மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

கருத்தப்பசு


கண்ணப்பக் கோனாருக்கு எப்பவும் கருப்பு மேல அப்படி ஒரு ஈர்ப்பு. அவருக்கு வாச்ச மதுரவல்லியும் கருப்புதான். அந்த வகையில அவருக்கு ரொம்ப சந்தோஷம். தன்னோட பொண்டாட்டி மேல அவ்வளவு உயிரா இருப்பாரு. அவரோட தாத்தா காலத்துல இருந்தே நில நீட்சி, ஆடு மாடுன்னு வாழ்ந்து வரும் குடும்பங்கிறதால சின்ன வயசுல இருந்தே ஆடு மாடு வளக்கிறதுல அவருக்கு ரொம்ப ஆர்வம். எல்லா மாட்டு மேலயும் பாசமிருந்தாலும் அவரோட கவனிப்பெல்லாம் அந்த கருத்தப்பசு கருப்பாயி மேல மட்டுதான் என்பது எல்லாருக்கும் தெரியும்.

கருத்தப்பசு... இதே வீட்டுல இருந்த மயிலப்பசுவோட வாரிசுதான். மயிலப்பசு இத பிரசவிச்சப்போ கலரைப் பாத்துட்டு இவருக்கு ரொம்ப சந்தோஷமாயிடுச்சு. இதுக்கு முன்ன பின்ன போட்ட கன்னுக்குட்டியெல்லாம் வெள்ளை, மயிலை, செவலைன்னு வேற வேற கலரு... இது மட்டும் அமாவாசை இருட்டை கரைச்சு ஊத்தின மாதிரி அப்படி ஒரு கருப்பு. உடனே அதுக்கு கருப்பாயின்னு பேரு வச்சிட்டாரு. அப்புறம் கருப்பாயிதான் அவருக்கு எல்லாம் ஆயிப்போச்சு. குளிக்கப் போறப்போ அதையும் கொண்டு போயி கம்மாயில போட்டு நீந்தவிட்டு குளியாட்டி கொண்டு வருவாரு. அதுக்கு அவரு பொட்டு வக்கிற அழகே தனிதான். நல்ல கருத்த முகத்துல செவப்புப் பொட்டை வச்சா எடுப்பா தெரியாதுங்கிறதால முதல்ல விபூதிய எடுத்து நல்லா ரவுண்டா தடவிடுவாரு.... சில நாள் இன்னும் அழகா இருக்கணுமின்னு நினைச்சா மஞ்சளை கலந்து தடவிட்டு அது மேல குங்குமத்தால மாங்காய், முக்கோணம், ரவுண்ட் என ஒவ்வொரு நாளும் ஒண்ணு ஒண்ணு வைப்பாரு.

ஆரம்ப காலங்கள்ல அவரும் மதுரவல்லியும் தோட்டத்துக்கு காலையில போறப்போ எல்லா மாட்டையும் கொண்டு போய் கட்டி மேயவிட்டுட்டு வய வேலைகளை பார்ப்பாங்க. நிறைய வேலை இருக்கற அன்னைக்கு வேலைக்கு ஆள் வரச்சொல்லி பார்ப்பாரு. அவரு குணம் தெரிஞ்சதால அவரு வீட்டு வேலைக்கு வர எல்லாரும் ரெடியா இருப்பாங்க. அதனால அவருக்கு ஆள் பிரச்சினை எப்பவும் வராது. மதுர வல்லி தினமும் வேலையோட வேலையா மாடுகளுக்கு புல்லும் அறுத்து அழகா கட்டி வச்சிடும். வாரப்போ அவரு மத்த சாமன்களை எடுத்துக்கிட்டு மாடுகளை ஓட்டிக்கிட்டு வர, மதுரவல்லி புல்லுக்கட்டை சுமந்துகிட்டு வரும். அப்பவும் அவரு கையில பச்சைப் பசேர்ன்னு சின்ன புல்லுக்கட்டு இருக்கும். அது அவரோட கருப்பாயிக்கு மட்டும். அதான் இந்த புல்லுக்கட்டு இருக்குல்ல அப்புறம் எதுக்கு தனியா... ஒண்ணா கட்ட வேண்டியதுதானேன்னு மதுரவல்லி கேட்டா, இது என் செல்லத்துக்கு என்று சொல்லி தனியாத்தான் கொண்டு வருவார்.

