மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளந்தி மனிதர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளந்தி மனிதர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

வெள்ளந்தி மனிதர்கள் : 12. பாலாஜி பாஸ்கரன்

Image may contain: Balaji Baskaran, smiling, outdoor and close-up

2015-ல் வெள்ளந்தி மனிதர்கள் என்ற தலைப்பில் தொடர்ந்து என் வாழ்வில் மறக்க முடியாத மதிப்புமிக்க பலரைப் பற்றி எழுதியிருக்கிறேன். அதைத் தொடர வேண்டும் என முடிவெடுக்க வைத்தவர் சகோதரர் பாலாஜி பாஸ்கரன்.

இவருடனான முதல் சந்திப்பு கனவுப் பிரியன் அண்ணனின் 'சுமையா' விமர்சனக் கூட்டத்தில்... 

ஆளாளுக்கு சுமையா குறித்துப் பேசிக் கொண்டிருக்க, பிரியாணியை பாத்திரத்தில் இருந்து தட்டில் எடுத்து வைத்துக் கொடுப்பதில் ரொம்பத் தீவிரமாய் இருந்தார். என்னருகில்தான் இருந்தார் என்றாலும் ஒரு சிறு சிரிப்பு மட்டுமே எங்கள் நட்பின் தொடக்கமாய்... நான் பெரும்பாலும் யாருடனும் உடனே பேசி விடமாட்டேன். அப்படியே வளர்த்துட்டாங்கன்னு சொல்லமுடியாது.. வளர்ந்துட்டேன்... இனியா மாறப் போகுது. 

பாத்திரத்தில் இருந்த பிரியாணி தட்டுக்கு மாறிய போது பேச்சு பேச்சாக இருந்தாலும் தட்டுக்கள் காலியாகிக் கொண்டே இருந்தன... சுண்டலும் அப்படியே... 'என்னய்யா இது கடைசியில நமக்கு பிரியாணி இல்லாமப் போச்சு... எங்கேய்யா வச்ச பிரியாணியெல்லாம்...' அப்படின்னு மனுசன் புலம்ப ஆரம்பிக்க, கோவில்ல பிரசாதம் கொடுக்கப் போறவனுங்க கடைசியில் பிரசாத வாளியே மிஞ்சும் என்பதால் தனியாக எடுத்து வைத்துக் கொள்வதைப் போல் மனிதருக்கு சூதனமாப் பொழைக்கத் தெரியலையே என்று நினைத்தபடி 'இனி கூவி என்னத்துக்கு... விடுங்க' என்றேன். எனக்கும் பிரியாணி கிடைக்காத வெறுமையில்.

நம்ம ஊர் பக்கம்... அட அவரும் நம்ம பக்கந்தேன்... சூது வாது இல்லாதவம்ப்பா அவன்... வெகுளி... மனசுல எதையும் வச்சிக்கமாட்டான் அப்படின்னு சிலரை வைத்திருப்பார்கள்... அப்படிப்பட்ட மனிதர் இவர். மைண்ட் வாய்ஸ்ன்னு நெனச்செல்லாம் பேசுவதில்லை... எதாயிருந்தாலும் பட்டுன்னு போட்டு உடைச்சிடுவாரு என்பதை இவரின் அடுத்தடுத்த சந்திப்புக்களும் எங்கள் வாட்சப் குழும கருத்துக்களும் சொல்லாமல் சொல்லின.

ஓரிதழ்ப்பூ விமர்சனக் கூட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் விக்கெட்டை இழக்காமல், ராகுல் திராவிட்டின் டெஸ்ட் போட்டி பேட்டிங் போல் அடித்து ஆடாமல் ஆடிக் கொண்டிருக்க, 'என்னய்யா இன்னும் விக்கெட் விழ மாட்டேங்குது...' எனக் காதைக் கடித்தார்... அது அடுத்திருந்த பால்கரசையும் சிரிக்க வைத்தது. மனிதரோ 'ஏய்யா சிரிக்கிறீங்க...பேசுறதைக் கேளுங்கய்யா...' என்றார் சிரிக்காமல்.

அந்தக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான போட்டியில் திடீரென முன்னரே இறக்கி விடப்பட்டு அடித்து ஆடிய பாண்ட்யா மாதிரி, திடீர்ன்னு களமிறங்கிச் செம ஆட்டம்... நானே பேச்சாளன்... எனக்குப் பாரதியைத் தெரியும்...ஷெல்லியைத் தெரியும்... இலக்கியம்ன்னா இதுதான்யா... நீ எழுதுறதெல்லாம் எளக்கியமய்யா...  என்றெல்லாம் பேசாமல் மனதில் பட்டதை மடை திறந்த வெள்ளமென நகைச்சுவையாய்... அதுவும் முழுமையாக நகைச்சுவையாய் அரங்கம் சிரிப்பில் அதிர அள்ளிக் கொட்டினார். தொடக்க ஆட்டக்காரர் போராடிப் பெற்ற சதத்தை இவர் அதிரடியாய்ப் பெற்று பலத்த கைதட்டல்களுடன் சிறந்த ஆட்டக்காரராகவும் ஜொலித்தார்

சென்ற வார வெள்ளியன்று அபுதாபி வருகிறேன் என்று வாட்சப்பில் ஒரு தற்காலிக குழுவை உருவாக்கிச் சொன்ன போது நான் சந்திக்கச் செல்லும் எண்ணத்தில் இல்லை. நெருடாவும் அழைத்திருந்தாலும் போகும் எண்ணமின்றியே இருந்தேன். அதற்குக் காரணம் அவர் மீது கோபமோ வெறுப்போ இல்லை... கடந்த சில மாதங்களாக அடித்து ஆடும் வாழ்க்கைக் கிரிக்கெட்டில்... இங்கிலாந்தில் துவைத்து எடுக்கப்பட்ட இந்திய அணி போலான நிலை. அதனால் எதன் மீதும் பற்றற்றுப் பயணித்துக் கொண்டிருப்பதே நலமென நினைத்திருந்தேன்.

பத்துக்குப் பத்து அறையும்... கட்டிலும்... கணிப்பொறியும் தவிர்த்து  கொஞ்ச நேரம் சிரித்து வரலாமே என்ற நினைப்போடு  பேருந்தில் வருகிறேன் என்று சொன்ன நெருடாவுக்காக கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்து , அவர் வரவில்லை என்பதால் மீண்டும் அறைக்கே பஸ் ஏறிவிடலாம்... உடம்பில் இருக்கும் நீரெல்லாம் வியர்வையால் காலியாகிவிடும் போலவே என நினைக்கும் போது பாலாஜியின் அழைப்பு வந்தது.

அந்த அழைப்பில்தான் நெருடாவெல்லாம் ஒரு மணி நேரம் முன்னரே வந்து பாலாஜியின் நகைச்சுவையை... கவனிக்க பெரும் எழுத்தாளர்கள் கூடியிருந்த இடத்தில் பேச்சு இலக்கியமாகத்தான் இருக்கும் என்றாலும் இங்கு அந்த இலக்கியத்தை விடுத்து நகைச்சுவையை என்றே சொல்லியிருக்கிறேன்... ஆம் பாலாஜியின் நகைச்சுவையை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கனவுப் பிரியன் அண்ணன் அறை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

நம்ம ஊர்ல வெயில்லு சுட்டெரிக்குதுன்னு சொல்லுவோமுல்ல... இங்க வெயில் சுட்டெல்லாம் எரிக்கவில்லை... நேரா எரிக்க மட்டுமே செய்தது... இதுலதான் வாழ்க்கையை ஓட்டுறோம் என்றாலும் பேருந்து நிலையத்தில் இருந்து கனவுப் பிரியன் அண்ணன் அறைக்குச் செல்வதற்குள் குளித்து... குளித்து... குளித்து முடித்திருந்தேன்... இனி வியர்க்க உடம்பில் ரத்தம் மட்டுமே இருக்கு என்ற நிலையில். வேர்க்க விறுவிறுக்க அங்கு செல்லும் போது பெட்ரோல் போட்ட கதை, பாவனா கதை எல்லாம் முடிந்திருந்தது.

அதன் பின் பாலாஜியின் ஆட்டம்தான்... மனிதர் எந்த ஒரு விஷயத்தையும்... அது மகிழ்வோ சோகமோ சிரிக்கச் சிரிக்கப் பேசிக் கொண்டே இருந்தார். நாங்கள்லாம் சிரித்தபடியே ரசித்துக் கொண்டிருந்தோம். ரொம்ப நாளைக்கு அப்புறம் சிரித்துச் சிரித்து கண்ணீரே வந்திருச்சு என்றார் நண்பரொருவர். அப்படித்தான் எல்லாருக்குமே.

மதிய உணவுக்குப் பின்னும் யாரையும் படுக்க விடவில்லை... சுபான் பாய் படுத்தபடி சிரித்துப் பார்த்து எழுந்து உட்கார்ந்து விட்டார். எத்தனையோ கதைகள்... கவிஞர்கள், இலக்கியவாதிகள், ஆர்வக்கோளாறுகள் பற்றியெல்லாம் அடித்து ஆடிக் கொண்டிருந்தார்.  

எல்லாருக்கும் சிரித்தபடியே இருக்க, கனவுப் பிரியன் அண்ணன் அறை நண்பர்கள் என்ன இவனுக இப்படிச் சிரிக்கிறானுங்க என்று மனசுக்குள் நினைத்து... திட்டியிருந்தாலும் வெளியில் எங்களின் சப்தத்தை கேட்டு வருத்தப்படவில்லை என்பதாய் காட்டிக் கொண்டிருந்தார்கள். அண்ணன் சொன்னபோது கூட ஏய் அதெல்லாம் இல்லை... என்று அகம் காட்டினார்கள். அகம் நல்லதாய் இருந்தது... புறம் எப்படியோ தெரியவில்லை.

அன்றைய பேச்சில் தஞ்சைப் பெரிய கோவில் 'நந்த' வனம்தான் அதிகம் பேசப்பட்டது என்றாலும் அந்த 'படுக்கை அறை' விவகாரம் மட்டும் திரும்பத் திரும்ப சிரிக்க வைத்தது. இலக்கியத்தை 'அங்க'தாய்யா வச்சிருக்கானுங்க என்ற வரி யோசிக்கத்தான் வைத்தது. நமக்கு இலக்கிய இலக்கணமெல்லாம் தெரியாது என்பதால் யோசனையை அறைக்குள்ளேயே விட்டு வந்தாச்சு. வச்சிருக்கவங்க 'அங்க'யே வச்சிக்கட்டும்.
  
அது எப்படிய்யா இந்த மனுசன் மட்டும் இப்படிச் சிரிக்க சிரிக்க பேசி... சுற்றியிருப்பவர்களை எல்லாம் சிரிக்க வைக்கிறார் என்பது மட்டும் ஆச்சர்யமாகவே இருந்தது. 

அழகர் ஆற்றில் இறங்குவதைப் பற்றி பேசும் போது அழகு மலையானைக் காணச் சென்ற நாட்கள் நினைவில் ஆடிச் சென்றன. ஊரில் இருந்து திரும்பி வரும் முன்னர் ஏர் இந்தியாக்காரனால் பாதிக்கப்பட்டதைக் கூட நகைச்சுவையாய்ச் சொல்லிச் சிரிக்க வைத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

நகைச்சுவையாய் பேசுவதெல்லாம் ஒரு வரம்... அதுவும் மற்றவர்களைச் சிரிக்க வைத்துப் பார்த்தல் என்பது மிகப் பெரிய கலையும் கூட. அது எல்லாருக்கும் வாய்த்து விடுவதில்லை... சிரிக்க வைக்கிறேன் என லியோனி, சூரி போன்றவர்கள் நம் வதையை வாங்குவதைப் பார்த்திருக்கிறோம். அப்படியில்லாமல் உண்மையிலேயே ரசித்துச் சிரிக்க வைக்கிறார். 

இந்த  மதுரை மண்ணோட தன்மையே தனித்தன்மைதான். அரிவாளும் எடுக்கும் அன்பும் செய்யும்... பாசக்காரங்கன்னா அம்புட்டுப் பாசக்காரனுகளா இருப்பானுங்க... பேருந்தில் இடமில்லாமல் நின்று வந்தவனுக்கு குரல் கொடுத்த கதைகள் பல பேசப்பட்டன. தேவர் ஜெயந்தி, குருபூஜைகள் என சாதிகளை தூக்கி தோளில் போட்டுக் கொள்ளும் இந்த மண்தான் சல்லிக்கட்டு பிரச்சினை போல் வேண்டிய நேரத்தில் எல்லாச் சாதிக்காரனையும் தோளில் கைபோட்டு ஒண்ணா நிக்க வைக்கும். திருவிழாக்கள், முளைப்பாரி, மந்தை  என நகைச்சுவைக்குள்ளும் சில  மண் சார்ந்த விஷயங்களைப் பேசினார். 

கல்லூரியில் சுடிதார் கதை சொல்லி, நீங்க படிச்ச போது இருந்த காலேசு இல்ல தம்பி இப்பன்னு டீக்கடைக்காரர் சொன்னதாய்ச் சொன்னபோது எங்கள் கல்லூரியும் மனதிற்குள் வந்து போனது. அதுவும் இப்ப பால்வாடி மாதிரித்தான் இருக்குன்னு கல்லூரி பியூன் ஒருமுறை என்னிடம் சொன்னார். அந்தப் பால்வாடியில்தான் என் நண்பர்கள் பேராசிரியர்களாய் இருக்கிறார்கள். புங்கை மரமெல்லாம் ஒடிபடாத கிளைகளுடன் நிற்பது வியப்பாய் இருக்கிறது.

அவர் மட்டுமே பேச, நாங்கள் எல்லாம் ரசித்துச் சிரிக்க... கனவுப் பிரியன் அண்ணன் அறையிலிருந்து சிரிப்பொலியை லிப்டில் இறக்கி, கல்கத்தா டீக்கடையில் அமர வைத்து... பூங்காவில் மரங்களுக்கு இடையே மகிழ வைத்து... மெல்ல அல் வத்பா மண் பாறைகளில் அமர்த்தி... மிகச் சிறப்பான நாளாக... மகிழ்வான நாளாக அனுபவித்தோம். ரசனையான பேச்சுக்கு முன்னே ரசிகனாய் நான்.

அமீரக தமிழ் வாசிப்பாளர் குழுமத்தில் இவர் போடும் 'அடி ஆத்தி' என்ற கருத்துக்களும் சில சமயங்களில் பதியும் குரல் ஆடியோக்களும் நம்மை ரசிக்க வைக்கும். 

மண்ணின் மனத்தோடு பேசும் இவரால் எல்லோரையும் மகிழ்வாய் வைத்திருக்க முடியும் என்பதை இவருடன் பழகிய, சந்தித்த மனிதர்கள் அறிவார்கள். அவர்களில் நானும் ஒருவனாய் இருப்பது மகிழ்வே...

பாலாஜி... சூதுவாதில்லா... நெஞ்சில் வஞ்சமில்லா... மதுரை மண்ணின் வெள்ளந்தி மைந்தர் என்பது மிகை அல்ல... உணமை..

-'பரிவை' சே.குமார்.

சனி, 3 அக்டோபர், 2015

வெள்ளந்தி மனிதர்கள் : 11. நிஷா(ந்தி) அக்கா


துவரைக்கும் வெள்ளந்தி மனிதர்களில் என்னைச் செதுக்கிய, மகனாகப் பாவித்த, நண்பனாக நினைத்த மனிதர்களைப் பற்றி எழுதி வந்தேன். உறவுகளை விட உறவாய் வந்தவர்கள்தான் என் வாழ்வில் என்னோட சுக துக்கங்களில் எல்லாம் தோளோடு தோள் நின்றிருக்கிறார்கள்... நிற்கிறார்கள். அப்படி வந்த உறவுகளில் இதுவரை முகம் பார்க்காது எழுத்தால் மனதால் உறவாகிப் போன பலர்தான் இன்று என் வாழ்வில் மறக்க முடியாதவர்களாய் மாறிப் போய் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட உறவுகளில் ஒருவர்தான் நிஷா அக்கா.

ஆம் பாசத்துக்கு ஒரு நிஷா அக்கா... நிஷாந்தி பிரபாகரன்.  இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ்ஸில் வாழ்ந்து வருகிறார். ஹேட்டரிங் மட்டுமில்லாமல் இரண்டு மண்டபம், ஹோட்டல் என வைத்து ஹேஹாஸ் கேட்டரிங்க் சர்வீஸஸ் என்ற ஆல் ஈவண்ட்ஸ் மூலமாக திருமணம், பிறந்தநாட்கள் உள்ளிட்ட பெரும்பாலான நிகழ்ச்சிகளை தாங்களே எடுத்து அருமையாக அதை நடத்தி மிகச் சிரத்தையுடன் செய்து வருகிறார். இவரின் மனசு சாதி, மதம் என எந்தச் சாக்கடையையும் தன்னுள்ளே புதைக்காத மனசு. எல்லோரையும் அண்ணன் தம்பியாய், அக்கா தங்கையாய், நல்ல தோழர்களாய் பார்க்கும் உன்னதமானது. இது எல்லாருக்கும் வருவதில்லை.... வாய்ப்பதும் இல்லை.

