மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 18 ஜனவரி, 2013

கெடுத்துப்புட்டான்ய்யா... கெடுத்துப்புட்டான்...


நம்ம ஆளு நேற்றைக்கு நாலு வயசுல இருந்து ஐந்து வயசுக்குள்ள போயிருக்காரு... அதுக்கு முதல்ல உங்களோட ஆசிகள்தான் அவருக்கு வேணும்... எல்லாரும் கண்டிப்பா உங்களது ஆசிகளை வழங்குங்கள் அவர் வளரட்டும்... இனி வாங்க... நாம அவரு எப்படி கெடுத்தாருங்கிற கதைக்குள்ள போவோம்...

அப்பனுக்குப் பிள்ளை தப்பாம பொறந்திருக்குன்னு மூத்தவங்க சொல்லுவாங்க. இங்க நம்மாளு அப்பனை தூக்கி கக்கத்துல வச்சிக்கிட்டு போய்க்கிட்டே இருக்கான். அப்பன் ஊமக் கிசும்புக்காரனா இருந்தா பயபுள்ள ஊருக்கே கிசும்பாவுள்ள இருக்கு.

எதுக்கெடுத்தாலும் எல்லாரையும் மிரட்டல்தான்... யாருக்கும் பயப்படுவதில்லை. 'எனக்கு எல்லாரும் பயப்படுவாய்ங்க... நீ என்னடா பயப்படவே மாட்டேங்கிறே'ன்னு யாராவது கேட்டா உனக்கெதுக்கு பயப்படணுமின்னு அசால்டா கேக்கிறானாம். அவங்க அம்மா எதாவது மிரட்டல் விட்டா 'ஏய் என்ன நித்யா... வந்தேன் கொன்னேபுடுவே'ன்னு ஆடுகளம் தனுஷ் மாதிரி அதகளம் பண்ணுறார்... இதை நான் ஸ்கைப்பில் பேசும் போது பார்த்திருக்கிறேன்...

நானெல்லாம் எங்க அம்மாகிட்ட எல்லாத்தாலையும் (டீசண்டா சொல்லிக்குவோம்) அடி வாங்கித்தான் வந்திருக்கிறேன். ஆனா இவன் அடிக்கும் முன்னாடியே சிரிச்சே மயக்குற கலையை கத்து வச்சிருக்கான். அதை அப்படியே தொடரட்டும்...

நான் ஸ்கைப்பில் பேச அழைக்கும் போது அவங்க அம்மா வேலை இருக்குன்னு சொன்னா, இவரு உடனே 'என்ன குமாரு... அம்மாவுக்கு வேலை இருக்குல்ல, எதுக்கு டிஸ்டப் பண்ணுறீங்க'ன்னு கட் பண்ணி விடுவார். நம்மிடம் பேசும் போது எனக்கு அது வேணும் இது வேணும் என்று சொல்வார் ஆனால் கடைசியில் பாப்பா அப்பா பிள்ளை, நான் அம்மா பிள்ளை என்று சொல்லி வைப்பார். சரி உன்னோட பேர் என்ன என்றால் விஷால்குமார் என்று நம்மளையும் சேர்த்துக் கொள்வார்.

அவரது பேச்சும், புரிந்து செய்யும் சேட்டைகளும் எல்லாரையும் கவர, எல்லாருக்கும் செல்லப் பிள்ளையாகவும் பொழுதுபோக்குவதற்கு ஒரு நடமாடும் அரட்டை அரங்கமுமாகவும் மாறியிருக்கிறார். சரி இதெல்லாம் எதுக்கு நம்மாளு என்னத்தைக் கெடுத்தான் எங்க கெடுத்தான் அந்தக் கதையைச் சொல்லுப்பான்னு சொல்றீங்கதானே...  சரி... சரி... வாங்க சொல்றேன்.

