘சில்லறை இல்லாம வெள்ளையுஞ் சொள்ளையுமா ஏன் வாறீங்க சாமி’ என்று
முணங்கியபடி அவளை நோக்கி நகர்ந்தான்.
நாங்க காதலிக்கும் போது பலமுறை
பிள்ளையார்பட்டி கோவிலுக்குப் போயிருக்கிறோம். ஒருமுறை பிச்சைக்காரன் ஒருவன்
எங்களிடம் வந்து யாசகம் கேட்க,
நான் சில்லறை இல்லை என விரட்ட,
‘தாயி... மகாலெட்சுமி... தர்மம் போடு தாயி’ன்னு சொன்னதும் அவ பர்ஸில் இருந்து
சில சில்லறைக் காசை பிச்சைப் பாத்திரத்தில் போட்டாள்.
'தாயி...
இந்தாளையா கட்டிக்கப் போறே... சரியான கஞ்சனா இருப்பான் போல... பாத்து தாயி...
கஞ்சி ஊத்தாம விட்டுடப் போறான்...'
சொல்லிட்டு திரும்பிப் பாக்காம பொயிட்டான்.
கனி என் தோள் சாய்ந்து வெகுநேரம்
சிரித்தாள்.
பூக்காரி
மாட்டுத்தாவணி பஸ் நிலையம்
முழுவதும் பூக்கடைகள் நிறைந்திருக்கும். எப்போது மதுரை வந்தாலும் மல்லிகைப் பூ
நிறைய வாங்கிக் கொள்வேன். எனவே எனக்கு வேண்டிய பூ வாங்கி வைத்திருந்தேன்.
கைகுழந்தையுடன் வந்த பூக்காரி 'அம்மா
பூவாங்கிக்கங்கம்மா... இதை அப்படியே எடுத்துக்கிட்டு முப்பது ரூபாய் கொடுங்க
போதும்’ என்றாள். ‘இல்லம்மா நான் வாங்கிட்டேன் எனக்கு வேண்டாம்’ என்றதும் ‘பச்சைக்
குழந்தைம்மா... இது மட்டும்தான் பாக்கி குடுத்துட்டா கிளம்பிடுவேன்’ என்று
கெஞ்சினாள்.
அவளைப் பார்க்க பாவமாய் இருக்க
அதை மொத்தமாய் வாங்கி மூன்றாய் கட் பண்ணச் சொல்லி மூணு பாலிதீன் பையில் போட்டு
வாங்கி உறவுக்கார பெண்களிடம் இரண்டைக் கொடுத்து விட்டு ஒன்றை எனது பேக்கில்
வைத்துக் கொண்டேன்.
கல்லூரியில் ஒரு விழா... அதற்கு
வீட்டிலேயே பூவாங்கி வைத்துக் கொண்டு சென்றேன்... கல்லூரி வாசலில் நின்ற பாலா
என்னிடம் ஒரு பாலித்தீன் பையை நீட்ட, என்னது என்றேன்... மல்லிகைப்பூ என்றான்...
எதுக்கு என்றதும் உனக்குத்தான் என்றான்.
நான் நிறைய வைத்திருக்கிறேன்
என்றதும் இதையும் வச்சிக்க பூத்தானே... இன்னும் அழகா இருப்பே என்றான். அவனின் மனசு
வருந்தக் கூடாது என்பதற்காக வாங்கி அவன்
முன்னே தலையில் வைத்துக் கொண்டேன்.
பாலா
பிச்சைக்காரன் முணங்கிக் கொண்டே
சென்றதும் நான் கையிலிருந்த பாக்யாவைப் புரட்டி பாக்யராஜின் கேள்வி பதில்களை
வாசிக்க ஆரம்பிக்க, ஏனோ
மனசு அதில் ஒட்டவில்லை... கண் அவளை மீண்டும் மீண்டும் பார்க்க முயற்சித்தது. என்
மனதின் ஓரத்தில் இருந்த அவள் இப்போது மனம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தாள்.
