கடந்த சில நாட்களுக்கு முன்னர் எங்களது முன்னாள் அறைத்தோழரும் அருமை நண்பருமான சுபஹான் அவர்கள் எஸ்.பி.பி. அவர்களுக்கு பாராட்டு விழா நடக்க இருப்பதாக சொல்லியிருந்தார்கள். விழாவிற்கு செல்ல அழைப்பிதழே டிக்கெட்டாக பயன்படுத்தப்படுவது எங்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் தெரிய வந்தது. அதன்பின் நண்பரிடம் பேசியபோது வாங்க டிக்கெட் ஏற்பாடு செய்யலாம் என்றார். அதன்படி சென்று நண்பர்களின் உதவியால் ஒரு அருமையான விழாவை கண்டு களித்து வந்தோம்.
விழா நடந்த நேஷனல் தியேட்டருக்கு நாங்கள் இரண்டு காரில் சென்றோம். விழா நடந்த மேடைக்கு அருகில் இருக்கும் கால்பந்தாட்ட அரங்கில் போட்டி நடந்ததால் சற்றே சுற்றிச் செல்ல வேண்டிய சூழல். இருந்தும் தியேட்டரில் நம் மக்கள் நிறைந்திருந்தனர். விழா சரியாக 6 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என்று போட்டிருந்தாலும் சில நிமிடங்கள் தாமதமாக ஆனால் நம்ம ஊர் அரசியல் கூட்டம் போலில்லாமல் ஆரம்பமானது.
எஸ்.பி.பி.யின் அரங்க அறிமுகம் 'புதிய மனிதா... பூமிக்கு வா...' பாடல் பின்னனியில் அற்புதமாக இருந்தது. அந்த மகா கலைஞன் எந்த பந்தவும் இன்றி சாதரண உடையில் காலில் செருப்பணிந்து அரங்கத்தைப் பார்த்து கும்பிட்டபோது அரங்கமே அதிர்ந்தது... அவரை வரவேற்க மேடைக்கு பூத்து வந்தன குட்டிகுட்டி தேவதைகள்... அந்த மழலைச் சிரிப்பில் பூரித்து நின்றது எஸ்.பி.பி. மட்டுமல்ல... பார்வையாளர்களான அரங்கமும்தான். அவர்கள் பெயரை சொல்லியிருந்தல் பிஞ்சு மனசு நிறைந்திருக்கும். சொல்லவில்லை...
பின்னர் விழா ஆரம்பம்... பாரதி நட்புக்காக அமைப்பின் பெயர் காரணத்திற்காக அமைந்தாலும் டிசம்பர்-11ம் தேதி பாரதியின் பிறந்த நாளுக்கு சிகரம் அமைப்பது போல் இருந்தது 'செந்தமிழ் நாடென்னும் போதினிலே...'. அருமையான நடனம். தொடர்ந்து சில பாடல்களுக்கு நடனம் ஆடி அசத்தினார்கள் மாணவ மாணவிகள். நடனங்களுக்கு மகுடம் சூட்டுவது போல் எஸ்.பி.பி.யின் குரலில் அமர்க்களமாக வந்த 'சப்தம் இல்லாத தனிமை கேட்டேன்...' மற்ற பாடல்களுக்கு நடனமாடிய அனைவரும் ஒன்றாய் ஆறு பிரிவாய் ஆடியது கலக்கல்... எல்லா நடனங்களையும் அமைத்தவர் ஆஷா நாயர். அவருக்கு தனியாக ஒரு சூப்பர் அல்ல... சூப்பரோ சூப்பர் சொல்லலாம். கிரேட் அம்மா.
