மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 10 ஜூலை, 2016

கனவு மெய்ப்பட வேண்டும்

ரவணன், சினிமா மீது கொண்ட காதலால் படித்து முடித்ததும் சென்னைக்கு வந்தவன் கிட்டத்தட்ட் மூன்று வருடங்கள் சரியான சாப்பாடு இல்லாமல் நண்பர்களுடன் தங்கிக் கொண்டு சினிமாவில் நுழைய முயற்சி செய்தான். ஒரு வழியாக இரண்டு வருடத்துக்கு முன்னர் தொடர்ந்து வெற்றிப்படங்களை மட்டுமே கொடுத்துவரும் இயக்குநர் ரேவனிடம் இணை இயக்குநராய் சேர்ந்தான். அவனின் தொழில் மீதான பற்றும், வசனம் எழுதும் திறனும் அவரை ரொம்பவே கவர்ந்து விட்டது. அவருக்கு பிடித்த இணை இயக்குநராய் மாறிப் போனான். எந்த ஒரு காட்சி மாற்றம் என்றாலும் அவனைக் கூப்பிட்டுத்தான் ஆலோசிப்பார். அவனுக்குள் ஒரு ஆசை... அவனோட கற்பனையை கருவாக்கி மூன்று கதைகளை உருவாக்கி வைத்திருந்தான். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பெரும்பாலான அறிமுக இயக்குநர்கள் தங்களுடைய முதல் படத்திலேயே அனைத்து சரக்கையும் இறக்கி வைத்து விட்டு அடுத்த படத்தில் கோட்டை விட்டு விடுவார்கள். அப்படி இல்லை என்றால் தயாரிப்பாளர் கிடைக்காமல் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என பணத்தோடு திரியும் சினிமாவுக்கே லாயக்கில்லாத ஒருவரை தயாரிப்பாளர் மற்றும் நடிகராக்கி படமெடுத்து காணாமல் போய்விடுவார்கள். அந்த வரிசையில் தான் இணைந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். அவனது கிராமத்து மக்களின் வாழ்க்கையை வைத்தே அவனால் பல படங்கள் எடுக்க முடியும் என்பதை அவன் அறிவான். முதலில் ஜெயிக்கணும்...அப்புறம் சமுத்திரகனி போல் சேரன் போல் வாழ்க்கைக் கதைகளைப் பேச வேண்டும் என்று அடிக்கடி நண்பர்களிடம் சொல்வான்.

அவன் மனதில் தனது முதல் கதைக்கு பொறுத்தமான  நடிகர் வளர்ந்து வரும் ராஜராஜன்தான் என்று முடிவு செய்து வைத்திருந்தான். அவரிடம் கதை சொல்வதற்காக கடந்த இரண்டு மாதமாக முயற்சித்து வருகிறான்.  இன்று நாளை என அவரது உதவியாளர் சொல்லிவர, அவரைச் சந்திப்பதற்கான நேரம் அவனுக்கு இன்னும் அமையவில்லை. புதிய நடிகரை வைத்துப் பண்ணிடலாம் என திரையுலக தயாரிப்பாளரும் அவனுடைய நண்பருமான செல்லப்பன் சொல்ல, 'வேண்டாண்ணே முதல் படம் புதிய நடிகர் என்றால் ஜெயிப்பது கஷ்டம்... பிரபல முகம் என்றால் நம்மால் வெற்றி பெற முடியும்... அதுவும் இப்ப வளர்ற நடிகர்கள்ல தனுஷ், விஜய் சேதுபதி மாதிரி இவருக்கும் ஒரு பேர் இருக்கு. அதனால இவரை வைத்துத்தான் படமெடுக்கிறோம்... என்னை நம்பி நீங்க பணம் போடுறீங்க... அது திரும்பக் கிடைக்கணுமில்ல'ன்னு சொல்லிட்டான்.

ராஜராஜனிடம் கதை சொல்வதற்கான அழைப்பு வந்ததும் சந்தோஷமாக கிளம்பினான். அவரின் வீட்டுக்கே வரச் சொல்லியிருந்தார்கள். அவன் சென்ற போது பெர்முடாஸ் அணிந்து வெற்று மார்புடன் புல்வெளியில் அமர்ந்திருந்தார். அவருக்கு எதிரே ஒருவன் அமர்ந்திருந்தான். இவனைப் பார்த்ததும் 'வாங்க சரவணன்... பெரிய இயக்குநரின் பாசத்துக்குரிய அசிஸ்டெண்ட்...நீங்க படம் பண்றதுன்னா அது கண்டிப்பாக நல்ல கதையாத்தான் இருக்கும்... கொஞ்சம் பிஸி அதான் உங்களை காக்க வச்சிட்டோம்...' என்றார் பெருந்தன்மையாக. 'பரவாயில்லை சார்... எப்படியோ உங்களை சந்திக்க நேரம் அமைஞ்சது பாருங்க... அது போதும்... என்னோட முதல் பட ஹீரோ நீங்கதான்னு நான் முடிவு பண்ணி வச்சிருக்கேன்... எப்ப உங்க கால்சீட் கிடைக்குதோ அப்பத்தான் நான் படம் பண்ணுவேன் சார்' என்றான். அவனைப் பார்த்து சிரித்தபடி 'இவரும் அறிமுக இயக்குநர்தான் கதை சொல்லணும்ன்னு சொன்னாரு.... இன்னைக்கு ப்ரிதான் அதான் வரச் சொன்னேன்.. இப்பச் சொல்லிடுவாரு... அப்புறம் நீங்க சொல்லலாம்... உட்காருங்க' என்றார். சரி என அவன் அமர்ந்த போது ஆப்பிள் ஜூஸ் வந்தது. குடித்துக் கொண்டே கதை சொல்பவனைப் பார்த்தான்.

அவன் சொல்ல ஆரம்பித்தான்... "சார் நீங்க பணக்காரர்... உங்களோட உயிர் நண்பன் உங்களை ஏமாத்திடுறான்... நீங்க ஜெயிச்சி வாறீங்க... படம் மாஸ் சப்ஜெக்ட் சார்... "

"இதைப் பண்ணுறதுக்குத்தான் ரஜினி சார் இருக்காரே... அப்புறம் நான் எதுக்கு அவருக்கிட்ட போக வேண்டியதுதானே..."

"அவரு பெரிய ஆளு சார்... சங்கர் சார் படத்துல நடிக்கிறவரு... என் படத்துல நடிப்பாரா... ஒரு ஹிட் கொடுத்துட்டா அட்லீ மாதிரி அவரைப் பிடிச்சிருவேன் சார்..."

அவனை ஒரு மாதிரி பார்த்த ராஜராஜன் "வேற கதை இருந்தாச் சொல்லுங்க..." என்றார்.

"சார்... கதைப்படி நீங்க போலீஸ்... அதுவும் ரொம்ப நல்ல போலீஸ்... கடைசி சீன்ல வில்லன்கிட்ட அடிவாங்கி... முகமெல்லாம் வீங்கி... ரத்தம் வடிய வடிய போதும்டா... இதெல்லாம் போதும்... விட்டுடுங்கன்னு அட்வைஸ் பண்ணுறீங்க..."

"யோவ் இது கமல் சார் பண்ற கதை... எனக்கு செட்டாகாது..."

"ஏன் சார் அவரு மன்மதன்  அம்பு பண்ணலையா... அது நீங்க பண்ற சப்ஜெக்ட்தானே...?"

"யோவ்..." என ராஜராஜன் கத்த, சரவணன் சிரித்தான்.

"சார்... இன்னொரு கதை இருக்கு சார்... சொல்றேன் கேளுங்க... நீங்க ஸ்கூல் படிக்கிறீங்க... அப்ப கூடப் படிக்கிற பொண்ணு மேல லவ்வு வந்திருது... அதுக்கு அப்புறம் படிப்பை விட்டுட்டு அவ பின்னாடி திரிஞ்சி.... இடையில ரவுடிகளோட மோதல்... கடைசியா..."

அவனை இடை மறித்த ராஜராஜன் " என்ன திவ்யா... ஐ லவ் யூ திவ்யான்னு வசனம் பேசுறேனாக்கும்... த்துத்தேறி... அது பண்ணத்தான் தனுஷ் இருக்காரே... பின்னே நான் எதுக்கு... நீ சரிப்படமாட்டே கிளம்பு..."

"சார்... ப்ளீஸ் சார்... இன்னும் எங்கிட்ட நிறைய கதை இருக்கு சார்... இந்தக் கதை சரி வருமா பாருங்க சார்... நீங்க ஒரு சைக்கோ மாதிரி.... ஒரு பொண்ணை லவ் பண்ணி... அவ உதட்டை கடிச்சி இழுத்து உறிஞ்சி,,,"

"யோவ் நிறுத்து சிம்புக்கிட்ட சொல்ல வேண்டியதை எங்கிட்ட சொல்லிக்கிட்டு..."

"சரி சார்... இன்னொரு டான் கதை இருக்கு... கதைப்படி..."

"என்ன கோட்டுப் போட்டுக்கிட்டு எல்லாரையும் பொட்டுப் பொட்டுன்னு சுடுறேனா... அதுக்குத்தான் தல இருக்காருல்ல... எங்கிட்ட ஏய்யா வந்தே... எங்கிட்டு கிடந்துய்யா வாறீங்க...." என்றார் ராஜராஜன்.

"சாரி சார்... இதை மட்டும் கேளுங்க சார்... உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்... இதைப் பண்ணினம்னா இந்த வருசத்துல எல்லா விருதும் உங்களுக்குத்தான்... ப்ளீஸ் சார்..."

"சொல்லித் தொலைய்யா..."

"படத்துல டபுள் ரோல் சார்... ஒண்ணு ரவுடி சார்... ஆனா போலீசு... போலீஸ் டிரஸ் போட மாட்டீங்க... முடியை கட் பண்ணிக்க மாட்டீங்க... ஐ ஆம் பாலோவிங்க்ன்னு வில்லனுக்கிட்ட சொல்லுவீங்க... இன்னொரு காரெக்டர் வில்லன்... உங்க ரெண்டு பேருக்கும் முகத்தில சின்ன மருவை வைச்சு வித்தியாசம் காட்டிடுறோம்... தியேட்டர்ல ரசிகர்கள் விசில் அள்ளும் சார்..." 

"ஏய்யா... எப்படிய்யா சிரிக்காமல் கதை சொல்றே... தளபதி இதைத்தான் பல படத்துல பண்ணியிருக்காரு... அவரு இன்னும் கூட பண்ணலாம்... நானெல்லாம் பண்ணினா தியேட்டர்ல ஒரு காட்சி கூட ஓடாதுய்யா..."

"...."

