மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

எழுத்தை ஆயுதமாக்கு... நண்பனின் கடிதம்

ன் அன்புத் தோழன் கவிஞர்... பேச்சாளர்... முற்போக்கு சிந்தனைவாதி... தமிழ்க்காதலன் முகநூலில் எழுதிய கடிதம்... இது எனக்கானது மட்டுமல்ல... எழுதும் நம் அனைவருக்குமான கடிதம்... வாசியுங்கள்... எழுத்தின் வலிமையை உணர்வீர்கள்...

தயம்நிறை அன்பில் நெகிழும் அன்புத் தோழனே, இனிய பரிவை.சே.குமார், அன்பானவற்றை பண்பான எழுத்தில் தரும் படைப்பாளியே, நல்ல எழுத்தை இரசமாக்கித்தரும் வலிமை கொண்டவன் தான் சிறந்த படைப்பாளியாகிறான். எழுதுவது கலை, எழுத்து சாகா வரம் பெற்ற சாதனம். உலகம் இன்று அதனை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. உயிர்களை ஆளும் வலிமையும் எழுத்துக்கு உண்டு. எண்ணங்களை ஓவியமாக்கும் அழகு எழுத்து. உயிரின் உயில் வடிவம் எழுத்து. நன்மைக்கும், தீமைக்கும் பொதுவானவற்றில் எழுத்தும் ஒன்று.
அத்தனை வலிமையான எழுத்தை இன்று நாம் எதற்கு பயன்படுத்துகிறோம்? எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் எழுத்தின் தன்மை தீர்மானிக்கப்படுகிறது. பேச்சுக்கும் எழுத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. பேசுகிற எல்லாவற்றையும் நாம் எழுதுவதில்லை. எழுதுகிற அல்லது இதுவரை எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றையும் நாம் பேசுகிறோமா என்றால் அதுவும் இல்லை. ஆனால் எதை எழுத வேண்டும் என்பதில், என்ன எழுத வேண்டும் என்பதில், ஏன் எழுத வேண்டும் என்பதில் ஒரு தெளிவு அவசியமாகிறது. அதனால்தான் எழுத தொடங்கும் முன்பு எல்லோரிடமும் ஒரு சின்ன தயக்கமும், தடுமாற்றமும் வருகிறது.
அறிவை ஆயுதமாக்கும் குணத்தைப் போலவே, மனிதனுக்கு எழுத்தையும் ஆயுதமாக்க தெரிந்திருக்கிறது. ஆயுதங்கள் எப்போதும் ஏதோ ஒன்றை காப்பாற்ற அல்லது காப்பாற்றிக்கொள்ள ஏதேனும் ஒன்றை தடுப்பது அல்லது அழிப்பது என்பதற்கான படைப்புகள். எனவே, எழுத்தும் ஓர் ஆயுதமாகிறது. இதை நீ நன்கு கவனிக்க வேண்டும். பயன்படுத்துபவன் யார் என்பதை பொறுத்து, கருவிகளின் விளைவுகள் அமைகிறது. அதனால்தான் எழுத்தில் பல விடயங்களை மறைமுகமாகவும், பல சமயம் எழுதியதை மறைத்தும் வைத்தார்கள் நம் முன்னோர்கள்.
அடுத்த தலைமுறைக்கு தெரியவும் வேண்டும், அதே சமயம் தகுதியற்ற, தீமைகளை விளைவிக்க கூடியவர்களின் கைகளில் சிக்கிவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமும் வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். இன்றைய சமூகம் இந்த நிலைகளில் இருந்து நிறைய மாற்றங்களை கண்டுள்ளது. யாரும், எதையும் எழுதுவதற்கான களமும், வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. எண்ணிப்பார். பனை ஓலைகள், சில தாவர இலைகள், கரும்பாறைகள் இவைகள்தான் எழுதும் பொருட்கள் என்றிருந்தால் நாமெல்லாம் இப்போது எப்படி எழுதி இருப்போம்..? நம்மில் எத்தனைப் பேர் எழுத்தாளர்களாக பரிணமித்திருப்பார்கள்..? யோசித்துப்பார். நீ எழுதும் நிலையை எட்டியது எப்படி..? காலம் நம்மை எப்படிப்பட்ட இடத்தில் நிறுத்தி இருக்கிறது. இத்தனை வசதிகளும், வாய்ப்பும் இன்றைக்கு மனித அனுபவத்தாலும், முயற்சியாலும் கிடைத்திருக்கிறது. அதை எப்படி, எதற்கு பயன்படுத்துகிறோம்..? அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வாழுகிற ஒவ்வொரு தலைமுறையும், நமக்கு முன் வாழ்ந்து போன முன்னோர்களுக்கு கடன்பட்டவர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.
நமக்கும் நமக்குப்பின் வரும் தலைமுறைக்கும் நாம் எதை விட்டுச்செல்ல வேண்டும் என்பதில் ஒரு தெளிவு வேண்டும். அதை எழுத்தாக்கித்தர வேண்டும். தலைமுறைகளை கடந்து நிற்கும்படியான எழுத்தைப் படைத்திருக்கிறோமா என்கிற கேள்வி எழ வேண்டும். படைக்கும்போதே அந்த எழுத்தின் காலம் தீர்மானிக்கப்படுவதில்லை என்பது சரி. ஆனால் நிற்கும் எழுத்துக்களை கவனி. எத்தன்மையுடையவை சிறந்தது என்பது எளிதில் விளங்கும். எந்த வடிவத்தில் கொடுக்கிறோம் என்பதல்ல விடயம், என்ன கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். உனக்கே தெரியும். பல நல்ல பழக்கமும், ஒழுக்கமும் கூட சொல்லிகொடுக்கப்படாததாலும், சொன்ன விதம் அடுத்த தலைமுறைகளுக்கு புரியாததாலும், இன்றைக்கு நாம் இழந்து நிற்கும் உன்னதங்கள் ஏராளம். நமக்கு அதுபற்றியே எதுவும் தெரியாது என்பது மிகப்பெரிய கொடுமை. நமது அறியாமையும், மூடநம்பிக்கையும் எல்லாவற்றுக்கும் காரணமாகிறது.
மனித இனம் மற்ற உயிரினங்களில் இருந்து பன்மடங்கு உயர்நிலை உடையதாய் இருக்கிறது. உடலியல் சார்ந்தும், உளவியல் சார்ந்தும், அறிவியல் சார்ந்தும், அனுபவத்தாலும் சிறந்த உயிரினமான மனித இனத்துக்கு நாம் விட்டுப்போகும் அடையாளம் என்ன…? அனுபவ பாடம் என்ன..? அதை செய்திருக்கிறோமா..? அது பற்றி எழுத யோசித்திருக்கிறோமா..? சிந்தித்துப் பார்.
எத்தனை ஆயிரம் விலங்குகள், தாவரங்கள் அழிந்துபோய் விட்டன. அவற்றை பற்றிய அறிவு நமக்கு இன்று இல்லை. ஒரு சிறு இலையை கூட உருவாக்க முடியாத நம்மால், எத்தனை உயிரினங்கள் தொடர்ந்து அழிந்துக்கொண்டிருக்கிறது இந்த பூமியில். ஒரு செடி அழிந்தால், மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகையை நாம் அழிக்கிறோம் என்று பொருள். இப்படி அவை அழிய அழிய, மனிதனுக்கு வரும் நோய்களின் எண்ணிக்கைப் பெருகும் என்பது எத்தனை பேருக்கு சிந்திக்க தோன்றும்.
ஒரு விலங்கினம் அழிய, அதன் தொடர்ச்சியாய் எத்தனை உயிரினம் தானே அழியும் என்கிற விடயத்தை நம்மவர்களுக்கு புரியும்படி யார் சொல்வது…? உயிரியல் அடிப்படை அறிவை படித்தவர்கள் பின்பற்றுவதில்லை. அதன் விளைவை இன்று நாம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். மனிதனின் தவறான செயல்பாடுகளால், ஏற்படும் பின்விளைவுகளை தொடர்ந்து கவனித்து, எது சரி, எது தவறு என்கிற உண்மையை சொல்லுவது யார் என்ற கேள்வி முன் நிற்கிறது.
பொழுதுபோக்குக்கு எழுத்தில் இடம் கொடுக்கலாம். தொடர்ந்து அதையே செய்வதற்கு இந்த பிறவி எதற்கு என்று யோசிக்கத் தோன்றுகிறது. எழுத்தாற்றல் உடையவர்கள் இந்த பூமிக்கும், அதன் மேல் உயிர்வாழும் உயிரினங்களுக்கும் செய்ய வேண்டியது ஏராளம் உண்டு. நீ அதை நோக்கித் திரும்புவாய் என நம்புகிறேன்.
என்றும் அன்புடன்,
உண்மையைத் தேடும் தமிழ்க்காதலன். 