பின்னர் வீணை நாயகர் ராஜேஷ் வைத்யாவின் நிகழ்ச்சி ஆரம்பமானது. மேடையின் நடுவே வீணையுடன் அமர்ந்திருந்தவரைப் பார்த்ததும் திரை இசை நிகழ்ச்சி என்று நினைத்திருந்தவர்கள் எல்லாரும் 'என்னடா இது கர்நாடக கச்சேரியா... ஐய்யோ' என்று நினைக்க மனுசன் எல்லாரையும் கட்டிப் போட்டதுடன் மட்டுமல்லாமல் இன்னும் நடத்தமாட்டாரா என்று ஏங்க வைத்துவிட்டார். ஒவ்வொரு பாடலின் போதும் கரகோஷத்தில் அரங்கமே அதிர்ந்தது. எஸ்.பி.பியின் பாடல்களை அவர் அனுபவித்து வாசித்த விதம் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக 'எங்கேயும் எப்போதும் சங்கீதம்... பாடலை வாசித்தபோது கரகோஷம் அடங்கவேயில்லை. எல்லாப் பாடலையும் மெய்மறந்து கை தட்டி ரசித்துக் கொண்டிருந்த எஸ்.பி.பியும் பாரதிராஜாவும் எழுந்து நின்று வைத்யாவைப் பாராட்டினர். வெல்டன் வைத்யா.
வைத்யாவின் இசை மழையைத் தொடர்ந்து விழா நாயகரை மையப்படுததி திரு.சங்கர் அவர்கள் சிறு கவிதையுடன் எஸ்.பி.பியின் திரையுலக வாழ்க்கைப் பயணம் குறித்த ஒரு தொகுப்பு ஒன்றை திரையில் வழங்கினார். அருமையான தொகுப்பு. 'அட' போட வைத்தாலும் இன்னும் நல்லா பண்ணியிருக்கலாமே என்ற எண்ணம் தோன்றி மறைந்தது.
பாராட்டு விழாவுக்காக அரங்கம் தயாரானது. பாரதி நட்புக்காக குழுவின் முக்கியஸ்தர்கள் மேடைக்கு அழைக்கப்பட, அவர்களைத் தொடர்ந்து இந்தியத் தூதரக பிரதிநிதி ஆர்.சி நாயர், வைரமுத்து, எஸ்.பி.பி. என ஒவ்வொருவராக மேடையேறினர். ஒவ்வொருவராக பேச... பாரதி நட்புக்காக அமைப்பிற்கான இணையதள அறிமுகம் முரளி என்பவரால் செய்யப்பட்டது. ஆனால முரளிக்கு தமிழ் அவ்வளவாக வர மறுத்ததால் அவர் பேசியதை கவனிக்கும் மனநிலையில் பார்வையாளர்கள் இருக்கவில்லை என்பதே உண்மை.
அமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணன் பேசும்போது, அவர்களது அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் அவர்களது ஆலோசகர் செய்யும் உதவிகள் குறித்தும் பேசினார். ஒரு 11 பேரை வைத்து (மேடையில் பரபரப்பாக திரிந்தவர்கள்... உறுப்பினர்கள் பலர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்) அருமையாக ஒரு தமிழ் அமைப்பை வழி நடத்துவது என்பது சாதாரணம் அல்ல. அந்தப் பணியை மிக நேர்த்தியாக செய்து வருகிறார் திரு. ராமகிருஷ்ணன். வாழ்த்துக்கள் ராம்கி.
திரு.ஆர்.சி. நாயர் பேசும் போது இந்திய தூதரக கலாச்சாரப் பிரிவு பற்றி பேசியதுடன் இதுவரை 6 தேசிய விருதுகளைப் பெற்றிருக்கும் உங்களுக்கு இன்னும் எனது தாய்மொழியில் (மலையாளம்) விருது கிடைக்கவில்லையே சார் என ஆதங்கப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து கர்ஜிக்க எழுந்து வந்த சிங்கம் தண்ணீர் பாட்டிலையும் கையோடு எடுத்துக் கொண்டு வந்தது. 'என் இனிய தமிழ் மக்களே...' என்று திரையில் ஒலிக்கும் அந்தக்குரல் நேரில் ஒலித்தபோது கரகோஷம் அடங்க அதிக நேரமானது. ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட்டில் பார்த்த பாரதிராஜா கோட்டுப் போட்டு ஒரு இளைஞனாக வந்திருந்தார். அவர் பேசும் போது எஸ்.பி.பியை மேட நாகரீகம் கருதி அவர், இவர் என்று பேசவிலை... எப்பவும் பேசுவதுபோல் வாடா, போடாதான். இதுதான் உண்மையான நட்பு இல்லையா?. 