முந்தைய பதிவுகளைப் படிக்க...
முன்கதைச் சுருக்கம்
கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். பிர்ச்சினைகள், சந்தோஷம், போராட்டம் என அவர்களின் காதல் எல்லாவற்றையும் ஒரு நல்ல நாளில் நண்பர்கள் துணையுடன் வீட்டை விட்டு வெளியேறச் செய்கிறது. அதன் பின்னான பிரச்சினைகளைச் சுமந்து அன்றைய இரவு நகர்கிறது.
இனி...
பல்வேறு பிரச்சினைகளைச் சுமந்தபடி கழிந்த முதல் நாள் இரவு அனைவருக்கும் தூக்கமில்லா நீண்டதொரு இரவாக அமைந்தது.
மறுநாள் காலையில் சீக்கிரமே எழுந்த காவேரி எல்லோரையும் எழுப்பி வேகமாகக் கிளம்பச் சொன்னாள். ராம்கியும் புவனாவும் சேகர் எடுத்து வைத்திருந்த பட்டு வேஷ்டி சேலையைக் கட்டிக் கொண்டு கிளம்ப, காவேரியும் சேகரும் புத்தாடையில் ஜொலிக்க. மற்றவர்கள் சேவியர் கொண்டு வந்த ஆடைகளை அணிந்து கிளம்பினர்.
"ராம்..." அவன் தோள் சாய்ந்து அவனுக்கு மட்டும் கேட்கும்படி மெதுவாகக் கூப்பிட்டாள் புவனா.
"என்ன புவி..." ஆதரவாய்க் கரம் பற்றினான்.
"அம்மாவைப் பாக்கணும் போல இருக்கு..." கண் கலங்கினாள்.
"கொஞ்ச நாள்த்தாம்மா... எல்லாம் சரியாகும்... அப்புறம் உங்கம்மாவை இங்க கூட்டிக்கிட்டு வந்து வச்சிக்கலாம்."
"ம்..."
"டேய்... இப்ப என்ன தங்கச்சிக்கு அம்மா ஞாபகம்... அம்மாக்கிட்ட பேசிட்டா போச்சு..." என அவளது வருத்தத்தைப் போக்கும் விதமாக சேகர் சொன்னான்.
"அண்ணா... அம்மாக்கிட்ட நானா... போன் பண்ணி அப்பா எடுத்துட்டா..." பதட்டமாய்க் கேட்டாள்.
"முதல்ல காவேரியை பேச விடுவோம்... இந்த மாதிரி விஷயத்துல அவ கில்லாடி... அம்மா பேசினா நீ பேசலாம்... இல்லைன்னா எதாவது சொல்லி மழுப்பிடலாம்..."
"எப்போ பேசலாம் அண்ணா... இப்பவா...?" ஆர்வமாய்க் கேட்டாள்.
"ரிஜிஸ்டர் ஆபீஸ் பொயிட்டு பேசலாம்..."
"தாங்க்ஸ் அண்ணா..."
அதே நேரம்...
புவனா வீட்டை விட்டு ஓடிய செய்தி காட்டுத் தீ போல் பரவ சொந்தங்கள் எல்லாம் கேதம் கேட்க வருவது போல் வீடு தேடி வர ஆரம்பித்தனர். 'அடி ஆத்தி... பொட்டப்புள்ளய படிக்க வக்காதே... படிக்க வக்காதேன்னு சொன்னேனே... எஞ்சொல்லுப் பேச்சுக் கேக்கலையே... இப்ப நம்ம குடும்ப மானத்த சந்தி சிரிக்க வச்சிட்டுப் பொயிட்டாலே...' என புவனாவின் அத்தைகள், ஆயாக்கள் எல்லாம் வந்து கத்த ஆரம்பித்தார்கள்.
"ஏய்... இங்க என்ன எழவா விழுந்திருச்சி... வந்து கட்டிக்கிட்டு இருக்கீக... வந்தா பேசாம இருந்துட்டுப் போங்க... சும்மா கத்திக்கிட்டு..." வைரவன் கத்தினான்.
"அட ஏம்ப்பா ஒனக்கு இம்புட்டுக் கோவம் வருது... ஆத்தரத்துலதானே கத்துறோம்..." ரெண்டு மூணு சொந்தங்கள் ஒன்றாகக் கேட்டன.
"ஆத்தரமுன்னா அங்கிட்டுப் போயி கத்துங்க... இங்க கத்தக்கூடாது... ஆமா.. அம்மா... அம்மோவ்..." என உள்ளேயிருந்த அம்மாவைக் கூப்பிட்டு "இங்கேரு... இங்க இருந்தியன்னா எல்லாரும் வந்து உன்னையக் கொன்னுபுடுவாளுங்க... கொஞ்ச நாளைக்கி நீ சித்தி வீட்டுக்கு திருப்பத்தூருக்குப் போயிரு..." எனக் கத்தினான்.