வருஷங்கள் வந்து போக, கருப்பாயியும் வளர்ந்து கிடேரியாயிடுச்சு. அதோட ஆத்தா நல்ல ஒசரமா இருக்கும். ஆனா இது குட்டையாவும் இல்லாம ஒசரமாகவும் இல்லாம இருந்தது. எங்க போனாலும் கண்ணப்ப கோனாரோட கருப்பாயிங்கிற கொரலைக்கேட்டா நின்னு திரும்பிப் பாக்கும். அது மாதிரி அவரு ரெண்டு மூணு நாளைக்கு எங்கயாவது பொயிட்டு வந்தா வந்த உடனே அதை பாக்க கசாலைக்கு போயிடுவாரு... அவரைப் பாத்ததும் அங்கிட்டும் இங்கிட்டுமா மருகும்... மூசு மூசுன்னு மூச்ச விடும்... அவரோட கைய முகத்துல வச்சதும் அதோட முகத்தைக் கொண்டாந்து அவரு உடம்போட வச்சி தேச்சுக்கும். அப்ப சத்தமா கத்தாம சின்னதா ஒரு கொரல் கொடுக்கும். அவருக்கு மட்டும்தான் அந்த பாசத்தோட அர்த்தம் புரியும். இதை ஆரம்ப காலத்துல பாத்த மதுரவல்லி ஆத்தே... மனுசங்க மாதிரியில்ல கொஞ்சுது. பிள்ளைங்க அப்பானுட்டு பலகாரப் பையை பாக்குதுங்க... இது என்னடான்னா மனுசனை மோந்து மோந்து பாத்துல்ல கத்துதுன்னு வாய் விட்டே சொல்லிட்டா. இதுதான்டி பாசமுன்னு பெருமை பட்டுக்கிட்டாரு.

கருப்பாயி செனையான நாளுல இருந்து அதை பாத்துப்பாத்து கவனிச்சாரு... முதக் கன்னு போடப் போகுது அதனால நல்ல தெம்பா இருக்கணுமினுட்டு புல்லோட தீவனமெல்லாம் வாங்கியாந்து ஊற வச்சிப் போட்டாரு... மதுரவல்லிகிட்ட சொல்லி பச்சரிசி கஞ்சி காச்சி அவரே அதுக்கு வச்சி பக்கத்துல உக்காந்து கலக்கி கலக்கி விட்டு குடிக்க வச்சாரு... அதோட வயித்துக்குள்ள கன்னுக்குட்டி முட்டுறப்போ இவரு தடவிப்பாப்பாரு... ஆரம்பத்துல வயித்துல முட்டின கன்னுக்குட்டி நாள் நெருங்க நெருங்க இடுப்புப் பகுதியில முட்ட ஆரம்பிச்சாச்சு, எலும்பெல்லாம் அமுங்கி தர்றாம் புர்றான்னு நடக்க ஆரம்பிச்சிருச்சு. மதுரவல்லி மோகனுக்கு இப்படித்தான் நடந்துக்கிட்டு திரிஞ்சா... அப்புறம் கவிதா பொறந்தப்போ கொஞ்சம் பரவாயில்லை அவ பொறக்குற வரைக்கும் கட்டுக்கட்டுன்னு வேல பாத்துகிட்டு திரிஞ்சா... அப்புறம் சரசு... அப்புறம் மணியின்னு நாலு பெத்துட்டா... கருப்பாயிய பாக்கும் போதெல்லாம் முத குழந்தைக்கு மதுரவல்லி இருந்த மாதிரிதான் அவருக்கு தோணுச்சி... அடுத்த கன்னுக்கு கொஞ்சம் தேறிடுமுன்னு நினைச்சிக்கிட்டாரு...

