மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 8 மார்ச், 2017

8.என்னைப் பற்றி நான் - வெங்கட் நாகராஜ்

'என்னைப் பற்றி நான்' என்று இந்த வாரம் தன்னைப் பற்றிப் பகிர்ந்து கொள்கிறார் பயணப் பகிர்வும் போட்டோக்களுமாக கலக்கும் வெங்கட் நாகராஜ் அண்ணன் அவர்கள். இவரின் புகைப்படங்கள் நம்மை ஈர்க்கும் என்றால் பயணப் பகிர்வுகள் நாம் பயணிக்காத இந்திய மாநிலங்களிடையேயும் அங்கிருக்கும் மக்களிடயேயும் நம்மையும் பயணிக்க வைக்கும் என்பதை இவரை வாசிக்கும் அனைவரும் அறிவோம்.

'சந்தித்ததும் சிந்தித்ததும்' என்ற வலைத்தளத்தில் எழுதும் வெங்கட் அண்ணா, பதிவர்கள் மத்தியில் பிரபலம். அனைவரும் விரும்பும் பதிவர். தில்லியில் பணி... வேலைப்பளுவுடன் பதிவும்... அதுவும் அவர் எடுத்த போட்டோக்கள், பயணக் கட்டுரைகள் என வித்தியாசமாய் கொடுத்துக் கொண்டிருப்பவர். இன்னுமொரு கூடுதல் விபரம் என்னவெனில் இதுவரை   இவரின் ஏரிகளின் நகரன் நைனிதால், மத்தியப் பிரதேசம் அழைக்கிறது, தேவ் பூமி - ஹிமாச்சல் பயணக் கட்டுரைகள், பஞ்ச துவாரகா என்ற நான்கு மின்னூல்கள் வெளிவந்திருக்கின்றன.

மேலும் இவரின் மனைவி திருமதி. ஆதி வெங்கட் அவர்கள் 'கோவை2தில்லி' வலைப்பதிவிலும் அன்பு மகள் ரோஷ்ணி 'வெளிச்சக்கீற்றுக்கள்' என்னும் வலைப்பதிவிலும் எழுதுகிறார். ரோஷ்ணி மிக அழகாக படம் வரைவார். ஆக மொத்தம் முக்கனிப் பதிவர்கள் இவர்கள். 

வெங்கட் அண்ணாவைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. இனி அவரைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.


ண்பர் பரிவை சே. குமார் அவர்கள்என்னைப் பற்றி நான்என்ற தலைப்பில் வலையுலக நண்பர்களிடம் எழுதி வாங்கி அவரது தளத்தில் பகிர்ந்து வருகிறார்என்னிடமும் கேட்டிருந்தார்என்னைப் பற்றி நானே எழுதித் தருமாறு கேட்டு, சில நாட்களாகிவிட்டது! உள்பெட்டியின் மூலம் ஒரு முறை நினைவூட்டிய பிறகும் எழுதி அனுப்ப கால தாமதமாகிவிட்டது! இதோ என்னைப் பற்றி நான்…. 

நான்…  நான்….  ஏனோ குணா பட கமல் நான், நான் என்று கடிதம் எழுதும் போது சொல்வது நினைவுக்கு வருகிறது! கூடவே இன்னுமொன்றும்அது பாலகுமாரனின் புத்தகம் ஒன்றில் வந்த கவிதை

எனக்குள்ளே ஒரு மிருகம் உண்டு
அதை உன்னிடம் சொல்வதெப்போ…..
நாளை
நாளை மறுநாள்!” 

….என்று துவங்கும் அந்தக் கவிதை போல நம் எல்லோர் மனதிற்குள்ளும் மிருக குணம் ஒளிந்து கொண்டிருக்கிறதுமிருக குணம் மட்டுமல்ல, பல மனிதர்களின் மனதில் அழுக்குகளும் ஒளிந்து கொண்டிருக்கின்றன.    பெரும்பாலும் முயற்சி செய்து இந்த மிருக குணத்தினை தடைபடுத்தி, மனதுக்குள் பூட்டி வைத்திருந்தாலும், அவை அவ்வப்போது தலைகாட்டாது இருப்பதில்லை. எனக்குள்ளும் இப்படி அழுக்குகள் இருக்கலாம்எனக்குத் தெரிந்த ஒரு அழுக்கு/மிருகம்எனது கோபம்!

பதிவுலகில் எழுதும் பலரும் தங்களைப் பற்றிய செய்திகளை முழுவதுமாக, வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள முடிவதில்லைஇன்னும் பலர் தங்கள் பெயரைக் கூட வெளியிடாமல் புனைப்பெயரில் தான் எழுத வேண்டியிருக்கிறதுஅவர்களுக்கு அதற்கான பலமான காரணமும் இருக்கிறதுஇப்படி இருக்கையில் பதிவுலகம் மூலம் நட்பில் இருப்பவர்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள நண்பர் குமார் அவர்களின் இத்தொடர் வழிவகுக்கிறது

சரி இப்போதைக்கு தலைப்புக்கு வருகிறேன்! அதாவது என்னைப் பற்றி நான்என்ன சொல்வதுஎன்னைப் பற்றிய பல விஷயங்கள் ஏற்கனவே எனது தளத்தில் எழுதி இருக்கிறேன்இருந்தாலும் இங்கே மீண்டும் ஒரு முறை……

பிறந்ததும் வளர்ந்ததும் நிலக்கரி நகரம் நெய்வேலியில்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போதே அரசு வேலைக்காக எழுதிய தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட, கல்லூரிப் படிப்பின் மூன்றாம் ஆண்டு தேர்வுகள் எழுதி முடித்த பத்தாம் நாளே தலைநகர் தில்லி வந்து அரசுப் பணியில் சேர்ந்தாயிற்றுஇதோ இருபத்தி ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டனஏதோ இன்று தான் வந்த மாதிரி இருக்கிறதுஇன்னும் பதினான்கு ஆண்டுகள் [அரசு ஓய்வு பெறும் வயதில் ஏதேனும் மாற்றம் கொண்டு வராமல் இருந்தால்] பணி புரிய வேண்டும்இப்பொழுதே வேலை செய்ய பிடிக்கவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், வேலை செய்து தானே ஆகவேண்டும்……

படித்தது இளங்கலை கணிதம்படித்த படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இல்லை! இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு இப்படித்தான் அமைகிறதுஎன்னுடைய அலுவலகத்தில் சந்தித்த ஒரு மனிதர் நினைவுக்கு வருகிறார்கணேசன் என்று பெயர் – M.Sc Microbiology படித்தவர்அரசுத் துறையில் வந்து சேர்ந்தார்பிறகு வங்கிப் பணிக்கான தேர்வு எழுதி தமிழகத்தின் ஏதோ ஒரு வங்கியில் காசாளாராகப் பணியில் சேர்ந்தார்அவர் படித்த படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை!

குடும்பத்தில் என்னையும் சேர்த்து மூன்று பேர்…. மூத்தவர் ஒருவரும் இளையவர் ஒருவரும்! நடுவில் நான்ஒரே மகன்! திருமணம் முடிந்து ஒரே ஒரு அன்பு மகள்….. மனைவி, மகள் இருவருமே வலைத்தளம் வைத்திருப்பவர்கள் என்பதால் இங்கே சொல்ல வேண்டியதில்லை

எந்த வேலையாக இருந்தாலும், ஈடுபாடுடன் செய்வது எனக்குப் பிடித்த விஷயம்பல சமயங்களில் குடும்பத்தினை மறந்து, வெளிநபர்களுக்காகவே பணி செய்திருக்கிறேன்இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டாஇவன் ரொம்ப நல்லவன் என்று சொல்லாமல், என்னைப் பலரும் பயன்படுத்திக் கொண்டது புரியவே பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்படி ஏமாளியாக இருந்திருக்கிறேனே என்று புரிந்து கொண்டபோது நாற்பதைத் தொட்டிருந்தேன்…..   

