மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 9 ஜூலை, 2018

‘பய’ராத்திரி (பிரதிலிபியில் எழுதிய சிறுகதை)


சில மாதங்களுக்கு முன்னர் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை. வாசித்தவர்களின் பாராட்டுகள் அதிகம் கிடைத்தாலும் பிரதிலிபியின் தேர்வு முறைப்படி வாசகர் பார்வை அதிகம் கிடைக்கப் பெறாத கதை... முடிவை மாற்றியிருக்கலாமோ எனத் தோன்ற வைக்கிறது இப்போது. பேய்க் கதைகள் எழுத நாம் என்ன பி.டி.சாமியா..? நமக்கு இதெல்லாம் வருமான்னு ஒரு முயற்சி அவ்வளவே. எது எப்படியோ உங்கள் பார்வைக்காக இங்கு கதை விரிக்கிறேன்.... உங்களின் உள்ளார்ந்த கருத்துக்களைச் சொல்லுங்க.

**************

ப்படி நள்ளிரவில் வந்து இறக்கி விடுவான் என்று ராமு நினைக்கவே இல்லை. கிளம்பிய நேரத்துக்கு மாலை ஆறு மணிக்கெல்லாம் தேவகோட்டை வரவேண்டிய பேருந்து, நாப்பது கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் நகராமல், இடையில் டயர் பஞ்சரானது வேறு சேர, பனிரெண்டரை மணிக்கு கொண்டு வந்து இறக்கி விட்டிருக்கிறான்.

தேவகோட்டையில் இருந்து ரெண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் தன் ஊருக்கு எப்படி இந்த இரவில் செல்வது என்பதே இப்போது அவனது உள்ளத்துக்குள் ஓடும் மிகப்பெரிய கேள்வியாய் இருந்தது. அப்பா போன் பண்ணும் போதே எப்படியும் நடுராத்திரிதான் வந்து சேரும்போல நீங்க வந்து காத்திருக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.

நண்பன்... நண்பன் என்ன நண்பன், சின்னத்தை மகன் ராஜாவுக்கு போன் பண்ணின போது 'வேலையா திருச்சிக்கு வந்திருக்கிறேன் மாப்ள... ரெண்டு நாளாகும் வர' என்று சொல்லிவிட்டான்.

அண்ணன் சுப்பு இருந்தால் எந்த நேரம் என்றாலும் வந்து விடுவான். அவனும் சென்னைக்கு வேலைக்குப் போய் ஒரு  மாதம்தான் ஆகிறது.

என்ன செய்யலாம்...? ஆட்டோக்காரர்களைக் கூப்பிட்டால் அந்த ஊருக்கா...? இந்த ராத்திரியிலயா...? நான் வரலைங்க... என்பார்கள்.  டாக்சிக்காரர்களோ ஒண்ணுக்கு மூனா வாடகை கேப்பார்கள். பெரும்பாலும் பொணம் ஏத்தும் வண்டிகளே வாறேன்னு சொல்லுவாங்க...

சுந்தரப்பய வீட்டுலதான் இருப்பான் ... அந்த நாய்க்குப் போனடிச்சா எடுக்கவே மாட்டேங்குது... மூதேவி தூங்குச்சுன்னா கும்பகர்ணந்தான்... இப்ப என்ன செய்யிறது என்ற பலமான யோசனையுடன் சங்கர் டீக்கடையில் ஒரு டீயை வாங்கிக் குடித்தான்.

ராமு சரியான பயந்தாங்கொள்ளி என்று பெயரெடுத்தவன்... பத்தாவதில் மைக்கேல் சார்க்கிட்ட டியூசன் படிச்சப்போ ஆறு மணி இருட்டுல வீடு வர்றதுக்கே வேர்த்து விறுவிறுத்துப் போய் வருவான். அதுவும் சுடுகாடு ரோட்டை ஒட்டியிருப்பது அவனது பயத்துக்கு மேலும் பயம் சேர்க்கும். டியூசன் விட்டு வரும்போதுதான் மருந்தக் குடிச்சிச் செத்த மேல வீட்டுச் சந்திரன எரிச்சிக்கிட்டு இருந்தாக.... வந்து விழுந்தவன்தான்... மூணு நாள் காய்ச்சல்ல கிடந்தான்.

'நீ என்ன சின்னப்புள்ளையாடா.... உங்கண்ணன் ராத்திரி பன்னெண்டு மணிக்கு வரச்சொன்னாலும் வருவான்... நீ என்னடான்னா இப்படிப் பயப்படுறே'ன்னு அம்மா திட்டினாலும் அவனோட பயம் மட்டும் போகவேயில்லை.

டவுனுல ராத்திரி எத்தன மணிக்கு வேணுமின்னாலும் நடந்து போகலாம். அங்க பேய்க்கதைகள் எல்லாம் அதிகமாக இருப்பதில்லை. ஆனால் கிராமத்தில் அப்படி இருட்டில் நடக்க முடியுமா என்ன...? எத்தனை பேய்க் கதைகள்... அதுபோக வில்லுக்கம்பு வெள்ளச்சாமி, முனீஸ்வரன்னு சாமிகளின் கதி கலங்க வைக்கும் கதைகள் வேறு...

எப்பத் தனியாகப் பயணிக்கிறானோ அப்பல்லாம் அவனுக்கு இந்தக் கதைகளும் நண்பர்கள் சொன்ன கதைகளும் ஞாபகத்தில் வர, முகத்தில் திட்டுத்திட்டாக வியர்க்க ஆரம்பிக்கும்... வாய் தன்னை அறியாமல் கந்தர் சஷ்டி கவசத்தை முணுமுணுக்க ஆரம்பித்துவிடும். கவசம் சொன்னால் பயம் போகும் என்பது அவனின் நம்பிக்கை.

சரி ஆட்டோக்காரனிடம் கேட்டுப் பார்ப்போம்... எவ்வளவு கேட்டாலும் கொடுக்கலாமென்ற முடிவோடு அருகிலிருந்த ஆட்டோ ஸ்டாண்டுக்குப் போனான்.

'அந்த ஊருக்கா...? இந்த ராத்திரியிலயா...? நேத்து நல்ல மழை இங்க... உங்க ஊரு ரோடு ரொம்ப மோசம்... இப்ப தண்ணி வேற கிடக்கும்... காசுக்கு ஆசைப்பட்டு வந்து லோல்பட  விரும்பலை... வண்டி வராது' என்றான் முழுக்குடியில் நின்ற ஆட்டோக்காரன். அவன் சொன்னதையே மற்றவர்களும் சொல்ல, சரி நடக்க வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தவன் சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

அப்போது அப்பா அழைத்தார்... 'ம்... இப்பத்தான் வந்தேன்... ஆட்டோல்லாம் வர மாட்டேங்கிறானுங்க...நடந்து வந்திடுறேன்.' என்றான்.

'நீ அங்கயே நில்லு நான் வர்றேன்... எம்புட்டுத்தூரம் நடந்து வருவே' என்றவரை இந்த நேரத்துல நீங்க எதுக்கு வர்றீங்க... உங்களுக்கு ராத்திரியில கண்ணும் சரியாத் தெரியாது... மழையால ரோடெல்லாம் மோசமா வேற கிடக்காம்... நான் மெல்ல நடந்து வந்துடுறேன்... அரை மணி நேரத்துல வந்துருவேன்...' என்று அவரைத் தடுத்துவிட்டு நடந்தான்.

என்னென்னமோ நினைவுகள் மனதுக்குள் எழ, நடப்போமா வேண்டாமா... என்ற யோசனையும் மெல்லத் தலை தூக்கியது.

'நாம என்ன சின்னப்பிள்ளையா... ஆம்பளை... இனி இருட்டுக்குப் பயந்துக்கிட்டு இருந்தா கேவலமா இல்லை...' என்று வீராப்பாய் மனசுக்குள் நினைத்தவன் 'நடடா ராமு... நீ ஆம்பளை' என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

தேவகோட்டையை விட்டு அவனோட ஊருக்குப் பிரியும் கிளைச்சாலையில் இறங்கிவனை இருட்டு தனக்குள் இழுத்துக் கொண்டது. விளக்கொளி விடுத்து இருளில் இறங்கும் போதே 'கதக்' என்றது மனசு.

இன்னும் இருட்டுப் பழகவில்லை என்பதால் மெல்ல அடியெடுத்து வைத்தான். வலது காலை வைத்த இடத்தில் தாவு இருந்திருக்கும் போல அதில் கிடந்த தண்ணிக்குள் 'சதக்'கென கால் இறங்க, 'சை...  இந்த ரோட்டைப் போட்டுத் தொலைய மாட்டேங்கிறானுங்க... காசு வாங்கிக்கிட்டு ஓட்டுப்போட்டா ரோடெங்கிட்டுப் போடுவானுங்க...' என் கடுப்போடு சற்று சத்தமாகவே சொன்னான்.

இருட்டு பழகிப் போக வேகமாக நடக்க ஆரம்பித்தான், ரோட்டோரத்தில் குட்டையாய் தேங்கி நின்ற தண்ணிக்குள் கிடந்து கத்தும் தவளைகளின் 'கொர்ர்ர்... கொர்...' என்ற சத்தம் பயத்துக்கு தூபம் போட, மொபைலில் சாமிப் பாடல்களைத் தேடி 'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்' என்ற பாடலை ஓடவிட்டு இயர் போனை காதில் மாட்டிக் கொண்டான்.

நடையில் வேகம் சைக்கிளில் இருந்து டிவிஎஸ் 50-க்கு மாறியது.

லேசான குளிர் சிகரெட் கேட்டது... மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து இழுத்தவனுக்குள் மெல்ல மெல்ல பய நினைவுகள் மேலெழும்ப, நினைவுகளை மாற்ற முயற்சித்துத் தோற்றான்.

சின்ன வயதில் தன் வயதொத்த, தங்களுடன் ஓடிப்பிடிச்சி விளையாண்ட சித்ராவின் திடீர் மரணமும், ராத்திரியோட ராத்திரியா எரித்துவிட்டு வந்ததும் சாமி பாட்டையும் தாண்டி மனசுக்குள் எழ, சித்ரா எரிந்த தீயின் நாக்குகள் நெஞ்சுக்குள் சுட, படபடப்பு கூடியது. சை... எதுக்கு இப்ப தேவையில்லாத நினைவுன்னு நினைச்சிக்கிட்டே மனசுக்குள் வேறு நிகழ்வுகளை கொண்டு வர முயற்சித்துத் தோற்றான்.

செத்ததுக்கு அப்புறம் பேயா ஆட்டம் போட்டு சகட்டுமேனிக்கு அம்புட்டுப் பேரையும் பிடிச்சி ஆட்டுன சவுந்தரம் மனசுக்குள் வர,  'டேய் பேராண்டி... இருட்டுக்குள்ள போறியே... அப்பத்தா தொணக்கி வரவாடா...'ன்னு முதுகுக்குப் பின்னால குரல் கேட்பது போல் தோன்ற, பயம் அவனைச் சூழ்ந்து கொண்டது. 

திடீரென அவனுக்கு நாவறட்சி எடுத்தது, முதுகில் தொங்கிய பேக்கில் வைத்திருந்த தண்ணீர்ப் பாட்டிலை எடுத்து நடந்தபடியே... அதுவும் வேகமாக நடந்தபடியே மடக் மடக்கென குடித்ததில் சட்டையை நனைத்துக் கொண்டான்.

'இங்கருடா... சுப்பிரமணி தூக்குப் போட்டுச் செத்தானுல்ல... அந்த மரத்துப் பக்கம் மட்டும் போவாதே... பிடிச்சிக்கிறானாம்... அவன் பிடிச்சா கயரை எடுத்துக்கிட்டு சாகப்போறேன்னு போறாங்களாம்...' எட்டாவது லீவுல ஆயா வீட்டுக்குப் போனப்போ மாமா மகன் கருப்பட்டி கண்ணன் சொன்னது இப்ப ஞாபகத்துக்கு வந்தது.

ரோட்டோரத்தில் நின்ற ஆலமரம் தலை விரித்து  நிற்கும் பேய் போல் தெரிய, இதயம் ஏறுக்கு மாறாகத் துடிக்க ஆரம்பித்தது.

அவன் நடையின் வேகம் இப்போது டிவிஎஸ் 50-ல் இருந்து ஹோண்டாவுக்கு மாறியிருந்தது.

அடக்கி வைத்த மூத்திரத்தை அடிச்சே தீர வேண்டும்... இனித் தாங்காது... எங்கே பயத்தில் பேண்ட்லயே போயிருவோமோ என்ற நிலை வந்தபோது நின்று அடிக்கப் பயம்... கண்ணை மூடிக்கொண்டு ஜிப்பைக் கழட்டியவனின் கால்கள் நிற்க மறுத்து நடக்க... யாருதான் ரொம்பத் தூரம் பேயிறாங்கன்னு பாப்போமா என அவன், முருகன், ரமேஷ் மூவரும் போட்டி போட்டது ஞாபகம் வர லேசான சிரிப்பும் வந்தது. நடந்தபடியே பெய்ய ஆரம்பித்தான்.

சுப்பிரமணியோட தோப்புக்கிட்ட போகும் போது உருளைக்கிழங்கு வாசம் மூக்கைத் துளைத்தது. சின்ன வயசுல இருந்து இந்த இடத்துல உருளைக்கிழங்கு வாசம் அடிச்சிக்கிட்டேதான் இருக்கு... நல்லபாம்பு இந்த இடத்தை குத்தகைக்கு எடுத்துருச்சு போல என்று நினைத்துக் கொண்டான்.

பய நினைவு மாறியதில் கொஞ்சம் ஆசுவாசம் கிட்டியது. தூரத்தில் கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில் கோபுர விளக்குகள் தெரிய ஆரம்பிக்க, சாமியைக் கும்பிட்டுக் கொண்டான்.

அவனின் நடையின் வேகம் மட்டும் குறையவே இல்லை.

பள்ளிக்கூடம் படிக்கும் போது ராமசாமி ஐயா செத்ததுக்கு மண் முட்டியில வச்ச தண்ணியை பயலுக எல்லாம் சேர்ந்து கல்லெடுத்து எறிஞ்சி உடைச்சதும் புகையிலையை எடுத்து ஓணானைப் பிடித்து அதுக்கு வச்சிவிட்டு கிறுக்குப் பிடிச்சி ஓட வச்சதும் ஞாபகம் வர, 'ஏலே சுப்பையா மவனே... எம் முட்டித் தண்ணி எங்கடா... எனக்கு வேணும்.... தந்துட்டுப் போடா... போயில வாங்கித் தாடா.... வாயி நமநமன்னு இருக்கு 'ன்னு காதருகில் வந்து கேட்பது போல் தோன்ற பயம் மறுபடியும் மனசுக்குள் 'பச்சக்' என ஒட்டிக் கொண்டது.

