மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 3 செப்டம்பர், 2016

திண்ணைப் பேச்சு காணாமல் போச்சு

Image result for திண்ணை

'மோடு ஒழுகுதுன்னே...
மழக்கி முன்னால பிரிச்சி
கட்ட வேண்டியதுதானே...'

'மூத்தவன் போனு கீனு
பண்ணுனானா..?
நல்லாயிருக்கானாமா...?'

'இருளாயி மவன் எவளோ
ஒருத்திய இழுத்துக்கிட்டு
ஓடிட்டானாமே தெரியுமா...'

'கொக்காளி... மாதவமுட்டு
மாடு ரெண்டு பர்லாங்கு
விட்டுட்டு வந்துச்சுய்யா...
என்ன வேகம்...?'

'ராசாத்தி மவ அப்பிடி
இப்பிடி திரியிறாளாமே...
ஒரு மாதிரி பேச்சு
அடிபட்டுகிட்டு இருக்கு...'

'சரச பொண்ணு பாத்துட்டுப்
போனாவளே... புடிச்சிருக்காமா..?
சீதனம் ரொம்ப எதிர்பாக்குறாகளா...?'

'என்ன எளவோ தெரியல..
மாம்பிஞ்சாக் கொட்டுது...'

'ரெண்டு நாளா மாடு கழியிதப்பா..
மருந்து கொடுத்தும் நிக்கல...
ஊசிதான் போடணுமோ...?'

'சாயக்குடியில வள்ளிதிருமணம்
வச்சிருந்தாங்க...
கரூர் இந்திராவும்
நாகலிங்கமும் தர்க்கம்
பண்ணியிருக்காவ பாரு...
அந்தப் பொம்பளதாய்யா வள்ளிக்கி...'

'சைக்கிளு வேற பஞ்சராக் கெடக்கு..
பஞ்சரு பாக்கலாம்ன்னு பாத்தா...
சொலுசன் இல்ல...
மாப்ளக்கிட்ட இருக்குமா...'

'மாரியத்தா கோவிலு
வெளக்கு எரியலப்பு...
பீசு போச்சு போல...
டவுனுக்குப் போனா
ஒண்ணு வாங்கியாந்து
போடுங்க காசு நாந்தாறேன்'

'கரகாட்டக்காரி துர்கா
வந்தா ஒரு கூட்டம் கூடுதய்யா...'

'வெவசாய கடன
தள்ளுபடி செய்வானா..?'

'தீவாளிக்கி ரெண்டு
வேட்டி வாங்கணுமப்பா...
நமுத்துப் போச்சு...'

எதார்த்தங்களோடும்
எள்ளல்களோடும்
நிறைந்து கிடந்த
கோவில் திண்ணை...

இப்போ பேசவும் ஆளில்லாமல்
கேட்கவும் ஆளில்லாமல்
வெறுமை சுமந்து
பொலிவிழந்து கிடக்கு...

மனிதர்கள் இல்லாத
அம்மன் கோவில்
ஊமையாகிப் போச்சு...
ஆமா இப்ப ஊருகூட
ஊனமாகிப் போச்சு...
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

கவிதை : வாலிப நேசம்...


'என்ன பண்றே..?'
என்பதிலிருக்கிறது அன்பு...
'எப்படி இருக்கே..?'
என்பதிலிருக்கிறது நேசம்...

ஆண்டுகள் பல
கடந்த போதிலும்
கேட்கும் வார்த்தையில்
குளிர்ந்து கிடக்கிறது செவி...

எத்தனையோ ஆசைகள்
அத்தனையும் மூட்டைகட்டி...
தனித்தனியே குடும்ப
பாரத்தைச் சுமந்து கடந்தோம்...

எத்தனை திருவிழாக்கள்...
எத்தனை திருமணங்கள்...
எத்தனை இறப்புக்கள்...
எத்தனை பிறப்புக்கள்...

காணும் போதெல்லாம்...
சின்னப் புன்னகையும்
சிதறாத வார்த்தையுமாய்
கடந்து போனது காலம்...

கிழப் பருவமெய்தி... 
நடை தளர்ந்து...
கம்பூன்றி... 
கடக்கும் போதும்...

நேசமாய் சிரித்து
வாஞ்சையாய் கேட்டுக்
கடக்கிறேன்... கடக்கிறாய்...
கடக்கிறோம்...
ஆரம்ப வரிகளை....

அதில் தெறிக்கும்
அன்பில் தொக்கி நிற்கிறது
வாலிப நேசம் இன்னும்
வயதாகாமல்...
-'பரிவை' சே.குமார்.

(குறிப்பு :  மன்னிக்க வேண்டும் நண்பர்களே... தொடர்கதை ஒரு சில காரணங்களால் மீண்டும்  நிறுத்தப்படுகிறது.... ஒரு வேளை புத்தகமாக்கும் பட்சத்தில்(!) மீண்டும் வாசிக்கலாம்... இனி கதைகள் தவிர்த்து மற்றவை மட்டுமே  இங்கு பகிரப்படும் - நன்றி. )

புதன், 3 ஆகஸ்ட், 2016

கவிதை : எப்ப மச்சான் வருவீக..?

டுத்த தையிக்குள்ள
பரிசம் போடுவேன்னு
அய்யானாரு வாசலிலே
அடிச்சிச் சொன்னியளே...
அதை மறந்து போனியளோ..?