அந்தப் பக்கமா போனா வெள்ளத்தாயியை பாத்தவரு, சின்னத்தா நம்ம கருப்பாயி கன்னு போடுற மாதிரி நிக்கிது... படுக்கவும் எந்திரிக்கவுமா இருக்கு வந்து பாத்து எப்ப போடுமுன்னு சொல்லிட்டுப் போன்னு கூப்பிட்டு காட்டினாரு... அந்த ஊர்ல மாட்டு மருத்துவச்சி அதுதான்... யாரு வீட்ல கன்னு போட்டாலும் அதுதான் போயி லாவகமா காலைப் பிடிச்சு இழுத்து எடுத்துடும். அது வந்து பாத்துட்டு, ஏலேய்... சட்டமெல்லாம் வடிவாயிடுச்சி... நாளைக்கு மத்தியானத்துக்குள்ள கன்னு போட்டிடும்ன்னு சொல்லிட்டுப் போயிடுச்சு... ராத்திரியெல்லாம் தூங்காம அடிக்கடி எந்திருச்சுப் போயி பாத்துட்டு பாத்துட்டு வந்தாரு... சத்த படுங்க நாளைக்குத்தான் கன்னு போடுமுன்னு மதுரவல்லி எவ்வளவோ சொல்லியும் அவரை அவ காலையில பாத்தப்போ கண்ணெல்லாம் செவந்து போயித்தான் இருந்தாரு.

எப்பவும் புள்ளைங்க ஸ்கூலுக்குப் போறதுக்கு முன்னாடி தோட்டத்துக்கு போறவரு அன்னைக்கு புள்ளைங்க போயியும் வீட்டை விட்டு நகரலை. என்னங்க தென்னைக்கு உரம் வைக்கணுமின்னு சொன்னீங்க... போகலையா... என்று கேட்ட மதுரவல்லியிடம் பூமிய வக்க சொல்லியிருக்கேன். அவன் வந்து வச்சிருவான்... நான் சாயந்தரமா போயி பாத்துட்டு வாரேன் என்றார். இங்கயிருந்து என்ன பண்ணப் போறீங்க... என்னதான் நம்பிக்கையிருந்தாலும் நாம இருந்து பாக்கிறமாதிரி வருமான்னு சத்தம் போட, என்னடி நீ நம்ம கருப்பாயி கன்னு போடப்போகுது அதான் அப்புறம் போறேன். நீங்க இருந்து என்ன பண்ணப் போறீங்க... கன்னு போட்டா சொல்லிவிடுறேன், இப்ப கிளம்புங்கன்னு கிளப்பி விட்டுட்டா. தோட்டத்துக்கு போனாலும் கருப்பாயி நினப்புதான். 

யாராச்சும் அந்தப்பக்கமா சைக்கிள்ல வந்தா கன்னு போட்டுடுச்சோன்னு நினைப்பாரு. மத்தியானம் வீட்டுக்கு வந்தப்போ சின்னவன் சாப்பிட்டுகிட்டு இருந்தான். அம்மா எங்கடான்னு கேக்க, நம்ம கருப்பாயி கன்னுக்குட்டி போடுதாம். அம்மாவும் வெள்ள அப்பத்தாவும் பாத்துக்கிட்டு இருக்காகன்னு சொல்ல வேகமா ஓடினாரு... அங்க கருப்பாயி செவலைக் கலர்ல ஒரு காளைக்கன்ன போட்டுட்டு இவரைப் பாத்ததும் 'அம்மா'ன்னு அதோட சந்தோஷத்தையும் வலியயும் இவருகிட்ட பகிந்துக்கிச்சி... அதை தடவிக் கொடுத்தவரு, அது இளங்கொடி போடுற வரைக்கும் அதுகிட்டே இருந்து போட்டதும் அதை ஒரு சாக்குல வச்சு கட்டி நாயி நரி இழுக்காம ஆலமரத்துல கொண்டு போயி கட்டிட்டு வந்தாரு. அப்புறம் கருப்பாயியையும் குளிப்பாட்டி மஞ்சள் தடவி பொட்டு வச்சு கொண்டாந்து கட்ட, கன்னுக்குட்டிய குளிப்பாட்டிய மதுரவல்லி கருப்பாயிகிட்ட முத பாலை பீச்சினாள்.