கடிதத்தை இங்கு பகிர்ந்து கொள்ள அனுமதித்த நட்புக்கு நன்றி.

நண்பனின் வலைப்பூ : இதயச்சாரல்..!

முகநூல் முகவரி : தமிழ்க்காதலன்
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

சினிமா : 'மக்கா கலக்கலப்பா' தர்மதுரை

ருத்துவம் படித்து கிராமத்து ஜனங்களுக்குத்தான் வைத்தியம் பார்ப்பேன் என்ற கொள்கை உடைய தர்மதுரை (விஜய் சேதுபதி), அரசு மருத்துவமனையில் பணி புரியும் போது தமிழ்ச்செல்வியை (ஐஸ்வர்யா) சந்தித்து, பிறருக்கும் உதவி செய்யும் குணமும் வெள்ளந்தியான பேச்சும் கவர, அவள் மீது காதலாகி, வீட்டில் சொல்லி பெண் பார்த்து நிச்சயம் பண்ணிய பிறகு, அவள் ஏழைக்குடும்பம் என்பதாலேயே வட்டிக்கு கொடுத்து... ஏலச்சீட்டு நடத்தி ஊருக்குள் பொழப்பு நடத்தும் விஜய் சேதுபதியின் சகோதரர்கள் ஐம்பது பவுனும் அஞ்சு லெட்சமும் வரதட்சணையாக கேட்டு மிரட்ட, அது ஐஸ்வர்யாவின் தற்கொலையில் முடிகிறது. அவர்களைப் பலி வாங்குவேன்... விஷத்தைக் குடித்து சாகும் வரைக்கும் விடமாட்டேன் என்று சொல்லிக் கொண்டு மருத்துவத் தொழிலை மறந்து குடிகாரனாகி... உடன்பிறப்புக்களுக்கு எதிராகி... அடிவாங்கி... அறைக்குள் அடைத்து வைக்கப்படும் வி.சே அங்கிருந்து தப்பும் போது காட்சிகள் விரிகின்றன. 

Image result for தர்மதுரை

படம் ஆரம்பிப்பது குடிகார வி.சேயின் அடாவடி காட்சிகளில்தான்... அதைத் தொடர்ந்து சீயானின் இறப்பில் ஒரு குத்துப் பாட்டு... மக்க கலங்குதப்பா... குத்துன்னா குத்து செம குத்து... வி.சேக்கு சொல்லவா வேண்டும்... சிக்ஸர் அடித்திருக்கிறார்.

வீட்டிலிருந்து தப்பிச் செல்லும் வி.சே... தவறுதலாக ஏலச்சீட்டு பணம் வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட, ஊரில் பூகம்பம் வெடிக்கிறது. அதன் பின் அவரின் சகோதரர்கள் போலீஸில் இருந்து சஸ்பெண்ட் ஆன சித்தப்பாவுடன் சேர்ந்து கஞ்சாக் கருப்பையும் பிடித்து வைத்துக் கொண்டு தேடுதல் வேட்டை நடத்துகிறார்கள். ஆனால் கல்லூரி வரை தேடிச் செல்லும் அதன்பின்  தேடுதலை விட்டுவிட்டு போலீசுக்கு போகிறார்கள்.

கல்லூரி வாழ்க்கை, கிராமத்துக் காதல், தமன்னாவுடனான வாழ்க்கை என்று மூன்று கட்டமாக நகரும் கதையின் ஆரம்பம் இரண்டாவது கட்டத்தின் இறுதி என்றாலும் ஊரை விட்டு ஓடும் வி.சே,  பேருந்தில் பயணிக்கும் போது சொல்வதாய் விரிகிறது மதுரை மருத்துவக் கல்லூரி வாழ்க்கை... அவர் செல்லமாக அழைக்கும் பக்கிகளாக தமன்னா, சிருஷ்டி டாங்கே... மாணவர்கள் விரும்பும் பேராசிரியர் காமராஜாக ராஜேஸ்... எதிர்த்துக் கொண்டு நிற்கும் சக மாணவன் அன்வர்,.. அவர்களுக்குள் அடிதடி.. வி.சேயை விரும்பும் சிருஷ்டி... தன் காதலை மறைத்து வைத்திருக்கும் தமன்னா... என கதை விரிகிறது... இது இடைவேளை நீள்கிறது.

கல்லூரிக்கு வந்து அங்கு தோழியரின் முகவரி வாங்கி அவர்களைத் தேடிச் செல்ல, சிருஷ்டியின் வீட்டில் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அதிலிருந்து மீண்டு அங்கிருந்து தமன்னாவைத் தேடிச் செல்ல, குடிகாரனாய் வி.சேயைப் பார்த்து வருந்தி யாருமில்லாத தன்னுடன் தங்க வைத்திருக்கிறார்.

தமன்னாவிடம் சொல்வதாய் நகர்கிறது கிராமத்து வாழ்வும்... ஐஸ்வர்யாவுடனான காதலும்... நிச்சயிக்கப்பட்ட திருமணம்... சகோதரர்களின் வரதட்சணை ஆசை... காதலியின் மறைவு... என எல்லாம் சொல்கிறார்.

Image result for தர்மதுரை ஐஸ்வர்யா

குடியில் இருந்து அவரை மீட்டெடுத்து மீண்டும் மனிதராக்கும் தமன்னாவுடனான வாழ்க்கை கதையின் இறுதிப் பகுதியாக நகர்கிறது. பெங்களூரில் இருக்கிறான் என்று சொன்ன கணவன், உண்மையில் அவளுடன் சேர்ந்து வாழவில்லை என்பதும் இருவரும் விவாகரத்துக்காக காத்திருக்கிறார்கள் என்பதும்  விவாகரத்து கிடைத்த அன்று தமன்னாவுடன் நீதிமன்றத்துக்குச் செல்லும் போதுதான் தெரிகிறது. அங்கு தன் முன்னாள் கணவரிடம் தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதாகச் சொல்வதுடன், விவாகரத்துக்கான காரணத்தையும் வி.சேயிடம் சொல்கிறார். அவனின் கேடுகெட்ட செயலை அறிந்து துடிக்கும் வி.சே நீதிமன்ற வளாகத்தில் வைத்து முன்னாள் கணவனை அடித்து உதைக்கிறார்.

'காலேஜ்ல படிக்கும் போது என்னை விரும்பினாய்தானே..?' என்று கேட்கும் போது ஒரு புன்னகையில் மறைத்து நகர்ந்தாலும்... 'உன்னை நான் தமிழ்ச்செல்வியாக பார்க்கிறேன்' என்று சொன்னபோது அங்கிருந்து ஒரு பதட்டத்துடன் நகரும் தமன்னா, அன்று இரவு படுக்கையை பகிர்ந்து கொண்ட பின்னர் 'இப்பத்தான்டா ரொம்ப பாதுகாப்பா உணர்றேன்' என்று சொல்லுமிடத்தில் அவர்களின் காதல் வாழ்கிறது. இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து கொண்டே சின்ன கிளினிக் ஆரம்பித்து சந்தோஷமாக நாட்களை நகர்த்த, அவர்களைத் தேடி வரும் கண் தெரியாத காமராஜ் ஆசிரியர், சேர்ந்து வாழ்வதென்பது நம் கலாச்சாரத்துக்கு சரியானது அல்ல என்று சொல்லி, விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்கிறார். 

அவர்களுடன் படித்த ஒருவன் புரபஸர் காமராஜ் நம்பர் கொடுத்தார் என போன் செய்து, திருமணம் செய்து கொள்ள இருப்பதற்கு வாழ்த்து தெரிவித்து, வி.சே பணத்தை எடுத்துக் கொண்டு வந்ததையும்... அவரின் சகோதரர்கள் தேடி அலைவதையும் சொல்ல, தமன்னா அது குறித்துக் கேட்க, அப்போதுதான் வி.சே விவரம் தெரிய வருகிறது. யாரிடமாவது கொடுத்து விடலாம் என்று சொல்லுபவரிடம் நீதான் போகணும்... நான் நல்லாயிருக்கேன்னு அவங்களுக்கு காட்டணும்... உன் அம்மாவை இங்க கூட்டியாரணும்... நம்ம குழந்தையை அவங்க கையில கொடுக்கணுமின்னு நினைக்கிறேன் என்று அனுப்பி வைக்கிறார்... அங்கு சென்ற வி.சேக்கு நடந்தது என்ன..? மீண்டும் திரும்பி தமன்னாவிடம் வந்தாரா...? என்பதே படத்தின் முடிவு.

