முந்தைய பதிவுகளைப் படிக்க...
முன்கதைச் சுருக்கம்
கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. நாட்கள் நகர நகர ராம்கியின் அம்மா கொஞ்சம் இறங்கி வருகிறாள். புவனாவுக்கு அது கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுத்தது. நாட்கள் நகர... தங்களது காதல் குறித்து வைரவனிடம் சொல்கிறாள். காதல் விவகாரம் பூதகரமாக ஒவ்வொரு பக்கமும் கிளம்ப, ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமாக சிந்தித்து அடுத்த காரியங்களில் இறங்க.... ராம்கியின் நண்பர்கள் போட்ட திட்டத்தின்படி புவனா அம்மா ஆசியுடன் வீட்டை விட்டுக் கிளம்பினாள்.
இனி...
வைரவனின் பைக்கைப் பார்த்ததும் புவனா சற்றே அதிர்ச்சி அடைந்தாள். ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் நடந்தாள். வாசலுக்கு வந்த அம்மாவுக்கோ ஐய்யய்யோ இவன் வாறானே... என வயிற்றில் புளியைக் கரைத்தது.
வண்டியை அவளருகில் நிறுத்தியபடி "தோட்டத்துக்குத்தானே குளிக்கப் போறே... நானும் அங்கதான் வர்றேன்... இரு கொண்டு போய் விடுறேன்" என்றான்.
"இ... இல்ல... நா... கம்மாக்குப் போறேன்..." என்றாள்.
"என்னது கம்மாய்க்கா... அதான் தோட்டத்துல மோட்டார் போட்டு தண்ணி கொட்டுது... கம்மாயில அந்த கலங்குன மண்டித் தண்ணியில துணி தொவச்சி குளிக்கணுமா?"
"டேய் அவதான் கம்மாய்க்குப் போறேன்னு சொல்றாள்ல... அப்புறம் என்னடா..?"
"சரி... தோட்டத்துக்கு அப்படியேதான் போறேன்... அவள கம்மாக்கரையில எறக்கிவிட்டுட்டுப் போறேன்...."
"அவ போயிக்குவாடா... பொம்பளப்புள்ளங்க குளிக்கிற எடத்துக்கு நீ எதுக்கு?"
"அங்க குளிக்கிறவளுங்களைப் பாக்கப் போறேன்... அட ஏம்மா நீ வேற... அவள பத்திரமா அங்க விட்டுட்டுப் போறேன்னு சொல்றேன்... ஏய் ஏறுடி..." அதட்டலாய் சொன்னான்.
"டேய்..."
"அம்மா விடுங்க... அதான் கொண்டு போய் விடுறேன்னு சொல்லுதுல்ல... இம்புட்டு நாள் இல்லாத பாசம் இன்னைக்காவது வந்திருக்கே... எங்கண்ணன் வண்டியில கொண்டாந்து விட்டான்னு சொல்லலாம்ல்ல..." என்றபடி ஏறினாள்.
"சரிடி... பாத்துப் பத்திரமாப் போ..." தாய் மனசு வலியோடு வழி அனுப்பியது.
"ஆமா... கொண்டு போய் வயக்காட்டுல சாய்ச்சு விடப்போறேன்... போம்மா... சும்மா மகளைத் தாங்காமா..." என்றவன் வண்டியைக் கண்மாய் நோக்கிச் செலுத்தினான்.
"டேய் எல்லாம் சரியா நடக்குமாடா..?" பதட்டமாய்க் கேட்டான் அறிவு.
"அதெல்லாம் புராப்பர் பிளான்... மல்லிகா சொன்ன மாதிரி பதினோரு மணிக்கு கம்மாய்க்கு வர்ற புவனா, வெளிய போற மாதிரி வயக்காட்டுப் பாதையில வந்து முத்துவயல் ரோட்டுல ஏறிடுவா... ஆள் அதிக நடமாட்டம் இல்லாத அந்த ரோட்டுல நாம கார்ல பிரச்சினைங்கிற மாதிரி சும்மா ஒரு செட்டப்போட நிப்போம்.. மத்தியானம் பதினோரு மணிக்கு மேல கொளுத்துற வெயில்ல ஒரு ஈ, காக்காய் கூட இந்தப்பக்கம் வராது... வந்த வேலையை சுலபமா முடிச்சிட்டு கிளம்பிக்கிட்டே இருக்கோம்... எதுக்கு உனக்குப் பயம்?"
