ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருஆவினங்குடி என்று அழைக்கப்படும் பழனி மலை தமிழகத்தில் இருக்கும் பிரபல கோவில்களில் ஒன்று. தைப்பூசத்திற்கு தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான முருக பக்தர்கள் நடைப் பயணமாக வந்து முருகனின் அருள் பெற்றுச்செல்வார்கள். அப்படிப்பட்ட முருகனின் கோயில் உள்ள பழனியில் வியாபாரிகள் செய்யும் பித்தலாட்டங்களால் நமது தமிழக கோயில்களின் தரம் தாழ்ந்து வருகிறது என்றால் மிகையாகாது.
இது நெடுங்காலமாக நடக்கும் நிகழ்வு என்றாலும் தற்போது மிகவும் கேவலமானதாக, முருக பக்தர்களை கொள்ளை அடிக்கும் ஈன மனிதர்கள் நிறைந்த இடமாக அழகன் முருகனின் படைவீடு மாறியுள்ளது என்பது கேவலமாக உள்ளது.
சில மாதங்கள் முன்பு என்னுடன் அலுவலகத்தில் பணிபுரியும் கேரளா நண்பர் ஒருவர் விடுமுறையில் நாட்டுக்கு சென்றபோது நண்பர்களுடன் பழனி சென்றுள்ளார். டாடா சுமோவில் சென்ற அவர்களை பார்த்ததும் மலையாளிகள் என்று தெரிந்து கொண்டு, கோயிலில் சாமி கும்பிட நாங்கள் உதவி செய்கிறோம் என்று நம்பும்படியாக பேசியிருக்கிறார்கள். நீண்ட நேர பேச்சுக்குப்பின் 200 ரூபாய் என்று முடிவு செய்து ஒருவர் அவர்களுடன் சென்றுள்ளார்.ஆனால் அவர் எந்த உதவியும் செய்யவில்லை. சாமி கும்பிட்டு திரும்பியதும் அவர்கள கார் நிறுத்திய இடத்துக்குப் போனதும் அவர் ஒரு பில் எடுத்துக் கொடுத்துள்ளார். அதில் கைடாக இருந்ததற்கு 200 ரூபாயும், அபிஷேகத்துக்கு பால் வகையரா, ஐயருக்கு கொடுத்தது என்று எதோ ஒரு கணக்கு எழுதி 1000 ரூபாய் கேட்டுள்ளார். நண்பர் உங்களுக்கு பேசியது 200 மட்டும்தானே என்று கேட்க, மத்ததெல்லாம் யார் கொடுப்பா..? என்று அவர் திருப்பி கேட்டிருக்கிறார். வாக்குவாதம் முற்ற அவரது நண்பர்களுக்கும் அந்த வழிப்பறிக் கும்பலுக்கும் பிரச்சினை பெரியதாகியிருக்கிறது. இவ்வளவும் நடந்தும் இது தினம் தினம் நடக்கும் நிகழ்வுதான் என்பதுபோல் யாரும் கண்டு கொள்ளவில்லை. கேரள நண்பர்களின் கை ஓங்கவே, சரி 200 ரூபாய் கொடுங்க என்று பணிந்துள்ளது அந்தக் கும்பல்.
எனது சகோதரர் மனைவியுடன் சாமி கும்பிட பழனி சென்றுள்ளார். பேருந்து நிலையத்தில் இருந்து குதிரை வண்டியில் அடிவாரம் சென்றுள்ளார். குதிரை வண்டிக்காரன் 20 ரூபாய் பேசியுள்ளான். வரும் போதே அங்கு இருக்கும் ஒரு கடை பற்றி சொல்லி உங்களுக்கு எல்லா உதவியும் செய்வாங்க. நம்ம கடைதான் எனக்கு தர வேண்டிய 20 ரூபாயையும் அங்க கொடுத்தாப் போதும் என்று சொல்லியுள்ளான். இவரும் நம்பிவிட்டார்...
அடிவாரத்தில் அந்தக் கடை முன்பு இறக்கிவிட்டு கடைக்காரரிடமும் கூப்பிட்டு சொல்லிவிட்டார். அண்ணனை உட்காரச் சொல்லி இரண்டு கேனில் பால், அர்ச்சனை சாமாங்கள், மாலை எல்லாம் எடுத்து வைத்து பில் எழதி கையில் கொடுத்துள்ளனர். பார்த்த அண்ணாவிற்கு மயக்கம் வராத குறைதானாம். ஒரு நோட்டு போட்டிருந்தானாம். என்னது ஆயிரமா? எனக்கு வேண்டாம் என்றதும் எல்லாம் இதுல அடங்கிடும் நீங்க எதுவும் கொடுக்க வேண்டாம்.ஐயருக்குக்கூட நாங்க கொடுத்துடுவோம் என்றதும் அண்ணா சண்டையிட்டு ஒரு செட்டை 500 ரூபாய் கொடுத்து எடுத்துள்ளார். அவருடன் கைடாக வந்தவன் எனக்கு 200 தனி என்று சொன்னதும் அண்ணாவிற்கு எதோ உறைக்க, அவனுடன் மீண்டும் கடைக்கு திரும்பியுள்ளார். அங்கு சண்டையிட்டு பணத்தை திருப்பப் பெற்று முருகனை தரிசித்து திரும்பியுள்ளார்.
இதுபோல் தினம்தினம் எத்தனையோ நிகழ்வுகள். இது அரசுக்குத் தெரியுமா? தெரிந்தால் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? எத்தனை அப்பாவிகள் பாதிக்கப்பட்டிருப்பார்கள்? அவர்களில் யாரும் காவல்துறையிடம் சொல்ல வில்லையா? இல்லை காவல்துறையும் இதற்கு உடந்தையா? கோயில் அறங்காவல் குழுவிற்கு தெரியாமல் நடக்கிறதா? அல்லது அறங்காவல் துறைக்கும் பங்குண்டா? பழனிக்கு வரும் பக்தர்களின் தலையில் மொட்டையடிக்கும் கும்பலை கட்டுப்படுத்தாவிட்டால் பழனி முருகனின் பக்தர்கள் குறைவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதைவிட அதுதான் உண்மை என்பதே நிதர்சன உண்மையாகும்.
அரசும் அறநிலையத்துறையும் விரைவில் இதற்கு ஒரு முடிவு எடுக்குமா என்பது பழனியில் இருக்கும் அந்த தண்டாயுதபாணிக்கே வெளிச்சம்...!
-சே.குமார்