மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

காதல் கடிதம் போட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் கடிதம் போட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 ஜூலை, 2013

கற்பனையாய் ஒரு காதல் கடிதம் (போட்டிக்காக)

சிவமயம்
முருகன் துணை
03/07/2013

'அன்பே...
ஆருயிரே...
அருமருந்தே...
அடிக்கரும்பே...
அழகே...
கண்ணே...
மணியே...
கற்கண்டே...
மானே...
தேனே...
நிலவே...' என்றெல்லாம் உன்னை வர்ணித்து எழுத எனக்கு எண்ணமுமில்லை.... தோன்றவுமில்லை...

'அடி ஆவாரங்காட்டுக்குள்ள ஆடோட்டும் புள்ள...'
அப்படின்னு உன்னை நினைத்து பாட்டோட ஆரம்பிக்க நீ அன்னக்கொடியும் இல்லை நான் கொடி வீரனும் இல்லை.

காதல் கடிதம் என்றாலே அதை ஆரம்பிக்கும் போது தேனாய் ஆரம்பித்து தித்திப்பாய் முடிக்க வேண்டுமாம். காதலிப்பவர்கள் சொல்கிறார்கள். எனக்கு அப்படியெல்லாம் ஆரம்பிக்கத் தோன்றவில்லை. எல்லாருக்கும் எழுதுவது போல் உன் பெயரைச் சொல்லி அன்புள்ள என்று ஆரம்பித்தால் பின்பு நலம் நலமறிய ஆவல்ன்னு உறவுக்குள் எழுதும் கடிதம் போலாகிவிடும் போல.

என்ன எழுதுவது... எப்படி எழுதுவது என யோசித்து யோசித்தே நாட்கள் கழிகின்றன கிழிகின்ற காகிதங்களோடு... என் காதலை ஏற்பாயா...? மறுப்பாயா...? எதுவும் தெரியாமல்தான் இத்தனை நாளாய் யோசித்த என் காதல் கடிதத்தை இப்போது எழுதப் போகிறேன்... பத்தாவது ரிசல்ட்டின் போது பரிதவித்த நெஞ்சம் போல் உன் பதிலுக்காய் காத்திருக்கப் போகிறேன் என்று நினைக்கும் போதே, ஞாயிறு காலை அம்மா கொடுக்கும் வேப்ப எண்ணையை நினைத்து வெள்ளிக்கிழமையே குடலைப் பிரட்டுவது போலத்தான் என் நிலை இருக்கிறது. என்ன செய்வது... என் காதலை உன்னிடம் கொண்டு சேர்க்க நண்பர்கள் கொடுத்த உபாயத்தில் எனக்கு பொருத்தமாய் தோன்றியது இதுதான்.

சரி கதை பேசாமல் காதலைப் பேசுவோம் வா...

என்னவளே... (தோன்றியதால் அழைக்கிறேன்... ஆவதும் ஆகாததும் உன் பதிலில்...)

எங்கே.. எப்போது... எப்படி... நீ என்னுள் நுழைந்தாய் என சன் செய்திகளுக்கு இடையே கேள்வி கேட்பது போல் எனக்குள் கேட்டு ஆற அமர அசைபோடும் மாடாய் கடந்த நாட்களின்  நினைவுகளை அசைபோட்டு திரும்பிப் பார்க்கிறேன்...

அது ஒரு பொங்கல் நாள்... ஊரே கோவில் வாசலில் பொங்கல் வைக்கிறது... எங்க அம்மாவுக்கு அருகில் பொங்கல் வைக்கும் உங்கம்மாவுக்கு உதவியாய் நீ... அப்போதுதான் பார்க்கிறேன்... புதுப் பாவாடை சட்டையில் கிராமத்து தேவதையாய் நீ... எப்போதும் பார்த்த நீ இப்போது புத்தரிசிப் பொங்கலாய்... உன்னை நெருக்கமாய் பார்க்கவே அம்மா அருகில் நிற்கும் அக்காவிடம் என்ன வேணுக்கா என நெருங்கி வருகிறேன்... நீயும் துருவி வைத்த தேங்காய்ப் பூவாய் சிரித்து வைக்கிறாய்... பொங்கும் பாலாய் எனக்குள் இறுக்கமாய் அமர்ந்து கொள்கிறாய்.