சாமி பாட்டுக் கேட்டாலும் மனசுக்குள்ள ஆவி ஆட்டமாவே இருக்கே... சை... எதை நினைக்கக் கூடாதுன்னு நினைக்கிறமோ அதையே நினைக்கச் சொல்லுது. எவ்வளவோ விஷயங்கள் இருக்க, இதுக மட்டும்தான் ஞாபகத்தில் வரணுமா என்ன...  பேய், பிசாசுன்னு சுத்திச் சுத்தி வருதே இந்த மனசு.... அவனுக்கு மனசு மீது கோபம் வந்தது.

சிறிது தூர நடைக்குப் பிறகு அவனைச் சுற்றி மல்லிகைப் பூவின் வாசம் அடிப்பது போல் தோன்றியது.  உதடு வறண்டு போக,  நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டது. சம்பந்தமில்லாம மல்லிகைப் பூ வாசம்... கொலுசு சத்தமும் கேக்குமோ என இயர் போனை எடுத்துவிட்டு கேட்டான். சில் வண்டுகளின் சத்தமும், தவளைகளின் சத்தமும் மட்டுமே கேட்டது. அப்ப மல்லிகை வாசம் எப்படி...?

'ராமு... நல்லாயிருக்கியா... பாத்து எம்புட்டு நாளாச்சு... நீயெல்லாம் சந்தோஷமாத்தான் இருப்பே... நாந்தான்டா... சந்தோஷமில்லாமா... உடம்பெல்லாம் எரியுதுடா... என்னால முடியலைடா...' கோபத்தில் தீவைத்துக் கொண்டு செத்துப் போன பெரியப்பா மக அகிலா அழுது கொண்டே பேசுவது போல் இருந்தது. அக்காவுக்கு மல்லிகைப் பூன்னா உயிருல்ல என்பது ஞாபகத்தில் வர 'காக்க காக்க கனகவேல் காக்க' என வாய்விட்டு பாட ஆரம்பித்தான்.

கிட்டத்தட்ட வேக நடை ஓட்டமாக மாறியது. குளிராக இருந்த போதிலும் வியர்வையில் தெப்பலாய் நனைந்திருந்தான்.

செல்லையாவின் ஆட்டுக் கசாலையைக் கடந்தபோது 'ஒரு காலத்துல எம்புட்டு ஆடு அடைச்சிக் கிடக்கும்... அவரு செத்ததுக்கு அப்புறமே எல்லாம் போச்சு... இப்பப் பாரு... கசாலை இருந்ததுக்கு அடையாளமா நாலு கல்தூண்தான் நிக்குது' தனக்குள் சொல்லிக் கொண்டவன்  அந்தக் கசாலையில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கிடந்த போதுதானே செல்லையாய்யா செத்துப் போனாரு... முனி அடிச்சிட்டதா ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க... என அவரின் சாவுக்குப் பின்னே போன மனசை சனியன் பிடிச்ச மனசு எங்க சுத்துனாலும் அங்கதான் போயி நிக்கிது என மனசின் மீது கோபப்பட்டான்.

இன்னும் கொஞ்சத் தூரம்தான் ஓடியாச்சும் வீடு போய் சேர்ந்துடணும் என்று நினைத்துக் கொண்டவனுக்கு சுடுகாட்டைக் கடக்கணுமே என்ற நினைவு வர, பயம் இன்னும் அதிகமாகியது. உடம்பில் உதறல் எடுப்பதை உணர்ந்தான்.

'அப்பாவ மெல்ல மெல்ல வரச் சொல்லியிருக்கலாம்... கொஞ்சத் தூரம் நடந்து வந்திருந்தாக்கூட இந்நேரம் அவரு வந்திருப்பாரு.... என்ன வீராப்பு வேண்டிக் கிடக்கு... வந்துருவேன்னு வெத்துப் பந்தா வேற... பயத்துலயே செத்துருவேன் போலவே...'  என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டவனுக்கு முன்னே பத்தடி தூரத்தில் திடீரென வெள்ளையாய் ஒரு உருவம் நடந்து செல்வது தெரிய, அவனுக்குத் திக் என்றது.

நின்று விடலாமா என்று யோசித்தவனுக்குப் பின்னால் இருந்து 'பயமா இருக்கா பேராண்டி.... நீ இந்த கயித்துக் கட்டில்ல படுத்துக்க... நான் உள்ள கெடக்க பலகையில படுத்துக்கிறேன்... வா' என செல்லையாய்யா கூப்பிடுவது போல் தோன்ற, படபடப்பு எக்ஸ்பிரஸ் வேகத்தில் எகிறியது.

நடையின் வேகத்தை அவன் அதிகமாக்கிய போது முன்னே நகர்ந்த வெள்ளை உருவமும் வேகமாக நடக்க ஆரம்பித்தது.

'நாந்தான் வீராப்பா வரவேண்டான்னு சொன்னேன்... அம்மாவுக்கு எங்கே போச்சு அறிவு... அவன் பயப்படுவான்... நீங்க மெதுவாப் போய் கூட்டிக்கிட்டு வந்திருங்கன்னு அப்பாவை அனுப்பியிருக்கலாம்தானே... வீட்டுக்குப் போய் வச்சிக்கிறேன்...' என அந்த நேரத்திலும் அம்மா மீது கோபப்பட்டான்.

திடீரென கோவில் மாடொன்று சடச்சடவென ரோட்டைக் கடக்க, ரோட்டோரத்தில் இருந்த காரஞ்செடிக்குள் சரச்சரவென சத்தம் கேட்க, அவனுக்குத் ‘திடுக்’ தூக்கிவாரிப் போட்டது. பயம் போக தூத்தூ எனத் துப்பினான்.

அந்த திடுக்கில் காதில் மாட்டியிருந்த இயர் போனும் கழண்டு கொள்ள, தூரத்தில் நரி ஒன்று ஊளையிடுவதும். அதைத் தொடர்ந்த அந்தையின் அலறலும் கேட்க, 'முனியய்யா... என்னைப் பெத்த அப்பனே...  பத்தரமா வீடு கொண்டு போய்ச் சேரு... உனக்கு நாளக்கி தேங்காய் வாங்கி உடைக்கிறேன்' என வேண்டியபடி நடையின் வேகத்தைக் கூட்டினான். அவன் முன்னே நடந்த வெள்ளை உருவம் இன்னும் முன்னேதான் போய்க் கொண்டிருந்தது.

முன்னால் பார்க்கவும் பயமாக இருந்தது... பின்னால் திரும்பிப் பார்க்கவும் பயமாக இருந்தது. சுற்றிலும் கேட்கும் சப்தங்கள் வேறு பயத்தைக் கூட்ட, மீண்டும் இயர் போனை காதில் மாட்டிக் கொண்டு, ஆசுவாசத்திற்கு கொஞ்சம் தண்ணீர் குடித்து, சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான்.

சுடுகாடு நெருங்க நெருங்க 'தம்பி சிகரெட்டு ஒண்ணு எனக்குக் கொடுத்துட்டுப் போவே' என்று யாரோ கேட்பது போலவும், 'எனக்கு மல்லிகைப் பூ வாங்கியாந்தியா' என அகிலாக்கா கேட்பது போலவும் 'வாடா ஓடிப்பிடிச்சி விளையாடலாம்' என்று சித்ரா கூப்பிடுவது போலவும் பிரமை ஏற்பட, அவனை அறியாமல் ஓட்டமெடுக்க ஆரம்பித்தான்.

என்ன ஓடினாலும் வெள்ளை உருவத்தைத் தாண்ட முடியவில்லை. அது அவனுக்கு முன்னே நகர்ந்து கொண்டுதான் இருந்தது.

பின்னால் ஏதோ ஒரு வண்டி வருவது போல் சத்தம் கேட்க, இந்த நேரத்துல யாரு... பேயா இருக்குமோ... செத்தவன் எவனாச்சும் வண்டி ஓட்டிக்கிட்டு வாரானோ... அய்யோ... காலையில என்னைய பொணமாத்தான் பார்ப்பாங்க போலயே.... செல்லையாய்யா செத்த மாதிரி முனி அடிச்சிருச்சின்னு சொல்லுவாங்களோ... என்று நினைத்தவனுக்கு உடம்பெல்லாம் சில்லென வேர்க்க, இதயம் எக்ஸ்பிரஸ் ரயில் போல் படபடக்க ஓட்டத்தின் வேகத்தைக் கூட்டினான்.

அவனருகில் வண்டி வந்த போது. 'அடே ராமுவா... உயிருக்குப் பயந்து ஓடும் போதே நினைச்சேன்... நீனாத்தான் இருக்கும்ன்னு.... ஆமா மாமவ வரச் சொல்லியிருக்கலாமுல்ல... பயந்தோளிப் பயலே.... இந்த ஓட்டம் ஓடுறே... நல்லவேள சுடுகாட்டுக்கிட்ட இன்னும் போவல... அங்கிட்டு போயிருந்தா பயத்துல மயங்கி விழுந்திருப்பேன்னு நினைக்கிறேன்... வா... வண்டியில வந்து ஏறு....' எனச் சிரித்தார் செல்லையாய்யா பேரன் ராஜேந்திரன்.

ராஜேந்திரனை அனுப்பி வச்ச முனியய்யாவுக்கு மனசுக்குள்ள நன்றி சொல்லிக் கொண்டே வண்டியில் ஏறி அவர் தோள் வழியாக மெல்ல முன்பக்கம் பார்த்தேன்.

வெள்ளை உருவத்தைக் காணோம்... 'அப்ப நம்மூருக்கு ரோடு இல்ல... குளக்கால் வழியாத்தான் வரணும்...  கடையடச்சிட்டு இருட்டுக்குள்ள நான் வரும்போது எனக்கு முன்னால ஒரு வெள்ள உருவம் வர்ற மாதிரியே இருக்கும். சரியா நம்ம முனியய்யா கோவில்கிட்ட வரும்போது மறைஞ்சிரும்... அது நம்ம முனியய்யாதான் தெரியுமா...' அப்படின்னு அப்பா எப்பவோ சொன்னது இப்ப ஞாபகத்தில் வர... அப்படியும் இருக்குமோ... இல்ல வில்லுக்கம்பு வெள்ளச்சாமி... அதுவுமில்லேன்னா செல்லைய்யாய்யா மாதிரி யாராச்சும்.... நினைவு மீண்டும் பேய்க்குள் பயணிக்க, பயத்தில் ராஜேந்திரனின் தோளை இறுகப் பற்றிக் கொண்டு  கண்களை இறுக மூடிக் கொண்டான்.

'சிவப்பி செத்த கதை தெரியுமா...?' என ராஜேந்திரன் ஆரம்பிக்க, சுடுகாட்டைக் கடக்க வேண்டுமே என்ற நினைப்பே வயிற்றைக் கலக்க சிவப்பி கதை வேறயா என்று நினைத்தவனுக்குப் பின்னே மல்லிகைப் பூ வாசம் தொடர ஆரம்பித்தது.
-'பரிவை' சே.குமார்.

புதன், 4 ஜூலை, 2018

வாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை

லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவதற்கான மனநிலை இல்லை. இனி வலைப்பக்கம் தொடருமா... தொடராதா தெரியாது... ஆனாலும் இதுவரை எழுதியவற்றையாவது தொடர்ந்து வலையில் வைத்திருக்க வேண்டும் என்பதால் பிரதிலிபி போட்டிகளில் கலந்து கொண்ட கதைகள். அகல் மின்னிதழ் சிறுகதைப் போட்டியில் தேர்வான கதை, அகலுக்கு எழுதிய கட்டுரை என கைவசமிருப்பவற்றை அவ்வப்போது பதிந்து வைக்கலாம் என்ற எண்ணம்.

கருத்து இடுவதில்லை... மறுமொழி இல்லை என்றெல்லாம் நினைப்பீர்கள் என்றால் மீண்டு(ம்) வரும் வரை அப்படித்தான் நகரும். சிலரின் வலைப்பக்கத்தை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். தொடர்ந்து நட்பில் இருப்பேன்... நன்றி.

நட்புடன்
சே.குமார்.

மே மாத (வைகாசி மின்னிதழ்) அகலில் வெளியான கட்டுரை 'வேயன்னா' இங்கே...

குற்றப்பரம்பரை : வேயன்னா

ரு நாவலை வாசிக்கும் போது அதில் ஏதோ ஒரு கதாபாத்திரத்தின் பின்னே நாம் பயணிக்க ஆரம்பித்தால் அந்த நாவல் வாசிப்பு நிச்சயமாக நமக்கு ஒரு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். அந்தச் சுவையை பொன்னியின் செல்வன் வாசிக்கும் போது வந்தியத்தேவனுடனும்... உடையார் வாசிக்கும் போது இராஜராஜனுடனும்... கடல்புறா வாசிக்கும் போது கருணாகரப் பல்லவனுடனும்... ஜலதீபத்தில் இதயச் சந்திரனுடனும்... யவனராணியில் இளஞ்செழியனுடனும்... சிவகாமியின் சபதத்தில் நரசிம்மவர்மப் பல்லவனுடனும் பயணிக்கும் போது உணர்ந்தேன்... கதைகளைச் சுவைத்தேன். ஒரு சில நாவல்களில் எந்தக் கதாபாத்திரமும் நம்முடன் ஒட்டாது. அப்படியான நாவல்கள் வாசிப்புக்கு அயற்சியைக் கொடுக்கும். அப்படி ஒரு நாவலை சமீபத்தில் வாசித்தேன். அதன் பின் வாசிக்க ஆரம்பித்த குற்றப் பரம்பரையில் ஆரம்பம் முதலே ஒருவரின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தேன்.

அவர்தான் வேலுச்சாமி என்ற வீயன்னா என்ற வேயன்னா.

நண்பர்கள் எல்லாம் சிலாகித்துப் பாராட்டிப் பேசிய நாவல் குற்றப்பரம்பரை. ரொம்ப நாளாகவே வாசிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த நாவல். நண்பர்களால் சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது. வாசிக்க ஆரம்பித்து ஒரே நாளில் முடித்தேன்.