நான் வலையுலகில் எழுத ஆரம்பித்து ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. தமிழ் மணம், உலவு, தமிழ் 10, இண்ட்லி போன்ற திரட்டிகளில் பதிவுகளை இணைப்பதை தொடர்ந்து செய்து வந்தேன். அப்போதெல்லாம் எனக்கு சேனைத்தமிழ் உலா என்றதொரு குழுமம் இருப்பது தெரியாது. என்னிடம் 'தம்பி என்ன பண்றே...?' என்று உரிமையோடு கேட்கும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் காயத்ரி அக்கா ஒரு முறை தம்பி ஒரு சிறுகதைப் போட்டியிருக்கு கலந்துக்க என்று சொல்லி சேனையை அறிமுகம் செய்தார்கள். அதற்காகத்தான் அங்கு உறுப்பினரானேன். சிறுகதை எழுத வேண்டும் என்றால் ஐம்பது பகிர்வுகள் பதிய வேண்டும் என்ற நிபந்தனை விதித்திருந்தார்கள். அதில் எழுதும் பதிவுகள், நாம் மற்றவர்களுக்குப் போடும் கருத்துக்கள் எல்லாம் உள்ளடக்கம்  என்பதால் ஒரு வாரத்துக்கு தீவிரமாக இயங்கினேன் என்பது வேறு விஷயம் இப்ப நம்ம வெள்ளந்தி மனுஷிக்கு வருவோம்.

என்னோட முதல் பதிவில் 'குமார் நீங்க இங்க இணைந்தாச்சா...? உங்க பதிவுகளை தொடர்ந்து வாசிப்பேனப்பா...' என்று ஒரு கருத்து நிஷா அக்காவிடம் இருந்து வந்திருந்தது. அதுதான் சேனையில் எனக்கு கிடைத்த முதல் கருத்து. ஆஹா நம்ம எழுத்தை நமக்குத் தெரியாம படிக்கிற ஆளுங்க இருக்காங்கன்னு ஒரு பக்கம் சந்தோஷம். அப்புறம் அடுத்தடுத்த கருத்துக்களில்தான் தெரியும் என்னோட கலையாத கனவுகளின் தொடர் வாசகி அக்கா என்பது. எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஒவ்வொரு பகிர்வுக்கும் அக்காவின் கருத்துக்கள் மிக அழகாக இருக்கும். நானெல்லாம் நல்லாயிருக்கு, அருமை என்று போடுவதோடு சரி. ஆனால் இவரோ படித்து ஒவ்வொரு இடத்திற்கும் கருத்துச் சொல்லி நம்மை ஊக்குவிப்பதில் இவருக்கு நிகர் இவரே.

சேனையில் எல்லோருக்கும் கருத்துச் சொல்லும் நண்பர்கள் நிறைய இருந்தாலும் பல ஆயிரக்கணக்குகளில் கமெண்ட் இட்டு எல்லோரையும் ஊக்கப்படுத்துவதில் இவர் பெருமைக்குரியவர். என்னிடம் கருத்துக்கள் மூலமாக பேசிய அக்கா முகநூலில் இணைந்து தனிப்பட்ட முறையில் என்னுடன் தம்பி என்று பேசியபோதுதான் அவர் என் மீது கொண்ட பாசம் எவ்வளவு பெரியது என்பதை அறிய முடிந்தது. இலங்கைத் தமிழில் அவர்கள் சாட் பண்ணும் போது அந்தப் பாசத்தின் வேர் எவ்வளவு ஆழமானது என்பதை அக்காவுடன் இணையம் மூலமாக தொடர்பு கொள்ளும் எல்லாரும் அறிவார்கள்.

சேனைக்குள் போட்டிக்காகச் சென்றவன் அதில் வென்றதும் அங்கிருந்த உறவுகளின் அன்பினால் அங்கு தங்கி அவர்களுடன் உறவாய் ஆனதில் இருக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வருத்தமோ சந்தோஷமோ எதுவாக இருந்தாலும் நமக்கு ஆறுதலாய் அன்பாய் இருக்கும் முகம் பார்க்காத நட்புக்களில் நிஷா அக்காவும் ஒருவர். காயத்ரி அக்காதான் உங்க மாமா, உன்னோட மருமகள் என்று என்னை உறவாய்க் கொண்டு அடிக்கடி என்னுடனும் என் மனைவியுடனும் பேசுவார். இந்த உறவு எவ்வளவு உன்னதமானது என்பதை சில நாட்கள் பேசவில்லை என்றாலும் 'தம்பி என்னாச்சு... எங்க் போனே... உடம்புக்கு முடியலையா? ஊரில் நித்யா குழந்தைகள் எப்படியிருக்காங்க' என்று கேட்கும் போது அறிய முடியும். அதே போல்தான் நிஷா அக்காவும் 'மருமக்கள் எப்படியிருக்காங்க...?' 'உன்னோட மருமகளுக்கு பசிக்கிறதாம்... சாப்பாடு கொடுத்துட்டு வாறேன்ப்பா...' என்றெல்லாம் பேசும் போது இந்த எழுத்து, இந்தத் தமிழ் நமக்கு எப்படியான உறவுகளைக் கொடுத்திருக்கிறது என்று சந்தோஷப்பட வைக்கிறது.

எழுத்துக்களை வைத்து ஒருத்தனின் மனதை அறிந்து உறவாய் ஆக்கிப் பார்க்கும் இதயம் எல்லாருக்கும் வருவதும் இல்லை... வாய்ப்பதும் இல்லை... அப்படி வந்தவர்களும் வாய்த்தர்களும் எனக்கு நிறைய இருக்கிறார்கள். அதற்கு இறைவனுக்கு நன்றி. சமீபத்தில் நான் மிகப்பெரிய புயலில் சிக்கித் தவித்து வருந்தி எழுதாமல் இருந்தபோதெல்லாம் 'என்னாச்சு... எல்லாம் சரியாகும்..? ஏதாவது எழுது... அப்பத்தான் மனசுக்குள்ள இருக்க வலி போகும்' என்று தனது கையில் வெட்டுப்பட்டு தையல் போட்டிருந்த நிலையில் மாலைவேளைகளில் கொஞ்ச நேரம் அரட்டையில் வந்து என்னை அதற்குள் இருந்து வெளிவர வைப்பதற்கு எவ்வளவு முயற்சிகள் எடுத்தார் என்பது எனக்கு மட்டுமே தெரியும். வலைப்பதிவர் சந்திப்பு போட்டிகளுக்கும் கல்கி மற்றும் சில சிறுகதைப் போட்டிகளுக்கும் எழுதும் எண்ணம் இல்லாத நிலையில் எழுது எழுது என்று என்னை எழுத வைத்தவர் நிஷா அக்கா. அவரின் தூண்டுதலே வலைப்பதிவர் போட்டிக்கு மூன்று பதிவுகளை எழுத வைத்தது. இப்படி ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி எழுத வைப்பதில் அவருக்கு நிகர் அவரே.

முகம் பார்க்காமல் அக்கா தம்பி உறவாகிவிட்ட எங்களுக்குள் இருக்கும் அன்பின் பொருட்டு என்றாவது ஒருநாள் அக்காவை நேரில் சந்திப்பேன் என்று நம்புகிறேன். அது கண்டிப்பாக நடக்கும். சரி வெள்ளந்தி மனுஷியாக என்னுள்ளே புதைந்திருக்கும் எங்க அக்காவுக்கு அக்டோபர் - 4 (நாளை) பிறந்தநாள். இனி வரும் காலங்கள் அக்காவுக்கு உடல் நலத்துடன் சிறப்பான வாழ்க்கையை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என என் உறவுகள் எல்லாரும் வாழ்த்துங்கள்.

அன்பின் அக்காவுக்கு என் சார்பாகவும் நித்யா சார்பாகவும் உங்கள் மருமக்கள் ஸ்ருதி, விஷால் சார்பாகவும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நிறைந்த அன்பும் வளமான செல்வமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா...

-'பரிவை' சே.குமார். 

வியாழன், 16 ஜூலை, 2015

வெள்ளந்தி மனிதர்கள் : 10. தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

வெள்ளந்தி மனிதர்கள் பலரை இந்த தலைப்பின் கீழ் எழுதியிருக்கிறேன். இன்னும் எழுதுவேன்.  பெரும்பாலும் என்னைக் கவர்ந்த, மகனாக, சகோதரனாக, நண்பனாகப் பார்த்தவர்களைப் பற்றித்தான் எழுதியிருக்கிறேன். இதில் எழுத இருக்கும் மகான் குன்றக்குடி அடிகளாரை இதற்குள் நிறுத்த முடியாது என்றாலும் என்னைக் கவர்ந்தவர் ஆதலால் இன்றைக்கு அவரைப் பற்றி எழுத வேண்டும் தோன்றியதால் வெள்ளந்தி மனிதராய் இங்கு பகிரப்பட்டிருக்கிறார். அதற்கான காரணமும் இருக்கிறது. அதை இறுதியில் சொல்லியிருக்கிறேன்.

குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருக்கும் அழகன் முருகனின் திருத்தலமான குன்றக்குடி, காரைக்குடி - திருப்பத்தூர் சாலையில் கோவிலூரில் இருந்து பத்து கிலோமீட்டருக்குள் இருக்கிறது. குன்றக்குடியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் பிள்ளையார்பட்டி... நமக்கு பைக்கில் பயணிக்கும் தூரமே என்பதால் இரண்டு ஸ்தலங்களுக்கும் அடிக்கடி செல்வதுண்டு.


குன்றக்குடியில் முருகனைத் தரிசிக்க மட்டுமே வந்து கொண்டிருந்தவர்களை, எங்கள் பேராசான் பழனி இராகுலதாசன் அவர்கள்தான் அடிகளாரைப் (பெரிய அடிகளார்) பார்க்க அழைத்து வந்தார். குன்றக்குடி அடிகளாருக்கும் ஐயாவுக்கும் ரொம்ப நெருக்கம். அவரைப் பார்க்கப் போகும் போதெல்லாம் ஐயா அவரிடம் நேரம் போவது தெரியாமல் இலக்கியம் பேசிக் கொண்டிருப்பார். எனக்கும் முருகனுக்கும் அவரிடம் பேசுவதற்கே பயம். அவரிடம் ஆசி வாங்கிக் கொண்டு ஓரமாக ஒதுங்கி நின்றுவிடுவோம். அடிகளாரிடம் பேசுவதற்கே எல்லாரும் பயப்படுவார்கள்.

தேவகோட்டை பாரதி கலை இலக்கியப் பெருமன்ற விழாவில் சிறப்புரை ஆற்றவும் மற்றும் சில விழாக்களுக்கும் அடிகளார் அவர்கள் வருவார்கள். அப்போதெல்லாம் அவரிடம் ஐயாவின் மாணவர்களாக பேசி, ஆசி வாங்கியிருக்கிறோம். அடிகளாரின் பின்னே ஒரு இளைஞராக, அடுத்த குன்றக்குடி அடிகளாராக உருவாகிக் கொண்டிருந்த பொன்னம்பல அடிகளார் வருவதுண்டு. அதிகம் பேசமாட்டார். அவரது கருந்தாடிக்குள் மென்மையாய் ஒரு சிரிப்பு எப்போதும் ஒளிந்திருக்கும்.

பெரியவரின் மறைவுக்குப் பின்னர் பொறுப்பேற்றுக் கொண்டவர், பெரியவர் ஆரம்பித்து வைத்த கல்வி, தொழிற்கூடங்களை எல்லாம் மிகச் சிறப்பாக செயல்படுத்தி குன்றக்குடிப் பகுதியை சிறப்பானதொரு பகுதியாக மாற்றியிருக்கிறார். இவரும் ஐயாவின் மீது மிகுந்த பற்று வைத்திருந்தார். ஆரம்பத்தில் அதிகம் பேச மாட்டார். பாரதி விழாவுக்கு வரும்போதெல்லாம் கொஞ்சமே கொஞ்சமாகத்தான் பேசுவார். பின்னர் வருடங்கள் ஆக, ஆக அவரது பேச்சின் வீரியமும் அகண்ட பார்வையும் எல்லோரையும் ஈர்க்க ஆரம்பித்தது. இப்போதெல்லாம் அழகாக, மிக அருமையாக பேசுகிறார்.

பெரியவர் இருக்கும் போது குன்றக்குடி மடத்து மாடியில் இருக்கும் அவரது அறைக்குச் செல்ல ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதியில்லை. கீழே வந்துதான் எல்லோரையும் பார்ப்பார்... பேசுவார்... ஆசி வழங்குவார். பெரும்பாலும் யாரையும் அறைக்கு வாருங்கள் என்று சொல்லமாட்டார். ஆனால் பொன்னம்பல அடிகளாரை ஐயாவுடன் போகும் போதும் அதன் பின் முருகனுடன் போகும் போதும் இன்னார் வந்திருக்கிறார் என்ற செய்தி போனதும் மேலே வரச்சொல்லுங்கள் என்று சொல்லி அவரது அறையிலேயே சந்திப்பார். ஐயாவைப் பார்த்ததும் எழுந்து நின்று வரவேற்ப்பார். அப்போதெல்லாம் எங்காவது விழாவில் பேசிவிட்டு வந்திருந்தால் அது பற்றி ஐயாவிடம் நீண்ட நேரம் உரையாடுவார். மிகவும் பண்பாகப் பேசுவார். 

எங்கள் திருமணம் முடிந்ததும் அவரிடம் ஆசி வாங்க முருகனுடன் சென்றோம். மேலே வரச்சொல்லி எங்களை ஆசிர்வதித்து பழங்கள் கொடுத்தார். இந்தப் பழக்கம் பெரியவரிடமும் இருந்தது. பார்க்கப் போகும் போது பழங்கள் வாங்கிச் சென்றால் அதை வைத்திருந்து வருபவர்களுக்கு ஒவ்வொரு கொடுப்பது அவரின் வழக்கம். அதையே இவரும் கடைபிடித்து வந்தார். 

நல்ல இலக்கியவாதி, ரசனையாக... நிறைய விஷயங்களை ஞானத்துடன் பேசுபவர், இலக்கியவாதிகளுடன் விவாதிப்பவர், அவர்களுக்கு மரியாதை கொடுப்பவர், பாசம் நிறைந்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள். என்னடா இன்னைக்கு அடிகளார் பற்றி எழுதியிருக்கானேன்னுதானே நினைக்கிறீங்க.. நண்பன் அவருக்கு பிறந்தநாள் என்று சொல்லியிருந்தான். எனக்குள்ளும் பழைய நினைவுகள் மெல்ல எட்டிப் பார்க்க, நானும் இங்கு உங்கள் வாழ்த்துக்களோடு என் வாழ்த்துக்களையும் பகிர்வாக ஆக்கிவிட்டேன்.

முருகன் எந்தச் செயலைச் செய்தாலும் அடிகளார் இல்லாது செய்வதில்லை. அடிக்கடி அவரைச் சந்திக்கிறான்.  அவனது இல்லத்துக்கு கூட பொன்னம்பலக் குடில் என்று வைத்திருக்கிறான். நான் வெளிநாடு வந்தபின்னர் அவரைச் சந்திப்பது குறைந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் அடிகளாரைப் பார்க்கப் போவோமா என்று முருகன் கேட்பதுண்டு. நமக்குத்தான் நேரம் கிடைப்பதில்லை.

அடிகளாரின் மிகச் சிறந்த பேச்சுக்களில் இதுவும் ஒன்று... நீங்களும் கேட்டுப் பாருங்கள்... கண்டிப்பாக ரசிப்பீர்கள்.



எனக்கு சிறுகதைத் தொகுப்பு கொண்டு வரும் எண்ணம் இரண்டு வருடமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கைகூடும் வேலை வரும் என்று நினைக்கிறேன். முத்துநிலவன் ஐயா கூட எப்போது சிறுகதை தொகுப்பு வருகிறது என்று கேட்டிருந்தார்கள். முருகன் அருளால் தொகுப்பு கொண்டு வரும் போது அடிகளார் அவர்களின் அணிந்துரையோடும் எனது பேராசானின் வாழ்த்துரையோடும் கொண்டு வர வேண்டும் என்று எண்ணம். அந்த குன்றக்குடி சண்முகநாதன் நினைத்தால் எல்லாம் நடக்கும். பார்க்கலாம்.

எங்கள் அன்பிற்குரிய தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் என்னும் இலக்கியப் பெட்டகத்துக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்... அவரின் ஆசியை வேண்டி....
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 27 மார்ச், 2015

வெள்ளந்தி மனிதர்கள் : 9. எம்.எஸ். சார்

வெள்ளந்தி மனிதர்கள் வரிசையில் என்னைப் பாதித்த, செதுக்கிய, பாசம் காட்டிய உறவுகள் குறித்த நினைவுகளை கொஞ்சமாய் அசைபோட்டு வருகிறேன். அந்த வகையில் இந்த பகிர்வில் நினைவாய் மலரப்போவது எனது அன்பிற்குரிய பேராசிரியர். திரு. எம்.சுப்பிரமணியன் (எம்.எஸ்) அவர்கள்.

