மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 28 ஜனவரி, 2013

பழைமை நினைவுகள் - சுஜாதாவின் அருமையான கட்டுரை

   மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில்  நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன  வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம்  என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். "யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று  கண் சிமிட்டலுடன் கேட்டார். நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன். "எதுக்குப்பா?" "தொடுங்களேன்!" சற்று வியப்புடன்  தொட்டார். "மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!" என்றேன். ‘‘இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன?’என்று, விரல்களைச்  சொன்னபடி அசைத்தார். "ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி  வெச்சுண்டு ஒரே ஒரு தடவை  லேசா குதிங்கோ. பாத்து... பாத்து..." "இது என்னப்பா ட்ரிக்கு?" என்று  அப்படியே செய்தார். "உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!"  என்றேன். அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?"  "ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து  உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட் டீங்க!" என்றேன்.
    
    தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச்  சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு  வருவதில்லை.  ‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார... அந்த  நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி  நேரம்  யோசித்தேன், கிட்டவில்லை. மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன்.  "ரம்யா கிருஷ்ணன்" என்றாள்.
    
    இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது  தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது  மூளையில் வேறு பேட்டை போலும்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்,  சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா அப்பாவுடன் ஜட்கா வண்டியில்  "ஜகதலப்ரதாபன்"  சினிமா போனது, ஒண்ணாம்  கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க்  கொடுத்தது,  பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம்  தெளிவாக  ஞாபகம் உள்ளது.
    
    ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள்  ஞாபகங்களின் வடிவம்தான்! டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும்,  பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து  வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல்  பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.
    
    மெரீனாவில்,  ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன்.  இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே,  பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து  வருகின்றன.
    
    ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா,  பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை...  நாம  தப்பிச்சோம்!’ என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து,  ‘பரவால்லை... இன்னும்  கொஞ்ச நாள் இருக்கு என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல் லாம்  வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன்,  உடம்பு  சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!
    
     சயின்ஸ் அதிகம்  படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன.  யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர்  கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இ டையில்  எங்கோ இருக்கிறது!".
    
    ஆனால், டி.என்.ஏ. ரகசியத்தையும், உயிரின  வேறுபாடுகளையும்,  அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, நம்மை மீறிய சக்தி புலன்  உணர்வுக்கும்,  நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத ஒரு சக்தி இருப்பதில் எனக்கு  நம்பிக்கை வந்துவிட்டது. நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல்  படித்தபோது ‘அக்னாஸ்டிக்’காக அதாவது, கடவுள் இருப்பைப் பற்றித்  தெரியாதவனாக இருந்திருக்கிறேன்.
    
    மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை.  பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும்.  தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும்  புதிய  பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல... வேறு பிறவி.  மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல்  கஷ்டப்படுவேன்.
    
    இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல  யோசிக்கும் போது, சட்டென்று  ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன்.
    
    சொர்க்கம், நரகம்  இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன்.  அப்படி  ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச்  சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது.
    
    ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில்  காலை  எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன்.
    
    வாழ்க்கையே  இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).
    
    இன்றைய  தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில்  உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல்  இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது,  இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது  படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது  லிஸ்ட்டை  விட்டுப் போய்விட்டது.
    
     தி.ஜானகிராமனின் "கொட்டு மேளம்" கதையில் வரும்  டாக்டருக்குப் போல,  மனைவி அவ்வப்போது வர வேண்டிய பணத்தையும், ஏமாற்றிய ஜனங்களை யும் எனக்குச்  சொல்லிக் காட்டுவாள். அவளும் இப்போது இதில் பயனில்லை என்று >> நிறுத்திவிட்டாள்.  பணம் பிரதானமாக இல்லாததால், இன்று எழுபது வயசில் மனச்சாட்சி உறுத்தாமல்  வாழ முடிகிறது. ஜெயிலுக்குப் போன தில்லை. ஒரே ஒரு தடவை டில்லியிலும், ஒரு  தடவை பெங்களூரிலும் ஒன்வேயில் ஸ்கூட்டர் ஓட்டியதால், மாஜிஸ்ட்ரேட்  கோர்ட்டுக்குப் போயிருக்கிறேன். வோட்டிங் மெஷினுக் காக சாட்சி சொல்ல,  கேரளா  ஹைகோர்ட் டில் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறேன்.
    
    அம்பலம்  இணைய (www.ambalam.com) இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்... "நாற்பது வருஷமாக  உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி  என்ன நினைக்கிறீர் கள்?" என்று. நீண்ட யோசனைக்குப் பிறகு பதில்  அளித்தேன்... "நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க  வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!"  என்று.
    
    என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.  பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டிலிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை  யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள்  நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள்  அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள்.
    
     ‘ரோஜா’  வெளிவந்த  சமயத்தில், பெங்களூருக்குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை  ஜலஹள்ளியில்,  ‘அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள்.  "ஆ"  கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண்டும்" என்று  திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப்  படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என்  வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில்  இருந்து  முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள்.
    
     மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால்  பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்..!

(குறிப்பு : எனக்கு நல்ல கட்டுரைகளை மின்னஞ்சலில் அனுப்பி படிக்கத் தூண்டும் அன்பு நண்பரும் அண்ணனுமாகிய் திரு. சுபஹான் அவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் அனுப்பிய பகிர்வு இது - நன்றி அவருக்கும் அவருக்கு அனுப்பிய நண்பர்களுக்கும்)

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

வட்டியும் முதலும் - ராஜுமுருகன்

 
(ஓவியம் : ஹாசிப் கான்) 

"ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூ, உள்ள இருக்குமாம் ஈரும் பேனும்...'' - சினிமா டைரக்டராகப் போவதாக நான் அறிவித்தவுடன் என் தாத்தா சொன்ன பொன்மொழி இது. அவர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பதை ஒவ்வோர் உதவி இயக்குநரும் அனுதினமும் அறிவோம். 'கனவுத் தொழிற்சாலை’ என்ற பதத்தைக் கண்டுபிடித்தவனைக் கண்டுபிடித்து மண்டையில் பூசணி உடைக்க வேண்டும். அவ்வளவு பொருத்தம். கனவுகள் பெருகும் இந்தத் தொழிற்சாலையில், நிராசைகளும் காத்திருப்புகளும் கண்ணுக்குத் தெரியாத கழிவுப் பொருட்களாக எங்கெங்கும் குவிந்திருக்கின்றன.