வெத்தலக் கொடியோரம்
வெசனப்பட்டு நிக்கயில
மாருல சாச்சிக்கிட்டு
தைரியம் சொன்னியளே...
அதை மறந்து போனியளோ..?


உங்க நினைவோட
உழுத வயலுக்குள்ள
அழுது நிக்கயில
ஆதரவா அணச்சீங்களே...
அதை மறந்து போனியளோ..?


திருவிழா ராத்திரி
தெருவுல நான் போக
பின்னால நீங்க வந்து
கைபிடித்து நடந்தீங்களே...
அதை மறந்து போனியளோ..?

கொட்டச் செடியோரம்
கொலுசு மாட்டிவிட்டு...
காலில் கோலமிட்டு
குறுகுறுக்க வச்சியளே...
அதை மறந்து போனியளோ..?

சொல்லித் தையி மூணாச்சு...
சொந்தமெல்லாம் கேட்டாச்சு...
வரும் தையில் வருவீங்கன்னு
வசதியாச் சொல்லி வச்சேன்...

உங்கழுத்துல எந்தாலின்னு
உறுதியாச் சொன்னியளே..!
எங்கழுத்து ஏங்கி நிக்கி
எப்ப மச்சான் வருவீக...?
-'பரிவை' சே.குமார்.

சனி, 30 ஜூலை, 2016

கவிதை : பெருமழையின் பேரானந்தம்


பெருமழைக்கு முகாந்திரமாய்
பேரிரைச்சலோடு
ஆரம்பித்தது சிறு மழை...

தென் மேற்காகவோ
வட கிழக்காகவோ
விரைந்து ஓடாமல்
சுழற்றி அடித்தது காற்று...

கண்ணைப் பறிக்கும் மின்னலும்
காதைப் பிளக்கும் இடியும்
இல்லாத போதும்
பயந்து ஒதுங்கியது மின்சாரம்...

பறந்து விழுந்த
தென்னை ஓலை...
கிளைகளைச் சுழற்றி
குதூகலித்த மரங்கள்...

பாய்ந்தோடும் பசுக்கள்...
பாந்தமாய் எருமைகள்...
ஒண்ட இடம் தேடும்
நனைந்த நாய்கள்...

கூடி தேடி விரையும் கோழிகள்...
கூச்சலிடும் குருவிகள்...
சீறிப் பறக்கும் வாகனங்கள்...

சாயங்கால மழை
சட்டுன்னு விடாது
நொந்தபடி மிதிக்கும்
சைக்கிள் மனிதர்கள்...

கொலுசு நனைய...
கெண்டைக்கால் தெரிய...
குடை பிடித்து நடக்கும் குமரிகள்...

நனைந்தபடி கதை பேசி...
அதில் எவளையோ வாசைபாடும்
பால்காரப் பெண்கள்...

ஆனந்தத்தில் பேப்பர்
கிழித்துக் கப்பல்
விடும் குழந்தைகள்...

எல்லாம் ரசித்தபடி
காற்றோடு கொஞ்சிக்
கவிதை எழுதிய
பெருமழையொன்று

இதமான தேநீரின் சுவையோடு
மண்ணின் வாசத்தையும்
மனசுக்குள் இறக்கி
என் சன்னலை மெல்லக்
கடந்து கொண்டிருக்கிறது...

ஒருவேளை அது உங்கள்
ஊர்ப்பக்கம் வரலாம்...
சன்னலோரம் காத்திருங்கள்
ஓரு கோப்பை தேநீரோடு..!
-'பரிவை' சே.குமார்.

சனி, 23 ஜூலை, 2016

கவிதை : வீணையடி நீ எனக்கு

டைநில்லாப் பேருந்தில்
இரைச்சலில்லா
இரவுநேரப் பயணம்...

தார்ச்சாலை இருட்டைத்
தகர்த்து இலக்கை நோக்கி
விரையும் பேருந்துக்குள்
இசையாய் இசைஞானி...

படியில் தொங்கும்
பயணிகள் இல்லை...
இடித்து நிற்கும்
இம்சையும் இல்லை...

பக்கத்து மனிதனின்
தோள் சாயாது
காலி இருக்கையில்
கால் நீட்டித் தூங்கும்
மனிதர்கள்...

பின்னிரவிலும் விழித்திருக்கும்
காதலிக்கு பேசியபடி வரும்
முன்னிருக்கை காதலன்...

எதிலும் ஒட்டாமல்
சாய்ந்து படுத்தவன்
மெல்ல விலக்கினேன்
சன்னல் கண்ணாடியை...

திறக்காத சன்னலால்
திமிறிய காற்று...
வழி கிடைத்ததும்
கன்னத்தில் அறைந்தது...




கடந்து செல்லும் மரத்தை
ரசிக்க மறுத்த மனசு...
அவளின் நினைவுகளை
மீட்டி எடுத்து வாட்டி வதைத்தது...

நாளை திருமணம்...
வாழ்த்த வரணுமாம்...
மென்று விழுங்கிய
வார்த்தைகளால்
கொன்று வீசினாள்
காதலையும் என்னையும்...

ஏமாற்றுவது ஆண்கள்
மட்டுமல்ல பெண்களும்தான்...
ஏமாறுவது பெண்கள்
மட்டுமல்ல ஆண்களும்தான்...

கொஞ்சம் சன்னலை
அடைங்க தம்பி குளிருது
பின்னிருக்கை குரலால்
அடைத்துச் சாத்தினேன்
சன்னலோடு அவள் நினைவையும்...

