மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

சினிமா : அம்மா கணக்கு

மலாபால் நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகை என்ற போதிலும் வாழ்க்கையை வாழத் தவறிய சினிமா நடிகைகளின் வரிசையில் இணைந்திருப்பது வருத்தமான விஷயம்.


மகளை கலெக்டர் ஆக்க வேண்டும் என்ற தன்னோட கனவை, நான் வேலைக்காரியாத்தான் ஆவேன் என்று சொல்லும் மகள் எங்கே தகர்த்து விடுவாளோ என்று மனசுக்குள் வருந்தி... அவள் படிக்க வேண்டும்... கலெக்டர் ஆக வேண்டும் என்பதற்காக தானே மாணவியாய் பள்ளிக்குச் செல்லும் ஒரு தாயின் கதைதான் அம்மா கணக்கு.

பதின்ம வயதுக் குழந்தைகள் தான் நினைப்பதே சரி... தான் சொல்வதுதான் சரியென வளர்கிறார்கள். பள்ளியில் நல்ல நட்பில்லாது உருப்படாத நட்புகளுடன் சேர்ந்து படிக்காமல் லூட்டி அடிக்க நினைக்கும் பிள்ளைகள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். கலெக்டரோட பிள்ளை கலெக்டர்... டாக்டரோட பிள்ளை டாக்டர்... வக்கீலோட பிள்ளை வக்கீல்... அப்ப வேலைக்காரி பிள்ளை வேலைக்காரிதானே என அம்மாவிடம் தர்க்கம் செய்யும் படிப்பின் மீது ஆசையில்லாத, பள்ளியில் நண்பர்களுடன் சேர்ந்து லூட்டி அடிக்கும் பிள்ளைதான் அபிநயா கோபால் (யுவஸ்ரீ).

மகள் நன்றாக படிக்க வேண்டும் என்பது அல்ப ஆயுசில் போன கணவனின் ஆசை என்பதுடன் தனது வாழ்நாள் லட்சியமே அதுதான் என்பதால் அதை நிறைவேற்ற வீட்டு வேலை... மீன் கடை வேலை... ஹோட்டலில் பாத்திரம் தேய்க்கும் வேலை என பரபரப்பாக நாளெல்லாம் வேலை பார்த்து பணம் சேர்க்கும் ஏழைத்தாய், தன் மீது மோத வந்த காரில் இருந்து இறங்கி மன்னிப்புக் கேட்ட கலெக்டர் வீடு தேடிப் போய் அவரிடம் கலெக்டர் ஆக என்ன செய்ய வேண்டும் என்று கேட்கும் வெள்ளந்தி மனுஷி சாந்தி கோபால் (அமலாபால்)

மகளுக்கு கணக்குப் பாடம் வரவில்லை என்பதால் எங்கே அவள் பத்தாம் வகுப்பில் பெயிலாகி விடுவாளோவெனப் பயந்து அவளிடம் படி... படி... எனக் கத்திப்பார்த்து 'நான் வேலைக்காரியாத்தான் ஆவேன்' என்று சொன்னதும் தான் வீட்டு வேலை பார்க்கும் டாக்டர் ரேவதியிடம் புலம்புவதும் அந்தப் புலம்பலின் தொடர்ச்சியாக ரேவதி அவரை பள்ளிக்குப் போய் நீயும் படி எனச் சொல்ல, நானா... இந்த வயசிலா என்று வியந்து ரேவதியின் வற்புறுத்தலாலும் உதவியாலும் தன் மகள் படிக்கும் பள்ளியில் அவளது வகுப்பிலேயே மாணவியாகச் சேர்கிறாள் சாந்தி.

மாணவியாக அம்மா தன் வகுப்பில் இருப்பது பிடிக்காத மகளுக்கும் அம்மாவுக்கும் இடையில் பனிப்போர் மூழ்கிறது. நன்றாகப் படிக்கும் மாணவனுடன் நட்பாகி, அவனுக்கு சாப்பாடெல்லாம் கொண்டு வந்து கொடுக்கும் சாந்தி, அவன் சொல்லித் தரும் சுலபமான வழிமுறைகளைப் பின்பற்றி கணக்கை கற்றுக் கொள்கிறாள். தன் சொல்லை மீறி அம்மா வகுப்பிற்கு வருவது பிடிக்காத மகள், அம்மாவை விட்டு மெல்ல மெல்ல விலக ஆரம்பிக்கிறாள். வீட்டுக்குள் படுக்கை தனித்தனியாக மாறுகிறது... பேச்சு வார்த்தையும் அற்றுப் போகிறது. இந்நிலையில் பரிட்சையில் அம்மா பாஸ் மார்க் வாங்க மகள் பெயிலாகிறாள். மகளின் நட்புக்கள் கூட சாந்தியின் அன்பிற்குள் வந்துவிட, தனித்து விடப்படும் அபி பொங்கி எழுகிறாள். அடுத்த பரிட்சையில் நான் அம்பது மார்க் வாங்கிக் காட்டுறேன் அப்புறம் நீ பள்ளிக்கு வரக்கூடாது என்று சொல்ல, சாந்தி ஏற்றுக் கொள்கிறாள்.


சொன்னபடி மகள் மார்க் வாங்கிக் காண்பிக்க ஆனந்தக் கண்ணீரோடு பூரித்துப் போகும் தாய், இனி பள்ளிக்கு வருவதில்லை என்று முடிவெடுக்கிறாள். அப்போது மகள் மீண்டும் தனது சுயரூபத்தைக் காட்ட ஆரம்பிக்கிறாள்... உன்னைய ஜெயிக்கத்தான் நான் பாஸ் மார்க் வாங்கினேன்... நான் பாஸ் பண்ணினாலும் உன்னால என்னைய படிக்க வைக்க முடியாது. ஒரு வேலைக்காரி மக வேலைக்காரியாத்தான் ஆகணும் என்று சொல்ல, உடைந்து போகிறாள்... கனவு தகர்ந்தது எனக் கண்ணீர் வடிக்கிறாள். 

இரவு வேலை முடிந்து வரும் அம்மாவை ஒருவர் வண்டியில் கொண்டு வந்து விட, அதைப் பார்க்கும் மகள் அவளைத் தப்பாக நினைக்கிறாள். தப்பான வழியில் சம்பாரித்து தன்னை வளர்ப்பதாக நினைக்கிறாள். அவளைப் பழி வாங்க, நாளெல்லாம் உழைத்துக் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்திருக்கும் பணத்தை எடுத்து நண்பர்களுடன் சேர்ந்து ஊதாரித்தனமாக செலவழித்து விட்டு வீட்டுக்கு வரும் மகளிடம் இப்ப செலவுக்கு என்னடி பண்ணுவேன் எனத் திட்டும் போது அந்தப் பணத்தை நீ எப்படி சம்பாதிச்சேன்னு தெரியும் என மகள் சொல்லவும் உடைந்து போகிறாள்.