 சமீபத்தில் தம்பி ராமையாவிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது சொன்னார், ''தம்பி... பாதி வயசுல பாஸ் ஆனவன் நான். என்னென்னவோ பண்ணிப் பாத்தும் கடவுள் என் கழுத்துல காலவெச்சு மிதிச் சுட்டே இருந்தான். அவனுக்குக் கால் வலிச்சு எடுத்தான் பாருங்க... விருட்டுனு நான் எந்திரிச்சு மேல வந்துட்டேன்...'' எனச் சொல்லிவிட்டுப் பகபகவெனச் சிரித்தார். அந்த காமெடிக்குப் பின்னால் எவ்வளவு டிராஜடி இருக்கிறது என்பதை அறிவேன். இது ஒரு விசித்திரமான வேதியியல். ஏகப்பட்ட படங்கள் வேலை பார்த்து, உலகப் படங்களில் ஊறி, இலக்கியம் படித்து, டிஸ்கஷனில் எந்தக் கதைக்கும் எகிறி சீன் பிடித்து ஆச்சர்யப்படுத்தும் எத்தனையோ உதவி இயக்குநர்கள் 40 ப்ளஸ் ஆகியும் படம் பண்ணாமலே இருப்பார்கள். ''ரெண்டு ஷார்ட் ஃபிலிம் பண்ணிருக்கேன் சார்...'' எனக் காலையில் வந்து கதவு தட்டிய பையன், அடுத்த மாசம் வடபழனி சுவர்களில் புதுப் பட போஸ்டர் ஒட்டியிருப்பான். ''அவன்ட்ட செம ஸ்க்ரிப்ட் இருக்கு பாஸ்...'' என ஒரு கதையைப் பற்றி நாலைந்து வருடங்களாகப் பேசிக்கொண்டே இருப்பார்கள். அந்த ஸ்க்ரிப்ட்டுக்குச் சொந்தக்காரன், ''ஆபீஸ் போடப்போறேன் தலைவா... டெஸ்ட் ஷூட் போறேன் தலைவா...'' எனப் பார்க்கும்போது எல்லாம் சொல்வான். ''நைட்டு ஒரு லைன் தோணுச்சுஜி... ஓப்பன் பண்ணா...'' எனப் பாடாவதி கதை ஒன்றைச் சொன்னவனுக்குக் கொஞ்ச நாள் கழித்து போன் பண்ணினால், ''கும்பகோணம் பக்கம் ஷூட்ல இருக்கேன்ஜி... அதே கதைதான்... சந்தானம் டேட்ஸ் அஞ்சு நாள் கேட்ருக்கோம். இல்லேன்னா, சூரி போயிரலாம்ல...'' என ஆச்சர்யப்படுத்துவான். ''இவரு கூத்துப்பட்டறைங்க... ஒரு படம் ஹீரோவா பண்ணிட்டிருக்காப்ல.  மைண்ட்ல வெச்சுக்கங்க...'' என அரை தாடிப் பையனை கணேஷ் பேக்கரி வாசலில் அறிமுகப்படுத்துவார்கள். அடுத்த வருடம் அதே பையனிடம் கதை சொல்லக் காத்திருக்க வேண்டும். படம் ஹிட் அடித்து, நாலைந்து கமிட்மென்ட்களுடன், ''சார்... எனக்குக் கதைல இன்னும் புல்-அப் பண்ணிங்கன்னா நல்லாருக்கும்... ரொமான்ஸ் ஏத்துங்கஜி...'' எனச் சொல்வதைக் கேட்க வேண்டும். 30 வருடங்களாகப் பஞ்சாயத்து சீன், காமெடி சீன்களில் எக்ஸ்ட்ரா டயலாக்குகள் பேசும் முகங்களை, துணை நடிகர்கள் சங்க வாசலில் பசித்த கண்களுடனே பார்க்க வாய்க்கும். ''ஃபர்ஸ்ட் படம் பெருசாப் போகலையே தவிர, ரசனையாப் பண்ணிருந்தாரு. ஏன்னே தெரியல... அப்புறம் ஆளையே காணோம்...'' என கோடம்பாக்கத்தில் வருடத்துக்கு 50 ஒரு பட டைரக்டர்கள் முகவரி அழிக்கப்படும். ''மூணு படம் தொடர்ந்து ஃப்ளாப்பு... இப்ப இன்னொரு புரொடியூஸர மடக்கிட்டான்யா... இதுல இவனே ஹீரோ வேற... என்னா கான்ஃபிடென்ட்... என்னதான் பண்றாய்ங்கன்னு தெரியலையே...'' என தினத்தந்தி விளம்பரம் பார்த்து டென்ஷன் ஆவார்கள். ''ஒரு பாட்டுக்கு மட்டும் ஆறு கோடி செலவாம்... என்கிட்ட குடுத்தா, மூணு உலகப் படம் எடுத்துருவேன்...'' என யாராவது புலம்பிக்கொண்டே இருப்பார்கள். ''அந்தப் படத்துல வொர்க் பண்ணப்போ, டான்ஸரா வந்த புள்ளப்பா இது... இப்ப விஜய் வரைக்கும் ஹீரோயினுக்குத் தேடுறாங்க. ஆடியோ பார்ட்டியில நம்மளக் கண்டுக்கவே மாட்டேங் குது...'' எனக் குமுறுவார்கள். அருண் சாருக்கு மைசூர் காட்டில் டிஸ்கஷனில் இருந்தபோது, அவரின் அப்பா தவறிப்போனார். வந்து சேர்வதற்குள் சாம்பல்தான் கிடந்தது. மலேசியாவில் சாங் எடுக்க இணை இயக்குநராகப் போயிருந்தபோது, அம்மா இறந்துபோனார். அதற்கும் கொள்ளி போட முடியவில்லை. ''நான் எடுக்கப்போற சினிமாவப் பாக்க அவங்க இல்லங்கறத விடு... கடைசியா அவங்களப் பாக்கவே நான் இல்லையே... போடா...'' என்ற அவரது வார்த்தைகள் அழியவே அழியாத வாய்ஸ் ஓவர். திரை தொடாத எத்தனையோ கதைகள், இழந்த உறவுகள், சிதைந்த மனங்கள், மீளாத கனவுகள் என எவ்வளவோ இருக்கின்றன. ஆனாலும், ஐ லவ் சினிமா!

இவ்வளவு இருந்தும் சினிமா என்ற கலை வடிவத்தின் மீதான காதல் குறையவே இல்லை. நாலாவது படிக்கும்போது முதல்முறையாக கும்பகோணம் விஜயா தியேட்டருக்கு சுப்பிரமணி தாத்தா என்னைப் படம் பார்க்க அழைத்துப்போனார். சிவாஜி-அம்பிகா நடித்த 'வாழ்க்கை’ படம். ஒண்ணாம் நம்பர் சோகக் காவியம். எனக்கு மேத்ஸ் க்ளாஸில் இருக்கிற மாதிரி திகிலடித்தது. ஒரு காட்சியில், தொழிற்சாலையில் வேலை பார்க்கிற சிவாஜி மெஷினுக்குள் கையை விட, கை துண்டாகிவிடும். இதைப் பார்த்ததும் உச்சகட்டப் பயத்தில் அலறி, தியேட்டரைவிட்டு தெறித்து ஓடிவந்தேன். வீடு வரைக்கும் அழுகை. ''ந்தா... சின்னப்பயலப் போயி இந்தப் படத்துக்கெல்லாம் அழைச்சுட்டுப் போயிருக்க... நீ வாடா நாளைக்கு உன்னைய ஒளவையாருக்கு நல்ல படமா அழைச்சுட்டுப் போறேன்...'' என்ற ஆத்தா, அடுத்த வாரம் என்னை அழைத்துப்போன படம் 'துலாபாரம்’. அது இன்னும் படுபயங்கரம். படம் முழுக்கப் பல பேர் அழுதுகொண்டு இருக்க, 'இனிமே சினிமாவுக்கே வரமாட்டேன்...’ என உறுதியெடுத்தேன். ஸ்கூலுக்குக் கிளம்ப லேட்டானால், 'இப்பக் கிளம்புறியா... இல்ல சினிமாக்குக் கூட்டிப்போவா..?’ என வீட்டில் மிரட்டுகிற அளவுக்குப் பயம். கூடுதலாக தூர்தர்ஷனில் ஞாயிற்றுக்கிழமை மதியங்களில் போடப்படும் ப்ளாக் அண்ட் வொயிட் பெங்கால் படங்களில், வெள்ளை பைஜாமாக்களில் ஆண்களும், முக்காடுகளில் பெண்களும் காரை பெயர்ந்த வீடுகளிலும் குளக்கரைகளிலும் திரிவதை அண்ணன் ரசித்துக்கொண்டு இருந்தது பல்ஸ் கூட்டியது. ஞாயிறு சாயங்காலங்களில் பஞ்சாயத்து போர்டில் தமிழ்ப் படம் பார்க்கக் கூட்டம் கட்டி ஏறும்போதுகூட, போவது இல்லை. ஏழாவது படிக்கும்போது, ''தம்பி... உனக்கு ஒரு படம் காட்றேன். பயம்லாம் இல்ல... செம காமெடியா இருக்கும் வா...'' என அண்ணன் அழைத்துப்போய் ஒரு படம் காட்டினான். அது சார்லி சாப்ளினின் 'சிட்டி லைட்ஸ்’. அந்தப் படத்தைப் பார்க்கும்போது, பொசுக்கென்று தொண்டைக்குள் உருண்ட பரவசப் பந்து, இப்போது வரை உருண்டுகொண்டே இருக்கிறது. அது ஒரு கெமிஸ்ட்ரி. நமக்குப் பிரியமான ஓர் கனவை நாம் கண்டுபிடித்துக்கொள்கிற தருணம். அதன் பிறகு சினிமா என்ற கலை, தீராத காதலாகவும், துயரமாகவும், கருணையாகவும் துரத்திக்கொண்டே இருக்கிறது.

