மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 15 அக்டோபர், 2016

காஞ்சனாதேவியா... மஞ்சளழகியா...?

Image result for கடல்புறா

சாண்டியல் அவர்களின் கடல்புறா வாசிக்க ஆரம்பித்தபோது மெல்லத்தான் நகர்ந்தது... பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடித்து கடல்புறா மிக வேகமாக பறக்க ஆரம்பித்தது. பொன்னியின் செல்வன் வந்தியத்தேவனைப் போல கடல்புறா கருணாகரப் பல்லவன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். இளைய பல்லவனின் வீரதீரச் செயல்கள் சற்றே அதிகப்படியாகத் தெரிந்தாலும் வசீகரமான எழுத்தில் வாசிக்கும் போது அப்படித்தான் இருந்திருப்பானோ என்ற எண்ணமே மேலோங்கியது.

நாயகிகள் பற்றிய வர்ணனைகள் முகம் சுளிக்க வைக்கும் என்றார்கள். அப்படியான வர்ணனை எதுவும் இல்லை... அப்படிப் பார்த்தால் இன்றைய கதைகளிலும் சினிமாக்களிலும் வர்ணிக்காததா... எத்தனையோ பாடல்கள் இலைமறை காயாக இல்லாமல் நேரடியாகவே அதிகப்படியாக வர்ணிக்கின்றன என்பதை நாம் அறிவோம்... சாண்டில்யனின் நாயகிகள் வர்ணனை எல்லை மீறவில்லை... ஒரு எழுத்தில் வசீகரிக்கும்படி வர்ணிப்பது என்பது திறமை. அதை மிக அழகாகச் செய்து நம் கண் முன்னே இதுதான் காஞ்சானா தேவி... இவள்தான் மஞ்சளழகி என்ற தோற்றத்தை காட்டிவிட்டார்.

கருணாகரப் பல்லவனைச் சுற்றியே நிகழும் கதை என்றாலும் சோழ சாம்ராஜ்யத்தின் படைத்தலைவன்தான் அவன் என்ற முறையில் நாம் இரண்டாம் இராஜேந்திர சோழனையும் அவன் மகன் அநபாயனையும் சந்தித்து விடுகிறோம். சோழர்களின் ராஜ்ஜியம் உலகளவில் பரவிக்கிடந்தது என்பதையும் அறிந்து மகிழ்கிறோம்.

இரட்டை நாயகிகள்... பாலூரில் வணிகர் வீதியில் கூலவாணிகன் தங்க வைத்த வீட்டில் கடாரத்தின் இளவரசி காஞ்சனா தேவியை ஒரு பரபரப்பான சூழலில் சந்திக்கிறான் இளைய பல்லவன்... பெரும்பாலான காவியங்களில் தமிழ் சினிமாவைப் போல் கண்டதும் காதல்தான்... அதுவும் உடனே இடையில் கைவைத்தான் என்று எழுதிவிடுகிறார்கள்... இவைதான் தமிழ் சினிமாவுக்கு முன்னோடியாக இருக்குமோ என்றும் கொள்ளலாம். நேற்று பார்த்த றெக்க படத்தில் லூசுத்தனமான காதலைக் காட்டியிருப்பார்கள். அதை மற்றொரு பதிவில் பார்க்கலாம். 

இந்த இரட்டை நாயகிகள் குறித்து தமிழ்வாசி முகநூலில் கேள்வி கேட்டு வைக்க நிஷா அக்கா தினேஷ்  மற்றும் சில நண்பர்களுடன் ஒரு பெரிய விவாதமே நிகழ்ந்தது. இந்த இரட்டை நாயகிகள் என்பது கதை நகர்வுக்காக மட்டுமின்றி வரலாற்றை ஊறுகாயாக்கி கதை சமைக்கும் போது வாசிப்பவன் என்ன கதை வளவளன்னு போகுதுன்னு யோசிச்சு மூடி வைக்காமல் இருக்க கையாண்ட முறைதான் இரட்டை நாயகிகள் என்று தோன்றுகிறது. தமிழ் சினிமாவில் நாயகி இருந்தாலும் குத்துப் பாட்டுக்கு ஆட ஒரு பிரபல நடிககையை பிடிப்பதில்லையா அது மாதிரித்தான்... அப்படியான இரட்டைக் குதிரைகளில் முதல் குதிரையான காஞ்சனா மீது காதல் துளிர்க்க... அப்புறம் பாலூரில் இருந்து தப்பிச் செல்லும் போது இருவரும் பிரிகிறார்கள்... இருவரின் முதல் சந்திப்பு சித்ரா பௌர்ணமி அன்று....

