மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 25 ஜூலை, 2016

சினிமா : மகேஷிண்டே பிரதிகாரம் (மலையாளம்)

ரம்பத்தில் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்த பஹத், தற்போது தொடர்ந்து தோல்விப் படங்களாக கொடுத்துக் கொண்டிருந்த நேரம், நஸ்ரியா மனைவி ஆன பின் தோல்விப் படங்கள்தான் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிகள் செய்து கொண்டிருந்த நேரம்... கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா திருமணத்துக்குப் பின்னர் கிரிக்கெட் வாழ்க்கை மோசமாகிப் போனதற்கு காரணம் மனைவி வந்த நேரம்தான் என விவாகரத்து செய்தார் என்பதை நாம் அறிவோம்... மூடர்கள்... அப்படி இடையில் பஹத்துக்கும் நஸ்ரியாவுக்கும் பிரச்சினை என செய்திகள் எல்லாம் வந்தன... அது பொய்யான தகவல் என பஹத்தும் நஸ்ரியாவும் சொல்லிவிட அது காற்றோடு போனது... அவர்கள் காதலோடு வாழ்கிறார்கள்.


ஒரு பக்கம் நிவினும் துல்கரும் அடித்து ஆடிக் கொண்டிருக்க தான் டக் அவுட் ஆகிக் கொண்டிருப்பதை தடுத்து, அதிலிருந்து மீள பஹத்துக்கு ஒரு சதம் அவசியமாக இருந்தது. அதை 'மகேஷிண்ட பிரதிகாரம்' கொடுத்தது. ஒரு சதம் எதிர்பார்த்தவருக்கு இரட்டைச் சதம் கிடைத்தது. மனுசனும் அடித்து ஆடியிருக்கிறார். சாதாரணமான கதை... பழிக்குப் பழி வாங்கியே தீருவேன்... அதுவரை இதைத் தொடமாட்டேன் என சின்னப் பிள்ளைகள் சவால் விடுவார்களே அப்படியான ஒரு கதை. சின்னதா நார் எடுத்து அழகாய் பூக்கட்டியிருக்கிறார்கள்.

போட்டோ ஸ்டுடியோ நடத்தும் பஹத், மிகச் சிறந்த போட்டோக்கிராபர் அல்ல... அவரின் கடை அருகே போட்டோ பிரேம் போட்டுக் கொடுக்கும் கடை வைத்திருக்கும் மாமா, வித்தியாசமான போட்டோ எடுக்க நினைக்கும் வயதான அனுபவம் நிறைந்த  போட்டோகிராபரான அப்பா. இவர்களைச் சுற்றி நடக்கும் கதைக்களம். பஹத்தின் முதல் காதலி குடும்ப நிலையை சுட்டிக்காட்டி வேறோருவனுக்கு மனைவியாக அந்த வேதனையில் வாடினாலும் வெளிக்காட்டாமல் வாழ்கிறார். ஒருநாள் மாமாவை ஒருவன் அடிக்க, தட்டிக்கேட்கப் போய் அவனிடம் அடிவாங்கி, வேட்டி அவிழ்க்கப்பட்டு அவமானப்படுகிறார். அப்போது அவனை திருப்பி அடிக்காமல் தான் தனது எட்டாம் நம்பர் செருப்பை அணிவதில்லை என சபதம் செய்கிறார்.


அதன் பின் அவனை அடிக்க முயற்சி மேற்கொள்ளும் போது துபாய் சென்று விட்டான் என்பதை அறிந்து அவனின் வரவுக்காக காத்திருக்கிறார். இந்த சமயத்தில் பஹத்திடம் ஒரு புத்தகத்தின் அட்டைப் படத்துக்காக போட்டோ எடுக்க வரும் பெண், அவர் எடுத்த போட்டோவைப் பார்த்து உனக்கு போட்டோ எடுக்கத் தெரியாதுல்ல எனத் திட்டிவிட, போட்டோ எடுக்கிறது ஒரு கலை... அது படிச்சா வராது... என்று சொல்லும் முன்னாள் போட்டோ கிராபரான அப்பா, ஒரு மழை நாளில் இருட்டில் எடுத்த ஒரு போட்டோவைப் பஹத் பார்க்க நேரிடும் போது அவரின் அற்புதமான போட்டோத் திறமை தெரிகிறது.

அதன் பின் பஹத்,  மாமா கடையில் இருக்கும் பையனை வைத்துக் கொண்டு வித்தியாசமாய் முயற்சித்து அந்தப் பெண்ணுக்குத் தெரியாமலே அவளை அழகாய் எடுத்து பத்திரிக்கைக்கு அனுப்பி அட்டைப் படத்தில் வரவைத்துவிட, அவளுக்கு பஹத் மீது காதல்... காதலியை கரம்  பிடிக்கலாம் என்று நினைக்கும் போது தன்னை அடித்தவன் துபாயில் இருந்து வருகிறான் என்பதை அறிகிறான்... அவன்தான் தன் காதலியின் அண்ணன் என்பதையும் அறிகிறான். அவனை அடித்து சபதத்தை நிறைவேற்றி எட்டாம் நம்பர் செருப்பை அணிந்தானா..? தன் காதலிக்காக சபதத்தை கிடப்பில் போட்டானா..? என்பதுதான் படத்தின் கிளைமேக்ஸ்.


பஹத் சொல்லவே வேண்டாம்... மனுசன் எப்படிப்பட்ட கதாபாத்திரம் என்றாலும் கலக்கிடுவார். இதிலும் புகுந்து விளையாடியிருக்கிறார். அனுஸ்ரீ , அபர்ணா பாலமுரளி என இரண்டு கதாநாயகிகள். காதலித்து விலகிச் செல்லும் அனுவை விட, கல்லூரி மாணவியாக வந்து காதலிக்கும் அபர்ணா கண்களாலேயே பேசி வசியப்படுத்தி விடுகிறார். இசையும் கேமராவும் விளையாண்டிருக்கின்றன.

சாதாரணக் கதை... சின்னப்புள்ளைத்தனமான சவால்... ஆனால் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கும் படம்.

மொத்தத்தில் மகேஷிண்டே பிரதிகாரம் நம்மளோட மனதோடு பேசும் படம்.

-'பரிவை' சே.குமார். 

12 எண்ணங்கள்:

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல விமர்சனம்...ஆம் படம் சாதாரணக் கதைதான்..ஆனால் பஹத்தின் நடிப்பு நம்மை ஈர்த்து விடுகிறதுதான்...அது போல் கேமரா..

துளசி

KILLERGEE Devakottai சொன்னது…

விமர்சனம் நன்று

ஸ்ரீராம். சொன்னது…

ம்ம்... இந்தக் கதையா வெற்றி பெற்றது? ஆச்சர்யம்தான். படத்தின் ட்ரீட்மெண்ட் ரசிக்க வைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு படம் பற்றிய தகவலுக்கு நன்றி குமார். பார்க்க முயல்கிறேன்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

நல்லதொரு படத்தை அறிமுகம் செய்து அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் சொன்னது…

விமர்சனம் நன்றாக உள்ளது. பார்க்க வேண்டும் விரைவில்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் துளசி சார்...
ரொம்பச் சாதாரணக் கதை... ஆனாலும் கேமரா விளையாண்டிருக்கும்... எல்லாருமே ரசிச்சி நடிச்சிருப்பாங்க..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
சாதாரணக் கதைதான்... நடிக்கர்கள் கதாபாத்திரங்களாகவும் கேமாரா கவிதை பாடியும் இருப்பதே ஸ்பெஷல்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் சகோதரா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.