மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 14 மார்ச், 2012

அக்னி வளையம்



 காலையில் எழும்போதே பக்கத்து வீட்டில் ராமசாமி கத்திக் கொண்டிருந்தான். இது தினமும் நடக்கும் கதைதான்... பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு அவன் பேச்சுத்தான் திருப்பள்ளி எழுச்சி. விடியும் போதே அவனுக்கு எப்படி சரக்கு கிடைக்குமோ தெரியலை. ஒருவேளை ராத்திரி குடிக்கும் போது மிச்சம் வைப்பனோ... இல்லை அவனுக்காக காலையிலயே கடையை திறந்து வச்சிருவாங்களோ என்னவோ.. சரி நமக்கு எதுக்கு இந்த ஆராய்ச்சி. பக்கத்துல வீடுக இருக்கு அதுலயும் மனுசங்க இருக்காங்கன்னு அவனுக்கு தோன்றதே இல்லை.

குடிச்சிட்டு வந்துட்டா... வந்துட்டா என்ன எப்பவும் தண்ணிதான். வாயில வந்த வார்த்தையெல்லம் பேசுவான். அவன் பொண்டாட்டி பாக்கியத்துக்கு ஊரில் உள்ளவனையெல்லாம் புருசனாக்கிப் பேசுறதுதான் அவனது வேலை. இரண்டு பெண் பிள்ளைகளுக்கு அப்பன் என்பதை மறந்து தண்ணியே உலகம் என வாழும் மிருக மனிதன் அவன். பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் அவனிடம் பேசுவதை தவிர்த்து வந்தார்கள். பலர் அவனைப் பார்த்தால் நரகலை மிதித்ததுபோல் ஒதுங்கிப் போவார்கள்.

அவன் பொண்டாட்டி பேருதான் பாக்கியம் ஆனால் வாக்கப்பட்டு வந்த நாள் முதலா அவள் படும்பாடு சொல்லி மாளாது. யார்க்கிட்டயாவது சிரித்துப் பேசினால் போதும் அவனை வச்சிருக்கியான்னு கேட்டு அடிப்பான். ஆரம்பத்தில் புன்னகை சுமந்து இருந்த அவள் முகம் இப்பல்லாம் எதையோ இழந்தது போல் எப்பவும் வெளிறியே இருக்கிறது. முன்பெல்லாம் அவனிடம் எதிர்த்துப் பேசி வாங்கிக் கட்டிக்கொள்வாள்.ஆனால் இப்ப ரொம்ப பழகிட்டா அவன் பேசும் போது எதுவும் பேசுவதில்லை. எருவ மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி அவ பாட்டுக்கு வேலையப் பாக்க ஆரம்பிச்சிட்டா.

ஊருல உள்ள எல்லார்கூடவும் அவனை இணைச்சுப் பேசிட்டான். ஏன் ஒருநாள் என்னையக்கூட அவ புருஷன்னு சொன்னான். கேட்டுக்கிட்டு இருந்த நான் கோபப்பட்டு அவனை அடிக்கப் போக, அந்தக் குடிகாரனப்பத்தித்தான் தெரியுமே அவன் பேசுறதை கேட்டு சண்டைக்குப் போனா நமக்குத்தான் அசிங்கமுன்னு சொல்லி என் பொண்டாட்டி தடுத்துட்டா. எல்லார்கூடவும் இணைச்சிப் பேசினாலும் மில் முதலாளி ராஜகோபால்கூட மட்டும் இணைச்சிப் பேச மாட்டான். ஏன்னா பாக்கியம் அங்கதான் வேலை பாக்குறா. அவ வேலைக்குப் போகமா பொயிட்டா செலவுக்கு எங்க போறது அதனால அவரை மட்டும் திட்டமாட்டான்.

இரண்டு வீட்டுக்கும் இடையில் இருக்கும் முள் தட்டியின் ஓரமாக முகம் கழுவியபடி மெதுவாக எட்டிப்பார்த்தேன். குழந்தைகள் இருவரும் அப்பன் பேசுவதை சட்டை செய்யாமல் பள்ளிக்கு கிளம்புவதில் குறியாக இருந்தார்கள். வாசலில் போட்டிருந்த விறகடுப்பில் பாக்கியம் எரியாத விறகை ஊதிவிட்டுக் கொண்டிருந்தாள். ராமசாமி மாட்டுத் தொட்டிலின் மேல் அமர்ந்து அவிழ்ந்த கைலியை இடுப்பில் கட்டாமல் ஒரு கையால் பிடித்துக் கொண்டு இருந்தான்.மறு கையில் பீடி புகைந்து கொண்டிருந்தது.

