மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

மனசு பேசுகிறது : 'உடையார்' வாசிப்பிலிருந்து...

Image result for உடையார்

பேராசிரியர் கல்கியின் வரலாற்றுப் புதினமான 'பொன்னியின் செல்வன்' கொடுத்த ஒரு விறுவிறுப்பை... ஈர்ப்பை.... வாசிக்கும் ஆவலை... ஏனோ திரு. பாலகுமாரன் அவர்களின் 'உடையார்' கொடுக்கவில்லை என்றாலும் வாசித்தே தீருவேன் என்ற ஆவலில் வாசித்து முடித்தேன். 

பொன்னியின் செல்வனைப் போல் கல்கியின் சோலைமலை இளவரசியும் வாசிப்பை நிறுத்த முடியாத ஒரு ஈர்ப்பைக் கொடுத்து ஒரே மூச்சில் வாசித்து முடிக்க வைத்தது... ஒருவேளை இதற்குக் காரணம் அந்த எழுத்தின் ஈர்ப்பாய் இருக்கலாம்... சொல்லிச் சென்ற விதம்... கற்பனையாய் பயணிக்கும் வார்த்தைகளின் ஜாலம்... இப்படி ஏதோ ஒன்று நம்மைக் கட்டிப் போட்டிருக்கலாம்... இப்போது கூட சில பதிவர்களின் எழுத்துக்கள் இப்படி நம்மைக் கட்டிப் போடுவதுண்டு... வாசிக்க ஆரம்பித்தால் அதற்குள் நம்மை ஈர்த்துக் கொள்ளும். 

உடையார் அப்படி ஈர்க்காததற்கு காரணம் என்ன..? 

இந்தக் கேள்வியை எனக்குள்ளே கேட்ட போது... ஒரு அறிமுகத்துக்கு முன்னும் பின்னுமாய் நகரும் கிளைக்கதைகளே முக்கியக் காரணம் என்பதுதான் எனக்குக் கிடைத்த விடை... கதையின் போக்கில் சம்பந்தமில்லாமல் கிளைக்கதைகள் பயணிப்பதும்... வளவளவென்ற வர்ணனைகளும்தான் வாசிப்பில் ஒரு அயற்சியை ஏற்படுத்தின... 

உடையாருக்குப் பின் 'சங்கதாரா' வாசித்தேன்... கீழே வைக்கவிடாமல் வாசிக்க வைக்கும் எழுத்து.... பரபரவென்று நகரும் நாவல்... ஆனால் தமிழ் சினிமாவை மிஞ்சும் டுவிஸ்டுகள்... நல்லவர்கள் எல்லாம் கெட்டவர்களாய்... ஒரு நாகரீகத்தை எவ்வளவு கொச்சைப்படுத்த முடியுமோ அப்படி... இனி சோழனை வாசிப்பாய் என்ற கேள்வி முன்னே நின்று சிரிக்க, நாவலை முடித்த போது ஆசிரியர் சினிமாக் கதை ஆசிரியராய் மிளிர்கிறாரே என்று யோசித்தால் ஆசிரியர் குறிப்பில் திரைப்பட இயக்குநர் சித்ராலயா கோபுவின் மகன் என்பதை அறிந்தேன். பின்னே அவரின் எண்ணங்கள் சினிமாக்கதை புனையும் நோக்கில்தானே அமையும்.

வரலாறுகளை புதினமாக்கும் போது அந்தக் கால கட்டத்துக்கு பயணிக்க மட்டும் முடியும் என்பதே உண்மை... என்ன பேசியிருப்பார்கள்... எப்படி பேசியிருப்பார்கள் என்றெல்லாம் எப்படி கண்டுபிடிக்க முடியும்... வரலாறுகளைப் பற்றிய செய்திகள், கல்வெட்டுக்கள், ஓலைச் சுவடிகள், செப்புத் தகடுகள், வரலாறுகளைச் சொல்லும் புத்தகங்கள் என எல்லாவற்றையும் உள்வாங்கி எழுத ஆரம்பிக்கும் போது அந்தக் காலகட்டத்துக்கு பயணிக்கும் எழுத்தாளர் இதுதான் கதை... இதுதான் களம்... என்பதை வைத்து தங்கள் மனதுக்குள் தோன்றுவதை களத்தை மாற்றாமல் கதையை மட்டும் பக்கம் பக்கமாக இலக்கியச் செறிவோடு இப்படிப் பேசியிருப்பான்... அப்படிச் சண்டை  போட்டிருப்பான்... என தங்கள் சிந்தையில் விளைந்ததை அறுவடை செய்திருப்பார்கள். அப்படி ஒரு இராஜராஜனைத்தான் பாலகுமாரன் படைத்திருந்தார். 

