மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 11 செப்டம்பர், 2010

பேச பயம் எனக்கு


நமக்கு என்னமோ தெரியலைங்க இந்த பொண்ணுங்ககிட்ட பேசுறதுன்னா கை காலெல்லாம் உதறலெடுத்துடும். இன்னைக்கு நேத்து இல்லைங்க ஒண்ணாப்புல இருந்து இதே நிலைதான். ஊருக்குள்ளயும் யார்கிட்டயும் பேசுறதில்லை. எங்க பஞ்சப்பத்தா, எம் பேராண்டிக்கிட்ட பேசணுமின்னா வெத்தலை பாக்கு வைக்கணுமின்னு என்னை பார்க்கிறப்பல்லாம் சொல்லும். அதுக்கு லேசா சிரிச்சு வைப்பேன் அவ்வளவுதான்.

கடந்த காலத்துல நாம வந்த வழியை திருப்பிப் பார்த்தா பொண்ணுங்ககிட்ட பேச பட்ட பாட்டை ஒரு மெகா சீரியலாவே எடுக்கலாம். நீங்க சிரிப்பா எடுத்துக்கிட்டாலும் சரி... சீரியஸா எடுத்துக்கிட்டாலும் சரி... எம்மனசுக்குள்ள உள்ளத இப்பவாவது வெளியில சொல்லணுமின்னு தோணுச்சு... அதான் தனியா உக்காந்து சொல்றேன்... இன்னொன்னு இதை யாரும் எம்பொண்ட்டாட்டிக்கிட்ட சொல்லிடாதீங்க... எதுக்கு சொல்றேன்னு கடைசியில உங்களுக்கே புரியும்.

எங்கூருக்கு பக்கத்துல இருக்கிற அரசினர் மேல்நிலைப் பள்ளியில நான் நாலாப்பு படிச்சேன். எங்கிளாசுல அரசல்புதூர்ல இருந்து தனலெச்சுமின்னு ஒரு கட்டச்சி படிச்சது. கிளாசுல எல்லாத்துக்கும் வெடுக்கு வெடுக்குன்னு எந்திருச்சு பதில் சொல்லும். எல்லாரும் அதுகிட்ட பேசிக்கிட்டே இருப்பானுங்க. நா பேசவே மாட்டேன். நாம எதுக்கு அதுகிட்ட பேசணும்ன்னு நினைச்சுப்பேன்.

யாரு லீவு போட்டாலும் அது மட்டும் லீவே போடாது. நமக்கெல்லாம் அடிக்கடி வர்ற தலைவலி, காய்ச்சல் எல்லாம் அதுக்கு மட்டும் வர்றதேயில்லை. லீவு போட்டவங்கள்லாம் அதுகிட்டதான் நோட் வாங்கி எழுதுவாங்க. ஒரு தடவை நானும் மூணு நாள் லீவு போட்டாச்சு. கிளாசுக்கு போனா நிறைய நடத்திப்புட்டாங்க.

ரமேசுக்கிட்ட நோட்டுக்கேட்டா, "அட ஏண்டா இவனே... எ எழுத்தைப் பார்த்து நானே படிக்க முடியாது. நீ எப்படி எழுதுவே... தனத்துக்கிட்ட நோட் வாங்கி எழுது... அது எழுத்து அழகா குண்டு குண்டா இருக்கும்." என்றான்.

"டே... ரமேசு... நீயே வாங்கிக்கொடுடா... எனக்கு அதுகிட்ட கேட்க என்னமோ மாதிரி இருக்குடா"

"அடேய்... கிளாசுப்புள்ளைக்கிட்ட பேச பயமா இருக்கா... நல்லாயிருக்குடா... சரி இரு நான் கேக்குறேன்"

"தனம்... ஓ நோட்டைக் கொடுவே..."

"ஏ நோட் உனக்கு எதுக்கு..."

"எனக்கில்லை மகேசு மூணு நாளா வரலையில்ல... அதான் பார்த்து எழுத..."

"அவனுக்கு வேணுமின்னா அவன் கேக்கட்டும்... நீ யாரு வக்காலத்து..." கோபமாக கேட்டாள் கட்டச்சி.

"இல்ல அவன் யாருகிட்டயும் பேச மாட்டான்... பயப்படுவான்..."

"எங்கிட்ட பேசுனா போட்டிருக்கிற டவுசர்ல மூத்தரம் போயிடுவானோ... நான் என்ன காளியாட்டமா இருக்கேன். துரை பயப்படுறாரு..." கேலியாக சிரித்தாள்.

"பாவம் புள்ள... அவன் எழுத குடுல்ல"

"போடா... நாளைக்கு சனிக்கிழமை, திங்ககிழமை இங்கிலீஷ் சார் பரிச்சை சொல்லியிருக்காரு... நான் படிக்கணும்... நீ கொடு" என்று தர மறுத்துவிட்டாள்.

அதன் பிறகு அவ கூட பத்தாப்பு வரைக்கும் படிச்சேன். நோட்டும் கேக்கலை... பேசவும் இல்லை. இப்ப அவ... சரி அது எதுக்கு இந்த சந்தோஷமான நேரத்துல... விடுங்க மேல சொல்றதைக் கேளுங்க.

******

அப்புறம் பதினோன்னு படிக்கும்போது ஒருநாள் நல்ல மழை... சைக்கிளை ஓட்டமுடியாம பஸ் ஸ்டாப்பு ஓரத்துல நின்னுக்கிட்டிருந்தேன். அங்க எங்கூரு புவனாவும் நின்னுச்சு. ஆனா நான் அதுக்கிட்ட எதுவும் பேசலை... அதுவும் எங்கிட்ட எதுவும் பேசலை... கொஞ்சம் மழை விட்டாப்புல இருக்க, சைக்கிளை எடுத்தேன்...