பெரும்பாலும் எந்த வம்புகளுக்கும் போவதில்லை, நான் உண்டு, என் வேலை உண்டு என்று இருப்பதே வழக்கமாகி இருக்கிறதுசெய்யும் வேலை பிடிக்கிறதோ, இல்லையோ, செய்யும் வரை அடுத்தவருக்குத் தொந்தரவு இல்லாமல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டு.

சிறு வயதிலேயே வேலைக்கு வந்துவிட்டதால், அதுவும் கல்லூரித் தேர்வு முடிந்த பத்து நாட்களுக்குள் வேலைக்கு வந்துவிட்டதால் மேலே படிக்க முடியவில்லை என்பதில் வருத்தமுண்டு. படிக்க முயற்சி செய்தாலும் அத்தனை முனைப்புடன் இருக்கவில்லை என்று இப்போது தோன்றுகிறது – “கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்!

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்என்ற கீதாசாரம் போல, எது நடந்தாலும் அதைப் பற்றி வருத்தப் படுவதில்லைநினைப்பதில்லை. எப்போதுமே Take it easy policy தான்எப்போதாவது ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து எட்டிப் பார்த்து கொஞ்சம் படுத்தினாலும் விரைவில் மீண்டு விடுவது வழக்கம்நன்கு பழகிய ஒரு நண்பர், முதுகில் குத்தியபோது, “சரி அவனுக்குத் தெரிஞ்சது அவ்வளவு தான் விடு, என்று இருந்திருக்கிறேன்அப்போது கூட எனது இல்லத்தரசி எல்லாத்தையும் எப்படி உங்களால ஈசியா எடுத்துக்க முடியுது?” என்று தான் கேட்டார்….. 

நம்மால் இயன்றவரை அடுத்தவர்களுக்குத் தொந்தரவில்லாமல் இருக்க வேண்டும், நல்லது செய்யாவிட்டாலும், மனதளவில் கூட யாருக்கும் கெடுதல் செய்யக் கூடாது என்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. சொல்ல முடிந்த அளவில் என்னைப் பற்றி நான் சொல்லி இருக்கிறேன்! சொல்லாத விஷயங்கள், சொல்ல முடியாத விஷயங்களும் உண்டு என்றாலும் சொல்ல முடியாதே!

என்றும் நட்புடன்,
வெங்கட் நாகராஜ்.
தில்லி.
*****

'என்னைப் பற்றி நான்' வாராவாரம் எதிர்பாராத வலை ஆசிரியரைப் பற்றி அறியத் தருகிறது என்பதில் திருப்தியே... அடுத்த வாரம் இவர்தான் என்று அறியாமல் இந்த வாரம் பதியும் போதே அடுத்த வாரத்துக்கான வலை ஆசிரியர் பகிர்வு எனக்கு வருவதில் மிக்க மகிழ்ச்சி. அதுவும் கேட்டதும் அனுப்பிக் கொடுக்கும் உறவுகளுக்கு உண்மையில் நான் கடமைப்பட்டிருக்கிறேன். இந்தளவுக்கு இந்தப் பகிர்வு போகும் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. எல்லாப் புகழும் உங்களுக்கே.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 6 மார்ச், 2017

சினிமா : பார்த்ததில் வென்றது..?

பார்த்த சினிமாக்களைப் பற்றி பகிர்ந்து ரொம்ப நாளாச்சு. இப்போதெல்லாம் எழுத நினைத்தாலும் பிரச்சினைகள் சூழ் மனசுக்குள் அதற்கான உந்துதலே இல்லை... சனிக்கிழமை காலையில் 'சேரன் செல்வி'யை ஆரம்பித்து எழுதுவோம்... எழுதுவோம்... எனத் தள்ளிப்போட்டுப் போட்டு இரவில்தான் எழுதி முடித்தேன். மனம் ஒருநிலையில் இருந்தால்தான் எழுத்தும் வரமாகும்... உறவுகளின் எழுத்தை வாசித்து விடுகிறேன்... கருத்து இடுவதில் அயற்சி... இணையத்தில் நிறைய சினிமா பார்க்க முடிகிறது... மற்றவற்றில் மனம் ஒட்டவில்லை. இதுவும் கடந்து போகுமென்பதால் பார்த்த சினிமாக்கள் குறித்து விமர்சனமாக இல்லாமல் சும்மா கிறுக்கலாம்... இப்படியாச்சும் பகிர்வு எழுதுவோமே.

Image result for துருவங்கள் பதினாறு

குமான் நடிப்பில் வந்த 'துருவங்கள் பதினாறு' நல்லவனாக காட்டப்பட்டவன்தான் வில்லனாவான் என்ற தமிழ் சினிமா வழக்கப்படி என்றாலும்... அடுத்தது என்ன...  அடுத்தது என்ன என ராஜேஸ்குமாரின் க்ரைம் நாவலை வாசிப்பது போல நகரும் காட்சி அமைப்புக்கள் நம்மை படத்தோட இணைந்து பயணிக்க வைக்கிறது. ஒரு மழை இரவு... விபத்து... காணாமல் போகும் பெண்... போலீஸ் விசாரணை... என விறுவிறு க்ரைம் திரில்லர்... ஆரம்பத்தில் இருந்து பார்த்தால் பார்த்தால் படம் புரியும்படியான காட்சி அமைப்புக்கள் அருமை... மிகச் சிறப்பான ஒரு புலனாய்வுக் கதையைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கார்த்திக் நரேன். பின்னணி இசையே படத்துக்குப் பெரும் பலம்.

Image result for குற்றம் 23

ருண் விஜய் நடிப்பில் அரவிந்தன் இயக்கத்தில் வந்திருக்கும் 'குற்றம் 23', ராஜேஸ்குமார் அவர்களின் க்ரைம் நாவலை மையமாகக் கொண்ட கதை. பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணும் கொடுத்த பாதிரியாரும் கொலை செய்யப்பட, அதை துப்புத் துலக்கப் போய்... செயற்கை கருத்தரிப்பு, அதனால் கர்ப்பிணிப் பெண்களில் மரணம்... என கதை விறுவிறுப்பாய் பயணிக்கிறது. ஆரம்பம் முதல் வேகமெடுக்கும் கதையில் காதல், நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. இறுதியில் சினிமாத்தனமான காட்சிகளால் டிராபிக் ஜாமில் மாட்டிக் கொண்ட அரசுப் பேருந்து போல் ஆனாலும் அருண் விஜய், மஹிமா, அபிராமி நடிப்பும் கதையின் போக்கும் கவர்கிறது. குற்றம் 23 அருமையான க்ரைம் திரில்லர். பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

