முந்தைய பதிவுகளைப் படிக்க...
------------------------------------------------
52. காதலும் சாதியும்
முன்கதைச் சுருக்கம்
கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. சில காரணங்கள் இவர்களது காதலை வெளிச்சமிட ராம்கிக்கு புவனாவின் சித்தப்பாவாலும் அவளைக் கட்டிக்கொள்ளத் துடிக்கும் ரவுடி மணியாலும் கத்திக் குத்து விழ, காயத்துடன் அவனைப் பார்த்தவள் கட்டிப் பிடித்துக் கொள்கிறாள். இருவரும் கல்லூரி முதல்வரால் கண்டிக்கப்படுகிறார்கள். ஐயாவைப் பார்த்துப் பேசும் ராம்கியின் அம்மா கோபத்துடன் கிளம்புகிறாள்.
இனி...
வைரவனின் வண்டி வந்து நிற்கவும் 'எதுக்கு இவன் வர்றான்... இன்னைக்கு காலேசுல அதுக பண்ணுனது இவனுக்குப் போயிருச்சோ... அதுக்கு எதுக்கு நமக்கிட்ட விசாரணைக்கு வரணும்... இன்னைக்கு என்ன நமக்கு விசாரணை தினமா? இப்பத்தான் பையன் தரப்பில வந்து பேசிட்டு வாய்தா வாங்காமலே ஒரு கொலைவெறியோட போயிருக்காங்க. அடுத்து இவன் என்ன பண்ணப் போறானோ தெரியலையே... ம்... என்னதான் கேக்குறான்னு பார்ப்போம்' என்று நினைத்தபடி மனைவியைப் பார்க்க, அவரும் எப்பவும் போல இருங்கன்னு சைகை செய்தார்.
"வாங்க வைரவன்... என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்திருக்கீங்க... கூப்பிடும் போதெல்லாம் வரமாட்டீங்க... அம்மா தம்பிக்கு காபி குடும்மா..."
"சும்மா உங்களைப் பாத்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன்ய்யா... அம்மா காபி எல்லாம் வேண்டாம் இப்பத்தான் குடிச்சிட்டு வாறேன்." என்றவனின் பேச்சில் சிகரெட் வாடை அடித்தது.
"ம்... உக்காருங்க... என்ன விஷயம்? அப்பா அம்மாவெல்லாம் நல்லாயிருக்காங்களா?"
"இப்ப எல்லாரும் நல்லாத்தான் இருக்காகய்யா..." அவன் 'க்' வைத்துப் பேசுவதைப் பார்த்ததும் சரி... இன்னைக்கு ஒரு முடிவோடதான் வந்திருக்கான்... நாமளும் பிடி கொடுக்கக்கூடாது என முடிவு செய்தார்.
"என்ன தம்பி... இப்ப நல்லாயிருக்காங்கன்னு சொல்றீங்க... எனக்குப் புரியலையே..."
"உங்களுக்குப் புரியலையா? அது சரி... உங்க மாணவி போற போக்கைப் பார்த்தால் நாளைக்கு எல்லாரும் நல்லாயிருக்க மாட்டோமுன்னு தெரியுது..."
"யாரு புவனாவா.... அவங்க என்ன பண்ணுனாங்க... படிப்பு விஷயமா அவங்களை குறை சொல்ல முடியாதே?"
"படிப்புல இல்ல பழக்க வழக்கத்துல..."
"பழக்க வழக்கமா?"
"ம்... அந்த ராம்கி கூட...."
"ஆணும் பெண்ணும் நட்பா இருக்கக்கூடாதா என்ன?"
"இருக்கலாம்... ஆனா அது நட்பா இருக்கிற வரைக்கும்..."
"அப்புறம்...?"
"தெரியாத மாதிரி கேக்காதீங்க ஐயா... அவங்க ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கிறது நட்பா... இல்லை அதுக்கு மேலயான்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்..."
"இங்க பாருங்க தம்பி... இங்க வர்ற பிள்ளைங்க எல்லாம் எங்களோட பிள்ளைங்க மாதிரித்தான்... அதுல புவனா, ராம்கியின்னு எல்லாம் வேறுபாடு கிடையாது... எனக்குத் தெரிஞ்சு நல்ல நட்புத்தான் அவங்களுக்குள்ள... ஆமா நா ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே?"
