மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 29 செப்டம்பர், 2010

மறக்க முடியா மனுசன்



புரை ஏறும் மனிதர்கள் என்று பா.ரா சித்தப்பும் காரெக்டர் என்று வானம்பாடிகள் ஐயாவும் அவர்கள் வாழ்வில் சந்தித்த மறக்கமுடியாத நபர்களைப் பற்றி எழுதி வருகிறார்கள். இங்கு நான் பகிரப் போகும் நபரும் அப்படி மறக்க முடியாத நபராகிப் போனவர்தான். ஆனால் இவர் புரை ஏறியவரோ காரெக்டரோ இல்லை எனக்குள் வித்தியாசமானவர்.

துபையில் இருக்கும் அண்ணன் வரச்சொல்லிக் கொண்டே இருந்ததால் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வார விடுமுறையில் கிளம்பினேன். அண்ணனின் அறைக்கு நான் சென்ற போது மாலை 5 மணியிருக்கும். எல்லாரும் நல்ல தூக்கததில் இருந்தனர்.  யாரும் விழித்துக்கூட பார்க்கவில்லை.

சிறிது நேரத்தில் ஒருவர் எழுந்தார். என்னைப் பார்த்தார் நான் சினேகமாக சிரித்தேன். அவர் கண்டு கொள்ளவேயில்லை. இரவு சமையலுக்கான வேலையில் வேகவேகமாக இறங்கினார். பருப்பு அவியப் போட்டு விட்டு காய்களை பெரிது பெரிதாக வெட்டினார். என்னிடம் எதுவும் பேசவில்லை... இவரல்ல நான் சொல்ல வந்த வித்தியாசமான மனிதர். இருந்தாலும் அறைக்கு வந்தவரை வாவென்று சொல்லக்கூட அறியாத தமிழர் என்பதற்காகவே இவரைப் பற்றி சில வரிகள்.
அண்ணன் எழுந்தார் வாடா எப்ப கிளம்பினே என்றபடி கைலியை கட்டு என்றார். இல்லண்ணே அக்கா மக வீட்டுக்குப் பொயிட்டு வந்துடுறேன் என்றதும் நான் வரவா என்றார் வேண்டாம் நான் பொயிட்டு வாரேன் என்று கிளம்பினேன். பின்னர் நான் திரும்பி வரும்போது இரவு 11.30 மணியாச்சு. எல்லாரும் படுத்துவிட்டார்கள்.

மறுநாள் காலை அண்ணன் சிறிது வேலை இருக்கிறது 10 மணிக்கு வந்துடுவேன் என்றபடி கிளம்ப அறையில் நானும் அண்ணனின் நண்பர் மட்டும் இருந்தோம். அப்போது இரவு வேலைக்கு சென்ற அறை நண்பர் ஒருவர் வந்தார். என்னிடம் "எப்ப வந்திங்க... நல்லாயிருக்கிங்களா..." என்றார். எனக்கு ஆச்சரியம் யாருமே பேசாத அறைக்குள் தானே வந்து பேசுகிறாரே என்று. அப்புறம் அருகில் அமர்ந்து பேச ஆரம்பித்தார்....

"இப்பல்லாம் சாப்பிடவே பிடிக்க மாட்டேங்குதுங்க... முன்னல்லாம் நாலு கறி வைப்பாங்க இப்ப ஒண்ணாகிட்டாங்க அதுவும் நல்லால்லை... கேட்டா சாப்பிட்டா சாப்பிடு இல்லண்ணா போன்றான்... என்ன செய்ய வயித்துப்பாடுல்ல... என்னங்க நானு சொல்றது"

நான் ஆமோதிப்பதாய் தலையாட்டினேன். அவரே மேலும் தொடர்ந்தார் "இந்த செல்போன் வந்து எல்லாம் கெட்டுப் போச்சுங்க... முன்னல்லாம் வராத்துக்கு ஒருவாட்டி போன் பண்ணி பேசுவோம். இப்ப செல்போன் வந்துட்டு ரொம்பத்தான் பேசுறோம்... அதுவும் இந்த இண்டெர்நெட் போனெல்லாம் வந்துட்டு தொட்டது தொண்ணூறுக்கும் போனுதான்... என்ன செய்ய காலம் எங்கயோ போகுது. சரிதானேங்க"

"ஆமாமா... நீங்க சொல்றது சரிதான்" இது நான். அப்ப இடையில் புகுந்த அண்ணனின் நண்பர், "நீ என்ன ரொம்ப சலிச்சுக்கிறே... விடுய்யா... நீ பேசலை"

"நீ சும்மா இருய்யா... உனக்கு ஒண்ணும் தெரியாது... நான் அவருகிட்ட சொல்றேன்... நீ சும்மா சும்மா பேசுவே... நான் எதுக்கு சொல்ல வாரேன் தெரியுமா... இப்படித்தான் ஹைவேஸ்ல உள்ள ஏடிஎம் அறைக்குள்ள காலேசு பசங்க கசமுசா பண்ணி அதை நெட்டுல போட்டுட்டான் தெரியுமில்ல... உலகம் அழிவை நோக்கி போகுது..."

"நீ இதெல்லாம் எங்கய்யா பாத்தே... சும்மா கதைவிடாதே..." என்றார் நண்பர்.

"உனக்கு எல்லாத்துக்கும் புரூப்பு வேணுமாக்கும்... புக்குல பார்த்தேன்..."

"ராத்திரி வம்சம் படம் பார்த்தோமய்யா... நல்லாயிருந்துச்சு..."

"கேசட் எங்கய்யா... இந்தா சிந்துசமவெளி... சூப்பர் படமய்யா... எல்லாரும் பாக்கவேண்டிய படம்..."

"என்னங்க சாமி வீட்டை தாக்குற அளவுக்கு மோசமான படமுன்னு ஊரே சொல்லுது நீங்க என்னடான்னா நல்ல படமுன்னு சர்டிபிகேட் கொடுக்கிறீங்க?" என்றேன் நான்.

"இல்லங்க நாட்டுல நடக்குறதைதானே எடுத்திருக்கான்... அதுல பாருங்க என்று படம் மற்றும் அவரின் பார்வையை விவரமாக விளக்கினார். கடைசியில இது கற்பனைக் கதைன்னு போட்டு கீழே அல்லன்னு போடுறான்யா" என்றார் அண்ணனின் நண்பனிடம் அவரும் அப்ப இன்னைக்கு பாத்திருவோமுய்யா என்று சிடியை வாங்கிக் கொண்டார்.

