மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025

சதீஷ் குமார் பார்வையில் 'உன்மத்தம்'

ழுத்தாளனாய் எழுதிவிட்டேன், இனி வாசகர்கள் பார்த்துக் கொள்வார்கள் எனக் கடந்து போனாலும் நம் எழுத்தின் மீதான ஒரு பார்வையாவது வந்தால் சிறப்பாக இருக்குமே என்ற எண்ணம் ஒவ்வொரு புத்தகம் வெளியான பின்னும் மனசுக்குள் தோன்றத்தான் செய்யும்.

அன்பின் சகோதரர் சதீஷ் எப்போதும் வாசித்ததும் நீண்ட நேரம் அது குறித்துப் பேசுவார். இந்த முறை விமர்சனமாக இல்லாமல் வாசித்த பின் தோன்றியதை முகநூல் பதிவாக்கியிருக்கிறார்.

நன்றி சதீஷ்குமார்.

*****


ன்மத்தம்...

கடந்த ஜூன் மாதம், பாலாஜி பாஸ்கரன் அவர்களின் கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ் எனது அன்புக்குரிய நண்பர், எழுத்தாளர் பரிவை சே குமார் படைப்பில் வெளியிட்ன்ட “உமத்தம்” நாவலை பற்றி எனது வாசிப்பு அனுபவம் இது, விமர்சனப் பகிர்வு அல்ல.
“உன்மத்தம்” என்பது “பித்து பிடித்த நிலை” அல்லது “மயக்கம்” என்று வலைதளத்தின் வாயிலாக அறிந்து கொண்டேன். இந்த நாவலில் வரும் ராஜவேலுவின் கதாபாத்திரத்தின் மனநிலை மாற்றங்களை, உணர்ச்சிப் போராட்டங்களை, அவரைப் பித்து பிடித்த நிலைக்கு இட்டுச் செல்லும் சூழ்நிலைகளை, மிக அருமையாகப் படம் பிடித்து காட்டும் இந்த நாவலுக்கு “உன்மத்தம்” என்ற தலைப்பு மிகக் கச்சிதமாக பொருந்தி அமைகிறது.
எழுத்தாளர் கதையின் பின்னணியை, சூழலை, கிராமத்து மக்களை, அவர்களின் அன்றாட வாழ்க்கை முறையை விவரித்து கதாபாத்திரங்களை வாசகருக்கு அறிமுகப்படுத்தி துவக்கி இருப்பது வாசகனுடன் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இளம் வயதில் தம்மை அறியாமல் கிராமப்புறங்களில் பிரசித்தி பெற்ற 'கூத்து' என்ற நாடகக் கலையின் மீதான ஆர்வம் ராஜவேலு என்னும் கதாபாத்திரத்திற்கு ஏற்படுகிறது. வழக்கமான குடும்ப எதிர்ப்புகளை மீறி நாடகத்தில் முறையாக தம்மை இணைத்துக் கொள்ள முறைப்படி சுற்றுவட்டாரத்தில் உள்ள கூத்து வாத்தியார்களிடம் கற்றுத் தம் திறமையை நிரூபிக்க ராஜவேலு எதிர்கொள்ளும் கடுமையான சூழ்நிலைகளையும், ஏச்சுக்கும் பேச்சுக்கும் இடையே கடந்து வந்த பாதையையும் மிகவும் எதார்த்தமாக படம் பிடித்துக் காட்டியுள்ளார் எழுத்தாளர்.
அருகி வரும் கிராமப்புற கலைகளில் ஒன்று நாடகக்கலை. இந்த நாவலில் நாடகக் கலைகளை பற்றிய பல சுவாரசியமான தகவல்கள், நாடக கலைஞர்கள் பற்றிய குண நலன்கள் மிக விபரமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நாவலை படித்த பொழுது கிராமப்புற நாடக கலைஞர்களுக்கும் ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது அவர்களுக்கு என்று ஒரு தனி பாணி, திறமை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது அது மட்டுமல்லாமல் அந்த நாடக கலைஞர்கள் தம் திறமையை வெளிப்படுத்த எடுக்கும் பிரயத்தனம், இலக்கிய புலமை, ஆழ்ந்து வாசிக்கும் திறன், சமயோசிதமாக தர்க்கம் செய்யும் திறன் , நாடகத்தின் மேல் கலைஞர்கள் கொண்டுள்ள பக்தி, சிரத்தை என அனைத்தையும் மெய்சிலிர்க்கும் படி எழுத்தாளர் பதிவு செய்துள்ளார்.
மக்களைப் படித்து, மக்களின் மனநிலையை அறிந்து ஜனரஞ்சகமாக கொண்டு செல்லும் நாடக நடிகர்களுக்கு சக நாடக நடிகர்களே ஆதர்சமாக விளங்குவது மேலும் நெகிழ்ச்சியாக இருக்கிறது.
இப்படியாக இந்த நாவலில் வரும் ராஜவேலு கதாபாத்திரம் நம்மை ஆட்கொள்ள தொடங்குகிறது. அவர் கடந்து செல்லும் கரடுமுரடான வாழ்க்கை பயணத்தில் அவர் பெற்ற அனுபவங்களுக்கு வாசகனாகிய நாமும் ஒரு சாட்சியாக உணர தோன்றும்.
'பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகும், பகிர்ந்த துன்பம் பாதியாகும்' என்ற சொல்லுக்கு ஏற்ப ராஜவேலுவை போல நாமும் சுப்புணி, கதிரேசன் போன்று மகிழ்ச்சியிலும் துயரங்களிலும் பங்கு கொள்ளும் உறவுகளை பெற்றால் நாமும் நிச்சயமாக பாக்கியவான்களே.
எழுத்தாளர் இந்த நாவலின் வாயிலாக நாடகக் கலைஞர்களின் வாழ்க்கை பயணத்தை எதார்த்தமாக கிராமப்புற கட்டமைப்பில் வழங்கியதுடன் இல்லாமல் கூடுதலாக அவர்களின் வட்டார பேச்சு வழக்கு, அன்றாட வாழ்வியல், வாழ்வின் தேவைகள், உறவின் முறைகள், கலாச்சார முறைகள் என பல தகவல்களை கூடுதலாக கொடுத்துள்ளார்.