பின்னர் கடற்கொள்ளையனான அகூதாவின் உதவியால் தப்பிப் பிழைத்து அவனுக்கு உபதலைவன் ஆகி கடல் கொள்ளையனாய் தன்னை நிலை நிறுத்தி, ஆங்காங்கே அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழர்களைக் காக்கவும் தன் காதலிக்கு செய்து கொடுத்த சத்தியத்தின்படி அவள் நாட்டை மீட்டு சக்கரவர்த்தினியாக்கவும் முயற்சிக்கும் கருணாகரப்பல்லவன் அதன் காரணமாக கடலில் பயணித்து அடையும் இடம் அக்ஷ்யத்தீவு... அங்கு சந்திப்பவள்தான் மற்றொரு நாயகியான மஞ்சள் அழகி... காஞ்சனாவைச் சந்தித்து காதல் கொண்டவன் மஞ்சளழகியோடு காதல் கொள்வது அடுத்த ஆண்டில்.. அதுவும் ஒரு சித்ரா பௌர்ணமி தினம்... 

மஞ்சள் அழகி மீது மோகம் கொண்டு அவளை விரும்பி... கடற்கரையில் அவளைக் கட்டிப்பிடித்து... அவளின் வளர்ப்புத் தந்தையும் அக்ஷயத்தீவின் தலைவனுமான பலவர்மனை தன் திறமையால் ஏமாற்றி வீழ்த்தி மஞ்சளழகியிடம் ஆட்சிப் பீடத்தை அளித்து நகரும் போது 'இந்த அலைகளைப் போல் நீங்களும் என்னைத் தொட்டு உறவாடி மறைந்து விடுவீர்கள்தானே' என்று அவள் சொன்னதை நினைத்தபடி அவளை மறக்கமுடியாமல் கடல் பயணத்தை தொடர்கிறான்... அடுத்த சித்ரா பௌர்ணமிக்குள் காஞ்சனாதேவியை கடாரத்தின் சக்கரவர்த்தினி ஆக்கியே தீருவேன் என உறுதியுடன்...

அக்ஷ்யத்தீவில் இருக்கும் போது தனது கப்பலை அமீர் மற்றும் கண்டியத்தேவன் உதவியால் மிகச் சிறந்த போர்க்கப்பலாக நிர்மாணிக்கிறான்... அதற்கு தன் காதலி காஞ்சனாவின் நினைவாக கடல் புறா என்றும் பெயரிடுகிறான். கடலில் பயணிக்கும் போது தங்களுடன் போரிட வந்த கப்பல்கள் காஞ்சனா தேவியும் அவளின் தந்தை குணவர்மனையும் கைது செய்து கொண்டு போகின்றன என்பதை அறியாது போரிட்டு அவர்களை மீட்கிறான்... காதலும் ஊடலுமாய் நகரும் வாழ்வில் தனது கூரிய அறிவினால் சோழர்களின் வணிக கப்பலுக்கு பிரச்சினையாக இருக்கும் கடல்மோகினி என்று இராஜராஜ சோழனால் அழைக்கப்பட்ட மாநக்காவரத்தின் தலைவன் கங்கதேவனை சூழ்ச்சியால் கொன்று கைப்பற்றுகிறான்.  

ஸ்ரீவிஜய நகரைப் பிடிக்க முயற்சிக்கும் போது அங்கு வரும் அநபாயன், கருணாகரப் பல்லவனை கைது செய்ய அரசனின் ஆணை இருப்பதைச் சொல்லி அவனை மீண்டும் அக்ஷ்யத்தீவுக்கு போகச் சொல்ல, அங்கு போனால் மஞ்சளழகி இருப்பாளே என்ற பயத்தில் அங்கு செல்லாமல் அமீர் மற்றும் கண்டியத்தேவரை ஏமாற்றி மலையூருக்குச் செல்கிறான். மலையூரில் ஸ்ரீவிஜய நகர படைத்தளபதியுடன் போரிட்டு மலையூர் கடல் தளத்தை கைப்பற்றுகிறான். மலையூரின் தலைவியாக மஞ்சளழகி இருக்கிறாள்.

