'இன்னும் பத்து நாள்தான்டா இருக்கு...' சாண்டி.
'பத்துநாள் இருந்துட்டுப் போ கவின்...' லாஸ்லியா.
'அதேதான் நானும் சொல்றேன்... பத்துநாள்தான் நல்லா விளையாண்டுட்டு வாங்க...' கவின்.
'நாலு நாள் இரு கவின்... வாரக் கடைசியில போகலாம்...' சாண்டி.
'நாலு நாள்தான்... உன்னோட முடிவை மாத்து கவின்...' லாஸ்லியா.
'அதேதான் நானும் சொல்றேன்... நாலுநாள்தான்... ஆனா இந்த வாய்ப்பு மறுபடியும் வராதுல்ல...' கவின்.
'இப்ப என்னடா உனக்கு அவசரம்...' சாண்டி.
'இப்ப ஏன் உங்களுக்கு இந்த முடிவு...' லாஸ்லியா.
'இப்ப எடுக்கலைப்பா... ஆரம்பத்துலயே யோசிச்ச முடிவுதாம்பா...' கவின்.
'கவின் உன்னோட பேர்லயே வின் இருக்கு... நீ போயி போறேங்கிறியே...' லாஸ்லியா.
'அதேதான் நானும் சொல்றேன்... உன்னோட பேர்ல லாஸ் இருக்கு... ஆனா நீ லாஸ் ஆகக்கூடாதுன்னுதான் என்னோட முடிவுல நான் உறுதியா இருக்கேன்...' கவின்.
கவின்...
இந்தக் காரணத்துக்காகத்தான் நான் இந்த முடிவை எடுத்தேன்னு சொல்லிக்கிட்டு இருந்தா நடிப்புன்னு சொல்லுவாங்க... அதனால நான் என்ன முடிவெடுத்து விளையாண்டேனோ அதைத்தான் செய்யிறேன்... புரிஞ்சிக்கங்கப்பா... எல்லாரும் நல்லா விளையாடுங்க... நான் என்ன மனநிலையில இருக்கேனோ அதன்படி போக விடுங்க என கவின் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தான்.
எனக்கு நீ சொல்ல வேண்டாம் கவின்... நான் எங்கப்பாவுக்காக விளையாடுறேன்னு உனக்காகத்தான் உள்ளே இருக்கேன்னு ஊருக்கே தெரியும்... நீ போறேன்னு கிளம்பிட்டே... பின்னே எனக்கென்ன அறிவுரை வேண்டிக்கிடக்கு என்று லாஸ்லியா சொல்லவும் அதாம்பா அதைத்தான் நானும் சொல்றேன்... உங்கப்பனுக்காக விளையாடு... நான் உனக்காக காத்திருப்பேன்... சரியா... நான் உனக்குச் சொல்லக் கூடாதுன்னா என்னோட முடிவை மாத்தச் சொல்லி நீயும் சொல்லக் கூடாது. போட்டாவைப் பாரு... உங்கப்பன் உன்னைய மொறைக்கிற போட்டாவைத்தானே அனுப்பியிருக்கானுங்க...
கவின் தியாகியெல்லாம் இல்லை... நான் இத்தனையும் செஞ்சிட்டு மேடையில ஏறி நிக்கிறது நல்லதில்லை என்ற வரிகளில் தொக்கி நிற்பது எதுவென்பதை... அதாவது செய்த நல்லதா / கெட்டதா என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாதபடியே பேசிக் கொண்டிருந்தான். சாண்டிக்கும் லாஸ்லியாவுக்கும் அவர்கள் ஆரம்பித்த வரிகளை வைத்தே தன் பாணியில் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். என்ன சொல்கிறான் என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாமல் பேசும் தன் யுக்தியை அழகாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தான்.
