மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 ஜனவரி, 2025

சான்றோர்... பாலர் : பேராசிரியர் மு.பழனி இராகுலதாசன்

நேற்றுக் காலை 'அப்பா உங்ககிட்ட பேசணுமாம் குமார்' என வாட்சப்பில் அனுப்பியிருந்தார் மேகலை. எதிர்பாராத நிகழ்வாய் அமைந்த அம்மாவின் இறப்புக்குப் பின் ஐயாவிடம் எப்படிப் பேசுவது..? என்ன பேசுவது..? என்ற மன தைரியமில்லாத நிலையில் இருந்து வருகிறேன் என்பதே உண்மை.

செவ்வாய், 16 ஜனவரி, 2018

வாழ்வின் வசந்தம் விஷால்


வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதுடன் வாழ்வின் மற்றொரு கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும். அப்படியான நிகழ்வுகளின் பின்னே நாம் வாழ்வில் சாதித்து விட்டோம் என்ற எண்ணத்தைப் பெருமையுடன் எழச் செய்து சாதித்த மகிழ்வை புன்னகையாய் பூக்க வைக்கும்.

படிக்கும் காலத்தில் எந்தக் கவலையும் இன்றி வாழ்க்கை நகரும். என்ன நடந்தா என்ன... அது நல்லதா...கெட்டதா... என்பதெல்லாம் குறித்து ஆராய்வதில்லை... திருவிழாக்கள் எல்லாம் ஒரே ஆட்டம்... ஏதாவது ஒரு இறப்பு என்றால் சோகம் சுமந்து பதறி வரும் முகங்களை வேடிக்கை பார்ப்பதற்காகவே இழவு வீட்டின் முன்னே காத்திருக்கச் சொல்லும் அவ்வளவே... மற்றபடி எந்த மகிழ்வையும் எந்தக் கவலையையும் அதிக நேரம் சுமப்பதில்லை... அடுத்தடுத்து கடந்து போய்க் கொண்டே இருப்பதிலேயே மனசு குறியாக இருக்கும். 

வெட்கமா அப்படின்னா என்ன என்று கேட்ட வைத்த வயதில் எதை நோக்கி நாம் பயணிக்கப் போகிறோம் என்பதைக் குறித்தெல்லாம் சிந்தனை வருவதில்லை. பள்ளியில் மழை வருவது போல் இருந்தால் கிராமத்துப் பிள்ளைகள் போகலாம் என்றதும் புத்தகப் பையை தலைமை ஆசிரியரின் அறையில் வைத்து விட்டு மறக்காமல் சத்துணவுத் தட்டை எடுத்து தலையில் கவிழ்த்துக் கொண்டு நடந்த நாட்களில் இந்தப் பத்தியின் ஆரம்பத்தில் சொன்ன வெட்கம் என்பது இல்லவே இல்லை.

வெட்கம், வேதனை, வருத்தம், மகிழ்ச்சி, வாழ்வு குறித்தான அடுத்த கட்ட நகர்வுகள், பயம் என எல்லாமே குடும்பஸ்தனாய் மாறிய பின்னர்தான் அதிகமாகின்றன இல்லையா...? தனிக்காட்டு ராஜாவாகத் திரிந்தவனை மனைவி என்ற ஒருத்தி வந்த பின் தன்னை நம்பி ஒரு ஜீவன் வந்திருக்கு... இதுவரை எப்படியோ நகர்ந்த வாழ்வில்... அப்பாவின் சம்பாத்தியத்தில் நகர்ந்த வாழ்வில்... செலவுக்கு அப்பாவிடமோ அம்மாவிடமோ நைச்சியமாகப் பேசி வாங்கி செலவு செய்த நிலையில் மனைவிக்குப் பூ வாங்க அம்மாவிடமா பணம் கேட்க முடியும் என்ற யோசனை தோன்ற வாழ்வில் முதல் முதலாய் தன்னை நம்பி வந்தவள் மனம் கோணாது நடக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்க ஆரம்பிக்கும் இல்லையா... அதுதான் வாழ்வின் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கான ஆரம்பம்.

இப்ப எதுக்கு வேதாந்தம் அப்படின்னு நினைக்கிறீங்களா...? வேதாந்தம் இல்லைங்க... எல்லாம் காரணமாத்தான்... எப்படி ஆரம்பிப்பது என்பதாய் எழுந்த எண்ணத்தின் முடிவில் வாழ்க்கையில் சில நிகழ்வுகள் என இப்படியாய் ஆரம்பித்தேன் அவ்வளவே.

வெளிநாட்டு வாழ்க்கையில் ஊருக்குப் பேசும் அந்த சில மணித்துளிகளே சந்தோஷத்தைத் தரும் என்பதை அனுபவித்தவர்கள் கண்டிப்பாக உணர்ந்திருப்பார்கள். இன்றைய நிலையில் வீடியோவாய் பார்த்துப் பேசுவது என்பது வரப்பிரசாதமே. ஸ்கைப்பில் மணிக்கணக்கில் பேசி... மகிழ்வாய்... கோபமாய்... என எல்லா அவதாரமும் எடுத்து பேசி.. மனைவி, குழந்தைகளுடன் அளவளாவி முடித்து வைத்து சாப்பிட்டுப் படுக்கும் போது மனசுக்கு ஒரு நிம்மதி.

அப்படியான நிம்மதிக்கும் இங்கு ஆப்பு வைத்து விட்டார்கள். ஸ்கைப்பையும் முடக்கி விட்டார்கள். இவர்கள் ஒரு ஆப் தருகிறார்கள். மாதம் 50 திர்ஹாமுக்கு ரீசார்ஜ் பண்ணிக் கொள்ள வேண்டும். இந்த ஆப்பை ஊரிலும் தரவிறக்கிக் கொள்ள வேண்டுமாம். சிலர் அது நல்லாயிருக்கு என்கிறார்கள்... பலர் சரியில்லை என்கிறார்கள். 2018 பிறந்த உடனே வரியும் இது போன்ற முடக்கமும் மொத்தமாய் எல்லாரையும் முடக்கி வைத்து விட்டது. 

தினமும் விஷாலுடன் எதாவது பேசுவது மனசுக்கு நிம்மதியாய் இருக்கும். அவனைப் பொறுத்தவரை அடுத்தடுத்து வார்த்தைகளில் விளையாடுவதில் கில்லாடி. அது எங்க குடும்பத்துக்கே உரியது. எங்கம்மா சிரிக்காமல் படக்கென பதில் சொல்வார். அதேபோல்தான் இவனும்... தரித்திரமில்லாமல் பேசுது பாருங்க என்று சொல்லும் மனைவி,  உங்க வாரிசு எப்படியிருக்கும் என்று சேர்த்தும் சொல்வார்.

பாப்பா வயிற்றில் இருக்கும் போது நாங்கள் ஒரு சிறு வீட்டில் வாடகைக்கு இருந்தோம். தேவகோட்டை கல்லூரியில் வேலை. மற்றவர்கள் வந்து பார்த்துச் சென்றாலும் ஒன்பதாவது மாதம் வரை நான்தான் பார்த்துக் கொண்டேன். பாப்பா பிறந்தது மதுரையில்... மனைவிக்கு ஆபரேசன் என்ற போது ஏற்பட்ட படபடப்பின் பின்னே கண்ணீர் பெருக்கெடுத்தது.

விஷாலைப் பொறுத்தவரை, அவன் வயிற்றில் இருக்கும் போது என்னை அபுதாபிக்கு விரட்டி விட்டுட்டான். காரைக்குடியில் வாடகை வீட்டில் வாழ்க்கை. பாப்பாவும் மனைவியுமாய் தனியாய்... பக்கத்தில் மனைவியின் சித்தி வீடு என்பதால் அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். மனைவியின் ஆயாதான் அதிகம் எங்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டவர்கள். 

காரைக்குடியில்தான் பிறந்தான் விஷால்... என்ன நேரத்துல பிறந்தியோ என்று திட்டினால் ஜனவரி-17 என்று சொல்லுவான். ஆம் இன்று அவனின் பிறந்தநாள். அவன் பிறந்த அன்று  செய்தி போன் வழியாக வந்த போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அருகிருக்க முடியவில்லையே என்ற வலியும் கூடவே இருந்தது. மனைவிக்கு இரண்டாவதாய் ஆபரேஷன்... ரொம்பக் கஷ்டமாக இருந்தது.

ஆச்சு 9 வருடங்கள்... வெளிநாட்டு வாழ்க்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எப்போது ஊரில் போய் செட்டிலாவது என்ற எண்ணத்தைச் சில நாட்களாக மனசுக்குள் இன்னும் தீவிரமாக்கி  நகர்கிறது. இன்று கூட உங்களைப் பொங்கலுக்கு வரச் சொன்னேனுல்ல ஏன் வரலை என்று சண்டை போட்டான்.

சில நாட்கள் முன்னர் விழுந்ததில் காலில் சின்னதாய் ஒரு கிராக் என்றாலும் மிகப்பெரிய கட்டிட்டு நடக்காமல் இருந்தவன், பொங்கலுக்காக கட்டை சிறியதாகப் போட்டதால் கொஞ்சம் நடந்து திரிந்திருக்கிறான். நடக்காதடா என்று சொல்லும் போது அலோ... அலோ.... கேக்கலையே... என்று சொல்லி போனை அவங்க அம்மாவிடம் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆனான். இது இன்றும் நேற்றும் பல முறை நிகழ்ந்தது.

சுறுசுறுப்பானவன்... துறுதுறுப்பானவன்... வேகமானவன்... எல்லா வேலைகளையும் நான் செய்கிறேன் என முன் நின்று செய்ய நினைப்பவன்... ஒன்பது வயது கடந்து பத்தாவது வயதில் அடியெடுத்து வைக்கிறான். ஆண் பிள்ளைகள் அம்மா பிள்ளை என்பார்கள்... இவனோ அப்பா பிள்ளை... தினமும் அவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேசாவிட்டால் அந்த நாள் வெறுமையாய் நகரும்.

எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் பிறந்தவன் என்பதால் தகதன்னு இருப்பான்னுல்லாம் சொல்லலை ஆனால் எங்களை விட அவன் கலர் சற்று தூக்கல்தான்... அடிக்கிற சிவப்பில்லை என்றாலும் அழகான சிவப்புத்தான் அவன். எல்லாருக்கும் பிடித்தவனாய் இருப்பது கடினம்... இப்போது அவன் எல்லாருக்கும் பிடித்தவனாய் இருக்கிறான். இப்போது போல் எப்போதும் இருக்க வேண்டும்... அதற்கு இறையருள் வேண்டும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம்...

எங்க அன்பு மகனுக்கு உங்களின் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வேண்டி...
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

மனசு பேசுகிறது : பிரியமான தோழி

நேற்று அரசியல் பதிவு எழுதலாம் என்றும் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்கு எழுதிய கதையை பகிரலாம் என்றும் இரு வேறான எண்ணங்கள் மனசுக்குள் இருந்தது. மனமும் சசிகலா போல் அமைதியின்றி தவித்தது... அதற்கான காரணமும் என்னவென்று தெரியவில்லை. சரி அதை விடுங்க... எந்த ஒரு நிகழ்வும் நமக்கான நன்மைக்கே என்று நினைத்துக் கடந்து சென்று விடுவேன். நல்லது நிகழும் என்ற நம்பிக்கையோடு பயணிப்பதே நலம் பயக்கும் அல்லவா?  அதை விடுங்க... பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. கதைகள் தேர்வு வாசகர்களின் வாசிப்பின் அடிப்படையில் என்பதாய்த்தான் அவர்களின் தேர்வு இருக்கும்... சிலரின் கதைகள் ஐயாயிரம் ஆராயிரம் பேர் வாசிக்க பலரின் கதைகள் ஐநூறு பேரைத் தாண்டலை. நாம ஆயிரத்தைத் தொட்டோம். இது சரியான தேர்வு முறை அல்ல என்பதை முன்பே ஒரு முறை சொல்லியிருந்தேன். சில நல்ல கதைகள் முந்நூறு நானூறு பேர் மட்டுமே வாசித்திருந்ததைப் பார்க்க முடிந்தது. அதற்குக் காரணம் அவர்கள் வரிசைப்படுத்தியதை முதல் நாளில் இருந்து அப்படியே வைத்திருந்ததே.... வாரம் ஒருமுறை ஏனும் வரிசையில் மாற்றம் செய்திருந்தால் ஒருவேளை முந்நூறு நானூறு பேரால் வாசிக்கப்பட்ட கதைகள் இன்னும் அதிகம் பேரால் வாசிக்கப்பட்டிருக்கலாம். இனிமேலாவது வரும் போட்டிகளில் இதை அவர்கள் செய்யலாம். அப்படிச் செய்தால் இன்னும் போட்டியில் போட்டியிருக்கும்.

இப்பல்லாம் எந்த பதிவை எழுதினாலும் அதை ஆரம்பிக்காமல் வேறு எங்கோ பயணப்பட்டு மீண்டும் பதிவுக்குள் வருவது போல் இருக்கிறது. இன்று காதலர் தினம்... சசிகலாவுக்கு வழக்கில் தீர்ப்பு... பணம் பேசாமல் நீதி பேசினால் நல்லது... பாவம் காதலர் தினம் கொண்டாட மெரினாவுக்குச் செல்லும் காதலர்கள் பாடுதான் திண்டாட்டம். இப்ப நம்ம பகிர்வும் காதலர் தினத்துக்கானதுதான். என்னது...? காதலா...? தினமா..? இதெல்லாம் தமிழன் பண்பாடு இல்லையே அப்படியிப்படின்னு சொல்லி சுத்த தமிழனா இருந்தா... மறத் தமிழனா இருந்தா.... வீரத் தமிழனா இருந்தா... சோழன் பரம்பரையா இருந்தா... பாண்டியன் வாரிசா இருந்தா... இதை எல்லாம் விட ஒரு அப்பனுக்குப் பொறந்திருந்தா காதலர் தினம் கொண்டாடாதேன்னு எல்லாம் எங்கிட்ட சொல்லாதீங்க... நான் தினம் தினம் நேசிக்கும் என் மனைவிக்கு காதலர்தின வாழ்த்துச் சொல்வதில் மேலே சொன்ன எதுவும் தேவையில்லைதானே...? அன்பின் பிடிக்கும் அடக்கும் வாழ்வில் எல்லாம் அவளே என்ற நிலைதான் என் நிலை.... பிரிவு என்பது நிரந்தரம் அல்ல... தற்போதைய பிரிவு வாழ்வின் நிமித்தம் எனினும் இன்னும் எங்களுக்கும் அன்பின் துளிகளை அதீதமாக்கிக் கொண்டுதான் இருக்கிறது.

திருமணத்தின் போது குமார் பெரிய வேலையிலும் இல்லை... கல்லூரியில் சொற்ப சம்பளத்தில் பணி... ஒரு அட்லஸ் சைக்கிள் பயணத்துணைவனாய்.... மதுரையில் செல்லமாய் வளர்க்கப்பட்டு என்னுடன் இணைந்த பின்னர் நாங்கள் தேவகோட்டையில் குடியிருந்த வீடு... மிகப்பெரியது ஆமாம் ஒரு சிறிய ஹால், சின்ன கிச்சன் அதனருகே பாத்ரூம்... புது வீடு... ஆனால் ரொம்பச் சிறியது என்றாலும் வீட்டின் முன்னே சின்னதாய்... அழகாய் ஒரு தோட்டம்... பாப்பா பிறந்து நடக்கும் வரை அந்த வீடுதான்... அதற்கு இடையில் ஒரு முறை துபாய்க்கு விசிட்டிங்கில்... வேலை தேடி தினம் தினம் அம்பது அறுபது கம்பெனிகளில் பயோடேட்டா கொடுத்துக் கொடுத்து மூன்றாம் மாத முடிவில் அதைப்படி... இதைப்படி... என பலரின் அறிவுரைகளோடு மீண்டும் ஊருக்கே பயணம்... இதில் எல்லாவற்றிலும் எனக்குத் துணையாய்... தோழியா... என் மனைவி என்னோடு. ஊருக்குத் திரும்பிய பின்னர் கல்லூரி வேலையும் இல்லை என்பதால் சென்னைக்குப் பயணம்... அங்கு சின்னச் சின்னதாய் நகர்ந்து தினமணியில் உட்கார்ந்த போது குடும்பமும் என்னோடு சென்னையில்.... அங்கும் பெரிய அளவிலான வாழ்க்கை இல்லை என்றாலும் மனைவி, மகளின் அன்பில் நனைந்த வாழ்க்கை. பாப்பா எல்கேஜி வேலம்மாவில் படித்து யுகேஜி போகும் போது மீண்டும் அபுதாபி பயணம்... குடும்பம் காரைக்குடியில் வாடகை வீட்டில்... அதன் பின்னான நகர்வுகளில் எல்லாம் என்னை வழி நடத்தி மற்றவரின் முன்னால் நாங்களும் கடனை வாங்கினாலும் கஷ்டப்பட்டாலும் உயர்ந்து நிற்க வைத்தது எல்லாம் என் மனைவிதான் என்பதே சத்தியமான உண்மை.