மஞ்சளழகி குறித்து காஞ்சனா அறிய, அவளுக்கு மஞ்சளழகி மேல் காழ்ப்புணர்ச்சி ஏற்படுகிறது. இவ்வளவுக்கு உறவால் இருவரும் அக்கா தங்கை என்றாலும் காதல் என்று வரும்போது விட்டுக் கொடுக்கும் மனமில்லை. இருவரும் சந்திக்கும் சூழல் வர மோதலும் வருகிறது. 

காஞ்சனா தேவி மீது இருக்கும் அதீத காதலால்தான் மஞ்சளழகியை விட்டு ஒதுங்கி வருகிறான். இருப்பினும் தான் மலையூரில் மாட்டிக் கொண்ட நிலையில் அதன் தலைவியாய் அவளைச் சந்திக்க வேண்டிய சூழல் வந்தபோது மிகவும் வருந்துகிறான். ஆரம்பத்தில் அவனை கண்டு கொள்ளாமல் ஒரு தலைவியாய் பேசும் அவள், அங்கிருந்து கருணாகரப்பல்லவன் தப்பிச் செல்ல வேண்டும் என்றால் தன் உயிரை எடுத்துவிட்டு தப்பிச் செல்வதே ஒரே வழி என்றும் அதை உடனே செய்து தப்பிச் செல்லுங்கள் என்றும் சொல்கிறாள். இந்த வார்த்தையால் அவனின் இதயத்தில் அவள் மீண்டும் உயரமான இடத்தை அடைகிறாள்.

பாலூரில் பார்த்த மாத்திரமே காதலித்தாலும் சிறைப்பட்டிருந்த தன்னை சோழ இளவலுடன் சேர்ந்து நீதிமன்றத்தில் வில் ஏந்தி காப்பாற்றியவள்... கடற்கரையில் தன் உயிரைப் பணயம் வைத்து சோழ இளவலையும் கடாரத்தின் இளவரசனையும் அவனின் மகளையும் காப்பாற்றிய போது தனக்காக கண்ணீர் சிந்தியபடி பயணித்தவள் காஞ்சனா தேவி என்பதை நினைப்பவன் மஞ்சளழகியை ஒதுக்க நினைக்கிறான்.

அக்ஷ்ரத்தீவின் தலைவனின் மகளாக பார்த்து... அழகிய நடனமங்கையாக ரசித்து... கடற்கரையில் கட்டிப்பிடித்து திருமணம் செய்து கொள்வதாய்ச் சொல்லி... அந்த இடத்தை மீட்டு அவள் கையில் கொடுத்து ஒதுங்கியவனை... அடுத்த சில மாதங்களில் சிறை பிடித்து நீ தப்ப வேண்டுமென்றால் என் உயிரை எடுத்து விட்டுச் சென்றால்தான் முடியும் என்று காதலால் கசிந்துருகி உயிரைக் கூட கொடுக்க முன் வரும் மஞ்சளழகியின் உயர்ந்த மனதை எண்ணி அவளை ஒதுக்க முடியாமல் தவிக்கிறான்.

எதிரியின் வாளை கையில் இருந்து தட்டிப் பறிக்கு வீரம் கொண்ட காஞ்சனாவா...? அம்மா இல்லாது... அப்பா இருந்தும் உண்மையான பாசத்தை அறியாது... வளர்ப்புத் தந்தையிடம் வளர்ந்த பாவப்பட்ட மஞ்சளழகியா...? ஒராண்டுக்கு முன்னர் சந்தித்து தன்னையே நினைத்து வாழும் காஞ்சனாவா...? உயிரையே கொடுத்து தன் காதலனைக் காக்க நினைத்த மஞ்சளழகியா...? வாள்போர் வீராங்கனையான காஞ்சனாவா...? ஆடல் கலையில் சிறந்த மஞ்சளழகியா..? இருவரில் யாருடன் வாழ கருணாகரப் பல்லவன் நினைப்பான் என்றெல்லாம் யோசிக்க வேண்டாம்... ஏனென்றால் நம் இராஜாக்களும் கடவுள்களும் நம்மை இப்போது ஆள்பவர்களும் பல மனைவியரின் அன்புப் பிடியில் வாழ்ந்தவர்கள்தான்... வாழ்பவர்கள்தான் என்பதால் பல்லவனுக்கும் 'சண்டேன்னா ரெண்டு' மாதிரி ரெண்டுமே வாழ்க்கைத் துணையானாத்தானே கதை முடியும். சக்களத்தி சண்டை... காதலிக்கும் போது கர்புர்ன்னு இருந்தாலும் ஆசிரியர் சுபமாய் முடிச்சி வச்சிட்டதால பிரச்சினை இல்லை.