"கோத்தா... ஊரு... மேயுரியாடி ஊரு... அந்த பரமுப்பயகூட உனக்கு... என்னடி பேச்சு. பரதேசி முண்ட... நா... காசு கேட்டா இல்லயின்னு சொல்லிட்டு... மீனு வாக மட்டும் காசு.... காசு எப்படிடி வந்துச்சு... அந்த நாயி கொடுத்தான்னா..." நா குழற கத்தினான்.

அவனை ஒரு பார்வை பார்த்தவள், மீண்டும் தனது வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.

"நாங்... கேக்குறது உன்னத்தாண்டி ஏ... மசுரு மவளே... நா... வெளியில பொயிட்டா... நிறைய தெரு நாயிங்க இங்கதான் கெடக்காமே... இ...ன்னை...க்கு.... இன்னைக்கு... நா... இங்கதாண்டி இருப்பேன்... எந்த நாயி வருதுன்னு... பாக்குறேன்..." சத்தமாக கத்தினான்.

அது என்னவோ தெரியலை...தண்ணி போட்டா பேசிக்கிட்டே இருக்கச் சொல்லும் போல... அதுவும் நல்லதை மட்டும் பேசாம மோசமான வார்த்தைகளை மட்டுமே பேசச் சொல்லும் போல... ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதம். எனக்கு ஒரு நண்பர் இருக்கார். அவர் மற்ற நேரங்களில் பேசும் போது நல்லா பேசுவார்... நல்லதையே பேசுவார். ஆனா தண்ணி உள்ள பொயிட்டா அவருக்கு இங்கீலீஸ் மட்டும்தான் வரும். அதுலயும் இந்த ஆக்சுவலி படும்பாடு இருக்கே... அப்பப்பா அவரு பேசுற கொச்சைப் பேச்சுக்கு முதல் முடிவு எல்லாத்துலயும் ஆக்சுவலி போடாம பேசமாட்டாரு.

"முகம் கழுவியாச்சா... காப்பி ஆருது வாங்க..." என்ற குரல் கேட்டது. எங்க நான் பாக்குறது அவனுக்கு தெரிஞ்சு சத்தம் போட்டுடுவானோன்னு பயத்துல எம் பொண்டாட்டி கூப்பிட்டா. நான் அங்கு நடப்பதைப் பார்க்க இலகுவாக படிக்கட்டில் சாய்ந்து அமர்ந்தவாறு காபி குடிக்க ஆரம்பித்தேன்.

"எ.... என்னடி நா... எது கேட்டாலும்... நீ பேச மாட்டேங்கிறே... அவ்வளவு திமிராடி... உனக்கு... உடெம்பெல்லாம் கொழுப்பாயிருச்சிடி உனக்கு..."

"இப்ப என்ன வேணும் உனக்கு?" பாக்கியம் வாய் திறந்தாள்.

"உனக்கும்... பரமுப்பயலுக்கும்... என்னடி கூட்டு...? அதைச் சொல்லுடி..."

அவள் பதில் சொல்லாமல் இருக்கவும் " சொல்ல மாட்டேடி... சொல்ல மாட்டே... எப்படி கள்ளப் புருஷனை... காட்டிக் கொடுப்பே..." அவனாகவே சொல்லிக் கொண்டான்.

"அம்மா... நாங்க பள்ளிக்கொடத்துக்குப் போறோம்" என்றபடி மறக்காமல் தட்டை எடுத்து பைக்குள் வைத்துக் கொண்டு கிளம்பினர். இப்ப எங்க ஊர்ல எல்லாருடைய பிள்ளைகளும் இங்கீலிஸ் மீடியத்துல படிக்குதுங்க. பாக்கியம் அப்புறம் இன்னும் சிலர் பிள்ளைகளும் பக்கத்து ஊர் பிள்ளைகள் சிலரும்தான் எங்கள் ஊர் ஆரம்பப் பள்ளியில் படிக்குதுங்க. மொத்தமே பத்துப் பதினோரு பிள்ளங்கதான் இருக்கும். அஞ்சாப்பு வரைக்கும் ஒரே வாத்தியார்தான்.

