மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 2 ஜனவரி, 2016

நோட்டீஸ் முதல் பேனர் கலாச்சாரம் வரை


ர்ல இப்பல்லாம் பேனர் கலாச்சாரம் பட்டிதொட்டியெல்லாம் பரவிக்கிடக்கிறது. கல்யாணம்ன்னாலும் பேனர்... கருமாதியின்னாலும் பேனர்... இந்தக் கலாச்சாரம் வர்றதுக்கு முன்னால நோட்டீஸ் அடிச்சித்தான் ஒட்டிக்கிட்டு இருந்தானுங்க... எல்லாச் சுவரிலும் ஒட்டி வச்சிட்டுப் போயிடுவானுங்க... அதுவும் நோட்டீஸ் ஒட்டாதீர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போட்டிருந்தால் அதன் மீதுதான் ஒட்டுவார்கள். இப்ப நோட்டீஸ் குறைந்து சுவர்கள் எல்லாம் தப்பித்துவிட்டன ஆனால் நடைபாதைகள் எல்லாம் பேனரால் நாறிக்கிடக்கின்றன.

எங்க ஊர் திருவிழாவின் போது நாடகமோ, கரகாட்டமோ வைப்போம்... அதற்காக இளைஞர் மன்றத்தின் சார்பாக நோட்டீஸ் அடித்து, மைதா வாங்கி காய்ச்சி பசை தயாரித்து இரவில் சைக்கிளில் கிளம்பி விடுவோம்... தேவகோட்டை பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து கருதாவூரணிப் பக்கமாய்ப் போய், கண்டதேவி ரோட்டில் பயணித்து கண்டதேவி வரைக்கும் போய் மீண்டும் அங்கிருந்து ஒத்தக்கடை (பந்தடி திடல்) வந்து தாழையூர் ரோட்டில் திரும்பி கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் கோவில் வரை சென்று வீட்டுக்குத் திரும்பும் போது நடுநிசி ஆகியிருக்கும். ஆனா இப்பல்லாம் எங்க ஊரையும் பேனர் பிடித்துக் கொண்டு விட்டது. திருவிழா குறித்து விளக்கமாய் எழுதி அம்மன் படம் போட்டு பேனர் வைத்து விடுகிறோம்.

இந்த நோட்டீஸ் கதையில இன்னொரு முக்கியமான கதையும் இருக்கு... நாங்க தேவகோட்டையில் கணிப்பொறி மையம் வைத்திருந்தபோது முதலாம் ஆண்டு விழாவுக்காக நோட்டீஸ் அடித்து ஆள் விட்டு ஒட்டலாம் என்று முடிவு செய்தபோது எங்களில் சிலர் நாமளே ஒட்டிக்கலாம் என்று சொல்லிவிட்டதால் இரவு நாலு குழுவாகப் பிரிந்து நோட்டீஸ் ஒட்டச் சென்றோம். ஓரளவு ஒட்டி முடித்தபோது போலீஸ்காரர்களிடம் நாலு டீமும் மாட்டிக் கொண்டோம். அப்போது தேவகோட்டையில் ஒரு கொலை தொடர்பாக இரவு 11 மணிக்கு மேல் கடைகள் இருக்ககூடாது. ஆட்கள் வெளியில் நடமாடினால் கேள்வி கேட்பார்கள். பின்னர் அவர்களிடம் பேச, நோட்டீஸ் எல்லாத்தையும் கொண்டு போய் ஆபீசில் வைத்திருக்கிறோம். அதிகாலையில் வந்து வாங்கி ஒட்டுங்க என்று சொல்லி விட்டார் இன்ஸ்பெக்டர். பேசியும் சரிவரவில்லை... சரியின்னு அவங்ககிட்ட கொடுத்துட்டு வந்துட்டோம். மறுநாள் காலையில 4 மணிக்கு போயி நின்னா 5 மணிக்கு மேலதான் கிடைச்சது. கொஞ்ச இடத்தில் ஒட்டிவிட்டு வந்தோம். அதன் பிறகு எந்த விழா என்றாலும் நோட்டீசை பணம் கொடுத்து ஒட்டச் சொல்லிவிடுவோம்.

'கட் அவுட் நிழலுக்கு கீழே' அப்படின்னு ஒரு கவிதை(?) ஒன்றை இன்றைய அம்மாவின் கட்-அவுட் கலாச்சாரம் பார்த்து வேதனையில் வெம்பி கிறுக்கி வைத்திருந்தேன். அதைப் படித்துப் பார்த்த என் நண்பன் நல்லாயிருக்குடா ஐயாக்கிட்ட காட்டினியா என்றான். இல்லை... இதைப் போயி அவருக்கிட்ட காட்டினா என்ன தம்பி இது கவிதையா...? என்று சிரிப்பார் என்றதும் ஏய் அவர் அப்படியெல்லாம் சொல்லமாட்டார். அதுவும் நீ அவருக்குச் செல்லப்பிள்ளை என்று ஏத்திவிட்டு அவனே ஐயாவிடம் குமார் கவிதை எழுதி வைத்திருக்கிறான் என்று சொல்லிவிட, எங்கே கொடுங்கள் பார்ப்போம் என்று சொல்லி வாங்கி வாசித்தவர் 'ம்... நல்லாயிருக்கு... அரசியல் பக்கம் போகுது எழுத்து' என்றபடி தனது எழுத்து மேசையில் வைத்துவிட்டார்.  அதன் பின் சில நாள் கழித்து என்னை கல்லூரியில் பார்த்து தம்பி உங்க கவிதை தாமரையில் வந்திருக்கு என்றார். அப்போது தாமரையில் பொன்னீலன் அண்ணாச்சி இருந்தார். ஒரு கல்லூரி மாணவன் எழுதிய கவிதை என்று போட்டு ரெண்டு பக்கத்தில் போட்டிருந்தார்கள். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு... அதான் என்னோட எழுத்து முதல் முதலில் அச்சுப் பிரதியில் வந்தது. அது குறித்து அண்ணாச்சியும் எனக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியிருந்தார். தேவகோட்டை கலை இலக்கியப் பெருமன்றத்திற்கு வருவார் என்பதால் எங்கள் பழக்கம் தொடர்ந்தது. 

சரி வாங்க நோட்டீஸ் கலாச்சாரத்தை விட்டுட்டு நம்ம கதைக்கு பொயிட்டோம்... இருந்தாலும் எதுக்காக அந்தக் கவிதை குறித்து சொன்னேன்னா அன்னைக்கு கட்-அவுட்டுக்கு காவல் நின்ன காவல்துறை இன்னைக்கு பேனருக்கு காவல் நிற்கிறது. காட்சி ஒன்றுதான்... காட்சியில் இருக்கும் பொருளில் மட்டுமே மாற்றம். அன்று இருந்த நம்ம கோமளவல்லி அம்மையாருக்கு இன்று இன்னும் ஆணவம் கூடிப் போய்விட்டது. அதற்கு மற்றுமொரு காரணம் நானும் ஆம்பளைதான் என்று  மீசை வைத்துக் கொண்டு காலில் விழுந்து கிடக்கும் வெட்கம் கெட்டவர்கள்தான். இவனுகளே நமக்கு அடிமை அப்புறம் என்ன டேஷூக்கு மக்கள் முதல்வராக இருக்கணுங்கிற திமிர் கூடிப்போச்சு. எதை எடுத்தாலும் நான் செய்தேன்... நான் சொன்னேன்... நானே தமிழகம்... நானே கடவுள்... என்ற இறுமாப்பு கூடிப் போச்சு. அதன் செயல்பாடுகள்தான் தமிழகத்தின் சமீபத்திய நிகழ்வுகள்.

மத்திய அரசு கொடுத்த நிவாரணத் தொகை என்னாச்சு... கடலூரில் 40 கோடிக்கு சாப்பாடு போட்டோம் என்றார்கள்... சென்னையில் 400 கோடி என்பார்கள். எதுவும் செய்யவில்லை... மக்கள் இன்னும் கஷ்டத்தில்தான் இருக்கிறார்கள். இவர் செயற்குழுவுக்குப் போக, ஒரே இரவில் மூன்று ரோடுகளைப் போட முடிந்த அரசு அதிகாரிகளால் வெள்ளத்தில் தவித்த மக்களுக்கு உதவ முடியவில்லை. ஸ்டிக்கர் ஒட்டவும் அம்மாவின் ஆணைக்கு இணங்க என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கவுமே நேரம் இருந்தது அவர்களுக்கு. இந்த மூன்று சாலையும் புதிதாய்ப் போட ஆன செலவும் நிவாரணத் தொகையில் இருந்து எடுக்கப்பட்டிருக்கும். மீதமிருக்கும் தொகை தேர்தல் நேரத்தில் மறதி நிறைந்த நம் மக்களை வாங்குவதற்காக பத்திரமாக வைக்கப்படும். என்ன அரசியல்... என்ன நிலமையில் நாம் இருக்கோம் என்பதை யோசித்தோமா..?

மதுரை மீனாட்சி அம்மன் தேரில் பவனி செய்வது போல் நம்ம தமிழக அம்மாவின் பவனிக்கு மக்கள் நடக்கும் பாதையில் இடம் விடாது பேனர்கள்... என்னத்தை சாதிக்க இத்தனை பேனர்கள்... இதை எதிர்த்து போராடிய ஆம் ஆத்மி கட்சியினரை அடித்து உதைக்கின்றனர் மக்களின் நண்பன் போலீஸ் வேடிக்கை பார்க்கிறது. வழக்கை எடுக்கவும் மறுத்திருக்கிறார்கள். இதைவிட கேவலம் பொதுச் சொத்தை சேதப்படுத்தினார்களாம். யார் சேதப்படுத்தினார்கள் பொதுச் சொத்தை... வாகனங்கள் பயணிக்கும் ரோட்டில் குழி போட்டு அலங்கார வளைவுகள் வைப்பது யார்...? மக்கள் நடக்கும் நடைபாதையில் பேனர்கள் வைத்து நடக்க முடியாமல் செய்வது யார்...?  ஆளும் ஆணவத்துக்காக வைக்கப்பட்ட போஸ்டர் பொதுச் சொத்து என்றால் தர்மபுரியில் எரிக்கப்பட்ட பஸ்...  இறந்த மாணவிகள்... மகாமகக் குளத்தில் இறந்தவர்கள்... இப்படி நிறைய இருக்கே அதெல்லாம் என்ன அம்மா வீட்டுச் சொத்தா...? ஏன் சில நாட்களுக்கு முன் விஜயகாந்துடன் ஏற்பட்ட மோதலில் உடைக்கப்பட்ட வேன்கள் எல்லாம் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா...? பொதுச்சொத்தை சேதப்படுத்தினார்களாம்... கேவலமாக இல்லை. இந்த அடிமைகளின் செய்கைகள் தற்போதைய முதல்வருக்கு புகழ் போதையைத்  தருகிறது போலும் அதனால்தான் இந்த அகங்கார, ஆணவப் போதையில் மூழ்கித் திளைக்கிறார்.

முதலில் பேனர் கலாச்சாரம் ஒழிய வேண்டும்... காது குத்து வைத்தால் பேனர்... வயதுக்கு வந்தால் பேனர்... திருமணம்... திருவிழா... அரசியல் கூத்துக்கள்... என எங்கும் பேனர்... ஏன் இறந்தவருக்கும் பேனர் வைக்கிறோம். இதை வைப்பவர்கள் தங்கள் இடத்தில் வைப்பதில்லை... பொது இடத்தில்தான் வைக்கிறார்கள். இதனால் எத்தனை இடையூறுகள்... இன்னல்கள்... இதை ஏன் யாரும் அறிவதில்லை. அரசியல் அல்லக்கைகள் தங்களுக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதால் செய்கிறார்கள்... சாமானியர்கள் நாம் குறைத்துக் கொள்ளலாமே. அதுவும் பேனரில் சாதித் தலைவர், சாதிக்கான தெய்வம், சாதிக்கான நடிகர் எனப் போட்டு இன்னும் நம்மை நாமே அறிவிலிகள் ஆக்கிக் கொள்கிறோம்.

நான் உங்களுக்கு கட்டுமரமாக இருப்பேன்னு சொல்லிக்கிட்டு சொத்துச் சேர்த்து வைத்திருக்கிற நம்ம தமிழறிஞர், ஒவ்வொரு முறையும் கடைக்கோடி தொண்டனிடம் தேர்தல் செலவுக்கு பணம் கேட்கிறார். இதென்ன கொடுமை பாருங்கள்... கோடிக்கோடியாக ஊழல் செய்து சொத்து சேர்த்து வைத்திருக்கும் ஒரு மனிதர், தனது கட்சியில் வாரிசு அரசியலை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஒரு தலைவர், தன்னோட தேர்தல் செலவுக்கு நிதி கேட்கிறார். நாமும் கோடிகளை சேகரித்துக் கொடுக்கிறோம்... உடனே உடன்பிறப்பே நீ கொடுத்த தொகை நமக்குப் போதாது இன்னும் கொண்டு வா என்கிறார். என்ன கொடுமை பாருங்கள்... ஐந்துக்கும் பத்துக்கும் அல்லல்படுபவன் கைக்காசைக் கொடுக்கணுமாம்... இவரு ஆட்சிக்கு வந்து தன் மக்களுக்கு பணம் சேர்ப்பாராம்... நம்மை எந்த நிலையில் வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.

ஒருத்தன் பேனரில் போட்டிருக்கிறான் சிலுவையில் அறைந்தவன் தெய்வமா..? சிலுவையில் அறையப்பட்டவன் தெய்வமா..? எங்களுக்கு எங்க அம்மாதான் தெய்வம்டா அப்படின்னு வசனத்தோட... அம்மா தெய்வம்ன்னா எதுக்கு இத்தனை அகங்காரம்... இவ்வளவு சொத்து... பதவி ஆசை எல்லாம்... எல்லாம் துறந்து நான் உங்கள் தெய்வம்ன்னு ஏதாவது ஒரு மலையில போயி நிக்க வேண்டியதுதானே... அடிமைகள் செருப்பில்லாமல் கூனிக் குறுகி கும்பிட்டுக் கிடக்க வேண்டியதுதான்... மக்கள் நலனில் அக்கறை இல்லாத ஒரு மனுசி எப்படி எங்களுக்குத் தெய்வம் ஆக முடியும். எங்களைப் பொறுத்தவரை இப்போதைய முதல்வரை விநாயகர் சதுர்த்திக்கு கடலில் கரைக்கும் பிள்ளையாராகத்தான் வைத்திருக்கிறோம். மே மாதம் கடலில் கரைப்போம்... மீண்டும் உருவாகாத வண்ணம் உருத்தெரியாமல் கரைப்போம். இது என் நம்பிக்கை... நாங்க காசுக்குச் சிரிப்போம் என்றால் நாம் சீரழியத்தான் வேண்டும். நடு வீட்டுக்குள் பேனர் கட்டுவார்கள்... நாமும் அவர்களுடன் பாதுகாப்பாய் நிற்க வேண்டியதுதான்... மேலே போகும் ஹெலிகாப்டரைப் பார்த்து நடு வீதியில் நின்று கும்பிட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான்... பறக்கும் அம்மா நம்மைப் பார்க்கும் என்ற நினைப்பில் அண்ணாந்து பார்க்க ஏதோ ஒரு குருவி தன்னோட எச்சத்தை நம் வாயில் இட்டுச் செல்லும்.

மழை வந்தது கூட நாம் மாற்றங்களைப் பற்றிச் சிந்த வேண்டும் என்பதால்தான் என்று நினைக்கிறேன்... சிந்திப்போம்... செயல்படுவோம்... இந்த கெடுகெட்ட ஜென்மங்களை களை எடுப்போம்.
-'பரிவை' சே.குமார்.

சனி, 12 ஏப்ரல், 2014

விஜயகாந்தை கேலி பண்ணலாமா?



இந்தக் கட்டுரை விஜயகாந்த் என்னும் மனிதரைப் பற்றிய கட்டுரை. இதைப் படிக்கும் முன்னரே நான் தேமுதிக-காரன் என்ற எண்ணம் எல்லாம் வேண்டாம். நமக்கும் அரசியலுக்கும் ரொம்பத் தூரம். எதோ எழுதணும்ன்னு தோணிச்சு... அவ்வளவுதான். இது விஜயகாந்துக்கு ஆதரவு நிலையிலோ எதிர்ப்பு நிலையிலோ எழுதப்பட்டது அல்ல... ஒரு தனி மனிதன் காமெடியன் ஆக்கப்படும் நிலை கண்டு எழுதியதுதான் அவ்வளவுதான்...