"இப்பதான் ஊருக்குப் பொயிட்டு வந்தேன்... என்னமா கெட்டுப்போச்சு... ஏமாற்றம்... வழிப்பறி... வறுமைன்னு மோசமா இருக்கு. இங்கயிருந்து நல்ல படமா கொண்டு போனேங்க... எம் பொண்டாட்டி பாக்க விடலை... அப்பதான் பாக்கலாமுன்னு ஆன் பண்ணுவேன்... நாதஸ்வரம் பாக்கணும்பா... அப்புறம் தென்றல்... இந்த சீரியல் பொம்பளைங்களை ரொம்ப கெடுத்து வச்சிருக்கு... ஒருநா இப்படித்தான் அடுப்புல பருப்பப் போட்டுட்டு அப்படியே நாடகத்துல உக்காந்துட்டா... அது வெந்து தண்ணியெல்லாம் போயி அடிப்புடிச்சோடனே ஐய்யய்யோன்னு ஓடுற என்னத்தை சொல்ல நாலு வாங்கு வாங்கினேன். எம் பொண்ணுக்கு ரெண்டு வயசுதான் ஆகுது... அது " என் ஊரு கன்னியாகுமாரி... என் பேரு மீனாகுமாரி..." அப்படின்னு எதோ பாடுதுங்க... எனக்கு வரமாட்டேங்குது பாருங்க... எல்லாம் இந்த டிவி பண்ற வேலைங்க... எல்லாத்துக்கும் மேல எங்க அப்பத்தா, அதுக்கு வயசு எம்பது இந்த வயசுல தம்பி அந்த டிவிய தட்டிவிடு நாடகம் பாக்கணும் பாத்துப் பழகிப் போச்சு... நேத்து வேற நல்ல இடத்துல முடிச்சிருக்கான்னு சொல்லுது பாருங்க எனக்கு என்ன செய்யிறதுன்னே தெரியலை."

"இதைவிட கொடுமை என்னன்னா பக்கத்து வீட்டுக்காரன் செவத்துல வெள்ளை பெயிண்டடிச்சு வச்சிக்கிட்டு புராஜெக்டர்ல படம் போட்டுப் பாக்குறான்... ஊப்பருல போட்டு சும்மா தொம் தொம்முனு ஊரையே கூட்டுறான்... ரொம்ப தேறிட்டாங்க தெரியுமா?"

"எல்லாம் வளர்ச்சிதானேங்க"

"ஆமா... வளர்ச்சி என்னங்க வளர்ச்சி... அழிவுதாங்க... எல்லாரும் அழிவை நோக்கிப் போறோம்...இந்தா பாருங்க பாகிஸ்தான்ல மழை வெள்ளத்துல எத்தனையோ கிராமம் அழிஞ்சிபோச்சு... இயற்கை சிரழிவுகள் அதிகமாயிடுச்சு... இதே நிலமை நாளைக்கு நமக்கு வராதுன்னு என்ன நிச்சயம்... ஆமா உங்க அண்ணனுக்கு ஊருல சொந்த வீடுதானே..."

"ஆமா..."

"எனக்கு வீடு கட்டல்லாம் நம்பிக்கையில்லங்க... எப்ப எதுல அழிவு வரும் சாவு வருமுன்னு யாருக்கு தெரியும்... இருக்கவரைக்கும் நல்லா சாப்பிட்டு அனுபவிச்சிட்டுப் போகவேண்டியதுதான்...."

"அப்ப உம்மகனுக்கு சேத்துவைக்க மாட்டியா?" இது அண்ணனின் நண்பர்.

"எதுக்கு சேர்த்து வைக்கணும்...அப்பன் சேத்துவச்சிட்டுப் பொயிட்டான்னு அது ஊதாரியாயிடும்... எனக்கெல்லாம் எங்கப்பா சொத்தா வச்சிருந்தாரு... பத்து வருசத்துக்கு முன்னால நா இங்க வரும்போது எங்கப்பா தம்பி புல்லு இருக்க இடத்தை தேடித்தான் மாடு போகணும்... அங்க கக்கூஸ் கழுவச் சொன்னாலும் செய்யி அப்பதான் முன்னுக்கு வரலாமுன்னாரு... வேற ஒண்ணும் சொல்லலை... அவரு வார்த்தை எவ்வளவு சரியா இருக்கு தெரியுமா?"

"அதுக்காக வீடு கட்டாம இருந்துடுவியா..."

"அதான் சொல்றேன்லய்யா... இந்தாளுக்கு எப்பவுமே புரியாதுங்க... நம்மளையும் குழப்புற குழப்பவாதி... லெட்ச லெட்சமா அதுல போயி கொட்டமுடியுமா... நீங்களே சொல்லுங்க"

"------" பதில் பேசாது சிரித்து வைத்தேன்.
"இப்ப காற்றிலயும் மாசு அதிகமாயிப்போச்சு... எங்க ஊருக்குப் பக்கத்துல செல்போன் டவர் வைக்கக் கூடாதுன்னு போராட்டம் பண்ணி நிறுத்திபுட்டாங்கன்னா பாருங்க"

"அது என்னய்யா பண்ணுது..."

"என்ன பண்ணுதா... அதில இருந்து அணுக்கள் வெளியாகுதாமய்யா... அது கர்ப்பிணிகளுக்கெல்லாம் ஆபத்தாம்.... சில நேரங்கள்ல குழந்தைகூட உண்டாகாதாம்... தெரியுமா?"

"என்னய்யா புதுசா கதைவிடுறே..."

"இதுக்குத்தாய்யா புத்தகம் வாங்கிப் படிக்கணுங்கிறது... ரூம்ல நீயி நீயூஸ்கூட பாக்கமாட்டே... எப்பவும் கேடிவியில படம், இல்லைன்னா புட்டி அது போதும் உனக்கு... உலக விஷயம் தெரியணுய்யா... எதோ வாழ்ந்தோம் செத்தோமுன்னா இருக்கது."

"ரொம்ப கதைவிடுறேய்யா.."

"கதையில்லய்யா... நெஜம்... அப்புட்டும் நிஜம்... நான் இங்க வந்தப்போ எவ்வளவு சிட்டுக்குருவி சாயந்தர நேரத்துல பால்கனியில வந்து உக்காரும் தெரியுமா... இப்ப அதெல்லாம் எங்க... காத்துல கலந்த கெட்ட அணுக்களால செத்துப் போச்சு... இப்ப ஒரு சிட்டுக்குருவி பாக்க முடியுதா? சும்மா கதைவிடுறதா சொல்றே..."

"நிஜமுய்யா... இப்ப அதிகமா சிசேரியன் செய்ய என்ன காரணம்... நாம சாப்பிடுற சாப்பாடுதான்... எல்லாம் ரசாயணம் கலந்து இருக்கு, அதனால சுகப்பிரசவம் இல்லை.... அந்தக் காலத்துல ஏழட்டுன்னு பெத்துக்கலை. அப்ப எங்கய்யா அபரேசன்... இப்ப பாஸ்டுபுட்டு, அது இதுன்னு எல்லாம் மாடர்னா மாறியாச்சி... அப்புறம் டாக்டரை குத்தம் சொல்லி என்ன பிரயோசனம்?"