"நல்லாயிருப்பே நீ கிளம்பு... விட்டா சசிகுமார், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜீவா, ஆர்யா, சூர்யா, கார்த்தி, மாதவன்னு போயிக்கிட்டே இருப்பே... இன்னும் நல்ல கதையா எழுதிக்கிட்டு வா... போ..."

"சார்... இதை மட்டும் கேளுங்க சார்... தனி ஆளா பாகிஸ்தான் ஜாபர்கானை எதிர்த்து ஜெயிச்சி..."

"இங்க பாரு கேப்டன் கட்சியும் கரைஞ்சி போயி மனசும் ஓடிஞ்சி போயி உக்காந்திருக்காரு... அவருக்கிட்ட போயி சொல்லு... மறுபடிக்கும் சிம்மா... சிம்மா... நரசிம்மான்னு வரட்டும்... என்னை விட்டுடு சாமி..." என்றதும் அவன் அதற்கு மேல் பேசாமல் எழுந்து சென்றான்.

"சார்..." மெல்ல இழுத்தான் சரவணன்.

"என்ன சரவணன்... சாரிங்க... ஒரு கதை சொல்றேன்னு வந்துட்டு நாயி ஒண்ணுமே இல்லாம கதை சொல்லி என் மூடை ஸ்பாயில் ஆக்கிட்டான்... இனி உங்க கதை கேட்டாலும் மனசு ஒட்டாது... எதையும் ஆத்மார்த்தமாக் கேட்டாத்தான் எனக்குப் பிடிக்கும்... ரெண்டு நாள்ல கூப்பிடுறேன். கண்டிப்பா நாம படம் பண்ணுறோம்... சாரி சரவணன்" என்று ராஜராஜன் சொன்னதும் "பரவாயில்லை சார்... எனக்கு இன்னும் நேரம் வரலை போல... எப்பக் கூப்பிட்டாலும் வர்றேன் சார்..." என்றபடி மனம் நொந்து போய் கிளம்பினான்.


ன் அருகில் வந்து படுத்த சரவணனிடம் "என்னாச்சு சரவணா... கதை சொல்லிட்டியா..? ஓகே பண்ணிட்டாரா...?" எனக் கேட்டான் அறை நண்பன்.

"எங்கடா... வரச் சொன்னாரு... நான் போறதுக்கு முன்னால என்னோட நேரம் அங்க போயிருச்சு... அப்புறம் எப்படி..? ஒருத்தன் கதை சொல்றேன்னு அந்தாளை மூடு அவுட்டாக்கிட்டான்... ரெண்டு நாள்ல கூப்பிடுறேன்னு சொல்லி அனுப்பிட்டாருடா..."

"அப்ப கதையை கேக்கவே இல்லையா?" என அவன் கேட்டபோது "கருப்பா.. குள்ளமா இருந்தானாடா... என்றான் மொட்டைமாடி கைபிடிச் சுவற்றில் அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த மற்றொரு நண்பன்.

"ஆ...ஆமாடா... உனக்கு அவனைத் தெரியுமா..?"

"அட அது அவன் ஆளுடா... புது இயக்குநர் படத்துல அவன் நடிக்க விரும்புறதில்லை... வரச்சொல்லிட்டு நாம போகும் போது அவங்கிட்ட கதை கேக்கிற மாதிரி ஒண்ணுமில்லாத கதையைப் பேசி நம்மளை அடுத்த நாள் வா பாப்போம்ன்னு சொல்லிடுவானாம்... இல்லேன்னா நம்மகிட்ட கதையை கேட்டு அதை இப்படி மாத்து... இதை அப்படி மாத்து... இங்க ஒரு பைட் வையி... அந்த இடத்துல ஒரு குத்துப்பாட்டு போடுன்னு ஏகத்துக்கு மாத்தச் சொல்லிட்டு என்னன்னே கேக்கமாட்டானாம்... எங்க இயக்குநர் சொல்லியிருக்கார்."

"அடப்பாவி இதை ஏன்டா எங்கிட்ட சொல்லலை...?"

"சொல்லலையா...  நான் அந்தாளு வேண்டான்டான்னு சொன்னப்போ என்னோட கதைக்கு அவருதான் பர்பெக்ட் பிட்டுன்னு சொன்னே... என்னோட கதையைக் கேட்டா கண்டிப்பா நடிப்பாருன்னு வேற சொன்னே... அவரு இல்லைன்னா நான் படமே எடுக்கலைன்னு சொன்னே... நம்ம சுரேஷ் எப்படியோ அந்தால கனிய வச்சி படமெடுத்தது மாதிரி உன்னாலயும் கனிய வைக்க முடியுதான்னு பார்ப்போம்ன்னு மூடிக்கிட்டு இருந்துட்டேன். இங்கபாரு... இப்படித்தான் எங்க பக்கத்து ஊருக்காரன் ஒருத்தன் பாசில்கிட்ட அசிஸ்டெண்டா இருந்தான்... காதலுக்கு மரியாதை படத்துல கூட அசோசியேட்... வசனம் எழுதுறதுல கில்லாடி... தன்னோட முதல் படத்தை கேப்டனைத்தான் வச்சிப் பண்ணுவேன்னு கதையோட திரிஞ்சான்... அவரு கதையை கேட்கவும் இல்லை இவன் பண்ணவும் இல்லை... பல வருசத்துக்கு அப்புறம் இனி சரிவராதுன்னு புது முகத்தை வைத்து படம் பண்ணி ஓரளவு வெற்றியும் பெற்றான்... ஆனா பீல்டுல நீடிக்க முடியலை... நம்மளோட கரு இவருக்குத்தான் பொறுந்தும் அப்படின்னு யோசிக்காதே... எவன் நடிச்சாலும் என்னோட கதை பேசும்ன்னு முடிவு பண்ணு... பிரகாசமானவங்களை வச்சித்தான் ஜெயிக்க முடியும்ன்னு நினைக்காதே... என்னோட கதையால ஜெயிக்க முடியும்ன்னு நினை... அவனை விட்டுத் தள்ளிட்டு வேற யாரையாச்சும் பாரு... ஆனந்த விகடன்ல கட்டுரை எழுதுன ராஜூ முருகன் பிரபலத்தை நம்பியா படம் எடுத்தாரு... அவரு முதல் படத்தை தமிழகமே பேச வைக்கலையா... சசிக்குமார் தன்னோட முதல் படத்துக்கு இவருதான் சூட் ஆவாருன்னு சில நடிகர்கள் பின்னால பொயிட்டு யாரும் நடிக்க வராததால ஜெய் கூட தானே நடிச்சி சுப்ரமணிய புரத்துல ஜெயிச்சிக் காட்டலையா...? இன்னைக்கு நண்பனுக்கு தோள் கொடுக்கிறவனா கதாநாயகனா ஜெயிக்கலையா... மின்னுற மின்மினிப் பூச்சிகளை விட்டுட்டு பறக்க நினைக்கிற காக்கைக் குஞ்சை வச்சிக்கூட உன்னால ஜெயிக்க முடியும்டா..." ரொம்ப நேரம் பேசியவனின் கையிலிருந்த சிகரெட் கரைந்து சுடவும் தூக்கி எறிந்தான்.

"உண்மைதான்டா... இவருதான் வேணும்ன்னு நான் ஏன் பின்னால திரியணும்.. எனக்குள்ள உதிச்ச கதை... என்னோட கரு... அது ஜெயிக்கும்ன்னு நினைக்கிற எனக்கு எதுக்கு பிரபல நடிகர்கள்... புதியவர்களோடு களம் இறங்கி ஜெயிச்சிக் காட்டுவேண்டா... " என்றான்.

மறுநாள் செல்லப்பனிடம் சொன்னபோது "என்னப்பா சரவணா... புதுமுகமா..? யாரு உன்னோட ரூம் மெட் ஒருத்தன் கதாநாயகனாகனும்ன்னு சின்னச் சின்ன ரோல்ல நடிச்சிக்கிட்டு திரியிறானே... அவனை வச்சா... நான் அப்பவே ராஜராஜன் வேண்டாம்... புதிய ஆட்களை வைத்துப் பண்ணுவோம்ன்னு நீதான் கேட்கலை... நேத்து ராத்திரித்தான் பிரபு சாலமன்கிட்ட அசிஸ்டெண்டா இருக்க தம்பி ஒருத்தன் பேசுனாப்ல அவரு தனுஷை வைச்சு எடுக்கப்போற அடுத்த படத்துக்கு தயாரிப்பாளரா இருக்கீங்களான்னு கேட்டாப்ல... நானும் சரின்னு சொல்லிட்டேன்... நாளைக்கு அவரோட ஒரு மீட்டிங் இருக்கு.. உனக்கே தெரியும் பிரபு சாலமன் படம் கிடைக்கிறதுன்னா சும்மாவா... உன்னோட படத்தை கொஞ்ச நாள் கழித்து ஆரம்பிப்போம்... இப்போதைக்கு கனவை மூட்டை கட்டி வச்சிட்டு உன்னோட இயக்குநரின் அடுத்த பட வேலையைப் பாரு... சரியா..."

ஒன்றும் பேசாமல் வெளியே வந்தவன், தன்னோட கனவு கலைந்து போனதை நினைத்து வாய்விட்டு அழுதான். தன்னோட இயக்குநராகும் எண்ணத்துக்கு மூடுவிழா நடந்து விட்டது என்று முடிவு செய்து அசிஸ்டெண்டாகவே அவன் இயக்குநர் சூர்யாவை வைத்து இயக்கும் படத்தில் தொடர்ந்தான்.

ஒரு வருடம் ஓடியது தெரியவில்லை... ராஜராஜனுக்கு தொடர்ந்து பெரிய இயக்குநர்கள் வாய்ப்பு கிடைத்து தனக்கென ஒரு இடம் பிடித்து விட்டான். இப்போது அவனது சம்பளம் கோடியை நெருங்குவதாகச் செய்தி... இன்றைய தினசரியில் கூட சங்கர் படத்தில் நாயகனாகிறான் என்ற செய்தி பார்த்தான். நடிகனாக வேண்டும் என்று கஷ்டப்பட்ட அவனது நண்பன் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் இரண்டாவது நாயகனாக அஜீத்தின் தம்பியாக நடிக்கிறான். செல்லப்பன் இப்போ சசிகுமார், சமுத்திரக்கனி இணையும் படத்துக்கும் தொட்டால் தொடரும் எடுத்த கேபிள் சங்கரின் இரண்டாவது படத்துக்கும் தயாரிப்பாளராகி ரொம்ப பிசியாகிவிட்டார். சரவணன் இன்னும் அந்த பிரபல இயக்கிநரிடம்தான் இருக்கிறான். சூர்யாவை வைத்து எடுத்த படத்தில் இடைவேளை வரையான கதை வசனம் சரவணன் எழுதிக் கொடுத்ததுதான்... படமும் இடைவேளை வரைதான் நன்றாக இருந்தது என அப்போது பத்திரிக்கைகள் எழுதியிருந்தன.