Image result for முப்பரிமாணம்

திரைக்கதை சித்தர் பாக்யராஜ் மைந்தன் சாந்தனு நடிப்பில் வந்திருக்கும் படம் 'முப்பரிமாணம்'. ஆரம்பக்காட்சியில் திருமண மண்டபத்திலிருந்து மணப்பென் சிருஷ்டி டாங்கேயை கடத்திச் செல்கிறார் சாந்தனு... வில்லனும் போலீசும் விரட்ட, காரில் பயணிக்கும் போதே முன்கதை நாயகன் கண்ணில் விரிகிறது. சின்னச் சின்ன லாஜிக் சொதப்பல் இருந்தாலும் அழகான காதல் கதைக்குள் போகும் கதை, அதனால் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சினைகள், இழப்புக்களில் நீந்தி, இடைவேளைக்குப் பின்னர் வேறொரு பாதையில் வித்தியாசமாய் பயணிக்கிறது.  இடைவேளைக்குப் பிறகு காதலியை திருமண நேரத்தில் கடத்தி வந்ததற்கான முடிச்சுக்கள் மெல்ல மெல்ல அவிழ்க்கப்படும் போது விறுவிறுப்புக் கூடுகிறது. விறுவிறுப்பான கதைக்கு காமெடி தேவையில்லை என்பதால் நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் நகைச்சுவைக்குப் பஞ்சம். சாந்தனு நடிப்பு மிகச் சிறப்பு. சிருஷ்டிதான் கதையின் நாயகி... இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். இயக்குநர் அதிரூபனின் கிளைமேக்ஸ் எல்லாரையும் கவரும். ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை நன்று. இடைவேளைக்குப் பின் நாயகன் நாயகி பரிமாணம் மாறிய பின் அசத்தல்.

Image result for முத்துராமலிங்கம்

வரச நாயகன்  கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் நடிப்பில் 'முத்துராமலிங்கம்'. சிலம்பம் பற்றி சொல்லும் கதை என்றார்கள்... கார்த்திக் நாயகனாக நடிக்கும் போது கூட இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததில்லை... நாயகி வயிற்றில் கேப்டன் பம்பரம் விட்டார்... சுப்ரீம் ஸ்டார் தேன் ஊற்றினார்... அதெல்லாம் 90க்கு முன்னால ஆனா 2017-ல் குப்புற கிடக்கும் நாயகியை திருப்பினால் வெற்றி என்ற போட்டியில் களம் இறங்கியிருக்கிறார் கௌதம்... கம்புச் சண்டையே பிரதானம் என்பதால் கம்பைத் தூக்கிக்கிட்டே திரியுறானுங்க... மொத்தத்தில் முத்துராமலிங்கம் வீரமாய் வர வேண்டியது படு மொக்கையாய்... இசை இளையராஜாவாம்...90களுக்கு முன் வந்த கதைகளைப் போன்ற படத்தில் 90களின் ராஜா கூட ஜெயிக்கவில்லை.

Image result for அதே கண்கள்

'அதே கண்கள்' இயக்குநர் ரோஹின் வெங்கடேசனின் முதல் படம். அறிவழகன்,ஜனனி,ஷிவதா நடிப்பில் வித்தியாசமான  ஒரு கதைக்களம். கண்பார்வை அற்றவர்களில் தேர்ந்தெடுத்த சிலரை மட்டும் காதலிப்பதாக மயக்கி பணம் பறிக்கும் கும்பல், அறிவழகனையும் ஏமாற்ற... அவர்களைத் தேடி சென்று எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதே மிகவும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார்கள். இதுவும் நாயகியை (ஷிவதா) மையமாகக் கொண்டு நகரும் கதை. கண்டிப்பாக பார்க்கலாம்.

Image result for போகன்

'போகன்' மெஸ்மரிசத்தின் மூலம் மற்றொருவரின் உடம்பில் புகுந்து பணத்தைத் திருடி, சுகபோகமாய் வாழும் ஒருவனுக்கும் காவல்துறை அதிகாரிக்கும் நடக்கும் மோதல்தான் கதை. ஜெயம் ரவி நாயகன்... அரவிந்த்சாமி வில்லன். நாயகனை மிஞ்சுகிறார் வில்லன். இடைவேளைக்குப் பிறகு ஜெயம் ரவி அரவிந்த்சாமியும்... அரவிந்த்சாமிக்குள் ஜெயம்ரவியுமாய் விறுவிறுப்பாய்... போகன் பார்க்கலாம்... ஜெயம் ரவியைவிட அரவிந்த்சாமி அசல்ட்டாய் அப்ளாஸ் பெறுகிறார்.

Image result for ரம்

'ரம்' அப்படின்னு ஒரு பேய்ப்படம்... எத்தனை காலத்துக்குத்தான் ஆவி பலி வாங்குமோ தெரியலை... டிஜிட்டல் இந்தியான்னு மோடிஜி சொல்லிக்கிட்டு கார்ப்பரேட்டை வளக்குறாரு... நாம் இன்னமும் பேய்ப்படங்கள்ன்னு சொல்லி விட்டாலாச்சாரியா காலத்துலயே இருக்கோம். போதுமய்யா இயக்குநர்களே புதுமைக்கு வாங்க. ஆங்கிலத்தில் வரும் பேய்ப்படங்கள் நம்மை உறைய வைக்கும் என்றால் தமிழில் வரும் பேய்ப்படங்கள் சிரிப்பைத்தான் கொடுக்கின்றன.

இதில் பச்சை கலர் கொடுக்கப்பட்ட படங்களை பார்க்கலாம்.. சிவப்புக்கலர், அந்தப் பக்கமே போகாதீங்கன்னு அர்த்தம்.
-'பரிவை' சே.குமார்.

சனி, 4 மார்ச், 2017

மனசு பேசுகிறது : சாண்டில்யனின் சேரன் செல்வி

ன்னி மாடம் குறித்தான பகிர்வை 'சாண்டில்யனின் நாவல்களில் இரண்டு நாயகிகள்...அவர்களைப் பற்றிய வர்ணனைகள் சற்று கூடுதலாக இருக்கும்' என்று ஆரம்பித்திருந்ததைப் பற்றி மதிப்புக்குரிய இராய. செல்லப்பா ஐயா அவர்கள் தனது கருத்தில் 'சாண்டில்யனை சாண்டில்யனாக்கியதே இந்த வர்ணனைகள்தானே' என்று சொல்லியிருந்தார். ஐயா சொல்லியது உண்மையே... கதையின் பயணத்தில் கிடைக்கும் இடத்தில் எல்லாம் நாயகிகளை வர்ணிக்கத் தவறுவதில்லை அவர். கதை முழுவதும் ஆங்காங்கே நாயகிகளை வர்ணித்தாலும் ஒரு இடத்தில் சொன்ன அழகின் வர்ணிப்புக்கள் அடுத்த இடத்தில் இருக்காது என்பதே அவரின் மிகத் தெளிவான எழுத்தின் வெற்றி என்பதோடு இன்றும் சாண்டில்யனை வாசகர்கள் மத்தியில் நிலை நிறுத்தியும் வைத்திருக்கிறது. சேரன் செல்வியில் இளமதியை கடற்கரையில் ஆரம்பித்து இறுதி வரை கிடைக்கும் இடத்தில் எல்லாம் அவரின் பார்வையிலும் நாயகனின் பார்வையிலுமாக வர்ணித்திருப்பார். 

Image result for சேரன் செல்வி

சேரன் செல்வி...