"நீங்க சொல்றதும் சரிதான்" இது நான். அதிகம் அவரிடம் நான் பேசவில்லை என்றாலும் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தேன். உடனே, "நீங்க எப்படி புரிஞ்சு பேசுறீங்க... இங்க உள்ளவங்க நான் எதாவது பேசினா இடையில எதையாவது சொல்லி மூடவுட் ஆக்கிடறாங்க... அதனால வந்தமா படுத்தமான்னு இருக்கது... இன்னைக்கு உங்க கூட பேசியது சந்தோஷமா இருக்கு... ஆமா நான் போரடிக்கலையில்ல...." என்றாரே பார்க்கலாம்.

பிறகு அவர் படுத்து உறங்கிவிட அண்ணன் வந்ததும் சாப்பிட்டுவிட்டு நானும் கிளம்பி வந்தேன்.

-'பரிவை' சே.குமார்.

திங்கள், 27 செப்டம்பர், 2010

மனசின் பக்கம் - 27-09-2010

முதல்ல நம்ம கதையை சொல்லிட்டு அப்புறம் மத்ததுக்கு போகலாம். கடந்த பத்து,பதினைந்து நாளாக அலுவலகத்தில் கூடுதல் வேலைங்க. காலையில ஏழு மணியில் இருந்து மதியம் 3மணி வரை எனக்கு அபுதாபி (Abu Dhabi) - அலைன் (Al Ain) சாலையில் இருக்கும் பனியாஸ் (Baniyas) என்ற இடத்தில் இருக்கும் அரசு அலுவலகத்தில் வேலை. அந்த அரசு அலுவலகம் பாலைவனத்தின் ஓரத்தில் இருக்கிறது.... கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மணல்தான்... அதன் நடுவே வகிடுடெடுத்தது போல் செல்லும் சாலைகள். வெயில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு சுட்டெரிக்கும். அங்கு வேலை முடிந்ததும் எங்கள் அலுவலகம் வர வேண்டும் அங்கு ஒமானில் (Oman) முடிக்க வேண்டிய புராஜெக்ட் ஒன்றை மாலை 6.30 மணி வரை செய்ய வேண்டும். அதன்பின் அலுவலகத்தில் இருந்து அறைக்கு போக்குவரத்து நெரிசலில் சிக்கி வந்து சேரும் போது இரவு 7.30 மணியாகிவிடுகிறது.. பின்னர் அன்று இரவுக்கான சமையலை ஆரம்பித்து முடிக்க 9.30 மணியாகிவிடும். அதன்பின் குளித்து சாப்பிட்டு சிறிது நேரம் எதாவது பார்த்து படுக்க 11.30 மணியாகிவிடுகிறது.... கணிப்பொறியை ஆன் செய்ய மனசு நினைத்தாலும் உடம்பு மறுக்கிறது.

இந்தக் கதைய ஏன் இப்ப நான் சொன்னேன்னா... எல்லாருக்கும் தெரிவிக்கிறது என்னன்னா... ஆரும் பின்னூட்டம் போடலை ஓட்டுப் போடலை ஆட்சி அமைக்கன்னு நம்ம மேல காண்டாயிடக் கூடாதுன்னுதான் பிரச்சனைய வெலாவாரியா சொல்லிப்புட்டோம்... சரியா...?

***



நேற்றைய ஏர்டெல் சாம்பியன் கோப்பைக்கான போட்டியில் நம்ம சென்னை அணி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. குழு உணர்வுடன் விளையாண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். டோனி சொன்னது போல் அடுத்த ஐபிஎல் ஏலத்தில் எந்தெந்த வீரர்கள் எந்த அணிக்கு செல்வார்கள் என்பது தெரியாது. இருந்தாலும் இவர்கள் அனைவரும் மீண்டும் ஒரே அணியில் (இதே அணியாக இருந்தால் நல்லது) விளையாட வேண்டும் என்பதே என் எண்ணம்.

***

இளையராசாவுக்கு தேசிய விருது நான்காவது முறையாக கிடைத்துள்ளது எல்லாருக்கும் மிகுந்த சந்தோஷத்தையும் அளவில்லா ஆனந்தத்தையும் கொடுத்ததை அனைவரின் பதிவிலும் கண்டேன். விருது குறித்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட ராசா, அதே அடக்கத்துடன் நல்ல இசைக்கு கிடைத்த விருது என்று சொன்னார். ஆம் அவர் கொடுத்த இசை, கொடுக்கிற இசை எல்லாமே நம் காதுகளில் தங்கிச் செல்லவில்லை... அங்கேயே தங்கி விடுகின்றன... எத்தனை வருடங்கள் ஆனாலும் ராசா ராஜாதான்.

***

காமன் வெல்த் விளையாட்டு தொடங்குவதற்குப் முன்னர் தினம் ஒரு வருந்தத்தக்க் செய்தி வந்து கொண்டிருப்பது இந்தியர்களான நம் மானத்தை காற்றில் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறது. ஊழல் பெருச்சாளிகள் இன்னும் அதே புன்னகையுடந்தான் வலம் வருகிறார்கள். அவர்தம் மக்களுக்கு சொத்து சேர்த்தார்களே தவிர இந்தியர்களின் மானத்தைப் பற்றி கவலைப்படவில்லை என்பதை அந்தப் புன்னகையே சொல்கிறது. ஜென்மங்களுக்கு இன்னும் அரசியலில் வாய்ப்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது.இப்படிப்பட்ட ஜென்மங்களை வைத்துத்தான் அரசையே நடத்த முடியும்... நடத்துகிறார்கள் என்பதை நினைக்கும்போது நெஞ்சு பொறுக்குதில்லையே...

***

எனது மச்சானின் (அப்பாவின் தங்கை மகன்) 21/2 வயது குழந்தைக்கு பிளட் கான்சராம். இந்த சம்பவத்தை கேள்விப் பட்டத்தும் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை... மிகுந்த வேதனையை கொடுத்தது. உடம்பு முடியவில்லை என்று ஏறத்தாழ 15 நாட்களுக்கு மேல் வீட்டிலேயே வைத்து இருந்திருக்கிறார்கள். இந்த மனிதர்களை என்ன சொல்வது? குழந்தை நடக்காமல், பேசாமல் போகவும் மதுரைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். டாக்டர்கள் இவர்களை சத்தம் போட்டதுடன் சிகிச்சையை ஆரம்பித்து இருக்கிறார்கள். வெள்ளை அணுக்கள் செலுத்தி சிகிச்சை அளிப்பதாகவும் தற்போது குழந்தை ஓரளவு தேறியிருப்பதாகவும் சொன்னார்கள். இரண்டு வருடத்திற்கு சிகிச்சை பெற வேண்டும் என்றும் காய்ச்சலை குழந்தையிடம் அண்டவே விடக்கூடாதென்றும் அப்படியே காய்ச்சல் வந்தால் உடனே மருத்துவமனைக்கு வரவேண்டும் என்றும் மருத்துவர்கள் சொன்னதாக சொன்னார்கள். எது எப்படியோ... காசு பணம் கரைந்தாலும் அந்தப் பிஞ்சு நல்லாயிருக்கணும். அந்த குழந்தைக்காக நீங்களும் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள் நண்பர்களே.