'நான் குடியரசுத் தலைவரிடம் விருது வாங்கும் போது கூட ஜின்ஸ் பேண்ட் டீ சர்ட்டில்தான் போவேன். இன்று கோட்டுப் போட்டு வரக் காரணம். இவனுக்கு போட்டியாத்தான் என்று ஆரம்பித்தார். ஆரம்ப காலங்களில் அழகாக சிரித்தபடி வரும் இவன்... கோட்டுப் போட்டு வந்தான்னா சும்மா சொல்லக்கூடாது அவ்வளவு அழகா இருப்பான். அதான் அவன் விழாவுக்கு அவன் சிம்பிளா வந்தாலும் நான் கோட்டுப் போட்டு வந்தேன். அவன் எங்கிட்ட 'என்னடா கோட்டெல்லாம் போட்டு வந்திருக்கேன்னு' கேட்டான் என்றவர் இந்தக் கோட்டை நான் நான்கு முறை மட்டுமே போட்டிருக்கேன். ஒண்ணு என் திருமணத்தில்... அடுத்தது அமெரிக்காவில் நான் எதோ சாதிச்சேன்னு நினைச்சு ஒரு பதினஞ்சு நாள் பேச கூப்பிட்டுருந்தாங்க. அப்ப இங்கீலீஸூம் தெரியாம அங்க போனப்போ போட்டேன். மூனாவது தடவையாக எம் மக கல்யாணத்தப்போ எல்லாரும் வற்புறுத்தியதால போட்டேன். இப்ப பாலுவுக்காகவே போட்டு வந்திருக்கேன்." என்றார்.
பாலு குறித்து நிறைய பேசியவர். "அவன் தலைக்கனம் இல்லாதவன்... யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டான்... அவனுக்கு மரணமே இல்லை... தமிழ் இருக்கும் வரை... இந்த உலகம் இருக்கும் வரை அவன் வாழ்ந்து கொண்டுதான் இருப்பான் " என்றும் "மற்றவர்களை மதிக்கவும் நேசிக்கவும் தெரிந்தவன், நான் சினிமாத்துறையில் வாய்ப்புக்காக அலைந்த சமயத்தில் இவன் பிரபல பாடகன். கச்சேரிக்கெல்லாம் போகும்போது பியட் காரை அவன் ஓட்ட, இரவு நேரப் பயணத்தில் தூக்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக அருகில் இருந்து கதை சொல்லிக் கொண்டே வருவேன். . அப்படி இப்படி அலைந்து 16 வயதினிலே படத்துக்கு வாய்ப்பு வாங்கிவிட்டேன். முதல் நாள் பூஜை இவன் பாடவேண்டும் என்று சொல்லியிருந்தேன். பூஜைக்கு வந்தாச்சு... இவனுக்கு தொண்டை சரியில்லை. முதல் காட்சி... முதல் படம்... இப்ப என்ன செய்வது என்று அந்த நேரத்தில் மலேசியா பக்கத்துல நின்னான் அவனை பாடவச்சேன். பின்னால் அதை கேட்டவன், அருமையா பாடியிருக்கான்... என்னாலகூட இப்படி பாடமுடியாது... அவனையே பாடச் சொல்லுன்னு சொல்லிட்டான்... இந்த தன்மை யாருக்கு வரும் சொல்லுங்க என்றார்.
இதே போல் இன்னொரு நிகழ்ச்சி, காதல் ஓவியம் படத்தில் ஒரு பாடலை தீபன் சக்கரவர்த்தி என்ற பையன் நல்லா பாடுவான் அவனுக்கு கொடு ரொம்ப நல்லா வரும் என்று தனக்கான வாய்ப்பை தீபனுக்கு கொடுத்தான். அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் பாடலின் இறுதியில் ராகம் மட்டுமே வருவது போல் இருக்கும். எனக்கு இசை பற்றியெல்லாம் தெரியாது... கதையை சொல்லும் போது அந்த இடத்தில் 'தனகு தனகு தத்தா...' அப்படின்னு எதோ சொல்லிட்டேன். படம் எடுக்கும் போது எப்படி வாயசைக்க வைக்கிறது. அப்ப கதாநாயகனோட வாயை கட் பண்ணிட்டு கண்ணையும் கன்னத்தையும் மட்டும் சூட் பண்ணிட்டேன். கன்னத்தை மேலயும் கீழயும் ஆட்டச் சொல்லியிருந்தேன். அப்பத்தானே என்ன வேணுமினாலும் பாடலாம். இவங்கிட்ட சொன்னப்போ 'என்னடா சொல்றே என்ன பாட' என்றான் எதாவது பாடு என்றேன். பாடியிருப்பான் பாருங்க... இவன் மகா கலைஞன். இத்தனை வருசமா பாடுவது என்பது சாதாரண விஷயமல்ல. எத்தனையோ பேர் வந்தாலும் பாலுக்கென்று ஒரு இடம் இருக்கிறது.