'அவள் அப்படித்தான்’ க்ளைமாக்ஸில் கமலின் கார் தூரத்தில் போக, பீச் ரோட்டில் நிற்கிற ஸ்ரீப்ரியாவைப் பார்த்து வழிந்த கண்ணீர் காயவே இல்லை. 'பசி’ பட க்ளைமாக்ஸில் பிளாட்ஃபார்மில் இறந்துபோயிருக்கிற ஷோபாவைப் பார்த்ததும் திடுக்கிடும் விஜயனின் கண்கள் எனக்குள் உறைந்துவிட்டன. 'உதிரிப்பூக்கள்’ இறுதியில் ஆற்றங்கரையில் ஓடும் அந்தப் பிள்ளைகளின் மேல் இழையும் 'அழகிய கண்ணே...’ ஈரம் பூத்திருக்கிறது எப்போதும். 'சந்தியாராகம்’ கிழவர் தயங்கி நின்று ரிக்ஷாவில் ஓடிப்போய் ஏறுகிற ஒரு ஷாட், 'மெட்டி’யில் வடிவுக்கரசியின் நெற்றிப் பொட்டை அழித்தபடி சரத்பாபு பேசுகிற, 'இந்தப் பொம்பளைங்களுக்கு பொட்டுதான் உலகமா... அடுத்த கல்யாணம் பண்ணிக்கும்போது வெச்சுக்கிட்டாப் போச்சு’ என்கிற வசனம், '16 வயதினிலே’ படத்திலே கோவணத்தோடு சட்டை- பேன்ட்டை சுருட்டி டாக்டரின் முகத்தில் வீசி சப்பாணி காறித் துப்புகிற ஒரு காட்சி, 'அரங்கேற்றம்’ படத்தில் 'ஆம்பளைங்கன்னாலே மரத்துப்போச்சு’ என பிரமிளா பேசுகிற தொனி, 'நாயகன்’ சரண்யாவுக்கு கமல் தாலி கட்டுகிற ஷாட், 'புவனா ஒரு கேள்விக்குறியில்’ சுமித்ராவுக்கும் தனக்கும் நடுவில் உள்ள திரைச்சீலையை இழுத்துவிட்டபடி ரஜினி தருகிற ஒரு கோணல் புன்னகை, 'மகாநதி’யில் கல்கத்தாவில் இருந்து மகளை அழைத்துக்கொண்டு கிளம்பும்போது 'எங்கேயோ திக்குத்தெச’ என ஒலிக்கும் கமலின் குரல், 'பிதாமகன்’ ஹோட்டலில் வைத்து 'வெட்டியான வெளியப்போகச் சொல்றா’ என்றவனை விக்ரம் அடிக்கும் ஒரு அடி, 'வழக்கு எண்’ பெண்ணின் சிதைந்த முகத்தைப் பார்த்து அவன் காதலில் கலங்கும் கணம், 'சில்ரன் ஆஃப் ஹெவன்’ பள்ளி வாசலில் மூச்சிரைக்க நிற்கிற அந்தக் குட்டிப் பெண், 'கலர் ஆஃப் பேரடைஸ்’ படத்தில் கீழே விழுந்த குருவிக் குஞ்சைத் தூக்கி கூட்டில் வைக்கிற பார்வையற்ற சிறுவன், 'லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’லில் சுடப்படுவதற்கு முன் மகனுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக ஜோக்கரைப் போல நடந்து போகும் அப்பா, 'தி வே ஹோம்’ பேரனின் புறக்கணிப்பைச் சலனமே இல்லாமல் வாங்கிக்கொள்ளும் அந்தக் கிழவியின் கண்கள், 'ஈ.டி’-யில் அந்தச் சிறுவனை 'எலியட்’ என விநோதப் பிராணி அழைக்கும்போது வரும் ஆச்சர்யம், 'ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ நாஜிக்கள் வதைக் களத்தில் அதிரவைக்கிற மனித நிர்வாணம்... என எத்தனை எத்தனை பரவசத்தையும், பயங்கரத்தையும், காதலையும், மனிதத்தையும், கோபத்தையும், அரசியலையும் எனக்குத் தந்திருக்கிறது இந்த சினிமா.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான சினிமாக்கள் நமது உணர்வுகளை, நினைவுகளைக் கிளறடிக்கின்றன. எல்லோருடைய வாழ்க்கையிலும் சில சினிமாக்கள் நினைவுகளால் முக்கியத்துவம் அடைந்து இருக்கும். லிங்குசாமி சாரிடம் உதவி இயக்குநராக இருந்தபோது, கும்பகோணத்தில் டிஸ்கஷனில் இருந்தோம். ஒருநாள் காலையில் பாலாஜி சக்திவேல் சார் சென்னையில் இருந்து வந்தார். ''டேய் லிங்கு... இங்க கும்பகோணம் பக்கத்துல ஒரு டாக்டர் இப்பிடி ஒரு லெட்டர் எழுதிருக்காரு... அவரைப் போய்ப் பாக்கலாம்னுதான் வந்தேன். வர்றியா..?'' என்றார். 20 பக்கத்துக்கு மேலுள்ள லெட்டர் அது. 'கல்லூரி’ படத்தைப் பார்த்துவிட்டு, ஒரு டாக்டர் தனது வாழ்க்கையையும் நினைவுகளையும் அந்தப் படம் எவ்வளவு பாதித்திருக்கிறது என எழுதியிருந்தார். அவரைப் பார்க்கக் கிளம்பிப் போனோம். பக்கத்திலேயே ஒரு கிராமத்தில் அவர் வீடு. எங்களைப் பார்த்ததும் பயங்கர சந்தோஷமானார். பெல்பாட்டம், நீளக் கிருதா, சுருட்டை முடி என அவர் ஆள் பார்க்கவே ஈஸ்ட்மென் கலரில் இருந்தார். ''சார்... இது வரைக்கும் 100 தடவைக்கு மேல உங்க படத்தைப் பார்த்துட்டேன் சார்... எனக்கு என்னென்னவோ ஞாபகத்துக்கு வருது... டெய்லி ரெண்டு தடவ பார்த்திருவேன் சார்...'' என்றார் பரவசமாக. காபி கொடுக்க வந்த அவரது மகன் எங்களிடம் மெதுவாக, ''சார்... நான் அந்தப் படத்தை இன்னும் ஒரு தடவகூடப் பார்க்கலை... இவராலேயே பார்க்கலை. டெய்லி டி.வி.டி-ல இதைப் போட்டுக்கிட்டு உக்காந்துர்றாரு... டார்ச்சர் தாங்க முடியலை'' என்றான் டென்ஷனாக. அப்போதுதான் அந்த டாக்டரை மார்க்கமாகப் பார்த்தேன். ஏதோ ஒரு பழைய படத்தைச் சொல்லி, ''அதையும் இப்பிடித்தான் சார் வருஷக்கணக்குல ரெகுலராப் பார்த்துட்டு இருந்தேன்... அப்புறம் இந்தப் படத்தைத்தான் பார்க்கிறேன்...'' என படத்தைப் பற்றி பிரித்துப் பிரித்து அலசிக் காயப்போட்டார். ஏதேதோ பேசினார். வரும்போது பாலாஜி சார் சொன்னார், ''டேய்... ஒரு மனுஷனை ஒரு படம் எவ்வளவு பாதிக்குது பாரு... இந்தப் படம் பெருசாப் போகலை. ஆனா, எவனோ ஒருத்தனை அது இவ்வளவு பாதிச்சுருக்குன் னாலே, அதுல உண்மை இருக்கு. அதான் கலையோட அற்புதம். இந்த சந்தோஷத்துக்காகத்தான் படம் எடுக்கணும்.''

உண்மைதான். இப்படி நான் 'கடலோரக் கவிதைகள்’ படத்தை 50 தடவைக்கும் மேலாகப் பார்த்திருக்கிறேன். டீச்சரைக் காதலிக்காத யாராவது இருக்கிறோமா..? திருவாரூர் நீலகண்டன் அய்யா 'பராசக்தி’ படத்தை 200 தடவைக்கும் மேல் பார்த்திருக்கிறார். அவரது உடல் மொழியே சிவாஜி போலாகிவிட்டது. அவர் மருத்துவமனையில் இருந்தபோது, அமெரிக்காவில் இருந்து அவரது மகன் வந்துவிட்டார். ''டாக்டர் தாங்காதுன்னு சொல்லிட்டாங்க... அவரு ஆசப்படுறதக் குடுங்க...'' என்றார் மாமா. மகன், ''என்னப்பா வேணும் ஒனக்கு..?'' எனக் கேட்டபோது அவர் சொன்னார், ''தம்பிபுள்ள... ஒன் கம்ப்யூட்டர்ல 'பராசக்தி’ டி.வி.டி. போடேன்டா... பார்த்துக்கறேன்.'' கோவிந்தன் மாமா 'உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை 100 தடவைக்கு மேல் பார்த்திருப்பார். ''தலைவர் மேல வெறி மாப்ள... அதுவும் அந்தப் படத்தை அப்ப ரிலீஸ் பண்ணவுடாம ஏகப்பட்ட கரச்சலக் குடுத்தாய்ங்க. ஆனா, பேய்க் கூட்டம்ல பாத்துச்சு...'' என்பவர், இப்போதும் டி.வி-யில் அந்தப் படப் பாடல்கள் போட்டால், கண்கள் மின்னப் பார்ப்பார். மும்பையில் வேலை பார்க்கிற முரளி, 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே’வை வெறித்தனமாகப் பார்த்தான். தினமும் தியேட்டருக்குப் போய் பலப் பல முறை. அவனிடம், ''லூஸுப் பயலே... ஏன்டா அந்தப் படத்தை இப்பிடிப் பாக்குற?'' எனக் கேட்டதற்குச் சொன்னான், ''மச்சான்... அந்தப் புள்ள அப்பிடியே காஜல் சாயல் மச்சான். கொஞ்சம் கலர் கம்மி... மத்தபடி பேச்சு, சிரிப்பு எல்லாம்...'' என்றான். சாவித்திரி முதல் லட்சுமி மேனன் வரைக்கும் இப்படித் தன் காதலிகளின் சாயல் களை சினிமாக்களில் தேடிக்கொண்டேதானே இருக்கிறோம்.