அப்ப "மகேசு, மறுபடியும் மழை வராப்புல இருக்கு... பஸ் வருமான்னு தெரியலை... நானும் உங்கூட வாரேண்டா"ன்னு சொன்னுச்சு... நான் காதுல வாங்குன மாதிரி காட்டிக்கலை... அது "மகேசு... மகேசு"ன்னு பின்னால கூப்பிட்டது கேக்காத மாதிரி பொயிட்டேன். அப்புறம் ஒம்பதாப்பு படிக்கிற ராமசாமி மாமா மகன் கூட்டியாந்திருக்கான்.

காலையில புவனாவை பார்த்தப்போ முறைச்சுக்கிட்டே எங்கக்காகூட குளிக்கப் போச்சு. அன்னைக்கு சாயந்தரம் எங்கக்கா எங்கிட்டா, "எருமை... நம்மூருப்புள்ள மழையில நின்னப்போ கூட்டியாரதுக்கென்ன. அவன் சின்னப்பயலா இருந்தாலும் வாக்கான்னு கூட்டியாந்திருக்கான்." அப்படின்னு திட்டுச்சு. நான் போக்கான்னு சொல்லிட்டு பொயிட்டேன். இப்பவும் புவனா ஊருக்கு வந்தாலும் எங்கிட்ட பேசாது நானும் பேசமாட்டேன்.

******

காலேசுல படிக்கயில எங்கிளாசுல மொத்தம் முப்பத்தைஞ்சு பேரு, அதுல இருவது பேரு புள்ளைங்க. எங்க பசங்க எப்ப பார்த்தாலும் கடலை போட்டுக்கிட்டே இருப்பாங்க. எனக்கு அது புடிக்காது... நா வெளியில பொயிட்டு வகுப்பு ஆரம்பிக்கும் போதுதான் உள்ளே வருவேன்.

ஒருநா இப்படித்தான் நான் பிஸிக்ஸ்ல படிக்கிற ரமேசைப் பார்க்கப் போனேன். அவனும் பிள்ளைங்ககிட்டதான் பேசிக்கிட்டு இருந்தான். என்னைப் பார்த்ததும், "வாடா மகேசு... சும்மா உள்ளே வா" அப்படின்னு கூப்பிட, உள்ளே போனேன்.

"பிரண்ட்ஸ்... இவன் எம் பிரண்ட்... ஒண்ணாப்புல இருந்து ஒண்ணா படிச்சோம்..."

"ஹாய்..."

"....." பேசாமல் நின்னேன்.

"என்னடா உன் பிரண்ட் ஊமையா?" என்றாள் ஒருத்தி.

"இல்ல ரமா... இவனுக்கு பொண்ணுககிட்ட பேச கூச்சம்... அதான்..."

"அலோ... சும்மா பேசுங்க... நாங்க ஒண்ணும் முனுங்கிடமாட்டோம்..." என்றாள் அவள்.

"அவரு பேசினா முத்து உதிர்ந்திடுமோ என்னவோ" என்றாள் இன்னொருத்தி.

அதுக்கு மேல அங்க நிக்க பிடிக்காம நா வாரேண்டான்னுட்டு வேகமா வந்திட்டேன்

சாயந்திரம் காலேசு விட்டுப் போகையில, "மகேசு நில்லுங்க நானும் வாரேன்... பேசிக்கிட்டே போகலாம்" அப்படின்னு சொல்லிக்கிட்டே சைக்கிளை வேகமாக ஓட்டி என்னருகில் வந்தாள் ரமா.

அவளைப் பார்த்து லேசா சிரிச்சு வச்சேன். அவ என்னென்னமோ பேசினா, ஆனா நான் எதுவும் பேசலை. இது தினமும் தொடர்ந்துச்சு... பிரண்ட்செல்லாம் அவளை நான் லவ் பண்றதா சொன்னாங்க... நா சிரிச்சுக்கிட்டேன்...

படிப்பு முடிஞ்சப்ப அவ எங்கிட்ட லவ்வை புரப்போஸ் பண்ணினா, அப்பவும் நான் எதுவும் சொல்லலை. அதுக்கப்புறம் அவளை பார்க்கவேயில்லை. சில நாளுக்கு முன்னால திருச்சி போறப்போ பஸ்ல பார்த்தேன். என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டுக்கிட்டா, ஆனா நான் பாக்காத மாதிரி நின்னுக்கிட்டேன். என் முதுகுக்குப் பின்னால அவ பெருமூச்சு விட்ட சப்தம் கேட்டுச்சு.

இப்பவும் எந்த பொண்ணுக்கிட்டயாவது பேசணுமின்னா உதறல் எடுத்துடும். சரிங்க காய்கறி வாங்க வந்தவன் மனசில உள்ளதை புலம்பிட்டேன். போதும் நம்ம கதை... வீட்டுக்குப் போறேன் நீங்களும் பின்னால வாங்க...

******

"இவ்வளவு நேரம் என்ன பண்ணுனீங்க"

"...."

"இப்புடி பேசாம இருந்தே காலத்தை ஓட்டிடுவீங்க போல"

அதுக்கும் பதிலாய் "...."

"ஆமா என்ன காய் வாங்கினீங்க..." என்றபடி கூடையை கவித்தவள், "கருமம்... இந்த முத்தக் கத்திரிக்காய எதுக்கு வாங்காந்தீங்க... அதுவும் பாதி பூச்சியா இருக்கு... எதாவது ஒண்ணு உருப்படியாத் தெரியுதா... எந்தலையில கட்டி வச்சு கழுத்தறுத்துப்புட்டாங்க... எத்தனை மாப்பிள்ளை வந்துச்சு... எல்லாத்தையும் விட்டுட்டு இந்த மங்குனிக்கு கட்டி வச்சிட்டாங்களே... காலமெல்லாம் இது கூட...."