வானுயர்ந்த சோலையிலே
நீ நடந்த பாதையெல்லாம்...
பேருந்துப் பாடல்
பெருமழையென
மனதுக்குள் இறங்க

மூடிய விழிக்குள்ளிருந்து
வெளியான கண்ணீர்
கன்னத்தில் இறங்கியது...

வீணையடி நீ எனக்கு
நான் சொல்லும் வரிகள்...
அவள் விரும்பும் வரிகள்...

ஆளில்லாத பக்கத்து
இருக்கையில் சாய்ந்திருந்தது
 திருமணப் பரிசாய்
வாங்கிய  அழகிய வீணை...!
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 21 மார்ச், 2016

வாழும் கதைகள்..!


சாமியாடி வீட்டு கமலமும் இல்லை...
அவளைக் காதலித்த சாமியய்யாவும் இல்லை...
கரை சேராத காதல் கதை மட்டும்
இன்னும் வாழ்ந்துக்கிட்டு இருக்கு...

மேலச் செய் விளையவும் இல்லை...
அதில் விவசாயம் செய்த பூமியும் இல்லை...
மூடை மூடையாய் விளைந்த கதை மட்டும்
இன்னும் வாழ்ந்துக்கிட்டு இருக்கு...

சொன்னதை கேட்கும் ராமுக் காளையும் இல்லை...
வளர்த்த ராமையாக் கோனாரும் இல்லை...
ராமு ஜல்லிக்கட்டில் சாதித்த கதை மட்டும்
இன்னும் வாழ்ந்துக்கிட்டு இருக்கு...

கீழவீட்டு வெள்ளச்சி எருமையும் இல்லை...
வளர்த்த வெள்ளையம்மாக்காவும் இல்லை...
வாளி வாளியாய் பால் கறந்த கதை மட்டும்
இன்னும் வாழ்ந்துக்கிட்டு இருக்கு...

அம்பலார் வீட்டு லோகிதாசும் இல்லை...
அவன் உயிரை எடுத்த அரசமரமும் இல்லை...
தூக்குப் போட்டுக்கிட்ட கதை மட்டும்
இன்னும் வாழ்ந்துக்கிட்டு இருக்கு...

சுடுகாட்டு ஒத்தப்புளியும் இல்லை...
உடுக்கடிக்கும் வேம்பையனும் இல்லை...
ஊரைக் கலக்கிய பேய்க் கதைகள் மட்டும்
இன்னும் வாழ்ந்துக்கிட்டு இருக்கு...

கம்மாய்க்குள்ள ஒரம்பா மரமும் இல்லை...
அருகிருந்த வற்றாக் கிணறும் இல்லை...
அங்கு நிகழ்ந்த காதல் கதைகள் மட்டும்
இன்னும் மலர்ந்துக்கிட்டு இருக்கு...

ஊர் கூடி ஆடு வெட்டும் திருவிழாவும் இல்லை...
கருப்பர் சாமியாடும் கருப்பையாவும் இல்லை...
அவர் அரிவாள் மீதேறி ஆடிய கதைகள் மட்டும்
இன்னும் வாழ்ந்துக்கிட்டு இருக்கு...

இப்படி... இப்படியாக...
இன்னும் நிறைய வாழ்க்கைக் கதைகள்
உலாவிக் கொண்டுதான் இருக்கின்றன...
தன்னை இழந்த கிராமங்களில்...!
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

தேர்தல் வருது தெய்வானை..!


தேர்தல் வருது...
தேர்தல் வருது...
சேதி தெரியுமா..?
தெய்வானை சேதி தெரியுமா...?

தேடி வருவாங்க...
தெய்வானை ஓடி வருவாங்க...
கூடி வருவாங்க
தெய்வானை நாடி வருவாங்க...

அம்மா தாயின்னு
கால்ல விழுவாங்க...
நம்மகூட களையும்
எடுப்பாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!

குடிசைக்குள்ளாற
வந்து குந்தி
கஞ்சி குடிப்பாங்க...
நம்மகூட கல்லும்
சுமப்பாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!

பக்கத்துல உக்காந்து
பாசத்தோடு
பேசுவாங்க...
நம்மகூட பல்லாங்குழியும்
ஆடுவாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!

ரோடு... தண்ணி...
தேடிவரும்பாங்க...
உன்னை தெய்வம்ன்னு
சொல்லுவாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!

இலவசம் தருவாங்க...
கைச் செலவுக்கு
காசும் கொடுப்பாங்க...
கௌரவம் பாக்காம
காலில் விழுவாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!

எம்.எல்.ஏ.வும் எம்.பியும்
சேர்ந்து வருவாங்க...
நிறைய சேதி
சொல்லுவாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!

கோரிக்கை எழுதி
கேட்பாங்க...
கொண்டு போய்
குப்பைத் தொட்டியில்
போடுவாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!

பல்லை இளிப்பாங்க
பசங்க குண்டியும்
கழுவுவாங்க...
பாலுக்கு அழும்
குழந்தையை தோளில்
சுமப்பாங்க - ஏமாறாதே
தெய்வானை ஏமாறாதே..!

பணத்துக்கும்
இலவசத்துக்கும்
மயங்கிக் கிடந்தது
போதும்  தெய்வானை
நாம் மதி கெட்டதும்
போதும் தெய்வானை..!