ஒரு தடவை நாங்கூட பாக்கியத்துகிட்ட ' என்ன பாக்கியம் பிள்ளைங்க படிப்பு ரொம்ப முக்கியம்... நல்ல ஸ்கூல்ல சேர்த்தா என்னனு கேட்டப்போ, அட ஏங்கண்ண நீங்க வேற... நாஞ் சம்பாரிக்கிற காசுல அந்தாளு குடிச்சது போக எதோ மிஞ்சிது அதுல அதுகளுக்கு நல்ல கஞ்சி காச்சிக் கொடுக்க முடியலை...எதோ ஒரு நேரமாவது நல்ல சாப்படு கிடைக்குதுன்னு அனுப்புறேன். அதுக தலயெழுத்து எப்படியோ அதுபடி நடக்கட்டும்ன்னு கண்கலங்க சொல்லிச்சு. அப்ப நா ஆறாப்புக்கு எங்க ஸ்கூல்ல செலவு இல்லாம படிக்க ஏற்பாடு பண்ணுறேன்னு சொன்னேன்.

"ஆமா... இவுக கலெக்கிட்டருக்குப் படிக்கிறாங்க... படிக்கிறாவளாம்... படிக்கிறாவ... ரொம்ப முக்கியம்..." அவன் கத்தலை அவர்கள் கண்டு கொள்ளாமல் கிளம்பினர். பெண் பிள்ளைகள் அப்பா மேலதான் பாசமாக இருக்கும் என்று சொல்வார்கள். நானும் அதை அனுபவித்து இருக்கிறேன். மனசுக்குள் பாசம் இருந்தாலும் மிருகமாகிப் போன அப்பா நமக்கு தேவையில்லை என்பது போல அந்தப் பிள்ளைகள் நடந்து கொண்டது எனக்கே கஷ்டமாக இருந்தது. இந்த வயதில் அரவணைக்கும் அப்பா வேண்டும் என்று எல்லாக் குழந்தைகளும் நினைக்கும்... பாவம் அவர்கள்.

பிள்ளைகள் சென்ற சில நிமிடங்களில் பாக்கியமும் வேலைக்குக் கிளம்பினாள். " நான் வேலைக்குப் போறேன்... கஞ்சியிருக்கு... ஊத்திக்குடிச்சிட்டு இங்க இருந்தாலுந்சேரி... வெளிய போனாலுஞ்சேரி... வெளிய போனாக்க தட்டிய இழுத்துவிட்டுட்டுப் போ" என்றபடி அவன் பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பினாள்.

"துத்தேரி... ஊரு மேயப் போகுது... வரட்டும்... சாயங்காலம் வச்சுக்கிறேன்..." என்றபடி அப்படியே தரையில் படுத்தான். இனி எப்ப எந்திரிக்கிறானோ அப்போ மீண்டும் அவனுக்கு சரக்கு அடிக்கணும்... சரி நம்ம கிளம்புற வேலைய பாப்போம் என்றபடி எழுந்தேன்.

"எதுக்கு தேவையில்லாத வேலை...அவன் பாத்திருந்தா இந்நேரம் நாரத்தனமா பேசியிருப்பான்" என்றாள் என் தர்மபத்தினி.

"பாவம்டி அந்தப்புள்ள.. கட்டுன நாள் முதலா இந்தக் கஷ்டத்தைதான் அனுபவிக்குது... அதுக்கும் ஆசாபாசம் இருக்காதா... என்ன. மத்த பொம்பளைகளைப் பார்க்கும் போது இப்படியெல்லாம் நாமும் இருக்கணுமின்னு நினைப்பு வருமில்லையா? அந்தப் பிள்ளைகளைப் பாரு நம்மளையும் அப்பா வண்டியில கூட்டிப்போகணும் அப்படி இப்படின்னு எண்ணம் வருமா இல்லையா... நா... அவங்கிட்ட பேசுறேன்... திருந்துறானான்னு பாப்போம்..."

"எதுக்கு உங்களுக்கு வேண்டாத வேலை... நாளக்கி உங்களுக்கு அர்ச்சனை பண்ணுவான். நம்ம வேலய பாருங்க..."

"இப்படி எல்லாரும் ஒதுங்கி ஒதுங்கிப் போறதாலதான் அவன் இவ்வளவு கேவலமா நடந்துக்கிறான்... அந்த பிள்ளங்க முகத்துக்காக நா... அவங்கிட்ட பேசுறேன்... என்ன தலைய ராவிப்புடுவானா... பாக்கலாம்..."


ன்றைய பணியில் மூழ்கியதால் ராமசாமி குறித்த எண்ணம் எனக்குள் தோன்றவேயில்லை. மாலை வரும்போதுதான் பாக்கியம் ஞாபகம் வந்தது. எப்படியும் ராமசாமிகிட்ட பேசியாகணும் என்று நினைத்துக் கொண்டேன்.

