மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

மார்கழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மார்கழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 12 ஜனவரி, 2016

மார்கழிக் கோலங்கள் - 3

கோலம் என்பது எல்லாராலும் பொறுமையாகப் போட்டுவிடமுடியாது. அழகாகக் கோலம் போடும் ஒருவரே அவசர கோலத்தில் புள்ளிகளை வைத்து கோலமாக்க முயற்சித்தால் அது தெற்கு வடக்காக நீண்டோ அல்லது குறுகியோதான் காணப்படும்.  அதனால் கோலம் போடும்போது மனதையும் உடலையும் ஒருமைப்படுத்தி போட்டால்தான் கோலம் சிறப்பாக அமையும்.

பெண் குழந்தைகளுக்கு இயற்கையாகவே கோலத்தின் மீது ஒருவித ஈர்ப்பு வந்துவிடும். அவர்களின் பள்ளி நோட்டில் கோலம் வரைந்து பார்ப்பார்கள். பெண் குழந்தைகளின் கையில் இருக்கும் நோட்டில் கோலம் வரையவில்லை என்றால் அது உலக அதிசயமே. எல்லாருடைய நோட்டிலும்  ஒரு நாலு புள்ளி வைத்தாவது கோலம் போட்டிருப்பார்கள். கல்லூரியில் எங்களுடன் படித்த பெண்களின் நோட்டுக்களில் எல்லாம் கோலங்களின் ஊர்வலமாகத்தான் இருக்கும்.

கோலம் போடுவதில் மும்மரமாகிவிட்டால் மார்கழி மாதம் பனியாவது மழையாவது எப்படியும் கோலம் போட்டு விடுவார்கள். அதற்கு கலரும் ரசனையாக கொடுத்துவிடுவார்கள். கலர் கொடுக்கும் போது அது திட்டுத்திட்டாக தெரியக்கூடாது என அழகாக நேர்த்தியாக கலர் கொடுப்பார்கள். 

பொங்கலுக்கு முதல்நாள் இரவு வீட்டுக்குள் கோலம் போடுவார்கள். அரிசிமாவை அரைத்து கொஞ்சம் தண்ணீர் கலந்து வைத்துக் கொண்டு ஒரு சிறு துணியை நனைத்து விரல்களுக்கு இடையே வைத்து லாவகமாக இழுத்துக் கோலமிடுவார்கள். அது கொஞ்ச நேரத்தில் காய்ந்து அழகாக தோற்றமளிக்கும். சிமெண்ட் வீடுகளில் விரைவில் காயாது. யாரவது தெரியாமல் மிதித்துவிட்டால் அவர்களின் காலடித் தடத்தோடுதான் காட்சியளிக்கும். அதே கோலத்தை சாணம் போட்டு மெழுகிய மண்தரை வீட்டிலோ அல்லது செம்மண் சுவற்றிலோ வரைந்தால் அச்சுப் பதித்தது போல மிக அழகாக காட்சியளிக்கும். அடுத்து மெழுகும்வரை நடந்து நடந்து வெள்ளைக் கலர் கொஞ்சம் கொஞ்சமாக அழுக்கு கலருக்கு மாறினாலும் அப்படியே இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் வீட்டுத் தரைகளை கிரானைட், மார்பிள், டைல்ஸ் என ஆக்கிரமித்துவிடுவதால் வீடுகளுக்குள் போடும் கோலம் அரிதாகிவிட்டது. 

எங்க வீட்டு வாசலை அலங்கரித்த இந்த வருசத்து மார்கழிக் கோலங்கள் கீழே.... இவை அனைத்துமே என்னோட இல்லத்தரசியின் கைவண்ணமே... எப்படியிருக்குன்னு பார்த்துச் சொல்லுங்க...








கோலங்களை ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 5 ஜனவரி, 2016

மார்கழிக் கோலங்கள் - 2

மார்கழி மாதம் என்றாலே எல்லாருடைய வீட்டு வாசலிலும் கலர்கலராய் பூக்கள் பூக்கும்... புறாக்கள் பறக்கும்... கிளிகள் கொஞ்சும்... மயில் ஆடும்... இப்படி அனைத்துமே கோலங்களாய்... அழகழகாய் ஜொலிக்கும்... ரோட்டில் போகும் போது எந்த வீட்டு கோலம் அழகா இருக்குன்னு பார்க்கத் தோணும்.. எல்லாருமே அவரவர் பாணியில் அழகாய்த்தான் போடுவார்கள். சிலது மிகவும் கவரும்... சிலது கவரும்... சிலது கலவரப்படுத்தும். இருந்தும் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல கோலம் போட்ட அனைவருக்கும் அவர்களின் கோலம் அழகாய்த்தான் தெரியும்.