இது இப்ப நடந்தது போல இருக்கு, அதுக்கப்புறம் எத்தனையோ கன்னு போட்டு இப்ப வயசாயி நிக்கிது கருப்பாயி... அதுகிட்ட முன்ன மாதிரி உடம்புல சதையெல்லாம் இல்லாம் எலும்பு தெரிய ஆரம்பிச்சிருச்சி... அது போட்டதுல ஒரே ஒரு பொட்டக் கன்னுக்குட்டி மட்டும் நல்ல கருப்பா இருந்துச்சி... அதுக்கு சின்னக் கருப்பின்னு பேரு வச்சிருந்தாரு. அதுவும் கன்னு போடுற நிலமயில இருந்துச்சு. இப்பல்லாம் முன்னமாதிரி புல்லறுத்துப் போடமுடியலை. விவசாயமும் பொய்த்துப் போச்சு. சும்மா கெடந்த நெலத்துல ஆரசுவதி மரங்களை வச்சி விட்டுட்டாரு... கவிதாவை கட்டிக் கொடுத்துட்டாரு... மோகனுக்கு தங்கச்சி மகளை பரிசம் போடலாமுன்னு மனசுக்குள்ள எண்ணமிருக்கு... சின்னது ரெண்டுக்கும் கொஞ்ச நாள் போகட்டுமின்னு நினைச்சிருந்தாரு.

கயித்துக் கட்டில்ல படுத்துக்கிட்டு மோட்டு வளையை வெறிச்சுக்கிட்டு இருந்தவரை மூத்தவனின் குரல் எழ வைத்தது. அவனுடன் மாட்டு வியாபாரி மனோகரன் நின்னுக்கிட்டிருந்தாரு... வாப்பா மனோகரா... நல்லாயிருக்கியா என்றார் கண்களை துடைத்தபடி. அப்பா நம்ம கருப்பாயிய கொடுத்துடலாமுன்னுதான் மனோகர் மாமாவ வரச்சொன்னேன். இப்ப என்னப்பா அதுக்கு அவசரம் அப்படின்னு மகனைப் பாத்து கேக்க, அம்மாவாலயும் பாக்க முடியலை, சின்னக் கருப்பி வேற கன்னு போடுற மாதிரி இருக்கு...இதுக்கும் வயசாயிக்கிட்டே போகுது... இப்ப செனையா இருக்கிறப்போ கொடுத்தா நல்ல வெல கிடைக்கிமுன்னு மாமா சொன்னாங்க. அம்மாகிட்ட கேட்டேன் கொடுத்துடலாமுன்னு சொன்னுச்சின்னு சொல்ல திரும்பி மதுரவல்லிய பாத்தாரு, ஒண்ணும் பேசாம நிக்க, நீயும் கொடுக்கனுமின்னு முடிவு பண்ணிட்டியா? மனைவியிடம் கேட்டபோது எதோ அழுத்த வார்த்தை வர சிரமப்பட்டது. ஆமா... அதுக்கும் வயசாச்சு... கன்னு போட்ட பின்னால கொடுத்தா வெல கிடைக்காது... அதான் கொடுத்துடலாம்... என்றவளை பார்த்த பார்வையை தரைக்கு திருப்பினார். எங்கே கலங்கும் கண்கள் அவரை காட்டிக் கொடுத்துவிடுமோ என்பதால் தரையை விட்டு பார்வையை விலக்காமல் சரி... கொடுத்திடுங்க... என்றார்.