சோழ, பாண்டியர்களின் கதைகளை அதிகம் எழுதியிருக்கும் சாண்டில்யன், சேரர்களின் வரலாற்றை முழு அடிப்படையாகக் கொண்டு எழுதிய முதல் நாவல் இது என்று தனது முன்னுரையில் தெரிவித்துள்ளார். நாமும் சேர,சோழ, பாண்டியர்கள் என்று சொன்னாலும் சோழனுக்கும் பாண்டியனுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை சேரர்களுக்கு கொடுப்பதில்லை. இந்தப் புதினம் முழுக்க முழுக்க சேர மன்னன் ரவிவர்மன் குலசேகரனின் தீரச் செயலைப் பேசும் கதை. சேர, சோழர்கள் தமிழைக் காக்க வேண்டும், தமிழர்களைக் காக்க வேண்டும் என்று நினைத்தார்கள் என்று சொல்லும் வரலாறுகள் 'சங்கம் வைத்து தமிழ்' வளர்த்த பாண்டியர்கள் மட்டுமே சிங்களவனை தமிழகத்தில் ஆட்சி புரிய வைத்ததார்கள் என்றும் மேலும் வடக்கில் இருந்து வந்த முகமதியருக்கும் பாண்டியர்களே சிவப்புக் கம்பளம் விரித்தார்கள் என்றும் சொல்கின்றன். இது என்ன விந்தை என்று தெரியவில்லை... தெரிந்த வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுங்களேன்.

சரி விஷயத்துக்கு வருவோம்...

பாண்டியர்களின் தயாதிச் சண்டையில்... இதுதான் மற்றவர்கள் உள்புக மிகப்பெரிய காரணமாய் இருந்திருக்கிறது. இன்னைக்கு வரைக்கும் நாம பங்காளிச் சண்டைதானே போடுறோம்... அதுனாலதான் மீத்தேனும், ஹைட்ரோ கார்பனும்... இல்லை தாமிரபரணியில் நீரை உறிஞ்சினாலும் அரசியல்வாதிகள் ஆட்சி அதிகாரத்துக்கு தகுந்தவாறு பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இராஜராஜன் பரம்பரை, வேலு நாச்சியா பரம்பரை, மருது சகோதர்கள் பரம்பரை, கட்டப்பொம்மன் பரம்பரையின்னு நாம ஆளாளுக்கு சாதிக்கு சலங்கை கட்டி ஆடவிட்டு அதன் விளைவுகளை ஆழ்ந்து ரசித்து வருகிறோம். இதைத்தான் அன்று அவர்களும் செய்திருக்கிறார்கள். சேர,சோழ, பாண்டியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டிருந்தால்... அதான் செயல்படலையே இனி ஆண்டு முடிச்சிட்டுப் போனவங்களைப் பற்றி பேசி என்னாகப் போகுது. நம்ம இராஜராஜ சோழன் (இப்படிச் சொல்லக்கூட இப்ப யோசிக்கணும்... ஏன்னா உலகையே ஆண்ட தமிழன் என்ற நிலை போய் அவரும் சாதீய அமைப்புக்குள் போயாச்சு)  அவரின் துணைவியார் மகாராணி லோகமாதேவியின் சிலைகள் தஞ்சைக் கோவிலில் இருந்த வரலாறு இருப்பதாக படித்தேன். ஆனால் அவை தஞ்சையில் களவாடப்பட்டு குஜராத்தில் ஒரு மியூசியத்தில் இருக்கின்றனவாம். அதனை மீட்டு வர முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன... ஆனாலும் இன்னும் காலம் கனியவில்லை... 

இப்படித்தான் எதாவது எழுதப் போயி எங்காவது போயிருது மனசு. சரி சேரன் செல்வி இளமதி பின்னால போகலாம் வாங்க.

பாண்டியரின் தயாதிச் சண்டையை சாதகமாக்கி தமிழகத்தை நாசம் செய்து கொள்ளையடித்துச் சென்ற மாலிக்கபூருக்குப் பின் மீண்டும் அத்தகையதொரு நிலை ஏற்பட இருந்த சமயத்தில் வீரபாண்டியனையும், சுந்தரபாண்டியனையும் வென்று, காஞ்சி வரை சென்று தமிழகத்தையும் ஹிந்து தர்மத்தையும் பாதுகாத்து,  தென்னிந்தியாவின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டான் சேரன் ரவிவர்மன் என்பது வரலாறு. இந்த வரலாற்றுச் சான்றுகள் காஞ்சி அருளாளப் பெருமாள் கோவிலிலும் பூந்தமல்லி பெருமாள் கோவிலிலும் இருக்கும் சாசனங்களில் இருப்பதாகவும் மேலும் ரவிவர்மன், சிறந்த வீரன் மட்டுமல்ல பெரிய கவி என்பதற்கும் 'பிரத்யும்னாப்யுதயம்' என்ற நாடகத்தை எழுதியவன் என்பதற்கும் ரவிவர்மனின் அவையில் இருந்த கவிபூஷணன், சமுத்திரகுப்தன் என்ற கவிகளைப் பற்றியும் சான்றுகள் இருப்பதாக சாண்டில்யன் அவர்கள் தனது முன்னுரையில் சொல்லியிருக்கிறார். இவற்றை எல்லாம் வைத்து மாலிக்கபூர், அமீர் குஸ்ரூ ஆகியோர் தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் விளைவித்த கஷ்டங்களையும் இணைத்து இந்த 'சேரன் செல்வி'யைப் புணைந்திருக்கிறார்.

ரவிவர்மனின் மகள் இளமதி கடற்கரையில் நடந்து செல்லும் போது அவளின் அழகை வர்ணிப்பதில் ஆரம்பிக்கிறது கதை. இதுவரை நான் வாசித்த கதைகளில் சாண்டில்யனின் பெரும்பாலான கதைகள் கடற்கரையில்தான் ஆரம்பிக்கின்றன. அப்படி நடந்து செல்லும் போது அடிகளாரால் அனுப்பப்பட்ட பாண்டிய வீரன் இளவழுதியைச் சந்திக்கிறாள். வழக்கம்போல் இருவருக்கும் மோதல்... அவன் இளமதியைக் காண வந்திருப்பதாகச் சொல்ல, தான் இன்னாரெனச் சொல்லாமல் அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று திட்டிவாசல் வழியே உள்ளே போ என்று சொல்லிச் செல்கிறாள். அதன் வழி செல்ல, வீரர்களால் மடக்கப்பட, அவர்களுடன் லேசான சண்டையிட்டு உள்புகுந்து நந்தவனத்துக்குள் புகுந்து கொள்கிறான். பின்னர் ரவிவர்மன் அவனைப் பார்த்து அழைத்து வந்து இளமதியிடமே ஒப்படைக்க, அப்போதுதான் அவள் இளவரசி என்பதை அறிகிறான். வரலாற்று நாயகர்களுக்கே உரிய கண்டதும் காதல் அவனுக்கு வர, இரவில் அவள் வீணை இசைத்துப் பாடக்கேட்டு நந்தவனத்துக்குள் போகிறான். அங்கு மாலிக்கபூரின் ஒற்றன் அம்ஜத்கானை, ஸலீம் என்ற பெயரில் சந்திக்கிறான். மன்னன் ரவிவர்மனை ஏமாற்றி, நாடகமாடி அவரின் நண்பனாய் அரண்மனைக்குள்ளும் வந்து செல்லும் ஸலீம் என்னும் அம்ஜத்கான், தன்னைப் பற்றி மன்னருக்கு அக்குவேர் ஆணிவேராகத் தெரியும் என்பதை அறியவில்லை. அவனின் திட்டங்களை இளவழுதியிடம் சொல்லி அவனின் அழைப்பை ஏற்று அவன் சொல்கிறபடி நடப்பதாய் நாடகமாடச் சொல்கிறார்.