நான் மெல்ல வெளியானேன்.

இது எப்பவும் நடக்குறதுதான்... இதுக்குத்தான் நான் என் கதையை சொன்னப்ப எம்பொண்டாட்டிகிட்ட சொல்லாதீங்கன்னு சொன்னேன். இல்லேன்னா அதுக்கும் சேர்த்து அர்ச்சனை விழுந்திருக்கும். இருங்க சொல்ல மறந்துட்டேனே... இப்ப நம்மளை சத்தம் போட்ட நம்ம அம்மணி யாரு தெரியுமா? சத்தமா சொல்ல முடியாதுங்க பக்கத்துல வாங்க... நம்ம நாலாப்பு கட்டச்சிதாங்க... என்ன செய்ய விதி சேர்த்துடுச்சு... சரிங்க, இன்னொரு நாளைக்கு இன்னும் சில கதைகளோட சந்திப்போம்.

-'பரிவை' சே.குமார்

வியாழன், 9 செப்டம்பர், 2010

இதயமே... இதயமே...

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டிருந்தவர் முரளி. ரஜினி, கமல், விஜயகாந்த் என முன்னணிகள் மத்தியில் வெற்றிப்படங்களை கொடுத்தவர்களில் முரளியும் ஒருவர்.

பிறந்தது கர்நாடகம் என்றாலும்  தமிழ்ப்படங்களில் மட்டுமே நடித்தார். வேறு மொழிப்படங்களில் நடிக்கவில்லை. அம்மா தமிழ் நாட்டவர் என்பதால் தமிழ்நாட்டை தாய் நாடாக நினைத்தவர். தனது குடும்பம் பற்றியோ தன்னைப் பற்றியோ தவறான செய்திகள் வராமல் வாழ்ந்தவர்.

தமிழில் 1984ஆம் ஆண்டு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான பூவிலங்கு படத்தில் அறிமுகமானார். இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனதைத் தொடர்ந்து வெற்றி நாயகனாக வலம் வந்தார்.

தான் நடிக்கும் கதாபாத்திரம் என்னவோ அதை அப்படியே தனது நடிப்பில் கொண்டு வந்தவர் முரளி என்றால் மிகையாகாது. நடிகர் மோகன் படங்களில் பாடல்கள் எப்படி ஹிட் ஆகுமோ அது போல் இவரது படப் பாடல்களும் அனைவரும் ரசிக்கும்படி அமைந்தன.

பெரும்பாலான படங்களில் கல்லூரி மாணவராகவே நடித்துள்ளார். தனது மகன் அறிமுகமான பாணா காத்தாடி படத்தில் கௌரவ வேடத்தில் தோன்றினார். அதில் என்ன கதாபாத்திரம் தெரியுமா? மருத்துவக் கல்லூரி மாணவர். அதில் அவர் பேசும் வசனத்தில் "நான் இதயம் ராஜா, எம்.பி.பி.எஸ். நான் காம் ஆண்டு படிக்கிறேன்" என்பார். "இன்னமா காலேசு படிக்கிறாரு" என்று ஒருவன் சொல்வான். வயதானதே தெரியாத நடிகர்.

46 வயது மரணிக்கக் கூடிய வயதா..?. 'இதயமே... இதயமே... உன் மௌனம் என்னைக் கொல்லுதே..' என்று பாடி நடித்தவர், இதயவலியால் மரணமடைந்தார் என்னும் போது நமக்கு மனசு வலிக்கிறது.

மகன் நடிக்க வந்ததும் ஓய்வெடுக்க நினைத்திருப்பார் போல, ஆனால் நிரந்தர ஓய்வெடுப்பார் என்று குடும்பத்தார்கள் நினைத்திருக்க மாட்டார்கள்.

பூவிலங்கு, பகல் நிலவு, புது வசந்தம், நம்ம ஊரு பூவாத்தா, சாமி போட்ட முடிச்சு, இதயம், சின்ன பசங்க நாங்க, என்றும் அன்புடன், அதர்மம, என் ஆசை மச்சான், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், காதலே நிம்மதி, தினந்தோறும், தேசிய கீதம், இரணியன், ஆனந்தம், கடல் பூக்கள், சுந்தரா டிராவல்ஸ் போன்ற படங்களை முக்கியமானவையாக சொல்லலாம்.

முரளி ஏராளமான விருதுகளை பெற்றிருந்தாலும் அவர் நடித்த கடல் பூக்கள் படத்துக்காக 2001ஆம் ஆண்டு தமிழக அரசின் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.பி.பி.எஸ். படித்துள்ள தனது மகளுக்கு மூன்று நாட்களுக்கு முன் சிறப்பான முறையில் நிச்சயதார்த்தம் செய்த முரளி அவரது திருமணத்தை கோலாகலமாக நடத்தத் திட்டமிட்டிருந்தாராம். ஆனால் அவரை அப்படி ஒரு சந்தோஷத்தை பார்க்க உனக்கு கொடுப்பினை இல்லை என்று காலன் கூட்டிச் சென்று விட்டான்.


நேற்றிரவு சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் நெஞ்சுவலிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முரளி இன்று காலை பிணமாகத் திரும்பினார்.

அவரது உடலுக்கு திரையுலக பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், ரசிகைகள் என தமிழகமே திரண்டு வந்து அஞ்சலி செய்கிறது. நாளை இந்தக் கலைஞனின் உடல் பெசண்ட் நகர் மின் மயானத்தில் எரியூட்டப்படுகிறது.