டி.டி-யில் இருந்து டி.வி.டி. வரை வந்து, இப்போது டி.டி.ஹெச்-ல் வீட்டுக்குள் ரிலீஸ்ஆகிறது சினிமா. முதல்வர்களை உருவாக்கிய கவர்ச்சிகர சினிமா, நாம் காணவே காணாத எளிய மனிதர்களின் கதைகளைப் பேச வந்துவிட்டது. தேனிப் பக்கம் போனால், ''நாலு பட ஷூட்டிங் நடந்துட்டு இருக்கு பாஸ்... அந்தப் பக்கம் போகாதீங்க...'' என மக்கள் வேலையைப் பார்க்கிறார்கள். காலம் ஒவ்வொரு கலையையும் இப்படித்தான் அழைத்துச் செல்லும். காதல், அரசியல், சமூகம் என எல்லாத் திசைகளிலும் இனி புதிய புதிய சிந்தனைகள் வரும். இது மாற்றத்தின் காலம். சுவாரஸ்யமான, தீவிரமான படங்களுக்கான காலம்தான் இனி. சினிமா தரக்கூடிய உணர்வுகளும் கதைகளும் எப்போதும் தீரவே தீராது. கதைப் பஞ்சம் என்பது பெரிய உட்டாலக்கடி.

'தி பேட்டில் ஆஃப் அல்ஜீயர்ஸ்’ என்ற மறக்க முடியாத உன்னத சினிமாவை எடுத்தவர் கில்லோ பொன்டேகார்வோ. அவரிடம் ஒரு பேட்டியில், ''திரைக்கதையில் மொத்தம் எத்தனை வகை இருக்கிறது..?'' என்று கேட்கிறார்கள். அவர், ''இந்த உலகத்தோட மொத்த மக்கள்தொகை எவ்வளவு..?'' எனக் கேட்கிறார். ''சுமார் 700 கோடி...'' உடனே அவர் சொல்கிறார், ''அப்படின்னா 700 கோடி வகை இருக்கு!''

அப்படியென்றால், நம்மால் எடுக்கப்படாத சினிமாக்கள் இன்னும் எத்தனை எத்தனை இருக்கின்றன?

நன்றி : ஆனந்த விகடன்.

-'பரிவை' சே.குமார்

சனி, 26 ஜனவரி, 2013

குடியரசு தினம்



ஊழல்களை உறங்கப் போட
மக்கள் நலனில் அக்கறையின்றி
சுமைகளை நமக்களித்து சுகமாய்
ஆளும் மத்திய அரசும்...

ஓட்டுப் போட்டவர்கள் ஓடெடுத்தாலும்
எனக்கெனவென்று பழிவாங்கலே
தனது தலையாய கடனென
ஆளும் மாநில அரசும்...

மீன் பிடிக்க செல்பவர்களை
சுட்டு வீழ்த்தும் இராவண பூமியினருக்கு
மாலை மரியாதை தரும் அரசும்...

பொய்த்த விவசாயமும்
காணாமல் போன மின்சாரமும்
புரட்டிப் போட்ட வாழ்க்கையில்
புண்ணாகிப் போன மக்கள்
நலனில் அக்கறையில்லா அரசும்...

ஆளும் பூமியில்
காவிரியும் முல்லையும்
காலமெல்லாம் அறிக்கை...கடிதத்தில்
அரசியல் கூத்தாகிப் போக...

மக்கள் பிரச்சினைகளுக்காக
அன்றைய முதல்வர்
கடிதம் போட்டார்..
இன்றைய முதல்வர்
வழக்கு தொடுக்கிறார்...

எல்லாவற்றையும் பார்த்து
பழக்கப்பட்ட நாமும்
பாட்டில் விற்பனைகளை
கோடிகளாக்கி மகிழ்கிறோம்...

சிலிண்டர் விலை உயர்வும்
பொருட்களின் தட்டுப்பாடும்
வால் மார்ட்க்களின் வரவும்
நமக்கு பெரிதல்ல...

டாஸ்மாக்கின் மூன்று நாள்
விடுமுறையே மூச்செல்லாம்
பேச்சாகிப் போகிறது...

தன் வாரிசுகளுக்காகவே வாழும்
தமிழினத் தலைவரின் கூற்றுப் போல்
இதுவும் ஒரு விடுமுறை தினமே...!


அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்..

-'பரிவை' சே.குமார்.

புதன், 23 ஜனவரி, 2013

ஒரு முத்தமும் பல கேள்விகளும் - ஞாநி

‘பம்பாய்’ படத்துக்குப் பின் மறுபடியும் மணிரத்னம், ராஜீவ் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியுடன் எழுத ‘அறம்’ புகழ் எழுத்தாளர் ஜெயமோகன், நடிக்க  கார்த்திக்கின் மகன், ராதாவின் மகள், மறுபடியும் அரவிந்த்சாமி,  முதல்முறையாக மணிரத்னம் படத்தில் அர்ஜுன் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டும் பல விளம்பர அம்சங்களுடன் வரவிருக்கும் ‘கடல்’ படத்தின் முதல் டிரெய்லர் பார்த்தேன்.

பார்க்கச் சொன்னவர் திரையுலகில் பணி புரியும் ஒரு நண்பர்தான். படத்தில் நடிக்கும் ராதாவின் மகள் துளசிக்கு 15 வயதுதான் ஆகிறது. அந்த சிறுமியை இப்படி முத்தமிடும் காட்சியில் பயன்படுத்தியிருப்பது சரிதானா என்ற கேள்வியை  அவர் ‘பேஸ்புக்’ சமூக இணைய தளத்தில் எழுப்பியதாகவும் யாருமே அதை கண்டுகொள்ளவில்லை என்றும் அந்த நண்பர் சொன்னார். அதனால் நானும் பார்த்துவிட்டு பேஸ்புக்கில் இவ்வாறு எழுதினேன்.

“நாம் எல்லாரும் சிந்திக்க சில கேள்விகள் : 15 வயது சிறுமியை லிப் கிஸ் அடிக்கும் காட்சியில் நடிக்க வைத்து படம் தயாரித்து வெளியிடுவது மணிரத்னத்துக்கு நல்ல வியாபாரமாக இருக்கலாம். ஆனால் அது ‘அறமா’குமா? படத்துக்கான கடல் படக் குழுவின் நிருபர் சந்திப்பை தொகுத்து வழங்கிய சுஹாசினி லட்சக்கணக்கில் பணம் திரட்டி மகளிர் நல அமைப்பு நடத்தி வருகிறாரே, அவரும் அந்த அமைப்பும் பெண்கள் பாதிக்கப்பட்ட பிறகுதான் உதவி செய்வது மெழுகுவத்தி கொளுத்துவதெல்லாம் செய்வார்களா? பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்களா? இன்றைய சினிமாக்களில் சிறுமியை வைத்து உருவாக்கிக் காட்டும் இத்தகைய காட்சிகள் விடலை மனங்களில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி யாருக்கும் கவலையில்லையா? டெல்லி, ஸ்ரீவைகுண்ட நிகழ்வுகளுக்கெல்லாம் பொங்கி எழுந்த பேஸ்புக் வீரர்களில் சிலர் சினிமா துறை என்று வரும்போது மட்டும் பம்மிப் பதுங்கிக் காணாமற் போவது ஏன் ?”

இந்தக் கருத்தை உடனடியாக 120 பேர் எடுத்து தத்தம் பேஸ்புக் சுவர்களில் பதிந்து பரப்பியிருக்கிறார்கள். இதற்கு முன் என் வேறு பதிவு எதுவும் இவ்வளவு பகிரப்பட்டதில்லை.என் இழையில் வந்து விவாதித்த பலரும் தெரிவித்த கருத்துகளில் முக்கியமானவற்றை மட்டும் பார்க்கலாம்.

இது காலம் காலமாக நம் சினிமாவில் நடப்பதுதானே என்பது ஒரு கருத்து. பதினைந்து வயதில் இதழ் முத்தம் இடக் கூடாதா என்பது இன்னொரு கருத்து. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

உண்மைதான். கதாநாயகியாக நடிக்க 14 வயது சிறுமிகளை அழைத்து வருவது பல வருடங்களாக நடக்கிறது. இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா திரைப்பட நடிகையாக அறிமுகம் ஆனபோது அவர் வயது 15தான். மஞ்சுளா, ரேவதி, குஷ்பு போன்றோர் கதாநாயகிகளாக அறிமுகமாகும்போது வயது 16லிருந்து 18தான். சட்டப்படி மேஜர் வயது எனப்படும் 18க்கும் முன்பாகவே இந்த மைனர்கள் நடிக்கவைக்கப்படுவது அவர்கள் சம்மதத்தின் அடிப்படையிலேயே அல்ல. பெற்றோரின் விருப்பமும் சம்மதமும் அதிகாரமும்தான் செயல்படுகின்றன. 15 வயது துளசியை முகத்தில் காதலையும் காமத்தையும் விரக உணர்ச்சியையும் காட்டி நடிக்க வைப்பதில் முதல் பொறுப்பு அவளுடைய அம்மா ராதாவுடையதுதான்.