இன்றைய அரசியல்வாதிகளில் அதிகம் விமர்சிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாறியிருக்கிறார். அதிலும் குறிப்பாக முகப்புத்தகத்தில் அவரை வைத்து காமெடிகள் அதிகம் அரங்கேறுகின்றன. இதற்கு காரணம் என்ன? உண்மையிலேயே விஜயகாந்த் காமெடி பண்ணுகிறாரா? அவர் மக்களே என்று அழைப்பதைக் கூட நாம் மக்கழே என தண்ணி அடித்து விட்டு உளறுவது போல் ஸ்டேட்டஸ் போடுகிறோம். இது எதனால்... நமக்கு விஜயகாந்த் மீது அப்படி என்ன கோபம்?

தன்னை விமர்சித்த வடிவேலுவை தனிப்பட்ட முறையில் எதாவது சொன்னாரா என்பது தெரியாது. ஆனால் பொதுவெளியில் அவர் குறித்து ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. இன்று வடிவேலுவின் தெனாலிராமனுக்கு பிரச்சினையை சில புல்லுருவிகள் கிளப்பும் போது அதில் கூட விஜயகாந்தை சில பத்திரிக்கைகள் சம்பந்தப்படுத்துகின்றன. இது நியாயமா? இன்று வடிவேலுவை முதல்வர் ஜெயலலிதா அரவணைப்பது போன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகவும் ஆளாளுக்கு அவருக்கு ஆதரவுக் குரல் கொடுத்து பொங்குகிறார். இரண்டு வருடங்களுக்கு மேலாக ஒரு அருமையான காமெடி நடிகரை முடக்கி வைத்திருந்தார்களே. அப்போது இந்த பொங்கிகள் எல்லாம் எங்கே போனார்கள். எதாவது பேசினால் ஜெயலலிதாவால் தங்களுக்கு எதாவது பிரச்சினை வந்துவிடுமோ என்று பயந்துதானே அடங்கிக் கிடந்தார்கள். வீட்டில் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளை பார்த்து ரசித்துவிட்டு வெளியில் அம்மாவின் பார்வைக்கு அடங்கிய பாம்பாய் இருந்தார்கள்.

சரி விசயத்து வருவோம்... விஜயகாந்த் மனதில் உள்ளதைப் பேசுகிறார்... அதை வெளிப்படும் விதம் தவறாக இருக்கலாம்... ஆனால் இன்றைக்கு மற்ற அரசியல்வாதிகளுக்கு இல்லாத தைரியம் அவரிடம் இருக்கு என்று எழுத்தாளர் திரு. பாலகுமாரன் அவர்கள் முகப்புத்தகத்தில் எழுதியிருந்தார். அது தினமணியிலும் பிரசுரமானது. அதற்கு எத்தனை பேர் நீங்க அவருக்கு ஆதரவா என்று பொங்கினார்கள் தெரியுமா?. கண்டபடி தங்களது கருத்தைப் திரு. பாலகுமாரனின் இந்த ஸ்டேட்டஸில் பதிந்தார்கள். அவர் மனதில்பட்டதைச் சொன்னது தவறா? இங்கு தனி மனிதனுக்கு கருத்துரிமை இருக்கு என்பதை நாம் மறந்துவிட்டுத்தானே பொங்கினோம்.

இன்றைக்கு பி.ஜே.பி. கூட்டணியில் அனைத்துக் கட்சிகளுக்காகவும் ஊர் ஊராகச் சென்று பேசும் ஒரே தலைவர் விஜயகாந்த்தான் என்பதை மறுக்க முடியுமா? காட்டுக்கும் மேட்டுக்கும் இழுத்தாலும் அனைவரையும் அரவணைத்துச் செல்ல நினைக்கிறார். ஒருவன் உண்மையாக இருப்பது என்பது மிகவும் சவாலான விஷயந்தான். அவரது வெளிப்படையான பேச்சும், செயல்களும் வேண்டுமானால் கேலிக்குரியதாக இருக்கலாம். ஆனால் ஒரு தனி மனிதனை கேலிக்குரியவனாக ஆக்கி சந்தோஷம் அடையும் நம்மைவிட அவர் கேலிக்குரியவரா? நம் மனதின் அழுக்குகள் கரைந்து போகாமல் கட்டியாய் இருப்பது ஏன்?

ஜெயா தொலைக்காட்சியில் அடிக்கொரு முறை விஜயகாந்தின் பொதுவெளி செயல்பாடுகளைப் போட்டுக்காட்டி இவருக்கா உங்கள் ஓட்டு என்று போடுகிறார்கள். இந்த இரண்டரை வருடத்தில் நம் அரசின் சாதனை என்ன என்று பட்டியலிட்டு ஓட்டுக் கேட்கலாம் தானே... முள்ளி வாய்க்கால் முற்றத்தை இடித்ததையும், கிராமங்களில் 18 மணி நேர மின்தடை செய்து வருவதையும் களவாணிப் பயலுகளை எல்லாம் கட்சியில் சேர்ப்பதையும் சொல்லி ஓட்டுக் கேட்கலாமே... அதை விட்டு விஜயகாந்தைக் காட்டி ஓட்டுக் கேட்பது எதற்காக..? ஆளும் கட்சிக்கும் அவர் மீது பயம் இருக்கிறது என்பதைத்தானே இது காட்டுகிறது.

இன்று விஜயகாந்தை விமர்சிக்க நடிகர் நடிகைகளை எல்லாரையும் களம் இறக்கி விட்டிருக்கிறார்கள். அன்று விஜயகாந்தை வைத்து வெற்றிப்படம் கொடுத்த இயக்குநர் ஒருவர் பம்பரம் விட அடம்பிடித்தார் என்று அடித்துச் சொல்கிறார். இத்தனை வருடமாக அவருக்கு ஞாபகத்தில் இல்லையோ... அப்போதெல்லாம் சொல்லத் தெரியவில்லையோ... சிங்கமுத்து, விந்தியா, ராமராஜன் என ஒரு கூட்டமே விஜயகாந்தை திட்டுவதையே தங்கள் பேச்சில் அதிகம் செய்கிறார்கள். இவர்கள் இப்படிப் பேசக் காரணம் தலைமையிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமே என்பதற்காகத்தானே தவிர உண்மையில் விஜயகாந்தை தாக்க வேண்டும் என்பதற்காக அல்ல.... ஒரு நடிகராக அவர் நிறையப் பேருக்கு உதவியாக இருந்தார் என்பதை இவர்கள் மறுத்துச் சொல்ல முடியுமா?

அரசியல்வாதிகள் எல்லோருக்கும் கலைஞர் கருணாநிதி மாதிரி மேடைப் பேச்சு வருவதில்லை. ஏன் நம்ம முதல்வரே எழுதிக் கொடுத்ததை வைத்துத்தான் பேசுகிறார். சமய சந்தர்ப்பம் பார்த்து சூசகமாகப் பேசுவது எல்லாம் கலைஞர் அவர்களுக்கு மட்டுமே கை வந்த கலை. விஜயகாந்த் மனதில்பட்டதைப் பேசுகிறார்... அவர் எழுதி வைத்துப் பேசுவதில்லை... மக்களே... மக்களே... என்று விளித்துப் பேசுவதை அவரது ஸ்டைலாக ஆக்கியிருக்கிறார் இதில் என்ன தவறு இருக்கிறது.

சரக்கடித்துவிட்டு பேசுகிறார் என்று சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறோம். இன்று சரக்கடிப்பது என்பது பேஷனாகிவிட்டது. சில காலங்களுக்கு முன்னர் வரை வீட்டிற்கு சரக்கடித்து விட்டுப் போனால் பத்திரகாளியாக மாறும் இல்லத்தரசிகள் இன்று குறைந்து விட்டார்கள். எனக்கு தெரிந்த சில வீடுகளில் இப்போது இல்லத்தரசிகள் ஆம்லெட் போட்டுக் கொடுக்கிறார்கள். சில வீடுகளில் வாரத்தில் இரண்டு நாள் வீட்டிலேயே குடிக்க அனுமதி உண்டு.  யார் குடிக்கவில்லை... இவர் மட்டும்தான் குடிக்கிறார் என்பது போல ஸ்டேட்டஸ் போடும் நம்மில் பலர் குடிக்கத்தானே செய்கிறார்கள். எதோ நாமெல்லாம் உத்தமர்கள் போல ஒரு மனிதனைக் கேலிக்குரியவராக ஆக்குவதில் என்ன நியாயம்?

திராவிட கட்சிகள் நமக்கு என்ன செய்தன... இல்லை மற்ற கட்சிகள் மக்களுக்காக உழைத்தனவா... இதோ இதே விஜயகாந்த் வந்தால் மட்டும் என்ன செய்து விடப்போகிறார்? என்பதை நாம் நன்கு அறிவோம். அரசியல்வாதியாய் வாரிசு அரசியலை எதிர்க்கும் அவர் மச்சினனுக்காக காரியங்கள் செய்து காய் நகர்த்தத்தான் செய்கிறார். இது அரசியல்வாதியாய் அவருக்குள் வந்திருக்கும் குடும்ப வியாதி. இப்போது அரசியல் சாக்கடைக்குள் விழுந்தவன் எல்லாருமே உத்தமன் இல்லை என்பதை அறிவோம். இதைப் பற்றி இங்கு பேசுவதால் எந்தப் பயனும் இல்லை. 

பொதுவெளிகளில் அவரது செய்கைகள் தவறாக இருக்கலாம்... காரணம் அவருக்கு வரும் அதீதமான கோபம்தான். கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பது பழமொழி, அவரது குணம் நல்ல குணமாகத்தான் இருக்கும் என்று நம்புவோம். விஜயகாந்தைப் பொறுத்தவரை பொது இடங்களில் அவரது கோபத்தைக் கட்டுப்படுத்தத் தெரியவில்லை. அதுவே அவருக்கு மிகப்பெரிய மைனஸாக மாறிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்காக ஒரு தனி மனிதனை வாய்க்கு வந்தபடியெல்லாம் கிண்டல் கேலி பண்ணுவது என்பது தவறு. அவர் தனது கோபத்தை கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். தன் கோபத்தைக் கட்டுப்படுத்தும் பட்சத்தில் எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கலாம்.

எங்க தொகுதி மக்களெல்லாம் சிவகங்கையில் இருந்து தில்லியைப் பார்ப்பேன் என்று சென்ற முறை சொல்லி தனது சுற்றம் பார்த்த இந்திய நிதி அமைச்சர் சிதம்பரம் அவர்களின் வாரிசான சிநேகத்தின் சிநேகமாய்... கனியுடன் காதல் மொழி பேசிய அடாவடி கார்த்தி சிதம்பரத்துக்கு வாக்களிக்காமல் நம்ம தொகுதி வளர்ச்சிக்காக யார் பாடுபடுவார்கள் என்று நினைக்கிறீர்களோ அவருக்கு வாக்களியுங்கள்.

மொத்தத்தில் கலைஞரா ஜெயலலிதாவா ராமதாஸா வைகோவா விஜயகாந்தா என்றெல்லாம் பார்க்காமல் நமக்கு இவன் இதற்கு சரிப்பட்டு வருவான்னு அவனுக்கு வாக்களியுங்கள்.

இந்தப் பதிவு சிலருக்குப் பிடிக்கலாம் பலருக்குப் பிடிக்காமல் போகலாம்...  என்னோட மனதில்பட்டதை பகிர்ந்திருக்கிறேன்... அனைவருக்கும் பிடிக்க வேண்டும்  என்பதற்காக அல்ல... 
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

மெட்ராஸ் கபேயும் காங்கிரஸாரும்


தமிழகத்தில் ஜான் ஆபிரகாம் என்ற நடிகர் நடித்துள்ள 'மெட்ராஸ் கபே' என்ற திரைப்படத்தை வெளியிடக்கூடாதென எதிர்ப்பு வலுத்து வருகிறது. அதே வேளையில் இந்தியாவைக் கட்டிக்காக்கும் நாட்டின் மதிப்பைக் குறைத்துக் கொண்டே உதார் விடும் காங்கிரஸார் இந்தப் படத்திற்கு சப்பைக் கட்டுக் கட்டுகிறார்கள். இவர்களுக்கு வடக்கே எதாவது நிகழந்தால் வாடிப்போய் ஓடி உதவுவார்கள். தமிழனுக்கு என்று வந்தால் கண்டுகொள்ளவே மாட்டார்கள். இது கடந்த ஐந்து வருடமாகத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

மீனவர் பிரச்சினையில் தொடர்ந்து கத்திக் கொண்டுதான் இருக்கிறோம். செவிடன் காதில் ஊதிய சங்காக ஜால்சாப்பு சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அடுத்த பிரதமர் என்று சொல்லப்படும் எங்கள் தொகுதியில் கள்ளத்தனமாக ஜெயித்த எம்.பி., எதற்கும் ஆதரவு குரல் கொடுப்பதே இல்லை. நாட்டின் பண மதிப்பு குறைந்து கொண்டே போகிறதே என்றால் இது பிரச்சினை இல்லை.... நகை வாங்காதீர்கள் என்பார். வெளிநாட்டில் இருந்து தொலைக்காட்சிப் பெட்டி கொண்டு வருகிறாயா... இங்கு கட்ட தனியாக ஒரு பெட்டியில் பணம் கொண்டு வா என்பார். இப்படி ஏறுக்கு மாறாக எதையாவது செய்யும் பொருளாதார மேதை இலங்கைப் பிரச்சினை குறித்து இன்றளவும் எதுவும் சொல்லமாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்திருப்பார் போல.

தமிழர்களைக் கொன்று குவித்த எம் இனத் துரோகி ராஜபக்சே என்ற அரக்கன் விரித்த ரத்தினக் கம்பளத்தில் நடந்து சென்று படப்பிடிப்பை நடத்தி வந்திருக்கிறது மெட்ராஸ் கபே படக்குழு. தமிழர்களை உயர்த்திக் காட்ட படம் எடுக்க சென்றிருந்தால் இனத்துரோகி எப்படி வரவேற்ப்பு கொடுத்திருப்பான் என்பது நமக்குத் தெரியாதா என்ன... தமிழன் எல்லாத்தையும் கேட்டுக்கொண்டு செம்மறி ஆடாய் தலையாட்டிக் கொண்டிருந்த காலமெல்லாம் மலையேறிப் போச்சு என்பதை இந்த அரசியல்வாதிகள் மறந்து விட்டார்கள் போல.

தமிழினத் தலைவர் பிரபாகரனையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் கேவலமாகச் சித்தரித்து இருப்பதாக படம் குறித்த செய்திகளில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அப்படியில்லை தமிழர்களை நல்லவிதமாகத்தான் காட்டுகிறார்கள் என்கிறார்கள் இந்திய காங்கிரஸில் இருக்கும் நம்ம தமிழ் நாட்டில் பிறந்த கேடுகெட்ட காங்கிரஸார். மும்பையில் கூட திரையிட்ட தியேட்டர் அடித்து நொறுக்கப்பட்டதாக செய்திகளில் பார்த்தேன்.

மும்பையில் குண்டு வெடித்த போது அதற்கு காரணமான பாகிஸ்தானுடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாடாது என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்த அரசு, நம் மக்கள் லட்சம் லட்சமாக கொல்லப்பட்டபோது அது குறித்து எதுவும் சொல்லவில்லை. பக்கத்து நாட்டை நட்பு நாடாகத்தான் பார்க்க வேண்டும். எதிரியாக பார்க்கக்கூடாது என்றார்கள். மேலும் இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்க தமிழகத்தை தேர்ந்தெடுத்த போது நமது முதல்வர் அவர்கள் தனது கடுமையான எதிர்ப்பைக் காட்டி அதில் வெற்றியும் கண்டார். அதற்கும் எதிர்த்தார்கள்.

