அவன் அறைக்குள் நுழையும் போது இந்தியா - பங்களாதேஷ் கிரிக்கெட் போட்டி டிவியில் ஓடிக் கொண்டிருக்க, அறை நண்பர்கள் சுவாராஸ்யமில்லாமல் ஊருக்குப் பேசிக் கொண்டும்... கணிப்பொறியில் விவாத மேடைகள் பார்த்துக் கொண்டும் இருந்தார்கள்.
"என்னாச்சு... இந்தியா ஜெயிக்காதுன்னு பேசிக்கிட்டானுங்க..." என்றபடி டிவிக்கு முன் போய் ஸ்கோர் பார்த்தான்... "அது சரி... பாலைவிட பத்து ரன்தான் அதிகமிருக்கு... அப்ப இன்னைக்கு இந்தியாவுக்கு சங்குதான்" என்றான்.
"அதேதான் நானும் சொல்றேன்... பவுலிங் பிட்சுன்னு நம்மாளுங்க சொல்றாங்க... அதே பவுலிங் பிட்சுலதானே அவனும் விளையாடுறான்... அவனுக்கு மட்டும் சிக்ஸர் போருன்னு போகுது... நம்மாளுக பயலுக கிட்டிப்புல்லு விளையாடுற மாதிரியில்ல ஆடுனானுங்க... தோக்கட்டும்...' என்றபடி விவாத மேடையோடு மேட்சையும் கலந்து பார்க்க ஆரம்பித்தார் அறை நிர்வாகி.
அறை நிர்வாகிக்கு பதில் சொல்லிக் கொண்டே டிரஸ் மாற்றி கை, கால் கழுவி விட்டு ஒரு கிரீன் டீயோடு வந்து அமர்ந்தான் அவன். மாட்ச் தோத்துருவானுங்கன்னு தோண, ஊருக்கு பேசலாம் என்று நினைத்தபடி கம்ப்யூட்டரை ஆன் செய்து விட்டு பக்கத்துப் பெட்டுப் பக்கமாக திரும்பினான். அங்கே அவர் எங்கிட்டு மழை பேஞ்சா எனக்கென்ன என மிகவும் சின்சியராக அவர் விரும்பும் கட்சி பரப்பிக் கொண்டிருக்கும் கொள்கையை ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தார்.
அவனை பார்த்து விட்டு கவனிக்காதது போல அமர்ந்திருந்தார். அவர் கண்டிப்பாக 'இந்த ஏழரை வந்திருச்சு... இனி ஏதாவது பேசி நமக்கிட்ட ஏழரை இழுக்குமே' என மனதுக்குள் நினைத்திருப்பார் என்று நினைத்தவனுக்கு சிரிப்பு வர, அதை பெரிய செருமலாக மாற்றினான்.
"என்னங்க... அரசியல் ரொம்ப சூடு பிடிக்கிது போல..." என அவரை வம்புக்கிழுத்தான்.
'ஏய்யா... வந்ததும் ஆரம்பிக்கிறே...? கொஞ்ச நேரம் மேட்ச் பாக்க விடுய்யா...' என சைகையால் சொன்னார் அறை நிர்வாகி.
'கோர்த்து விடு மாப்ள... நம்ம பொழப்பு அதுதானே... இன்னைக்கு கிரிக்கெட்டுலதான் அடிச்சி ஆடலை... நீ அடிச்சி ஆடு... இப்பத்தான் பொண்டாட்டிக்கிட்ட சண்டை போட்டேன்... அந்த சூடு போக நீ அவருக்கு பத்த வச்சி விடு பரட்டை' என்பது போல் சிரித்தான் எதிர் பெட்டுக்காரன்.
"அட என்னங்கப்பா... ஆளாளுக்கு விடாம விவாத மேடை, நேர்படப் பேசு அது இதுன்னு பாக்குறீங்க... கருத்துச் சொல்ல மாட்டேங்கிறீங்க... பாக்யா மக்கள் மனசு மாதிரி... அறை நண்பர்கள் மனசை தெரிஞ்சிக்கலாம்ன்னு வந்தா நாத்தனாக்காரி முகத்தை திருப்பி வச்சிக்கிட்ட மாதிரி உக்காந்திருக்கீக..." என்றான் சத்தமாய்.
"அதான் சேந்துட்டானுங்களே... இனி என்ன பேச..." அவர்தான் ஆரம்பித்தார்.