கருணாகரப் பல்லவன் மீது தீவிரக் காதல் கொண்ட காஞ்சனாதேவியை விட, என்னை உன்னால் திருமணம் புரிய முடியாது... காஞ்சனாதேவி மீதுதான் உனக்கு காதல் அதிகம் என்று சொல்லி ஒதுங்க நினைத்தாலும் ஆபத்து நேரத்தில் என் உயிரை எடுத்துவிட்டு தப்பிச் செல் அது ஒன்றே நீ உன் லட்சியத்தை அடைய வழி என்று சற்று யோசிக்காமல் காதலுக்காக உயிரைக் கொடுக்க நினைக்கும் மஞ்சளழகிதான் என்னைக் கவர்ந்தாள்.

சாண்டில்யனின் கதைகளில் நாயகிகள் வர்ணனை ரொம்ப அதிகமாக இருந்தாலும் கதையோடு பயணிக்கும் போது அந்த எழுத்து வசீகரமாகத்தான் இருக்கும். இதில் மஞ்சளழகியின் உண்மையான பெயர் என்ன என்று சொல்லவே இல்லை... ரெமோங்கிற பேரை ஓடும் பேருந்தில் ரெஜினா மோத்வானியிலிருந்து கீர்த்தி சுரேஷ் ரெமோ எனச் சொல்வது போல் கருணாகரப் பல்லவன் அவளைப் பார்த்து நிறத்தைப் பார்த்து மஞ்சளழகி என்று சொல்வதை வைத்து கடைசி வரை அதே பெயரில் கொண்டு சென்றிருந்தாலும் அது வரை மகளை பேர் சொல்லி அழைத்த பலவர்மன், அந்த கடல்புறத்து மக்களுக்கு எல்லாம் மஞ்சளழகி ஆகிவிடுகிறார்.

சரிங்க சாண்டில்யனின் கடல்புறா நாயகிகளில் காதல் புறாக்களான காஞ்சனா தேவி... மஞ்சளழகி... இவர்களில் உங்களைக் கவர்ந்த நாயகி யார்...?
-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

கடல் புறா இன்னும் படித்தது இல்லை! சுவாரஸ்யமான விமர்சனம்! நன்றி!

நிஷா சொன்னது…

நீண்ட விரிவான சூப்பர் விமர்சனம் குமார்!மஞ்சள் அழகியும் காஞ்சனாவும் கருணாகரப்பல்லவனுமாய் உங்கள் விமர்சனத்தில் மீண்டும் படிக்கும் ஆர்வத்தினை தூண்டி விட்டிருக்கின்றார்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

காஞ்சனா தேவியா... மஞ்சளழகியா... ஸ்வாரஸ்யமான பகிர்வு.

கடல் புறா மீண்டும் படிக்கத் தோன்றுகிறது.

துரை செல்வராஜூ சொன்னது…

கடல் புறா எப்போதோ படித்தது.. மீண்டும் படிக்க வேண்டும்..

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இருபது வருடங்களுக்கு முன்னர் கடற்புறா படித்த நினைவுகள் மனதில் வலம் வருகின்றன

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

சாண்டில்யனின் கதைகளில் நாயகிகள் வர்ணனை ரொம்ப அதிகமாக இருந்தாலும் கதையோடு பயணிக்கும் போது அந்த எழுத்து வசீகரமாகத்தான் இருக்கும். // உண்மைதான். இருவருமே கடற்புறா எப்போதோ வாசித்தது...மீண்டும் நினைவில் எட்டிப்பார்த்தது பசபசப்பாகத்தான். மீண்டும் வாசித்தால்தான் நன்றாக நினைவுக்கு வரும்

Yarlpavanan சொன்னது…

அருமையான பதிவு

தொடருங்கள்