முரளிக்கு அஞ்சலி செலுத்திய சிவக்குமார், "முரளி வயசே ஆகாதவர். அவருக்கு மரணம் என்றால் அந்தக் கடவுளைத்தான் சபிக்க வேண்டும்" என்றார். அது உண்மையே...

முரளியின் மரணத்தால் வாடும் அவரது குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வதுடன் முரளி என்ற மகா கலைஞனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

முரளி நீங்கள் மறைந்தாலும், பொட்டு வைத்த வட்ட நிலாவிலும்... ஈரமான ரோஜாவேயிலும்... இன்னும் எத்தனையோ கீதங்களில் என்றும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பீர்கள்.

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

மனசின் பக்கம் - III

பேராசை பெருநஷ்டம்:

இந்த வார 'டீலா நோடீலா' நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி கலந்து கொண்டார். அவரது கணவர் வர்மக்கலை மூலமாக நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதாகவும் இதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு அந்த தொழிலை மேம்படுத்த இருப்பதாகவும் சொன்னார். இலவசமாக மருத்துவம் என்ற அவர்களது நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள். ஆனால் நிகழ்ச்சியில் நடந்தது என்ன தெரியுமா?

ஆரம்பத்தில் அந்த அம்மா மிகப்பெரிய தொகை இருக்கும் பெட்டிகளை திறந்தார்கள். இருந்தும் அடுத்து வந்த சுற்றுகளில் நல்ல முன்னேற்றம் சிறு சிறு தொகைகள் வந்தன. அவருக்கான டீல் தொகையும் கூடி வந்தது.

கடைசிச் சுற்றுக்கு முந்தைய சுற்று முடிவில் அவருக்கு 17 லட்சமும் சில ஆயிரங்களும் பேங்கர் என்று சொல்லி அழைபேசியில் பேசுபவரால் டீலாக வைக்கப்பட்டது. இதற்கு நோடீல் கொடுத்தால், இருக்கும் இரண்டு பெட்டிகளில் அவரது கையில் இருக்கும் பெட்டியில் என்ன தொகையிருக்கிறதோ அது கிடைக்கும்.

அதுவரை விளையாண்டது போக மீதம் இருந்த தொகையோ ரூ.500 மற்றும் 50 லட்சம் மட்டுமே. பார்வையாளர்கள் வரிசையில் இருந்து டீல் என்ற குரல்கள் கேட்கத் துவங்கின. அவரது மாமியார் என்று நினைக்கிறேன், அவரும் போதும்மா என்கிறார். ஆனால் கணவன் மனைவிக்கு 50 லட்சம் கிடைத்தால் நல்லாயிருக்கும் என்ற ஒரு நப்பாசை.

இருவரும் கூடி ஆலோசித்தனர். கணவன் ஒரே முடிவாக நோடீல் கொடு என்றார். மனைவி கடிகார பெண்டுலமானர். இதுவா அதுவா என்ற குழப்பத்தில் இருந்தார். பின்னர் கணவனின் அன்புக் கட்டளை(?)க்கு இணங்கி நோடீல் கொடுத்துவிட்டார்.

தொலைக்காட்சிகளுக்கே உரிய சில பல நாடகங்களுடன் பெட்டியை திறந்தால் கேலரியில் உள்ள பெட்டியில் 50 லட்சம் இருக்க, அவரது பெட்டியில் வெறும் 500 ரூபாய் மட்டுமே. பின்னர் அழுகைகள், ஆத்திரங்கள் எல்லாம் வந்தன.

17 லட்சங்கள் எங்கே..? 500 ரூபாய் எங்கே..? மக்கள் சேவை செய்ய நினைத்தவர்கள் கிடைத்தது போதும் என்று போயிருந்தால்... 17 லட்சம் கையில்...  அவர்களது பேராசைக்கு கிடைத்த பரிசு... வெறும் 500 தானே.

கணவருக்கு வீட்டில் போய் என்ன கிடைத்திருக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். இந்த சம்பவம் வாழ்நாளெல்லாம் அவர்களுக்குள் பிரச்சினையை ஏற்படுத்தாது என்பது என்ன நிச்சயம்?

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து..!

*****

மனித நேயமற்ற அரக்கன்:

எங்களுக்கு சமையல் செய்து கொடுத்துவிட்டு இரவு வேலைக்கு செல்லும் கிளினிங் கம்பெனி அண்ணன் ஒருவர், அபுதாபி வந்து ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே ஊருக்கு செல்ல கடந்த மூன்று மாதமாக கம்பெனியில் கேட்டுக் கொண்டிருந்தார். அவர்களும் இழுத்தடித்தார்களே தவிர, விடுப்பு அளிக்க ஏனோ அவர்களுக்கு மனம் வரவில்லை.

அவருக்கு ஆறு மாதம் விடுப்பு இருந்தாலும் அவரது விசா டிசம்பரில் முடிவடைவதால் மூன்று மாதத்தில் வரவேண்டிய நிலை. அதனால் அவர்களிடம் தினமும் நச்சரிக்க, ஒரு கட்டத்தில் அவரது மேற்பார்வையாளர், 'எனக்கு ஒண்ணுமில்ல... நீ பெரிய ஆளுக்கிட்ட பேசு'ன்னு சொல்லிட்டு பங்களாதேஷ்க்கு ஆள் எடுக்க பொயிட்டான். இவரும் கம்பெனியில் பேச அவர்களும் போகச் சொல்லியாச்சு.