கன்னங்குழி விழ சிரிக்கும் சிருஷ்டியும்... கண்களாலேயே பேசும் ஐஸ்வர்யாவும் அடித்து ஆடியிருக்கிறார்கள் என்று சந்தோஷம் படும் நேரத்தில் அனாயாசமான நடிப்பால் அவர்களை பின் தள்ளி முன்னே நிற்பவர் தமன்னா... பாந்தமான பண்பட்ட நடிப்பு... அவரின் கதாபாத்திரம் எல்லாருக்கும் நிச்சயம் பிடித்துப் போகும்.

மகனுக்காக வருந்தும் தாய் ராதிகா, எங்கே பசும்பொன் ராதிகா ஆகிடுவாரோன்னு பயப்பட வைத்தாலும் மகனை கொல்வதற்காக ஏற்பாடு செய்கிறார்கள் என்பதை அறிந்து அவன் தப்பிச் செல்ல இட்லிக்குள் சிறிய ரம்பத்தை வைத்துக் கொடுத்து தப்ப வைக்கும் போதும்... பணத்தை எடுத்தது தர்மதுரைதான் அவன் மீது எப்ப.ஐ.ஆர். போடுங்க என்று மகன்கள் சொல்லுமிடத்தில் போலீஸ் ஸ்டேசனில் சும்மா அடிச்சி ஆடும்போதும் அருமையான ஆத்தாதான்னு நிரூபிச்சிட்டாரு.

கம்பவுண்டராக கஞ்சா கருப்பு, வி.சேயுடன் அவருக்கு முதல் படம்ன்னு நினைக்கிறேன். வி.சேயுடன் அவர் அடிக்கும் லூட்டியை விட, அவரைத் தேடிச் செல்லும் சகோதரர்களிடம் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படும் காட்சிகள் செம... மக்கா கலங்குதப்பா பாட்டில் சார் அது கரண்ட் பில் கட்ட வச்சிருந்த காசு என பாவாடையைக் கட்டிக்கொண்டு சொல்லியபடி வந்து நிறைவாய் செய்திருக்கிறார். அக்காவின் கணவராக வீட்டோட மாப்பிள்ளையாக வரும் அந்த கட்டை மனிதர் நல்லா நடித்திருக்கிறார். அக்கா, அண்ணன், தம்பிகள் கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். மந்திரம் போடுகிறேன் என்று சொல்லி ஜீபூம்பா பண்ணும் அக்கா மகள் கலக்கல்.

பாடல்கள் வைரமுத்து... இசை யுவன் சங்கர் ராஜா... பாடல்களும் பின்னணி இசையும் கலக்கல். ஆண்டிப்பட்டி கணவாய்... கிராமத்து மெலோடி. பாடலும் காட்சிப்படுத்தப்பட்ட இடங்களும் அழகு. கேமரா தேனியின் அழகை உள்வாங்கி இருப்பதுடன் ஊட்டியிலும் அழகாய் பயணித்திருக்கிறது.

விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குநர் சீனு இராமசாமி இயக்கியிருக்கிறார். தாரை தப்பட்டையில் வில்லான வந்து கலக்கிய சுரேஷ் தயாரித்திருக்கிறார். குத்துப்பாட்டில் ஒரு குத்தும் போட்டுப் போகிறார்.

Image result for தர்மதுரை


ஐஸ்வர்யாவைக் கொன்றார்கள் ஓகே... ஏற்றுக் கொள்ளலாம்... கதையை நகர்த்த ஒரு முடிச்சு வேண்டுமல்லாவா... ஆனால் சிருஷ்டியை எதற்காக...? வி.சேயை சிருஷ்டி காதலிப்பது எதற்காக...? என் வீட்டில் வந்து பேசுன்னு சொல்றதோட போவதற்குப் பெயர் காதலா...? அப்புறம் எதற்காக தண்ணி போட்டு விட்டு அந்த அலம்பல் எல்லாம்...? தான் காதலிக்கும் ஒருவனின் தொடர்பு எண் இல்லாமல் போகுமா..? சிருஷ்டியை தோழியாகவே காட்டியிருக்கலாமே...ஏன் காதல் போர்வை..? சாதாரண கல்லூரிகளிலேயே ஆட்டோகிராப் எல்லாம் இருக்கும் போது... மருத்துவக் கல்லூரியில் அப்படியெல்லாம் இல்லையா என்ன...?  சிருஷ்டி காதலிப்பதாய்ச் சொன்னதால்தான் தமன்னா சொல்லாமல் நெஞ்சுக்குள் பூட்டி வைக்கிறாரோ...? மனதில் நினைத்தவனுடன் வாழத்தான் கணவனை கெட்டவன் ஆக்கிவிட்டார்களோ...? இந்தக் காலத்தில் அதுவும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போன், இணையம் என எதிலும் தொடர்பில் இல்லாமலா இருப்பார்கள்..? எட்டு லட்சத்தை பேக்கில் வைத்துக் கொண்டு போனவன் அதை எடுத்துப் பார்க்கவே இல்லையா...? மெடிக்கல் புத்தகம் என்றல்லவா நினைத்தேன் என்று இறுதியில் சொல்வதாய் ஒரு வசனம்... சரிதான்... கொண்டு வந்த மெடிக்கல் புத்தகத்தையும் எடுத்துப் பார்க்கவே இல்லையா...? என ஆயிரத்தெட்டு கேள்விகளை எழுப்பாமல் இல்லை... அது எல்லாத்தையும் பின்னுக்குத் தள்ளி வி.சே - தமன்னா இணைந்து வாழ ஆரம்பிக்கும் இடைவேளைக்குப் பின்னர் விரியும் காட்சிகளால் அதுவரை தத்தளித்த படகு... கவிழாமல் ஆழ் கடலுக்குள் அழகாய் பயணித்திருக்கிறது.

மெடிக்கல் கல்லூரி காட்சிகள் அதிக நீளமாக இருந்தாலும்... சின்னச் சின்ன சொதப்பல்கள் இருந்தாலும்... இடைவேளை பின்னான காட்சிகளால் தர்மதுரை ஜெயித்திருக்கிறது.  அன்வர் எதிரியாய் வருவானோ என்று பயம் இருந்தது என்னவோ உண்மை... காரணம் கதாபாத்திரத்தின் பெயர்தான்... கண்டிப்பாக வில்லனாக்கி வேடிக்கை பார்ப்பார்கள்தானே... ஆனால் இதில் அவன் வி.சேக்கு உதவி செய்கிறான்... அதுவும் மிகவும் முக்கியமான உதவி... அதேபோல் முனியாண்டி காமராஜ்மேல் உள்ள பற்றுதலால் பேரை காமராஜ் என்று வைத்துக் கொண்டது... தண்டட்டி போட்ட கிழவிகள் ஆட்டெழும்பை கடித்து இழுப்பது... சேர்ந்து வாழ்தல் நம் பண்பாடு இல்லை என்பதைச் சொன்னது என பல இடங்களில் இயக்குநரைப் பாராட்டலாம். மதுரையை மையமாகக் கொண்ட கதை அடி தடி வெட்டுக்குத்து என்றில்லாமல் மதுரையின் மணத்தோடு ஊட்டிக் குளிரில் இதமாய்ப் பயணிக்கிறது.

சீனு ராமசாமியும் வி.சேயும் இணையும் மூணாவது படம்... மிக அருமையாக செய்திருக்கிறார்கள்... வைரமுத்துவின் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை கலக்கல்.  சுகுமாரின் கேமரா கவிதையாய் நகர்கிறது.

மக்க கலங்குதப்பா செம குத்து என்றால் ஆண்டிப்பட்டி கணவாய் சோ சுவீட் மெலோடி... செம... தினமும் நாலைந்து முறை ஓடிக் கொண்டிருக்கிறது செல்பேசி திரையில்... நீங்களும் கேளுங்க...


-'பரிவை' சே.குமார்.

சனி, 27 ஆகஸ்ட், 2016

அரசனின் 'இண்ட முள்ளு'


ண்ட முள்ளு...