எங்கள் ஸ்ரீசேவுகன் அண்ணாமலைக் கல்லூரியின் இயற்பியல் துறைப் பேராசிரியராய் இருந்தார். கல்லூரியில் முதல் வருடம் படித்த போது இவருடன் அவ்வளவு நெருக்கம் ஏற்பட வாய்ப்புக்கள் அமையவில்லை என்பதைவிட நான் படித்த துறைக்கும் இவரின் துறைக்கும் சம்பந்தம் இல்லாத காரணத்தால் இவருடன் பழகும் வாய்ப்புக் கிட்டவே இல்லை. எனது தோழர் தோழியர் இவரின் துறையில் படித்ததால் இவரைப் பற்றி நிறைய அறிய முடிந்தது.

இரண்டாம் ஆண்டு படிக்கும் போது எங்கள் ஐயாவுடன் பேசியபடி செல்லும் நாட்களில் திருப்பத்தூர் ரோட்டில் இருந்த எம்.எஸ்.சாரின் கண்ணா பேப்பர் ஸ்டோரின் கல்லாவில் அமர்ந்திருக்கும் அவரைப் பார்த்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருப்பார். அப்போது நாங்களும் அங்கு நிற்போம்... அப்போது சிநேகமாய் சிரிப்பார். கடையில் வேலை பார்த்த ஜீவா ஐயா மீது மிகுந்த பற்று வைத்திருந்தான். ஐயா வீட்டுக்கு அடிக்கடி வருவான். அவனுடன் எங்களுக்கும் நெருக்கமானது. இவனைப் பற்றி மற்றுமொரு பகிர்வில் பார்ப்போம். ஐயாவுடன் எங்களைப் பார்த்ததும் என்ன ஐயா,  ரெண்டு மாணவர்களையும் எப்பவும் பக்கத்துலயே வச்சிருக்கீங்க என்று சொல்லிச் சிரிப்பார்.

அதன் பின் மே மாதம் புத்தகம், நோட்டு வியாபாரம் சூடு பிடிக்கும் சமயத்தில் ஒத்தாசைக்கு ஆளு வேணும் காலேசு இல்லாதப்போ மாலை நேரத்துல வந்து நில்லுவே என்று ஜீவா சொல்ல, மே,ஜூன் இரண்டு மாதமும் கணிப்பொறி மையம் ஆரம்பிக்கும் வரை கடையில் நின்று வியாபாரம் பார்க்க ஆரம்பித்தேன். முருகன் வரமாட்டான். நானும் ஜீவாவுக்கு வேண்டிய சில நண்பர்களும் எங்களால் ஆன உதவியைச் செய்வோம். அப்படியே நெருக்கம் தொடர, குமார் வரலையா? என்று கேட்க ஆரம்பித்தது அவரின் நேசம்.

பின்னர் கணிப்பொறி மையம் அது இதுவென கொஞ்சம் அவருடனான உறவு பார்க்கும் போது பேசுவதோடு மட்டுமே தொடர்ந்தது. கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்த பின்னர் எம்.எஸ். சாருடன் நெருக்கம் அதிகமாகியது. குறிப்பாக சபரிமலைக்கு அவர் தலைமையில் நான்காண்டுகள் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தபோது சாரின் அன்பில் மீண்டும் நனைய ஆரம்பித்தேன். மலைக்குச் செல்லும் போது நானும் முருகனும் மாணவர்களாய் அவர் முன் என்றாலும் எங்களை அன்பாய் பார்த்துக் கொள்வார். எந்த வேலை என்றாலும் எங்களைத்தான் அழைப்பார். மலைக்குச் செல்ல இருமுடி கட்டுவதற்காக தேங்காய் தேய்த்து எடுப்பது மற்றும் மற்ற வேலைகள் என சார் வீட்டில்தான் இருந்து செய்வோம்.

எம்.எஸ்.சார் மிகுந்த தெய்வ பக்தி உள்ளவர். ஆனால் அவரின் குடும்ப வாழ்க்கை அவருக்கு மிகுந்த சோகத்தையே கொடுத்தது. பையன்கள் இருவருக்கும் ஒரு வித நோய்... குழந்தைகள் இருவருமே நோயின் பிடியில் என்பதால் அவரின் மனைவியோ விரக்தியின் பிடியில்... எப்பவும் இருவருக்கும் ஒத்துப் போவதேயில்லை... எல்லாவற்றையும் தாங்கினார்.... இரண்டு மகன்களையும் இழக்கும் வரை...

நாங்கள் கல்லூரியில் வேலை பார்த்த போதுதான் அவரின் இளைய மகன் இறந்தான். அவரது வீட்டு ஹாலில் கிடத்தியிருந்தார்கள்... பார்க்க சகிக்கவில்லை... சாரின் அழுகையும்... துடிப்பும்... இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேலும் வரக்கூடாது என்று நினைத்தாலும் எங்காவது மீண்டும் மீண்டும் வந்து கொண்டேதான் இருக்கின்றன. எனது மைத்துனனை அவருக்கு நன்றாகத் தெரியும்... எங்களுடன் சபரிமலைக்கு இரண்டு வருடம் வந்தான். அவன் தற்கொலை பண்ணிக் கொண்டதைக் கேட்டு பதறியவர், நித்யாவுக்கு ஆறுதல் சொல்லு... அவங்க அப்பா அம்மா எப்படி இதைத் தாங்குவாங்க... கிறுக்குப்பய இப்படிப் பண்ணிட்டானே என்று புலம்பியவர்தான்... அன்று தனது மகனை இழந்து புலம்பிக் கொண்டிருந்தார்.

அபுதாபி வந்த பிறகு ஊருக்குப் போகும்போதெல்லாம் அவரைக் கடையில்  சென்று சந்திப்பதுண்டு... எப்பவும் போல் பேசினாலும் ஒரு சோகம் அவருக்குள் ஒளிந்தே கிடக்கும்... குமார், சபரிமலைக்கு மறுபடியும் ஒரு பயணம் போற மாதிரி விடுமுறை எடுத்துக்கிட்டு வாங்கன்னு சொல்லுவார். அவரது பணி நிறைவுக்குப் பின்னரும் தேவகோட்டையில்தான் இருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடைக்குப் போனபோது அவரின் தம்பிதான் கடையில் இருந்தார். சார் எப்படியிருக்காங்க என்று கேட்டதுக்கு நல்லாயிருக்கார் என்று சொன்னார். வேறு ஒன்றும் சொல்லவில்லை.

அதன் பின்னான நாட்களில் நண்பர்கள் மூலமாகத்தான் அவரின் மூத்த மகனும் இறந்து விட்டதாகவும் மதுரையில் போய் செட்டிலாகிவிட்டதாகவும் கேள்விப்பட்டேன். அவரின் தம்பியிடம் விசாரிக்க, 'ம்... அண்ணோட பையன் இறந்த பின்னால... அண்ணனுக்கு வாழ்க்கையில ஒரு பிடிப்பு இல்லை... அண்ணிக்கும் இங்க இருக்க பிடிக்கலை... மதுரைப் பக்கமே பொயிட்டாங்க... நானும் கொஞ்ச நாள் கடையைப் பாத்துட்டு வித்துட்டுப் போக வேண்டியதுதான்' என்றார். எனக்கு அதிர்ச்சியாகவும் அதே நேரம் ரொம்ப வேதனையாகவும் இருந்தது.

கல்லூரியில் எந்த மாணவனையும் கோபமாகப் பேசாத, எல்லாருக்கும் பிடித்த எம்.எஸ். சாராக, சபரிமலைக்கு தொடர்ந்து செல்லும் ஒரு பக்தனாக, அடுத்தவரை எடுத்தெறிந்து பேசாத மனிதராக வாழ்ந்த... வாழ்ந்து கொண்டிருக்கிற... அந்த மனிதரின் வாழ்வு மட்டும் ஏன் இப்படியானது என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.

எம்.எஸ்.சார்... தங்களின் புத்திர சோகத்துக்கு ஆறுதல் சொல்ல முடியாது. உங்கள் வாழ்வின் இழப்புக்கள் அதிகம்... மீட்க முடியாத இழப்புக்களால் வாழும் கடைசி நாள் வரை உங்களை இறைவன் அழ வைத்து விட்டான்... ஆற்றுப் படுத்த முடியாத சோகம் உங்கள் வாழ்க்கையில்... என்னைப் போன்றோரை செதுக்கிய சிற்பிகளில் தாங்களும் ஒருவர்... கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும் என்று சொல்ல முடியாத நிலை என்றாலும் இனி வரும் காலங்களில் உங்கள் மனைவி உங்களிடத்தில் அன்போடு இருந்து உங்களை... உங்கள் வாழ்க்கையை கொஞ்சமாவது சந்தோஷமாக கொண்டு செல்லட்டும்.... செல்ல வேண்டும் என்பதே ஆசை.

இந்த முறை விடுப்பில் செல்லும் போது மதுரையில் இருக்கும் மனைவியின் அம்மா வீட்டுக்கு போகும்போது கண்டிப்பாக எம்.எஸ்.சாரை பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். எங்க எம்.எஸ்.சார் இனி வரும் நாட்களில் வசந்தத்தை பார்க்காவிட்டாலும் வலிகளை மறந்து வாழ இறைவனைப் பிரார்த்தியுங்கள்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

வெள்ளந்தி மனிதர்கள் : 8. அம்மா


நினைவில் நான் மீட்டெடுத்துப் பார்க்கும் வெள்ளந்தி மனிதர்களில் என்னைச் செதுக்கிய, என்னை உறவாய், மகனாய்ப் பார்த்த மனிதர்களைப் பற்றி பகிர்ந்து வருகிறேன். அந்த வரிசையில் இன்று அம்மா... இந்த அம்மா எனது பேராசன் மு.பழனி இராகுலதாசன் அவர்களின் துணைவியார். எனக்கு மட்டுமல்ல... ஐயாவின் அன்புக்குப் பாத்திரமான அனைத்து மாணாக்கர்களுக்கும் இவர் அம்மாதான்... என்ன எனக்குத் தெரிந்தவரை இவருக்கு நாங்கள் ரொம்பப் பிடித்தவர்கள். அந்தப் பாசம் இன்று வரை எனக்கு அவரை அம்மாவாகவும் அவருக்கு என்னை மகனாகவும் தொடர வைத்திருக்கிறது.

அம்மா...

கல்லூரி முதலாம் ஆண்டில் இரண்டு செமஸ்டர்களிலும் தமிழ் வகுப்புக்கு ஐயா வந்தாலும் அந்த வருட முடிவில்தான் முருகன் மூலமாக ஐயாவுடன் நெருக்கமாகும் வாய்ப்புக் கிடைத்தது. அவருடன் கல்லூரியில் தினமும் பேசினாலும் வீட்டுக்கு எல்லாம் செல்வதில்லை. ஒரு நாள் ஐயாதான் 'வீட்டுக்கு வாங்க தம்பி' என்று அழைத்தார். பின்னர் முருகனுடம் ஐயா குடியிருந்த தேவி பவனத்துக்குள் அடியெடுத்து வைத்தேன். நாங்க போனபோது அம்மா, வாங்க என்று சொன்னதுடன் அருமையான காபி ஒன்றையும் கொடுத்தார். அதன் பின் தினமும் ஐயா வீட்டில் அரட்டை, அம்மாவின் காபி, சாப்பாடு... ஐயாவுடன் சைக்கிளை உருட்டிக் கொண்டே பேசிக்கொண்டு தியாகிகள் ரோடு, திருப்பத்தூர் ரோடு, கண்டதேவி ரோடு, சில நாட்கள் புதூர் அக்ரஹாரம் பாலு அண்ணா வீட்டு வரைக்கும் பயணித்து இரவு ஏழு, எட்டு மணிக்குத்தான் வீட்டுக்குப் போவேன்.

ஆரம்ப நாட்களில் அம்மாவுடன் அவ்வளவாக பேசுவதில்லை. முருகனைப் போல் எல்லாருடனும் சரளமாகப் பேசமாட்டேன் என்பது என்னுடன் பழகிய அனைவருக்கும் தெரியும். ஐயா கூட தம்பிக்கிட்ட கேட்டாத்தான் பதில் வரும்... முருகனுக்கிட்ட கேட்காமலே பதில் வரும் என்பார். அம்மாவைப் பார்த்து சிரிப்பதோடு சரி... சில விடுமுறை தினங்களில் வீட்டுக்குச் சென்றால் ஐயா வெளிய போயிட்டாங்கப்பா... நீங்க சாயந்தரம் வாறீங்களா? என்பார். 'சரிங்க' என்று வந்துவிடுவேன்.

ஒரு நாளைந்து மாதத்துக்குப் பின்னர் அம்மாவுடன் சரளமாகப் பேச ஆரம்பித்ததும் ஒரு நாள் போகலைன்னாலும் 'என்ன குமார் ஏன் நேற்று வரலை' என்று கேட்க ஆரம்பித்த போதுதான் அவரின் பாசம் புரிந்தது. பின்னர் ஐயா இல்லாவிட்டால் கூட அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு வர ஆரம்பித்த நாட்கள் அவரின் பாசத்தைச் சுமந்து கடந்து சென்றன என்றால் மிகையில்லை. ரெண்டு மூணு நாள் செல்லவில்லை என்றால் 'எங்கே குமாரைக் காணோம்? காலேசுக்கு வந்துச்சா... நீ பாத்தியா...?' என வீட்டிற்கு தினமும் செல்லும் எங்கள் குழு நண்பர்களிடம் கேட்டதும்,. குமார் வரலைன்னா மட்டும் புலம்புறீங்க... நாங்க வரலைன்னா கேக்க மாட்டீங்கதானே என அம்மாவிடம் சண்டை பிடித்து விடுவார்களாம். மறுநாள் போனால் குமாரு வரலைன்னு கேட்டா பண்ணையாருதான் புள்ளையோன்னு சண்டைக்கு வருதுக என்று சொல்லிச் சிரிப்பார்.

விடுமுறை தினங்களில் பெரும்பாலும் ஐயா வீட்டில்தான் எங்கள் குழு அரட்டை அடிக்கும். எங்கள் குழு என்பது அன்பு அண்ணன், முருகன், நான், தமிழ்க்குமரன் (படிக்கும் போதே இறந்துவிட்டான்), பார்த்தீபன் (எப்போதாவது வருவான்), மணிவாசகம் (ஐயா மகன்), மணி மேகலை (ஐயா மகள்), சுபஸ்ரீ, கனிமொழி, அம்பேத்கார் (இவனும் அடிக்கடி வரமாட்டான்), மணி, ஐயா வீட்டின் எதிர் வீட்டில் இருந்த ஜெயலெட்சுமி அக்கா, அவரின் தம்பி சுதந்திரக்குமார், அவரின் தங்கை என பெரிய கூட்டம். நாங்கள்.மாலை எல்லோரும் அங்கு ஆஜராகிவிடுவோம். அம்மா கொடுக்கும் சுவீட், காரம், காபியோட ஐயா தலைமையில் அரட்டை ரெண்டு மணி நேரத்துக்கு மேல களை கட்டும். அம்மா எங்களுடன் அரட்டையில் கலந்து கொள்ள மாட்டார். எனக்குத் தெரிந்து எங்களுக்கு முன்னரோ அல்லது பின்னரோ இப்படி ஒரு அரட்டைக்குழு ஐயா வீட்டில் கூடவே இல்லை. உங்க செட்டுக்கு அப்புறம் அந்த மாதிரி பிள்ளைங்க கூட்டமெல்லாம் வரவேயில்லை என அம்மா இப்போது கூட சொல்லுவார். அப்போத்தான் குமார் வீடே நிறைஞ்சிருக்கும்... எல்லாரும் வருவீங்க... அதுக்கப்புறம் அவ்வளவு பசங்க வரலை.. ஒரு சிலர் தான் வந்தாங்க... என்றும் சொல்வார்.

எனக்கு அப்போது உள்நாக்குப் பிரச்சினை இருந்தது. திடீரென வீங்கி எச்சில் விழுங்க முடியாதவாறு வலி உயிர் போகும். டாக்டரிடம் காண்பித்து மருந்து சாப்பிட ரெண்டு மூணு நாளில் சரியாகும். இதை அறிந்த ஐயா, ஒரு ஞாயிறு அன்று என்னைக் காரைக்குடியில் இருந்த ஆயுர்வேத மருத்துவரிடம் கூட்டிச் சென்றார். அவருக்கு ஐயாவை நல்லாத் தெரியும்... அவர் சின்னச் சின்னதாக மிளகு அளவில் வெள்ளை உருண்டை மாத்திரைகள் கொடுத்தார். அப்போது டீ, காபி, சிகரெட், பீடி, தண்ணி எல்லாம் சாப்பிடக்கூடாது. அப்புறம் மருந்துக்கு பலனில்லாமப் போயிரும் என்றார். டீ, காபி குடிப்பார்.. மத்ததெல்லாம் எம்புள்ளைக்கு இல்லை என்று ஐயா சொன்னார். அத்தோடு இல்லாமல் வீட்டுக்குப் போனதும் மேகலாவிடம் சொல்லி குமாருக்கு இனி டீ, காபி கொடுக்கக்கூடாது. பால் மட்டும்தான் கொடுக்கணுமின்னு அம்மாக்கிட்ட சொல்லுங்க என்று சொல்லி விட்டார். அதன் பின் எனக்கு மட்டும் ஸ்பெஷலாய் பால், பூஸ்ட், ஹார்லிக்ஸ்தான். இங்கு வந்து டீ, காபி சாப்பிட ஆரம்பித்தாலும் இன்று போனாலும் குமாரு டீ காபி சாப்பிடமாட்டாக என்று சொல்லி பால் மட்டுமே காய்ச்சிக் கொடுப்பார்.