தேவகோட்டையில் வீட்டுப் பணி... விஷால் எல்.கே.ஜி படிக்கும் போது ஆரம்பிக்கப்பட, குழந்தைகளை பள்ளிக்கு கிளப்பி விட்டு விட்டு காரைக்குடியில் இருந்து தேவகோட்டைக்கு ஸ்கூட்டியில் பயணித்து வீட்டுப் பணிகளை மேற்பார்வை செய்து மூணு மணிக்கு விஷாலுக்கு ஸ்கூல் விடும் என்பதால் அதற்குள் வந்து... அடுத்த நாள் பயணித்து... ரொம்பக் கஷ்டப்பட்டு தேவகோட்டையில் எங்களுக்கு என ஒரு வீடு உருவாவதில் சாப்பாடு, நல்லது கெட்டது எல்லாம் துறந்து உடல்நலம் சரியில்லாமல் போய் ஐசியூவில் வைத்திருந்து... அதற்குக் கூட நான் போகவில்லை என்ற கோபம் இப்பவும் உண்டு என்றாலும் கோபம் இருக்கும் இடத்தில்தானே குணம் இருக்கும். அப்புறம் எங்க பரியன்வயலில் எங்க வீடு தம்பிக்கு கொடுக்கப்பட, வீடு கட்டும் சூழல் உருவாகி எங்கள் முன்னே பூதகரமாக நிற்க, கையில் இருப்பு இல்லாத நிலையிலும் தைரியமாக இறங்கி அங்கும் சிறு வீடாயாச்சு... இப்ப கடன்களும் வட்டிகளும் வங்கியில் இருக்கும் நகைகளும் எங்கள் முன்னே மிகப்பெரிய சுமையாக நின்றாலும் எப்பவும் போல் இதழில் புன்னகையுடன் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையோடு என்னை வழி நடத்திக் கொண்டிருப்பவர் என் மனைவிதான்.

எந்த வேலைக்கு மலைப்பதில்லை... எல்லாவற்றிற்கும் முன்னால் நிற்பார்... எல்லாருக்கும் நேரம் காலம் பார்க்காது வேலை செய்வார்.... அவர் செய்யும் உதவிகளே எங்கள் பிரச்சினைகளை பின்னுக்கத் தள்ளி வைத்திருக்கிறது. நன்மை செய்பவரை காயப்படுத்திப் பார்ப்பதில் நம்மவர்கள் எப்பவுமே கில்லாடிகள் அல்லவா.. அப்படியான கல்லடிகள் கிடைத்துக் கொண்டே இருந்தாலும் அதையெல்லாம் மனசுக்குள் புதைத்துக் கொண்டு புன்சிரிப்போடும்... கலகலப்பான பேச்சோடும் எல்லா உறவுகளையும் அரவணைப்பதில் அவருக்கு முன்னே நான் எல்லாம் தள்ளித்தான் நிற்க வேண்டும்.

எதுக்கு இதெல்லாம் அப்படின்னு பாக்குறீங்களா...? எல்லாம் காதலர் தினத்துக்குத்தான்... இங்கிருந்து என்னத்தை பரிசாக் கொடுக்கப் போறோம்.. எழுத்துதான் நமக்கு வரம்... அந்த வரத்தின் மூலமாக ஒரு வாழ்த்து அவ்வளவே...

என் அன்பான... பிரியமான... நேசத்துக்குரிய... காதலிக்கு... மனைவிக்கு... தோழிக்கு என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

கீழே இருக்கும் அன்பு திரைப்படப் பாடல் எங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல்... என்ன ஸ்பெஷலா அது சஸ்பென்ஸ்... பாட்டை மட்டும் கேளுங்க... வரட்டா...

-'பரிவை' சே.குமார்.

சனி, 31 டிசம்பர், 2016

மனசு பேசுகிறது : சுய டைரிக் குறிப்பு

து இந்த வருடத்தில் நிகழ்ந்தவைகளின் தொகுப்பாக எழுதப்படும் பகிர்வே... ஜோதிஜி அண்ணனைப் போல் வருடா வருடம் விரிவாக, அலசி ஆராய்ந்து எல்லாம் எழுத நம்மால் முடியாது... நாம பட்டதும் பெற்றதும் என்னன்னு கொஞ்சம் எழுதி வச்சுப்போமேன்னு வருட முடிவில் ஏதாவது கிறுக்கி வைக்கிறது போல இந்த வருட முடிவிலும் சில...

Image result for new year gif file

2016... வருட ஆரம்பத்தில் எங்கள் ஊரில் வீடு வேண்டும் என்பதற்காக கையில் காசில்லாத நிலையில் வீட்டை ஆரம்பித்து அப்படி இப்படி புரட்டி வீட்டைக் கட்டி மே மாதம் பால்காய்ச்சினோம். ஏதோ ஒரு விதத்தில் விரயமாகும் என்றார்கள் வீட்டைக் கட்டியதால் கடனாகி நின்றாலும் வீடு நமக்கானதே என்ற நிம்மதி.

2016...  சில நல்ல நிகழ்வுகள் நடந்தன என்றாலும் நிறைய பிரச்சினைகள், கஷ்டங்களைச் சுமந்து பயணித்தாலும் அந்தக் கஷ்டத்திற்கு அப்போதைய நிவாரணியாய் ஏதாவது ஒரு மாற்று அமைந்து தற்காத்துக் கொண்டே வந்தது.

2016...  கச்சா எண்ணெய் விலை குறைவுப் பிரச்சினையால் எங்க வேலைகள் எல்லாம் தடைபட்டதால் வருடத்தின் இறுதியில் சில மாதங்களாய் அலுவலகத்தில் வேலை இல்லாமல் இருக்க வேண்டிய சூழல்... ஊருக்குச் செல்லச் சொல்லி விட, முடியாது என சண்டையிட்ட காரணத்தால் மலையாளிகள் ஊருக்குச் செல்ல, என்னை மட்டும் போக வேண்டாம் என்று சொன்னார்கள்... இன்னும் எந்த ஒரு வேலையும் ஆரம்பிக்கவில்லை.

2016... தமிழ்வாசி மூலமாக பொன்னியின் செல்வன் வாசிக்க ஆரம்பித்து வரலாற்றுப் புதினங்களில் அதிகம் பயணிக்க ஆரம்பித்தேன். நிறைய வாசிக்க முடிந்தது.

2016... வருத்தங்கள் கவலைகள் சூழ இருக்கும் தினங்களில் எல்லாம் ஆறுதலாய் காயத்ரி அக்கா, நிஷா அக்கா, நண்பன் தமிழ்க்காதலன், குடந்தை சரவணன் அண்ணன் என நட்புக்கள் எல்லாம் சரியாகும் என ஆறுதலாய் நின்றார்கள்.

2016... பதிவுக் காப்பியின் காரணமாக மனசு தளத்தில் சிறுகதைகள், எழுதிக் கொண்டிருந்த தொடர்கதை எல்லாம் நிறுத்திவிட்டு மனசு பேசுகிறது நிறைய எழுத ஆரம்பித்தேன்.

2016... 2015-ல் பாக்யா மக்கள் மனசு பகுதிக்கு எழுத ஆரம்பித்து இந்த வருடத்தில் ஒரு சில வாரங்கள் தவிர்த்து தொடர்ந்து எனது கருத்து வந்து கொண்டிருக்கிறது.

2016... நிறைய சிறுகதைப் போட்டிகளில் ஒரு சில காரணத்தால் கலந்து கொள்ளவில்லை என்றாலும் கலந்து கொண்ட போட்டிகளில் எல்லாம் எனது கதைகள் ஏதோ ஒரு பரிசைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

2016... ஸ்ரீராம் அண்ணா அவர்களின் எங்கள் பிளாக் வலைத்தளத்தில் கேட்டு வாங்கிப் போடும் கதையில் எனது கதையான ஹரிணியும் வெளிவந்தது.

2016... எனக்கு இங்கு ஆறுதலாக இருந்த கில்லர்ஜி அண்ணன் அவர்கள் குடும்பச் சூழல் காரணமாக வேலையை விட்டுவிட்டு தேவகோட்டைக்குச் சென்று விட, வருத்தங்கள் நிரம்பிய நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்தது.

2016... திண்டுக்கல் தனபாலன் அண்ணன் அவர்களுடன் போனில் நீண்ட நேரம் பேசும் வாய்ப்பை வருட இறுதி கொடுத்தது.

2016... ஆரம்பத்தில் இருந்த கஷ்டங்கள் கவலைகளை விட வருடத்தின் இறுதியில் கஷ்டத்தை இன்னும் இறுக்கமாய் அளித்து நகர்ந்தது.

2016...அகல் மின்னிதழில் அதிக கட்டுரைகள் எழுதும் வாய்ப்பை அதன் ஆசிரியர் திரு. கணேஷ் (சத்யா) அவர்கள் வழங்கினார்.

2016... நிஷா அக்கா ஒரு இதழுக்கு அளித்த பேட்டியில் என்னைக் குறித்தும் சொல்லியிருந்தது இந்த வருடத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வு. மகிழ்ச்சி.

2016... 2013-ல் இருந்து புத்தகம் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி, அதற்கான முயற்சியில் இறங்க நினைக்கும் போது எதாவது ஒரு பிரச்சினை முன் வந்து பூதகரமாக, முயற்சி முயற்சியாகவே இந்த வருடம் வரை பயணித்துக் கொண்டிருக்கிறது.

2016... என் கதை புத்தகமாகவில்லை என்றாலும் என் எழுத்து சகோதரர் ஒருவரின் புத்தகத்தில் இணைந்திருக்கிறது என்பது இன்னுமொரு மகிழ்ச்சியான நிகழ்வு.

2016... பல கவலைகளை மறக்க வைத்தது எங்கள் விஷாலின் குறும்புச் செயல்கள்.

2016... என் மனைவி தனது கைவண்ணத்தில் வரைந்த கோலங்களுக்காகவே 'சிநேகிதி' என்ற தளத்தை ஆரம்பித்தார்.

2016... வட்டார வழக்கில் எழுது... அது உனக்கு நல்லா வருது என ஜோதிஜி அண்ணாவுடன் பேசும் போது குறிப்பிட்டார். மிகச் சிறந்த எழுத்தாளர், கருத்தோடு புள்ளி விவரங்களை வைத்து எழுதுவதில் நிபுணர் அவர் என்பதை அனைவரும் அறிவோம்... அப்படிப்பட்டவரின் பாராட்டு கிடைத்ததில் மகிழ்ச்சி.

2016... குடும்பத்தைப் பிரிந்து வாழும் வாழ்க்கையில் நிறைய வலிகளைக் கொடுத்த ஆண்டு இது. மொத்தத்தில் இந்த ஆண்டில் கற்றது அதிகம் என்றாலும் பெற்றது குறைவுதான்... அதிலும் பட்ட கஷ்டங்கள் பட்டை தீட்டின என்று எடுத்துக் கொண்டாலும் அதிக கஷ்டம் அயற்சியை உண்டாக்கியது என்பதே உண்மை.

நாளையும் எப்பவும் போல்தான் விடியும் என்றாலும்... அந்த விடியல் எல்லோருடைய கனவுகளையும் நனவாக்கட்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

பழிக்குப் பழி..?


ழிக்குப் பழி வாங்குவது என்பது சின்ன வயதுப்  பிள்ளைகளிடம் இருக்கும் செயல்... 'நீ என்னை அடிச்சிட்டியா... நானும் உன்னை அடிக்கிறேனா இல்லையா பாரு' என்று சவால் விட்டு அவனையோ அல்லது அவளையோ திருப்பி அடித்தால்தான் ஓய்வார்கள். இது சின்ன வயதில் மனதிற்குள் தோன்றும் வன்மம். இந்தப் பழிக்குப் பழி ரொம்ப நேரம் நீடிக்காது. அடித்துக் கொண்டு புரண்டாலும் உடம்பில் ஒட்டிய மண்ணைத் துடைக்கும் நேரத்திற்குள் மீண்டும் நட்பாகி சந்தோஷமாக விளையாட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் இதே பழி வாங்கும் எண்ணம் பெரியவர்களிடம் வரும் போது அது கொலையில் முடிந்து தீராப் பகையில் கொண்டு போய் விட்டு விடுவதுடன் தொடர் கொலைகளுக்கு ஆரம்பப்புள்ளி ஆகிறது.

'என்னோட எதிரி அவன்... ரொம்ப சந்தோஷமா... நல்லாயிருக்கானே... நல்லா இருக்கலாமா... கூடவே கூடாது' என்று நினைத்து அவனைப் பற்றி அவனுக்கு நெருக்கமானவர்களிடம் போட்டு விட்டு அவர்கள் அடித்துக் கொள்வதைப் பார்த்து சந்தோஷம் அடையும் குரூரப் புத்தி கொண்டவன் தனது எதிரியை மறைமுகமாக பழி வாங்கி விட்டோம் என்று மனசுக்குள் சந்தோஷப்பட்டுக் கொள்வான்.  ஆனால் அவனது சந்தோஷம் நீடிக்குமா என்றால் அதுதான் இல்லை... இவனால் பாதிக்கப்பட்டவனுக்கு எப்படியும் இதற்கெல்லாம் காரணம் யார் என்று தெரியவரும் போது  அவன் இவனைப் பழி வாங்கக் காத்திருந்து அதற்கான நேரம் சரியாக அமையும் பட்சத்தில் அதை கச்சிதமாகச் செய்து முடிப்பான்.  இந்தப் பழிவாங்கும் நடவடிக்கை இருவரின் குடும்பத்துக்குள்ளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

இப்ப எதுக்கு இதைச் சொல்ல வாறேன்னா ரெண்டு நாளைக்கு முன்னால மனசின் பக்கத்துல ரெண்டு வக்கீலு கொம்பன் படத்தின் நாயகன் எஞ்சாதி... ஓஞ்சாதியின்னு பொஞ்சாதிக்கு அடிச்சிக்கிட்ட மாதிரி அடிச்சிக்கிட்டு படிச்ச நாதாரிங்க போட்ட சண்டையில ஒருத்தன் செத்துட்டான்னு சொல்லியிருந்தேன் இல்லையா... கொன்னவன் ஜெயிலுக்குப் பொயிட்டான்... கொஞ்ச நாள்ல ஜாமீன்ல வருவான்... அவனை நாங்க போடுவோம்ன்னு செத்தவனோட குடும்பம் இப்பவே சொல்லிக்கிட்டு இருக்கு...  அவன் எப்ப வந்தாலும் சொன்னபடி அவனைப் போடுவானுங்க... அப்புறம் அவனோட ஆளு இவங்கள்ல ஒருத்தரைப் போடுவாங்க... அப்புறம் இவங்க அங்க ஒருத்தரை... இப்படி பழிக்குப் பழி தலைமுறை தலைமுறையாத் தொடரத்தான் செய்யும்... பகை வளர்க்கும் பகை இது. இது பத்தையில நெருப்பை வச்ச மாதிரி... எல்லாப் பக்கமும் பிடித்து எரியாமல் விடாது.