சாந்தி பள்ளிக்கு வராதது மாணவர்களுக்கு கவலை அளிக்கிறது. சாந்திக்கு நண்பனான நல்லாப் படிக்கும் மாணவன் சாந்தி ஏன் வரவில்லை என அபியிடமே கேட்கிறான். அவளோ எனக்கிட்ட கேட்டா... எனக்கென்ன தெரியும் என மழுப்ப, சாந்தி உன்னோட அம்மான்னு எனக்குத் தெரியும் என்று சொல்லி அவளை மாலை ஒரு ஒர்க் ஷாப்புக்கு வரச் சொல்கிறான்... அங்கு செல்லும் அவள் அவன் வேலை செய்வதைப் பார்த்து அதிர்ச்சியாகிறாள்... அவன் மூலமாக அவள் அம்மா இவள் படிக்க வேண்டும் என கஷ்டப்படுவதை அறிவதுடன் அவள் ஒரு ஹோட்டலில் பாத்திரம் கழுவுவதையும் பார்க்கிறாள். மேலும் அந்தப் பையன் அவள் அம்மாவைக் கொண்டு வந்து விடுவது வேறு யாருமல்ல அது அதே கடையில் வேலை பார்க்கும் தன்னோட அண்ணன் என்றும் அவரும் தன்னைப் படிக்க வைக்கவே கஷ்டப்படுகிறார் என்றும் சொல்கிறான். அந்த நிகழ்வுக்குப் பின் தன் செயலை நினைத்து வருந்துகிறாள். 

மகள் படிக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் பள்ளிக்கு வருகிறாள். சாந்தி பள்ளிக்கு வராத சமயத்தில் உங்களது கனவு என்ன என ஆசிரியர் கேட்டதற்கு ஒவ்வொருவரும் ஒன்றைச் சொல்ல, ஆர்த்தி மட்டும் தனக்கு கனவே இல்லை என்று சொல்கிறாள். திரும்பி வந்த சாந்தியிடம் 'உன்னோட கனவு என்னன்னு சொல்லு என்று ஆசிரியர் சொல்ல, மகளைக் கலெக்டர் ஆக்க வேண்டும் என்ற கனவை எப்படிச் சொல்வது என்பதால் ஒன்றும் பேசாமல் எழுந்து நிற்கிறாள். சொல்லு இல்லாட்டி வெளியில போ என ஆசிரியர் கத்த, வெளியில் போக வாயிலை நோக்கி நடக்கும் போது அவங்களோட கனவு என்னன்னு நான் சொல்றேன் சார் என ஆரம்பிக்கிறாள் அபி.

சாந்தி கோபாலாக... ஒரு ஏழைத் தாயாக அமலா பால். அப்படியே வாழ்ந்திருக்கிறார்... சிந்து சமவெளி என்னும் படத்தில் அறிமுகமாகும் போது மாமனார் மீது ஆசைப்படும் மருமகளா நடித்தவரா இவர் என்று நினைக்க வைக்கும் அளவுக்கு மகளுக்காக... அவள் படித்து கலெக்டராக வேண்டும் என கனவுகளுடன் வாழும் அம்மாவாக... நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார். அதுவும் பள்ளிச் சீருடையில் கூனிக்குறுகி மகளின் வகுப்பிற்குள் செல்வதாகட்டும்... மகளுடன் படிப்பில் போட்டி போடுவதாகட்டும்... கலெக்டர் வீட்டுக்கு அலைவதாகட்டும்... ரேவதியிடம் புலம்புவதாகட்டும்... இரவு வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராத மகளுக்காக வீதியில் பதட்டமாய் காத்திருப்பதாகட்டும்... கலக்கியிருக்கிறார் அமலா பால். வாழ்த்துக்கள்...

மகளாக வரும் யுவஸ்ரீக்கு இது முதல் படம்... துடுக்குத்தனமான பேச்சுடன் பள்ளியில் அடிக்கும் லூட்டி... அம்மாவிடம் தர்க்கம் பாடுவது... பள்ளிக்கு வரும் அம்மாவுடன் மோதுவது... அம்மாவை விரட்ட கணக்கு பாடத்தை விரும்பிப் படிப்பது... தனது தோழமைகள் தன்னை விட்டு அம்மாவுடன் நட்பாகும் போது கொதிப்பது... அம்மா வேறொருவருடன் தவறாக பழகுகிறாள் என நினைத்து அவள் சேமித்து வைத்த பணத்தை எடுத்துப் போய் ஊதாரித்தனமாக செலவழிப்பது... அம்மாவின் நிலை அறிந்து வருந்துவது... அம்மாவின் கனவு என்ன என கண்ணீரோடு சொல்வது என அமலா பாலுக்கு நிகராக சிக்ஸர் அடித்திருக்கிறார்.

சமுத்திரக்கனி தலைமை ஆசிரியராக வருகிறார்... நம் பள்ளியில் இவரைப் போல் ஒரு சில ஆசிரியரைப் பார்த்திருக்கலாம் என்றாலும் ஒரு தலைமை ஆசிரியர், இப்படி கோமளித்தனமாக நடப்பதாக காட்டுவதை ஏற்கமுடியவில்லை. தேசிய விருது வாங்கிய நடிகனை ஒரு சாதாரண தலைமை ஆசிரியனாக காட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்... நடிப்பும் வெளுத்து வாங்கியிருப்பார். அவரின் செயற்கைத்தனமான உடல்மொழி மனதில் ஒட்டவில்லை.

ரேவதியை முதல் காட்சியில் பார்க்கும் போது 'பச்சைமலைப் பூவு இது உச்சி மலைத் தேனு...?' என கார்த்திக் பாட, அழகோவியமாய் இருக்கும் ரேவதியா இது என்று தோன்ற வைத்தது மேக்கப் இல்லாத முகம். வயதான கோலத்தில் ரேவதியை மனது ஏற்க்கவில்லை என்றாலும் இதுதானே நாளை நமக்கும் என்பதாலும் அதன் பின் மேக்கப் போட்ட ரேவதியாக வலம் வந்ததாலும் ஏற்றுக் கொள்ள முடிந்தது. தன் பங்கு நடிப்பை எப்பவும் போல் சிறப்பாக செய்திருந்தார். அவரின் கணவராக வருபவருக்கு அதிக நடிப்பில்லை.

கணக்கில் புலியாக வரும் சோடாபுட்டி கண்ணாடி போட்ட மாணவனின் நடிப்பும், யுவஸ்ரீயின் தோழமைகளாக வரும் இருவரின் நடிப்பும் அருமை. கலெக்டர், கலெக்டர் வீட்டு காவலர்கள், பக்கத்து வீட்டுப் பெண், மீன் கடை சூப்பர் வைசர் என எல்லாருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்துக்கு உயிரோட்டம் நல்ல கதையும் இசைஞானியின் பின்னணி இசையும்தான்... ராஜா கலக்கியிருக்காரு... இப்படி ஒரு அற்புதமான படத்தைக் கொடுத்த இயக்குநருக்கு வாழ்த்துக்கள்.