உடையாரில் இராஜராஜன் என்பவன் மக்களுக்கு அருகில் இருந்தவன்... மக்களோடு மக்களாக வாழ்ந்தவன்... அவர்களோடு பேசி... சிரித்தவன்... உண்டு... உறங்கியவன்... ஏன் அவர்களுடன் இணைந்து தஞ்சைக் கோவில் வேலையும் செய்தவன் என்பதை ஆறு பாகத்தில் சொல்லியிருக்கிறார். இப்படி ஒரு அரசன் அமைய குடிமக்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்தக் கொடுப்பினை சோழ தேசத்து மக்களுக்கு இருந்தது என்பதாய் சொல்லியிருப்பார்.

இன்றைக்கு நம்ம தெரு கவுன்சிலரைப் பார்க்கவே ஆயிரம் அல்லக்கைகளைத் தாண்ட வேண்டியிருக்கு... அப்படியும் அவரை பார்ப்பது என்பது அரிது. மக்கள் பிரதிநிதியாம் தமிழக முதல்வர் எப்படியிருக்கிறார்..? என்ன ஆனார்...? மீண்டு(ம்) வருவாரா..? என்று தமிழக மக்கள் ஒன்றும் தெரியாமல் தவிக்கும் நிலையில் நாடு இருக்கும் போது ஆயிரம் ஆண்டுக்கு முன்னர் சக்கரவர்த்தியாய் பெரிய தேசத்தைக் கட்டி ஆண்ட இராஜராஜன் மக்களோடு மக்களாய் இருந்தார் என்பது எவ்வளவு பெரிய சந்தோஷம். 

அன்றே சாதிகளுக்குள் பிரச்சினை இருந்தது என்பதை எனக்கு அது வேண்டும்... எனக்கு இது வேண்டும் என்று ஒவ்வொரு சாதிக்காரரும் மன்னரிடம் கேட்பதில் கொண்டு வந்து விடுகிறார்... சாதீயம் தலை விரித்தாடும்படிதான் எழுதியிருக்கிறார்... மக்களிடம் ஒற்றுமை இல்லை என்பதை சொல்லி விடுகிறார். மன்னரை மக்கள் மதிக்கவில்லை என்பதாகவும் சொல்லிச் செல்கிறார். எந்த வித இயந்திரங்களும் இல்லாமல் ஒரு பெரிய கோவிலைக் கட்டிய மக்களிடம் அன்றே சாதீய வேறுபாடுகள் இருந்திருக்குமா..? என்ற யோசனை எழாமல் இல்லை... இருப்பினும் ஆசிரியர் சாதீய பிரச்சினைகளை வைத்து பல பக்கங்களை நிறைத்திருப்பதால் சா'தீ' அன்றே கிளை பரப்பியிருக்கிறது என்று நினைக்க வைத்துவிடுகிறது.

அரசனுக்கு அடி பணியும் மக்கள் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம்... ஆனால் இங்கே அரசர் அந்தணர்களுக்கு அடி பணிகிறார்... அவர்களே பெரியவர்கள் என்று இராஜராஜன் வாயால் சொல்ல வைக்கிறார்... சில இடங்களில் அரசரை அவர்களே வழி நடத்துகிறார்கள் என்பதாய் காட்டுகிறார். போருக்குச் சென்ற இடத்தில் ஒருவன் சாவான் என்று முன்கூட்டியே சொல்லத் தெரிந்த இராஜராஜனுக்கு... இது இப்படித்தான் நடக்கும் என்று சொல்லத் தெரிந்த இராஜராஜனுக்கு... தொண்டை நாட்டு அந்தணர்கள் வேலை பார்க்கிறேன் பேர்வழி என்று கொள்ளை அடிப்பது தெரியவில்லை... தங்க மண்வெட்டி முதல் கொண்டு நிறைய சுருட்டுவதைப் பற்றி நாவலின் இறுதி வரை யாருமே கண்டு கொள்ளவில்லை... 