ஊருக்குள்ள நமக்குன்னு ஒரு பேர் இருக்கு... பாட்ஷ படத்துல மாதிரி பிளாஸ் பேக்குக்குல்ல பிளாஸ்பேக்கெல்லாம் இல்லை... நேர சொல்லிடுறேன்... அது என்னான்னா... ரொம்ம்ம்ம்ம்ப நல்லபிள்ளை... யார்கிட்டயும் பிரச்சினை வச்சுக்க மாட்டான்... அவன் உண்டு அவன் வேலை உண்டு... அடுத்த ஆளுக்கிட்ட பேசக்கூட மாட்டான்னு அம்புட்டு நல்ல பேரு. ஆமா நம்மளோட ஆட்டம் பாட்டம் அரட்டை எல்லாம் நட்பு வட்டத்தில் மட்டுமே, படிக்கும் போது பெரும்பாலான பொழுதுகள் (விடுமுறை தினங்கள் உள்பட) எங்கள் ஐயா பேராசான் மு.பழனி இராகுலதாசன் வீட்டில் ஒரு கூட்டுக் குழுவோடு கழிந்து விடும். அப்புறம் எங்க ஊருக்குள்ள ஆட்களைப் பார்த்துப் பேசுறது... ஊருக்குள்ள பொயிட்டா தங்கமுன்னா தங்கம் சொக்கத் தங்கமுன்னு பேரை வாங்கி வச்சிருக்கோம்.

பொங்கலுக்கு போனவரு பயங்கர ஆட்டமாம், கண்மாயெல்லாம் நிறைஞ்சு கிடக்கு... வீட்டுக்குப் பக்கத்துல இருக்க ஊரணியில தண்ணி கிடக்கு...   எல்லாம் பாத்துட்டு வந்து விஷால், 'தண்ணி சூப்பரா கெடக்குப்பா... அங்கயே குளிச்சிட்டு டிரஸ் போட்டுட்டு வரலாம்... அம்புட்டுத் தண்ணி இருக்குப்பா'ன்னு கண்கள் விரிய ஸ்கைப்பில் சொன்னதை பாக்கும்போதே அவரை அவங்கம்மா எப்படி மேய்த்துக் கொண்டாந்திருப்பார்ன்னு தெரியுது. ரெண்டையும் மேய்க்கிறதுக்குள்ள ஒரு வழி ஆயிருவாங்க... தினமும் புலம்பல்தான்... பாவம் அவங்க அம்மா.

ஊருல எல்லாரும் மாட்டுப் பொங்கல் வைத்துட்டு வந்த பிறகு மதியம் விளையாட்டுப் போட்டி வச்சிருக்காங்க... அங்கதான்ய்யா கெடுத்துத்துப்புட்டான்.

ஊரே கூடி இருந்திருக்கு... எல்லாரும் உறவுகள்... கேலிகள் கிண்டல்கள் என சந்தோஷமாய் கழியும் தருணம் அது. இவரு ரொட்டி திங்கிற போட்டியில கலந்துக்கிட்டு வாந்தி எடுத்து வெற்றி பெறமால் போனது ஒரு புறம். நிறைய போட்டிகளுக்கு மத்தியில் உறி அடிக்கிற போட்டியும் வச்சிருக்காங்க. எல்லாப் பசங்களும் ரொம்ப அமைதியா இருந்து ரசிச்சிருக்காங்க... நம்மாளு குதிக்கிறதும் கைதட்டுறது வாய்க்குள்ள விரலை விட்டு விசிலடிக்க முயற்சி பண்ணி 'விஷ்ஷ்ஷ்....'ன்னு சத்தம் போடுறதுமா அலம்பலைக் கூட்டி அந்த இடத்தை மேலும் கலகலப்பாக்கியிருக்கிறார்.

இதுக்கெல்லாம் மேலாக கண்ணக் கட்டிப் போறவங்களைப் பார்த்து 'டேய் வேமாப் போடா... போயி ஒடடா... சும்மா இங்கயே சுத்றே... எங்கடா போறே...' என்றும் தோல்வி அடைந்து கண் கட்டை அவிழ்க்கும் போது 'அய்யோ...முடிலையா போ... போ... அடுத்த ஆளூ வா.. வா... கட்டுடா...' அப்படியிப்படின்னு வயசு வித்தியாசம் பாக்காம சகட்டு மேனிக்கு பேசியிருக்கான். எல்லாரும் பாத்துட்டு 'அடியாத்தி என்ன குமாரு மகன் இப்படி ஆட்டம் போடுறான்... இவன் அப்பன் இருக்க இடம் தெரியாதே'ன்னு நமக்காக ரொம்ப வருத்தப்பட்டிருக்காங்க. வாங்கி வச்ச பேருக்கு வாஞ்சையாப் பேசியிருக்காங்க.

'அடேய் என்னடா எம்மவன் பேசவே மாட்டான் நீ இந்தப் பேச்சு பேசுறே?'ன்னு சித்தப்பா... 