“பற்றிக் கொண்டால் பல உயிர்களைக் காவு கேட்கும் தென் மாவட்டத்து சாதிக் கலவரங்கள். தமிழ்நாட்டின் சரித்திரக் கேடு” என்ற வரிகளே நாவலாசிரியரின் முன்னுரையின் முதல் வரிகளாய்... அது முற்றிலும் உண்மை. அதேபோல் பேரன்பும் பெருங்கோபமும் கொண்டு எழுதத் துவங்கினேன் என்றும் சொல்லியிருக்கிறார். அந்த பேரன்பையும் பெருங்கோபத்தையும் வேயன்னாவின் பின்னால் பயணிக்கும் போது உணரலாம்.

ஊருக்கு ஒரு மரியாதைக்குரிய மனிதர் இருப்பார் இந்த வேயன்னாவைப் போல... ஊருக்கு ஒரு பிரச்சினைக்குரிய மனிதர் இருப்பார் பெருநாழி பச்சமுத்துவைப் போல...  இது எல்லாக் கிராமங்களிலும் இருக்கும். எங்கள் ஊரில் கூட இது போன்ற மனிதர்களை பார்த்து வளர்ந்திருக்கிறோம்... பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எல்லா ஊரிலும் நல்லது செய்ய ஒருவன் இருந்தால் கெடுதல் செய்வதற்கென ஒருவன் இருப்பான். அவனுக்குப் பத்துப் பேர் என்றால் இவனுக்குப் பத்துப் பேர் இருக்கத்தான் செய்வார்கள். இதனாலேயே ஊர் நல்லது கெட்டது எல்லாவற்றிலும் ரெண்டு பட்டுக்கிடக்கும். ஊரில் ஒரு பிரச்சினை என்றால் ஊர்ப்பெரியவர் தலைமையில் ஊர்க்கூட்டம் நடக்கும். ஊர்க்கூட்டத்தில் விதண்டாவாதம் செய்வதே பச்சமுத்து போன்றவர்களின் வேலை. இது குற்றப்பரம்பரையில் இல்லை என்றாலும் கிராமங்களில் வழிவழியாக வந்துகொண்டுதான் இருக்கிறது.

எந்த ஒரு பிரச்சினை என்றாலும் ஊர்த் தலைவர் தலைமையில் ஊர்க்கூட்டம் கூட்டப்பட்டு அந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு எடுக்கப்படும். ஊர்க்கூட்டத்தில் பெண்கள் கலந்து கொள்ளக்கூடாது என்பதுதான் விதி ஆனால் அந்த விதியும் சிலகாலமாக ஆம்பளை இல்லாத வீட்டில் பொம்பளை கலந்துக்கலாம் என மாற்றப்பட்டுவிட்டது. ஊர்க்கூட்டத்தில் முடிவு எடுக்க முடியாத பெரும் பிரச்சினைகள் நாட்டுக் கூட்டத்துக்குச் செல்லும். பல கிராமங்களை உள்ளடக்கியது ஒரு நாடு. கிராமத் தலைவர்கள் எல்லாம் நாட்டுத் தலைவருடன் அமர்ந்து பிரச்சினையை பற்றிப் பேசி, பெரும்பாலும் நல்லதொரு முடிவை எடுத்து விடுவார்கள். இங்கும் முடியாதபட்சத்தில் நீதிமன்றம் நோக்கிச் செல்வார்கள். இந்த நடைமுறை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. இப்ப சின்னப் பிரச்சினைகள் என்றாலும் காவல் நிலைத்திலும் நீதிமன்றத்திலும்தான் நிற்கிறார்கள். இந்த ஊர்க்கூட்டம், நாட்டுக்கூட்டம் எல்லாம் எங்க பக்கம் இன்னும் உயிர்ப்போடுதான் என்று சொல்லிக் கொள்ளலாம் ஆனால் காவல் நிலையங்களே இப்போது பிரதானமாகிவிட்டது.

சரி இனி வேயன்னாவோட பயணிக்கலாம்.

தங்கள் வாழ்க்கைக்காக... குறிப்பாக மூன்று வேளை சோற்றுக்காக திருடும் மக்கள் அவர்கள். தங்களை அழிக்கத் துடிக்கும் ஆங்கிலேயர்களிடமிருந்து தப்பித்து உயிர் பிழைக்க காட்டுக்குள் குழந்தை குட்டிகள், நாய்கள், மாடுகள் என எல்லாவற்றோடும்  ஓடும் மக்கள் பலரை இழந்து சம்பங்கி நதிக்குள் விழுந்து அதன் போக்கில் இழுத்துச் செல்லப்பட்டு கரையொதுங்கி கிடக்க, அந்தக் காட்டுக்குள் மாடு மேய்க்க வரும் பெரும்பச்சேரி வட்டத்துரை என்னும் அரிஜனச் சிறுவனால் தங்கள் ஊருக்கு அருகில் சுற்றிலும் வேலிக்கருவை சூழ்ந்த பகுதியில் தங்க வைக்கப்படுகிறார்கள்.

அதையே கொம்பூதி என்ற பெயருடன் தங்கள் ஊராக மாற்றிக் கொள்ளும் அக்கள்ளர்கள். அங்கிருந்தபடியே தங்கள் திருட்டுத் தொழிலைச் செய்ய ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் தலைவன் தான் வேலுச்சாமி. உயிருக்குப் பயந்து வரும் போது மூத்தமகன் சேதுவைத் தொலைத்து விட்டவரின் இரண்டாவது மகன் வில்லாயுதம். அப்பனுக்குப் பின் அந்த இடத்தில் இவந்தான் தலைவன் என்பதை ஆரம்பம் முதலே அக்கூட்டம் சொல்லி வருகிறது. நாம் செயல் எப்படியும் தலைவராகிவிடுவார் என்றும் முதல்வர் ஆகிவிடுவார் என்றும் கனவு காண்பதைப் போல்தான்... வில்லாயுதமாச்சும் தலைமைப் பண்புக்கு சிறந்தவனாகிறானா என்பதை முடிவில் பார்க்கலாம். இப்ப நாம் பயணிக்க வேண்டியது வேலய்யாவோடுதானே...

தங்களைப் பார்த்ததும் தோளில் போட்டிருக்கும் துண்டை எடுத்து கக்கத்தில் வைத்துக் கொண்டு 'கும்புடுறேன் சாமி' என்று சொல்லிச் செல்ல வேண்டும் என்ற சட்டங்கள் இன்று பல கிராமங்களில் இருக்க, இக்கதையின் காலகட்டத்தில் நீயும் நானும் ஒண்ணுதாம்லே நம்ம அர்ணாக்கயிரை அவுத்துட்டா நமக்குள்ள என்னலே வித்தியாசமிருக்கு என வாழ்ந்திருக்கிறார் இந்த வேயன்னா. இன்று அரசியல் காரணிகளுக்காகவே இந்த இரு சாதிகளும் பிரித்து வைக்கப்பட்டிருக்கின்றன. எப்படிப் பிரித்தாள வெள்ளையரும் அவருடன் சேர்ந்த பெருநாழிக் கிராமத்தார்களும் முயற்சிக்கிறார்கள் என்பதை கதையை வாசிக்கும் போது அறியலாம்.

தங்களுக்கு வாழ்வளிக்க முக்கியக் காரணியாய் இருந்த பெரும்பச்சேரி வட்டத்துரையை தன் மகனாகத்தான் பார்க்கிறார். சாதி என்னும் சகதியை தன்னுள் அப்பிக் கொள்ளாத மனிதன் வேலய்யா... வட்டத்துரையுடன் சரிசமமாக வீட்டுக்குள் அமர்ந்து சாப்பிடுகிறார். தோளில் கை போட்டு நீயும் எம்புள்ளதாம்லே என அணைத்துக் கொள்கிறார். வட்டத்துரையைக் காணோமென்றால் தவிக்கிறார். தன் மகன் வில்லாயுதத்தைக் கூட அருகில் வைத்துக் கொள்ள விரும்பாத மனிதர், வட்டத்துரை இல்லாது எங்கும் செல்ல விரும்பாத மனிதராகவே வாழ்கிறார்.
கொம்பூதி கிராமம் மட்டுமல்ல, பெரும்பச்சேரி கிராமமும் இவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறது. அதற்காக நாட்டமை பாதம் பட்டால் என்றோ, எஜமான் காலடி மண்ணெடுத்து என்றோ பாடவில்லை. மரியாதையை மரியாதையாகவே செய்கிறார்கள். அவரும் அவர்களை மதிக்கிறார்... அவர்களுடன் பேசி மகிழ்கிறார். பெருநாழி உள்ளிட்ட மற்ற ஊர்களில் இவர் மீது பயம் கலந்த மரியாதையே இருக்கிறது... அதுவும் திருட்டுக் கூட்டத் தலைவன் என்ற பயம்.

தங்கள் வீட்டைப் பெரிதாக கட்ட வேண்டும்... பெண்கள் எல்லாம் நகைகளைப் போட்டு அழகு பார்க்க வேண்டும் என்பதெல்லாம் அவர்களின் எண்ணமில்லை. மண் குடிசைதான் அவர்களின் வீடு... திருடும் பொருள்கள் எல்லாம் பெருநாழியைச் சேர்ந்த பச்சமுத்துவிடம் கொடுக்கிறார்கள். அவரும் இவர்களுக்கு தவசம் உள்ளிட்ட தானியங்களைக் கொடுக்கிறார். அதை வாங்கி தங்களுக்குள் பிரித்துக் கொண்டு சாப்பிடுகிறார்கள். அதுவே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. வேயன்னாவின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு என்பது அந்த ஊரில் இல்லவே இல்லை... அவர் சொல்வதே வேதவாக்கு.

திருடப் போகும் முன்னர் தனது சொந்தத் தங்கை உள்ளிட்ட பெண்களை ஆட்டுக்கறி கொண்டு செல்வது போல் போகவிட்டு யார் வீட்டில் கொள்ளை அடிக்க நினைக்கிறார்களோ அவர் வீட்டில் எந்த அறையில் நகைப்பெட்டி இருக்கிறது என்பதை அறிந்து வரச் செய்து அதன் பின் இரவில் ஊர்க் கோவிலின் முன் நின்று தனது தாய் கூழானிக்கிழவி... இந்தக் கிழவி செமக் கிழவி... கதையை வாசித்தால் இது பண்ணுற அட்டகாசத்தையும் இறுதியில் அது நம்மளை அழ வைப்பதையும் ஒரு சேரப் பருகலாம். இந்த மாதிரி ஆட்டம் போடுற அப்பத்தா ஊருக்கு ஒண்ணு இருக்கும். சுந்தர பாண்டியனில் வருகிற அப்பத்தாக்கள் மாதிரி ரகளையான கிழவி. அது சாமி கும்பிட்டு திருமண் எடுத்துப் பூசிவிட்ட பின்தான் திருடக் கிளம்புகிறார்கள். இரவில்தான் இவர்களின் வேட்டை. சரியான இடத்தில் ஓட்டையிட்டு ஆக்காட்டி குருவியை உள்ளே விட்டு வேவு பார்த்து அதன் பின்னே வேலையைக் கச்சிதமாக முடிக்கிறார்கள். எல்லாத்திலும் மூளை வேயன்னாதான்.

சுற்றுப்பட்டு எங்கிட்டும் உப்புத் தண்ணியாக இருக்க, பெருநாழியில் இருக்கும் கிணறு மட்டுமே நல்ல தண்ணீரைக் கொடுக்கிறது. பெருநாழிக் கிராமத்தில் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தும் பெரும்பச்சேரி மக்களுக்கும் அதுதான் தாகம் தீர்க்கும் சாமி... அவர்கள் தங்களது வயல்களில் உழைத்தாலும் கீழ்சாதிக்காரர்கள்தானே... தீண்டாமை என்னும் தீயை மிகத் தீவிரமாக வளர்க்கும் பெருநாழி ஆண்களும் பெண்களும் பெரும்பச்சேரி பெண்கள் தண்ணீர் எடுக்க வந்தால் குடத்தை தள்ளி வைத்து விட்டு எட்ட நிற்க வேண்டும்.  தண்ணீர் எடுக்க வரும் பெருநாழிப் பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு வாளிதான் ஊற்றுவார்கள். எப்போது குடம் நிறைகிறதோ அதுவரை காத்திருக்க வேண்டும் என சட்டமியற்றி வைத்திருக்கிறார்கள். காத்திருக்கும் குடங்கள் அரைமணியிலும் நிறையலாம்... அரை நாளிலும் நிறையலாம்... பாவம் வெயில்ல காத்துக்கிடக்காளே என யாரும் ஒரு வாளி சேர்த்து ஊத்துவதில்லை. இந்தக் கிணறுதான் மிகப்பெரிய பிரச்சினைக்கு விதையாகிறது.

ஆம்... கைக்குழந்தைக்காரியான ராக்கு தண்ணியெடுக்கப் போகும் போது இந்த நேரத்தில் யாருமிருக்க மாட்டார்கள் எனப் போய் தானே தண்ணியெடுக்க, அவள் கணவன் துருவனைப் பிடித்து கொதிக்கும் எண்ணெய்க்குள் கிடக்கும் காசை எடுக்கச் சொல்லி, கையை வேக வைத்து உடம்பெல்லாம் சர்க்கரைப் பாகை ஊற்றி எறும்புகள் நிறைந்த மரத்தடியில் கட்டி வைத்து விடுகிறார்கள், கணவனைக் காணவில்லை என வேயன்னாவிடம் முறையீடு செய்ய, வட்டத்துரை இன்னும் சிலர் சகிதம் பெருநாழி சென்று அவனை மீட்பவர் நாளை முதல் பெரும்பச்சேரி சனம் அந்தக் கிணற்றில் தாங்களே நீர் எடுத்துக் கொள்வார்கள் எனச் சொல்லிச் செல்லும் வேயன்னா, மறுநாள் பெரும்பச்சேரி ஊரையே கூட்டிக் கொண்டு கிணற்றுக்கு வர, நீரில் மலம் நிறைந்து மிதக்கிறது. அவமானத்தால் கோபத்தில் தகிக்கும் வேயன்னாவால் பெருநாழி சந்தையும் வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டு சந்தை தீக்கிரையாகிறது.