நா ஒரு வெல வச்சிருக்கேன்... நீங்க உங்க வெலய சொன்னிங்கன்னா தெகையுதான்னு பாக்கலாம் என்ற மனோகரிடம், வெல என்னய்யா வெல... என் கருப்பாயிக்கு வெல இல்லய்யா... ஒ அக்காகிட்ட பேசிக்க... நான் அவளுக்கு வெல வக்க முடியுமா... இல்ல அவ பாசத்துக்குதான் வெல வக்க முடியுமா... என்றவர். 'ஸ்ஸ்....ஆஆஆ' என்று பெருமூச்சு ஒன்றை விட்டு விட்டு கலங்கிய கண்களுடன் மீண்டும் விட்டத்தை வெறிக்கலானார்.

வெல பேசி நாளைக்கு புடிச்சிக்கிறது என்று முடிவான செய்தி அறிந்ததும் வெளியில் கிளம்ப தயாரானார். எங்க போறீங்க என்ற மனைவியிடம், கருப்பாயிய அவங்க பிடிச்சிக்கிட்டு போறப்போ அவ என்னைப் பாத்து கத்துனா என்னால தாங்க முடியாது. ரெண்டு நாளைக்கு கவிதா வூட்ல இருந்துட்டு வாறேன் என்று அவர் சொன்னபோது மதுரவல்லிக்கு கண்ணீர் வந்தது. படிகளில் இறங்கியவர் வாசலில் கட்டியிருந்த கருப்பாயியை பார்த்ததும் கண்கள் கலங்க அருகில் சென்று ஆதரவாய் தடவ, அவரது கைகள் நடுங்க, உதடு துடித்தது... இன்னைக்குதான் நம்ம பாசத்தோட கடைசி நாள். நாளை நீ எங்க இருப்பியோ தெரியாது... ஆனா கடைசி வரைக்கும் எம்மனசுக்குள்ள இருப்பேன்னு அதுக்கிட்ட சொன்ன போது அவரது கண்ணீர்துளி அதன் முகத்தில் வழிந்தது. தனது துண்டால் அதை துடைக்கப் போனவர் முதல் முறையாக கருப்பாயியின் கண்களில் கண்ணீர் வருவதைப் பார்த்தார்.

-'பரிவை' சே.குமார்.

போட்டோ உதவி : கூகிள்

37 எண்ணங்கள்:

ஜோதிஜி சொன்னது…

தொடர்ச்சியாக இன்னும் இது போன்ற பல கதைகள் எழுதி புத்தமாக்க முயற்சி செய்யவும்.

Asiya Omar சொன்னது…

சகோ.கதை வழக்கம் போல் கண்ணில் நீரை வரவழைத்து விட்டது.கண்ணப்பகோனார்,கருப்பாயி மதுரவல்லி ,உயிருள்ள உணர்ச்சியுள்ள படைப்புகள்.இன்னொரு முறை கதையை படிக்க போறேன்.

r.v.saravanan சொன்னது…

தொடர்ந்து கலக்குங்க வாழ்த்துக்கள் நண்பா

vanathy சொன்னது…

very touching. Well written.

தினேஷ்குமார் சொன்னது…

நெகிழ்ந்துபோனேன் எழுத்துக்களும் வார்த்தைகளும் அல்ல ஒரு உண்மை காவியமாக மனதில் ஓடுகிறது நண்பரே

சிநேகிதன் அக்பர் சொன்னது…

அருமையா கதை எழுதுகிறீர்கள்.

மேலும் இது போல பல ஆக்கங்களை படைக்க வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜோதிஜி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பார்க்கலாம் நண்பரே...

வாங்க ஆசியாக்கா...
ரொம்ப நன்றிக்கா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க வானதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தினேஷ்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க அக்பர்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

"உழவன்" "Uzhavan" சொன்னது…

அருமையா எழுதுறீங்க தலைவா.. இந்த மாதிரியான கதைகளைப் படிக்கும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. மாடுகளை விற்ற பின்பு, அவைகளை வியாபாரி ஓட்டிச்செல்லும்போது, கண்கலங்க மாடுகளைப் பார்த்துக்கொண்டேயிருக்கும் பலரைப் பார்த்துள்ளேன்

சுசி சொன்னது…

அருமையான கதைங்க. கண் கலங்கி போச்சு.

எளிமையான எழுத்து நடை.