'அதுசரி குமாரு மகனா இது... ஆட்டம் பலமா இருக்கே'ன்னு ஆயா...

 'எங்க குமாரண்ணன் இருக்க இடமே தெரியாது... அது மகன் எங்க இருந்தாலும் தனியாத் தெரிவான் போலருக்கே' அப்படின்னு ஒண்ணுவிட்ட தம்பி... 

இப்படி என் உறவுகள் எல்லாரும் அவனை கேட்டாலும் அவரு போட்ட ஆட்டத்தை நிறுத்தவே இல்லையாம்... தொடர்ந்து பவர் ஸ்டார் ஹிட்டுத்தானாம்.

இப்படி நம்ம பேரை ஊருக்குள்ள நாறடிச்சிட்டு வியாழன் இரவு காரைக்குடிக்கு வந்துட்டாரு, ஸ்கைப்பில் பேசும் போது 'அப்பா அல்லாருக்கும் பிரைசு குடுத்தாய்ங்க எனக்குத் தரமாட்டேன்னுட்டாய்ங்கன்னு சொன்னாரு... வாய் மட்டும் பேசுறே... ஜெயிக்க முடியலைன்னு கேட்டதும் அய்யா வாங்கின பிரைசு எனக்குத்தான்னு வேற பெருமையா சொல்லிக்கிறாரு.

எது எப்படியோங்க... தனது பேச்சாலும் சிரிப்பாலும் அனைவரையும் கவர்ந்து வச்சிருக்கும் எங்கள் அன்பு மகன் இன்று பிறந்தநாள் கொண்டாடியிருக்கார். திறமைசாலியான அவன் திறமைகள் மேலும் மெருகேறவும்  எப்பவும் அவனோட சந்தோஷமும் பேச்சுத் திறமையும் நெலைச்சு இருக்கணுமின்னும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம்.

நீங்களும் அவன் நல்லாயிருக்கணுமின்னு வேண்டிக்கங்க... அப்படியே உங்களோட ஆசிகளையும் வழங்கிட்டுப் போங்க...

                                                                                                                                  -'பரிவை' சே.குமார்

வியாழன், 17 ஜனவரி, 2013

கிராமத்து நினைவுகள்: என்னாச்சு பொங்கல் வாழ்த்து?


டிக்கும் காலத்தில் தீபாவளி, பொங்கல் என்றாலே பண்டிகைக்கான களிப்பு இருக்குமோ இல்லையோ வாழ்த்து அட்டைகள் வரும் என்ற சந்தோஷம் அடிமனதில் ஆர்ப்பரிக்கும். நண்பர்கள், உறவுகள் என எல்லாரும் எல்லாருக்கும் வாழ்த்து அட்டைகளை அனுப்பித் தங்களது சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளும் அருமையான நிகழ்வாக இந்தப் பண்டிகைகள் இருக்கும்.

கிராமங்களில் உறவினர்கள் கொடுக்கும் திருவிழாக்காசை விட தபால்காரர் கொண்டு வந்து கொடுக்கும் வாழ்த்துக்களுக்கு வாயெல்லாம் பல்லாகத் திரிந்திருக்கிறோம் என்பது மறுக்கமுடியாத மறக்கமுடியாத உண்மை.பண்டிகைகள் என்றாலே எல்லாப் புத்தகக் கடைகளிலும் வாழ்த்து அட்டைகள் வகை வாரியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். தீபாவளிக்கு வெடிக்கடைகள் முளைப்பது போல் வாழ்த்து அட்டைகள் விற்பனைக்கென ஆங்காங்கே கடைகள் முளைக்கும். பண்டிகையோடு தொடர்புடைய வாழ்த்து அட்டைகள் இருந்தாலும் சின்ன வயதில் அதிகம் கவரும் வாழ்த்து அட்டைகளாய் ஆதர்ச நாயகன், நாயகிகள்தான் இருந்தார்கள். பல அட்டைகள் அவர்களுக்காகவே வாங்கி அனுப்பாமல் பத்திரப்படுத்தப்படும்.

தீபாவளி வாழ்த்தைவிட பொங்கல் வாழ்த்துக்குதான் அதிக மதிப்பு இருக்கும். அதுவும் பொங்கல் விடுமுறைக்கு முன்னரே நண்பர்களுடன் கடைக்கு சென்று வாழ்த்து அட்டைகள் வாங்கி இவன் இவன் நமக்கு அனுப்புவான் என்று கணக்குப் போட்டு அனுப்பி வைத்துவிட்டு அவர்களின் வாழ்த்துக்களை எதிர் நோக்கி காத்திருந்த நாட்கள் எத்தனை எத்தனையோ...