பின்னர் ஸலீமுடன் நட்பாகி, இளமதியுடன் காதலில் கசிந்துருகி, யாருக்கும் தெரியாமல் ரவிவர்மன் ஆற்றுக்கு உள்புறம் இருக்கும் காட்டில் பயிற்சி அளிக்கும் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை (இளவழுதி யானைப் படையை அதிகம் விரும்பாததால் அதை நடத்தும் பொறுப்பு இளமதி மற்றும் அடிகள் வசம் போரின் போது அளிக்கப்படுகிறது) எல்லாவற்றிற்கும் படைத்தலைவன் ஆகிறான். அவனின் உபதளபதி ஆகிறான் சேரன் தளபதி பலபத்ரன்... காட்டுக்குள் படை வைத்திருப்பதை அறிந்த அம்ஜத்கான் (ஸலீம்) தந்திரமாக இளவழுதியை சிறைப் பிடித்து, இளமதியை மிரட்டி, படைப் பலத்தை காணச் செல்கிறான். இப்படி நடக்கும் என்பதை முன்பே ஊகித்து அவனுக்கு போக்குக் காட்ட திட்டமிடுவதே இளவழுதிதான் என்பதை அம்ஜத்கான் அப்போதும் அறியவில்லை. சிறையிலிருந்து மன்னனால் மீட்கப்படும் இளவழுதி, தரைப்படை, காலாற்படையில் ஒரு பகுதியை மதுரை நோக்கி கிளப்பிச் செல்ல, அடுத்த இரண்டு நாளில் அடிகளும் இளமதியும் யானைப்படைகளுடன் புறப்பட, அதன் பின்னர் ரவிவர்மன் புறப்படுகிறான். மூவரும் மதுரையை நோக்கி வேறு வேறு பாதையில்.

பலபத்ரனிடம் நாளை மாலைக்குள் நான் திரும்பவில்லை என்றால் நீ படையை நடத்திச் செல் மதுரையில் சந்திப்போம் என இளமதி வளர்த்த குதிரையும் தற்போது இளவழுதியின் தோழனாய் அவனைச் சுமக்கும் ராஜாவில் கிளம்பி, ஸலீமைத் தேடிச் செல்லும் இடத்தில் இளமதியை எதிர்பாராமல் சந்திக்க அங்கு வந்து அவர்களைச் சிறை பிடித்துச் செல்கிறான் மாலிக்கபூருக்கு அடுத்தபடியாக நவாப் அலாவுதீன் கில்ஜிக்கு நெருக்கமானவனும் நுட்பமான அறிவு படைத்தவனுமான குஸ்ரூகான், அவன் படைத்தளத்தில் இவர்களை சிறை வைக்கும் இடத்தில் அஜ்மல்கானும் சிறை வைக்கப்பட்டிருக்கிறான். ஒரு நாளுக்குப் பிறகு இளமதியை மட்டும் சிறையிலிருந்து அனுப்பி அவளைப் பின் தொடர்ந்து விபரம் அறிய அவளுடன் இரு வீரர்களை அனுப்புவதுடன் அஜ்மல்கானையும் அனுப்புகிறான் குஸ்ரூ. இளமதி தந்தை இருக்குமிடம் என்று தெரியாமல் மதுரைக்கு அருகே இருக்கும் பழைய பாண்டியன் கோட்டைக்குச் செல்ல, அங்கு அவளுக்கு முன்னே வந்த அஜ்மல்கான், ரவிவர்மனிடம் மாட்டிச் சித்ரவதை அனுபவிக்கிறான்.

அதன் பின்னான பரபர நிகழ்வுகள், மதுரைப் போரில் வீர பாண்டியன் தோல்வியை ஒத்துக்கொள்ள, அவனிடம் சில உதவிகள் எதிர்ப்பார்ப்போடு மதுரைக்குள் நுழைய மாட்டேன்... உன் தோல்வியை மக்கள் மத்தியில் சொல்லி மார்தட்டிக் கொள்ள மாட்டேன் என்று சொல்கிறான் ரவிவர்மன். அதற்கு காரணமும் இருக்கிறது. அந்தக் காரணம் வீரபாண்டியனின் மனைவி சேரமன்னனின் மூத்த மகளான நிலமங்கை. அவள் முதலில் தன் தந்தை தனது கணவனை தோற்கடித்து மதுரையை கைப்பற்ற நினைக்கிறார் என்று நினைப்பதால் அவர் மீது கோபமாய் இருக்க, ரவிவர்மனோ மதுரையில் வெற்றி விழா எதுவும் கொண்டாடக்கூடாது எனவும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடப் போறேன் என்று சொல்லும் அடிகளாரிடம் நாம் மதுரைக்குள் வருவதில்லை என்று வீரபாண்டியனிடம் சொல்லியிருக்கிறோம். காஞ்சியில் வெற்றி பெற்றுத் திரும்பியதும் மீனாட்சியைக் கும்பிடலாம் என்று சொல்லிவிட்டார் என்பதை அறிந்ததும் காஞ்சிக்குச் செல்லும் தந்தையை வழியனுப்ப கணவனுடன் வருகிறாள்.

வீரபாண்டியனின் அண்ணனான சுந்தரபாண்டியனை எதிர்க்க வீரதவளப் பட்டிணத்துக்கு இளமதியுடன் செல்லும் இளவழுதியிடம் சமாதானக்கொடி காட்டி, அவனை வரவழைத்து கத்தியால் குத்திவிடுகிறார்கள். இருப்பினும் இளமதி சுந்தரபாண்டியன் படைகளை சிதறடித்து வெற்றி வாகை சூடுகிறாள். உயிருக்கு போராட்டமான நிலையில் கவிபூஷணன்  அவர்களின் பாசறைக்கு வந்து அவன் உயிரைக் காப்பாற்றுகிறான். இளவழுதி தலைமை ஏற்ற படை என்னானது என்பது தெரியாமலேயே ரவிவர்மன் மற்ற படைகளுடன் குஸ்ரூகான், அஜ்மல்கானிடம் காஞ்சியில் மோத, ஒரு கட்டத்தில் அவர்களிடம் மாட்டிக் கொள்ளும் சூழல் வர, இளவழுதியின் படை சூறாவளியாய் புகுந்து துவம்சம் செய்து வெற்றி பெறுகிறது. பெரும் தோல்வியினால் போர் முடிந்த அடுத்த நாள் குஸ்ரூகான் தில்லிக்குத் திரும்ப, சிறைப்பட்ட அஜ்மல்கான் மன்னருக்கு வேகவதி நதிக்கரையில் நடந்த வீராபிஷேகத்தை முன்னிட்டு விடுவிக்கப்படுகிறான்.