சகோதரர் சே.அரசன் அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. காராமுள்ளு, சூறாமுள்ளு, கருவமுள்ளு, இலந்தமுள்ளு, காக்காமுள்ளு இப்படி நிறைய முள்ளைப் பார்த்து குத்துவாங்கி வளர்ந்திருக்கிறோம்... இது இண்டமுள்ளு... புது வார்த்தை... 'தான் படர்ந்திருக்கும் பரப்பினைக் கடக்கும் எவரையும் கொத்தாக பிடித்திழுக்கும் இயல்பினைக் கொண்டது.' அப்படின்னு தன்னோட அணிந்துரையில் கவிஞர் சி.கருணாகரசு சொல்லியிருப்பதை வைத்துப் பார்க்கும் போது இது இலந்தை முள்ளோ அல்லது சூறா முள்ளோதான் என்று நினைத்திருந்தேன்... அவைதான் கடந்து செல்வோரை கொத்தாக பிடித்துக் கொள்ளும். ஆனால் நேற்று அரசன் முகநூலில் பகிர்ந்த படத்தைப் பார்த்தபோது அதுபோன்ற ஒரு முள்ளை பார்த்த ஞாபகம்... அதன் கிளைகளில் எல்லாம் சூறா முள்ளைப் போல் கொக்கி கொக்கியாக இருக்கும்... ஆனா எங்க பக்கம் அதற்கு என்ன பேருன்னுதான் ஞாபகத்தில் வரவில்லை... சரி இப்ப முள் ஆராய்ச்சி எதற்கு இண்டமுள்ளின் பின்னே பயணிப்போம்.

கதைக்களமாய் தான் பிறந்த 'உகந்த நாயகன் குடிக்காடு' மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களையே பயன்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு கதையும் அங்கு வாழ்ந்த, வாழும் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. அந்த மக்களின் சந்தோசம், துக்கம், வலி, வேதனை,ஏமாற்றம். சூழ்ச்சி, வஞ்சகம், காமம் என எல்லாம் சுமந்து நிற்கிறது.

பெருஞ்சொம, தூவானம், சாந்தி, வெள்ளாம, கெடாவெட்டி, தாய்மடி, காயடிப்பு, நலுவன், எதிர்க்காற்று என மொத்தம் ஒன்பது கதைகள்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு களத்தில்... கதைகள் நவரசம்... பெரும்பாலான கதைகள் சோகம் சுமந்து நிற்கின்றன. மண்ணின் மணத்தோடு மண்ணின் மாந்தர்களைக் கதையின் நாயக, நாயகிகளாக ஆக்கும் போது சுகத்தைவிட துக்கமே தூக்கலாக இருக்கும் என்பதே உண்மை. 

நான் எழுதும் கதைகள் கூட பெரும்பாலும் சோகம் சுமந்தே காணப்படும். 'நீங்க எப்பவுமே நெகட்டிவாத்தான் சிந்திக்கிறீங்க... பாஸிட்டிவ்வா சிந்திங்க...' அப்படின்னு ஒரு வலைத்தள நட்பு என்னுடன் நீண்ட விவாதமே... ஏன் சண்டையே போட்டார்... சண்டையின் இறுதியில் 'உன்னோட சிந்தனையில் துருப் பிடித்திருக்கிறது' என்றும் அன்பாய்ச் சொன்னார். எப்படித்தான் சிந்தித்தாலும் விவசாயத்தின் வேர் அறுந்து போன ஊரில் விழுதுகள் நகரங்களில் கிளைவிட்ட பின்னர் அந்த விழுதுகளைச் சுமந்த வேர்கள் மட்டும் அந்த வீணாகிப் போன பூமியை விட்டு வெளியே வரப்பிடிக்காமல்... அந்த மண்ணின் மீதான தீராக்காதலை சுமந்து தவிப்பதை கதையாக்கும் போது சுகங்களைவிட சோகமே தொக்கி நிற்கும்... அந்த வகைக் கதைகளை அரசன் மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

'இந்த இண்டமுள் கொஞ்சமேனும் உங்களை தைத்தால் அதுவே நான் கொண்ட முயற்சிக்கு வெற்றி' என்று ஆசிரியர் தனது உரையில் சொல்லியிருக்கிறார். கொஞ்சமேனும் அல்ல ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு விதமாக தைக்கின்றன. இதுவே எழுத்தாளரின் எழுத்துக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி. நடைமுறை வாழ்க்கையை அவர்களின் பேச்சு வழக்கில் சொல்வதென்பது எளிதன்று... அப்படியிருக்க மிகச் சரளமாக பேச்சுவழக்கை கையாண்டிருக்கிறார். எவன் ஒருவன் தன் மண் மீதும் மனிதர்கள் மீதும் என்றென்றும் மாறாத காதல் கொண்டிருக்கிறானோ அவனால் மட்டுமே அந்த மண்ணின் மைந்தர்களை கதை மாந்தர்களாக மட்டுமின்றி அந்த மண்ணின் வாசத்தையும் வாசிப்பவர் மீது இறக்கி தான் பிறந்த மண்ணை எல்லார் மனதிலும் வாழ வைக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை அரசனுக்கு கிடைத்திருப்பது தவம்... அவரின் எழுத்துக்கள் நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.

ஒன்பது கதைகளில் ஒன்றிரண்டு கதைகள் தவிர, எல்லாமே சாவைப் பேசுகிறது... பல கதைகள் காமத்தை மையப்படுத்துகிறது... பெரும்பாலும் உடல்சார்ந்த எல்லை மீறல்கள்... அவை சர்வசாதாரணமாக... அதுவும் இருவரும் விரும்பியே நடக்கின்றன... இதில் ஆண் பெண் வேற்றுமை எல்லாம் இல்லை... சாந்தி, மருதன், பார்வதி, நாராயணன், சங்கர், ராமன், லதா என எல்லாருமே இதில் திளைக்கிறார்கள். காமம் சார்ந்து எழுதுவது என்பது மிகவும் கவனமாக கையாள வேண்டிய விஷயம்... அதை மிகச் சரியாக ஆசிரியர் கையாண்டிருந்தாலும் அந்த மண்ணில் அவர் சொல்வது போல 'புழங்குவது' என்பது சர்வ சாதாரணம் போல என்று தோன்ற வைத்து விடுகிறது. மனிதர்கள் மீது இரக்கம் வர வேண்டிய இடத்தில் இப்படி இருக்கிறார்களே என்ற ஆதங்கமே மிஞ்சுகிறது. 

திரு.பெருமாள் முருகன் தன்னோட மாதொரு பாகனில் முழுக்க முழுக்க காமத்தையே மையப்படுத்தியிருப்பார்... பேசக் கூசும் வார்த்தைகளையெல்லாம் அள்ளி விதைத்திருப்பார்... அது உண்மை பேசும் கதை... அப்படித்தான் எழுத முடியும் இதிலென்ன தப்பு என்று அவருக்கு வக்காலத்து வாங்க சிலரும்... இதை அவர் வீட்டு பெண்கள் படித்திருப்பார்களா..? எனச் சிலரும் மோதிக்கொள்ள நேர்ந்ததை நாம் அறிவோம்... நல்ல எழுத்தாளர்.... மாதொருபாகன் பிரச்சினையால் எழுத்துக்கு தடா போட்டு விலகியிருந்து தற்போது மீண்டும் எழுந்து வந்திருக்கிறார். அவர் வளர்ந்த எழுத்தாளர்.. நம் அரசனோ வளரும் எழுத்தாளர்... காமம் கலந்து எல்லாராலும் எழுத முடியாது... எதார்த்தம் பேசும் கதைகளில் இதெல்லாம் சகஜம் என்றாலும் அது இல்லாத வாழ்க்கை எதார்த்தத்தை இன்னும் நிறையப் பேசலாமே என்பது என் எண்ணம். இது அரசனுக்குத்  தவறாகத் தெரிந்தால் மன்னிக்கவும்.