நகரங்களில் எப்படியோ கிராமங்களில் வாழ்த்து அட்டைகள் கொடுத்த சந்தோஷம் அலாதியானது... எங்கள் ஊருக்கு கண்டதேவியில்தான் தபால் அலுவலகம்,கண்டதேவி ஐயரான தபால் நிலைய அதிகாரி வீட்டில் முன்பகுதியை அலுவலகமாக மாற்றி வைத்திருந்தார்.  தபால்காரர் எங்கள் ஊருக்கு வாரத்த்தில் இரண்டு முறைதான் வருவார். எங்க ஊருக்காரர்களுக்கு உறவுக்காரர் போல ஐயர், எனவே அலுவலக நேரம் தவிர்த்து மற்ற நேரத்திலும் போய் தபால் வந்திருக்கிறதா என்று பார்த்து வாங்கி வரலாம். இதனால் யார் கண்டதேவிக்குப் போனாலும் ஐயரைப் பார்த்து தபால் வந்திருந்தால் வாங்கி வந்துவிடுவார்கள்.

மாட்டுப் பொங்கல் என்பது ஊரே ஒரு இடத்தில் கூடி வைக்கும் ஒரு இனிய பண்டிகையாகும். எங்கள் ஊர் கருப்பர் கோவிலின் எதிரில் இடம் சுத்தம் செய்து, தோரணங்கள் கட்டி எல்லாருமாய் கூடி கொண்டாடி மகிழ்வோம். கண்டதேவிக்கும் எங்கள் ஊருக்கும் இடையில்தான் இந்த இடம் இருக்கிறது. அதனால் தபால்காரர் மற்ற நாட்களில் முன்னப்பின்ன வந்தாலும் மாட்டுப் பொங்கல் அன்று கண்டிப்பாக சரியான நேரத்துக்கு வந்துவிடுவார்.அவர் கையில் கொண்டு வரும் வயர்க்கூடையில் நிறைய வாழ்த்து அட்டைகள் இருக்கும். பூவரச மரத்தில் ஆடியபடி அவருக்காக காத்திருக்கும் நாங்கள் அவரை சூழ்ந்து கொள்வோம். அவரும் ஒவ்வொரு பெயராகப் பார்த்து வாசித்துக் கொடுப்பார். ஆளுக்கு பத்து இருவது என வாழ்த்து அட்டைகள் வந்திருக்கும். எல்லாருடைய முகத்திலும் சந்தோஷம் சக்கரைப் பொங்கலாக பொங்கி நிற்கும்.

இதில் இன்னொரு முக்கியமான விசயம் என்னன்னா பக்கத்து வீட்டில் இருக்கும் மச்சானுக்கும் தபால்தலை ஒட்டாமல் வாழ்த்து அனுப்பியிருப்போம்...அதுக்கு 2ரூபாய் அல்லது 3ரூபாய் அபராதம் கட்டவேண்டியிருக்கும். நமக்கிட்ட அப்போ காசு இருக்காது... உடனே சரி போடா அடுத்த தடவை வரும் போது அம்மாகிட்ட வாங்கிக்கிறேன்னு சொல்லி கொடுத்துச் செல்வார்.  

பொங்கல் முடிந்து எல்லா வீட்டுப் பொங்கல் பானையிலும் கொஞ்சம் பொங்கல் எடுத்து காய்கறிகள் வேகவைத்து எல்லாம் கலந்து மந்திரம் சொல்லி மாடுகளுக்கு தீட்டி சுற்றி வரும் போது வாழ்த்து அட்டைகள் கொடுத்த சந்தோஷத்தில் 'பொங்கலோ பொங்கப்...பொங்கப்...பொங்க... பட்டி பெருகப் பெருக பால்ப்பானை பொங்கப்... பொங்க... பொங்க...' என்ற பாடல் சப்தமாக ஒலிக்க அங்கே சந்தோஷம் நிறைந்திருக்கும்.

