முந்தைய பதிவுகளைப் படிக்க...
-----------------------------------------------------------------------
20. காதலைச் சொன்னாளா?
முன்கதைச் சுருக்கம்:
கிராமத்து ஏழைக்குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். அக்காவுக்கு விருப்பமில்லாத மாப்பிள்ளையை பேசி வைத்திருக்கும் அம்மாவுடன் மல்லுக்கு நிற்கிறான். கல்லூரியில் வைரவனைத் தாக்க வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கெட்டபெயர் ஏற்படுகிறது. அவனைப் பார்க்க வரும் புவனா, அவனுடன் மல்லிகா இருக்கவும் கோபமாகிறாள். அவனுடன் தனியாகப் பேச ஐயா வீட்டிற்கு வரச் சொல்கிறாள்.
இனி...
ஐயா கிளம்பிச் செல்லவும் ராம்கிக்கு அருகில் சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தவள் அருகில் கிடந்த கவிஞர் மீராவின் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் கவிதைப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தாள். ராம்கி அன்றைய தினமணியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.அவனை ஏறிட்டுப் பார்த்தவள், தன்னைக் கவனிக்காமல் காலைப் பேப்பரை மேய்ந்து கொண்டிருப்பவனைப் பார்த்ததும் எரிச்சல் வர, மீண்டும் புத்தகத்தை படிக்கலானாள்.
"என்ன ரெண்டு பேரும் எப்பவும் கலகலப்பா பேசிக்கிட்டு இருப்பீங்க... இன்னைக்கு என்னாச்சு? மொரப்பாட்டுக்காரங்க மாதிரி ஆளுக்கு ஒரு பக்கம் படிச்சிக்கிட்டு இருக்கீங்க..?" என்றபடி காபியைக் கொடுத்தார் அம்மா.
"இல்லம்மா... அதெல்லாம் இல்ல... சும்மாதான் உக்காந்திருந்தோம்..." என்று ராம்கி மழுப்ப அவள் ஒற்றைப் புன்னகையை பதிலாக்கினாள்.
"என்ன புவனா... இன்னைக்கு உன்னோட பிரண்டையெல்லாம் காணோம்... நீ மட்டும் வந்திருக்கே..?"
"இல்லம்மா... முக்கியமான வேலையா ஒருத்தரைப் பாக்க வேண்டியிருந்தது. அதுக்காக வந்தேன்... அப்படியே ஐயாவைப் பாத்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன்... இன்னைக்குன்னு ஐயாவுக்கு வேலை வந்திருச்சு... என்னம்மா... எப்பவும் சாயந்தரம் ஆச்சின்னா நிறையப் பேர் வருவாங்க... யாரையும் காணோம்..." என்றபடி ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள்.
"என்னமோ தெரியலை இன்னைக்கு யாரும் வரலை... ஒருவேளை முத்தையா ஐயா வீட்ல மீட்டிங்கா இருக்குமோ என்னவோ... காபி ஆறப் போகுது குடிங்க..." என்றபடி உள்ளே சென்றார்.
மீண்டும் அந்த இடத்தை அமைதி சூழ்ந்தது. இருவருக்கும் இடையில் இருந்த மௌனம் மெல்ல மெல்ல நேரத்தை விழுங்கிக் கொண்டிருந்தது. அந்த மௌனத்தைக் கலைக்கும் விதமாக 'க்க்கும்' என்று மெதுவாக செருமினாள்.
ஏறிட்டுப் பார்த்தவன் மீண்டும் பேப்பரைப் பார்க்க, புவனாவுக்கு கோபம் வந்தது. பேப்பரைப் பிடித்து இழுத்தாள். என்ன என்பது போல் பார்த்தான்.
"இங்க ஒருத்தி வந்து உக்காந்திருக்கேன். அப்படி என்ன பேப்பர்ல இருக்கு?" மூக்குச் சிவக்க கேட்டாள்.
"ம்... வந்தீங்க... கவிதைப் புக்கை எடுத்தீங்க... பேசாம உக்காந்தீங்க... அப்புறம் எங்கிட்ட கோபப்படுறீங்க...?" மெதுவாகக் கேட்டான்.