தனியார் பயிற்சிப் பள்ளிகள் கூட அதிக மார்க் வாங்குபவர்களைத்தான் மாணவர்களாக சேர்த்துக் கொள்வோம் என்று சொல்வது இன்றைய நமது கல்வி முறையை தெளிவாகக் காட்டுகிறது.  அமலாபால் மாணவியாக வேண்டும் என்றும் தான் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவியின் தாயார் என்று சொல்லும் போது முதல்வருக்கு அவரைத் தெரியவில்லை என்று சொல்வது அபத்தம். அதுவும் படிக்காத, பள்ளியில் சேட்டை செய்யும் பெண்ணின்... அப்பா இல்லாத பெண்ணின் அம்மாவை... தொடர்ந்து அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவியின் அம்மாவை தெரியாது என்று சொல்வது உறுத்தல்.

தனுஷின் ஒண்டர்பார் நிறுவனமும் சாமுராய் நிறுவனமும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். தனுஷைப் பொறுத்தவரை குறைந்த செலவில் விருது பெறும் படங்களாக தயாரித்து சம்பாதிக்கும் கலையை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்.



அம்மா கணக்கு கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களின் வரிசையில்...

-'பரிவை' சே.குமார்.

சனி, 6 ஆகஸ்ட், 2016

மனசின் பக்கம் : மனதோடு பேசும் மாயநதி..!

சிறுகதை எழுத ஆரம்பிக்கும் போது இப்படி முடிக்கலாம் என்ற எண்ணம் வந்து அமர்ந்து கொள்ள, கதையின் போக்கோடு பயணித்து முடித்து நிமிரும்போது அது வேறு எப்படியோ முடிந்திருக்கும்... அப்படி முடிந்த கதைகளில் பல மனசுக்கு ரொம்பப் பிடித்த கதைகளாகிவிடும். நேற்று ஒரு கதை எழுதலாம் என அமர்ந்தபோது நாயை பற்றி கதையாக ஆரம்பித்தேன். கொஞ்ச தூரம் கதை நகர, ஆரம்பித்த இடத்தில் கொஞ்சம் பிடிப்பில்லாமல் தெரிய, ஆரம்பத்தை அமெரிக்காவுக்கு கொண்டு போய்  அங்கிருந்து உறவுகளோடு பகட்டுக்காக வளர்க்கும் நாயில் நிறுத்தி நினைவை அப்படியே நம்ம சிவகங்கை மண்ணுக்கு கொண்டு வந்து நம்ம வீட்டு நாட்டுநாயோடு நகர்த்த, கதை உண்மையிலேயே 'செம'யாகிப் போச்சு... மனசுக்கும் பிடிச்சிப் போச்சு. என் நண்பன் சொல்வான்... உன் கதைகளில் வரலாறுகள் பேசணும்ன்னு நாமளே ஒழுங்காப் பேசமாட்டோம்... அப்புறம் எப்படி வரலாறுகள் பேசும்.. அதெல்லாம் சரி வாராது மண்வாசனைக்குள் வரலாறை எப்படி கையாளுவது என்று சொல்லிச் சிரிப்பேன்... இருப்பினும் அது போன்ற முயற்சியில் இறங்க வேண்டும் என்று ஆவல்... ஆவலாகவே இருக்கிறது... முயற்சி செய்ய வேண்டும். தொடர்கதை வேறு பாதியில் தொக்கி நிற்கிறது.  தொடரலாமா... வேண்டாமா... என்ற மனநிலையில் தொக்கி நிற்கிறது மனசு.

ண்பர் ஒருவர் என்ன மலையாளப் படத்துக்கு மட்டும் விமர்சனம் எழுதுறே... கபாலிக்கு எதிர்பார்த்தேன் அப்படின்னு சொன்னார். அட ஏம்ப்பா நாம மனசுல உள்ளதை எழுதி, அது பல பேருக்கு வருத்தத்தைக் கொடுக்கலாம். அது போக நமக்கும் ரஜினிக்கும்.... சரி விடு... கபாலிக்கு எழுதும் எண்ணம் இல்லை... மலையாளப் படம்ன்னு வச்சிக்கவே... நமக்கு கதை பிடிச்சிப் போயி அதனால எழுதுறோம்... இன்னும் மூணு படத்தோட விமர்சனம் ரெடியா இருக்கு... நாம எழுதுறதை வாசிச்சிட்டு சண்டைக்கு வர மலையாளிங்க யாரும் இதை படிக்கப் போறதில்லை.... சோ... நாம பாதுகாப்பா இருக்கோம்ல்ல என்று சிரித்ததும் கபாலி பற்றி பலவிதமான கருத்துக்கள்... உன்னோட மனசுல என்ன தோணுது சொல்லுன்னு சொன்னார். எதுக்குப்பா வம்பு... சும்மாவே முகநூல்ல ரஜினி ரசிகர்களான நம் நண்பர்கள் பலர், கபாலி பற்றி போட்டதைப் பார்த்துட்டு இப்ப நம்ம பக்கமே காணோம்... விழுந்த ஒண்ணு ரெண்டு லைக்கும் போயே போச்சு... இங்கயும் எதாச்சும் சொல்லி... வர்ற ஒண்ணு ரெண்டு கமெண்ட்ஸூம் போயிந்தே ஆயிடுச்சின்னா... அப்புறம் நான் வெறுங்கடையிலதான் டீ ஆத்தணும்... இப்பவே அப்படித்தான் ஆத்திக்கிட்டு இருங்கேங்கிறது வேற விஷயம் என்றாலும் நம்மள படிக்கிற பத்து பேரும் பொயிட்டா... ஆளை விடு சாமியின்னு சொல்லி ஜகா வாங்கிட்டேன்... நாங்க யாரு.. செட்டிநாட்டுக்காரனுக்கிட்டயே போட்டு வாங்குறாராம்... எனக்கு இந்தப் பாட்டு ரொம்ப பிடிச்சிருக்கு...