சரிங்க... சரவணனோட இயக்குநர் இன்னும் ரெண்டு மாசத்துக்கு அப்புறம்தான் தன்னோட அடுத்த படத்தை ஆரம்பிக்கப் போறார். அதுவரைக்கும் ரூம்லதான் அவன் இருப்பான். அவன் வச்சிருக்கிற மூணு கதையும் மூணு விதமான மனிதர்களின் வாழ்க்கையை பேசும் கதைகள்தான்... படம் எடுக்க விருப்பப்படுறவங்க நம்பி அவனை இயக்குநராக்கலாம். கண்டிப்பாச் ஜெயிப்பீங்க... தமிழ் சினிமாவுக்கு பா வரிசை இயக்குநர்கள் மாதிரி... ஒரு சேரன், சசிக்குமார், சமுத்திரக்கனி, பாலா மாதிரி நல்லதொரு இயக்குநர் வரணுங்க...  படம் எடுக்க நினைக்கிறவங்க மாம்பலம் ரயில்வே ஸ்டேசன் தாண்டிப் போனீங்கன்னா ஒரு டீக்கடை இருக்கும்... அங்க கல்லாவுல உக்காந்திருக்கிற சேகரன் அண்ணாச்சிக்கிட்ட கேட்டா கடைப்பையனை விட்டு கூட்டியாரச் சொல்லுவாப்புல.. விருப்பமிருந்த போயி கதையைக் கேட்டுப் பாருங்க... ஜெயிக்கணுமின்னு நினைச்சு வர்ற எத்தனையோ சரவணன்கள் காணாமல் போயிடுறாங்க... மனிதர்களின் வாழ்க்கையை பேச நினைக்கிற இந்தச் சரவணனாவது ஜெயிக்கணுங்க... இல்லேன்னா நல்லதொரு வாழ்க்கைக் கதையை இழந்த தமிழ் சினிமா மாஸ் பின்னாலதாங்க ஓடிக்கிட்டு இருக்கும்... நம்பி காசு போட்டீங்கன்னா நிச்சயம் வெள்ளி விழா படமெடுத்த தயாரிப்பாளரா உயருவீங்க... 

நீ இவ்வளவு பேசுறியே பணம் போட வேண்டியதுதானேன்னு நினைக்கிறீங்களா..? நானும் சினிமாவுல ஜெயிக்கணுமின்னு சரவணனுக்கு முன்னால வந்தவனுங்க... இன்னும் ஓடிக்கிட்டு இருக்கேன்... எனக்கு இப்போ வயசு நாப்பத்தஞ்சுக்கு மேல ஆச்சு... இன்னும் குடும்பம் குட்டி இல்லை...ஆனா ஒருநாள் இல்லை ஒருநாள் சாதிப்பேன்னு ஓடுறேங்க... இப்ப தம்பி ராமையா மாதிரி கதாபாத்திரங்களில் நடிச்சி வயித்தை நிரப்பிக்கிறேன்... இந்த ஜிகினா உலகத்தில எல்லாருடைய கனவும் பிரசவமாகிறதில்லை... சில கூமுட்டைகள் கூட இங்கு பொரித்து உச்சிக்கு போய் விடுகின்றன... சரவணனுக்கிட்ட ஜிகினா கனவும் இல்லை கூமுட்டையை நல்ல முட்டை ஆக்குற சாமர்த்தியமும் இல்லை... ஆனா அழகான கருவை அற்புதமாக கையாளுற எழுத்துத் திறமை இருக்கு... சிந்தனையெல்லாம் கதைகள் நிறைஞ்சு கிடக்கு... அவன் ஒரு படத்தோட ஓய்ந்து போறவன் இல்லை... ஓராயிரம் கதை பேசி உலக விருதுகளை அள்ளப் பிறந்தவன். அவனோட கனவு மெய்ப்பட வேண்டும்.  சரவணன் ஜெயிச்சா அதுல எனக்கும் கண்டிப்பா பங்கு இருக்குங்க... அதனாலதான் சொல்றேன்... ப்ளீஸ் யாராவது சரவணனுக்கு ஏணியா வாங்களேன்...
-'பரிவை' சே.குமார்.

புதன், 6 ஜூலை, 2016

நேசம் மறந்ததா நெஞ்சம்?


"அப்பா... அம்மா செத்தா நீங்க அழுவீங்களாப்பா?" ஐந்து வயது மகன் ராகேஷின் கேள்வியால் ஒரு கணம் ஆடிப் போய்விட்டான் ரமேஷ். மகன் எதற்காக இப்படிக் கேட்கிறான் என்று புரியவில்லை. அவனை அருகில் இழுத்து "என்னப்பா கேட்டே?" என்றான்.

"அம்மா செத்தா அழுவீங்களான்னு கேட்டேன்?" என்றான்.

"அம்மாவை எதுக்குடா சாகச் சொல்றே?"

"இல்லை... அப்பத்தா செத்தப்போ நீங்க அழுகலையே... அதான் கேட்டேன்..." 

அதைக் கேட்டதும் அவன் மண்டையில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல இருந்தது.

"ஏய் ராகேஷ்... என்ன வயசுக்கு மீறின பேச்சு... வந்தேன்னா தெரியுமா..? போ.. போய் புக்ஸை எடுத்துப்படி... ஒன் வீக்கா புக்கே எடுக்கலை..." கிச்சனில் இருந்து கத்தினாள் ராகினி.

"ம்..." என்றவன் ரமேஷைப் பார்த்தபடி புத்தகத்தை எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தான். மகனின் கேள்வியால் நிலை குலைந்த ரமேஷ் தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தான். அவனிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை.

"இந்தாங்க காபி..." என டம்ளரை கொடுத்தபடி அவனருகே நெருக்கமாய் அமர்ந்து "ஏய்... சின்னப்பய வாய்த்துடுக்கா ஏதோ கேட்டுட்டான்... அதுக்குப் போயி... சரி... சரி... காபியைக் குடிங்க ரிலாக்ஸ் ஆயிட்டு நாம வெளியே பொயிட்டு வரலாம்... உங்க மனநிலை மாறும்" என்றாள்.

"இல்லம்மா... அவன் கேட்ட கேள்வி நியாயமானதுதானே...? நான் ஏன் என் அம்மாவுக்கு அழுகலை..." என்றவனுக்கு கண் கலங்கியது.

"ஏய்... அப்பா பாரு... கண் கலங்குறாரு பாரு... அவரை ஏன்டா அப்படிக் கேட்டே.... உனக்கு யாரு இதெல்லாம் சொல்லித் தந்தா.... அதிகப் பிரசங்கி..." என்று ராகேஷின் முதுகில் ஒரு அடி வைத்தவள் "விடுங்க... சின்னப்பிள்ளையாட்டம் கண் கலங்கிக்கிட்டு..." என்றாள்.

ராகேஷ் அழுதபடியே "என்ன கேட்டேன்... அப்பத்தாவுக்கு ஏன் அழுகலைன்னுதானே... சித்தப்பா அழுதாங்கள்ல... அத்தைங்க எல்லாம் அழுதாங்கதானே... அதான் கேட்டேன்... நம்ம முகேஷ் கூட நிதிலா அக்காக்கிட்ட எல்லாரும் அழுகிறாங்க... ரமேஷப்பா மட்டும் கல்லு மாதிரி நிக்கிறாருன்னு சொன்னான்... எனக்கு எவ்வளவு ஷேமா இருந்துச்சு தெரியுமா?" என்றான்.

"இங்க பாரு ராகேஷ்... அவங்க சின்னப் பசங்க... ஏதாவது பேசுவாங்க... அம்மா மாதிரி லேடீஸ்தான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க... அப்பா மாதிரி ஜென்ஸ் எல்லாரும் அழ மாட்டாங்க... மனசுக்குள்ளயே வச்சிப்பாங்க... உங்க சித்தப்பா மாதிரி சிலர்தான் லேடீஸ் மாதிரி அளுவாங்க... இதெல்லாம் உனக்குப் புரியாது... நீ பெரியவனானதும் உங்க அப்பா மாதிரி மனசுக்குள்ள வச்சுப்பியோ இல்ல உங்க சித்தப்பா மாதிரி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவியோ யாருக்குத் தெரியும்.. சோ... இனி இப்படியெல்லாம் பேசக்கூடாது ஓகேவா..." என்று அவனின் அழுகையை நிறுத்து விதமாக இழுத்து மடியில் அமர்த்திப் பேசினாள்.

"ம்..." அந்த ஒற்றைச் சொல்லில் அவன் இன்னும் சமாதானம் ஆகவில்லை என்பது அவளுக்குப் புரிய, அவனை இன்னும் இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள்.

காபியைக் குடித்து விட்டு எழுந்து போய் பெட்டில் விழுந்தான் ரமேஷ்.  அவன் பின்னாலேயே வந்த ராகினி, "என்னங்க நீங்க... இதுக்குப் போயி அப்செட் ஆயிட்டீங்களா...? ஏதோ பசங்க பேசினாங்கன்னு கேட்டுட்டான்... விடுங்க" என்றாள். 

"அதெல்லாம் ஒண்ணுமில்லடா... ஒரு அரைமணி நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வர்றேன்... அப்புறம் நீ சொன்ன மாதிரி வெளியில போகலாம்... ப்ளீஸ்" என்றதும் "ராகேஷ்... அப்பா தூங்கணும்... அங்க போயி அவரைத் தொந்தரவு பண்ணக்கூடாது... சரியா..." என்றபடி பக்கத்து வீட்டு பார்கவியிடம் பேசச் சென்றுவிட்டாள்.

'எப்படி... நான் அம்மா என்று கூட சொல்லாமல் இருந்தேன்.. அந்தளவுக்கு காலம் என்னை பாசமற்றவனாக மாற்றிவிட்டதா...?' என்று நினைத்தவன் சுடுக்காட்டில் நிகழ்ந்ததை நினைத்துப் பார்த்தான். அம்மாவை குழிக்குள் இறக்கி முகத்தை கிழக்குப் பார்த்தார் போல சாய்த்து வைத்து கட்டெல்லாம் அவிழ்த்து அவள் கையிலிருந்த மோதிரத்தைக் கழட்டி எடுத்துக் கொடுத்துவிட்டு  உள்ளே இறங்கி நின்ற இருவரும் ஒரு சேர ஏறியதும் மகன்களை முதலில் மண்ணள்ளிப் போடக் கூப்பிட்டான் அம்பட்டைய வீட்டு ராசு. இவன் எதுவும் சொல்லாது சிவனேன்னு அள்ளிப் போட தம்பியோ கதறி அழுதபடி அள்ளிப் போட்டான். எல்லாம் முடிந்து சுற்றி வந்து விழுந்து கும்பிட்ட போது 'ஏப்பா... ரமேஷ் இப்பவாச்சும் அம்மா, அம்மான்னு சொல்லிக்கிட்டு கும்பிட்டு விழு... இனி எப்பக் கூப்பிடப் போறே' எனக் கிண்டலாகச் சொன்னார் துரை மாமா. அப்பவும் அவன் அம்மான்னு சொல்லவில்லை.

