சில நேரங்களில் இப்படித்தான் தோன்றுகிறது... என்னத்தை சாதித்து விட்டோம் என்ற கேள்வி முன்னே எழுந்து நின்று திரும்பத் திரும்ப மனசுக்குள் அதைக் கேட்க வைக்கிறது. இரண்டு நாள் விடுமுறை எப்படிக் கழிகிறது...? வெளியில் இறங்கினால் வெயிலப்பா... என்ற மூன்று வார்த்தைகளைச் சுமந்து அறைக்குள்ளேயே முடக்கிப் போடுகிறது... எத்தனை நேரம் வாசிப்பது...? எதைத்தான் எழுதுவது...? நேரம் விழுங்கி முகநூலில் வீழ்ந்து கிடப்பதால் என்ன லாபம் என்றெல்லாம் யோசிக்கத் தோன்றுகிறது... ஆனால் யோசனை யோசனையாய் மட்டுமே அதே இடத்தில் நின்று சிரிக்கும் போது வாழ்க்கை அதன் பாதையில் இங்கு வேகமாய் நகர்ந்து கொண்டே இருக்கிறது.
ஒரு அறைக்குள் வேறு வேறு ஊரில் இருந்து வந்து இங்கு வேலை பார்க்கும் நாலைந்து நண்பர்கள் தங்கியிருப்பதில் அரசியலும் ஆதங்கப் பேச்சுக்களும் ஓடுமே தவிர, உறவுகள் குறித்த... நம் வாழ்க்கை குறித்தான... பேச்சுக்களுக்கு அதிக வேலை இல்லை இங்கு என்பதே உண்மை... அதிகாலையில் எழுந்து குளித்து அலுவலகம்... வேலை முடிந்தால் அறை... ஊருக்குப் போன்... வாசிப்பு... முடிந்தால் எழுத்து... இல்லையேல் ஏதேனும் சினிமா... பதினோரு மணிக்கு மேல் தூக்கம்... இப்படியான ஒரு வாழ்க்கைதான் இங்கு இருக்கும் எல்லாருக்குமே வேலை நாட்கள்... விடுமுறை தினம் என்பது காலை பத்து மணி வரை உறங்கி... எழுந்து குளித்தோ குளிக்காமலோ ஏதோ தின்று... பிரியாணி சமைத்து சாப்பிட்டு மீண்டும் உறங்கி... ஊருக்குப் பேசி... இரவு சினிமா பார்த்து... ஒரு மணி வரைக்கும் உறங்காது இணையத்தில் நீந்தி இப்படியாகத்தான் கழியும். வெளிநாட்டு வாழ்க்கை பார்ப்பதற்குத்தான் பளபளப்பாகத் தெரியும்... அதை அனுபவிப்பவனுக்கு மட்டுமே அதன் வலி தெரியும்.
அலுவலகத்தில் இருப்பவனின் நிலை கூட பரவாயில்லை... கட்டிட வேலை பார்ப்பவன்... ரொம்ப பரிதாபத்துக்கு உரியவன் அவன்... அதிகாலையில் கிளப்பிக் கொண்டு வந்துவிடுவார்கள்... வெயிலில் உழன்று ... ஏதோ சாப்பிட்டு... மாலை தங்கியிருக்கும் கேம்ப் போய்... பாத்ரூம்க்கு வரிசையில் நின்று குளித்து... டிரஸ் துவைத்து சாப்பிட்டுட்டுப் படுத்து.... எழுதும் போதே வலிக்கிறது... பலரின் நிலை கேட்கும் போது இந்த வலி அதிகமாகத்தான் ஆகிறது... கிளினிங் கம்பெனியில் பணி எடுக்கும் மனிதர்களின் நிலை யோசித்தாலே... எதற்காக அற்ப சம்பளத்துக்கு இங்கு வருகிறார்கள் என்றே தோன்றும்... ஊருக்குப் போகும் போது தங்கச் செயினும்... மோதிரமும்... கையிலே ஆண்ட்ராய்டு போனுமாய் எவனிடமோ வாங்கிய கடனில் பகட்டாய் போய் இறங்குவதால் அவனிடம் நிறைய இருக்குன்னு நாம் நினைக்கிறோம்... ஆனால் அவன் எல்லாம் இழந்து அது வெளியில் தெரியாமல் இருக்கவே தன்னை அப்படி அலங்கரித்துக் கொள்கிறான் என்பதை நாம் அறிவதில்லை.
