மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 28 செப்டம்பர், 2019

மனசின் பக்கம் : கோவேறு கழுதைகள் முதல் மரப்பாலம் வரை

Image result for கோவேறு கழுதைகள்
ழுத்தாளர் இமையம் எழுதிய 'கோவேறு கழுதைகள்' நாவலை வாசித்து முடித்தேன். ஆரோக்கியம் என்னும் வண்ணாத்தியின் வாழ்க்கையைச் சுற்றிச் சுற்றி முன்னும் பின்னுமாய் நகர்கிறது நாவல். ஊருக்கு ஒரு வண்ணாத்தியும் அம்பட்டையனும் குடியாய் இருந்தது ஒரு காலம். எங்க ஊரில் விவசாயம் இருக்கும் வரை இவர்களும் பக்கத்து ஊரில் இருந்து வருவார்கள். அழுக்கெடுத்துச் செல்வார்கள்... முடி வெட்டிவிட வருவார்கள். 

கதிர் அறுப்பு முடிந்ததும் இவர்களுக்கு ஆறு கதிருக்கட்டும் கொஞ்சம் பணமும் கொடுப்பார்கள். நல்ல வெளஞ்சிருக்க வயல்ல... ரெண்டரி சேர்த்து வச்சிக் கட்டி வைக்கச் சொல்வாரு எங்கப்பா... சிலரோ வண்ணானுக்குத்தானே... அம்பட்டையனுக்குத்தானேன்னு சின்னச் சின்னக் கட்டாக் கட்டுவாங்க... எல்லாம் முடிஞ்சி போச்சு... இப்ப யாராவது இறந்தா மூவாயிரம் நாலாயிரம் கொடுத்து தேவகோட்டையில் இருந்து இவர்களைக் கூட்டிச் செல்ல வேண்டியிருக்கிறது.

இதில் ஆரோக்கியத்தின் நிலமை எப்படி மாறி வருகிறது என்பதை அழகான வாழ்க்கைப் பாடமாய் நகர்த்திச் செல்கிறார். கோவேறு கழுதைகள் பொதி சுமக்க மட்டுமே என்பதைச் சொல்லும் கதைதான் 'கோவேறு கழுதைகள்'.

Image result for ishq malayalam movie
ஷென் நிகம், ஆன் ஷீட்டல் நடித்த இஸ்க் என்றொரு மலையாளப்படம்... இது காதல் கதை இல்லைன்னு சொல்லியிருப்பார்கள்... ஆம் அது காதல் கதை இல்லைதான்... காதலர்கள் ஒரு மருத்துவமனை வளாகத்துக்குள் இரவில் காரில் அமர்ந்து முத்தம் கொடுக்கும் போது வந்து வீடியோ எடுத்து, போலீஸ் என அவர்களை மிரட்டி, அவர்களுடனே பயணப்பட்டு பணம் பறித்து இன்னும் இன்னுமாய் நிறையச் செய்து விட்டு விலக, தன்னை வெளியில் நிறுத்தி உன்னிடம் என்ன செய்தான் என நாயகியிடம் நாயகன் கேட்க, விரிசல் விழுகிறது.

அதன் பின் அவன் அவளை என்ன செய்தான் என்பதை அறிய மீண்டும் மருத்துவமனை செல்லும் போதுதான் அவன் போலீஸ் இல்லை ஆம்புலன்ஸ் டிரைவர் என்று தெரிய, அவன் பண்ணிய அதே வேலையை நாயகன் அவன் குடும்பத்தில் செய்து அவனைப் பலி வாங்கி, வீரனாய் காதலி முன் போய் நின்று அன்று இரவு அவன் உன்னிடம் என்ன செய்தான் என்பது தெரியும் என்பதாய் நிற்க, என்னை ஒருவன் தொட வரும் போது இல்லாத ஆண்மை, இப்ப அங்கு என்ன நடந்தது எனத் தெரிந்து கொள்வதில் மட்டும் வந்திருக்கே என நாயகி அவனுக்குச் சொல்லும் முடிவுதான் கதை... சூப்பரான படம். முடிந்தால் பாருங்கள்.

Image result for நம்ம வீட்டுப் பிள்ளை
சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை... சிவா கொஞ்சம் பெருத்திருக்கிறார்... சித்தப்பன் பெரியப்பன் மாமன் மச்சான் கதையுடன் அண்ணன், தங்கை பாசத்தைச் சொல்லும் மற்றொருமொரு படம்... சிவா படத்தில் காமெடியாச்சும் ரசிக்கும்படி இருக்கும்... இதில் சூரியின் மொக்கைக்கு முன் அவரின் மகனாக வரும் சிறுவனின் காமெடி நல்லாயிருந்தது அவ்வளவே. பாண்டிராஜ் இயக்குநராய் ஜெயிக்கவில்லை என்றுதான் எனக்குத் தோன்றியது. சமுத்திரகனி வரும் பிளாஸ்பேக் காட்சிகள் நல்லாயிருந்தது. 