எனக்குத் தெரிந்த ஒரு அம்மா, ரொம்ப பணக்காரக் குடும்பமெல்லாம் கிடையாது... கஷ்டப்பட்டவங்கதான்... அவங்களோட மகன் தன்னோட மனைவியுடன் சண்டை போடுவதையே வாடிக்கையாக வைத்திருப்பான் போல...  இந்த அம்மாவும் வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்காது போல... புருஷன் பொண்டாட்டி சண்டையின்னா அவங்க கத்திட்டு சமாதானம் ஆயிருவாங்கன்னு போக வண்டியதுதானே... அதை விட்டுட்டு அப்பத்தான் மாமியாருங்கிற பவுசைக் காட்டும் போல... அவன் அடிக்கும் போதெல்லாம் நல்லா போடுடான்னு சொல்லி அவனை ஏத்திவிடும் போல... ஒரு சில நாட்களில் அவளை வெட்டுடான்னு ஏத்திவிடுவாக போல... ஒரு நாலைஞ்சு மாசத்துக்கு முன்னால பொண்டாட்டி கூட சண்டை போட்டிருக்கான்... சண்டை  ரொம்ப வலுத்துப் போக, சண்டாளன் கோவத்துல பொண்டாட்டியை வெட்டிக் கூறு போட்டுட்டான். அவனையும் கொலை செய்யத் தூண்டிய அம்மாவையும் அதற்கு உடந்தையாக இருந்த அண்ணன் பொண்டாட்டியையும் தூக்கி உள்ள போட்டுட்டாங்க.

அந்தப் பொண்ணோட பொறந்தவனுங்க உன்னை பழிக்குப் பழி வாங்காம விடமாட்டோம்டான்னு ஒரு வெறியோட திரிஞ்சிருக்கானுக. ஜெயில்ல இருந்து மூணு பேரும் ஜாமீன்ல வந்துட்டாங்கன்னு தெரிஞ்சதும் காரியத்தை முடிக்க காலநேரம் பாத்துக்கிட்டு இருந்திருக்கானுக... சில நாளுக்கு முன்னால கோர்ட்டுக்கு கையெழுத்துப் போடப் போயிருக்காங்க இவங்க நேரம் கலாம் ஐயா செத்ததால அரசாங்கம் விடுமுறை விட்டிருச்சு. உடனே அண்ணன் பொண்டாட்டி அப்பன் வீட்டுக்குப் போக, ஆத்தாளும் மகனும் பஸ் ஏறி மக வீட்டுக்குப் போயிருக்காங்க... தங்களோட உடன்பிறப்பை சாகக் கொடுத்தவனுங்க ஏற்பாடு பண்ணுன ஆளுங்க வழியில பஸ்ஸை மறித்து எல்லோரையும் இறங்கச் சொல்லிவிட்டு பஸ்ஸூக்குள்ள வச்சே ஆத்தாளையும் மகனையும் அரிவாளால் ஆய்ந்து போட்டுட்டு பொயிட்டானுங்க. பழிக்குப் பழி வாங்கிட்டோம்ன்னு சந்தோஷப்பட்டுகிட்டாலும் ஒரு வயதான பொம்பளையை வெட்டிச் சாய்க்க எப்படி மனது வந்தது? பாவம் கையெடுத்துக் கும்பிட்டிருக்கும் போல கையில வெட்டியிருகானுக... ஒரு பத்துப் பதினைந்து போட்டோவை மச்சான் வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்தான்... கொடூரம்ன்னா கொடூரம் அம்புட்டுக் கொடூரம்... பாக்க முடியாம அப்பவே அழிச்சிட்டேன். இந்த பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையால் யாருக்கு லாபம்? இவங்களை வெட்டியவனின் சாவு எந்த விதத்தில் அமையும்..? எவனோ ஒருத்தன் அவனை வெட்டுவான்? இப்படித்தானே மாறி மாறி போய்க் கொண்டிருக்கும். பழி வாங்குவதால் ஒரு பிரயோசனும் இல்லை என்பதை ஏன் நாம் உணருவதில்லை..?

'உன்னை நான் பழிக்குப் பழி வாங்குறேனா இல்லையா பார்' என்று சண்டையில் பேசிக் கொண்டாலும் அதை எல்லாம் மறந்து வாழும் சிறுவர்கள் உலகமே சிறப்பானது. அது கள்ளங் கபடமில்லாதது. அடித்து உருண்டு ஒருவர் முகத்தில் ஒருவர் நகத்தால் கீறிக் கொண்டாலும் 'பார்றா நீ கீறுனதை... ' என்று ஒருவருக்கு ஒருவர் காட்டிக் கொள்வதில் ஆகட்டும்... 'சரிடா... இனி அப்படிச் செய்ய மாட்டேன்' என்று சொல்லி அணைத்துக் கொள்வதில் ஆகட்டும்.... அவர்களின் முன்னே பத்து நிமிடம் கூட வாழாத பழிக்குப் பழி என்னும் சொல் பழி வாங்கப்படுகிறது. பெரியவர்கள் மத்தியில் அந்தச் சொல்லுக்கு பலம் சேர்க்கப்படுகிறதே தவிர அதை தூக்கி எறிய நினைப்பதில்லை. அந்தச் சொல்லை அங்காளி பங்காளி எல்லாம் எண்ணெய் ஊற்றி வளர்க்கத்தான் செய்வார்களே தவிர யாரும் அதை விட்டுத் தள்ளுன்னு சொல்றது இல்லை.

பழி வாங்கும் எண்ணம் மனசுக்குள் வந்தாலே அந்த வன்மம் வளர்ந்து வளர்ந்து... மிகப் பெரிய விருட்சமாகிறது. அந்த விருட்சம் விழுதுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை... எனக்கு இப்ப வேண்டியது அவனை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்பது மட்டுமே என்ற எண்ணத்தின் உந்துதலே மிகப்பெரிய தவறுகளைச் செய்ய வைக்கிறது. அதனால் ஒருவன் பாதிக்கப்படுகிறான்... மற்றொருவன் வாழ்க்கை இழக்கிறான் என்பதுடன் முடிவதில்லை... அதன் பிறகான நாட்களில் அவர்களின் வாரிசுகளும் தங்களின் வாழ்வின் வசந்தத்தை இழக்கிறார்கள் என்பதை யாரும் நினைப்பதில்லை. அந்த நேரத்தில்  என்ன நினைக்கிறார்களோ அது நடக்க வேண்டும் அவ்வளவே. ஆனால் வாழ்க்கை...?

இந்தப் பழிவாங்கல் மனிதர்களிடம் மட்டுமல்ல... ஐந்தறிவு ஜீவன்களிடமும் இருக்கத்தான் செய்கிறது. நாங்கள் பள்ளியில் படிக்கும் போது எங்க மாமாவின் தோட்டத்தை லீசுக்கு எடுத்து அப்பா பார்த்துக் கொண்டிருந்தார். எங்கள் தோட்டத்தைத் தாண்டி உறவினர் ஒருவரின் தோட்டம்... அவரும் தினமும் அந்த வழியாகத்தான் போவார். ஒருநாள் போகும் போது நல்லபாம்பு ஒன்று குறுக்கே நிற்க, இவரும் அதை அடித்து விட்டார். அடிபட்ட பாம்பு குடல் வெளியில் தெரிய அருகில் இருந்த புதருக்குள் புகுந்து விட்டது. தேடிப்பார்த்தார்... மற்றவர்களும் தேடினார்கள்... கண்டு பிடிக்க முடியவில்லை. சரி இந்தளவுக்கு அடிபட்டது எங்கிட்டு பொழைக்கப் போகுதுன்னு பொயிட்டாங்க... ஆனா பாருங்க... மறுநாள் அதே இடத்துல செடிகளுக்கு மத்தியில் வயித்தை இழுத்துக்கிட்டு அவருக்காக வந்து கிடக்குது அந்தப் பாம்பு.. ஆனா அதால ஓடிவந்தெல்லாம் அவரையோ அல்லது மற்றவர்களையோ கொத்த முடியாத நிலை. 'ஷ்ஷ்.. ஷ்ஷ்...'ன்னு தலையைத் தூக்கிக்கிட்டு காத்திருக்கு... அவரு அந்த வழியா போனப்போ அதைப் பார்த்துட்டாரு... சரிதான் நமக்காகத்தான் காத்திருக்குன்னு எங்க வீட்ல கம்பு வாங்கி அதை அடித்து பால், காசு, அரிசி எல்லாம் போட்டு புதைச்சாங்க.

சரி விஷயத்துக்கு வருவோம்... எந்த விஷயத்துக்காகவும் யாரையும் பழி வாங்க நினைக்க வேண்டாம். கெடுவான் கேடு நினைப்பான் என்பது போல நமக்கு ஒருத்தன் கெடுதல் நினைத்தாலும்... அதைச் செய்தாலும் நாம் நம் பாதையில் பயணித்தால் எவன் நமக்கு கேடு நினைத்தானோ அவன் அதை அனுபவித்துக் கொண்டிருப்பான்... கொலை செய்தவனைப் பழி வாங்குவதால் என்ன லாபம்... அவன் இருந்து அணு அணுவாக சித்ரவதை அனுபவித்து தான் செய்த பாவமே இப்ப அனுபவிக்கிறேன் என்று புலம்பிச் சாக வேண்டும். அதை விட்டு ஒத்தைப் போடு போட்டு நல்ல சாவை எதற்காக அவனுக்கு கொடுக்க வேண்டும். பழி வாங்கும் எண்ணம் எந்த விஷயத்திலும் மனசுக்குள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்ற கெட்ட எண்ணங்களுக்கு மூட்டை கட்டி வைத்துவிட்டு நன்மையே செய்வோம்... நல்லதையே அடைவோம்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 21 ஜூன், 2015

விடுமுறையும் திருவிழாக்களும்...

 ணக்கம்.
இறையருளால் உறவுகள் நலமாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். விடுமுறை சந்தோஷங்களில் திளைத்து மீண்டும் பாலை மண்ணில் பாதம் பதித்து ஒரு வாரம் ஆனாலும் கண்ணில் ஆடும் மனைவி மக்களின் நினைவில் இருந்து இன்னும் மீள முடியாத துயரம். என்ன செய்வது...? வாழ்க்கை இப்படி ஒரு பாதையில் பயணிக்கிறதே... 


மே மாதம் ஊருக்குச் செல்வதில் இரட்டிப்புச் சந்தோஷம்... ஒண்ணு குழந்தைகளோட நேரம் செலவிடலாம்... இரண்டாவது திருவிழாக்கள்... குழந்தைகளோட நேரம் செலவிட்டதால் எங்கு சென்றாலும் நானும் வருவேன் என்று நின்றதால் உள்ளூரிலே கூட நிறையப் பேரைப் பார்க்க முடியவில்லை... அப்புறம் எப்படி நிலவன் ஐயா, தனபால் அண்ணா, கரந்தை ஐயா, சரவணன் அண்ணாவை எல்லாம் பார்ப்பது... எல்லாரும் மன்னிக்கனும்... எப்படியும் பார்க்கலாம் என்று எழுதியிருந்தால் கண்டிப்பாக ஒருநாள் சந்திப்போம்.

எங்க ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா வைகாசி மாதம் நடந்தது. திருவிழா அன்று இரவு சன் டிவி புகழ் தேவகோட்டை ராமநாதன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. அவர் சொன்ன எல்லா நகைச்சுவைகளுமே பத்திரிக்கையில் வந்தவைதான் என்றாலும் கிராமத்து மக்கள்தானே என்று சொன்னார் போல... அதேபோல் பேசியவர்கள் எல்லாம் பெரிய ஆட்கள்தான்... அருமையாகப் பேசினார்கள். ஆனால் தேவகோட்டையைச் சேர்ந்த ஒரு குழந்தையை மேடை ஏற்றினார்கள். அதற்காகவே பேச்சாளர்களின் வரிசை மாற்றி பேச வைத்தார். அதனால் நல்லா பேசுபவர்களுக்கு நேரமில்லை என்பதே உண்மை... இதையும் ராமநாதன் அவர்கள் கிராமத்து மக்களுக்கு நாலு நகைச்சுவை சொன்னால் போதும் என்று நினைத்துத்தான் செய்தார்.


அந்தக் குழந்தை அம்மா சொல்லச் சொல்ல அப்படியே பேசினாலும் அதற்கு வளமான எதிர்காலம் உண்டு. ஒண்ணாம் வகுப்பு படிக்கும் போதே மேடையில் பயமின்றி அழகாய் அம்மாவின் வாயசைப்பைப் பார்த்துப் பேசும் அந்தக் குழந்தை பிற்காலத்தில் மிகச் சிறந்த பேச்சாளராக வரும் என்பதில் சந்தேகமே இல்லை. சிறிய கிராமம்... அவ்வளவாக கூட்டம் இல்லை என்றாலும் ஆரம்பத்தில் இருந்த கூட்டம் கடைசி வரை அப்படியே இருந்தது.

பால்குடம், கரகம் என திருவிழா மிகச் சிறப்பாக நடந்தது. ஸ்ருதியும் விஷாலும் மிக அழகாக முளக்கொட்டினார்கள் என்பது கூடுதல் சந்தோஷம். இதேபோல் இன்னும் சில திருவிழாக்கள், திருமணங்கள், விருந்துகள் என மே மாதம் அழகாய் கரைந்தது.


மீண்டும் அபுதாபி திரும்பிய போது ஏர்போர்ட்டில் பெட்டியை மாற்றி எடுத்துக் கொண்டு போன கதை அடுத்த பதிவாய்...

அப்புறம் இன்னொன்னு இன்று காலை ஸ்ருதியும் விஷாலும் போன் செய்து தந்தையர் தின வாழ்த்துச் சொன்னார்கள்... ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தது..

மன ஆறுதலுக்காக மீண்டும் எழுத ஆரம்பிக்கலாம் என்று நினைத்துத்தான் இந்தப் பகிர்வு... அடிக்கடி இல்லாவிட்டாலும் அவ்வப்போது எழுதுவேன் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.
-'பரிவை' சே.குமார். 

புதன், 25 மார்ச், 2015

ஸ்ருதி... வாழ்வின் வசந்தம்

2004 ஆம் ஆண்டு மார்ச்-26... எங்கள் வாழ்வில் மிகச் சிறந்த நாள்.



மதுரையில் தல்லாகுளத்தில் இருக்கும் ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் மனைவியை பிரசவத்திற்காக சேர்த்திருந்தோம். ஆரம்பத்தில் மருத்துவமனைக்கு செக்கப்புக்கு சென்றதில் இருந்து பத்தாவது மாதம் வரை சுகப்பிரசவம் ஆகும் என்று சொன்னவர்கள்... ஏன் வலி வந்து சேர்த்த அந்த இரவு இட்லி சாப்பிடச் சொன்னவரை அதையேதான் சொன்னார்கள். அதன்பிறகு திடீரென மீண்டும் ஸ்கேன் எடுத்தார்கள்... உடனே ஆபரேசன் பண்ணனும் என்று சொல்லிவிட்டார்கள்.

நாங்களும் அவர்களுடன் சண்டையிட்டு முடியாமல் தோற்று ஒத்துக்கொள்ள, அப்பா, அம்மா, அத்தை என எல்லாரும் பதட்டத்துடன் காத்திருக்க... மாமாவுக்கு விவரம் சொல்லி அவர் ஹோட்டலில் இருந்து வரும் முன்னரே ஆபரேசன் அறைக்குள் கொண்டு சென்றுவிட்டார்கள். நமக்கு ஒரு குழந்தை என்ற சந்தோஷம் நீங்கி... மனைவிக்கு ஆபரேசன் என்ற பயம் கவ்விக்கொள்ள என்னையறியாமல் கண்ணீர் ஓட, மாடிப்படியில் சென்று அமர்ந்துவிட்டேன்.