ஆற்றங்கரையில் வந்து திரும்பும்போது ராமசாமி நடந்து போவது தெரிந்தது. அவனருகில் வண்டியை நிறுத்தி ஏறுப்பா என்றேன்.

"இல்ல... நீங்க போங்க... நா... நடந்து வாறேன்."

"அட... சும்மா ஏறுப்பா... அங்காளி பங்காளியா இருந்துக்கிட்டு... எவ்வளவு தூரம் நடப்பே... வா" என்று நான் விடாமல் வற்புறுத்த ரொம்ப பவ்யமாக ஏறினான்.

வண்டி மெதுவாக போய்க்கிட்டு இருந்தது... எப்படி பேச்சை ஆரம்பிக்கலாம் என்று யோசித்தபடி வண்டியை ஓட்டினேன். சரி ஆனது ஆகட்டும் என்ன நடந்தாலும் சரியின்னு 'ஏம்ப்பா எதாவது வேலைக்குப் போகலாமே?' மெதுவாக பேச்சை ஆரம்பித்தேன். அவனிடமிருந்து பதில் வரவில்லை.

"என்னப்பா... நா... கேட்டதுக்கு பதிலைக் காணோம்..."

"என்ன வேல இருக்கு?" திருப்பி அடித்தான்.

"என்னப்பா நீ... படிச்சவனாட்டம் நா படிச்சபடிப்பு வேலையில்லையின்னு சொல்லுறே... செங்கக் காலவாய், மண் அள்ளுறது, வயல் வேல... ஏன் மில் வேலை இப்படி எதாவது ஒண்ணப் பாத்த பத்தாதா..."

"...."

"ரெண்டு பொம்பளப் பிள்ளைங்களுக்கு தகப்பன் காலையில இருந்து இரவு வரை குடி கூத்தியான்னு இருந்தா குடும்பம் என்னத்துக்கு ஆகுறது..." நேரடியாக கேள்வியைத் தொடுத்ததேன்.

"அட்வைஸ் பண்ணத்தான் சும்மா போனவன வண்டியில ஏத்துனியளோ... வண்டிய நிப்பாட்டுங்க..."

"இரு... எதுக்கு இம்புட்டு கோவம்... குடியால குடி மட்டுமில்ல உன் உடம்பும்தானே கெட்டுப் போகும்... சொல்லு"

"..."

"இங்க பாரு உனக்கு பாக்கியம் மாதிரி ஒரு பொண்டாட்டி அமைஞ்சது கடவுள் கொடுத்த வரம்... அதை கெடுத்துக்காதே. உன் பிள்ளைகளை நெனச்சுப்பாரு... இன்னைக்கு இந்த வாழ்க்கை இனிக்கும்... ஆனா ரெண்டும் வயசுக்கு வந்து கல்யாணத்துக்கு காத்து நிக்கும்போது இந்த வாழ்க்கையால என்ன செய்ய முடியும் சொல்லு... பாக்கியம் பாக்குற வேலை ஒரு நேரம் கஞ்சிக்கு மட்டும்தான் உதவும். உதவாக்கரை ஆம்பளைய வச்சிக்கிட்டு அது எப்படி ரெண்டு பொட்டப்புள்ளகள கரையேத்த முடியும்... யோசிப்பா... நா உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்..."

"இங்க பாருங்க... எனக்குத் தெரியும் எது நல்லது எது கெட்டதுன்னு... அடுத்தவங்க சொல்லித்தான் தெரியணுமின்னு இல்ல... வண்டிய நிப்பாட்டுங்க..."

"இல்லப்பா... எதுக்கு சொல்லுறேன்னா..."

"யோவ் ஒரு மயிரும் புடுங்க வேண்டாம்... எனக்குத் தெரியும் உன் வேல என்னவோ அதை மட்டும் பாரு... புள்ளங்களுக்கு மட்டும் பாடம் எடு போதும் எனக்குப் பாடம் எடுக்க வேண்டாம்... நீ எடுத்தாலும் எனக்கு ஏறாது... எனக்கு ஏறுற ஒரே விசயம் போதை மட்டும்தான்... புரியிதா.. சொந்தக்காரன்னு பாக்கிறேன் இல்லேன்னா இந்நேரம் பொழந்திருப்பேன்... பொழந்து... ஞாயம் பொழக்க வந்துட்டாக... வண்டிய நிறுத்துய்யா..."