தனக்கான, தன் குடும்பப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பணம் கிடைத்தால் போதும் வெற்றியாளனாகவெல்லாம் ஆக வேண்டியதில்லை என்பதை கவின் ஆரம்பத்திலேயே சொல்லியிருப்பான். மேலும் இந்த முடிவை அவன் மிகத் தெளிவாக எடுத்து நகர்த்தி வந்திருக்கிறான் என்பதை அவனின் தெளிவான பேச்சில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.
இது முன் முடிவுதான் என்றாலும் இருபத்தி நாலு மணி நேரமும் குட்டி போட்ட நாய் போல் சுற்றிய காதலி, சின்ன கோபத்தைக் கூட தாங்காமல் அழும் பாசமிக்க அண்ணன் என இருவரின் முன்னும் தான் எடுத்த முடிவு என்னைப் பொறுத்தவரை சரியானதே என உணர்ச்சி மிகுந்த சூழலிலும் மிகத் தெளிவாய்... எந்த உணர்ச்சியையும் கூட்டாமல்... எப்பவும் போல் தன்னோட கருத்தில் நின்று.. பேசிய விதம் சிறப்பு... இதுவே கவினின் தனிச் சிறப்பு... அதை மிக அழகாகக் கையாண்டான்.
கடைசி வரைக்கும் தன்னோட முடிவு சரியே என்பதில் தெளிவாக இருந்ததிலும் காதலி முன் கண்ணீர் வடிக்காமல் உங்கப்பாவுக்காக விளையாடு எனச் சொல்லியதும் என்னைய புரிஞ்ச நீயே இப்படிப் பண்ணாதேண்ணே என சாண்டியிடம் வாதித்து நின்றதும் கவினின் மன உறுதியை, கண்ணீர் சிந்தாமல் அந்தக் கணத்தை அழகாகக் கடந்து சென்றதில் கவினை வெறுப்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் மனசுக்குள் உறுதியானவனாய் உயர்ந்து நின்றார்... கவின் அவன் என்ற நிலையில் இருந்து எனக்கு அவர் என மாறிய தருணம் இது.
லாஸ்லியா...
இவரின் அப்பா வந்து சென்றபின் நான் எழுதிய பதிவில் லாஸ்லியாவின் காதல் இன்னும் இறுக்கமாகுமே ஒழிய, காதலைத் துறந்து லாஸ்லியா அப்பாவின் பிள்ளையாக இருக்கமாட்டார் என எழுதியிருந்தேன். வாசிப்பவர்களுக்கு ஞாபகத்தில் இருக்கான்னு தெரியலை. கவின் வெளியே செல்வேன் என்று சொன்னதும் இவர் பட்ட பாட்டைப் பார்த்திருந்தால் அது விளங்கியிருக்கும். பத்து வருசம் கழித்து வந்த தகப்பன் வெளியே போனபின் இப்படி அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. ஆனால் கவின் போறேன்னு சொன்னதுமே கதறி அழ ஆரம்பித்துவிட்டார்.
தகப்பனின் பாசத்தைவிட காதலின் வலி அதீதமானது... இவரின் இந்த அழுகையை... கவின் போகாதே என கதவை கை வைத்து தடுத்ததைப் பார்த்த குடும்பத்தினரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதைச் சொல்லித் தெரியவில்லை என்றாலும் தன்னுடனே இருந்த காதலன் நீ இருந்து விட்டு வா நான் வெளியே காத்திருக்கிறேன் என்று சொல்லிச் செல்லும் போது ஏற்படும் வலி மிகக் கொடுமையானது. மிகவும் மோசமானது... கண்ணீரோடு லாஸ்லியா நின்ற நிலை பார்க்கச் சகிக்கவில்லை.
சாண்டி...
