ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 73

முந்தைய பதிவுகளைப் படிக்க... 


பகுதி-64    பகுதி-65     பகுதி-66     பகுதி-67    பகுதி-68    பகுதி-69    பகுதி-70
பகுதி-71

73. முடிவுக்கான முன்னுரை

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. நாட்கள் நகர நகர ராம்கியின் அம்மா கொஞ்சம் இறங்கி வருகிறாள். புவனாவுக்கு அது கொஞ்சம் சந்தோஷத்தைக் கொடுத்தது. நாட்கள் நகர... தங்களது காதல் குறித்து வைரவனிடம் சொல்கிறாள். காதல் விவகாரம் பூதகரமாக ஒவ்வொரு பக்கமும் கிளம்ப, ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமாக சிந்திக்க இருவரும் யாருக்கும் தெரியாமல் கிளம்பும் முடிவை நண்பர்களுடன் எடுத்தனர்.

இனி...

"அவளே பார்த்துட்டாளா?" என்ற புவனா அப்பாவின் கோபமான கேள்வி ஐயாவை திடுக்கிட வைத்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல் "பொறுமையாக் கேளுங்க... வேணும்... வேண்டாங்கிறது உங்க விருப்பம்... இப்பத்தான் வைரவன் தம்பியைப் பார்த்தேன்... அவருக்கிட்ட பேசினதுக்கு எந்தப் பலனும் இல்லை.... அதான் உங்ககிட்ட வந்தேன்... இப்ப தம்பியோட சகவாசமும் அப்படி நல்லாயில்ல... அந்த இளங்கோவோட சுத்துறாரு... அவரு யாருன்னு தெரியுமில்ல... தம்பி கொல்ல ஆள் அனுப்புனவரு..."

"அவன் சுத்துறதுக்கும் நீங்க மாப்பிள்ளை இருக்குன்னு சொல்றதுக்கும் என்ன சம்பந்தம்?"

"சம்பந்தம் இல்லைதான்... கிளியை வளர்த்து பூனைக்கிட்ட கொடுத்த கதையா இளங்கோ மாதிரி மாப்பிள்ளையைப் பார்க்காம நம்ம புவனா மனசுக்குப் பிடிச்ச மாதிரி... நல்ல பையனா... அதுவும் அந்த ராமகிருஷ்ணனுக்கே கட்டி வைக்கலாமே"

"ஐயா..." கர்ஜித்த புவனாவின் அப்பா பின்னர் கடைவீதி என்பதை அறிந்து சுதாரித்து "இங்க பாருங்க... உங்க பதவிக்கு மரியாதை கொடுக்கிறேன்... ஏதோ ஒரு மூணாஞ் சாதிக்காரப் பயலுக்கு எம்பொண்ணைக் கொடுக்க நா ஒண்ணும் தரம் தாழ்ந்து போகலை... எம் பொண்ணுக்கு எப்படி மாப்ளை பாக்கணுமின்னு எனக்குத் தெரியும்... உங்க மரியாதையை நீங்க காப்பாத்திக்கங்க..."

"இல்லய்யா... நான் என்ன சொல்றேன்னா..."

"ஒண்ணும் சொல்ல வேண்டாம்... கிளம்புங்க..." என்றபடி கையெடுத்துக் கும்பிட்டார். அதற்கு மேல் அங்கு மரியாதை இருக்காது என்பதால் ஐயா ஒன்றும் பேசாமல் கடையில் இருந்து கிளம்பினார்.

"ஏன்டா... நீங்க சொல்ற மாதிரி புவனாவை அங்கேயிருந்து கூட்டிக்கிட்டு வர்றது அவ்வளவு ஈசியா என்ன?" ராம்கி மனசு முழுவதும் பயத்துடன் வினவினான்.

"உனக்கெதுக்கு அந்தக் கவலை... அதை எங்கிட்ட விட்டுட்டியல்ல... அத்தோட இரு" என்றான் அண்ணாத்துரை.

"இல்லடா...." இழுத்த ராம்கியின் வாயை " இங்க பாரு நாங்க பாத்துக்கிறோம்... நீ நாளைக்கு திருப்பூர் போறே.... அவ்வளவுதான்..." என்றான் அறிவு.

"திருப்பூருக்கு நாளைக்கா...? அப்ப புவி...?"