ருப்படி இல்லாத ஒரு பட்ஜெட்... அம்மா புகழ் பாடுவதை மட்டுமே தொழிலாகக் கொண்ட கேவலமான ஒரு நிதியமைச்சர்... சொன்னதை எல்லாம் இந்த இரண்டு மாதத்தில் நிறைவேற்றி வருகிறோம் என காதில் பூச்சுற்றல்... உருப்படியான எதுவுமே செய்யாமல் நகரும் உதவாக்கரை அரசின் மோசமான பட்ஜெட்... கண்டுகொள்ளாத மீடியாக்களும் மக்களும்...இருபத்தி ஒன்பது வீரர்களுடன் பயணித்த இராணுவ விமானம் என்னாச்சு... வீரர்கள் நிலை என்ன... முக்கியத்துவம் கொடுக்காத மீடியாக்களும் மக்களும்... அட அம்புட்டு ஏன் கிரிக்கெட் கிரிக்கெட்டுன்னு பைத்தியமாய் திரிந்தாலும் அது குறித்தும் எதுவும் பேசாத மீடியாக்களும் மக்களும்.. இவை அனைத்துக்கும் ஒரே காரணம் கபாலி. ரஜினி என்றாலே ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்யுது இல்லையா..? ஆனாலும் முக்கிய நிகழ்வுகளை விட...கிரிக்கெட் முக்கிய நிகழ்வான்னு கேட்கலாம்...  அதுவும் இப்ப தேசிய விளையாட்டு போலத்தானே... அப்ப முக்கியம்தானே... சரி அதை விடுங்க... மற்றது முக்கியமில்லையா...? நம்ம தலையில மிளகாய் அரைக்கும் அரசின் பட்ஜெட்... மக்களைக் காக்கும் பணியில் இருக்கும் 29 ராணுவ வீரர்களின் உயிர் இதெல்லாம் முக்கியமில்லையா... நாம் என்று நடிகனை நடிகனாய்... சக மனிதனாய்ப் பார்க்கிறோமே அன்றுதான் நாடு உருப்படும். அப்படி நடந்தால்... மகிழ்ச்சி. (தமிழக பட்ஜெட் மற்றும் கபாலி ஜுரம் இருந்த நாளில் கிறுக்கியது இது)


ட்ரா மச்சான் விசிலு... நடிகனுக்கும் ரசிகனுக்குமான பாசமும் மோதலும்தான் கதை... பவர் ஸ்டார் இதில் நடிகர் பவர்ஸ்டாராக... அவரின் ரசிகர்களாக சிவாவும் இன்னும் மூவரும்... பவரின் மேனேஜராக சிங்கமுத்து... படம் முழுக்க நகைச்சுவையில் சிக்ஸர் அடிக்கிறார்கள்... தொய்வில்லாமல் நகரும் கதையில் தலைவன்னு கெடக்காதீங்கடா... உங்க வாழ்க்கையைப் பாருங்கடான்னு சொல்லியிருக்காங்க... ஒவ்வொரு காட்சியிலும் நடிகரை மரண கலாய்... பெரும்பாலும் உச்ச நட்சத்திரத்தைத்தான் குறி வைத்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. நாயகி பரவாயில்லை... பாட்டெல்லாம் கேக்குற மாதிரி இருக்குங்க... பவருக்கு பாலாபிஷேகம் எல்லாம் பண்றாங்க... அவரோட நகைச்சுவையை ரசிக்க முடிந்தாலும் குளோசப் காட்சிகளில் எல்லாம் ஸ்ஸ்ஸ்... அப்பா... சரி விடுங்க... நடிக்கத் தெரியாட்டியும் மனுசன் வாழ்றானா இல்லையா... அது போதும்ய்யா... ஆயிரங்கள் கொடுத்து ஆப்பை வாங்கி அடிச்சிக்கிட்டு வர்றதைவிட நிர்ணயித்த விலைக்கே டிக்கெட் வாங்கி சிரிச்சிட்டு வரலாமே... எனக்கு சிவா படம் எப்பவுமே பிடிக்காது... பவருக்காக படம் பார்க்க ஆரம்பித்து நல்லாயிருக்கேன்னு முழுசும் பாக்க முடிந்தது. சிங்கமுத்து பல இடங்களில் கடுப்படிக்கிறார்... எதற்காக விஐயகாந்த் மாதிரி ஒரு இடத்தில் பேசுகிறார் என்பது தெரியவில்லை... காசுக்காக மாறடிக்கும் இவர்கள் திரையில் சக நடிகனை... மற்றவர்களுக்கு உதவியாய் இருப்பவனை கிண்டல் செய்ய என்ன இருக்கிறது..? சினிமா வேறு அரசியல் வேறு என்பதை சிங்கமுத்து போன்றோர் புரிந்து கொண்டால் நல்லது. கதை இருக்கோ இல்லையோ கருத்துச் சொல்லாமால் சும்மா ஜாலியா ஒரு படம் பயணித்தால் போதுமே... அதை இந்தப் படம் கொடுத்ததில்... மகிழ்ச்சி.


ம்மாவுக்கு சசியாலதான் பிரச்சினை என்பது அப்பட்டமாகத் தெரிந்தும் விடாது கருப்புங்கிறது மாதிரி அதையே பிடிச்சிருக்கு... அதான் கடவுள் சசிகலா புஷ்பா மூலமா மீண்டும் கோடிட்டு காட்டியிருக்கிறான்... புரிஞ்சிக்கிட்டா சரி...  ஆமா.. வேட்பாளரை விஜயகாந்த் அடித்தார்ன்னு கட்டம் கட்டி காட்டுன நடுநிலை தொலைக்காட்சிங்க, பத்திரிக்கைங்க எல்லாம்ஜெ இப்ப அம்மா அடிச்சதை காட்டலையே... எங்கப்பா உங்க நடுநிலை...?  சிவபுஷ்பா... அட பேரு மாறிப்போச்சு... சசிகலா புஷ்பா தண்ணிய போட்டுட்டு என்ன பேச்சு பேசுது... இதெல்லாம் இருக்க வீடு வெளங்கிடும்... இவளுகளையும் நாம தலையில தூக்கி வச்சி ஆடுறோம்... எல்லாம் காலக் கொடுவினை அன்றி வேறென்ன... 

னித மிருகங்களால் சித்திரவதைக்கு உட்பட்டு இறக்கும் பெண்கள் எல்லாரும் மனிதர்கள்தான்... இந்த ஈனச் செயலைச் செய்பவர்கள் எவராக இருந்தாலும் சரியான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இறந்தவர் என்ன மதம். என்ன சாதி என்று பார்த்து அவரின் பெயரோடு சாதி வந்து ஒட்டிக் கொள்வது வேதனையளிக்கிறது. எல்லாரும் சகோதர சகோதரிகளாக வாழும் போது சாதியைப் போட்டு சண்டை மூட்டும் செயலில் முகநூல் முன்னுக்கு நிற்கிறது. சமீப கால நிகழ்வுகள் முகநூலை விட்டு வெளியில் வருவது நலம் எனத் தோன்ற வைக்கிறது. சினிமா, கொலை என எல்லாவற்றிலும் சாதிச் சாயம் பூசாதீர்கள்... வேண்டாம்... அது நம் நேசத்தைக் கொன்று வாழ்வை அழித்துவிடும்.

கீழே இருப்பது முகநூலில் கிறுக்கியது... இதுதான் நிதர்சனம்... வாராவாரம் நாம் ஒவ்வொரு பிரச்சினையின் பின்னேயும் தீவிரமாக பயணிக்கிறோம்... ஆனால் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காணாமலேயே என்பதுதான் வேதனை.
ஸ்வாதியில் புலம்பி
கபாலியில் கனன்று
சசிகலா  பின்னே
சொக்கி நிற்கிறது
பத்திரிக்கையும்
இணையமும்..!