அப்பனும் மகனும் எப்பவும் முட்டி மோதுபவர்கள்தான் என்று காட்டுகிறார்... அப்பன் கோவில் கட்டுவது மகனுக்குப் பிடிக்கவில்லை... மகன் கோவில் கட்டுவதில் அப்பனுக்கு விருப்பமில்லை... எப்போது பேசினாலும் இருவருக்கும் ஒத்துவராமல் சண்டையில்தான் முடியும் என்பதாய் எழுதியிருக்கிறார்.... ஒரு தேசத்தின் சக்கரவர்த்திக்கும் அவரின் ஒரே மகனான இளவரசனுக்கும் முட்டல் மோதல் என்பதெல்லாம் யோசிக்க முடியவில்லை.... ஒருவேளை அப்பனுக்கும் மகனுக்கும் சின்ன சின்ன வாக்குவாதங்கள்... பேதங்கள் இருந்திருப்பதாய் ஆசிரியர் எங்கேனும் வாசித்திருக்கலாம்.

தான் அருண்மொழிப்பட்டனை விரும்புவதாய் இராஜராஜி, பஞ்சவன்மாதேவியிடம் சொல்லும் போது அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதாய் பஞ்சவன்மாதேவி சொல்வார். அருண்மொழி கருவூர்தேவரிடம் பேசும்போது மனைவி குழந்தைப் பேறுக்காக மாமனார் வீடு சென்றிருக்கிறாள் என்றும் சொல்ல, மனைவி இருக்க உன்னை விரும்பும் பெண்ணையும் கட்டிக்கொள்... உன் எதிர்கால வாழ்க்கைக்கு உதவியாக இருப்பாள் என்று கருவூர்த்தேவர் இரண்டாம் திருமணத்துக்கு வித்திடுவார். ஆனால் அருண்மொழியும் இராஜராஜியும் ரொம்ப நாளாய் காதலிப்பதாகவும், அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதை ஏற்காத பிரம்மராயர் குந்தவையிடம் சொல்ல, அவள் இராஜராஜியை அழைத்துப் பேசுமிடத்தில் அருண்மொழிக்கு அவனது அத்தை பெண்ணை திருமணம் செய்ய நிச்சயித்து வைத்திருக்கிறார்கள் என்பாள்... இதில் எது முன்னே...? எது பின்னே...? என்ன ஒரு குழப்பம். நான் புரிந்து கொண்ட விதம் தவறா...? ஒரு முறைக்கு மேல் படிக்கு எண்ணம் இல்லை என்பதால் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

முத்தான பொன் நங்கை..  கரூவூர்த்தேவரின் வீட்டு வேலைக்காரப் பெண்.... இரண்டு மூன்று இடங்களில் இவர் வருவார். பின்னர் கதை நகர்தலில் கருவூர்த்தேவருக்கே அப்ப அப்ப வாய்ப்பு என்ற போது வேலைக்காரி எங்கே போனால் நமக்கென்ன... என நாமும் மறந்து பயணிப்போம்... குந்தவை வீட்டில் இருக்கும் அதிகாரிச்சி ஒருத்திக்கு இதே பெயர் வரும்... அவள் பாண்டிய வீரனை திருமணம் செய்து கொள்ள விரும்புவாள்... ஆனால் அதெல்லாம் கதையில் தொடராது.... அது இருக்கட்டும் எப்படி ஒரு நாவலில் இருவருக்கு ஒரு பெயர் என்று சிந்தித்துக் கொண்டிருந்தால் குழப்பமே மிஞ்சும் என்பதால் ஒரு ஊருக்குள் கருப்பையாக்கள் பலர் இருப்பதில்லையா என்று சமாதானமாக்கிக் கொண்டு நகர்ந்து விட்டேன்.

பாண்டிய வீரன் குணசீலன் கோவில் வேலை மட்டுமின்றி, கல் தூக்கி வர, தேர் செய்ய என எல்லாவற்றிலும் பெரும் உதவியாக இருக்கிறான்... அப்புறம் என்ன ஆனான்...? இராஜராஜனைக் கொல்வோம் என சூளுரைக்கும் இரவிதாசனின் தம்பி சாம்பவானும் அவர்களின் மகன்களும் என்ன ஆனார்கள்...? (ஒருவேளை இறுதியில் கைது செய்யும் சேர நாட்டு நம்பூதிகளுடன் இவர்களும் இருந்தார்களோ என்னவோ...?). கருமார்கள் திரும்பி வந்தார்களா...? ம்ஹூம் எதுவும் சொல்லலையே... 

