மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 12 செப்டம்பர், 2016

சினிமா : ஸ்கூல் பஸ்ஸில் ஷாஜியும் பரியும்

ஷாஜகானும் பரிக்குட்டியும்

Image result for shajahanum pareekuttiyum cast
கார் விபத்தில் சிக்கி ஹாஸ்பிடலில் இருக்கும் மியா (அமலாபால்), விபத்துக்கு முந்திய சில வருட நினைவுகளை இழந்து விடுகிறார். குறுகிய கால நினைவு இழப்பில் இருக்கும் அவருக்கு யாரால் விபத்து நடந்தது. அவரது டைரியில் குறித்து வைத்திருக்கும் 'பி' யாராக இருக்கும் என்பதைக் கண்டறிய, அவரைத் திருமணம் செய்து கொள்ள இருக்கும் மேஜர் ரவி (அஜூ வர்கீஸ்) , பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸி நடத்தும் தன் நண்பனுடன் (சூரஜ் வெஞ்சாரமூடு) சேர்ந்து துப்பறிகிறார்.

ஆரம்பத்தில் விபத்துக்கு முன்னர் என்ன நடந்தது என்பதை அறிய சுவராஸ்யம் காட்டாத அமலாவின் முன்னே பிரணவ் (ஜெயசூர்யா) , பிரின்ஸ் (குஞ்சக்கோ போபன்) இருவர் முளைத்து நான்தான் காதலித்தேன் என ஆளாளுக்கு கதை சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் கதையில் குழம்பும் அமலா, யார் தன்னைக் காதலித்தவர் என்பதை அறிய முனைகிறார்.

இதற்கு இடையே வில்லனும் இவருக்கு நினைவு திரும்ப வேண்டும் என்று நினைக்கிறார். இரண்டு 'பி'யில் எந்தப் 'பி' உண்மையான காதலன்...? விபத்து எப்படி நிகழ்ந்தது...? விபத்து  நிகழ்ந்த பின் அந்தக் கார் என்னாச்சு...? வில்லன் எதற்காக அமலாவுக்கு நினைவு திரும்ப வேண்டும் என்று நினைக்கிறான்...? மேஜர் ரவிக்கும் அமலாபாலுக்கும் திருமணம் நடந்ததா...? பிரைவேட் டிடெக்டிவ் என்ன கண்டு பிடித்தான்...? என்பவற்றிற்கான விடையை மெல்ல மெல்ல அவிழ்த்திருக்கிறார்கள்.

ஜெயசூர்யாவும் குஞ்சக்கோபோபனும் போட்டி போட்டு கதை சொல்வது சிறப்பு. ஜெயசூர்யா கதை சொல்லும் போதே இது ஏதோ ஒரு தமிழ்படத்துல வருமே என்று நினைத்து படத்தையும் மூளைக்குள் பிடித்து வைத்தபோது அவர்களே சொல்லிவிட்டார்கள். அதில் ஒன்றும் சுவராஸ்யமில்லை... அவர்கள் சொல்லும் கதைகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாளப் படத்திலிருந்து உருவியதுதான் என்றாலும் மேஜர் ரவிக்காக டிடெக்டிவ் நண்பன் சொன்ன கதை, ஒரு கட்டத்தில் உண்மையாகிப் போக மேஜர் பேஜாராகிவிடுகிறார்.

காமெடி திரில்லர் படம் என்றால் நல்லாயிருந்திருக்கும்... ரொம்ப மெதுவாகச் செல்லும் கதை பார்ப்பவர்களுக்கு திருப்தி கொடுக்காது என்றாலும் படம் ரொம்ப மொக்கை அல்ல... பொழுது போகலையின்னா எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்தப் படத்துக்குப் போகலாம்...

***
ஸ்கூல் பஸ்

Image result for school bus malayalam movie review

டத்தின் பெயருக்கும் படத்தும் சம்பந்தம் என்பது அடிக்கடி வந்து போகும் ஸ்கூல் பஸ் என்பதாக மட்டுமே எனக்குத் தோன்றியது. ரெண்டு மூணு இடத்தில் பசங்க ஸ்கூலுக்கு அந்த பஸ்ஸில் போவார்கள் அப்புறம் ஒரு இடத்தில் பள்ளிக்கூடத்தில் உங்களுக்குப் பிடித்த இடம் எது என்றும் அதை விடுத்து உங்களுக்கு வேறு எந்த இடம் பிடிக்கும் என்றும் போலீஸ் விசாரணையில் கேட்கும் போது பசங்க ஸ்கூல் பஸ் என்பார்கள் அவ்வளவே படத்துக்கும் பெயருக்குமான சம்பவம். படம் குறித்து இயக்குநர் ஒரு பேட்டியில் பள்ளிகளில் நடக்கும் சில மோசமான சம்பவங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்தப் படம் என்றெல்லாம் சொல்லி கேரளா லுலு மாலில் ஸ்கூல் பஸ் போல செட் அமைத்து வைத்திருந்தாராம். அவரின் ஹவ் ஓல்ட் ஆர் யூ போல நம்மை ஈர்க்கவில்லை... காரணம் அப்பா தோலுரித்தது போல் இது எதையும் தோலுரிக்கவில்லை.

பசங்க செய்யும் தவறை பெற்றவர்களிடம் மறைத்து அதன் பின்னான காய் நகர்த்துதலில் என்ன ஆகிறது என்பதைச் சொல்லும் படம் இது. பள்ளியில் செய்யும் தவறுக்காக, பெற்றோருடன் வரவேண்டும் என்று சொல்லும் பள்ளி நிர்வாகம், போனில் குறுஞ்செய்தியும் அனுப்புகிறது. ஆனால் அதை செல்போனை பிரித்து மேயும் குழந்தைகள் பார்த்து அதற்குப் பதிலும் அனுப்பி, சொந்தங்களை எல்லாம் விரோதி ஆக்கி வைத்திருக்கும் அப்பா மற்றும் பிசினஸ் டென்சனில் இருக்கும் அம்மா இவர்களிடம் சொன்னால் நம்மை கொன்றுவிடுவார்கள் என்பதை மனதில் கொண்டு அதை மறைத்து விடுகிறார்கள். தப்புச் செய்யும் பையன் அடுத்த மூன்று நாட்களுக்கு பள்ளிக்குச் செல்லாமல் தங்கையைக் கூட்டிக் கொண்டு ஊர் சுற்ற ஆரம்பிக்கிறான்.

மூணு சென்ட் இடப் பிரச்சினையில் இருக்கும் பெற்றோருக்கு இதெல்லாம் தெரியவில்லை. ஒவ்வொருவராய் பார்த்துச் சொல்ல, ஒரு பெண்ணிடம் ஆட்டோவுக்குப் பணம் கேட்டு, அவள் இவர்களின் அம்மா நம்பர் கேட்டு போன் செய்ய, அங்கிருந்து தப்பி ஓடி தியேட்டரில் படம் பார்க்கும் போது மாட்டிக் கொள்கிறார்கள். மாட்டினால் கொன்று விடுவார்கள் என்பதை அறிந்தவன் தங்கையுடன் ஓடி பாத்ரூமுக்குள் நுழைந்து சன்னல் வழியாக அவளுடன் தப்பிச் செல்ல நினைத்து முடியாமல் போக, அவளை விட்டுவிட்டு சன்னலை உடைத்துக் குதித்து எஸ்கேப் ஆகிவிடுகிறான்.

அதன் பின் அவனைத் தேடும் படலம்... அவன் சிக்கினானா...? அவன் செய்த தவறுக்கு தண்டனை கிடைத்ததா..? சொந்தங்களைப் பகைத்துக் கொண்ட அப்பா திருந்தினாரா...? பிஸினஸ் டென்சனென குழந்தைகளை கவனிக்க மறந்த அம்மா மாறினாரா...? மூணு செண்ட் இடம் என்னாச்சு...?  மூணு செண்ட் இடத்துக்காக சண்டையிட்ட கலெக்டர் சகோதரன் இவர்களுக்கு உதவினாரா...? என்பதுதான் மீதிக்கதை.

இதில் ஜெயசூர்யா சொந்தங்கள் முதல் பக்கத்து வீட்டுக்காரர்கள் வரை பகைத்துக் கொண்டு வாழும் மனிதராய் வருகிறார்... மகனை இழந்து விட்டு அவனைத் தேடித் திரியும் போது மனைவியிடம அழுது புலம்புவது... போலீசாரிடம் மோதுவது... போன்ற காட்சிகளில் கலக்கல்.

இன்ஸ்பெக்டராக குஞ்சக்கோபோபன்... எப்படியும் பையனைக் கண்டுபிடிக்க வேண்டும் என தன் மனைவியின் முதல் பிரசவத்துக்கு கூட போகாமல், குழந்தையின் போட்டோவை வாட்ஸ்சப்பில் பார்த்து சூவீட் வாங்கிக் கொடுத்து அலையும் கதாபாத்திரம். நிறைவாய்...