பெருமாளுக்கு எழுதி வைக்கப்பட்ட இளமதியை பெருமாள்தான் சொந்தம் கொள்ள வேண்டும் என்று ஆரம்பம் முதலே சமுத்திரகுப்தன் சொல்லி வருகிறான். அவனுக்கு இளவழுதி - இளமதி காதலில் விருப்பம் இல்லை. போர் முடிந்து பேரரசனாக முடி சூட்டிய பின்னர் பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாளிடம் தன் மகளை ஒப்படைக்கிறார். அப்போது கவிபூஷணன், கற்பூர ஆரத்தி காட்டி இருவருக்கும் பொருத்தம் இருக்கிறதா என்று பார்க்கச் சொல்ல , பொருத்தம் இருப்பதால் இறைவனுக்கு சொந்தமான இளமதியை, அவனின் பிரசாதமாக இளவழுதிக்கு அளித்திருக்கிறான் என்றும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு பெருமாள் பெயரை வைக்க வேண்டும் என்று சொல்ல, காஞ்சியை பாதுகாப்பை இளவழுதியிடம் கொடுத்து சேரநாடு திரும்புகிறான் ரவிவர்மன்.  பாதுகாப்பு ஏற்பாடுகளை முடித்து விட்டு இரண்டு நாளில் பாண்டிய நாட்டிற்குச் செல்கிறோம் என்று அடிகள் சொல்ல, அது சேர நாட்டுக்குள் அடக்கம் என்று சிரிக்கிறான் ரவிவர்மன். அப்போது அடிகளோ 'பாண்டியர் என்றும் அடங்காத சாதி' என்று சொல்ல, சாதியை விட்டுட்டு தமிழர் என்ற ஒரே சாதியை நினைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்' என்று சொல்லிச் செல்கிறான். நாம எங்கே தமிழர்ன்னு சொல்றோம்... இன்றும் சாதிக்குள்தான் சாய்ந்து கிடக்கிறோம்.

சேரன் செல்வி - மிக விறுவிறுப்பாய் நகரும் கதை... வாசிக்க ஆரம்பித்தால் முழுவதும் முடித்துவிட்டுத்தான் வைக்கத் தோன்றும்.

-'பரிவை' சே.குமார்.

புதன், 1 மார்ச், 2017

7. என்னைப் பற்றி நான் - துளசி / கீதா

'என்னைப் பற்றி நான்' என்ற தலைப்பில் எழுதச் சொல்லிக் கேட்டதும் உடனே அனுப்பிக் கொடுத்தார்கள்... என்னைப் பற்றி நான் என்னும் தலைப்பை 'எங்களைப் பற்றி நாங்கள்' என மாற்றிக் கொள்கிறோம் என்ற அன்போடு... இவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அனைவரும் அறிந்த பதிவர்கள்... எல்லாரும் விரும்பும் பதிவர்கள்... ஒரு தளத்தில் எழுதும் ஒத்த அலைவரிசை கொண்ட நண்பர்கள்... அவர்களைப் பற்றி ரொம்ப விரிவாக அவர்களே சொல்லிவிட்டதால்  நான் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை...

நாம் விரும்பும் பதிவர்களான அண்ணன் துளசிதரன் அவர்களும் கீதா அக்காவும் தங்கள் பாணியில் கலக்கியிருக்கிறார்கள். இனி தில்லையகத்தாரின் (THILLAIAKATHU CHRONICLES) அருமையான... ரசனையான... மிக நீளமான பகிரவின் மூலமாக அவர்களையும் அவர்களின் குடும்பத்தைப் பற்றியும் அறியலாம்.... 


"எங்களைப் பற்றி நாங்கள்"

ன்பார்ந்த நண்பர்கள், சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்.

கற்றது விரல் நுனி அளவே கல்லாதது இவ் அண்டவெளி அளவு! ஏனென்றால் அதற்கு முடிவு இல்லை!

என்னைப் பற்றி என்று நம் நண்பர்/தம்பி குமார் அவர்கள் ஒவ்வொரு பதிவரும் தங்களைப் பற்றிச் சொல்லி அதைப் பதிவிடுவதை நாங்களும் தொடர்ந்து வாசித்து வந்து கொண்டிருக்கிறோம். நல்லதொரு முயற்சி என்றால் மிகையல்ல. இது நம் ஒவ்வொருவரைப் பற்றியும் அறிந்து கொள்ளவும், முகமறியா நட்பும், நேரில் பார்க்காமலேயே நல்லிணக்கமும் உருவாகும் என்பதிலும் ஐயமில்லை. தம்பி குமாரைக் கூட தளத்தின் மூலம் தான் தெரியும். இப்போது எங்களையும் அவர் கேட்டதால் இந்த உறவு இன்னும் நெருங்கியது போன்று தோன்றுகிறது. இருங்கள் ஏதோ குரல் கேக்குதுல…..எல்லாம் அந்த நான் ஸ்டாப் சாட்டர் பாக்ஸாத்தான் இருக்கும்….

கீதா: துளசி! ஓகே நீ ஆசிரியர் என்று இங்கு எல்லோருக்கும் தெரியும். கொஞ்சம் நம்மைப் பத்தியும் சொல்லுவோம்.

துளசி: சரி, அப்ப குமார், எங்களைப் பத்தினு இங்க மட்டும் தலைப்பை வைத்துக் கொள்வோமா?

குமார்: அண்ணே! என்ன கேள்வி? இது இப்ப உங்க ஏரியா பூந்து விளையாடுங்க.

துளசி: கீதா நம்மள பத்தி என்ன சொல்ல? என்னனு சொல்லறதுக்கு எங்கருந்து தொடங்கறது? சொல்றதுக்கு என்ன இருக்குனே தெரியலையே..

கீதா: ஆமா! எனக்கும் அப்படித்தான் தோணிச்சு. ஆனா நாம ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சோம்னா ஏதாவது வரும்ல அதை சொல்லுவோம்..

துளசி: நாம காலேஜ் பண்ணினப்ப நிறைய கல்லூரி நிகழ்ச்சிகள், போட்டிகள்ல எல்லாம் கலந்துகிட்டுருக்கோம் இல்லையா. ட்ராமா, ஃபேன்சிட்ரெஸ் நு எல்லாம்…

கீதா: நீ நல்லா மிமிக்ரீ பண்ணுவனு யாருக்கும் இங்க தெரியாதே! 

துளசி: ஐயையோ அதை சொல்லிடாதே… அதெல்லாம் அந்தக் காலம். விட்டு ரொம்ப நாளாச்சே. சரி! நண்பர்களே இது உங்களுக்குத் தெரியுமா தெரியாதானு தெரியல. கீதா இலங்கையில இருந்தப்ப, “நான் இலங்கை வானொலி நிலையத்தில் நிகழ்சிகள் செய்து வந்த ராஜேஸ்வரி சண்முகத்தோட மடில உக்காந்து கதை சொன்னேன். அவங்க எங்க வீட்டுக்கு எதிர்வீட்டில இருந்தாங்க, மயில்வாகனன் அவர்களுடன் விளையாடியிருக்கேன், ஒன்னாங்க் க்ளாஸ்ல ரேடியோல கதை சொல்லிருக்கேன்னு அப்பப்பக் கதை விடுவா.

கீதா: ஹேய் அது உண்மைதான். அப்புறம் நீயும் தான் டிராமா எல்லாம் டைரக்ட் பண்ணுவ, உன்னைய உன் ஃப்ரென்ட்ஸ் எல்லாரும் நீ எதிர்காலத்துல டைரக்டரா வருவனு சொல்லிட்டே இருப்பாங்களே….அப்ப அதுவும் உட்டான்ஸு??!! ட்ராமாதான்…

துளசி: அதெல்லாம் ஒரு காலம். அப்புறம், நாகர்கோயில் ரேடியோ நிலையம் தொடங்கின அன்னைக்கு ஒலிபரப்பான முதல் குரலே உன்னோட குரல்தானே! பூதப்பாண்டி அருள் மிகு பூதலிங்கேசுவரர் கோயில் பத்தின உரைச்சித்திரம் நீதானே பண்ணின. உன் குரல் ரொம்பப் பிடிச்சு போயி அப்புறம் மூணு நிகழ்ச்சி உன்னையே தயாரிக்கச் சொன்னாங்க இல்ல? உரைச்சித்திரம் பண்ணினியே. 

கீதா: ம்ம்ம் அட போப்பா அதெல்லாம் கானல் நீர். நீ கூடத்தான் என் சீனியர் பாடின வில்லுப்பாட்டுக்கு ஆமாம் சாமி போட்டியே! (மக்களே இதுலருந்து என்ன தெரியுதுனா நம்ம துளசி சரியான ‘ஆமாம்’ சாமி ஜால்ரா பார்ட்டி!!!!) அப்புறம் அவர் பாடின நாட்டுப்புறப் பாடலுக்கு விளக்கம் கொடுத்தியே! (யாருக்காவது க்ளீனிங்க் பௌடருக்கு விளம்பரம் வேணும்னா துளசிய கூப்பிட்டுக்கலாம்!!)

துளசி: ஹேய்! ரொம்பத்தான் கலாய்க்காத.

கீதா: என் க்ளாஸ் பசங்க எல்லாம் நீ ஹாஸ்டல்ல என்ன பண்ணுவ எப்படி இருப்பனு எங்கிட்ட வந்து போட்டுக் கொடுத்ததச் சொல்லட்டுமா

துளசி: ஆஆஆஆ! 

கீதா: கேட்டுக்கோங்க, துளசி ஹாஸ்டல்ல தனியா ஏதோ கோட்டைய பிடிக்கப் போற யோசனைல அங்கயும் இங்கயும் நடந்துகிட்டே இருப்பாராம். அமைதியா இருந்தாலும், அதே சமயம் செமையா கலாய்ப்பாராம் ஜாலியா… (ஹும் அது அப்ப. இப்ப நான் ஏதாவது ஜோக் சொன்னா மட்டும் இல்ல நகைச் சுவைப் பதிவுகள் வாசிக்கும் போது இல்ல வீட்டுல பிள்ளைங்க யாராவது கலாய்ச்சுப் பேசினா சிரிப்பாரு. ஆனா, அவரா ஜோக் எல்லாம் அடிக்கறதே இல்லை!!!) அதே மாதிரி யோசிச்சுட்டே நடக்கறதும் இல்லை..

துளசி: நம்ம ஈடுபாடு, சிந்தனைகள், எல்லாம் ஒரே மாதிரி இருந்து, கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் அப்படினு வானில் கோட்டைகட்டி பல கனவுகள் வளர்த்து இருந்தோம் இல்ல?. எத்தனையோ இடர்கள், தடங்கல்கள் வந்து கனவுகள் காத்துல போயிடுச்சு. ஆனால், நட்பு எனும் கோட்டை மட்டும்……இப்பவும் அப்படியே…

கீதா: ஆமா நம்ம நட்புல இப்பவும் இடர்கள், தடைகள் இருக்கத்தானே செய்யுது….இருந்தாலும் இறைவன் அருளாலயும், நம்மளோட உறுதியான நிலைப்பாட்டினாலும் தொடருது.

துளசி: தொடர வேண்டும் என்பதே பிரார்த்தனையும். நமக்குள்ளும் கருத்து வேறுபாடுகள், விவாதங்கள் வருமே அதையும் சொல்லிப்போம். ஆனா, அதெல்லாம் ஜுஜூபி! அப்படியே காணாமப் போயிடுமே!

கீதா: ம்ம் அப்படியே அதனாலதானே சரி நம்ம கல்லூரிக் காலத்துக் கனவுகளில் ஓரிரண்டு சிதைந்து போயிருந்தாலும், அப்போது இருந்த எழுத வேண்டும் என்ற கனவை மட்டுமேனும் நிறைவேற்றிக் கொள்ள எழுதலாமே என்ற விருப்பத்தினால்தானே, 2013 ஜூன் மாதம் தொடங்கியதே 

துளசி: ஆமாம்! அதிலும் பல தடங்கல்கள். எனக்கு இணையம் மற்றும் எழுதுவது என்பதில் யதார்த்த ரீதியில் பிரச்சனைகள் உண்டு என்பதால், வலைப்பூ தொடங்கியது, தொழில்நுட்பம் முதல் அனைத்தையும் கீதா என்னிடம் கலந்து ஆலோசித்து அப்புறம், அவ்வப்போது டிடி அவர்களைத் தொடர்பு கொண்டு செய்துவிடுவார். அதனால் அவர் இருப்பிடமான சென்னை வீடுதான் எங்கள் தலைமையகம். நான் எழுதுவதை பாலக்காட்டில் இருக்கும் போது அலைபேசி வழியாக வாசித்தால் கீதா அதைக் கணினியில் அடித்துப் பதிவிட்டுவிடுவார். அதே போன்று பின்னூட்டங்கள் நான் வாசித்தவற்றிற்கு தமிழை ஆங்கிலத்தில் எழுதி அனுப்பிவிடுவேன். இருவருக்கும் ஒரே கருத்தாகப் பொதுவாக இருக்கும் அப்படி இருந்தால் தனித்தனியாக இல்லாமல் பின்னூட்டம் இடுவதுண்டு. கீதாவுக்குத் தனி கருத்துகள் இட வேண்டும் என்றால் அவர் பெயரிட்டுக் கருத்தை இடுவதுண்டு. அவர் மட்டுமென்றாலும் அப்படியே. எங்களுக்குத் தெரிந்ததை ஏதோ எழுதிவருகிறோம். 

கீதா: துளசி நிறைய படங்கள் பார்ப்பார். பாலக்காட்டில் இருக்கும் போது திரைப்படம் தான் அவருக்குப் பொழுதுபோக்கு. அவர் இருக்கும் இடத்திலிருந்து டவுனுக்குப் போய் அங்கு நல்ல ஆங்கிலப் படம் வெளியாகியிருந்தால் முதலில் அது அல்லது தமிழ்சினிமா வெளியாகியிருந்தால் முதலில் தமிழ்சினிமாதான் பார்ப்பார். என்னடா படம் பார்த்தனு நான் கேட்டால்…அது மலையாளமாக இருந்தாலும் சரி, தமிழாக இருந்தாலும் சரி…ஆங்கிலப்படமாக இருந்தாலும் சரி…..”ம்ம்ம் அது என்ன அது…இவன் நடிச்ச படம்…நம்ம இவன் இல்ல…அவன் பேரு என்னடா..அதுல வந்தானே…” இப்படி நீட்டி முழக்கிட, அப்புறம் நான் க்ளூ கொடுத்துக் கேட்க வேண்டும்…

துளசி: இப்படிப் பொது வெளில சொல்லி…சரி சரி ரெக்கார்டை மாத்து…

கீதா: இப்போது குமார் சகோ எங்களையும் கேட்டு மின் அஞ்சல் கொடுத்துத் தொடர்பு கொண்டதால், இத்தனை நாட்கள் தளத்தில் மட்டுமே சந்தித்த எங்களுக்கு இப்போது அவருடனான இவ்வுறவு இன்னும் நெருங்கியுள்ளது போல் உள்ளது. அதற்கும் நன்றி குமார். 