கள்ளர்களை ஒடுக்க பெருநாழியில் கச்சேரி (போலீஸ் நிலையம்) அமைக்கப்பட, முதலில் வரும் வெள்ளக்கார போலீசுக்கு வேயன்னா மீது மிகுந்த மரியாதை, வீயன்னா என அழைக்கும் அவர் கச்சேரிக்கு அழைத்துப் பேசுகிறார் ஆனால் மற்ற போலீசுக்கு வேயன்னாவை பிடித்து உள்ளே போட வேண்டும் என்பதுதான் ஆவா... நல்லவரான வெள்ளைக்கார அதிகாரியை தங்களுக்கு எதிரானவர் என வேயன்னாவின் ஆட்கள் விரட்டி விட, அடுத்து வருகிறவன் எப்படியும் வேயன்னாவை பிடிச்சி உள்ளே போடணும் என்ற எண்ணத்துடனேயே இருக்கிறான். அவனின் மேலதிகாரியும் வேயன்னாவை வீழ்த்த வேண்டும் என்பதில் குறியாய் இருக்கிறார்.அதற்குப் பெருநாழி ஆண்களும் துணை நிற்கிறார்கள்.

கிணற்றுப் பிரச்சினைக்குப் பின்னர் பெரும்பச்சேரி மக்களுக்கு பெருநாழியில் வேலை இல்லை என்றாகிப் போனதால் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட ஆரம்பிக்கிறார்கள். தங்களுக்கு வரும் தவசத்தை அவர்களுக்குக் கொடுக்கச் சொல்கிறார் வேயன்னா.

பெருநாழி ஆசாரியின் வீட்டில் தீப்பிடிக்க இது கொம்பூதி வேயன்னா வேலைதான் என்று ஊரே கூடிப் பேசிக் கொண்டிருக்க, வெள்ளைக்கார போலீசும் எரியும் தீயை வேடிக்கை பார்க்க, வயிற்றுப் பிள்ளைக்காரியான மனைவி தீக்குள் சிக்கியிருக்கும் நிலையில் ஆசாரி தவிச்சி நிற்க, புதிய வெள்ளை அதிகாரியின் அழைப்பை ஏற்று பெருநாழிக்கு கண்மாய் வழியாகச் செல்லும் வேயன்னாவும் வட்டத்துரையும் தீக்குள் புகுந்து ஆசாரி மனைவியைக் காப்பாற்றுகிறார்கள். அந்த வெள்ளை அதிகாரிக்கு வேயன்னா மீது மரியாதை ஏற்பட, அவர் கள்ளத் தொழிலை விட்டால் போதும் என்ற மனநிலைக்கு வருகிறார்.

தங்கள் தொழிலை விட்டுவிட்டு திருந்தி வாழ மாட்டோமென முடிவாய் இருப்பவர்களை எருது கட்டுக்கு மாடு பிடிக்க வரச்சொல்லி அழைத்துத் தந்திரமாக போலீஸ் வளைத்துப் பிடித்து அடிக்கிறது. கொம்பூதி ஆண்கள் எல்லாம் வேயன்னாவின் ஒற்றைப் பார்வைக்கு கட்டுப்பட்டு அத்தனை அடியையும் வாங்கிக் கொண்டிருக்க, அவர்களோடு நாமும் உக்கார்ந்திருக்கிறோம் போலீஸ் அடி வாங்கிக் கொண்டு.

அந்த கருத்த உரமேறிய தேகம்... வேல் கம்பு பிடித்து சிங்கமென நடக்கும் மனிதன்... பார்த்தவர் எல்லாம் பயந்து ஒதுங்கிச் செல்லும் மனிதன்... சுற்றிலும் இறுக்கப்பட்ட கயிற்று வலைக்குள் நொறுங்கி அமர்ந்திருக்கும் போது நாமும் அவர் அருகே கண்ணீரோடு அமர்ந்திருக்கிறோம்.

சிங்கத்தை சீண்டிட்டேல்ல.... அது இனி என்ன பண்ணுதுன்னு பாரு அப்படின்னு ஊரில் சொல்லுவாங்க... அப்படி போலீஸ் தீண்ட, அவர்களுக்கு பாடம் கற்பிக்க தன் இளைஞர் கூட்டத்துக்கு கண்ணைக் காட்டுகிறார் வேயன்னா. பெருநாழி ஆசாரி, வேயன்னா மீது கொண்ட மரியாதையின் காரணமாக தன் குழந்தைக்கு வேலுச்சாமி என பெயர் வைத்திருக்கிறார். அதே ஆசாரி போலீசாரையும் பெருநாழி குள்ள நரிகளையும் பலி வாங்க தன் வீட்டில் சட்டி சட்டியாக எண்ணெய் காய வைக்க உதவுகிறார். வித்தியாசமான திட்டத்தால் போலீசாரெல்லாம் எண்ணெய்க்குப் பலியாக, வேயன்னாவைப் பிடிக்க வந்த உயர் அதிகாரி வில்லாயுதத்தால் கொல்லப்படுகிறார்.

மூன்றாவதாக வரும் போலீஸ் அதிகாரி சேது. ஆம் வேயன்னா தப்பி வரும் போது தொலைத்த மகன்தான் அவன். ஐயாவை (அப்பாவை ஐயா என்றழைப்பது பெரும்பாலான கள்ளர்களின் வழக்கம்) தன் பாசத்தால் இனித் திருட மாட்டோம் என சத்தியம் செய்ய வைக்கிறான். அதன் பின் வேயன்னாவின் கொம்பூதி கிராமம் திருடச் செல்லவில்லை. திருடிய மொத்தத்தையும் வாங்கிக் கொண்டு சாப்பாட்டுக்குப் பொருள் அனுப்பும் பச்சமுத்து சும்மா இருப்பாரா என்ன...? அவரின் சித்து வேலைகளால் திருட்டு நடக்கிறது... பழி வேயன்னா மீது விழுகிறது. மகன் எதிரியாகிறான்... தன் கையால் அவரை அடித்து நொறுக்குகிறான்.

வயிற்றுப்பசியால் வாடினாலும் செய்த சத்தியத்தை மீறாத வேயன்னாவும் அவரின் கூட்டமும் வேறு வேலை எதுவும் செய்யத் தெரியாது தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் பெருநாழி பச்சமுத்துவின் திட்டத்தால் செய்தாத திருட்டுப் பழியையும் சுமந்து வருந்தித் திரிகிறது. வேல் கம்புடன் வீறாப்பாய் திரிந்த மனிதன் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார் வேதனையுடன்.

இவர்களுக்கு எதிராக சிலர் கிளம்பினாலும் இவர்களோடு இருக்கும் பெரும்பச்சேரி மக்களைப் பிரித்தாலொழிய வேயன்னாவை வீழ்த்த முடியாது... அவர்களுக்குள் மூட்டி விட வேண்டும் என முடிவெடுத்து பெரும்பச்சேரி மக்களுக்கு பெருநாழியில் மீண்டும் வேலை அது இது என்ன இரு சாதிக்குள்ளும் சா'தீ'யை வளர்க்க ஆரம்பிக்கிறது கச்சேரியும் பெருநாழியும்.

இறுதியில் மிகப்பெரிய சண்டை... பெருநாழியில் பலர் கொல்லப்படுகிறார்கள். கொம்பூதிக்கு வரும் சேது தலைமையிலான போலீஸ் தண்ணீருக்குள் மூழ்கியிருந்து தாக்கும் ஆண்களை எல்லாம் சுட்டுத் தள்ள, மகன் சேதுவால் தண்ணீருக்குள் மறைந்திருக்கும் வேயன்னாவும் கொல்லப்படுகிறார்.

இப்படி மக்களுக்காக, மக்களோடு வாழுந்த மனிதரான வேயன்னாவுக்கு அங்கம்மா என்ற மனைவியும் அன்னமயிலு என்ற அழகிய மகளும் வில்லாயுதம், கூனிக்கிழவி, கணவனை இழந்த தங்கை, அவளின் மகன் ஊமைத்துரை, மகள் சிட்டு என ஏகப்பட்ட சொந்தங்கள் இருந்தாலும் இந்த மனிதர் திருடியது... வாழ்ந்தது... எல்லாமே தன்னை நம்பி வந்த மக்களுக்காகவும் தங்களைக் காப்பாற்றி இருக்க இடமளித்த பெரும்பச்சேரி மக்களுக்காகவும்தான். பெருநாழி பகைக்கிராமமாக இருந்தாலும் அங்கும் பலருக்கு உதவி செய்தவர்தான் இந்த வேயன்னா. மொத்தத்தில் ஊருக்காக வாழ்ந்த மனிதன் வேயன்னா... உறவுக்குக் கட்டுப்பட்டு உயிரை இழக்கிறார்.

கதையை முடித்து அதிலிருந்து வெளிவரும் போது வீரம் செறிந்த மனிதன்... தன்னை நம்பிய மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த மனிதன்... என்றோ காணாமல் போன மகன் போலீசாய் வந்து வாங்கிய சத்தியத்தால் வறுமையில் வாடிய மனிதன்... தண்ணீருக்குள் இறந்து கிடக்க, வேயன்னா பின்னால் வட்டத்துரை போல் நடந்தும் ஓடியும் அவரின் கைகாட்டலுக்கு அடித்தும் ஆர்ப்பரித்தும் பயணித்த நாமும் கூழானிக்கிழவி, அன்னமயிலு, அங்கம்மா, சிட்டு, வட்டத்துரை... இன்னும் இன்னுமாய்க் கூடிநிற்கும் கொம்பூதி, பெரும்பச்சேரி மக்களுடன் மக்களாய் நின்று கொண்டிப்போம் கண்ணீருடன்.

இதுவே இந்த நாவலின் மிகப்பெரிய வெற்றி. வட்டார எழுத்தும் ஒரு பரம்பரையின் வாழ்வும் நம்மை ஈர்த்துக் கொள்ளும்... அதிலிருந்து மீள்வது என்பது வேயன்னாவின் மரணத்தில் கண்ணீராய் நாம் வெளியாகும் போது மட்டுமே.

வில்லாயுதம் ஒரு களவைத் தலைமை தாங்கிச் செய்து வேயன்னாவுக்குப் பின் இவன்தான் என்று நிரூபித்தாலும் கதை முழுவதும் அவனின் களம் வஜ்ராயினி, வைரம், முனியின் குடில் என வேறு பாதையில்தான் பயணிக்கிறது. எனக்குச் சரிசமமாக வில்லாயுதம் கூட உட்கார முடியாது ஆனால் வட்டத்துரை உட்காருவான் என வேயன்னா சொல்வதன் உண்மையை கதையினை வாசிக்கும் போது அறியலாம். வில்லாயுதத்துக்கு அப்பாவுடன் அமரவோ பேசவோ நேரம் இருந்தால்தானே சமமாக உட்காரமுடியும். அவனின் போக்கு வேறு பாதையில்...

வட்டத்துரை பிறப்பு குறித்தான கன்னிமார்கள் கேட்கக்கூடாத காளத்தி கதையும் வஜ்ராயினி தொடர்பான வைரத்தேடல் கதையும் கிளைக்கதைகளாய்... அவலமாய் முடியும் கதைகள். இரண்டுமே சோகமயமானது என்றாலும் வஜ்ராயினி கதையின் கழுகு, மான், வைரம், ஆட்டுத் தோலில் வைரத்தை கழுகு எடுத்து வருதல் என ஆபுனைவாய் பயணிப்பது வேயன்னா பின்னால் வேல் கம்புடன் பயணிக்கும் போது நம்மோடு ஒட்டவில்லை.

சேதுவின் வெள்ளைக்கார காதலி... அவர்களின் காதல் என மற்றொருமொரு களம்... இறுதியில் வெள்ளைக்காரக் காதலி எடுக்கும் முடிவால் மனசுக்குள் நிற்கிறாள்.

அன்னமயிலுக்கு வட்டத்துரை மீது சொல்லாத காதல். அதை சில இடங்களில் அவளின் செய்கையால் மட்டுமே ஆசிரியர் உணர்த்தியிருப்பார். சினிமாத்தனமாய் அவனிடம் உன்னைத்தான் கட்டிப்பேன்னு அவளை நிற்க வைக்கவில்லை.

சேது போலீஸ் பயிற்சிக்குச் செல்வதும், அவனுக்கு துப்பாக்கி சுடுவதில் இருக்கும் திறமை குறித்து காதலி வீட்டில் பெருமை பேசுவதும் கதையின் முடிவை நமக்குச் சொல்லிவிடுகின்றன ஆமா எத்தனை சினிமா பார்த்திருப்போம்.

சேதுவின் வருகைக்குப் பின்னர் கதையில் சினிமாத்தனம் குடி கொண்டு விடுகிறது. வேகமான வேயன்னா சத்தியத்தின் பின்னே சாந்த சொரூபியாய் மாறிவிட, கதை மெல்லத்தான் பயணிக்கிறது.

வேயன்னாவாய் அந்த கருத்த தேகமும் வேல் கம்பு தாங்கி கையும் வீரமான நடையும்... கிடாரி, மதயானைக் கூட்டம் படங்களில் நடித்த இந்த நாவலின் ஆசிரியர் வேல ராமமூர்த்தி அவர்கள்தான் இக்கதையை வாசிக்கும் போது எனக்கு முன்னே வேகவேகமாய் நடந்து கொண்டிருந்தார்.

கூட்டாஞ்சோறு என்ற தலைப்பில் ஜூனியர் விகடனில் தொடர்கதையாக வந்ததுதான் நாவலாகும் போது ஒரு பரம்பரையின் கதையாய்... சீறும் காளையாக பயணிக்க குற்றப்பரம்பரை ஆனது.

பாலா இந்தப் படத்தை எடுக்கும் போது நாயகனைச் சேது, வில்லாயுதம் என இரட்டை வேடத்தில் நடிக்க வைத்துவிட்டு வேல ராமமூர்த்தி அவர்களை 'வேயன்னா' ஆக்கினால் மிகச் சிறப்பாக இருக்கும்.

வேயன்னாவாக வாழ அந்தப் பரம்பரையில் வந்த வேல ராமமூர்த்தி அவர்களால் மட்டுமே முடியும்.

வேயன்னா இன்னும் எனக்குள் வேல் கம்போடுதான் வலம் வருகிறார். ஒருவேளை நீங்கள் வாசிக்கும் போது அவர் எனக்குள் இருந்து உங்களுக்குள் இடம் மாறலாம். 

-'பரிவை' சே.குமார்.