Priya சொன்னது…

அருமையான எழுத்து நடை... அழகா எழுதி இருக்கிங்க!

வேலன். சொன்னது…

அருமையாக எழுதிஇருக்கின்றீர்கள் குமார் சார்...(ஆமாம்..நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள்? இந்தியாவிலா - வெளிநாட்டிலா? -உங்கள் பதிவினை பார்க்கும் சமயம் குழப்பம் ஏற்படுகின்றது)
வாழ்க வளமுடன்.
வேலன்.

தமிழ்க்காதலன் சொன்னது…

மனித பாசங்களை விட விலங்கினங்களில் உண்மையான பாசத்தை மிக நன்றாக உணர முடியும். அதுவும் பசுக்கள் உன்னதமானவை. இன்னமும் நம் கிராமங்களில் கால்நடைகளோடு பேசிக்கொண்டு வாழும் மக்கள் இருக்கிறார்கள். அவைகள் மனித அசைவுகளையும், வார்த்தைகளையும், மிக அழகாய் புரிந்து கொள்கின்றன. இந்த பதிவில் கடைசி பத்தியை முடிக்க முடியாமல் மனம் கனத்து "கருப்பாயி" பக்கம் நிறுத்தி விட்டது. பாராட்டுக்கள். பாசத்தை புரிய ஒரு பாசத்தை உணர்ந்திருக்க வேண்டும் குமார். உங்களுக்கு இது வாய்த்திருக்கு.

ராமலக்ஷ்மி சொன்னது…

மிக நன்று. சின்னவயதில் பசுகன்றுகளை வீட்டிலே பராமரித்தே பால் தேவைகள் நிறைவேறின. கன்று போடும் இதுபோன்ற சம்பவங்களைக் குறித்து எழுதும் எண்ணமும் இருந்து வருகிறது. நினைவுகளை மீட்டெடுத்த நெகிழ்வான கதை. பாராட்டுக்கள்.

ராகவன் சொன்னது…

அன்பு குமார்,

ரொம்ப நல்லாயிருக்கு குமார்... எனக்கு மாடு பத்தி அவ்வளவு விவரந்தெரியாது... ஆனால் அது எழுதியிருக்கிற விதம் ரொம்ப உணர்வு பூர்வமா இருந்தது...

தொடர்ந்து வாசிக்கிறேன். இனிமேல்... உங்க அன்புக்கு ரொம்ப நன்றி குமார்...

அன்புடன்
ராகவன்

Raju சொன்னது…

நல்லா எழுதியிருக்கீங்க பாஸ்.

அன்புடன் நான் சொன்னது…

இது வெறுங்கதையா தெரியலிங்க... நானும் அது போல உணர்வுகளை உணர்ந்தவன்... ஆடு மடுகளிடம் பழகியவன்......
இந்த கதையில அழிந்து வரும் பண்பாடு தெரியுது.... அழிந்து வரும் வேளாண்மை தெரியுது... மனித பாசம்... உணர்வு... இப்படி எனக்குள்ள இந்த கதை மிக நெருடலை ஏற்படுத்தி
விட்டதுங்க குமார்.

இது போன்ற ஒரு கதையை ஒரு வேளாண்மை குடுப்பத்தில் பிறந்த ஒருவரால் மட்டுமே எழுத முடியும்...

கதையின் கடைசியில் கண்ணீஅ கசிந்தது....

மிக பாராட்டுகிறேன்.... குமார்.