எல்லாருக்கும் காபி கொடுத்துவிட்டு எனக்கு மட்டும் பால் கொடுப்பதைப் பார்த்து அதென்ன அவரு மட்டும் ஸ்பெஷல்... தனியா பால் போட்டுக் கொடுக்குறீங்க என சுபஸ்ரீ கேட்க, எம்புள்ள எப்பவும் ஸ்பெஷல்தான் உனக்கு காபியே அதிகம் என்று சொல்ல, அம்மா எல்லாருக்கும் முன்னால சின்னப்புள்ளையில இருந்து உங்க மகளா வர்றவ நாந்தான்... இவுகள்லாம் இப்பத்தான் வந்திருக்காக. பாத்துக்கங்க என்று கோபப்படுவது போல் நடிப்பார். ஆம் மேகலையோட ஆரம்பப்பள்ளியில் இருந்து பனிரெண்டாவது வரை ஒன்றாகப் படித்தவர். கல்லூரிப் படிப்பை மேகலை திருச்சியில் தொடர, இவர் எங்கள் கல்லூரியில் பிஸிக்ஸ் படித்தார். 'பரியன் வயல் பண்ணையார்' என இவர்கள் எல்லாம் கேலி பண்ணினால் என் பிள்ளைய ஏன் கேலி பண்ணுறீங்க? சும்மாவே இருக்க மாட்டீங்களா? என எனக்காக எல்லோரையும் சத்தம் போடுவார்.

என்னோட பிறந்த தினத்தை ஞாபகம் வைத்திருந்து அன்றைய தினம் வீட்டில் எதாவது ஸ்வீட் செய்து வைத்திருப்பார். அவர்களிடம் ஆசி வாங்க நான் வருவேன் என்பது தெரியும். எப்படியும் வந்துருவான் என எதிர் பார்த்திருப்பார். நான் பிறந்தநாளெல்லாம் கொண்டாடுவதில்லை. ஆனாலும் அவர்களின் ஆசி வேண்டிச் செல்வதுண்டு. ஐயா எதாவது புத்தகத்தில் கையெழுத்திட்டு எனக்குக் கொடுப்பார். அம்மா இப்போதும் எனது பிறந்தநாளை நினைவில் வைத்துச் சொல்வார்.

அம்மா அசைவம் சாப்பிடமாட்டார். எங்களுக்காக அசைவம் சமைத்திருக்கிறார்... ஒரு முறை எல்லோரும் காரைக்குடிக்கு சினிமாவுக்குச் சென்றுவிட்டு மதியம் வீட்டுக்குத் திரும்பினால் அம்மா எங்களுக்காக மட்டன் வாங்கி சமைத்து வைத்திருந்தார். ஹாலில் எல்லாவற்றையும் கொண்டாந்து வைத்து விட்டு கிச்சனுக்குள் போய்விட்டார். நாங்களே போட்டுச் சாப்பிட்டோம். இன்றும் வீட்டுக்குப் போனால் எதாவது சாப்பிட வேண்டும். இல்லையென்றால் வந்துட்டு ஒண்ணுமே சாப்பிடாமல் போறீயேப்பா என்பார். என்னிடம் மட்டுமல்ல எனது மனைவி, குழந்தைகள் என எல்லோரிடமும் பாசம் வைத்திருக்கிறார்.

மாலை வேளைகளில் ஐயா பேப்பர் திருத்தும் போதே அல்லது எதாவது மொழிபெயர்ப்புக்காக தயார் பண்ணிக் கொண்டிருக்கும் போதோ நான், முருகன், சுபஸ்ரீ மூவரும் உதவியாக இருப்போம். அப்பொதெல்லாம் எங்களுக்கு இரவு டிபன் அங்குதான். ஏழு மணிக்கு கிளம்பினால் இருங்க தோசை சுட்டுட்டேன். ஆளுக்கு ரெண்டு சாப்பிட்டுப் போங்க என்பார்.

வீட்டுக் கிரகப்பிரவேசத்துக்கு நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பாக வரணுமின்னு சொல்லிட்டு வந்தும் அம்மா மட்டும்தான் வந்தாங்க... ஐயா பெரும்பாலும் எங்கும் செல்வதில்லை... என்னம்மா ஐயா இங்ககூட வரலை என்று கேட்டேன். அவர்கள் தற்போது குடியிருக்கும் அதே வீதியில் கொஞ்ச தூரம் தள்ளித்தான் எங்கள் வீடு... ஐயாக்கிட்ட சொல்லிக்கிட்டுத்தான் இருந்தேன்... ஏதோ அவசர வேலையின்னு பொயிட்டாங்க... என்று சொல்லிச் சென்றார். மறுநாள் பேரன் பேத்திகளுக்கு புத்தகங்களும் ஸ்வீட்டும் வாங்கிக் கொண்டு சைக்கிளில் வந்து இறங்கினார் ஐயா. எனக்கு ஆச்சர்யம்... எப்படி இவர் வந்தார்... அதான் நீங்க பொயிட்டு வந்தாச்சுல்ல அப்புறம் நான் எதுக்கு என்று மறுப்பவர் ஆச்சே என்று நினைத்தபடி 'வாங்கய்யா' என நானும் மனைவியும் அழைத்து அவரை சேரில் அமரவைத்து அவருக்கு அருகே தரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

'நேத்துல இருந்து உங்கம்மா குமாரு வீட்டுக்குப் பொயிட்டு வாங்க... புள்ள வந்து சொல்லிட்டுப் போச்சுல்ல... ஊரே சுத்துறீக... இந்தா இருக்கு.. பொயிட்டு வாங்கன்னு' ஒரே புடுங்காப் புடிங்கிட்டாங்க... காலையிலயே சொல்லிட்டாங்க எங்க போனாலும் முதல்ல குமார் வீட்டுக்குப் பொயிட்டுப் போங்கன்னு... அம்மாவுக்கு உங்கமேல ரொம்பப் பாசம்... வரலையின்னா புடுச்சி இழுத்திக்கிட்டு வந்துருவாங்க போலன்னு சொல்லிச் சிரித்தார். அன்று கல்லூரியில் படிக்கும் பையனாக அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது எப்படிப் பார்த்தார்களோ அதே பாசமும் நேசமும் இன்று இரண்டு குழந்தைகளின் தந்தை ஆன போதும் அவர்கள் இருவரிடம் தொடர்வது நான் செய்த பாக்கியம் என்றுதானே சொல்லவேண்டும். எத்தனையோ பிள்ளைகள் அந்த வீட்டுக்கு வந்து மூன்றாண்டுகள் பேசி, மகிழ்ந்து கடந்து செல்ல, அவர்களின் மகனாக உறவைத் தொடரும் சிலரில் நானும் ஒருவன் என்றாகும் போது அதுவும் மாணவனாக எட்ட வைக்காமல் மகனாக அருகே வைத்துக் கொள்ளும் அந்தப் பாசம் எனக்கு கிடைத்திருக்கிறது என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

என்னை தன் மகனாகப் பாவிக்கும் அம்மாவும் ஐயாவும் நாங்கள் படிக்கும் காலத்தில் பேசிக் கொள்வதில்லை என்பது பழக ஆரம்பித்து சில மாதங்களுக்குப் பிறகே தெரியும். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் இருவரும் பேசாமல் வாழ்ந்திருக்கிறார்கள். நாங்களும் அவர்களைச் சேர்க்க முயன்று தோற்றுத்தான் போனோம். அம்மா சமைத்து வைக்கும் சாப்பாட்டை நான் ஐயாவுடனோ அல்லது ஐயா, முருகன், சுபஸ்ரீ, மேகலாவுடனோ எத்தனையோ முறை சாப்பிட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் ஐயாவுடன் என்றால் நாங்கள்தான் போட்டுச் சாப்பிட வேண்டும் அம்மா வரவே மாட்டார். ஆனால் சாப்பிட்டு எழும்போது 'என்னப்பா அதுக்குள்ள எந்திரிச்சிட்டீங்க... நல்லா சாப்பிட்டீங்களான்னு கிச்சனில் இருந்து கேட்பார். இருவரும் பேசிக்கொண்டது மேகலாவின் திருமணத்தின் போதுதான்.... அவர்கள் பேசிக்கொள்வதைப் பார்த்து எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? அதை எழுத்தில் கொண்டு வரமுடியாது. அந்தளவுக்கு சந்தோஷப்பட்டவன் நான்.

என்மேல் உள்ள பாசத்தால்தான் என்னைக் கல்லூரி விழாவில் மகன் என்று சொன்னார், திருமண வாழ்த்திலும் எங்கள் வீட்டுப் பிள்ளை, எங்கள் மகன் என்று எழுதி நால்வரின் பெயரும் போட்டுக் கொடுத்தார். அப்படிப்பட்ட ஆசான்... எனது ஐயா.. பாசமிகு அப்பா... மூலமாகக் கிடைத்த அம்மா... எனக்கு எப்போதும் எனது ஆசிரியன் மனைவியாகத் தெரியவே இல்லை... என்னைப் பெற்ற தாயாகத்தான் தெரிகிறார். ஆம்.. எனது அம்மா சிவகாமி போல்தான் இந்த அம்மாவும்... முருகனின் அம்மாவும்... இன்னும் சில அம்மாக்களும்...

என்னை மகனாக நினைக்கும் அந்த அன்னை எப்போதும் போல் சந்தோஷமாக நான் அந்த வீட்டுக்குப் போகும்போது குமாரு என வாய் நிறைந்த பாசத்தோடு அழைத்து எப்பவும் போல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை.

வெள்ளந்தி மனிதர்கள் தொடர்வார்கள்.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

வெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி


நான் கடந்து வந்த பாதையில் என்னைச் செதுக்கிய சிற்பிகளையும் மகனாகப் பார்த்த உறவுகளையும் பற்றிப் பகிர்ந்து வரும் வெள்ளந்தி மனிதர்களில் இன்று அம்மாவைப் பற்றிப் பார்ப்போம். அம்மா பெயர் ருக்மணி, எல்லாரும் அழைப்பது ருக்கு. எனது நண்பன் முருகனின் அம்மா... எனக்குந்தான். 

அம்மா.... கிராமத்தில் பிறந்து கிராமத்தில் வாக்கப்பட்டு நகரத்தில் வாழ்பவர். படித்தவர் அல்ல ஆனால் பாசக்காரர். கல்லூரியில் படிக்கும் போது ஆரம்பத்தில் முருகனின் வீட்டில்தான் பெரும்பாலான பொழுதுகள் கழியும். பின்னர் ஐயா வீடு அதை விட்டால் முருகனின் வீடு என ஆனது. அங்கு போகும் போதெல்லாம் வாஞ்சையுடன் பேசும் வெள்ளந்தியான மனுசி. எப்பவும்... இப்பவும் 'குமார் குட்டி.... நல்லாயிருக்கியாம்மா...' என்று முகத்தில் கையால் வழித்து முத்திடமிடுவார். அந்த பாசத்துக்கு நிகர் ஏதும் இல்லை.

முருகன் எப்பவும் எங்காவது பறந்து கொண்டே இருப்பவன்.... இப்பவும் அப்படித்தான் இருக்கிறான். இந்தா வருகிறேன் என்று சொன்னால் போக வேண்டிய இடத்துக்கு நாம் போய் திரும்பினாலும் அவன் வரமாட்டான். இதனாலே ஐயாவுக்கு முருகன் மீது கோபம் வரும். அப்படித்தான் வீட்டுக்கு வாடா என்று சொல்லி விட்டு நான் போவதற்குள் சைக்கிளை எடுத்துக் கொண்டு எங்காவது கிளம்பிவிடுவான். அவசர அவசரமாக வீட்டுக்குப் போனால் அம்மாதான் இருப்பார். 'என்னம்மா... தம்பி வரச்சொன்னுச்சா? இப்பத்தாம்மா அந்த டீச்சரு வீட்டு வரைக்கும் பொயிட்டு வாறேன்னு சொன்னுச்சு... டிவி பாத்துக்கிட்டு இருங்கடி... இப்ப வந்துரும்...' என்று சொல்லி இருக்க வைப்பார். காத்துக் கொண்டிருக்கும் நேரம் கடந்தாலும் அவன் வரமாட்டான் என்பது வேறு விஷயம். 'அம்மா... அவனைக் காணோம்... நான் கிளம்புறேன்... வந்தாச் சொல்லுங்கன்னு' கிளம்பும் போதும், 'சொல்லிட்டுத்தாம்மா போச்சு... இரு... இப்ப வந்துரும்' என்பார்.

நாங்கள் இருவரும் எதாவது பேசிக் கொண்டிருக்கும் போது, 'அம்மா காபி போட்டுக் கொடுங்கம்மா... குமார் வந்திருக்கானுல்ல...' என்றதும் வேகவேகமாக காபி போட்டுக் கொண்டு வருவார்., 'இதென்ன காபியா... ஏம்மா புகை வாசம் வீசுது... இதை எப்படி அவன் குடிப்பான்... வேண்டாம்...' என்று கத்துவான். உடனே 'விடுடா...' என்றால் 'எப்பவும் இப்படித்தாம்மா... எல்லாத்துக்கும் கோபப்படுறான்...  காபி நல்லாயில்லையாம்மா' என்று கேட்பார். 'நல்லா இருக்கும்மா' என்று சொன்னதும் 'எம்புள்ளையே சொல்லிருச்சு... அப்புறம் என்ன...' என்று முருகனைத் திட்டிவிட்டுச் செல்வார்.

வீட்டுக்குப் போனால் சாப்பிட வேண்டும், காபி குடிக்க வேண்டும் என்பதை விரும்புவார். எதாவது சாப்பிடாமல் கிளம்பினால் 'என்ன குமார்க்குட்டி... வந்துட்டு ஒண்ணும் சாப்பிடாமப் போறியேன்னு சொல்லுவார். எல்லா விவரங்களையும் கேட்டுக் கொள்வார். இருவரும் எப்படிப் படிக்கிறோம் என்பதை மட்டும் கேட்கவே மாட்டார்.  எங்கள் இருவரின் மீதும் அவ்வளவு நம்பிக்கை. படிப்பு விஷயத்தில் எனது பெற்றோரும் என்ன படிக்கிறேன்... எப்படிப் படிக்கிறேன்... என்று கேட்டதில்லை என்பதே சந்தோஷம் என்றாலும் அவர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது அல்லவா? வீட்டில் புத்தகத்தை எடுத்துப் படிடா... என அம்மா ஒருநாள் ஒரு பொழுது சொன்னதில்லை... ரேடியோ கேட்டுக் கொண்டோ, பாட்டுக் கேட்டுக் கொண்டே படித்தால்தான் நமக்கு ஏறும் என்பதால் அப்படிச் செய்தாலும் அவன் படிச்சிருவான்னு இப்ப எதுக்கு பாட்டுன்னு திட்டமாட்டார்கள். அதேபோல்தான் முருகனின் அம்மாவும்...

முருகனின் அப்பா பங்குனி உத்திரத்துக்கு குன்றக்குடியில் வேல் போட்டு பால்குடம் எடுப்பார்கள். அதற்கு நான் வரவேண்டும் என்று நிற்பார். அதேபோல் அவருக்கு சாமி வந்ததும் எல்லாம் விழுந்து விழுந்து கேள்வி கேட்டு தங்கள் நிலையைத் தெரிந்து கொள்வார்கள். பெரும்பாலும் நான் இதில் இருந்து விலகியே நிற்பேன். அம்மாவும் எதுவும் சொல்லமாட்டார்கள். மலையைச் சுற்றி வந்து படியேறப் போகும் போது என்னை அவருக்கு முன்னே இழுத்து விட்டு 'தம்பிக்கு சொல்லிட்டுப் போங்கன்னு' சொல்லி அவர் வாயால் நல்ல வார்த்தை சொல்லவைத்து திருநீறு பூசச் செய்வார்.

இதேபோல்தான் அருணகிரிப்பட்டினம் மாரியம்மனுக்கு முருகன் வேல் போட்டு பால்குடம் எடுக்கும் போது நான் அருகில் இருக்க வேண்டும் என்று நினைப்பான். என்னைப் பொறுத்தவரை சாமி கும்பிடுவது, பால்குடம் எடுப்பதெல்லாம் எனக்கும் விருப்பமே.. ஆனால் சாமி வேல் போடச் சொன்னுச்சாடா என அவனுடன் சண்டையெல்லாம் போட்டிருக்கிறேன். இருந்தாலும் அவனின் விருப்பத்திற்கான அவனுடன் நடந்தே வருவேன். வேல் போடும் போது மட்டும் அந்த இடத்தில் இருக்கவே மாட்டேன். அங்கிருந்து கிளம்பும் போது அவனுடன் இணைந்து கொள்வேன். அங்கு எல்லோருக்கும் திருநீறு போடுபவன் என்னை மட்டும் எல்லைக்கு வாப்பா என்று சொல்லிவிடுவான். கோவிலுக்கு அருகே போனதும் 'குமார்குட்டி நீ தம்பிக்கிட்ட துணூறு வாங்கிக்க...' என்று முன்னே இழுத்து விடுவார்.