குழந்தை அழுகும் சத்தமும் எல்லோரும் சந்தோஷமாக பேசும் சத்தமும் கேட்க, என் மகள்... என் செல்லம் பிறந்ததை அறிந்து சந்தோஷித்தாலும் மனசு மனைவியை நாடியது. வெளியில் கொண்டு வந்து பின்னர் குளிரும் காய்ச்சலும் வர, மருத்துவர்கள் ஒன்றுமில்லை என்று சொல்லியபடி மீண்டும் ஐசியூவுக்குள் கொண்டு செல்ல, குழந்தையைக் கூட பார்க்க மனமின்றி மனைவிக்காக வேண்டுதலோடு காத்திருந்த அந்த நிமிடங்கள் இன்னும் மனசுக்குள் தடக்.. தடக்கென்று கடக்காமல் நின்று கொண்டேயிருக்கிறது.

மனைவி நினைவு திரும்பி, கொஞ்சம் பேச ஆரம்பித்ததும் மகளைக் கொஞ்சுவதே வேலையானது. அப்போது தேவகோட்டை கல்லூரியில் பணி, வார வெள்ளி மாலை கிளம்பிப் போய் மகளுடன் இருந்து திங்கள் காலை கிளம்பி வருவேன். நமக்குன்னு ஒரு வாரிசு என்ற சந்தோஷம் துள்ளலாட்டம் போட்டது. சின்ன பிள்ளையாக இருக்கும் போது கைலிக்குள் போட்டு விளையாடியது பசுமையாய்...

பின்னர் அவரும் வளர வளர... சேட்டைகளும் வளர ஆரம்பித்தது. நான் கல்லூரிக்குச் செல்லும் போது எனது பைக்கில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு விட்டுச் செல்ல வேண்டும். அதேபோல் மதியம் சாப்பிட வரும்போது கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்டாலே சிமெண்ட் தரையின் சூட்டைப் பற்றி அறியாமல் தத்தக்கா... பித்தக்கான்னு நடந்து வரும் அழகே தனிதான்... கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னம் வாய் என எச்சில் வடிய முத்தம் கொடுக்கும் செல்லத்துக்கு எப்பவும் அப்பா வேணும்... ஆம்... அப்பா செல்லமாக வளர்ந்தது. விஷால் வரும் வரை தனிக்காட்டு ராணிதான்.

சென்னையில் இருக்கும் போது என்னோடுதான் படுக்கை... பெரும்பாலும் வயிற்றில் ஏறித்தான் படுத்துக் கொள்ளும். இறக்கிப் போட்டாலும் மீண்டும் ஏறிப்படுத்து விடும். இல்லையேல் கழுத்தைக் கட்டிக் கொண்டு தூங்கும்... முகப்பேர் வேலம்மாளுக்கு எல்.கே.ஜி. போகும் போது இரவு வேலை பார்த்துவிட்டு வந்து படுத்தாலும் குளிக்கவும்... சாப்பாடு ஊட்டவும்... பள்ளியில் கொண்டு சென்று விடவும் அப்பா வேணும்... அப்பா இப்பத்தான் வந்தாக... தூங்கட்டும் பாப்பா என்று அம்மா சொன்னாலும் பக்கத்தில் உக்காந்து அப்பா... அப்பான்னு கிளப்பிக் கொண்டு செல்லும்.

காரைக்குடி வந்து பள்ளிக்குச் சென்ற நேரத்தில் நான் அபுதாபி வந்தாச்சு... பின்னர் வருடம் ஒருமுறைதான் என்றாலும் அந்த ஒரு மாதமும் அப்பாதான் எல்லாம்... அப்பா... அப்பா.... எப்பவும் அப்பா பிள்ளை.... விஷாலும் அப்பாவுக்கு போட்டி போட ஒரே களபரம்தான். இந்த சண்டை இன்று வரை தொடருது. அதுவும் ஒரு சந்தோஷம்தானே,

எல்லாருக்கும் பாப்பா ஆகிப்போன எங்கள் செல்லத்துக்கு வயது பதினொன்று ஆச்சு.... டேய் பாப்பான்னு சொல்லாம அக்கான்னு சொல்லுடா என்று விஷாலிடம் அம்மா மிரட்ட, அப்பா பாப்பான்னு சொல்லாம அக்க்க்க்க்க்கான்னு சொல்லணுமாம் என்று சொல்லிச் சிரிக்கிறான். இப்பவும் பாப்பாதான் போடுறான்.

படிப்பு விஷயத்தில் திட்டும் போது என்னையவே திட்டுங்க என்று அழுதாலும் கத்தினாலும் அடுத்த நிமிடமே அப்பா என்று ஒட்டிக் கொள்ளும் அந்த அன்பு பெண்பிள்ளைகளுக்கே உரியது. அது இன்னும் கூடுதலாய்....

ஸ்ருதி... 

இதுதான் எங்கள் செல்லத்தின் பெயர்... ஆனா எல்லாருமே பாப்பான்னுதான் கூப்பிடுறோமா... ஸ்ருதிங்கிறது பள்ளியில் மட்டுமே கூப்பிடும் பெயராகிவிட்டது. வீட்டில் பெரிசு முதல் சிறுசு வரை எல்லாருக்கும் பாப்பாதான்... பாப்பா ஐயாவின் (மனைவியின் அப்பா) செல்லம். அவருக்கு காலையில் பேத்தியிடம் பேசவில்லை என்றால் வேலையே ஓடாது... அதே போல் அவர் பேசவில்லை என்றால் இவங்க போன் பண்ணி பேசிட்டுத்தான் பள்ளிக்குப் போவாங்க...

மார்ச் -07 என்னோட பிறந்தநாள்... மார்ச் - 15 தங்கை (நண்பனின் மனைவி) பிறந்தநாள்... மார்ச் - 21 பேராசான். மு.பழனி இரகுலதாசன் (எங்க ஐயா) பிறந்தநாள்... அந்த வரிசையில் மார்ச் - 26  எங்க செல்லத்தோட பிறந்தநாள்... 

நாளைக்கு எங்க செல்லத்துக்கு பிறந்தநாள்... கைகளில் தவழ்ந்த எங்க செல்லம் பதினோறாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்... உங்கள் ஆசிகளையும் அன்பையும் வழங்குங்கள்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 5 ஜனவரி, 2015

என் உயிரே...


ன்பு நிறைந்த மனைவி இருந்தால் போதும் வாழ்க்கை வசப்படும். அப்படி ஒரு அன்பான மனைவி கிடைக்கப் பெற்ற பாக்கியவான்களில் ஒருவன் நான். பத்து வருடங்களுக்கு முன்னர் என் கரம் பிடித்தவள் அன்பிலே என்னை விட உயர்ந்தவள்.

மதுரையில் பிறந்து... படித்து... வளர்ந்தவள், கிராமத்தில் பிறந்து... வளர்ந்த எனக்கு மனைவியானாள். பட்டணத்துப் பெண் இந்தப் பட்டிக்காட்டானுக்கு சரியாகுமா என்ற யோசிப்பினூடே என்னுள் புகுந்து என்னை ஆட்கொண்டவள்.

பெண் பார்க்கும் படலமெல்லாம் துவங்கவில்லை... பார்த்தது அவளை மட்டுமே... வேலையும் சரியில்லை... சொற்ப சம்பளமே என்ற நிலையில் இப்போது திருமணம் வேண்டாம் என்று இருந்தவனை, பெண் பார்க்க அழைத்துச் சென்றபோது வேண்டாம் எனச் சொல்ல நினைத்து சொல்லாமலே வந்து அவள் கரம் பற்ற, என் இதயத்துணை ஆனவள்.

ஆரம்பகால வாழ்க்கையில் புறாக்கூண்டு வீட்டுக்குள் இருவரும் வாழ்ந்த போதும் பெரிய வீட்டில் பறந்து திரிந்தவள் என்ற எண்ணம் இல்லாமல் என்னோடு கஷ்டமான சூழலிலும் சந்தோஷ வானில் பறந்தவள்.

என்னை விட்டுப் பிரியக்கூடாதென என்னோடு ஸ்ருதி ஒன்றாம் வகுப்பு படிக்கும் வரை சேர்ந்தே இருந்தவள், வாழ்க்கையில் பணம் முக்கியம்... மற்றவர் முன் நாமும் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதால் பாசத்தை தேக்கி வைத்து எனக்கு பிரியாவிடை கொடுத்தவள்.

ஆறு ஆண்டுகளாய் தனித்தனியே வாழ்க்கை என்ற போதிலும் தினமும் என்னுடன் சிரித்துப் பேசினாலும் இரவுகளில் பிரிவின் சுமையை கண்ணீரில் கரைத்துக் கொண்டிருப்பவள்.

யாரிடமும் எதற்காவும் என்னை விட்டுக் கொடுக்காதவள்... தவறாக பேசுபவர்களை தட்டிக் கேட்பவள்.

என் கோபத்தை எல்லாம் பொறுத்துக் கொண்டு பத்தாண்டுகளாக என்னோடு பயணிப்பவள்.

எனக்கு எதுவும் வேண்டாம்... நீங்கள் அருகில் இருந்தால் போதும் என தினமும் சொல்லிச் சொல்லி வருந்துபவள்.

பொருளாதாரத்துக்கான பிரிவு நிரந்தரமல்ல என்ற போதிலும் இத்தனை ஆண்டு காலப் பிரிவு எங்களுக்குள் இன்னும் அதீத பாசத்தையும் நெருக்கத்தையும் கொடுத்திருப்பதற்கு காரணமானவள்.

நானே உலகம்... நானே வாழ்க்கை.... நானே உடம்பு... நானே உயிர்... என்று எனக்காக வாழும் ஒரே ஜீவனவள்.

எத்தனை கோபத்தை விஷமெனக் கக்கினாலும் அத்தனையும் துடைத்து அடுத்த நிமிடமே அன்பாய் பேசுபவள்.

எங்களுக்குள்ளும் சண்டைகள், சச்சரவுகள், கோபங்கள் எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன... இல்லாத வாழ்க்கை ஒன்று இருந்தால் அது சந்தோஷம் இழந்த வாழ்க்கைதானே..? எங்களுக்குள் இதெல்லாம் இருந்தாலும் அவளின் நேசமும் பாசம் எல்லாத்தையும் மறைத்து விடும்... அப்படிப்பட்ட பாசத்தின் பிறப்பிடமானவள்.

ஊருக்கு கூட்டி வருவதாய் சொல்லிச் சொல்லி வருடங்கள் கடந்தாலும் அதற்காக சில நேரம் கோபப்பட்டிருந்தாலும் எல்லாம் மறந்து எனக்காய் வாழ்பவள்.

தாய்க்குப் பின் தாரம் என்பார்கள்... எனக்கு தாரமே தாயாய் வாய்த்திருக்கிறாள்... எல்லாம் முற்பிறவிப் பயனோ இல்லை நான் வணங்கும் தெய்வங்கள் கொடுத்த நலனோ... நான் அடைந்த அன்பானவள்.

குழந்தைகள் மீது பாசம் வைத்திருப்பதால் அவள் மீது பாசம் இல்லை என செல்லச் சண்டை இட்டாலும் எனது இதயத் துடிப்பே அவள்தான் என்பதை அறிந்தவள்.

முகத்துக்கு முன்னே... பின்னே... என இரண்டு முகம் காட்டும் உறவுகளை மதிப்போடும்... உள்ளன்போடும்.. கவனிப்பவள்.

பெரியவர்களை மதிக்கத் தெரிந்தவள்... எங்கம்மா கூட வீட்டுக்கு வந்த மருமக்களெல்லாம் நல்லவளுங்க... பெத்ததுகதான் சரியில்லைன்னு அடிக்கடி சொல்வாங்க.... அப்படி அனைவருக்கும் அன்பானவள்.

இந்த வருடத்தில் ஒரு இரண்டும் மாதமாவது இங்கு கூட்டி வந்து என்னுடன் வைத்துக் கொள்ளும் முயற்சியில் நான்... இறையருளால் விரைவில் நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


என்னவள்...

என் இதயம் அவள்...

என் இயக்கம் அவள்...

எனக்காக வாழ்பவள்...

எனக்கு தாயானவள்...

என் செல்ல நித்திக்குட்டிக்கு இன்று பிறந்தநாள்...

எல்லோரும் வாழ்த்துங்க சொந்தங்களே... உங்கள் ஆசி எங்களுக்கு நிறைவான வாழ்வைத்தரும்...
-'பரிவை' சே.குமார்.

புதன், 10 டிசம்பர், 2014

பொன்னான சந்திப்பு... சிகரங்களுடன் மகிழ்வான தருணம்

டிசம்பர் - 3, புதன்கிழமை

அது ஒரு பொன்மாலைப் பொழுது... ஆம் வெயில் தாக்கும் அமீரகம் குளிருக்குள் தன்னை குந்த வைக்க ஆரம்பித்திருக்கும் குளிரான மாலை. அபுதாபியில் இரு பெரும் சிகரங்களுடன் சில மணித்துளிகள் பேசி மகிழ வைத்த பொன்னான மாலை... என்றும் மனசுக்குள் பூத்துச் சிரிக்கும் சந்திப்பாக மாற்றிய அழகிய மாலை...

(வசந்த மண்டபம், Killergee, மனசு)
வலையில் எழுத ஆரம்பித்து இணைய வழியாகவும் தொலைபேசி வழியாகவும் உறவு கொண்டிருந்தாலும் நேருக்கு நேர் சந்தித்து அளாவளாவும் வாய்ப்பு எட்டாமல்தான் கழிந்து கொண்டிருந்தது. சீனா ஐயா அவர்கள் என்னைச் சந்திக்கும் முன் அம்மாவுடன் என் இல்லம் சென்று வந்தார்கள். அதன் பின்னர் தேவகோட்டை எங்கள் இல்ல புதுமனை புகுவிழாவிற்கு வந்தபோதுதான் அவரை நேரில் சந்தித்தேன். விருந்து உபச்சாரம் என்று இருந்ததால் அதிக நேரம் பேசமுடியவில்லை. மதுரை வரும்போது கண்டிப்பாக வீட்டிற்கு வரணும் என்றார். நானும் மதுரை போனேன். ஆனால் ஐயா வீடு செல்லவில்லை. இப்பவும் அவருடன் பேசினால் நித்யா, ஸ்ருதி, விஷால் என தனித்தனியாக பெயர் சொல்லி நலம் விசாரிப்பார்.

மற்றபடி நிலவன் ஐயா, குடந்தை சரவணன் அண்ணன், ஜெயக்குமார் ஐயா, தனபாலன் அண்ணா என நிறையப் பேரை சந்திக்க நினைத்து இன்னும் வாய்ப்பு வராமல் தள்ளிக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. அண்ணன் கில்லர்ஜி அவர்களுடன் நட்பான பின் அவரும் அபுதாபியில் இருப்பதை அறிந்து சந்திக்க நினைத்திருந்த வேளையில் மதுரை பதிவர் சந்திப்புக்கு போய் வந்தவர் இங்கு வந்ததும் என்னைச் சந்திக்க ஒரு மாலையில்அன்போடு ஓடி வந்தார்.  முதல் சந்திப்பு... பரஸ்பரம் பேச்சுக்கள்... பின்னர் சந்திக்கும் போது ஒரு உரிமையுடன் பேச ஆரம்பித்தோம். அதில் இன்னொரு சந்தோஷம் என்னவென்றால் அவர் தேவகோட்டையைச் சேர்ந்தவர் என்றதும் ஊர்ப்பாசமும் சேர்ந்து கொண்டது.