கல்லூரியில் படிக்கும் போது வந்த வாழ்த்து அட்டைகளில் மிகவும் நெருக்கமானவர்கள் அனுப்பும் வாழ்த்து அட்டைகள் கொண்டு வந்த சந்தோஷம் இன்னும் அதிகம். அதில் பல கார்டுகள் பழைய குப்பைகளை கிளறும் போது பத்திரமாய் இருந்திருக்கின்றன... இன்னும் இருக்கின்றன. எப்ப ஊருக்குப் போனாலும் 'அடேய்... அந்த பீரோவுல கீழே கேசட்டும் பேப்பருமா வச்சிருக்கே... யாருமே யூஸ் பண்ண முடியாம... அதை எடுத்தியன்னா நான் துணிமணி வச்சுப்பேன்'னு அப்பா சொல்லிக்கிட்டேதான் இருக்காரு... 'எடுப்போம்... எடுப்போம்...' என்று இன்னும் பல வாழ்த்து அட்டைகளும் , இளையராசாவின் பாடல்களை சுமந்த TDK ஆடியோ கேஸட்டுக்களும் எழுதுகிறேன் என்று கிறுக்கிய பேப்பர்களும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன எடுக்கப்படாமலே...

எனக்கும் ஆசைதான் நண்பர்களுக்கெல்லாம் மீண்டும் வாழ்த்து அட்டைகள் அனுப்ப வேண்டும் என்று 'டேய் உன் அட்ரஸ் சொல்றா என்றால் கூகிள், யாஹீ, ஹாட்மெயில் என இணைய முகவரிகள்தான் கிடைக்கின்றன. நானும் இணையத்தில் பொங்கல் வைக்கும் படங்களைத் தேடி இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அப்படின்னு டைப்பி அனுப்பிடுறேன். அவர்களும் உனக்கும் வாழ்த்துக்கள்டா அப்படின்னு அதிலயே திருப்பி அனுப்பிச்சிடுறாங்க.

இன்னும் கொடுமை என்னன்னா இப்பல்லாம் எங்க ஊருக்கு தபால்காரரே வருவதில்லையாம்.யாருக்கும் லெட்டர் கூட வருவதில்லையாம். எதுவா இருந்தாலும் போனில்தான். முன்பு சாவுச் செய்தி சொல்ல எல்லா ஊருக்கும் சைக்கிளிலோ வண்டியிலோ ஓடினோம். இப்போ அதுவும் போனில் என்றாகிவிட்டது. முன்னேற்றங்கள் முக்கியமானவைகளை ஏப்பம் விட்டுவிட்டன... உறவுகளுக்குள் பாசத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுவிட்டன.

தபால்காரர் கொண்டு வந்து கொடுக்கும் வாழ்த்து அட்டைகள் கொடுத்த சந்தோஷத்தில் கடுகளவேனும் இன்றைய இணைய வாழ்த்துக்கள் கொடுக்கின்றனவா என்றால் சத்தியமாக இல்லை என்பதே உண்மை. நான்கு வரிகளையோ அல்லது இணையத்தில் எடுத்த படங்களையோ ஒட்டு மொத்தமாய் அனைவரின் முகவரிக்கும் அனுப்பவதில் அப்படி என்ன ஆனந்தம் இருந்துவிடப் போகிறது?
வாழ்த்து அட்டைகள் தொலைந்த இந்த நாட்களில்ஒப்புக்காக நாம் சொல்லும் வாழ்த்தில் ஏனோ நெருக்கமான அன்பும் 1.50பைசா அட்டை கொடுத்த சந்தோஷமும் இல்லாமல் போய்விட்டது என்பதே உண்மை. இனி வரும் தலைமுறை நாம் அனுபவித்தவற்றில் பலவற்றை இழந்து கணிப்பொறியே உலகம் என வாழப் போகிறது என்பது வேதனைக்குரியதாக இருந்தாலும் மாற்றங்கள் நிறைந்த உலகில் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

ஆர்ப்பாட்டமான ஆனந்தத்தைக் கொடுத்த வாழ்த்து அட்டை கலாச்சாரம் நமது இளம் வாழ்க்கையோடு மறைந்துவிட்டதை நினைக்கும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது. வளரும் கலாச்சார மாற்றத்தில் நாம் நல்லனவற்றை எல்லாம் இழந்து கொண்டேதான் போகிறோம் என்பதே எழுத்தில் சொல்வதால் மட்டும் என்ன பயன் வந்துவிடப் போகிறது?

படங்கள் வழங்கிய இணையத்துக்கு நன்றி.

                                                                                                                                      -'பரிவை' சே.குமார்

செவ்வாய், 15 ஜனவரி, 2013

மாட்டுப் பொங்கல்..!


 கருக்கலிலே எழுந்திருச்சு
காளைகளை குளிப்பாட்டி
புது கயிறுயும் மணியுமிட்டு
காவித் துண்டும் கட்டி
மஞ்சள் பொட்டோடு
காவியும் கலந்து இட்டு
கரும்பும் கிழங்கும்
அதனூடே பொங்கத்தாலி
கொஞ்சம் வைத்துக்கட்டி
ஊர் கூடி ஒன்றாக
கருப்பர் கோவில் வாசலிலே
பொங்கல் வைத்து
'பொங்கலோ பொங்கல்'
என சந்தோஷமாய்
திட்டிக்குழி சுத்தி வந்து
மாட்டுக்கெல்லாம்
பொங்கல் கொடுத்து
கேலிகாரர்களுக்கும்
பொங்கல் தீட்டி உற்சாகமாய்
கொண்டாடும் கிராமத்து
மாட்டுப் பொங்கல்
நெஞ்சுக்குள்ளே இனிக்கிறது
சர்க்கரைப் பொங்கலென...




                                                என் கிராமத்து மக்களுக்கும்
                                           நண்பர்களுக்கும் உறவுகளுக்கும்
                                          மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்


                                                                                                                                  -'பரிவை' சே.குமார்.

திங்கள், 14 ஜனவரி, 2013

பொங்கலோ பொங்கல்..!





வயலெல்லாம் வெளஞ்சு நிக்க
களத்து மேடு காத்துக் கிடக்க
களம் நிறையும் நெல்லுக்காக
காத்திருக்கும் வேளையிலே...

வாசலிலே கோலமிட்டு
வண்ணங்கள் அதில் கொடுத்து
இரும்பு அடுப்பினிலே
இனிய பொங்கல் வைக்க...

புதுப்பானையில் கோலமிட்டு
மஞ்சள் கொத்து அதில் கட்டி
சுத்தமான பசும்பாலோடு
புத்தரிசிப் பால் கலந்து வைத்து...

பொங்கி வரும் வேளையிலே
சந்தோஷம் பொங்கவே
பச்சரிசி வெல்லமிட்டு
பக்குவமாய் பொங்கல் வைத்து...

குடும்பத்தோடு உறவுகளும்
கூடிக் களித்திடவே...
இந்நாளை நமக்களித்த
தை மகளுக்கு நன்றி சொல்வோம்...

பொங்கலோ பொங்கலென
கூடியே சொல்லிடுவோம்...
மங்களமாய் நம் வாழ்வு
மகிழ்ந்தே சிறக்கட்டும்...

              அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

                                                                                                                         -'பரிவை' சே.குமார்.

Thanks--- Photo from Google

புதன், 9 ஜனவரி, 2013

விதிவிலக்கா, எதற்காக? (தினமணி - தலையங்கம்)

 திரைப்படத் துறைக்கு சேவை வரி கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்த் திரையுலகக் கலைஞர்கள் அனைவரும் திங்கள்கிழமை (ஜனவரி 7) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இது வெறும் அடையாள உண்ணாவிரதம் மட்டுமே. மத்திய அரசு தங்கள் கோரிக்கையை ஏற்காவிடில் மேலும் சில போராட்ட உத்திகளில் திரையுலகம் ஈடுபடக்கூடும்.

 திரையுலகின் நூற்றாண்டு தொடக்க விழா ஆண்டாகிய 2012-இல் திரையுலகம் மீது வரிகளை விதிக்க மாட்டோம் என்று 2012 மார்ச் முதல் வாரத்தில், அன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உறுதி கூறினார். பட்ஜெட்டில் சேவை வரி 12.36% ஆக உயர்த்தப்பட்டபோது, சேவை வரிப் பட்டியலில் திரையிடுவோர், விநியோகஸ்தர்களுக்கு விலக்கு அளித்ததற்காக அப்போது திரையுலகம் அவருக்கு நன்றியும் தெரிவித்தது.

  ஆனால், மத்திய அரசு ஜூன் மாதம் வெளியிட்ட சில சுற்றறிக்கைகள், சேவை என்றால் என்ன என்று வகைப்படுத்தியது. இதில் திரைத்துறை கலைஞர்கள் இடம்பெறும் கட்டாயம் ஏற்பட்டது. இப்போது இந்த சேவை வரியை எதிர்த்துத் திரையுலகினர், சின்னத்திரைக் கலைஞர்கள் அனைவரும் களம் இறங்கியுள்ளனர்.