"ம்... கேளுங்கய்யா... "
"நட்பாப் பழகிற ரெண்டு பேரு ஒரு கட்டத்துல ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு காதல்ங்கிற கட்டத்துக்குள்ள வந்தா என்ன தப்புங்கிறேன்..."
"காதல்ங்கிற கட்டத்துக்குள்ள வர்றது தப்பில்லை... ஆனா யாரைக் காதலிக்கிறோம்ங்கிறதுதான் முக்கியம்..."
ஐயா சிரித்தபடி, "என்ன தம்பி காதல்ன்னு வரும்போது அங்க எதுக்கு ஜாதி வருது... அப்புறம் அதுக்குப் பேரு காதலில்லையே..."
"நான் காதலே வரக்கூடாதுன்னு சொல்றேன்... நீங்க சாதி மாறி காதலிச்சா தப்பில்லைன்னு சொல்றீங்க... அதுக்காக எவனோ ஒருத்தனை எங்க வீட்ல ஏத்துக்கிட்டா எங்க சாதிக் கௌரவம் என்ன ஆகுறது?"
"படிக்கிற பிள்ளைங்க நீங்களும் இன்னும் சாதி, மதம்ன்னு இருக்கீங்களே தம்பி... சாதி சம்பிரதாயங்கிற கூட்டுக்குள்ள இருந்து வெளிய வரணும் தம்பி..."
"ஐயா நீங்க பாடம் நடத்துற மாதிரி சொல்றீங்க... இப்படி சொல்றது ரொம்ப ஈஸி... ஆனா சாதிங்கிற வட்டத்துக்குள்ள கிடைக்கிற மரியாதை, கௌரவம் எல்லாத்தையும் விட்டுட்டு அவ்வளவு சீக்கிரம் வெளிய வரமுடியாது. சரிய்யா... அவங்க பழகுறாகங்கிறது எனக்குத் தெரியுது... இல்லை... இல்லையின்னு எல்லாரும் எத்தனை நாள்தான் மறைக்கப் பார்ப்பாங்க.... எனக்கு அவன் மேல தனிப்பட்ட முறையில பாசம் இருக்கு... ஆனா அது என்னோட தங்கச்சிக்கு காதலனா ஏத்துக்கிற அளவுக்கு கிடையாது... எதிர்ப்புக்கள் வரும்போது அவனால நின்னு பிடிக்க முடியுமான்னு எனக்குத் தெரியாது... ஆனா விழுற ஒவ்வொரு அடியும் பலமா இருக்கும்... அது மட்டும் நிச்சயம்... அவனுக்கு சொல்லி வையுங்க..." என்றபடி எழுந்தான்.
"தம்பி... இருங்க... சின்னஞ்சிறுசுக ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்குன்னு சொன்னா நாமதான் எதிர்ப்புக்களை விட்டுட்டு சேர்த்து வைக்கணும்..."
"சாரி ஐயா... உங்க மேல ஒரு மரியாதை இருக்கு... என்னோட மனநிலை இப்போதைக்கு அவங்க உறவை ஏத்துக்கிற நிலையில இல்லை... ஒருவேளை ஏத்துக்கிற மனநிலை வந்தா பார்க்கலாம்... ஆனா அது வருமான்னு தெரியாது... நான் வாறேன்..." என்றபடி கிளம்பினான்.
அவன் வண்டியை எடுத்துக் கிளம்பும் வரை பேசாமல் இருந்த அவரின் மனைவி "என்னங்க இப்படிப் பேசிட்டுப் போறான்... பாவம் அந்தப் புள்ளைங்க.... என்ன பண்ணப் போறானுங்களோ...?"
"இப்போதைக்கு எதுவும் பண்ண மாட்டானுங்க... இவன் எதிர்ப்பை வழுவாக் காட்டினாத்தான் பிரச்சினை... இப்போதைக்கு இவன் தன்னோட எதிர்ப்பைக் காட்ட மாட்டான்னு நினைக்கிறேன்... பரிட்சை முடியட்டும்... பார்க்கலாம்... ஆனா மேல்படிப்புக்கு முன்னாலயே இவங்க முடிவு எடுக்க வேண்டிய சூழல் வந்தாச்சு... என்ன நடக்குதுன்னு பார்ப்போம்." என்றபடி வெளியே கிளம்பத் தயாரானார்.