அதேபோல் ஐபிஎல் போட்டிகளின் போது இலங்கை வீரர்கள் எமது தமிழக மண்ணில் விளையாடக்கூடாது என்று எதிர்ப்பை தமிழக கட்சிகள் முன் வைத்த போது முதல்வரும் அதில் விடாப்பிடியாக நின்று அவர்களை தமிழக மண்ணிற்குள் வரவிடாமல் செய்தார். (இதற்காக நமது முதல்வரை கேவலமாக சித்தரித்து இலங்கைப் பத்திரிக்கையில் கேலிச்சித்திரம் வெளியிட்டார்கள். இதற்கு அரசு எதுவும் சொல்லியதாக தெரியவில்லை. ) இந்த எதிர்ப்புக்கு எதிராக வட இந்தியா வாலாக்கள் மட்டுமின்றி தமிழக காங்கிரஸாரும் விளையாட்டை விளையாட்டாய் பாருங்கள் என்றார்கள். வடக்கே வந்தால் விளையாட்டை விருட்சமாகப் பார்ப்பார்கள். தமிழனுக்கு என்றால் விளையாட்டை விளையாட்டாவே பார்ப்பார்கள். இதுதான் இன்றைய தமிழனின் நிலை.

நம்மக்களைக் கொன்றவனை அழைத்து விருந்து கொடுக்கிறார்கள். திருப்பதிக்கு குடும்பத்துடன் கூட்டிச்சென்று வழிபட வைக்கிறார்கள். மீனவர்களை சிறைபிடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தால் நம் மீனவர்கள் மீது தமிழக எம்பிக்களே  குறை சொல்லுகிறார்கள். மேலும் இலங்கையில் இருந்து வந்த முக்கியப் பிரமுகர் தில்லியில் இருந்து பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி வந்ததால்தான் பிடித்து சிறையிலடைத்து வைத்திருக்கிறோம். இப்போது அவர்களை விடமுடியாது என்று தைரியமாகச் சொல்கிறார். அதைக் கேட்டுக் கொண்டு சும்மாதான் இருக்கிறார்கள்... இருக்கிறோம்...

இப்படி தமிழனுக்கு நடக்கும் துரோகத்தை தோலுரித்துக் காட்ட வேண்டிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தமிழக எம்.பிக்களும் காங்கிரஸ் அடிபொடிகளும் அதைவிடுத்து எவனோ ஒரு நடிகன் தமிழனைத் தாக்கி எடுத்ததற்கு ஆதரவாய் குரல் கொடுக்கிறார்கள். இவர்களை என்ன சொல்வது... பதவிக்காக தாங்கள் சார்ந்த அரசு செய்யும் ஈனத்தனமான எல்லாத்தையும் நல்லது என்றே சொல்லிக் கொண்டு இருக்கும் தமிழர்களின் பிரதிநிதிகளான இவர்கள் இத்தாலி அன்னையார் சோனியாவும் பொருளாதார மேதை தஞ்சாவூர்ப் பொம்மை மன்மோகன்ஜியும் சொன்னால் பீயைக்கூட பிரமாதம் என்று தின்பார்கள்... இவர்கள் எல்லாம் சுயமாகச் சிந்திக்கத் தெரியாத .... இங்கே நம் செல்லப்பிராணியில் பெயரைப் போடக்கூட தகுதியற்றவர்கள் இவர்கள். அவை எப்போதும் நன்றியுடன் இருக்கும்... ஆனால் இவர்கள்..?

கலைஞனுக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கு என ஜான் ஆபிரகாம் சொல்கிறார். இதற்கு காங்கிரஸாரும் ஒத்து ஊதுகிறார்கள். சரி ஆர்.கே செல்வமணி குற்றப் பத்திரிக்கை என்று ஒரு படத்தை எடுத்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்ற ஒரே காரணத்துக்காக அந்தப் படத்தை எத்தனை வருடங்களாக வெளிவரவிடாமல் தடுத்து வைத்திருந்தனர். அன்னைக்கு கலைஞனுக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கு என்று சொல்ல எந்த காங்கிரஸ்காரனாவது முன்வந்தானா இல்லையே...

விஸ்வரூபம் மற்றும் தலைவாவுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டபோது தலைவனின் படத்துக்குப் பிரச்சினையா என்று ஆர்ப்பாட்டம் செய்த தமிழக ரசிகர்கள் இந்த நேரத்தில் யாருடைய ரசிகராக இருந்தாலும் ஒன்றினைந்து போராடி மெட்ராஸ் கபேயை தமிழகத்துக்குள் வரவிடாமல் தடுக்க வேண்டும். திரையரங்க உரிமையாளர்கள் படத்தை வெளியிட மறுத்ததால் இன்று வெளியிட இருந்த படம் வெளியாகவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் போராட்டத்தில் பாதி வெற்றியை அடைந்துவிட்டோம் என்பது சந்தோஷமானதுதான். ஆனால் தொடர்ந்து போராடி நம் தமிழ் மக்களுக்கு எதிரான படத்தை தமிழகத்துக்குள் நுழையாமல் தடை செய்ய வேண்டும்.

மேலும் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் தமிழக காங்கிரஸாருக்கு வரும் தேர்தலில் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களை எந்த நாடு என்றால் இந்தியா என்பான்.  இந்தியாவில் எங்கே என்றால் மட்டுமே தமிழ்நாடு என்பான். ஏனென்றால் தமிழன் தம்மை ஒரு இந்தியனாகத்தான் பார்ப்பான். ஆனால் மலையாளியோ முதலில் கேரளா என்றே சொல்வான். அதை தனி நாடு என்பான். மீண்டும் மீண்டும் கேட்டால் மட்டுமே இந்தியா என்பான். அவனுக்கு சொம்பு தூக்கும் அரசு தமிழனை கேவலமாக நடத்துவதை வாடிக்கையாக வைத்து உள்ளது. நமக்கு எதிரான சினிமாவுக்கு மட்டுமல்ல அரசுக்கும் தமிழன் யார் என்பதை தெரிவிக்கும் காலம் விரைவில் வரத்தான் போகிறது.

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 2 ஜூலை, 2013

எதிர்கட்சி தலைவர் பதவியை இழப்பாரா கேப்டன்?


ராஜ்ய சபா தேர்தலில் விஜயகாந்துக்கு வெற்றி இல்லை என்றாலும் கலைஞரை கலங்க வைத்தது... காங்கிரஸை திணற வைத்தது... எம்புட்டு அடிச்சாலும் தாங்குறானேடா என்று ஜெயலலிதாவை திகைக்க வைத்தது என தனது ஓட்டு வங்கியைக் காப்பாற்றி வெற்றி கண்டார்.

தமிழக அரசியலில் இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமாவதுதான் தொன்றுதொட்டு உதிரிக்கட்சிகளின் நிலையாக இருக்கிறது. மதிமுக, பாமக,விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் என எல்லாருமே ரோடு ரோலரின் அடியில் மாட்டிய கரும்பு போல் ஆனார்கள் என்பதே உண்மை. 


இந்நிலையில்தான் கேப்டன் விஜயகாந்தும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற கட்சி ஆரம்பித்து தனித்தே போட்டி என்று சொல்லி அதிலும் ஒரு எம்.எல்.ஏ. சீட்டை வென்று தனது கட்சியை இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்குப் போட்டியாக வளர்த்தார். கடந்த தேர்தலின் போது தனது தனித்துப் போட்டி என்ற நிலைப்பாட்டில் இருந்து இறங்கி ஜெயலலிதாவுடன் இணைந்து போட்டியிட்டு 29 இடங்களைக் கைப்பற்றி தமிழக அரசியலில் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெற்றார். மாநிலக் கட்சிகள் மட்டுமின்றி தேசிய கட்சிகளையும் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்தார். 

அவருக்கும் ஜெயலலிதாவுக்குமான கூட்டு தாமரை இலைத் தண்ணீர் போல் ஓட்டாமல் இருந்து, தாக்குப்பிடிக்க முடியாமல் ஒருநாள் உடைந்தது. அதற்குப் பின்னான நிகழ்வில் இருவருக்கும் இடையேயான மோதல் வலுக்க ஆரம்பித்தது. இவர்கள் பிரச்சினை பெரிதாகிக் கொண்டே போனதற்கு மற்றொரு காரணம் தொண்டர்களால் அண்ணி என்று அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவின் வாய்த்துடுக்கான பேச்சுக்கள்தான் என்பதில் தொண்டர்களுக்குள் மாற்றுக் கருத்து இல்லை.

அதன் பிறகு ராஜ்யசபா தேர்தலில் விஜயகாந்த் வெற்றி பெறக்கூடாது என்ற முனைப்போடு ஜெயலலிதா செயல்பட ஆரம்பித்தார். பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும் என்ற பழமொழிக்கு இணங்க, எதிர்கட்சி எம்.எல்.ஏ. என்ற பெயரை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என சிந்தித்த சில மக்கள் தொண்டர்களான எம்.எல்.ஏக்கள் கோடிக்கு மயங்கினார்கள். 

இதில் முக்கியமாக விஜயகாந்துக்கு மிகவும்  நெருக்கமான மைக்கேல் ராயப்பனும் அருண்பாண்டியனும் மக்கள் தொண்டு ஆற்றுவதற்காக, மக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்காக ஜெயலலிதாவை சந்தித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் 29ல் 5பேர் மக்களுக்காக கட்சிக்கு எதிராக அணிவகுத்தார்கள். பின்னர் 2 பேர் யோசித்துப் பார்த்து 5 தொகுதி மக்களும் நல்லா இருக்காங்க நம்ம மக்கள்தான் பாவம் ஒண்ணுமே இல்லாம கஷ்டப்படுறாங்க என ஜெயலலிதாவை பார்த்து பேசினார்கள்.

இதற்கிடையில் சட்டசபையில் 6 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பென்ட், விஜயகாந்த் சஸ்பென்ட்... விஜயகாந்த் மீது அவதூறு வழக்குகள் என நாளொரு நாடகம் அரங்கேறிக் கொண்டிருந்தது. அறிக்கையில் கேப்டன் பிரபாகரனாக... சேதுபதி IPS ஆக... ரமணாவாக ஜொலித்த விஜயகாந்தின் ஜம்பங்கள் ஜெயலலிதா முன்னர் எடுபடவில்லை என்பதே உண்மை. 

ராஜ்யசபா தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என அதிருப்தி எம்.எல்.ஏக்களை விஜயகாந்தும் பண்ருட்டியாரும் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் நடந்தது என்ன என்பதை நாடறியும். ஜெயலலிதா சொன்னவருக்கு வாக்களித்து தாங்கள் மக்கள் தொணடை மட்டுமே செய்ய நினைக்கிறோம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள். 

vijayakanth 20 vijayakanth 20

அடிபட்டு வீழ்ந்து மீண்டும் எழுந்த ஹானஸ்ட்ராஜாக ராஜ்யசபா தேர்தலுக்குப் பிறகு கட்சியை மதிக்காத எம்.எல்.ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி தற்காலிகமாக சஸ்பென்ட் செய்துள்ளார். ஆனால் இதில் என்ன கூத்து என்றால் நாங்கதான் அதிருப்தியாளர்களா மாறிட்டோமே எதுக்கு விளக்கம் கேட்கிறீங்க... கட்சியை விட்டே நீக்குங்கள் என் மைக்கேல் ராயப்பன் கிண்டல் செய்துள்ளார்.

ஏழு பேரையும் கட்சியை விட்டும் நீக்கும் பட்சத்தில் தே.மு.தி.க. 22 எம்.எல்.ஏக்களுடன் சட்டசபை எதிர்கட்சித் தலைவர் பதவியை இழக்கும். இந்தச் சந்தர்பத்துக்காகவே காத்திருக்கும் தி.மு.க எதிர்கட்சியாகிவிடும். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெறுவார். விளக்கம் கேட்டிருக்கும் விஜயகாந்த் ஏழு பேரையும் கட்சியின் அடிப்படை தொண்டர் பொறுப்பிலிருந்து நீக்குவாரா? எதிர்கட்சித் தலைவர் பதவியை இழப்பாரா? என்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படுவதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. 

எதிர்கட்சி தலைவர் பதவி என்பதை விஜயகாந்த் விரும்புவது போல் தெரியவில்லை. அதற்கு அவருக்கு நெருக்கமானவர்கள், எதிர்கட்சித் தலைவருக்கு என சட்டசபையில் ஒதுக்கப்பட்ட அறையில் முன்பு எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுப்பார். பின்னர் அந்த அறை இரண்டாக பிரிக்கப்பட்டு பாதி காங்கிரஸ் எம்.எல்,ஏக்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டதால் அதை தலைவர் பயன்படுத்துவது இல்லை என்கிறார்கள்.

மேலும் எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த சைரன் பொருத்தப்பட்ட காரை இன்னும் அவருக்கு திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் அவரும் அதைக் கேட்காமல் அவரது சொந்த வண்டியில் போவதாகவும் சொல்கிறார்கள். எல்லாப் படத்துலயும் சைரன் வச்ச வண்டியில போயி கேப்டனுக்கு போரடிச்சாலும் அடிச்சிருக்கலாம் இல்லையா?

இந்நிலையில் ஏழு பேரையும் நீக்கி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழப்பாரா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அவர் இழக்க வேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவின் எண்ணமும் கூட என்கிறார்கள் பத்திரிக்கை நண்பர்கள்... எது நடந்தாலும் எல்லாருக்கும் தெரியும்படித்தான் நடக்கும். அரசியல் விளையாட்டில் எந்தக்காய் நகர்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதனிடையே திருப்பூர் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகச் சென்ற பிரேமலதா, எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் தேமுதிகவை அழிக்க முடியாது என்றும் மக்கள் பணியில் தேமுதிக எப்பவும் ஈடுபடும் என்றும் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார். 


எதிர்கட்சித் தலைவராக விஜயகாந்த் சாதித்தாரா? மின் வெட்டு, விலைவாசி உயர்வு என தினமும் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம் இருக்க ஒரு வளரும் கட்சியை அழிக்க ஜெயலலிதா ஏன் இவ்வளவு முயற்சி எடுக்கிறார்? அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மக்கள் பிரச்சினைகளுக்காகத்தான் கட்சியை பகைத்துக் கொண்டார்களா? என்பதெல்லாம் இப்போது பத்திரிக்கைகளுக்கும் சரி... மக்களுக்கும் சரி தேவையில்லாத செய்திகளாகிப் போய்விட்டன... விஜயகாந்த் வீழ்வாரா என்பதில்தான் பலரது ஆர்வம் இருக்கிறது.

நாக்கைத் துருத்தி கைகளை மடக்கினால் மட்டும் போதாது அரசியல் சாணக்கியத்தனம் இருக்க வேண்டும்... அதில் கில்லாடி திராவிடக் கட்சிக்காரர்களே... அவர்களை மிஞ்சுவது என்பதும் அவர்களை எதிர்ப்பது என்பதும் கடினமான அரசியல் என்பது எல்லாருக்கும் தெரியும். எனவே ஆளுங்கட்சியை எதிர்க்கும் விஜயகாந்த் வீழ்வாரா இல்லை வீழ்வேன் என்று நினைத்தாயோ என எழுந்து கொக்கரிப்பாரா என்பது போகப்போகத் தெரியும்.

படங்களுக்கு நன்றி : கூகுள் இணையம்
-'பரிவை'. சே.குமார்

வெள்ளி, 28 ஜூன், 2013

அ.தி.மு.க.,வில் பரிதி -பா.ம.க., பொன்னுச்சாமி

தமிழக அரசியலில் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவுவது வழக்கமானதாகவே இருந்து வருகிறது. இதன்படி தி.மு.க.,வில் இருந்து பரிதிஇளம்வழுதி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுச்சாமி ஆகியோர் இன்று அ.தி.மு.க.,வில் இணைந்தனர். இந்த விலகல் மேற்கண்ட கட்சிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று இந்த கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


அ.தி.மு.க, பொதுச்செயலர் ஜெ.,வை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர். பரிதியை பொறுத்தவரை தி.மு.க.,வில் இருந்து ஸ்டாலினுடன் ஒத்து போகாததால் கட்சியில் இருந்து விலகி இருந்தார். 

இவர் தி.மு.க.,வில் துணை பொதுசெயலாளராகவும், ஒரு முறை செய்தி துறை அமைச்சராகவும், ஒரு முறை துணை சபாநாயகராகவும் இருந்தார். இவர் கடந்த 1981 ல் தி.மு.க.,வின் எம்.எல்.ஏ.,வானார். ராஜிவ்கொலைக்கு பின்னர் நடந்த சட்டசபை தேர்தலில் (1991) கருணாநிதி, பரிதி ஆகிய இருவர் மட்டுமே எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறி்ப்பிடத்தக்கது. 