புள்ளி வைத்து கோலம் போடுவதில் இப்ப இருக்கும் பெண்கள் கில்லாடிகள் என்றால் புள்ளி வைத்தோ வைக்காமலோ பின்னல் கோலங்கள் போடுவதில் அந்தக் காலப் பெண்கள் கில்லாடிகள்... எங்கம்மா பின்னல் கோலம் ஓரிடத்தில் ஆரம்பித்து எங்கெங்கோ சுற்றி மீண்டும் அதே இடத்தில் வந்து முடிப்பார். அதுவும் அழகாகத்தான் ஒருக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகச் சுற்றுவார். சிலவற்றை கழுகு போல் மாற்றுவார், சிலவற்றை பாம்பு ஆக்குவார்... சிலவற்றில் விளக்கு ஏற்றுவார்... இப்படி பின்னல் கோலங்களில் கூட தினுசாய்... புதுசாய் வரைவார்கள். 

புள்ளிகளிலும் நேர் புள்ளி, இடுக்குப் புள்ளி, ஒன்று விட்டு ஒன்று என பல விதமாக புள்ளி வைப்பார்கள். கையில் மாவெடுத்து இடுவதில் கூட ஒரு நேர்த்தி இருக்கும்... எல்லா இடத்திலும் கோடு ஒரே போல வரும். அதெல்லாம் ஒரு கலைதான். எத்தனை கோலப்புத்தகம் வந்தாலும் தங்கள் கைபட நோட்டில் வரைந்து வைத்திருக்கும் கோலங்களில் தினம் ஒன்றாய் தேடிப்பிடித்து போடுவதிலும் யாராவது புதிதாக ஒரு கோலம் போட்டிருந்தால் அதைப் பார்த்து புள்ளிகளை எண்ணி வைத்துக் கொண்டு வீட்டில் வந்து வரைந்து பார்ப்பதிலும் பெண்கள் கில்லாடிகள். இப்பல்லாம் மொபைலில் போட்டோ எடுத்துக் கொண்டு வந்து போட்டுப் பார்த்துக் கொள்கிறார்கள்.

இனி என் மனைவி எங்கள் வீட்டு வாசலில் போட்ட மார்கழிக் கோலங்கள் சில...








இந்தக் கட்டுரையை காலையில் பதிய எண்ணி எழுதியாச்சு... ஆனால் போன பதிவிலேயே சேனையில் பானு அக்கா அவர்கள் போட்டோவில் பெயரைப் போடுங்கள் என்று சொல்லியிருந்தார்.  படங்களில் பெயரிட்டு பதிய நேரம் எடுக்கும் என்பதாலும் அலுவலகம் செல்ல நேரமாகிவிட்டது என்பதாலும் மாலை வந்து பார்த்துக் கொள்ளலாம் என கிளம்பிவிட்டேன்.

ஜனவரி மாதம் எங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம்... ஆம் என் அன்பு மனைவிக்கும் எங்கள் அன்பு மகனுக்கும் பிறந்தநாள் (நானும் ஸ்ருதியும் மார்ச்சில்). இன்று (ஜனவரி - 5) என் மனைவி நித்யாவின் பிறந்தநாள்... இன்றைய பதிவு அவருக்கான... அவர் குறித்த பகிர்வாக இருக்க வேண்டும் என்பதால் மார்கழிக் கோலங்களை மீண்டும் பதிவாக்கியாச்சு.

ஒருவருடைய வாழ்க்கையில் நல்லவனாய் வளர்வதற்கும் நல்லவனாய் வாழ்வதற்கும் இரண்டு பெண்கள் முக்கியமானவர்கள்... எனக்கு கிடைத்த அந்த இருவராலுமே நான் இன்று இந்த நிலையில் இருக்கிறேன். முதலாமர் என்  அம்மா... எங்களை வளர்த்ததில் அப்பாவைவிட அம்மாவுக்கே அதிகப் பங்கு... மேலும் நாங்கள் நன்றாக படித்து பட்டம் பெற எங்க அம்மாபட்ட கஷ்டங்களை இங்கு எழுத்தில் எழுதிவிட  முடியாது.  மற்றொருவர் என் மனைவி... மதுரையில் பிறந்து வளர்த்து நகர வாழ்க்கையில்.. அதுவும் பரபரப்பான நகர வாழ்க்கையில் வாழ்ந்து பழகியவர், எங்களது திருமணத்துக்குப் பிறகு கிராமமும் நகரமும் கலந்த வாழ்க்கையில் வாழப்பழகி என்னோடு பயணித்து... என் வலிகள், கஷ்டங்கள், சந்தோஷங்கள் எல்லாவற்றிலும் தோளோடு தோள் நிற்பவர்.