தூத்துக்குடி முத்து 'வசந்த மண்டபம்' மகேந்திரன் அண்ணன் அவர்கள் இரண்டு மாதமாகவே சந்திக்க வேண்டும் எனச் சொல்லிக் கொண்டே இருந்தார். இங்கு இருக்கும் ஒரு மாதமும் அவருக்கு கடலுக்குள் வாழ்க்கை. அதனால நாங்கள் அவரைத் தேடிப் போகவோ அல்லது அவர் எங்களைத் தேடி வரவோ முடியாத சூழல். ஊருக்குச் செல்லும் போதோ அல்லது திரும்பி வரும்போதோ சந்தித்தால்தான். அதனால் அவர் சொல்லியபடி சந்திப்பதில் சிரமம் இருந்தது. ஆனால் போனில் எங்கள் உறவு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

(நான், சகோதரர்கள் மகேந்திரன், கில்லர்ஜி மற்றும் கண்ணன்)
போன வார புதன்கிழமை ஊருக்கு செல்வதற்காக அபுதாபி வருவேன். அப்போது நாங்கள் தங்கி இருக்கும் ஹோட்டலில் சந்திக்கலாம் என்று அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் போனில் சொன்னார்.  நானும் கில்லர்ஜி அண்ணாவும் அவரைச் சந்திக்கும் ஆவலுடன் இருந்தோம். புதன்கிழமை அங்கிருந்து கிளம்ப லேட்டாகி விட்டது. நீங்க அபுதாபி மாலுக்கு வாங்க ஒரு பத்து நிமிடமாவது உங்களுடன் பேசிவிட்டுப் போகிறேன் எனச் சொன்னார். அலுவலகத்தில் இருந்து இறங்கும் போது நீங்க நாங்க தங்கியிருக்க ஹோட்டல்கிட்ட வாங்க நான் அங்கே வந்துடுறேன்னு சொன்னார். இதற்கு இடையில் கில்லர்ஜி அண்ணா யாஸ் சென்றவர் அவரை அபுதாபி மாலில் பார்த்துவிட்டு எனக்கு போன் செய்து அவரைப் பார்த்துட்டேன். நான் யாஸ் பொயிட்டு ஹோட்டலுக்கு வந்துடுறேன். நீங்க வந்துருங்க என்றார்.

என்னைப் பொறுத்தவரை ஒரு இடத்துக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டால் பத்து நிமிடம் முன்னர் போய்விடுவதுதான் வழக்கம். அப்படியே 20 நிமிடம் முன்னதாக மகேந்திரன் அண்ணா சொன்ன ஹோட்டலுக்குச் சென்று வாயில் ஓரமாக வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன். சைனா போன் விற்கும் பாகிஸ்தானிகள் சுற்றிச் சுற்றி வந்தார்கள். என் கையில் இருக்கும் போனையும் என்னையும் மாறி மாறி பார்த்தார்கள். எனக்கு அருகே நின்ற ஒரு சீனனிடம் போன் வேண்டுமா என்று கேட்க அவர் தனது மொபைலைக் காட்டி இது போதும் என்று சிரிக்க இடத்தைக் காலி பண்ணினார்கள். நேரம் கரைய என்னையே கூர்ந்து பார்த்த ஒரு பாகிஸ்தானி என்ன இங்கயே நிக்கிறே என்றான். அந்த ஹோட்டல் இரவு நடனங்கள், இரவுக்கிளிகள் என பெயர் போன கச்சடா ஹோட்டல் என்பது தெரியும். அவனின் கேள்வியில் மேலே சொன்னவை தொக்கி நிற்க, என்னோட பிரண்டுக்காக நிக்கிறேன்... உனக்கு என்ன வேணும் என்றதும் ஓகே... ஓகேன்னு சொல்லி நகர்ந்தான்.

சிறிது நேரத்தில் மகேந்திரன் அண்ணனும் அவரின் நண்பரும் மதுரைக் காளவாசல்காரருமான கண்ணன் அண்ணனும் வந்து சேர்ந்தார்கள். கண்ண அண்ணனை மதுரைக்காரர் என்று அறிமுகப்படுத்தியதும் அவரின் பேச்சும் செயலும் மனசுக்குள் ஒட்டிக்கொள்ள மிகவும் நெருக்கமானோம். என்னதான் இருந்தாலும் நம்ம மாமனார் ஊர்க்காரருல்ல.... அதுபோக என்னோட மூத்த அண்ணன் கண்ணன் என்பதாலும் ஒரு ஒட்டுதல் வந்தது. மதுரைக்குப் போனா மாமாவை கடையில் போய் பார்த்துட்டுப் வாங்கன்னு விவரம் சொல்லி விட்டேன்னா பார்த்துக்கங்க.

(தேசிய நாளுக்காக அமைத்த குடிலில் இப்படித்தான் உக்காரணும் எனச் சொன்ன கில்லர்ஜி மற்றும் நாங்கள்)
மகேந்திரன் அண்ணனுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே யாஸ் சென்ற கில்லர்ஜி அண்ணன் அவர்கள் தனது காரை பார்க் பண்ணிவிட்டு வர எல்லாருமாக அறைக்குச் சென்றோம். கண்ணன் அண்ணன் அவரது அறைக்குச் செல்ல நாங்கள் மூவருமாக அரட்டையில் அமர்ந்தோம். பல விஷயங்கள் பேச, இடையில் மகேந்திரன் அண்ணன் காபி போட்டுக் கொடுத்தார். குடித்தபடி பேசிக் கொண்டிருந்தோம். கடலுக்குள் அவரின் வாழ்க்கை பற்றிப் பேசினோம்... வலைத்தளங்கள் பற்றி பேசினோம்... கொஞ்ச நேரச் சந்திப்பு என்றாலும் நீண்ட நாள் உறவை எங்களுக்குள் தேக்கி வைத்தது.

எங்களுடன் பேசியபடியே கிளம்பிக் கொண்டிருந்த மகேந்திரன் அண்ணனுக்கு ஊரில் இருந்து அழைப்பு... தனது மனைவியுடன் பேசியவர் குமார் வந்திருக்கார்... கில்லர்ஜி வந்திருக்கார் என்று சொல்ல, எங்களைச் சொல்றாரே அவங்களுக்குத் தெரியுமா என்று ஆச்சர்யப்பட்டால் அவங்க எங்க வந்தாங்க... அங்கயா என்று ஆச்சர்யப்பட்டதுடன் கேட்டவரிடம் இந்தா நீயே பேசு எனக் கொடுக்க பல நாள் பழக்கம் போல திருமதி. மகேந்திரன் அவர்கள் எங்களுடன் போனில் பேசினார். எங்களை நல்லாத் தெரியும் என்றார். கூடுதலாக எங்கள் எழுத்துக்களை வாசிப்பேன் என்று சொல்லி சந்தோஷப்பட வைத்தார். எல்லாரையும் தெரியுங்க... ஒரு சிலர் இலக்கியம் இலக்கணம் குறித்த சந்தேகங்களுக்கு அவங்களுக்கு போன் போட்டுக் கேட்பாங்க என மகேந்திரன் அண்ணன் சொன்னார். ஆம் அவங்க தமிழாசிரியர்... எப்படிப்பட்ட உறவு பாருங்கள்... அண்ணனைச் சந்தித்ததே மூன்று மாத முயற்சிக்குப் பிறகுதான் நடந்தது. அவரைச் சந்தித்த அன்றே அண்ணியுடன் பேசும் வாய்ப்பு வேறு... எல்லாரையும் உறவாக்கி வீட்டில் சொல்லி வைத்திருக்கும் மகேந்திரன் அண்ணனின் நட்பு கிடைத்ததும் அண்ணியுடன் பேசியதும் எங்களுக்கு வரப்பிரசாதமே என்றால் அது மிகையில்லை. 

பின்னர் கண்ண அண்ணனை அழைத்து போட்டோ எடுக்கச் சொன்னால் அவர் ஒரு போட்டோ சூட்டே நடத்தி முடித்து விட்டார். பின்னர் மேலிருந்து கீழிறங்கி வந்து கில்லர்ஜி அண்ணாவின் ஆசைக்கு இணங்க ரிசப்ஷனில் வைத்து மேலும் போட்டோ சூட்... எல்லாம் முடித்து அவர்களை காரில் ஏற்றி விட்டு ஊருக்குப் போய் மிஸ்டு கால் கொடுங்க... கூப்பிடுறோம் என்று சொல்லி (ஒரு வாரம் ஆச்சு... இன்னும் மிஸ்டுகால் அடிக்க டிரைப் பண்ணுறாரு போல... ஹி.. ஹி... எஞ்சாய் அண்ணா...) நாங்க இருவரும் கிளம்ப, கில்லர்ஜி அண்ணா என்னை எனது அறைக்கு அருகில் இறக்கிவிட்டுச் சென்றார். ஒரு சந்தோஷ சந்திப்பை அனுபவித்த மகிழ்வுடன் அறைக்குச் சென்றேன்.

(சந்திப்பின் நிறைவாக ஹோட்டல் ரிஷப்சனில் அங்கிருந்த தமிழ் நண்பர் எடுத்த போட்டோ)
சொல்ல மறந்துட்டேனே... நானெல்லாம் தொடர்கதை என்றால் கூட அந்தந்த வார பகுதி அன்றுதான் எழுதிப் பதிவு செய்வேன். ஏன் சந்திப்பு குறித்து எழுதச் சொல்லி அடிக்கடி கில்லர்ஜி அண்ணா ஞாபகப்படுத்தினாலும் வேலை மற்றும் அசட்டையால் ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் நம்ம ஜீயோ இத்தனாம் தேதிக்கு இந்தப் பகிர்வு என எழுதி சேமித்து வைத்திருப்பதைச் சொன்னபோதுதான் வலையில் அவரின் ஆர்வமும் எழுத்து மீதான காதலும் எங்களுக்கு தெரிய வந்தது. உண்மையிலேயே கில்லர்ஜி பாராட்டுக்குரியவர்தான்.

எங்கள் சந்திப்பு குடும்பச் சந்திப்பாக தொடரும் என்ற நம்பிக்கையோடு நட்பின் சந்திப்பை அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 8 டிசம்பர், 2014

மனசு பேசுகிறது : குழந்தைகள் கவனம்


ழை நேரம்...

வீட்டுக்கு அருகில் தண்ணீர் தேங்கி இருக்கும்.

பூச்சி, பாம்புகள் ஊர்ந்து வரலாம்.

குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில் கவனம் வேண்டும்.

அதுவும் குறிப்பாக நடக்க ஆரம்பிக்கும் குழந்தைகள் எங்காவது ஓடத்தான் நினைப்பார்கள்.

அவர்களுக்குத் தெரியாது என்ன கிடக்கும்... என்ன கடிக்கும் என்பது... அவர்களால் அதைச் சொல்லவும் முடியாது என்பது வேறு விஷயம்...

பள்ளிக்கு செல்ல ஆரம்பிக்கும் குழந்தைகளும் இப்படித்தான் இருப்பார்கள். ஒரு சிலர் ஓடுற பாம்பை பிடித்து விளையாண்டாலும் ஆச்சர்யமில்லை. எனவே குழந்தையின் மீது கவனம் வையுங்கள்.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் ஒரு வருத்தமான நிகழ்வு... அம்மாவின் அசால்ட்டால் ஒரு இளம் குருத்து வளரும் முன்னே வாடிவிட்டது. இந்த வேதனையான நிகழ்வு எங்கள் அறை நண்பரின் குடும்பத்தில் நிகழ்ந்துள்ளது. அவரின் தம்பி மகனுக்குத்தான் இப்படி ஒரு மரணம்...

ஓடி ஆடும் பையன்... துறுதுறுப்பான பையன்... எல்லோரும் கொண்டாடும் பையன்... அதனால்தானோ என்னவோ தானும் கொண்டாட நான்கு வயதிற்குள் படைத்தவன் கூட்டிக் கொண்டு விட்டான் போலும்.

வாகனங்கள் அவ்வளவாக பயணிக்காத ஒரு சிறிய கிராமத்தில் அப்பத்தாவீடு, பெரியப்பா வீடு, சித்தப்பா வீடு என இரண்டு தெருவுக்குள் சொந்தங்கள் இருப்பதால் இங்கும் அங்கும் ஓடித் திரிந்தவன் அவன். எடுப்பார் கைப்பிள்ளையாய் எல்லோருக்கும் செல்லம்.

எப்பவும் போல் நேற்று முன்தினமும் சுற்றித் திரிந்திருக்கிறான். நாலு வயசுப் பையனை வெளியே சுற்ற விடுவதே தவறு என்பது ஏன் தெரியவில்லை அந்தத் தாய்க்கு. வெளியே சென்று வந்தவன் சோர்வாக இருக்கவும் சுத்திவிட்டு வந்ததால சோர்வாக இருக்கான் போலன்னு நினைத்து அவனுக்கு சாப்பாடு கொடுத்து படுக்க வைத்திருக்கிறார். தூங்காமல் கிடந்தவன் சிறிது நேரத்தில் வாந்தி எடுக்கவும் என்னமோ ஏதோ என்ற பதட்டமில்லாமல் எதாவது பூச்சி கீச்சி கடிச்சிருக்கும் என்று அருகில் இருக்கும் பூசாரியிடம் மந்திரித்து இருக்கிறார்.

அவன் உடம்பில் இருந்த விஷம் மந்திரத்துக்கு கட்டுப்படுமா என்ன... பையனின் நிலைமை இன்னும் மோசமாக உறவுகளிடம் சொல்லாமல் அவரது தம்பிக்கோ யாருக்கோ போன் செய்து அவர்கள் வந்து கூட்டிச் சென்று அரசாங்க மருத்துவமனையில் கொண்டு போய் காட்ட குழந்தை இறந்து விட்டது என்று சொல்லிவிட்டார்கள். என்ன செய்வது? அரசு மருத்துவமனை... இறந்து போன குழந்தையை கூறு போட்டுத்தான் கொடுப்போம் என்று சொல்லி விட்டார்கள். அரசாங்க மருத்துவமனைக்குச் சென்றதை தவறாகச் சொல்லவில்லை... நிலைமை ரொம்ப மோசம் என்று சொல்லும் போது தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கலாம் என்பதே எண்ணம். போஸ்ட் மார்டம் முடித்து நேற்றுத்தான் கொடுத்திருக்கிறார்கள். 

அம்மாவின் அசட்டையால் நான்கு வயது மகனை இழந்திருக்கிறார்கள். குழந்தை சோர்வாக இருக்கும் போது அதன் சட்டையைக் கழட்டி என்ன ஏது எதாவது பூச்சி கீச்சி கடிச்சிருக்கான்னு பாக்க வேண்டாமா? பூசாரியிடம் மந்திரிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை... இதுதான் கடித்தது என்று தெரிந்து மந்திரித்து இருந்தால் சரி... என்ன கடித்தது என்றே தெரியாமல் மந்திரிப்பது என்பது சரியானதா? இந்தக் காலத்தில் வீதிக்கு வீதி மருத்துவமனைகள் இருக்கும் போது மந்திரித்தல் தேவையா? பிள்ளை ரொம்பச் சோர்வாக இருக்கும் போது பக்கத்தில் இருக்கும் சொந்தங்களை விடுத்து தூரத்தில் இருக்கும் சொந்தத்துக்கு அழைப்பு விடுவது என்பது சரியானதா? என இங்கு நண்பர் புலம்பித் தீர்க்கிறார்.

மழலைப் பேச்சைக் கேட்டு மகிழந்த உள்ளம் இப்போ மயங்கிக் கிடக்கிறது. பெற்ற தகப்பனோ பதினைந்து நாளைக்கு முன்னால்தான் சௌதிக்கு அரபி வீட்டு டிரைவராக சென்றிருக்கிறார். விவரம் தெரிந்ததும் வர நினைத்து அரபியிடம் கேட்க, அவரோ செலவு தொகையைக் கொடுத்துவிட்டு முடித்துக் கொண்டு போ என்று சொல்லி விட்டார். எங்கள் அறை நண்பர் இங்கிருந்து பணம் புரட்டி தம்பிக்கு அனுப்ப, அரபி நேற்றுக் காலை அவசர அவசரமாக அவரின் விசாவை கேன்சல் செய்து இரவு விமானத்திற்கு ஏற்றிவிட்டுவிட்டார்.