***

சன் டிவியில் ஒலிபரப்பாகும் ' 'நாதஸ்வரம்' நாடகம் மிகவும் அருமையாக போய்க்கொண்டிருக்கிறது. செட்டிநாட்டுப் பூமியின் காரைக்குடிதான் கதைக்களம். எங்கள் மக்களின் பேச்சு வழக்கு, நடை உடை பாவனைகள் எல்லாத்தையும் அப்படியே காட்டியிருக்கிறார் காரைக்குடிகாரரான மெட்டி ஓலி' திருமுருகன். மௌலி மற்றும் பூவிலங்கு மோகனின பண்பட்ட நடிப்புடன் திருமுருகன் மற்றும் நாசரின் நடிப்பு பட்டறையில் பயிற்சியளிக்கப்பட்ட புதுமுகங்களும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள். 'மெட்டி ஓலி' போல் நாதஸ்வரமும் எல்லா மெகாத்தொடர்களை பின்னுக்கு தள்ளிவிட்டது என்பதே உண்மை,

***

இந்த வாரம் பார்த்த படங்கள் குறித்து சில வரிகள்...

பாஸ் என்கிற பாஸ்கரன் - இரண்டரை மணி நேரம் கவலையை மறந்து சிரிக்க வைக்கும் படம்... நகைச்சுவையில் கதையை தேனில் கலந்த பலாச்சுளை போல் கொடுத்துள்ளார் இயக்குநர். வாழ்த்துக்கள்... படம் சூப்பர்..!

துரோகி - பார்த்து முடித்ததும் இதற்காக இரண்டரை மணி நேரத்தை... என்று கவலைப்பட வைக்கும் படம். சுமார் ரகம் என்று சொல்ல முடியாத குப்பை.

***

நண்பர் பரிசல்காரன் ஒரு சிறுகதைப் போட்டி அறிவித்துள்ளார். சில குறிப்புக்களைக் கொடுத்து அதை கதைக்குள் கையாளா வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துள்ளார். இந்த வித்தியாசமான் சிறுகதைப் போட்டிக்கு நானும் சிறுகதை என்று ஒன்றை அனுப்பியுள்ளேன். அதை எனது சென்ற பதிவில் பகிர்ந்தேன். அந்த கதையையும், நண்பர் பரிசல்காரனின் சிறுகதை குறித்த பகிர்வையும் படிக்க கீழே கொடுத்துள்ள லிங்கை சுட்டுங்கள்.


(பதிவின் முடிவில் நண்பர் பரிசல்காரன் அவர்களின் பகிர்வுக்கான லிங்க் உள்ளது.)

மீண்டும் அடுத்த மனசின் பக்கத்தில் வேறு தகவல்களுடன்...

-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

சினிமாக்களம் (சவால் சிறுகதை)



(சற்றே 'பெரிய' சிறுகதை - படம் அருளிய கூகிளாருக்கு நன்றி)

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு சிறிய குடியிருப்பின் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருந்த அந்த நால்வருமே சினிமா ஆசையில் சென்னை வந்தவர்கள்.

"என்ன மாப்ளே... இன்னைக்கு போன காரியம் என்னடா ஆச்சு..?" என்று பேச்சை ஆரம்பித்தான் ரகு. இயக்குநராகும் ஆசையில் புதுக்கோட்டையில் இருந்து வந்தவன். நல்லா கதை எழுதுவான். நல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபல இயக்குநர்கள் வரிசையில் இருக்கும் சத்ரியனிடம் கடந்த சில மாதமாக உதவி இயக்குநராய் இருக்கிறான். அவரது தற்போதைய படம் இவனது கதைதான் என்பது அவனுக்கும் அவருக்கும் மட்டுமே தெரியும்.

"இயக்குநர் சங்கரை பல நாள் அலைச்சலுக்குப் பின்னர் இன்றுதான் பார்த்தேன்." என்று பேச்சை நிறுத்தினான் மதுரைக்காரனான சுந்தர். இவனும் இயக்குநர் ஆசையில் அதுவும் பிரமாண்ட இயக்குநர் சங்கரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்து தொழிலை கற்றுக் கொண்டு அடுத்த பிரமாண்ட இயக்குநராய் சன் பிக்ஸர்க்கு படம் பண்ண வேண்டும் என்பதை கொள்கையாய் கொண்டு சங்கர் அலுவலகத்துக்கு நடையாய் நடப்பவன்.

"என்னடா... அவரைப் பாத்தியா..? " ஆவலாய்க் கேட்டான் வசந்த், நடிகனாய் ஆகவேண்டும் என்று நெல்லையில் இருந்து வந்து சில படங்களிலும் சில மெகா தொடர்களிலும் தலை காட்டிக் கொண்டிருப்பவன்.

"இன்னைக்குதாண்டா மாப்ளே எங்கிட்ட பேசினாரு... நான் எழுதி பத்திரிக்கையில் வந்த கதையெல்லாம் காட்டினேன். அவருகிட்ட அசோசியேட்டா இருக்கவரு ஒருத்தரை பிரண்டாக்கி வச்சிருக்கேன். அவரும் சொன்னாரு... தம்பி இப்ப எந்திரன் பட ரீலீஸ் அது... இதுன்னு ரொம்ப பிஸி... இப்பக்கூட மலேசியா போறேன்... அடுத்த வாரம் வாங்க... அடுத்த ஸ்கிரிட் பற்றி டிஸ்கஷன் இருக்கு... நீங்களும் கலந்துக்கங்கன்னு சொல்லியிருக்காருடா..."

"ஹே... நம்மள்ள அடுத்த ஆளும் இணை இயக்குநராயிட்டான், அப்புறம் என்ன..." கோரஸாய் கத்தினர்.

"எப்படா பார்ட்டி... நாளைக்கு மகாபலிபுரம் போகலாமா?" என்றான் அந்த அணியின் பைனாஞ்சியர் ரமேஷ், இவனும் ரகுவும் சிறுவயது முதலே நண்பர்கள். பள்ளி, கல்லூரி மேடைகள் அவனை நல்ல பாடகனாக்கி வைத்திருந்தன. அதனால் பாடகனாக வேண்டும் என்று சென்னைக்கு வந்தவன். படித்த எம்.பி.ஏவை வைத்து நல்ல வேலையில் சேர்ந்து சம்பாதித்து வந்த வருமானத்தில் நண்பர்களுக்கும் அறைக்கும் செலவு செய்து கொண்டு அப்பப்ப பெற்றோருக்கும் பணம் அனுப்பவும் செய்தாலும் பாடகன் கனவு மனதுக்குள் நிறைய விழுதுகளை விட்டுக் கொண்டேதான் இருக்கிறது.