அப்பொதெல்லாம் ஒரு நாள் வீட்டுப் பக்கம் போகவில்லை என்றாலும் 'ஏம்ப்பா நேற்று வரவில்லை... தம்பி ஏதாச்சும் சொன்னானா?" என்று கேட்பார். திருமணத்திற்குப் பிறகு வீட்டிற்குச் செல்வது குறைய ஆரம்பித்தாலும் என் மீதான பாசம் குறையவில்லை. இடையில் சில காலங்கள் எனக்கும் முருகனுக்கும் ஏற்பட்ட சின்ன மனஸ்தாபம் தெருவில் சந்திக்கும் போது 'எப்படியிருக்கே?' என்பதோடு நின்று போக சுத்தமாக வீட்டுப்ப்பக்கம் போகவில்லை. அப்போதெல்லாம் 'இந்தக் குமாரு நம்மளை எல்லாம் மறந்துருச்சு... இங்கிட்டு வருதேயில்லை...' என்று சொல்லியிருக்கிறார். எங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை இப்போது தீர்ந்து மீண்டும் பழைய அன்போடு நாங்கள் இன்னும் இறுக்கமாக பயணிக்க ஆரம்பித்து விட்டாலும் எங்களுக்குள் எரிந்து அணைந்த அந்தப் பிரச்சினை இதுவரை அவருக்குத் தெரியாது. தெரியவும் வேண்டாம்.

இப்பவும் என் மனைவி முருகன் வீட்டுக்கு செல்லும் போதெல்லாம் குமார் எப்படியிருக்கு? நல்லாயிருக்கா? என்று கேட்பாராம். அந்தப் பாசத்துக்கு இணையான பாசத்தை இன்னும் சில அம்மாக்களிடமும் பெற்றிருக்கிறேன். நகரத்துக்குள் வசித்தாலும் ஆடு, மாடு, கோழி, வீட்டுக்கு கொஞ்ச தூரத்தில் இருக்கும் தோட்டத்தில் விவசாயம் என கிராமத்து மனுசியாக வாழும் அம்மா நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

வெள்ளந்தி மனிதர்கள் தொடர்வார்கள்...

-பரிவை' சே.குமார்.

செவ்வாய், 20 ஜனவரி, 2015

வெள்ளந்தி மனிதர்கள் : 6. திரு. லெட்சுமணன்

திப்பிற்குரிய லெட்சுமணன் அவர்களின் பேரை மட்டும் சொன்னால் அவ்வளவாகத் தெரியாது. ஆனால் பேனாக்கடை லெட்சுமணன் என்றால் எல்லாருக்கும் தெரியும். தேவகோட்டையில் ஸ்டேட் பாங்க் வீதியில் (குதிரை வண்டிச் சந்துங்கிற பேரு இப்ப மறைந்து விட்டது) பேனாக்கடை வைத்திருக்கிறார். இன்றைய வெள்ளந்தி மனிதராய் இவருடனான உறவைக் கொஞ்சம் நினைவில் நிறுத்திப் பார்க்கலாம்.

பள்ளியில் படிக்கும் போது மை ஊற்றி எழுதும் பேனா வாங்குவதற்காக இவரின் கடைக்குப் போவோம். நான்கு பக்கம் கட்டை வைத்து வயரால் பின்னப்பட்ட அடிப்பலகை போட்டு அமர்ந்திருப்பார். சிவப்பாக, பெரிய உருவமாக, தங்கப்பல் தெரிய சிரித்தபடி செட்டியார் மாதிரி இருப்பார். வகை வகையாக பேனாக்களை அட்டையில் வைத்திருப்பார். எடுத்துக் கொடுத்து பிடித்ததை எடுத்துக்கச் சொல்லி அதற்கு மை ஊற்றி ஒரு பேப்பரில் கிறுக்கிப் பார்த்து பின்னர் நம்மை எழுதச் சொல்லி கையில் கொடுப்பார். பணம் கொடுக்கும் போது 'கொஞ்சம் குறைச்சுக்கங்க ஐயா' என்று சொன்னால் போதும் கோபம் சுருக்கென்று வரும். 'இங்க லாபத்துக்கு விக்கலை தம்பி. வாங்குறதை விட 25 காசு 50 காசு சேர்த்து விக்கிறேன் அம்புட்டுத்தான்... வேணுமின்னா மத்த கடையில விசாரிச்சிட்டு வாங்க... நம்ம கடையிலதான் கொறச்ச விலை' என்று சொல்லியபடி பணத்தை பெற்றுக் கொள்வார்.

இப்படியாக பேனா வாங்கும் நேரத்தில் மட்டுமே அவரைச் சந்தித்தவன், கல்லூரியில் படிக்கும் போது திரு. பழனி ஐயாவால் கலையிலக்கியப் பெருமன்ற உறுப்பினரான போது அங்கு பொருளாளராக இருந்த லெட்சுமண ஐயாவுடன் (பின்னாளில் அப்பா என்றோம்) நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. 'என்னப்பா இன்னும் இழுத்துப் போட்டுக்கிட்டு கெடக்கீக... சட்டுப் புட்டுன்னு வேலையை முடிக்க வேண்டாமா...?', 'இதையே இப்படி இழுத்துக்கிட்டு இருந்தா... சாயந்தரம் அடிகளார் நிகழ்ச்சி இருக்குப்பா...', 'சாப்பாடு திருப்தியா இருக்கணும்... வாறவன் வாய்க்கி வந்த மாதிரி பேசிடக்கூடாதுல்ல...' என பேசியபடி எல்லா வேலையிலும் ஒரு இளைஞனைப் போல் தன்னையும் இணைத்துக் கொள்வார்.

இந்த நட்பின் வாயிலாக நானும் முருகனும் அவரின் வீட்டுக்கும் கடைக்கும் செல்லும் பிள்ளைகளானோம். அவரின் இரண்டாவது புதல்வன் லெனின் எங்களுக்கு நட்பானார். அவருடன் கடையில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். கலையிலக்கியப் பெருமன்றத்தின் பாரதி விழாவுக்கு இரவு உணவு பூவநாதன் ஐயா வீட்டில் பணம் கொடுத்து செய்து வாங்கி வருவோம். ஐயாவின் இறப்புக்குப் பிறகு அது சரி வராது போகவே, கடையில் வாங்கினோம். அதில் திருப்தி இல்லாததால் அடுத்த விழாக்களில் எல்லாம் பெருமன்றம் மூலமாக பொருட்களை வாங்கி தனது வீட்டிலேயே செய்து கொடுக்க ஆரம்பித்தார்.

விழா நடக்கும் போது எங்களை அழைத்து நம்ம வீட்ல சாப்பாடெல்லாம் தயாரா இருக்கும். ஒரு ஆட்டோ எடுத்துக்கிட்டுப் போயி தூக்கிக்கிட்டு வந்துருங்க என்பார். அதன்படி அங்கு சென்றால் எல்லாம் பாத்திரங்களில் வைக்கப்பட்டிருக்கும். அம்மாவோ அவரின் மகளோ இருப்பார்கள். சொல்லி எடுத்து வந்தால் அவர்களும் விழா அரங்கிற்கு வந்துவிடுவார்கள். விழா முடியும் தருவாயில் பந்திக் கட்டுல போயி எல்லாம் ரெடி பண்ணுங்கப்பா... சாப்பாட்டை ஆரம்பிக்கலாம் என்று சொல்ல, அவர் மனைவி, மகள் மற்றும் நாங்கள் என எல்லாருமாக நின்று பரிமாறி விழாவைச் சிறப்பாக முடிப்போம்.

கலையிலக்கியப் பெருமன்ற வரவு செலவு விவரங்கள் அடங்கிய சின்ன பேக்கை கையில் இடுக்கிக் கொண்டு அனைத்து வேலைகளையும் செய்வார். 'பழனி சார்... அடுத்த வருசத்துக்கு இது சரியா வராது. வேற மாதிரி பண்ணனும்...', 'ஊர்வலத்தை இன்னும் சிறப்பா பண்ணியிருக்கணும்...' என முடிந்த விழாவில் வரும் ஆண்டுக்கான விழா குறித்த திட்டங்களைப் பேசுவார். செயலர் முருகன் அண்ணனை எப்பவும் கூப்பிட்டு எதாவது சொல்லுவார்.

கல்லூரி நாட்களில் மாலை வேளைகளில் எங்கள் குழு ஐயா வீட்டில் தஞ்சமடைந்துவிடும். நான், முருகன், சுபஸ்ரீ, கனிமொழி, தமிழ்குமரன் மற்றும் ஐயாவின் மகள் மணிமேகலை என கூட்டமாய் அமர்ந்து அரட்டை அடிப்போம். ஐயாவுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்போம். எங்களுடன் எதிர் வீட்டில் இருந்த ஜெயலட்சுமி அக்கா, அவரின் தம்பி சுதந்திர குமார் மற்றும் அவரின் தங்கை என அவர்களும் இணைந்து கொள்ள நீண்ட நேரம் எங்கள் பேச்சு தொடரும்.

ஐயா வெளியில் கிளம்ப ஆயத்தமாகிவிட்டால் எல்லாரும் களைந்து விடுவோம். நானும் முருகனும் ஐயாவுடன் சைக்கிளை உருட்டியபடி பேசிக்கொண்டே வருவோம். ஒரு சில நாள்களில் 'வாங்கய்யா பேனாக்கடை லெட்சுமண அண்ணனைப் பார்த்துட்டுப் போவோம்' என ஐயா சொல்வார். அங்கு சென்றால் 'என்ன பழனி சார்... ரெண்டு பிள்ளைங்களும் எப்போதும் உங்க கூடத்தானோ...?' என்று கேட்டுவிட்டு வெள்ளந்தியாய்ச் சிரிப்பார். 'டீ சாப்பிடுங்கய்யா...' என்று கடையில் இருக்கும் அண்ணனிடம் போய் டீ வாங்கி வரச் சொல்லுவார். செம்மலர் கட்டுரைகளையும் தாமரையில் பொன்னீலனின் எழுத்தையும் விலாவாரியாக ஐயாவிடம் சொல்லிச் சிலாகிப்பார். அப்புறம் பேச்சு கலையிலக்கியப் பெருமன்றச் செயல்பாடுகளில் வந்து நிற்கும். 

மாதக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கும் பள்ளியில் கொஞ்சம் பிரச்சினை எழுந்த போது தன் வீட்டில் சில மாதங்கள் நடத்த இடங்கொடுத்ததுடன் எல்லோருக்கும் காபி வடையெல்லாம் கொடுக்கச் சொல்லி அமர்க்களப்படுத்தினார். எப்பவும் கடையில்தான் இருப்பார். மதியம் சாப்பிட்டு விட்டு சிறிது தூங்கி விட்டு கடைக்கு வந்தால் பின்னர் இரவுதான் செல்வார். அவரின் இரண்டு மகன்களும் அவருடன் கடையில் இருந்து கடையை நடத்தினார்கள்.

எப்போது ஊருக்குப் போனாலும் அவரைப் பார்ப்பேன்... இப்போது ரொம்பத் தளர்ந்திருந்தார். கடையில் அதிக நேரம் உக்காருவதில்லை போலும். எப்போதாவதுதான் கடைக்கு வருவேன்... முன்ன மாதிரி உக்கார  முடியிறதில்லை... வேலை பாக்கவும் கண்ணு மட்டுப்படலை என அவரே சொன்னார். 

இந்த முறை வாட்ச்சுக்கு வார் மாற்றுவதற்காகப் போனேன். கல்லாவில் அமர்ந்திருந்தார்... என்னை பார்த்து விட்டு பேசாமல் அமர்ந்திருந்தார். நானும் சிரித்து விட்டு என்னடா ஆளைத் தெரியலை போல என்று நினைத்தபடி பணம் கொடுக்கப் போனபோது என்னைத் தெரியுதாப்பா? என்று கேட்டேன். 'ஏந்தெரியாம... நீ நம்ம குமாருதானே...? வந்த வேலை முடியட்டும் பேசுவோம்ன்னு பார்த்தேன்... உன்னையும் முருகனையும் மறக்க முடியுமா என்ன? எப்படிப்பா இருக்கே? எங்க இருக்கே? குழந்தைங்க எப்படியிருக்காங்க? முருகன் வீடு கட்டிட்டான் போல... நீ கட்டலையா..? எனக் கேள்விகளை அடுக்கி என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அதன் பின்னர்தான் மேலே இருக்கும் பாராவில் சொன்னதைச் சொன்னார்.

பேனாக்கடை லெட்சுமணன் என்ற அந்த தங்கப்பல் கட்டிய சிங்கம், நாங்கள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கலையிலக்கியப் பெருமன்றத்தில் கோலோச்சியிருந்தது. இன்றைய நிலையில் உடல் தளர்ந்து முதுமை ஆட்கொள்ள.. தள்ளாத வயதில்... கலையிலக்கியப் பெருமன்ற செயல்பாடுகளில் எல்லாம் இருந்து விலகி இருப்பார் என்று நினைக்கிறேன். முதுமையின் பிடியில் இருக்கும் அவர் கஷ்டங்கள் எதுவுமின்றி சந்தோஷமாக வாழ வேண்டிய வாழ்க்கையை வாழ்ந்து செல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

வெள்ளந்தி மனிதர்கள் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 5 டிசம்பர், 2014

வெள்ளந்தி மனிதர்கள் : 5. அண்ணன் முருகன்


ந்த பகிர்வில் முருகன் அண்ணனைப் பற்றிய சில நினைவலைகள். கல்லூரியில் படிக்கும் போது நானும் முருகனும் (இது நண்பன்)  ஐயாவின் மூலமாக பாரதி கலை இலக்கியப் பெருமன்றத்தில் உறுப்பினரானோம். அப்போது அதன் செயலாளராக இருந்தவர்தான் தேவகோட்டை தொலை தொடர்புத்துறையில் பணி புரிந்த முருகன் அண்ணன். பரப்பரபாக வேலை செய்யும் மனிதர். பெரியவர்களிடம் எல்லாம் சொல்லுங்க ஐயா என பவ்யமாய் நின்று பணி செய்யும் பண்பாளர்.


எல்லோரையும் போலத்தான் அவரிடமும் பழகினோம். மாதக்கூட்டங்களுக்கு உறுப்பினர் அனைவருக்கும் தபால் அட்டை அனுப்புவது செயலரின் பணி. அப்போது அவருக்கு உதவி செய்ய நாங்களும் தபால் அட்டை எழுத ஆரம்பித்தோம். அப்படியே அவருடைய மனதிலும் ஒட்டிக் கொண்டோம். இலக்கியப் பெருமன்ற வேலைகளில் எல்லாம் அவருக்கு துணையாய் நிற்பதால் அவருக்கு எங்களை ரொம்பப் பிடிக்க ஆரம்பித்தது. எந்த வேலை என்றாலும் குமார்... முருகா என்றுதான் அழைப்பார். எங்களுக்குள் அந்தளவுக்கு ஒரு பாசப்பிணைப்பு இருந்தது. அதன் காரணமாக அவரின் அன்புத் தம்பிகள் ஆனோம்.

மாலை நேரங்களில் எங்கள் கல்லூரி கூட்டணி  எப்பவும் ஐயா வீட்டில்தான் அரட்டை. சில நாட்களில் நானும் முருகனும் நேராக அண்ணாநகரில் இருந்த முருகண்ணன் வீட்டுக்குப் போயிருவோம். அங்க போனதும் அண்ணி சூப்பரா ஒரு காபி கொடுப்பாங்க... பசங்க அப்பத்தான் பள்ளிக்கூடம்ம போனாங்க...  அங்க கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்துவிட்டு ஐயா வீட்டுக்கோ அல்லது கலை இலக்கியப் பெருமன்ற வேலைகள் இருந்தால் தலைவர் சவரிமுத்து ஐயா வீட்டுக்கோ செல்வோம்.

பாரதி விழா நாட்களில் போட்டிகள், ஊர்வலம், பட்டிமன்றம், கவியரங்கம் என பரபரப்பாக நிகழ்ச்சிகளை நடத்துவார். அந்த நாட்களில் நம்மளையும் அங்கிட்டு இங்கிட்டு அசைய விடமாட்டார்.  வேலை... வேலை... வேலை மட்டுமே. மாலை அடிகளார் அவர்கள் சிறப்புரை ஆற்றுவார்கள்... விழா நடக்கும் போது சவரிமுத்து ஐயாவும் முருகண்ணனும் மண்டப வாயிலில் நின்று கொண்டு வருவோரை வரவேற்கவும் மற்ற விஷயங்களையும் கவனித்துக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக இரவு சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்து அதைக் கொண்டு வந்து அனைவரையும் சாப்பிட வைத்து அனுப்புவதில் இவருக்கு பெரும் பங்குண்டு.

அக்கா பொண்ணை மோசமான நிலையில் மதுரை ஜவகரில் வைத்திருந்த சமயம் வீட்டில் போன் எல்லாம் இல்லை, தேவகோட்டையில் இருந்து எஸ்.டி.டி.யில்தான் கூப்பிடணும். அந்தச் சமயத்தில் இவருக்கும் மதியமும் இரவும் பணி... நானும் முருகனும் ஐயா வீட்டில் அரட்டை முடித்து நேராக டெலிபோன் எக்சேஞ்ச்க்குப் போயிருவோம். அதிலும் இவரின் அறைக்கு நேரடியாகச் செல்வோம். டிரங்கால் வசதி செய்து கொடுக்கும் பணி இவருக்கு... முருகனின் அண்ணன் அங்கு ஜேடிஓவாக இருந்ததால் எங்களுக்கு அங்கு செல்வாக்கு இருந்தது, அந்த செல்வாக்கை வைத்துத்தான் தேவகோட்டையில் இருந்து எங்க ஊருக்கு டெலிபோன் இணைப்பு கொண்டு போனோம். சரி... முருகண்ணன் கதைக்கு வருவோம்.