இதைத்தான் ரொம்பத் தடவை எழுதிட்டியே இப்ப ஏன் மறுபடியும் என்று நீங்கள் நினைக்கலாம்... பல வலிகளைச் சொல்ல இதைச் சொல்லிச் சென்றால் நல்லது என்பதால் நினைவில் கொண்டு வந்தேன்...யூரிக் ஆசிட் வலி வந்து கால் நடக்க முடியாத நிலையில் பேருந்து ஏறிச் சென்ற அந்தத் தினத்தில் உறவுகள் இருந்தும் நம் நிலை இப்படியிருக்கே என்று நினைத்து கண்ணீர் வந்தபோதுதான் நம் குடும்பம் நம்மோட இல்லாத நிலை குறித்தான வருத்தம் இன்னும் அதிகமாகி போட்டு வாட்டியது. முடியாமல் கிடப்பவனை என்ன முடியலையா... ஆபீஸ் போகலையா...? என்று கடந்து செல்லும் அறை நண்பர்கள் மத்தியில் 'என்னங்க பண்ணுது... முடியலையா...? கசாயம் வச்சித் தரவா...' என்றும் 'என்னப்பா... உடம்பெல்லாம் கொதிக்குது... கஞ்சி வச்சித்தாறேன்' என்றும் சொல்லும் உறவுகள் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருப்பதன் வலி அப்போதுதான் அதிகமாகும்.
வெளிநாட்டில் இருக்கும் எல்லாருக்குமே ஊருக்குச் செல்லும் அந்த ஒரு மாதமே மிகப்பெரிய சந்தோஷமான நாட்கள்... முப்பது நாள் என்பது அவனுக்கு முன்னூற்றி அறுபத்தஞ்சு நாள் வாழ்க்கை... இது புரியாத உறவுகள் ஊரில் நடந்து கொள்ளும் விதம்... வலியைக் கொடுத்தாலும் சந்தோஷிக்கவே வைக்கும். அப்படியான அந்த சந்தோஷ நாட்கள் கூட பலருக்கு வலியைக் கொடுக்கும் நாளாக அமைவதுதான் வேதனை. அப்படியான மிகப்பெரிய துக்கத்தை சமீபத்திய நிகழ்வு ஒன்று கொடுத்தது. உண்மையிலேயே மனசு ரொம்ப வருந்திய துயரச் சம்பவம் இது.
எங்கள் அறைக்கு அருகில் இருக்கும் அறை நண்பர், வயதில் என்னைவிடச் சிறியவர்தான்... ரொம்ப ஜாலியான நண்பர்.... சமையல் வேலை தெரியாது என்றாலும் எடுபிடி வேலைகள் எல்லாம் செய்து கொடுத்துக் கொண்டு அவரின் உறவுகளுடன் அரட்டை அடித்தபடி நாம் நின்றால் என்னண்ணே நான் சொல்றது என்று சிரித்துப் பேசும் அவர் பக்ரீத் கொண்டாட சந்தோஷமாக... மிகச் சந்தோஷமாக விடுமுறையில் சென்றார். இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது சொந்தக்கார குடும்பத்துடன் தன் மனைவி குழந்தையுடன் ஊட்டி சென்றிருக்கிறார். சந்தோஷ அனுபவங்களைச் சுமந்து அங்கிருந்து இறங்கும் போது....
ஒரு கொண்டை ஊசி வளைவில் பிரேக் பிடிக்காமல் போன கார்... விழுந்ததோ 150 அடி பள்ளத்தில்... கொஞ்சம் வேகமாக விழுந்திருந்தால் 500, 600 அடி பள்ளத்துக்குள் போயிருக்குமாம்... ஏழு மணிக்கு விழுந்த காரை யாரும் பார்க்கவில்லை என்கிறார்கள். பதினோரு மணிக்கு ஒரு லாரிக்காரர் பார்த்து போலீசுக்குச் சொல்லியிருக்கிறார். போலீஸ் வந்து அவர்களைப் பார்த்து தூக்கியபோது இங்கிருந்து சென்ற நண்பரின் இளம் மனைவியின் உயிர் போய்விட்டது. நண்பருக்கு தலையில் அடி... காரை ஓட்டிய டிரைவருக்கு ஒரு கால் தொடையோடு போய் விட்டது... இன்னொரு குடும்பத்துப் பெண்ணுக்கு இடுப்பில் அடி... சுத்தமாக நொறுங்கி விட்டது... இருவரின் குழந்தைகளையும் எப்படியோ அடிபடாமல் காப்பாற்றியிருக்கிறார்கள் என்பதே இந்த இழப்பில் கிடைத்த நல்ல செய்தி. நண்பரின் குழந்தைக்கு மூன்று வயது.
