மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 4 செப்டம்பர், 2017

மனசின் பக்கம் : கொஞ்சம் பேசுவோம்

னிதா... கனவுகளைச் சுமந்து கொண்டு பறந்து சென்றவள்... லட்சியச் சுமையோடு அரசின் அலட்சியப் போக்கால் மறைந்து போனவள்... அனிதாவின் மரணம் குறித்து விரிவாக எழுத எண்ணம்... எனவே டாக்டராகும் கனவு சிதைந்து... தீக்கங்குகள் தீண்ட சாம்பலாகிப் போனவளுக்கு 'RIP' போட மனம் வரவில்லை. இழப்பின் வலி சுமக்கும் அந்தத் தந்தைக்கு வலி நிவாராணியாய் வார்த்தைகளை அள்ளிவிடத் தெரியவில்லை. இப்படி செய்திருக்கலாமே... அப்படிச் செய்திருக்கலாமே என இறப்புக்குப் பின் அறிவுரை சொல்லத் தெரியவில்லை... இதை வைத்து அரசியலாக்கும் முகநூல் சண்டைக்குள் முகம் கொடுக்க விரும்பவில்லை... அவளுக்கு எதற்கு டாக்டர் படிப்பு என்னும் சில மனித மாடுகளின் வரிகளைச் சுமந்து, இழப்பின் வேதனையையும் சுமக்கு மனம் வலிக்கிறது.... கண்ணீர் நனைக்கிறது... ஏனம்மா இந்த முடிவு..?

னசு தளத்தில் எழுதுவது மட்டுமல்ல பொதுவாக எழுதுவது என்பதே குறைந்து விட்டது... எங்கும் எதிலும் ஒட்டாத மனநிலையில் பயணித்துக் கொண்டிருக்கிறது வாழ்க்கை. மூன்று நாள் விடுமுறை... போட்ட திட்டங்கள் எல்லாம் ஓடாத படம் போல மூலையில் கிடக்கிறது. நெருஞ்சியும் குறிஞ்சியும் எப்படியும் எழுதி முடித்து விட வேண்டும்... புதிதாய் ஆரம்பிக்கும் நாவலின் அடுத்தடுத்த பகுதிகளை எழுத ஆரம்பிக்க வேண்டும்... இரண்டு சிறுகதைகளாவது எழுத வேண்டும்... என்ற எண்ணம் எல்லாம் அழகாய் பூத்தது சென்ற வாரத்தில்... அதாவது விடுமுறைக்கு முதல் நாள்... விடுமுறை தினங்களில் எப்பவும் போல் மனம் போராட்டக்களத்துக்குள் இறங்கி உட்கார, எழுதும் எண்ணம் போய் வாழ்க்கைச் சிந்தனைகள் வாட்டி வதைத்துவிட, எப்பவும் போல் சமையல், சாப்பாடு, ஊருக்குப் பேசுதல் என பத்துக்குப் பத்து அறைக்குள் பாந்தமாய் நகர்ந்தது அந்த மூன்று நாட்கள்... என் கணிப்பொறியில் வாசித்தாலும் கருத்துப் போட முடியாத நிலை... எழுத நினைத்தும் எழுத முடியாத நிலை... இப்படியான சூழலில் வேதனைகளும் வலிகளும் மனசு முழுவதும் நிறைந்து நிற்க, மனசு வலைப்பூவுக்கு நீண்ட விடுமுறை கொடுத்துவிடலாம் எனத் தோன்றுகிறது... செயல்படுத்திவிடலாம என்ற சிந்தனை மெல்லப் பூக்கிறது.