சின்னக் குழந்தைகள் பள்ளியில் நடக்கும் விசயத்தை மறைப்பதால் வரும் விபரீதத்தைச் சொல்லியிருக்கிறார்கள். படம் பரவாயில்லை ரகம்தான்... ஆஹா... ஓஹோன்னு புகழும் அளவுக்கு ஒன்றும் இல்லை என்றாலும் பார்க்கலாம்.
***
காவிரிப் பிரச்சினை குறித்தான கட்டுரை ஒன்று பாதியில் நிற்கிறது.... முடிந்தால் நாளை பகிர்கிறேன். நாய் கடித்தால் திருப்பிக் கடிக்க வேண்டும் என்றில்லை... நம் பக்கம் வன்முறைகள் வேண்டாம்... அப்பாவிகளை அடிப்பதால் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டு தீர்ந்து விடுமா என்ன...? புரியாத கர்நாடகக்காரன் புத்தி கெட்டு அலையுறான்.... பெங்களூரில் இருக்கும் நம் தமிழ் சொந்தங்கள் பத்திரமாக இருங்கள். இப்போதைக்கு உங்கள் பாதுகாப்பே முக்கியம்.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

மனசு பேசுகிறது : மனிதனாக வாழ்வோமே

Image result for மனிதம்
தயத்தை அடகு வைத்துவிட்டு இயங்கும் சூழலில்தான் இன்றைய மனிதம் இருக்கிறது. ஐந்தறிவு ஜீவன்களெல்லாம் ஒன்றுக் கொன்று உதவி செய்து வாழப் பழகிக் கொண்டிருக்கும் காலத்தில் நாம் மட்டுமே உதவும் மனப்பான்மையை தீயிலிட்டு விட்டு உற்சாகமாக வலம் வருகிறோம். நம்ம மனசுக்குள் இப்பல்லாம் இணையம் புகுந்திருச்சு... எது நடந்தாலும் அது நல்லதோ... கெட்டதோ முகநூலிலும் டுவிட்டரிலும் பதிவு செய்து லைக்குக்களை அள்ள வேண்டும் என்பதே மனசுக்குள் நிறைந்து நிற்கிறது. இதுதான் இன்றைய வாழ்க்கையும் ஆகிப் போய்விட்டது என்பதே உண்மை.

சமீபத்தில்தான் எத்தனை நிகழ்வுகள்... நம் மனிதாபிமானத்தை அடகு வைத்துவிட்டு செல்போனில் படம் பிடித்துக் கொண்டு நின்றதை உலகுக்கு படம் பிடித்துக்காட்டிய நிகழ்வுகள்... எங்கே போகிறோம் என்பதை எடுத்துச் சொல்லிய நிகழ்வுகள்... அது கொலைகளாகட்டும்... கொள்ளைகளாகட்டும்... வாழ்க்கைப் பிரச்சினைகளாகட்டும் எல்லாவற்றிலும் நம் செயல்பாடுகள் ரொம்ப மோசமாகத்தான் இருக்கிறது. அதை விடக் கொடுமையான விஷயம் என்னவென்றால் ஜாதி, மத பிரச்சினைகள்... ஊடகங்களே இன்ன சாதி என்பதை சொல்லிச் செய்தி போடுவதுதான்.

சில நாட்களுக்கு முன்னர் ஒருவர் இந்தியாவில் இப்படி நடக்குது... அப்படி நடக்குது உதவுவார் யாருமில்லை என்று என்.ஐ.ஆர். ஆட்கள் அமெரிக்காவிலிருந்து லண்டனில் இருந்தும் பேசுகிறார்கள். இங்கு எல்லாம் நல்லாத்தான் இருக்குது... நீங்க கூவுறதை விடுங்க என்று கண்டனப் பதிவை வெளியிட்டிருந்தார். எல்லாவற்றிற்கும் கூவுபவர்கள் மீதான கோபமாகக் கூட அது இருக்கலாம்... ஆனாலும் மனிதாபிமானமுள்ளவன் கூவத்தான் செய்வான்... அவரின் கூற்றைப் போல எல்லாம் நல்லா நடந்தால் சந்தோஷமே... அப்படி எல்லாம் நடக்கும் பட்சத்தில் எதற்கெடுத்தாலும் கூவுபவன் பைத்தியகாரனாகவே இருப்பான். இவ்வளவு பிரச்சினைகள் சுழன்று அடிக்கும் போது  நல்லது எப்படி நடக்கும்..?

இறந்த மனைவியை கொண்டு செல்ல மருத்துவமனை ஆம்பூலன்ஸ் ஏற்பாடு செய்து தராத நிலையில்... அதுவும் இலவச ஆம்பூலன்ஸ் வசதியை மாநில அரசு செய்து கொடுத்திருந்தும்... அது குறித்து அறிந்திராத மலைசாதி மனிதனுக்கு தாங்களே முன் வந்து இலவச ஆம்பூலன்சை ஏற்பாடு செய்து கொடுக்காத மருத்துவமனையில் எப்படி மனிதாபிமானம் இருக்கும்... அறுபது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஊரை நோக்கி, வயதுக்கு வந்த பெண் குழந்தையுடன் இறந்த மனைவியை தோளில் சுமந்து நடக்க ஆரம்பித்து விட்டான். வழியெங்கும் செல்போனைத் தூக்கிக் கொண்டு நிற்கும் நம்மவர்கள் யாருமே உதவி செய்ய வேண்டும் என்று நினைக்காதது வேதனையே... விரட்டி விரட்டி படமெடுத்துப் போட்ட தொலைக்காட்சி நிருபர், கலெக்டருக்குச் சொல்லி அவர் மூலம் ஆம்பூலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டு அந்த மலைசாதி மனிதரைச் சென்றடைந்த போது பனிரெண்டு கிலோ மீட்டர் கடந்திருந்தார். கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்... தன்னில் பாதியான மனைவியின் சடலத்தை தனது தோளில் சுமக்கும் போது அந்த மனிதன் என்ன நினைத்திருப்பான்..? மலர்கள் தூவி ஊர்வலமாக இறுதியாத்திரை செல்ல வேண்டிய அம்மா, துணியில் சுற்றி அப்பாவின் தோளிலும்... தூக்க முடியாத தருணத்தில் சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள சாலையோரத்தில் கிடத்தியும்... பயணிக்கும் போது அந்தப் பெண் குழந்தை என்ன நினைத்திருப்பாள்..? அவளின் மனநிலையை யோசிக்கும் எப்போது இதயம் வலிக்கிறது... எவ்வளவு கொடுமை இது...? எதிரிக்கும் வரக்கூடாத கொடுமை இது.... இங்கே மனிதாபிமானம் எங்கே போனது... எல்லாம் நல்லாத்தான் நடக்குதுன்னு சொன்னோமே... இந்தப் பிரச்சினையில் என்.ஆர்.ஐ. மட்டுமல்ல நாம் எல்லாரும்தானே புலம்பித் தீர்த்தோம்.

இறந்த மூதாட்டியின் உடம்பை இடுப்போடு ஒடித்துக் கட்டித் தூக்கிப் போன நிகழ்வில் அந்த மனிதர்களிடம் மனிதாபிமானம் இருந்ததா...? இல்லையே..? இவர்கள் சரியாகத்தான் செய்தார்கள் என்று சொல்ல முடியுமா..? இப்படி நடக்கிறதே தட்டிக்கேட்க ஆளில்லையா என்று கேட்டால் தப்பா...? எந்த மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம்... எதை நோக்கிப் பயணிக்கிறோம்..? இன்னும் சில வருடங்களில் வீட்டுக்குள் ஒரு நிகழ்வு என்றாலும் நாம் செல்போனில் வீடியோ எடுக்க மாட்டோம் என்பது என்ன நிச்சயம்..?

வீட்டில் பிரசவித்த பெண்ணை உடம்பு முடியாத நிலையில் மருத்துமனைக்கு அழைத்துச் செல்ல, வாகன வசதி ஏற்படுத்திக் கொள்ள வசதியற்ற நிலையில் பேருந்து பயணித்து... பயணத்தின் போது அந்தப் பெண் இறக்க, பயணிகளும் டிரைவரும் பொணத்தைக் கொண்டு போக முடியாது என்று சொல்லி போக்குவரத்து அற்ற ஒரு இடத்தில் இறக்கிவிட்டுச் செல்ல, அந்த வழியாக வந்த வழக்கறிஞர் ஒருவர் போலீசுக்கு போன் செய்து அவர்களும் மறுத்துவிட, தன்னோட நண்பர்கள் உதவியுடன் அவர்களின் வீட்டில் கொண்டு போய் விட்டதை எவ்வளவு பேர் அறிவோம்... பேருந்தில் இருந்த மனிதர்களுக்கும் போலீஸ்காரர்களுக்கும் இல்லாத மனிதாபிமானம் அந்த வழக்கறிஞருக்கு இருந்ததில் மகிழ்ச்சி அடைவோம். அவரை வாழ்த்துவோம்... இந்த விஷயத்தில் மனிதாபிமானமற்ற மனிதர்களை விட உதவிய அந்த மனிதரால் நல்லது நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளலாம். இதற்கு யாரும் பொங்கிப் பதிவிடவில்லை என்பதையும் அறியலாம்.

இதில் இன்னொரு கூத்து என்னவென்றால் எல்லாப் பிரச்சினைகளையும் ஆளும் பாஜக அரசின் மீது அள்ளித் திணிப்பதுதான்... பிரதமரின் செயல்பாடுகளைக் குறித்து ஆயிரத்தெட்டு கருத்து முரண்பாடுகள் இருக்கலாம்... அவர் ஊர் சுற்றலாம்... அதன் பின்னணியில் வளர்ச்சிக்கான விதை இருப்பதாக சிலர் சொல்கிறார்கள்... அவர் வாழ்கிறார் என்றும் சிலர் சொல்கிறார்கள். நாம் அரசியல் பேசுவதற்கான கட்டுரை இதுவல்ல... ஆனாலும் ஒருவனுக்கு முள் குத்தினால் குத்திய முள்ளை ஏன் அங்கே அவர் போட்டார் எனப் பேசுவது கேலிக்கூத்தாக இருக்கிறது. ஒரிசாவில் ஆம்பூலன்ஸ் கொடுக்க மாட்டேன் என்று சொன்ன மருத்துவமனை நிர்வாகத்தின் செயல், தொலைக்காட்சியில் செய்தியாகி கலெக்டருக்குப் போன பின்னரே ஆளும் அரசாங்கத்திற்குத் தெரிய வந்திருக்கும். அப்படியிருக்க பிரதமரைத் திட்டும் நம்மை என்னவென்று சொல்வது..? குறை காண வேண்டியதுதான்... ஆனால் அதைக் காண வேண்டிய இடத்தில் காண வேண்டும்... எல்லாத்துக்கும் பொங்கும் மகளிர் அமைப்புக்கள் கூட சமீப காலமாக சினிமாவுக்கு பொங்கும் அளவுக்கு பொதுப்பிரச்சினைகளில் பொங்குவதில்லை.