ப்பனுக்கும் மகனுக்கும் ஒரே நேரத்தில் வலது குதிகால் பகுதியில் அடிபட்டிருக்கிறது. மகன் சைக்கிளில் அமர்ந்து செல்லும் போது காலைக் கொடுத்து வெட்டி எடுத்துவிட கட்டுப் போட்டிருக்கிறான்... அப்பனுக்கு நடந்து வரும் போது கால் புரட்டிக் கொள்ள... கட்டுப் போட்டிருக்கிறது. ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்தில்... ஒரே காலில்... அதுவும் குதிகால் பகுதி... ஆஹா... என்ன ஒரு ஒற்றுமை...

#பாசம்....டா...! 
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

சினிமா : டார்விண்டே பரிணாமம் (மலையாளம்)

ன்னு நிண்டே மொய்தீன், அனார்கலி, அமர் அக்பர் அந்தோணி, பாவட என தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்த ப்ரிதிவிராஜ் நடித்த படம் இது. மேலே சொன்ன படங்கள் அளவுக்கு பேசப்படவில்லை என்றாலும் இதுவும் வெற்றிப்படம்தான்.


அம்மாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் கர்ப்பிணியான மனைவி அமலா (சாந்தினி ஸ்ரீதரன்) உடன்  வீட்டை விட்டு வெளியேறி தன் நண்பன் ஊரில் அடைக்கலமாகும் நாயகன் அணில் ஆன்டோவுக்கு (ப்ரிதிவிராஜ்) எல்லாமே நண்பன் கொடுத்து உதவ, DTH வைப்பது மற்றும் பழுது பார்ப்பது தொடர்பான பணி செய்கிறான். கர்ப்பிணியான மனைவியின் கழுத்தில் கிடக்கும் செயினை ரவுடி அறுக்கும் போது ஏற்பட்ட தகராறில் மனைவி கீழே விழுந்து கர்ப்பம் கலைந்து விடுகிறது. அந்த சோகத்தின் பிடியில் இருப்பவன் அந்த ரவுடியை சந்திக்க நேர, அவனைப் போட்டுப் புரட்டி எடுத்து விடுகிறான். 

இந்த நிகழ்வால் அந்த பகுதியின் மிகப்பெரிய ரவுடியான அவனின் அண்ணன்  டார்வின் (செம்பொன் வினோத் ஜோஸ்) மற்றும் அவனுக்கு சலாம் அடிக்கும் போலீசாரால் தொந்தரவுக்கு உள்ளாகிறான். வீட்டிலிருந்த பொருட்கள் எல்லாம் களவு போக, கையிலிருந்த பைக்கும் களவு போகிறது. இதற்கெல்லாம் காரணம் அந்த பெரிய ரவுடிதான் என்பதை அறிந்து அவனுடன் மோத தயாராகிறான். ஐயப்பன் என்பவரின் உதவியுடன் அவனின் இரண்டாவது தம்பியைக் கடத்த, அது தோல்வியில் முடிந்தாலும் தம்பிக்காரனின் செல்போனில் இருக்கும் ஒரு போட்டோவை வைத்து வில்லன் சர்ச்சில் இருக்கும் தங்கப் புண்ணியாலன் (இயேசு) சிலையைத் திருடி, அதற்குப் பதிலாக வேறு சிலையை வைத்து விட்டு அதை ஒரு வெளிநாட்டுக்காரனுக்கு கோடிக்கணக்கில் விற்க இருப்பதை அறிகிறான். அதை வைத்தே  தன்னோட வீட்டிலிருந்து எடுத்த பொருட்கள் அனைத்தையும் அவன் மூலமாக திருப்பப் பெற போடும் திட்டமே படத்தின் கதை. ஒரு பொருள் இல்லாமல் எல்லாப் பொருளையும் பெற்றானா...? புண்ணியாலன் சிலையை காப்பாற்றினானா..? பொருட்களை கொடுத்த வில்லன் இவனைப் பழி வாங்கினானா...? அல்லது இவன் வில்லனைப் பழி வாங்கினானா என்பதே மீதிக்கதை...


இதில் வில்லனை நாயகனாகவும் நாயகனை வில்லனாகவும் சித்தரித்து இருக்கிறார்கள். படம் முடியும் போது நமக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.  ப்ரிதிவிராஜ் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரின் மனைவியாக வரும் சாந்தினியும் சிறப்பாக செய்திருக்கிறார். வில்லன் செம்பொன்னும் அவரின் அடியாட்களும், ஐயப்பனும் அவரது குரூப்பும் சினிமா நாயகனாகத் துடிக்கும் வில்லனின் இரண்டாவது தம்பியும் கலக்கியிருக்காங்க.

பொருட்களை தேடி எடுக்கும் போது முதலிரவில் இருப்பவனிடம் இருந்து கட்டிலை வாங்கப் போவது...பிரிட்ஜை கடலில் தேடுவது போன்ற காட்சிகள் கலக்கல் காமெடி. 

கொஞ்சம் ஜாலியான வித்தியாசமான படம். ப்ரிதிவிராஜின் மற்ற படங்களுக்கு இணையானது இல்லைதான் என்றாலும் ஜாலியாக பார்க்கலாம். அதுவும் வில்லனுடன் பொருட்களைத் தேடிச் செல்லும் காட்சியில் ஆரம்பிக்கும் சிரிப்பு கடைசி வரை தொடர்கிறது.


-'பரிவை' சே.குமார்.

புதன், 3 ஆகஸ்ட், 2016

கவிதை : எப்ப மச்சான் வருவீக..?

டுத்த தையிக்குள்ள
பரிசம் போடுவேன்னு
அய்யானாரு வாசலிலே
அடிச்சிச் சொன்னியளே...
அதை மறந்து போனியளோ..?

வெத்தலக் கொடியோரம்
வெசனப்பட்டு நிக்கயில
மாருல சாச்சிக்கிட்டு
தைரியம் சொன்னியளே...
அதை மறந்து போனியளோ..?


உங்க நினைவோட
உழுத வயலுக்குள்ள
அழுது நிக்கயில
ஆதரவா அணச்சீங்களே...
அதை மறந்து போனியளோ..?


திருவிழா ராத்திரி
தெருவுல நான் போக
பின்னால நீங்க வந்து
கைபிடித்து நடந்தீங்களே...
அதை மறந்து போனியளோ..?

கொட்டச் செடியோரம்
கொலுசு மாட்டிவிட்டு...
காலில் கோலமிட்டு
குறுகுறுக்க வச்சியளே...
அதை மறந்து போனியளோ..?

சொல்லித் தையி மூணாச்சு...
சொந்தமெல்லாம் கேட்டாச்சு...
வரும் தையில் வருவீங்கன்னு
வசதியாச் சொல்லி வச்சேன்...

உங்கழுத்துல எந்தாலின்னு
உறுதியாச் சொன்னியளே..!
எங்கழுத்து ஏங்கி நிக்கி
எப்ப மச்சான் வருவீக...?
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

மனசின் பக்கம் : கொஞ்சமே கொஞ்சமாய்...

நான் எழுதிய சிறுகதைகள் சிலவற்றில் இருந்து சில பகுதிகள்...

'உயிரே ஒரு கடிதம்' - என்னும் கதையில்....