"ஆமா பொண்ணு மாப்ளையை ஊர்வலமா கூட்டிப் போகப்போறோம்... இவரும் வர்றாரு... உயிரைக் காப்பாத்திக்க நீ முதல்ல ஓடுற வேலையைப் பாரு... புவியை நாங்க சேதாரம் இல்லாம உங்கிட்ட கொண்டு வந்து சேர்த்திருவோம்..." நக்கலாகச் சொன்னான் சரவணன்.

"எங்களால உங்களுக்கெல்லம் பிரச்சினை... நாங்க ஓடிட்டா அப்புறம் சினிமாவுல மாதிரி உங்களை எல்லாம் போட்டு அடிப்பானுங்களேடா..." நிஜமான வருத்தத்துடன் கேட்டான் ராம்கி.

"ஏலே அது சினிமா... இது வாழ்க்கை... எங்களுக்குத் தெரியும் எப்படி தப்பிக்கணுமின்னு... நீ அம்மாக்கிட்ட விவரம் சொல்லிக் கிளம்பப் பாரு... நாங்க மல்லிகாதான் வீட்ல கூட்டி வச்சிப் பேசினான்னு சொல்லி எஸ்கேப் ஆகிட மாட்டோம்..." என்றான் பழனி.

"அதுசரி... சொல்லுங்க... சொல்லுங்க... யாரு வேண்டாம்ன்னா... அப்பு நானு வேலு நாச்சியார் பரம்பரைடி... வர்றவனையெல்லாம் ரெண்டு துண்டாக்கிடுவேன்... எஞ் சேதி தெரியாம பேசாதீங்க..." என்றாள் மல்லிகா.

"ஆத்தாடி... அவளா நீயி..." என்றான் அண்ணாத்துரை.

"சரிடா... அம்மா அண்ணன் வீட்ல காத்திருப்பாங்க... நான் போறேன்... புவி நான் காலையில கிளம்பிடுறேன்... அவங்க சொல்ற டைம்ல கரெக்டா வந்துடு... திருப்பூர்ல உனக்காக காத்திருப்பேன்..." என்றபடி அவளை தோளோடு அணைத்தான்.

"டேய்... டேய்... அடங்குடா... ஆ... ஊன்னா கட்டிப் பிடிச்சிடுறது... கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படியே இருங்கடா..." என்று எல்லாரும் கோரஸாகக் கத்த "உங்களுக்கு இப்படிக் கிடைக்கலைன்னு பொறாமை..." என்ற புவனா வேண்டுமென்றே அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.

"எங்கடா போனே... இந்தா வாறேன்னு போனவன் இப்பத்தான் வாறே... இனி எப்போ ஐயா வீடு போயிட்டு வீடு போறது..." வண்டியை நிறுத்திய மகனிடம் கோபமாய்க் கேட்டாள் நாகம்மா.

"ஐயா வீடெல்லாம் வேண்டாம்... எல்லாம் கை மீறி போய்க்கிட்டு இருக்கு... வாம்மா வீட்டுக்குப் போகலாம்."

"என்னடா சொல்றே?" என நாகம்மா பதட்டமாய்க் கேட்க, கொழுந்தனுக்கு தண்ணீர் கொடுத்தபடி "எதாவது பிரச்சினையா ராமு" மெதுவாகக் கேட்டாள் அண்ணி.

"ஒண்ணும் பிரச்சினை இல்லை... புவனா வீட்ல ஒத்துக்கலை... அவளைப் பாத்து பேசிட்டுத்தான் வாறேன்... எல்லாருமா மல்லிகா வீட்ல உக்காந்து பேசி ஒரு முடிவெடுத்து இருக்கோம்."

"என்ன?"

"அது... அது... புவனாவை அவங்க வீட்ல இருந்து கிளப்பிக்கிட்டு போறதுன்னு..."

"அடேய் என்னடா சொல்றே... அடி ஆத்தி மாரியாத்தா... பேசி முடிவுக்கு வரலாம்ன்னு சொல்லிக்கின்னு இருக்கும் போதே அந்தப்புள்ளையை இழுத்துக்கின்னு ஓடப்போறேன்னு சொல்றானே... இது எதுல வந்து முடியப் போகுதோ தெரியலையே... " என ஒப்பாரி வைத்தாள் நாகம்மா.