"நீ என்னவோ இந்தத் தொழில்ல பி.ஹெச்.டி பண்ணுன மாதிரி பேசுறே... இது பர்ஸ்ட் டைம்மா... எங்களுக்கு சும்மா உதறலா இருக்கு..." என்றான் சரவணன்.
"போங்கடா பயந்தாங்கொள்ளிகளா... இப்படி பயப்படுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா பேசாம பழனியைக் கூட்டிக்கிட்டு வந்திருப்பேன்..."
"பயமில்லைடா... முத தடவை... அதுவும் ஒரு பொண்ணைத் தூக்குறது அதான்... பழனியைத்தான் புதுக்கோட்டைக்கு போகச் சொல்லிட்டியே... அவனுக்கு சொந்தக்காரன் காரை ரெடி பண்ணச் சொல்லி... அப்புறம் எதுக்கு இந்தப் பேச்சு... நடப்பதெல்லாம் நடக்கட்டும்... விதி யாரை விட்டது..." என்றான் அறிவு.
"சரி... புலம்பாம ஆகுற காரியத்தைப் பாருங்க... புவனா வர்ற நேரம் ஆயிருச்சு..."
"என்னம்மா தம்பி... சரியாப் பண்ணிடுவானா... அண்ணிக்கு இதுனால எதுனாச்சும் பிரச்சினை வருமா?" பரிதவிப்பாய்க் கேட்டாள் சீதா.
"எனக்கும் பயமா இருக்குடி... சும்மா திரிஞ்சபய இன்னைக்கு ஒரு பொண்ணைக் கடத்திக்கிட்டுப் போற அளவுக்கு வந்திருக்கான்னா... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை... கண்டிப்பா அவ இவங்கூட ஓடிப்பொயிட்டான்னு தெரிஞ்சா எல்லாருக்கும் பிரச்சினைதான்... எனக்கு பதக்குப் பதக்குன்னு இருக்கு... இப்படி வந்து உங்க வீட்ல ஒளிஞ்சி கெடக்க வேண்டியிருக்கு... ஒரு நா... ஒரு பொழுது ஆட்டு மாட்டைப் போட்டுட்டு வந்திருப்பேனா... உங்கண்ணனுக்கு வெவரந் தெரிஞ்சா என்ன சொல்லப் போறானோன்னு மனங் கருகுதுடி..."
"இப்ப நான் புள்ளத்தாச்சியா இருக்கேன்... என்னைய பாக்க வந்தேன்னு ஊரு நம்பிடும்... அண்ணன் கேட்டா அப்ப விவரம் சொல்லிக்கலாம்... இப்ப அதுக்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்... இங்க மாமாகிட்ட லேசா சொல்லி வையுங்க... நாளைக்குப் பிரச்சினையின்னு எதாவது வந்தா அவருதான் பேசணும்.. அப்ப எங்கிட்ட ஏன் முன்னாடியே சொல்லலைன்னு கத்துவாரு..."
"என்னடா தோட்டத்துக்குப் போறேன்னு சொன்னே? திரும்பி வந்துட்டே?" வீட்டிற்குள் நுழைந்த வைரவனிடம் பதட்டமாய்க் கேட்டாள் அம்மா.
"ஏம்மா நா இங்க வந்தது பிடிக்கலையா?" என்றபடி சோபாவில் அமர்ந்தான்.
"தங்கச்சி... கம்மாக்கரை... யாராச்சும் குளிக்கிறாளுங்களா?" சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் கேட்டாள்.
"நீங்க போகும்போதே குளிக்கிறதைப் பாக்கப் போறியான்னு கேட்டியலா... அதனால யார் குளிக்கிறான்னு பாக்கலை... அப்புறம்..." வேண்டுமென்றே நிறுத்தி அம்மாவை ஊடுருவினான்.
"அப்புறம்ன்னா...?" அம்மா எதிர்க் கேள்வி கேட்டாள்.
"அண்ணங்கிற மொறைக்கு என்னால ஆன பணம் கொடுத்து அனுப்பி வச்சிட்டு வந்திருக்கேன்... என்ன எந்தங்கச்சி கல்யாணத்துல எவ்வளவோ பண்ணனும்... ஊரே வியக்கிற மாதிரி கல்யாணம் பண்ணனுமின்னு நினைச்சேன்... ஆனா இன்னைக்கு கொல்லைப் பக்கமா கொண்டு போய் விட்டுட்டு வந்திருக்கேன்... அதாம்மா கஷ்டமா இருக்கு..." சொன்ன வைரவனின் கண்ணில் இருந்து கண்ணீர் இறங்கியது.