எவ்வித இழப்பும் இல்லைஜி.கே.,மணி ; இது குறித்து பா.ம.க., தலைவர் ஜி.கே.,மணி கூறுகையில்; கொள்கை ரீதியாக கட்சி நடத்துபவர் ராமதாஸ். தாழ்த்தப்பட்ட அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும், இவருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டன. 

இவர் அ.தி.மு.க.,வில் இணைந்ததால் கட்சிக்கு எவ்வித இழப்பும் ஏற்பட போவதில்லை. இவர் கட்சியில் இருந்த போதே அவர் எந்தவொரு பலனும் இல்லாமல் தான் இருந்தார். இதனை பல தொண்டர்கள் சொல்லியிருக்கின்றனர். இவர்தான் தன்னை முன்னேற்றி கொண்டார். இவ்வாறு அவர் கூறினார். இது இவருடைய விருப்பம் இவரை கட்சியில் சேருங்கள் என எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை.

இது குறித்து பொன்னுச்சாமி இன்று கூறுகையில்; அரசியலுக்கு வர மாட்டேன் என்று இருந்த போது என்னை பா.ம.க.,தான் கட்சிக்கு அழைத்தது, மிக முக்கியமான பொறுப்புகள் வழங்கப்பட்டன. இதற்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என்றார். 

அ.தி.மு.க.வில் ரொம்ப நாளாக அழைப்பு இருப்பதாக எனக்கு எண்ணம் இருந்தது. மேடம் நன்றாக செயல்படுகிறார்கள் .காவிரி பிரச்னையிலும் நன்றாக செயல்பட்டார். நல்ல நிர்வாகம் இங்கு இருப்பதாகவும், மேலும் இந்த கட்சியில் இணைந்தால் நன்கு பணியாற்ற முடியும் என நம்புவதாகவும் பொன்னுச்சாமி தெரிவித்தார். 

இன்று முதல்வர் ஜெ., கொட நாடு செல்கிறார். அங்கும் மாற்று கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் அ.தி.மு.கவில் இணைவர் என கூறப்படுகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்ட தி.மு.க.,நிர்வாகிகள் சேரவுள்ளதாக தெரிகிறது.

‘ கோபாலபுரத்து கொள்ளைக்காரர்கள் ’- பரிதி 

கட்சியில் இணைந்த பின்னர் பேட்டியளித்த பரிதி இளம்வழுதி ; என்னை இந்த இயக்கத்தில் இணைத்து கொண்டதற்கு அம்மாவுக்கு நன்றி. சட்டசபையில் ஜெ., இருக்கும்போது எதிர் வரிசையில் இருந்து நான் கடுமையா விமர்சித்தும், எதிர்த்தும் பேசியிருக்கிறேன். கோபாலபுரத்து கொள்ளைக்காரர்கள் பேச்சை கேட்டு பேசினேன். இருப்பினும இதனை மறந்து தாயுள்ளத்தோடு என்னை அ.தி.மு.க.,வில் இணைத்து கொண்டதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.

-நன்றி : தினமலர்

-'பரிவை' சே.குமார்

திங்கள், 29 ஏப்ரல், 2013

மரக்காணம் கலவரம்: நடந்தது என்ன?- ஜெ. விளக்கம் - பகுதி - 3


போலியான பதிவு எண் கொண்ட வாகனங்கள்:

இந்த விழாவில் கலந்து கொள்ள வந்தவர்கள் பயணம் செய்த வாகனங்களின் பதிவு எண்களை காவல் துறையினர் பின்னர் ஆய்வு செய்து சரிபார்த்த போது, சில வேன்களின் பதிவு எண்கள் போலியானவை எனத் தெரிய வந்துள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கு வழங்கப்பட்ட பதிவு எண்களை சில வேன்களுக்கு போலியாக பயன்படுத்தி உள்ளனர். எனவே, வேண்டுமென்றே சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை எற்படுத்துவதற்காக திட்டமிட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது. மேலும், இவ்விழாவினால், கிழக்கு கடற்கரை சாலையில் பல மணி நேரங்கள் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும், வெளியூர் செல்லும் பயணிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர். 

மேலும் அவசர கால சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு நோயாளிகள் அல்லலுற்றனர். விழா முடித்து திரும்பிச் சென்றவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டு இரண்டு மணி நேரம் போக்குவரத்தை தடை செய்ததால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும், மரக்காணம் அருகில் தீ வைப்பு, வாகனங்கள் மீது தாக்குதல் ஆகிய சம்பவங்கள் நடந்த போது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 300 வாகனங்கள் புதுச்சேரி நோக்கி திருப்பி அனுப்பப்பட்டன. 

அந்த இடத்தில் கழிக்குப்பம் என்ற ஊரை ஒட்டிய சாலையின் ஒரு பக்கத்தில் தலையில் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஒரு நபரின் உடல் கிடந்தது. வாகனத்தின் மேலிருந்து விழுந்தோ அல்லது வாகனம் மோதியோ மரணம் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் அந்த பிரேதத்தில் இருந்ததால், இந்திய தண்டனைச் சட்டம் 304(ஏ-ன்கீழ் வாகன விபத்து வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் நடைபெற்ற விசாரணையில், இறந்தவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் என்று தெரிய வந்துள்ளது. இந்த மரணம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள ஐயமும் கருத்தில் கொள்ளப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். 

மற்றொரு சம்பவத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவேக் என்பவரும் வாகன விபத்தில் இறந்துள்ளார். மரக்காணத்தில் பிரச்சனை உருவாகி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், வாகனங்கள் புதுச்சேரி நோக்கி திருப்பிச் சென்ற போது, ஒரு வாகனத்தில் விவேக் என்பவர் ஏற முயன்ற போது, கவனக் குறைவாக ஓட்டி வரப்பட்ட தனியார் பேருந்து ஒன்று அவர் மீது மோதியுள்ளது. 

இதன் காரணமாக அந்த நபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டதாக அவரது உறவினர் பிரசன்னா கொடுத்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304 (ஏ-ன்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பெரும்பாலானவர்கள் குடி போதையில்... 

இவ்விழாவில் பங்கேற்றவர்கள் மரக்காணத்தில் வன்முறையில் ஈடுபட்ட போதும், காவல் துறையினர் மிகுந்த பொறுமையுடன், பொதுமக்கள் நலன் கருதி அச்சம்பவங்களை கையாண்டதோடு, காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் யாரும் காயம் அடையவில்லை. இவ்விழா அமைப்பாளர்கள், விழா சம்பந்தமாக காவல் துறையினர் விதித்த நிபந்தனைகளை தவறாமல் கடைபிடிப்பதாக எழுத்து மூலமாகவும், உயர் அதிகாரிகளிடம் நேரடியாகவும் உத்தரவாதம் அளித்து விட்டு, அவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, அந்த நிபந்தனைகளை கடைபிடிக்க எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. 

வழக்கம் போல பெரும்பாலான நிபந்தனைகளை மீறியதோடு, சட்ட மீறல்களிலும் ஈடுபட்டனர். உதாரணமாக கீழ்கண்ட நிபந்தனைகள் விழா அமைப்பாளர்களால் மீறப்பட்டுள்ளன. விழாவில் பங்கேற்ற தலைவர்கள், விழாவை முடிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நேரமான இரவு 10 மணியை கடந்து கூட்டத்தை தொடர்ந்து 11.35 மணி வரை நடத்தினர். இவ்விழாவில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் குடிபோதையில் இருந்ததோடு, ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டுள்ளனர். விழாவிற்கு சென்றவர்கள் மரக்காணம் உள்ளிட்ட பல இடங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதோடு, பொது சொத்துக்களுக்கும், தனியார் சொத்துக்களுக்கும் பலத்த சேதத்தை விளைவித்தனர்.

தேசிய தலைவர் படங்களின் முகத்தில் சாயம் பூசி...:

மேலும், மாமல்லபுரம் அருகே குழிப்பாந் தண்டலம், அம்மாள் நகர், பூஞ்சேரி, நந்தி மாநகர், காரணை மற்றும் சில இடங்களில் சாலையோரத்தில் இருந்த மற்றொரு கட்சியினரின் கொடி கம்பங்களை உடைத்தும், தேசிய தலைவர் படங்களின் முகத்தில் சாயம் பூசியும், சாதி மோதலை தூண்டும் விதத்தில் நடந்து கொண்டனர். விழாவிற்கு வந்தவர்கள் திறந்த வாகனங்களிலும் சரக்கு வாகனங்களிலும், வாகனங்களின் மேற்கூரையில் ஏறி நடனம் ஆடியும், ஆபாசமான வார்த்தைகளை பேசியும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தனர். 

விழா முடிந்தவுடன் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அப்பகுதி முழுவதையும் சுத்தம் செய்து தரவில்லை. புராதன சின்னமான கடற்கரை கோவில் மேல் ஏறி அதில் அவர்கள் கட்சி கொடியை கட்டி புராதன சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க முற்பட்டனர். பத்து மணிக்குள் கூட்டத்தை முடித்துக் கொள்வதாக விழா அமைப்பாளர்கள் உறுதி அளித்திருந்த போதும், இவ்விழாவில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் பேசும் போது, "11 மணிக்குப் பேசறேன், போடு வழக்க. அதெல்லாம் நமக்குக் கவல கிடையாது" என்று கூறியுள்ளார். 

ராமதாஸ் அவர்களின் ‘வழக்குப் போடுங்கள்' என்ற கோரிக்கையை ஏற்று...:

 பத்து மணிக்குள் விழாவை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை உதாசீனப்படுத்திய ராமதாஸ் அவர்கள் மீது ‘வழக்குப் போடுங்கள்' என்ற அவரது கோரிக்கைக்கு ஏற்ப வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக் கொண்டு, நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை அவர் ஏற்றுக் கொள்வார் என்று நான் நம்புகிறேன். 

இளைஞர் பெருவிழா என்று நடத்தப்பட்ட இந்த விழாவிற்கான விளம்பர சுவரொட்டிகளில் சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் புகைப்படத்தைப் பயன்படுத்தி உள்ளனர். இளைஞர்களை நல்வழிப்படுத்துவதாகக் கூறும் ராமதாஸ், சந்தன மரக் கடத்தல் வீரப்பனை இளைஞர்கள் பின்பற்றி நடக்க வேண்டும் என்று சொல்கிறாரா? இல்லையென்றால் எதற்காக சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் புகைப்படம் சுவரொட்டிகளில் பயன்படுத்தப்பட்டது? 

தமிழ்நாட்டில், பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று கூறும் ராமதாஸ், முன்னின்று நடத்திய இந்த விழாவில், பெரும்பாலான இளைஞர்கள் மது குடித்து விட்டுதான் வந்து இருந்தார்கள். இப்படித்தான், திரு. ராமதாஸ் இளைஞர்களை நல்வழிப்படுத்துகிறாரா? கடந்த 28.4.2000 அன்று நடந்த விழாவில் பங்கேற்றவர்கள், மாமல்லபுரம், புதுப்பட்டினம், வாயலூர் காலனி ஆகிய இடங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்துள்ளனர். 26.4.2002 அன்று நடைபெற்ற விழாவின் போதும், மரக்காணத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

ஒழுங்கீனமான முறையில் நடந்து கொள்ளும் போது...:

பொதுவாக, பல்வேறு அரசியல் மற்றும் சாதி ரீதியான அமைப்புகள் சில காரணங்களுக்காக தங்கள் பலத்தை காட்டும் விதத்தில், ஊர்வலம், பொதுக்கூட்டம், மாநாடு, நினைவு தின நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தும் போது, அந்நிகழ்ச்சிகளுக்கு பெருமளவில் வாகனங்களில் வந்து செல்பவர்கள் குறிப்பிட்ட நேரங்களில் குறிப்பிட்ட சாலை வழியே வந்து செல்லும் போது, காவல் துறையினர் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படாமல் திறந்த வாகனங்களில் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொள்ளும் போதும், வழி நெடுக சாலையோர உணவகங்களில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தகராறுகளில் ஈடுபடும் போதும், மாற்று கட்சி மற்றும் பிற அமைப்புகளின் கொடி மற்றும் அடையாள சின்னங்களைச் சேதப்படுத்தும் போதும், அவர்களை கட்டுப்படுத்துவது என்பது காவல் துறையினருக்கு மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது. 

அதிகமான எண்ணிக்கையில் வாகனங்களில் செல்லும் போது, காவல் துறையினரின் அறிவுரைகளுக்கு அவர்கள் செவி சாய்ப்பதில்லை. இது போன்ற விழாக்களுக்கு காவல் துறையினர் அனுமதி தர மறுத்தால், விழா அமைப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகி, அங்கே சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நடக்க மாட்டோம், காவல் துறையினருக்கு கட்டுப்படுவோம், அமைதிக்கு ஊறு விளைவிக்க மாட்டோம் என பல்வேறு உத்தரவாதங்களை உயர் நீதிமன்றம் முன்பு அளிக்கின்றனர். உயர் நீதிமன்றமும், இவர்களின் உத்தரவாதங்களை ஏற்றுக் கொண்டு, அவர்களுடைய பின்னணியை புரிந்து கொள்ளாமல், கடந்த காலங்களில் இது போன்ற விழா எப்படி நடத்தப்பட்டது என்பதை பார்க்காமல், சில நிபந்தனைகளின் அடிப்படையில் விழாவிற்கு அனுமதி வழங்குகிறது. ஆனால், விழா நடைபெறும் போது சென்னை உயர் நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனைகளையும் இவர்கள் கடைபிடிப்பதில்லை. 

இதுவே, இது போன்ற கூட்டங்களின் போது பிரச்சனைகள் ஏற்பட காரணமாகிறது. மேலும், அவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் போது, காவல் துறையினர் தலையிட்டு நடவடிக்கை எடுத்து தடுக்கின்றனர். இது போன்ற சமயங்களில் ஒரு தரப்பினர், காவல் துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாக குறை கூறுவதும், மற்றொரு தரப்பினர் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறை கூறுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. 

இந்த அரசு, ஒரு போதும் வன்முறைகளை சகித்துக் கொள்ளாது. தங்கள் சுய லாபத்திற்காக அப்பாவி பொதுமக்களை சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் தூண்டிவிட்டு வன்முறைச் செயல்களுக்கு காரணமாக இருப்பவர்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கு ஊறு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எந்தவித கருணையும் இன்றி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

வன்முறையில் ஈடுபடுவோர் மீதும், பொது அமைதிக்கு ஊறு விளைவிப்போர் மீதும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் இவ்வரசு தயங்காது எனவும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இச்சம்பவங்கள் தொடர்பாக, விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இதுவரையில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் குற்றவாளிகள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மரக்காணத்தில், இரண்டு நாட்கள் முகாமிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, சுமூகநிலை ஏற்படுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் பால் ஆகியவை வழங்கப்பட்டன. மரக்காணத்தில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த 9 நபர்களின் கூரை வீடுகள் முழுவதுமாகவும், ஒரு நபரின் கூரைவீடு பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மாட்டுக் கொட்டகை, பெட்டிக் கடை, வைக்கோல் போர் என 7 நபர்களின் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இதர வகுப்பைச் சேர்ந்த ஒருவரின் குடிசை வீடு மற்றும் இருவரின் கடைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. 

இவர்கள் அனைவருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 50,000 ரூபாய் வழங்கப்படும். இதுவன்றி, கூரை வீடுகளை இழந்த அனைவருக்கும் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரப்படும். இந்தச் சம்பவத்தில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று பேர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 25,000 ரூபாயும், புறநோயாளிகளாக சிகிச்சைப் பெற்று இல்லங்கள் திரும்பியுள்ள 17 நபர்களுக்கு தலா 10,000 ரூபாயும் வழங்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

நன்றி : தமிழ் இணையப் பத்திரிக்கை
-'பரிவை' சே.குமார்.

மரக்காணம் கலவரம்: நடந்தது என்ன?- ஜெ. விளக்கம் - பகுதி - 2


16 நிபந்தனைகளுடன் அனுமதி:

இது போன்ற கூட்டங்களுக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கப்படாத தருணங்களில், சம்பந்தப்பட்டவர்கள் உயர் நீதிமன்றம் சென்று தங்களுக்கு சாதகமான உத்தரவுகளை பெற்றுள்ள நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, வன்னியர் சங்கத்தினருக்கு 25.4.2013 அன்று மேற்படி விழா நடத்துவதற்கு கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியது. 