அங்கிருந்து மருத்துவமனைக்கு போன் பண்ணிப் பேசுவோம்... தினம் தினம் போனில் மருமகளின் நிலையை அறிந்து கொள்வோம். சில நாட்களில் பகல் வேலை என்றாலும் அவரே போன் பண்ணி விவரம் கேட்டுக் கொள்வார். மாலையில் என்னை அழைத்துக் கொண்டு போய் விசாரிக்கச் சொல்வார். அவரின் தம்பி திருமணத்து அவரது சொந்த ஊருக்குச் சென்று வந்தோம். அவருக்கு ரொம்ப சந்தோஷம்...

நாங்கள் நடத்திய மனசு என்ற கையெழுத்துப் பிரதிக்கு மரமும் மனிதனும் என்ற கவிதை எழுதிக் கொடுத்தார். அப்போதுதான் அவருக்குள் ஒரு நல்ல கவிஞன் இருப்பதைக் கண்டு கொண்டோம். பின்னர் தொடர்ந்து அவரிடம் கவிதை வாங்கி எங்களது மனசில் போட ஆரம்பித்தோம். பாரதி விழாவில் கூட கவிதை எல்லாம் வாசித்தார். ஆனால் ஏனோ தெரியவில்லை எழுத்தைத் தொடரவில்லை.

பின்னர் காரைக்குடிக்கு மாற்றலாக, அங்கு இடம் வாங்கி வீடு கட்டி குடியேறிவிட சில காலம் பாரதி விழாவுக்கு வந்து கொண்டிருந்தார். பின்னர் அவர் காரைக்குடி கலை இலக்கியப் பெருமன்றத்துக்கு மாறிவிட்டார். காரணம் தேவகோட்டைக்கு வருவதில் இருந்த சிக்கல் என்றாலும் ஐயாவுடனான மனக்கசப்பும்தான். பின்னர் சில முறை பார்த்துக் கொண்டோம். போனில் பேசியதும் உண்டு. அதன் பின்னான நாட்களில் வாழ்க்கை அங்கு இங்கு சுற்ற வைத்து தொடர்பு எல்லைக்கு வெளியே தள்ளியதும் உறவுக்குள் எல்லைக்கோடு விழுந்து விட்டது.

இப்ப அண்ணனின் குழந்தைகள் இருவரும் கல்லூரி படிப்பார்கள்...  லெனின் மேல் கொண்ட அன்பினால் பையனுக்கு லெனின் என்றும் பெண்ணுக்கு தமிழ் இலக்கியா (அப்படித்தான் ஞாபகத்தில் இருக்கு) என்றும் வைத்திருந்தார். இறை அருளால் மனைவி மக்களுடன் எங்கள் முருகண்ணன் சந்தோசமாய் இருப்பார் என்று நினைக்கிறேன். நலமோடு வாழட்டும்.

வெள்ளந்தி மனிதர்கள் தொடர்வார்கள்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 9 நவம்பர், 2014

வெள்ளந்தி மனிதர்கள் : 4. பேராசிரியர் கே.வி.எஸ்

னது பேராசிரியர் கே.வி.சுப்பிரமணியன் (கே.வி.எஸ்) அவர்கள் எங்கள் துறையின் தற்காலிக தலைவராக இருந்தார். முதல்வராக இருந்த எங்கள் துறைப் பேராசிரியர் அவர்கள் இடையில் சில மாதங்கள் துறைத் தலைவராக இருந்தாலும் நாங்கள் படித்த மூன்றாண்டுகளில் பெரும்பாலும் இவரேதான் துறைத் தலைவராக இருந்தார். 

மதுரையை சொந்த ஊராகக் கொண்ட எங்கள் மதிப்பிற்குரிய பேராசிரியர் கே.வி.எஸ். அவர்கள் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு நடந்துதான் வருவார். இருபது நிமிடங்கள் முன்னரே வந்துவிடுவார். கையில் மதிய உணவு பேக்குடன் சட்டையின் முதல் பட்டனைக் கழற்றிவிட்டு காலரைத் தூக்கி பின்புறமாக விட்டபடி அவர் வேகவேகமாக நடந்து வரும் அழகே தனிதான். கரும்பலகையில் எழுதும் எழுத்துக்கள் அச்சில் கோர்த்தது போல் இருக்கும். மிகச் சிறந்த அறிவாளி, பல விஷயங்களைத் துல்லியமாகப் பேசுவார். மாணவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதிலும் அவர்களை தான் நடத்தும் பாடத்தை கவனிக்க வைப்பதிலும் கில்லாடி. கே.வி.எஸ் என்றால் எங்க துறை மட்டுமல்ல மற்ற துறை மாணவர்களுக்கும் ஒரு கிலி உண்டு.

கல்லூரியில் அடியெடுத்து வைத்த முதல் நாள் முதல் பாடவேளை இவர்தான் வந்தார். தனது அறிமுகம் முடித்து எங்களைப் பற்றி அறிமுகத்தைக் கேட்டுவிட்டு பாடம் எடுக்க ஆரம்பித்தார். ஆரம்பமே ஆங்கிலம்தான்... எங்கள் கல்லூரியில் படிப்பவர்கள் பெரும்பாலும் கிராமத்து மாணவர்களே... அதிலும் தமிழ் வழிக்கல்விதான் படித்து வந்திருப்பார்கள் என்பது அவருக்கும் தெரியும். இருந்தும் ஆங்கிலத்தில் ஆரம்பித்தார். இன்ட்ரோடக்சன் (introduction) என்று சொல்லும் போது 'ஷன்' என்று முடியும் போது ஒரு சீட்டி (விசில்) அடித்த சத்தம் வரும். அவரது ஆங்கில உச்சரிப்பு அப்படி அழகானது. இப்படி பெரும்பாலான வார்த்தை உச்சரிப்பில் சீட்டி அடித்தார். வகுப்பில் அனைவரும் சிரித்து விட்டோம். உடனே பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு 'எதுக்குச் சிரிக்கிறீங்கன்னு எனக்குத் தெரியும். ஒவ்வொரு வார்த்தையும் சொல்லும் போது விசில் அடிக்கிறாரேன்னுதானே... உச்சரிப்புங்கிறது இப்படித்தான் இருக்கணும். சும்மா பேசுற எல்லா வார்த்தையும் ஒரே மாதிரி இருக்கக்கூடாது... இதுவரைக்கும் எப்படியோ தெரியாது... இனி ஆங்கிலத்தில்தான் படிக்கணும்... எழுதணும்.. அப்பத்தான் கல்லூரி முடித்துச் செல்லும் போது ஓரளவு ஆங்கில அறிவோடு வெளிய போக முடியும்.' என்று சொல்லி விட்டு தொடர கொஞ்ச நாளில் அவரின் உச்சரிப்பு எங்களுக்குப் பழகிவிட்டது.

எங்கள் கல்லூரியில் இரண்டு பிரிவாய்த்தான் மாணவர்கள் இருப்பார்கள். ஒன்று தேவகோட்டை மற்றொன்று திருவாடானை. இரண்டுக்கும் இடையில் எப்பவும் அடிதடிதான். வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது சொல்லும் வார்த்தையில் 'டி'('D/T') வந்ததென்றால் அதை ஒரு சிலர் குச்சி 'டி'யா இல்ல குண்டு 'டி'யா என்பார்கள். பெரும்பாலான மாணவர்கள் தேவகோட்டை 'டி'யா திருவாடனை 'டி'யா என்று கேட்பார்கள். எங்கள் பேராசிரியரைப் பொறுத்தவரை ஒரு வார்த்தை தெரியவில்லை என்றால் அதை எழுதிப் போட்டு விடுவார். மேலும் வகுப்பிற்குள் திருவாடானை டியும் தேவகோட்டை டியும் வர வேண்டாம். எல்லோரும் ஒற்றுமையா இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். ஆனால் எங்கள் வகுப்பில் மூன்று கோஷ்டி, ஒண்ணு தேவகோட்டை மற்றது திருவாடனை. இரண்டிலும் இணையாத இரண்டுங்கெட்டான நாங்கள் பத்துபேரும் தனிக் கோஷ்டி. எங்களை எங்கள் ஆசிரியர்கள் எல்லாருக்குமே பிடிக்கும். அந்த வகையில் மூன்றாண்டுகள் அவர்களின் மனசுக்குப் பிடித்த மாணவர்களாக நாங்கள் இருந்தோம் என்பது சந்தோஷமான விஷயம்தான். கல்லூரியில் சண்டை என்றால் எங்களை வீட்டுக்குப் போங்க... இங்க எதுக்கு நிக்கிறீங்க என விரட்டுவார். எங்கள் மீது யார் தவறு சொன்னாலும் அதை எங்கள் கே.வி.எஸ். சார் ஒத்துக் கொள்ளவே மாட்டார். ஒரு முறை எங்களுக்காக பிரின்ஸ்பால் வரை சென்று பேசியிருக்கிறார்.

இரண்டாம் ஆண்டு படிக்கும் போது வகுப்புக்கு மட்டம் போட்டுவிட்டு சைக்கிளில் பிள்ளையார்பட்டி போய் சுற்றிவிட்டு மாலை திரும்பினோம். அடுத்த நாள் முதல் பாடவேளை கே,வி.எஸ். சார் வகுப்பிற்கு வந்ததும் பசங்க எல்லாம் எந்திரிங்க என்று சொல்ல எல்லோரும் எழுந்தோம். நேற்று உங்களுக்கு எல்லாம் கல்லூரியில்லையா என்று கேட்டதும்தான் நாம பிள்ளையார்பட்டி போனோம் மற்ற ரெண்டு கோஷ்டியும் எங்க போனானுங்க என்று எங்களுக்கு குழப்பமாக இருந்தது. நாங்கள் பிள்ளையார்பட்டி போனோம் என்றதும் எல்லோருமே கிளிப்பிள்ளை போல் அதையே சொல்ல, எல்லாரும் வெளிய போங்க... நாளைக்கு பெற்றோரைக் கூட்டிக்கிட்டு வாங்கன்னு சொல்லிட்டு பொண்ணுங்களுக்கு மட்டும் வகுப்பு எடுத்தார். வகுப்பு முடிந்து வெளிய வந்தவரிடம் சார் மன்னிச்சிக்கங்க என்று கொஞ்ச படிக்கிற புள்ளங்க இப்படிப் பண்ணலாமா இது முதல் முறைங்கிறதால விடுறேன்... இனி இப்படி நடக்ககூடாது. அவனுக கூட எதுக்கு சுத்தப் போறீங்க என்று திட்டினார். அவனுகளிடம் ஏன்டா பிள்ளையார்பட்டி போனோம் என்று சொன்னீர்கள் என்று கேட்டால் நீங்க சொன்னதை சொன்னாத்தான் எங்களையும் விடுவார்... இல்லைன்னா விட்டு விளாசியிருப்பாருல்லன்னு சொன்னானுங்க.

மதிய நேரத்தில் எங்கள் பாட்டுக் கச்சேரி களை கட்ட ஆரம்பித்த நாட்களில் அடுத்த அறையில் அமர்ந்து அதை ரசித்துக் கொண்டிருந்தவர், பொம்பளப்புள்ளங்க கூட்டம் கூட்டமாக தண்ணீர் குடிக்க வரவும் ஒரு பெண்புறா பாட்டை நம்ம சூசை அற்புதமாக அடிக்கடி பாட ஆரம்பிக்கவும் பயலுக புள்ளைகளுக்கு ரூட் விடுறானுங்களோன்னு அவருக்கு சந்தேகம் வர ஆரம்பித்ததும் நேரே எங்களிடம் வந்தார். அவரைக் கண்டதும் எழுந்து நிற்க, மத்தியானத்துல எங்கிட்டும் போயி சுத்தமா சண்டையிழுக்காம வகுப்புக்குள்ள உக்காந்து சந்தோஷமா பாடுறது நல்லாத்தான் இருக்கு... ஆனா தண்ணி குடிக்க ஆளில்லாம கிடந்த தண்ணிப் பானைக்கிட்ட பொண்ணுங்க கூட ஆரம்பிச்சிட்டாங்க... பிரின்ஸ்பால் வரைக்கும் போயிடும்... கொஞ்சம் சத்தத்தைக் குறைச்சிக்கங்க என்று சொல்லிச் சென்றார். பின்னர் இந்தப் பிரச்சினை பிரின்ஸ்பால் வசம் போனபோது துறைத்தலைவர் என்ற முறையில் இவருக்கு அழைப்பு வர எங்க பிள்ளைங்க மற்ற துறை மாதிரி சண்டைக்குப் போகலை சார். ஓய்வு நேரத்துல வகுப்புக்குள்ள உக்காந்து பாட்டுப் பாடி சந்தோஷப்படுறாங்க... வேணுமின்னா தண்ணிய வேற இடத்துல மாத்தி வையுங்க என எங்களுக்காக பேசி அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

என் மீது எப்பவும் தனிப்பட்ட அன்பு வைத்திருப்பார். குமார் என்று அவர் அழைப்பதில் ஒரு அன்னியோன்ய அன்பு தெரியும். ஐந்தாவது செமஸ்டர் முடிவுகள் வந்த அன்று எங்களுக்கு வகுப்பு இல்லை என்பதால் நாங்கள் அனைவரும் தேவகோட்டை சரஸ்வதி திரையரங்கில் ரத்தக்கண்ணீர் படம் பார்த்து விட்டு வெளியே வர, ஒரு நண்பன் ரிசல்ட் வந்திருச்சு என்று சொல்ல எங்கள் சைக்கிளிலும் வாடகை சைக்கிளிலுமாக கல்லூரிக்கு விரைந்தோம். எங்களைப் பார்த்ததும் என்ன ரிசல்ட் என்னாச்சுன்னு பாக்க வந்தீகளா அப்படின்னு கேட்டுட்டு என்ன குமார் ஏன் என்னாச்சு... என்று என்னிடம் கேட்டு விட்டு மற்றவர்களின் மார்க்கைச் சொல்ல ஆரம்பிக்க எனக்கு என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை. வகுப்பில் முதல் மாணவனாக நானும் மாணவியாக மல்லிகாவும் போட்டு போட்டு வந்து கொண்டிருந்தோம். இதுவரை ஆங்கிலத்தில் கூட அரியர் வைத்ததில்லை. என்ன ஏதுன்னு தெரியாம வேர்க்க ஆரம்பித்தது. எல்லாருக்கும் சொல்லிவிட்டு இங்க வாங்க என்று அழைத்தார்.

அருகே சென்று நிற்க எழுதிக்கிறீங்களா என்று சொல்லி மார்க்கைச் சொல்லிக் கொண்டே வந்தார். ஒரு மேஜரில் 28 என்று சொல்லி என் முகத்தைப் பார்த்தார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. ஐந்தாவது செமஸ்டரில் அரியர்... அதுவும் இன்டர்னல் மார்க் 21 இருக்க 7 மார்க் மட்டுமே வாங்கி கல்லூரி வாழ்வில் முதல் அரியர். என்னாச்சு.. நல்லா எழுதலையா? என்று கேட்டார். இல்ல சார் நல்லாத்தான் எழுதினேன். எப்படி இப்படின்னு தெரியலை... மத்ததெல்லாம் 80க்கு மேல் இருக்கும் போது இது... மெதுவாக இழுத்தேன். அழுகை வேறு எட்டிப் பார்த்தது. எனக்குத் தெரியும் நீங்க எப்படி எழுதியிருப்பீங்கன்னு... எதோ தவறு நடந்திருக்கு... நாம ரீவால்யூவேசன் போடுவோம் என்றவர் அருகே இருக்கும் தமிழ் டிபார்ட்மெண்ட் பக்கம் திரும்பி பழனி ஐயாவிடம் 'பழனி சார்... குமாருக்கு ஒரு சப்ஜெக்ட்ல மார்க் தப்பா வந்திருக்கு.. ரீவால்யூவேசன் போட்டுடுவோம்.' என ஐயாவிடம் சொல்ல, 'தம்பிய பத்தி எனக்குத் தெரியும்.. போட்டுடுவோம்' என அவரும் சொல்ல அதன் பின் வந்த நாட்களில் அவரே அப்ளிகேசன் வாங்கி எனக்காக அதை பில்லப் பண்ணி நானே பணம் கட்டுறேன் என்று சொல்ல ஐயா மறுத்து நான் கட்டுறேன் என்று அவர் பணம் கொடுக்க கே.வி.எஸ். சாரே அலுவலகத்தில் கொடுத்து விட்டு வந்தார். பின்னர் ஐயாவிடம் நான் பணம் கொடுத்தேன்.