'சனியன் சீட்டியடிச்சிட்டான்...' என்பது போல் நக்கலாய் சிரித்தான் எதிர் பெட்டுக்காரன்.
"என்னலே சிரிக்கிறே... பொண்டாட்டிக்கிட்ட சிரிக்க முடியலை... அங்க இருந்துக்கிட்டு உன்னைய இங்க சிரிக்க விடாமப் பண்ணுறா பாரு... அதான்யா... அம்புட்டுப் பேரும் கூட்டணி அது இதுன்னு புலம்ப... இருக்கா... இல்லையான்னே தெரியாம வீட்டுக்குள்ள இருந்துக்கிட்டே உள்ளடி வேலை எல்லாம் பாக்குது பாரு தமிழகத்தை காக்க வந்த கொம்மா... அது மாதிரிடா மாப்ள எந்தங்கச்சி..." எனச் சொல்லி சிரித்தான்.
"காஞ்ச ஓலையைப் பார்த்து பச்சை ஓலை சிரிக்க கூடாது மாப்ள... நாளைக்கு பச்சை ஓலையும் காயும் பாத்துக்க..."
"காயும் போது பாக்கலாம் இரு.." என்றவன், "இன்னைக்கு கேப்டன் டேயாமே... கலக்கிட்டாராமே..." என்றான். அவன் எப்பவும் விஜயகாந்துக்கு சப்போர்ட் பண்ற மாதிரி பேசுறதாலதான் அறைக்குள் சண்டை சூடு பிடிக்கும். அதனாலேயே அவன் கட்சிகள் விஜயகாந்துக்கு போட்டி போடுற மாதிரி அவரை முன்னிருத்துவான்.
"எனக்கு அப்பவே தெரியுங்க... இவன் அங்கதான் போவான்னு... அதுல வேற முதல்வர் வேட்பாளராம்... என்ன கொடுமை பாருங்க..." என்றார் அவர்.
"இதுல என்னங்க கொடுமை இருக்கு... அவருக்கு திமுகவோட போக பிடிக்கலை... அதைத்தான் மக்களும் விரும்பினாங்க...அதான் மக்கள் நலக் கூட்டணிக்குப் பொயிட்டாரு... மக்கள் நலம் காக்க... அதுக்காக இதை சந்தர்ப்பவாத கூட்டணியின்னு மத்த கட்சிக்காரங்க சொல்ற மாதிரியில்ல நீங்களும் சொல்றீங்க?"
"தனியா நிக்கிறேன்னு சொன்னவன் நிக்க வேண்டியதுதானே... எதுக்கு அங்க போயி சேர்றான்... அப்ப அவனுக்கு பயம் வந்தாச்சுல்ல..."
"இந்த பயம் அவருக்கா... இல்லை நீங்க மாஞ்சு மாஞ்சு பாக்குறீங்களே அந்த கட்சிக்கா?"
"நான் எல்லாக் கட்சி பேச்சையும்தான் கேட்கிறேன்... நீங்க எதுக்கு ஒரு குறிப்பிட்ட கட்சியோட ஆள்ன்னு மட்டும் என்னை பாக்குறீங்க..."
"அப்படியா... எல்லா கட்சி பேச்சையும் கேக்குறீங்களா... சரித்தான்... ஆமா எல்லாக் கட்சியிலயும் தலையில மைக்கை மாட்டிக்கிட்டு ஒரு ஆள் பேசுறாரா என்ன... நான் கவனிக்கலையே..?"
"அது... அது எதுக்குங்க இப்ப... பேரம் பேசி படியாம இப்ப அங்கிட்டுப் போயிருக்கான்... இவனெல்லாம் தமிழகத்தை காக்கப் போற முதல்வரா..? மதுவை ஓழிப்போம்ன்னு சொல்றவனுங்களோட முதல்வர் வேட்பாளர் மப்புல இருக்கவருல்ல..." சிரித்தார்.
"இருங்க... மத்த எந்தக் கட்சி வந்தாலும் மதுவையும் சாதியையும் ஒழிச்சிருமா?"
"ஆமா கிழிப்பானுங்க.. அதை வச்சித்தானே அரசியல் பண்ண முடியும்..." இடையில் புகுந்தார் அறை நிர்வாகி.
"நல்ல செயல் திட்டங்களோட வர்றவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கணுங்க... விஜயகாந்த் மாதிரி ஆளுங்களை அரசியல்ல இல்லாமப் பண்ணனும்..."