விசாரணைகள் அது இது என்று இரண்டு பக்கமும் ஓடிக் கொண்டிருக்க... பரபரப்பான வாழ்க்கைப் பாதையில் இருந்து விலகி இருவரும் ஒருவழியாக தங்களது பரிட்சையை முடித்தனர். ராசு மீண்டும் சிங்கப்பூர் சென்றுவிட, சீதையின் கணவன் முத்து குடி கூத்தியா எனத் திரிய ஆரம்பித்தான். சொல்லிச் சொல்லிப் பார்த்து பொறுமையிழந்த அவனது அப்பா அவனை அடித்துவிட, அவரை எப்படிமாமா அடீப்பீங்க என அவருடன் சண்டை போட்ட சீதா கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு வந்துவிட்டாள்.
"வாங்கண்ணே..." வீட்டிற்குள் நுழைந்த அண்ணனைப் பார்த்து நாகம்மா சுரத்தில்லாமல் சொன்னாள்.
"ம்... எங்கத்தா சீதை"
"ம்... உள்ள இருக்கா? உக்காருங்க..."
"என்ன சுரத்தில்லாம பேசுறே?"
"என்னத்தைப் பேசச் சொல்லுறீங்க... என்னோட தலையெழுத்து எல்லாப் பக்கமும் பிரச்சினையா இருக்கு... "
"அவன் திருந்திட்டான்னு நெனச்சு கட்டி வச்சது என்னோட தப்புதான்... அவனைத் திருத்திருவான்னு நெனச்சேன்... கழுத அவன் போக்குல விட்டிருச்சு..."
"அவதான் கட்டிக்க மாட்டேன்னு நின்னாளே நாந்தானே உறவு விட்டுப் போகக்கூடாது... நம்ம அண்ண வீடுன்னு வம்படியா நின்னு கட்டுனேன்..."
"இங்க பாருத்தா.... எல்லாஞ் சரியாகும்... நான் இருக்கேன்ல்ல... அப்படியே விட்டுருவேனா என்ன சீதையைக் கிளம்பச் சொல்லு..."
"ம்... சீத... அடி சீதை... மாமா வந்திருக்காக பாரு..."
உள்ளேயிருந்து வந்த சீதா "வாங்க மாமா" என ஒப்புக்கு கேட்டுவிட்டு அம்மாவின் அருகில் அமர்ந்தாள்.
"என்னம்மா மாமா மேல இன்னும் கோபம் போகலையா... அவந்திருந்தனுமின்னு அடிச்சேன்... என்னோட தப்புத்தேன்... மன்னிச்சுக்க... நீ வா... எல்லாம் சரி பண்ணலாம்..."
"எதுக்கு மாமா... நா இங்கனதானே இருக்கேன்.."
"என்னம்மா நீயி... மேடு பள்ளம் இருந்தாத்தான் வாழ்க்கை... அவனை உன்னோட கண்ட்ரோல்ல கொண்டு வரப்பாரு... ஊருக்குப் போக வேண்டாம்... இங்க எதாவது ஒரு தொழில் பண்ணி பொழப்ப ஓட்டட்டும்... சரி பண்ணிடலாம் தாயி... எல்லாமே பொம்பளங்க கையிலதான் இருக்கு... என்ன நாகம்மா நான் சொல்றது..."
"சரிதாண்ணே... சின்னஞ் சிறுக பிரச்சினையினா தாங்காதுகதானே... எப்படியாச்சும் மாப்பிள்ளைக்கு நல்ல புத்தி வந்து பொழக்கட்டும்... நீ போத்தா... நா ரெண்டு நா கழிச்சு வாறேன்... எல்லாம் பேசி சரி பண்ணுவோம்..." என்று மகளை வாஞ்சையுடன் தடவினாள்.
"ம்.. " என்றபடி கிளம்ப ஆயத்தமானாள் சீதா.
"சின்ன மருமகப்பிள்ளை என்ன சொல்றார்?"