அப்போது போன் மணி அடிக்க, அம்மாதான் எடுத்தாள்...
"யாரு... வைரவனா... இந்தாத்தான் இருக்கான்... வைரா... டேய் வைரா உனக்குத்தான்டா போன்..." என அவனைக் கூப்பிட்டுக் கொடுத்தாள்.
வடபழனி ரிஜிஸ்டர் அலுவலகத்தின் முன் அனைவரும் நின்று கொண்டிருந்தனர்.
"அண்ணா... அம்மாக்கிட்ட பேசலாம்ன்னு சொன்னீங்களே...?" மெதுவாகக் கேட்டாள் புவனா.
"ஆமா... இங்க பக்கத்துல எஸ்.டி.டி. பூத் இருக்கான்னு பாருங்கடா... இருந்தா புவனாவை ரெண்டு வார்த்தை வீட்டுக்குப் பேசச் சொல்லலாம்... அப்படியே ராமு நீயும் அத்தைக்கிட்டயும் உங்க தமிழய்யாக்கிட்டயும் பேசி ஆசிர்வாதம் வாங்கிடு... என்ன..." என்றான் சேகர்.
"என்ன விளையாடுறியா? இப்ப யாரும் யாருக்கும் போன் பண்ண வேண்டாம்... முதல்ல கல்யாணம் முடியட்டும்... அப்புறம் கோயிலுக்குப் போகும் போது பேசிக்கலாம்..." கத்தினான் அண்ணாத்துரை.
"இல்லடா... தங்கச்சி பேசணும்ன்னு சொன்னுச்சு... அதான்..."
"ஒண்ணும் வேண்டாம்... வாங்க உள்ள போகலாம்..." என்றதும் எல்லாரும் பதில் பேசாமல் போக, புவனாவின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. அவளைப் பார்க்க மனமின்றி சேகர் முகத்தை வேறு பக்கமாக திருப்பிய படி நடக்க, 'இப்ப என்ன... கொஞ்ச நேரத்துல பேசலாம்... கல்யாணப் பொண்ணு சந்தோஷமா இருக்க வேண்டாமா?' என காவேரி அவளை ஆதரவாய் அணைத்துக் கொண்டாள்.
"நான் வைரவன் பேசுறேன்... நீங்க..?"
"என்ன மச்சான்... அதுக்குள்ள மறந்துட்டே..."
"இ... இளங்கோ..."
"அட ஞாபகத்துல இருக்கேனா.... அன்னைக்கே சொன்னேன்... அவனைப் போடுறேன்னு... அவனை விட்டுடுன்னு சொன்னே... இதுக்குத்தான் விடச் சொன்னியா... கிளிய கொத்திக்கிட்டு பொயிட்டானாமே... நேத்தே கொண்டு பொயிட்டானாமே..."
"இ..ள...ங்...கோ... அது..."
"என்னையவே ஏமாத்திட்டியே... "
"நான் உன்னைய ஏமாத்தனுமின்னு நினைக்கலை... இது நடக்கும்ன்னு எதிர்பாக்கலை... வீட்ல எல்லாரும் துக்கத்துல இருக்காங்க... சொந்தக்காரங்க வேற வந்திருக்காக... அப்புறம் பேசலாம்..."
"கட் பண்ணி விடப் பாக்குறியா? அவன எங்க இருந்தாலும் தேடிப் பிடிச்சி கண்டந்துண்டமா வெட்டிப் போட்டுட்டு அவள அள்ளிக்கிட்டு வாரேன்டா..."
"டேய்ய்ய்ய்ய்..."
"என்ன குரல் உயருது...?"
"அவங்க மேல கை வச்சே உன்னோட உடம்புல கை இருக்கும் ஆனா அதை ஆட்ட உயிர் இருக்காது..." பல்லைக் கடித்துக் கொண்டு மெதுவாகச் சொன்னான்.
"ஏ... ஏய்... என்னடா... இப்படி மாறிட்டே... நீதான் பேசுறியா... அவன் உந்தங்கச்சிய இழுத்துக்கிட்டுப் போயிருக்கான்... ஓ... நேத்தே பொயிட்டாங்க... இந்நேரம் பர்ஸ்ட் நைட்டே முடிச்சிருப்பாங்கன்னு விட்டுடலாம்ன்னு பாக்குறியா... பரவாயில்லை மச்சான்... எனக்கு எப்படியிருந்தாலும் ஓகே..."
"டேய்...மவனே... ஓவராப் பேசுறே... இனி எங்க விஷயத்துல குறுக்க வர நினைச்சே நாளைக்கு உன்னோட பொணத்துக்கு உங்கப்பன் கொள்ளி வப்பான்... புரியிதா... வைடா போனை... பேப்பயலே..." என்று கத்தினான்.