காதலிக்கும் போது இருக்கும் நேசம், புரிந்து கொள்ளும் தன்மை என எல்லாம் தம்பதிகளானதும் சற்றே மாறித்தான் போகும் என்பதை காதல் திருமணம் செய்த எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றாலும் அந்தப் புள்ளி... பெரிய கோலமாக மாறி... 'அப்பவே சொன்னேன் வேற சாதிக்காரன் வேண்டான்னு... காதல் கத்திரிக்காய்ன்னு சொல்லி நீதானே கட்டிக்கிட்டே... இன்னைக்கு தப்புப்பண்ணிட்டேன்னு புலம்புறே...' என்ற உன் அம்மாவின் வாக்கு வேதவாக்காகி இது என் உயிரை எடுத்துச் சென்றுவிட்டாய். விவாகரத்துப் பேப்பர் அனுப்புகிறோம் என்கிறார் உங்கப்பா... விவாகரத்து... அது யாருக்கு வேணும்...? உயிர் போன பின்னால் இனி ரத்து செய்ய என்ன இருக்கிறது..?


நான் மாறிவிட்டேன் என்கிறாய் நீ..? எப்போதும் சுமந்த காதலைத்தான் இப்போதும் சுமக்கிறேன்... முதல் நாள் எனக்குள் பறந்த பட்டாம்பூச்சி இப்போதும் பறந்து கொண்டுதான் இருக்கிறது. என்ன ஒன்று... அன்று இளமைத் துள்ளலுடன் வாழ்க்கை பற்றிய கவலை இன்றி பறந்தது... இன்று கொஞ்சம் முதிர்ச்சி அடைந்து நம்மளை நம்பிய வந்தவளை கண் கலங்க விடக்கூடாது... என் தேவதையை ராணி மாதிரி வச்சிக்கணும்ன்னு... வாழ்வின் அர்த்தம் கொடுத்தவளுக்காக... உனக்காக... ஓடிக் கொண்டிருக்கிறேன்... என் தேவதைக்குள் பூக்க இருக்கும் தேவதைகளுக்காக தேனைச் சேமிப்பதற்காக பணம் என்னும் மகரந்தத்தின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறேன். ஓட்டத்தின் வேகத்தில் வார்த்தை தென்றலாவதும் சூறாவளியாவதும் தவறில்லையே... இதயத்துக்குள் உன் மீதான பிரியம் இம்மியளவும் குறையவில்லை... இமயம் அளவு கூடிக்கொண்டேதான் போகிறது, என்னைப் புரிந்தவளே... என் கண்ணம்மா.. இதுதான் நான்... நான் நானாக இருக்கிறேன்... நீ நீயாக இருப்பாய் என்ற நம்பிக்கையில் இன்னும்... கடந்து கொண்டிருக்கிறேன் நீயில்லா மணித்துளிகளை...

***

'உறவு சொல்லும் கதை' என்னும் சிறுகதையில் சில பகுதிகள்...

"ட ஏம்மாமா நீங்க வேற... நீங்க ரெண்டு பேரும் என்ன உறவுன்னு கேட்டதுக்கு மாமன் மச்சானா இருக்கும்ன்னு சொன்னாப்புல..." என்றதும் இருவரும் மீண்டும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

"மாமன் மச்சானா... இவரு என்னோட தம்பி... கூடப்பிறந்த தம்பி..." என தனுஷ்கோடியின் தோளில் கைபோட்டு அணைத்துச் சொன்னார் தணிகாசலம்.

இப்படி ஒரு அண்ணன் தம்பியா என ரவிக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவனது ஆச்சர்யத்தைப் பார்த்த சேகர் மெல்ல "ரவி... தணிகாசலம் இருக்காரே அவருக்குத்தான் எங்க அத்தையைக் கட்டியிருக்கு... இவங்க நாலு பேரு அண்ணன் தம்பி... இன்னும் ரெண்டு பேரு வரலை... வந்திருந்தா இந்த இடம் அமர்க்களம்தான்... அண்ணன் தம்பி மாதிரி இருக்கமாட்டாங்க... கேலி கிண்டல்ன்னு மாமன் மச்சான் மாதிரித்தான்.... இவங்களை கேலி பண்ண மாமன் மச்சான் தேவையில்லை இவங்களே போதும்... வித்தியாசமானவர்கள்... ரெண்டு பேருமே பேரன் பேத்தி எடுத்துட்டாங்க... பேசி சிரிக்கிறதைப் பாத்தியா..?" என்றார்.

இவர்கள் பேசும் போது அவர்கள் இருவரும் ஏதோ பேசி ஒருவர் தொடையில் ஒருவர் அடித்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். ரவி பின்பக்கமாகத் திரும்பிப் பார்த்தான் தேவதை இருந்த இடத்தில் நகைக்கடை ஒன்று அமர்ந்திருந்தது.

***
'தேவி இறந்துவிட்டாள்' என்னும் சிறுகதையில் சில பகுதிகள்...

பெட்டில் கிடந்த அவளைப் பார்த்தபோது எனக்கு உயிரே நின்றுவிட்டது. வலது பக்கம் முழுவதும் வீங்கியிருந்தது. என்னைப் பார்த்ததும் உடைந்து அழுதாள். 'என்ன வியாதியின்னே தெரியலை புவி... உடம்பு ஒரு பக்கம் மட்டும் வீங்குது... டாக்டர்கள் என்னென்னமோ சொல்றாங்க... பயமில்லைன்னு சொல்றாங்க... ஒரு வாரமாச்சு... இப்ப கொஞ்சம் குறைஞ்சிருக்கு... சில நேரத்துல வலி பொறுக்க முடியாம கத்துற... ரெண்டு நாளாவே புவியைப் பாக்கணும் வரச் சொல்லுங்கன்னு அடிக்கடி சொல்ல ஆரம்பிச்சா... அதான் தம்பி உனக்கு போன் பண்ணுச்சு... நாங்கூட வேணான்னுதான் சொன்னேன்... நீ இம்புட்டுத்தூரம் பிள்ளைகளை விட்டுட்டு வரணுமில்லையா என்றார் தேவியின் அம்மா. 'அட என்னம்மா நீங்க...? இதுக்கெல்லாம் வராம இருக்குறதா..? அண்ணன் போன் பண்ணினதும் உடனே வரணுமின்னு நினைச்சேன்... முடியலை... இன்னைக்கு பொறுப்பை அவருக்கிட்ட விட்டுட்டு கிளம்பி வந்துட்டேன்' என்றேன்.

அதன் பின்னான நாட்கள் தேவிக்கு தீராத வலியைக் கொடுத்த நாட்கள்... சில நாள் எப்பவும் போல பட்டாம்பூச்சியாய் வலம் வருவாள். திடீரென மறுபடியும் வீங்கிக் கொள்ளும். மாதத்தில் பாதிநாள் ஹாஸ்பிடலில்தான்... மாதங்கள் ஓட அவளின் உடம்பு ரொம்ப மோசமானது... மருந்து மாத்திரை கொடுத்த பலனால் அவளின் முடிகள் கொட்ட ஆரம்பிக்க, அழகிய பட்டாம்பூச்சி நிறமிழக்க ஆரம்பித்தது. எவ்வளவோ செலவு செய்தும்... என்ன வியாதி.. எதனால் உடம்பு வீங்குகிறது... எப்படி இதை சரி பண்ணுவது என்று தெரியாமல் மருத்துவர்கள் விழித்தார்கள்.