ஆறாவது செமஸ்டருக்கு பணம் கட்டச் சொல்லி விட்டார்கள், ரீவால்யூவேசன் போட்டது என்ன ஏது என்ற விவரமே இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது. சாரும் மதுரை காமராஜ் யுனிவர்சிட்டிக்கு போனெல்லாம் பண்ணிக் கேட்டுப் பார்த்துவிட்டு முதல்வரிடம் ஒரு கடிதம் வாங்கி என்னை நேரில் போகச் சொன்னார். சரியான பதில் கிடைக்காததால் காசு போன போகட்டும் அரியருக்கு பணத்தைக் கட்டிடலாம் என்று சொல்லிவிட்டார். பின்னர் அரியருக்கு பணம் கட்டி பரிட்சை எழுதியாச்சு. ரிசல்ட் வரப்போகும் சமயத்தில் ரீவால்யூவேசன் ரிசல்ட் வீட்டிற்கு வந்தது. அதில் 53 மார்க் போட்டு அனுப்பியிருந்தார்கள். ஐந்தாவது செமஸ்டர் மார்க் சீட்டோடு யுனிவர்சிட்டி வந்து இந்த மார்க்கை அதில் பதிந்து வர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். அவரிடம் சென்று காண்பித்த போது ரிசல்ட் வரட்டும் பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டார். ரிசல்ட் வந்தது அந்தப் பேப்பரில் 87 மார்க் வந்திருந்தது. ரீவால்யூவேசன் ரிசல்டை கிழித்து வீசுங்க... இந்த மார்க்கை அவனுக்களே ஏத்திருவானுங்க என்று சொல்லிச் சிரித்தார்.

கல்லூரி முடித்ததும் அந்தப் படிப்புக்கு போ... இதைப் படி என்றெல்லாம் வீட்டுக்கு வரச்சொல்லி அட்வைஸ் பண்ணினார். நம்ம சுழி எங்க சொல்லக் கேட்டுச்சு... மாடு நுனிப்புல்லு மேயுற மாதிரி அது இதுன்னு வாய் வச்சி கடைசியில கம்ப்யூட்டருக்குள்ள வந்து மாட்டிக்கிட்டாச்சு. திருமணத்துக்குப் பிறகு மதுரையில் மனைவி வீட்டுக்குப் போகும் போது ஒரு முறை கே.வி.எஸ். சாரை பார்த்தேன். அப்பவும் அதே நடைதான்... என்னைப் பார்த்ததும் அவருக்கு மிகுந்த சந்தோஷம்... அதே சிரிப்பு... என்னிடம் ரொம்ப நேரம் பேசியவர் வீட்டுக்கு வாங்க என்று அழைத்தார். அப்போது வருகிறேன் என்று சொல்லி முகவரி வாங்கி வந்தேன். அதன் பிறகு அங்கிட்டு போகவேயில்லை. ஒரு சில முறை ஐயாவிடம் விசாரித்து தெரிந்து கொண்டேன்.

சாருக்கு எதோ ஒரு ஆக்ஸிடெண்ட் நடந்தது என்றும் அதன் பின்தான் அவர் நடந்தே வருகிறார் என்றும் கல்லூரியில் சொல்வார்கள். அவருக்கு குழந்தையும் இல்லை... ஒரு பையனை தத்தெடுத்து வளர்த்தார். மாலை நேரங்களில் மகனைக் கையில் பிடித்துக் கொண்டு பேசியபடியே நடந்து வருவார். நானும் முருகனும் ஐயா வீட்டில் இருந்து அந்த வழியாக வருவோம்... என்ன பழனி சார் வீட்டிலிருந்தா... கொடுத்து வைத்த மாணவர்களய்யா நீங்க என்று சொல்லிச் சிரிப்பார். இன்னமும் எங்கள் கே.வி.எஸ் சாரின் சிரிப்பு மனசுக்குள் சிரித்துக் கொண்டே இருக்கிறது. அவரது நல்ல குணத்துக்கு நோய் நொடி இல்லாது நீண்ட காலம் சந்தோஷமாக இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அடுத்த வெள்ளந்தி மனிதர்களில் அன்பிற்குரிய அண்ணன் முருகன் (தொலைபேசித் துறை) அவர்கள் குறித்த சில நினைவுகளை மீட்டெடுப்போம்.

வெள்ளந்தி மனிதர்கள் தொடர்வார்கள். 
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 22 செப்டம்பர், 2014

வெள்ளந்தி மனிதர்கள்: 3 . புலவர் அருள்சாமி

வெள்ளந்தி மனிதர்கள் வரிசையில் என்னால் மறக்க முடியாத... மறக்க நினைக்காத மனிதர்களைப் பற்றி பகிர்ந்து வருகிறேன். அந்த வரிசையில் மூன்றாவது பகிர இருப்பது எங்கள் அருள்சாமி ஐயாவைப் பற்றிய சில நினைவுகள்.

அருள்சாமி ஐயாவும் சவரிமுத்து ஐயாவைப் போல நான் படிக்கும் போது  தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராய் பணியாற்றியவர்தான். அப்போது எனக்கு அவர் வகுப்பு எதுவும் எடுக்கவில்லை. அவருடன் எந்தவித தொடர்பும் இல்லை. பள்ளியில் திங்கட்கிழமை நடைபெறும் பிரேயரின் போது வாரம் ஒரு ஆசிரியர் பேசுவார்கள். அதில் ஐயாவின் பேச்சென்றால் மாணவர்கள் மிகவும் சந்தோஷமாகக் கேட்டு ரசிப்பார்கள். அந்தளவுக்கு நகைச்சுவையுடன் கருத்துக்கள் செறிந்து இருக்கும்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் இணைந்த போதுதான் ஐயாவும் பழக்கமானார். பெரும்பாலும் ஐயா யாருடனும் விரைவில் பேச மாட்டார். ஆனால் மேடையில் பேசினால் எல்லோரையும் ரசிக்க வைப்பார். அப்படித்தான் நாங்களும் ஐயாவுக்கு ரசிகரானோம். பின்னர் மாதாந்திர கூட்டங்களுக்கு வரும்போதெல்லாம் 'என்னய்யா... இன்னைக்கு நீங்க என்ன வாசிக்கிறீங்க கதையா? கவிதையா?' என்று கேட்பார். 'இல்லைய்யா... ஒண்ணும் வாசிக்கலை...' என்று சொன்னால் 'என்ன பிள்ளைகள் சின்னப்பிள்ளைங்க நீங்க வாசிச்சு நாங்க ரசிக்கணும்.. எப்பவும் நாங்கதான் வாசிக்கணுமா?' என்று கேட்டுச் சிரிப்பார்.

பழனி ஐயா வீடு எங்கள் வீடு போல் எப்போதும் அங்குதான் குடியிருப்போம்.  எப்போதும் ஐயா வீட்டில் பத்துப் பேருக்குக் குறையாமல் இருப்போம். சவரிமுத்து ஐயா வீட்டிற்கு எப்படியும் வாரத்தில் ஒரு நாளாவது நானும் முருகனும் போய்விடுவோம். ஆனால் அருள்சாமி ஐயா வீடு தேவகோட்டையின் கடைசிப் பகுதியில் இருந்தது. ரொம்பத்தூரம் போக வேண்டும் என்பதால் பெரும்பாலும் செல்வதில்லை. முருகன் தாமரை, சுபமங்களா, செம்மலர் ஏஜென்ஸியை பழனி ஐயாவிடம் இருந்து வாங்கினான். எனவே புத்தகங்கள் வந்ததும் ஒரு நாள் மாலை இருவரும் சைக்கிளில் தேவகோட்டையையே சுற்றி வருவோம். அப்படிப் போகும் போதுதான் தேனம்மை ஊரணி தாண்டி ஐயா வீடு செல்வோம். 

எங்களைப் பார்த்ததும் 'வாங்கய்யா... என்ன புத்தகம் வந்திருக்கா? அப்பத்தானே எங்க வீட்டுப் பக்கம் வருவீங்க?' என்றபடி வரவேற்பார். 'இல்லய்யா அப்படியே பாத்துட்டுப் போகலாம்ன்னு வந்தோம்' என முருகன் சிரித்தபடி சொன்னதும் 'ஆமாய்யா நீங்களும் அப்படியே பாத்துட்டுப் போகலாம்ன்னு வந்துட்டாலும்... சும்மா எதுக்குய்யா கதை விட்டுக்கிட்டு... உங்களுக்கு சவரிமுத்து ஐயா வீடும் பழனி ஐயா வீடும் மட்டும்தான் தெரியும்' என்பார். 'அப்படியெல்லாம் இல்லைய்யா...' என்றதும் 'சரி... சரி... உள்ள வாங்க எதாவது சாப்பிட்டுப் போகலாம்' என்று அழைத்து சோபாவில் அமர வைப்பார்.

வீட்டில் இருக்கும் போட்டாக்களை எல்லாம் காண்பித்து இது எங்க அக்கா, அங்க இருக்காக... இது அவுக... இது இவுக என அவரது குடும்பக் கதை எல்லாம் சொல்லி முடிப்பார். அதற்குள் அம்மா காபியோ, கூல்டிரிங்க்ஸோ கொண்டு வந்து கொடுப்பார். ஒவ்வொரு முறையும் எதாவது குடும்பக் கதை ஒன்று ஐயாவால் அம்மா வருவதற்குள் சொல்லி முடிக்கப்படும். அம்மாவோ அதிகம் பேசமாட்டார். வாங்கப்பா என்பதோடு சரி. குடித்து முடித்ததும் புத்தகத்தைக் கொடுத்துவிட்டு வர்றோம் ஐயா என்று கிளம்பும் போது 'வர்றதுதான் வாறீங்க ஒரு மத்தியானவேளையில் வந்தால் சாப்பிட்டுப் போகலாம்தானே... ஒரு நா.. ஒரு வாயி சாப்பாடு கூட சாப்பிடாம... இப்படி ஓடியாந்துட்டு ஓடுறீக...' என்று சொல்லிச் சிரிப்பார். 'நம்ம வீட்ல சாப்பிடுறதுக்கு என்னய்யா... இப்ப உக்காந்தா சாப்பாடு போட மாட்டீங்களா?' என்று முருகன் சொல்லவும் 'உனக்கு பேசவா சொல்லித் தரணும்... நீ பேசிச் சமாளிச்சிருவே... அவன் சிரிச்சே சமாளிச்சிருவான்... நல்ல செட்டுய்யா ரெண்டு பேரும்... ஆனா ஒண்ணுய்யா கடைசி வரைக்கும் ரெண்டு பேரும் இதே பாசத்தோட இருக்கணும்ய்யா' என்று சொல்லி வாசல்வரை வந்து வழியனுப்பி வைப்பார்.

ஒரே ஒருமுறை இருவரும் ஐயா வீட்டில் மதியம் சாப்பிட்ட நியாபகம் இருக்கிறது. செம்மலர், தாமரையில் எல்லாம் வரிகளை விடாது படித்து அடிக்கோடிட்டு அது குறித்து சிலாகித்துப் பேசுவார். பாரதி விழாவின் போது நாங்கள் வேலை செய்தால் தானும் வந்து அதில் இணைந்து கொள்வார். பெரும்பாலும் ஐயாக்களுடனான ஜாலியான பொழுதுகளில் அருள்சாமி ஐயா மெதுவாக சவரிமுத்து ஐயாவின் செல்லப்பிள்ளைகள் என்று சீண்ட ஆரம்பிப்பார், சவரிமுத்து ஐயாவோ பிள்ளைகள் எல்லோருக்கும் எல்லோருக்கும் செல்லம்தான்...  இதில் பிரித்துப் பார்க்க என்னய்யா இருக்கு என்று சிரித்துவிட்டு என்ன இருந்தாலும் இருக்க பிள்ளைகள்ல இந்த ரெண்டு பிள்ளைகளும் பேராசிரியரோட (பழனி ஐயா) பிள்ளைகள் அல்லவா என்று மேலும் கூடுதலாக இவர்கள் என் பிள்ளைகள் என்பதைவிட பேராசிரியரின் பிள்ளைகள் என்பதுதான் பொருத்தம் என்பது போல சொல்லி பழனி ஐயா முகத்தைப் பார்ப்பார். ஆனால் அவரோ எப்போதும் போல் வெண்தாடிக்குள் சாந்தமாய்ச் சிரிப்பார். அந்தச் சிரிப்பில் எல்லாப் பிள்ளைகளும் என்பிள்ளைகளே என்று சொல்வதாய் நமக்குத் தோன்றும்.

கலை இலக்கியப் பெருமன்றத்தில் இருக்கும் வரை அருள்சாமி ஐயாவுடனான தொடர்பு இருந்தது. பின்னர் சென்னை, அபுதாபி என்று வாழ்க்கைப் பயணம் தொடர்ந்த போது ஐயாவுடனான நெருக்கம் குறைந்தது. 'குமார் இப்போ எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்?' என சில முறை முருகனிடம் கேட்டிருக்கிறார். நான் செல்லும் போதெல்லாம் அவரை பார்க்க வேண்டும் என்று நினைத்து நினைத்து பார்க்காமல் திரும்புவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறேன்.

எங்கள் அன்புக்குரிய அருள்சாமி ஐயா, தமிழாசிரியர் என்றாலும் ஆங்கிலப் புலமை அதிகம். நிறையப் படிப்பார்... நிறைய எழுதுவார். புத்தகங்கள் எல்லாம் போட்டிருக்கிறார். அதிகம் பேச மாட்டார் என்றாலும் நெருக்கமாகி விட்டோம் என்றால் அவருடன் நிறைய விஷயங்கள் குறித்து அதிகம் பேசலாம்... அதனால் அவருடன் பேசுவது என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். எல்லாருக்கும் பிடித்த அருள்சாமி ஐயா கடவுள் அருளால் சந்தோஷமாக இருப்பார் என்று நினைக்கிறேன். ஐயாவின் அன்பில் கொஞ்சக் காலம் வாழ்ந்தவன் என்ற சந்தோஷத்தோடு எப்போதும் அவரின் ஆசிகளை வேண்டி இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அடுத்த பதிவில் எனது பேராசிரியர் கே.வி.சுப்பிரமணியன் (கே.வி.எஸ்) அவர்களைப் பற்றி பார்ப்போம்.

வெள்ளந்தி மனிதர்கள் தொடர்வார்கள்
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

வெள்ளந்தி மனிதர்கள் : 2 . புலவர் ம. சவரிமுத்து

ன்று ஆசிரியர் தினம். முதலில் என்னைச் செதுக்கிய, இன்னும் செதுக்கிக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் வலையுலகில் என்னுடன் உறவில் இருக்கும் அன்பான ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கிறேன்.

ன்றைய வெள்ளந்தி மனிதர்களில் எங்கள் தமிழாசிரியர் ஐயா புலவர் ம. சவரிமுத்து அவர்களைப் பற்றிப் பார்ப்போம். சவரிமுத்து ஐயா எனக்கு அறிமுகமானது தே பிரித்தோ மேல் நிலைப் பள்ளியில் எனக்குத் தமிழாசிரியராய்... தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் எனக்கு அவர் தமிழாசிரியர் அவ்வளவே. எங்களுக்குள்ளான உறவு மாணவர் ஆசிரியர் என்ற முறையில்தான். அதற்குக் காரணம் அவருடன் பழகும் சந்தர்ப்பத்தை உருவாக்கவில்லை என்பதும் நான் அப்போது யாரிடமும் அதிகம் பேசுவதில்லை என்பதும்தான்.

கல்லூரிக்கு வந்து பழனி ஐயாவின் அறிமுகம் கிடைத்து கொஞ்சம் தமிழார்வம் எட்டிப் பார்க்க ஐயாவின் மாணவர்களாக தமிழ்நாடு பாரதி கலை இலக்கியப் பெருமன்றத்தில் நானும் முருகனும் உறுப்பினரானோம். அப்போதுதான் சவரிமுத்தையாவுடன் நெருக்கமாகப் பழகும் சூழல் அமைந்தது. என்னோட பிள்ளைகள் என்று அன்பாக அழைக்கும் அந்த மனிதருக்குள் எப்போதும் எங்கள் மீதான அன்பைக் கூட்டிக் கொண்டே போனது பின்னான நாட்கள்.

'என்ன தம்பிங்களா? இதைச் செய்யலாமா?' என்று வேஷ்டி சட்டையில் பாரதி விழா வேலைகளை இழுத்துப் போட்டு செய்வதில் ஐயாவுக்கு நிகர் ஐயாவே. ஐயா கலையிலக்கியப் பெருமன்றத்தின் தலைவராக இருந்த போது பாரதி விழாவுக்கு திரு. இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்களை அழைத்திருந்தோம். அவரை மதுரையில் இருந்து காரில் அழைத்து வரும் பணியை எங்களிடம் ஐயா ஒப்படைத்திருந்தார். விழா முடிந்து திரும்பும் போது திரு. இறையன்பு அவர்கள் நான் பேசாமல் தனியாக போகமுடியாது என்னைக் கூட்டியாந்த அந்த ரெண்டு பேரும் என் கூட பேச்சுத் துணையாக மதுரைக்கு வரவேண்டும் என்று சொல்லிவிட்டார். 