"அத்த... எதுக்கு இப்ப ஒப்பாரி வைக்கிறீங்க... மனசுக்கு புடிச்ச புள்ளயத்தானே தம்பி கூட்டிப் போகப்போகுது... அவளும் ஒத்துகிட்டுதானே வர்றா... எல்லாம் கொஞ்ச நாள்தான் அப்புறம் சரியாயிடும்... விடுங்க..."

"அதுக்காக..." வேகமாகக் கேட்டாள்.

"விடுங்கன்னா விடுங்க... தம்பி நீங்க ஆக வேண்டியதைப் பாருங்க... "

"இல்லண்ணி... நாங்க எஸ்கேப் ஆயிட்டா அம்மாவைத்தான் தேடி வருவாங்க... அதான் ரொம்ப யோசனையா இருக்கு..."

"நீங்க திருப்பூருக்கு போறதாவா முடிவெடுத்து இருக்கீங்க.... அவனுக உங்களைத் தேடி திருப்பூருக்கு வருவாங்கன்னு தெரியாதா என்ன... அதனால நம்ம சேகர் மெட்ராஸ்லதானே இருக்கான்... கொஞ்ச நாள் அங்க போயி இருங்க... அத்தையை நம்ம சீதா வீட்ல விட்டுடலாம்... ஆடு, மாட்டை சுமதிக்கிட்ட சொல்லி பாத்துக்கச் சொல்லிட்டு... நான் அப்பப்ப போயி பார்த்துக்கிறேன்... எனக்கென்னவோ அம்புட்டுத்தூரம் எல்லாம் வராதுன்னு தோணுது.... "

"ஆஹா... அண்ணி... உண்மையிலேயே என்னமா யோசிக்கிறீங்க... நாங்க திருப்பூருக்குத்தான் போறதுன்னு யோசிச்சோம்.... உங்க ஐடியாதான் சூப்பர்... அப்படியே பண்ணலாம்... இதை நான் அவனுககிட்ட சொல்லிக்கிறேன்... இப்ப கிளம்புறேன் அண்ணி... எல்லாம் விவரமாப் பேசலாம்... அம்மா வா போகலாம்" என்றபடி வாசலுக்கு விரைந்தான்.

"என்னடா பேசாம ஊக்காந்திருக்கே...?" என்ற அம்மாவிடம் "இரும்மா.... எது செஞ்சா சரியா வரும்ன்னு யோசிக்க வேண்டாமா?" என்று வைரவன் சொன்ன போது வாசலில் அப்பாவின் வண்டி வந்து நிற்க, "அம்மா... அப்பா வாறாரு.... போயி வேலையைப் பாருங்க அப்புறம் பேசலாம்" என்றான் மெதுவாக.

"என்ன ஆத்தாளும் மவனும் எந்தக் கோட்டையைப் பிடிக்க பேச்சு வார்த்தை நடத்துறீங்க..." என்றபடி உள்ளே வந்தார்.

"சும்மா பேசிக்கிட்டு இருந்தோம்... நாங்க பேசினா உங்களுக்குப் பிடிக்காதே"

"சரி... சரி... போயி தண்ணி கொண்டு வா..." என்றபடி போனை எடுத்து "தம்பி நாந்தேன் பேசுறேன்... அந்த வேலாயுதபட்டணத்துச் சம்மந்தம் ஒண்ணு சொன்னியே அவங்கள பொண்ணு பாக்க எப்ப வரமுடியும்ன்னு கேளு... அப்புறம் நாளைக்கு சும்மா இருந்தா இங்கிட்டு வா... கொஞ்சம் விவரமாப் பேசணும்..." என்று சொன்னவரை அம்மாவும் மகனும் வியப்பாய் பார்த்துக் கொண்டிருக்க, வாசலில் புவனாவின் சைக்கிள் வந்து நின்றது.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

3 கருத்துகள்:

  1. ம்...........நாம ஒண்ணு நினைக்க,தெய்வம் வேற ஒண்ண நினைக்குமாம்.இங்க அம்மா.....அப்பா.ஹூம்....பாக்கலாம்,விதி வலியதான்னு!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்

    கதை நன்றாக உள்ளது தொடருங்கள் அடுத்த பகுதியை
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி