மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

மனசு பேசுகிறது : அறிவுரை ஆபத்தா..?

Image result for advice

ஒரு சிலர் எப்பவும் அட்வைஸ் அதாங்க அறிவுரைன்னு சொல்வாங்களே... அந்த அறிவுரை மழையில நம்மள திணறத் திணற நனைய வைப்பாங்க... எதெற்கெடுத்தாலும் அறிவுரை சொல்றவங்க முதல்ல தாங்கள் அதையெல்லாம் பின்பற்றுவார்களா என்றால் சத்தியமாக இருக்காது. அறிவுரைகள் மற்றவர்களுக்கானவை என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்து வைத்திருப்பார்கள். என்னைப் பொறுத்தவரை ஒரு சிலரின் அறிவுரைகளை மட்டுமே... அது அறிவுரைகளாக இல்லாமல் நம் பயணத்தை மேம்படுத்தும் ஒரு வார்த்தையாகத்தான் இருக்கும் என்பதை நன்கு அறிந்து வைத்திருப்பதால்... ஏற்றுக் கொள்வேன். மற்றபடி மற்றவர்களின் அறிவுரைகளின்படி நடப்பது என்பது எனக்குப் பிடிக்காத விஷயம். எந்த முடிவாக இருந்தாலும் நாம் முடியுமா... முடியாதா என்பதை யோசித்துச் செய்தாலே போதும்... மனசுக்கு சரியெனப்பட்டால் அதில் சட்டென இறங்கி விடவேண்டும்... வெற்றி நமக்கு நிச்சயம் கிடைக்கும்.

அன்று அறிவுரைகளைக் கேட்டு அதன்படி நடந்தவர்கள் அதிகம்... ஆனால் இன்று அப்படியல்ல.. யாருக்கும் அறிவுரை சொல்ல முடிவதில்லை என்பதே உண்மை... யாராவது 'நான் என்ன சொல்ல வர்றேன்னா...' என்று ஆரம்பித்தால் 'நீ எதுவும் சொல்ல வேண்டாம்... எனக்கு எல்லாம் தெரியும்'ன்னு படக்கென்று சொல்லி சொல்ல வந்தவர் வாயை அடைப்பவர்களே அதிகம். எங்க ஊர்ப்பக்கம் 'அடுத்தவனுக்கு புத்தி சொல்றது சுலபம்... ஆனா நாம அப்படி நடக்குறோமான்னு முதல்ல யோசிக்கணும்'ன்னு சொல்வாங்க. அதான் உண்மை. அவன் பாதையில் சரிவரப் போறவன் அடுத்தவன் பாதையில் நின்று அறிவுரை சொல்ல வரமாட்டான். அப்படி சொல்ல நினைத்தாலும் இதை இவன் ஏற்றுக் கொள்வானா என்று சிந்தித்துத்தான் பேசவே ஆரம்பிப்பான். 

இன்னைக்கு பள்ளியில் படிக்கும் பையனுக்கே அறிவுரை சொல்ல முடியவில்லை... பின்னே எப்படி குடும்பம் குழந்தையின்னு இருக்கவனுக்கு அறிவுரை சொல்றது...? அறிவுரை சொல்லப் பொயிட்டு வடிவேலு மாதிரி 'இது உனக்குத் தேவையா'ன்னு நம்மளை நாமளே கேட்டுக்கணும். எங்க விஷாலுக்கே நாம எதாவது சொன்னா... 'ஏம்ப்பா எப்பப் பாத்தாலும் ஏதாவது சொல்றீங்க...?' அப்படின்னு ஒரு அயற்சியோடு கேக்கிறான்... அதைவிட பரிட்சை சமயத்தில் 'பரிட்சைக்குப் படிச்சியா...?' அப்படின்னு கேட்டா யாரு போன் பண்ணினாலும் 'படி படியின்னு  சொல்றீங்க... வேற பேச மாட்டீங்களா?' அப்படின்னு கொஞ்சம் கோபமாகிறான்... படிப்பது மூணாவது... இதே ஆறாவது... பத்தாவது... பனிரெண்டாவது... கல்லூரி... படிக்கும் போதெல்லாம் என்னப்பா படிச்சியான்னு ஆரம்பிச்சா... யோவ்... உனக்கு வேலை இல்லை... எப்பப்பாரு நை...நைன்னு படிச்சியா மிதிச்சியான்னு அப்படின்னு கேட்டாலும் கேப்பான்.

என்னைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கு சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னால் போதும் என்று நினைப்பவன்... கூட்டி வச்சி வாத்தியார் மாதிரி நீ இதைச் செய்யணும்... இப்படித்தான் செய்யணும்ன்னு எல்லாம் அறிவுரை சொல்லித்தான் வாழ்க்கையில் உயர வைக்கணுமின்னு இல்லை... நம்ம பிள்ளை நல்லா வருவான்... உயர்ந்த இடத்தில் இருப்பான்னு நமக்கு நம்பிக்கை இருக்கணும்... அவனைப் பார்... இவனைப் பார்... அப்படி வரணும்... இப்படி வரணும்... என்றெல்லாம் சொல்லி பக்கம் பக்கமா அறிவுரை சொல்லி வளர்ப்பதால் எந்தப் பிள்ளையும் வெற்றிப் பாதையில் பயணிக்கப் போவதில்லை என்று நினைப்பவன். அவர்கள் போக்கில் பயணித்தாலே கண்டிப்பாக நல்ல பாதையில்தான் செல்வார்கள் என்று நினைப்பேன். நான் படிப்பு விஷயத்தில் மட்டுமல்ல பல விஷயங்களில் அவர்களின் போக்கில் விட்டுவிடுவேன்... அதிகம் கண்டிப்பதில்லை... சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லி புரிய வைப்பேன். அவர்களுக்கும் அதனாலேயே அப்பா என்றால் அதீத அன்பு... இதுதானே வாழ்க்கை... இதுதானே கொடுப்பினை... இப்பவே எதற்கு அதீத சுமை...

என் மனைவியிடமும் இதைத்தான் சொல்வேன்... விஷால் வீட்டில் படிக்கவே மாட்டேங்கிறான் என்று அவர் சத்தம் போடும் போது எப்படிப் படிப்பான்... அவங்க அப்பன் படிச்சிருந்தாத்தனே பிள்ளை படிக்கும்... வீட்ல நான் எப்பவும் படிக்க மாட்டேன்... அதுக்குன்னு நேரம் ஒதுக்கி படிப்பது பரிட்சையின் போது மட்டுமே... அப்ப நம்ம வாரிசும் அப்படித்தான் இருக்கும்... அதெல்லாம் படிச்சிருவான் விடு... எல்லாம் மனசுக்குள்ள வச்சிருப்பான்னு சொன்னா... நீங்களே கெடுங்க... படிக்கலைன்னு சொன்னா கூப்பிட்டு திட்டாம அவன் அப்படித்தான்னு சொல்றீங்க... வெளங்கிடும் என்பார்... எல்லாரும் என்ன சொல்றாங்க... குமார் மாதிரியே இருக்கான்னுதானே சொல்றாங்க... நீ என்ன சொல்றே... படுக்குறதுகூட உங்கள மாதிரியே தலைக்கு கை வச்சித்தான் படுக்கிறான்னு சொல்றே... அப்புறம் என்ன படிக்கிறதும் என்னைய மாதிரியே இருக்கட்டும் என்று சொன்னதும் மனைவி தலையில் அடித்துக் கொள்வார்... விஷாலோ ஒரு ஆட்டம் போட்டு சந்தோஷித்து அந்த சந்தோஷத்தோடு என்னை மனைவி ஏதாவது சொன்னா எங்கப்பா பச்சைமண்ணு அவரையா திட்டுறீங்கன்னு மல்லுக்கு நிப்பான். பசங்க அம்மா மீது பாசமாம்... இங்கு அம்மாவைவிட அப்பா மீதே அதிகம்.

ஸ்ருதியைப் பொறுத்தவரை சில வேளைகளில் திட்டு வாங்கும்... ஆனால் படிப்பில் ரொம்ப கண்டிப்பதில்லை.... மார்க் குறைகிறதா... அதெல்லாம் சரியாயிரும் அப்படின்னு சொல்லி வைப்பேன். லேசாக சத்தமிட்டாலும் கண்ணீரை காவிரியாக்கி விரைவாக பாய்ந்தோடச் செய்து விடும்... அது உட்கார்ந்து படிப்பதைப் பார்த்த எங்கம்மா, 'என்னடி உங்கப்பன் மாதிரி நீயும் பண்ணுறே..?' என்று சொல்லி நம்ம கதையையும் அவுத்து விட்டாச்சு... அதாவது நாம பள்ளியில் படிக்கும் போது ரேடியோவோ, டேப்ரெக்கார்டரோ ஓடிக்கிட்டு... மன்னிக்கவும் பாடிக்கிட்டு இருக்கும்.  கல்லூரிக்குப் போனப்போ டிவிக்கு மாறியாச்சு... இப்போ ஸ்ருதிக்கு படிக்கும் போதும் எழுதும் போது டிவியில் பாட்டு ஒடிக்கிட்டே இருக்கணும். 

இதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா... பசங்களுக்கு எப்பப் பார்த்தாலும் அறிவுரைகள் சொல்லிச் சொல்லியே அவர்களுக்குள் அயற்சியை உண்டு பண்ணுவதோடு அப்பா என்றாலே அலர்ஜியும் உண்டாகும். இங்கு இருவர் எப்பவும் அறிவுரையைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு அதை போன் மூலமாக ஊரில் இருக்கும் பிள்ளை மீது இறக்கி வைக்கிறார்கள்... அதுவும் மணிக்கணக்கில்... அவனைப் பார்... இவனைப் பார்... நீயும் பிறந்திருக்கிறாயே என்று எத்தனை குதர்க்கமான... ஆக்ரோஷமான... அருவெறுப்பான வார்த்தை உபயோகங்கள்... வெளிநாட்டு வாழ்க்கை கொடுக்கும் வலியை ஏனோ குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க மறுத்து விடுகிறார்கள்... அதன் வசந்தத்தை... பகட்டை மட்டுமே சொல்லிக் கொடுத்து விட்டு பின்னர் அறிவுரை என்ற பெயரில் அள்ளி இறைத்து என்ன பயன்...? அவன் என்னவாய் ஆவான் என்று தெரிந்த பின்னும் பில்கேட்ஸ் ஆகலைன்னு புலம்புவது என்ன லாபம்...? பணம் இருக்குன்னு காட்டிட்டு நாளைக்கு பிச்சைதான் எடுப்பே என்பதையும்... நீ படிச்சிருந்தா இன்னைக்கு அவனை மாதிரி இருந்திருக்கலாம் என்பதையும் அவன் எப்படி தன்னுள் இறக்கிக் கொள்வான். சினிமாவுக்கு வந்த புதிதில் அஜீத் ஒரு பேட்டியில் 'நீ என்னவா வரணும்ன்னு நினைக்கிறியோ அதை மனதில் வைத்து அதன் பின்னே போ... அப்பாவுக்காக டாக்டர் ஆகவோ, அம்மாவுக்காக இஞ்சினியர் ஆகவோ போறேன்னு உன்னை நீ அழித்துக் கொள்ளாதேன்னு சொன்னார். அது எவ்வளவு சரியான வார்த்தை... எனக்குத் தெரியுமே என்னால் என்ன பண்ண முடியும் என்பது அப்புறம் எதற்காக அவர்கள் தூக்கி வைக்கும் விருப்பமில்லாத பொதியைச் சுமக்க வேண்டும்.

இன்னொருத்தர் எப்பவும் ராமாயணம் படிப்பதுடன் அவர் மட்டுமே எல்லாம் தெரிந்தவர்... அறிவு ஜீவி என்ற நினைப்பில் இங்கிருந்து மணிக்கணக்கில் பசங்களுக்குப் பாடம் நடத்துவார். எல்லாப் பாடமும் இவர் சொல்லிக் கொடுத்தால் அப்புறம் அவனெதற்கு பள்ளியில் படிக்கிறான்... நான் படித்தது கணிப்பொறி.. அது குறித்த கேள்விகள் வரும்போது பதில் சொல்லிக் கொடுக்கலாம்... அதற்காக உயிரியல்... வேதியில்... என எல்லாம் எனக்கு எப்படிச் சொல்லிக் கொடுக்கத் தெரியும்... ஆனால் அவர் பேசுவார்... மணிக்கணக்கில் பேசுவார்... அம்மா மருத்துவமனையில் இருப்பதையும் ஆளுநர் வந்து பார்த்துச் சென்றதையும் ஒரு பெரிய பாடமாக நடத்தினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்பக்கம் என்ன நினைத்திருப்பார்கள் கல்லூரி படிக்கும் பெண்ணும் பள்ளியில் படிக்கும் பையனும்...

அவர் அவர்களுக்கான வாழ்க்கைப் பாடத்தை ஒரு தோழனாய் சொல்லிக் கொடுக்கலாம்... அப்பாவும் ஆசிரியனாய் கண்டிப்புடன் நிற்பது அவர்களுக்கு எதைச் சொல்லிக் கொடுக்கும்... காலங்கள் நகர, பெண் பிள்ளைகளை விடுங்கள்... பையன் முகம் கொடுத்து பேச யோசிப்பானா இல்லையா..? இன்னும் என்ன கூத்துன்னா அவர் சார்ந்த சாதிக் கட்சித் தலைவர் ஒரு படத்தைப் பார்த்து நல்லாயிருக்குன்னு சொல்லிட்டா இவரு அதைப் பார்த்து ஆஹா ஓஹோன்னு சொல்லுவாரு... நானெல்லாம் அட்டர்பிளாப் படத்தையும் அசராம பாக்குறவன் எங்கிட்டே பக்கம் பக்கமாப் பேசுவாரு.... உடனே ஊருக்கு போனடிச்சி இந்தப் படம் பாரு... நம்ம அவரே ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்லிட்டாரு சொல்லி பாக்க வச்சி... அடுத்து பல நாளைக்கு அதை வச்சி பக்கம் பக்கமா வகுப்பெடுத்து... அப்புறம் அந்த சாதி சார்ந்த தொலைக்காட்சியில்... சாதி சார்ந்த பேச்சு வரும்போது கூப்பிட்டு பார்க்கச் சொல்வார்.... நாம் சாதியை ஒழிப்போம் என்கிறோம்... சில பிள்ளைகளுக்கும் சாதி விளக்கை ஏற்றச் சொல்லிக் கொடுக்கிறார்கள்... அறிவுரை என்பது அளவோடு இருந்தால்தான் நல்லது,.

இந்த சினிமா பத்திச் சொல்லும் போது இது நல்லபடம் என்றால் பார்க்கச் சொல்லலாம் தப்பில்லை... ஒருவன் ஓசியில் பார்த்துவிட்டு ஆஹா ஓஹோன்னு சொன்னா அதை பிள்ளைகளிடம் சுமத்தி அது மாதிரி படங்களை மட்டுமே பார்க்க வேண்டும் என்று சொல்வது நல்லதல்லவே... எங்க வீட்டுல இது நல்லாயிருக்குன்னு சொன்னா... நீங்க நல்லாயிருக்குன்னு சொல்லுறீங்களா.. அப்ப யோசிக்கணும்ன்னு சொல்லிடுவானுங்க... இந்த ரஜினி முருகனை சிவகார்த்திகேயன் வீட்டுல கூட இத்தனை முறை பாத்திருக்கமாட்டானுங்க... ஆனா எங்க வீட்டுல ரெண்டு பேரும் ரஜினியையும் முருகனையும் படாதபாடு படுத்தி வைக்கிறாங்க... விஷால் கதை எழுதுறேன்னு சொன்னப்போ போடா போயி படிக்கிற வேலையைப் பாருன்னு அம்மா சொல்ல அட சூப்பருல்ல... எங்கே கதையைச் சொல்லுன்னு சொல்லி உங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதுல்ல... தமிழ்லயே சொல்றேன்னு அவன் நமக்கு பல்ப் கொடுத்து... சொல்லி... சின்னச் சின்னதாய் மூணு கதை... அவன் வயதுக்கு நல்லாவே இருந்தது... எழுது... இன்னும் எழுது என அவனுக்கு ஒரு டைரி கொடுக்கச் சொன்னபோது மனைவி அட நீங்க வேற என்றார். ஆனால் அவன் மனசுக்குள் உள்ளதை எழுதட்டுமே... அது அவனின் தனித்திறமையாய் வளரட்டுமே... என்று சொன்னேன்... பிள்ளைகளை தட்டிக் கொடுப்போம்... தரணியில் புகழோடு வாழ வைப்போம்... சும்மா தொட்டதற்கெல்லாம் பிரம்பை எடுத்து வைத்துக் கொண்டு பிரசங்கம் பண்ணுவதால் காரியமில்லை என்பதை உணர்வோம்.

அதீத அறிவுரைகள் அயற்சியைக் கொடுப்பதுடன்  மட்டுமல்ல அன்பையும் அழித்துவிடும்...

யோசிப்போம்.... அறிவுரைகளை அளவோடு சொல்வோம்.
-'பரிவை' சே,குமார். 

13 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

உண்மை நண்பரே இன்றைக்கு சுழலில் யாருக்கும் அறிவுரை சொல்ல முடியவில்லை பெற்ற பிள்ளையே கேட்க மறுக்கின்ற பொழுது பிறகு யாரிடம் சொல்வது ?
நல்லவிதமான அலசல்

Yarlpavanan சொன்னது…

"அதீத அறிவுரைகள் அயற்சியைக் கொடுப்பதுடன் மட்டுமல்ல அன்பையும் அழித்துவிடும்...
யோசிப்போம்.... அறிவுரைகளை அளவோடு சொல்வோம்." என்ற தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

ஆயினும், ஓர் உண்மை!
விருப்பம் உள்ள வரை
கதைக்கலாம், பேசலாம்,
அறிவுரையும் கூறலாம்...
வெறுப்பு வெளிப்பட - சற்றே
எல்லாவற்றையும் நிறுத்துவோம்...

துரை செல்வராஜூ சொன்னது…

>>> அவனைப் பார்... இவனைப் பார்...<<<

- என்ற வார்த்தைகளை என் பிள்ளைகளிடம் சொன்னதேயில்லை..

நீண்ட பதிவானாலும் நேர்த்தியான பதிவு..

சிவகுமாரன் சொன்னது…

உண்மை அத்தனையும்.நட்பான அணுகுமுறை தான் பிள்ளைகளை நம் பக்கம் ஈர்க்கும்.
"உவட்டா உபதேசம்" என்கிறார் அவ்வையார் விநாயகர் அகவலில்.
எவ்வளவு பொருள் பொதிந்த சொற்கள்.
அறிவுரை என்ற பெயரில் திணிக்கப்படும் எவையும் அளவு மீறும் போது உவட்டும், வாந்தியெடுக்கப்படும், அருவெறுக்கப்படும்..
அருமையான பதிவு
நன்றி

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

வெகு உண்மை குமார்! பெரியவர்களுக்கே கம்பேரிசன் கூடாது.. அதுவும் குழந்தைகளை மற்றக் குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசி அறிவுரை எல்லாம் சுத்த வேஸ்ட். நல்லதுமல்ல..

//எங்கே கதையைச் சொல்லுன்னு சொல்லி உங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதுல்ல... தமிழ்லயே சொல்றேன்னு அவன் நமக்கு பல்ப் கொடுத்து... சொல்லி... சின்னச் சின்னதாய் மூணு கதை... அவன் வயதுக்கு நல்லாவே இருந்தது... எழுது... இன்னும் எழுது என அவனுக்கு ஒரு டைரி கொடுக்கச் சொன்னபோது மனைவி அட நீங்க வேற என்றார். ஆனால் அவன் மனசுக்குள் உள்ளதை எழுதட்டுமே... அது அவனின் தனித்திறமையாய் வளரட்டுமே... என்று சொன்னேன்... பிள்ளைகளை தட்டிக் கொடுப்போம்... தரணியில் புகழோடு வாழ வைப்போம்... சும்மா தொட்டதற்கெல்லாம் பிரம்பை எடுத்து வைத்துக் கொண்டு பிரசங்கம் பண்ணுவதால் காரியமில்லை என்பதை உணர்வோம்.//

கை கொடுங்க குமார்! உங்கள் செயல் மிகச் சிறந்த ஒன்று. விஷாலின் திறமையை வளர்த்தெடுங்கள். அவர் கதை எழுதுவதை நீங்கள் எங்களுடன் இங்குப் பதிவிட்டுப் பகிரலாமே! விஷாலுக்கும் மகிழ்வாக இருக்குமே. அவரது எழுத்தும் முன்னேறுமே. இந்த வயசில் கதை எழுதுவது என்பது எவ்வளவு ஒரு பெரிய விசயம்!!! அப்பா 8 அடி என்றால் பிள்ளை 16 அடி!!! அல்ல 32 என் அதற்கும் மேல் கூட பாயும்!!! குமார் அதைனை இங்குப் பகிருங்கள். விஷாலுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!!

ஸ்ரீராம். சொன்னது…

விஷால் குட்டிப்புலி போல! என்னைப் பொறுத்தவரை நான் யாருக்கும் அறிவுரை சொல்வது இல்லை!!

Unknown சொன்னது…

சொல்வது எளிது! எதுவும் யாருக்கும் செய்வது தான்!!!!!!?

ஊமைக்கனவுகள் சொன்னது…

வணக்கம்.

இவ்வனுபவம் எனக்கும் உண்டு.

பொதுவாகப் பிள்ளைகளை அவர்கள் விரும்புகின்ற விதத்தில் செயல்படச் செய்ய வேண்டும்.

நல்லனவற்றை அவர்கள் விரும்பச் செய்ய வேண்டும்.

ஊக்கமும் பாராட்டும் இதற்கு உறுதுணையாய் அமையும்.

அறிவுரை வெளிப்படையாய் இல்லாமல் சில அனுபவங்களைப் பகிர்வதன் வழியாக அவர்கள் ஊகித்து அறியுமாறு அமைதல் நலம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

த ம
நன்றி

சாரதா சமையல் சொன்னது…

அறிவுரை பற்றிய பதிவை மிக அருமையாக எழுதி இருக்கீங்க குமார்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு கட்டுரை.... அறிவுரை சொல்வது எளிது. அதைச் சொல்பவர் கடைபிடிப்பது இல்லை என்பது நிதர்சனம்.....

Angel சொன்னது…

அறிவுரையா ஹையோ ..உங்க பதிவை படிச்சதும் ஒரு சம்பவம் நா சின்ன பிள்ளையா இருக்கும்போது நடந்தது நினைவு வருது .அங்கிள் ஒருவர் எப்பவும் அட்வைஸா அள்ளி தெளிப்பார்
பக்கத்துக்கு வீட்டு அக்கா தவறான வாழ்க்கை தேர்ந்தெடுத்து(இவர் வேண்டாமென்று சொன்னவரை மணம் புரிந்து தோல்வி )இவரை பார்த்தாலே அலறி ஓடுவாங்க ..என்னை பொறுத்தவரை வெற்றி தோல்வி சகஜம் தோற்றாலும் எழும்பி நிற்க அறிவுரை யாரும் தருவதில்லை .நான் சொன்ன மாதிரி நடந்தது பார்த்தியா என்றே ஏளனம் செய்வாராம் அந்த அங்கிள் .
மகன் விஷால் விஷயத்தில் உங்க அணுகுமுறை மிக சரியே ...
அருமையான பதிவு .. நானெல்லாம் நானே அடிபட்டு எழும்பி நிற்கும் ரகம் :) .
நாமே ஒரு விஷயத்தை செய்யும்போது தோற்றாலும் அதன் சாதக பாதகங்களை நாமே ஏத்துக்குவோம்

Angel சொன்னது…

நாலைந்து சிறு கதைகள் எழுதி ஒரு பிளாக் துவங்கி குடுங்க மகனுக்கு அல்லது உங்க வலையில் பகிருங்கள் ..

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

இக்காலகட்டத்தில் அறிவுரைகள் கூறுவது பயனில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது. அறிவுரைகளைப் புரிந்துகொள்ளுமளவிற்கோ, ஏற்றுக்கொள்ளுமளவிற்கோ பெரும்பாலானோர்க்கு மனது இடம் கொடுக்கவில்லை. அவர்களாகவே பட்டு உணரட்டும் என்று விட்டுவிடுகிறேன்.