அடிமையாய் கிடந்து
போதும் தெய்வானை...
அடங்கிக் கிடந்ததும்
போதும் தெய்வானை...

பொய்யர்களை விரட்ட
பொதுவாய் சிந்திப்போம்
வாடி தெய்வானை...
வேலு நாச்சியாராய்
வீறு கொண்டு
விரட்டியடிப்போம்
வாடி தெய்வானை....
'பரிவை' சே.குமார்

திங்கள், 8 பிப்ரவரி, 2016

என்னைப் பறிச்சவளே..!

எதைச் சொல்வேன்...
எப்படிச் சொல்வேன்...
அப்படியே மனசுக்குள்
அடுக்கி வைக்கும்
எண்ணம் ஏதுமில்லை..!
எப்படியும் என் வழியே
வழிந்தோடும் உன் சாரல்..!

நீரெடுக்க நீ வருவேன்னு
காத்திருந்தேன் கரையோரம்...
குனிஞ்சு நீரெடுத்தே...
என்னையும் சேர்த்தெடுத்தே..!

வைக்கோல் படப்போரம்
வைதேகி நீயும் நிற்க...
அஞ்சாறு முறை நானும்
கடந்து போனேனே..!

வழியை மறிச்சு நீ
வாகாய் நிற்கையிலே...
கன்னத்தில் நான் பேசி
கடந்து சென்றேனே..!
முத்த எச்சில் துடைக்காமல்...
கடுங்கோபம் கொள்ளாமல்...
பதிலேதும் பேசாமல்
பார்த்துக்கிட்டு நின்னாயே..!

கருப்பர் கோயிலுக்கு
விளக்குப் போட வருவாயென
விழியில் திரிபோட்டு
வீதியிலே காத்திருந்தேன்..!

காத்திருந்த என்னை நீ
கடந்துதான் போகையிலே
கால் கொலுசு சேதி சொல்லி
முன்னே நான் வந்தேனே..!

உயிர் வந்த சந்தோஷம்
உன் முகத்தில் தீபமேற்ற...
உறவுப் பயத்தால
விலகித்தான் ஓடினாயே..!

திரி நீ போட
எண்ணெய் நானூற்ற
வெட்கி எரிந்த தீபம்
உன் உதட்டுச் சிவப்பாட்டம்
ஓளியைத்தான் பரப்புதடி..!


மாமன் மகளேன்னு
மல்லுக்கு நிக்கலையே...
மனசைக் கொடுத்துட்டு
மறுதலிச்சும் போகலையே...

போகும் இடமெல்லாம்
புள்ள நீயும் வந்துபுட்டே...
காணும் இடமெல்லாம்
கள்ளி நீ சிரிக்கிறேடி...

ஆடிபோன பின்னே
ஆவணியும் வரும்போது
தாவணித் துணி மாற்றி
சேலைக்குள் சிரித்தபடி
தாலி நீ வாங்கும்
நன்நாளை நினைக்கையிலே....

வேப்பம்பூ விரிச்சதுபோல்
மனசு சொக்குதடி..!
இலுப்பை பூவாட்டம்
இதயம் பொங்குதடி..!

அருகம்புல் வேராட்டம்
ஆசை அரும்புதடி...
புளியம்பூ பூத்ததுபோல
புன்னகையும் அரும்புதடி...

அல்லிக் கொடியழகி...
ஆவாரம் பூவழகி...
கன்னக் குழியழகி...
கருவண்டு விழியழகி...
என்னைப் பறிச்சவளே...
இளங்காற்றாய் சிரிச்சவளே...

உன்னைக் கரம்பிடிக்கும்
நாளை எண்ணி
வண்ணக் கனவோட
நானுறங்கிப் போனேனே...!

(படம் இணையத்தில் சுட்டது -  அழகாய் படம் வரைந்த ஓவியருக்கு நன்றி)

(மனசுல இது 100வது கவிதை... எனக்கே ஆச்சர்யமா இருக்கு...)
-'பரிவை' சே.குமார்.

புதன், 27 ஜனவரி, 2016

நேத்துப் பூத்தவளே..!


கொக்குப் பறக்கும்
குளக்கரையில் நானிருக்கேன்
குறுக்குச் சிறுத்தவளே
பறந்தோடி நீயும் வாடி..!

மீன்கள் விளையாடும்
ஊரணியில் நானிருக்கேன்
தூண்டில் விழியாளே
துள்ளிக்குதித்து நீயும் வாடி..!

மயில்கள் நடனமிடும்
மாந்தோப்பில் நானிருக்கேன்
கார் கூந்தலாளே
குதித்தோடி நீயும் வாடி..!

குயில்கள் கூத்தாடும்
வேம்போரம் நானிருக்கேன்
கொஞ்சும் குரலாளே
பட்டெனவே நீயும் வாடி..!

தும்பி பறக்கும்
துளசியோரம் நானிருக்கேன்
துரத்தும் அழகாளே
துரிதமாய் நீயும் வாடி..!

கிளிகள் கீதம் இசைக்கும்
பனங்காட்டில் நானிருக்கேன்...
கோவைப்பழச் சிவப்பழகி
கோவிக்காம நீயும் வாடி..!

மாடுகள் மேயும்
திடலில் நானிருக்கேன்...
பாதக் கொலுசழகி
பதறாம நீயும் வாடி..!

வாடி... வாடியின்னு
வழி பார்த்து வாடிப்போனேன்...

காத்திருந்து... காத்திருந்து
கண் பூத்துப் போனதடி...