அம்மா... எங்களுக்காகவே கஷ்டப்பட்டவளாச்சே... எங்கள் ஐவரையும் வளர்க்க அவள் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா... எத்தனை கஷ்டங்கள்... எத்தனை போராட்டங்கள்... கஷ்டப்பட்டாலும் முகத்தில் கவலையை காட்டாது எங்களை வளர்த்தவளாச்சே... சின்ன வயதில் அம்மா அம்மான்னு அவள் முந்தானையை பிடித்துக் கொண்டே திரிந்தவந்தானே நான்... சின்ன வயதில் என்ன கல்யாணம் வரைக்கும் அம்மா பிள்ளைதானே நான்... இரவு நேரத்தில் முற்றத்தில் படுத்துக் கொண்டு வானில் தெரியும் நட்சத்திரக் கூட்டங்களை பார்த்தபடி அம்மா சொல்லும் கதைகளைக் கேட்டு ரசித்தவந்தானே நான்...எத்தனையோ இரவுகள் இருந்த சாப்பாட்டை எங்களுக்குக் கொடுத்துவிட்டு தண்ணீரைக் குடித்துவிட்டு படுத்தவள்தானே அம்மா.

அம்மா மீது வைத்த அத்தனை பாசமும் நேசமும் எங்கே போச்சு..? மனைவி வந்ததும் எல்லாத்தையும் இவளிடம் கொடுத்து விட்டேனா... அதெப்படி எங்களை உயிராய் பார்த்த அம்மா மீதான பாசம் அத்தனையையும் மனைவியிடம் கொடுக்க முடியும்? மனைவியும் ஒரு அம்மாதானே... ஆம் அம்மாதான்... அதுக்காக தன் ரத்தத்தை பாலாக்கி பசியாற்றியவள் மீதான பாசத்தை இடையில் வந்த சொந்தம் சொல்லி கீழே போட்டு உடைக்க முடியுமா..? உடைத்தேனே... இவ்வளவுக்கும் அவள் என்னைக் கட்டுப்படுத்தியதில்லை... இருந்தும் எனக்கு நானே விலங்கிட்டுக் கொண்டேனே... அது ஏன்..? மனைவிக்காகவா...?  இதை நான் மட்டுமில்ல பெரும்பாலான ஆண்கள் செய்கிறார்களே... அம்மாவை கவனிப்பதே இல்லையே... அவளுக்கு செய்ய வேண்டியதை செய்தேன்தான் ஆனால் அவள் மீதான பாசம் எப்படி என்னை விட்டு விலகியது. செலவுக்கு காசு கொடுத்தால் மட்டும் போதுமா... அவளின் ஆசாபாசங்களைக் கேட்டேனா...? அப்பாவின் இறப்புக்குப் பின்னால் அம்மாவை மாதம் ஒருமுறையேனும் சென்று பார்த்து அவளுக்கு நிம்மதியைக் கொடுத்தேனா... இல்லையே...

சின்னப்பய கேட்ட கேள்வி எவ்வளவு சரியானது... நாளை எனக்கு முன்னே மனைவி இறந்தால் அழுகாமல் இருப்பேனா..? பாடுபட்டு வளர்த்த அம்மாவுக்கு வராத அழுகை பாதியில் வந்து என்னில் பாதியானவளுக்கு மட்டும் வருவதேன்... இந்த உலகமே இப்படித்தானே... தாய்க்குப் பின் தாரம் என்பதெல்லாம் மலையேறிப் போச்சே... இப்போ பெரும்பாலானோருக்கு தாரம் சொல்லே மந்திரம் ஆயிருச்சுதானே... அவளுக்குத்தான் நான் என்ற மனநிலைக்கு எப்படி மாறினேன்...? எப்போது மாறினேன்..? மனைவியின் அன்பு மகத்தானதுதான்... அது கணவனுக்கானது மட்டும்தான் அதற்காக முப்பது வருடங்கள் வளர்த்த அம்மாவின் அன்பை எப்ப்டி தள்ளி வைத்தேன்..? சுகம் துக்கம் என என்னவள் என்னோடு பயணிப்பதாலா..? இல்லை எனக்கே எனக்கானவல் அவள் என்ற எண்ணத்தாலா...? எதனால்..? எப்படி..? இந்த ஏழாண்டு மனமாற்றம் அம்மாவின் மரணத்தில் கூட தள்ளியே நிற்குமா..? எப்படித் தள்ளி நிற்கும்.. என்ன இருந்தாலும் பெற்றவள் எனும் போது கண்ணீர் மடையை உடைத்துக் கொண்டு வரத்தானே செய்யும்... ஆனால் எனக்கு வரலையே... ஏன் வரவில்லை..? அப்போ எனக்குள் அம்மா மீது பாசமே இல்லாமல் போய் விட்டதா...? இருந்து தொந்தரவு பண்ணாம இறந்தது சரியின்னு மனசு நினைச்சிருச்சா...

அம்மா என்ற ஒற்றைச் சொல்லுக்கு இந்த உலகத்தில் ஈடு இணை ஏதுமுண்டா... இறந்து கிடந்தவளைப் பார்த்து கடைசியாய் அம்மா என்று கூட சொல்லாத... சொல்ல முடியாத... சொல்லக்கூடாத அளவுக்கு அவள் அப்படி என்ன செய்து விட்டாள்? சின்ன வயதில் ஊசி போடும் போது எனக்காக அழுதவள்தானே அவள்... உடம்பு முடியாமல் படுத்தால் இரவெல்லாம் உறங்காது விழித்துக் கிடந்தவள்தானே அவள்... கல்லூரிக்குச் செல்ல அதிகாலையில் எழுந்து அவசர அவசரமாய் சாப்பாடு செய்து கொடுத்தவள்தானே அவள்... முதல் முறை வேலைக்குச் சென்றபோது அம்மாவை விட்டுப் போறோமே என்று கண்கலங்கியவனை தேற்றி அனுப்பிவிட்டு மாதக்கணக்கில் அழுது கொண்டு கிடந்தவள்தானே அவள்... அப்படிப்பட்ட அம்மா இறந்து கிடக்கும் போது அழுகாமல் அமர்ந்திருக்க என்னால் எப்படி முடிந்தது..? 

இந்த நெஞ்சம் அவளின் பாசத்தை அத்தனை சீக்கிரம் அழித்து விட்டதே... இந்த நெஞ்சம் அவள் மீதான நேசத்தை எப்படி சுத்தமாய் துடைத்து எறிந்தது..? கல் நெஞ்சக்காரன் என்றாலும் அம்மாவின் இழப்பை தாங்காமல் கண்ணீர் சிந்துவானே... நான் எப்படி..? என்னால் எப்படி...? என் பிள்ளை என் பிள்ளை என்று சீராட்டிய அம்மாவை என் அம்மா என்று நினைத்து அழக்கூடாச் செய்யாத பாவி அல்லவா நான்... என் அம்மாவின் நேசம் மறந்ததா என் நெஞ்சம்..?

மனசுக்குள்ளேயே புலம்பிய ரமேஷ் ஒரு கட்டத்தில் உடைந்து அழுதான்... 'அம்மா... உன்னை குழிக்குள் வைத்து மண்ணைப் போட்ட போது கூட உன் மீதான பாசம் என்னை அழ வைக்கவில்லையே... நான் எவ்வளவு பெரிய பாவி... என்னை மன்னித்து விடு அம்மா...' என வாய் விட்டு அரற்றினான்.

அப்பாவின் அழுகை கேட்டு அறைக்குள் எட்டிப் பார்த்த ராகேஷ், "இதை அன்னைக்கு அழுதிருந்தா எனக்கும் ஷேம் ஆயிருக்காதுல்ல..." என்றபடி அவனருகே வர, இழுத்து அணைத்துக் கொண்டு அழுதான். அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த மனைவி அவன் உடைந்து அழுவதைப் பார்த்து 'மனசுக்குள்ள கிடந்த சோகம் வெடித்துச் சிதறட்டும்'  என்று நினைத்தபடி அவனருகே அமர்ந்து மெல்ல அணைத்துக் கொள்ள அவள் தோள் சாய்ந்து அழுதான்... அழுதான்... அழுதுகொண்டே இருந்தான்.
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 5 ஜூலை, 2016

மனசு பேசுகிறது : மரணமே... மரணமே...


உலகில் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் மரணம் நிச்சயம். எனக்கு மரணமே இல்லை என்றோ.. நான் மரணத்தை வென்று விட்டேன் என்றோ யாரும் மார்தட்டிக் கொள்ள முடியாது. மரணமில்லாப் பெருவாழ்வு எனக்கு என்று யாரும் மார்தட்ட முடியாது... ஏனென்றால் வாழ்க்கைப்பாதையில் ஏற்றம், தாழ்வு என எப்படி வேண்டுமானாலும் பயணிக்கலாம்.. அந்தப் பயணத்தில் இறுதி மரணம் என்ற எல்லைக்கோட்டைத் தொடுவதில்தான் நிறைவு பெறுகிறது.

இறப்பு என்பது இத்தனை வயதில்தான் என்ற நிர்ணயம் எல்லாம் எதுவும் இல்லை... கருவிலேயே மரணம் அடைத்த சிசுக்களும் உண்டு... நிறைவாய் வாழ்ந்து சந்தோஷமாய் அனுபவித்து சதமடித்து மரணித்தவர்களும் உண்டு. நமக்கான நாள் எது என்பதை நாம் அறியாமலே மரணம் தன்னுள்ளே வைத்திருக்கும். அந்த நேரம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஏன் அடுத்த நொடி கூட நமக்கான மரணம் வரலாம்... நம் வாழ்க்கை நிரந்தரம் அற்றது. 

ஒவ்வொரு மரணமும் ஒவ்வொரு விதத்தில் நிகழலாம்... மரணங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியவையே.. அது காலத்தின் கட்டாயம்... ஆனால் தற்கொலைகள் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது... எத்தனை பிரச்சினை இருந்தாலும் அதற்கான தீர்வும் வாழ வழிமுறையும் இருக்கு என்பதை அறியாமல் மூடத்தனமாக எடுக்கும் முடிவு அது. அது கோழைகளின் செயல்... வாழ்க்கையோடு போராடி வெற்றி பெற்றவனுக்கு மரணம் என்பது ஒரு சாதாரண நிகழ்வுதான்... என்னைக்கு இருந்தாலும் போய்த்தானே ஆகணும் என எடுத்துக் கொண்டு பயணிப்பான்... அவனைப் பொறுத்தவரை அது குறித்த மிகப்பெரிய சிந்தனை எதுவும் இருக்கப் போவதில்லை.