இப்படி வளர் இளம் பருவத்தில் இருக்கும் சிறுமிகளை சினிமாவில் எப்போதுமே காதல், காமக் காட்சிகளில்தான் நடிக்கவைத்து இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் காசு பண்ணி வந்திருக்கிறார்கள். எனவே இது ஒன்றும் மணிரத்னம் கண்டுபிடித்த புது விஷயம் அல்ல. அவரது முன்னோடிகள் செய்ததை அவர் இன்னும் சிறந்த தொழில்நுட்ப நேர்த்தியுடன் செய்யக் கற்றிருக்கலாம். ஆனால் தமிழ் சினிமாவில் வேறு எந்த படைப்பாளியை விடவும் அதிகமாகக் கொண்டாடப்படுபவர் அவர். அனைத்திந்திய அளவில் ஆராதிக்கப்படுபவர். அப்படிப்பட்டவர்கள்தான் மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டிய பொறுப்புள்ளவர்கள். எப்படிப்பட்ட ரோல் மாடல் என்பது எனவே விமர்சிக்கப்படவேண்டும்.

அது மட்டுமல்ல, டெல்லியில் நடந்த பாலியல் வன்முறைக் கொடூரத்துக்குப் பிறகு நாடெங்கும் நாம் நம் பெண்களை எப்படி நடத்துகிறோம் என்ற கேள்வி பரவலாக தீவிரமாக இன்று விவாதிக்கப்படுகிறது. பெண்களைப் பற்றிய நம் பார்வையை உருவாக்கும் எல்லா சக்திகள் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது. மதம், சாதி, குடும்பம், கல்வி, மீடியா, வணிகம் ஆகியவை எப்படி ஆணைப் பற்றியும் பெண்ணைப் பற்றியும் நம் கருத்துகளை உருவாக்கி வருகின்றன என்பதை முன்னெப்போதையும் விட டெல்லி நிகழ்வுக்குப் பிறகு அதிக கவனம் செலுத்தும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதில் சினிமா நம் சமூகத்தின் விடலைச் சிறுவர்கள் மனங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் முக்கியமானவை. டெல்லி நிகழ்ச்சியில் குற்றவாளிகளில் ஒருவன் மைனர் என்பது கவனிக்கத்தக்கது. அண்மையில் தமிழ்நாட்டில் பள்ளிச் சிறுவர்கள் பள்ளி வளாகத்தில் மது குடித்ததைக் கண்டித்த ஆசிரியரை அடித்திருக்கிறார்கள். இன்னொரு நிகழ்ச்சியில் மது குடிக்க பணம் தேவை என்பதற்காக பள்ளிக்கூட மரமேசைகளை உடைத்து விறகாக்கி விற்றுக் குடித்திருக்கிறார்கள்.

கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவில் பொறுக்கிப் பாத்திரங்களே ஹீரோவாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வாரம் வெளியான அலெக்ஸ் பாண்டியன் படத்தின் பெரும்பகுதி ஆபாச வசனங்களும் காட்சிகளுமாக இருக்கும் நிலையில் என் நண்பர் நடிகர் சிவகுமாருக்கு ஒரு மெசேஜ் அனுப்பும்படி ஆயிற்று. தன் மகன்களை ஆடம்பரமில்லாமல் ஒழுக்கமாக வளர்த்த தந்தை என்ற புகழுடையவர் அவர்.  “ஒழுக்கமாக வளர்த்த பிள்ளையை ஆபாசப் படத்தில் நடிக்க விட்டுவிட்டீர்களே என்று உங்களைப் பலரும் திட்டுகிறார்கள்” என்று செய்தி அனுப்பினேன்.“எனக்கும் செய்தி வந்தது. இனி இந்த தவறு நிகழாமல் பார்த்துக் கொள் என்று சொல்லியுள்ளேன்” என்று உடனே பதில் அனுப்பியிருக்கிறார்.

சினிமா சமூகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, குற்றம் செய்யவும், தவறு செய்யவும் தூண்டுகிறது என்ற கருத்தை ஒருபோதும் சினிமாகாரர்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். ஆனால் அதன் பாதிப்பு சமூகத்தில் கடுமையாக இருக்கிறது என்பதை சமூகவியலாளர்களும் ஆசிரியர்களும் நடைமுறையில் நன்றாகவே அறிவார்கள். பெண்ணைப் பற்றி சமூகத்தில் ஏற்கனவே இருந்து வரும் மோசமான பார்வைகளை சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற மீடியாக்கள் கலைப்பதற்கு பதிலாக பலப்படுத்துகின்றன. ஆணுக்கு சேவை செய்ய பெண், பெண் விட்டுக் கொடுத்தால்தான் குடும்பம் உருப்படும்,ஆணின் இச்சைக்கானவள் பெண் என்ற கருத்துகளை திரும்பத் திரும்ப சொல்லிவருகிறது சினிமா. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற பழைய கருத்தை, பொறுக்கியானாலும் காதலன், ரவுடியானாலும், லவ்வர் என்று நவீனப்படுத்தியிருக்கிறது.

தொடர்ந்து தன்னைச் சுற்றிலும் பெண்பிம்பங்கள்  உணர்ச்சியைத் தூண்டும் விதத்தில் மீடியாவால் தன் மீது வீசப்பட்டுக் கொண்டே இருக்கும் சூழலில்  ஒரு பெண்ணைத் தொட்டுப் பார்ப்பதற்கான வாய்ப்புக்காக ஏங்கும் மனமாக வளர் இளம்பருவ சிறுவனின் மனம் தவிக்கிறது. ஐம்பதுகளில், அறுபதுகளில், எழுபதுகளில்,எண்பதுகளில் இருந்ததை விட பல மடங்கு அதிகமான மீடியாவின் பெண் மோகத் தூண்டுதல் சூழல் இன்றைய சிறுவருக்கு இருக்கிறது. வழிகாட்டுவோர் இல்லை. எதிர் பாலினத்துடன் ஆரோக்கியமாக உறவாடி ஒருவரையொருவர் புரிந்துகொள்ள உதவும் சூழல் குடும்பத்திலும் இல்லை, கல்விக் கூடத்திலும் இல்லை. எங்கும் இல்லை. இந்த நிலையில் இருக்கும் விடலைப் பருவத்தினரில் இன்னும் அதிகம் பேர் இன்னும் அதிக பாலியல் குற்றங்களை நோக்கித் தள்ளப்படாமல் இருப்பதே ஆச்சரியமானதுதான்.

இந்தப் பின்னணியில்தான் 15 வயது சிறுமியை இதழ் முத்தக் காட்சியில் மணிரத்னம் பயன்படுத்துவதன் தவறை, ஆபத்தைப் பார்க்க வேண்டும். அதை அலசுவதற்கு முன்பு, பதினைந்து வயதில் ஒருவர் முத்தமிடக் கூடாதா என்ற கருத்தைப் பார்ப்போம். எந்த வயதிலும் முத்தமிடலாம், யாரும் முத்தமிடலாம். ஆனால் அந்த ஒவ்வொரு முத்தமும் வெவ்வேறானவை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். எது வெறும் உடல் கவர்ச்சி, எது தற்காலிக ஆசை, எது காதல், எது பரஸ்பர அன்பு, எது பரஸ்பர மதிப்பு என்பதையெல்லாம் தன் உடலை இன்னொரு உடலுடன் பகிரும்போதெல்லாம் தெரிந்தே பகிரக் கற்காமல் பகிர்ந்தால் மனநல பாதிப்புதான் ஏற்படும்.

என்னுடன் மிகுந்த வாஞ்சையுடன் பழகிய பல இளைஞர்களின் திருமணங்களுக்குச் செல்லும்போது நான் மணமகனுக்கும் மணமகளுக்கும் நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்துகிறேன். எல்லா முத்தமும் ஒன்றென்று வாதிட்டு, நான் அவர்களை இதழில் முத்தமிட்டு வாழ்த்த முடியாது.

குழந்தையைக் கையில் எடுத்துக் கொஞ்சும்போது அதன் கன்னத்தில் முத்தமிடுவதுதான் சரி. உதட்டில் முத்தமிடுவது அல்ல. உதட்டு முத்தம் காமத்தின் வெளிப்பாடு. குழந்தைகளை ஒருவருக்கொருவர் முத்தமிடச் சொல்லி பழக்குவது சில பெற்றோரின் அசட்டுத்தனம். பாலியல் தொடுதல்களில், குட் டச், பேட் டச் என்பவை எப்படி முக்கியமோ அதே போலத்தான் முத்தங்களும்.

எனவே சினிமாவில் 15 வயது சிறுமி இதழ் முத்தத்தில் ஈடுபடுவதைப் பார்க்கும் 15 வயது சிறுவர்கள் மனதில் அது எப்படிப்பட்ட கிளர்ச்சிகளை ஏற்படுத்தும் என்பது பற்றி படைப்பாளிகளுக்குப் பொறுப்புணர்ச்சி வேண்டும். நம் சமூகத்தில் திரைப்படங்கள், யு, ஏ, யூஏ என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டாலும் தணிக்கை முறை சீராகவோ நேர்மையாகவோ இல்லை.எல்லா படங்களும் தொலைக்காட்சியில் யாரும் பார்க்கும்விதம் கிடைக்கும் சூழலே இருக்கிறது. மேலை நாடுகளில் இருக்கும் வரையறுக்கப்பட்ட சூழல் இதில் இங்கே நம்மிடம் இல்லை.

பள்ளிப் பருவத்திலிருந்து உடல் நலம் மன நலம் சார்ந்த பாலியல் கல்வியையும் மீடியாவைப் புரிந்துகொள்ளும் பயிற்சியையும் அறிமுகம் செய்யவேண்டும் என்று என் போன்றோர் பல வருடங்களாக வலியுறுத்திவருகிறோம். ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு காட்டுவோர் பாலியல் வக்கிரங்களை படைப்பாக்குவோரைக் கண்டு கொள்வதே இல்லை.

பாலியல் வன்முறைகள், சீண்டல்கள் பற்றி நம் சமூகத்தில் முன்பு எப்போதும் இருந்ததை விட கூடுதல் அக்கறை இப்போது ஏற்பட்டுள்ள நிலையில்,  சினிமா துறையினரும் பத்திரிகைத் துறையினரும் தம்மை கடும் சுயவிமர்சனத்துக்கு உடபடுத்திக் கொள்ளவேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அற உபதேசங்கள் எல்லாம் அரசியல்வாதிக்கும் அதிகாரிகளுக்கும் வாச்கர்களுக்கும் மட்டுமென்று தனக்கு தானே விலக்குக் கொடுத்துக் கொண்டு எழுத்தாளனும் இயக்குநரும் இனியும் இருக்க முடியாது. அக்கறை என்பது வெறுமே மெழுகுவத்தி ஏற்றுவது அல்ல. மீடியாவும் சினிமாவும் வெறுமே ‘டைம்பாஸ்’தான் என்று சொல்லி இனியும் தப்பிக்க முடியாது.

காதல் என்றால் என்ன என்று நம் சிறுவர்களுக்கு சொல்லித் தருவதில் பெரும்பங்கு வகிப்பது நம் சினிமாதான். அது காட்டும் காதல் ரவுடித்தனத்தையும் விடலைத்தனத்தையும் பெண் சீண்டலையும் ஊக்குவிப்பதாகவே இருக்கிறது. இது மாறியாக வேண்டும். மாறவேண்டுமானால் நாம் அனைத்தையும் விமர்சித்து விவாதித்தாகவேண்டும். அதை மணிரத்னத்தின் விடலை முத்தத்திலிருந்தே தொடங்கலாம்.

நன்றி : கல்கி 19.1.2013
-'பரிவை' சே.குமார்

செவ்வாய், 22 ஜனவரி, 2013

வட்டியும் முதலும் - ராஜுமுருகன்

 (ஓவியம் : ஹாசிப் கான்)

'இவ்வளவு பேரும் எங்க போறாங்க?’
 - நகரச் சாலைகளின் டிராஃபிக்கைப் பார்க்கும்போது எல்லாம் இப்படித் தோன்றும். நாலு பேரை வளைத்துப் பிடித்து, 'எங்கடா போறீங்க இவ்வளவு வெரசா..?’ என விசாரிக்க வேண்டும். பாதிப் பேர் இயர்போனில் தனியே பேசிச் சிரித்தபடி, லூஸுப் பையன்களாகத் திரிகிறார்கள். முக்கால்வாசி யுவதி களை மொபைல் நோண்டியபடியான சித்திரங்களிலேயே பார்க்கிறேன். காதில் செல்போனை இடுக்கியபடிப் பறக்கிறார்கள். டாஸ்மாக்குகளில் லேப்டாப்பை அண்டக் குடுத்தபடியே குடிக்கிறார்கள். சிக்னல் போடுவதற்குள் குபீர் என்று குறுக்கே பாய்கிறார்கள். ஏகாதசி ராத்திரியில் சொர்க்க வாசலைப் பார்க்கப் போய், கோயில் ஏரியாக்களைக் குமுறடிக்கிறார்கள். ரயில்களில்கூட ஃபுட்போர்டு அடித்துப் போகிறார்கள். சதா இரை தேடி அலையும் மானுடம். காகம்போல் கரையும் மனம். ஜனத்திரட்சி. நெரிசல் காடு. எப்போதும் பரபரப்பு. தாளாது விம்மும் எண்ணங்கள். தலைக்குள் பிதுங்கும் கருத்துகள். தூக்கத்திலும் துரத்தும் தொலைக்காட்சிப் பிம்பங்கள்... இவற்றுக்கு நடுவே நாம் 'மற்றும் பலர்’ சந்திப்போமா..?

பாலு, 47-டி பேருந்து ஓட்டுநர். நீல கலர் சட்டையும் பேன்ட்டுமாக, தோளில் சிவப்புக் கட்டம் போட்ட குற்றாலத் துண்டில்தான் காணக் கிடைப்பார். டெப்போவில் நிற்கும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும், ஒரு ரூபாய் சுபாரி பாக்குப் பொட்டலத்தைக் கிழித்து வாயில் போட்டுக்கொள்வார். ''வண்டி ஓட்டும்போது போன் பண்ணாதேனு எத்தன தடவ சொல்றது..?'' என சிக்னலில் நிற்கும்போது மொபைலில் மனைவியைத் திட்டுவார். ''படில நிக்காத... உள்ள வா... பச்ச சட்ட... ஏறி வா. பார்றா மொறைக்கறத... அக்கா, தங்கச்சிகளுக்குக் கல்யா ணம் பண்ணிட்டியா..? போயிட்டின்னா யாரு பண்ணிவைப்பா..?'' என சைடு கண்ணாடியில் சிடுசிடுப்பார். பூக்கடையை பஸ் க்ராஸ் பண்ணும்போது, வண்டியை நிறுத்தி உட்கார்ந்தபடியே பஜாரில் வீட்டுக்கு மாம்பழங்கள் வாங்குவார். கூட்டம் இல்லாத பகல்களில் முன்சீட்டில் வரும் போக்குவரத்து ஊழியருடன், ''பையனை பாலிடெக்னிக் சேக்கறதுக்கே முப்பது ரூவா ஆச்சு... இன்ஜினீயரிங் அஞ்சு ரூவா... மெடிக்கல் இருவது ரூபாயாம்... எங்க போறது நாம? டிப்ளமோவ வாங்கிக் குடுத்துடுறேன்... அதுக்கு மேல ஒஞ் சமத்துனு சொல்லிட்டேன்'' என்றபடி பேசிவருவார். ஆள் இல்லாத இரவுகளில் சிலுசிலுவெனக் காத்தடிக்க, சட்டைக் காலரைப் பின்னால் தூக்கிவிட்டபடி வண்டி ஓட்டும்போது, 'படைத்தானே... படைத்தானே... மனிதனை ஆண்டவன் படைத்தானே’ என மெல்லிய குரலில் பாடுவார். ஐந்தாறு வருடங்களாகப் போய்வந்த பேருந்தில், இவ்வளவுதான் பாலுவை நான் பார்த்தது. நெரிசல்களுக்கும் சத்தங்களுக்கும் நடுவே இப்படிச் சில வழக்கமான சித்திரங்களையே எனக்குத் தந்திருந்தார் அந்த அரசுப் பேருந்து டிரைவர்.

சமீபத்தில், பள்ளியில் பாப்பாவை விடப் போயிருந்தபோது, ரொம்ப நாட்களுக்குப் பிறகு பாலுவைப் பார்த்தேன். ஒரு குட்டிப் பாப்பாவைத் தூக்கியபடி அந்தப் பள்ளிக்கூட வாசலில் நின்றார். பாப்பாக்களை உள்ளே அனுப்பிவிட்டு, தேர்வு விண்ணப்பங்கள் வாங்குவதற்காக எங்களை வெளியே உட்காரவைத்திருந்தார்கள். அவரைப் பார்த்ததும், ''சார்... நீங்க ஃபார்ட்டி செவன் டிரைவர்தானே?'' என்றேன்.