நேத்துப் பூத்தவளே...
நித்தம் என்னைச் சாச்சவளே...
பாத்து நாளாச்சு...
பாக்க மனம் ஏங்குதடி...

ஏக்கப் பெருமூச்சு
என்னை எரிக்கும் முன்னே...
வாசக் கறிவேப்பிலையே
வந்து என்னை காத்திடடி....
-'பரிவை' சே.குமார்.

புதன், 25 நவம்பர், 2015

அடித்துப் பெய்...!

டித்துப் பெய்ய
ஆரம்பிக்கிறது மழை...
நனைந்து கொண்டே
நடக்கிறேன்...

விண்ணில் இருந்து
விழும் துளிகளெல்லாம்
என்னில் புதைந்திருக்கும்
காதல் நினைவுகளைப்
பூக்க வைக்கின்றன...

எனக்கோ மழை
மண்ணில் விழுமுன்
என்மேல் விழப்பிடிக்கும்
உனக்கோ மண்மீது
விழும் மழைத்துளி
உன் மீது விழப்பிடிக்காது...

பலமுறை
மழையே நம்
ஊடலின் காரணியாய்
இருந்திருக்கிறது..
சிலமுறை அதுவே
கூடலின் காரணியாகவும்...

என்னைப் போல்
பலர் நனைகிறார்கள்...
உன்னைப் போல்
சிலர் ஒதுங்குகிறார்கள்...

நனையாதேவென
எனக்குள் நீ
கத்திக் கொண்டே
இருக்கிறாய்...

நான் மனிதர்களை
மழையோடு  கடக்கிறேன்...
மழை என்னை
மனிதர்களோடு  கடக்கிறது...

மழையில் பூத்த
நினைவுச் சாரலோடு
சிரித்துக் கொண்டே
நனைகிறேன்...
ரசித்துக் கொண்டே
நடக்கிறேன்...

சில்லென்ற மழைநீர்
முகத்தில் பட்டு
தெறிக்கும் போது
நம்மின் காதல் காலச்
சந்தோஷங்களும்
சேர்ந்தே தெறிக்கின்றன...

நின்று நனைய ஆசை
நிறைய இருக்கிறது...
நீ விரும்பமாட்டாய்
என்பதால்...
நனைந்தபடி விரைகிறேன்
ஓட்டமும் நடையுமாய்...

எப்படியும் நனைந்து
வருவானென எனக்காய்
செல்லக் கோபத்தோடும்...
துப்பட்டாவோடும்
நனைந்தும் நனையாமலும்
வாசலில் காத்திருப்பாள்
என் காதல் மனைவி...
நினைப்பின் சிலிர்ப்போடு
மழையைக் கடக்கிறேன்...
-'பரிவை' சே.குமார்.

சனி, 21 நவம்பர், 2015

இறந்தவன் மீண்டும் இறந்தேன்...


சுற்றிலும் உறவுகள்...
கதறியழும் மனைவி...
காலருகே மகள்கள்...
தலையருகே மருமகள்கள்...
சோகமாய் மகன்கள்...
துக்கத்தோடு மருமகன்கள்...

பச்சை கொண்டு
பரபரப்பாய்
திரியும் சம்பந்திகள்...
நட்பும்... சுற்றமும்...
நாலா பக்கமும்...

சாரயம் கொடுத்த
ஊக்கத்தில்
துள்ளி அடிக்கும்
தப்பாட்டக்காரர்கள்...

வெட்டி வந்த 
கம்பில் பாடை
கட்டும் சோனையன்...

சுடுகாட்டில்
குழி வெட்டப்
போனவர்களோடு
கூடப் போன
நாகப்பன்...

எட்டி நின்று
எல்லா பார்க்கிறேன்...
அவர்களின் வலி
கஷ்டப்படுத்தியது...

பாடி எப்ப எடுக்கிறது
கேள்விக்கான பதிலாய்..

ராத்திரி ஆனது...
வாசம் வந்திரும்...
பாடியை சீக்கிரம்
எடுத்திடலாம்...
பெரியவன் 
சொன்னபோது...

நீர்மாலைக்கு 
ஏற்பாடு பண்ணச்
சொல்லுங்கப்பா...
யாரோ சொல்ல...

நேற்று வரை
அப்பாவாய் 
இதோ இப்போது
பாடி ஆகிவிட்டேன்... 

ஆம்...
இறந்த பின்
சொந்தங்களைத் தேடிய
என் ஆன்மா
வலியோடு இறந்தது....
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 2 நவம்பர், 2015

சந்தோஷமாய் இரு



நீ
நான்
கல்லூரி...

மறக்க இயலாத
இளமையான
இனிமையான
நாட்கள் அவை...

சரளை ரோடு
ஒற்றை வேம்பு...
மைதானத்து
மரங்கள்...

இன்னும்
கண்ணுக்குள்
நாம் அமர்ந்து
பேசிய
சிமெண்ட் பெஞ்சு...

என் வகுப்பறை
நீ கடந்தாலோ
உன் வகுப்பறை
நான் கடந்தாலோ
நம் பெயரை
உச்சரிக்கும்
நட்புக்குள்...

அதற்காகவே
காத்திருந்தது போல
மெல்லத் திரும்பி
நீ வைக்கும்
புன்னகை
தினமும்
பூப்பதுண்டு...