"என்ன பார்ட்டின்னாலும் எங்க மூணு பேர்கிட்டயும் இப்ப சல்லிக்காசு பெயராது. நீதான் செலவு பண்ணனும்... அவனுக்கு பணம் கையில் கெடச்சதும் உனக்கு திருப்பிக் கொடுத்துடுவான் இல்லடா மாப்ளே..."

"அட ஏண்டா... நீங்க வேற... அவருகிட்ட சேர்ந்த பின்னாடி கண்டிப்பா பார்ட்டி வைக்கிறேன் மாப்ளே... அது வரைக்கும் ஆளைவிடுங்க்டா சாமிகளா... இந்த ரகு இன்னம் பார்ட்டி வைக்கலை... அதுக்குள்ள என்னைய கேக்க ஆரம்பிச்சிட்டிங்க..."

"மாப்ளே... பார்ட்டி வைக்கிறது பெரிய விஷயமில்லைடா... இப்ப எங்கிட்ட காசேயில்லைடா... எல்லாத்துக்கும் ரமேஷ்கிட்ட கேட்டா நல்லாயிருக்காதுடா...படம் எடுத்து முடிச்சதும் என்னோட கதைக்கு பணம் தர்றேன்னு சொல்லியிருக்காருடா... கிடைச்சதும் கண்டிப்பா பார்ட்டி வச்சிடலாம்... என்ன ஒகேவா..."

"அதுக்கு என்னடா இப்ப அவசரம்... நீ சீக்கிரம் படம் எடுக்கணும் அதுதாண்டா எங்க ஆசையெல்லாம்..."

"கண்டிப்பா நடக்குமுடா... நான் எடுக்கப்போற படத்துக்கான கதையெல்லாம் ரெடியாத்தாண்டா வச்சிருக்கேன். இப்ப அமையாதுடா... இன்னும் கொஞ்ச நாளாகுமுடா...பார்க்கலாம் எல்லாம் கடவுள் செயல்... நான் எடுக்கிற படத்துல கண்டிப்பா நீ பாடுறே... இவனும் நல்ல கதாபாத்திரத்துல நடிக்கிறான்... அதுல எந்த மாற்றமும் இல்லைடா..."

"நான் இல்லையா?" என்றான் சுந்தர்.

"நீதான் பெரிய பட்ஜெட் இயக்குநர்கிட்ட சேர்ந்துட்டியே... அப்புறம் என்ன பெரிய பட்ஜெட் படமாத்தான் இயக்குவே... யார்கண்டா நான் களவாணி மாதிரி படம் பண்றப்போ நீ எந்திரன் மாதிரி படம் பண்ணி எனக்கே போட்டியா நின்னாக்கூட நிப்பே" என்று சொல்லி ரகு சிரிக்க, வசந்தும் ரமேஷூம் சேர்ந்து கொண்டனர்.

"போங்கடா அங்கிட்டு... நீங்கள்லாம் இல்லைன்னா இந்த சென்னையில நான் யாருடா... கடவுள் புண்ணியத்துல நான் நல்ல நிலைக்கு வந்தாலும் வராட்டாலும் கடைசி வரைக்கும் எனக்கு எல்லாமே நீங்கதான்டா... பணம் காசு வந்ததும் குணத்தை மாத்திக்கிற சாதி நான் இல்லைடா..."

"சே... என்னடா மாப்ளே... உன்னையப் பத்தி தெரியாதா... சும்மா ஒரு ஜாலிக்காக சொன்னேன்..." என்ற ரகுவின் செல்போன் 'உன் பெயர் சொல்ல ஆசைதான்...' என்று அழைக்க, "மாப்ளக்கு தங்கச்சிக்கிட்ட இருந்து போன் வந்தாச்சு... இனி இப்ப படுக்க வரமாட்டான்... " என்று வசந்த் நண்பர்களிடம் சொல்ல எல்லாரும் சேர்ந்து சிரித்தனர்.

"போங்கடா... படுங்க வாரேன்..." என்றபடி போனை ஆன் செய்து மொட்டைமாடி கட்டைச் சுவற்றில் அமர்ந்து "ம்... சொல்லும்மா..." என்று பேச ஆரம்பித்தான்.

*****

சில வாரங்கள் ஓடிய நிலையில் படப்பிடிப்பு முடிந்து கிளம்பிய ரகுவை இருக்கச் சொன்னார் இயக்குநர். சரி இன்னைக்கு பணம் தருவார் நாளைக்கு மகாபலிபுரம் போயிடலாம் என்று மனதிற்குள் நினைத்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டான்.

தயாரிப்பாளருடன் பேசிவிட்டு வந்த இயக்குநர் "வா ரகு... கார்ல போகயில பேசிக்கிட்டே போகலாம்..." என்றார்.

அண்ணாசாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறி போய்க் கொண்டிருந்த காரை ஓட்டியபடி "ரகு உனக்கு ஒண்ணும் வேலையில்லையே..." என்று கேட்டார்.

"இல்லண்ணே... என்ன விசயம்?"

"அடுத்த படத்தைப்பத்தி உங்கிட்ட கொஞ்சம் பேசணும்... அதான்..."

"எங்கிட்ட எண்ணன்னே பேச இருக்கு... எப்ப ஆரம்பிக்கப் போறோம்."

"சொல்றேன்... அப்படியே பீச்சுக்குப் போயி பேசலாமா..?"

"ம்... போகலாண்ணே..." என்றபடி செல்போனை எடுத்து ரமேஷூக்கு போன் செய்து, "மாப்ளே நான் எங்க டைரக்டர் அண்ணங்கூட இருக்கேன்... லேட்டாத்தான் வருவேன் " என்று சொல்லி வைத்த போது கார் சிவாஜி சிலையில் திரும்பி பீச்சுக்குள் நுழைந்தது.

காரை பார்க் செய்துவிட்டு இறங்கி, கூட்டமில்லாத பகுதியில் நடந்து கடலோரத்தில் இருந்த ஒரு படகின் முனையில் இருவரும் ஏறி அமர்ந்தனர்.

சிகரெட் ஒன்றை எடுத்துப் பத்தவைத்தபடி அவனிடம் பாக்கெட்டை நீட்ட அவனும் ஒன்றை எடுத்துக் கொண்டான்.

"சொல்லுங்கண்ணே..."

"அடுத்த படம் பண்றது தொடர்பா ரெண்டு நாளைக்கு முன்னாடி முன்னணி தயாரிப்பாளர் பரிசல்காரன் சார்கிட்ட பேசினேன்."