''ஆமா தம்பி. பரவால்லையே... கரெக்ட்டா நெனவு வெச்சிருக்கீங்களே...'' என்றார் சிரிப்புடன். ''ரிட்டையராகிட்டேன் தம்பி... காதுல இன்னமும் இன்ஜின் சத்தம்தான் கேக்குது...'' என்றவர், ஏதேதோ பேச ஆரம்பித்துவிட்டார். நான் பத்திரிகை, சினிமாவில் வேலை பார்க்கிறவன் என்பது தெரிந்ததும் இன்னும் உற்சாகமாகிவிட்டார். பேச்சுக்கு நடுவே, ''பாப்பா... உங்க பேத்தியா சார்..?'' என்றதும், ''பேத்தி மாரிதான்... மாரி என்ன பேத்திதான்...'' என்றவர், சட்டென்று அமைதியாகிவிட்டார். ஏதோ யோசனைகளுக்குப் போனவர் மீண்டு, ''உங்கள்ட்ட சொல்லலாம் தம்பி. அது... ரிட்டையராகறதுக்கு ஒரு வருஷம் முன்னாடி சத்யா ஸ்டுடியோகிட்ட வந்துட்டு இருந்தேன். நைட்டு. ரோட்ல வண்டிகளே இல்ல. கொஞ்சம் ஸ்பீடா இழுத்துட்டேன். பெட்ரோல் பங்கு திருப்பத்துல திருப்புனேன் பாருங்க... சைடுல இருந்து வண்டில வந்த ஒரு ஆளு உள்ள வுழுந்துட்டான். சுதாரிக்கவே முடியல... டயர்ல போயிட்டான்... அங்கயே அவுட்டு. ஜி.ஹெச்சுக்குக் கொண்டுபோயாச்சு. எனக்கு மெமோ, கேஸு, சஸ்பென்ஷன்னு ஒரு மாசம் இழுத்தடிச்சு விட்டாங்க. இத்தன வருஷத்துல இப்பிடி நடந்தது இல்ல தம்பி. டயர்ல கெடந்த அந்த பாடியப் பாத்தேன் பாருங்க... தூக்கமே போச்சு. ஒண்ணும் பண்ண முடியல. அந்தாளு வூட்டுக்குப் போய் நின்னேன். அவன் பொண்டாட்டி மூஞ்சப் பாக்க முடியல... ஏழபாழைக. இப்பிடி வந்தா என் தெசைல விழணும் ஒரு உசுரு... இந்த பாப்பா அவங்க புள்ளதான். நானே படிக்கவைக்கிறேன்னு சொல்லிட்டேன். எங்கூட்லதான் வளருது. டெய்லி ஸ்கூலுக்குக் கொண்டுவந்துவிட்டுப் போயிட்டு, இதோடதான் நம்ம வாழ்க்க போவுது. என்னவோ இது மூஞ்சியப் பாக்கும்போது மனசு பூத்துப் போவுது...'' என்றவர், ''அப்ளிகேஷன் குடுத்துட் டாங்க வாங்க...'' என உள்ளே ஓடினார். திரும் பும்போது அந்தப் பாப்பாவின் ரைம்ஸ் சத்தம் கேட்டுக்கொண்டு இருந்தது... நெடுந்தூரம்!

'மற்றும் பலராக’ சிறு கணங்களில் நம் வாழ்க்கையில் வருகிறவர்கள் எவ்வளவு பேர்? டிராஃபிக் சாலை மாதிரி எத்தனை பேர் டைட்டில் கார்டே இல்லாமல் வந்து வந்து போகிறார்கள்? ஆனால், பாலு மாதிரி ஒவ்வொருவரின் பின்னாலும் எவ்வளவு கண்ணீர், புன்னகைக் கதைகள் இருக்கின்றன.

சமீபத்தில்தான் மறைமலை நகரில் ரோட்டோரம் கொசுவலை விற்றுக்கொண்டு இருந்த வையாபுரி நாயக்கர் குடும்பத்தைப் பார்த்தேன். வையாபுரி நாயக்கர் ஊரில் மார்கழி மாசத்தின் அதிகாலைகளில் பஜனை பாடியபடி சங்கு ஊதிக்கொண்டு வீடு வீடாக வருவார். எங்கிருந்து என்றே தெரியாமல் ஆற்றைக் கடந்து வந்து, கருக்கலின் வாசலில் முண்டாசோடு நிற்பார். வாசல் வாசலாக நின்று 'கோபாலகிருஷ்ணா... கோலம் என்னவோ...’ என தெலுங்கு வாசத்தோடு பாடியபடி, சங்கு ஊதுவார். வருடத்தில் மார்கழியின் அந்தக் காலைகளில் மட்டுமே அவரைப் பார்க்க முடியும். அப்புறம் பொங்கலுக்கு மறுநாள் சைக்கிளில் கூடை கட்டிக்கொண்டு வந்து கரும்பும், வாழைப் பழமும், சில்லறையும் வாங்கிப் போவதோடு சரி. இத்தனை வருடங்களுக்குப் பிறகு, புறநகரின் சாலையோரம் குடும்பத்தோடு கொசுவலை விற்றுக்கொண்டு இருக்கும்படி அவரைப் பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை. உத்திதான் அவரிடம் என்னை அழைத்துப் போனான்.

''நம்மூரு சங்கூதிரா... ரோட்டோரம் வித்தாங்கன்னு கொசுவலைக பூராத்தையும்போலீஸ் கொண்டுபோயிருச்சாம்... அவரு பையனை யும் புடிச்சுட்டுப் போயிருச்சாம். ஸ்டேஷன்ல போய்ப் பேசணும்... அதான் உன்னையக் கூப்பிட் டேன்...'' என்றான்.

ஸ்டேஷனுக்குப் போனால், அங்கே கோபி உட்கார்ந்திருந்தான். பஸ் ஸ்டாண்டில் நீலகிரித் தைலம் விற்பவன். போனஸாகத் திருட்டு வி.சி.டி., ரயில்வே கிராஸிங், யூரின் பாசிங், வித் அவுட் டிக்கெட் எனப் பிசாத்து கேஸ்களில், 'கேஸ் கணக்கு காட்ட’ அவ்வப்போது கோபியை ஸ்டேஷனுக்குக் கொண்டுபோய், ரவா தோசை வாங்கித் தருவார்கள். பிரதிபலனாகத் திருட்டு வி.சி.டி. பிளாக்கில் சரக்கு, பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு பிளாக் டிக்கெட்டெல்லாம் விற்றுக்கொள்வான். அவனை ஸ்டேஷனில் பார்த்ததும் வழக்கமான 'மரியாதை’ என நினைத்து, ''என்ன கோபி... என்ன கேஸு..?'' என்றேன்.

''கேஸ் எல்லாம் இல்ல சார்... அய்யாவுக்கோசரம் வந்தேன்...'' என்றான் வையாபுரி நாயக்கரைக் காட்டி. உடனே வையாபுரி சொன்னார், ''கோபி தம்பிய உங்களுக்குத் தெரியுமா..? அவர்தான் இங்க எங்களுக்குத் தங்க எடம்லாம் பாத்துவெச்சது!''

எனக்கு இயற்கையின் தீராத முடிச்சுக்களை நினைத்து ஆச்சர்யம் பொங்கியது. எஸ்.ஐ-யிடம் பேசிக் கொசுவலைகளை மீட்டு, அவரை வீட்டுக்கு அழைத்துவந்தோம். கோபி போய் எல்லோருக்கும் பரோட்டா வாங்கி வந்தான். வையாபுரி அய்யா, அந்தச் சிறு வீட்டில் சாய்ந்தபடி, ''எங்க தம்பி... ஊர்ல யார் இருக்கா? விவசாயம்லாம் இப்ப யாரு ஜீவனெடுத்துப் பாக்குறா? எதுவும் முன்ன மாரி இல்ல. பையன் திருப்பூர்ல வேல பாத்தான்ல... அவன் மூலியமா இந்தக் கொசுவல பிசினஸ் வந்து, அப்பிடியே குடும்பத்தோட வந்துட்டோம்...'' என்றார்.

''ஐயா... ஃபீலிங்க விடு... ஒரு கட்டிங் வுட்டுக்குறியா..?'' என கோபி பரோட்டாவைப் பிச்சிப் போட்டான். வெளியே வந்தபோது குளிர் கும்மியது. இது மற்றும் பலரின் மார்கழி!