புதன், 27 ஜூன், 2018

செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)

ஜுன் - 19 எங்கள் பிளாக் தளத்தின் ' கேட்டு வாங்கிப் போடும் கதை'யில் பகிரப்பட்ட எனது சிறுகதை. வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க...

கதையைப் பகிர்ந்தமைக்கு எங்கள் பிளாக் ஸ்ரீராம் அண்ணாவுக்கும் எங்கள்பிளாக் ஆசிரியர் குழுவுக்கும் நன்றி.

*****

செல்வம் 

காலையில் எழும்போதே ஏனோ செல்வம் ஞாபகத்துக்குள் வந்தான். அவனைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மெல்ல மெல்ல எழுந்து என்னை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. 

செல்வத்தைப் பார்த்து பல வருடங்களாகிவிட்டது.  இப்போது இருவருக்குள்ளும் தொடர்பே இல்லை. ஏனோ இன்று அவன் நினைவாய் இருந்தது.

என்னோட அலமாரியைத் திறந்து கல்லூரியில் நண்பர்கள் எழுதிக் கொடுத்த ஆட்டோகிராப் டைரியை எடுத்து மெல்லப் பக்கங்களை நகர்த்தினேன். விதவிதமான கையெழுத்தில்... கட்டுரையாகவும் கவிதையாகவும் காவியமாகவும் எழுதி கையெழுத்திட்டிருந்தார்கள்.

பெண்களின் ஆட்டோகிராப் பார்க்கும் போது இவர்கள் எல்லாம் இப்ப எங்கே... எப்படி இருப்பார்கள்..? என மனசுக்குள் தோன்ற அன்று பாவாடை தாவணியில் அழகுச் சிட்டுக்களாய் பார்த்த பெண்கள் எல்லாம் இந்த இருபது ஆண்டுகளில் குடும்பம் குழந்தைகள் என எத்தனை மாற்றங்களைப் பெற்றிருப்பார்கள் என்று நினைத்துச் சிரித்துக் கொண்டேன். என் கை தொப்பையைத் தடவிக் கொண்டது.

மெல்ல பக்கங்களைப் புரட்டி வர செமஸ்டரில் பேப்பர் காட்டவில்லை என்ற கோபத்தில் ராஜூ எழுதியிருந்த 'நல்லவனாய் இருந்தால் நடுத்தெருவில்தான் நிற்பாய்' என்ற வரிகளைப் படித்துச் சிரித்துக் கொண்டேன். நல்லவனாய் இருப்பதால் எத்தனை சிக்கல்களை வாழ்வில் எதிர்க்கொள்ள வேண்டியிருந்தது... வேண்டியிருக்கிறது. ராஜூ தீர்க்கதரிசிதான்... சரியாகத்தான் சொல்லியிருக்கிறான். ஆமா ராஜூ இப்ப எங்க இருப்பான்... எப்படியிருப்பான்...?

அடுத்தடுத்த பக்கங்களை மெல்ல நகர்த்திக் கொண்டு வர, 'இறுதிவரை என்னில் நீயும் உன்னுள் நானும் என்பதைச் சொல்லிக் கொள்ளாமலே பிரிகின்றோம் நட்பாய்... இது வேடிக்கையாய் இருக்கிறது என்று நினைப்பதே வேதனையாக இருக்கிறது. வாழ்வில் என்றேனும் சந்திக்க நேர்ந்தால் அன்றேனும் மூன்றாண்டுகள் பூட்டி வைத்ததை நம்மால் சொல்லிக் கொள்ள முடியுமா...?'  என அனு எழுதியிருந்த வரிகளைப் பார்த்த போது ஏனோ விரல்கள் அந்த எழுத்தைத் தடவின. கண்ணில் இருந்து கண்ணீர் மெல்ல எட்டிப் பார்த்தது. அனு இப்ப எங்கே இருக்கே...?

அனுவை மனதார காதலித்தவன்தான்... ஏனோ கடைசி வரை நானும் சொல்லவில்லை... அவளும் என்னைக் காதலித்தாள் என்பதை ஆட்டோகிராப் மூலம் அறிந்த போது அவளும் ஏன் சொல்லவில்லை என்ற யோசனைக்குப் பதிலே கிடைக்கவில்லை... இவ்வளவுக்கும் இருவரும் நெருங்க நட்பாய்த்தான் இருந்தோம். பெரும்பாலான நாட்கள் சைக்கிளை உருட்டிக் கொண்டு பேசியபடியே கல்லூரிச் சாலையில் நடந்து வந்திருக்கிறோம். நண்பர்கள் எல்லாம் அவளையும் என்னையும் இணைத்துப் பேசும் போதெல்லாம் சிரித்தபடியே கடந்திருக்கிறாள்.  அனுவைத் தொலைத்தவன் நான்தானே... இனி யோசித்து என்னாவது...?

மெல்லப் பக்கங்கள் நகர, 'நமக்குள் எதற்கு இந்த ஆட்டோகிராப்... உன்னில் நானும் என்னுள் நீயும் எப்போதும் இருப்போம் நண்பா...' என எழுதி அழகாய் கையெழுத்திட்டு முகவரியும் எழுதியிருந்தான் காலை முதலாய் என்னை ஆக்கிரமித்திருந்தவன்.

செல்வம்...

கல்லூரியில் என்னுடன் ஒட்டிக் கொண்ட நட்புக்களில் முதன்மையானவன்.  எப்பவும் சிரிக்கச் சிரிக்கப் பேசுபவன்....  எல்லாருக்கும் பிடித்தவன்.... பேராசிரியர்களின் செல்லப் பிள்ளை... அழகாக, அருமையாகப் பாட்டுப் பாடுவான்....  அவன் பாட்டுக்கென்றே கல்லூரியில் ஒரு ரசிகர் கூட்டம் உண்டு.
செல்வம் ஒண்ணும் பெரிய பணக்கார குடும்பம் கிடையாது.... சாதாரண விவசாயக் குடும்பம்... அவனுக்கு மேலே இரண்டு அக்கா... அவனுக்குப் பின்னே ஒரு தங்கையும் தம்பியும்... விவசாய வேலை எல்லாம் அவனுக்கு அத்துபடி... விடியற்காலையில் எழுந்து உழவு ஓட்டிவிட்டு கல்லூரிக்கு நாலு கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டிக் கொண்டு வருபவன்.

கல்லூரி முடிந்து வீட்டுக்குப் போகும் போது உரமூட்டையோ மாடுகளுக்கான தீவன மூட்டையோ தூக்கிக் கொண்டு போவது அவன் வாடிக்கை. அவனையும் ஒருத்தி காதலித்தாள். அவள் வேறு யாருமல்ல எங்கள் வகுப்புத் தோழி மல்லிகாதான்... ரெண்டு பேருக்குள்ளும் காதல் இருப்பதை இறுதி ஆண்டில்தான் அறிய முடிந்தது. அறிந்தபின் அது திவிரக் காதலாக மாறியது. கல்லூரி முடிந்த பின்னும் அவன் அவளைப் பார்ப்பதற்காகவே ஊரில் இருந்து நாலு கிலோ மீட்டர் சைக்கிள் மிதித்து வந்து கொண்டிருந்தான்.

ஏனோ தெரியவில்லை அவர்களின் காதலும் கை கூடவில்லை... இருவரும் தனித்தனி வாழ்க்கையை தனதாக்கிக் கொண்டார்கள். அவர்களின் காதலும் என்பதில்  ஆட்டோகிராப்பில் அனு எழுதும் வரை தெரியாமலேயே இருந்து அதன் பின்னும் கை கூடாத என் காதலும் அடக்கமே.

செல்வத்தின் திருமணத்துக்கு அவன் ஊருக்குச் சென்றேன். மற்ற நண்பர்களுக்கு அவன் சொல்லவில்லை. நவநீதனுக்கு மட்டும் சொன்னேன் என்றான். ஏனோ அவனும் வரவில்லை. கிராமத்தில் திருமணம்... மண்டபத்துக்குச் செல்லாத கல்யாணம்... பெரிய கொட்டகை போட்டு தடபுடலாய் திருமண விருந்து வைத்து சிறப்பாக திருமணத்தை நடத்தினார் செல்வத்தின் அப்பா...

அக்காக்கள் திருமணம் முடிந்து அவனுக்கு அடுத்த தங்கைக்கும் திருமணம் முடித்து அவன் திருமணம் செய்து கொண்ட போது முப்பத்திரண்டை தாண்டியிருந்தான். அவனின் அத்தை பெண்ணே அவனின் மனைவியாய்... அவள் பெயர் கூட மல்லிகாதான் என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.

அவனின் திருமணத்தின் போது என் மகளுக்கு நாலு வயசு... மனைவியின் வயிற்றில் அடுத்த குழந்தை... வயிற்றைத் தள்ளிக் கொண்டு வந்த என் மனைவியிடன் தங்கச்சி அடுத்ததும் மருமகளாப் பொறந்தா அனுன்னு பேர் வையின்னு சொல்லி சிரித்தான். வச்சிட்டாப் போச்சு... எனச் சிரித்தாள் என் ரகசியங்கள் தெரிந்த மனைவி ராதா.

என்னோட ஒரு ரகசியம் மட்டும் இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது... மனைவி உள்பட. ஒரு முறை எங்க ஊர் கார்த்தி மச்சான் பாலத்துக்கு கீழே உக்கார்ந்து பீர் குடித்தான். அவனுடன் நான் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தேன். மச்சான் இது ஒண்ணும் பண்ணாதடா... சூட்டைக் குறைக்கும்... உடம்புக்கு நல்லது எனச் சொல்லி குடிக்கச் சொன்னான். நான் மறுத்து மறுத்துப் பார்த்து கடைசியில் அவன் தொல்லைக்காக ஒரு மிடறு குடித்துப் பார்த்தேன்... ஏனோ அந்தச் சுவை எனக்குப் பிடிக்கவில்லை. அதுவே முதலும் கடைசியுமாய்...  அது குறித்து இது வரை யாரிடமும் சொன்னதில்லை.

செல்வத்தின் திருமணத்துக்குப் பின் அவனுடனான தொடர்பு மெல்ல மெல்லக் குறைந்து டிசம்பர் முப்பத்தி ஒன்றாம் நாள் காலண்டர் போல ஆகிவிட்டது. அதன் பின் எந்தத் தொடர்பும் இல்லை. இப்ப எப்படியிருக்கிறான்...? எங்கே இருக்கிறான்...? எத்தனை குழந்தைகள்...? என எதுவுமே தெரியாது.

புதுப்புது நட்புக்களும் உறவுகளும் வர கூடப் படித்த நட்புக்களை எல்லாம் மறந்து விட்டேன்... இது எல்லாருக்கும் நிகழ்வதுதானே. ஒருவனைத் தவிர மற்ற எவரோடும் இப்போது தொடர்பில் இல்லை. அந்த ஒருவனும் உள்ளூர்க்காரன் என்பதாலயே நட்பு தொடர்கிறது. இருந்தும் நான் வெளியூரில் வேலை பார்ப்பவன்... அவனோ உள்ளூரில்.... போன் செய்தாலும் அங்கிருக்கிறேன்.. இங்கிருக்கிறேன்... எனச் சொல்வதால் அவனுடன் பேசுவதைக் குறைத்து ஊருக்குப் போகும்போது மட்டும் சந்தித்து கொஞ்சம் உரையாடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன்.

அப்புறம் அனுவைப் பார்க்கவே இல்லையான்னு நீங்க கேட்கலாம்... ஒரு முறை பார்த்தேன்... அந்தப் பேக்கரியில் கேக்கும் ரஸ்க்கும் வாங்கி வரலாம் என மகளுடன் சென்ற போது ஒரு பெண் இரண்டு குழந்தைகளுடன் கேக் வாங்கிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்க்கும் போது அனு போலத்தான் இருந்தாள். என்னைப் பார்த்தவள் சற்றே நகர்ந்து தன் குழந்தைகளிடம் என்ன வேண்டும் எனக் கேட்பதில் கவனம் செலுத்தினாள்.

அது அனுதானா என்ற யோசனை எனக்கு...  அவ அக்கா செண்பாவும் இப்படித்தான் இருப்பாள். ஒருவேளை செண்பாவாக இருந்தால்... பேச யோசனையாக இருந்தது.... இப்படி யோசித்து யோசித்துத்தான் பலவற்றை இழந்தேன் என்றாலும் யோசிப்பதை இன்னும் இழக்கவில்லை.

கூர்ந்து கவனித்த போது நாசி அருகே அந்த ஒற்றை மச்சம்... அது அவள் அனுதான் என பறை சாற்றியது. அவளிடம் எத்தனை மாற்றம்... கெச்சலாய்.... சிவப்பாய்.... இடையில் புரளும் கருகரு முடியோடு பார்த்த அனு... குண்டாய்.... தோளில் புரளும் வெட்டப்பட்ட நரை கலந்த முடியுடன் இருந்தாள்.

அனு எனச் சொல்ல வாயெடுக்கும் போது காரின் ஹாரன் சப்தம் கேட்க, 'இந்தா வாறேங்க.... உங்கப்பா கால்ல வெந்நித்தண்ணிய கொட்டிக்கிட்டுத்தான் நிப்பாரு... உங்களைக் கூட்டிக்கிட்டு வந்து ஏதாச்சும் வாங்கிப் பாக்கணும்... அப்பத் தெரியும் எவ்வளவு நேரமாகுன்னு...' எனச் சொல்லியபடி அவசரம் அவசரமாக சில்லறையை வாங்கிக் கொண்டு விரைந்தாள்.

என்னை அறிந்ததாகவே அவள் காட்டிக் கொள்ளவில்லை.அவளை அறிந்த நான் அவள் முதுகுக்குப் பின்னே கண்ணைச் செலுத்த ‘அப்பா’வென பார்வைக்கு தடை போட்டது மகளின் குரல்.

செல்வத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மனசில் மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டேயிருந்தது. மனைவியிடம் சொன்ன போது எத்தனை வருசமாச்சுங்க... எங்கயிருக்காருன்னே தெரியாது... எப்படிப் போயி பாக்குறது.... நீங்க வேலை வேலையின்னு நல்லது கெட்டதுக்கு கூட ஊருக்குப் போறது அரிதாகிப் போச்சு... எல்லாத்துக்கும் நாந்தான் ஓடுறேன். ஊருல உள்ள சொந்தங்களே உங்களுக்கு மறந்து போயிருக்கும். இதுல செல்வ அண்ணனை எங்க போயி தேடுவீங்கன்னு கேட்டா. அவ கேட்டதும் சரிதான்... வேலை... வேலையின்னு ஊருப்பக்கமே போறதில்லைதான்.