Image result for மின் கைத்தடி
மின்கைத்தடி என்னும் புதிய இணைய மின்னிதழ் உதயமாகியிருக்கிறது. அதற்கு படைப்பு அனுப்பும் போது எழுத்தாளர் கமலக்கண்ணன் உங்கள் கதை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. முதல் இதழிலேயே பகிர்கிறேன் என்றார். அதன்படி பத்து நாட்களுக்கு முன்னரே பகிர்ந்து இதழ் நேற்றுதான் எல்லாருடைய பார்வைக்கும் வந்திருக்கிறது. அப்பா என்னும் அந்தக் கதையை வாசிக்க இங்கே சொடுக்குங்கள். உங்கள் கருத்தையும் தவறாமல் சொல்லுங்கள்.

Image result for தொரட்டி

தொரட்டி என்னும் ஒரு படம்... ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கை என்றார்கள். கெட்ட சகவாசம் என்ன செய்யும் என்பதைக் காட்டுகிறார்கள். அழகான ஒரு கதைக்களம்தான்... நாயகனைவிட நாயகியே சிறப்பு... அருமையான நடிப்பு... வில்லனாய், அடியாளாய் பார்த்துப் பழக்கப்பட்ட எங்க பக்கத்து ஊரு அழகு இதில் ஆடு மேய்ப்பவராக, நாயகனின் அப்பாவாக வாழ்ந்திருக்கிறார். சிலரைத் தவிர பெரும்பாலான நடிகர்களை தேவகோட்டைப் பகுதி கிராமங்களில் இருந்து பிடித்திருக்கிறார்கள். பாடல்களில் கிராமிய மணம்... கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இன்னும் சிறப்பான படமாகக் கொடுத்திருக்கலாம்... இப்பவே தொரட்டி மனம் அள்ளச் செய்கிறது... இறுதியில் மனம் கனக்கச் செய்கிறது.

Image result for பிக்பாஸ்

பிக்பாஸ் எழுதுவது தெய்வக் குத்தம்... நீ எழுத வேண்டியதை எழுது என நெருங்கிய நட்புக்கள் சொல்லும் போது என்ன சொல்வதெனத் தெரியவில்லை. அது கார்ப்பரேட் சமாச்சாரமாகவே இருந்து விட்டுப் போகட்டும்... என் எழுத்தை அதன் மூலம் நான் இன்னும் செதுக்கும் வாய்ப்பாகத்தான் நினைக்கிறேன்... அதிக நகைச்சுவையாய் எனக்கு கதை எழுத வருவதில்லை... ஆனால் பிக்பாஸ் பதிவுகளை நகைச்சுவையாய் எழுதியிருக்கிறேன்... பிரதிலிபியில் நான் பதிவு போடவில்லை என்றால் ஏன் இன்னும் எழுதலை என்று கேட்க வைத்திருக்கிறது அந்த எழுத்து. பிக்பாஸ் எழுத ஆரம்பித்து இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட நட்புக்களை இணைத்திருக்கிறது. அண்ணன், தம்பி என உரிமையுடன் கருத்து மோதல் செய்யும் சகோதரிகளைக் கொடுத்திருக்கிறது. இது பெருமை என்பதில்லை... என் எழுத்தில் சிறுமையில்லை என்பதற்காகவே.

Image result for மரப்பாலம்
ரன் கார்க்கியின் மரப்பாலம் என்றொரு நாவல் வாசித்து முடித்து அது குறித்து விரிவாய் எழுத வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனசுக்குள் நிற்கிறது. இன்னும் அதற்கான நேரம் வரவில்லை. இரண்டாம் உலகப்போரில் சிங்கப்பூர் மலேசியாவில் சைனாவின் ஆதிக்கம், அங்கிருந்து பர்மாவுக்கு மரப்பாலம் கட்டுதல் என்னும் அருமையானதொரு நாவல்... நிறைய விஷயங்களைப் பேசியிருக்கிறார். முடிந்தவர்கள் வாசியுங்கள்.

-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

இவ்வளவு வாசித்து, பகிர்தல் சற்றே சிரமம்தான். பதிவினை ரசித்தேன்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் நல்ல கதம்பம்.இஸ்க் இம்முறை சென்னைக்குச் சென்ற போது வீட்டில் பார்த்தேன் படம் மிகவும் பிடித்திருந்தது. கதாநாயகி முதலில் அந்த இரவு முடிந்து அவன் அவளை ஹாஸ்டலில் இறக்கி விடும் போதும் அவன் கேட்பதும் அவள் அளிக்கும் அந்த கூர்மையான வசனமும், மற்றும் இறுதியில் நாயகி கேட்கும் அந்தக் கூர்மையான கேள்வியும் தான் படத்தின் கருத்து....செம அம்சம். மெதுவாக நகர்ந்தாலும், ஸ்வாரஸியமான படம்.

புத்தகங்கள் குறித்து வைத்துக் கொண்டேன் குமார். கோவேறு கழுதைகள் பற்றி ஏற்கனவே அறிந்திருக்கிறேன் ஆனால் வாசிக்கவில்லை.

நல்லா சுருக்கமா எல்லாம் அழகா சொல்லிருக்கீங்க.

மின் கைத்தடி உங்கள் கதை வாசித்துவிட்டேன் அருமை குமார்.

உங்கள் வாசிப்பும், எழுத்தும் தொடரட்டும் குமார். வாழ்த்துகள்

கீதா