1- விழாவின் போதோ அல்லது அதற்கு முந்தைய கூட்டங்களிலோ வன்முறையைத் தூண்டும் விதமாகவோ அல்லது பிற வகுப்பினர் மனம் புண்படும்படியாகவோ எவரும் பேசக்கூடாது. 

2- விழாவின் போது வன்முறையை தூண்டும் கோஷங்களை எழுப்பவோ, வன்முறையை தூண்டும் விதமான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வரவோ கூடாது. 

3- மாநாட்டிற்கு வருபவர்கள் திறந்த வகை வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. 

4- வாகனங்களின் மேல் கூரையின் மேல் அமர்ந்து வரக் கூடாது. வாகனங்களில் வருபவர்கள் வரும் வழிகளில் கோஷங்கள் எழுப்பக் கூடாது. வாகனங்களில் ஒலி பெருக்கிகள், கட்டாயமாக பொருத்தி வரக் கூடாது. 

5- பிரச்சனைக்குரிய பேச்சுகளை பேசும் பேச்சாளர்களை பேச அழைக்கக் கூடாது. 

6- விழா நடக்கும் இடத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடவசதிகள், கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள் மற்றும் வரும் தொண்டர்களின் இதர வசதிகள் குறித்து விழா அமைப்பாளர்கள் தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மேலும், விழா முடிந்தவுடன் அந்த இடம் சுற்றுப்புற சூழல் பாதிப்பின்றி சுத்தப்படுத்தப்பட வேண்டும். 

7- வாகனங்கள் நிறுத்துமிடங்களில் தகுந்த விளக்கு வசதிகள், தற்காலிக பாதுகாப்புத் தடைகள், ஒலி பெருக்கி வசதிகள் செய்து தரப்பட வேண்டும். 

8- மாமல்லபுரத்தில் உள்ள தொல்லியல் துறை சம்பந்தப்பட்ட புராதன சின்னங்களுக்கு சேதம் விளைவிக்கும் எந்த செயலையும் மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும் எந்த செயலையும் செய்யக் கூடாது. 

9- விழா தொடர்பான போர்டுகளை காவல் துறையினரின் அனுமதியுடன் பிரச்சனை இல்லாத இடங்களில் அமைத்து, கட்சி தொண்டர்களை நியமித்து அவற்றிற்கு சேதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஜோதி எடுத்துக் கொண்டு தொடர் ஓட்டமாக வருவதற்கு அனுமதியில்லை: 

10- விழா சம்பந்தமாக பிற மாவட்டங்களில் இருந்து வரும் ஒவ்வொரு வாகனமும் அதில் வரும் தொண்டர்கள் பற்றிய விவரங்களை ஒரு நாள் முன்பு, அதாவது 24.4.2013 அன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். 

11- ஒலி பெருக்கிகள் நிகழ்ச்சி நடத்தும் பகுதிகளில் மட்டுமே அமைத்துக் கொள்ளப்பட வேண்டும். பெட்டி வடிவ ஒலி பெருக்கியினை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

12- ஜோதி எடுத்துக் கொண்டு தொடர் ஓட்டமாக வருவதற்கு அனுமதியில்லை. 

13- விழாவானது 25.4.2013 அன்று மாலை ஐந்து மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு அன்று இரவு பத்து மணிக்குள் கண்டிப்பாக முடிக்கப்பட வேண்டும். 

14- பொது சொத்துக்களுக்கோ, இதர சொத்துக்களுக்கோ ஏதேனும் சேதம் ஏற்பட்டால் விழா அமைப்பாளர்களே முழு பொறுப்பாளர்கள். அதற்குரிய நிவாரண தொகையை வழங்க வேண்டும். இது தவிர சட்டப்படியாக எடுக்கப்படும் குற்றவியல் நடவடிக்கைக்கும் கட்டுப்பட வேண்டும். 

15- சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல் துறையினரால் அவ்வப்போது வழங்கப்படும் அனைத்து அறிவுரைகளையும் ஏற்று கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். 

16- மேற்கூறிய நிபந்தனைகளை மீறினால் அதற்கு விழா அமைப்பாளர்களே முழு பொறுப்பாளர்கள். 

இந்த நிபந்தனைகள் அடங்கிய கடிதத்தை திருக்கச்சூர் ஆறுமுகம் 19.4.2013 அன்று ஒப்புதல் கையொப்பமிட்டுப் பெற்றுக் கொண்டுள்ளார். திருக்கச்சூர் ஆறுமுகம் தந்த உத்தரவாதம் மேலும், 20.4.2013 அன்று, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இவ்விழா அமைப்பாளர்களை அழைத்து, ஒரு கூட்டம் நடத்தி, அதில் விழா எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த உறுதி மொழியையும், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தினையும் அமைப்பாளர்களான திருக்கச்சூர் ஆறுமுகம் மற்றும் சிலரிடமிருந்து பெற்றுள்ளார். மேலும், இச்சங்கத்தின் தலைவர்கள் காவல் துறை இயக்குநர் மற்றும் காவல் துறை கூடுதல் இயக்குநர் சட்டம் மற்றும் ஒழுங்கு, ஆகியோரை நேரில் சந்தித்து காவல் துறையினர் விதிக்கும் நிபந்தனைகளை கடைபிடித்து விழாவின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதுமில்லாமல் பார்த்துக் கொள்கிறோம் என உத்தரவாதம் அளித்தனர். 

காவல் துறையில் உள்ள சுமார் 90,000 காவலர்களை வைத்து எப்பொழுதும் உள்ள பாதுகாப்பு மற்றும் இதர முக்கிய பணிகளுக்கு உண்டான காவலர்கள் போக மீதமுள்ள காவலர்களை கொண்டு, ஒரே நேரத்தில் அடிக்கடி மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது என்பது சிரமமான காரியமாகும். கடந்த 25.4.2013 அன்று மாமல்லபுரத்தில் சித்திரைப் பெருவிழா நடைபெற்றது மட்டுமல்லாமல், மாநிலத்தில், திருவண்ணாமலையில் சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு சுமார் 15 லட்சம் பக்தர்கள் கூடிய நிகழ்ச்சிக்கும், மதுரையில் சுமார் ஐந்து லட்சம் பேர் பங்கேற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய நிகழ்ச்சிக்கும், சென்னை, சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கும், பெருமளவில் காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்தது. 

ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு இருப்பினும், சித்திரை முழு நிலவு விழாவையொட்டி ஏற்படக்கூடிய சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, மாமல்லபுரத்தில், 25.4.2013 அன்று, காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் தலைமையில், மூன்று காவல் கண்காணிப்பாளர்கள், நான்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஒரு காவல் உதவி கண்காணிப்பாளர், 25 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 47 காவல் ஆய்வாளர்கள், 99 காவல் உதவி ஆய்வாளர்கள், 935 இதர காவல் ஆளிநர்கள், 10 சிறப்பு காவல் படை நிறுமங்கள் மற்றும் ஆயுதப்படை பிரிவுகளைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் என மொத்தம் 1,910 பேர் விழா பாதுகாப்பு அலுவல்களை மேற்கொள்ளுதல், விழாவின் போது போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், விழாவிற்கு வரும் வாகனங்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி வைக்கச் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். 

இத்துடன், இந்த விழாவிற்கு வரும் வாகனங்கள் வரும் சாலைகளிலும், பிரச்சனைக்குரிய பகுதிகளிலும், குறிப்பாக காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் மொத்தம் 2,724 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டிருந்தனர். வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்பார்வையிட்டு வந்தார். சித்திரை விழாவை முன்னிட்டு, 25.4.2013 அன்று பிற்பகல், வன்னியர் சங்கத்தைச் சார்ந்தவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் மூலம் பிரதான சாலைகளில் மாமல்லபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். 

காவல் துறையினர் அனைத்து சாலைகளிலும் தக்க பாதுகாப்பு அளித்து வந்தனர். வாகனத்தை நிறுத்தி 30 பேர் உணவு மற்றும் மது அருந்திக் கொண்டு....: இந்நிலையில் அன்று பிற்பகல் 1.30 மணியளவில், புதுச்சேரியில் இருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக வாகனங்களில் தொண்டர்கள் வந்து கொண்டிருந்த போது, விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், கடையம் தெரு காலனி பேருந்து நிறுத்தம் அருகில் சாலையோரம் மரம் ஒன்றின் கீழ் வாகனத்தை நிறுத்தி சுமார் 30 பேர் உணவருந்திக் கொண்டு இருந்துள்ளனர். அதில் சிலர் மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர். 

அப்போது, அக்காலனியைச் சேர்ந்த சிலர் ஏற்கெனவே தகராறு நடந்த இடத்தில் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்க, வாகனத்தில் வந்தவர்கள் அவர்களை அடித்து துரத்தியுள்ளனர். அவர்கள் காலனிக்கு சென்று தகவல் தெரிவித்ததின் பேரில், அக்காலனியைச் சேர்ந்த சுமார் 200 பேர் மரக்காணம் கிழக்கு கடற்கரைச் சாலைக்கு வந்து சாலையில் கற்களையும், கட்டைகளையும் போட்டு மறியலில் ஈடுபட்டனர். மரக்காணத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததையடுத்து, மரக்காணத்திற்கு மேல் மாமல்லபுரம் நோக்கி பாட்டாளி மக்கள் கட்சியினர் வாகனங்கள் சென்றால் வழியில் உள்ள காலனிகளில் பிரச்சனை ஏற்படும் என ஆதி திராவிட இனத்தவர் தெரிவித்தனர். மாற்று வழியில் செல்லுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியதை கேட்காமல் விழாவிற்கு வந்தவர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தி, வாகனங்களில் இருந்து இறங்க ஆரம்பித்தனர்.

8 வீடுகளுக்கு தீ.. மாட்டுக் கொட்டகைக்கும் தீ:

இதனால், அவ்வழியாக வாகனங்களில் வந்தவர்களுக்கும், காலனியைச் சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். வாகனங்களில் வந்தவர்கள் காலனிக்குள் சென்று எட்டு குடிசை வீடுகள் மற்றும் மாட்டுக் கொட்டகை ஆகியவற்றிற்கு தீ வைத்ததுடன், அவ்வழியே வந்த மூன்று அரசு பேருந்துகள், ஒரு கார் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றையும் தீயிட்டு கொளுத்தினர். இது பற்றி தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, "வருண்" வாகன உதவியுடன் தீயை அணைத்துள்ளனர். 

காவல் துறையினர் அங்கு கூடியிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு கூறியும் அதற்கு செவிமடுக்காமல், அவர்கள் தொடர்ந்து கற்களை வீசியதால் பணியில் இருந்த காவல் ஆளிநர்கள் மூன்று பேர் காயமுற்றனர். சம்பவம் குறித்து அறிந்தவுடன், அங்கு விரைந்த விழுப்புரம் காவல் கண்காணிப்பாளரின் வாகனத்தையும் கல் வீசி தாக்கியுள்ளனர். அந்தக் கூட்டத்தை கலைந்து செல்லும்படி பல முறை எச்சரித்தும், அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து கற்கள் வீசி தாக்கியதால், காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசி அக்கூட்டத்தை கலைக்க முயன்றுள்ளனர். 

அதன் பின்னரும் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டதால், மேலும் கலவரம் பரவாமல் தடுக்கவும், உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படுவதைத் தடுக்கவும், காவல் துறையினர் உரிய எச்சரிக்கைக்கு பின்பு லேசான பலப்பிரயோகம் செய்த போதும், கலைந்து செல்லாமல் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியினர், வன்முறையில் ஈடுபட்டனர். வேறு வழியின்றி வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு: இதனால் வேறு வழியின்றி, காவல் துறையினர் உரிய எச்சரிக்கைக்கு பின்னர், துப்பாக்கியால் வானத்தை நோக்கி மூன்று ரவுண்டுகள் சுட்டும், ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர்.

 மேலும், விழாவிற்கு சென்றவர்கள் அனுமந்தை சுங்கச் சாவடியில் தகராறு செய்து, கண்ணாடிகள், கேமரா, ஏணி, அறிவிப்பு விளக்குகள், பூந்தொட்டிகள், கம்பி வேலி ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளனர். சுங்கச்சாவடி ஊழியர்களும் தாக்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம், கூனிமேடு பகுதியில் ஒரு கடையையும் சேதப்படுத்தியுள்ளனர். மேலும், மாமல்லபுரத்தில் காவல் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை வாகனம் ஒன்றையும் சேதப்படுத்தினர். 

விழாவிற்கு சென்றவர்கள் பல்வேறு இடங்களில் 6 அரசுப் பேருந்துகள், 3 காவல் வாகனங்கள் உள்ளிட்ட 11 வாகனங்களை கல் வீசி சேதப்படுத்தினர். இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர, இவ்விழாவில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு இடங்களில் கல் வீச்சில் ஈடுபட்டதால், பல வாகனங்கள் சேதம் அடைந்தன. ஆனால் இது குறித்து வாகன உரிமையாளர்கள் புகார்கள் எதையும் இதுவரை அளிக்கவில்லை.

நன்றி : தமிழ் இணையப் பத்திரிக்கை

-'பரிவை' சே.குமார்

மரக்காணம் கலவரம்: நடந்தது என்ன?- ஜெ. விளக்கம் - பகுதி - 1

மரக்காணம் கலவரம் குறித்து தமிழக சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ குரு இன்று காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தமிழக சட்டசபையில் இன்று மரக்காணம் கலவரம் குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்கப்பட்டது. 

பண்ருட்டி ராமச்சந்திரன் (தே.மு.தி.க.), ஜெ.குரு (பா.ம.க.), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி-, கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி) உள்ளிட்டோர் விவாதத்தில் பேசினர். 


உறைய விட்டு வாள் எடுத்தா ரத்த ருசி காட்டுவோம்: 

இதற்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா விரிவான விளக்கம் அளித்தார். அதன் விவரம்: மாமல்லபுரத்தில் 25ம் தேதி வன்னியர் சங்கம் அதாவது பாட்டாளி மக்கள் கட்சி, "சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா" ஒன்றை நடத்த அறிவித்திருந்தது. இவ்விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெருந்திரளாக உறுப்பினர்கள் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தது. இதில் பங்கேற்கும்படி வன்னியர் சங்கத்தின் சார்பாக, தொலைக்காட்சிகள் மற்றும் நாளிதழ்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டன. 

"வங்க கடலா, வன்னிய கடலா, ஒரு கோடி வன்னியர்கள் சித்திரை பெருவிழாவிற்கு அலைகடலென திரண்டு வாரீர்" எனவும், "கடல் நீரை அள்ள முடியாது, வன்னியரை வெல்ல முடியாது" எனவும், "நாங்க உறைய விட்டு வாள் எடுத்தா ரத்த ருசி காட்டி வைக்கும் வழக்கம் எங்க குல வழக்கமடா" எனவும், "சோழர் வம்சம் இது சோறு போடும் வம்சம் இது, எதிரிகள் யாரும் வந்தால் கூறு போடும் வம்சம் இது" எனவும் சுவரொட்டிகள் வாயிலாக விளம்பரங்கள் செய்யப்பட்டன. 

இவ்விழாவிற்கு அனுமதி வழங்கக்கூடாது என உத்தரவிடக்கோரி, இந்தியன் மக்கள் மன்றத்தின் தலைவர் மற்றும் பத்திரிகையாளர் வராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை 16.4.2013 அன்று விசாரித்த உயர் நீதிமன்றம், அம்மனு மீது காவல் துறையினர் 19.4.2013க்குள் விழா அமைப்பாளர்களுக்கு விளக்கம் கோரும் குறிப்பாணை ஒன்றை சார்வு செய்து, அதற்கு அளிக்கப்படும் பதில் விளக்கத்தின் அடிப்படையில் விழாவிற்கு அனுமதி வழங்குவது குறித்துத் தீர்மானிக்குமாறு உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தது. 