இங்கும் விமான டிக்கெட் கம்பெனிதான் கொடுக்க வேண்டும் என்ற விதி உண்டு. ஆனால் சில கம்பெனிகள் கொடுப்பதில்லை. (எங்க கம்பெனியிலும் இல்லை) அவரிடம் டிக்கெட் எடுத்துக் கொண்டு வந்து காட்டிட்டு பாஸ்போர்ட் வாங்கிக்க என்று சொல்லியுள்ளார்கள். ( டிக்கெட் தொகை அவர்கள் கொடுத்தது போல் கணக்கில் காட்டத்தான் டிக்கெட்டுடன் வரச்சொன்னது).

அந்த அண்ணனும் இன்று இரவு சென்னை செல்லும் விமானத்தில் டிக்கெட் எடுத்து மகளுக்கு திருமணம் வைக்க இருப்பதால் நண்பர்களிடம் கடன் வாங்கி நகைகள், வீட்டிற்கு தேவையான பொருட்கள், சாக்லெட், பிஸ்கட் பாக்கெட்டுக்கள் என எல்லாம் வாங்கி விட்டார். ஊருக்குச் செல்ல பார்சலெல்லாம் கட்டி ரெடியாயாச்சு.

நேற்று காலை கம்பெனிக்கு சென்று எல்லா வேலைகளையும் முடித்து பாஸ்போர்டை வாங்க காத்திருந்த போது பங்களாதேஷில் இருந்து வெள்ளியன்று திரும்பிய அவரது மேற்பார்வையாளன் கம்பெனிக்கு போன் செய்து அந்த ஆளுக்கு பாஸ்போர்ட் கொடுக்காதே... அவருக்கு மாற்று ஆள் இல்லை என்று சொல்லிவிட்டான். மேலும் அலுவலகத்திற்கும் வந்து தடுத்துவிட்டான். அவரும் எவ்வளவோ பேசியிருக்கிறார் ஆனால் அவன் செவி சாய்க்கவில்லை. இப்ப போகமுடியாது என்பதை மட்டுமே திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறான்.

ஒரு கட்டத்தில் மனது உடைந்த அண்ணன் வேலையை ராஜினாமா செய்து விட்டார். இருந்து ஒரு மாத வேலை செய்ய வேண்டும் என்ற விதியின்படி அவரை வேலைக்கு வரச் சொல்லிவிட்டார்கள். இப்ப டிக்கெட் பணத்தில் பாதிதான் கிடைக்கும். வாங்கிய பொருட்களை பார்சலில்தான் போட்டுவிட வேண்டும். அவர் மனதொடிந்து போய் இருக்கிறார்.

அவரது ஆசைகளை நிராசையாக்கியவன் ஒரு அரபியோ, பாகிஸ்தானியோ, மலையாளியோ அல்ல... நம்ம தமிழன் தான்.

தமிழனுக்குத் தமிழன் எதிரிதான் என்பதை நிரூபித்துவிட்டான் பரதேசி.

*****

நான் பார்த்த படங்கள் ஒரு பார்வை:

நான் மகான் அல்ல: ஆரம்பத்தில் டீலக்ஸ் பஸ் போல் சென்ற படம் முடியும் போது கிராம்ங்களுக்கு செல்லும் டவுன்பஸ் போலாகிவிட்டது. கார்த்திக் வேலை தேடுவதும் காஜலை லவ்வுவதும் போர். நம்மளை மாக்கானாக்கும் படம்.

பாணா காத்தாடி: முரளியின் மகனும் கதாநாயகியும் நல்ல தேர்வு. பிரசன்னா வில்லன் என்றால் அவருக்கு மேல் ஒருவர் இருக்கிறார் என்று ஒரு இடத்தில் மட்டும் காட்டுகிறார்கள். வித்தியாசமான முடிவா வில்லன்கள் இருக்க கதாநாயகன் கொல்லப்படுகிறார். கதையை நகர்த்தத் தெரியாமல் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். காத்தாடி பறக்கவில்லை.

குற்றப்பிரிவு: போலீஸ் ஸ்டோரி என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. ஸ்ரீகாந்த், பிரித்விராஜ் நல்ல தேர்வு. போரடிக்காமல் போகிறது. சில குறைகள் இருந்தாலும் குற்றம் சொல்ல முடியாத படம்

களவாணி: கிராமத்துக் கதைக்களம், அலட்டலில்லாத அசத்தலான நாயகன், நாயகியுடன் வயல்களும் வரப்புகளும் நடித்துள்ளன. மீண்டும் பார்க்க வேண்டும் என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டே இருக்கும் படம். களவாணி உள்ளங்களை களவாடும்.

வம்சம்: நம்ம தலைவரின் வம்சம் நடித்த படம். வித்தியாசமான முயற்சி, கிராமத்துக் கதையாக இருந்தாலும் பலி வாங்கும் கதை என்பதால் வெட்டுக்குத்து நிறைந்துள்ளது. நாயகிக்கு நடிக்க நல்ல வாய்ப்பு... நாயகனுக்கு..? இயக்குநருக்கு கேமிராவுக்குள் ஐயா தெரிந்திருப்பார் போல பல இடங்களில் நாயகனுக்காக இறங்கிப் போயிருப்பது தெரிகிறது. வம்சம் வளராத குத்துச் செடி.

விருந்தாடி: அய்யோ... தியேட்டர் பக்கம் போயிடாதீங்க... அப்புறம் என்ன நடந்தாலும் நான் பொறுப்பில்லை சொல்லிப்புட்டேன்.

மனசின் பக்கம் தொடரும்.