னவுப்பிரியன் அண்ணன் அவர்களின் 'சுமையா' புத்தக வெளியீடு அரபுதேசத்தில் சனிக்கிழமை நடப்பதாக இருந்தது... கூட்டிக் கழித்துப் பார் கணக்கு சரியா வரும் என அண்ணாமலையில் அடிக்கடி ராதாரவி சொல்வார்... ஆனால் வாழ்க்கைக் கணக்கு கூட்டிக் கழித்துப் பார்த்தால் எப்பவும் சரியாக வருவதில்லை. சிறு விழாவுக்கான ஏற்பாடு லட்சங்களை விழுங்கும் என்ற நிலையில் லட்சங்கள் செலவில் லட்சியம் வென்றாலும் அதனால் இழப்புத்தான் அதிகம் இருக்கும் என்பதைக் கணக்கில் கொண்டு விழாவை ஏதாவது ஒரு மாலை வேளையில் ஏதாவது ஒரு பூங்காவில் அமர்ந்து இலங்கியங்கள் அற்ற இலக்கில்லாப் பேச்சுக்களோடு மகிழ்வுடன் நடத்தலாம் எனத் தள்ளிப் போடப்பட்டுவிட்டது. விரைவில் ஒரு சங்கமம் இருக்கு என்பதைச் சொல்வதில் மகிழ்ச்சி எனக்கு.

வெள்ளிகிழமைக் காலை அடுக்குப் பிரியாணி செய்யும் வேலையில் பரபரப்பாக நானும் அறைத் தோழரான அண்ணனும் அடுப்படியில் இருக்க, துபையில் இருந்து தேவா அண்ணா, தம்பி நான் அங்க வர்றேன்... அப்படியே உன்னையும் பார்த்துட்டு வரலாம்ன்னு நினைக்கிறேன்... பழைய அறையில்தானே இருக்கிறாய் எனப் போனில் கேட்க, புதிய அறையின் இருப்பிட முகவரி கூகிள் ஆண்டவரின்... கவனிக்க பிக்பாஸ் ஆண்டவரில்லை... உதவியுடன் வாட்ஸப்பில் அனுப்பிக் கொடுக்க மதியம் இரண்டு மணிக்கு மேல் வந்தார். அவருடன் பிரபலக் கவிஞர் ஒருவரும் வந்தார். அண்ணனின் காரில் அமர்ந்து பேசினோம்... பேசினோம்... பேசிக் கொண்டேயிருந்தோம். இலக்கியவாதிகள் போல் இலக்கியமெல்லாம் பேசத் தெரியாது... ரெண்டு ஊருக்காரப் பயலுக சேர்ந்தா என்ன பேசுவானுங்க... அப்படி இதுதானென்று இல்லாமல் எல்லாமுமாய் அடித்து ஆடி, தேவா அண்ணன் ரசனையான பேச்சுக்குச் சொந்தக்காரர், வந்த கவிஞரோ நிறைய விஷயங்களை உள்வாங்கி வைத்திருப்பார் போலும்... பேச்சில் இலக்கிய ரசனை... ஆனந்தவிகடனில் தொடர்ந்து கவிதை எழுதுகிறாராம். அவருடன் எனக்கு முதல் சந்திப்பு... இவர் வலையுலகம் பக்கம் வராதவர் என்பதை அறிந்தேன். இரண்டு மணிக்கு ஆரம்பித்த பேச்சு நான்கரை மணி வரைச் சென்று, பெங்காளி கடை டீயுடன் முடிவுக்கு வர, நிறையப் பேசி அன்றைய தினத்தை மகிழ்வான தினமாக மாற்றிச் சென்றார் எழுத்தாளர்... அண்ணன் தேவா சுப்பையா.

பிரதிலிபி போட்டிகள் எல்லாம் வாசகர் தேர்வாய் அமைவதால் போட்டிக்கு அனுப்பப்படும் சிறந்த படைப்புக்கள் (சத்தியமாக என் படைப்பல்ல) அங்கீகாரம் பெறுவதில்லை என்பதை அவர்களுக்குச் சொன்னதுடன் போட்டிகளிலும் கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்தேன். இந்த முறை வாசகர் தேர்வு மட்டுமின்றி, பிரதிலிபி ஆசிரியர் குழுவும் தேர்ந்தெடுக்கும் என 'கதை கதையாம்' என்ற சிறுகதைப் போட்டி அறிவித்திருந்தார்கள். அதாவது இரண்டு கதைகளை வாசகர் தேர்வின் அடிப்படையிலும் இரண்டு கதைகள் ஆசிரியர் தேர்வின் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்க போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் எழுதும் எண்ணம் இல்லை... பின்னர் எழுதி இருப்பதை அனுப்பலாமே என முடிவெடுத்து இறுதி நாளில் அனுப்பினேன். இப்போது ஜாம்பவான்களின் கதைகளுடன் என் கதையும் களத்தில் இருக்கு. பிரதிலிபி தளத்தில் என் கதைக்கான இணைப்புச் சுட்டி கீழே கொடுத்திருக்கிறேன்... சொடுக்கி வாசியுங்கள்... தங்களுக்குப் கதை பிடித்திருந்தால் தங்கள் மதிப்பெண்ணை அளியுங்கள்... அத்துடன் உங்களின் மனசுக்குள் தோன்றும் கருத்தையும் சிலவரி சொல்லுங்கள்... என் கதைகளை பட்டை தீட்டும் காரணியாக உங்கள் கருத்து அமையும் என்று நினைக்கிறேன். வெற்றி மட்டும் குறிக்கோளல்ல... ஏனென்றால் இதைவிட நல்ல கதையாக நான் நினைத்த 'நேசம் சுமந்த வானம்பாடி' கூட பிரதிலிபி போட்டியில் ஆயிரம் லைக்குகளைக்கூட வாங்கவில்லை என்பதை நான் அறிவேன்... 

புதாபியில் இருக்கும் அண்ணன் ஒருவர், தனது நட்பு வட்டத்துடன் சேர்ந்து குறும்படங்கள் இயக்கிக் கொண்டிருக்கிறார். சிவப்பு ரோஜாக்கள் 2.0 'DILEEP IS BACK' என்ற முதல் படத்தை இணையத்தில் இருவாரம் முன்னர் பகிர்ந்திருந்தார். 20 நிமிடம் ஓடக்கூடிய அந்தக் குறும்படத்தின் கதையும் இசையும் செம... நடித்தவர்கள் புதியவர்கள் என்பதால் சின்னச் சின்ன காட்சி சொதப்பல்கள்... அதை படத்தொகுப்பிலும் சரி பண்ணாமல் விட்டுவிட, விறுவிறுப்பான படம்... சிறு  தொய்வலுடன் பயணிப்பதாய் நட்புக்களின் விமர்சனம்... அதை ஏற்று இன்னும் பட்டி பார்த்து வெளியிடலாம் என இணையத்தில் இருந்து நீக்கியிருக்கிறார்கள்... இன்னும் சிறப்பான படத்தொகுப்போடு மீண்டும் வரும். அப்போது முடிந்தால் விரிவாக எழுதுகிறேன்... ஒரு விமர்சனப் பார்வையாக... (அதற்குள் மனசு தளத்துக்கு மூடுவிழா செய்யாமல் இருந்தால்) அடுத்தடுத்து படங்கள் என அடித்து ஆடிக் கொண்டிருப்பவரின் ஒரு படத்துக்கான ஒன்லைன் சொல்லி, தலைப்புக் கேட்டார்... நானும் ஏதேதோ யோசித்து முகநூல் அரட்டையில் சொல்ல, அவருக்கு எதிலும் விருப்பம் இல்லை... இன்னும் நல்லதாப் பாருங்க குமார்ன்னு சொல்லிட்டார்... வீட்டுக்குப் பேசிக் கொண்டிருக்கும் போது நாலெழுத்தில் ஒரு பெயரைத் தட்டிவிட்டேன். அவருக்கும் அது ரொம்பப் பிடித்துப் போக, அந்தக் குறும்படத்துக்கான சிறிய போஸ்டர் தயார் செய்துவிட்டார்... எனக்குத் தோன்றிய தலைப்பை ஒரு குறும்படத்தின் போஸ்டராக பார்க்கும் போது மகிழ்ச்சி... என்னோட கதைகளுக்கு சரியான தலைப்பை வைப்பதில் எனக்கு எப்பவுமே குளறுபடி இருக்கும்... அப்பல்லாம் என் நண்பன் தமிழ்க்காதலனை நாடுவேன்... இந்த முறை மற்றொருவரின் படத்துக்கு நான் ஒரு பெயர் சொல்லி... அதுவே படத்தின் பெயராகி... சரி... சரி... மகிழ்ச்சிதானே... சொல்ல மறந்துட்டேன்... அவரின் நடிப்பு... குறிப்பாக இறுதிக்காட்சியில் வரும் பெண் வேடம் மிக அருமை... விரைவில் வெட்டி,ஒட்டி இன்னும் சிறப்பாக இணையத்தில் பகிர்வார். (தலைப்புக் குறித்து இங்கு அவர் பகிரச் சொன்னதால்தான் பகிர்ந்து கொண்டுள்ளேன்... இல்லையேல் அது குறித்தான தகவலுக்கு இங்கு வாய்ப்பில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன்)