செல்வத்தோட ஊருக்குப் போயி அவன் அப்பாவைப் பார்த்தா... எங்க இருக்கான்னு சொல்லப் போறாரு...  நான் அப்பா, அம்மா, அண்ணன் அப்படின்னு மூணு உறவைக் கடந்த பத்து வருடங்களில் இழந்திருக்கிறேன். செல்வத்தின் அப்பாவும் அம்மாவும் உயிரோடு இருப்பார்களா...?  என்ற கேள்வி என்னுள் எழ, யோசனை அதிகமானது.

அவர்கள் இல்லைன்னா என்ன ஊரில் யாரிடமாச்சும் விசாரிச்சா சொல்லப் போறாங்க... எது எப்படியோ இன்று இரவு கிளம்பினால் நாளை அவனைப் பார்த்துவிட்டு நாளை இரவு கிளம்பி மறுநாள் டூட்டிக்கி வந்துடலாம் என முடிவு செய்து மனைவியிடம் மெல்லச் சொன்னேன்.

முதலில் எதுக்குங்க என்று மறுத்தவள் பின்னர் பத்திரமாப் பொயிட்டு வாங்க என சின்னப் பிள்ளையிடம் சொல்வதைப் போல் சொன்னாள். அவளுக்கு நானும் எனக்கு அவளும் எப்பவும் குழந்தைங்கதான். அப்பா என்ன சின்னப் பிள்ளையான்னு என் மகன் அவளைக் கேலி பண்ணினாலும் அவளுக்கு நான் பிள்ளைதான்.

காளையார் கோவிலில் இறங்கி, வரலாற்றுச் சிறப்பு மிக்க காளீஸ்வரர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு செல்வத்தின் ஊர் வழியாக தாயமங்கலம் செல்லும் டவுன் பஸ்ஸிற்காக காத்திருந்தேன். கையில் தேவகோட்டையில் வாங்கிய பழங்களும் சுவீட்டும்... பேருந்து வர கோவிலுக்குச் செல்லும் கூட்டத்துக்குள் இடித்துப் பிடித்து  ஏறி, இடம் கிடைக்காமல் நின்று கொண்டேன். பேருந்து நிறைந்த கூட்டத்தை தன்னுள் திணித்து மெல்ல நகர்ந்தது.

‘காயா ஓடை’ என்ற நிறுத்தத்தில் இறங்கினவனின் கண்ணில்பட்டது அந்த கண்ணீர் அஞ்சலி பேனர்... அதில் சிரித்துக் கொண்டிருந்தான் செல்வம்.

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

சிறுகதை : எதிர்சேவை

Image result for தல்லாகுளத்தில் அழகர்

ந்த வருடம் அழகர் ஆத்துல இறங்குவதைப் பார்க்க மாமா வீடு வருவதாக போன் பண்ணியிருந்தாங்க. அம்மாவுக்கு பல வருசத்துக்குப் பின்னால மாமா வர்றாங்கன்னு கை, கால் புரியல... எங்கண்ணன் அதை விரும்பிச் சாப்பிடும்... இதை விரும்பிச் சாப்பிடும்ன்னு ஒரே அண்ணன் புராணம். 

எனக்கு மாமாவோ அத்தையோ எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மாமா மக அகிலா வருவாதானே... சின்னப் பிள்ளையில் பார்த்தது. இப்போ எப்போதேனும் மாமா வீட்டுக்குப் பேச நேர்ந்தால், ஒருவேளை அவள் போனெடுத்தால் ரெண்டு வார்த்தை பேசுவாள் அவ்வளவுதான்.

மாமா தன்ராஜ்... அம்மாவுக்கு நேரே மூத்தவர்... மாமாவுக்குப் பின்னே அம்மாவும் லெட்சுமி சித்தியும் கஸ்தூரி சித்தியும்... மாமாவுக்கு திருச்சி பெல்லில் இஞ்சினியர்... வசதி வாய்ப்புக்கு குறைவில்லை... ரெண்டு கார் வைத்திருக்கிறார். பெரும்பாலும் சொந்த பந்தங்களில் நல்லது கெட்டதில் அவரைப் பார்க்க முடியும். எங்க வீடுகளுக்கு எல்லாம் வருவதில்லை... வேலை அதிகம்... லீவு போட்டு சொந்தம் பந்தமெனப் போனால் பிள்ளைகளின் படிப்பைப் பாதிக்கும் என்பார். ஆனால் அது காரணமில்லை... அத்தைக்கு அம்மாக்களுடன் அப்படி ஒன்றும் இணக்கமான உறவில்லை என்பதே காரணம்.

இந்த முறை அழகர் வைகையில் இறங்குவதைக் காண வருகிறேன் என்பதெல்லாம் ஜால்சாப்புத்தான்... மதுரையில் பிரபலமான துணிக்கடை முதலாளி மகளை மகனுக்குப் பேசவே அழகர் பேரைச் சொல்லி.... அம்மாவைப் பார்க்க வருவதாய்ச் சொல்லி... வருகிறார்கள். எல்லாம் அவர்களுக்கான பயணம்தான்... அழகருக்காகவோ தங்கைக்காகவோ அல்ல என்றாலும் இந்தப் பயணத்தில் நான் அகிலாவைப் பார்க்கலாமே... அந்த ஆனந்தம் ஒன்றே இப்போது மனசுக்குள்.

மாமா வந்தது முதல் தன் பெருமையையும் பிள்ளைகள் பெருமையையுமே பேசினார். பெங்களூரில் வேலை பார்க்கும் கம்பெனியில் மகனில்லை என்றால் எதுவுமே நடக்காது என்பது போல் பேசினார். அகிலா மாதிரி படிக்கவே  முடியாது... எத்தனை தடவை அவ கல்லூரி முதல்வர் எனக்குப் போன் பண்ணி பேசியிருக்கிறார் தெரியுமா... அவளோட முடிவெல்லாம் டாக்டரேட் பண்ணி, நிறைய சாதிக்கணுங்கிறதுதான்... அப்படியிப்படின்னு அள்ளி விட்டார். எப்பவுமே இப்படித்தான் பிள்ளைகள் புராணம் பேசுவார்... இதொன்னும் புதிதில்லை.

அத்தையைப் பொறுத்தவரை இந்த வைர நெக்லஸ் தங்கமயில்ல சொல்லி வச்சி வாங்குனேன். அகிலா போட்டிருக்கிற ஜிமிக்கி இது வரைக்கும் நம்மாளுக யாருமே போடாத மாடல் ஜோய் அலுக்காஸ்ல சொல்லி கேரளாவுல இருந்து ஸ்பெஷலா செஞ்சி வாங்கினேன்... அவ கால்ல போட்டிருக்கிற தங்க கொலுசு சென்னை போகும்போது வாங்கினது என தற்பெருமையும் நகைபெருமையுமே பேசிக்கிட்டு இருந்தாங்க.

இது பெண் பார்க்கும் படலம் என்பதால் மாப்பிள்ளையும் வந்திருந்தான். எப்போதும் போனில்தான் இருந்தான். சிலேட்டு மாதிரி பெரிய போன்... யாரிடமும் பேசவில்லை... அந்தப் பக்கமாக யார் போனாலும் ஒரு சிரிப்பு... அவ்வளவே.

அகிலாவும் கூட போனில்தான் மூழ்கியிருந்தாள். வரும்போது பார்த்துச் சிரித்தவள்தான்... அதன் பின் கண்டு கொள்ளவில்லை. அவளுடன் பேச மனம் துடித்தது... ஆனாலும் நம்மோடு பேசுவதை விரும்பாதவளிடம் என்ன பேசுவது என்ற யோசனையும் தடை செய்தது. 

என் தவிப்பை உணர்ந்த தங்கை, 'என்ன அவகிட்ட பேசணுமாக்கும்... அவ எங்கிட்டயே ஒழுங்காப் பேசல... போன்ல யார் கூடவோ கடலை போடுறா... பேசாம வண்டி எடுத்துக்கிட்டு போயி உன்னோட ஆளு சுபாவோட பேசிக்கிட்டு இருந்துட்டு வா' என்றாள்.

சுபா என்னோட ஆளு இல்லை பிரண்ட்... உன்னோட வேலை என்னவோ அதை மட்டும் பாரு... அதிக பிரசங்கித்தனம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளிய போக ஹாலைத் தாண்டியபோது 'என்ன மச்சான்... இங்க இருக்க லா காலேஜ் பத்தி எங்களுக்கே நல்லாத் தெரியுது... உங்களுக்குத் தெரியாதா என்ன... சரவணனை இதுல சேர்த்து விட்டிருக்கீங்க... இங்க படிச்சி அவன் என்ன பெரிசா சாதிக்கப் போறான்... சிந்தாமணியிலயும் தேவியிலயும் படம் பார்த்து ஊரு சுத்துவான். தலை முடியக் கூட வெட்டாம... ரவுடி மாதிரியில்ல இருக்கான்... எம்பையனையும் பாருங்க... அவனையும் பாருங்க... ஊருக்குள்ள புகாரி மெஸ் ஓனருன்னு உங்களுக்கு ஒரு நல்ல பேரு இருக்கு...  அதைக் கெடுத்துருவான் போலவே...' என என்னை வாரிக் கொண்டிருந்தார்.

'அவன் நல்லாப் படிப்பான் மச்சான்.. சின்னப்பயலுகதானே கொஞ்சம் அப்புடி இப்பிடித்தான் இருப்பானுக... வேலைக்குன்னு பொயிட்டா சரியாயிருவானுங்க...' என எப்பவும் போல் அப்பா எனக்காக முட்டுக் கொடுத்தார்.

'என்னமோ போங்க... வக்கீலுக்குப் படிச்சி என்னத்த சம்பாதிக்கப் போறான்...' என்று அவர் இன்னும் என்னை வாருவதில் குறியாக இருக்க, எனது புல்லட்டை வேகமாக ஸ்டார்ட் பண்ணினேன். 

'டேய் மத்தியானம் வீடு வந்து சேரு... சாயந்தரம் தல்லாகுளத்துக்கு எல்லாரையும் நீதான் கூட்டிப் போகணும்' அம்மா வீட்டுக்குள் இருந்து கத்தினாள். என் வண்டி புகையைக் கக்கியபடி கேட்டைத் தாண்டியது. 

கண்டிப்பாக மாமா இப்படி வண்டி எடுத்ததற்கும் எதாவது திட்டியிருப்பார். இதுக்கெல்லாம் கவலைப்பட்டா வாழ்க்கை என்னாகிறது. மதுரை மண்ணுக்குன்னு ஒரு கெத்து இருக்கா இல்லையா.

மூணு மணிக்கு மேல்தான் வீடு வந்தேன்... 'என்ன எம்மாமன் மக எங்கிட்ட பேசமாட்டேங்கிறாடின்னு சுபாகிட்ட புலம்பிட்டு வந்தியாக்கும்... உனக்குத் தெரியுமா... அகிலா எங்கிட்ட ரொம்ப நேரம் கலகலப்பாப் பேசிக்கிட்டு இருந்தா' என வெறுப்பேற்றியவள் 'உன்னைப் பற்றிக்கூட பேசினாள்' என என் முகம் பார்க்க, போட்டு வாங்கப் பார்க்கிறா, என்ன கேட்டான்னு நாய் மாதிரி நாக்கைத் தொங்கப் போடாதேடா சரவணான்னு கேக்க நினைத்ததைக் கேட்காமல் அவளை ஒரு அசால்ட் லுக் விட்டேன். 'நம்பாட்டி போ' என நகர்ந்தவளிடம் சரி சொல்லு என்ன கேட்டா என்றதும் 'உங்கண்ணன் இப்படித்தான் ஊரு சுத்துமா... வீட்லயே இருக்காதான்னு கேட்டா' என்றவளிடம் 'அவளும் சுத்த வார்றாளான்னு கேட்டுச் சொல்லு' என்றேன்.

'சாப்பிட்டியாடா' என்ற அம்மாவின் முகம் சரியில்லை. ஏன் என்னாச்சு...? நம்ம புள்ளையைக் கட்டிக்காம வேற இடத்துல பெண் பாக்குறாரே அண்ணன்னு வருத்தமா இருக்கும் என்று நினைத்துக் கடக்க நினைத்தவனுக்கு எப்பவும் மகிழ்வாய் இருக்கும் அம்மாவை அப்படிப் பார்க்கப் பிடிக்கவில்லை. அப்பா, மாமா, அத்தையின்னு யாரும் அங்கில்லை. எல்லாரும் தூங்கலாம்... அம்மா அருகில் போய் 'என்னம்மா... முகமெல்லாம் வாடியிருக்கு' என அம்மாவைக் கட்டிக் கொண்டு கேட்டேன். 'அய்யே பாசம்' என கவிதா நகர்ந்தாள்.

'ஒண்ணுமில்லடா... எங்க சுத்திட்டு வர்றே... வந்திருக்கவங்க என்ன நினைப்பாங்க...' என்றாள் என் முகம் வருடி. 

'அவங்க என்னமோ நினைக்கட்டும்... அவங்க பாடுற புகழைக் கேட்டுக்கிட்டு இங்க இருக்க எனக்குப் பிடிக்கலை.. அதை விடு... நீ ஏன் ஒரு மாதிரி இருக்கே...' என்றதும் 'அதான் சொன்னேனே... ஒண்ணுமில்லேன்னு...' என்றாள். 

'சொல்லாட்டி போ...' எனக் கோபமாய்ப் போவது போல் பாசாங்கு செய்ய, 'இன்னைக்கு பொண்ணு பாக்கப் போனோம்' என்றாள்.

'அதான் தெரியுமே... உன்னோட உடன்பிறப்பு அதுக்குத்தானே வந்திருக்கு... அது சரி பொண்ணு எப்படி... உங்கண்ணன் மகன் நம்ம கவிதாவைக் கட்டிக்கலைன்னு வருத்தமோ..?' என்றபடி அம்மா மடி சாய்ந்தேன். 

'எம்மவளுக்கு என்னடா... அவளுக்கு ராஜகுமாரன் மாப்பிள்ளையா வருவான்... அதெல்லாம் ஒரு வருத்தமுமில்லை.... அந்த துணிக்கடைக்காரன் எங்கண்ணனுக்கிட்ட உங்களுக்கு உங்க தங்கச்சி வீட்டுல வசதி பத்தலைன்னா நம்ம வீட்டுக்கு வந்துருங்க... இங்க எல்லா வசதியும் இருக்குன்னு சொல்றான்... நாம எந்த விதத்துல குறைஞ்சி பொயிட்டோம்...' 