"ஒத்துக்கிறேங்க... விஜயகாந்த் நிலை இல்லாதவர்தான்... தண்ணி வண்டியாவும் இருக்கட்டும்... அந்தாளை தமிழக மக்கள் விரட்டி அடிக்கட்டும்... அப்படியே அம்மா, அய்யா... அப்புறம் சாதி அரசியல் பண்ற எல்லாரையும் விரட்டிட்டு மக்களுக்காக பாடுபடுற ஒருத்தரை தலைவராக்கட்டும்... அந்த ஒருத்தரை எங்க தேடுவீங்க... தேடித்தான் பிடிச்சிட முடியுமா... ஆ...ஊன்னா சகாயத்தை முன்னிருத்துவீங்க... அவரு மட்டும் இந்த பாழப்போன தமிழகத்தை சோலை ஆக்க முடியுமா என்ன...?"
"அதுக்குத்தாங்க இருக்கவங்கள்ல மக்கள் நலம் காக்கப்போற புதியவங்ககிட்ட ஆட்சியைக் கொடுங்கன்னு சொல்றோம்..."
"ஆமாங்க விஜயகாந்த் மட்டுமில்ல... வைகோ, திருமா, கம்யூனிஸ்ட் என யாருமே இதுவரை ஆட்சி செய்யலை... அவங்களும் புதியவங்கதானேங்க... இந்த முறை மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு கொடுப்போம்..."
"அது எப்படிங்க... வைகோ திருமா எல்லாம் அரசியல்ல பழம் தின்னு கொட்டை போட்ட பெருச்சாளிங்க... களவாணிப் பயலுக கூட்டணிங்க அது... சந்தர்ப்பவாத கூட்டணி... நாளைக்கே அம்மா புகுந்து அத்து விட்டுரும் பாத்துக்கங்க..."
"அம்மா புகுந்தா ஆமை புகுந்த மாதிரியின்னு சொல்றீங்க... சரி விடுங்க... நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே... உங்க தலைமை இருக்காரு பாருங்க... ரொம்ப சுத்தம் இல்லைங்களா... இதுவரைக்கும் கேவலமான அரசியல் பண்ணியதே இல்லை... சாதி அரசியல் பண்ணியதே இல்லை... மக்களுக்காக தன்னோட சொத்தை அழிச்சு அரசியல் பண்ணிட்டு இன்னைக்கு குடிசையில இருக்காரு இல்லீங்களா... அட ஏங்க சும்மா பேசிக்கிட்டு... எல்லாப் பயலும் ஒரே குட்டையில ஊறுன மட்டைதானேங்க ... இன்னைக்கு செண்ட் அடிச்சிக்கிட்டு லவ்பெல்லாகிய நான்னு சொன்னா...."
"நீங்க ரொம்ப பேசுறீங்க... உங்களுக்கு விஜயகாந்தை தூக்கிப் பேசணும்... அதுக்காகத்தானே அரசியல் பேச வாறீங்க..."
"ஆமா... அவரை நாந்தான் தூக்கணுமாக்கும்... அதான் எங்க போனாலும் அவரைத் தூக்க ஆள் போகுதுல்ல... அவரும் அடிக்கிறாரு... பக்கத்துல இருக்க ஆளுகளையும் அடிக்கிறாரு... நமக்கு எந்தக் கட்சியும் இல்லைங்க... மாட்ச் வேற சுவராஸ்யமாப் போகுது... என்ன மாப்ள லாஸ்ட் ஓவரா... எத்தனை ரன் தேவை...11 ரன்னா... பெங்காலி ஜெயிச்சிப்புட்டானுங்க போ... நாளைக்கு சைட்ல மஞ்சப்பொடிக ஆட்சியாவுல இருக்கும்... லீவைப் போட்டுற வேண்டியதுதான்.... அட என்ன இது இவனைப் போடச் சொல்றான்... அட நம்ம கேப்டன் கூட அட அண்ணன் சொல்ற மாதிரி புதிய ஆளுக்கு குடுத்துப் பாக்குறான்... முயற்சி திருவினையாக்குமா..." எனச் சிரித்தபடி சீரியஸாக டிவியைப் பார்க்க ஆரம்பித்தான்.
அவர் மீண்டும் விவாதமேடைக்குள் நுழைந்திருந்தார்.