இன்று காலை சென்னை வந்து... அங்கிருந்து பெரம்பலூர் போயி... அறுத்துப் போடப்பட்ட மகனை கண்ணாடிப் பெட்டிக்குள் பார்த்து கதறி, வழியனுப்பி வைத்து விட்டு அண்ணனிடம் அழுகிறார். என்ன செய்வது..? சொல்லும் ஆறுதல் வார்த்தைகள் இழந்த குழந்தையை மீட்டெடுக்குமா என்ன... வலிகள் மறக்கும் வலிமையை இறைவன் கொடுத்திருந்தாலும் இது மறக்க நினைக்கின்ற வலியா? மறக்கத்தான் முடியுமா? 

ஒரு உயிர் போனதற்கு யாரைக் குற்றம் சொல்வது... படரும் முன்னே பறித்த இறைவனைக் குற்றம் சொல்வதா? அல்லது பிள்ளையை பற்றி கவலை இல்லாத தாயைக் குற்றம் சொல்வதா? அல்லது பாலகன் என்று தெரிந்து கடித்து வைத்த பாம்பைக் குற்றம் சொல்வதா? வீட்டுக்கு ஓடிவரும் குருத்தை இனி இப்படி விடாதே எனச் சொல்லாத உறவுகளைக் குற்றம் சொல்வதா?இதில் யாரை குற்றம் சொல்லி என்ன செய்ய... அந்தப் பாலகம் பறந்து நாட்களில் மூன்று  முடிந்து விட்டது. அவன் ஓடி ஆடி விளையாண்ட வீதிகள் வெறிச்சோடிக் கிடப்பதை காணத்தான் முடியுமா..? பாம்பு கடித்திருக்கலாம் என்கிறார்கள்... என்ன கடித்தது என்பது அந்த பாலகனுக்குத்தான் தெரியும்... 

சம்பாரிச்சு பணம் அனுப்புகிறோம்... பிள்ளையை பார்த்துக் கொள்வதற்கு என்ன... அதைவிட வேறு வேலை என்ன இருக்கு என்று கேட்கிறார் நண்பர்... அவரின் கேள்வி சரிதானே... குடும்பம் விட்டு... நாடு விட்டு... இங்கு வந்து நாயாக வேலை பார்த்து... நல்ல உறக்கமின்றி... உணவின்றி... உடையின்றி குடும்ப நினைவுகளோடு நகரும் நாட்களில் எல்லாத்தையும் தொலைத்து வாழ்வது யாருக்காக...? எல்லாம் குடும்பத்திற்காகத்தானே... செலவுக்கு பணமில்லையா எவனிடமாவது வாங்கி அனுப்பிக் கொண்டுதானே இருக்கிறார்கள்... அப்புறம் என்ன..? தொலைக்காட்சி பார்த்தாலும் பிள்ளைகளை கண்கூடாக பார்க்க வேண்டாமா?

எத்தனை வேலை இருந்தாலும்... எவ்வளவு முக்கியமான வேலை இருந்தாலும் குழந்தைகளை தங்கள் அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.... இப்போ மழை நேரம்... தனி வீடாக இருந்தால் சுற்றிலும் செடி கொடிகள் இருந்தால் பூச்சிபட்டை வரத்தான் செய்யும். நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். அந்தக் குழந்தை இறந்த செய்தி கேட்டதில் இருந்து ரொம்ப வருத்தமாக இருக்கிறது.

வெளியில் விளையாடும் குழந்தைகளை கவனமுடன் பார்த்துக் கொள்ளுங்கள்... தண்ணிக்குள்ளோ, செடி கொடிக்குள்ளோ விளையாட அனுமதிக்காதீர்கள். நம் வாழ்வின் ஆதாரமே குழந்தைகள்தான்... அவர்கள் நமக்கு முக்கியம் என்பதைவிட நம் மூச்சே அவர்கள்தான் என்பதே உண்மை. எப்பவும் குழந்தைகளை கவனமாய் பார்த்துக் கொள்ளுங்கள்.

அந்தக் குழந்தையின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 8 மே, 2014

தேவகோட்டையில் நான்,,,

ஊருக்கு வந்தது முதல் மழை அடித்துப் பெய்கிறது. எங்கும் செல்ல முடியவில்லை. எங்கள் வீட்டைச் சுற்றி கண்மாய் போல் தண்ணீர் நிற்கிறது. இன்னும் மழை விட்டபாடில்லை... அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பிக்கும் நாளில் நல்ல மழை என்பது சந்தோஷமே. இன்னும் யாருக்கும் போன் பண்ணவில்லை.  வீட்டைச் சுற்றி தவளை கத்துவது அடை மழை காலத்தில் எங்களது கிராமத்தில் இருப்பது போன்றதொரு எண்ணத்தைத் தருகிறது.

விமானத்தில் வரும்போது பணிப்பெண் சிரித்துச் சிரித்துப் பேசினாள். சரக்குக் கொடுத்துக் கொண்டு வரும்போது என்ன சார் வேண்டும் என்றாள். ஆப்பிள் ஜூஸ் என்றதும் சார் டைகர் பீர் சூப்பரா இருக்கும்... குடிச்சிப் பாருங்க... என்று கிண்டலாய் சொன்னாள். சுதாரித்து இருக்க வேண்டும். சரி பேசிட்டுப் போறா என்று நினைத்தபடி ஆப்பிள் ஜூஸ் வாங்கிக் குடித்தேன். யாருக்கோ தண்ணீர் ஊற்றியவள் கை தவறி நான் அமர்ந்திருந்த இருக்கையில் ஊற்றி என்னையும் நனைத்து விட்டாள். நல்லவேளை சரக்கு அபிஷேகம் பண்ணவில்லை. அதன் பிறகு ரொம்பச் சிரித்தாள். சுதாரிச்சிருக்கணும் சூனாப் பானான்னு சொல்லிக்கிட்டே தல படம் பார்க்க ஆரம்பிச்சிட்டேன்.

சென்னை வந்திறங்கி அங்கிருந்து திருச்சிக்கு விமானத்தில் வர, எனக்காக மனைவி, மகள், மகன் எல்லோரும் விமான நிலைய வாசலில் காத்திருந்தார்கள். அவர்களைக் கண்டதும் மகிழ்ச்சியில் மனசு துள்ளியது. அவர்களுடன் பேசியபடி காரில் தேவகோட்டை நோக்கிப் பயணம்... ஊருக்கும் வந்தாச்சு. இன்னும் எந்த வேலையும் பார்க்கவில்லை... மனைவியின் மயக்கும் காபியை உறிஞ்சியபடி... மழையை ரசித்துக் கொண்டிருக்கிறேன்...

அனைவரிடமும் பேச வேண்டும்... விரைவில் பேசலாம்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

என்னவளின் தினம்



வாழ்க்கைத் துணை என்பது வாழ்வின் எல்லா நிலையிலும் துணையாய் அமைந்தால் அந்த வாழ்க்கைக்கு இணையாக எந்தச் சந்தோஷமும் ஈடாகாது. அப்படிப்பட்ட வாழ்க்கை அமைய இறைவனின் சித்தம் இருக்க வேண்டும். அந்த வகையில் எனக்கு சந்தோஷமான வாழ்க்கையைக் கொடுத்த இறைவனுக்கு முதலி நன்றி.

என்னவள்... என் உயிரானவள்... என் உணர்வானவள்... கோபத்திலும் சரி... குணத்திலும் சரி ஒரு குழந்தை மாதிரிதான்... எதையும் புன்னகையோடு எதிர்க்கொள்ளத் தெரிந்தவர். எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் குணமுடையவர். யாருமே ஒதுக்க நினைக்காத பண்புள்ளவர். 

நான் நினைப்பதைவிட அதிகமாக என்னை நினைப்பவர். எப்போதும் என் நினைவுதான்... என்னுடன் சேர்ந்தே இருக்க வேண்டும் என்று நினைத்தவருக்கு கடந்த ஐந்து ஆண்டு காலமாக பிரிந்து வாழும் வாழ்க்கையே சொந்தமானது. இந்த 2014ல் இங்கு கொண்டு வந்துவிடலாம் என்று தோன்றுகிறது இறைவன் சித்தம் எப்படியோ தெரியவில்லை.

வெறும் சந்தோஷம் என்பது மட்டுமே வாழ்க்கை என்றாகிவிட்டால் அதில் சுவராஸ்யம் இருக்காது அல்லவா... அப்போ அப்போ எங்களுக்குள்ளும் ஊடல் வரத்தான் செய்யும். எங்கள் கோபம் நாட்களைத் தின்பதில்லை... வெறும் நாழிகைகளை மட்டுமே தின்று சிரிக்கும்.

எப்போ வருவீங்க... இன்னும் ஆறு மாசம் இருக்கா? என்று கேட்கும் போது கண்ணீர் விட ஆரம்பித்து விடுவார். நம்மளுக்குன்னு ஒரு வீடு வேணுங்க என்று சொல்லி, அதற்கான முயற்சியில் என்னை இறங்க வைத்து வீடு கட்ட இஞ்சினியரைப் பார்த்ததோடு என் விடுப்பு முடிய, வங்கிக் கடனுக்காக தேவகோட்டை, காரைக்குடி, திருச்சி, மதுரை என அலைந்து திரிந்து வாங்கியவர் அவர்தான். காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு காரைக்குடியில் இருந்து தேவகோட்டைக்கு தனது ஸ்கூட்டியில் போய் சாப்பிடாமல் கட்டிட வேலைகளை அருகிருந்து பார்த்து கட்டி முடித்தவர் அவர்தான்.

வீடு கட்டியதில் 80% கஷ்டப்பட்டவர் அவர்தான். நமக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லை. வீட்டிற்கு என்ன பேர் வைப்பது என்பதில் குழப்பமே இல்லாமல் என் மனைவி பெயரையே வைத்த போது எங்க வீட்டுக்கு எங்க பேர் வைக்கலையிலன்னு குழந்தைகளுக்கு கோபம் .... அதை மாற்ற ஒரு பக்கம் அவர்கள் இருவர் பெயரையும் சேர்த்து 'SHRUVISH' என்று கல் பதித்து ஒரு பக்கம் நித்யா இல்லம் என்ற கல் பதித்தோம். வீடு கட்டும் ஆசையில் வெற்றி பெற எனக்கு எல்லாமாய் இருந்தவர் என்னவள்தான்.

அவரோட ஆசை என்னுடன் சேர்ந்தே இருக்க வேண்டும் என்பதுதான் அதையும் விரைவில் நிறைவேற்ற வேண்டும். குடும்பம் இங்கு வர வேண்டும்... இல்லை என்றால் நாம் அங்கு செல்ல வேண்டும்... எல்லாம் அவன் நினைக்கிறபடிதானே நடக்கும்... என் மனைவியின் ஆசை நிறைவேறும் நாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கை எனக்குள் துளிர்க்கிறது... காரணம் என்னவளின் அதீத நம்பிக்கை மட்டுமே.

எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்தாலும்... எத்தனை பிரச்சினை வந்தாலும் எல்லாவற்றையும்... புன்சிரிப்போடு எதிர்கொண்டு எல்லாருக்கும் இனியவளாக வலம் வரும் என் தேவதைக்கு இன்று 29 வது பிறந்தநாள்...

நேற்றிரவு,,, இன்று காலை... மாலை என்று வாழ்த்துக்களை மட்டுமே சொல்ல முடிந்த பிறந்த நாளாக இந்த வருடம் அமைந்துவிட்டது என்பதால் சற்றே மனவருத்தமாகத்தான் இருக்கிறது. ஊரில் இருக்கும் போது சிறப்பாக கொண்டாடிய பிறந்தநாளை இங்கு வந்த பிறகு ஒரு சேலையாவது எடுத்து யாரிடமாவது கொடுத்துவிடுவேன். இந்த முறை அப்படி ஒரு வாய்ப்பு அமையவில்லை. இந்த முறை ஒன்றும் வாங்கிக் கொடுக்கவில்லை.

மதுரைக்கு அம்மா வீட்டிற்குச் சென்றவரிடம் அங்கு நல்ல சேலையாக எடுத்துக் கொள் என்று சொன்னதும் நேற்று மாலை போத்தீஸ்க்குச் சென்று அவருக்குச் சேலையும், வரும் 17 ஆம் தேதி பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் மகனுக்கு டிரஸ்சும் எடுக்க மார்ச் மாதம் பிறந்த நாள் கொண்டாட இருக்கும் மகளுக்கு கொஞ்சம் கோபமல்ல அதிகமாவே கோபம் வர அவருக்கும் ஒரு டிரஸ் எடுத்தாச்சாம்...

எங்க வீட்ல அம்மாவும் மகனும் ஜனவரியில்... நானும் பாப்பாவும் மார்ச்சில்... என்பதால் நான் அம்மாவோடா... நான் அப்பாவோடன்னு சின்னச் சின்ன ஆரோக்கியமான... சில சமையங்களில் ஆக்ரோஷமான சண்டையும் நடப்பதுண்டு...

சரி எல்லாம் இருக்கட்டும்... என் அன்பானவளுக்கு மறக்காம உங்களது வாழ்த்துக்களையும் சொல்லிட்டுப் போங்க....
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 11 ஜூலை, 2013

நாகர்கோவிலில் இரு மழைநாள்... (தொடர்ச்சி)

முதல் நாள் கன்யாகுமரியில் சுற்றிவிட்டு வந்து இரவுச் சாப்பாட்டை முடித்து குளிரும் இரவில் முதல் நாள் தூங்காத பயணக்களைப்பும்  சேர போர்வைக்குள் சுருண்டு சுகமாய் (எங்க பக்கம் கூதலுக்கு நல்லா தூக்கம் வரும்ன்னு சொல்வாங்க)  தூங்கி எழும்போதே சோவென்று பெய்து கொண்டிருந்த  மழை எங்கும் போக விடாதோ என எங்களுக்குள் கலக்கத்தைக் கொடுத்தது. வரவும் போகவுமாக மழை இருக்க எப்படியும் சுற்றச் செல்வது என நாங்கள் தயாரானோம். நண்பர் தெரிந்த நபரின் அம்பாஸிடர் காரை வாடகைக்கு பேசியிருந்தார். லேசான தூறலில் நாங்கள், நண்பரின் குடும்பம் மற்றும் நண்பரின் கொழுந்தியாள் மகள் என காரில் பயணித்தோம்.

முதலில் நாங்கள் சென்ற இடம் உதயகிரி கோட்டை, காரை ரோட்டில் நிப்பாட்டினால் அதற்கும் பார்க்கிங் பணம் பெற்றுக்கொண்டார்கள். (ரோட்டில்தான் பார்க் பண்ண வேண்டும்... வேறு பார்க்கிங் வசதியில்லை) எல்லாருக்கும் டிக்கெட் எடுத்து உள்ளே நுழைந்த போது மழை வேகமாகப் பெய்ய சற்று ஒதுங்கினோம். பின்னர் சில மயில்கள், மான்கள், மீன் தொட்டில்கள், கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த குருவிகள் என சிலவற்றைப் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொண்டோம்...எங்க ஊர் பக்கம் கண்மாய்க்குள் இருக்கும் கருவைக்காடு போல மரங்களடர்ந்து வனாந்திரமாக இருந்து. கேரளாவில் இருந்து வண்டியில் இரு கல்லூரி (பள்ளி???) ஜோடி வந்திருந்தது. நாங்கள் அவர்கள் பின்னே வருகிறோமா என திரும்பித்திரும்பி பார்த்தார்கள். பின்னர் மரங்களுக்கு இடையே மாயமாய் மறைந்துவிட்டார்கள். நாங்கள் நொந்து போய் வெளியேறினோம். காதலர்கள் வந்து போக நல்ல இடம்... கண்களில் விளக்கெண்ணைய் ஊற்றிக் கொண்டு கவனிக்க ஆட்கள் இல்லை... 