ஒவ்வொரு மரணமும் ஏதோ ஒன்றைச் சொல்லிச் செல்லும்... சின்ன வயதில் மரணித்தவர்களை அடக்கம் செய்யும் சுடுகாட்டிற்குச் செல்லப் பயப்பட்டவன்தான் நான்... மீறிச் சென்றுவிட்டு அன்று இரவெல்லாம் தூங்காமல் பயந்து அலறி அம்மா திட்டிவிட்டு துணூறை இட்டு படுக்க வைத்த நிகழ்வுகள் எல்லாம் உண்டு. வளர வளர அதன் மீதான பயம் போய் பேய், பிசாசு என்ற நம்பிக்கையும் இல்லாமல் போனது. திருமணத்திற்குப் பின்னான சில நிகழ்வுகள் அப்படி ஒரு சக்தி இருக்குமோ என்று சிந்திக்க வைத்தது என்பது வேறு விஷயம்.

இந்த விடுமுறையில் மாமாவின் தீடீர் மறைவு மிகப்பெரிய வேதனையைக் கொடுத்தது. அவரை தூக்கிக் குளியாட்டியது முதல் பாடை தூக்கி சுடுகாடு சென்றது வரை என் வயதொத்த எங்கள் உறவுகளுடன் நானும் இருந்தேன். இறந்த மனிதனின் சில்லிப்பான உடலைத் தொட்டுத் தூக்கியது என்பது இதுவே முதல் முறை... பாடை இதற்கு முன்னர் ஒருமுறையோ இருமுறையோ தூக்கியிருக்கிறேன். குளிப்பாட்டும் போது அவரின்  முகத்தைப் பார்த்த நொடியில் எனக்குத் தோன்றியதெல்லாம் கடைசியாக என்ன நினைத்திருப்பார் என்பதே... ஆம் அவர் என்ன நினைத்திருப்பார்..? தான் இறந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்த ஒரு மனிதன் மனசுக்குள் என்னென்ன ஓடியிருக்கும்... அதெல்லாமே அந்த மனிதனோடு புதைக்கப்பட்டு விட்டது அல்லவா..? இது அவருக்கானது மட்டுமல்ல... எல்லாருக்குமானதுதான்..

என்னைப் பாதித்த இன்னொரு மரணம் எங்கள் கல்லூரி பேராசிரியரின் மகனின் மரணம். அப்போது நான் கல்லூரியில் வேலை பார்த்தேன். மதியம் அப்பாவைக் கொண்டு வந்து விட்டு விட்டு மறுநாள் பிறந்தநாளுக்கு டிரஸ் வாங்க காரைக்குடி போகிறேன் என்றவனிடம் இப்ப எதுக்குப் போறே..? சாயந்தரம் போகலாமே..? என்றதையும் மீறிச் சென்றான், அவன் சென்று அரைமணி நேரத்தில் அவருக்கு போன் வர,  வழியில் விபத்து ஏற்பட்டு மரணம்... ஒரு தனியார் கல்லூரியில் ஆசிரியராய் இருந்தான்... வீட்டுக்கு ஒரே மகன்... திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகவில்லை. அந்த மரணத்தை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எப்படிப்பட்ட துரயச் சம்பவம் இது.

இதேபோல் கல்லூரியில் எங்களுக்கு ஜூனியர் என்றாலும் ஐயா வீட்டில் கூடும் குழுவில் அவனும் ஒருவன்... நல்ல கவிஞன்... ஏழைத்தாய்க்கு மூன்று மகள்களுக்குப் பிறகு குடும்பத்தைக் காப்பான் என்று நம்பிக்கை விதைத்துப் பிறந்தவன்... மிகச் சிறந்த அறிவாளி... கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது உடம்பில் ஒரு மாறுதல்... ஒரு பக்கம் மட்டும் வீங்கிக் கொள்ளும்... ஐயாவும் அலைந்து திரிந்து பார்த்தார்... அவனின் வீட்டிலும் சிரமப்பட்டு பார்த்தார்கள்... ஒருநாள் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் அவன் போய் சேர்ந்து விட்டான்... எங்களுக்கு... ஐயாவுக்கு மிகப்பெரிய இழப்பு என்றாலும் அந்த விதவைத்தாய்க்கு விடைகாண முடியாத இழப்பு அது. 

என்னைப் பாதித்த இன்னுமொரு மரணம் இங்கு நிகழ்ந்தது... இங்கு வந்த புதிதில் நாங்கள் தங்கியிருந்த அறைக்கு பக்கத்து அறையில் மலையாளிகளுடன் தங்கியிருந்தான் சென்னையைச் சேர்ந்த நண்பன் ஒருவன், இவனுக்கும் அப்பா இல்லை... வீட்டுக்கு ஒரே பிள்ளை... இவந்தான் அந்த தாயின் எதிர்காலம்... விமான நிலையத்தில் செக்யூரிட்டி பணி... நல்ல சம்பளம்... குடியிலேயே வாழ்க்கை ஓடியது... அவனோட சேர்ந்த நண்பனும் அப்படியே... ஒரு நாள் அதிகாலை நாங்கள் குளிப்பதற்காக வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம்... இவன் வந்து உங்க பாத்ரூம் பிரியா இல்லையா? என்றபடி அமர்ந்தான். இரண்டு நாட்கள் முன்னர்தான் குடி அதிகமாகி மயங்கி கிடந்து ஹாஸ்பிடலில் சேர்த்திருந்தார்கள். அங்கு இருந்து சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிட்டான் என்பதை அறிந்ததும் எங்க அறை நண்பர் சத்தம் போட்டார். சிரித்துக் கொண்டே அவங்க பாத்ரூமிலிருந்து ஆள் வெளியேறவும் அங்கு சென்றான். சென்றவனுக்கு உள்ளேயே அட்டாக் வந்தாச்சு... ஆள் அங்கேயே இறந்து விட, பின்னர் போலீஸ் வந்து எடுத்தார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அவனுக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை. அந்தத் தாயும் அவனை நம்பி வந்த பெண்ணும் இப்போது எந்த நிலையிலோ இறைவனுக்கே வெளிச்சம்...

என்னைப் பாதித்த இன்னுமொரு மரணம் மச்சினனுடையது... நான் நண்பனின் வீட்டில் விருந்து சாப்பிட்டு வருகிறேன்... அவன் போகிறான்... அடுத்த ஒரு மணி நேரத்தில் தன்னை முடித்துக் கொண்டான். அதை நினைத்துப் பார்த்தாலே நெஞ்சம் பதறுகிறது... அதன் பின்னான வாழ்க்கை நிகழ்வுகள் எத்தனை சோகத்தை இன்னும் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் மட்டுமே அறிவோம்.

சில நேரங்களில் இப்படித்தான்.. காலன் தன் கயிற்றை துயரத்தில் இருப்பவர்கள் மீதே செலுத்துவான்... நாலு வருசமா இழுத்துக்கிட்டு கிடக்கு... அதுவும் கஷ்டப்பட்டு... நம்மளையும் கஷ்டப்படுத்துது... என்று புலம்பினாலும் செவி சாய்க்காதவன், அப்பா... மகன் படிச்சி முடிச்சிட்டான்... இனி இந்தக் குடும்பத்துக்கு விடிவுகாலம் வந்தாச்சு என்று சந்தோஷிக்கும் போது அவனை விபத்தில் கொண்டு செல்வான். அதேபோல் ரொம்பநாள் பிள்ளையே இல்லை இப்பத்தான் அந்த ஆத்தா கண்ணைத் திறந்திருக்கா... என்று சந்தோஷப்பட்டால் அந்தச் சிசுவை வயிற்றுக்குள்ளேயே காலி செய்து சிரிப்பான். 

எங்க அய்யா (அப்பாவின் அப்பா) ஒண்ணுக்கு இருக்க வெளியே வந்தவர், எழ முடியாமல் அமர்ந்திருக்க, அந்த நேரம் அந்தப்பக்கம் போன அம்மா, அவர் ஒரு மாதிரி அமர்ந்திருப்பது கண்டு 'என்னம்மான்... என்ன பண்ணுது...?' என்றதும் அவசர அவசரமாக 'ஒண்ணுமில்லத்தா... ஒண்ணுமில்ல' என வேஷ்டியை சரி செய்தவர், எழ முடியாமல் திணற, அந்த நேரத்தில் அத்தையை எழுப்பி இருவருமாக அவரை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு அம்மா வீட்டில் வந்து படுத்த ஐந்து நிமிடத்தில் அத்தை வீட்டில் இருந்து சத்தமாக ஒரு கேவல் எழ, அம்மா பதறி ஓடினாள் ஐயா இறந்திருந்தார். இதேபோல் இரண்டு மாதம் முன்னர் எங்க சின்னையா, மாங்காய் பறித்த அப்பத்தாவிடம் நீ கூடை தூக்க மாட்டாய் என தன் தோளில் தூங்கி வந்து அடுப்படி அருகே வைத்துவிட்டு காபி போடச் சொல்லிவிட்டு, தோட்டத்துக்கு போனடித்து தோட்டக்காரனிடம் அடுத்த நாளுக்கான வேலைகளை வரிசையாக அடுக்கிவிட்டு கட்டிலில் போய் படுத்தவர், காபியுடன் போனபோது காணாமல் போயிருந்தார். இப்படியான சாவுகள் எத்தனை பேருக்கு வாய்க்கும். இதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும் போல... இல்லையா...

மரணம் என்பது நிச்சயம்... வாழ வேண்டியவர்களை கொடூரமாகக் கொல்வதோ... வாழ வேண்டிய வயதில் தற்கொலை செய்து கொள்வதோ இல்லாமல் வாழ்வில் சந்தோஷத்தை அனுபவித்து சட்டென மரணத்தைத் தழுவுபவர்கள் கொடுத்து வைத்தவர்கள்... அவ்வகை மரணம் எல்லாருக்கும் சாத்தியமில்லை என்பது நமக்குத் தெரியும் அவ்வகையான மரணம் நமக்கு அமைந்தால் நாம் பாக்யசாலிகளே...! சுகப்பிரசவம் போல் சுக மரணங்கள் நிகழட்டும்... துர் மரணங்களுக்கு முதலில் மரணம் நிகழட்டும்.

வாழும் மட்டும் நல்லவர்களாக வாழப் பழகிக் கொள்வோம்... நம் வாழ்வின் நல்ல பண்புகளை விதைத்துச் செல்வோம்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 3 ஜூலை, 2016

மனசு பேசுகிறது : ஆவியும்... சாமியும்...