முதல் பந்து 1 ரன்...
இரண்டாவது மூன்றாவது பந்தில் முறையே 4, 4...
"ம்க்கும்... புது ஆளு போடுறான் பாரு... முடிச்சிட்டானுங்க... 3 பால்ல 2 ரன்... பெங்காலிக குதிக்கப் போறானுக... வடிவேல் ஜோக்கு மாத்தி விடுங்கப்பா" என்றார் அறை நிர்வாகி.
"இருங்க... டைகர்லாம் குதிக்கிறதைப் பார்க்க வேண்டாம்..."
நாலாவது... ஐந்தாவது பாலில் விக்கெட்... 1 பால் 2 ரன்... மக்கள் நலக் கூட்டணி போல் பவுலருடன் தீவிர ஆலோசனையில்...
கடைசிப் பந்து...
தோனி, நேஹ்ரா ஐடியாப்படி வீசப்படுகிறது... பெங்காலி சுத்துறான்...
'ஒண்ணு ஓடிருவானுங்க... மாட்ச் டை ஆகும்...' என பெட்டில் குத்தினான் எதிர் பெட்டுக்காரன்.
பந்து தோனி வசம்... பேட்ஸ்மேன் ஓட... எதிர் பேட்ஸ்மேன் எல்லைக்குள் வருவதற்குள் தோனி விரைந்தோடி ஸ்டம்பிங் செய்ய...
மூன்றாவது நடுவரிடம் கேட்கப்படுகிறது...
திக்..திக்... நிமிடங்கள்....
மூன்றாவது நடுவர் அது அவுட்டுத்தாய்யா... எதுக்கு பயலுகளை படப்பட்டப்பா நிக்கச் சொல்லியிருக்கே... போகச் சொல்லுங்கிறேன்ன்னு சாலமன் பாப்பையா மாதிரிச் சொல்லிவிட....
பரபரப்பான போட்டியில் இந்தியா வெற்றி...
"அட புது ஆளு கூட ஜோரா இந்தியாவை காப்பாத்திட்டான்யா... அப்ப மக்கள் நலக் கூட்டணிக்கு ஓட்டுப் போடச் சொல்லுங்கப்பா... இந்த கேப்டன் இந்தியா மானத்தைக் காத்தது மாதிரி நம்ம கேப்டன் தமிழகத்தைக் காப்பாரு..." என்றான் சத்தமாக.
"ஆமா கிழிச்சாரு..." என்றார் அறை நிர்வாகி.
"மாப்ள மாட்ச் பாத்து படபடன்னு இருக்கு... இப்படியெல்லாம் ஜோக் அடிக்காதே படக்குன்னு போனாலும் போயிருவேன்... அப்புறம் உந்தங்கச்சிக்கு சண்டை போட ஆளில்லாமப் போயிரும்" என்றான் எதிர் பெட்...
அவர் ஒன்றும் பேசாமல் கணிப்பொறி திரையைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார். ஒருவேளை 'ஒளிமயமான தமிழகத்தை சமைப்போம்'ன்னு பேசியிருப்பானுங்களோ என்னவோ....
நன்றி இணையத்தில் இருந்து எடுத்த படங்களின் உரிமையாளர்களுக்கு...
நன்றி இணையத்தில் இருந்து எடுத்த படங்களின் உரிமையாளர்களுக்கு...
-'பரிவை' சே.குமார்.
4 எண்ணங்கள்:
ரசித்தேன். எல்லோரும் யாரோடும் கூட்டணி சேராமல் தனித்தனியாய்த் தேர்தலில் நின்றால் எப்படி இருக்கும்!
நல்ல மேட்ச் அன்று. ஆனால் வாங்க தேசத்துடன் போய் இப்படி செத்துச் செத்து ஜெயிக்க வேண்டியதாகிப் போனதே...!!!
இன்று என்னமோ நல்ல நாள். தம வாக்கு சட்டென விழுந்து விட்டது!
அறையில் அலப்பறை நல்லாத்தான் போகு''தூ''
தமிழ் மணம் 3
யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் ,குதிரைப் பேரம் படிந்த பின் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மலரலாம் !
மக்கள்நலக்கூட்டணியும், இங்கு நீங்கள் கொடுத்திருக்கும் அந்தப்படம் பயமுறுத்துகிறது அஹஹஹ்...அலப்பறை ரசித்தோம்
கீதா
கருத்துரையிடுக