எப்படி இந்த மாற்றம்... என் யோசனையில் தீப்பிடிக்கவே இல்லை... எனக்குள் பட்டாம்பூச்சிகளும் பறக்கவில்லை... வெள்ளை தேவதைகள் என்னைச் சுற்றிவரவில்லை. ஏனோ உன்னை உட்கொள்ள கண்கள் தவித்தன... அடிக்கொரு முறை பாலுமகேந்திராவின் கேமராவாய் உன்னை உள்வாங்கிக் கொண்டன... உன் வனப்பு என்னை ஈர்த்ததா என்றால் நிச்சயமாக இல்லை... உன் நினைப்பு மட்டுமே என்னை ஆட்கொண்டது.

அதன் பின் வந்த நாட்களில் நீ பள்ளி செல்லும் போதெல்லாம் கண்மாய் கரையில் காத்துக்கிடந்தேன்... என்னுடன் என் சைக்கிளும் சேர்ந்தே கிடந்தது. என்னைப் போலவே உன்னைச் சுற்றிய சிலர் என்னை எதிரியைப் போல் கூட பார்த்தார்கள்... பூ என்றால் வண்டுகள் சுத்தத்தானே செய்யும்... அதுவும் காட்டுமல்லியாக இருந்தால் பரவாயில்லை முல்லைப்பூ யாருக்கு என்பதில் வண்டுகளுக்குள் சண்டை வரத்தானே செய்யும். எதிரிகளை பற்றி யோசிக்க இது நேரமா என்ன என உன்னைக் கவர்வதில் கண்ணாய் இருந்தேன்... நீ எப்பவும் போல் பேசினாய்.. சிரித்தாய்... என்னிடம் மட்டுமல்ல எல்லாரிடமும்தான்... ஆனால் என்னால்தான் எப்பவும் போல் இருக்க முடியவில்லை.

உனக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒரு மழை நாள்... அடித்துப் பெய்த மழை அவசரமாய் ஓய்ந்தது. நாம் மாடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்துச் சென்றோம். சுரேஷ், பாலா, சுதா, சுந்தரி, நான், நீ எல்லாரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். நீ கொறிப்பதற்கு பட்டாணி கொண்டு வந்திருந்தாய்... கூடவே வெல்லகட்டியும்... எல்லாருக்கும் அள்ளிக் கொடுத்த நீ என்னை மட்டும் எடுத்துக்க என்றாய். அவனுக்கு மட்டும் என்ன சலுகை ஆதங்க ஆத்திரத்துடன் சுரேஷ் கேட்க,  அவனை எடுத்துக்கச் சொன்னா நீ ஏன் ஆத்திரப்படுறே... உனக்கென்ன வந்தது... நான் யாரை வேணுமின்னாலும் எடுத்துக்கச் சொல்லுவேன்? என்றாய் படக்கென்று... சுரேஷ் வாயடைக்க... நீ  என்னை பார்த்துப் புன்முறுவல் பூத்தாய்.

அந்தப் புன்னகைக்கு என்ன அர்த்தம்...? யோசித்தபடி பார்க்கிறேன் களங்கமில்ல உன் முகத்தில் அர்த்தம் தேடி என்னால் ஆராயமுடியவில்லை. நீயோ எப்பவும் போல யாருக்கு வெல்லக்கட்டி வேணுமின்னு கேட்டபடி உனது தாவணி ஒரத்தில் வெல்லத்தைக் வைத்துக் கடித்துக் கொடுத்தாய்... நீ வேண்டும் என்று செய்தாயா... இல்லை உண்மையில் மறந்தாயா என்று தெரியவில்லை எனக்கு மட்டும் தாவணி விடுத்து பற்களால்கடித்துக் கொடுத்தாய். உன் உதடுகள் தீண்டிய எச்சில் எனக்கு இனித்தது.

