கலியில் 'அவனுக்கு மூக்குக்கு மேல கோபம் வருமப்பா' என்று நம்ம ஊர்ப்பக்கம் சொல்வார்களே அப்படி ஒரு கதாபாத்திரம் துல்கருக்கு... எதற்கெடுத்தாலும் கோபம்... காதலித்து திருமணம் செய்து கொண்ட சாய் பல்லவியுடனும் அடிக்கடி மோதல்... அப்படியிருந்தும் காதலால் இருவரும் விட்டுக் கொடுத்து வாழ்கிறார்கள். ஒருநாள் அலுவலக பார்ட்டிக்குச் செல்லுமிடத்தில் துல்கர் நடந்து கொண்ட விதத்தினால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டை பெரிதாகி சாய் வீட்டை விட்டு தமிழ்நாட்டில் இருக்கும் தன் தாய் வீட்டிற்கு கிளம்பிவிட, இந்த இரவில் தனியாக செல்ல வேண்டாம்... நான் கொண்டு வந்து விடுகிறேன் என்று அவரை காரில் ஏற்றிக் கொண்டு பயணிக்கிறார் துல்கர்.
வழியில் லாரிக்காரன் ஒருவன் வேண்டுமென்றே இவர்களது காரை ரோட்டை விட்டு இறங்க வைக்க, துல்கரின் சாமர்த்தியத்தால் மிகப் பெரிய விபத்தில் தப்பிவிடுகிறார்கள். அதன் பின் லாரிக்காரனை அவன் விரட்ட, சாய் பல்லவி வேண்டாமென மன்றாட, ஒரு கட்டத்தில் லாரியை மறித்து டிரைவரை அடிப்பதற்காக காரில் இருந்து இறங்கும் துல்கரை, சாய் கெஞ்சிக் கூத்தாடி தடுத்து அழைத்துச் செல்கிறார். போகும் வழியில் பசி எடுக்க ரோட்டோர மோட்டலில் சாப்பிட போகிறார்கள். அப்போது அங்கு லாரிக்காரனும் வர, மீண்டும் ஆரம்பிக்கும் சின்ன பிரச்சினையில் படம் சூடு பிடிக்கிறது.
ரோட்டோர மோட்டல் பிடிக்காமல் வேண்டா வெறுப்பாக சாய்க்காக சாப்பிடும் துல்கர், காசு கொடுக்கும் போது வேண்டாமென திருப்பிக் கொடுத்த ஜூஸ்க்கும் காசு போட்டிருப்பது குறித்து சண்டையிட்டு ஒருவழியாக பணம் கொடுக்கப் பர்ஸை எடுத்தால் அதில் சல்லிக்காசு இல்லை. அப்போதுதான் வீட்டில் சாயுடனான சண்டைக்குப் பின்னர் வீட்டு ஓனர் வந்து பேச, அவரிடம் பர்ஸில் இருந்த காசை எல்லாம் எடுத்து வாடகை கொடுத்து விட்ட வந்தது நினைவில் வருகிறது, சாயிடம் ஏதாவது பணம் இருக்கிறதா என்று கேட்கிறான். அவளோ தானும் எடுத்துவரவில்லை என்று சொல்லிவிடுகிறாள். காசில்லாததால் கிரிடிட் கார்டைக் கொடுக்கிறான். அவர்களோ இங்க கிரிடிட் கார்டு வசதியெல்லாம் இல்லை... எனவே பணமாகக் கொடுங்கள்... என்று கறாராகச் சொல்ல, அந்த நேரத்தில் ஏடிஎம்மைத் தேடித் செல்லும் நிலைமை ஏற்படுகிறது.