இதுக்கு மேல் பேசினாலும் நல்லது இல்லை... அவனை இறக்கிவிடுவதே இப்போதைக்கு நல்லது என்று வண்டியை நிறுத்தினேன். இறங்கியதும் இடுப்பில் சொருகியிருந்த பாட்டிலை எடுத்து கடகடவென்று குடித்தான். நாம நின்னா எதாவது ஏழரையை கூட்டுவான் என்பதால் கண்டு கொள்ளாதது போல் வண்டியை கிளப்பினேன்.



"என்ன வாத்தியாரே... பக்கத்து வீட்டு பரதேசிக்கு கிளாஸ் எடுத்தீங்களோ" என்றபடி அருகில் வந்தாள் என்னவள். படித்துக் கொண்டிருந்த பொன்னியின் செல்வனை விடுத்து அவள் பக்கம் திரும்பி " ஆமா அதுக்கென்ன இப்போ?" என்றேன்.

"வெளியில இப்பதான் உங்களுக்கு கச்சேரி ஆரம்பிச்சிருக்கான். போய் பாருங்க... எதுக்கு உங்களுக்கு தேவையில்லாத வேலை... மனுசனுக்கு அட்வைஸ் பண்ணலாம் ஜடத்துக்குப் பண்ணலாமா... நீ கையில வச்சிருக்கிறது பீயின்னு சொன்னா இல்ல சந்தனமுன்னு மாருல தேக்கிற மூதேவி அவன்... அவனுக்கு எதுக்குங்க உபதேசமெல்லாம்.... சரி கச்சேரி களை கட்டுது... வாங்க"

வெளியில வந்ததும் அவன் பேசுவது நன்றாக கேட்டது. "என்னடி பரமு கசந்துட்டானோ பக்கத்து வீட்டுக்காரனை பிடிச்சிருக்கே... நீ சொல்லாமயா அவன் எனக்குப் புத்தி சொல்லுறான்... கோத்தா அவன தூக்கிப் போட்டு மிதிச்சிருப்பேன்... சரி வாத்தியாரா இருக்கான்னு விட்டுட்டேன்... உம்மேல அம்புட்டு கரிசனம் அவனுக்கு எப்படிடி வந்துச்சு..." அவன் எதேதோ பேச இதெல்லாம் மண்டை மண்ணுக்குள்ள போற வரை திருந்தாது என்று நினைத்துக் கொண்டேன்.

பாவம் பாக்கியம் அவள் என்ன செய்வாள்... அவளுக்கு விதிச்ச விதி இது... அனுபவித்துத்தானே ஆகணும். எனக்கு அத்ற்குமேல் அங்க நிற்கப் பிடிக்காமல் வீட்டுக்குள் சென்றேன். என்னவோ தெரியலை 'இறைவா... அந்தப் பெண்ணுக்கு நிரந்தர விடுதலை கொடுன்னு' ஊரு எல்லயில இருக்க சுடலைமாடனுக்கிட்ட வேண்டிக்கிட்டேன்.

-'பரிவை'சே.குமார்.

Thanks : image from google

7 எண்ணங்கள்:

SELECTED ME சொன்னது…

நாலு வார்த்தை

மனோ சாமிநாதன் சொன்னது…

மிக யதார்த்தமான சிறுகதை. கிராமங்களில் இன்னும் இந்த மாதிரி கதை நடந்து கொன்டு தானிருக்கிறது!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கதை அருமை ! நன்றி நண்பரே !

ராஜி சொன்னது…

தங்கள் தளத்துக்கு இண்றுதான் முதல் வருகை. அக்கினி வளையம் படித்தேன் அருமை. எளிய சொற்களால் மனதை நெகிழ வைத்த பதிவு. வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி

சென்னை பித்தன் சொன்னது…

ஒரே ஒரு விடுதலைதான் நிரந்தரம்!அருமை குமார்.

Asiya Omar சொன்னது…

வாங்க தம்பி,அருமையான எழுத்து நடையோடு பட்டையைக் கிள்ப்பிட்டீங்க.இனி மனசில் இருந்து தொடர்ந்து அருமையான படைப்புக்களை எதிர்பார்க்கலாம்.கண்முன்னாடி அப்படியே கதையை படம் பிடித்து காட்டியது சூப்பர்.உங்களுக்குள் ஒரு இயக்குனர் ஒழிஞ்சிகிட்டு இருக்கார் போல.

ஹேமா சொன்னது…

குடிகாரரை ஊரில் கண்டிருக்கிறேன்.முதலேயே விளங்கிக்கொண்டேன் இப்பிடித்தான் முடியுமென்று.நீங்கள் சொன்னவிதம் நேரே பார்ப்பதுபோல இருக்கிறது.பாக்கியம்கள் பாவப்பட்டதுகள் !