ன்னடா இது தலைப்புல ஆவியும் சாமியும் போட்டிருக்கானே ரெண்டுக்கும் ஆகாதே... பேய் புடிச்சா சாமி அழைச்சித்தானே விரட்டுறானுங்க... என்ன குழப்புறானேன்னு நினைக்கிறீங்களா... கொஞ்சம் ஆவி பத்தியும் கொஞ்சம் சாமி பற்றியும் பேசலாமே... அதுக்கு முன்னால சாமியே கிடையாதுங்கிறேன்... சாமியாம் ஆவியாம்ன்னு சொல்றவங்க இத்தோட வெளியாயிடலாம். ஏன்னா சாமி இருக்கா..? இல்லையா...? ஆவி இருக்கா... இல்லையா...? அப்படிங்கிற பட்டிமன்றமெல்லாம் இங்கு நடத்தலை... சாமி இருக்குன்னா இருக்கு... இல்லைன்னா இல்லை... என்பது அவரவர் மனதைப் பொறுத்தது. என்னைப் பொறுத்தவரை நான் சாமி கும்பிடுபவன்தான்... இதுவரை பேய்... பிசாசுக்கு பயந்தவனில்லை... அதில் நம்பிக்கையும் வைத்தவன் அல்ல... ஆனால் எங்கள் வீட்டில் நிகழ்ந்த நிகழ்வு அப்படி ஒன்று இருக்குமோ என்று நம்ப வைத்தது. அதை விடுங்க... வாங்க நாம கொஞ்சம் பேசலாம்.


நானெல்லாம் சின்ன வயசுல இருந்தே மாரி... கருப்பன்... முனியய்யா... அய்யனார் என்று எங்கள் ஊரில் இருக்கும் தெய்வங்களை வணங்கியே வளர்ந்தவன். இப்பவும் அந்த தெய்வங்கள் மீது மட்டுமின்றி இன்னும் சில தெய்வங்கள் மீது அதீத பற்றுக் கொண்டவன் நான். எங்கள் முனியய்யாவை நினைத்து நான் எதைச் செய்தாலும் அதில் வெற்றி பெறுபவன். எங்க முனியய்யா மீது எனக்கு மட்டுமல்ல... எங்க அப்பாவுக்கும் தீவிரப் பற்று உண்டு. கண்மாய் நிறைந்து கிடக்கும் போது அங்கு குளித்துவிட்டு கண்மாய்க் கரையில் இருக்கும் முனிஸ்வரரை விழுந்து வணங்கி நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு வருவார். வீட்டில் ஏதேனும் நல்ல காரியம் செய்ய வேண்டும் என்றால் அங்கு போய் வேண்டி திருவுலம் கேட்டு விட்டார் என்றால் மிகுந்த சந்தோஷமாய் வருவார். அந்தக் காரியமும் மிகச் சிறப்பாக நடந்து முடியும்.

ஆவியின்னு வச்சிக்கங்களேன்... கிராமத்தில்தானே பேய் அதிகம் பிடிக்கும். வெளிய பொகும் போது, வைக்கோல் அள்ளப் போகும் போது, தண்ணி எடுக்கப் போகும் போது என எங்காவது அதை பிடித்துக் கொண்டு வந்து விடுவார்கள். அவர்களாக சிரிப்பார்கள்... என்னமோ பேசுவார்கள்... தலைமுடியை அள்ளிக் கட்டி விட்டாலும் அவிழ்த்துப் போட்டுக் கொண்டு முறைத்துப் பார்ப்பார்கள். சாமி ஆடுபவர்கள் வந்து துணூறு போட்டால்தான் அவர்களை விட்டு விலகும். சில நேரங்களில் ரொம்ப முரண்டு பிடிக்கும்.. அப்போதெல்லாம் பெரிய பூசாரிகளிடம் போவார்கள்... எங்க வீட்டில் கூட அக்காக்களுக்கு எல்லாம் பிடித்திருக்கிறது. துணூறு போட்டு விரட்டி இருக்கிறார்கள். எனக்கு இதிலெல்லாம் அதிக நம்பிக்கை கிடையாது. ஒன்பதாவது படிக்கும் போதே இருட்டில் சைக்கிளில் வர ஆரம்பித்தவன்தான்.. திருமணத்திற்கு முன்னர் எல்லாம் இரவு பதினோரு மணி, பணிரெண்டு மணிக்கு கணிப்பொறி நிலையத்தில் இருந்து சைக்கிளில் வருவேன். அதிகாலை மூணு மணிக்கெல்லாம் வந்ததுண்டு. அதனாலேயே திருமணம் முடிந்ததும் நீ இருட்டு ஏமாத்துல வருவே... சொன்னாலும் கேக்கமாட்டே என தேவகோட்டையில் வீடு பார்த்து தங்கச் சொல்லி விட்டார்கள்.

இப்ப எங்க பகுதியில கொலக்குடியின்னு ஒரு ஊர்ல 'இடையன் காளி' தோன்றியிருக்கிறாள். ஏழெட்டு மாசத்துக்குள் மிகப் பிரபலமாகிவிட்டது. பெரும்பாலும் பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் அருள்கிறது. எங்க சொந்தக்காரர் ஒருவரின் கனவில் வந்து நான் இந்த ஊரில் பிறந்தவள்,  ஒரு பிரிவினரால் பாதிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டேன் என்று சொல்லி எனக்கு ஆலயம் அமைத்துக் கொடு என்று அழைத்ததின் பேரில் அவரும் இன்னும் சிலருமாய் கனவில் காட்டிய இடத்தில் தேடி, ஒரு முனியய்யா கோவிலின் அருகில் அது காட்டிய அடையாளங்கள் இருக்க, அங்கு மண்ணெடுத்து இப்போது இடையன் காளியம்மன் கோவில் வீடு கட்டி கும்பாபிஷேகம் முடித்து விட்டார்கள். யார் கனவில் வந்ததோ... அவர் மூலமாக பக்தர்களுக்கு வரம் அளிக்கிறாள். தேவகோட்டையில் இருந்து பேருந்து விடப்பட்டிருக்கிறது. நினைத்ததை நடத்திக் கொடுக்கிறாள். எல்லோரும் கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள்... நானும் வைத்திருக்கிறேன்... சிலர் அவரிடம் குறி கேட்பது போல் கேட்கிறார்கள். 

பேய் என்பது இல்லை என்றே சொன்னாலும் ஏதோ ஒரு சக்தி இருக்கத்தான் செய்கிறது. பேய் பிடித்தவர்களின் செய்கைகள் சில நேரம் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.  நாம் பார்த்துப் பழகியவர்கள் இறந்த பின்னர் இன்னொருவர் மூலம் பேசும் போது நம்பாமல் இருக்க முடியவில்லை. மனைவி பிறந்த கிராமத்திற்குச் சென்றால் போர்டிகோவில்தான் படுப்பது வழக்கம்... நள்ளிரவில் கொலுசுச் சத்தம் நன்றாகக் கேட்கும்... நாய் குலைக்கும்... இதை நான் மட்டுமே உணர்கிறேன் என்று நினைத்தால் மனைவியும் விழித்துக் கொண்டு கொலுசு சத்தம் கேக்குதுங்க என்று சொல்வார். சரி இதெல்லாம் பிரமைதான் என்று நினைத்தாலும் இரு தினங்களுக்கு முன்னர் அறையில் பேய் குறித்து பேச்சு அடிப்பட்டபோது மச்சான் (இவனும் அந்த ஊர்தான், மனைவியின் சித்தி பையன்) கொலுசு சத்தம் கேட்பது குறித்து விரிவான தகவல்களுடன் பகிர்ந்து கொண்டான். இதை நம்பாமல் இருக்க முடியுமா சொல்லுங்க.

நாங்கள் தனியாக இருந்த சமயம், பாப்பா வயிற்றில் இருந்த போது மனைவிக்கு வாந்தி வந்தால் மயங்கி விடுவார்... வெளியில் அமர்ந்துதான் சாப்பிடுவோம்... அப்படியே வாந்தி எடுத்து மயங்கிவிடுவார். பின்னர் அவரை பெட்டில் கொண்டு வந்து படுக்க வைத்தால் சில நேரம் சீக்கிரம் எழுந்து விடுவார். சில நேரங்களில் எழ மாட்டார். அப்போதெல்லாம் சற்றே தள்ளியிருந்த அக்கா வீட்டுக்குப் போய் அழைத்து வந்து ஆட்டோ பிடித்து ஹாஸ்பிடல் கொண்டு செல்வோம். இப்படித்தான் ஒரு முறை அவருக்கு மயக்கம் வந்தது பின்னர் அவரின் பேச்சு கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தது. இரவெல்லாம் என்னென்னமோ சொல்லிப்  புலம்புவார். சரி எங்கோ பயந்திருக்கிறார் துணூறு வாங்கிப் போடலாம் என நினைத்தபடி நண்பனின் வீட்டுக்குச் சென்றேன். அவன் சாமியாடி... சரி அவனிடமே துணூறு போடச் சொல்லலாம் என விவரத்தைச் சொன்னதும் அதெல்லாம் வேண்டான்டா.... அதெல்லாம் சும்மா இருக்கும் என்று மறுத்தான்... உடனே தங்கைதான், அண்ணன் கூப்பிடுறாங்கள்ல போயி பாத்துட்டு வாங்கன்னு சொன்னுச்சு. அவனும் வந்தான்... உட்கார்ந்திருந்தான்... ரெண்டு பேரிடமும் பேசினான்... தண்ணி வாங்கிக் குடித்தான்... பேசாமல் எழுந்து சென்று விட்டான். பின்னாலேயே போன நான் துணூறு போடாமல் போறேன்னு கேட்டதும். அதெல்லாம் வேண்டாம் என்று கிளம்பிவிட்டான்.

அதன் பின்னர் சிறிது நேரத்தில் அவனுக்கு போன் அடித்தால் தங்கைதான் எடுத்தார். எங்கேம்மா அவன் என்றதும் இந்தாத்தாண்ணே இருக்காக... விழுந்து எந்திரிச்சி வந்திருக்காக என்றார். என்னது விழுந்துட்டானா எங்கேன்னு கேட்க, நம்ம வீட்டுக்கு வந்துட்டு வரும்போது முனியய்யா கோவிலுக்கிட்ட யாரோ தூக்கி எறிஞ்ச மாதிரி இருந்துச்சாம்... விழுந்து எந்திரிச்சி வந்திருக்கார் என்றவர், அவனிடம் போனைக் கொடுக்க, என்னடா ஆச்சி என்றதும் அடப்போடா... தங்கச்சிக்கு துணூறு போடலாம்ன்னு வந்தா நான் உள்ள வர்றேன்... உங்க பின்னாடி உங்க ஊரு முனியய்யா நிக்கிறாரு... அந்த இடத்துல நான் எப்படி துணூறு போட முடியும். உங்களை எதுவும் ஒண்ணும் செய்ய முடியாது. அதையே நினைச்சிக்கிட்டு வந்தேன்... தூக்கி வீசிருச்சு.. என்றான். இது என் வாழ்வில் நிகழ்ந்தது... இதை எப்படி நம்பாமல் இருக்க முடியும்.