எப்போதும் என்னைத் தட்டிக் கொடுத்து விட்டுக் கொடுத்து வாழப் பழகியவர்... கஷ்டப்பட்டாலும் நஷ்டப்பட்டாலும் எங்கள் வளர்ச்சிக்கு என்னைவிட அதிகம் சிரமப்பட்டவர்... எந்த வேலை என்றாலும் சலிக்காமல் பார்த்து முடிக்கக் கூடியவர்.. எங்களை இகழ்ந்தவர்கள் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று வாழ்ந்து காட்டுபவர்... முதுகுக்குப் பின்னே பேசினால் தெரியாது என்று முகத்துக்கு நேரே பேசுபவர்களின் வார்த்தைகளை எல்லாம் படிக்கட்டுக்களாக்கி எங்கள் பயணத்தை வெற்றிப்பாதை நோக்கி நகர்த்திக் கொண்டிருப்பவர்... எங்கள் வாழ்வின் வெற்றியில் என் பங்கைவிட அவரின் பங்கே அதிகம். என் துணை... எனக்கான துணை... இப்படி ஒரு அன்புத் துணையாக அமைந்ததில் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். எங்கள் வாழ்வின் சந்தோஷங்கள் என்றும் இப்படியே தொடர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.


என் அன்பு மனைவி... நித்யா குமார் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்...  என் அன்பு வாழ்த்துக்கள் நித்தி...

தங்கள் அன்பும் ஆசியும் வேண்டி...
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 29 டிசம்பர், 2015

மார்கழிக் கோலங்கள் - 1

மார்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மார்கழி மாதம் முழுவதும் வீட்டு வாசலில் விதவிதமான கோலங்கள் வரைந்து அதில் பொறுமையாய் பார்த்துப் பார்த்து கலர்க் கொடுத்து ரோட்டில் போவரை எல்லாம் ரசிக்க வைப்பதில் அலாதிப் பிரியம். 


நாங்கள் பள்ளியில் படிக்கும் காலத்தில் எங்க அக்காக்களெல்லாம் மார்கழி மாதம் வருவதற்கு முன்னரே கலர்பொடி பாக்கெட்டுக்களை வாங்கி வந்து அதில் மணல் கலந்து டப்பாக்களில் கொட்டி வைப்பார்கள். கிராமங்களில் எல்லா நாளும் கலர்  கொடுக்க மாட்டார்கள். மாதத்தில் சில நாட்கள் கொடுப்பார்கள். பொங்கலன்று கொடுப்பார்கள்... அவ்வளவே... விதவிதமாய் கோலங்கள் வரைந்து பத்திரப்படுத்தி வைத்த நோட்டுக்களை மார்கழி மாதம் மட்டுமே எடுப்பார்கள். முதல்நாள் இரவே நாளைக்கு என்ன கோலம் வரைவது என்பதை முடிவு செய்து,  எத்தனை புள்ளி எத்தனை வரிசை என்று பார்த்து ஒரு முறை போட்டுப் பார்த்துக் கொள்வார்கள். மறுநாள் வாசலைக் கூட்டி, அதில் சாணம் தெளித்து (இப்பல்லாம் தண்ணிதான்) அழகாய் புள்ளி வைத்து கோலமிட்டு கலர்க் கொடுத்து நிமிரும் போது அவர்களின் கைவண்ணம் அதில் அழகாய்த் தெரியும்.


அப்போதெல்லாம் கோலத்திற்கு கலர் கொடுக்கப் போவதுண்டு. எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் எங்க வீட்டில்தான் கோலம் போடுவார்கள். எனவே தினம் இரண்டு கோலம் போடுவதால் கோவிலில் போட்டுவிட்டு வீட்டிற்கு போடுவதற்குள் கோவிலில் நானும் தம்பியும் கலர் கொடுத்து விடுவோம். அப்புறம் நாங்க வீட்டு வாசலுக்கு வர, அக்காவோ அண்ணியோ கோவில் கோலத்தின் மேல மறுபடியும் கோலப்பொடியால் விளிம்பிவிட்டு வருவார்கள். ஒரு சில நேரங்களில் நாங்கள் கலர் கொடுக்க எழுந்திரிக்க மாட்டோம். படுத்துக்கிட்டு தூக்கம் வருதுன்னு பிகு பண்ணுவோம். அவர்கள் கெஞ்ச... நாங்க மிஞ்சிவிடுவோம்.

பெரும்பாலும் பொங்கலன்று பொங்கப்பானை போடுவதெல்லாம் நாங்களாகத்தான் இருக்கும். கரும்பு, மஞ்சள் கொத்து  அது இதுன்னு எல்லாம் நாங்களே வரைவோம். மாட்டுப் பொங்கலன்று தம்பி அழகாய் மாடு வரைந்து விடுவான். பின்னர் பொங்கல் வாழ்த்துக்கள் என்று அழகாய்(?) வேறு எழுதுவதுண்டு. 