இன்று அவள் வேறொருவரின் மனைவி
என்றாலும் அன்று அவள் என் காதலி,
அவளைப் பார்க்கும் வாய்ப்பு இனி ஒரு தடவை கிடைக்குமோ என்னவோ...? யார்
அறிவார்...? பதினெட்டு
வருடத்திற்குப் பின்னர் சந்திக்கிறேன்... ஏறத்தாழ எங்களின் நாப்பதுகளில்...
பக்குவப்பட்ட வயதில் பார்த்தும் பார்க்காமலும் செல்வது அழகல்லவே... இன்றைய காதல்
தோல்விகள் கொலையில் முடிகின்றன... அன்றைய காதல்கள் அப்படியில்லையே... தோற்றாலும்
பல இதயங்களில் வாழ்ந்து கொண்டுதானே இருக்கின்றது.
என் உயிர் நண்பன் ராகவனின் காதல்
மிகப்பெரிய பிரச்சினையை சந்தித்தபோது அவனை வேறொரு ஊரில் கொண்டு வைத்து பத்திரமாக
பார்த்துக் கொண்டதில் எனக்கும் பங்கு இருந்தது... அந்த ஒரு வாரம் என்னால் மறக்க
முடியாத நாட்கள். இன்று ராகவன் தன் முன்னால் காதலியின் குடும்பத்தில் ஒருவனாய்...
அவர்களுக்கு எல்லா உதவிகளும் செய்பவனாய் இருக்கிறான்... இதுதான் காதல்... அவர்கள்
அரிவாள் எடுக்கும் போது அவனும் அரிவாள் எடுக்க நினைக்கவில்லை... காலங்கள் கடக்க
அன்பு என்னும் ஆயுதத்தை மட்டுமே பிரயோகித்தான் அதனால்தான் அவனின் காதல் இன்று
நட்பாய்... உறவாய் தொடர்கிறது.
இப்படித்தான் சுபாவைக் காதலித்த
முருகன் அவளை ஒருமுறை பேக்கரியில் பார்த்திருக்கிறான்... அவள் குழந்தைகளோடு
நின்றிருக்கிறாள்... இவன் தன் மகனோடு போயிருக்கிறான்... பார்த்தும் பார்க்காதது
போல் வந்துவிட்டானாம். என்னிடம் சொல்லிப் புலம்பினான்... ஏன்டா பேசலைன்னு
கேட்டதுக்கு என்னத்தைப் பேச சொல்றே... நான் நல்லாயிருக்கியான்னு கேட்டு அவ
நல்லாயில்லைன்னு சொல்லிட்டான்னா மனசு ஒடைச்சிடுமேடா... அதான் பேசலைன்னு சொன்னான்.
இப்படியும் சிலர்... ஒருவேளை அவள் பார்த்திருந்தால் அவனுடன் பேசியிருக்கக் கூடும்.
மனசு பழங்கதைகளை நினைத்த போது
அருகருகே பார்த்தும் பார்க்காமல் செல்வது அழகல்ல என்பதால் கனியை நோக்கி
நகர்ந்தேன்.
கனி
உறவுகளிடம் பேசினாலும் மனம்
மட்டும் எனக்கு முன்னே கொஞ்ச தூரத்தில் நின்ற பாலா மீதே இருந்தது.
பார்த்திருந்தால் கண்டிப்பாக பேசியிருப்பானே... பார்க்கவில்லை போலும் என்று
நினைத்தேன். எங்கள் காதலின் போது வந்த ஊடல்களின் முடிவில் எல்லாமே பாலாதான்
முதலில் பேசியிருக்கிறான்.
எத்தனை வருசமாச்சு..? இப்போ
கணவன், குழந்தைகள்
என காதல் விரிந்து பரவிக்கிடக்க,
எப்போதும் மனதின் ஓரத்தில் அவன் இருந்து கொண்டுதான் இருக்கிறான். காதலித்து
பிரிந்தவர்கள் மறந்துவிட்டு வாழ்கிறேன் என்று சொன்னால் அது சுத்தப் பொய்...