"ஓஹோ.... நாங்க பேசினாத்தான் ஐயா பேசுவீங்களோ?"
"ஆமா நீங்கதானே பேசணுமின்னு சொன்னீங்க... அப்ப நீங்கதானே பேசணும்..."
"அது சரி... இப்பல்லாம் எங்கூட பேசப்பிடிக்கலை உங்களுக்கு... என்னைய ஒதுக்கிட்டுப் போகத்தான் நினைக்கிறீங்க... அப்படித்தானே...?"
"அப்படியெல்லாம் இல்லைங்க... நான் எப்பவும் போலத்தான் பேசுறேன்... நீங்கதான் அப்படி நினைக்கிறீங்க...."
"இப்பல்லாம் அவகூட பேசத்தான் உங்களுக்குப் பிடிக்குது..."
"எவ கூட...?" என்றவன் நாக்கைக் கடித்துக் கொண்டு "யார் கூட..?" என்று கேட்டான்.
"அதான் ஜாசுமினு... " வாயை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு சொன்னாள்.
"ஜாசுமினா.... ஓ... மல்லிகாவா.... அதுசரி அவங்க எங்க கிளாஸ்.... என்னோட நல்ல பிரண்ட்... உங்க கூட நான் பழகுறது பேசுறது எல்லாமே அவங்களுக்குத் தெரியும். ஏன் நேத்து உங்ககிட்ட கோபமாப் பேசினதுக்கு கூட அவங்க என்னைய சத்தம் போட்டாங்க... நீங்க நினைக்கிற மாதிரி இல்லை...."
"சரி... நம்பிட்டேன்..." என்றபடி அவன் கையிலிருந்த பேப்பரை மீண்டும் பறித்தாள். அவன் படக்கென்று இழுத்துக் கொள்ள, எழுந்து இழுக்க, உள்ளிருந்து வெளிய வந்த அம்மா "என்ன ரெண்டு பேருக்குள்ளயும் எதாவது சண்டையா? புவனா முகம் சரியில்லையே..."
"அப்படியெல்லாம் இல்லைம்மா... பேப்பரைக் கேட்டா தரமாட்டேங்கிறார்... அதான் இழுத்தேன்...."
"சரி... இருங்க நான் பக்கத்துல பொயிட்டு வந்துடுறேன்... "
"நானும் கிளம்புறேம்மா... " என்று எழுந்தாள்.
"அட ராமு கூட பேசிக்கிட்டு இரு.... இப்ப வந்திருவேன்... " என்றபடி கிளம்பினார்.
அம்மா போனதும் "ஏதோ பேசணுமின்னு சொல்லிட்டு என்னைய வரச்சொல்லிட்டு இப்போ கிளம்பினா என்னங்க அர்த்தம்?" என்றபடி அவளது சேருக்கு அருகில் நெருங்கி அமர்ந்தான்.
"ம்... என்ன பேசுறது? என்னைய தவிர்க்க நினைக்கிறீங்க... இனி அப்படியே இருக்கலாம்... ஒண்ணும் பேசுறதுக்கு இல்லை..." முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
"எதுக்கெடுத்தாலும் கோபம்...? அப்பா இந்தப் பொண்ணுங்களை புரிஞ்சிக்கிறது ரொம்ப கஷ்டம் போல..." மெதுவாக முனங்கினான்.
"ஆமா... இவுக மட்டும் அப்படியே திறந்த புத்தகம்..." படக்கென்று சொன்னாள்.
"சரி... சாரி..."
"எதுக்கு இப்ப சாரி..."
"எல்லாத்துக்கும் தான்..."
"எல்லாத்துக்கும்ன்னா?"
"கோபமா பேசினதுக்கு.... இப்ப சொன்னதுக்கு.... அப்புறம் அம்மான்னு ஒருத்தவங்களைக் கூட்டியாந்ததுக்கு... எல்லாத்துக்குந்தான்..."
"சரி மன்னித்தோம்... என்ன ஒரு தைரியம்... அம்மான்னு எங்க ஊர்ல கல்லறுக்கிற பொம்பளைய கூட்டியாந்திருக்கீங்க... உங்களுக்கு அவ்வளவு தைரியம் இருக்காது... எல்லாம் எங்க அண்ணன் வேலையாத்தான் இருக்கும்..."