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

குரு வணக்கம்





'எருமை மாடே...'
எட்டாப்பு சாரும்

'களவாணிப்பயலே...'
கணக்கு வாத்தியாரும்

'மூதேவி...'
முத்துராமன் ஐயாவும்

'முண்டம்...'
ராமசாமி வாத்தியாரும்

'தண்டம்...'
தனசேகரன் சாரும்

'மரமண்டை...'
இங்கிலீஷ் வாத்தியாரும்

இப்படி பலபேரில் அழைத்து
பட்டை தீட்டிய
பிரமாக்கள் எத்தனையோ..?

அத்தனையிலும் தனியாய்
அழுத கண்ணும்...
ஒழுத மூக்குமாய்...

அம்மா முந்தானைக்குள்
ஒளிந்தவனை வாரி அணைத்து

'அ... ஆ...' கற்றுக் கொடுத்த
ஒண்ணாப்பு டீச்சர்
மனசுக்குள் உசரமாய்..!


(என் ஆசிரியர்களுக்கும், நல் ஆசிரியர்களுக்கும், ஆசிரிய நண்பர்களுக்கும் என் இனிய ஆசிரியர் தின வாழ்த்த்துக்கள்.)

-'பரிவை' சே.குமார்.

சனி, 4 செப்டம்பர், 2010

நினைவில் அவள்..!


நண்பனின் திருமணம்...
சென்னையிலிருந்து செழியன்...
கோவையில் இருந்து கோபால்...
திருச்சியில் இருந்து தில்லை...
மதுரையில் இருந்து மாறன்...
உவகையுடன் உள்ளூர் நண்பர்கள்...

சொந்தங்களுக்கு மத்தியில்
நண்பர்களின் முற்றுகை...
இராக்குடியின் ராஜ்ஜியத்தில்...
எல்லாரும் பயணிக்க..

கூடிக்களித்த காலங்கள்
பழங்கதையாய் அவரவர் பேச்சில்...
ஏனோ தெரியவில்லை
எல்லார் பேச்சிலும்
அங்கு வராத அவள் இருந்தாள்..!

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 2 செப்டம்பர், 2010

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(யார் மனதையும் புண்படுத்தாது என்ற மிகுந்த நம்பிக்கையில் எழுதப்பட்ட நகைச்சுவைப் பகிர்வு)

வருடம் : 2016
இடம் : சட்டசபை, சென்னை

'மத்தியில் கூட்டாச்சி... மாநிலத்தில் சுயாட்சி' என்ற தீவிர கொள்கைப் பிடிப்போடு இருக்கும் 'குடும்பக் கட்சி'யின் ஆட்சியில் எதிர்கட்சித் தலைவராக 'மலைநாடு மங்கை' கட்சியின் 'சும்மா'வுக்கு பிடித்தமான 'குங்குமப் பொட்டு' வெந்நீர் தனது பரிவாரங்களுடன் அடிக்கடி வெளி நடப்பு வெடியை பத்தவைத்துக் கொண்டிருந்தார். சும்மாவின் சுமைதாங்கிகளாய் 'இரண்டுங்கெட்டான்' கட்சியின் மகத்துவரும் 'மறுமலர்ச்சி'யே இல்லாத கட்சியின் கள்ளத்தோணியும் ஒரு சில எம்.எல்.ஏக்களுடன் கூட்டாஞ்சோறு ஆக்கிக் கொண்டிருந்தனர். 'ஆங்க்' கட்சித்தலைவர் விழிச்சகாந்த் மட்டும் 'நான் ஒருத்தந்தான் ஊரு...' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.மத்தியில் ஆட்சியை பகிர்ந்து கொடுத்தாலும் மாநிலத்தில் ஐஸ்கிரீமுக்கு ஏங்கும் குழந்தையாக இருக்கும் 'கதர்சட்டை' ஜால்ராவை தட்டும் பணியை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

சரி, இனி அங்கே என்ன நடக்குதுன்னு பார்ப்போம். காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணை, இலங்கை பிரச்சினை என மூன்று முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் சன்லின் அழைப்பு விடுத்திருந்தார்.

கூட்டத்தில் பேசிய அழகர் (அப்பவும் இவரான்னு கேக்குறது தெரியுது... என்ன செய்ய வழி நடத்த ஆள் வேணுமே) நமது கழகத்தையும் நாட்டு மக்களையும் கட்டிக்காத்த நம்ம தலைவர் மஞ்சள்துண்டு அவர்கள் மக்களுக்காக வண்டியில் அமர்ந்தும் உழைத்தார்கள். அவர்களுக்கு இன்னும் மக்கள் சேவை..."

"எந்த மக்களுக்காக உழைத்தாருங்க..." முணங்கினார் இரண்டுங்கெட்டான் மகத்துவர்.

"என்ன மகத்துவரே... சொல்ல வர்றதை சத்தமா சொல்லுங்க"

"ஒண்ணுமில்லை யூ கண்டினியூ"

"மக்கள் சேவை செய்ய இன்னும் எண்ணமிருந்தாலும் அவரது உடல் ஒத்துக் கொள்ளவில்லை. மக்கள் சேவை மட்டுமே எனது தேவை என்றுதான் இருக்கிறார். அவர் விடும் மூச்செல்லாம் மக்கள் நலனுக்காத்தான் என்பதை நாடே அறியும்.இந்த நூற்றண்டில் மக்களே எல்லாம் என்று இருக்கும் இவரைப்போல் இன்னொரு தலைவர் பார்க்க முடியுமா? படுத்துக் கொண்டு எங்களுக்கெல்லாம் மக்களை வழி நடத்தும் முறைகளை சொல்லிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்."

'அவரா வீட்டுல இருப்பேன்னாரு... மவனே செத்தா முதல்வராத்தான் சாவேன்னு அடம்பிடிச்சவரை ஆண்டது போதுமுன்னு அடக்கியில்ல வச்சிருக்கோம்' மனசுக்குள் சொல்லிக் கொண்டார் முதல்வர் சன்லின்.