நாம் கொடுத்துக்
கொண்ட
நம் பிறந்தநாள்
பரிசுகள்
எல்லாம்
இன்னும்
பத்திரமாய்
என்னிடம்...

உன்னிடமும்
இருக்குமென
நினைக்கிறேன்...

நீ அழைக்கும்
அந்த செல்லப் பெயர்
இன்னும் ஒட்டிக்
கொண்டிருக்கிறது
உள்ளத்தில்...

உன் வீட்டில்
அழைக்கும் பெயரை
யார் அழைத்தாலும்
எதிர்க்காத நீ
ஏனோ என்னை
மட்டும் அதை
அழைக்க
விடுவதில்லை...

உன்னைச் சுருக்கி
அழைத்தால்
மிகவும் சந்தோஷிப்பாய்...

என்னுள்
தென்றலாய்...
சாரலாய்...
இயக்கமாய்
இருந்தவளே...

இன்றும்
எனக்குள்ளே
இருப்பவளே...
உன் புன்னகை
இன்னும் பூத்துக்
கொண்டிருக்குமென
நினைக்கிறேன்...

எங்கிருந்தாலும்
சந்தோஷமாய் இரு...
வாழ்க்கை உனக்கு
வானவில்லாய் இருக்கட்டும்...
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 12 அக்டோபர், 2015

முகநூலிலாவது முகம் காட்டுவாயா..?

பதிவர் விழாவை மிகச் சிறப்பாக நடாத்திக் காட்டிய எங்கள் ஐயா. திரு. முத்துநிலவன், அன்பு அண்ணன் திரு. தனபாலன்,  நம் புதுகை சகோதர, சகோதரிகள் மற்றும் வலையுலக நட்புக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்...

-------------------------------------


ங்கே இருக்கிறாய்...?
எப்படி இருக்கிறாய்..?
எதுவும் தெரியவில்லை...

காதலித்தோம்
கனவு கண்டோம்...
வாழ்க்கை நிர்ப்பந்தம்
நினைவுகளைச் சுமந்து
பிரிந்து சென்றோம்...

வாழ்க்கை உன்னை
மறக்கச் செய்தது
என்றால் அது பொய்...
உணர்வுகளை மட்டும்
மரிக்கச் செய்தது...

மரித்த உணர்வுக்குள்
எப்போதாவது சிலிர்த்து
மல்லுக்கட்டுவாய்...
ஏனோ சில தினங்களாய்
அடிக்கடி உணர்வில்
பூத்து இம்சிக்கிறாய்...

நீ... நான்...
நாமாக
நடந்த...
சிரித்த...
வாழ்ந்த...
கதை பேசிய...
கட்டி அணைத்த...
நினைவுகள் எல்லாம்
எழுந்து எழுந்து
இம்சிக்கிறது...

முகநூலில் அலசினேன்...
முகம் தெரியாதவர்கள்
எல்லாம் கிடைக்கிறார்கள்
உன்னைத் தவிர...

உன் பெயர்...
என் பெயர்...
நம் பெயர்...
பெயருக்குப்
பின்னே முன்னே
உன் தந்தை...
என எல்லாம்
கொடுத்துப் பார்த்தும்
கிடைக்கவில்லை
நீ எனக்கு...

ட்விட்டர்...
முகநூல்...
இன்னும் சில
நட்பு இணையத்திலும்
அலசிவிட்டேன்...
எதிலும் நீயில்லை...

உன்னைக் காண
வேண்டுமென...
உணர்வுகள் மீண்டும்
துளிர்க்குது..
உள்ளமோ ஏங்கித்
தவிக்குது...

எங்கு இருக்கிறாய்....?
எப்படி இருக்கிறாய்...?
எதுவும் தெரியாமல்
தினமும் தேடுகிறேன்
இணைய வெளியில்...

என் வாழ்வின்
முடிவுரை எழுதும் முன்
முகநூலிலாவது
முகம் காட்டுவாயா?
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 2 அக்டோபர், 2015

கவிதை : பண் பாடும் நம் பண்பாடு...

வகை-(4) புதுக்கவிதைப் போட்டி

முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த 

தலைப்பிற்கான கவிதை

------------------------------------------------

ண்பாடு... அது படும் பாடு...

பள்ளி செல்லும் வயதினிலே
மது வாங்கிக் குடிக்கின்றோம்...

படிக்க வரும் மாணவனோடு
கலவிப் படம் பயில்கின்றோம்...

தனியே காணும் பெண்களை
துகிலுரித்து மகிழ்கின்றோம்...

விளைந்த வயலைக் கூறுபோட்டு
விற்று சொத்துச் சேர்க்கின்றோம்...

சாதி மதம் போற்றிக் கொண்டு
சண்டையிட்டு மகிழ்கின்றோம்...

கவர்ச்சி உலகின் கனவோடு
கண்ட ஆடை அணிகின்றோம்...

ரத்தம் பார்க்கும் வெறியோடு
கத்தி எடுத்து அலைகின்றோம்...

நாலு சுவற்றுக்குள் செய்வதை
மேடையேற்றி மகிழ்கின்றோம்...

உறவுகளின் உன்னதமிழந்து
கணினியிலே கிடக்கின்றோம்...

நாயை விடக் கேவலமாய்
நடுத்தெருவில் நடக்கிறோம்...

நாமெல்லாம் பண்பாட்டை
பாடாய்படுத்தி மகிழ்கின்றோம்...

பண்பட்டு வாழ நினைத்தால்
பண் பாடும் நம் பண்பாடு...