அங்கிருந்து பசுமை நிறைந்த பாதையில் பயணித்து பத்மநாபபுரம் அரண்மனையை அடைந்தோம். காரை நிறுத்தி இறங்கியதும் காபி வேண்டும் என்றார்கள். அங்கிருந்த சேட்டன் கடை நன்றாகத் தெரிய, சேச்சி வேறு வாங்க.. வாங்கன்னு அன்பாகக் கூப்பிட உள்ளே நுழைந்தோம். காபி வந்தது... இதமான வானிலையில் சூடான காபி அருந்துவதே ஒரு சுகம்தான் என நினைத்து வாயில் வைத்தால் உவ்வே... மாட்டுக் கோமயம் நல்லாயிருக்கும்... ஒரு காபி 15 ரூபாய் என்று நினைக்கிறேன். யாருக்குமே இறங்கவில்லை... காபி கேட்டவர்கள் பரிதாபமாக முழித்தார்கள். 


பின்னர் அரண்மனை வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் கூட்டமில்லை... செருப்பை கழட்டி வைத்துவிட்டு (அதற்கும் காசுதான்) டிக்கெட் வாங்கி அரண்மனையை பார்வையிட நுழைந்தோம். ஒவ்வொரு இடத்தையும் அழகாக விளக்கினார்கள். மிகவும் சுத்தமாக இருந்தது. சுற்றி சுற்றிப் பார்த்தோம்... பொறுமை இழந்த விஷால் 'வாங்கப்பா போகலாம்' என்றான்... இந்த வீட்டைப் பார்த்து நாம இதே மாதிரி இன்னொரு வீடு கட்டலாம் என்று சொன்னதும் மீண்டும் சந்தோஷமாய் நடந்தான். கொஞ்ச நேரம் போனதும் சும்மா சுத்திச் சுத்தி வருவது அவனுக்குப் பிடிக்காமல் அடம் பண்ண ஆரம்பித்தான். அதட்டலுக்கு அடி பணிய மறுத்தவன் மெதுவாக அருகில் வந்து 'இந்த வீடு நல்லா இல்லை... நம்ம வீடே போதும்... வாங்க போகலாம்...' என்றானே பார்க்கலாம். எங்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. 

பத்மநாபபுரம் முடித்து தொட்டிப்பாலம் நோக்கிப் பயணித்தோம். நல்ல பசி இடையில் ஒரு ஊரில் சாப்பிட்டோம். ஊர் பேர் மறந்து போச்சு... ஒரே ஒரு ஹோட்டல்தான் இருந்தது. மோட்டா அரிசிச் சோறு... எதுவுமே வாய்க்கு வெளங்கலை... பசிக்கு மட்டுமே சாப்பிட்டோம் ருசிக்கு அல்ல... தொட்டிப்பாலம் போய் டிக்கெட் எடுத்து உள்ளே போகும் போது அங்கிருந்த பெண்ணுக்கும் எங்களுக்கும் கடுமையான வாக்குவாதம் நண்பர் எகிறிவிட்டார். இதை ஒரு பதிவாகவே பகிரலாம்...

பாலத்தில் நடக்கும் போது மழை தூற ஆரம்பித்தது. நடந்து சென்று மீண்டும் திரும்பி அதிலேயே நடந்து வந்தோம்...லேசான தூறலில் நனைந்தபடி பாலத்தைக் கடக்கும் போது சந்தோஷமாய் இருந்தது. பாலத்தில் நடக்கும் போது கொஞ்சம் பயமாத் இருந்தது. ஸ்ருதி விஷாலுக்கு துளியும் பயமில்லை. நான் விஷாலை கையில் பிடித்திருந்தேன்... என் பாதுகாப்புக்கா... அவன் பாதுகாப்புக்கா... சரி விடுங்க இரண்டுக்குமாகத்தான்... பாலத்தின் மேலிருந்து கீழே ஆற்றைப் பார்க்கும் போது பயமாத்தான் இருந்தது. திரும்பும் போது சில அன்னாசிப் பழங்களையும் அயனி சக்கை என்ற பழத்தையும் வாங்கிக் கொண்டு நேராக திற்பரப்பு அருவியை நோக்கி பயணப்பட்டோம்.


திற்பரப்பில் தண்ணீர் வெள்ளமெனக் கொட்டியது. நாங்கள் குளிக்க இறங்கியபோது சரியான மழை வேறு... அருமையான குளியல்... கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆனந்தக் குளியல். அதன்பின் கடைகளில் சாமான்கள் கொள்முதல்... இங்கு பாப்பாவுக்கு கீ-செயின் வாங்கிக் கொடுத்து கன்யாகுமரி வருத்தத்தை சரிசெய்தோம். பின்னர் காபி சாப்பிட்டுவிட்டு வீட்டை நோக்கிப் பயணித்தோம். 

வீடு வந்து சேர்ந்ததும் நானும் நண்பரும் கடைக்குச் சென்று நேந்திரங்காய் சிப்ஸ்ம், புரோட்டாவும் வாங்கி வந்தோம். எல்லாருமாக சந்தோஷமாக சாப்பிட்டுவிட்டு ஊருக்கு கிளம்பினோம். நண்பனும் தங்கையும் ஆளுக்கு ஒரு வண்டியில் எங்களை கூட்டி வந்தார்கள். நாங்கள் பேருந்தில் ஏற மழை அடித்துப் பெய்ய ஆரம்பித்தது. அவர்கள் நனைந்து கொண்டே சென்றார்கள். மீண்டும் உறக்கத்துடன் பயணம்... அடித்துப் பெய்த மழை திருநெல்வேலி எல்லைக்குள் நுழைந்ததும் போன இடம் தெரியவில்லை. அதிகாலை தேவகோட்டைப் பேருந்து நிலையத்தில் இறங்கிய போது வெப்பக் காற்று முகத்தில் அடிக்க... ஆட்டோப் பிடித்து வீடு வந்து சேர்ந்தோம்.

மொத்தத்தில் நாகர்கோவில் பயணம் நண்பன் மற்றும் தங்கையின் அன்பான உபசரிப்பிலும் மகிழ்வான் சுற்றுலாவிலுமாக எங்கள் மனதில் இனித்தது.

(எடுத்த போட்டோக்களை கணிப்பொறியில் சேமித்த ஞாபகத்தில் வந்துவிட்டேன்... தேடும் போதுதான் தெரிகிறது சேமிக்கவில்லை என்பது... இவை இணையத்தில் எடுத்தவை)

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 9 ஜூலை, 2013

நாகர்கோவிலில் இரு மழைநாள்...

(விவேகானந்தர் பாறையில் எங்கள் செல்லங்களுடன் நண்பனின் செல்லம்)

இந்த முறை ஊருக்குச் சென்று வீடு குடிபோகும் வேலையில் திரிந்ததால் எங்கும் போகமுடியவில்லை. விஷால் போனது முதல் 'எதிர் நீச்சல்' படத்துக்கு கூட்டிப் போகச் சொல்லிக் கொண்டிருந்தான். போகலாம்... போகலாம்... என்றே நாட்கள் நகர்ந்தன. தியேட்டரில் இருந்து படத்தையும் எடுத்துவிட்டு குட்டிபுலி போட்டுவிட்டார்கள். ஒரு நாள் வண்டியில் தியேட்டரைக் கடக்கும் போது 'அந்தப் படத்தையே தூக்கிட்டாய்ங்க... நீ கூட்டியே போகல...' என போஸ்டரைப் பார்த்து விஷால் சொன்னபோது கஷ்டமாகத்தான் இருந்தது. வீடு குடி போற வேலை இருக்குல்ல அதை முடிச்சிட்டு கோயிலுக்குப் போகலாம்... சினிமா போகலாம்... என்று சமாதானப்படுத்தினாலும் அதன்பிறகான வேலைகள் எங்கும் செல்ல விடாமல் சோர்வைக் கொடுக்க, அண்ணனின் மகள் பெரிய பெண்ணாகிவிட கோவிலுக்கும் ஒரு மாதம் போகமுடியாத நிலை. இந்நிலையில்தான் நண்பர் டொமினிக் நாகர்கோவிலுக்கு அழைத்தார். குழந்தைகள் மற்றும் மனைவிக்கு ஒரு மாற்றமாக இருக்கட்டும் என்று அவசர பயணமாக இரண்டு நாட்கள் நாகர்கோவிலுக்கு சென்று வந்தோம்.கிளம்புவதற்கு முன்னரே இங்கு தொடர்ந்து மழை பெய்கிறது. குழந்தைகளுக்கு ஸ்வெட்டரெல்லாம் எடுத்து வாங்க என்று சொல்லியிருந்ததால் முன்னெச்சரிக்கையாக எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டோம்.

கிட்டத்தட்ட தேவகோட்டையில் இருந்து 9 மணி நேரப் பயணம் என்பதால் இரவு நேரப்பயணமாக கிளம்பினோம். தேவகோட்டையில் இருந்து மதுரை வந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மெரினாவில் காபி (இரவு நேரம் சூடாக காபி குடிக்கலாம் என்றுதான் பெரியகடைக்குள் நுழைந்தோம்... சர்வர்கள் தூங்கி வழிவது போல் காபியும் தூங்கிவிட்டது... தென்டமாய் பணம் கொடுத்தோம்) குடித்துவிட்டு நாகர்கோவில் செல்லும் பை-பாஸ் ரைடரில் ஏறி அமர்ந்தோம். 

பேருந்து கிளம்பியதும் கூட்டம் அதிகமில்லாததால் மனைவி ஒரு சீட்டில் படுத்துவிட்டார். ஒரு சீட்டில் நான் அமர்ந்திருக்க என் மடியில் இருவரும் படுத்து விட்டார்கள். பேருந்து வேகமாகச் சென்றாலும் திருநெல்வேலி வரை குளிரவில்லை. வள்ளியூர் என்று நினைக்கிறேன்... மழை ஆரம்பமாகியது... பேருந்துக்குள் குளிர் குடிகொண்டது... ஸ்வெட்டர் போட்டிருந்தாலும் இருவரும் போர்வைக்குள் அடைக்கலமானார்கள்.

அதிகாலையில் வடசேரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கும் போது மழை லேசாக தூறிக் கொண்டிருந்தது. நண்பருக்கு போன் செய்ததும் 'அங்கயே இருங்கள்... இப்போ வாறேன்' என்றார். பாத்ரூம் செல்ல வேண்டும் என்ற ஸ்ருதியைக் கூட்டிக் கொண்டு சென்ற என் மனைவி வந்ததும் நீங்களும் தம்பிய கூட்டிக்கிட்டுப் பொயிட்டு வாங்க என்றார். விஷால் தூக்கத்தில் இருந்ததால் அவர் வரவில்லை என்று சொல்லிவிட்டார். நான் போய் இரண்டு ரூபாய் கொடுத்து உள்ளே சென்றால்... உவ்வே... அடேங்கப்பா.... முடியல... ஒண்ணுமே போகாமல் வெளிய வந்துட்டேன்... அவ்வளவு சுத்தமா வச்சிருந்தாங்கன்னா பாத்துக்கங்களேன்.பிறகு நண்பரின் வீட்டுக்கு சுவீட்டெல்லாம் வாங்கிக் கொண்டு மழைக்கு இதமாக காபி சாப்பிட்டுவிட்டு காத்திருக்க நண்பர் மனைவியுடன் வந்தார்.

'மழை இல்லையென்றால் ரெண்டு வண்டியில் வந்திருப்போம்' என்றனர். 'பரவாயில்லை ஆட்டோவில் போகலாம்' என்றதும் அவர்கள் மறுத்தார்கள். தங்கையோ 'நீங்க வண்டியில வந்துருங்கண்ணே... நானும் அண்ணியும் பஸ்ல வந்துருறோம்' என்று சொல்லி பேருந்துக்குள் ஏறிவிட்டார். பாப்பாவும் நானும் நண்பருடன் பைக்கில் பயணிக்க, அவர்கள் பேருந்தில் வந்தார்கள். வீட்டுக்கு சென்றதும் தூறல் பெரிய மழையாகியது. சுற்றிலும் தென்னை மரங்கள்... அழகான சிறிய வீடு... மழைக்கு அவ்வளவு ஏகாந்தமாய் இருந்தது. குளித்து சூடான் தோசையை சாப்பிட்டு சிறிது நேரம் தூக்கம் போட்டோம்.

(மழை மேகத்தின் கீழ் திருவள்ளுவர்)

மழை லேசாக விட்டதும் நண்பருடன் அருகில் இருக்கும் கடலுக்குச் சென்று சுத்திவிட்டு வந்தோம். இதற்கிடையில் தங்கை, அவரது அம்மாவிடம் சொல்லி மீன் வாங்கி வந்து பொறித்து குழம்பு வைத்திருந்தார். பின்னர் எல்லாருமாக சாப்பிட்டுவிட்டு லேசாக மழை விட்டிருந்ததால் கன்னியாகுமரி போய் வரலாம் என்று முடிவு செய்தோம்.

நண்பர் குடும்பம் ஸ்கூட்டியில் பயணிக்க, அவர்களைத் தொடர்ந்து நாங்கள் ஸ்பிளண்டரில் பயணித்தோம். லேசான தூறல் அவ்வப்போது வந்து செல்ல நாகர்கோவிலில் இருந்து மணக்குடி வழியாக எங்களது வண்டிகள் சீறிக்கொண்டிருந்தன. மணக்குடியில் சுனாமியில் சிதைந்து கிடந்த பாலத்தைக் காட்டி மூன்று துண்டாக உடைந்த பாலம் ரெண்டு துண்டு இங்க இருக்கு... ஒரு துண்டு எங்க போச்சுன்னே தெரியலை என நண்பர் சொன்னார். மேலும் சுனாமியில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி இது என்றும் சொன்னார்.

கன்யாகுமரி வரை நண்பர் அவரது மகனை வைத்துக் கொள்ள தங்கைதான் வண்டி ஓட்டி வந்தார். கன்யாகுமரியை அடைந்ததும் , வண்டியை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு விவேகானந்தர் பாறைக்கு டிக்கெட் எடுத்து போட்டில் பயணித்தோம். திருவள்ளுவர் சிலைக்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு அனுமதியில்லை. விவேகானந்தர் பாறை மிகவும் சுத்தமாக இருந்தது. அங்கு சுற்றிப் பார்த்து போட்டோக்கள் எடுத்துக் கொண்டோம். அங்கிருந்து பார்த்தால் கடற்கரையோரம் கூடங்குளம் அணுமின்நிலையம் தெரிகிறது. குழந்தைகள் அதிக நேரம் அங்கு இருக்க ஆசைப்பட்டார்கள். நீண்ட நேரம் எடுத்துக் கொண்டோம். பின்னர் அங்கிருந்து கரைக்குத் திரும்பினோம்.

மீண்டும் வண்டியை எடுத்துக் கொண்டு பீச்சுக்குப் போனோம். அங்கு முதலாவது இண்டர்நேஷனல் கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது அதை சிறிது நேரம் பார்த்துவிட்டு அப்படியே கடல் தண்ணிக்கு அருகில் செல்ல, ஸ்ருதி, விஷாலுக்கு கொண்டாட்டம். ஸ்ருதி தண்ணியில் இறங்கி ஆட்டம் போட அவரது அம்மாவும் இணைந்து கொண்டார். முதலில் பயந்த விஷால், பின்னர் தண்ணிக்குள் இறங்கினார்... 