நாடக மேடையில் ஏற்பட்ட பிரச்சனைக்காக நாடக சங்கத்தில் தலைவர் அவர்கள் விசாரணை செய்து கொண்டிருக்கும் பொழுது வெற்றிலை போடும் பாங்கினை எழுத்தாளர் விவரித்து முடிக்கையில் வாசகனாகிய நம் வாயிலும் அந்த வெற்றிலை சாறு ஊரும், வாசம் வீசும். அந்த எழுத்து நடை அபாரம்.
இத்தோடு நில்லாமல் நாவலின் கதாபாத்திரங்களை கொண்டே சமகால அரசியல், சமூக புரிதல், கால ஓட்டத்தில் நாம் பெற்றவை இழந்தவை என்று அனைத்தும் இந்த நாவலின் வழியாக பேச வைத்திருக்கிறார்.
நாவலின் கதாபாத்திரம் ராஜவேலு நாடகத்தின் மேல் உள்ள அதீத பக்தியால் வாழ்வில் பெற்றவை நம்மை மகிழ்வுறச் செய்யும், இழந்தவை நம்மை கலங்கச் செய்யும்.
நாவலின் இறுதி அத்தியாயங்கள் நம்மை நெகிழ்வடைய செய்தாலும் நாவலின் முடிவு சற்று கலங்கடிக்கத்தான் செய்கிறது.

உன்மத்தம் பிடித்த கலைஞன் ராஜவேலு உறக்கம் தொலைத்து , உலகின் எங்கோ ஒரு மூலையில் உணர்ச்சிப் பெருக்கெடுத்து நாரதராக மாறி “உலக சயனா…” என்று இரவில் பாடுவது கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

------------------------------------------------------
எழுத்தாளர் : பரிவை சே குமார்
வகைமை : நாவல்
விலை : 190/-
வெளியீடு :கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ் ------------------------------------------------------
-பரிவை சே.குமார்.

3 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

நல்லதொரு பகிர்வு.  நாவலைப் பற்றிய ஒரு ஐடியா தருகிறது திரு சதிஷ் அவர்கள் பகிர்வு.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான வாசிப்பு அனுபவம். பாராட்டுகளும் வாழ்த்துகளும்....

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ரொம்ப அழகாக விமர்சித்திருக்கிறார், திரு சதீஷ்.

குமார், நீங்க வித்தியாசமான கதைக்களம், கருவைத் தேர்ந்தெடுத்து எழுதியிருக்கீங்க. இக்களத்தைப் பற்றிய அறிவும், மேலும் அதைப் பற்றித் தெரிந்து கொள்ள உங்கள் தேடலும் உழைப்பும் தெரிகிறது.

வாழ்த்துகள், குமார். பாராட்டுகளும்.

கீதா