**************

"இப்படைப்பு  எனது சொந்தப் படைப்பு, 'வலைப்பதிவர் திருவிழா-2015' மற்றும் 'தமிழ்இணையக் கல்விக்கழகம்' நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது,  இதற்கென எழுதப்பட்ட கவிதை இது, இதற்கு முன் வெளியான கவிதை அல்ல... முடிவு வெளிவரும் வரை வேறு எங்கும் பதியவோ இதழ்களுக்கு அனுப்பவோ மாட்டேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்..."

**************



பதிவர் விழாவுக்கு இன்னும் 8 நாட்களே இருக்கிறது... புதுக்கோட்டை குலுங்கட்டும்... வலைப்பதிவர் புகழ் உலகெங்கும் பரவட்டும்... தமிழகத்தில் இருக்கும் பதிவர்களெல்லாம் தவறாது கலந்து கொள்ளுங்கள்... எழுத்தின் ஆற்றல் எட்டுத் திக்கும் தமிழைக் கொண்டு செல்லட்டும்...



-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

பலாவின் சுவை..?


லையும் வாழ்க்கையில்
ஒதுங்கிய சுவரோரம்...
விரிந்த விரிசலும்
வரைந்த கோலங்களும்
காட்சிப் பொருளாய்...

வாழ்க்கை கோலம்
இதுவென்ற போதிலும்
வாழ்வின் வசந்தம்
இவளென கொஞ்சும்
ஏழைத் தாய்....

பழைய சேலையும்...
கலர் இழந்த தாலிக்கயிறும்...
பிளாஸ்டிக் வளையலும்...
செருப்பில்லாத காலுமாய்...
சிரிக்கும் முகத்தில்
வலிகளேயில்லாத சந்தோஷம்...

குட்டித் தேவதையின்
குடுமிக்குள் கூத்தாடும்
அதீத சந்தோஷத்தில்
எல்லாம் மறந்து
ஏகாந்தமாய் சிரிக்கிறாள்...

இவள் வாழத் தெரிந்தவள்...
வாழ்வின் வாசம் அறிந்தவள்...
கிடைக்காததை எண்ணி
கிடைத்த சந்தோஷத்தை
தொலைக்காதவள்...

தாய் என்னும் தெய்வம்
தன் தேவதையை
கொஞ்சுகிறாள்
முகமெல்லாம்
பௌர்ணமியாய்...

பூவின் சிரிப்பும்
பூரண அன்பும்
இனிக்கும் இடத்தில்
முன்னே கிடக்கும்
பலாவின் சுவை...?

(இதே படத்துக்கு முகநூலில் கவிஞர் பழனி பாரதி கவிதை எழுதியிருந்தார். அதைப் பார்த்த விளைவுதான் இது.... ஆனால் அவரின் கவிதை அளவுக்கு இருக்குமா தெரியவில்லை)
-'பரிவை' சே.குமார்.

சனி, 5 செப்டம்பர், 2015

கண்ணனின் காலடி...

இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்


ப்போதும் கையால்
கண்ணனின் பாதம்
வரையும் அம்மா...

தத்தி நடக்கும்
குட்டிக் கண்ணனின்
காலடியைப் பதியலாமென
அரிசி மாவில் அழகாய்
நனைத்து விட்டாள்....

மீண்டும் மீண்டும்
நனைக்கிறான்
நடக்கிறான்...

வீடெங்கும் கண்ணன்
வருவதும் போவதுமாய்
இருக்க...

நிறைந்து கிடக்கின்றன
கண்ணனின் காலடிச்
சுவடுகள்

கழுவி எடுப்பது
அம்மா வேலை
என்றாலும்
கண்ணனின்
காலடி அழகில்
சொக்கித்தான்
போகிறாள்...!


*************************
*************************

-'பரிவை' சே.குமார்.

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

முயற்சியின் முடிவில்...


து நடந்திருக்கக் கூடாதுதான்
ஆனால் நடந்துவிட்டது...

தொடரும் முயற்சிகள் எல்லாமே
தோல்வியின் பிடியில்...

அப்படியிருந்தும் துவளவில்லை
முயற்சிகளின் எண்ணிக்கை
கூடிக்கொண்டேதான் இருந்தது...

இருப்பினும் மனதில் மட்டும்
அது நடந்திருக்க கூடாதென்ற
எண்ணம் வட்டமிட்டுக் 
கொண்டுதானிருந்தது...

மீண்டும் மீண்டும் எகிறினாலும்
ஏனோ எட்டமுடியவில்லை...

மற்றவர்களின் கிண்டல்களை
மனதுக்குள் செல்ல விடவில்லை
முயற்சியின் வேகம்...

'முயன்றால் முடியும்...'  என்ற 
தாயின் கூவல் இன்னும்
உத்வேகத்தைக் கொடுத்தது...

முயற்சிகள் எல்லாம் 
முடிவில் பூஜ்ஜியமாய்...
விடாது தொடரும்
முயற்சிக்கு இறுதியில்
வெற்றி கிடைக்கலாம்...

எதிர்மறையாகும் போது
பரிதவிக்கும் தாயின் கரம் 
எளிதாக தூக்கியும் விடலாம்...

எது எப்படியோ...
வீழும் போதெல்லாம்
விரிக்கும் சிறகுகளில்
விண்ணைத் தொடும் வேகம்...