இப்படிப் போன கோல நாட்களில் என் மனைவியின் வருகைக்குப் பின் எங்கள் வீட்டுக் கோலங்கள் இன்னும் உயிர்பெற்றன. இவர் தினமும் கோலம் போட்டு கலர் கொடுப்பதற்காகவே மூன்று மணிக்கெல்லாம் எழுந்து விடுவார். எங்க வீடு, தேவகோட்டை, சென்னை, காரைக்குடி என குடியிருந்த வீடுகள், தற்போது தேவகோட்டையில் இருக்கும் எங்க வீடு என எல்லா இடங்களிலும் இவரது கோலம் பிரபலம். காரைக்குடியில் இருந்து வீடு காலி பண்ணி வந்த அடுத்த வருடம் பக்கத்து வீட்டு ஆண்டி போன் பண்ணி நித்யா நீ இல்லாம நம்ம ஏரியாவுல மார்கழி மாதமாவே இல்லை என்று சொன்னார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

விதவிதமாய் கோலங்கள் வரைவதில் கில்லாடி... புள்ளி வைத்து... புள்ளி வைக்காமல் என அழகோவியமாய் கோலம் வரைந்து கலர் கொடுத்து வாசலுக்கு அழகை கொடுத்து விடுவார். அவருக்கு கோலம் போடுவதில் அலாதிப் பிரியம்... அதுவும் பாக்கெட் கலர்பொடி வாங்கமல் கலர்களை வாங்கி வந்து இவரே கலந்து டப்பாக்களில் நிரப்பி வைப்பார்... மார்கழி மாதம் முழுவதும் கலர் கோலம் மட்டுமே போடுவார்,.


அதிகாலையில் எழுந்து பனியில் கோலம் போடுவதற்கு என்னிடம் தினமும் திட்டு வாங்குவார். இப்பவும் ஊரெல்லாம் திருட்டு பயம் இருக்குன்னு எழுந்திரிக்காதே என்று இங்கிருந்து கூவினாலும் கேட்பதில்லை.... இந்த முறை விஷால் நான் சொல்வது போல்  உங்களுக்கு என்ன கிப்டா கொடுக்கப் போறாங்க, பீவர்தாம்மா வரும்ன்னு மழலையில் திட்ட, உங்க மகன் அப்படியே உங்களை மாதிரியே இருக்கான்... நான் கோலம் போடப்போனா நீங்க திட்டுற மாதிரி இப்ப இந்த ஆம்பளை திட்டுறாருன்னு சொல்லிச் சிரிச்சாங்க. இப்ப வீட்ல சின்னக்குமார் மிரட்டல் விட ஆரம்பிச்சிருக்கார்.


இடத்திற்கு ஏற்றார் போல் சுருக்கி விரித்து கோலம் போடுவதில் கில்லாடி... எங்க வீட்டில் என்ன கோலம் போட்டிருக்கிறார் என்று பக்கத்து வீட்டார் எல்லாம் வந்து பார்த்து ஒருநாள் போடவில்லை என்றாலும் என்னாச்சு என்று கேட்கும் அளவுக்கு காரைக்குடியிலும் சென்னையிலும் வைத்திருந்தார். தேவகோட்டையில் ஒதுக்குப்புறமாய் வீடு... இன்னும் அதிகம் வீடுகள் வரவில்லை... எதிரே இருக்கும் மூன்று வீட்டாரும் கோலமா... அப்படின்னா என்ன என்று கேட்கும் ரகம். இருந்தும் எங்க வீட்டில் கோலம் கலக்கிக் கொண்டுதான் இருக்கிறது,

என் மனைவி போடும் கோலங்களை இனி என் எழுத்தில் இந்த மாதம் முழுவதும் அப்ப அப்ப பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன் என்பதையும் இங்கு சொல்லிக் கொள்கிறேன். போன வருடம் முகநூலில் பகிர்ந்தேன்... இந்த முறை என் மனசில்...

 
இங்கு பகிரப்பட்டிருக்கும் கோலங்கள் அனைத்தும் இந்த மார்கழியில் எங்க வீட்டில் விளைந்தவையே.... இவற்றை விற்கும் எண்ணம் என்னிடம் இல்லை... அதற்கான உரிமையும் என்னிடம் இல்லை... அதெல்லாம் இதன் ஓனரிடமே... விரும்பினால் அவரிடம் கேட்டுக் கொடுக்கப்படும்... யாரும் சொல்லாமல் தூக்கிக் கொண்டு போக வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். என்ன பண்றது... அம்மணியோட கைவண்ணமுல்ல... அப்படித்தான்... கோபப்படாதீங்க.... அப்ப அடுத்த மார்கழிக் கோலங்கள்ல சந்திப்போம்.


-'பரிவை' சே.குமார்