ஐயாவுக்கோ எங்களை மீண்டும் அனுப்ப மனமில்லை.... மெதுவாக பிள்ளைகள் சில நாட்களாகவே பாரதி விழா வேலை பார்த்து... நேற்று உங்களை அழைக்க வந்து... இன்றெல்லாம் விழா நிகழ்வுகளில் அலைந்து ... ரொம்பச் சோர்வாக இருக்கிறார்கள் வேறு யாராவது உங்களுடன் வரட்டும் என்றார்கள். ஆனால் அவரோ இருவரும்தான் வேண்டும் என்று சொல்ல 'என்ன தம்பிங்களா... போகலாமா?' எனக் கேட்டு எங்களை அனுப்பி வைத்தார்.

எப்பவும் எங்கள் மீது அவருக்கு அலாதிப் பிரியம். வீட்டுக்குச் சென்றால் அம்மாவிடம் பிள்ளைகள் வந்திருக்கு... சாப்பிட எதாவது கொடுங்கள் என்று சொல்லிவிட்டு நம்ம வீட்டில் காய்த்த கொய்யா... நேற்று பரிச்சேன்... பிள்ளைகள் வருமே வந்தா சாப்பிடட்டும்ன்னு வச்சிருந்தேன்... இது நம்ம வீட்டு மாம்பழம் தம்பி... மரத்துலயே பழுத்தது... இப்பத்தான் பறிச்சி கழுவி வச்சிட்டு பிள்ளைங்க வந்தா சாப்பிடுங்கன்னு உங்கம்மாக்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன். நீங்க வந்துட்டீங்க என்பார். அதற்குள் அம்மா மணக்க மணக்க காபியோடு வந்து விடுவார்.

ஐயாவின் குடும்பத்தில் அனைத்து விசயங்களும் எங்களுத் தெரியும். நம்ம பிள்ளைங்ககிட்ட சொல்றதுக்கு என்னன்னு நல்லதோ கெட்டதோ அனைத்தும் சொல்லிவிடுவார். ஐயாவின் மாப்பிள்ளைகள் எல்லாம் எங்களுக்கு ஐத்தான்தான்... உங்க பெரியத்தான் இப்பத்தான் வந்துட்டுப் போனாங்க... சின்னத்தான் அங்க போயிருக்காங்க எனச் சொல்வார். 

ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும் போதும் எங்காவது வெளியில் வைத்துத்தான் சந்திப்பேன். வீட்டுக்குச் செல்ல முடிவதில்லை. இந்த முறையும் அப்படித்தான்... சவரிமுத்து ஐயாவைச் சந்திக்கணும் என்ற நினைப்போடு தேவகோட்டை ராம்நகருக்கு ஒரு வேலையாகச் சென்றுவிட்டு விஷாலுடன் வண்டியில் வந்து கொண்டிருந்தேன். அப்போது எங்களுக்கு முன்னே ஒரு டிவிஎஸ் எக்ஸ்எல் போய்க் கொண்டிருந்தது. ஐயா மாதிரி இருக்கே என நினைத்து வண்டியின் வேகத்தைக் குறைத்து அருகே சென்று ஐயாதான் எனத் தெரிந்ததும் 'ஐயா' என்றேன். என்னைப் பார்த்ததும் 'அட இங்க பாரு எம்புள்ளையை... பேராண்டி வேற முன்னால உக்காந்திருக்காக' என்றபடி வண்டியை நிறுத்தி என்னை ஓரமாக வரச்சொல்லி காது கேட்பதற்கான கருவியை 'காது கேக்குறதில்லைய்யா' என்றபடி மாட்டினார்.

"ஐயா எப்படியிருக்கீங்க? அம்மா எப்படியிருக்காங்க? உங்களைப் பாக்கணுமின்னே நெனச்சிக்கிட்டு வந்தேன். இப்பவே பாத்துட்டேன்" என்றேன் சந்தோஷமாக. "நல்லாயிருக்கேன் தம்பி... நீங்கள்லாம் போனதும் என்னென்னமோ நடந்துருச்சி... எங்கப்பாரு தவறிப்பொயிட்டாக... உங்க அம்மாவுக்கு பிரஸ்ட் கேன்சர் வந்து ஒரு வருசம் நடைபொடையில்லாம இருந்துட்டாக... இப்போ பரவாயில்லை... பொற்கோ மனைவிக்கு பி.எட் காலேசில சேக்குறதுக்குத்தான் கேட்டுக்கிட்டு வாறேன்..." என குடும்ப நிகழ்வுகளை அதே பாசத்துடன் சொன்னார்.

பின்னர் "நான் மருமகளைப் பார்க்கும் போதெல்லாம் எம்புள்ள எப்ப வருதுன்னு கேப்பேன்... அவங்களும் என்னை எங்க பாத்தாலும் நா பாக்காட்டியும் ஐயான்னு வந்துருவாங்க... அடுத்த வாரம் பிள்ளைங்களுக்கு சின்னச் சின்ன போட்டிக வச்சிருக்கோம்... நீங்க ஊருக்குப் பொயிட்டாலும் மருமகள வந்து உதவச் சொல்லுங்கன்னு சொன்னார். சிறிது நேரம் அவரோடு பேசிவிட்டு வந்தேன்.

என் அன்பிற்குரிய சவரிமுத்து ஐயாவை எங்கள் தேவகோட்டையில் தெரியாதவர்கள் குறைவு. இன்றும் பாரதி கலையிலக்கியப் பெருமன்றத்தின் செயலாளராக தனது தமிழ்ப்பணியை ஆற்றி வருகிறார். ஐயாவைப் பொறுத்தவரை ஆரோக்கியமான விவதாங்கள் செய்வார். சில நேரங்களில் அவருக்கும் பழனி ஐயாவுக்கும் சில மனஸ்தாபங்கள் வந்து மறையும். ஐயா நிறையப் படிப்பார்.... எல்லோரிடமும் நிறைவாய் இருப்பார்... இதுதான் அவர்.

இங்கே ஐயா தவிர்த்து ஒரு செய்தி, என்னை மகனாய்ப் பாவிக்கும் எல்லாருக்கும் என் மனைவி மருமகளாய் ஆனது எனக்கு மிகுந்த சந்தோஷம். என்னைவிட எல்லோரிடமும் அன்பாய்ப் பழகும் என்னவள் எனக்குக் கிடைத்தது மிகப்பெரிய வரப்பிரசாதம். எல்லோரையும் வேண்டும் என நினைக்கும் என்னவளை விரட்டி விரட்டி காயப்படுத்தும் அவரின் உறவுகளை நினைத்து வேதனையோடுதான் சில வாரங்களாக நாட்கள் கடந்து செல்கின்றன. பழகிய பழக்கங்கள் எல்லாம் எங்களுடன் உறவு பாராட்டி அரவணைக்கும் போது உறவுகள் எல்லாம்...? சரி காலம் பதில் சொல்லும் என்ற நம்பிக்கையோடு இதை மறப்போம் என என்னவளிடம் சொல்லித் தேற்றி  வருகிறேன். அருகில் இருந்தால் அரவணைக்க முடியும்... தொலைதூர வாழ்க்கையில்... வார்த்தைகளைத்தானே வலிக்கு மருந்தாக இடமுடிகிறது. அந்த வார்த்தைகளைக் கூட நம்மோடு சிரித்துப் பேசி மகிழ்ந்து இருக்கும்  சில இரட்டை வேடாதாரிகள் வலியின் மீது வாரி இறைக்கும் கற்களாக ஆக்கிக் கொண்டிருப்பதுதான் வேதனை.

அடுத்த வெள்ளந்தி மனிதர்கள் வரிசையில் புலவர். அருள்சாமி ஐயா அவ்ர்களைப் பற்றி பார்க்கலாம்.


-வெள்ளந்தி மனிதர்கள் மனசில் தொடர்வார்கள்.
-'பரிவை' சே.குமார்.

சனி, 23 ஆகஸ்ட், 2014

வெள்ளந்தி மனிதர்கள் : 1. முனைவர் மு.பழனி இராகுலதாசன்.



ந்த வெள்ளந்தி மனிதர்கள் பதிவில் என் வாழ்வில் நான் நினைத்துக் கூடப் பார்க்காமல் கிடைத்த மிகப் பெரிய உறவுகளைப் பற்றி பகிரலாம் என்று நினைக்கிறேன். எத்தனை எத்தனை உறவுகள்... எப்படிப்பட்ட உறவுகள்... அவர்களைப் பற்றியெல்லாம் ஒரு முறை அல்ல வாழ்நாளில் பலமுறை அசை போடலாம். இவர்கள் எல்லாம் இப்படித்தான் வாழனும் என வாழ்க்கைப் பாடத்தைப் போதித்தவர்கள். இவர்களுடன் பழகிய காலங்களில் இவர்களின் குடும்பத்தில் செல்லப்பிள்ளைகளாக வலம் வந்தோம் என்பதை நான் மட்டுமல்ல என் நட்புக்களும் சந்தோஷமாகச் சொல்வார்கள். 

ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும் போதும் இவரைப் பார்க்க வேண்டும் அவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதுக்குள் எழும். ஆனால் ஊருக்குப் போனதும் வேலைகள் ஒவ்வொன்றாகக் கூட அவற்றை முடித்து நிமிரும் போது ஒரு மாதம் ஓடிவிடும். சரி அடுத்த முறை பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் மீண்டும் திரும்பி வந்துவிடுவது வாடிக்கையாகிவிட்டது. 

வெள்ளந்தி மனிதர்களில் முதலில் வருபவர் எனது கல்வித்தந்தை எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகம் கொண்ட பேராசிரியர். முனைவர் மு.பழனி இராகுலதாசன் அவர்கள்.

Displaying ayya.jpg

படிக்கும் காலத்தில் பல விஷயங்கள் பேசி மகிழ்ந்த இடம்தான் எங்க தமிழய்யா வீடு. அப்போது வேறு வீட்டில் குடியிருந்தார்கள். மாலை நேரம் எங்களுக்கு அங்குதான் கழியும். விடுமுறை நாட்களும் அப்படியே. எனக்கு அப்போது தொண்டையில் உள்நாக்கு வளர்ந்து அடிக்கடி பிரச்சினை வரும். காரைக்குடியில் ஆயுர்வேத மருத்துவரைப் பார்த்தால் சரி ஆகும் என என்னை வாராவாரம் கூட்டிச் சென்று காண்பித்து சரி பண்ணியவர் ஐயா, மேலும் மாத்திரை சாப்பிடும் போது காபி, டீ குடிக்க வேண்டாம் என மருத்துவர் சொல்ல மேகலாவிடம் எனக்கு மட்டும் ஸ்பெஷலாக பால் போட்டுக் கொடுக்கும்படி அம்மாவிடம் சொல்லச் சொல்வார். எத்தனை பேர் இருந்தாலும் எம்புள்ள காபி, டீ குடிக்கக்கூடாது என பால் மட்டுமே காய்ச்சிக் கொடுப்பார் அம்மா. அந்த அன்பு அம்மாவிடம் இன்றும் தொடர்கிறது. இப்போது போனாலும் எனக்கு அம்மா கொடுப்பது காபி, டீ அல்ல பால்தான்... 

எப்ப ஊருக்குப் போனாலும் ஐயா வீட்டுக்கு அடிக்கடி சென்று அவர்களுடன் அமர்ந்து பேசி அம்மா கையால் கொடுக்கும் பாலோ, பலகாரமோ சாப்பிட்டு ஐயாவுடன் கொஞ்சம் இலக்கியம் நிறைய குடும்ப விஷயங்கள் பேசி மகிழ்வேன். என்னைப் பொறுத்தவரை அவர்கள் இருவரும் எனக்குத் தாய் தந்தையர்தான். எனது வீட்டு விசேசங்கள் என்றால் இருவரும் வந்துவிடுவார்கள். இந்த முறை வீட்டில் நிகழ்ந்த சின்ன விழாவிற்கு அழைத்தபோதே அம்மா நான் வந்துவிடுவேன். உங்க ஐயாதான் இப்ப எங்கும் போவதில்லை. ஆனா நம்ம வீட்டுக்கு கண்டிப்பா வரச்சொல்லுறேன் என்றார்கள். அப்பவே ஐயா எனக்கு ஒரு வேலை இருக்குய்யா முடிச்சிட்டு கண்டிப்பாக வாறேன் என்றார்.

விழா அன்று அம்மா மட்டுமே வந்தார். ஐயா வருவாக எனச் சொல்லிச் சென்றார். ஆனால் அன்று அவர் வரவில்லை. மறுநாள் காலை எங்கள் வீட்டிற்கு ஐயா வந்தார். எப்பவும் போல் அதே சைக்கிள்... அதே புன்னகையுடன் வந்தார். அவர் அமர்ந்த நாற்காலிக்கு அருகில் தரையில் நானும் என் மனைவியும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அந்தத் தருணங்கள் மிகவும் சந்தோஷமானவை. பேச்சின் இடையே மனைவி கொடுத்த காபியை உறிஞ்சியபடி நேற்றிலிருந்து உங்க அம்மா 'குமார் வந்து சொல்லிட்டுப் போச்சுல்ல... பொயிட்டு வாங்க' என என்னையப் போட்டு நச்சரிக்கிறாங்க. 'அதான் நீங்க பொயிட்டு வந்துட்டீங்கள்ல அது போதும்' எனச் சொன்னாலும் அவங்க விடலை. ஏன்னா அம்மாவுக்கு குமார் மேல ரொம்பப் பாசம் என என் மனைவியிடம் சொன்னார்.

ஸ்ருதிக்கு பாரதியார் கவிதைகள், ஆங்கிலக் கதைப் புத்தகம், டிராயிங் நோட்டு என எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். அதைப் பார்த்த விஷால் அவரிடம் 'தாத்தா அதுக்கு மட்டும் எல்லாம் கொண்டாந்து கொடுத்திருக்கீங்க... எனக்கு மட்டும் எதுவுமே கொடுக்கலை' என அவரிடம் நேரிடையாகக் கேட்க அடுத்த முறை உனக்கு வாங்கி வருகிறேன் என்றவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை தனது கையில் வைத்திருந்த பைக்குள் தேடி சிவப்பு, ஊதா என இரண்டு பேனாக்களை எடுத்துக் கொடுத்தார். அவர் கையில் இருந்து பேனா பெருவது பெரிய விஷயம். பெரும்பாலும் யாருக்கும் அவ்வளவு சீக்கிரத்தில் கொடுக்க மாட்டார். கல்லூரியில் படிக்கும் போது எனக்கு மை ஊற்றி எழுதும் பேனா ஒன்று கொடுத்தார். அது இன்னும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. அதைச் சொன்னதும் வெண்ணிற தாடிக்குள் வெள்ளந்தியாய்ச் சிரித்தார்.

அப்புறம் நித்யாவிடம் நான் நிறையப் பேருக்கு கல்யாண வாழ்த்துப்பா எழுதி மேடையில வாசிச்சிருக்கேன். ஆனா எனக்கு ரொம்பப் பிடிச்சது உங்களுக்கு வாசிச்ச வாழ்த்துப்பாதான் என்றவர் எங்கள் திருமணத்தில் அவர் வாழ்த்துப்பா வாசித்ததற்குப் பின்னே நிகழ்ந்த நிகழ்வுகளைச் சொன்னார். வாழ்த்துப்பா வாசித்து முடித்து கீழே இறங்கினால் இலக்கிய மேகம் சீனிவாசன் வந்து என் காலைத் தொட்டு வணங்கி ஐயா வாழ்த்துப்பா ரொம்ப அருமையா இருக்கு... எல்லாருக்கும் எழுதினதைவிட குமாருக்கு எழுதியது ரொம்பச் சிறப்பா இருக்கு... குமார் மட்டும் ரொம்பப் ஸ்பெஷலா? என்று கேட்டார். அதற்கு என் பிள்ளைகள் இருவருமே அருமையான பிள்ளைகள்... அதுதான் பாடலும் அருமையாக வந்திருக்கிறது என்று சொன்னேன் என்றார். இன்னும் அந்த வாழ்த்துப்பா பேப்பரை பத்திரமாக வைத்திருப்பதாகச் சொன்னார். இதைவிட எங்களுக்கு வேறென்ன சந்தோஷம் வேண்டும்,

இதே ஐயாதான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கடைசியில் எங்கள் வகுப்பில் நடந்த பிரிவு உபச்சார விழாவில் பேசும் போது 'மேகலாவோ மேவியதோர் அண்ணன் என்கிறாள்... வாசகனோ தனக்கு வாய்த்த தம்பி என்கிறான்... இல்லத்தாளோ இனிய மகன் என்கிறார்... பிறகு நான் என்ன சொல்ல... எனச் சொன்னார். அந்தத் தந்தையின் பாசம் அன்று முதல் இன்று வரை மாற்றுக் குறையாமல் மலர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

இப்படியான மனிதர்களை எல்லாம் என் வாழ்வில் கிடைக்கச் செய்த இறைவனுக்குத்தான் முதலில் நன்றி சொல்லணும். ஐயாவை முதன் முதலில் சந்திக்க வைத்து என்னை ஐயா எழுத்தாளனாக்க அடி எடுத்துக் கொடுத்த முருகனை இங்கு நினைத்துக் கொள்கிறேன்.

வெள்ளந்தி மனிதர்கள் வரிசையில் அடுத்து பதிவில் எனது அன்பிற்குரிய ஆசான். புலவர் ம. சவரிமுத்து ஐயா அவர்களுடனான உறவு குறித்துப் பார்க்கலாம்.

-தொடர்வார்கள்...
-'பரிவை' சே.குமார்.