இரண்டு வருடத்துக்குள் படுத்த படுக்கை ஆனாள்.

 ***
'முடிவுகள் திருத்தப்படலாம்' என்னும் சிறுகதையில் இருந்து...

"ப்ப சாட்டர்டே, சண்டே யமுனா எங்கூடத்தான் என்னோட வீட்ல இருக்கா மாமா... அவள நான் லவ் பண்றேன்... உங்களுக்கெல்லாம் தெரியாது... படிக்கிற காலத்துல இருந்து அவ மேல எனக்கு லவ்... அத்த அப்பாக்கிட்ட எனக்கு கட்டணும்ன்னு கேட்டப்போ, அப்ப ஒத்துகலை... என்னால அவங்ககிட்ட சண்டை போட்டு யமுனா கட்டிக்க முடியல... ஏன்னா எங்கம்மா மருந்தக் குடிச்சிருவேன்னு சொல்லி மிரட்டினாங்க... எனக்குப் பின்னால ரெண்டு தங்கச்சிங்க இருந்தாங்க... அப்படியிருந்தும் ஓடிப்போயிடலாம்ன்னு அவகிட்ட சொன்னேன்... ஆனா அதுக்கு அம்மா செத்துருவான்னு அவ ஒத்துக்கலை... நல்ல இடம்ன்னு பாத்துத்தான் அத்த கட்டுச்சு... ஆனா அவங்க... அதான் உங்களுக்கே தெரியுமே... பஞ்சாயத்துக்கு எல்லாம் போனியதானே... உங்களுக்குத் தெரியுமா... நாங்க லவ் பண்ணுனது ஊருக்கு மட்டுமில்ல எங்க வீட்டுக்கும் தெரியாது... தெரியாத வரைக்கும் நல்லதுதான்னு விட்டுட்டு  அவங்க அவங்க வாழ்க்கைப் பாதையில பயணிச்சோம். எங்கிட்ட கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் போன்ல பேசுவா... நானும் பேசுவேன்... சத்தியமா அதுல காதல் இல்ல மாமா... அத்த பொண்ணு... மாமா மகன்கிற உறவு மட்டுமே இருந்துச்சு... ஆனா விதி வலியது மாமா... " பேச்சை நிறுத்தி ஜிகர்தண்டாவை கொஞ்சம் குடித்து குளிர்ச்சியாகிக் கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தான்.
***
என்னடா இவன் நாலு கதையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக போட்டிருக்கான்னு பாக்குறீங்கதானே... கஷ்டப்பட்டு எழுதி, அதை இங்கு பகிர்ந்து மற்றவர் தனது கதை போல் வெளியிடும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது... பகிர்ந்து கொண்டாலும் பரவாயில்லை... அவர்கள் பெயரில் பத்திரிக்கையில் வருவதும்... இன்னும் கொஞ்ச நாள் போனா பலரது கதைகளைத் திருடி எழுதாத எழுத்தாளர் ஒருவர் புத்தகம் போட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை... எனவே இனி மனசு தளத்தில் சிறுகதைகள் பதியப்படமாட்டாது... அது புத்தகம் ஆகுதோ ஆகலையோ... இங்கும் பதியும் எண்ணமில்லை... போட்டிகளுக்கான கதைகள், ஒருவேளை பத்திரிக்கையில் வந்தால்... மின்னிதழ்கள், இணைய இதழ்களில் வெளியானால் மட்டுமே இங்கு பதிவு செய்யப்படும்...

மற்றபடி மனசு தொடர்ந்து கட்டுரைகள். கவிதை, சினிமா விமர்சனம் என்று பயணிக்கும்.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

சினிமா : வேலையின்னு வந்துட்டா...

வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராஜா மந்திரியெல்லாம் எல்லாரும் பார்த்திருப்பீங்க... விரிவா எழுதுறதுக்கு ஒண்ணுமில்லை... ராஜா மந்திரி அண்ணன் தம்பி கதை அண்ணனின் காதல் பிரச்சினையாக, தம்பியின் காதலியை அண்ணனுக்கு நிச்சயம் பண்ணி விடுகிறார்கள்... அண்ணனின் காதலி மீண்டும் வந்தாளா? தம்பியின் காதல் என்னாச்சு..? என்பதை நகைச்சுவையாய் சொல்கிறேன் என.... இழுத்து முடிக்கிறார்கள். சும்மா ஜாலிக்காக பார்க்கலாம்... மகன்களின் பாசத்தைப் பார்த்து கண்ணீர் விடும் தந்தை நம் கண்களில் எரிச்சலை புகுத்துகிறார். மெட்ராஸ் படத்தில் அறிவழகனாக வாழ்ந்த கலையரசனா இது என்று கேக்க வைத்திவிடுகிறார் நாயகன்.... ஜெய் நடித்திருக்கலாம் எனத் தோன்ற வைத்துவிட்டார். அண்ணனாக வரும் கருணாகரன் கலக்கியிருக்கிறார். மொத்தத்தில் பொழுது போகலை... கொஞ்சம் நகைச்சுவை இருந்தாப் போதும் என்று நினைப்பவர்களுக்கான படம்.


வே.வ.வெ... உவ்வே... சூரியும் ரோபோவும் காப்பாற்றியிருக்கிறார்கள். புஷ்பா புருஷன் சூரியை... 'அன்னைக்கு காலையில பொழுது கொக்கரக்கோன்னு விடிஞ்சிச்சா...' என்று அடித்து ஆடும் காட்சியில் ரோபோ தூக்கிச் சாப்பிட்டு விடுகிறார். மற்றபடி விஷ்ணு விஷால் போலீஸ் ஸ்டேசனில் காதலியை மிரட்டுவது, 500 கோடி விவகாரம் எல்லாமே ஆவ்... இதுக்கு மேல சொல்ல ஒண்ணுமில்லை... லாஜிக் பார்க்காமல், கதை என்னன்னு யோசிக்காமல் பார்க்கிற படங்களின் வரிசையில் இந்த உவ்வவ்வே.. சேச்சே... வே.வ.வெ.