'இதுக்குத்தானா... ஆமா உங்கண்ணன் என்ன சொன்னார்... இப்பவே வர்றோம்ன்னு சொல்லிட்டாரா...' காலைக் கடுப்பில் நக்கலாய்க் கேட்டேன்.

'சீச்சி... அங்க எல்லா வசதியும் இருக்கு... நிச்சயமெல்லாம் முடியட்டும்... அப்புறம் வரும்போது இங்க வந்து தங்குறோம்ன்னு சொன்னார்...' என்ற அம்மாவிடம் 'அப்ப அடுத்த பயணத்துல உங்க அண்ணனை நீ போய் அவர் சம்பந்தி வீட்டுலதான் பாக்கணும்...' எனச் சிரிக்க, 'உனக்கு கொழுப்பு ரொம்பத்தான்... சரி... சாயந்தரம் மாமா கார்ல எல்லாரும் தல்லாகுளம் போலம்ன்னு சொன்னார்... அப்பா கடைக்குப் போயிடுவார்... நீ கார்ல எங்ககூடவே வா...' என்றாள்.

'சாரி மம்மி... அந்தாளு கார்ல.... நெவர்.... என்னோட புல்லட் இருக்கு... பிரண்ட்ஸ் இருக்காங்க... நான் தனியாப் போயி அழகரைச் சந்திச்சிக்கிறேன்... உங்க சங்காத்தமே வேண்டாம்... கூட்டத்துல எங்கூட படிக்கிற எதாச்சும் ஒரு பொண்ணு பார்த்து ஹாய்ன்னு வந்து பேசினா உங்கண்ணன் என்னை பொம்பளப் பொறுக்கின்னு சொல்வார்... நமக்கு ஆயிரம் பிரண்ட்ஸ் இருக்காங்க... அதுல முக்கால்வாசி பெண்கள்தான்...' என்றபடி எழுந்து சென்றேன்.

மாலை எல்லாரும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். 'அம்மா... நான் கார்ல வரலை... அண்ணங்கூட வர்றேன்...' என்றாள் கவிதா. 

'ஏன்டி அவன் எங்கிட்டு சுத்தப் போறானோ... அவங்கூட போயி...' என்ற அம்மாவிடம் ' நீங்க பூமா ஆஸ்பிடல் பக்கம்தானே காரை பார்க் பண்ணிட்டு வருவீங்க. நான் நவநீத கிருஷ்ணன் கோவிலுக்கிட்ட நிக்கிறேன்' என்றவளுக்கு அவர்களுடன் செல்ல விருப்பமில்லை என்பதை உணர்ந்தேன்.

'நானும் கவிதாவோட வண்டியில போறேன்' என்றபடி காரில் ஏறாது நின்றாள் அகிலா. 'மூனு பேரா... வண்டியிலயா... அதெல்லாம் சரிவராது. அகி வண்டியில ஏறு' அத்தை கத்தினாள்.

'போம்மா... ஜ லைக் புல்லட்... நான் வண்டியில வர்றேன்... வேணுமின்னா கவிதாவை கார்ல கூட்டிக்கிட்டுப் போங்க... நான் சரவணன் கூட வண்டியில வர்றேன்...' என பிடிவாதமாய் நின்றாள். கவிதாவை அத்துவிட அடி எடுத்துக் கொடுத்ததும் என் பெயரைச் சொன்னதும் மகழ்ச்சியாய் இருந்தாலும் நான் எதுவும் பேசவில்லை.

அகிலாவின் பிடிவாதம் வெல்ல, 'டேய் வேகமா ஓட்டாதே... ரெண்டு பேரையும் கிருஷ்ணன் கோவில்கிட்ட விட்டுட்டு நீயும் நாங்க வர்ற வரைக்கும் அங்கயே நில்லு' என அம்மா சொல்லியபடி காரில் ஏற, என் வண்டி அழகரின் புஷ்ப பல்லக்கு போல் தல்லாகுளம் நோக்கிப் பயணித்தது. 

கவிதா சொன்ன இடத்தில் இறக்கிவிட்டுட்டு அம்மா சொன்னதுக்காக நிற்காமல் அகிலாவுக்காக நின்றேன். அதைப் புரிந்து கொண்ட கவிதா 'நடத்துடி... நடத்து...' என மெல்ல என் காதைக் கடித்தவள், 'இங்கயே நில்லுங்க... இந்தா வர்றேன்..' என தன்னைக் கூப்பிட்ட நண்பிகள் கூட்டம் நோக்கிப் போனாள். 

'வண்டி நல்லா ஓட்டுறீங்க... அம்புட்டுச் சந்து பொந்தும் அத்துபடி போல...' என பேச்சை ஆரம்பித்தாள் அகிலா.  நான் ஒன்றும் சொல்லவில்லை.

'எனக்கும் பைக் ரைடிங் ரொம்பப் பிடிக்கும்...' கண்கள் விரித்து அவ பேசும்போது திருக்கல்யாண மீனாட்சியாய் சொக்க வைத்தாள். அதில் மயங்கி பேசாது நின்றேன். 

''என்ன பேசவே மாட்டேங்கிறீங்க... அப்புறம் கவிதாட்ட நான் பேசமாட்டேங்கிறேன்னு சொன்னீங்களாம்... வீட்லயே தங்க மாட்டீங்க போல...' என்றவள் கேட்டபோது 'எனக்கு லீவு நாள்ல வீட்டுல தங்க பிடிக்காது... நாங்க ஒரு கேங்க்கா யானைமலை, திருபரங்குன்றம், அழகர்கோவில், ஹவாவெளின்னு எங்கயாச்சும் கிளம்பிடுவோம்...' என்றேன். 

'நாங்க வந்திருக்கும் போதாச்சும் வீட்ல இருக்கலாம்ல' என்றாள்.

'நீங்க எங்க எங்கிட்ட பேசினீங்க... நீயும் உங்கண்ணனும் போன்ல சாட்டிங்... உங்கம்மாவுக்கு நகைப் பெருமை... உங்கப்பாவுக்கு என்னையத் திட்டணும்...அப்புறம் நான் எங்கிட்டு வீட்டுல இருக்குறது....' என்றதும் சத்தமாகச் சிரித்தாள்.

'அப்பா எப்பவும் பிள்ளைங்க பெருமை பேசுவார்... மற்றவங்க பிள்ளைகளை மட்டம் தட்டித்தான் பேசுவார். அது மட்டும்தான் அவருக்கிட்ட பிடிக்காது... மற்றபடி ரொம்ப நல்லவர்.... அம்மாவுக்கு நகை, பணம்... அம்மாவோட பிடுங்கலாலதான் என் கால்ல தங்கக் கொலுசு... அண்ணனை பெங்களூர் ரொம்ப மாத்திருச்சு... நீங்க யாரும் எங்கிட்ட பேசலை... அதான் நான் என் பிரண்ட்டுக்கிட்ட பிளேடு போட்டேன்...' என மீண்டும் சிரித்தாள். 

அழகரைக் காண கூட்டம் அலைமோதியது, எங்களைக் கடந்த இளைஞர்கள் மீனாட்சி போல் அழகாய் இருந்த அகிலாவைப் பார்வையால் தின்று கொண்டே சென்றார்கள். பலருக்கு அவளருகில் நான் நிற்பதே பொறாமையாக இருந்தது. கடந்து சென்ற பெண்கள் கூட அந்த அழகியை ஒரு முறை பார்க்கத் தவறவில்லை. எனக்குப் பெருமையாக இருந்தது. 

'இன்னும் ரெண்டு நாள் இங்க இருப்போம்... அழகர்மலைக்கு பைக்ல கூட்டிப் போவீங்களா..?' என அவள் கேட்ட போது கவிதா வந்து சேர, கார் பார்ட்டிகளும் வந்து சேர்ந்தது. 

அவள் கேள்விக்குப் பதில் சொல்லாது 'சரிம்மா... வர்றேன்... நீங்க பாத்துட்டு இந்த இடத்துல வந்து நின்னு போன் பண்ணுங்க...வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்...' எனக் கிளம்ப, 'இனி எங்க போறே... எங்ககூட வந்து சாமி பாத்துட்டு வரவேண்டியதுதானே...' என்றாள் அம்மா. 

'அதானே... எங்களை மறுபடியும் வீட்டுக்கு கூட்டிப் போகணுமில்ல... எங்க கூடவே வரவேண்டியதுதானே... பிரண்ட்ஸ் நாளைக்குப் பாத்துக்கலாம்...' என்றாள் கவிதா. அத்தை அவளை முறைக்க, கொய்யால இந்த முறைப்புக்காகவே நான் வருவேன்னு வண்டியை ஓரங்கட்டிட்டு அவங்க கூட நடந்தேன்.

கூட்டம் கட்டி ஏறியது... ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு நடக்க, அகிலாவின் வலது கரம் என் தோள் பற்றியது அதைக் கவனித்த கவிதா என்னை மெல்ல இடித்து 'இன்னைக்கு அழகரோட எதிர்சேவை பாக்குறோமோ இல்லையோ மீனாட்சி திருக்கல்யாணம் கூடிய சீக்கிரம் பார்ப்போம் போல' என என் காதைக் கடித்தாள். 

'வாராரு... வாராரு....அழகர் வாராரு...' பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. கூட்டம் நெட்டித் தள்ளியதில் அகிலாவின் இடதுகரமும் என் கையைப் பற்றியது. அவளைத் திரும்பிப் பார்த்தேன். அவள் என்ன என்பது போல் பார்க்க, எங்களின் கண்கள் எதிர்சேவை செய்து கொண்டன.

....கண்டோம் அழகர் கண்டோம் அழகு கொண்டோம் மதுரை வாழியவே !! கொண்டோம் உணர்ச்சி கொண்டோம் எழுச்சி கொண்டோம் இதயம் வாழியவே !! தத்தோம் தகிட தத்தோம் தகிட தத்தோம் பாடி ஆடுகவே !!....

என்ற வரிகள் உச்சஸ்தாயியில் ஒலிக்க, கூட்டம் ஆர்ப்பரிக்க... என் மனசுக்குள்ளும் தத்தோம்... தகிட தத்தோம்....
'பரிவை' சே.குமார்.

திங்கள், 23 ஏப்ரல், 2018

எங்கள் வண்ணத் தமிழ்த்தாயே... இசையும் தமிழும்

மிழ்மொழியின் அடையாளமாக இன்றும் தொடர்ந்து நிற்பது பண்பாட்டின் வெளிப்பாடு என்று மோகன சுந்தரம் பேசி முடித்ததும் மேடைக்கு அழைக்கப்பட்ட இசைக்கவி. திரு. ரமணன் அவர்கள் திரைக்கவிஞர்களின் ஆளுமை என்ற தலைப்பில் பேச கணீரென்ற தனது வெண்கலக் குரலில் பேச்சை ஆரம்பித்தார். 

ஆரம்பத்திலேயே 'இசைக்கவி ரமணன் அவர்களை அடுத்த முறையும் பாரதி நட்புக்காக விழாவில் பேச வரும்படி அன்புடன் அழைக்கிறேன்' என்று சொல்லிக் கொண்டார். வந்தவர்களையே திரும்பத் திரும்ப அழைக்கிறார்கள் எப்படியும் என்னையும் திரும்ப அழைப்பார்கள் என்றார். இதையே யுகபாரதி பேசும் போது சொன்னார்.


பதினைந்து நிமிடம் இருக்கு முதலில் ஒரு பாட்டுப் பாடுறேன்... அப்புறம் இரண்டாவதா ஒரு பாட்டுப் பாடுறேன்... அப்புறம் மூன்றாவதாக ஒரு பாட்டுப் பாடுறேன் என்று சொல்லி, தன் சக பேச்சாளர்கள் பற்றி சில வரிகள் சொல்லி பேச்சைச் தொடர்ந்தார். சினிமாப் பாடல்கள் எல்லாமே நல்ல பாடல்கள்தான் என்றவர் சில அப்படியிப்படியான பாடல்கள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை ஒத்துக் கொள்கிறேன் என்றார்.

முதலில் 'எங்கள் வண்ணத் தமிழ்த்தாயே...' என்ற வரிகள் வரும்படியான பாடலைப் பாடினார். பாடலின் வரிகளிலும் அவரின் கணீர்க்குரலிலும் லயித்துப் போன பார்வையாளர்கள் பக்கமிருந்து பாடலுக்கு ஏற்றபடி கைதட்டல் ஆரம்பமாக, அவருக்குள் ஒரு உற்சாகம்... அரங்கம் அவர் பாடல் வரிகளுடன் அழகிய கைதட்டல் இசையால் நிரம்பியது.

'அற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவில்...' என்ற பாரிமகளிர் பாடல் குறித்துப் பேசி... அதை விவரித்து, சங்க இலக்கியங்களில் இருந்து எடுக்கப்படும் வரிகளை கவிஞர்கள் கையாளும் போது அது சுலபமாக கேட்பவர் மனதுக்குள் இறங்கிவிடுகிறது என்றவர் இந்த அற்றைத் திங்களை வைரமுத்து தனது நறுமுகையே நறுமுகையே பாடலில் பயன்படுத்தியிருப்பது குறித்துப் பேசினார். திருநாவுக்கரசர் பாடிய தேவரப்பாடலான 'குனித்த புருவமும் கோவைச் செவ்வாயும்' பாடலை வாலி தளபதி படத்தில் ராக்கம்மா கையத்தட்டுக்குள் வைத்தபோது இந்த குனிந்த புருவம் எல்லாருடைய வாயிலும் சுலபமாய் விளையாடியதை நாம் அறிவோம் அல்லவா.

பின்னர் யுகபாரதி எழுதிய பாடல்கள் குறித்து பேசினார். ஒரு அருமையான பழைய பாடலைச் சொல்லி இதை எழுதியது வாலியா, கண்ணதாசனா என்று தெரியவில்லை என்று சொன்ன போது அது கண்ணதாசன்தான் என்றார் தமிழருவி. 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' பாடலை அழகாகப் பாடினார்.