  நடிகர்கள் மட்டுமின்றி கேமராமேன், எடிட்டிங் செய்பவர், ஒலிப்பதிவு செய்யும் தொழிற்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் தங்கள் வருமானத்தில் 12.36% சேவை வரி செலுத்த வேண்டும். ஒரு தயாரிப்பாளர் பட விநியோகஸ்தர்களுக்கு படத்தைத் திரையிடும் உரிமையை வழங்குவதால் (காப்பிரைட்) கிடைக்கும் பணத்துக்கு மட்டும் சேவை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

  இத்தகைய சேவை வரி விதிப்பினால், ஒரு படத்துக்கு ரூ.1 கோடி சம்பளம் பெறும்  நடிகர், ரூ. 12.36 லட்சம் சேவை வரி கட்ட வேண்டும். ஆனால், அந்த நடிகர் இந்த சேவை வரியை படத் தயாரிப்பாளரே செலுத்த நிர்பந்திப்பார் என்றும் இத்தகைய நடைமுறையால் கருப்புப் பணம்தான் அதிகமாகும் என்றும் கூறப்படுகிறது.

  இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், "இப்படி வரி போட்டால் கருப்புப் பணம்தான் அதிகமாகும். கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டுமென்றால் கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும். அப்படிக் கொண்டுவந்தால்தான் அரசுக்கு அதிகப் பணம் கிடைக்கும்' என்று கூறியுள்ளார்.

  இத்தகைய வரிவிதிப்பை மத்திய அரசு கொண்டுவரக் காரணம், இன்று இந்தியத் திரையுலகம் மற்றும் சின்னத்திரையுலகம் அடைந்துள்ள மாற்றமும், இத்தொழிலில் உருவாகியுள்ள புதிய நடைமுறைகளும்தான்.

  இன்றைய திரையுலகம் வெறும் திரையரங்குடன் நிற்கவில்லை. திரையரங்குகள் மூலம் அரசுக்கு வரும் கேளிக்கை வரி மிகமிக சொற்பம். தற்போது 600 தொலைக்காட்சி சேனல்கள் மூலம் ஒவ்வொரு வீடும் ஹோம் தியேட்டராக மாறிவிட்டது. 3ஜி தொழில்நுட்பம் மேலும் பரவலாகும்போது, செல்போனில், டேப்லெட்டில் திரைப்படம் அல்லது சின்னத்திரை சீரியல்களைப் பார்க்க முடியும். ஆகவே சேவை என்பதன் பொருளை மத்திய அரசு விரித்துக்கொண்டே போகிறது.

  ஓராண்டில் சுமார் 1,000 திரைப்படங்களும் 9,000 சீரியல்களும் அனைத்து மொழிகளிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒலிப்பதிவு, பாடல்பதிவு, ஸ்டுடியோ எல்லாமும் மிகச் சிறிய அளவில், ஒரு வீட்டுக்குள் இருந்தாலே போதும் என்ற அளவுக்கு கணினித் தொழில்நுட்பம் எல்லைகளைச் சுருக்கியுள்ளது.

  அதுமட்டுமல்ல, இந்தியாவில் செலவு குறைவு என்ற காரணத்தால், வெளிநாட்டில் தயாரிக்கப்படும் சில அனிமேஷன் படங்களும், எடிட்டிங் பணிகளும் இந்தியாவுக்கு அயல்பணி ஒப்பந்தமாக வருவது அதிகரித்துள்ளது.

  மேலும், திரைப்பட காட்சித் தொகுப்புகளை, பாடல்களை, அல்லது படம் முழுவதையும் தனியார் தொலைக்காட்சிகள் பயன்படுத்திக்கொள்ள, ஒளிபரப்பு உரிமைகளை வழங்குவதிலும் புதிய நடைமுறைகள் ஏற்பட்டுள்ளன. ஒரு படம் முடியும் முன்பாகவே இந்த உரிமைப் பரிமாற்றம் நடந்துவிடுகிறது. வெளிநாட்டுப் படங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டு, நேரடியாக தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் புதிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

  "விஸ்வரூபம்' போன்று, ஒரு படத்தை நேரடியாக, டி.டி.எச் மூலம் வெளியிடலாம் என்கின்ற அளவுக்கு தொழில்நுட்பம் விரிந்துள்ள நிலையில், திரை மற்றும் சின்னத்திரை சேவை வகைப்பாட்டில் தானே சிக்கிக்கொள்கிறது.