கள்ளக்காதலைத் தட்டிக் கேட்ட நாலு வயதுக் குழந்தையை தாய் கொன்றாள்ன்னு செய்தி வாசிக்க நேர்ந்தது. நாலு வயதுக் குழந்தை தட்டிக் கேட்குமா என்பது செய்தி வெளியிட்ட நிருபருக்குத் தெரியாமலா இருக்கும். இந்தக் கொலை எதற்கானது என்பதும் அவருக்குத் தெரியும்... இருந்தாலும் பத்திரிக்கை பரபரப்புக்காக இப்படியான செய்திகளைப் போடுகிறார்கள். இதனால் யாருக்கு என்ன லாபம்... நேற்று ஒரு செய்தி... ஐந்து வயதுப் பையனை வெட்டிக் கொன்றிருக்கிறான் ஒரு மனிதன்... இவர்களுக்கு எல்லாம் சரியான தண்டனை... அரபு நாடுகளில் கொடுப்பது போல் கொடுத்தால் அடுத்து ஒருவனும் தவறு செய்ய மாட்டான்.  நமக்கு இணையத்தில் வேலை இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு இருப்பைச் சேர்க்க வேண்டிய வேலை இருக்கிறது. காவல்துறையினருக்கோ அரசியல்வாதிகளின் பின்னே அலையவும் அஞ்சுக்கும் பத்துக்கும் கை நீட்டவும் வேண்டிய முக்கிய வேலை இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் மனிதாபிமானமுள்ள ஒருவன் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பொங்கத்தான் செய்வான். பொங்கதே என்று சொல்பவன் இந்தப் பிரச்சினைகளில் போராட வேண்டியதுதானே...

இது ஒரு பக்கம் என்றால் நாம் ஜாதி, மதங்களில் காட்டும் நிலைப்பாடு பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஒரு மதத்தைக் குறித்து தரக்குறைவாக பேசும் முன்னரோ எழுதும் முன்னரோ சற்றே சிந்திக்க வேண்டும் ஆனால் நாம் அதைச் செய்வதில்லை. முகநூலில் ஆளாளுக்கு தாக்கவும் தூக்கவும் செய்கிறார்கள். நான் மதிக்கும் நண்பர் ஒருவர் கோகுலாஷ்டமியின் போது கிருஷ்ணரைப் பற்றி தவறான பதிவொன்றை இட்டிருந்தார். அதைவிடக் கொடுமை என்னவென்றால் இந்து மதக் கடவுள்களைப் பற்றி அவர்களே தரக்குறைவாக எழுதும் போது நாம் எதற்காக அதையே எழுதி நம் மதத்தின் மீது சேறை வாரி வீசிக்கொள்ள வேண்டும் என்ற அட்வைஸ் வேறு. அடேங்கப்பா..! அடுத்த மதக் கடவுளை தரக்குறைவாய் பேசிவிட்டு என்ன ஒரு நல்ல அறிவுரை. 

நம் மதத்தை... நம் மத நம்பிக்கையை... நம் தெய்வத்தைக் குறித்து என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள்.... மற்ற மதங்குறித்தோ... அவர்களின் தெய்வ நம்பிக்கை குறித்தோ கேவலமாக எழுத என்ன வேண்டி வந்தது...? ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு விதமான கடவுள் நம்பிக்கைகள் உண்டு... அது குறித்து கேள்வி எழுப்பத் தேவையில்லையே... அப்படிக் கேள்வி எழுப்புவதால் நமக்கு என்ன லாபம்..? இந்த மத அரசியல் செய்பவர்களின் எண்ணமே ஒற்ருமையாய் இருக்கும் நமக்குள் அடித்துக் கொண்டு சாவதை வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதுதான். இவற்றிற்கு எல்லாம் நாம் செவி சாய்த்து நம் சுயத்தையும் நம் நட்பையும் இழப்பதில் இல்லை வாழ்க்கை... நாம் நாமாக இருப்போம்... கொளுத்துபவர்கள் கொளுத்திப் போட்டுக் கொண்டே இருக்கட்டும். எடுத்தால்தானே வெளிச்சம் பரவும்... அங்கேயே கிடந்தால் அதுவே அணைந்து விடும் என்பதை உணர்ந்து அதன்படி நடப்போம்.

எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்... நாமும் நல்லாவே இருப்போம்... சாதிகளை எல்லாம் மதங்களாக்கிப் பார்க்கத் துடிக்கும்மனிதர்களுக்கு மதம் பிடித்திருக்கிற காரணத்தால்தான் மனிதம் செத்துவிட்டது போலும். பிடித்த மதத்தை உங்களோடு வைத்துக் கொண்டு பிடிக்காத செயலை செய்வதை தவிர்ப்போம்.

மனிதனாய் வாழ்வோம்... மனிதாபிமானத்தோடு வாழ்வோம்...

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

சினிமா : கிடாரி

Image result for கிடாரி

ங்க பக்கம் பருவம் அடையாத... அதாவது சினை பிடிக்கும் பக்குவத்தை எட்டாத வரை மாட்டை 'கிடேரி' என்று அழைப்பார்கள். பசுவங்கிடேரி... எருமைக்கிடேரி என்பது பெயராகவே ஆகிவிடும். ஒருவேளை கிடாரி என்பதுதான் பேச்சு வழக்கில் கிடேரி என்று ஆகியிருக்கக் கூடும். எங்க வீட்டில் பிறந்து வளர்த்த மாடுகளில் பலவற்றை  'கிடேரி' என்றே அழைத்துப் பழக்கப்பட்டதால், அவற்றை மேய்க்கும் போது எங்காவது ஓட எத்தனித்தால் 'ஏய் கிடேரி' என்று கத்தினால் அப்படியே நின்று திரும்பிப் பார்த்து குரல் கொடுக்கும். கிடாரி என்பதற்கு ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொன்றிற்குச் சொல்கிறார்கள்.  கிடேரி என்பது பெண் மாட்டைக் குறிப்பதால் இந்தப் படத்திற்கு பெயர் வைத்தார்கள் என்றால் அது நாயகனைக் குறிக்கும் என்பதாக இல்லை... எல்லாவற்றிக்கும் துள்ளி எழும் அவனைப் பெட்டை என்ற பதத்தில் அழைக்கமாட்டார்களே... ஒருவேளை வில்லனாய் சித்தரிக்கப்படுபவர் தனது வாழ்க்கைக்காக மற்றவரை அழிப்பதாலும் இந்தப் பெயர் வைத்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான பெயர்காரணம் இருப்பதால் படத்தின் பெயரைப் பிரபலமாக்க நாயகனுக்கு கிடாரி என்ற பெயரை வைத்திருக்கிறார்கள். ஊரில் அடங்காப்'பிடாரி' என்று சொல்வார்களே அப்படிப்பட்டவன்தான் இந்த கிடாரி. 

கிடாரி... இங்கு யாருக்கும் அடங்காமல் திமிரிக் கொண்டு திரியும்... நம்ம பக்கம் அப்படித் திணவெடுத்துத் திரிபவனை கோவில் காளை என்றோ பொலி எருது என்றோ அழைப்போமே அப்படிப்பட்டவந்தான் இவன்... முறுக்கு மீசையும் குறுங்கத்தியுமாகத் திரிபவன். தன்னை வளர்த்து பிள்ளை போல் நினைப்பவருக்காக அடிக்கடி ரத்தம் பார்க்கும் ராட்சஸன். அவனுக்குள்ளும் மென்மையான காதல் இருக்கிறது... வளர்த்தவள் என்றாலும் அவள் மீது பெற்றவள் போன்ற அன்பு இருக்கிறது... உப்பு போட்ட வீட்டுக்கு துரோகம் பண்ண மாட்டேன் என்ற நல்ல குணமும் விரவிக் கிடக்கிறது.

கிடாரி... யாரை நல்லவன் என்று நம்புகிறோமே அவன் நல்லவன் இல்லை என்பதே படத்தோட கரு... சசிகுமாரோட படங்களில் எல்லாமே இதுதான் மையக்கரு... தனது படங்களில் வன்முறை இருந்தாலும் சில நல்ல விஷயங்களைப் பேசும் சசிகுமார், படம் முழுவது தன்னைச் சுற்றியே நகரும்படி கதை அமைப்பதில் கில்லாடி. இந்தப் படத்தில் கொஞ்சம் மாறுதலாய் வன்முறைக்கு வன்முறைதான் சரி என்று சொல்வதுடன் எல்லாக் கதாபாத்திரங்களும் தன்னைப் பற்றி பேசும்படி வைத்திருக்கிறார். இதில் சாதித்தாரா..? இல்லை நம்மைச் சோதித்தாரா...? என்றால் இரண்டும் சமபங்குதான்... பெரிய எதிர்பார்ப்பைக் கொடுத்த படம்... ரத்தச் சகதியில் சிக்கி குற்றுயிராய்க் கிடந்து தவிக்கிறது.