பாரதி குறித்துப் பேசினார்... பாரதியின் பாடல்வரிகளைச் சொன்னார். மிக அழகாகப் பாடினார். என்ன குரல் வளம்... அப்பா... இசையோடு இசைக்கவி பாடியிருந்தால் எழுந்து வரவே மனமிருக்காது. நேரம் முடிந்து சில நிமிடங்களிலேயே அடுத்த முறை தொடரும் என முடித்துக் கொண்டார்.

அவர் பேசி முடித்ததும் டிஎம்எஸ்சும் எஸ்பிபியும் சேர்ந்து பாடியது போல் இருந்தது. என்ன அருமையான குரல் வளம், வாலி சினிமாவில் வாய்ப்புக் கிடைக்காது என தோல்வியோடு திரும்ப நினைத்த போது அவரின் வாழ்வை மாற்றியது இந்த மயக்கமா கலக்கமா பாடல்தான் என்றும் நினைவு கூர்ந்த தமிழருவி, அடுத்ததாக பர்வீன் சுல்தானா அவர்களை பழஞ்சுவை இலக்கியம் என்ற தலைப்பில் பேச அழைத்தார். உங்கள் அன்பிற்குப் பாத்தியமான என்று தமிழருவி சொல்லும் போதே தெரிந்து விட்டது பர்வீன் அவர்களுக்கு பதினைந்து நிமிட வரைமுறை இல்லை என்பது. அன்னைத் தமிழை வணங்கி தன் பேச்சை ஆரம்பித்தார்.


தமிழருவியை என் அப்பா என்றும்... இசைக்கவியை தேவதச்சன் என்றும்.. மோகன சுந்தரத்தை என் சகோதரர் என்றும் அழைத்தவர் ஐந்தாவது முறையாவது தமிழை சரியாகப் பேசிவிடமாட்டாளா என்னை அழைத்திருக்கிறார்கள் என்று சீண்டிப் பார்த்திருக்கிற, மன்மத ராசா என்ற பாடல் மூலமாக என் ஒட்டு மொத்த கோபத்துக்கும் ஆளாகி கண்ணம்மா என்ற பாடலை எழுதியதன் மூலமாக என் அனைத்து மன்னிப்பையும் பெற்றுக் கொண்டிருக்கும் அன்புச் சகோதரர் யுகபாரதி அவர்களே என்று அவையைச் சிரிக்க வைத்து  மன்மதராசா அவருக்கு பெயரையும் பணத்தையும் கொடுத்தாலும் தன் மகளைப் பாடுபொருளாக்கி கண்ணம்மா என்ற பாரதியின் வரியையும் வைத்து எழுதிய பாடல் அவருக்கு புகழைத் தந்திருக்கிறது. அவர் நிரந்தரமான புகழுடன் இன்னும் நல்ல பாடல்கள் எழுத இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றார்.

அதன் பின் பழஞ்சுவை இலக்கியம் குறித்து கொஞ்ச நேரம் பேசுகிறேன் என தமிழுக்குள் அமிழ்ந்தார். அவை அமைதியை அந்தத் தமிழைப் பருகியது. எனக்கு ரெண்டு , மூணு, நாலு மொழிகள் தெரியும் என்ற போது தமிழருவி அவர்கள் ரெண்டா, மூணா, நாலா என இடையில் புக, அவையில் சிரிப்பொலி எழுந்தது. தமிழ் தவிர்த்து ஆங்கிலம், இந்தி, உருது, அரபி என நான்கு மொழிகள் எனக்குத் தெரியும் என்றார்.

தமிழுக்கும் மற்ற மொழிகளுக்கும் இருக்கும் சிறப்பு என்ன என்றால் தாய்மொழி எல்லாருக்கும் சுகமானதுதான் பேசினால் இனிமையாக இருக்கும் ஆனால் தமிழ்மொழி மட்டும்தான் மற்றவர் பேசக் கேட்க மிகவும் சுகமாக இருக்கும். தாய்மொழி உயிர்ப்பைத் தரும் உயிரைத் திருப்பித் தரும் என்றார்.

இங்கு பேசியவர்கள் எல்லாரும் பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்துதான் தரவுகளை எடுத்துத் தந்தார்கள். ஏன் தலைவர் கூட சங்க இலக்கியத்தில் இருந்துதான் தனது பேச்சை ஆரம்பித்தார். எனவே நாம் அனைவரும் சென்று சேர வேண்டிய புள்ளி பழம்பெரும் இலக்கியங்கள்தான் என்றார்.

'செல்லாமை உண்டேல்...' என்னும் குறளைச் சொன்னவர் இது தமிழில் இருப்பதால் நமக்குப் புரியலை... கொஞ்சம் எளிமைப்படுத்திச் சொன்னால் புரியும் என்ற போது சிரிப்பலை எழ, நான் வெளியில் செல்கிறேன் விரைவில் திரும்பி வந்துருவேன் என மனைவியிடம் சொல்லும் போது அந்தம்மாவின் பதில்தான் குறள்... போகமாட்டேன்னா எங்கிட்டே சொல்லு நீ வருவேன்னு சொல்ற அந்த வள்வரவை எவ நீ திரும்பி வரும்போது இருப்பாளோ அவளிடம் சொல்லு என்றாளாம்.

சிம்மமாக கர்ஜித்துக் கொண்டிருக்கும் தமிழருவி மணியனைத்தான் உங்களுக்குத் தெரியும். சிறுவயதில் இருந்து அவரை அறிந்த எனக்குத் தெரியும் அவர் ரசனையான மனிதர் என்பது. கண்ணதாசனைப் பற்றி அவரைப் பேசச் சொல்லிக் கேளுங்கள்... அவரின் ரசனை புரியும் என்றார்.

அம்மா உன்னோட டேட் ஆப் பெர்த்தைக் காட்டு என அவரின் மகன் கேட்டதாகவும் ஏன்டா எனக் கேட்ட போது பழசை எல்லாம் ரசிக்கிறே என்றானாம். அவனிடம் பழந்தமிழ் இலக்கியமெல்லாம் இல்லாமப் போச்சு... அதை நாம் அப்படியே விட்டுவிட்டால் தமிழ் இல்லாது போகும் என்றார்.

அப்துல் ரஹ்மான் பற்றிப் பேசும் போது ஒரு சாடியில் இருந்த காதலன் தன் காதலியை அணைத்து முகத்துக்கு அருகே முகம் வைத்த ஓவியத்தைப் பார்த்து கீட்ஸ் என்னும் கவிஞன் எழுதியதை மொழிபெயர்த்த கவிக்கோ துணிச்சலான காதலனே என ஆரம்பித்து நீ உன் இலக்கை நெருங்கிவிட்டாய்... ம்ஹூம்... நீ ஒரு போதும் நெருங்கவே மாட்டாய்... வருத்தப் படாதே காதலனே... உன் காதலி ஒளி மங்கவே மாட்டாள் என்று எழுதியதைச் சொல்லிச் சிலாகித்தார்.

2004ம் ஆண்டில் நாற்பத்தி ஓரு இலக்கியங்கள் செம்மொழி இலக்கியமாக அறிவிக்கப்பட்டது அது எதுன்னு கேட்டா ரொம்பப் பேருக்குத் தெரியாது. பதிணென் கீழ்க்கணக்கு, பதிணென் மேல்கணக்கு மொத்தம் முப்பத்தியாறு அதுபோக மணிமேகலை, முத்தொள்ளாயிரம், தொல்காப்பியம், இறையனார் களவியல்,சிலப்பதிகாரம் என மொத்தம் நாற்பத்தி ஒன்று என்றார். மேலும் புறம் சார்ந்த 400 என்பது தொகுப்பாளர்கள் தொகுத்தது என்றாலும் ஒரே சமயத்தில் எழுதியது இல்லை. 600 ஆண்டு காலமாக எழுதியதை தொகுத்தவன் தமிழன்தான் என்றார்.

வீரம் என்றால் வன்முறை என்பதைத்தான் நாம் குழந்தைகளுக்குச் சொல்லியிருக்கிறோம் அதுவா வீரம் என்றார்.

யாரோ ஒருவர் காட்டும் காட்சியை விட நாமே ஒரு காட்சியைப் படைப்பதுதான் சுவை என்றார்.

Image may contain: one or more people and crowd

வீரம் பற்றிப் பேசும் போது யானையை வேலால் தாக்கிய வீரன், வேல் தாக்கிய போதும் தன்னை நோக்கி வரும் யானையை வீழ்த்த இன்னுமொரு வேல் வேண்டுமே என்று நினைத்தவன் ஆஹா வேல் கிடைச்சிருச்சி என சந்தோஷப்பட்டு அதைப் பிடுங்கி... எங்கிருந்து தன் மார்பில் இருந்து பிடுங்கி எறிந்தானாம் இதுதான் வீரம் என்றார்.

முத்தொள்ளாயிரத்தில் பாண்டியன் போரில் வெற்றி பெற்று உவகை சிந்த வந்த போது  தனது அரண்மனை வாசலில் யானை மேல் ஒரு வீரன் , நாக்கை மடக்கியபடி வேலெறிய முயன்ற நிலையில் செத்துப் போய் நின்ற வீரனைப் பார்த்து தோற்றான் போல் நின்றான் என எழுதினான் பாரு... அவன் ஜெயித்தான்... அதுதான் அறம் என்றார்.

அன்பு பற்றிச் சொல்லும் போது பெண்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டுங்கள். மனைவி என்பவள் ஒரு பெண் மட்டும் அல்ல... அவளின் சக்தி நிலையைப் பேசக் கூடிய இலக்கியங்கள்தான் தமிழ் இலக்கியங்கள் என்றார்.

சிலர் மனைவியை எங்கு போனாலும் மனைவியைக் கூட்டிப் போவார்கள் என்றதும் அரங்கில் சிரிப்பொலி.... காரணம் தமிழருவி அவர்கள் மனைவியுடன் வந்திருந்தார். பர்வீன் சுல்தானா அவர்கள் தொடர்ந்து பேச மணி ஒலித்தது போல் ஒரு சப்தம், உடனே நான் முடிச்சிடுறேன் என்றார். நான் இருமினேன் அம்மா என தமிழருவி அவர்கள் சொன்னதும் அரங்கில் மீண்டும் சிரிப்பொலி. 

பரணியிலக்கியம் சொல்லும் கதையைச் சொன்னார். ஒரு வீரன் போர்க்களத்துக்கு தன் மனைவியைக் கூட்டி வந்து பாசறையில் இருக்க வைத்திருக்கிறான் என்ற போது நான் சொல்லப் போற பெண்தான் உங்களுக்காக உங்கள் வீடுகளில் காத்துக்கொண்டிருக்கும் பெண் எனவே எத்தனை நேரமானாலும் இன்னைக்குப் போன் பண்ணிடுங்க என்றார்.

கதையைத் தொடர்ந்தவர் தன் கணவன் மீது எதிரி வீரன் எறிந்த வேல் பாய்ந்த போது என ஆரம்பித்து இப்படியெல்லாம் எப்படியய்யா ஜெயங்கொண்டான் எழுதினே... நான் வியந்து போனேன்யா... என்று சொன்ன போது குரல் கம்மியது. அத்தனை வியப்பு அவருக்குள். கதை கேட்கும் ஆவல் நமக்குள்.

தன் கணவன் மீது வேல் பாய்ந்ததும் ஓடிப் போயி அவனைத் தாங்கிப் பிடித்தவள் அவன் சாகும் முன் தன் உயிரைத் துறந்தாள். இது காட்சி... இதை ஜெயங்கொண்டாஎ எழுதியதை வியந்து மண் பெண்தானே... எங்கே அவள் தழுவி விடுவாளோ என அவள் தழுவி இறந்து அவனுக்கு முன்னே உயிரைக் கொடுத்தாள். மேலோகத்திற்குப் போனால் பெண்கள் தன் கணவனைத் தழுவி வரவேற்ப்பார்கள் என்பதால் அவர் விரைந்து விண்ணுலகம் சென்றதாகவும் எழுதியிருப்பதாகவும் சுவையுடன் சொன்னார்.

காதல் பாடல்களை எழுதுபவர்கள் பழம் பாடல்களில் இருந்து எடுத்து எழுதும் அதை மட்டுமில்லாது அதன் சுவையையும் அறத்தையும் சேர்த்தே எடுத்துக் கொடுக்க வேண்டும் என்றார்.

குற்றாலக் குறவஞ்சி எனக்குப் பிடிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று சொன்னவர் 'வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு...' என்ற பாடலை விளக்கும் போது குரங்கு தனது தாயாக, காதலியாக, சகோதரியாக, மனைவியாக இருக்கும் மந்திக்குப் பழங்களைக் கொடுத்துச் சாப்பிட்ட பாடலையும் குற்றாலச் சாரல் தென்காசியில் விழுவதையும் அவ்வளவு சுவையாகப் பேசினார்.

அன்பு செய்பவன் இருந்து விட்டால் பெண்களுக்கு ஒரு திமிர் இருக்கும். அந்த திமிரை ஏற்றுக் கொள்பவர்கள்தான் அன்பில் அறம் காண்கிறார்கள் என்ற போது கைதட்டல் அடங்க அதிக நேரமானது.

நாம சரியான சுவையைக் கொடுக்காததால் தான்  சுவையை இழந்து நிற்கிறோம் என்றார். தேனருவி, தமிழருவி, நீர்வீழ்ச்சி என எல்லாம் பேசினார்.

நேரமின்மை காரணமாக தன் பேச்சை விரைந்து முடித்ததால் தமிழ்சுவை அதிகம் கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த தமிழின் சுவை இன்னும் மனசுக்குள்.

மிகச் சிறப்பான ஒரு நிகழ்வு... பாரதி நட்புக்காக அமைப்புக்கு நன்றி. உங்களது தமிழ்ப்பணி தொடரட்டும். எப்போதும் சொன்ன நேரத்தில் ஆரம்பிக்கும் பாரதி நட்புக்காக அமைப்பு இந்த முறை ஒரு மணி நேரம் தாமதமாக ஆரம்பித்தார்கள். கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களைச் சொன்னதில் குழப்பம், அவர்களின் பெயரைக் கூட சரியாக அறிவிக்காதது போன்றவை கவிஞர்களுக்கு அதிருப்தி கொடுத்தது என கலந்து கொண்ட நண்பர் சொல்லியிருந்தார். அடுத்த முறை இவை எல்லாம் களையப்பட்டு பாரதி சிறப்பான விழாவை நடத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

நன்றி.

படங்களுக்கு நன்றி : சுபஹான் அண்ணா.
-'பரிவை' சே.குமார்.