"என்னத்தைச் சொல்றார்... அவரு கதை போற போக்கு சரியில்லைண்ணே... அவரு நமக்கு இல்லை... அந்தக் குட்டிய விட்டுட்டு வரமாட்டான் போலத் தெரியுது. இப்ப மேப்படிப்பு படிக்கணுமின்னு நிக்கிறான்... நா படிச்சது போதும் எங்கிட்டாச்சும் வேலக்குப் போன்னு சொல்லிட்டேன்..."
"படிக்கட்டுமே... அதனால என்ன"
"அவளும் அதே காலேசுக்குப் போவா... அங்கயும் சேந்து சுத்துவாங்க... இதெல்லாம் நமக்கு எதுக்கு... படிச்சிக் கிழிச்சது போதும்... நமக்குப் புள்ளயா இருந்தாப் போதும்..."
"ம்... அவன் போக்குல போயித்தான் திருத்தணும்... பாப்போம் எம்புட்டுத் தூரந்தான் போறான்னு... சரித்தா நாங்க கிளம்புறோம்.. நீ ஒரு எட்டு அங்க வா.... சரியா..." என்றவர் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு நடக்க அவருக்குப் பின்னே சீதாவும் தொடர்ந்தாள்.
"அலோ..."
"ம்... சொல்லு புவி..."
"என்ன தூங்கிட்டியா?"
"இல்ல டிவி பாத்துக்கிட்டு இருந்தேன்... நீ கூப்பிட்டே..."
"பாக்காம இருக்கிறது ரொம்பப் போரா இருக்கு ராம்..."
"இங்கயும் அப்படித்தான்... வீட்ல இருந்து பெயரெல்லாம் சொல்லிப் பேசுறே... யாரும் இல்லையா?"
"அப்பா, வைரவன் இல்ல... அம்மாதான் டிவியில நாடகம் பாக்குறாங்க... சோ நான் ப்ரி... அங்க"
"அம்மா வெளியில பேசிக்கிட்டு இருக்காங்க... பிரச்சினை இல்லை... என்ன அப்ளிகேசன் மாமா வாங்கிட்டு வந்தாரா?"
"மாமாவா... எந்த மாமா?"
"ம்... உங்க அப்பா"
"அது சரி மாமாவாயிட்டாரா அவரு?"
"ஆமா பொண்டாட்டியோட அப்பா மாமாதானே..."
"ஊரச்சுத்தி கலவரமாம்... இவரு கல்கோனா சாப்பிடுறாரு..."
"எத்தனை கலவரம் வந்தாலும் எம்பொண்டாட்டி நீதான் சரியா?"
"அது சரி... எங்கயோ மாப்பிள்ளை இருக்கான்னு பேசுறானுங்க... படிப்பு போதும்ன்னு பேசுறானுங்க... நாம கட்டிப்பிடிச்ச விசயமெல்லாம் இவனுகளுக்குத் தெரியுது ஆனா வெளிய சொல்லலை... எனக்குப் பயமா இருக்கு... மௌனமா இருந்து கழுத்தறுத்துருவானுங்களோன்னு... எங்கிட்டாவது ஓடிப் போயிடலாம் ராம்... அப்புறம் படிப்பைப் பார்க்கலாம் ப்ளீஸ்..."
"ம்... கொஞ்சம் பொறுமையா இரு... அதுக்கான நாள் வரும்வரை காத்திருப்போம்... என்னையத் தவிர வேற ஒருத்தனும் உன்னைய தொட முடியாது..."
"அந்த நம்பிக்கையிலதான் காத்திருக்கேன்.. சரி... சரி... அம்மா கூப்பிடுறாங்க... பை" என்று போன் கட்டாக போனையே வெறித்துக் கொண்டிருந்த ராம்கியின் மனதுக்குள் பல திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஓட ஆரம்பித்தன.
(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
4 எண்ணங்கள்:
//அந்த நம்பிக்கையிலதான் காத்திருக்கேன்.. //
திருமணம் விரைவில் சுமுகமாக கூடி வரவேண்டும்.
ஊஹூம்..............இது சரியில்லியே?
அருமை
திருமணம் விரைவில் சுமுகமாக கூடி வரவேண்டும்.
த.ம.2
அடுத்த காட்சி எதுவோ தொடரில்!
கருத்துரையிடுக