சோர்ந்திருந்த மழை மீண்டும் சோவென ஆரம்பிக்க, குடைக்குள் அடைக்கலமானோம் நாம்... பிளாஸ்டிக் கவர் வைத்திருந்த சுந்தரியை அருகே அழைத்த நீ உன் குடைக்குள் இடம் கொடுத்திருக்கலாம் ஆனால் அவளிட்ம் உன் குடையையே கொடுத்தாய்... அடுத்து நீ செய்ததுதான் ஆச்சரயம்... சனி மூலையில் வெட்டும் மின்னலாய் யாரும் எதிர்பாராமல் என் குடைக்குள் நுழைந்து கொண்டாய்... மற்றவர்கள் கேட்கும் முன்னரே அவளோட கவர் சரியில்ல பாவம் நனையுறா... அதான் எங்கொடையை கொடுத்தேன்... நீதானே பெரிய குடை வச்சிருக்கே... அதான் இதுக்குள்ள வந்துட்டேன் என்றாய். நீ என்ன நினைத்து வந்தாயோ எனக்குத் தெரியாது... ஆனால் அன்று மட்டுமல்ல அதன் பிறகான மழை நாளில் கூட எனக்கு குடைக்குள் மழை பெய்தது.

தினசரி செய்கையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக என்னுள்ளே நீ விதையாய் வீழ்ந்து விருட்சமாய் வளர்ந்து நின்றாய்...

ஒரு அந்தி நேரம், நான் மாடுகளை கொள்ளையில் விட்டு விட்டு ரோட்டோரம் அமர்ந்து நியூட்டனின் விதியை விடாமல் படித்திக் கொண்டிருந்தேன். டியூசன் முடித்து சைக்கிளில் வந்த நீ, என்ன பயங்கர படிப்பா இருக்கு? என்றபடி காலூன்றி கேட்டாயே ஞாபகம் இருக்கா? அன்று உன் பார்வையில் என்றுமில்லாத வித்தியாசம் உணர்ந்தேன். நாளைக்கு பரிட்சை இருக்கு அதான் என்றதும் அப்ப இன்னைக்கு அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வரமாட்டியா? என்று நீ கேட்டுச் சென்றததில் உன் ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது. என்ன செய்வது எனக்குப் பரிட்சை என்றால் என் அம்மாவுக்கு பசிக்காது. எங்கும் விடமாட்டார்கள். படிக்க முடியாமல் பரிதவித்த எனக்கு  நீ கோவிலுக்கு வரவில்லை என வந்தும் வராததுமாய் அக்கா சொன்னதும் நியூட்டனின் விதி அழகாய் விளங்கியது. அதன்பின்னான சந்திப்பில் ஏன் போகவில்லை என நானும் கேட்கவில்லை... நீயும் சொல்லவில்ல...

கல்லூரி செல்ல குளிப்பதற்காக புதுக்கண்மாய்க்குச் சென்ற போது நீயும் சுந்தரியும் நீந்திக் கொண்டிருக்கிறீர்கள். என்ன கரெக்டா வந்திருக்கே... முன்னாடியே அழைப்பு வந்திருச்சோ என்ற சுந்தரியை நீ அதட்டுகிறாய்... என்னை ஓரக்கண்ணால் பார்த்து புன்னகைக்கிறாய். உன் குளிர்விக்கும் புன்னகையால் குளிர்ந்த நீருக்குள் பனிக்கட்டியாய் நான் பயணிக்கிறேன்... கரையேறிய போதும் கரையேறாமல் சுந்தரியின் கேள்வியும்... உன் புன்னகையும்... அதன் பிறகு தினமும் புதுக்கண்மாய் உன்னையும் என்னையும் குளிப்பாட்டியது... சுந்தரி அந்நியப்பட்டுப் போனாள்.