-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

உங்கள் துணைவியாரின் உடல்நலம் தேவலாமா? உங்கள் மன இறுக்கம் தேவா அண்ணன் போன்ற நண்பர்களுடன் உரையாடியதில் குறைந்திருக்கும். நான் பிரதிலிபி பக்கம் செல்வதில்லை. மனசு மூடுவிழா எல்லாம் நடத்த வேண்டாம். அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது எழுதி வாருங்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

உடல் நலம் இப்போ பரவாயில்லை... ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு இருக்காங்க... லோ பிரஷர் சரியாக வாய்ப்பில்லை என்றாலும் நாம் அதை சரியாக வைத்துக் கொள்வதில் பிரச்சினை இல்லாமல் இருக்கலாம் என்பது டாக்டர் அட்வைஸ்... மனசு பல பிரச்சினைகளில் சிக்கிக் கிடக்கு அண்ணா.. ஆம் தேவா அண்ணன் நிறைய... நிறைவாய்ப் பேசினார்... எழுதுகிறேன் அண்ணா...

G.M Balasubramaniam சொன்னது…

சில விஷயங்களை ஃபிலாசஃபிகலாக அணுக வேண்டும்நாம் அதுபற்றி சிந்திப்பதால் மட்டும் எதுவும் குறைவது இல்லை. ஆலோசனை எளிதுசெயல் படல் கடினம்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் தயவாய் மனசு திறந்து பேசிக் கொண்டே இருக்கட்டும்...இடையில் பேசவில்லை என்றாலும்....பேசாமல் இருக்க வேண்டாம்!! மனைவியின் உடல் நலம் எப்படி இருக்கிறது. அங்கு இப்படி நண்பர்களைச்ச சந்திப்பதால் மனம் மகிழ்ந்து நல்ல பாசிட்டிவ் ஆக இருக்கும்...நல்லதும் கூட....

எனவே தொடர்ந்து எழுதுங்கள்....உங்கள் கதையை வாசிக்கிறோம். பொதுவாக பிரதிலிபி பார்ப்பதில்லை. நீங்கள் சொல்லும் போது போவதோடு சரி...

தொடர்ந்து எழுதுங்கள்.குமார்

துரை செல்வராஜூ சொன்னது…

தங்கள் அனைவரது நலத்திற்கும் இறைவன் துணையருள்வானாக!..

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

உங்களின் மனம் எப்போதும்போல் திறந்த நிலையில் இருக்கட்டும். மனதின் சுமைகளைப் பகிரும்போது அதன் வீச்சு குறையும். அனைத்தும் நலமாக அமைய வாழ்த்துகள்.

Unknown சொன்னது…

தம்பி! தங்கள் வலை பலமுறை முயன்றாலும் திறப்பதில்லை கவனிக்க!
த ம 2