சாதி உணர்வைத் தூண்டும் விதத்தில் பேசி...:

இதனையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மேற்படி விழா அமைப்பாளர்களுக்கு இவ்விழா நடக்கும் போது இரு சமுதாயத்தினர் இடையே சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டதையும்; குறிப்பாக கடந்த 2000 மற்றும் 2010ம் ஆண்டு இவ்விழாவின் போது நடந்த கலவரத்தை சுட்டிக் காட்டியும்; இவ்விழாவிற்கு வந்த தொண்டர்கள் வாயிலாக விழுப்புரம், கடலூர், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டதையும், இவ்விழாவில் தலைவர்கள் பேசும் போது சாதி உணர்வைத் தூண்டும் விதத்தில் பேசி இருந்ததையும்; அப்பேச்சுக்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, இரு சமுதாயத்தினர் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தியதையும்; இவ்விழா சம்பந்தமாக காவல் துறையினர் அளித்த நிபந்தனைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதையும்; கால அவகாசத்தை மீறி இவ்விழாவை நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதையும்; இதற்கு முன்பு இவ்விழாக்களின் போது நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளையடுத்து பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதையும்; விழாவின் போது அதிகப்படியான கூட்டத்தை கூட்டுவதற்கு போதிய முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படாததையும்; ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை சாலையில் பல மணி நேர கடும் வாகனப் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் இன்னலுக்கு ஆளானதையும்; மேற்படி விழா நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் கடற்கரை ஒழுங்கு முறைப் பகுதி என்பதால், அதற்குரிய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை, மாசுக் கட்டுப்பாட்டுத் துறை ஆகிய துறையினர் இடமிருந்து முன் அனுமதி பெறாததையும்; விழா நடக்கும் இடம், தொல்லியல் துறை பராமரித்து வரும் கடற்கரைக் கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளதையும்; அத்துறையினர் இடமிருந்து அனுமதி பெறாததையும் விவரமாகக் குறிப்பிட்டு, விழாவிற்கு ஏன் அனுமதி மறுக்கக்கூடாது என கேட்டு இதற்கான விளக்கத்தை அளிக்குமாறு விழாவிற்கு அனுமதி கோரியிருந்த திருக்கச்சூர் ஆறுமுகமுக்கு குறிப்பாணை வழங்கப்பட்டது. சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேச மாட்டோம்: இதற்கான பதில் கடிதம், திருக்கச்சூர் ஆறுமுகத்திடமிருந்து காஞ்சிபுரம் காவல் துறையினரால் 18.4.2013 அன்று பெறப்பட்டது. 

அக்கடிதத்தில், இவ்விழாவினால் எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாது எனவும்; ஜெ.குரு உள்ளிட்ட தலைவர்கள் எவரும் சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், பிற சமூகத்தினர் இடையே பிரிவினையைத் தூண்டும் வகையிலும் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டார்கள் எனவும்; திட்டமிட்டபடி நிகழ்ச்சியைத் துவக்கி, காவல் துறையினர் குறிப்பிடும் நேரத்திற்கு முன்பாக எந்த விதமான கால தாமதமும் இன்றி நிகழ்ச்சி முடித்துக் கொள்ளப்படும் எனவும்; இந்த விழாவின் மூலம் எந்த விதமான சாதி பிரச்சனை மற்றும் சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விழாவில் கலந்து கொள்பவர்களால் ஏற்படாது எனவும்; விழாவில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் எனவும்; போக்குவரத்து பாதிக்காத வகையில் பொதுமக்களின் மருத்துவ சேவை மற்றும் அவசர அவசியக் காரியங்களுக்கு சென்று வர வழி அமைத்து தரப்படும் எனவும், விழா நடத்தும் பகுதி முழுவதும் சுற்றுசூழலுக்கு பாதிப்பு இல்லாமல் சுத்தம் செய்து தரப்படும் எனவும்; காவல் துறையினர் விதிக்கும் நிபந்தனைகள் அனைத்தையும் முழுமையாக ஏற்றுக் கொள்வதாகவும்; காவல் துறையினர் வழிகாட்டுதல்படி அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும் விழா நடத்தப்படும் என்றும் திருக்கச்சூர் ஆறுமுகம் அந்தக் கடிதத்தில் உறுதியளித்து இருந்தார்.

-நன்றி : தமிழ் இணையப் பத்திரிக்கை
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

அரசியல் பரபரப்பு : விஜயகாந்துடன் திருமா திடீர் சந்திப்பு


மனசின் முதல் தொடர்கதை

கலையாத கனவுகள் - 3ம் பாகம் படிக்க...  இங்கே சொடுக்கவும்...


 tirumavalavan meets vijayakanth

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். 

மாமல்லபுரத்தில் அண்மையில் நடைபெற்ற வன்னியர் சங்க விழாவிற்கு சென்ற பாமகவினர் மரக்காணம் அருகே தலித் மக்கள் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியதோடு, வீடுகள், பேருந்துகளை தீ வைத்து எரித்தனர். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், காடுவெட்டி குரு ஆகியோர்தான் காரணம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் குற்றம் சாட்டியிருந்தார். 

இந் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை இன்று பகல் 12 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பண்ருட்டி ராமச்சந்திரனும் உடன் இருந்தார். அப்போது மரக்காணம் கலவரம் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. 

அரசியல் கட்சியினர் அறிக்கை: 

மரக்காணம் வன்முறை தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்கள் மவுனத்தை கலைக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்திருந்தார். திமுக தலைவர் கருணாநிதியை நேற்று சந்தித்து பேசினார். அவரிடம் மரக்காணம் கலவரம் குறித்து விளக்கி கூறினார். இதையடுத்து இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் தா.பாண்டியனை திருமாவளவன் சந்தித்து பேசினார். 

இதையடுத்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கை விடுத்ததோடு, வன்முறைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார். இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாததற்கு கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் திருமாளவன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஒரு கட்டத்தில் விஜயகாந்த்துடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் திருமாவளவன், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்தால் அதனை ஆதரிக்க வேண்டியிருக்கும். எனவே தேர்தல் கூட்டணி அமைவதற்கு முன்பாகவே விஜயகாந்த்துடன் சமாதான உடன்படிக்கையை மேற்கொண்டால் நன்றாக இருக்கும் என்று கருதிய திருமாவளவன், இன்று அவரை சந்திருக்கலாம் என்று பேசப்படுகிறது.


2ம் தேதி ஆர்ப்பாட்டம்-திருமாவளவன்: 

இந் நிலையில் மரக்காணம் கலவரம் தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அண்மைக் காலமாக பாமகவினர், அப்பாவி தலித் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றி வருகின்றனர். வட மாவட்டங்களில் தலித் மக்கள் குறிவைத்துத் தாக்கப்படுவது அதிகரித்து வருகின்றன. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் சாதி சக்திகளை ஒருங்கிணைத்து ஏழை எளிய தலித் மக்களுக்கெதிராகத் தூண்டிவிடும் ஆபத்தான போக்குகளையும் கடைப்பிடித்து வருகின்றனர். 

நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிரண்டு தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இத்தகைய நடவடிக்கைகள் மூலம் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்து வருகின்றனர். கடந்த 25ம் நாள் மாமல்லபுரத்தில் நடத்திய விழாவில் அப்பாவி வன்னிய இளைஞர்களுக்கு சாதி வெறியை ஊட்டியுள்ளனர். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் மீது பழிசுமத்த முயற்சிக்கிறார்கள். 

மரக்காணம், கழிக்குப்பம் கிராமங்களில் தலித் மக்களின் 15 வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் சேட்டு என்பவர் பலியாகியுள்ளார். ஏகாம்பரம் என்பவர் உயிருக்குப் போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பல இளைஞர்கள் காயம் அடைந்துள்ளனர். கூனிமேடு என்னுமிடத்தில் இஸ்லாமியர்களும் பொதுமக்களும் தாக்கப்பட்டுள்ளனர். அரசுப் பேருந்துகளும் கொளுத்தப்பட்டுள்ளன. 


வடமாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தலித் மக்கள் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர். நேற்று திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தலித் மாணவர்கள் இருவர் ஈட்டி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சாதி வெறியைத் தூண்டிவரும் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வரும் 2ம் தேதி அன்று விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். முற்போக்கு சக்திகள், ஜனநாயக சக்திகள் யாவரையும் ஒருங்கிணைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். 

தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட, சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க சனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் விடுதலைச் சிறுத்தைகளின் இந்த அறப்போராட்டத்திற்கு ஆதரவு நல்கிட வேண்டுகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி : தட்ஸ்தமிழ் இணையப் பத்திரிக்கை

-'பரிவை' சே.குமார்.

சூடான அரசியல் : சோனியா, மன்மோகன் ஊடல் - பதவி வேண்டாம்: வைகோ


மனசின் முதல் தொடர்கதை

கலையாத கனவுகள் 3-ம் பாகம் படிக்க...  இங்கே சொடுக்கவும்...



பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இடையே கருத்து வேறுபாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2ஜி விவகாரத்தில் மன்மோகன் சிங் நடந்து கொண்ட விதத்தை சோனியா ஏற்கவில்லை என்றும், அதே போல நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரின் செயல்பாடுகளையும் அவர் ஏற்கவில்லை என்றும் தெரிகிறது. ஆனால், அஸ்வனி குமாருக்கு மன்மோகன் சிங் ஆதரவாக உள்ளார். நிலக்கரி ஊழல் விவகாரத்தில் சிபிஐயின் நடவடிக்கைகளில் அஸ்வனி குமார் தலையிட்டது உறுதியாகிவிட்டது.

இதனால் அவரை பதவி விலகச் செய்ய வேண்டும் என்பது காங்கிரஸ் தலைவர்களின் கருத்தாக உள்ளது. ஆனால், அவர் பதவி விலகினால் மத்திய அரசால் சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுகிறது என்ற கருத்து வலுப்பட்டுவிடும் என்பதால் அதை பிரதமர் விரும்பவில்லை.

அதே நேரத்தில் அஸ்வனிகுமார் பதவி விலகாவிட்டால் அது கட்சிக்கும், ஆட்சிக்கும் சேர்த்து பிரச்னையை உருவாக்கும் என சோனியா நினைக்கிறார். மேலும் சமீப காலமாக மன்மோகன் சிங் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பது கவலை அளிக்கிறது என்று நேரடியாகவே சோனியா விமர்சித்ததாகவும் தகவல்கள் வருகின்றன.

டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலையில் கூடிய காங்கிரஸ் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் தான் இந்தக் கருத்தை சோனியா முன் வைத்துள்ளார். இக் கூட்டத்தில் சோனியா, பிரதமர் தவிர, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே, நிதியமைச்சர் ப. சிதம்பரம், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் பிரதமர் மன்மோகன் சிங்கின் தன்னிச்சையாக செயல்பட்டதால்தான் கூட்டணியில் இருந்து திமுக விலக நேர்ந்ததாகவும் சோனியா காந்தி கருதுவதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் பிரதமரை நீக்கும் அளவுக்கு காங்கிரஸ் தலைமையிடம் அதிகாரம் இல்லை என்றும், அந்த அளவுக்கு மன்மோகன் சிங் தனது அதிகாரத்தை நிலை நிறுத்துக் கொண்டுவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

பதவிக்காக இந்த பாதயாத்திரை இல்லை:  வைகோ

அரசியல் நோக்கத்துடனோ பதவிக்காகவோ இந்த பாதையாத்திரை இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். பூரண மதுவிலக்கு கோரி பொள்ளாச்சியில் இருந்து ஈரோடு வரை வைகோ நடை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இவர் வியாழக்கிழமை மாலை நத்தக்காடையூரில் இருந்து புறப்பட்டு மருதுறை, கே.ஜி.வலசு வழியாக சென்னிமலைக்கு வந்தார். பின்னர் சென்னிமலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அங்கு அவர் பேசியதாவது:


நான் பதவிக்காக இந்த நடைபயணத்தை நடத்த வில்லை. மதுவை தடை செய்யகோரி நடைபெறும் இந்த நடைபயணத்திற்கு ஏராளமான தாய்மார்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள். நம் எதிர்கால சந்ததியினரை காப்பாற்றவே இந்த நடைபயணம். சென்னிமலையில் கைத்தறி தொழிலை நம்பி ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. நூல் விலை உயர்வு, மின் பற்றாக்குறை போன்ற காரணங்களால் நெசவுத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

நெசவு தொழிலாளர்கள் தங்களின் 80 சதவீத கூலியை மதுக் கடையில் கொடுத்து விடுகிறார்கள். பதவிக்காக போராடமல் கடைசி வரை நேர்மையை கடைபிடிப்பேன். மது போதை மனிதனின் உடல், ஒழுக்கம் பண்பாட்டை கெடுத்து விடுகிறது. அ.தி.மு.க.- தி.மு.க.வுக்கு மாற்றாக மக்கள் ம.தி.மு.க.வை எதிர் பார்க்கிறார்கள் இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

நன்றி : தமிழ் இணையப் பத்திரிக்கை
-'பரிவை' சே.குமார்

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

புழல் சிறையில் விஜயகாந்த் ஆவேசம்

நில அபகரிப்பு புகார் வழக்கில் கைதாகி புழல் சிறையில் உள்ள திருத்தணி தேமுதிக எம்.எல்.ஏவை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது சிறையில் தன்னை நடத்தப்படும் முறை பற்றி கண்ணீர் மல்க கூறினார் எம்.எம்.ஏ அருண் சுப்ரமணியன். 

திருத்தணி தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மு.அருண்சுப்பிரமணியம். இவருக்கு சொந்தமாக வரதராஜ நகரில் இருக்கும் இடத்துக்கு அருகில் உள்ள நகராட்சி இடத்தையும் ஆக்கிரமித்து தடுப்பு சுவர் கட்டியதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு ஜூலை 18ம் தேதி அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 

ஜனாதிபதி தேர்தலில் தான் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. என்ற முறையில் வாக்களிக்க வேண்டும் என கூறி கோர்ட்டில் ஜாமீன் பெற்று அருண் சுப்பிரமணியம் வெளியே வந்தார். அவர் பொய்யான தகவல் கொடுத்து ஜாமீன் பெற்றதாகவும், எனவே அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனவும் போலீஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஏப்ரல் 8ம் தேதி ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார். 

இதையடுத்து தலைமறைவான அருண் சுப்பிரமணியம் எம்.எல்.ஏ. கடந்த 15ம் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அருண்சுப்ரமணியன் திருவள்ளூர் தே.மு.தி.க. மாவட்ட செயலாளராகவும் உள்ளார். அவரை அதிமுகவிற்கு இழுக்கவே கைது நடவடிக்கை பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 


டென்சனான விஜயகாந்த் 

இந்த நிலையில் எம்.எல்.ஏ அருண் சுப்ரமணியத்தை சந்திக்க நேற்று காலை புழல் சிறைக்குச் சென்றார் விஜயகாந்த். ஆனால் அவரது வாகனத்தை சிறை வளாகத்திற்குள் செல்ல சிறைத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை இதனையடுத்து டென்சனான விஜயகாந்த் காரில் இருந்து இறங்கி நடந்தே சென்றார். அவருடன் திருக்கோவிலூர் எம்.எல்.ஏ வெங்கடேசன், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ சேகர் ஆகியோர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். 

கண்ணீர் விட்ட எம்.எல்.ஏ 

அருண் சுப்ரமணியத்தை சந்தித்து 20 நிமிடங்கள் பேசிய விஜயகாந்த், ஆறுதல் கூறினார். அப்போது சிறையில் தன்னை நடத்தப்படும் விதம் குறித்து கண்ணீர் விட்டு அழுதாரம் அருண் சுப்ரமணியன். வெயிலுக்கு இதமாக தர்பூசணி, வெள்ளரி, வாழைப்பழங்களை வாங்கிச் சென்ற எம்.எல்.ஏக்களை அதனை அருண் சுப்ரமணியத்திடம் கொடுத்துவிட்டு வந்தனர்.

சிறையில் இருந்து வெளியில் வந்த விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 

நில அபகரிப்பு வழக்கில், அருண் சுப்ரமணியத்தை கைது செய்துள்ளனர். அவர், சட்டப்படி வழக்கை சந்தித்து வெளியில் வந்தால், மீண்டும் புது வழக்கு போடுவர். என் மீதும், 32 வழக்குகள் போட்டுள்ளனர். போலீசார் மக்களை காக்கும் பணி செய்யாமல், காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்கின்றனர். நான் போகும் இடத்தில் எல்லாம் போலீசாரை குவிக்கின்றனர். எனக்கோ, மக்கள் பாதுகாப்பிற்கோ, அதை செய்யவில்லை. நான் என்ன பேசுகிறேன், என் மீது, இன்னும் எத்தனை வழக்குகள் போடலாம் என்பதற்காகவே இதை செய்கின்றனர். 