மனதுக்குள் மறைத்து வைத்துத்தான் வாழ முடியும்.
நட்புக்கள் யாரேனும் அவர்கள்
குறித்துப் பேசினாலும்,
அவர்களுக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை கண் பார்த்தாலும் அந்தக் காதல் வெளியில்
வந்து விளையாடி கண்ணில் ஆட்டம் கட்டி கண்ணீரை வெளியேற்றும். இதை நான் பலமுறை
அனுபவித்திருக்கிறேன்.
அவனைப் பார்த்தும் பார்க்காமல்
செல்ல மனசு இடம் கொடுக்கவில்லை... என்னோட காலேஜ் மெட் நிற்கிறார் பார்த்துட்டு
வாறேன் என உறவுகளிடம் சொல்லிவிட்டு பாலாவை நோக்கி நகர்ந்தேன்.
பேருந்து
இரண்டு அரசு பேருந்து சென்ற
பின்னர் கிளம்பிய தனியார் பேருந்தில் ஏறினோம். மதிய நேரம் என்பதால் கூட்டம்
அதிகமில்லை. பெரும்பாலான சீட்டுக்கள் காலியாக இருந்தன. இதே பேருந்து காலையும்
மாலையும் கால் வைக்க இடமில்லாமல் ஆட்களை ஏற்றி வரும்.
மூன்று பேர் அமரும் இருக்கையில்
உறவினர் இருவரும் அமர்ந்து கொள்ள,
அவர்களுக்குப் பின்னிருக்கையில் கனி அமர்ந்து கொண்டு என்னை அமரச் சொன்னாள்.
பேருந்தில் ஏறும் முன்னரே
இருவரும் குடும்பம் குழந்தைகள் என எல்லாம் பேசிவிட்டோம். இனி பேச ஒன்றுமில்லை
என்றாலும் அவளருகே அமர்ந்தேன்.
காதலிக்கும் போது இதே பேருந்தில் பல முறை
பயணித்திருக்கிறோம்... அப்போதெல்லாம் இரண்டு பேர் அமரும் இருக்கையில்தான்
அமருவோம்... அப்போதெல்லாம் அவளின் சேலை முந்தானையோ அல்லது சுடிதாரின் துப்பட்டாவோ
என் கையில் விளையாடும்... என் தோள் சாய்ந்து தூங்கும் போது காற்றிலாடும் அவளின் கேசம் என் முகத்தில் விளையாண்டு கவிபாடும்.
சேலையின் முந்தானையை இழுத்து அவள் மடியில் கிடத்திக் கொண்டாள்.
இன்றோ இருவருக்கும் இடையில்
ஒருவர் அமரும்படியான இடைவெளி... அந்த இடைவெளியில் சுபத்ரா அமர்ந்திருப்பதாக நான்
நினைத்துக் கொண்டேன்... அவள் கூட மணிகண்டன் அமர்ந்திருப்பதாக நினைத்திருக்கக்
கூடும்.
அப்போது பேருந்தில் இன்னார்க்கு
இன்னாரென எழுதி வைத்தானே தேவன் அன்று என்று பாடிக் கொண்டிருந்தது.
-‘பரிவை’
சே.குமார்.
6 எண்ணங்கள்:
அருமையான படைப்பு
உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் தளத்தில் பகிர்ந்துமுள்ளேன்.
சுவையான களம். யதார்த்தமான நிகழ்வுகள். அருமை குமார்.
துளசி: குமார் கதை அருமை. பாணியும் நல்லாருக்கு ரசித்தேன்..
கீதா: நான் அன்றே ப்ரதிலிபியில் வாசித்து கருத்தும் அங்கு போட்டேன். வந்ததா என்று தெரியவில்லை. நன்றாக இருக்கிறது குமார். யதார்த்தம்...அருமையாக இருக்கிறது
நல்ல பாணியில் ஒரு கதை. பாராட்டுகள்.
வித்தியாசமான பாணியில் அருமையான, செறிவான கதை.
வித்தியாசமான கதை. நல்ல முயற்சி
கருத்துரையிடுக