அப்புறம் இவன் சட்டை ஒண்ணு கொடுத்தான் இன்னும் திருப்பி கொடுக்கலை... கிழிச்சாச்சு. இவனும் இளையராஜாவும் நமக்கு கிடைத்த பெரிய சொத்து. இவங்கிட்ட இருக்கிற எல்லா குணமும் அவங்கிட்ட இருந்திருந்தா அவன் இன்னைக்கு இன்னும் பெரிய இடத்துல இருப்பான். அவன் கிட்ட ஈரம் கம்மி... அதை நான் அவன் கிட்டயே சொல்லியிருக்கேன். (ராசாவுக்கு கோபம் அதிகம் வரும் என்பதை ஈரம் கம்மி என்று சொன்னாரா தெரியவில்லை... அத்துடன் முடித்துக் கொண்டார்). எனக்கு பொய் பேச வராது... உண்மையை மட்டுமே சொல்லுவேன் என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார். எனக்கும் பாலுக்குமான நெருக்கம் அதிகமிருந்தாலும் எங்கள் பட சம்பந்தமான தொடர்பு கம்மிதான்.
எனக்கு அதிக வயதோ இல்லை அவனுக்கு அதிக வயதோ தெரியாது ஆனால் எங்களுக்குள்ளான பந்தம் ரொம்ப நெருக்கமானது என்று பாரதிராஜா சொன்னபோது மேடையில் இருந்த எஸ்.பி.பி. 'உன்னைவிட எனக்கு 5 வயது கம்மி' என்று கையைக் காட்ட என்னைவிட ஐந்து வயது சிறியவனாம். என்னைவிட ஒரு வயது கூட இருந்தால் அவன் காலில் விழ நான் தயார் என்ற போது எஸ்.பி.பி. காதுகளை மூடிக்கொண்டார். 'ஏன்னா அவன் தலைக்கனமில்லாத கலைஞன்.... பாரதி நட்புக்காக... ஆம் இந்த பாரதியின் (அவரது நெஞ்சில் கை வைத்து) நட்புக்காக (எஸ்.பி.பியை) கை காட்டி இந்த பாராட்டு... இதைவிட இன்னும் ஒரு பெரிய மேடையில் இவனுக்கு பாராட்டுவிழா நடக்க வேண்டும் அதில் நான் கலந்து கொள்ள வேண்டும். அங்கும் இன்னும் நிறைய இவனைப் பற்றி சொல்லவேண்டும். எல்லா மொழியிலுமாக 39,000 பாட்டு பாடியிருக்கான்... இன்னும் அதே குரல் வளம்... எத்தனையோ பேர் வந்து போயிருக்காங்க... ஆனா நான் பார்த்து வியக்கிறது இருவர்.. ஒண்ணு இவன்... மற்றாவர் ஜானகி... இருவருக்கும் இன்னும் இளமையான குரல்.
கடந்த மூன்று வருடமாக பாடகர்களை மட்டுமே அழைத்து பாராட்டுவிழா நடத்துகிறார்கள். அதற்கு முன்னரே நான் வந்துவிட்டேன். அதில் இயக்கநருக்கு முதல் மரியாதை தந்துவிட்டார்கள்
இந்த வைத்யா என்னய்யா பண்ணினான். எனக்குத் தெரிந்து வீணை என்பது தூங்குவதற்காக வாசிப்பதுதான்... இந்த குன்னக்குடி ஒரு வயலினை வச்சிக்கிட்டு 'டொய்யி டொய்யி...' வாசிப்பாரு... அது ஒரு மாதிரி கட்டிப் போடும் . எல்லாப் பாட்டையும் அவன் வாசித்த அழகு என்னமா வாசிக்கிறான். இன்னைக்குத்தான் முதல் முதலா அவன் கச்சேரி கேக்குறேன். ஏர்போர்ட்ல பார்த்தப்போ 'நீங்க... எஸ்.பி.பி. சார் பாராட்டு விழாவுக்குத்தானே..' என்று எதோ வந்து பேசினான்... சரி எதாவது வாசிப்பான் போலன்னு பார்த்தா எல்லாரையும் கட்டிப்போட்டுட்டானேய்யா... அருமை... சூப்பர்... இந்த வைத்யா வீணையை காதலிக்கிறான்யா... கல்யாணம் பண்ணிட்ட சின்ன சின்ன விஷயத்தில் எல்லாம் சண்டை வரும் ஆனால் காதலிக்கும் போது சண்டைக்கே வாய்ப்பில்லை... இந்த காதல் கடைசி வரைக்கும் காதலாவே இருக்கணும் அப்பதான் அதிகம் ருசிக்கும். வைத்யா நீ உன் வீணையை காதலித்துக் கொண்டே இரு. என்று வைத்யாவை பாராட்டியதுடன்.. நடனம் அமைத்த ஆஷா நாயர் அவர்களையும் பாராட்டினார். பேசி முடித்து அமர வந்த பாரதிராஜாவின் கால்களை தொட்டு வணங்கினார் எஸ்.பி.பி.
பின்னர் பேச வந்த எஸ்.பி.பி. என்னும் இசைக் கலைஞன், முதலில் வைத்யாவைப் பாராட்டி குழந்தைகளின் நடனத்தைப் பாராட்டி வைத்யாவின் இசையில் பாடல்களை கண்டுபிடித்து கரகோஷ மழை பெய்த பார்வையாளர்களின் இசைப் புலமையைப் பாராட்டி உரையை தொடங்கினார். 'எத்தனையோ பேர் வந்தாலும் என்னை உங்கள் இதய சிம்மாசனத்தில் தனி இடத்தில் வைத்திருக்கும் உங்கள் அன்புக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன். எல்லாருக்கும் தனித்தனியா வீடு வீடா வந்து நன்றி சொல்லனும் அது முடியாதே... என்றார். நான் சிறியவன் பாலச்சந்தர், பாரதிராஜா என எல்லாப் பெரியவர்களையும் பாராட்டி இப்பதான் நான் வந்திருக்கிறேன்... அதில் எனக்கு சந்தோஷமே. 16 வயதினிலேயில் டாக்டர் கேரக்டரில் என்னை நடிக்கச் சொல்லியிருந்தான்... எனக்கும் ஆசைதான்... முடியலை... அதேபோல் முதல் மரியாதை படத்தில் என்னைத்தான் முதலில் நடிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தான். (இப்போது அரங்கத்தில் 'ஓ' என்ற குரல்கள் எழ) 'நீங்க ஆன்னாலும் ஓன்னாலும் ஓஹோன்னாலும் இதுதான் உண்மை' என்றவர், 45 நாட்கள் என்னுடன் இருக்க வேண்டும் என்ற போது ஒரு நாளைக்கு 6,7 பாட்டு பாடுறேன்... அதையெல்லாம் 45 நாள் விட்டுட்டு வந்த பெரிய பாதிப்பு வருமேடா என்று மறுத்தேன். சிவாஜி சார் நடித்தார்.... அதனால்தான் அந்தப் படத்துக்கு அந்தனை பெருமையும்... விருதுகளும்... நான் நடித்திருந்தாலும் நன்றாக நடித்திருப்பேன் என்றார்.
சிவப்பு ரோஜாக்கள் படத்தின் கதையை இவன் எங்கிட்ட சொன்னபோது 'டேய் இந்த கதையில் யாரை நடிக்க வைப்பே... சிவாஜி சார் நடிச்சாத்தான் நல்லாயிருக்கும்... அவர் ஒத்துப்பாரா என்றேன். அப்ப கமல் பிரபலமாகத நடிகனாத்தான் இருந்தான். இல்லடா இந்தப் படத்தை எடுத்துச் ஜெயிக்கிறோம் என்றான்... ஜெயித்தான்... இன்றைய புதுமைகளை அப்பவே செய்தவன் இவன். இவன் சினிமாவுக்கு வாறதுக்கு முன்னால நாடகம் போட்டான். எங்கிட்ட ஒரு ஜிப்பா இருந்துச்சி... இவனுக்கு அது மேல ரொம்ப நாளா ஒரு கண்... அப்ப ஒரு நாடகத்துல நடிக்கும் போது டேய்... இந்த ஜிப்பாவைக் கொடு... போட்டுட்டு தந்திடுறேன்னு சொன்னான்... எங்கிட்ட இருந்ததே ஒண்ணே ஒண்ணு... திருப்பி தந்திரணும் என்று சொல்லிக் கொடுத்தேன். ஸ்டேஜ்ல நடிக்கும் போது ஆர்வக்கோளாறுல என் ஜிப்பாவை பிடிச்சுக் கிழிச்சிட்டான்... நான் கீழ இருந்து டேய் அது என் ஜிப்பாடான்னு கத்துறேன்... அப்புறம் வாங்கித்தாறேன்டா என்றான். அந்தக் கடன் இன்னும் அப்படியே இருக்கு. இருக்கணும் அப்படி ஒரு கடன் இருந்தாத்தான் எங்கள் அன்பு இன்னும் பலமாகும்.
எனக்கு ஏன் மலையாளத்தில் விருது கிடைக்கவில்லை என்று நாயர் அவர்கள் கேட்டார்கள்... விரைவில் கிடைக்க வேண்டும் என்றார்கள்... அவர்கள் அன்புக்கு நன்றி... காரணம் என்னவென்றால் எனக்கு மலையாளத்தில் அதுபோல பாடல்கள் கிடைக்கவில்லை. அங்கே ஒரு அருமையான கலைஞன் இருக்கிறார். அவரை விட நான் எப்படி பாடமுடியும். அது என் ஒன்றுவிட்ட சகோதரன் ஜேசுதாஸ் அண்ணாதான். அண்ணனும் என்னை தன் தம்பியாகத்தான் நினைக்கிறார். மலையாளத்தில் தாஸ் அண்ணாவுக்கு கிடைத்த விருதுகளை எல்லாம் எனக்கு கிடைத்த விருதாகத்தான் நினைக்கிறேன். அதேபோல் தெலுங்கில் தாஸ் அண்ணாவுக்கு விருது கிடைக்கவில்லை... ஆனால் எனக்குக் கிடைத்த விருதுகளை எல்லாம் அண்ணனுக்கு கிடைத்த விருதாகத்தான் எண்ணிக் கொள்வேன் என்றார்.
இந்த பூமியில் என்னை தவழவிட்ட என் பெற்றோர், எந்த இசைப்பின்புலமும் இல்லாமல் வந்த என்னை பாடவைத்த என் குருநாதர், 15, 16 வயதில் என்னுடன் ஓடிவந்த என் மனைவி இவர்களெல்லாம் என் பயணத்தில் முக்கியமானவர்கள். நான் என் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள்... வீட்டில் அரிசியிருக்கிறதா என்றெல்லாம் பார்த்ததேயில்லை... காசைக் கொடுப்பேன் எல்லாம் அவள்தான். நானும் அவளும் காதலிச்சு கல்யாணம் பண்ணினவங்க... அப்ப எனக்கு 22 வயசு, அவளுக்கு 15,16 வயசிருக்கும். வீட்ல ஒத்துக்கலை... நான் சென்னையில்... அவள் பெங்களூரில்... எனது நண்பர்கள் உதவியுடன் பெங்களூரில் இருந்து அவளை கடத்தி சென்னையில் திருமணம் செய்தால் போலீஸ் பிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் ஆந்திராவில் ஒரு மலைக் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டோம். அப்போது என் நண்பர்கள் கையில் இருந்த மொத்த பணமே 500 மட்டும்தான். இன்றுவரை நான் ஜெயிக்க அவள்தான் காரணம். இப்பவும் உங்கள் அன்பாலும் கடவுளின் அணுக்கிரகத்தாலும் வருடம் 365 நாளும் பாடுகிறேன். நாங்கள் இளமையில் இழந்த சந்தோஷங்களை எங்கள் பேரப்பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் சந்தோஷமாக களிக்கிறோம். எம்.ஜி.யாருக்காக நான் பாடிய முதல் பாடல் 'ஆயிரம் நிலவே வா...' அதே படத்தில் மற்றுமொரு பாடல் பாடினேன். அம்மா குறித்த அந்தப் பாடல் எம்.ஜி.யாருக்கு மிகவும் பிடித்த பாடல் ஆனால் பாடல் வரிகள் மிகவும் சுலோவாக வருவதால் வேறு பாடல் மாற்றப்பட்டது. அதை என் அன்னைக்காக நான் இங்கே பாடுகிறேன். இசையெல்லாம் இல்லை... வைத்யா விரைவாக செல்ல இருப்பதால் அவரை இசைக்கு பயன்படுத்த முடியாத நிலை... இருந்தும் பாடுறேன்... நீங்க அமைதியா ரசிங்க... குழந்தைங்க புட்பால் விளையாடுற மாதிரி அங்கிட்டும் இங்கிட்டும் திரியுறாங்க... கொஞ்சம் கண்ட் ரோல் பண்ணுங்க... முடியலைன்னா விட்டுடுங்க... என்றபடி பாட... இரவு நேரங்களில் பாலைவனப் பூமியில் பலரது தூக்கத்துக்கு தாலாட்டா இருக்கும் எஸ்.பி.பியின் அந்த குரல் ஒலித்ததும் அரங்கமே அமைதியானது.
இந்த அமைப்பினர் ஒரு பெரிய தொகையை எனக்கு அளிக்க உள்ளார்கள். நான் எனது தந்தை பெயரில் ஒரு டிரஸ்ட் நடத்துகிறேன். அதற்கு யாரிடமும் பணம் பெறாமல் எனது பணத்தை மட்டுமே உபயோகித்து வருகிறேன். இவர்கள் கொடுத்த பணத்தில் பாதியை அதற்கு பயன்படுத்த இருக்கிறேன். மீதத்தை பாலைவனப் பூமியில் கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்யும் பாரதி அமைப்பிற்கு எனது சிறு பங்காக அளிக்க நினைக்கிறேன். மறுக்காமல் வாங்கிக் கொள்ளவும். இதற்கு கரகோஷம் எழுந்த போது பாரதி அமைப்பினர் எழுந்து நின்று தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
எஸ்.பி.பி.யின் பாடல்கள் சிலவற்றை அவர் பாடுவார் என்ற ஆவலோடு போனவர்களுக்கு ஏமாற்றமே... அவர் பேச மட்டுமே செய்தார். இருந்து சில நல்ல கலைஞர்களை கொண்டு வாடைக்காற்று ஆரம்பித்திருக்கும் இந்த மாதத்தில் விழா வைத்து தமிழர்களை மட்டுமல்லாது மலையாளிகளையும் உற்சாகப்படுத்திய பாரதி நட்புக்காக அமைப்பின் தோழர்களையும் அவர்களுக்கு பின்னணியில் உதவியாய் இருந்த நண்பர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
பாரதி நட்புக்காக அமைப்பின் இணையதள முகவரி.... www.bharathinet.com
**********
மிக முக்கியம் 1: இந்த விழாவில் நான் ரசித்த சுவராஸ்யங்களையும் பாரதி நட்புக்காக இப்படி செய்திருக்கலாமே என்று யோசிக்க வைத்த நிகழ்வுகளையும் அடுத்த பகிர்வில் தருகிறேன்...
மிக முக்கியம் 2: நண்பர் ஒரு ஒருவரிடம் போட்டோஸ் கேட்டிருக்கிறேன். கிடைத்தால் அதையும் பகிர்கிறேன். (ஹைய்யா... இன்னும் ரெண்டு பதிவுக்கு நம்ம பாரதி மேட்டர் இருக்கு...)
மிக முக்கியம் 3: போட்டோ எனது மொபைலில் எடுத்தது... நல்லா இருப்பது போல் தெரியவில்லை...உருவங்கள் தெரிகிறதா என்று படத்தை கிளிக் செய்து பாருங்கள்.
-'பரிவை' சே.குமார்
21 எண்ணங்கள்:
நல்ல பகிர்வு. பாலு சார் பாலு சார்தான்.
நல்ல கவரேஜ்
பகிர்வுக்கு நன்றி.அபுதாபியில் இருந்த பொழுது பாரதி நட்புக்காக ப்ரோகிராம் எப்பவும் போயிருக்கிறோம்,துபாயில் ஒரு முக்கிய நிகழ்விற்கு போக நேரிட்டது.அதனால் மிஸ் ஆகிவிட்டது.பாரதி ராஜா முன்பு வந்த நிகழ்ச்சி,அப்ப ஒயிட் அன் ஒயிட்டில் டிப் டாப்பாக வந்திருந்தார்.நிகழ்ச்சி அருமையாக இருந்தது.எங்கள் குழந்தைகள் படித்த அபுதாபி இந்தியன் ஸ்கூல் ஆடிட்டோரியத்தில் நடந்தது,அடுத்த வருடம் எம் எஸ் வி வந்தார்,இப்ப இரண்டு வருடமாக அலைன் வந்த பின்பு ப்ரோகிராம் மிஸ் ஆகிறது.
வாவ்.. எஸ்.பி.பி. எப்பவும்... தன்னடக்கம்....தான்... உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
மொபைல்-ல எடுத்தால்.. கொஞ்சம் கிளியர்-ஆக படங்கள் இல்லை.... வேறு படங்கள், கிடைத்தால் போடுங்க..
மீண்டும் வருகிறேன். :-)
நல்ல தொகுப்பு:)
எப்பவும் போல அருமையா நீங்க கலக்கிட்டீங்க நண்பரே , உங்க எழுத்து எனக்கு எப்பவுமே பிரமிப்பா இருக்கும். ஒரு பாமரத் தனத்தோட படிக்கிறவங்க மனசுக்கு இதமா தாத்தாவின் கைப் பிடித்து கடைத்தெரு செல்லும் பேரன்,பேத்திகளின் சந்தோசம் உங்க எழுத்தில்.... இது உங்களுக்கு வரம் நண்பா. வாழ்த்துக்கள்.
விழா பார்த்த திருப்தி.
பகிர்விற்கு நன்றி..
வாங்க அக்பர்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ரிஷபன்மீனா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஆயிஷாக்கா...
நானும் நம் நண்பர்கள் யாராவது வந்திருப்பார்கள் என்று பார்த்தேன். யாரிடமிருந்தும் பகிர்வில்லை... யாரும் வரவில்லை போலும்... அபுதாபி வந்தால் சொல்லுங்கள்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஆனந்தி...
கண்டிப்பாக... போட்டோ கேட்டிருக்கிறேன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வானம்பாடிகள் ஐயா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வித்யாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தமிழ்...
அப்படியெல்லாம் இல்லங்க... கிராமத்துல இருந்து வந்தவங்க... அந்த நடை நம்மகிட்ட அப்படியே ஓட்டிக்கிச்சு... மாத்த முடியலைங்கிறதைவிட எங்க மக்களின் பேச்சு வழக்கில் எழுதுவது மனசுக்கு மகிழ்வைத் தருகிறது என்பதே உண்மை.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பகிர்வுக்கு நன்றிங்க.
வாவ்! எஸ்.பி. பி எனக்கு மிக மிக பிடித்த பாடகர். வாழ்வில் ஒரு நாளாவது அவரின் பாடலை நேரில் கேட்க வேண்டும் என்ற என் ஆசை எப்ப நிறைவேறுமோ தெரியவில்லை.
நல்ல தொகுப்பு வாழ்த்துக்கள்
நல்லா தொகுத்து எழுதி இருக்கீங்க
விழாவை பற்றிய உங்கள் தொகுப்பு அருமை குமார் நேரில் கண்டது போல் இருந்தது
நிறைவான பகிர்வு குமார்.S.P.B அவர்கள் இன்னும் நலமோடு வாழ இறைவன் அருள் தரட்டும்.அவர் இடத்திற்கு யாருமேயில்லை !
வாங்க கருணா சார்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வானதி...
கண்டிப்பா நிறைவேறும்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பிரஷா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க தொப்பிதொப்பி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ஹேமா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கருத்துரையிடுக