சிறையில் இருப்பவர்கள் அதிமுகவுக்கு சென்றுவிட்டால், வழக்குகள் எல்லாம் வாபஸ் ஆகிவிடும். அருண் சுப்ரமணியன் நிலத்தை அபகரித்து கட்டடம் கட்டியதாக வழக்கு போட்டிருக்கின்றனர். அப்படி இருந்தால், அந்த கட்டடத்தை இடித்து, அரசு தேவைக்கு பயன்படுத்த வேண்டியதுதானே? அருண் சுப்ரமணியம் அதிமுகவுக்கு சென்றுவிட்டால், திருவள்ளூர் மாவட்டமே அங்கு சென்று விடும் என்று நினைப்பது, முட்டாள்தனமானது. 

அவரை நானே அதிமுகவுக்கு அனுப்பி வைக்கிறேன்; வைத்துக் கொள்ளுங்கள். கூட்டணி பற்றி பேசணுமா? நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்று கேட்கிறார்கள். கூட்டணி அமைத்தால் மட்டும் தான் ஜெயிக்க முடியுமா? கூட்டணி வைக்காமல் ஜெயிக்க முடியாதா?. கூட்டணி பற்றி இப்போது எதுவும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. கருணாநிதி பெரியவர் என்பதால், மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். அடுத்த தேர்தலில் ஜெயலலிதா அதிகாரத்தில் இருக்க மாட்டார் என்றார்.

நன்றி : தமிழ் தினப் பத்திரிக்கை
-'பரிவை' சே.குமார்

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

ஸ்டாலின் முடிவு - கருணாநிதி அதிருப்தி

மனசின் முதல் தொடர்கதை

கலையாத கனவுகள் தொடர்கதை 1-ம் பாகம் படிக்க...  இங்கே சொடுக்கவும்...

கலையாத கனவுகள் தொடர்கதை 2-ம் பாகம் படிக்க...  இங்கே சொடுக்கவும்...

----



தன்னிச்சையாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் எடுக்கும் முடிவுகளும், அவரது பேச்சும், கட்சிக்கு சாதகமாக அமையாமல், பாதகத்தை உருவாக்குவதால், அவர் மீது, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


சமீபத்தில் மதுரைக்கு சென்ற ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி வீட்டிற்கு சென்று, அவரை சந்தித்து பேச வேண்டும் என, கருணாநிதி விடுத்த கோரிக்கையை ஏற்காமல், அழகிரியை சந்திக்காமல், மதுரை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, சென்னை திரும்பினார்.தன் பேச்சை ஸ்டாலின் கேட்கவில்லை என்ற ஆதங்கம் கருணாநிதிக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் காங்கிரசுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என, ஸ்டாலின் பேசியதும், கருணாநிதிக்கு கூடுதல் அதிருப்தியை அளித்துள்ளது.



காங்கிரசுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால், பா.ஜ.,வுடன் - தி.மு.க., கூட்டணி வைக்க முடியுமா? எதற்காக ஸ்டாலின் இப்படி பேச வேண்டும். லோக்சபா தேர்தலில், இலங்கை தமிழர் பிரச்னை விஸ்வரூபம் எடுக்காமல் இருந்தால், மதவாத சக்தியை முறியடிப்பதற்கு, காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க., சேருவதற்கு வாய்ப்பு ஏற்படும். எனவே, காங்கிரசை ஏன் வீணாக பகைத்துக் கொள்ள வேண்டும். கூட்டணிக் கதவை மூடி வைக்க வேண்டிய அவசியமில்லை என, தி.மு.க., இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் கருதுகின்றனர்.



சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்துக்கு, எம்.ஜி.ஆர்., பெயரைச் சூட்ட வேண்டும் என, சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய போது, தி.மு.க., தரப்பில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஸ்டாலின் அத்தீர்மானத்தை வரவேற்றதும், கருணாநிதிக்கு பிடிக்கவில்லை. உடனடியாக, "மறைந்த தலைவர்களுக்கு மாசு கற்பித்தல் கூடாது' என்ற தலைப்பில், எம்.ஜி.ஆர்., பெயர் சூட்டுவதால் குழப்பம் ஏற்படும் என்ற அறிக்கையை கருணாநிதி வெளியிட்டார்.



தே.மு.தி.க., உடன் கூட்டணியும் எதிர்காலத்தில் உருவாகவில்லை என்றால், காங்கிரஸ் கூட்டணியும் கைவிட்டு விட்டால், தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்படும் என, கருணாநிதி தரப்பு கருதுகிறது.சட்டசபையில், சென்னை விமான நிலையத்திற்கு எம்.ஜி.ஆர்., பெயர் சூட்டுவதற்கு, ஸ்டாலின் வரவேற்றதும், கருணாநிதிக்கு பிடிக்கவில்லை. காமராஜரை ஆதரிப்பதால், தென் மாவட்டங்களில் காமராஜர் மீது அன்பு கொண்டவர்களின் ஓட்டுகள் தி.மு.க.,வுக்கு கிடைக்கும். ஆனால், எம்.ஜி.ஆரை ஆதரிப்பதால், தி.மு.க.,வுக்கு எந்த லாபமும் இல்லை என, கருணாநிதி தரப்பு கருதுகிறது. அதனால் தான், தன்னிச்சையாக ஸ்டாலின் எடுக்கிற சில முடிவுகள், கட்சிக்கு பாதகமாக அமைகின்றன. எனவே, அவர் கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஆலோசனை நடத்தி, முடிவு எடுக்க வேண்டும். அனைவரையும் ஸ்டாலின் அரவணைத்து செல்லும் மனப்பக்குவத்தை அடைய வேண்டும் என, தனக்கு நெருக்கமானவர்களிடம் கருணாநிதி ஆதங்கப்பட்டுள்ளார்.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

-நன்றி : தமிழ் தினப் பத்திரிக்கை
-'பரிவை' சே.குமார்

புதன், 17 ஏப்ரல், 2013

ஸ்டாலின் சந்திக்காமல் சென்றது குறித்து அழகிரி பதில்


அண்மையில் மதுரையில் சுற்றுப் பயணம் செய்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திமுகவின் தென்மாவட்ட அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியை சந்திக்காமலேயே புறக்கணித்துச் சென்ற விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், இன்று அதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதுபற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று முணுமுணுத்தபடியே செய்தியாளர்களைத் தவிர்த்துச் சென்றார்.

இன்று மதுரையில் நாராயணபுரம் பகுதியில் ரயில்வே பயணிகள் முன்பதிவு மையம் ஒன்றை திறந்து வைக்க வந்திருந்த மு.க. அழகிரி, பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது அவர், அண்மையில் என்னைச் சந்தித்த கனிமொழி, என் சகோதரி என்ற முறையிலேயே என்னைச் சந்தித்தார். கனிமொழியும் அப்படித்தான் கூறியிருக்கிறார் என்பதால், இதற்கு மேலும் இந்தச் சந்திப்புக்கு விளக்கம் ஏதும் தேவையில்லை என்றார்.

மேலும், மதுரையில் நான் கொண்டு வந்த பல திட்டங்களை அதிமுக அரசு முடக்கிவிட்டது. எதிர்க்கட்சிகளை மாநகராட்சியிலும், சட்டமன்றத்திலும் பேசவே அனுமதிக்க மறுக்கிறார்கள். இங்கே மதுரையில் 16 கழிப்பறைகளைக் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இலவச பயன்பாட்டுக்காகவே திறந்துவைத்தேன். அவை எல்லாவற்றையும் மதுரை மாநகராட்சி மேயர் இப்போது கட்டணக் கழிப்பிடங்களாக மாற்றி விட்டார். மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் சரியான வழியைக் கடைப்பிடிக்கவில்லை என்றார்.

பின்னர் அண்மையில் மதுரை வந்திருந்த ஸ்டாலின், தங்களைச் சந்திக்காமலேயே சென்றுவிட்டாரே என்று கேள்வி எழுப்பினர் செய்தியாளர்கள். அதற்கு அவர், அதுபற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று முணுமுணுத்தபடியே பதில் ஏதும் அளிக்காமல் சென்றார்.

நன்றி:- தினமணி
-'பரிவை' சே. குமார்

புதன், 3 ஏப்ரல், 2013

மருத்துவர் கைது - அம்மாவின் செயலா?

கடந்த புதன்கிழமை ஜெயலலிதா சென்னை நந்தனம் அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தினத்தந்தி நாளிதழின் உரிமையாளர் சிவந்தி ஆதித்தனை நேரில் சென்று பார்த்தார்.  ஒரு முதலமைச்சர் தன்னுடைய பல்வேறு வேலைகளுக்கிடையில் இது போல ஒருவரைச் சென்று சந்திப்பது வரவேற்கத்தகுந்த விஷயம்.  அது தினத்தந்தி அதிபர் என்பதால் இருந்தாலும் கூட.   சசிகலாவைத் தவிர வேறு யாரின் நலனிலும் அக்கறை துளியும் இல்லாத ஜெயலலிதா இது போல நேரம் ஒதுக்கி உடல் நலிந்த ஒருவரைப் பார்ப்பது சிறப்பான விஷயமே.  ஆனால் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளைப் பார்ப்பது, அதிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஒரு நோயாளியைப் பார்க்கையில், அதற்குண்டான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டுமா வேண்டாமா ?

39.-Amma-Photo-Present

சாதாரண நபர்கள் என்றால் அத்தகைய கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்கலாம்.  ஆனால் ஜெயலலிதாவை அப்படிச் சொல்ல முடியுமா ?  ஜெயலலிதா எந்த சட்டத்தையோ விதிகளையோ மதிப்பவரா என்ன ?  கோடுகளை உடைத்த பிகாசோவைப் போல மரபுகளை உடைப்பவர் அல்லவா ?  அந்த விதிகளையெல்லாம் அவர் பின்பற்றுவாரா என்ன ?   அப்படி விதிகளைப் பின்பற்றாமல் சென்ற ஜெயலலிதாவை கேள்வி கேட்ட ஒரு முதிய மருத்துவருக்கு “தக்க பாடத்தை“ புகட்டியுள்ளார் ஜெயலலிதா.

தினத்தந்தி உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் உடலில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்கள் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை எடுத்து வருகிறார்.   அவரைப் பார்க்க ஜெயலலிதா சென்றபோது, பல ஆண்டுகளாக சிவந்தி ஆதித்தனின் மருத்துவராக உள்ள கருணாநிதி என்ற மருத்துவர் ஜெயலலிதாவை வரவேற்றுள்ளார்.  வணக்கம் கூறி வரவேற்று விட்டு, மேடம் தங்கள் காலணிகளை கழற்றுங்கள் (Please remove your shoes) என்று கூறியிருக்கிறார்.   அவ்வாறு சொன்னவரை நோக்கித் திரும்பிய ஜெயலலிதா ஒரு புழுவைப் போல பார்த்து விட்டு, (ஜெயலலிதாவின் அந்தப் பார்வையில் பல ஆங்கில கெட்டவார்த்தைகள் அடக்கம். கான்வென்டில் படித்தவர் ஆங்கிலத்தில்தானே திட்ட முடியும். திருக்குவளைக்காரர் என்றால் காது கூசும் அளவுக்குத் தமிழில் திட்டுவார்).

7324PMAR---27B-big

ஜெயலலிதா சிவந்தி ஆதித்தனைப் பார்த்துவிட்டு, செய்தித் துறை புகைப்படக் கலைஞர்களின் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து விட்டு சென்று விட்டார்.  அதன் பிறகு நடந்ததுதான் சர்ச்சைக்குரியது. ஜெயலலிதாவோடு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் (Core Cell CID) ஜெயலலிதா அகன்றவுடனேயே அந்த மருத்துவரை கடுமையாக திட்டியுள்ளனர்.. யாரைப் பாத்து ஷுவைக் கழற்றச் சொல்கிறாய் என்று தொடங்கிய மிரட்டல் சிறிது நேரம் தொடர்ந்துள்ளது. அத்தோடு அந்த பிரச்சினை முடிந்து விட்டது.

ஜெயலலிதாவின் காலணியை அவிழ்க்கச் சொன்ன மருத்துவரின் பெயர் கருணாநிதி.  அவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் (Madras Medical College) பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.  அவருக்கு தற்போது வயது 70.  வியாழனன்று அன்று சென்னை சேத்துப்பட்டில் உள்ள அவரது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். காலை 11 மணிக்கு சென்னை மாநகரக் காவல்துறையின் தேனாம்பேட்டையைச் சேர்ந்த காவல்துறையினர் காவல்துறை வாகனத்தில் சென்று வண்டியில் ஏறுங்கள் உங்களைக் கைது செய்கிறோம் என்று அழைத்துச் சென்றுள்ளனர்.  காலை 11 மணிக்கு வண்டியில் ஏற்றப்பட்ட 70 வயது கருணாநிதி பிற்பகல் 3 மணிக்கு தேனாம்பேட்டை காவல்நிலையத்துக்கு அழைத்து வரப்படுகிறார்.  காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி  வரை நான்கு மணி நேரம், ஒரு ரகசிய இடத்தில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர். சித்திரவதை என்றால் அடித்துத் துன்புறுத்தி, தலைகீழாக கட்டி அடித்தால்தான் சித்திரவதை என்றல்ல…  ஒருவரை உட்கார வைத்து, பலர் சுற்றி நின்று வளைத்து வளைத்து கேள்வி கேட்டு, கன்னத்தில் அறைவதம் சித்திரவதைதான்.   ஒரு குற்றச்செயலைச் செய்து, அது தொடர்பாக விசாரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியும். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளியைப் பார்க்க வரும் நபர் பாதுகாப்புக் கவசங்கள் இல்லாமலும், வெளியிலிருந்து வருகையில் காலணியோடும் வந்து, நோயாளிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடப்போகிறாரோ என்ற கவலையில் காலணியைக் கழற்றுங்கள் என்று சொன்ன ஒரு நபரை இப்படி பலர் அமரவைத்து விசாரிப்பது சித்திரவதையா இல்லையா.   இதற்குப் பிறகு பிற்பகல் 3 மணிக்கு தேனாம்பேட்டை காவல்நிலையத்துக்கு மருத்துவர் கருணாநிதி வரவழைக்கப்பட்டபோது அவர் குடும்பத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.  3 மணிக்கு தேனாம்பேட்டை காவல்நிலையம் வரவழைக்கப்பட்ட பிறகு, அங்கே மருத்துவரை காவலர்கள் அடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு மருத்துவர் கருணாநிதியின் குடும்பத்தினர் வருவதற்குள், சக்திவேலு என்ற உதவி ஆய்வாளர் அளித்த புகாரின்பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்துக்காக கருணாநிதியை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்ற நடுவரிடம் முன்னிலைப்படுத்த அழைத்துச் சென்று விட்டனர். மாலை நீதிமன்ற நடுவரிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட மருத்துவர் கருணாநிதி மாலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அன்று இரவு என்ன நடந்தது என்பது மிகவும் மர்மமாகவே உள்ளது. நீதிமன்ற நடுவர் முன்னிலையில் மாலையில் ஆஜர்படுத்தப்பட்ட மருத்துவர், வெள்ளியன்று காலையில் ஜாமீன் கிடைத்து விடுவிக்கப்பட்டள்ளார்.