"அண்ணே அவர் பண்ற எல்லாபடமும் சூப்பர் ஹிட்டுண்ணே.... அடுத்தது அவர் படமா.... கிரேட்ண்ணே... ஆமா அவரு என்னண்ணே சொன்னார்... பண்ணலாம்ன்னு சொன்னாரா..."

"ம்... நல்லா பண்ணலாம்ன்னு சொன்னார்... ஆனா கிராமத்து சப்ஜெக்ட் வேண்டாங்கிறார்...:

"அப்புறம் என்ன சப்ஜெக்ட் வேணுமாம்... கிராமத்துக் கதையில உங்களை அடிச்சுக்க ஆளே இல்லைன்னு இருக்கப்போ ஏன் வேண்டாங்கிறார்."

"அவரு சொல்றதும் கரெக்ட்தான்... வரப்போற எந்திரன் தமிழ் படத்தோட டிரண்டை மாத்துதோ இல்லையோ வித்தியாசமான கதைகளை இயக்குநர்களை தேட வைக்கும் என்பது மட்டும் உண்மை. அப்ப நாம பண்ற படத்துலயும் கிராமியக்கதைக்குப் பதிலா சற்று மாறுதலா க்ரைம் கதை பண்ணினா நல்லாயிருக்குமுல்ல அப்படின்னு சொல்றாரு..."

"ஆமாண்ணே... அவரு சொல்றது சரி தானே ஒரு காதல் கோட்டை வந்தது... அதுக்குப் பின்னால பார்த்தா பார்த்து, பாக்காம, டெலிபோன் அப்படின்னு எத்தனையோ காதல்கள். ஒரு சுப்ரமண்ய புரத்துக்குப் பின்னால வட்டார வழக்கை அப்படியே வழங்கி எத்தனையோ படங்கள்... அதுமாதிரி இதுவும் டிரண்டை மாத்தலாமில்லையா..? நீங்க க்ரைம் கதை பண்ணலாமுன்னு சொல்லிட்டு வரவேண்டியதுதானே..."

"இதுல இன்னொரு பிராப்ளம் இருக்கு ரகு... சாதாரணமாக க்ரைம் சப்ஜெக்ட்டு ஒண்ணு ரெடி பண்ணிக்கிட்டு வான்னா நாம ரெடி பண்ணலாம். அவரு என்னன்னா ஒரு இங்கிலீஷ் ரைட்டரோட நாவலோட தமிழாக்கத்தை படிச்சிட்டு சில இடங்களை அடிக்கோடிட்டு கொடுத்து இருக்காரு. அதை நல்லா படிச்சுப் பார்த்துட்டு அதை தீமா வச்சு நல்ல கதை ரெடி பண்ணிக்கிட்டு வா கண்டிப்பா பண்ணலாம்ன்னு சொல்றார்..."

"ப்பூ... இவ்வளவுதானா... அதுக்கென்னன்னே நல்ல கதையா ரெடி பண்ணிடலாம்..."

"அதுக்குத்தான் உன்னைய கூட்டியாந்தேன்... இது நம்ம ரெண்டு பேரைத்தவிர வேற யாருக்கும் தெரியக்கூடாது... இப்ப பண்ணிக்கிட்டிருக்கிற கதை மாதிரி சீக்ரெட்டா இருக்கணும்..."

"அது சரிண்ணே... நான் யார்கிட்டண்ணே சொல்லப் போறேன்..." என்றபோது அவனது செல் 'உன் பேர் சொல்ல...' என்ற போது கட் செய்தான். மீண்டும் அடிக்க, "எடுத்துப் பேசு உன் பிரண்ட்ஷாத்தான் இருக்கும்" என்றார்.

"ம்... என்னடா... டைரக்டர் சார்கூட முக்கியமான டிஸ்கஷன்ல இருக்கேன். அப்புறம் கூப்பிடுறேன்" என்றபடி பதிலுக்காக காத்திருக்காமல் கட் செய்தான். பின்னர் இயக்குநரிடம் "அண்ணே அந்த புத்தகத்தைக் கொடுங்க..."என்றான்.

"கார்ல இருக்கு... வா... தர்றேன் பாரு... எழுத முடியுமான்னு பாரு... முடியலைன்னா வேண்டான்னு சொல்லிட்டு வேற தயாரிப்பாளர்கிட்ட பேசலாம்..."

"செய்யலாம்ண்ணா....எனக்கு ஒருவாரம் டயம் கொடுங்க சூப்பர் கதை ரெடி பண்ணலாம்" என்றான் முழு நம்பிக்கையுடன்.

"இந்த நம்பிக்கைதான் எனக்கு உங்கிட்ட ரொம்ப பிடிச்சது... நாளைக்கு நீ பெரிய ஆளா வருவேடா..." என்று முதுகில் தட்டினார்.

"எல்லாம் உங்க ஆசிர்வாதம் அண்ணா" என்று நெஞ்சில் கை வைத்துக்கொண்டான்.

இருவரும் காருக்கு வந்ததும் அவர் கொடுத்த புத்தகத்தை வாங்கிப் பார்த்தான் அடிக்கொடிட்ட பக்கங்களின் அடையாளத்துக்கு பேப்பர் வைக்கப் பட்டிருந்தது. பிரித்துப் படிக்க ஆரம்பித்தான். அதில் சிலவற்றை படித்துப் பார்த்தான்... பின்னர் ஒரு சில பத்திகளை மறுபடியும் சொல்லிப் பார்த்துக் கொண்டான்.

'டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.'

'“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.'

'"காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்."' புத்தகத்தை மூடி வைத்தான்.

"என்ன ரகு... முடியுமா?"

"கண்டிப்பா முடியும்... எனக்கு இந்த புத்தகம் வேணும்... இந்தக் கதைய ஒரு தடவை படிச்சேன்னா நல்ல ஐடியா கிடைக்குமுன்னு நினைக்கிறேன்...."

"எடுத்துக்க... சீக்கிரம் ரெடி பண்ணு..."

"சரிண்ணே..."

"அப்புறம்... இன்னம் பணம் வரலை... வந்ததும் பேமண்ட் வாங்கிக்க... செலவுக்கு காசிருக்கா... இந்தா இதை வச்சுக்க்க..."என்று இரண்டு நூறு ரூபாய் நோட்டை அவனது பாக்கெட்டில் திணித்தார்.

"வேண்டாண்ணா... அப்புறம் வாங்கிக்கிறேன்..."

"இருக்கட்டும் ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா... வீட்டுக்குப் பொயிட்டு பரிசல்காரன் சார்கிட்ட ஒரு வாரத்துல கதையோட வாரேன்னு சொல்லிடுறேன்..."

"சரிண்ணே... என் ரூம் வந்தாச்சு...நான் இங்க இறங்கிக்கிறேன்..."

"சரி பாத்துப் போப்பா... வரட்டா"

*****

"என்னடா மாப்ளே... அடுத்தபட டிஸ்கஷனா...?" என்று கேட்டான் சுந்தர்.