நாய் குலைப்பது... கொலுசு சப்தம் கேட்பது... ஆந்தை அலறுவது... பேச்சுக் குரல்கள் கேட்பது என்பதெல்லாம் கிராமங்களில் அதிகம் இருக்கும். நகரங்களில் வீட்டிற்கு முன்னேதான் பிணம் தூக்கிச் செல்வார்கள். ஆனால் இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் அரிது என்றாலும் சில செய்திகளும் சில நிகழ்வுகளும் பேய்கள் இருப்பதை உறுதி செய்கின்றன.  எங்க பழைய வீட்டில் (இப்போது இடித்தாச்சு) குடுகுடுப்பைக்காரன் படியேறி மேலே வரமுடியாது. எங்கள் பதினெட்டாம் படிக்கருப்பனும், எங்க வீட்டுத் தெய்வமான பெண் தெய்வமும் அவனை படியேற விடுவதில்லை. அடுத்த நாள் காலையில் அவன் இதைச் சொல்லி யாசகம் வாங்கிச் செல்வான். வீடு காக்கும் பெண் தெய்வங்கள் கிராமங்களில் எல்லாருடைய வீட்டிலும் இருக்கும். அதற்கு படையல் போட்டுக் கும்பிடுவார்கள். மிகவும் சக்தி வாய்ந்த பெண் தெய்வங்கள் அவை.

அட ஏன்ய்யா ஆவியும் கிடையாது... சாமியும் கிடையாது என்பவர்களுக்கு இதெல்லாம் அனுபவம்தான்... ஒருவேளை மன பிரம்மையாகக் கூட இருக்கலாம் இருந்தாலும் எனக்கு பேய் பிசாசின் மீது அதீத நம்பிக்கை இல்லை என்றாலும் எங்க ஊர் முனியய்யா மீது ஒரு பற்றுதல்... எங்களுக்கான எந்தத் தொடங்கலிலும் அவரோட ஆசியுடன்தான் செய்கிறோம். ஆம் நான் சாமி கும்பிடுபவன்தான்.
-'பரிவை' சே.குமார்.



வெள்ளி, 1 ஜூலை, 2016

மனசு பேசுகிறது : நல்லதைச் சொல்லி வளர்ப்போம்

கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள், அது என்னன்னா 'பொட்டப்புள்ளய பொத்தி வளர்க்கணும். ஆம்பளப் புள்ளய அடக்கி வளக்கணும்' அப்படின்னு சொல்வாங்க. அது பத்துப் பதினைந்து வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் சரியின்னு சொல்லலாம். ஆனா இன்னைக்கு நிலையில கிராமத்துல கூட பொம்பளைப் புள்ளைங்களை பொத்தி வளர்க்க முடியலை. காரணம் என்னன்னா இன்றைய உலகில் பெண்கள் புதுமைப் பெண்களாய் எல்லாத் துறைகளிலும் காலூன்றி வளர ஆரம்பித்து விட்டார்கள். அடுப்பெறிக்கும் பெண்ணுக்கு படிப்பெதற்குன்னு கேட்ட காலம் எல்லாம் மலையேறிப் போச்சு. மாட்டுச் சாணம் அள்ளி கூடையில வச்சி தலையில தூக்கிக்கிட்டுப் போயி வயல்ல கொட்டிட்டு வந்து பள்ளிக்கூடம் போன வீட்டுல பொறந்த பொண்ணு இன்னைக்கு ஸ்கூட்டியில காலேஜ் போகுது. மாடு கட்டிக்கிடக்கிற கசாலைப் பக்கமே போறதில்லை. சாணியா... ஐய்யேன்னு காத தூரம் போகுது. அதுபோக இன்னைக்கு சாணி அள்ள மாடும் இல்லை... அதை உரமாக்க விவசாயமும் இல்லைங்கிறது வேற விஷயம், இதைப் பற்றி பேசினா பதிவு விவசாயத்துக்குப் பின்னே கண்ணீரோடு பயணிக்கும்.

இன்றைக்கு பெண்கள் எல்லாத் துறைகளில் ஆண்களுக்கு நிகராக பணியாற்றுவது சந்தோஷமான விஷயம். 'பொம்பளப்புள்ளய எதுக்குங்க படிக்க வைக்கணும்... காலாகாலத்துல ஒருத்தன் கையில பிடிச்சிக் கொடுத்துட்டாப் போதும்'ன்னு சொன்னவருதான் 'ஏம்ப்பு உனக்கு சேதி தெரியுமா... எம்பேத்தி பத்தாப்புல நானூத்தி எம்பது மார்க்கு வாங்கியிருக்காளாம்'ன்னு சந்தோஷமாச் சொல்லிக்கிட்டுத் திரிகிறார். அந்த படிப்பறிவு இல்லாத மனிதருக்குள்... தன் மகளை ஒன்பதாவதுடன் நிறுத்திய அந்த மனிதருக்குள்... தன் பேத்தியின் சாதனை எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக்கிறது பாருங்கள். இதுதான் காலத்தின் மாற்றம்... இந்தக் காலத்தின் மாற்றம்... இந்த வளர்ச்சி... இன்றைய பெற்றோரால் குழந்தைகளை சரியான பாதையில் பயணிக்க வைக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான்.

பெண் பிள்ளைகளுக்கு நாம் சுதந்திரம் கொடுக்கிறோம்... அந்தச் சுதந்திரம் அவர்களைப் பொறுத்தவரை எந்தளவுக்கு நன்மை பயக்கிறது என்றால் நூற்றுக்கு எண்பது சதவிகிதத்துக்கு மேல் தவறான பாதையைத்தான் தேர்ந்தெடுக்க வைக்கிறது. இப்பல்லாம் ரெண்டாவது மூணாவது படிக்கும் போதே செல்போனில் நோண்டவும் டேப் (TAB)பில் மணிக்கணக்கில் விழுந்து கிடக்கவும் செய்கிறார்கள். இதற்கு காரணம் பெற்றோர்களாகிய நாம்தானே. நான் ஒருமுறை நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். ஒருநாள் முழுவதும் அங்கு தங்கியிருந்த போது ஐந்தாவது படிக்கும் அவரின் மகனை சாப்பிடும் நேரத்தில் மட்டுமே பார்த்தேன். அதுவும் யாருடனும் பேசாமல் வேகவேகமாக சாப்பிட்டு விட்டு அறைக்குள் புகுந்து கொண்டான். என்னங்க பையனுக்கு பரிட்சை எதுவுமா? என்றபோது 'அவனோட உலகமே டேப் (TAB) தான்... அதில்தான் இருபத்தி நாலு மணி நேரமும்... நான் அவனை எதுவும் சொல்வதில்லை...' என்றார் கூலாக. அவன் டேப்பில் கிடப்பது அவருக்கு அன்றைய நிலையில் சந்தோஷம்தான்... ஆனால் வருங்காலத்தில்...? அதை யோசிக்கும் நிலையில் அவர் இல்லை. ஏன்னா இன்றைய வாழ்க்கை நிலை அப்படிப் போய்க் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் ஒரு நண்பரின் முகநூல் பகிர்வில் அவருக்கும் அவர் மகளுக்குமான உரையாடலை பகிர்ந்திருந்தார். பத்தாம் வகுப்பிற்குள் நுழையும் மகள்,  சிறு வயது முதல் பக்கத்து வீட்டில் வசிக்கும், தன்னுடன் தொடர்ந்து ஒன்றாகப் படித்து வரும் தோழனின் செயல்பாடுகள் வித்தியாசமாய் இருப்பதாகச் சொல்லி, அவனை நானும் லைக் பண்ண ஆரம்பிச்சிட்டேன் அப்பா... தப்பாப்பா என்று சொன்ன போது, அது தப்பில்லைம்மா... இந்த வயசுல வர்ற இனக்கவர்ச்சிதான் அது, நமக்கு வாழ்க்கை விரிஞ்சி கிடக்கு... நிறைய சாதிக்கணும்... வரப்போற பரிட்சையில சாதிச்சி பெரிய ஆளா வரணும்... என்றெல்லாம் எடுத்துச் சொல்லி அதற்கு அழகாய் விளக்கங்கள் கொடுத்தபோது அந்தப் பெண் 'சாரிப்பா...' என்று சொல்லியிருக்கிறாள். இப்படி எத்தனை பெற்றோர் பேசுகிறோம். எதையும் விவரமாக எடுத்துச் சொல்கிறோமா...? இல்லையே எல்லாவற்றிலும் எடுத்தோம் கவிழ்த்தோம்தான்... இது போன்ற செயல்கள்தான் பல வினுப்பிரியாக்களைக் கொடுத்து விடுகிறது. இனியாவது பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேசுவோம். எது நல்லது... எது கெட்டது என்பதை எடுத்துச் சொல்லி அவர்களுக்குப் புரிய வைப்போம்.

நானும் என் மகனு(ளு)ம் நல்ல தோழர்கள்... எதையும் எங்களுக்குள் மறைத்துக் கொள்வதில்லை. சினிமா முதல் செக்ஸ் வரை எதையும் விட்டு வைப்பதில்லை எல்லாமே பேசுவோம் என்று சொல்லும் பெற்றோர்களைப் பார்த்து எனக்குச் சந்தோஷமாக இருக்கும். இன்றைய பாஸ்ட்புட் உலகில் வீட்டில் இருக்கும் நாலுபேரும் சேர்ந்து உண்டு... பேசிச் சிரித்து வாழ்வதென்பது அரிதாகிவிட்டது. கிராமங்களில் கூட ஒன்றாக உட்கார்ந்து எல்லாரும் பேசிச் சிரித்து சாப்பிட காலம் மலையேறி விட்டது. அப்படியிருக்க தன் பிள்ளைகள், பெண்டாட்டியுடன் பேசி சிரித்து மகிழ்ந்து வாழ கொஞ்ச நேரத்தையேனும் ஒதுக்கினால் வாழ்க்கை வசப்படும்.. நம் சந்திதியினரின் வாழ்வும் வளமாகும்... அதைச் செய்யப் பழகிக் கொள்வோம்.