மருத்துவர் கருணாநிதியின் இந்தக் கைது ஜெயலலிதாவுக்குத் தெரிந்து நடந்ததாகத் தெரியவில்லை.  ஆனால் ஜெயலலிதாவின் தலையீட்டினாலேயே இரவோடு இரவாக மருத்துவர் கருணாநிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இப்படி ஒரு சம்பவம் முட்டாள் அரசில் மட்டுமே நடக்க முடியும்.  அதுவும் மருத்துவராக தனது கடமையை செய்த ஒரு மருத்துவரை கைது செய்யும் நடவடிக்கை முட்டாளின் அரசில் மட்டுமே நடக்கும்.  இப்படி ஒரு சம்பவம் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் நடந்திருக்கலாம், நடந்திருக்கிறது என்பதால் அவரைக் குற்றம் சொல்ல முடியாது என்று கூறலாம்.   ஆனால் நடந்த சம்பவத்துக்கு ஜெயலலிதா மட்டுமே முழுப் பொறுப்பு.  உள்துறைக்கான அமைச்சராக இருப்பதால் மட்டுமே ஜெயலலிதாவுக்கு இச்சம்பவத்தில் பொறுப்பு இல்லை.  ஒரு 70 வயது முதிய மருத்துவரை இப்படி கைது செய்து சித்திரவதை செய்வதை புரட்சித் தலைவி அம்மா விரும்புவார்கள் என்ற ஒரு பிம்பத்தை ஜெயலலிதா கட்டமைத்துள்ளார்.   இப்படி ஒரு மோசமான மனித உரிமை மீறலை அரங்கேற்றி அதன் மூலம் புரட்சித் தலைவியின் மனதில் இடம் பிடித்து அப்படி இடம் பிடிப்பதன் மூலம் மேலும் அதிகாரத்தை கூட்டிக் கொள்ளலாம், கூடுதலாகக் கிடைக்கும் அதிகாரத்தின் மூலம் கூடுதலாக லஞ்சம் வாங்கலாம், யாரை வேண்டுமானாலும் தூக்கிப் போட்டு மிதிக்கலாம் என்ற வேட்கையே காரணம்.  வேறு எந்தக் காரணமும் இருக்க வாய்ப்பில்லை.

ஒரு நோயாளியை சாதாரண சிகிச்சைப் பிரிவிலிருந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றுவதற்கான காரணம், அவர் கோமா நிலையிலோ, சுயநினைவு இல்லாமலோ, எந்த நேரத்திலும் அவர் நிலை மோசமடையும் ஒரு நிலையிலோ, சிறுநீர் கழிக்க கேத்தட்டர் பொறுத்தப்பட்ட நிலையிலோ, மூக்கு வழியாக உணவு உண்ணும் நிலையிலோ இருக்கையில் மாற்றப்படுகிறார்.

சமீப காலமாக HAI என்று அழைக்கப்படும் Hospital Acquired Infection அல்லது non cosmial infection அதிக அளவில் பரவி வருகிறது. இதை மருத்துவமனைத் தொற்று என்று அழைக்கலாம்.  அமேரிக்காவில் உள்ள நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய்யம் நடத்திய (Center for Disease Control and Prevention) ஆய்வில் இத்தகைய மருத்துவமனைத் தொற்று காரணமாக மட்டும் ஆண்டுதோறும் 25 ஆயிரம் மரணங்கள் நிகழ்வதாக தெரிய வந்துள்ளது.  இத்தகைய மருத்துவமனைத் தொற்று பல்வேறு பாக்டீரியாக்கள் காரணமாக ஏற்படுகிறது. இந்த மருத்துவமனைத் தொற்று சிறுநீரகப் பாதை (Urinary tract) மூச்சுக் குழாய் (respiratory tract) வெளிக்காயங்கள் (external wounds)  ஆகியன வழியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளை பாதிக்கிறது.

நோயாளிகளைப் பார்க்க வரும் நபர்கள், தும்முவதாலும், தொடுவதாலும், அவர்களின் மூச்சுக் காற்றின் வழியாகவும், அவர்கள் பாதத்தில் உள்ள தூசுகளாலும் தொற்று பரவி அது நோயாளிகளை பாதிக்கும் அபாயம் பெருமளவில் உள்ளது.  மேலும் சமீப காலமாக, பாக்டீரியாக்கள் மருந்துகளை எதிர்க்கும் சக்தியை (drug resistant) வளர்த்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளை அவர்களின் நெருங்கிய உறவுகளைக் கூட மருத்துவர்கள் பார்க்க அனுமதிப்பதில்லை.  அப்படிப் பாரக்க முயற்சிப்பவர்களை மருத்துவர்கள், கையுறை, காலுறை, ஏப்ரன், முகமூடி போன்ற பாதுகாப்புக் கவசங்களை அணிந்த பிறகே பார்க்க அனுமதிக்கிறார்கள்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சிவந்தி ஆதித்தனைப் பார்க்கச் சென்ற ஜெயலலிதா இது போன்ற எந்த பாதுகாப்புக் கவசங்களையும் அணியவில்லை.  ஒரு மருத்துவமனைக்கு நோயாளிகளைப் பார்க்கச் செல்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது ஜெயலலிதாவுக்கு தெரியாதது அல்ல.  மருத்துவமனை அவருக்கு ஒன்றும் புதிதல்ல.  1984ம் ஆண்டில் சிறுநீரகப் பழுது காரணமாக எம்.ஜி.ஆர் முதன் முதலாக அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது க்ரீம்ஸ் சாலையில், அப்போது புகழ் பெறாத அப்போல்லோ மருத்துவமனையில் எம்.ஜி.ஆரைப் பார்க்கச் சென்றார் ஜெயலலிதா.  அப்போது ஜெயலலிதாவைப் பார்த்து ஜானகி உதிர்த்த வார்த்தைகள் எழுதத்தக்கதல்ல.  எந்த உளவுத்துறையினரும், காவல்துறையினரும் இன்று ஜெயலலிதாவைக் காலணியை கழற்றச் சொன்ன மருத்துவரை துன்புறுத்தினார்களோ, அதே துறையைச் சேர்ந்தவர்களால், ஜெயலலிதா அப்போல்லோ மருத்துவமனையிலிருந்து அப்போதிருந்த சுழல் படிக்கட்டின் வழியாக மிரட்டி வெளியேற்றப்பட்டார் என்பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது.
ஜெயலலிதா சிவந்தி ஆதித்தனை நேரில் சென்று பார்த்ததால் அவருக்கு எதுவும் ஆகப்போவதில்லை.   ஆனால் அவ்வாறு பார்த்ததால் ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு சொம்படித்துக் கொண்டிருக்கும் தினத்தந்தி மேலும் சிறப்பாக சொம்படிக்கும் என்பதைத் தவிர்த்து வேறு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.  மாறாக, ஜெயலலிதா ஒரு மருத்துவமனைக்கு செல்வதால், அந்த நோயாளிக்குச் சிரமம், மருத்துவர்களுக்குச் சிரமம், மற்ற நோயாளிகளுக்குச் சிரமம், அந்த நோயாளிகளின் உறவினர்களுக்குச் சிரமம், சாலையில் உள்ள பொதுமக்களுக்குச் சிரமம் என்று பல்வேறு தரப்பினருக்கு சிரமம் மட்டுமே ஏற்படுகிறது.  ஜெயலலிதா நேரில் சென்று பார்ப்பதால் சம்பந்தப்பட்ட நோயாளியின் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை.  மாறாக, மேலும் மோசமடைவதற்கான வாய்ப்புகளே மிக அதிகம்.  பழம்பெரும் நடிகை சுகுமாரியை  ஜெயலலிதா சென்று பார்த்து வந்த நான்கே நாட்களில் அவர் மரணமடைந்தது ஒரு சிறந்த உதாரணம்.

7306PMAR---22-H-big

நோயாளிகளின் மீதான தனது அன்பை ஜெயலலிதா நேரில் சென்றுதான் வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.  சம்பந்தப்பட்ட நோயாளியிடமோ, அவர் குடும்பத்தினரிடமோ தொலைபேசியில் நலம் விசாரித்தாலே அவர்கள் பெரும் மகிழ்ச்சியடைவார்கள். விளம்பரத்திற்காக இன்னாரின் உடல்நலம் குறித்து தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இன்று, தொலைபேசியில் நலம் விசாரித்தார் என்று விளம்பரப்படுத்திக் கொள்ளலாம். ஜெயலலிதா தனது ஆட்சி முடியும் வரை நோயாளிகளை அந்த நோயாளிகளின் நலன் கருதி பார்க்காமல் இருப்பது நல்லது.

இந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் நீதித்துறையின் செயல்பாடுகள் ஆய்வுக்குரியன.   தேனாம்பேட்டை உதவி ஆணையராக இருப்பவர் சிவபாஸ்கரன்.  இவர் நீண்ட நாட்களாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உளவுப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றியவர்.  ஒரு மாவட்டத்தின் உளவுப் பிரிவு ஆய்வாளர் (Special Branch Inspector) வேலை என்றால் என்னவென்றால், காவல்துறை மொழியில் பக்கெட் தூக்கும் வேலை என்று பொருள்.  அந்தந்த மாவட்டக் கண்காணிப்பாளரின் வீட்டு வேலை, அவர் உறவினர்கள் வந்தால் அவர்களுக்கு ஊர் சுற்றிக் காட்டுவது, அதிகாரியின் வீட்டு மளிகை சாமான்கள் வாங்கித் தருவது, அவரின் “இதரத் தேவைகளை” பூர்த்தி செய்வது, அவருக்கு மாமூல் வசூல் செய்வது, போன்ற வேலைகளே பிரதான வேலைகள்.  இதையெல்லாம் செய்த பிறகே, உளவு வேலைகளைச் செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக உளவுப்பிரிவில் மாவட்ட ஆய்வாளராக ஒரு அதிகாரி இருக்கிறார் என்றாலே, அவர் சிறந்த பக்கெட் என்று பொருள்.  நீண்ட நாட்களாக பக்கெட்டாக இருந்த சிவபாஸ்கரன், டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றதும், கும்பகோணம் டிஎஸ்பியாக நியமிக்கப்படுகிறார்.  கும்பகோணத்தில் சிவபாஸ்கரன் மாமூல் வாங்காத இடமே இல்லை எனலாம்.   கிட்டத்தட்ட கிரி படத்தில் வடிவேலு மாமூல் வாங்கிய அளவுக்கு சிவபாஸ்கரனும் மாமூல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்.

உதவி ஆய்வாளராக இருந்தபோது, தற்போது சென்னை நகர ஆணையராக உள்ள ஜார்ஜின் பக்கெட்டாக வேலை பார்த்த சிவபாஸ்கரனைப் போன்ற சிறந்த பக்கெட்டுகள் சென்னை நகருக்கு தேவை என்பதால், ஜார்ஜ், சிவபாஸ்கரனை சென்னைக்கு மாறுதல் செய்து, தேனாம்பேட்டை உதவி ஆணையராக நியமிக்கிறார். இந்த சிவபாஸ்கரன்தான் மருத்துவர் கருணாநிதியின் கைதில் முக்கிய சூத்ரதாரி என்று காவல்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த விவகாரத்தில் நீதித்துறையின் செயல்பாடுகள் மர்மமான முறையில் இருந்துள்ளதோடு அல்லாமல், அயோக்கியத்தனமாகவும் உள்ளது.   கைது செய்யப்பட்ட ஒரு நபரை நீதித்துறை நடுவரின் முன்னிலையில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைக்க வேண்டும். அவ்வாறு ஒரு கைதியை நீதித்துறை நடுவரின் முன்பு ஆஜர்படுத்துகையில், காவல்துறை அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளில் சந்தேகம் இருந்தால், நீதித்துறை நடுவர், குற்றம்சாட்டப்பட்டவரை சிறைக்கு அனுப்பத் தேவையில்லை.  உங்களை சொந்த ஜாமீனில் விடுவிக்கிறேன் என்று விடுவிக்கலாம். ஆனால், 99 சதவிகித நீதித்துறை நடுவர்கள் செக்குமாடுகள் போலத்தான் செயல்படுகிறார்கள்.

ஒரு நீதித்துறை நடுவரின் முன்பு ஒரு குற்றவாளியை ஆஜர்படுத்தினால், பெரும்பாலான நீதித்துறை நடுவர்கள் கேட்கும் கேள்வி “எனி கம்ப்ளெயின்ட்ஸ்” அல்லது ”ஏதாச்சும் சொல்லனுமாப்பா” அந்தக் கைதி என்னை போலீஸ் அடிச்சாங்க என்று சொன்னால் அதைக் காதில் கூட வாங்காமல், உங்களை 15 வரை ரிமாண்ட் பண்றேன் என்று ஆல் இந்திய ரேடியோவின் செய்தி வாசிப்பாளர்கள் போல கூறுவார்கள்.  நீதித்துறை நடுவருக்கு இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் வழங்கியுள்ள எந்த அதிகாரத்தையும் நீதித்துறை நடுவர்கள் பயன்படுத்தாமல், காவல்துறையின் அடிமைகள் போலவே செயல்படுகிறார்கள்.  நீதித்துறை நடுவர்கள் அவர்களின் அதிகாரத்தை சரிவரப் பயன்படுத்தத் தொடங்கினால், காவல்துறையினரின் பொய்வழக்குகளில் பாதியைக் கட்டப்படுத்த முடியும். ஒரு 70 வயது மருத்துவர், சென்னை மருத்துவக் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர், ஒரு அரசு ஊழியரை, அதுவும் ஒரு உதவி ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்தார் என்ற வழக்கைப் பார்த்ததுமே நீதித்துறை நடுவர் புரிந்து கொண்டிருக்க வேண்டும் இது பொய் வழக்கு என்று.  முதலமைச்சரோடு வரும் காவல்துறை அதிகாரிகளை எப்படி ஒரு 70 வயது முதிர்ந்த மருத்துவர் தடுத்திருக்க முடியும் ?  ஆனால் ஒரு செக்குமாட்டைப் போன்ற அறிவை உடைய ஒரு நீதித்துறை நடுவர் அந்த முதியவரை சிறைக்கு அனுப்பும் உத்தரவில் கையெழுத்திட்டிருக்கிறார்.

சிறைக்கு மருத்துவர் கருணாநிதி எப்படி அனுப்பப்பட்டாரோ, அதே போல மர்மமான முறையில் அவர் விடுதலையும் செய்யப்பட்டிருக்கிறார்.  வியாழன் அன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை அவர் நீதித்துறை நடுவரால் ரிமாண்ட் செய்யப்பட்டு, புழல் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.  வியாழனன்று ஜாமீன் மனு தாக்கல் செய்தால் கூட, அரசுத் தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய வெள்ளியாகியிருக்கும்.  வியாழனன்றே ஜாமீன் வழங்கப்பட்டிருந்தால் கூட, அதுவும் சொந்த ஜாமீன் என்று எடுத்துக் கொண்டாலும் கூட, அந்த ஜாமீன் மனுவை இரவோடு இரவாகத் தயார் செய்து, காலை 6 மணிக்கு புழல் சிறைக்கு அனுப்பியிருந்தால் மட்டுமே, வெள்ளிக்கிழமை காலை மருத்துவர் கருணாநிதி சிறையிலிருந்து வெளியே வந்திருக்க முடியும். யார் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்தது, நீதித்துறை நடுவர் அதை எப்போது விசாரித்தார், அந்த ஜாமீன் உத்தரவு எப்போது தயார் செய்யப்பட்டது, அந்த ஜாமீன் உத்தரவை யார் புழல் சிறைக்கு எடுத்துச் சென்றது, என்பது போன்ற விபரங்கள் வெளிவராமல் மர்மமாகவே உள்ளன.  ஆனால் சட்டபூர்வமாக எதுவும் நடைபெறவில்லை என்பது மட்டும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.  அரசு இயந்திரம் நினைத்தால் ஒரு மனிதரின் வாழ்வை எப்படிச் சின்னாபின்னமாக்க முடியும் என்பதற்கு மருத்துவர் கருணாநிதியின் கைது ஒரு சிறந்த உதாரணம்.  இரவோடு இரவாக மருத்துவர் கருணாநிதியை விடுவிக்க உத்தரவிட்ட ஜெயலலிதா, இதோடு நின்று விடாமல், இந்தக் கைதுக்கு உத்தரவிட்டது யார், எந்த அதிகாரி முடிவெடுத்தார் என்று கண்டறிய வேண்டும்.  கீழ் நிலை காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், எந்த உயர் அதிகாரி உத்தரவிட்டார் என்பதை அறிந்து, அந்த அதிகாரியை, உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். பாதிப்புக்குள்ளான மருத்துவருக்கு அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஈடாக உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும். இது போல எடுக்கப்படும் நடவடிக்கைகள் மட்டுமே, ஆர்வக்கோளாறு பிடித்த அடிமைகளின் அதிகப்பிரசங்கிச் செயல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும்.

இவற்றைச் செய்ய ஜெயலலிதா தவறுவாரேயானால், காலம் அவருக்கு மறக்க முடியாத பாடங்களைக் கற்றுக் கொடுக்கும்.

 
மின்னஞ்சலில் நண்பர் அனுப்பிய பகிர்வு இது... யார் எழுதியது என்பது தெரியவில்லை.... அனுப்பிய நண்பருக்கும் எழுதிய நண்பருக்கும் நன்றிகள்....

-'பரிவை' சே.குமார்