"அவரின் வாரிசு நம்ம முதல்வர் அப்பாவின் பாணியில் மக்கள் நலனுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

"ஐயா அழகரே... உங்க குடும்பக்கட்சி புராணம் கேட்க நாங்க வரலை... முக்கிய பிரச்சினை குறித்து பேச வந்திருக்கோம். அதை விட்டுட்டு இதை பேசிக்கிட்டு... மக்கள் மக்கள்ன்னு மக்களை மாக்கானாக்காதீங்க... ஆங்க்..." கடுப்பில் கத்தினார் விழிச்சகாந்த்.

"இருங்க தம்பி... அவசரப் படாதீங்க... எங்க குலப் பெருமைய சொல்லிட்டு ஆரம்பிப்பமுல்ல..."

"அதுக்குள்ள நான் ஒரு தூக்கம் போட்டுடுவேன்" என்று பக்கத்திலிருந்த கிழங்கோவிடம் கொட்டாவி விட்டபடி முணங்கினார் வாசம்.

"சரி... மக்கள் பிரச்சினைக்கு வாறீங்களா வெளிநடப்பு செய்யட்டுமா" முணுங்கி முணுங்கி பேசினார் குங்குமப் பொட்டு வெந்நீர்.

"சரி... மக்கள் பிரச்சினை குறித்து முதல்வர் பேசுவார்"

"வணக்கம்... நமக்கு இப்ப இருக்கிற மூன்று முக்கிய பிரச்சினை இது. ஒண்ணு காவிரி நீர், இரண்டாவது முல்லைப் பெரியாறு, மூன்றாவது இலங்கை..."

"இதை வச்சே எத்தனை காலம்தான் ஓட்டுறது..." முனங்கினார் கண்மூடி.

"சும்மா இருமய்யா... நம்ம ஆட்சி நடக்குது எதிர் கட்சி மாதிரி பேசுறே..." கடிந்து கொண்டார் சங்கிலி கருப்பன்.

"ஆமா... குடும்பத்துல்ல உள்ளவன் எல்லாம் அமைச்சராயிட்டான். உனக்கு அறங்காவல்துறை எனக்கு தமிழ் வளர்ச்சித்துறையின்னு ஒண்ணத்துக்கும் உதவாத துறைகள்... இதுல கட்சிக்கு சப்போர்ட் பண்ணனுமாக்கும்..." கண்மூடி.

"என்ன பண்றது... சுகமா பொழச்சோம்.... இப்ப வாழவாவது வழி பண்ணிக் கொடுத்து இருக்காங்கள்ல... அதுக்காச்சும் சும்மா இருப்போம்" - சங்கிலி கருப்பன்

"அங்க பாரு... அடிகிரி நிதியமைச்சராம், குருவி போக்குவரத்துத் துறை, அடிகிரி மைந்தன் கல்வி அமைச்சர்... அப்புறம் அங்க பாரு மத்தியிலதான் ஜவுளிக்கு இடமுன்னா மாநிலத்துல சட்டத்துறை அமைச்சர் சூர்யநிதி, இதுக்கு மேல வம்சம் சுகாதரத்துறை, வம்சத்தை உருவாக்கிய கோவை கில்லாடி பொதுப்பணித்துறை..."

"என்னய்யா உங்கிட்ட வந்து உட்கார்ந்தது தப்பா போச்சு... அடிகிரி வேற ஒரு மாதிரி பாக்குது. தென்மாவட்டத்துல அது கால்ல கிடந்து நல்ல பேரு வாங்கி வச்சிருக்கேன். கெடுத்துடாதய்யா... சத்த சும்மா இருய்யா..." பதவிக்கு ஆப்பு அடிச்சிடுவாங்களோன்னு பயத்தோட முணங்கினார் சங்கிலி கருப்பர்.

"என்ன சங்கிலி, கண்மூடி என்ன சொல்றாரு..." என்றார் அடிகிரி.

"ஒண்ணுமில்லேன்னே... பைபாஸ் சர்ஜரி பண்ண எடத்துல வலிக்கிற மாதிரி இருக்காம்... அதான் சொன்னாரு..."

"நீங்க வேணா போய் ரெஸ்ட் எடுங்க" என்றார் அடிகிரி நக்கலாக.

"இல்ல இப்ப பரவாயில்லை..." எங்கே நம்ம போனா நிரந்தரமாக ஓய்வு கொடுத்துடுவாங்களோ என்ற பயத்தில் வேகமாக மறுத்தார் கண்மூடி.

"கேரளா பிரச்சினைக்கு நான் புதுசா ஒரு சொல்யூசன் வச்சிருக்கேன். அது என்னன்னா..." முதல்வர் சன்லின் பேச

"என்ன சம்மந்தம் பண்ணலாம்ங்கிறீங்களா?" நமட்டுச் சிரிப்புடன் கேட்டார் வெந்நீர்.

"கரெக்ட் வெந்நீர்... சும்மாகிட்ட சும்மா இருந்தாலும் அப்பப்ப உங்க மூளையும் நல்லா வேலை செய்யுது...அதுக்கு பாராட்டுக்கள்"

"பாராட்டு இருக்கட்டும்... இதெல்லாம் நடக்கிற வேலையா?"

"ஏன் முடியாது நாம முதல்ல பொண்ணெடுப்போம். அப்புறம் பொண்ணு கொடுப்போம்... சம்மந்திங்களா ஆயிட்டமுன்னா நமக்குள்ள சண்டை வராதுல்ல... இது குறித்து கேரள முதல்வருக்கு விரிவா ஒரு லெட்டர் எழுதியிருக்கேன்."