"தம்பி... " அம்மா அதிர்ச்சியானாள்.
"பயப்படாதீங்கம்மா... அவங்க பிளானைச் சொல்ல அவங்க டீம்ல எனக்கும் ஆள் இருக்கும்மா... அதெல்லாம் இப்ப எதுக்கு... நீங்க சொன்னப்புறம் நானும் யோசிச்சேன்... அம்பது அறுவது வருசம் வாழப்போறவ ஏன் அவளுக்குப் பிடிச்சவனோட வாழக்கூடாது... நாம பாக்குறவனோட மனசு ஒத்துப் போகமா வாழ்நாளெல்லாம் கண்ணைக் கசக்கிக்கிட்டு நின்னா நாம எப்படி நல்லா இருக்க முடியும்ன்னு யோசிச்சேன்... அதான் இந்த முடிவு... இந்நேரம் கார்ல ஏறிப் போயிருப்பா... அவ கூட சண்டையெல்லாம் போட்டிருக்கேன்... ஏன் அடிச்சேயிருக்கேன்... ஆனா அவ இனி இங்க வரமாட்டான்னு நினைக்கிறப்போ வலிக்குதும்மா..."
"வைரவா எனக்கும் அந்த வலிதான்டா... ஆனா அவ எங்கயோ சந்தோஷமா இருப்பால்ல... அது போதுண்டா... அந்த இளங்கோ எதாவது பிரச்சினை பண்னினா...."
"அவன் ஒரு செத்த பாம்பு... அவனை நான் பாத்துக்கிறேன்... விடுங்க..."
"புவனா விசயமா உங்க அப்பாக்கிட்ட மெதுவாப் பேசி அவளை நம்ம கூட சேத்துறணும்டா..."
"அப்பாக்கிட்ட பேசி... அட போங்கம்மா... விவரம் தெரிஞ்சா அந்தாளு அருவாளோட அலையிறாரா இல்லையான்னு பாருங்க... பத்தாததுக்கு சித்தப்பன் வேற சேந்துருவான்... இனி விசயம் ஊருக்குத் தெரிஞ்சு நாம அவமானப்பட்டு நிக்கும் போது பாத்துப் பாத்து வளத்த அப்பாவுக்கும் வலிக்கும்தானேம்மா... எம்புட்டுச் செல்லங்கொடுத்தார்... அவரால இதை சீரணிக்கவே முடியாதும்மா.... எப்படி தாங்கப்போறாருன்னு நினைச்சா கவலையா இருக்கும்மா..."
"எனக்கும் ஒண்ணும் புரியலைடா... போகச் சொல்லிட்டேன்... ஆனா இனி அப்பாக்கிட்ட... எப்படி..." அழுதாள்.
"அதை நான் பாத்துக்கிறேன்... அப்பா வரும்போது நீங்க ஒரு மூலையில உக்காந்து அழுங்க போதும்..."
புதுக்கோட்டையில் பழனி தயாராக வைத்திருந்த சொந்தக்காரனின் அம்பாஸிடர் புவனாவை ஏற்றிக் கொண்டு திருச்சி நோக்கி போய்க் கொண்டிருந்தது . காருக்கு உள்ளே புவனா அழுது கொண்டிருந்தாள்... அண்ணாத்துரை ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான்.
அதே நேரம்...
கடையில் புவனாவின் சித்தப்பாவும் அப்பாவும் மாப்பிள்ளை வீடு வர்ற அன்னைக்கு விருந்தில் என்னென்ன போடலாம் என சிட்டை தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது போன் வர, எடுத்து அலோ என்றவர் எதிர்முனையில் வைரவன் என்று தெரிந்ததும் "என்ன தம்பி" என்றார்.
"அப்பா புவனா நம்மள ஏமாத்திட்டு அந்தப் பையன் கூட பொயிட்டா" என்றான் அழுகையோடு.
(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
அருமையாக நகர்கிறது,தொடர்.///வைரவன்.................என் கண்களையும் குளமாக்கி விட்டார்.என்ன இருந்தாலும்,இல்லைன்னாலும் படிச்ச பையன்,அண்ணன் தங்கச்சி பாசத்துக்கு,ஈடு இணை இல்லை,இல்லியா?///நன்றி,குமார்!ஒரு தெய்வீகக் காதலை சேர்த்து வைத்து,என் எதிர்பார்ப்பை நிறைவேற்றி விட்டீர்கள்.
பதிலளிநீக்கு