விளங்கியும் விளங்காத அல்ஜீப்ரா போல தொடரும் பொழுதுகளில் அக்காவை பார்க்கும் சாக்கில் அடிக்கடி என் வீடு வருகிறாய்... உரிமையோடு என் புத்தகங்களை மேய்கிறாய். என்னைப் பற்றி அக்காவிடம் பேசுகிறாய்... பேசுவது அக்காவுடன் என்றாலும் அடிக்கடி செருமுகிறாய்... என் திரும்பலில் அடங்குகிறது உன் செருமல்... என்னை உன் கண்களால் கைது செய்கிறாய்... உன் காந்த விழிகளின் ஜாலத்தால் எனக்குள் ஈர்ப்பு... சிலிர்ப்பு... தவிப்பு... துடிப்பு... மகிழ்ச்சி...  என எல்லாம் மழை நேரத்து வானவில்லாய் ஜாலமிட்டது இப்போதும் சில்லிப்பாய் என் நினைவுக்குள்...

இப்படியே போனால் எப்படி..? ஒருவருக்கு  ஒருவர் சொல்லிக் கொள்ளாமல் என்ன காதல்டா இது...? டேய் இது சினிமா இல்லையடா வாழ்க்கை மனதில் உள்ளதை சொல்லிவிடு என்ற நண்பர்களின் தூபத்துக்கு ரொம்ப நாளாய் யோசித்து எடுத்த முடிவுதான் இந்தக் கடிதம்...

எனக்கு ரத்தினச் சுருக்கமாக எழுத வரவில்லை... நான் காதலிக்கிறேன்... நீயும் காதலிக்கனுமின்னு மிரட்டத் தெரியவில்லை... என்னைக் காதலிக்கிறாயா? என்று படக்கென்று கேட்க தைரியம் இல்லை... எனக்குள் இருக்கும் காதலை எப்படிச் சொல்வது என்றும் தெரியவில்லை... வெள்ளைக் காகிதத்தில் விளங்கும்படி எழுதியிருக்கிறேன்.

நீ அறியாமலோ அறிந்தோ உன் காதலை என்னுள் விதைத்துச் சென்றாய்... அது மலர்ந்து மணம் வீசுவதோ... இல்லை மடிந்து போவதோ... உன் பதிலில்தான் இருக்கிறது. எப்படியிருந்தாலும் முதல் காதல் மூச்சிருக்கும் வரை மூழ்காதிருக்குமாம்... எத்தனை உறவுகள் வந்தாலும் உன்னை என்னுள் சுமந்துதான் என் மீது மண் சுமப்பேன் என்பதே சந்தோஷம்தானே...

'ஆயிரம் முத்தங்களுடன் அத்தான்' என்றோ... 'உனக்காகவே காத்திருக்கிறது என் உயிர்' என்றோ... வசனம் பேச எனக்குப் பிடிக்கவில்லை...  வரலாற்றுக் காதல்கள் வரலாறாய் இருக்கட்டும்... நம் காதல் வரலாறை எழுதட்டும்...

காத்திருக்கிறேன்.... காதலிப்பாய் என்ற நம்பிக்கையுடன்...

காதல் வாழட்டும்... அதில் நாமும் வாழ்வோம். 
காதலுடன்
உன்னவன் (நீ நினைத்தால்...)

நண்பர் சீனு அவர்களின் 'திடங்கொண்டு போராடு' வலைப்பூவில் அறிவித்திருந்த  'காதல் கடிதம்' பரிசுப் போட்டிக்காக எழுதியது இது . போட்டி குறிதத் விவரம் அறிய கீழே இருக்கும் இணைப்பைச் சுட்டுங்கள்....


-'பரிவை' சே.குமார்