றைவி... எனக்குப் பிடித்த நடிக்கத் தெரிந்த நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியும் ரொம்பப் பிடித்த நடிப்பு ராட்சஸி அஞ்சலியும் நடித்த படம். அவர்களுக்காகவே பார்த்த படம். வயசு காலத்தில் மனைவியை மதிக்காத ராதாரவி, அவர் கோமாவில் விழுந்த பின் உருகி உருகி பார்த்துக் கொள்கிறார். அவரின் மூத்த மகன் எஸ்.ஜே.சூர்யா, இயக்கிய ஒருபடம் வெளிவருவதில் பிரச்சினை எனவே குடிக்கு அடிமையாகி பிரச்சினைகளை இழுத்துக் கொள்கிறார். அன்பான மனைவி, அழகான குழந்தை இருந்தும் அவர்களை நேசிக்கும் மனிதராக இருந்தாலும் குடியின் பிடியில் கிடக்கிறார். இரண்டாவது மகன் பாபி சிம்ஹா கல்லூரியில் படித்துக் கொண்டு சிலை திருட்டில் ஈடுபட்டு வருகிறார். இவர்களின் குடும்பத்தில் ஒருவனாக, பாபி சிம்ஹாவின் சிலை திருட்டில் உதவுபவனாக விஜய் சேதுபதி என பயணிக்கிறது கதை.

இதில் பெண்களிடம் தொடர்பு வைத்துக் கொள்ளும் விஜய் சேதுபதி அப்படியான பெண் ஒருத்தியின் அன்பினால் அவளை திருமணம் செய்து கொள்ள நினைக்க அவள் மறுத்து விடுகிறாள். அதன் பின்னர் சித்தப்பா பேசி முடிக்கும் பெண்ணான அஞ்சலியை திருமணம் செய்து கொள்கிறார். அஞ்சலி மீது பாபி சிம்ஹாவுக்கு ஆசை... அதற்காக விஜய் சேதுபதியை ஒரு சிலை திருட்டில் வைத்து போலீசில் மாட்டிவிடுகிறார். பாபி சிம்ஹாவிடம் இருந்து தப்பிக்க எங்கு செல்கிறேன் என்று சொல்லாமலே அஞ்சலி குழந்தையுடன் கிளம்பி விடுகிறார். குடியில் இருந்து மீண்ட சூர்யா, விவாகரத்துப்பெற்ற தன் மனைவிக்கு நடக்க இருக்கும் இரண்டாம் திருமணத்தைத் தடுத்து மீண்டும் அவளுடன் வாழ நினைக்கிறார் இப்படி பயணிக்கும் கதையின் முடிவு வித்தியாசமாய்...


ஒரு குழந்தையின் தாயாக அஞ்சலி, தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். விஜய் சேதுபதி தனி ஓருவனாய் ஜொலிப்பதை விடுத்து இரண்டு மூன்று நாயகர்கள் கதையில் வருவதை தவிர்க்கலாம் என்றாலும் அவருக்கான இடத்தை எப்பவும் போல் நடிப்பால் நிறைத்திருக்கிறார். பாபி சிம்ஹா பரவாயில்லை. 'இருக்கு... இல்லை... இருக்க மாதிரி இருக்கு... இல்லாத மாதிரியும் இருக்கு...' என்றெல்லாம் பேசி நம்மைக் கொலை பண்ணின சூர்யாதான் இதில் செண்டம் அடித்திருக்கிறார். குடிகாரனாக படம் முழுவது பட்டையை கிளப்பியிருக்கிறார். இறுதிக் காட்சியில் மனைவியிடம் குடிகாரன் போல் கேவலமாகப் பேசும் போது நெஞ்சில் நிற்கிறார்.

மொத்தத்தில் இறைவி... மெதுவாக நகர்ந்தாலும் நல்லபடம்தான்... பார்க்கலாம்.

னிக்காட்டு ராஜா... ரஜினி, ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா நடித்த படம்... விவசாயிகளை ஏமாற்றி பிழைக்கும் பணக்கார வர்க்கத்தை எதிர்க்கும் இளைஞனின் கதை. விஜயகுமாரைக் கொன்ற வழக்கில் சிறை செல்லும் ரஜினியைக் காப்பாற்ற அவரின் காதலி ஸ்ரீதேவி, ஜெய்சங்கரின் மனைவி ஆகிறார். ஜெய்சங்கருக்கும் ரஜினிக்கும் பிரச்சினை... ஜெய்சங்கரின் தம்பி ராஜேஸ்க்கு ரஜினியின் தங்கை மீது காதல்... பொட்டுக்கட்டி தேவதாசியாக இருப்பவரின் தங்கை ஸ்ரீப்ரியாவையும் அந்தத் தொழிலில் இழுக்க நினைக்கும் மனிதர்கள் மத்தியில் அவளைக் காப்பாற்றி மனைவி ஆக்கிக் கொள்கிறார் ரஜினி. விவசாயிகள் பிரச்சினை தீர்ந்ததா..?ஸ்ரீதேவியின் நிலை என்ன..? ரஜினியின் தங்கை ஜெய்சங்கர் வீட்டில் வாழ்ந்தாரா..? வில்லன்களின் சூழ்ச்சியை முறியடித்தாரா...? என்பதை விசி.குகநாதன் மிக அருமையாக படமாக்கியிருக்கிறார். ராஜாவின் இசையில் அருமையான பாடல்கள். ரஜினியின் பழைய படங்களை பார்க்கலாம் போல என தோன்ற வைத்த படம்... நல்லாத்தான்யா நடிச்சிக்கிட்டு இருந்திருக்காரு... இந்த எஸ்.பி.முத்துராமன் வந்துதான் குண்டை உடம்பில் கட்டி, காரை காலில் கட்டி நிறுத்த வைத்து... சின்னப்பிள்ளைத்தனமாக என்னென்னவோ பண்ணி நடிப்பைக் காலி பண்ணி கெடுத்து வச்சிப்புட்டாரு.


டுத்து பார்த்தது.. ரொம்ப நாளாக பார்க்க நினைத்த புதுநெல்லு புதுநாத்து... படத்தோட பாட்டு எல்லாமே எனக்கு ரொம்ப பிடித்த பாடல்கள்... விரும்பிக் கேட்பவை. படம் ஆரம்பிச்சி... கருத்த மச்சான் பாட்டு வரும் போது போதும் மச்சான்னு முடிச்சிக்கிட்டேன்... பாரதிராஜாவின் கிராமிய மணம் கமழும் படமென்றாலும் அறிமுக சுகன்யாவின் பேச்சும்... அறிமுக நாயகன் ராகுலின் நடிப்பும் அவரின் அம்மா 'மவனே... இந்த வீடு நானும் உங்கப்பாவும் வாழ்ந்த வீடு... மவனே.....' எனப் பேசுவது அப்பா.............. முடியல. தென் மாவட்டங்களில் அப்படி பேசுறாங்களா என்ன.. நானும் தென் மாவட்டத்துக்காரந்தான்... எனக்கு இப்படி பேசுவாங்கன்னு தோணலை... சுகன்யா வயதேயான பெண்ணை கண்ணுக்கு கீழே கருப்பாய் மேக்கப் போட்டு அம்மா ஆக்கியிருக்கிறார்கள். ஒருவேளை படம் வெளிவந்தப்போ, பள்ளிக்கூட வயதில் பார்த்திருந்தால் பிடித்திருக்கும் போல...

-'பரிவை' சே.குமார்.