யாராவது ஒருவர்தான் போக வேண்டும் என்ற நிலையில் பாதுகாப்பு கருதி தான் அங்கிருந்து கொண்டு ஓரளவே கார் ஓட்டத் தெரிந்த சாய் பல்லவியை அனுப்பி வைக்கிறார். அவர் சென்ற சிறிது நேரத்தில் அவர் பின்னே லாரிக்காரனும் கிளம்புகிறான். அதிலிருந்து நமக்கும் ஹார்ட் பீட் எகிற ஆரம்பிக்கிறது... அந்த படபடப்பு இறுதிக் காட்சி வரை தொடர்கிறது. சாய் பல்லவியை லாரிக்காரன் என்ன செய்தான்...? மனைவிக்காக தன் கோபத்தை குறைத்துக் கொள்ளும் துல்கருக்கு அந்த மோட்டலில் நடந்தது என்ன..? கணவனும் மனைவியும் மீண்டும் சேர்ந்தார்களா..? என்பதே படத்தின் இறுதிப் பகுதி.
சாய் பல்லவி கோபித்துக் கொண்டு வெளியே போவதில் ஆரம்பிக்கும் அவர்களின் கதையில் கல்லூரி வாழ்க்கை, காதல், கல்யாணம், வேலை என முந்தைய நிகழ்வுகள் அழகாய் விரிகிறது. லாரிக்காரனின் வரவுக்குப் பின்னர் அந்த மோட்டல் காட்சிகள் பரபர... மிரட்டலாய் இருக்கிறது. துல்கர் தனக்கு பொறுத்தமான படங்களை மிகச் சரியாக தேர்வு செய்கிறார். அப்பா மம்முட்டியின் பங்கும் இருக்குமோ என்னவோ...? பொறுத்தமான கதாபாத்திரத்தினாலேயே தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுக்கிறார். மலர் டீச்சராக பார்த்த சாய் பல்லவிக்கு இதில் கண்ணீரோடு இருக்கும் காட்சிகளே அதிகம்... அதையும் சரியாக செய்திருக்கிறார் என்றாலும் மலர் டீச்சரைவிட இதில் இன்னும் எலும்பாய் தெரிகிறார்... கொஞ்சம் சதைப்பிடிப்பு வேண்டும் பெண்ணே.
லாரிக்காரனாக செம்பான் வினோத்தும் மோட்டல் நடத்தும் ரவுடியாக விநாயகமும் நடித்திருக்கிறார்கள். இசை : கோபி சுந்தர், கதை : ராஜேஷ் கோபிநந்தன், இயக்கம் : சமீர் தாஹிர். பாடல்களை ரசிக்கலாம்... ஆரம்பத்தில் மெல்ல நகர்ந்து இடைவேளைக்குப் பின்னர் வேகமெடுக்கும் கலி, மொத்தத்தில் படம் சூப்பருங்க...
-'பரிவை' சே.குமார்.
5 எண்ணங்கள்:
வணக்கம் சகோதரரே
நலமா? படவிமர்சனம் நன்றாக எழுதி இருக்கிறீர்கள். கதையை ரசனையுடன் சொல்லிச்சென்ற தங்களது விமர்சனத்தால், படத்தை பார்த்த திருப்தி எழுகிறது.வாழ்த்துக்கள்.சில சந்தர்ப்ப சூழல்களினாலும், இணைய குறைபாட்டினாலும் வலைப்பக்கம் வர இயலவில்லை.அதனால் தாமதமாக வந்து கருத்திடுவதற்கு மன்னிக்கவும். இனி தொடர்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆமாம் பார்த்த படம் கலி ....சூப்பர் படம் உங்கள் விமர்சனமும் அருமை
கீதா: பார்க்கவில்லை லிஸ்டில் உள்ளது.
படம் பார்க்கத் தூண்டும் விமர்சனம் நண்பரே
வாய்ப்பு கிடைத்தால் அவசியம் பார்ப்பேன்
நன்றி
கலி கிண்டிய விதம் அருமை நண்பரே... வாழ்த்துகள்.
வாய்ப்பு கிடைத்தால் பார்க்கிறேன் நண்பரே.
வாழ்த்துகள்.
கருத்துரையிடுக