ஏன்டா இந்த முடிவு... இப்ப என்ன அவசரம் என கேட்டபடியே இருந்த சாண்டியின் கன்னத்தில் கண்ணீர் இறங்கிக் கொண்டே இருந்தது. இந்த மனிதன் நகைச்சுவையாய் ஆட்டம் போட்டாலும் பாசம் என்று வரும்போது சின்னப்பிள்ளையாய் ஆகிவிடுகிறார். தம்பியெனத் தன்னோடு ஆடல், பாடல் என அந்த வீட்டுக்குள் சுற்றித் திரிந்தவன் திடீரென ஒரு முடிவெடுத்து வெளியே போறதென்பதை ஏற்க முடியாமல் கையறு நிலையில் கலங்கி நின்றதைப் பார்த்தபோது அவரின் அன்பு எந்தளவுக்கு கவின் மீது இருந்திருக்கும் என்பதை எல்லாராலும் உணர்ந்து கொள்ள முடிந்திருக்கும்.
கவின் வெளியே போக ஐந்து லெட்சம் ஒரு காரணமே இல்லை... பணத்துக்காக ஆசைப்படுபவரும் அவர் இல்லை என்பதாய்தான் அவர்ன் இத்தனை நாள் செயல்பாடுகள் எல்லாமே இருந்தன. பணத்துக்காக தனக்கு ஓட்டுப் போட்டவர்களை எல்லாம் கேவலப்படுத்திவிட்டான் எனப் பேசுதல் எல்லாம் முறையல்ல... தான் எப்படி அந்த வீட்டுக்குள் இருந்தோம்... இதற்கு ஏன் இவர்கள் ஓட்டுப் போட்டு பாதுகாத்தார்கள் என்பதையெல்லாம் அவர் மிகத் தெளிவாக உணர்ந்தே வைத்திருக்கிறார். அவர் சுயமாய் எடுக்கும் முடிவுக்கெல்லாம் நாம் கருத்தைச் சுமக்க வேண்டியதில்லை.
இப்படியானதொரு முடிவுக்கு கவின் இனித் தன் குடும்பம், தோழமைகள் என எல்லாருக்குமே பதில் சொல்ல வேண்டியிருக்கும். அவர் எல்லாரும் சரியான பதிலையே வைத்திருப்பார். தன் முடிவு சரியென மிகத் தெளிவாக எடுத்துரைப்பார். கவினைப் பற்றி ஒரு இயக்குநர் அதிகம் தெரியாதென்றாலும் அவரை வைத்துப் படமெடுக்கப் போறேன் என்று சொன்ன போது தனக்கு நிறையப் படங்கள் இருப்பதாகச் சொன்னவர் பின்னாளில் படங்கள் வெளியாக நிலையில் இணை இயக்குநராய் பணி புரிந்த போது தன்னோட நிலையை, சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டதையும் சொன்னதை எழுதியிருந்தார். வாசிக்கும் போது ரொம்ப வருத்தமாக இருந்தது.
கவின் வெளியான போது அழுது நின்றவர்கள் இருவரே.. ஒருவர் காதலி, மற்றொருவர் சகோதரன்... மற்றவர்கள் வருத்தம் தோய்ந்த முகத்தை வைத்திருந்தார்களே ஒழிய அதிகம் வருத்தப்பட்டது போல் தெரியலை. குறிப்பாக தர்ஷன் கவினின் வெளியேறுதல் தனக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள கிடைக்கும் ஒரு வாய்ப்பாகத்தான் நினைத்திருப்பான் போல.
லாஸ்லியாவுக்கு ஆறுதல் சொல்லும் போது நீ எதாவது பண்ணிக் கொள்ளாதே என்பதாய் முகன் சொன்னது நீயும் ஏதாவது பண்ணித் தொலச்சி வெளியில போயிடு... நாங்க நாலு பேரும் இறுதிப் போட்டிக்குப் போய்க்கிறோம் என்பதாய் இருக்க, தர்ஷன் அப்படிப் பேசாதே எனக் கண்ணைக் காட்டியது தெளிவு... சமயோகிதம்.