எங்க வீட்டில் விஷால் பள்ளி விட்டு வரும் போது வீட்டுக்கு வரும் முன்னர் அன்று நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லி முடித்து விடுவான். என் மனைவி கூடச் சொல்வார், தொணத் தொணன்னு பேசிக்கிட்டே வருதுன்னு... ஆனா அது எவ்வளவு நல்ல பழக்கம் தெரியுமா... வாத்தியார் அடிச்சாக்கூட சொல்லிடுவான்... என்ன நடக்குதுன்னு நமக்கும் தெரியும்ல்ல... இப்பவே அவனைத் திட்டி அடக்கினால் பின்னால் வரும் காலங்களில் எதையும் சொல்ல மாட்டான்... அதனால் அவன் போக்கிலே வளரட்டும் என்று சொல்லுவேன். ஆனா எங்க பாப்பா வகுப்பறையில் என்ன நடந்துச்சுன்னு எதுவும் சொல்லாது... தம்பியைப் பார்த்து பழகிக்க என்று சொன்னாலும் இன்னும் அப்படித்தான் இருக்கு. அதனால பிள்ளைங்க எங்கு பொயிட்டு வந்தாலும் என்ன பண்ணினாய்... என்ன நடந்துச்சு... என கேட்டு வளர்த்தோமேயானால் பெரியவர்களானாலும் அவர்களின் இந்தப் பழக்கம் தொடரும் என்பது என் எண்ணம்.

வயதுக்கு வந்த பிள்ளைகள் காதல், அது இது என்று விழும் போதும் அதை மெல்ல மெல்ல அவர்களுக்கு விளக்கி அதிலிருந்து மீண்டு வரச் செய்வது பெற்றோரின் கடமை, நல்ல பையன் என்றாலோ அல்லது நல்ல பெண் என்றாலோ நாங்களே அவரின் பெற்றோரிடம் பேசி திருமணம் பண்ணி வைக்கிறோம் என்று சொல்லி அதைச் செய்து வைத்தாலோ போதும். அதை விடுத்து சாதி என்ன, மதம் என்ன என்றெல்லாம் பேசி அடித்து ஆர்ப்பாட்டம் பண்ணி அவர்களின் உயிரை வாங்குவதாலோ காதலித்தவர்களோடு ஓடு விடுவதாலோ என்ன லாபம்...? அதுவும் எங்கள் தென் மாவட்டங்களில் ஓடிப்போன பெண்ணையோ பையனையோ வெட்டிக் கொள்கிறார்கள். இத்தனை வருடம் வளர்த்து வெட்டிக் கொள்வதற்குப் பதில் அவர்களை வாழ வைக்கலாமே...

பெண் பிள்ளைகளைப் படிக்க வைப்போம்... வேலைக்கு போகச் செய்வோம்... அவர்களுடன் நிறையப் பேசுவோம்.. ஐடித் துறை கொடுக்கும் சலுகைகளும் சந்தோஷங்களும் அவர்களின் வாழ்க்கையில் உயிரை இழக்கும் வரை கொண்டு செல்வதை அவர்களுக்கு புரிய வைப்போம். இணைய வெளி விரிந்து கிடக்கிறது... அதில் நன்மைகள் இருந்தாலும் தீமைகள் அதிகம் இருக்கு என்பதை நாம் விரிவாக... விவரமாகச் சொல்லி வைப்போம். இனி வரும் காலங்களில் ஸ்வாதிகளையும் வினுப்பிரியாக்களையும் இழப்பதைத் தவிர்ப்போம்.

இன்னும் நிறையப் பேசலாம்... இன்னுமொரு பகிர்வில் பேசுவோம்.

மொத்தத்தில் பிள்ளைகளை கட்டுப்பாட்டோடும் கவனமாகவும் வளர்ப்போம். நிகழ்வுகளுக்குப் பின்னே வருந்துவதைவிட நிதர்சனம் இதுதான் என்பதை விளக்கி நம் சந்ததிகளை நம்மோடு... நட்போடும்... மகிழ்வோடும் வாழ வைப்போம்.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 24 ஜூன், 2016

மனசின் பக்கம் : சுகந்தானுங்களே...

ல்லாரும் எப்படியிருக்கீங்க நட்புக்களே...

ரில் இருந்து வந்து ஒரு வாரம் ஆகியும் இன்னும் ஊரின் நினைவுகளே மனசெங்கும் ஊர்ந்து கொண்டிருப்பதால் எதிலும் மனசு ஒட்டவில்லை. கடந்த முறை எல்லாம் ஒரு வாரத்தில் மீண்டும் அபுதாபி மனிதனாகி விடுவேன். ஆனால் இந்த முறை இன்னும் இன்னும் வீட்டு நினைவுகள் என்னுள்ளே துளிர் விட்டு வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த முறை அபுதாபி வரும் எண்ணமே மனதிற்குள் எழவில்லை. கடைசி நிமிடத்தில் வேகவேகமாக சாமான்கள் பேக்கில் நிரப்பினேன். முப்பது கிலோ கொண்டு வர வேண்டிய இடத்தில் பதினோரு கிலோ மட்டுமே எடுத்துக் கொண்டு பேருந்தில் திருச்சி விமான நிலையம் வரும்போதெல்லாம் திரும்பி போய்விடலாமா என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. கடன்களை முடித்து விட்டு விரைவில் ஊரில் போய் ஏதாவது வேலை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த முறை ரொம்ப அதிகமாயிருச்சு... போதும் குடும்பத்தை பிரிந்த வாழ்க்கை என்ற எண்ணம் ஒவ்வொரு விடுமுறைக்குப் பின்னும் ஏற்படுவதுதானே என்று கில்லர்ஜி அண்ணன் போன்றோர் நினைக்கலாம்... இந்த முறை தெளிவான எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இன்னும் இரண்டு வருடங்கள் கஷ்டப்படத்தான் வேண்டும். பார்க்கலாம்.. விரைவில் இந்த வாழ்க்கையிலிருந்து விடுபடணும்...

னசு எதிலும் ஒட்டாத நிலையில் கணிப்பொறியில் கூட எதையும் பார்க்கும் எண்ணம் வரவில்லை... கில்லர்ஜி அண்ணாவின் இரண்டு பதிவுகளுக்கு முந்தைய பகிர்வு, செல்வராஜூ ஐயாவின் பகிர்வு என இரண்டை மட்டுமே வாசித்து கருத்திட்டேன். சில நேரம் முகப்புத்தகத்தில் அலைந்து சிலருடன் அரட்டை அடித்து கொஞ்சம் என்னைப் புதுப்பித்துக் கொண்டேன். சிறுகதைப் போட்டிக்கு பரிசாக அகல் மின்னிதழ் ஆசிரியரும் நண்பருமான சத்யா ஜி அவர்கள் அனுப்பிய இரண்டு புத்தகங்களையும் எடுத்து வந்திருந்தேன்.பெரும்பாலான நேரங்களை அ. முத்துலிங்கம் எழுதிய 'கடவுள் தொடங்கிய இடம்' விழுங்கியது. வாசிக்க வாசிக்க ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் எழுத்து... இலங்கைத் தமிழில் நம்மை கட்டிப் போட்டு... நிஷாந் பின்னாலேயே இலங்கையில் இருந்து கனடாவுக்கு நாடு நாடாக கடந்து செல்ல வைக்கிறது. அருமையானதொரு நாவல்... கொடுத்த நண்பருக்கு நன்றி.

பாக்யா வார இதழில் 'திருமண ஒத்திகை' என்னும் தொடர்கதை எழுதும் ஆர்.வி.சரவணன் அண்ணன் அவர்கள் 'உறியடி' படம் குறித்து எழுதியதைப் படித்து அந்தப் படத்தைப் பார்த்தேன். படிக்கும் மாணவர்கள் சதா தண்ணி... தண்ணி... என இருப்பதையும் சாதி வெறியையும் சொல்லும் படம். கடைசியில் பாடம் சொன்னாலும் மாணவர்கள் படிப்பதையும் காட்டியிருக்கலாம். ஆனாலும் படம் நல்லாத்தான் இருக்கு. அறிமுக இயக்குநருக்கு வாழ்த்துக்கள். இப்ப சரவணன் அண்ணனைப் பற்றி, அண்ணே நான் ஊருக்கு வந்திருக்கேன் என்று சொன்னதும் 'குமார் இந்த முறை நீங்க சென்னை வாறீங்க.. நான் அரசன், ஆவிக்கிட்ட எல்லாம் சொல்லிடுறேன்... ஒருநாள் சந்திக்கிறோம்... உங்களை நான் கண்டிப்பாக பார்க்க வேண்டும்' என்றார். சரி என்று சொன்னாலும் சூழல் என்னை எங்கும் போகவிடவில்லை... மீண்டும் அபுதாபி திரும்பும் அன்று காலை போனடித்தேன்... கிடைக்கலை... பின்னர் அடித்தேன்... பேசினார் சரியாக கேட்கலை... சென்னை விமான நிலையத்தில் வந்து பேசினால் அவர் இரயிலில் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார். சொல்லியிருந்தால் இருந்து சந்தித்துவிட்டு வந்திருப்பேனே என்று புலம்பினார்... எனக்கும் வேதனையாகத்தான் இருந்தது... கண்டிப்பாக சந்திப்போம் அண்ணா என்று சொல்லி வைத்தேன் எப்படியும் சந்திப்போம் என்ற நம்பிக்கையில்...

ருக்கு வந்திருக்கீங்களா..? நீங்க இங்கு வர வேண்டும்...? எப்போ வாறீங்க...? முகநூலில் வந்து விழுந்த வாசகங்களுக்கு சொந்தக்காரர் அன்பு அண்ணன் புதுக்கோட்டைக் கவிஞர் செல்வக்குமார் அவர்கள். கொஞ்சம் வேலை அடுத்த வாரம் வருகிறேன் எனச் சொல்லி போன் நம்பர் வாங்கினேன். அதன் பின்னான நிகழ்வுகள் எங்கும் செல்ல முடியாத சூழலை எனக்கு அளித்தது. செல்வா அண்ணனுடன் போனில் கூட பேசவில்லை. அங்கிருந்து இங்கு வந்தும் கூப்பிடவில்லை... ஒரு வழியாக இன்றுதான் அவரைக் கூப்பிட்டேன்... கொஞ்ச நேரமே பேசினேன். நான் வரவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் நம் மக்களுக்கே உரிய வாஞ்சையோடு பேசினார்... அந்தப் பாசமான பேச்சைக் கேட்டதும் இவர்களை எல்லாம் சந்திக்காமல் வந்து விட்டோமே என வருத்தம் மேலிட்டது. எப்படியும் சந்திப்போம் அண்ணா.

புத்தகம் போட வேண்டும்... அது குறித்து பேச வேண்டும் என்று கிளம்பியவன் ஊரில் ஒன்று மாற்றி ஒன்றென நிகழ்வுகள் வர, பொருளாதார சிக்கல் எழுந்த நிலையில் அது குறித்தான பேச்சை எடுக்கவேயில்லை... புத்தகம் போடுவது என்பது கனவாகிப் போகும் போல.

ன்னை யாரும் மறந்து விடக்கூடாது என்பதற்காக எழுதியது இது... அப்ப அப்ப எழுதுவேன்... மாற்றங்கள் வரும்வரை மனசு மெதுவாகத்தான் பயணிக்கும். நன்றி.
-'பரிவை' சே.குமார்.