ஒற்றைக் கை இல்லாதவன் மரம் ஏறுவான்... தன் அடையாளத்தை உடனே மாற்றிக் கொள்வான்... கோவில் கோபுரத்தில் ஏறுவான்... ஒரு கையால் மண்ணை நோண்டியே பிணங்களைப் புதைப்பான்... அது எப்படி... அதெல்லாம் அப்படித்தான் என நகர்ந்தாலும் இப்படியும் முடியுமான்னு ரொம்ப யோசிக்கலை... காரணம் தமிழ் சினிமா நாயகன் 100 அடி தூரத்தில் இருந்து பறந்து போய் இரயிலைப் பிடிக்கலையா...?

அரசன் கதையைவிட அந்தணர்கள் கதையே உடையாரை ஆக்கிரமித்திருந்தது.... யாதவன் மாடு மேய்க்க... வேளாளன் விவசாயம் செய்ய... வணிகர்கள் வியாபாரம் செய்ய... கருமார்கள் ஆயுதம் தயாரிக்க... மறவர்கள் போர் செய்ய... என இருக்கும் போது எந்த வேலையும் பார்க்க மாட்டோம்... வேதம் ஓதுவதே எங்கள் வேலை என்று அரசனை எதிர்க்கும் அந்தணர்கள் மட்டுமே படித்தவர்கள்... பண்பானவர்கள்... அரசரை கேள்வி கேட்கும் வல்லமை இவர்களுக்கு மட்டுமே உண்டு என்பதாய் கதை நகருமே ஒழிய இராஜராஜனை மையப்படுத்தி நகராது... அரசனை கேலி கிண்டல் எல்லாம் செய்வார்கள்.... இராஜராஜன் பெரும்பாலும் புலம்பிக் கொண்டு திரிபவனாக கதையில் காட்டப்பட்டிருக்கும்.

தான் பார்த்துப் பார்த்துக் கட்டிய தஞ்சைக் கோவிலை விட்டுப் போனதும் இராஜராஜன் தஞ்சைக்கே வரவில்லை என்பதாய் சொல்வது ஏன்... இதற்கு எதுவும் சான்றுகள் இருக்கா...? ஒவ்வொரு வேலையையும் ரசித்து இறைப்பணியே என் பணி என விரும்பிக் கட்டியவன் ஒரு முறை கூடவா வந்திருக்கமாட்டான்... ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

எது எப்படி என்றாலும் பல இடங்களில் அவர் தொட்டுச் செல்லும் விஷயங்கள் நம்மை அப்படியே அசரடிக்கும். இரவில் குதிரையில் தனியே பயணித்து பஞ்சவன்மாதேவி உயிர், உடம்பு குறித்து அறியும் நிலை, இராஜராஜன் தனது மரணத்துக்கு முன்னால் மனசுக்குள் பேசும் பேச்சு... கோவில் கருவறைக்குள் பிரமாண்ட லிங்கத்தை நிறுவும் பணி... மேலைச் சாளுக்கியத்துடனான போர்... என நம்மை கட்டிப் போடும் பக்கங்களும் உண்டு... குறிப்பாக இறப்பு குறித்தான ஆசிரியரின் பார்வை நம்மை கண் கலங்கி பயணிக்க வைக்கும்.

உடையார் ஒரு வரலாற்றை அதன் வடிவத்தில் கொடுக்கவில்லை என்றாலும் ரொம்ப பொறுமை இருந்து  வாசித்தால் சில விஷயங்களை அறிந்து கொள்ளலாம் என்பது உண்மை. 

பெண்களை கேவலமாக, போகப் பொருளாக உருவகித்திருந்தாலும் குந்தவை, பஞ்சவன்மாதேவி, சீரடியாள், ராஜராஜி எனச் சிலரை ஆட்கொண்டவர்களாகவும் ஆட்சி செய்தவர்களாகவும் காட்டியிருப்பார். 