மேலும் நம் நட்பில் ஒரு சிலருக்கு நான் சொல்வது தவறாகத் தெரியலாம்... எழுத்தாளன் காதலையும் காமத்தையும் எழுத வேண்டும்... இதில் என்ன தவறிருக்கிறது என்றும் வாதிடலாம். இந்தக் கதைகளின் போக்கில் இவை தவறில்லை என்பது உண்மைதான்... சரியான கதைக்களம்தான்...  சமீபத்தில் ஒரு போட்டிக்காக சிறுகதை எழுதினேன்... அந்தக் கதையை அந்தத்தளத்தில் படித்த, என் எழுத்துக்களை நேசிக்கும் சகோதரி ஒருத்தர் 'நல்லாயில்லைப்பா' என்று ஆரம்பித்து 'நீங்க சொல்லியிருக்கும் உறவுமுறை... வேண்டாம்ப்பா... இப்படி எழுதாதீங்க' என்றார். எங்க பகுதியில் நான் பார்த்த ஒரு நிகழ்வுதான் என்று சொன்ன போதும் 'உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை... இப்படியெல்லாம் எழுதாதீங்க' என்றவர் 'அந்த உறவுமுறை எப்படிப்பட்டது தெரியுமா..? அது தப்புச் செய்யுமா..?' என்றெல்லாம் பேசினார். இதை ஏன் சொல்றேன்னா... ஆஹா... அருமை... சூப்பர்.... அப்படியே கிராமத்து வாழ்க்கையை கண் முன்னே காட்டிட்டார் என்று சொல்லிக் கொண்டு போவதில் எனக்கு உடன்பாடில்லை.... சில உண்மைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும் என்று நினைப்பதாலேயே இங்கு எழுதியிருக்கிறேன்... அரசன் என் சகோதரன் என்ற முறையில் இன்னும் சிறப்பான கதைகளைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலான கருத்துத்தான் இது. நல்ல எழுத்தாளனுக்கு எல்லாத் தரப்பிலும் வாசகர்கள் அமைய வேண்டும் என்பதே என் எண்ணம்.

கிராமத்து வாழ்க்கையில் காமம் தவிர்த்து எத்தனையோ இருக்கின்றன. அவர்களின் வாழ்க்கைக் கதையை நட்பு, நேசம், பாசம், காதல், வன்மம் என எத்தனையோ விதத்தில் பேசலாம்... இதிலிருக்கும் கதைகளில் காமம் நிரம்பியிருப்பதால் கிராமம் என்றாலே இப்படித்தானோ என எண்ண வைத்துவிடும் என்பதே என் பயம். இருப்பினும் மிக அழகாக, மிகவும் யோசித்துச் செதுக்கப்பட்ட கதைகளுக்காக அரசனை கட்டிப்பிடித்து வாழ்த்தலாம்... அதில் தவறொன்றும் இல்லை. சொல்ல வந்த வாழ்க்கையை கண் முன்னே காட்டிச் செல்லும் எழுத்து எல்லாருக்கும் அமைவதில்லை... அது அரசனுக்கு கை வந்திருக்கிறது... அதற்காகவே அவரின் கரங்களை இறுகப்பற்றி வாழ்த்தலாம்.

கிராமத்து பேச்சு வழக்கு என்பதை கதையில் மிகச் சரியாக கையாண்டிருக்கும் அரசன்... அந்த மனிதர்கள் பேசும் போது மட்டுமல்லாமல் தான் அவர்கள் குறித்துச் சொல்லும் போதும் அப்படியே எழுதியிருப்பது மற்றவர்களின் எழுத்துக்களில் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. குறிப்பாக பெயர்களை கிராமத்து மனிதர்கள் அழைக்கும் போது பாஞ்சால, அஞ்சல என்று அழைத்தாளும் கதையில் அவர்கள் பேசுவதாகவோ, அவர்கள் குறித்து நாம் சொல்வதாகவோ எழுதும் போது பாஞ்சாலி, அஞ்சலை என்றுதான் பெரும்பாலும் எழுதுவது  வழக்கம். ஆனால் இண்டமுள்ளில் முழுக்க முழுக்க வட்டார பேச்சு வழக்கு... இதுவும் வித்தியாசமாய்... அருமையாய்... வாசிக்கும் போது நாம் வாழ்ந்த வாழ்க்கையை கண் முன்னே நிறுத்திச் செல்கிறது... நல்லாத்தானிருக்கு அரசன்... வாழ்த்துக்கள்.

புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்... கண்டிப்பாக வட தமிழகத்தின் கிராமத்து வாழ்க்கைக்குள் நீந்திச் சுகம் பெறுவீர்கள்... வாழ்வியல் பேசும் அருமையான கதைகள்... மனம் கனக்கச் செய்யும் கதைகள்... இப்படியான வாழ்க்கையைத்தானே தினம் தினம் கிராமங்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றன என்பதை உணர வைக்கும் கதைகள்...

வாழ்த்துக்கள் அரசன்... மிகச் சிறந்த எழுத்தாளருக்கான சிம்மாசனம் உங்களுக்காக காத்திருக்கிறது. அடுத்த தொகுப்பை விரைவில் கொண்டு வாங்க. உங்கள் தந்தை சேகர் அவர்களும் தாய் வளர்மதி அவர்களும் உங்கள் துணைவியார் சகோதரி கலையரசி அவர்களும் உங்கள் வளர்ச்சி கண்டு சந்தோஷம் அடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை. வாழ்த்துக்கள். 

புத்தக வடிவமைப்பு : பால கணேஷ் அண்ணா... அருமையாகச் செய்திருக்கிறார். அரசன் வளர்மதி பதிப்பகத்தின் மூலமாக சொந்தமாக வெளியிட்டிருக்கிறார். 160 பக்கங்கள்... விலையோ 100 ரூபாய்தான்.

ஒரே ஒரு குறைதான்... பொருளடக்கம் என்ற பக்கத்தை மறந்துவிட்டார்கள்.

(இதுதான் இண்டமுள்ளு... அரசனின் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்...  உங்கள் பார்வைக்காக)
கதைகளைக் குறித்து ஒன்றுமே சொல்லலையின்னு நினைக்காதீங்க... எல்லாக் கதைதளும் அருமையான கதைகள்... வாசிக்கும் போது அதை நீங்களே உணர்வீர்கள். நேரம் கிடைத்தால் மற்றொரு பகிர்வில் கதைகள் குறித்துப் பேசுவோம்...  இல்லை கதைகளைப் பற்றி கொஞ்சமேனும் அறிந்துதான் படிப்போம் என்றால் கொஞ்சமல்ல... பல எழுத்தாளர்களின் பார்வையில் இண்டமுள்ளுவைப் பற்றிநிறைவாய்த் தெரிந்து கொள்ள 'இண்டமுள்ளு' முகநூல் பக்கத்திற்குச் செல்லுங்கள்.

அரசனோட வலைப்பூ : கரைசேரா அலை
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

மனசு பேசுகிறது : சின்னக்கண்ணன் அழைக்கிறான்

கிருஷ்ணன்...

கோபாலன்...

கோபால கிருஷ்ணன்...

கண்ணன்...

மாயக்கண்ணன்...

மாயவன்...

கோவிந்தன்... இப்படி எத்தனை பெயர்கள் அவனுக்கு... அத்தனை பெயரிலும் அவன் அழகுதான்...

சிறு குழந்தையாக... வெண்ணெய் திருடித் தின்று ஆயர் குலப் பெண்களின் அன்பில் வளர்ந்தவன் கண்ணன்... கோபியர்களின் செல்லப்பிள்ளை அல்லவா அவன்... வெண்ணெய் திருடித் தின்பதில் கண்ணன் மட்டுமா கெட்டிக்காரன்... நாமும்தானே... அப்படிப்பட்ட ஒரு சந்தோஷத்தை நம் தலைமுறை வரை அனுபவித்திருக்கிறோம் என்பதை சொல்லிக் கொள்வதில் பெருமைதானே.

இன்றைய குழந்தைகளுக்கு கடையில் விற்கப்படும் பாக்கெட் தயிர் மட்டுமே தெரியும். ஆனால் அன்று...? இந்த பாக்கெட் தயிரெல்லாம் இல்லையே... வீட்டில் உறை ஊற்றி வைக்கப்படும் தயிர்தானே... அதிலிருந்த சுவை இப்போது வரும் பாக்கெட் தயிர்களில் இல்லையே... சிலகாலம் முன்னர் வரை எங்கள் ஊரில் எல்லாருடைய வீட்டிலும் மாடு இருக்கும்.... அது பசுவோ... எருமையோ... வீட்டுக்கு வீடு இருக்கும்.