வருந்தமாய் இருந்த லாஸ்லியாவிடம் அதிலிருந்து வெளியாகு என ஷெரின் சொன்னதும் எனக்குள்ள ஆயிரம் பிரச்சினை இருக்கு என லாஸ்லியா சொன்னதும் நாம பிரச்சினையில இருக்கும் போது மத்தவங்க பிரச்சினையைக் கேட்டா நம்ம பிரச்சினையில இருந்து வெளிவரலாம். என்னோட பிரச்சினையைக் கேளு என்றது அருமை.
சாண்டி தம்பியின் பிரிவில் இருந்து வெளிவந்து பிரியாணி போட்டார். பிரியாணியும் நல்லாவே வந்திருந்தது. லாஸ்லியாதான் பசலை நோய் படர்ந்து கண்ணீரோடு கிடந்தார்... பெற்ற அன்னையும் தங்கைகளும் இலங்கையில் அழுது தீர்த்திருப்பார்கள்.
95 ஆம் நாள் எதாவது டாஸ்க் கொடுக்கணுமேன்னு ஒரு கார்க் கம்பெனிக்காரன் என்னோட காரை அறிமுகம் செய்யுங்கடா பணம் தர்றேன்னு சொல்லியிருப்பான் போல அதை ஒரு டாஸ்க் ஆக்கிட்டானுங்க... தர்ஷன் முகன் விற்பனைப் பிரதிநிதிகளாக விபரம் சொல்ல, மற்றவர்கள் வாடிக்கையாளராக அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். முகன் அருமையாகப் பேசியபோதும் தர்ஷனும் முகனும் சரியாகச் செய்தார்கள் எனச் சொன்னார்கள்.
கக்கூஸ் கவின் போனபின்னே கலையிழந்த கக்கூஸூக்குள் என்னோட நாதன் இல்லாத இந்த இடத்துல எனக்கு ஒரு நாதியும் இல்லை... நான் வெளியே போகணும் என்று லாஸ்லியா புலம்ப, முதல்ல நீ கருத்துக் கேட்பு அறைக்கு வா... எப்பப் பார்த்தாலும் போறேன் போறேன்னு சொல்லிக்கிட்டு... அப்படின்னு பிக்பாஸ் கூப்பிட்டு இது உன்னோட வீடு இல்லை... நான் வெளிய போறேன்னு நிக்க.. இது மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் நிகழ்ச்சி... அவங்க என்ன முடிவெடுக்கிறாங்களோ அதுபடித்தான் இது நடக்கும். கவினைப் போகச் சொன்னதும் மக்கள்தான்... சேரனைப் போகச் சொன்னதும் மக்கள்தான்... அவங்கதான் எல்லாமே... இந்தத் தொலைக்காட்சி, நான், கமல் சார், கேமராமேன்கள் எல்லாமே மக்கள் நியமித்தவர்கள்தான்... மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு... அதனால மக்களுக்காக நீ... மக்களால் நீ... புரிஞ்சிதான்னு சொல்லி, நீதான் வெற்றியாளர்ன்னு நாங்க... அதாவது மக்கள் முடிவு பண்ணி வச்சிருக்காங்க... வெற்றியோட போ உங்கப்பனை வென்று கவினைக் கைப்பிடிக்கலாம் எனச் சொல்லி அனுப்பிவிட்டார்.
கவினின் முடிவு அவருக்குச் சரியென்றாலும் எட்டி விடும் தூரத்தில் வெற்றியை எட்டி உதைத்து விட்டுச் செல்லுதல் என்பது எல்லாராலும் முடியாத விஷயம். கவினின் இழப்பு இனி பத்து நாட்களுக்கு பிக்பாஸூக்கு பேரிழப்பாகும்.
கவின் மனதில் நின்றார்.
பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.
1 எண்ணங்கள்:
எல்லாவற்றியும் யோசித்து கவின் எடுத்த முடிவு சரியே ...எல்லோர் மனதிலும் அவன் அவராக நின்றார். சாண்டியின் பாசம் லோஸ் லியாவின் வேதனை உண்மையானது.நிகழ்ச்சி பற்றிய பகிர்வுக்கு நன்றி
கருத்துரையிடுக