வெற்றியைச் சுவைக்கும்
வேகத்தில் சிறகை விரித்தது
தவறுதலாய் குழிக்குள் 
விழுந்த கோழிக்குஞ்சு..!
-'பரிவை' சே.குமார்

வெள்ளி, 31 ஜூலை, 2015

கலாம் உனக்கு சலாம்...

குழந்தைகளில்
உலகில் மகிழ்ந்த
இதயம் 
அமைதித் துயிலில்...

மதங்களைக் கடந்த
மனங்களை வென்ற நீ
மண்ணுக்குள்
புதைக்கப்பட்டாய்
என்கிறார்கள்...
இல்லை... இல்லை...
விதைக்கப்பட்டாய்...

அன்று
உன்னைத் தவழவிட்டு
சந்தோஷம் கொண்ட
தாய் பூமி...
இன்று
தன்னுள் தாங்கி
பெருமை தேடிக்கொண்டது...

நீ உறங்கும்
பேக்கரும்பு ...
ஆகலாம் இனி
புண்ணியபூமியாய்...

உன்னை
மனுஷ்ய புத்திரர்களுக்கு
பிடிக்காமல் இருக்கலாம்...
மனித புத்திரர்களுக்கு
ரொம்பப் பிடிக்கும்...

 மனுஷ்ய புத்திரர்களின்
தலைவன் அல்ல...
மக்களின் தலைவன் 
நீ என்பதை
சொல்லாமல் சொல்லியது...
வழியனுப்ப வந்த
மக்கள் வெள்ளம்...

வாழும் காலத்தில் 
ஓய்வெடுக்காதவனே...
இனியேனும் 
நிம்மதியாய் உறங்கு...

சாதி... மதம்...
அழிக்க - நீ
விதைக்கப்பட்ட
உன் பூமியில் இருந்து
கிளம்பட்டும்...
அக்னிச் சிறக்கொன்று...

விதையாய் நீ...
உன்னில் இருந்து
வீரியமாய் கிளம்பட்டும்
விருட்சங்கள்...!
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 28 ஜூலை, 2015

அக்னிச் சிறகு காற்றிலே...


தங்களைக் கடந்து மனிதம்
கண்டவன் மாமனிதன் நீ..!
மாணவர்கள் உலகத்தில்
மகிழ்ந்து கிடந்தவன் நீ..!
வல்லரசு ஆகும் நல்லரசு
காண ஆசைப்பட்டவன் நீ......
ஜனாதிபதிக்கான இலக்கணத்தை
மாற்றி எழுதியவன் நீ..!
குரான்... கீதை... பைபிளை
படித்து அறிந்தவன் நீ..!
அழகனில்லைதான் ஆனால்
அறிவு நிறைந்தவன் நீ..!
அக்னிச் சிறகாய் உலகை
வலம் வந்தவன் நீ..!
நீண்ட முடியும்
தவழும் புன்னகையுமாய்...
உனக்கு நிகர் நீயென வாழ்ந்து
கனவு காணச் சொல்லி
நனவாகும் முன்னே
ஏவுகணையாய் பறந்தவனே...
அக்னி சிறகொன்று
காற்றிலே கரைந்ததேயென
மனசு மறுதலித்தாலும்
நீ நிரந்தரமானவன்
உனக்கு மரணமில்லை...
-'பரிவை' சே.குமார்.

புதன், 22 ஜூலை, 2015

மருதாணி


பேத்தி வைத்த மருதாணியில்
சிவந்து சிரிக்கிறது 
நீ வைத்து விட்ட 
மருதாணி நினைவுகள்...

மருதாணி இலை பறித்து
கொட்டைப்பாக்கு தானெடுத்து
ஏழு வீட்டு கூரையும்
எதுத்த வீட்டு கோழிக் கழிவுமாய்...

எங்க வீடு ஓடிவந்து
அம்மியில நீ அரைக்க...
மருதாணி அரைக்கிறேன்னு
மனசை அரைச்சிப் போவியே...

வேண்டான்னு மறுத்தாலும்
விடாமல் வைத்துவிட்டு
மறக்காம மறுநாளு 
கைபிடித்துப் பாப்பியே...

மருதாணி சிவப்பான 
விரல்கள் வீணை மீட்ட
கண்ணுக்குள் காதல் காட்டி
கள்ளச் சிரிப்பு சிரிப்பாயே...

தீபாவளி, பொங்கல்ன்னு
எல்லாத்துக்கும் நீ அரைச்சே...
ரசிச்சு வச்சிக்கிட்டு
அழகி நீ அலையவிட்டே...

பேத்தி வச்ச மருதாணி
அழகா சிவந்திருக்கு...
எனக்கு மட்டும் உன் முகம் 
அதுல தெரியுதடி...

நீ பறிச்ச மருதாணிச்செடி
நின்ன இடம் தெரியலையே...
வச்சிவிட்ட கையழகு
மனசை விட்டுப் போகலையே...

வீட்டுலயே வளத்தாலும்
யாரு இப்ப வைக்கிறாக...
நம்மூரும்கூட இப்ப
மெஹந்திக்கு மாறிடிச்சு..

மருதாணி மறைஞ்சாலும்
மறையாம நீ இருக்கே...
அழுதுகிட்டு நீ போன
பாதை மறக்கலையே...

பாவி மனசு இப்போ
வாழத்தான் பழகிருச்சு...
கட்டையில போகும் வரை
கலையாது உன் நினைவு...


-'பரிவை' சே.குமார்.