துளசி: மட்டுமல்ல நம்மை எல்லோரையும் இணைத்த இந்த இணையத்திகும், வலைப்பூக்கும் நன்றி. ஒவ்வொரு பதிவரின் வலைத்தளமும் ஒரு வலைப்பூ. இந்த வலைப்பூக்கள் அனைத்தும் இணைந்து என்றென்றும் நல்ல மணம் வீசும், வாடா வலைத்தோட்டமாக, எப்புயலிலும் வீழ்ந்திடாத, பூத்துக் குலுங்கும் தோட்டமாக இருக்க வேண்டும் என்பதே எமது, நமது அவா. இணையம் எங்களுக்குப் பல நண்பர்களைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது, சரி, கீதா, இனி என்னைப் பத்தியும், உன்னைப் பத்தியும் கொஞ்சம் சொல்லிக் கொள்வோமா? நீ முதலில் சொல்றியா?

கீதா: நீ முதலில் சொல்லு.

துளசி: என்னைப் பற்றி என்றால், நான் கேரளத்தைச் சேர்ந்தவன் என்றாலும், பிறந்தது தேனி அருகிலுள்ள ராசிங்கபுரத்தில். 26 வயது வரை வளர்ந்தது, படித்தது எல்லாம் தமிழ்நாட்டில். பள்ளிப்படிப்பு ராசிங்கபுரத்தின் அருகிலுள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். கல்லூரிப் படிப்பு மதுரையில் மெஜுரா கல்லூரியிலும் (மதுரைத் தமிழன் எனக்கு ஜூனியர்!!!!ஆனால் அவர் கல்லூரியில் என்ட்ரி எனக்குப் பிறகு) நாகர்கோவில் தென்திருவிதாங்கூர் கல்லூரியிலும் படித்தேன். எனவே எனது தாய்மொழி தமிழ்தான் என்றால் மிகையல்ல. என் பெற்றோர் மலையாளத்தில் பேசினாலும் நான் தமிழில் தான் பேசிவந்தேன். கேரளத்திற்குச் சென்ற பிறகுதான் பிறப்பாலான மொழியான மலையாளத்தையே கற்றேன். எனவே கடந்த 21 வருடங்களாக மலையாளமே ஆகிப் போனதால் இப்போது சில சமயம் நான் பேசும் தமிழில் மலையாளக் கரையோரக் காற்று அடிக்கிறது என்று கீதா அடிக்கடிச் சொல்லிக் கலாய்ப்பதுண்டு. ஒரு அண்ணா, அக்கா, நான். அண்ணன் சமீபத்தில் இறைவனடி சேர்ந்தார். அக்கா என்னுடன் இருக்கிறார்.

தற்போது பாலக்காட்டில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறேன். குடும்பம் நிலம்பூர் அருகில் எடக்கரா எனும் இடத்தில் இருக்கிறது. எனவே பாலக்காட்டில் தங்கியிருந்து வார இறுதி மற்றும் விடுமுறைக்கு ஊருக்குச் சென்று வருகிறேன். தளத்தில் எழுதுவது குறைந்திருக்கிறது. ஆனால், கீதா அனுப்பும் சுட்டிகளில் சில வாசிக்க முடிகிறது. சில நேரமின்மையால் வாசிக்க முடிவதில்லை. பாலக்காட்டில் பள்ளிக்கு அருகில் ஒரு வீட்டின் ஒரு சிறு அறையில் தங்கியிருக்கிறேன். தனியேதான் சமையல். வித விதமாக எல்லாம் சமைப்பது கிடையாது. ஏதோ சமைப்பேன். பல நேரங்களில் உப்புமாதான். என்னைப் பற்றி மற்றவை எல்லாம் எங்கள் தளத்தில் அவ்வப்போது வந்துவிடுவதால் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்பதாலும் வேறு ஒன்றும் சொல்லுவதற்கில்லை என்பதாலும்….கீதா இனி நீ சொல்லு…உன்னைப் பற்றி

கீதா: அதற்கு முன், துளசியின் அக்கா பற்றி.....துளசியின் அக்கா பிறவியிலேயே பேசும் திறன்,  கேட்கும் திறன் அற்றவர். திருமணம் செய்து கொள்ளவில்லை. துளசியுடன் தான் இருக்கிறார். சமையலிலிருந்து வீட்டைப் பராமரித்துக் கவனித்துக் கொள்வது வரை அனைத்தையும் அவர்தான் செய்து வருகிறார். துளசியும் அவரை அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறார்.

இப்போது என்னைப் பற்றி…..என்னைப் பற்றி என்ன சொல்ல? குறிப்பிட்டுச் சொல்வதற்கு எதுவும் இல்லை. திருநெல்வேலிதான் அடிப்படை என்றாலும் பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாம் நாகர்கோவில் அருகிலுள்ள கிராமத்தில். 3 ஆம் வகுப்பு வரை இலங்கையில் வாசம். எத்தனை வேதனைகள் வந்தாலும், என்னை மகிழ்வாக வைத்துக் கொள்ளத்தான் பிடிக்கும். நேர்மறைச் சிந்தனைகளுடன், சிரித்துக் கொண்டே இருப்பது ரொம்பப் பிடிக்கும். அதனால்தான், மதுரை சகோ, கில்லர்ஜி, அதிரா, ஏஞ்சலின் எல்லோரையும் கலாய்ப்பது மிகவும் பிடிக்கும். மதுரை சகோ, அதிரா, சித்திரா எல்லோரும் என்னைக் கலாய்ப்பதையும் மிகவும் ரசித்துச் சிரிப்பேன். யார் கலாய்த்தாலும்! இணையம் வழியாக நல்ல நண்பர்களை, தோழிகளைப் பெற்றிருக்கிறேன் என்றால் அது மிகையல்ல. இப்படிப் பெறுவதற்கு முக்கியக் காரணக் கர்த்தா துளசிதான் என்றால் துளியும் மிகையல்ல. 

இயற்கை, பறவைகள், விலங்குகளின் காதலி என்பதாலோ என்னவோ எல்லாவற்றிலும் நுனிப் புல் மேய்ச்சல்தான்! எனக்கும், மகனுக்கும் எந்த விலங்குகள் அமைப்பிலும் ஆர்வமோ, நம்பிக்கையோ இல்லை. எனக்கு இரு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். கண்ணழகி, ப்ரௌனி. அவர்களுக்குள் பங்காளிச் சண்டை/ஆல்ஃபா பிரச்சினை உண்டு. ஆனால், எங்களிடம் மிக மிக அன்பானவர்கள், அன்பிற்குக் கட்டுப்படுபவர்கள். 

என்னைப் பற்றி வேறு என்ன சொல்ல? இதுவே அதிகம் என்று தோன்றுகிறது. 

எங்கள் இருவருக்கும் எங்களைப் பற்றிச் சொல்லிக் கொள்ள ஒரு வாய்ப்பு அளித்த குமார் அவர்களுக்கு நன்றியும், மொக்கையைப் பொறுமையாக வாசிக்கும் வலையுலக உறவுகள் அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி!
நம்மைப் பலர் நேசிப்பதை விட நாம் பலரையும் நேசிப்போம்

நட்புடன்,
துளசிதரன் - கீதா

கேட்டதும் அனுப்பிக் கொடுத்ததற்கு இருவருக்கும் நன்றி. ஒவ்வொரு வாரமும் மிகப் பிரபலமான பதிவர்களைப் பற்றி அறியக் கொடுத்து வைப்பது மிக்க மகிழ்ச்சி. இது இன்னும் தொடரும்..

அடுத்த வாரம் மற்றொரு வலையாசிரியர் மனசில் பேசுவார்...
-'பரிவை' சே.குமார்.