படத்தில் எல்லாரையும் பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு நிற்பவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி அவர்கள்தான்... 'ஏய் பொட்டை வெளியில வாடா'ன்னதும் கோவணத்தை வரிந்து கட்டியபடி எண்ணெய் தேய்த்த உடம்புடன் வேல் கம்பைத் தூக்கிக் கொண்டு வீதிக்கு ஓடிவரும் போது  மனுசன் கலக்கிட்டாரு... அவர் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்... மகனிடம் கோபப்படும் இடம்... கிடாரி வரவில்லை என்று வருந்தி இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்து, அவன் வீட்டுக்குள் நுழைந்து மாடத்தில் நிற்கும் தன்னைப் பார்த்து லேசான புன்னகை பூத்ததும் விடும் ஒற்றைப்  பெருமூச்சு... மகனின் பிணத்தைப் புரட்டி செருப்பை எடுத்துக் கொண்டு பதட்டத்துடன் நடப்பது என தூள் கிளப்புகிறார். வேல ராமமூர்த்தி ஐயா அவர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார் என்றால் அவரின் போக்கில் நடிக்க வைத்த இயக்குநரையும் தயாரிப்பாளரையும் பாராட்டியே ஆகவேண்டும். பெரும்பாலான படங்களில் இது போன்ற பாத்திரங்களையே அவர் ஏற்பதுதான் ஏனென்று தெரியவில்லை... மாற்றிக் கொண்டால் மிகச் சிறப்பான இடத்தை அடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை அவர் உணர்ந்து கதாபாத்திரத்தை தேர்வு செய்ய வேண்டிய காலகட்டம் இது.

ரத்த வாடை வீசும் படத்தில் காதல் தென்றலை வீசச் செய்து நெஞ்சை அள்ளி நம் நெஞ்சுக்குள் 'விரல் தொடும் தூரத்தில் வரம் இருக்கு' என்று அமர்ந்து கொள்பவர் நிகிலா விமல்... இந்தப் பொன்ணு என்னமா நடிக்குது... வெற்றிவேல் படத்தில் சோகமாய் இருக்கும் போதே பட்டையைக் கிளப்பியிருக்கும் இதில் சொல்லவா வேண்டும்... காதல் காட்சிகளில் எல்லாம் செம...  காதல் காட்சிகளை ரொம்ப ரசனைக்குரியதாய் ஆக்கியதில் பெரும்பங்கு இவருக்குத்தான்.... அந்த உதட்டுச் சுழிப்பு... புருவ நெளிப்பு... கண் ஜாடை... சின்னச் சின்ன துள்ளல்கள்... என எல்லாமே கலக்கல். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல நடிகை கிடைத்திருக்கிறார். ஊதாக்கலரு ரிப்பனில் ஸ்ரீதிவ்யா கண்ஜாடை காட்டுமே.... உன்மேல ஒரு கண்ணுதானில் கீர்த்தி கண்ஜாடை காட்டுமே... அதெல்லாம் பின்னுக்குத் தள்ளி வண்டியில நெல்லு வருமில் கண்ஜாடை காட்டி எல்லாரையும் தன் பக்கம் இழுத்திருச்சு... உண்மையிலேயே நல்ல நடிப்பு... தன்னோட படங்களில் கதாநாயகிக்கு நிறைய காட்சிகள்... அதுவும் நிறைவாய் கொடுப்பது சசிகுமாரின் பாணி. அது இதிலும்... நிகிலாவும் பட முழுக்க வருவது போல் காட்சிகள் வைத்ததில் ரத்தத்தின் ஊடே காதல் பாய்ந்திருக்கிறது.

கொம்பையா பாண்டியன் அதாங்க வேலராமமூர்த்தி ஐயாவின் மகனான வருபவர் மிகச் சிறந்த எழுத்தாளுரும் இலக்கியவாதியுமான வசுமித்ரவாம். அவரோட வசன உச்சரிப்பு... பேசும் போது முகத்தில் காட்டும் பாவங்கள் என பக்காவாச் செய்திருக்கிறார். நடிகனின் மகன் நடிகன் ஆவது போல்... அரசியல்வாதி மகன் அரசியல்வாதி ஆவது போல் ஒரு ரவுடியின் மகன் ரவுடி ஆக ஆசைப்படுவான் என்பது நம்ம தமிழ்ச் சினிமாவில் எழுதப்படாத விதி. கபாலி குடும்பச் சிதைவுக்கும் இதுதானே காரணம்... அதேதான் இங்கும்... தன் இடத்தில் சசியா என்று பொருமுபவரை தன்னுள் அடக்கி ஏத்திவிட்டு தனக்கான வரவு செலவு கணக்கை முடிக்க நினைக்கும் பெண் ஒருத்தியின் தூண்டுதலில் சிலிர்த்தெழுந்து அடங்கிப் போகிறார்.

சசிகுமார்... மீசையைத் தடவிக் கொண்டு... குறுங்கத்தியை வாயில் கடித்துக் கொண்டு... டநான் இருக்கும் போது உங்களை போட வந்துட்டானே...' என்று மதயானை போல் கொம்பையா பாண்டியனுக்காக சதக்.. சதக்குன்னு காசாப்புக் கடையில் ஆடு வெட்டுவது போல் வெட்டுகிறார். தன்னோட படத்தில் வன்முறைகள் இருந்தாலும் கடைசியில் ஒரு நல்ல தீர்வைச் சொல்லி முடிப்பார். இதில் வன்முறைக்கு வன்முறையே தீர்வு என்பதாய்த்தானே சொல்கிறார்... திருந்தி வாழவில்லை... யாரையும் திருத்தவும் இல்லை... நீண்ட முடி வைத்து வழித்துச் சீவி.... எப்பவும் போல் தாடியுடன் முறுக்கிய மீசை வைத்து கண்ணில் வன்மம் காட்டி நடித்து சசிகுமார் நாயகனாக நின்றாலும் வேலராமமூர்த்தியுடன் வரும் காட்சிகளில் எல்லாம் அந்த மனுசன் நாயகனைப் பின்னுக்குத்தள்ளி வில்லனை முன் நிறுத்திவிட்டார். சசிகுமார் வன்முறைகளில் இருந்து வெளி வரவேண்டிய காலகட்டத்துக்கு வந்துவிட்டார். வன்முறையை வைத்து மட்டுமே நல்ல கருத்தை சொல்ல வேண்டும் என்பதில்லை... சொல்ல வேண்டிய நல்லதை எப்படியும் சொல்லலாம் என்பதை உணர வேண்டும். காதல் காட்சிகளில் அசத்துகிறார். சின்னச் சின்ன சில்மிஷங்களில் நிகிலாவுக்கு இணையாய்... எப்பவுமே நகைச்சுவை காட்சிகளை தனக்கும் வைத்துக் கொள்ளும்  இவர் இதில் 'தூளியிலே ஆட வந்த' பாடலில் நகைச்சுவையில் கலக்கியிருக்கிறார்... சசி ராக்ஸ்.

கொம்பையா பாண்டியனின் மைத்துனராய்.... மகனுக்கு பெண் கொடுத்த சம்பந்தியாய் வருபவர் எழுத்தாளர் மு.இராமசாமி ஐயாவாம்... கொந்தளிப்பை தன்னுள்ளே வைத்துக் கொண்டு சின்னக் குழந்தையின் காலை கொஞ்சி விளையாடும் அலைகளை அனுப்பும் கடலாய் அவர் இருந்தாலும் அப்படியான கதாபாத்திரத்துக்கு இன்னும் அழுத்தம் கொடுத்து நடித்திருக்கலாமே என்று எண்ண வைத்தது என்னவோ உண்மை என்றாலும் நிறைவாகத்தான் செய்திருக்கிறார். நாடக நடிகர்கள், எழுத்தாளர்கள் என நல்ல நடிகர்களை வைத்து செதுக்கியிருப்பதால்  படக்குழுவைப் பாராட்டலாம்.

இசை தர்புகா சிவா... பின்னணி இசையில் கலக்கல்... பாடல்களும் சூப்பராய் வந்திருக்கிறது.... மெலோடி பாடல்கள் செம... வண்டியில நெல்லு வரும் பாடல் முன்னரே இணையத்தில் கேட்ட பாடல்தான்... தஞ்சை அந்தோணி அவர்களின் பாடல்... அவரே இதில் பாடியும் ஆடியும் இருக்கிறார். எல்லாருக்கும் தலகாலு புரியலையே பிடிக்கும்... எனக்கு வண்டியில நெல்லு வரும் பாடலின் இடையே சசி-நிகிலா ரொமான்ஸாய் வரும் சில வரி மெலோடியான 'விரல் தொடும் தூரத்தில் வரமிருக்கு....'  ரொம்ப பிடிச்சிருக்கு... இன்னைக்கு மட்டும் தொடர்ந்து ஓடிக்கிட்டே இருந்துச்சு அந்த அஞ்சாறு வரி மட்டும்...  டிரஸ்ம்சைப் போட்டு உருட்டாமல் உருப்படியான இசை கொடுத்த சிவா...  முன்னணி இசையமைப்பாளராய் வரும் காலம் விரைவில் வரும்.... வாழ்த்துக்கள் சிவா.

ரத்தச் சட்டையை அணிந்து களமிறங்கியிருக்கும் இயக்குநர் பிரசாத் முருகேசன் மாஸ் படத்தைக் கொடுத்து தன்னை தமிழ் சினிமா இயக்குநர்களில் ஒருவராய் அடையாளம் காட்டிக் கொள்ள முயன்றிருக்கிறார். இது தோல்வி அல்ல வெற்றிதான் என்றாலும் எதற்காக ஒரு இளம் இயக்குநரின் மனதுக்குள் வன்முறை கதைக்களமாய்... சாதியையும் வன்முறையையும் தூக்கி வைத்து கொண்டு படம் காட்டினால் சாதித்து விடலாம் என்ற எண்ணத்தை இளம் இயக்குநர்கள் சுமப்பது வேதனையான விஷயம். காதல் காட்சிகளில் இயக்குநரின் சொந்த அனுபவம் பேசியது போல் அவ்வளவு சிறப்பு...  கதையிலும் நல்ல நேர்த்தி... சின்னச் சின்ன காட்சிகளிலும் அதீத கவனம்... வன்முறை இல்லா நல்ல படம் கொடுத்தால் இயக்குநராய் நிறைய சாதிக்கலாம்.