"தெரிஞ்சிக்கிட்டா சரி... எங்கம்மாவுக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாங்க... நான் படிச்சித்தான் எங்க குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரணுமின்னு நினைச்சிக்கிட்டு இருக்காங்க... அதான்... வைரவண்ணன்கிட்டயே கேட்டேன்... அவருதான் இவங்களை கூட்டியாந்தாரு..."
"அது சரி ரவுடிக்கு ரவுடி உதவி..."
"என்னது...?"
"சரி... சரி... சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன்..."
"அது..."
"இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... உங்ககூட இம்புட்டு நேரம் பேசியிருக்கேனே அதான்..."
"ஏன் இதுக்கு முன்னால பேசினதே இல்லையாக்கும்... பஸ்ல வரும்போது பேசலையா என்ன..."
"ஆமா பயந்து பயந்துகிட்டு... ஒவ்வொரு வார்த்தை வாங்குறதுக்கும் நான் படாதபாடுபட்டது எனக்குத்தானே தெரியும்..."
"அட இங்க பார்றா..." என்றான் வேகமாக
"என்ன இங்க பாருடா... ரவுடி..."
"இனி ரவுடின்னு சொன்னா நான் எந்திரிச்சிப் போயிருவேன்..."
"அதானே எங்க இன்னும் கோவத்தைக் காணோமுன்னு பார்த்தேன்...இந்தா வந்திருச்சில்ல..."
"சரி... என்னவோ பேசணுமின்னீங்க.. என்னன்னு சொல்லுங்க..."
"அதான் பேசிக்கிட்டு இருக்கோமுல்ல..."
"இப்படி மொக்கை போடுறதுக்குத்தான் ஐயா வீட்டுக்கு வரச்சொனனீங்களா?"
"நான் பேசுறது மொக்கையா உங்களுக்கு... அப்ப அவ...." எதோ சொல்லவந்தவள் நாக்கைக் கடித்துக் கொண்டாள். "சாரி ராம்... சும்மா சொல்ல வந்தேன்... " என்றாள்.
"அவங்க என்னோட பிரண்ட்.... நான் பல தடவை சொல்லிட்டேன்... நீங்க நம்பமாட்டேங்கிறீங்க..."
"அப்ப நான்...?"
"நீங்க...?"
"சொல்லுங்க நான் யார்?"
"ம்... புவனா..."
"உதை விழும்.... அவ பிரண்ட்டுன்னா நான் யார்ன்னு சொல்லுங்க"
"நீங்க... நீங்க... என்னோட பெஸ்ட் பிரண்ட்...."
"ம்... அம்புட்டுத்தானா..." சுவராஸ்யமில்லாமல் கேட்டாள். ராம்கி எதோ சொல்வதற்குள் ஐயாவின் சைக்கிள் வாசலில் வந்து நிற்க அவசரமாக தள்ளி அமர்ந்தான்.
"என்ன காரசாரமா பேசிக்கிட்டு இருந்தீங்க போல.." என்றபடி ஐயா உள்ளே வரவும் 'சை... எப்படியும் அவனைச் சொல்ல வச்சிடலாம்ன்னு பார்த்தா இப்படி ஆயிருச்சே' என்று நினைத்த புவனாவின் முகம் சப்பென்று ஆகிவிட்டது.
"இல்லய்யா... சும்மா அரட்டை அடிச்சிக்கிட்டு இருந்தோம்... அம்மா வெளிய போனாங்க அதான் உக்காந்திருந்தோம்... அப்ப நான் கிளம்புறேன்யா... வாறேங்க..." என்று ராம்கி எந்திரிக்க, நானும் கிளம்புறேன் என்றபடி அவன் பின்னே வந்தவள் சைக்கிளை எடுக்கும் முன் "ராம் ஒரு நிமிடம்" என்றாள்.
(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.
3 எண்ணங்கள்:
வணக்கம்
சே.குமார்(அண்ணா)
தொடர் கதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எப்பங்க 'ஐ லவ் யூ 'சொல்லுவாங்க?கேக்கணும்னு ஆசையா இருக்கு!
Intresting.... carry on thambi!!!
கருத்துரையிடுக