பசுவின் பாலை விட எருமையின் பால் கெட்டியாக இருக்கும். எங்கள் வீட்டில் எங்களது பள்ளிக் காலங்களில் எருமை மாடுகள்தான்... அதன் பிறகுதான் எருமை மாடுகளை விற்று விட்டு பசு மாடுகள் வாங்கினோம். ஒரு மாடு பால் வற்றும் போது இன்னொரு மாடு கன்று போட்டு விடும். அதனால் பாலுக்கு குறைவிருக்காது. அம்மா தயிர் விற்க மாட்டார்கள்... டீக்கடைக்கு மொத்தமாக கொடுத்துவிடுவோம். வீட்டில் காபிக்கும் தயிருக்கும் பால் எடுத்து வைத்துக் கொள்வார்கள். இரவு பாலைக்காய்ச்சி சூடு ஆறவைத்து, அதில் கொஞ்சம் தயிரை விட்டு மூடி வைத்து விடுவார்கள். காலையில் எடுத்துப் பார்க்கும் போது அல்வாபோல் கட்டியாக இருக்கும். சோற்றில் கட்டித் தயிரைப் போட்டு பிசைந்து சாப்பிடுவதுதான் சுகம். அதுவும் கஞ்சியில் தயிர் விட்டு... உப்பில் ஊறவைத்த எலுமிச்சை ஊறுகாயும் போட்டுப் பிசைந்து,  சின்ன வெங்காயத்தைக் கடித்துக் கொண்டு சாப்பிட்டால்...  ஆஹா... என்ன ருசி.. என்ன ருசி.

வீட்டில் தயிர் கடைவதற்கு என்று மத்து வைத்திருப்பார்கள். காலையில் தயிரை கடைந்து வெண்ணெய் எடுக்க வேண்டும். அம்மா ஆரம்பித்து வைக்க யாராவது ஒரு ஆள் தொடர்ந்து மத்தால் கடைய வேண்டும்... நேரம் ஆக ஆக... மத்தின் நெள்வாக இடங்களிலும் சட்டியின் ஓரங்களிலும் வெண்ணெய் திரண்டு ஒட்டிக் கொள்ளும். ஒரு பழமொழி இருக்குமே வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையான்னு... அதனாலதானோ என்னவோ மீன் குழம்புக்கு மண்சட்டி பயன்படுத்தும் அம்மா, தயிர் வைப்பது அலுமினியப் பாத்திரத்தில்தான்... திரண்டு வரும் வெண்ணெய்யை சுடச்சுட தின்பதற்காகவே தயிர் கடைவதுண்டு... மத்தியில் இருக்கும் வெண்ணெய் எல்லாம் வாய்க்குள் போய்க் கொண்டே இருக்கும்.

திரண்டு வந்த வெண்ணெய்யை லாவகமாக எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் சேர்த்து வைப்பார்கள்... வாய்ப்புண்ணா...  உதட்டில் வெடிவு வெடிவாக இருக்கிறதா... வெண்ணெய்யை எடுத்துத் தேய்த்துக் கொள்ளும் போது ஒரு உருண்டை வாய்க்குள் ஓடிவிடும்... பொங்கல், தீபாவளி, திருவிழாக்களின் போது தினமும் எடுத்துச் சேர்த்து வைத்த வெண்ணெய்யை இருப்புச் சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து உருக்கி நெய் எடுப்பார்கள்... அதில் கொஞ்சம் சீரகமும் கருவேப்பிலையும் போட்டு கொதிக்க வைக்கும் போது ஆஹா... அந்த வாசம்... இப்ப வர்ற பாட்டில் நெய்களில் சத்தியமாக இல்லை என்று அடித்துச் சொல்லலாம்... நெய்யை ஊற்றிவிட்டு இருப்புச் சட்டியில் சாதத்தை எடுத்துப் போட்டு பிசைந்து ஆளுக்கு ஒரு உருண்டை அம்மா கொடுக்கும் போது வாங்கிச் சாப்பிட்டால்தானே தெரியும் அந்தச் சுவை... அதை அறியாத இன்றைய தலைமுறை நிறைய விஷயங்களில் கொடுப்பினை இழந்து விட்டார்கள் என்பதே உண்மை.

சின்னக் கண்ணனை பேச ஆரம்பித்து வெண்ணெய் திருடித் தின்ன நம்ம கதைக்கு போயாச்சு பாருங்கள்... நேற்று ஸ்கைப்பில் மகளுடன் நடந்த  உரையாடல் அப்படியே... 

'என்ன பாப்பா கிருஷ்ண ஜெயந்தி வருது... வீட்டில் என்ன விஷேசம்..?'  

'என்ன விஷேசம்... அம்மா சூப்பரா வெஜிடபிள்ஸ் சமைப்பாங்க... இனிப்பு பணியாரம் எல்லாம் செய்வாங்க... அவ்வளவுதான்'. 

'ம்...சரி... வீட்டுக்குள்ள கண்ணன் வந்த மாதிரி கால்தடம் போடுவீங்கதானே... கையால போடாமா சின்னக் கண்ணனோட காலால போடுங்க...' மெல்ல வம்புக்கு வலை வீசினேன்.

'சின்னக்கண்ணனா...? இங்க யாரு இருக்கா... அம்மா கையால சூப்பரா கால்தடம் போடுவாங்க தெரியுமா..?' 

'அது தெரியும்... அதான் நம்ம சின்னக் கண்ணன்... நம்ம தம்பி இருக்கானுல்ல...' தூபம் போட்டாச்சு... இனி புகையும் பாருங்க.

'யாரு... விஷாலா... அப்ப்ப்ப்பா... அவன் கால் தடம் வச்சா வீடே நிறைஞ்சிரும்... தேர்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறான் சின்னக் கண்ணனாம்.... சின்னக்கண்ணன்....' பேச்சில் கோப ஜ்வாலை அடித்தது... காதுகளில் புகை வந்தது.

நானும் விடாமல் 'அவந்தானே நம்ம வீட்டு செல்லக் கண்ணன்... பின்னே இதுக்காக கண்ணப்பாவையா கூட்டியார முடியும்..?' என்றேன். 

'எந்தக் கண்ணப்பாவை...? எதிர்கேள்வி வந்தது. 

Image result for கிருஷ்ணர்
கேட்டது சரிதான் அதுலயும் சிக்கல் இருக்குல்ல... எங்க பெரியண்ணன் கண்ணன்... அங்கிட்டு அவங்க சித்தி வீட்டுக்காரர் கண்ணன்... யாரைக் கூப்பிடுவது என்று ஸ்ருதி கேட்டது சரிதான் என்றாலும் நாம விடாக் கண்டனுல்ல.. இதை இன்னும் இழுக்காம விடுறதில்லையின்னு ஆட்டத்தைத் தொடர்ந்தேன்.

'இங்கேரு பாப்பா... உங்க சித்தப்பா இங்க இருக்காரு... உடனே கூப்பிடமுடியாது.... நம்ம கண்ணப்பா அங்கதானே இருக்கார்... வரச்சொல்லி மாவைக் கலக்கிக் கொடுத்தியன்னா... மிதிச்சி வீடெல்லாம் நடந்துட்டு போவாருல்ல...' என்றேன் சிரிக்காமல்.

 'அப்ப்ப்ப்ப்பா.... யாரு நம்ம கண்ணப்பா..? அவருக்கு வயசு 50... தெரியுமா...?' 

'இருக்கட்டுமே... விஷால் செல்லக் கண்ணன் இல்லைன்னா... அவரு எங்கம்மாவுக்கு செல்லக் கண்ணன்தானே... பாரு பேர்லயும் கண்ணன் வச்சிருக்காரு..' 

'ஐயோ அப்பா முடியல... இதுக்கு பேசாம நானே கால்தடம் போட்டிருவேன்...' 

'நீயா... அதெப்படி போட முடியும்... நீ அழகு மீனாட்சியில்ல... கிருஷ்ண ஜெயந்திதானே... மீனாட்சி ஜெயந்தி இல்லையே..?' விடாமல் வம்பிழுத்தேன்.

'ஓ... அப்ப உங்க செல்லமகனும் கிருஷ்ணன் இல்லையே... பெரிய கருப்பன்தானே... எப்பூடி...' என்னை மடக்கிய சந்தோஷம்.

'என்ன இருந்தாலும் அவன் கோகுலத்துல கண்ணன்தானே... பெரிய கருப்பன்னு உங்க ஐயா கோவில்ல கூப்பிடச் சொல்லிட்டாங்க சரியின்னு எல்லாரும் ஏத்துக்கிட்டோம்... ஆனா நாங்க மாயக்கண்ணன்னு யோசிச்சி வச்சிருந்தோம் தெரியுமா?' வேண்டுமென்றே வம்பைத் தொடர்ந்தேன்.

'வக்கலயில்ல... வக்கலயில்லை...' என்றவர், 'அப்பா... நாங்க அம்மா கையால காலடி வச்சி சாமி கும்பிட்டுக்கிறோம்... நீங்களா வரப்போறீங்க... இல்லயில்ல... பின்ன என்ன... ஆனா அவனை மட்டும் வைக்கவே விடமாட்டேன்...' என்றார் கோபமாக. 