ஓ.ஏ.கே. சுந்தர் வில்லானாக காட்டப்பட்டு காமெடியனாக்கப்பட்டு அதிகாரம் இழந்த அரசியல்வாதிபோல் தெருவில் நிற்கிறார். அவருக்கு அண்ணனாக வருபவர், வில்லன்களாக வரும் மற்றவர்கள், கொம்பையா பாண்டியனின் மனைவி, மருமகள், குழந்தையை இழந்து அதற்காக தன்னையே அடகு வைக்கும் அந்தப் பெண், அவளின் கணவன், மூக்கையாவாக வரும் காளை, விநாயகமாக வருபவர், குழறிப் பேசியபடி வருபவர் என அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

சாத்தூர் மண்ணையும்... அந்தப் பக்கத்து மனிதர்களையும்...  அந்தக் கிராமத்தையும் அழகாய் படம் பிடித்திருக்கிறார் கதிர்.  பிரவீண் ஆன்டணியின் படத்தொகுப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. சண்டைக் காட்சி திலீப் சுப்புராயன்... நிறைய இடங்களில் மிரட்டியிருந்தாலும் இன்னும் மிரட்டியிருக்கலாமே என்று யோசிக்க வைத்தது.  சோளத்தட்டையில் மாட்டி கார் நின்ற இடத்தில் நடக்கும் சண்டைக்காட்சியில் தூள் கிளப்பியிருக்கிறார்.

இன்னொருத்தரை சொல்லாமல் விட்டாச்சு பாருங்க... நம்ம சீவலப்பேரி பாண்டி நெப்போலியனின் மறு வருகை... நெப்போலியனை நீங்கதான் நடிக்கணும்ன்னு சொல்லி அழைத்து வந்தேன்னு சசிகுமார் சொல்லியிருந்தார். உண்மைதான்... அந்தக் காதாபாத்திரம், படத்தினை திருப்பிப் போடும் சின்ன பிளாஸ்பேக் காட்சி.... இவர் நடிக்காமல் வேறு யார் நடித்திருந்தாலும் எடுபட்டிருக்காது... கனகச்சிதமான நடிப்பு... நடிப்பை தொடருங்கள் நெப்ஸ்.... ரகுவரன் இல்லாத சினிமாவில் நீங்களும் விலகியிருப்பதால் நிறைய வில்லன் கதாபாத்திரங்கள் வாழாமலேயே போய்விட்டன.

ஒரு கிராமத்து வீட்டுக்குள் எப்படி இருக்குமோ அப்படியான வாழ்க்கையை அச்சு அசலாகத் தந்திருக்கிறார்கள்.  நடிகராய், இயக்குநராய், தயாரிப்பாளராய்  பரிணமிக்கும் சசிக்குமார் அவர்கள் தொடர்ந்து வன்முறை என்னும் களத்தில் ஏன் வலம் வருகிறார் என்று தெரியவில்லை. நல்ல விஷயத்தைப் பேசணும்... நல்ல விஷயத்தைச் சொல்லணும் என்று சொல்லும் அவர் நண்பேன்டா என்னும் வளையத்துக்குள் இருந்து வெளியே வந்திருந்தாலும் வன்முறை என்னும் சட்டையை தன் மேல் கர்ணனின் கவச குண்டலமாய் மாட்டிக் கொண்டு இருப்பது ஏனோ தெரியவில்லை. சுப்ரமணியபுரம் கொடுத்த போதும் நாடோடிகள் கொடுத்த போதும் ஏற்புடையதாக இருந்த வன்முறைக் காட்சிகள் இதில் ஏனோ நம்மைச் சுற்றி ரத்தவாடை அடிப்பது போன்றதொரு பிரமையை ஏற்படுத்தி விடுகிறது. ஆரம்பக்காட்சியில் ஓடிவரும் ரத்தமும் அதன் மீது விழும் கையும்.... கடைசி வரை நம்மை ரத்த சேற்றில் நிற்க வைத்துவிடுகிறது.

எனக்கு சசிக்குமாரை ரொம்பப் பிடிக்கும் என்பதற்காக படம் குறித்து புகழ்ந்து எழுத நினைக்கவில்லை... மனதில் பட்டதை அப்படியே பகிர்ந்திருக்கிறேன். சசிக்குமார் என்னும் நல்ல நடிகரைவிட ஒரு திறமையான இயக்குநர், சமூகத்தைப் புரட்டிப் போடும் படங்களை... அவரின் நண்பரான சமுத்திரக்கனியைப் போல் சமூக அவலங்களை படமாக எடுக்க வேண்டியதில்லை... வன்முறை மட்டுமே தீர்வு என்ற எண்ணத்தைக் கைவிட்டு வன்முறையில்லா நல்ல படங்களைக் கொடுத்தாலே போதும். கொடுப்பார் என்ற நம்பிக்கை நிறைய இருக்கிறது. வன்முறைக் கூடாரத்துக்குள் இருந்து பரந்த வெளியில் சிறகை விரியுங்கள் சசி.

கிடாரியை பார்க்கலாம்... காதலும் ரத்தமும் கலந்த கலவை இது... வெட்டி வீழ்த்துறதைத் தவிர சசிக்கு வேற தெரியாதா என்று சொல்லும் இணைய ஊடகங்கள்தான் படம் முழுவது சுட்டு வீழ்த்தி வன்முறையைக் கட்டவிழ்த்த கபாலியை தூக்கி வைத்துக் கொண்டாடின என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. நடிகர்களுக்காக விமர்சனம் செய்யாதீர்கள்... மனதில்பட்டதைப் பேசுங்கள்.... என்னைப் பொறுத்தவரை கிடாரியைவிட கபாலியில் வன்முறை தூக்கல்தான்... இல்லையென்று சொல்ல முடியாது... இதை அழுத்திப் பேசினால் சாதீயம் பேசுகிறேன் என்ற ஒரு வார்த்தை வந்து விழும்.  அதனால நாம கிடாரியைப் பேசலாம். ரவடித்தனம் பண்ணும் சண்டியர் கதைதான் என்பதால் அவருக்கு வில்லன்கள் ஒவ்வொரு பிரச்சினையிலும் துளிர் விடுகிறார்கள். அவர்களைப் பற்றிய அறிமுகத்துடன் அவர்கள் கதை தொடர்வது புதுமுயற்சி என்றாலும் நமக்கு அயர்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு கதை முடிவிலும் விதையை விட்டுட்டோம் அது வளரத்தானே செய்யும்ன்னு வில்லன்களை வளர்ப்பது கதையை தொய்வடையச் செய்கிறது. 

வேல ராமமூர்த்தி , நிகிலா, சசிகுமார், இசை, பாடல்கள், வசனம், ஒளிப்பதிவு இவற்றைக் கருத்தில் கொண்டு கிடாரியைப் பார்க்கலாம்.

மொத்தத்தில் கிடாரி ஒரு தென் மாவட்டத்து வாழ்க்கை என்றாலும் வன்முறை மட்டுமே தென் மாவட்டத்து வாழ்க்கை இல்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். அழகான எதார்த்தமான... வாஞ்சையான மனிதர்களின் வாழ்க்கைக் கதைகள் நிறையக் கிடக்கு... அதையெல்லாம் விடுத்து எப்பவும் அருவாளையும் கத்தியையும் எடுத்து முன்னிறுத்தி தென்மாவட்டம் என்றாலே வீச்சருவாவும் வேலுக்கம்பும்தான் என்று தமிழ்ச் சினிமா பாடம் நடத்துவது ஏனோ..? நம்ம பக்கத்து நல்ல கதைகளை படமாக்குங்கள் சசிகுமார்... மற்றவன் செய்தால் பரவாயில்லை.... செம்மண் பூமிக்காரன் ரத்த ஆறுதான் ஓடுதுன்னு ஏன் சொல்லணும்... அன்பும் உறவும் இரண்டறக் கலந்திருக்கும் வாழ்க்கையை படமாக்குங்கள்... கிடாரிகளை எல்லாம் விட்டுவிட்டு வெற்றுடம்பு மனிதர்களின் வியர்வைக் கதைகளை உள்வாங்குங்கள்,,, இன்னும் சாதிக்கலாம்.

ஒரு விளக்கம் : நான் எப்பவுமே படத்தின் கதை குறித்து அதிகம் பேசமாட்டேன். தர்மதுரை பற்றி எழுதும் போது ஏனோ படத்தின் கதையை விலாவாரியாக எழுத வேண்டும் என்று தோன்றியது... அப்படியே கிறுக்கியும் விட்டேன். அதற்கு பயங்கர எதிர்ப்பு பலரிடமிருந்து வந்தது. தனிப்பட்ட முறையிலும் சிலர் சொன்னார்கள். எனக்கு சினிமா விமர்சனமெல்லாம் எழுத வராது. தமிழ் சினிமாவை விட மலையாளப் படத்தை விரும்புவது அதற்கு விமர்சனம் எழுதுவதும் பிடித்திருப்பதால் அவ்வப்போது எழுதுவதுண்டு. விமர்சனம் என்ற பெயரில் லைட்பாய் அங்க நிக்கணும்... கேமரா இங்க வைக்கணுமின்னு எல்லாம் எழுதத் தெரியாது... மனதில்பட்டதை கிறுக்கவே இந்தத் தளம்... என் மனதில் தோன்றுவதை இங்கு கிறுக்கிவேன் அவ்வளவே....


-'பரிவை' சே,குமார். 

திங்கள், 5 செப்டம்பர், 2016

மனசு பேசுகிறது : விநாயகரும் ஆசிரியரும்...

விநாயகர் சதுர்த்தி...