ஹேமா சொன்னது…

எங்க தாத்தா வீட்ல மாடு இருந்த ஞாபகம்.அவைகளுக்கும் பெயர் வைத்துப் பிள்ளைகளில் ஒன்றாகவே அவைகளைக் கவனிப்பது நினைவுக்கு வருது!

kashyapan சொன்னது…

என்னுடைய கதைகள் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. என்னுடைய சிறு கதைகளை இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் முத்துமீனாட்சி அவர்கள்மொழிபெயர்த்துள்ளார்கள். நல்லி- திசை எட்டும் விருதினை மொழிபெயர்புக்காக பெற்றவர் அவர்.என் துணவியார். இந்தி,வங்காளம்,மராத்தி, ஆகிய மொழிகளில் வரும் கதைகளொடு எனக்கு பரிச்சயம் உண்டு. ஆனால் தமிழ்ச்சிறுகதைகள் தனித்து நிற்கின்றன. இன் று இந்தியாவில் தமிழ்ச்சிறுகதைகள் மட்டுமே தரமிக்கதாய் உள்ளன.உங்களின்" கருத்த பசு "வும் அவற்றில் ஒன்று.வாழ்த்துக்கள்.தமிழ் வலைப்பூக்களில் வரும் கதைகளை இந்தியில் ஒரு தொகுப்பாக கொண்டுவர ஆசை. பார்க்கலாம்.---காஸ்யபன்.

ம.தி.சுதா சொன்னது…

உண்மையில் எனக்கு மாடு மேய்ப்பதற்கு நல்ல ஈடபாட உள்ளது என்னை ஒரு ஓட்ட வீரனாக்கியது ஒரு சிவலை தான்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க உழவன்...
ஆமாம்... நானும் அனுபவித்த வாழ்க்கைதான் அது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சுசிக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பிரியாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வேலன் சார்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நான் அபுதாபியில் இருக்கிறேன் நண்பரே.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தமிழ்...
//பாசத்தை புரிய ஒரு பாசத்தை உணர்ந்திருக்க வேண்டும் குமார். உங்களுக்கு இது வாய்த்திருக்கு.//
ரொம்ப நன்றிங்க உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்..!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ராமலஷ்மி அக்கா...
எழுதுங்கள் அக்கா.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ராகவன் அண்ணா...
கண்டிப்பா அடிக்கடி வாங்கண்ணா...
உங்கள் வருகை என்னை மேலும் மெருகேற்றும்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கருணாகரசு அண்ணா...
//இது போன்ற ஒரு கதையை ஒரு வேளாண்மை குடுப்பத்தில் பிறந்த ஒருவரால் மட்டுமே எழுத முடியும்...//
நானும் அந்த வழியே வந்தவன்தான்... ஆடு, மாடு, கோழி என எல்லாவற்றுடனும் வாழ்க்கையை ரசித்தவன்தான்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ராஜு...
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஹேமா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க காஸ்யபன் சார்...
//இன்று இந்தியாவில் தமிழ்ச்சிறுகதைகள் மட்டுமே தரமிக்கதாய் உள்ளன.உங்களின்" கருத்த பசு "வும் அவற்றில் ஒன்று.//
உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி சார்.
செய்யுங்கள் சார்...
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அடிக்கடி வாங்க சார்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ம.தி.சுதா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ரிஷபன்Meena சொன்னது…

கதை நல்லா இருக்கு.

நாய் இறந்ததுக்கு குலுங்கிக் குலுங்கி அழுதவர்களைப் பார்த்திருக்கிறேன்.
வாயில்லா ஜீவன்களையும் தங்களுள் ஒருவராய் நினைப்பவர் ஏராளம்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

kumar, good story, but in next time pls separate the story by small paragh.

that may easy to read to others

ஆயிஷா சொன்னது…

கதை அருமையா எழுதுகிறீர்கள்.

பாராட்டுக்கள்.

அன்புடன் நான் சொன்னது…

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்.... குமார்.

மனோ சாமிநாதன் சொன்னது…

கதை மிக அருமை! பாசம் காட்டுவதில் மனிதனுக்கும் மிருகத்துக்கும் எந்த வித்தியாசமுமில்லை என்பதையும் மாடுகளும் கன்றுகளும் உள்ள‌ கிராம இல்லங்களில் அன்றாடம் நடப்பதையும் மிக அழகாக எழுத்தில் வடித்திருக்கிறீர்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

தொடர்ந்து கலக்குங்கள் குமார்... பொங்கல் வாழத்துக்கள்

கே.ஜே.அசோக்குமார் சொன்னது…

வம்சி போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!