மற்றும் பலர் சுமந்து வருகிற வார்த்தைகள், நினைவுகள், கதைகளை நாம் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. ஒரு காலத்தில் போஸ்ட்மேன் மற்றும் பலரில் முக்கியமானவர். ஒவ்வொரு ஊருக்கும் அவர் எவ்வளவு பெரிய தேவ தூதனாக இருந்தார்? இப்போது அவரை அட்மாஸ்பியரிலேயே காணவில்லை. அப்படி ஓர் இனத்தையே கிட்டத்தட்ட மறந்துவிட்டோம். 'சார்... போஸ்ட்...’ என்ற குரலைக் கேட்டு எத்தனை நாளாச்சு? நேற்று எம்.எம்.டி.ஏ. வீட்டுக்கு ஒரு போஸ்ட்மேன் வந்து அப்படிச் சொன்னார். சட்டென்று விசித்திரமான உணர்வு நிலை ஏற்பட்டது. அப்படிச் சொல்லிவிட்டு தபாலைத் தந்தவர், சிஸ்டத்தில் இணையத்தில் நான் இருந்ததைப் பார்த்துவிட்டு, ''என்ன கனெக்ஷன் சார்... பி.எஸ்.என்.எல்லா..? பேக்கேஜ் எவ்வளவு சார் வருது?'' எனப் படபடவெனப் பேச ஆரம்பித்துவிட்டார். எனக்கு அப்போது தபால்காரத் தாத்தா ஞாபகம் வந்தது. தபால்காரத் தாத்தா எங்கள் ஊரின் போஸ்ட் மேன். அது கடிதங்களின் உலகம். ஆகவே, அப்போது ஊரில் அவருக்கு அவ்வளவு செல்வாக்கு. அவருக்கு ஒரு பழக்கம் இருந்தது. ஒரு நீண்ட அலுமினியக் கம்பியில் கடிதங்களைக் கோத்துக் கோத்து சேர்த்து, வீட்டில் மாட்டிவைத்திருப்பார். நல விசாரிப்புகள், பிரியங்கள், துக்கங்கள் என யார் யாரின் எழுத்துக்களாலோ நிறைந்திருந்தது தபால்  காரத் தாத்தாவின் உலகம். அவரும் யாருக்காவது ஏதாவது கடிதம் எழுதிக்கொண்டே இருப்பார். அவரது அறை முழுக்கக் கம்பி கோத்த கடிதங்கள் சேர்ந்துகொண்டே இருந்தன. தாத்தா இறந்த பிறகு, ஒரு போகி அன்று கொல்லையில் மூட்டை கட்டிக்கிடந்த அந்தக் கடிதங்களைப் பார்த்தேன். மற்றும் பலரின் உணர்வுகள் பலவும் இப்படித் தான் கிடக்கின்றன... நம்மால் படிக்கப் படாமல்! 
 
நன்றி : ஆனந்த விகடன்.

-'பரிவை' சே.குமார் 

தேசத் துரோகம்! (தினமணி தலையங்கம்)

திர்க்கட்சியை ஆளும் கட்சியும் ஆளும்கட்சியை எதிர்க்கட்சியும் குறைகூறுவது வழக்கமான ஒன்று. ஆனால், அத்தகைய குறைகாணும் வழக்கம் வரம்பு மீறுவதும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் தரம் தாழ்வதும் ஏற்புடையதல்ல.

 அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சிந்தனை முகாமில் பேசிய உள்துறை அமைச்சர் ஷிண்டே, ""பாரதிய ஜனதா கட்சியும், அதன் தாய் நிறுவனமாகிய ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்க (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்பும் அவற்றின் பயிற்சி முகாம்களில் ஹிந்துத்  தீவிரவாதிகளை உருவாக்கி வருகின்றன. இந்த இரு அமைப்புகளின்  தீவிரவாத நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகின்றது'' என்று கூறியிருக்கிறார்.

 அதுமட்டுமல்ல, "சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சில குண்டுவெடிப்பு சம்பவங்களிலும் இவர்களுக்குத் தொடர்பு இருக்கிறது' என்றும் அவர் கூறியிருக்கிறார். அதாவது, பாகிஸ்தான் சென்றுகொண்டிருந்த சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயில், ஹைதராபாதில் மெக்கா மஸ்ஜித் மற்றும் மாலேகான் நகரில் மசூதி ஆகியவற்றில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ்தான் காரணம் என்றும், அவர்கள் செய்த "இந்தக் குற்றத்துக்கு சிறுபான்மையினர் மீது பழி போடுகிறார்கள்' என்றும் கூறியிருக்கிறார்.

 நாட்டின் உள்துறை அமைச்சர் கூறும் இந்தக் குற்றச்சாட்டு உண்மையென்றால், இந்நேரம் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தடைசெய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்வளவு மோசமான தீவிரவாதம் இந்த தேசத்தில் வளர்க்கப்படுகிறது என்றால் செயல்பட வேண்டிய மத்திய அரசு,  ஏன் வெறுமனே சிந்தனை முகாமில் இதைப் பேசிக்கொண்டிருக்க வேண்டும்?

 மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரு பெண் துறவி கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தீர்ப்பு வெளியாகாத நிலையில் இதுபற்றி நாம் யாராவது எழுதினாலோ, பேசினாலோகூட நீதிமன்ற அவமரியாதை எனும்போது,  ஒரு உள்துறை அமைச்சர், சாதாரண அரசியல் மேடைப் பேச்சாளர்போல, தொண்டர்களின் கரவொலிக்காக இவ்வாறெல்லாம் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கே களங்கம் ஏற்படுத்துவதாக இருக்கிறது.

 கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இந்தியாவில் நிலவிய பதற்றமான நிலை ஒவ்வொரு இந்தியன் மனதிலும் அச்சத்தை விதைத்துக்கொண்டிருந்தது. இந்தியா- பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டில் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு தலை துண்டிக்கப்பட்டன. சண்டைநிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டு இந்திய எல்லையில் துப்பாக்கிக் குண்டுமாரி பொழிந்தது. இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் நுழைகிறார்கள், நடமாட்டம் இருக்கிறது என்று இந்தியா சொன்னதை பாகிஸ்தான் முற்றிலுமாக மறுத்துக்கொண்டிருந்தது. இன்னொரு கார்கில் போர் மூளுமோ என்ற அச்சம் நிலவியது. அந்த நிலைமை சற்று தணிந்திருக்கும் இவ்வேளையில், இந்தியாவில் ஹிந்துத்  தீவிரவாதம் வளர்த்தெடுக்கப்படுகிறது என்றும், குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் ஹிந்துத் தீவிரவாதிகள்தான் என்றும் ஒரு உள்துறை அமைச்சரே பேசினால், பாகிஸ்தானுக்கு எத்தகைய கொண்டாட்டமான விஷயம் அது.

 பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா இந்தியாவுக்கு எதிராகத் தீவிரவாதிகளை அனுப்புகின்றது என்றுதான் இந்திய அரசு கூறி வருகிறதே தவிர, முஸ்லிம் தீவிரவாதிகளை அனுப்புகின்றது என்று தவறிக்கூடக் கூறியதில்லை. இந்தியப் பத்திரிகைகளும்கூட தீவிரவாதிகள் கைது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்றுதான் எழுதுகின்றனவே தவிர, அவர்களது பெயரைக்கொண்டு, அவர்களை முஸ்லிம் தீவிரவாதிகள் என்று எழுதுவது இல்லை.

 தீவிரவாதிகள் மனிதகுலத்துக்குப் பேரழிவு நாடுபவர்கள் என்பதால்தான் அவர்களை நாம் எதனோடும் அடையாளப்படுத்துவதில்லை. தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் அவர்களை இனம், மதம், மொழி, நாடு கடந்து வெறும் தீவிரவாதிகளாக மட்டுமே பார்ப்பதுதான் வழக்கம்.

 நாட்டின் உள்துறை அமைச்சரான ஷிண்டே இவ்வாறு பேசியிருப்பது மிகப்பெரும் தவறு. பாரதிய ஜனதா கட்சியும், ஆர்எஸ்எஸ் இயக்கமும் ஹிந்துத் தீவிரவாதிகளை உருவாக்கும் அமைப்புகள் என்றால், தக்க ஆதாரங்களைக் காட்டி, அதனை முறைப்படி நிரூபித்து, மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுப்பதை யாரும் குறை சொல்ல மாட்டார்கள். ஆனால் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்கின்ற பேச்சாக மட்டுமே இருக்குமானால், ஷிண்டே இனியும் உள்துறை அமைச்சர் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்.

 அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி என். வேலு, உயர் நீதிமன்றத்தால் பணியிடை நீக்கம் செய்யப்படக் காரணம்,  நீதியில் அரசியல் கூடாது என்பதற்காக!

 மனத்தீ வளர்க்கும் வார்த்தைகளைப் பேசிய ஆந்திர மாநில எம்எல்ஏ அக்பரூதீன் ஓவைஸியை, ஹைதராபாத் போலீஸ் கைது செய்யக் காரணம், மானுடநெறியில் அரசியல் கலக்கக்கூடாது என்பதற்காக!

 இந்தியாவின் உள்துறை அமைச்சரே ஹிந்துத் தீவிரவாதிகள் பற்றி கூறிவிட்ட பிறகு இனிமேல் நாம் பாகிஸ்தானின் துணையோடு இங்கே நடைபெறும் தீவிரவாதச் செயல்கள் பற்றிப் பேச முடியுமா? உங்கள் உள்துறை அமைச்சரே கூறுகிறார் ஹிந்துத் தீவிரவாதிகள் முகாம்களில் தயாரானதாக என்று பாகிஸ்தான் பதிலடி கொடுக்காதா? இவரெல்லாம் இந்தியாவின் உள்துறை அமைச்சர்...! இவர்களுக்கெல்லாம் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தலைவர்கள்..!

 ஓட்டுக்காக நாட்டை பலி கொடுப்பவர்களை என்னவென்று அழைப்பது?

நன்றி : தினமணி (தலையங்கம் - 22/01/2013)
                                                                                                                                                                              -'பரிவை' சே.குமார்