கிராமத்து வாழ்க்கையில் பொங்கல், தீபாவளி, ஆயுதபூஜை, கார்த்திகைக்கு இருக்கும் ஒரு பரபரப்பு... சந்தோஷம் விநாயகர் சதுர்த்தி போன்றவைகளுக்கு இருந்ததில்லை. விநாயகர் சதுர்த்தி என்பது நம்ம கலைஞரும் கலைஞர் டிவியும் சொல்வது போல் ஒரு விடுமுறை தினமே.... கண்மாயில் ஆட்டம் போடவும்... மடையில் அமர்ந்து மணிக்கணக்கில் பேசவுமாக நிறைவடையும் ஒரு விடுமுறைநாள்... பிள்ளையார் என்பவரே எங்கள் ஊரில் இல்லாத காலம் அது.... இப்ப எங்க ஊர் அம்மன் கோவிலில் பிள்ளையார், முருகன் இருவருக்கும் சன்னதி வைத்தாச்சு. பிள்ளையார் என்பவர் வீட்டுப் பொங்கலின் போது சாணியில் அடிப்பாகம் தட்டையாக... ஒரு கூம்பு போல செய்து அதன் உச்சியில் அருகம்புல்லை வைத்து தேங்காய் உடைத்து வைத்து... வெற்றிலை பாக்கு பழம் எல்லாம் வைத்து... கும்பிடுபவராகத்தான் இருந்தார். அவருக்கு அருகம்புல் புடுங்கப் போறதுக்கு வரும்பாருங்க கோபம்... அதுவும் தூர்தர்ஷனா இருந்த வரை கோபம் அதிகம் வருவதில்லை... சன் டிவிக்கள் வந்த பின்னர்தான் கோபம் அதிகம்... நிகழ்ச்சி போயிரும்ல்ல...

அதேபோல் பிள்ளையார் மற்றொரு இடத்தில் பிடிப்போம்.... நெல் அடித்து தூற்றும் போது அதுவரைக்கும் அடித்துக் கொண்டிருந்த காற்று சுத்தமாக நின்று போகும் அல்லது ஒரு திசையில் அல்லாது சுற்றிச் சுற்றி அடிக்கும்... 'காத்துக்காரன் செத்துப்பொயிட்டான் காத்து வா... காத்து வா'ன்னு கத்திப் பார்த்து விசில் அடித்துப் பார்த்தும் சில நேரங்கள் காற்று அம்மா மாதிரி வாய் திறக்காமல் இருந்துவிடும். உடனே அப்பா பிணையல் மாடுகள் போட்ட சாணியை எடுத்து பிள்ளையார் பிடித்து சனி மூலையில் வைக்கோல் கொஞ்சம் போட்டு அதன் மீது வைக்கச் சொல்வார்... அதன் முன்னே கொஞ்சம் நெல்லை வைத்து கடகாப் பொட்டியை வைத்து மூடி விடுவோம். பிள்ளையாருக்கு வேர்க்கணுமில்ல... என்னதான் வேர்த்தாலும் நம்ம பன்னீர் மாதிரி பிள்ளையார் பெட்டிக்குள்ள சுருண்டு உக்காந்துக்குவார்... காற்றோ அம்மா மாதிரி... பிள்ளையாரோ பன்னீர் மாதிரி... நாமதான் தலையில நெல்லைச் சுமந்துக்கிட்டும்... கையில சொளகை வைத்துக் கொண்டும்... கன்னத்தில் கையை வைத்துக் கொண்டும்... காத்துக் கொண்டிருப்போம்... அப்பவும் நாம மக்கள்தானே...

திருமணத்திற்குப் பின் பிள்ளையாராய்.... இருங்க எழுத்து மாறிடுச்சு... சொல்ல வந்ததை சொல்லிடுறேன்... பிள்ளையாரை வைத்து சாமி கும்பிட்டு குளத்தில் கரைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டாச்சு.... இப்ப வீட்டில் விநாயகர் சதுர்த்தி உண்டு. இந்த முறை இரண்டு பிள்ளையார் வாங்கணும் என்று நேற்றே மைனர் சொல்லிட்டார்... இந்த வீட்டுக்கு ஒண்ணு... கிராமத்திலிருக்கும் வீட்டுக்கு ஒண்ணு என்று... பிள்ளையாரைக் கரைப்பதில்தான் பிள்ளைக்கு எவ்வளவு சந்தோஷம்.

அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.


Image result for பிள்ளையார் பட்டி விநாயகர்


சிரியர் தினம்...

எத்தனை ஆசிரியர்கள்... எவ்வளவு அன்பு.... அந்த அன்பில் திளைத்ததால்தான் இன்று எழுத்து வசப்பட்டிருக்கிறது. ரொம்ப சின்னப்பயலா இருக்கான்.... இந்த வருசமும் ஒண்ணாவதுலயே போடுங்க என்ற அம்மாவின் பேச்சுக்கு 'அவனை எதுக்கு ஒண்ணாப்புல போடணும்... நல்லாப் படிக்கிறபிள்ளை... நாந்தான் ரெண்டாவதுக்கும் டீச்சர்... அவன் எங்கிட்டே இருக்கட்டும்' என்று சொல்லி அணைத்துக் கொண்ட மறைந்த ஆசிரியை... அம்மா... மரியம்மையில் தொடங்கி... கன்ணா என்றழைத்த பிச்சைக்குட்டி வாத்தியார், ராஜமாணிக்கம் வாத்தியார், பிச்சம்மை ஆசிரியை, சுப்புலெட்சுமி ஆசிரியை, பாப்பாத்தி ஆசிரியை மறைந்த சுந்தரவாத்தியார், கண்ணன் தம்பிதானேடா என்று உரிமையோடு அழைக்கும் தமிழாசிரியை விஜி, தலைமையாசிரியர் முருகன் சார் உள்ளிட்ட இன்னும் சில இதயங்களால் நிரம்பிய முருகானந்தாவில் எட்டாவது வரை படித்து முடித்த போதுதான் வெளியுலகம் கொஞ்சமேனும் தெரிய ஆரம்பித்தது.

தே பிரித்தோ வந்த போது அருள்சாமி ஐயா, சவரிமுத்து ஐயா, தாசரதி ஐயா உள்ளிட்ட நிறைய அன்புள்ளங்களால் தழைத்து.... சேவுகன் அண்ணாமலைக் கல்லூரிக்குள் புகுந்து பேராசியர்கள் கே.வி.எஸ், அமல சேவியர், வெங்கடாசலம், சீனிவாசன், சேவியர், திருவடி, திண்ணப்பன், ஆறுமுக ஐயா, தேனப்பன் ஐயா, எம்.எஸ். சார், சந்திரமோகன் சார், விஜயன் சார் என எல்லாத் துறை ஆசிரியர்களுடனும் இணக்கமாகி, எங்கள் பேராசான்... ஆசிரியராய்... தந்தையாய்... என்னுள்ளே இருக்கும் எங்க பழனி இராகுலதாசன் ஐயாவின் அன்பில் நனைந்து எழுத்தாளனுக்கான பிள்ளையார் சுழி போட்டது... பத்திரிக்கைகளில் எழுதியது.... வலைப்பூ வந்தபோது இங்கும் பல ஆசிரியர்களின் அன்பில் நனைவது... நானும் கணிப்பொறி ஆசிரியனாய்.... படித்த கல்லூரியிலேயே சில காலம் ஆசிரியனாய் பணியாற்றியவன்தான்...

அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

(பேராசான்.... மு.பழனி இராகுலதாசன்)


கப்பலோட்டிய தமிழனையும் அன்னை தெரசாவையும் நினைவில் நிறுத்துவோம்..

-'பரிவை' சே.குமார்.

சனி, 3 செப்டம்பர், 2016

திண்ணைப் பேச்சு காணாமல் போச்சு

Image result for திண்ணை

'மோடு ஒழுகுதுன்னே...
மழக்கி முன்னால பிரிச்சி
கட்ட வேண்டியதுதானே...'

'மூத்தவன் போனு கீனு
பண்ணுனானா..?
நல்லாயிருக்கானாமா...?'

'இருளாயி மவன் எவளோ
ஒருத்திய இழுத்துக்கிட்டு
ஓடிட்டானாமே தெரியுமா...'

'கொக்காளி... மாதவமுட்டு
மாடு ரெண்டு பர்லாங்கு
விட்டுட்டு வந்துச்சுய்யா...
என்ன வேகம்...?'

'ராசாத்தி மவ அப்பிடி
இப்பிடி திரியிறாளாமே...
ஒரு மாதிரி பேச்சு
அடிபட்டுகிட்டு இருக்கு...'

'சரச பொண்ணு பாத்துட்டுப்
போனாவளே... புடிச்சிருக்காமா..?
சீதனம் ரொம்ப எதிர்பாக்குறாகளா...?'

'என்ன எளவோ தெரியல..
மாம்பிஞ்சாக் கொட்டுது...'

'ரெண்டு நாளா மாடு கழியிதப்பா..
மருந்து கொடுத்தும் நிக்கல...
ஊசிதான் போடணுமோ...?'

'சாயக்குடியில வள்ளிதிருமணம்
வச்சிருந்தாங்க...
கரூர் இந்திராவும்
நாகலிங்கமும் தர்க்கம்
பண்ணியிருக்காவ பாரு...
அந்தப் பொம்பளதாய்யா வள்ளிக்கி...'

'சைக்கிளு வேற பஞ்சராக் கெடக்கு..
பஞ்சரு பாக்கலாம்ன்னு பாத்தா...
சொலுசன் இல்ல...
மாப்ளக்கிட்ட இருக்குமா...'