  இந்த வரி விதிப்பினால், தயாரிப்புச் செலவு கூடும், இந்தச் செலவு கடைசியாக மக்கள் மீதுதான் வந்து விழும் என்று சொல்கிறார்கள். இந்த வாதம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சரியாக இருக்கலாம். திரையரங்குகளைத் தேடி வந்து பார்க்கும் மக்கள் எண்ணிக்கை குறைந்துவிட்ட இந்த நாளில் இந்த வாதம் பொருந்தாது.

  பெரிய நடிகர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு, அவர்களது சேவை வரியை அவர்களே கட்டினாலே போதும், தயாரிப்புச் செலவு பெரிதும் குறைந்துவிடும்.

  திரைப்படம் என்பது திரைத்துறையோடு நின்றுவிடும் நிலைமை இன்றில்லை. திரையரங்குகள் என்பதைத் தாண்டி, தனியார் தொலைக்காட்சிச் சேனல்களுடன் தொடர்புடைய தொழிலாக திரைத்துறை மாறிவிட்டது. திரைத்துறைக்கு சேவை வரி விலக்கு அளிப்பதன் பெரும்பயன் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்குத்தான் மறைமுகமாகப் போய்ச் சேரும்.

 நடிக, நடிகையரும், திரையுலக ஊழியர்களும் மாதச் சம்பளம் பெறுபவர்கள் அல்ல. ஒப்பந்தப் பணியாளர்கள். ஒப்பந்தம் என்றாலே அதற்கு சேவைவரி உண்டு. சிகையலங்காரம், அழகுக் கலை வல்லுநர்கள் போன்றவர்களுக்கே சேவை வரி உண்டு எனும்போது, லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சம்பளம் பெறும் திரைப்படத் துறையினருக்கு எதற்காக விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று புரியவில்லை.

 வழக்கில் ஆஜராவதற்கு நாளொன்றுக்கு லட்சத்துக்கும் மேல் சம்பளம் பெறும் வழக்குரைஞர்களை மட்டும் வழக்குரைஞரான நிதியமைச்சர் ஏன் சேவை வரி வரம்பில் சேர்க்காமல் விட்டு வைத்திருக்கிறார்? அவர்களுக்கு ஏன் விதிவிலக்கு என்கிற கேள்வியையும் இந்த நேரத்தில் எழுப்பத் தோன்றுகிறதே...

08/01/2013
'பரிவை' சே.குமார் 

சனி, 5 ஜனவரி, 2013

நித்திய சந்தோஷம்...



நானாகி இருந்த மனசுக்குள்
நாம் என்று அமர்ந்தவள் நீ..!
வாழ்க்கைப் போராட்டத்தில்
அச்சாணியாய் அமைந்தவள் நீ..!
வேதனைகளையும் கோபங்களையும்
புன்னகையால் புறந்தள்ளுபவள் நீ..!
வேசமில்லா பாசமும் நேசமும்
வெள்ளந்தியாய் கொடுப்பவள் நீ..!
இன்பமும் துன்பமும் இணைந்த
வாழ்க்கையில் சுமைதாங்கியாய் நீ..!
ஆணில் பாதி பெண் என்பதை மாற்றி
என்னுள் எல்லாமும் ஆனவள் நீ..!
காதலியாய் என்னுள் நிறைந்து
தாயாய் எனக்காய் வாழும்
என்னவளே... என்னுயிரே...
இந்தநாள் மட்டுமல்ல இனிவரும்
நாட்களெல்லாம் இனிமை நிறையட்டும்..!
வலிகள் எல்லாம் வடிந்துபோய்
வசந்தகாலம் மலரட்டும்..!
சந்தோஷங்கள் உன் வசமாகட்டும்..!

************************************************

இன்று பிறந்தநாள் காணும் எங்கள் உயிருக்கு 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... 
உங்கள் ஆசிகளும் வாழ்த்துக்களும் சந்தோஷத்தை கொடுக்கட்டும்...

பிரியமுடன் வாழ்த்தும்...

சே.குமார்
ஸ்ருதி குமார்
விஷால் குமார்