'பொறாமை... எங்க அவன் அழகா வச்சிருவானோன்னு பொறாமை..' எரியும் தீயில் எண்ணெய் வார்த்தேன்.

'ஆமா அவுக அழகா வச்சிக் கிழிச்சிட்டாலும்... வீடு பூராம் மிதிச்சி நாறடிச்சிடும்... போங்கப்பா நான் போறேன்... அம்மா வந்து பேசுவாங்க...' என்றபடி எழுந்தார்.

சின்னக் கண்ணனைப் பேச ஆரம்பித்து வெண்ணெய் திருடித் தின்று மகளிடம் வம்பளந்தது வரைக்கும் பேசியாச்சு.... இனி... என்ன பேசுறது..?

இன்று கிருஷ்ண ஜெயந்தி... ஊரில் விஷேசமான நாள்... இங்க... எப்பவும் போல எழுந்து குளித்து... சாமி கும்பிட்டு... வேலைக்குப் போய் வந்தாச்சு.... நமக்கு எங்கே கிருஷ்ண ஜெயந்தியும், தீபாவளியும், பொங்கலும்... எல்லா நாளும் வேலை நாள்தானே...

'சின்னக் கண்ணன் அழைக்கிறான்...
ராதையை... பூங்கோதையை...
அவள் மனம் கொண்ட ராகத்தைப் பாடி...
சின்னக் கண்ணன் அழைக்கிறான்...' 
என்ற பாடல் மனசுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது....

கண்ணன் மட்டும் தீராத விளையாட்டுப் பிள்ளை அல்ல... நம் வீட்டுச் செல்லங்களும்தான்... அவர்களுடன் வம்பிழுத்து உரையாடுவதில் கிடைக்கும் சுகமே தனிதான்... அந்தச் சுவைக்கு முன்னால் கண்ணனும் நாமும் திருடித் தின்ற வெண்ணெய் சுவை கூட குறைவுதான்...



அனைவருக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.

படங்களும் பாடலும் இணையத்திலிருந்து.... நன்றி.
-'பரிவை' சே.குமார்.

புதன், 24 ஆகஸ்ட், 2016

'அப்பா' - அம்மாக்களுக்கான சினிமா

து அப்பா படத்துக்கான விமர்சனம் இல்லை... படம் பிடித்திருப்பதால் முன்னர் எழுதிய பகிர்வை பதிவிடுவோமா... வேண்டாமா... என்ற எண்ணத் தோன்றலில் பதிவிடுவோம் என்பது முன்னே நிற்க ஒரு பகிர்வாக பகிர்ந்திருக்கிறேன்.


நூறு கோடிகளை மூலதனமாக்கி ஆயிரங்கோடிகளை ஆறே நாளில் சம்பாரித்து விட்டோம் என்று கொக்கரிப்போம் மத்தியில் போட்ட காசு வந்ததா வரலையா என்பதல்ல எங்கள் கவலை... நாங்கள் சொல்ல நினைத்ததைச் சரியாகச் சொன்னோமா...? நாங்கள் சொல்லியதை சரியாக உள்வாங்கிக் கொண்டார்களா...? நாங்கள் சொன்னதால் சமுதாயத்தில் சிறிதளவேனும் மாற்றம் நிகழ்ந்ததா...? என கண்டிப்பாக நினைத்திருப்பார்கள் அம்மா கணக்கு, அப்பா போன்ற படங்களில் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும்....

அப்பா... எல்லாருக்குமே அப்பாவைப் பிடிக்கும் என்றாலும் பெண் குழந்தைகள் கூடுதல் ஒட்டுதலோடு இருப்பார்கள்... அதனால்தான் இயக்குநர் ராம் 'மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று' என தங்க மீன்களைக் கொடுத்தார். அப்பாக்கள் நம் மீது வைக்கும் பாசம் அலாதியானது... ஆனால் அம்மாக்களைப் போல் அதை வெளிக்காட்டிக் கொள்வதில்லை என்பதே உண்மை.

பசங்க ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் அப்பாக்களிடம் இருந்து விலக ஆரம்பிக்கிறார்கள். பதின்ம வயது என்பது பசங்களின் நடை,உடை, பாவனைகளில் மாற்றம் தரும் வயது. அந்த வயதில் அப்பா எது கேட்டாலும் 'இவரு என்ன எதுக்கெடுத்தாலும் கேள்வி கேட்கிறார்' என்ற எண்ணம் தோன்ற ஆரம்பிக்கும் போது அப்பா மகனின் உறவில் விரிசல் விழுகிறது. இது நாளடையில் மிகப்பெரிய இடைவெளியைக் கொடுத்து விடுகிறது. என்ன வேண்டுமென்றாலும் அம்மாவிடம் சொல்லி பெற ஆரம்பிக்கும் போது அப்பாவின் பாசம் தாமரை இலை தண்ணீர் போல ஒட்டாமலேயே போய் விடுகிறது.

இயக்குநர் சமுத்திரகனி கையில் எடுத்திருக்கும் 'அப்பா', மூன்று வித்தியாசமான களங்களில் பயணித்து இன்றைய கல்வி முறையை, பணம் ஒன்றே குறிக்கோளாகத் திகழும் கல்வி நிலையங்களை நம் கண் முன்னே காட்சிகளாய் விரிக்கிறது. சமூகச் சாடல்கள் நிறைந்த இந்தப் படத்தை கபாலியை விரும்பிய அளவுக்கோ... கொண்டாடிய அளவுக்கோ... நாமும் அரசும் கண்டு கொள்ளாதது வேதனையான விஷயம்.

கல்வி மட்டுமே வாழ்க்கை அல்ல... உலகைப் புரிந்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் அப்பாவாக சமுத்திரகனி... குடிப்பது கூழாக இருந்தாலும் மற்றவர்களுக்கு முன்னால் பன்னீரில் வாய் கொப்பளிக்க வேண்டும் என்று நினைக்கும் மனைவி... 'நீயெல்லாம் நாட்டுக்கோழிடா' என்று சொல்லி வளர்க்கும் அப்பாவின் அன்பில் வளரும் மகன் (விக்னேஷ்).

தன்னோட கனவுகளை தன் மகன் மீது இறக்கி வைக்க ஆசைப்பட்டு அதற்காக அவனை தொந்தரவு செய்யும் அப்பாவாக தம்பி இராமையா... கணவன் செய்வது தவறுதான் என்றாலும் சொல்லப் பயந்து கொண்டு வாழும் மனைவி, அப்பாவின் கனவுகளைச் சுமக்கும் மகன் (ராகவ்).


'ஊரோடு ஒத்து வாழாதே... எதையுமே சந்தேகக் கண்ணோடு பாரு...' என்று சொல்லி மகனை வளர்க்கும் அப்பாவாக நமோ நாராயணன்... கணவனை எதிர்க்க நினைக்காத, விரும்பாத மனைவி, வீட்டில் அம்மா தவிர மற்றவர்கள் வெறுக்கும்  உருவத்தில் கூட வளர்ச்சி கிடைக்காத குட்டையன் (நசத்)

இவர்கள் மூவரின் கல்விப் பயணம் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் ஆரம்பிக்கிறது... மனைவியின் தொல்லை தாங்காமல் தனியார் பள்ளியில் அதிக பணம் கட்டி தன் பையனைச் சேர்க்கும் சமுத்திரகனி, பள்ளியில் தாஜ்மஹால் செய்து கொண்டு வர வேண்டும் என்று சொல்லும் போது மற்றவர்கள் பாய் கடையில் வாங்கிச் செல்ல, இது உனக்கான பணி... இதை நீயே செய்ய வேண்டும்... என்று சொல்லி அதற்கான பொருட்களை மட்டும் வாங்கி இரவெல்லாம் மகனை கண்விழித்து செய்ய வைத்து அனுப்புகிறார். ஆசிரியையோ ரொம்ப மோசம் என்று எழுதி அனுப்புகிறார். பெற்றோர் கலந்துரையாடலுக்கு வரும் சமுத்திரக்கனியிடம் பையனைப் பற்றி குறை கூற, அவர்கள் செய்யும் செயல்களை வெளுத்து வாங்கிவிட பையனுக்கு அங்கு இடமில்லை என மாற்றுச் சான்றிதழை கையில் கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள். இதன் காரணமான சண்டையில் மனைவி கோபித்துக் கொண்டு அம்மா வீடு செல்பவள் ஒரு கட்டத்தில் வக்கீல் நோட்டீசும் அனுப்புகிறாள். தன் வாழ்க்கை பிரச்சினைகள் ஒருபுறம் இருந்தாலும் தன் மகனுக்கு படிப்புடன் உலக அறிவையும் சேர்த்து வழங்கி அவனை நீச்சலில் கின்னஸ் சாதனை படைக்க வைத்து படிப்பில் வெற்றி பெற வைக்கிறார். அவனது அகராதியில் 'முடியாது' என்ற வார்த்தையே இல்லை என்பதாய் வளர்கிறான்.