'மாரியத்தா கோவிலு
வெளக்கு எரியலப்பு...
பீசு போச்சு போல...
டவுனுக்குப் போனா
ஒண்ணு வாங்கியாந்து
போடுங்க காசு நாந்தாறேன்'

'கரகாட்டக்காரி துர்கா
வந்தா ஒரு கூட்டம் கூடுதய்யா...'

'வெவசாய கடன
தள்ளுபடி செய்வானா..?'

'தீவாளிக்கி ரெண்டு
வேட்டி வாங்கணுமப்பா...
நமுத்துப் போச்சு...'

எதார்த்தங்களோடும்
எள்ளல்களோடும்
நிறைந்து கிடந்த
கோவில் திண்ணை...

இப்போ பேசவும் ஆளில்லாமல்
கேட்கவும் ஆளில்லாமல்
வெறுமை சுமந்து
பொலிவிழந்து கிடக்கு...

மனிதர்கள் இல்லாத
அம்மன் கோவில்
ஊமையாகிப் போச்சு...
ஆமா இப்ப ஊருகூட
ஊனமாகிப் போச்சு...
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 1 செப்டம்பர், 2016

நல்ல எழுத்தை விதைப்போம்...நண்பனுக்குப் பதில்

ண்பன் தமிழ்க்காதலனின் கடிதத்துக்கு முகநூலில் நான் கொடுத்த பதில் கடிதம் இங்கே...