"யாருப்பா... அவள இழுத்துக்கிட்டு போனவனா...?" வேகமாக அருகில் வந்த அப்பா கேட்டார்.
"இல்லப்பா இவன் வேற... நம்ம புவி ஓடிட்டான்னு தெரிஞ்சதும் பழைய பகையை வச்சிக்கிட்டு கேலி பேசுறான்..." என்றபடி தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தான்.
திருமணம் முடிந்தும் சேவியர் தான் கொண்டு வந்திருந்த மோதிரத்தைக் கொடுத்து ஒருவர் விரலில் ஒருவரை போட்டு விடச் சொன்னான். வடபழனி முருகனைத் தரிசித்துவிட்டு இதுவரை காதலர்களாக இருந்த இருவரும் கணவன் மனைவியாக நண்பர்கள் சூழ காரில் கிளம்பினர்.
"ராம் இப்பவாச்சும் அம்மாக்கிட்ட பேசலாம்..." என்றாள் புவனா.
"டேய் மாப்ள... புவி அவ அம்மாக்கிட்ட பேசணுமாம்... ஒரு எஸ்.டி.டிக்கிட்ட நிக்கச் சொல்லேன்"
"சரி..." என்றவன் ரோட்டின் இருபக்கமும் பார்வையை ஓடவிட்டு ஓரிடத்தில் காரை நிப்பாட்டச் சொன்னான்.
ராம்கி முதலில் அம்மாவுக்கு போன் பண்ணிப் பேசி விவரம் சொல்ல நாகம்மா அழுகையோடு இருவரையும் நல்லாயிருங்க என்று வாழ்த்தினாள். சீதாவும் தம்பிக்கு வாழ்த்தைச் சொன்னாள்.
அடுத்து தமிழய்யாவுக்குப் போன் செய்து இருவரும் பேச, ஐயாவும் அம்மாவும் இருவருக்கும் தங்கள் வாழ்த்தைச் சொன்னார்கள். கடைசி வரைக்கும் இருவருக்குள்ளும் சண்டை வராமல் இன்னைக்கு இருக்க காதலோட இருக்கணும் என்று அம்மா ராமிடம் சொன்னார்கள்.
அடுத்ததாக மல்லிகாவுக்குப் போன் செய்து சொல்ல, ஏய் ரெண்டு பேரையும் நான் மணக்கோலத்துல பாக்கணும்... ரெண்டு பேரும் இப்பப் போல எப்பவும் சந்தோஷமா இருக்கணுன்டா என வாழ்த்தினாள்.
அடுத்ததாக அண்ணிக்குப் பேச அவள் ரொம்பச் சந்தோஷப்பட்டாள்.
எல்லாரிடமும் பேசி முடித்ததும் புவனாவின் வீட்டுக்குப் போன் அடித்தார்கள். ராம்கிதான் ரிசீவரை காதில் வைத்திருந்தான். எதிர்முனையில் வைரவன் போனை எடுத்து 'அலோ' என்றான்.
"அ... அலோ... நான் ராம்... ராம்கி பேசுறேன்..." மெதுவாகச் சொன்னான். புவனா பதட்டத்தோடு அவன் கரம் பற்றி நின்றாள்.
எதிர்முனை சிறிது மௌனத்துக்குப் பின்னர் "ம்... சொல்லுடா... எதுவும் பிரச்சினையா... அப்படியெல்லாம் இல்லையில்ல... எல்லாரும் நல்லா இருக்காங்களா?" வைரவன் எப்பவும் போல் பேசினான்,
"ம்... எங்களுக்கு க... கல்யாணம் ஆயிடுச்சு... புவி...." மெதுவாக இழுத்தான்.
"ரொம்ப சந்தோஷம்..." என்றவன் கலங்கிய கண்ணைத் தொடைத்துக் கொண்டான். "அ... அம்மாக்கிட்ட பேசணுமா... இரு... இரு..... இந்தாக் கூப்பிடுறேன்..." என்றவன் 'அம்மா... என்னோட பிரண்ட் ஒருத்தன் உங்ககிட்ட பேசணுமாம்' எனக் கத்துவது கேட்க ராம்கி ரீசிவரை புவனாவிடம் கொடுத்தான்.
"யாருடா அது...?" என்றபடி ரீசிவரை வாங்கியவள் "அலோ... சொல்லுங்க தம்பி..." என்றதும் பசுவைக் கண்ட கன்று போல முகம் மலர "அம்மா..." என்றழைத்த புவனா பெருங்குரலெடுத்து அழுதாள்.
-(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
ம்............என்ன சொல்வது/எழுதுவது என்றே தெரியவில்லை.கண்கள் குளமாயின.தம்பதிகள் பல்லாண்டு வாழட்டும்!
பதிலளிநீக்கு