"ஆமாடா..."

"மறுபடி உன்னைய கதை எழுதச் சொன்னாரா...?" கோபமாய் கேட்டான் வசந்த்.

"------"

"என்னடா... அப்ப அடுத்த கதைய நீ எழுதப் போறியா... அவன் லெட்சம் லெட்சமா சம்பாதிக்க நீ கதை எழுதிக் கொடுக்கிற... உன்னோட முதக் கதைக்கு இன்னும் ஆயிரம் ரூபா கூட தரலை அதைப்பத்தி எதாவது கேட்டியா... வேற டைரக்டர்கிட்ட டிரைப் பண்ண வேண்டியதுதானே..."

"அங்கயும் இதே கதை இருக்காதுண்ணு என்னடா நிச்சயம்? விடுங்கடா"

"நீ திருந்தமாட்டே..."

"இல்லடா... இன்னும் பணம் வரலைன்னு சொன்னாரு... வந்ததும் தர்றேன்னாருடா... சரி வாங்க சாப்பிட போகலாம்.

'உன் பேர் சொல்ல ஆசைதான்...' போன் அழைக்க...

"ம்... சொல்லும்மா..."

"எங்க இருக்கே... ரூமுக்கு வந்துட்டியா..?"

"இப்பத்தான் வந்தேன்... இன்னைக்கு உன்னோட ரெக்கார்டிங் முடிஞ்சதா?"

"அப்பா... இப்பவாவது கேக்கணுமின்னு தோணுச்சே... முடிஞ்சாச்சு"

"சாரிம்மா... காலையில இருந்து நல்ல வேலை... படம் பினிசிங்ல இருக்கதால அங்க இங்க நகர முடியலை... அப்புறம் டைரக்டரோட பீச்சுல டிஸ்கஷன் அதான்"

"என்ன அடுத்தபடத்துக்கு கதை எழுதச் சொன்னாரா... இந்தப்படத்துக்கே இன்னம் பணம் தரலையில்ல...முதல்ல பணத்தைக் குடுங்க... அப்புறம் எழுதுறேன்னு சொல்ல வேண்டியதுதானே"

"அது எப்படிம்மா... முகத்துல அடிச்சமாதிரி கேக்கிறது... வரட்டும் கேக்கலாம்... "

"சரி... நான் இன்னைக்கு ரிக்கார்டிங் தியேட்டர்ல புரடியூசர் பாலாஜிகிட்ட உனக்காக பேசினேன்... நல்ல கதையோட வரச்சொல்லும்மா... கதைய பாத்துட்டு சொல்றேன்னு சொல்லியிருக்காரு... நல்ல கதையா ரெடிபண்ணிட்டு சொல்லு... அவரைப் போயி பாக்கலாம்..."

"சரிம்மா... எங்க டைரக்டரோட வேலையை முடிச்சிட்டு நல்ல கதைய ரெடி பண்றேன்..."

"சரி.... சாப்பிட்டியா?"

"இல்ல இப்பத்தான் கிளம்புறோம்.... பாத்துக்க... குட்நைட்... நாளைக்கு பார்ப்போம்."

"ஏய்... காமினி என்னடா சொல்றா?"

"தெரிஞ்ச புரடியூசர்கிட்ட பேசியிருக்காளாம்.... கதையோட வரச்சொல்லியிருக்காராம்..."

"வாவ்.... ஹே......... கூஊஊஊஊஊ" என்று கத்தியபடி அவனை தூக்கினர்.

"மாப்ளே முதல்ல நல்ல கதைய ரெடிபண்ணு.... கண்டிப்பா வாய்ப்பு கிடைக்கும். இந்த புத்தகத்தை ஒரு மூலையில் வைடா"

"இல்லடா... எங்க டைரக்டர் பணம் தரலைன்னாலும் நா எழுதித்தாரேன்னு சொன்னதும் பணம் தாரேன்னு சொன்னாரோ இல்லையோ மகிழ்ச்சியில இரு நூறு ரூபா பாக்கெட்டுல வச்சிட்டுப் போனாருடா... அவரை ஏமாத்த எனக்கு மனசில்லைடா.... மூணு நாள்ல ரெடி பண்ணிட்டு எனக்கான கதையை ரெடி பண்ணலாம்... இந்த வாய்ப்பு கிடைச்சா... நீ கண்டிப்பா பாடுறே.... இவன் நடிக்கிறான்... சரி வாங்க... இன்னைக்கு கையேந்திபவன் வேண்டாம்... நல்ல ஒட்டலுக்குப் போகலாம்... சந்தோசமாய் எஞ்சாய் பண்ணலாம்..." என்றான் கண்டிப்பாய் இயக்குநராவோம் என்ற நம்பிக்கையில் ரகு.

-'பரிவை' சே.குமார்.

குறிப்பு: நண்பர் பரிசல்காரன் அவர்கள் அறிவித்த சிறுகதைப் போட்டிக்கான கதைக்கான கதை இது. சிறுகதைப் போட்டி குறித்து அறிய இங்கே கிளிக் செய்து படியுங்கள்... நீங்களும் எழுதுங்கள்.

இந்தக் கதைக்கான உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

சிறுவர் கதைகள் (நான்கு)



"டேய்... எனக்கொரு பெஞ்சில் கொடுடா...."

"நாந்தரமாட்டேன் போ..."

"ரெண்டு இருக்குல்ல ஒண்ணு கொடுடா..."

"முடியாது போ..."

"தாடான்னா..." படக்கென்று பிடிங்கினாள்.

"எருமை... உம் பென்சில் எங்கடி... எம் பெஞ்சிலை பறிக்கிறே... அம்மாட்ட சொல்லவா தாரியா... அம்ம்ம்மா..." கத்தினான்.

"இந்தாடா... கத்தாதே... இரு நீ எதாவது கேப்பேல்லே... அப்ப பாரு..."

"அங்க என்ன சண்டை... விடிஞ்சா எந்திரிச்சா... உங்க பஞ்சாயத்துதான் பெரிசா இருக்கு... பஸ் வர்ற நேரமாச்சு...  கிளம்புங்க... உங்க சண்டைய சாயந்தரம் வந்து வச்சிக்கங்க..."

இருவரும் அரக்கப் பறக்க கிளம்ப... பென்சில் அனாதையாக கிடந்தது.

-----------


ம்மா வீட்டில் இல்லாததால் டிவி பார்த்துக் கொண்டிருந்த அண்ணனும் தம்பியிம் விஜய், அஜீத்தால் கட்டிப்பிடித்து உருண்டனர். மாறி மாறி அடித்துக் கொண்டனர். நகங்களால் ஒருவருக்கு ஒருவர் கீறிக்கொண்டனர்.

கதவு திறக்கும் சப்தம் கேட்டதும் இருவரும் தலையை ஒதுக்கிக் கொண்டு அமைதியாக டிவி பார்க்க ஆரம்பித்தனர்.