நல்லாப் படிக்கும் மகனை தன் வெளிநாட்டுக் கனவினால் துரத்தும் தம்பி இராமையா.... பத்தாம் வகுப்பில் 599 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் மாணவனாக வந்த போதும் ஒரு மார்க்குக்காக மறுகூட்டல் போடப் போறேன் என்று சொல்வதும், பதினொன்றாம் வகுப்பில் மிகச் சிறந்தபள்ளியில் இடம் வாங்குவதுமாய் அவனை மிரட்டியே படிக்க வைப்பதால் எல்லாவற்றிக்கும் பயந்து பயந்து வளர்கிறான்.... கடைசியில் அவனது  முடிவும் நாம் பயந்த மாதிரியே ஆகிவிடுகிறது.

யாருக்கும் எதுவும் செய்யாதே... தனித்து இருக்கப் பழகிக் கொள் என்று சொல்லும் நமோ நாராயணனின் மகனோ வளராமல் குட்டையாகவே இருக்கிறான். வீட்டில் அக்கா கூட அவனை தம்பி என்று சொல்லத் தயங்குகிறாள். படிப்பில் ரொம்ப மோசம், பத்தாவது எழுத முடியாது என பள்ளித் தலைமை சொல்லிவிட, சமுத்திரக்கனி உதவியோடு தனது தனித்திறமையான எழுத்தாற்றலால் உயர்ந்து நிற்கிறான், மேலும் டுட்டோரியல் மூலமாகப் படித்து பத்தாவதும் பாஸாகி விடுகிறான்.

ஒரு பெண்ணைப் (கேபரில்லா) பார்த்ததும் தனக்கு வயிற்றுக்குள் என்னமோ பண்ணுது ஒண்ணுக்கு வருதுப்பா என்று சொல்லும் மகனுடன் பேருந்தில் பயணித்து அவளை வீட்டுக்கு அழைத்து வந்து காபி கொடுத்து இருவரையும் நண்பர்களாக்கும் சமுத்திரகனியும், தன் மகன் ரம்யாவுக்கு (யுவலெட்சுமி) லவ் லெட்டர் கொடுக்கப் போகும் போது பார்த்து அந்தப் பழியை அந்தப் பெண் மீது போட்டு நடு ரோட்டில் அவளை அடித்தது மட்டுமில்லாமல் அவள் வீட்டுக்கே சென்று பிரச்சினை செய்யும் தம்பி இராமையாயும் மாறுபட்ட அப்பாக்களை பிரதிபலித்திருக்கிறார்கள்.

அந்தப் பெண்களுடன் மூன்று பசங்களையும் நட்ப்பாகி தன் வீட்டில் படிக்க வைத்து அவர்களுக்கெல்லாம் அப்பாவாக உயர்ந்து நிற்கும் சமுத்திரகனி, தன் மாமனாருக்காக மனைவியின் செய்கைகளை பொறுத்துக் கொண்டு வாழப் பழகிவிடுகிறார். அப்பா வீட்டில் தனக்கான அதிகாரம் குறைந்து ஒரு ஜடமாக வாழும் மலர், தன்னைப் பார்க்க வரும் மகனுடன் மீண்டும் புகுந்த வீடு வருகிறார். அவரின் வருகையால் மீண்டும் பூகம்பங்கள் வெடிக்க நேரிடும் என்பதால் தன் தோழர் வீட்டில் போய் தங்க, அங்கும் பசங்களின் அட்டாகாசம் தொடர்கிறது. திருமணம் ஆகாமல் வாழும் அவரின் தோழருக்கு ரம்யாவின் அக்காவை கோர்த்து விடுகிறார்கள். தன் கணவன் மிகவும் நல்ல மனிதன் என்பதை உணர்ந்து சமுத்திரகனியை வீட்டுக்கு அழைக்கிறாள் மலர்.


தனியார் பள்ளிகள் மதிப்பெண்களை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்படுவதை படம் முழுக்கச் சாடியிருக்கிறார் இயக்குநர் சமுத்திரகனி. படத்தில் இந்த மூன்று குடும்பங்களுடன் அந்தப் பெண்களின் குடும்பம், 'கல்யாணத்தப்போ என்ன சொன்னாங்க' என்று அடிக்கடி வந்து செல்லும் குடும்பம் என கதையை மிக அழகாக நகர்த்தியிருக்கிறார். சமூகச் சாடல் அதிகம் இருந்தாலும் அதை பசங்களின் நகைச்சுவையுடன் சொல்லியிருப்பது சிறப்பு... படத்தில் எத்தனையோ வலி மிகுந்த காட்சிகள் இருந்தாலும் குட்டிப்பையன் புத்தக வெளியீட்டில் பேசும் இடத்திலும், சிங்கபெருமாள் இறந்ததை அறிந்து ரம்யா கதறும் இடத்திலும் நம்மை அறியாமல் நாம் அழுது கொண்டிருப்போம்... இதுவே இயக்குநரின் வெற்றி.

சொல்ல மறந்துட்டேனே சமுத்திரக்கனியின் நண்பர் இயக்குநர் சசிகுமார் , டாக்டராக வந்து தன் பங்குக்கு தனியார் பள்ளிகள் செய்யும் அட்டூழியங்களை பட்டியலிடுகிறார்...

சாதியை வைத்து படமெடுக்கும் இயக்குநர்கள் மத்தியில் இன்றைய சமூக பிரச்சினையை மையமாக்கி படமெடுக்க சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் கல்வி வியாபாரத்தை காவியமாக்கிய இயக்குநர் சமுத்திரகனி போற்றுதலுக்கு உரியவர்.

சமுத்திரக்கனியின் மகனாக வரும் விக்னேஷின் வயசுக்கு மீறிய செயல்பாடுகள், சில சினிமாத்தனமான காட்சிகள் இருந்தாலும் நச்சென்ற வசனங்களாலும் சமுத்திரக்கனியின் நடிப்பாலும் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள் அப்பாவை....

மொத்தத்தில் அப்பா - அப்பாக்களுக்கான படம் அல்ல... அம்மாக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.


-'பரிவை' சே.குமார்.

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

கவிதை : வாலிப நேசம்...


'என்ன பண்றே..?'
என்பதிலிருக்கிறது அன்பு...
'எப்படி இருக்கே..?'
என்பதிலிருக்கிறது நேசம்...

ஆண்டுகள் பல
கடந்த போதிலும்
கேட்கும் வார்த்தையில்
குளிர்ந்து கிடக்கிறது செவி...

எத்தனையோ ஆசைகள்
அத்தனையும் மூட்டைகட்டி...
தனித்தனியே குடும்ப
பாரத்தைச் சுமந்து கடந்தோம்...

எத்தனை திருவிழாக்கள்...
எத்தனை திருமணங்கள்...
எத்தனை இறப்புக்கள்...
எத்தனை பிறப்புக்கள்...

காணும் போதெல்லாம்...
சின்னப் புன்னகையும்
சிதறாத வார்த்தையுமாய்
கடந்து போனது காலம்...

கிழப் பருவமெய்தி... 
நடை தளர்ந்து...
கம்பூன்றி... 
கடக்கும் போதும்...

நேசமாய் சிரித்து
வாஞ்சையாய் கேட்டுக்
கடக்கிறேன்... கடக்கிறாய்...
கடக்கிறோம்...
ஆரம்ப வரிகளை....

அதில் தெறிக்கும்
அன்பில் தொக்கி நிற்கிறது
வாலிப நேசம் இன்னும்
வயதாகாமல்...
-'பரிவை' சே.குமார்.

(குறிப்பு :  மன்னிக்க வேண்டும் நண்பர்களே... தொடர்கதை ஒரு சில காரணங்களால் மீண்டும்  நிறுத்தப்படுகிறது.... ஒரு வேளை புத்தகமாக்கும் பட்சத்தில்(!) மீண்டும் வாசிக்கலாம்... இனி கதைகள் தவிர்த்து மற்றவை மட்டுமே  இங்கு பகிரப்படும் - நன்றி. )