நானும் நண்பரும் ஒரு கல்லில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.  பெண்கள், குழந்தைகள் என்று எல்லாரும் நிற்கும் போது இரண்டு எருமை மாடுகள் தண்ணிக்குள் ஜட்டியுடன் ஆட்டம் போட்டது. எல்லாரும் திட்டிக் கொண்டுதான் போனார்கள். நாகரீகம் மறந்த பதர்கள். பின்னர் நாங்கள் அங்கிருந்து கிளம்பி கடைகளில் ஐக்கியமானோம். சில பொருட்கள் வாங்கினார்கள்.விஷாலும் சண்டை போட்டு ஆட்டோ வாங்கினார். ஸ்ருதி கீ-செயினில் ஸ்ருதி குமார் என்று எழுதச் சொன்னார். அவன் கேவலமாக கிறுக்கிக் கொடுக்க வேண்டாமென சண்டை இட்டு திருப்பிக் கொடுக்க, ஸ்ருதிக்கு முகம் வாடிவிட்டது. அதை அடுத்தநாள் கீ-செயின் வாங்கி சரி பண்ணியது வேறு கதை. 

அங்கிருந்து கிளம்பி அருகிலிருந்த பூங்காவில் சிறிது நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டு ஆறு மணிக்கு மேல் வண்டியை கிளப்பினோம். கிளம்பி கொஞ்ச நேரத்தில் எல்லாம் முன்னால் இருந்த விஷால் தூங்கிவிட்டான். அதற்காக மெதுவாக ஓட்டினால் ஒரு பக்கமாக சாய்கிறான். வண்டியை நிறுத்தி எனது பாணியில் அவனைத் திருப்பி வைத்து என்னைக் கட்டிப்பிடித்துக்கச் சொல்லிட்டு வண்டியை எடுத்தேன். அதற்குள் என்னைக் காணோமென நண்பன் வண்டியை நிறுத்தி பார்த்துக் கொண்டிருந்தார். நான் வந்ததும் தங்கை விஷால் இருப்பதை பார்த்துப் பதறி 'அண்ணா எங்கிட்டக்கொடுங்க தம்பிய... உங்களால வண்டி ஓட்ட முடியாது' என்றார். அவரிடம் 'நான் ஓட்டிவிடுவேன் நீங்கள் போங்க...' என்று சொல்லி கிளம்பினோம். மீண்டும் லேசாக தூற ஆரம்பித்தது.

ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம். விஷால் ஒரு கால் செருப்பை தூக்கக் கலக்கத்தில் எங்கோ விட்டுவிட்டான். இங்கிருந்து வாங்கிச் சென்றது. கொஞ்ச தூரம் தேடிப் பார்த்தோம்... கிடைக்கவில்லை. சரி போனது போச்சு என்று நினைத்து விட்டுவிட்டோம். யாரையோ பார்க்கப் போறோம்... இப்ப வந்துருவோம்... வரும்போது செருப்புக் கிடக்கான்னு பார்த்துட்டு வாறோம் என்று சொல்லி நண்பனும் தங்கையும் கிளம்பினார்கள். வரும் போது விஷாலின் செருப்போடு வந்தார்கள். 

இரவு சாப்பிட்டு விட்டு அழகான கிளைமேட்டில் ஆனந்தமாய் தூங்கினோம்.

இரண்டாம் நாள் இன்பம் பயணம் அடுத்த பதிவாக...
-'பரிவை' சே.குமார்.

வீட்டைக் கட்டிப்பார்...

இந்த முறை ஊருக்குச் சென்றதில் முக்கியமான காரணம் எங்களது புதுவீட்டில் குடி போகும் நிகழ்வுதான். ஊருக்குச் சென்றதும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் பத்திரிக்கை கொடுப்பதிலேயே நாட்கள் நகர்ந்தன. அடித்துத் துரத்தும் வெயிலில் பைக்கில் கிராமங்களுக்கு அலைந்து கொடுத்ததில் இங்கிருந்து கொஞ்சம் சிவப்பாக சென்ற உடம்பு அடுப்புக்கரியை அரைத்துத் தேய்த்தது போல் ஆகிவிட்டது. திரும்பி வந்ததும் எங்கள் அலுவலக பி.ஆர்.ஓ, 'மகனே ஊரில்  போய் ஓவன்ல உக்காந்திருந்தியா'ன்னு சிரிக்காம கேட்டாருங்கிறது தனிக்கதை.


தேவகோட்டை, காரைக்குடியில் பத்திரிக்கை கொடுக்கும் பணியில் எனது மனைவியும் உதவினார். அவரும் கடந்த ஒரு வருடமாக காரைக்குடிக்கும் தேவகோட்டைக்கும் அழைந்தார். நல்ல அலைச்சல்.... நானாக இருந்தால்கூட இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டேன்...  உதவிக்கு என்று யாரும் வராத நிலையில் இருவரும் அலைந்து திரிந்து பத்திரிக்கைகளைக் கொடுத்தோம். 

பத்திரிக்கை கொடுக்க அலைந்ததால் எனது செல்லங்களுடன் நாட்களை கழிக்க முடியாமல் போய்விட்டது. இருவரும் ரொம்ப புலம்பிட்டாங்க.அதிலும் விஷால் வண்டி எடுத்ததும் வாறேன் என்று அழுது அடம்பிடிப்பான்... வெயில் என்று சொல்லி விட்டு விட்டுச் சென்றால் வந்தது 'எதுக்கு துபாயில இருந்து வந்தே... விட்டுட்டு விட்டுட்டுப் போயிடுறே... பத்திரிக்கை கொடுக்கப் போறேன்னு சொல்லிட்டே போயிரு... எங்ககிட்ட இருக்காதே...' என்று அடித்து நொறுக்கிவிடுவான்.

பத்திரிக்கைகள் கொடுத்து முடித்ததும் வீட்டு விழாவுக்கான வேலைகள் ஆரம்பமாகியது. எனது நண்பனின் காரில் மதுரை சென்று வருபவர்களுக்கு கொடுக்க வாளிகள் மற்றும் வீட்டுக்குத் தேவையான சில சாமான்கள் வாங்கச் சென்றோம். மதுரையில் மாமாவின் நெருங்கிய நட்புக்களுக்கு... (எல்லாருமே நமக்கு இப்போ முறை வைத்து அழைக்கிறார்கள்... எல்லாருக்கும் இப்போ நாம மாப்பிள்ளைதான்...) பத்திரிக்கை கொடுத்தோம். மீனாட்சி அம்மன் கோவில் அருகில் புத்தகக்கடை வைத்திருக்கும் மாமா, பழக்கடை மாமாக்கள், தேங்காய்க்கடை மாமா, மெடிக்கல் மாமா, மொத்தக் காய்கறிக் கடை அண்ணன், இலைக்கடை அண்ணன் என அனைவரின் கள்ளமில்லா அன்பும் கவனிப்பும் எங்களை திக்குமுக்காட வைத்தது. 

பிறகு மளிகை சாமான்கள், ஐயர், வீடியோ போட்டோ புக்கிங், வாழைமரம், கொட்டகை, சீரியல் லைட்டுகள், தண்ணீர் பாட்டில், வாடகைப் பாத்திரங்கள் என எல்லா ஏற்பாடுகளையும் முடித்து வைத்து எங்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டோம்.

விழா நாளுக்கு முதல் நாள் மாமச்சீர் கொண்டு வந்தார்கள். அன்று இரவு விருந்து சிறப்பாக முடிந்தது. ஸ்ருதிக்கும் விஷாலுக்கும் விழாக் கொண்டாட்டத்தில் மிகுந்த சந்தோஷம்... நம்ம வீடு என்ற ஆனந்தம் அவர்களது முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பாக ஜொலித்தது.

மறுநாள் காலை 4 மணிக்குப் பூஜை ஆரம்பம். மூணு மணிக்கெல்லாம் குளித்துத் தயாராக வேண்டிய கட்டாய்ம். பூஜை செய்ய வந்த சுவாமி எனக்கு குடும்ப நண்பர். முதல் நாள் இரவே எல்லாம் தயார் பண்ணி வைத்துவிட்டு சென்றுவிட்டார். இருந்தும் 3.30 மணிக்கெல்லாம் வந்துவிட்டார். வீடியோ போட்டோ என எல்லாம் தயாராக இருந்தன. நாங்கதான் தயாராக கொஞ்சம் தாமதம்.

பூஜை ஆரம்பித்தது. கொஞ்ச நேரம் ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்த விஷாலை தூக்கம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றுவிட்டான். பின்னர் எனது நண்பன் வந்து விஷாலை எழுப்பி, அதைப்பார் ... இதைப்பார்... என்று சொல்லி முழிக்க வைத்தான். பின்னர் கோமாதா பூஜையில் மாட்டைத் தொட விஷாலுக்கும் பாப்பாவுக்கும் கிலி... பயந்து பயந்து தொட்டார்கள். மாடும் எங்க உறவினரின் மாடுதான்... அதுக்கு நிறைய அனுபவம்... வீட்டுக்கு உள்ளே வந்து பழம், பச்சரிசி, வெல்லம் எல்லாம் தின்றுவிட்டுச் சென்றது.

அதன் பிறகு அம்மா, அத்தை இன்னும் சிலர் பால்காய்ச்சி பொங்கல் வைத்தார்கள். நாங்கள் வந்த உறவுகளையும் நட்புக்களையும் வரவேற்று காலைப் பலகாரம் சாப்பிட மாடிக்கு அழைத்துச் சென்றோம். அப்பாவும்... அவ்வப்போது விஷாலும் என் தம்பி மனைவியும்  பன்னீர் தெளித்து சந்தனம் கொடுத்து வரவேற்கும் பணியை செய்து கொண்டிருந்தார்கள். பின்னர் வயதில் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி திருநீறு பூசி... அப்பப்பா... கல்யாணத்து அன்னைக்குகூட பொத்தாம் பொதுவுல விழுந்து எந்திரிச்சிட்டேன்... ஆனா குடிபோன அன்னைக்கு தனித்தனியா... தனித்தனியா...ஸ்... அப்பா... நம்ம அம்மணி வேற பொசுக்குப் பொசுக்குன்னு கால்ல விழுந்துருது... (கவனிக்க என் காலில் இல்லை).

மதிய விருந்தும் என்பதால் இடைவெளியில்லாம் ஆட்கள் வரவும் போகவுமாக இருந்தார்கள். வந்தவர்கள் எல்லாருக்கும் வீடு பிடித்திருந்தது. அதைவிட சாப்பாடு ரொம்ப சூப்பர் என்றார்கள். எல்லாப் புகழும் எங்களது இல்லத்தில் தொடர்ந்து சமையல் செய்யும் முத்து அண்ணனுக்கே. எங்க பக்கம் சாப்பாடு என்பது சகலராலும் விமர்சிக்கப்படும்... செட்டிநாட்டுக்காரங்க சாப்பாட்டுக்கே பிறந்தவங்க என்பது எல்லாரும் அறிந்ததுதானே...

பெரிய அண்ணனும் எனது நண்பன் முருகனும் மொய் டிபார்மெண்டை கவனித்துக் கொண்டார்கள். வந்தவர்களுக்கு மறவாமல் வாளி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்பப்ப எனது சகோதரன் பழனியும் மாப்பிள்ளை கார்த்தியும் உதவினார்கள். குறிப்பாக முதல் நாள் முதல் எல்லா வேலைகளிலும் பொறுப்பாக நின்ற எங்களுக்கு எல்லா உதவிகளையும் முன்னின்று செய்யும் மணி அண்ணனும் எனது ஐத்தான் (அக்கா கணவர்) போஸ் அவர்களும் முதல் நாள் முதல் எல்லா வேலைகளுக்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

மனஸ்தாபங்களோ சண்டை சச்சரவோ இல்லாமல் எல்லாருமா இருந்து சந்தோஷமாக நடத்திய எங்கள் குடும்ப விழா சந்தோஷங்கள் நிரம்பி வலிய இனிய விழாவாக அமைந்தது. இதே சந்தோஷம் எங்கள் இல்லத்தில் என்றும் நீடித்து இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.


இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

மதுரையில் இருந்து 'வலைச்சரம்' சீனா ஐயா அவர்கள் அம்மாவுடன் வந்திருந்து வாழ்த்தியது... (இதை வேறோரு பதிவில் சொல்லிவிட்டேன்... இருந்தும் அவரைச் சந்தித்த சந்தோஷத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம்... தப்பில்லை)

எனது ஆருயிர் நண்பன் டொமினிக் பிராங்க்ளின் நாகர் கோவிலில் இருந்தும் மற்றொரு இனிய நண்பன் கிறிஸ்டோபர் தேனியிலிருந்தும் வந்திருந்தது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. டொமினிக் தனது மனைவியை கூட்டி வரவில்லை என்று நாங்கள் சப்தமிட்டதும் ஒரு வாரத்திற்கு பிறகு மனைவி மகனுடன் வந்திருந்தார்.

மற்றபடி ரத்த சொந்தங்களும் சொந்தங்களும் நட்புக்களும் சென்னை, திருச்சி, கரூர், சிதம்பரம், மதுரை என வெகு தொலைவில் இருந்து வந்து சிறப்பித்தனர். எனது பேராசான் மு.பழனி இராகுலதான் குடும்பத்துடன் வந்திருந்து வாழ்த்தினார். சில நட்புக்களுக்கு சொல்லாமல் மறந்தும்விட்டுவிட்டோம். அப்படி மறந்தவர்களில் எனது முக்கியமான நண்பரும் ஒருவராகிப் போனதில் மிகுந்த வருத்தம்.

வருபவர்கள் இடம் அறிய வேண்டும் என அவசர அவசரமாக பிளக்ஸ் சொல்லி இரவு வந்து அவன் வைக்காமல் அதிகாலை பூஜைக்கு முன்னர் நானும் விஷாலும் வண்டியில் போய்... இருட்டில் மாடிப்படி ஏறி (என்னப்பா இருட்டுக்குள்ள கடை வச்சிருக்காய்ங்க... - விஷால்)  கடையில் அவனுங்களை எழுப்பி சத்தம் போட்டுவிட்டு வர, 8 மணிக்கு கொண்டு வந்து ஏனோ தானோ என வைத்துவிட்டுச் செல்ல கொடுத்த அட்வான்ஸோடு வேறு அவனும் கேட்கவில்லை நானும் கொடுக்கவில்லை.

நண்பரான இஞ்சினியர் தண்ணீர் வசதியே இல்லாமல் பண்ணி விட்டார். சரி டிரம்களை வாடகைக்கு எடுத்து மோட்டார் போட்டு பிடித்துக் வைத்துக் கொள்ளலாம் என்றால் பாத்ரூம் வேலைகளையும் முடிக்காமல் வைத்திருந்தார். பிறகு சத்தம் போட்டதும் பின்னாடி இருக்கும் பாத்ரூமை பயன்படுத்திக்கங்க என்றார். கதவு இல்லாம எப்படி என்று கேட்டதும் முதல் நாள் விழா நடந்து கொண்டிருக்கும் போது இரவு வந்திருந்து கதவு போட்டுக் கொடுத்தார்கள். நடக்கும் தூரத்தில் மாமனார் வீடு இருந்ததால் பிரச்சினை இல்லாமல் போய்விட்டது.

இரண்டாம் நாள் தேவகோட்டை கல்லூரிச் செயலாளர் சின்ன சேவுகன் செட்டியாரும் சாந்தி ஆச்சியும் நேரில் வந்து வாழ்த்திவிட்டுச் சென்றார்கள். தேவகோட்டை கனரா வங்கி மேலாளர் அவர்களும் நேரில் வந்து வாழ்த்தினார்.

மூன்றாம் நாள் கறி விருந்தும் சிறப்பாக நடந்து முடிய, காரைக்குடியில் இருந்து தேவகோட்டைக்கு சாமான் அள்ளும் படலம் தொடர, எல்லாம் முடித்து புதுவீட்டுக்குள் வாழ்க்கை ஆரம்பமான போது கடன்கள் மெல்ல தலைதூக்கிப் பார்த்தாலும் நம்ம வீடு என்ற ஒரு சந்தோஷம் எல்லாத்தையும் மறக்கச் செய்துவிட்டது.

வீட்டைக் கட்டிப்பார்ன்னு சும்மாவா சொல்லியிருக்காய்ங்க... பார்த்தாத்தானே தெரியுது.
-'பரிவை' சே.குமார்.