இங்கு கஷ்டப்பட்டு... கிடைத்ததை தின்று வாழ்ந்து... ஒரு மாதம் குடும்பத்துடன் சந்தோஷமாய் கழிக்கச் சென்றவரின் நிலை இன்று... அன்பான மனைவியை இழந்து... மூன்று வயதுக் குழந்தையை.... என்ன கொடுமை பாருங்கள்... ஊருக்குச் செல்வதற்கு ஒரு மாதம் முன்னதாகவே பக்ரீத்துக்கு ஊருக்குப் போறேன்... ஆட்டம் பாட்டம்தான் என்று சொல்லிச் சொல்லி சிரித்தவன் இன்று சிரிக்க முடியாமல் வாழ்க்கைக்குள் சிறைபட்டு நிற்கிறான். கடந்து செல்லும் காலங்கள் வலியைக் குறைக்கும் தருணத்தில் அவனுக்கு ஒருவேளை இன்னுமொரு வாழ்க்கை அமைந்தாலும் அமையலாம்... இல்லை என் துணையை இழந்து இனி எனக்கெதற்கு வாழ்க்கை என்று நினைத்து காலமெல்லாம் தன் குழந்தைக்காக வாழலாம்... எது எப்படியிருந்தாலும் அந்த மூன்று வயதுக் குழந்தைக்கு தாயின் ஸ்பரிசம் இனி கிடைக்குமா...? இந்த விபத்தில் மகளை இழந்த பெற்றோருக்கு...? நண்பர் மீண்டு வருவார் என்றாலும் அந்தச் சந்தோஷ வாழ்க்கை மீண்டு(ம்) வருமா..? அவருடன் எப்போதும் குடி கொண்டிருக்கும் சந்தோஷம் எல்லாம் திரும்ப வருமா...? அந்தக் குழந்தையின் எதிர்காலம் எப்படியிருக்கும்...? இந்த விபத்தின் பின்னே விடை தெரியாத கேள்விகள் எத்தனை... எத்தனை...
வெளிநாட்டு வாழ்க்கையில் என்ன சந்தோஷத்தைப் பெற்றுக் கிழித்தோம்... ஊருக்குச் செல்லும் அந்த ஒரு மாத வாழ்க்கை குறித்து எத்தனை கனவுகளுடன் அவர் சென்றிருப்பார்... எவ்வளவு சந்தோஷமாக் ஊட்டிக்குப் போயிருப்பார்கள்... எல்லாம் போச்சே... இதையெல்லாம் பார்க்கும் போது என்னடா வாழ்க்கைடா இது... அப்படின்னுதான் தோணுது. என்னமோ போங்க... எப்போதுதான் இந்த வாழ்க்கைக்கு விடிவோ தெரியவில்லை... கூழோ கஞ்சியோ குடும்பத்தோடு சேர்ந்து குடித்து வாழும் வாழ்க்கை வாய்க்கப்பெற்றால் சந்தோஷமே... என்று... எப்போது... எப்படின்னு எதுவும் தெரியாமல் நகரும் நாட்களில் இப்படியான ஒரு வாழ்க்கை எதற்காக வாழ வேண்டும் என்று தோன்றினாலும் இந்த வாழ்க்கை வேகமாகத்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது...
-'பரிவை' சே.குமார்.
16 எண்ணங்கள்:
மனதை அதிகம் தொட்டுவிட்ட பதிவு. வாழ்வு என்பதற்கான பொருள் அவ்வப்போது மாறி நம்மை சங்கடப்படுத்தி, உடன் இருப்பவரையும் வேதனைப்படுத்தி...நினைக்கும்போதே வேதனைதான். இவ்வாறான சூழலிலும் வாழ்க்கை நகர்ந்துகொண்டுதானே இருக்கிறது.
என்னடா வாழ்க்கை இது
வேகமாகத்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது...
இடையே - நாம்
வாழமுடியாது விடப்பட்ட
வாழ்க்கைத் துளிகள்
நிறையவே இருக்கே!
நண்பருக்கு எனது இரங்கல்கள் வெளிநாட்டு வாழ்க்கை பாவப்பட்டவர்களுக்கு கிடைத்த சாபம்தான் எல்லாம் பணஆசை வேறென்ன சொல்வது...
தங்களுக்கு மாத்திரை வாங்கி வரமுடியாமல் போனதற்க்கு வருந்துகிறேன்
மிகவும் கஷ்டமாகப் போய்விட்டது குமார், பதிவைப் படித்ததும். எனது அனுதாபங்கள்.
மனம் கனத்து போனது நண்பா!
நண்பருக்கு எனது இரங்கல்களும்.....
கஷ்டம் தான். என்னத்தைச் சொல்ல.....
manathu valikkirathu
karthik amma
வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் கவிஞரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பரவாயில்லை அண்ணா... இன்னொரு நண்பரிடம் சொல்லியிருக்கிறேன்....
வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் சகோதரரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஐயோ குமார் என்ன கொடுமை இது. மனம் அப்படியே பதறிவிட்டது. என்னவோ போன்று நீங்கள் சொல்லியிருக்கும் நிகழ்வு மனதில் அப்படியே காட்சியாய் விரிய...கனத்துப் போனது. ஆழ்ந்த அனுதாபங்கள். வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை
தங்கள் பதிவுகளை இங்கும் இணைக்கலாமே http://tamiln.in/
கருத்துரையிடுக