மொத்தத்தில் உடையாரில் பலவற்றை தனக்காக உடைத்து தான் நினைத்த இராஜராஜனை நம்முன்னே வைத்திருக்கிறார் பாலகுமாரன்.என் எழுத்து எப்படியிருந்தாலும் படிப்பார்கள் என்ற எண்ணம் எந்த எழுத்தாளனுக்கும் இருக்கக் கூடாது. தானே பெரியவன் என்னை மிஞ்சி எவனும் இல்லை என்ற நினைப்பு எவனுக்கும் வரக்கூடாது.  அந்த எண்ணம் வந்தால் என்ன எழுதி என்ன புண்ணியம் சொல்லுங்கள்... உடையாரில் இருக்கும் எழுத்துக்கள் பல இடங்களில் நானே பெரியவன் என்று சொல்லாமல் சொல்லி சிரிக்கின்றன... வாசித்த நாம்தான் வரலாறுகள் எப்படி புனைவுகளாய் சிதைந்து போய் நிற்கின்றன என உடைந்து போகிறோம்.

உடையார் வாசியுங்கள்... கூட்டுக்கறியைப் போல் ஒரு வரலாற்றையும் அதன் நாகரீகத்தை  தனது எண்ண ஓட்டத்தில் கிளைகளைப் பரப்பி பக்கம் பக்கமாய்ச் சொல்ல முடியும் என்பதையும் அறிவீர்கள்.
-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உடையார் இது வரை வாசிக்கவில்லை. வாசிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. நூலகத்தில் இருக்கிறதா என பார்க்க வேண்டும்.

துரை செல்வராஜூ சொன்னது…

இராஜராஜன் மக்களுக்கு அருகில் இருந்தவன்...
மக்களோடு மக்களாக வாழ்ந்தவன்...

நெஞ்சமெல்லாம் இதுவே நிதர்சனம்..

>>> உடையாரில் பலவற்றை தனக்காக உடைத்து தான் நினைத்த இராஜராஜனை நம்முன்னே வைத்திருக்கிறார் பாலகுமாரன்.. <<<

இப்படியா எழுதப்பட்டிருக்கின்றது!?..

இதுவரைக்கும் அந்தப் புதினத்தை - வாசித்ததில்லை..

இனி வாசிக்க விழையுங்கால் இந்தக் குறிப்புகள் -
நெஞ்சில் முள்ளாக நெருடுமே?.. என்ன செய்ய!?..

S.P.SENTHIL KUMAR சொன்னது…

நிறை குறைகளை ஒப்பிட்டு அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்!
த ம 2

ஸ்ரீராம். சொன்னது…

உடையார் ஒன்றரை பாகத்தை என்னால் தாண்ட முடியவில்லை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
உடையார் அப்படித்தான் பயணிக்கிறது....
இராஜராஜனை உடையார்... உடையார்... என்று சொல்வதில் ஏதோ பின்னணி இருக்கிறது... அதை விடுத்தால்... அந்தணர்களுக்கு அடி பணிபவர் போல்... அவர்கள் அவரை கேலி செய்வது போல்... ஏமாற்றுவது போல்... கதை நகர்கிறது.... வாசித்தால் தெரியும் அய்யா... பல விஷயங்கள் பொதுவில் சொல்ல விருப்பமில்லை.... என்பதால் சொல்லவில்லை...

தங்கள் கருத்துக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் செந்தில் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஸ்ரீராம் அண்ணா...
உண்மைதான்... வாசிப்பதில் அயற்சியை ஏற்படுத்தியது...
என்னதான் சொல்கிறார் என்பதற்காகவே வாசித்தேன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வெங்கட் அண்ணா...
மின்னூலாக வாசித்து விட வேண்டியதுதானே....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

KILLERGEE Devakottai சொன்னது…

பாலகுமாரனின் கதைகள் படிப்பது கடினம் காரணம் அவரது விடயங்கள் கடினமானவை
விமர்சனம் நன்று நண்பரே

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

உடையார் ஏனோ கொஞ்சம் பக்கத்தைக் கூடப் புரட்ட முடியவில்லை. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எடுத்து மேசை மீது வைத்து......அட போங்கப்பா... கண்களை அசத்திவிட்டது!!!!!!ஏனோ கல்கியின் வந்தியத்தேவன் நினைவுக்கு வந்து படுத்தினான்....மூடி வைத்துவிட்டேன்.

பொதுவாக பாலகுமாரனின் கதைகள் ஏனோ என்னை ஈர்க்கவில்லை.

உங்கள் விமர்சனம் படு அருமை!!!! பொறுமையும் நிறைய உங்களுக்கு!!!!!

கீதா