"என்ன ரெண்டு பேரும் ரொம்ப அமைதியா இருக்கீங்க... என்னாச்சு..."

"ஒண்ணுமில்லையே... படம் பார்க்கிறோம்... இல்லடா"

"ஆமாம்மா..."

"சரி... சரி..."

அம்மா உள்ளே போனதும் கையை மடக்கி சின்னவன் பெரியவனை குத்த, "அம்மா இங்க பாரும்மா... சும்மா இருக்கயில அடிக்கிறாம்மா..." அழுகையினூடே கத்தினான்.

-----------

"நானும் விளையாட வாரேண்டா..." என்றாள் அவள்

"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... ஓரமா உட்கார்ந்து பாரு போதும்..." என்றான் அவன்.

"என்னைய மட்டும் ஏண்டா சேர்க்க மாட்டேங்கிறீங்க..." கோபமாக கேட்டாள் அவள்.

"ஆளு கரெக்டா இருக்கு... உனக்கு விளையாடத் தெரியாது" கேலியாக சொன்னான் அவன்.

"உப்புக்கு சப்பாணியாவது இருக்கேண்டா..." கெஞ்சினாள் அவள்.

"வேணான்னா போ... இல்ல முகரைய பேத்துடுவேன்..." கையை முறுக்கிக் காட்டினான் அவன்.

"நீ உருப்புடவேமாட்டே... எருமை" முணங்கியபடி அமர்ந்தாள் அவள்.

"என்னடா... விளையாடுறீங்க... " என்றபடி உள்ளே வந்த பிரசிடெண்ட் மகன், விளையாட்டை சொன்னதும் "நானும் வாரேன்" என்றான்.

"கரெக்டா இருக்கு... அடுத்த ஆட்டை வரலாம்" என்றான் அவன்.

"என்னடா லெப்ட்... அவன் கரெக்டா இருக்குங்கிறான்... நாளைக்கு தோப்புக்கு வரணுமா இல்லையா..." மிரட்டினான் பிரசிடெண்ட் வாரிசு.

"டேய் நீ வாடா... நீ போய் உட்காருடா... அப்புறம் வரலாம்" என்றான் லெப்ட்.

"என்னடா... வேற யாரையாவது நிப்பாட்டுடா..." என்றான் அவன்.

"சொன்னா கேளுடா... போடா"

முகத்தை சுருக்கிக் கொண்டு அவள் அருகில் போய் அமர்ந்தான் அவன்.

-----------

"டேய்... முந்திரி தோப்புக்கு போகலாமா?"

"ம்... போகலாம்"

"ஆனா யார்கிட்டயும் சொல்லக்கூடாது... சரியா?"

"சரிடா... எப்ப போறோம்...?"

"நாளைக்கு..."

"சரி..."



"என்னடா முந்திரி தோப்புக்கா... போறீங்க..."

"இல்லையே..."

"எனக்கு எல்லாம் தெரியும் மறைக்காதீங்க... நானும் வாரேன்..."

"சரி வா... மூணு பேரும் போகலாம்"



"மூணு பேரும் எங்க கிளம்பிட்டிங்க... முந்திரி தோப்புக்குத்தானே..."

"இல்லையே.... சும்மா..."

"ஏண்டா பொய் சொல்றீங்க... நானும் வருவேன்... இல்லை தோப்புக்காரங்கிட்ட போட்டுக் கொடுத்துடுவேன்..."

"சரிடா இவனையும் கூட்டிக்கலாம்..."



ரெண்டு நாலாகி.... நாலு எட்டாகி... கும்பலா தோப்புக்கு போனப்போ தோப்புகாரன் வாசலில் நின்று "கருங்காலி நாய்களா இன்னைக்கு வாங்க... தோலை உறிச்சு உப்புக்கண்டம் போட்டுடுறேன்" என்று கத்திக் கொண்டிருந்தான்... வந்த சுவடு தெரியாமல் திரும்பும் போது முந்திரி பழத்தை இந்த வாரமும் இழந்தது அவர்கள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்து.

-----------

கவனிக்க: இந்த கதைகளை எழுதியதும் 'மைக்ரோ கதைகள்' என்று பெயரிட்டேன்... அது ஏனோ மனதில் ஒட்டவில்லை... பின்னர் 'குழந்தைக் கதைகள்' என்று பெயரிட்டு வைத்தேன். இன்று பதிவிடும் போது குழந்தைக் கதை என்றால் மூன்று, நான்கு வயதுக்குள் நடப்பது போலிருந்தால் நல்லாயிருக்கும் இது சற்று கூடுதல் வயதில் நடக்கும் கதை என்பதால் 'சிறுவர் கதைகள்' என்று மாற்றியாச்சு.

இது சிறுவர்களுக்கான கதையல்ல... சிறுவர்களுக்கு இடையே நிகழும் அன்றாட நிகழ்வு அவ்வளவே...

படித்து நொந்து திட்டுபவர்கள் மின்னஞ்சலில் வரவும்... ஏதோ மனசை தேத்திக்கிட்டு திட்டினாலும் கொஞ்சமாக திட்ட நினைப்பவர்கள் பின்னூட்டத்தில் வரவும். அப்புறம் ஓட்டு ரொம்ப முக்கியமுங்க... நாம ஆட்சியை புடிக்கணுமில்ல....

-'பரிவை' சே.குமார்.

திங்கள், 20 செப்டம்பர், 2010

பேரு..!




சோப்பு வாங்கப் போன
எங்கிட்ட கடைக்காரரு
என்ன சோப்புன்னு கேக்காம
என்ன பேருன்னு கேக்க

அஞ்சலைன்னு சொல்ல
அந்த பேருல சோப்பு
இல்லைன்னு சிரிச்சாரு...

சோப்பு பேரா கேட்டியலா
நா எம்பேரை கேக்குறியன்னு
நினைச்சுக்கிட்டேன்னு சிரிச்சேன்...

வாறவுக பேரெல்லாம்
எனக்கு எதுக்கு தாயி...
சோப்பு பேரை சொல்லு
என்றார் சிரிக்காமல்..!

-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

சிறு பூக்கள் - III



பசியோடு ஆடு...
வருத்தப் பட்டது
கிளைகளை இழந்த
மரம்..!

---------
 
வண்டிப் பந்தயம்...
ஓடிய மாடுகளை விட
விரட்டிய மனிதர்கள்
மூச்சிரைத்தபடி..!

---------


எங்கும் போகலாம்...
தொட்டிக்குள்
விடப்பட்டதறியாமல்
சந்தோசப்பட்டது மீன்..!

---------


பிரிவு வருத்தமே...
இருந்தும் மனசுக்குள்
சுகமாய் உன்
நினைவின் நிழல்கள்..!

-'பரிவை' சே.குமார்