ன்பின் நண்பா...  கவிஞர் தமிழ்க்காதலா... கவிதைகளை நேசித்து எழுதும் பண்பாளனிடமிருந்து எனக்கென ஒரு கடிதம்... அது எனக்கான கடிதம் மட்டுமல்ல... நானும் எழுத்தாளன் என்று என்னைப் போல் திரியும் எல்லாருக்குமான கடிதம்... கடிதத்தின் ஒவ்வொரு வரியையும் ரசித்து ருசித்து வாசித்து உள்வாங்கிக் கொண்டேன்.
வரிக்கு வரி உண்மையை எடுத்துச் சொன்ன கடிதத்தை  நீ ஆரம்பித்திருப்பது என்னவோ எனக்கான கடிதமாகத்தான்... அதிலிருக்கும் கருத்துக்களை பொதுவில்தான் வைத்திருந்தாய்... எழுத்தாளன் என்று சொல்லிக் கொண்டு இணையத்தில் சுழலும் நாம் அனைவருமே ஏற்றுக் கொண்டு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய கருத்துக்கள்... கதையோ கவிதையோ அல்லது கட்டுரையோ... அந்தச் சூழல்... அப்போதைய பரபரப்பு...  முதலியவையே அதில் முதன்மையாக நிற்கின்றன என்பதை நாம் அறியலாம். செய்திகளின் பரபரப்பே நம்மை எழுதத் தூண்டுகின்றது என்பதை நாம் அறிவோம். ஒரிசா நிகழ்வை கட்டுரையாகவோ, கவிதையாகவோ ஆக்கியோர் எத்தனை பேர் என்பதை நாம் அறிவோம்... இந்த நிகழ்வை மட்டுமல்ல... ஒவ்வொரு நிகழ்வின் போதும் நாம் வார்த்தைகளை வசமாக்கி அள்ளித் தெளிக்கிறோம். இவை காலங்கடந்து நிற்கப்போவதில்லை என்றாலும் அன்றைய தினத்தில் இவைதானே முன்னணியில் நிற்கின்றன.
'வரலாறுகளை கதைகளில் கொண்டு வா' என நம் எழுத்து சம்பந்தமான விவாதங்களில் எல்லாம் கடந்த சில வருடங்களாக நீயும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறாய்...  எதார்த்தங்களை எழுத்தில் கொண்டு வர முடிந்த என்னால் ஏனோ வரலாறுகளை எழுத்தில் கொண்டு வரமுடியவில்லை... சில சமயங்களில் அதை முயற்சித்துப் பார்த்து தோற்றும் போயிருக்கிறேன். ஒருவேளை வரலாறுகளை கரைத்துக் குடிக்க வேண்டுமோ..? அப்படி என்றால் என்னால் முடியும் என்ற  நம்பிக்கையில்லை... வரலாறுகளின் வாசிப்பு எனக்கு வேப்பெண்ணெய்யாக கசக்கிறது என்றாலும் சில நாட்களுக்கு முன்னர் பொன்னியின் செல்வன் வாசித்தேன்... அது ஒரு அருமையான அனுபவம்... அந்த வாசிப்பின் ஈர்ப்பில் உடையார் ஆரம்பித்தேன்... ஏனோ ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறேன்.
படிக்கும் காலத்தில் வாசிப்பு என்பது மனம் நிறைந்த சுவாசிப்பாக இருந்தது... வாசிப்பது ஏகாந்த அனுபவத்தைக் கொடுத்தது. லெனின், மார்க்ஸ் என ஐயாவின் வீட்டில் இருந்து எடுத்து வாசித்த புத்தகங்கள் எத்தனை... எத்தனை... எடுப்பதும் வாசிப்பதும் அங்கு எனக்கு கிடைத்த வரம்... எதையும் எடுத்து வாசிக்கலாம்... இன்று வரை தடையில்லை எனினும் வாசிப்பு கல்லூரிப் படிப்போடு காணாமல் போனதுதான் ஆச்சர்யம். அன்று அது தவிர வேறு வேலை இல்லை... அதனால் வாசிப்பின் மீது ஒரு காதல் இருந்தது ஆனால் இன்றோ வேலைப்பளுவும் குடும்ப பிரச்சினைகளும் வாசிப்பை எட்டிக்காயாக ஆக்கிவிட்டிருக்கிறது. வாசிப்பின் மீதான காதல் வசமிழந்து விட்டது. அப்படியிருந்தும் இப்போதும் சில நல்ல கதைகளை தரவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு அவ்வப்போது வாசித்து உண்டு. என்னதான் இருந்தாலும் புத்தக வாசனையுடன் வாசிப்பதில் இருக்கும் சுகமும் மணமும் செல்போனில் தள்ளித்தள்ளி வாசிப்பதில் இல்லைதானே...
உனக்கொன்று தெரியுமா..? நான் எழுத ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து எழுதவில்லை... கல்லூரியில் படிக்கும் போது எழுத்தில் ஆர்வம் உண்டாகி கதைகள், கவிதைகள் எழுத ஆரம்பித்து எங்கள் ஐயாவின் ஆசியுடன் தாமரையில் முதல் கவிதை வெளிவந்து பொன்னீலன் ஐயாவின் பாராட்டுக் கடிதமும், கலை இலக்கியப் பெருமன்ற விழாவிற்கு வந்த போது நேரடி வாழ்த்தும் என்னைத் தொடந்து எழுதத் தூண்டியது என்பதே உண்மை. அதன்பின் ஒருசில பத்திரிக்கைகளில் வரவும் என்னவோ சாதித்து விட்டதைப் போல நிறைய கிறுக்கித்தள்ள ஆரம்பித்து வீட்டில் திட்டு வாங்கியது தனிக்கதை.
கல்லூரி முடித்த பின்னர் எழுதுவதை விட்டு விட்டு வாழ்க்கைத் தேடலுக்கான ஓட்டம்... அந்த ஓட்டத்தில் எழுத்து எங்கே போனதென்றே தெரியவில்லை... திருமணமாகி, மகள் பிறந்த பின்னர்தான் மீண்டும் விட்ட எழுத்தை விரட்டிப் பிடித்தேன். அதுவும் சென்னையில் எழுத்துத்துறையில் பணி கிடைத்த காரணத்தால்தான் இல்லையேல் எழுத்துப் போனது போனதுதான்... வாழ்க்கை நகர்த்தலில் வரவுக்கும் செலவுக்கும் சண்டை வர, ஒரு கட்டத்தில் வெளிநாட்டு வாழ்க்கை வரவு-செலவு சண்டையை சீர் செய்யும் என சிந்தையில் அள்ளித் தெளித்த உறவுகளால் மனமேயின்றி விமானம் ஏறினேன். குடும்பத்தை விட்டு வந்த போது எழுத்தை இறக்கி வைத்து விட்டுத்தான் வந்தேன். வெளிநாடு சில சந்தோஷங்களையும் பல இன்னல்களையுமே கொடுத்தது... கொடுத்துக் கொண்டிருக்கிறது... உள்ளம் பாதிக்கப்பட்ட நிலையில் உடலளவிலும் பாதிப்புக்களை கொடுத்த வாழ்க்கை இது என்பதை நீ அறிவாய்தானே...
பல நாள் வலிகளைச் சுமந்த மனசுக்கு எழுத்து இதமாக இருக்குமென பத்திரிக்கை நண்பனின் வழி காட்டலின் பேரில் வலைப்பூ ஆரம்பித்து இரண்டாம் முறையாக விட்டொழித்த எழுத்தை மீண்டும் பிடித்தேன்... நிறைய எழுத நேரமும் கிடைத்தது... களமும் கிடைத்தது. பிறந்த மண்ணின் மனிதர்களை கதை மாந்தர்களாக்கி வாழ்க்கைக் கதைகளைப் பேசினேன்... பலருக்கும் பிடிக்கும் எழுத்தாய் ஆகிப்போனதில் மீண்டும் தாமரைக் கவிதையால் குஷியானது போல் மனசு சந்தோஷமாகி எழுத்தை சுவாசிக்க ஆரம்பித்து இப்போதும் அதன் பின்னே தொடந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
இது ஒன்றும் பெரிய ஆச்சர்யமில்லைதான்.... காரணம் என்னவென்றால் இன்று எதார்த்தத்தை கதைகளாக்கும் போது கிடைக்கும் சந்தோஷத்தைவிட அன்று எப்படி எழுதினாலும் பத்திரிக்கையில் வருதே என்ற நினைப்பு கொடுத்த சந்தோஷம்தான் அதிகம். நம்ம ஊரில் இருக்கும் நண்பர்களுக்கு பத்திரிக்கையில் எழுத வாய்ப்புத் தேடி வருகிறது ஆனால் இங்கிருந்து பத்திரிக்கைகளுக்கு எழுதுவதென்பது கடினமான காரியம்தான் என்பதால் இப்போது அது குறித்து யோசிப்பதில்லை. உனக்கொன்று தெரியுமா...? எனது இன்றைய கதைகளோடு அன்றைய கதைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் எனக்கே சிரிப்பு வருவதுண்டு... எத்தனை அபத்தமாய் எழுதியிருக்கிறேன் தெரியுமா...? இருப்பினும் அவற்றில் நல்ல கதைகளும் சில உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.  இன்றைய வாழ்வியல் எதார்த்தங்கள் அன்றைய கதைகளில் இல்லை... காதலும் சோகமுமே சொக்கி நின்றன என்பதை உணர முடிகிறது. அப்போது அப்படியான கதைகளில்தான் நாட்டம் இருந்திருக்கிறது. பத்திரிக்கைகளும் அப்படிக் கதைகளுக்கே கதவு திறந்தன என்பதுதானே உண்மை.
நீ சொல்வது எவ்வளவு உண்மை பார்... எத்தனையோ விஷயங்களை நாம் கடந்து செல்கிறோம்...  ஒரு செடியை அழித்து விட்டு நகர்கிறோம் என்றால் ஒரு மூலிகையை இழந்து விட்டோம் என்று அர்த்தம் என்று சொல்லியிருக்கிறாய்... ஆம் அது எத்தனை உண்மை... நமக்குத் தெரிந்து எவ்வளவு விஷயங்களை இழந்தோம்... விவசாயத்தைக் கூட இழந்து தவிக்கிறது எங்கள் பூமி. ஆடு, மாடு, கோழி, நாய் என கட்டிப் புரண்டு வாழ்ந்த வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கிறோமே... அவ்வளவு ஏன்... இன்று உறவுகளைக் கூட இழந்துவிட்டுத்தான் நிற்கிறோம் என்பது எவ்வளவு வேதனையான விஷயம். இதைவிடக் கொடுமை வேறு என்ன இருக்கமுடியும் சொல்லு.
நம் தலைமுறையேனும் சிலவற்றையாவது அனுபவித்து மகிழ்ந்தோம் என்பதில் நமக்கு சந்தோஷம் இருக்கிறதுதானே... கோழிக்குண்டு... கில்லி... மரக்குரங்கு... கண்டுபிடிச்சு... கோகோ... கபடி.. சில்லுநொண்டி... பம்பரம்... ஓடிப்பிடித்து என இன்னும் இன்னுமாய் நிறையக் கூடி விளையாண்டோம். அப்போது நம் சக உறவுகளுடனும் தோழர்களுடனும் நமக்கு ஒட்டுதல் இருந்தது... நேசம் இருந்தது... அதில்  ஒரு உயிர்ப்பு இருந்தது ஆனால் இன்றைய தலைமுறை... நம் வாரிசுகள்... எல்லாவற்றையும் தொலைத்து விட்டுத்தானே நிற்கிறார்கள். பக்கத்து வீட்டில் இருப்பவர்களைப் பற்றிக்கூட அறியாமல்தானே வளர்கிறார்கள். இன்றைய தலைமுறை இணையத்தின் இறுக்கத்துக்குள் சிக்கி எல்லாம் இழந்து விட்டார்கள் பார்த்தாயா...அன்று நாம் மரப்பாச்சிகளை வைத்து விளையாண்டோம்... இன்றோ நம் அடுத்த தலைமுறையை மரப்பாச்சி ஆக்கி வைத்திருக்கிறோம். வேறென்ன சொல்ல...? இழந்தவற்றைப் பற்றித்தான் என் தளத்தில் கிராமத்து நினைவுகளாய் வார்த்து வைத்திருந்தேன் என்பது உனக்குத் தெரியும்.
நிறைய விஷயங்களை எழுத வேண்டியிருக்கிறது... நிறைவாய் எழுத வேண்டும்... நிச்சயமாய் எழுதுவேன்... ஆனால் அதற்கும் கால அவகாசம் வேண்டுமல்லவா... கை சூப்பும் குழந்தையை திடீரென கையைப் பிடித்து நிப்பாட்டினால் அது நிறுத்திவிடுமா என்ன... மெல்ல மெல்ல அதன் கை சூப்பும் எண்ணத்தைத் தகர்த்த பின்தானே முழு வெற்றி கிடைக்கும். அதேபோல் பால் குடிக்கும் குழந்தை எப்பவும் தன் மார்பில் வாயை வைத்து இழுத்துக் கொண்டே இருக்கிறது என்பதற்காக அதிரடி முடிவையா அம்மா எடுக்கிறாள்..? இல்லையே... தன் மார்க்காம்பில் கசப்பான ஒன்றைத் தடவி வைத்து... அதில் வாய் வைத்தால் கசக்கும் என்ற எண்ணத்தை அந்தக் குழந்தைக்குள் விதைத்து மெல்ல மெல்ல அந்தக் குழந்தையை தன் மார்பின் மீது கவனம் செலுத்துவதை தவிர்க்க வைக்கிறாள்... அதேபோல்தான் வரலாறுகளையும் இழந்தவைகளையும் மெல்ல மெல்ல நாம் எழுதும் நிதர்சனங்களோடு இணைத்து எழுதப் பழகி... வரலாறுகளையும் நம் வாழ்க்கையையும் நிறைவாய் எழுதுவோம்... நம் எழுத்து இப்போது போல் பயணிக்கப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்... அது கொஞ்சம் கொஞ்சமாக தன்னுள் மெருகேற்றி காலங்கள் கடந்து நிலைத்து நிற்கும் என்பது உண்மை நண்பா.
உன் எழுத்தை நாலைந்து முறை வாசித்தேன்... வாசித்தது முடித்ததும்  நாம் எழுதும் எதார்த்தங்கள் மட்டுமே நம்மை எழுத்தாளனாய் முன்னிறுத்துமா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்... கண்டிப்பாக நிறுத்தாது என்பதை உணர்ந்து சிரித்துக் கொண்டேன்.  இந்த எழுத்து இன்னும் எத்தனை காலத்துக்கு தாக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறாய்...? ஏதோ ஒரு நேரத்தில் ஏதோ ஒரு காரணத்தால் இது மீண்டும் தன்னை நிறுத்திக்கொள்ளும் என்பதே உண்மை.
நீ நிறைய விசயங்களைப் பேசியிருந்தாய்... அதுவும் நிறைவாய்... நீ அதிகம் வாசிப்பவன்... எழுத்தைச் சுவாசிப்பவன்... தமிழுக்கு உன் வாழ்வை அர்ப்பணித்து அதன் பின்னே நடப்பவன். உன் அளவுக்கு என்னால் பேசவோ எழுதவோ முடியாது... என் பாதை வேறு... அதிக வாசிப்பனுபவமெல்லாம் இல்லாதவன். வாழ்ந்த மண்ணில் பார்த்தவைகளையும் அனுபவித்தவைகளையும் எழுதும் ஒரு சாதாரணமானவன். உன் அளவுக்கு எழுத எழுத்துத் திறமை மட்டுமின்றி எடுத்துக்காட்டுக்களைச் சொல்லும் புத்தியும் வேண்டுமல்லவா...? நீ எழுதியதில் பத்து சதவிகிதம் கூட என் எழுத்தில் இருக்காதுதான்... இருந்து உன் கடிதத்துக்கு பதில் கடிதம் எழுத வேண்டிய நாகரீகத்தின் பேரில்தான் இதைக் கிறுக்கியிருக்கிறேன். பிழைகள் இருப்பின் பொறுத்துக் கொள்வாய் என்று தெரியும்.
கல்கியும் சாண்டில்யனும் பாலகுமாரனும் சுஜாதாவும் கி.ராவும் ஜெயகாந்தனும் தாங்கள் எழுதிய எதார்த்தாக் கதைகளால் பேசப்படவில்லையே... அதையும் தாண்டி காலத்தால் அழியாத எழுத்துக்களைக் கொடுத்ததாலேயே எப்பவும் பேசப்படுபவர்களாக இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த எழுத்தாளர்கள் பலர் எதார்த்தங்களைப் பேசி இன்னும் அதே இடத்தில்தான் இருக்கிறார்கள்.. அவர்களின் எதார்த்தங்கள் எளிமையையும் வாழ்க்கையையும் கண் முன்னே நிறுத்தின என்றாலும் ஒரு சிலரைப் போல புகழ் என்னும் இடத்தை நோக்கி நகராமல் குடத்தில் இட்ட விளக்காய்த்தான் இருக்கிறார்கள். அப்படியிருந்தும் இன்று இணையம் விரிக்கும் கடையில் புற்றீசலாய் எழுத்தாளர்கள் வந்து கொண்டிருப்பது சந்தோஷமே என்றாலும் நீ சொல்வது போல் எழுதும் எழுத்தாளர்களை அதில் தேடித்தானே கண்டு பிடிக்க முடியும். உன் எண்ணப்படி எல்லாரும் எழுதுவார்கள் என்று சொல்ல முடியாது... ஆனாலும் சிலர் எழுதுவார்கள் அந்தச் சிலரில் நாமும் இருப்போம் நண்பா... அப்படியான எழுத்தால் நாம் சாதிக்கும் காலம் விரைவில் வரும் நண்பா... நாம் எதைக் கொண்டு வந்தோம் எடுத்துச் செல்ல அல்லது விட்டுச் செல்ல என்று சிந்திக்காமல் நமக்கு சரஸ்வதி கொடுத்த எழுத்துத் திறமையால் நல்ல எழுத்தை விதைத்துச் செல்வோம்...
 நன்றி.
-'பரிவை' சே.குமார்.