"நீயும் லெட்டர் கதை விடுறவன்தானா... ஐயோ" புலம்பினார் வாசம்.

"என்ன வாசம் தலைவர்கிட்ட இருந்து கத்துக்கிட்டது அதை அவ்வளவு சீக்கிரம் விட முடியுமா? சொல்லுங்க."

"அது சரி"

"அவருகிட்ட இருந்து நல்ல பதில் வருமுன்னு நினைக்கிறேன். அவரு ஓகே பண்ணிட்டா இரண்டு அரசும் சேர்ந்து ஒரு சட்டம் ஒன்று இயற்றி அப்புறம் சம்மந்தம் வச்சிக்கலாம்."

"சரி காவிரிக்கு என்ன திட்டம் இருக்கு... பேசாம ஒகேனக்கல்ல கொடுத்துட்டு காவிரி வாங்கிடலாமா..." கிழங்கோவன் கிளறினார்.

"அதுக்கு அவசியம் இல்லை... எப்பிடி இருந்தாலும் காவிரி டெல்டா பகுதிகள்ல நல்ல மழை பேஞ்சா அவங்கதானா திறந்து விடப்போறாங்க. அதனால வருஷா வருஷம் நல்ல மழை பெய்யணுமின்னு கோவில்கள்ல கெடாவெட்டி பூஜை போடச்சொல்லுங்க... அது போதும். "

"பார்றா... நல்ல திட்டமாவுல்ல இருக்கு. ஆமா குடும்பக்கட்சி ஆடு இலவசமா கொடுக்குமா?" மகத்துவர் கிண்டலடிக்க

"ஆமா கொடுத்த டிவி எல்லாம் ஓடாம கிடக்கு... இதுல ஆடு வாங்கி கொடுத்துட்டாலும்.. ஆங்க்..." விழிச்சகாந்த் மகத்துவருக்கு பதில் சொன்னார்.

"இலங்கை மக்கள் நலனுக்கான திட்டம் என்னன்னு சொல்லுங்க..." கள்ளத்தோணி.

"கள்ளத்தோணி இதுல எப்பவும் ஆர்வமானவரய்யா.... இது குறித்து பேச கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பிசின் தலைமையில ஒரு குழு இலங்கை போயிருக்கு. அதுல மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கவிதாயினியும் தகவல் தொழில் நுட்ப அரசரும் போயிருக்காங்க..."

"ரெண்டு பேருமா... அது சரி... பேமிலி டிரிப்பா..." வெந்நீர் கேட்க

"ஏய் அதிகம் பேசாத மரியாதை கெட்டுடும்... யாரை தப்பா பேசுறே..." குதித்தது அடிகிரியும் வம்சமும்.

"விடுங்கப்பா... அவரா பேசுறாரு... சும்மா சொல்லிவிட்டிருக்கும்"

"இந்த பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன?" என்றார் விழிச்சகாந்த.

"உங்ககிட்ட விட்டா இலங்கைக்கு நேர போயி ஒரே ஆளா தீர்த்து வச்சிருப்பீங்க... யாருக்கு தெரியுது" மகத்துவர் பிட்டைப் போட

"சும்மா இருய்யா... நம்ம பிரச்சினைக்கு விருதாச்சலம் இருக்கு... இங்க வேண்டாம்"

"சரி... முக்கிய பிரச்சினையின்னு சொல்லிட்டு கோமாளித்தனமா பேசத்தானா கூப்பிட்டிங்க. நாங்க கிளம்புறோம்" வெந்நீர் எழு,பின் தொடர்ந்த சும்மாவின் அடிபொடிகளிடம் "இப்பவே அம்மாவுக்கு போனைப் போட்டு நாளைக்கு யார் பேர்ல இது குறித்து கட்டுரை எழுதலாமுன்னு கேட்டு குடும்பக்கட்சியை கிழிக்கிறோம்". மெதுவான குரலில் சொன்னார்.

"அப்பா எனக்கு அஜீத் பட சூட்டிங் இருக்கு... இப்பவே லேட்டாயிடுச்சி... வரட்டா..." குருவி பறக்க,

"ஐய்யய்யோ... இன்னும் ரெண்டு நாள்ல லண்டன்ல நடக்குற தந்திரன் பாடல் கேசட் வெளியீட்டு விழா நேரடி ஒளிபரப்பு இருக்கு அதுக்கு லண்டன் போகனும் நான் கிளப்புறேன்" என்றது சூர்யநிதி.

சூட்டிங் போகணும் என்று வம்சமும், விஜய்கிட்ட அடுத்த படம் குறித்த டிஸ்கஷன் இருக்கு என்று அடிகிரி மைந்தனும் பறக்க

"இன்னேரம் ரெண்டு கட்டப் பஞ்சாயத்து பண்ணி காசு பாத்திருக்கலாம்" என்று அடிகிரியும், கோவை கில்லாடியும் கிளம்ப

"பாரு எல்லா அமைச்சரும் தொழிலுக்கு போயாச்சு. மக்கள் பிரச்சினை ஊறுகாய் மாதிரி அப்பப்ப இப்படி ஒரு அலம்பல். இனி அடுத்து எப்பன்னு தெரியலை இதை நாம செய்தியா போடணும், நாம போடலைன்னாலும் இன்னேரம் குடும்பத் தொலைக்காட்சியில பிளாஷ் நியூஸ் வந்திருக்கும். அப்புறம் நாளை கரனும், முரசும் பக்கம் பக்கமா எழுதும்... நாமலும் எழுதத்தானே வேணும்." என்று முணங்கியபடி இரண்டு நிருபர்கள் வண்டியை எடுத்தனர்.

-'பரிவை' சே.குமார்.

போட்டோஸ் : கூகிள்